ஜிம்முக்குப் போகாமலே ஜம்மென்று வாழலாமே!

0

ஜோதிர்லதா கிரிஜா

மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஜிம்மில் வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கருவிகளில் சிலவற்றைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. சில கருவிகளைக் குறை சொல்ல முடியாதுதான். ஆனால் வேறு சில கருவிகள் நம் கைகளையும் கால்களையும் கவ்வி அசைப்பதைப் பார்க்கும்போதுதான் கேலிக்கூத்தாக இருக்கிறது. நாமே நம் கைகளையும் கால்களையும் அசைத்தால் நிகழும் இரத்த ஓட்டம் அதிகப் பயனுள்ளது என்பதை உணரப் பெரிய அறிவொன்றும் தேவையில்லை. தெம்பின்றித் தளர்ந்து போய்க் கைகால்களை அசைக்கவே முடியாமல் இருக்கும் ஒருவருக்கு உடலின் பகுதிகளில் இரத்த ஓட்டம் ஏற்படச் செய்ய வேண்டுமெனில் அவற்றைப் பிடித்து மற்றவர்களோ அல்லது கருவிகளோ அசைக்கலாம். அதில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை! ஆனால் கை, கால்கள் ஒழுங்கான நிலையில் இருக்கின்றவர்கள் தாங்களாகவே அவற்றை அசைத்து அவற்றில் இரத்த ஓட்டம் ஏற்படுத்திக் கொள்ளுவதற்குப் பதிலாக, அவை பிறராலோ, கருவிகளாலோஅசைக்கப்படுவது என்பது சிரிப்புக்கு உரியதுதான்.

ஜிம்முக்குப் போய் அங்குள்ள கருவிகளைப் பயன்படுத்துவது என்பது எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளும் என்றும் சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த ஒரு பெண் – அப்படியொன்றும் ரொம்பவும் குண்டாக இல்லாதவர் – தான் மேலும் இளைத்தால் ‘சிக்’ கென்று இருக்கலாமே எனும் ஆசையில் ஜிம் ஒன்றில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு அது ஒத்துக்கொள்ளவில்லை. உடம்பில் சதை போடத் தொடங்கியது. இவ்வளவுக்கும் உணவுப் பழக்கங்களில் அவர் எந்த மாற்றமும் செய்யவில்லையாம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் கூறிய அறிவுரைப்படி ஜிம்முக்கும் போவதை நிறுத்தினார். ஒரே மாதத்துக்குள் அவரது இயல்பான சற்றே சதைப் பிடிப்புள்ள உடம்பு திரும்பி வந்துவிட்டது. எனினும், ஜிம்முக்குப் போய்ப் பயிற்சி செய்ததற்கும் தன் உடம்பு மேலும் குண்டானதற்கும் தொடர்பு இருக்காது என்றும் அதற்கு வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்றும் தீர்மானித்த அவர் மறுபடியும் ஜிம்முக்குப் போகலானார். மறுபடியும் உடல் குண்டானது. நடையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு, சற்றே சாய்த்துச் சாய்த்து நடக்கலானார். எனவே அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். பழைய உடம்பு திரும்பிவிட்டது. ஜிம் என்பது யாவருக்கும் ஒத்துக்கொள்ளக் கூடியதன்று என்பதற்காக இதைச் சொல்லலாயிற்று.

குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. தொப்பை குறைய வேண்டுமா? கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்த பிறகு, இரண்டு கைகளையும் உயரே தூக்கி, முதுகுப்புறமாய்ச் சற்றே வளைத்துப் பின் அவற்றை மெல்லக் கீழே கொண்டுவந்து இரண்டு கைகளாலும் இரண்டு கால்கட்டை விரல்களைத் தொடவும். இவ்வாறு குனியும் போது மூச்சை மெல்ல வெளியேற்ற வேண்டும். பின் பழைய நிலைக்கு மெல்ல இரு கைகளையும் உயர்த்தவும் இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு தொடக்கத்தில் பத்துத் தடவைகள் செய்யலாம். போகப் போக, எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உடற்பயிற்சி செய்கையில், உடலை மிகவும் தளர்வாகவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அளவுக்கு மீறிய இறுக்கத்திலும் வைத்துக்கொள்ளக் கூடாது. நடுநிலையான இறுக்கத்துடன் உடல் இருக்க வேண்டும்.

