ஆணுக்கு ஆணே எதிரி!

ஜோதிர்லதா கிரிஜா

முன்குறிப்பு1983ஆம் ஆண்டில் வெளிவந்த  ஒரு புலனாய்வு வார இதழில் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்த ஒரு பெண்மணி –  அதிலும் பெண்ணுரிமை இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவர் – “பெண்ணுக்குப்  பெண்தான் எதிரி”  என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை மிகுந்த மனத்தாங்கலுடன் வடித்திருந்தார். அவ்விதழ் வெளிவந்த அன்றே அதை மறுத்து நான் ஒரு கட்டுரையை எழுதி அதன் ஆசிரியருக்கு அனுப்பிவைத்தேன் (ஆனால், என்ன காரணத்தாலோ அது வெளிவரவில்லை. அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துகள் இன்றளவும் பொருந்துவதால் அக்கட்டுரை கீழே வருகிறது).

“ஆணுக்கு ஆணே எதிரி” –  இப்படி யாரேனும் சொல்லக் கேட்டோ எழுதியதைப் படித்தோ இருக்கிறோமா? “இல்லை” என்னும் நிச்சயமான பதிலை உடனேயே தயக்கமின்றிச் சொல்லிவிடலாம். பெண்கள் பிரச்சினை எதுவானாலும், அது உருவாவதற்கும், அது தீர்க்கப்படாததற்கும் பெண்களே தான் காரணம் என்று அறிவித்துவிட்டு ஆண்கள் (பெண்களில் சிலரும் கூடத்தான்) ‘அப்பாடா’ என்று ஓய்வெடுக்கப் போவது வழக்கமாக ஆகிவிட்டது. ஆண்களுக்கும் பிரிச்சினைகள் ஏராளமாக உண்டு. ஆண்களின் பிரச்சினைகளுக்கு ஆண்களே காரணமாக இருப்பதும் உண்டு. ஆனால், அவற்றை விவாதிக்கும் போது, “ஆணுக்கு எதிரி ஆண்தான்” என்று இதுவரையில் யாருமே சொன்னதாய்த் தெரியவில்லை. இந்த நிலை சிந்தனைக்குரியது.  ஆழ்ந்து சிந்தித்தால்,  பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கிற – இந்த நாட்டின் – ஏன்? பொதுவாக அனைத்துலகத்தின் –  பரம்பரைத்தனமான மனப்பான்மையே இதற்கு அடிப்படை என்று சொல்லிவிடலாம். என்னதான் படித்தாலும், பெரும்பாலான ஆண்களின் சிந்தனை, தன்னலம் என்னும் கோளாறின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.

பெண்களுக்கு என்று சில சிறப்புகளும், ஆண்களுக்கு என்று சில சிறப்புகளும் – அதே போல் இருபாலருக்குமே சில குறிப்பிட்ட குணக்கேடுகளும் பிறவியிலேயே அமைவதைப் பொதுவாகப் பார்க்கிறோம். ஒருவர்க்கொருவர் இட்டு நிரப்புவதற்காக இயற்கை அவ்வாறு அமைத்திருப்பதாக நாம் கருதி வந்துள்ளோம். பெண்கள் அனைவரும் தேவதைகள் அல்லர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு ஆண்கள் அனைவரும் அரக்கர்கள் அல்லர் என்பதும் உண்மையாகும். ஒரு பென்ணே மற்றொரு பெண்ணுக்குத் தீங்கு செய்வதன் மூல அடிப்படை, அவளது கல்வியறிவின்மையே ஆகும். கல்வி கற்ற மாமியார் எவளும் தன் மகனின் மனைவியை அவள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொல்லமாட்டாள். நாம் அறிந்த வரையில் இது உண்மையே ஆகும் (எனினும் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். அதை நாம் மறுக்கவில்லை). ஆனால், படிப்பு ஆண்களைத் திருத்துகிறதா என்று பார்ப்போம். இல்லை என்கிற பதிலே நமக்குக் கிடைக்கிறது. கல்விமுறையும் பாடத்திட்டமும் சரியாக இராதது இந்தக் குறைபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்தான். ஆனால், இப்படியும் பொத்தாம் பொதுவாய்க் குறை சொல்லிவிடுவதற்கில்லை என்று இதே கல்வியைப் பயிலும் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாய்த் திருந்துகிறார்கள் என்பதைக் கவனிக்கும் போது தோன்றுகிறது. ஏனெனில் மருமகள் எரிப்பில் பங்குகொள்ளும் மாமியார்கள் படிக்காதவர்களாக இருக்கையில், அந்த மருமகளின் கணவனும், மாமியாரின் கணவனும் பெரும்பாலும் படித்தவர்களாகவே – வங்கி ஊழியர்களாக, பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாக, மருத்துவர்களாக – சமயங்களில் காவல்துறை ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் கூட! – இருக்கிறார்கள்! என்னே கொடுமையான வெட்கக்கேடு இது!

எனினும், படித்த பெண்களில் கூடச் சிலர் “பெண்ணுக்குப் பெண்தான் எதிரி” என்று அறிவிப்பதற்குக் காரனம் அவர்களது இரத்தத்தில் ஊறிப் போய்விட்ட பரம்பரைப் புத்திதானே ஒழிய, வேறு எதுவும் அன்று என்றே முடிவுசெய்யத் தோன்றுகிறது. தலைமுறை தலைமுறையாகச் சில நற்குணங்களையும் குணக் கோளாறுகளையும் ஊட்டி வளர்க்கும் போது அவை மனிதர்களின் உதிரத்தில் ஊறி அவர்களுடைய சந்ததியினரின் இயல்புகளாகவும் ஆகி விடுகிற கோளாறு நேர்ந்துவிடுவதால் சில வேளைகளில் பெண்கள் சிந்தனைத் தேக்கத்துக்கு ஆட்படுகின்றனர். இத் தேக்கத்துக்கு ஆண்களும் விதிவிலக்குகள் அல்லர்.

கல்லூரிப் பேராசிரியை பென்களின் உரிமைகளுக்காகத் தங்களைப் போன்றவர்கள் போராடுவதைப் பெண்களே எதிர்க்கிறார்கள் என்று குறைப்பட்டுள்ளார். இதற்குக்  மூளைச் சலவையின் அடிப்படையில் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகப் போதிக்கப்பட்டு வரும்  ஒருதலைப்பட்சமான கோட்பாடுகள் தானே காரணம்! நம் நாட்டு முன்னோர்கள் (ஆண்கள்) மிகுந்த சாமர்த்தியசாலிகள். அதனால்தான், சுயமான சிந்தனைப் போக்கு, தன்னம்பிக்கை, ஆணைச் சாராது வாழ்வதற்கான தகுதி ஆகியவற்றைப் பெண்களுக்கு வழங்கிவிடவல்ல கல்வியறிவைக் காலங்காலமாகப் பெண்களுக்கு  மறுத்து வந்துள்ளனர்! இவ்வாறு அநியாயம் செய்ததன் மூலம் பெண்களை எக்காலத்துக்கும் எதிர்க் கேள்வி கேட்க முடியாத வக்கற்ற நிலையிலேயே வைத்து ஆண்கள் அடிமைப் படுத்தினார்கள். இன்றும் கூட நம் நாட்டில் சில மாநிலங்களில் நிகழும் குழந்தைத் திருமணங்களும்,  கணவனோடு இளம் விதவைகளேயானாலும் கூட உடன்கட்டை ஏறுகிற வழக்கமும் நீடித்து வருவதும் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கின்றன. இல்லாவிடில், ராஜஸ்தானத்தில் கொஞ்ச நாள்களுக்கு முன்னால், ‘கணவனுடன் சிதையில் இறங்கி உயிரை விடுவது எங்கள் உரிமை” என்று கூச்சல் போட்டுக்கொண்டு சில பெண்கள் ஊர்வலம் சென்றிருப்பார்களா என்ன! முட்டாள்தனத்தின் உச்சமல்லவா இது!

போகட்டும். வரதட்சிணை, மாமியார் கொடுமை ஆகிய  இரண்டுக்கும் அடிப்படைக் காரணம் ஒன்றே. பெண்ணின் பொறாமை. இந்தப் பொறாமை எதனால் வருகிறது? அறியாமையால் வருகிறது. அறியாமையின் அடிவேரோ அவள் கல்வி மறுக்கப்பட்டதன் விளைவாகும். மருமகள் எரிப்பு, கொடுமை, வரதட்சிணை இவை யாவுமே பெண்ணின் பொறாமையின் விளைவேயாம். ஆனால், இதை வளர்த்தவர் யார்? பெண்களுக்கு என்று ஆண்கள் வகுத்து வந்துள்ள வாழ்க்கை முறையே அன்றோ! கல்வியறிவு பெற்றுவிட்டால் பெண் சிந்திக்கத் தொடங்குவாள் என்பதால் அவளை எக்காலத்தும் அறியாமையிலேயே ஊறவைப்பதுதான் தனக்கு வசதியானது என்று திட்டம் தீட்டி, நிரந்தரமாக அவளை இருட்டில் வைத்து வந்துள்ளவன் ஆணேயன்றோ! இந்தக் கோளாறு தாம் பெற்ற