இதே போல் நின்றுகொன்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, அதன் பின் குதிகால்களை உயர்த்திக்கொண்டு முன்னங்கால்களல் நின்று, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு குதிகால்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தவாறே, மூச்சை வெளியேற்றி, கைகளை அவை இணையாக இருக்கும்படி முன்புறமாக நீட்ட வேண்டும். மீண்டும் பக்கவாட்டில் மூச்சிழுத்து நிறுத்திப் பின் முன் சொன்ன பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதையும் சிறுகச் சிறுக அதிகரித்துக்கொண்டே போகலாம். இது நுரையீரலை வலுவாக்கும். இடக் காது முனையைக் வலக்கையாலும், வலக் காது முனையை இடக் கையாலும் பற்றியபடி — இவ்வாறு இரு காது முனைகளையும் பிடித்துக்கொண்டே – உட்கார்ந்து எழ வேண்டும். இதையும் கொஞ்சங்கொஞ்சமாய் அதிகமாக்கலாம். இந்த உடற்பயிற்சி இடை, தொடை, கால் தசைகள், கைகள் ஆகியவற்றை வலுப்படுத்தும். நாம் தோப்புக்கரணம் என்று சொல்லும் இதை அமெரிக்காவில் அண்மைக்காலமாய் உடற்பயிற்சி நிலையங்களில் புகுத்தியிருக்கிறார்களாம்! இதனால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்குவதாய்க் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.

இவற்றையெல்லாம் செய்வதற்குப் பதினைந்து நிமிடங்கள் போதும். இருபத்துநான்கு மணிப் பொழுதில் இதற்கு நம்மால் கால்மணி நேரம் கூட ஒதுக்க முடியாதா என்ன?

இவற்றைச் செய்ய முடியாத முதியோர்க்கு மட்டுமே நடைப்பயிற்சி சிறந்ததாகும். முடிந்த அளவுக்கு விரைந்த நடை நல்லது. ‘ஜாகிங்’ எனப்படும் நெளிந்த நடை யாருக்குமே உகந்ததன்று என்பதைக் கொஞ்ச நாள்களுக்கு முன்னால் அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். சில மருத்துவமனைகளில், முதுகுவலி, இடுப்பு வலி, சுளுக்கு, பளுப்பிறழ்வு (disc-prolapse) ஆகியவற்றுக்கு ஆளானவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றிக் கேட்டறிந்த மருத்துவர்கள், அவர்களில் 90 விழுக்காட்டினர் ‘ஜாகிங்’ செய்பவர்கள் என்பதைக் கேட்டறிந்த பிறகு இவ்வாறு அறிவித்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், வடநாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் தம் உடல் இளைப்பதற்காக ஜிம் ஒன்றில் சேர்ந்து அந்தப் பயிற்சிகள் ஒத்துக்கொள்ளாததால் படுத்த படுக்கையாகி, முடிவில் நடைப்பிணமாகவே ஆகி இறந்து போனார். இப்போது கண்டவர்களெல்லாம் ஜிம்மை நடத்துவதால் ஆபத்துகள் அதிகம் என்று சொல்லலாயிற்றே ஒழிய, ஜிம்மை ஒட்டு மொத்தமாய்க் குறைத்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். அண்மையில் கூட ஒரு பெண்மணி தம்

கணவர் ஜிம்மில் மயங்கி விழுந்து சிறிதே பொழுதில் உயிர் நீத்தது பற்றி உள்ளம் உருக்கிய கட்டுரையை எழுதியிருந்தார். எந்த ஜிம்மிலும் டாக்டர் ஒருவரும் இருப்பதாய்த் தெரியவில்லை.

கடைசியாக, ஜிம்மால் நமக்கு ஆகும் ஆயிரக்கணக்கான பணச் செலவை நம் வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய பயிற்சிகள் வாயிலாக மிச்சப்படுத்தலாமே. அந்தப் பணத்தை ஏழை எளியவர்க்குத் தரலாமே.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *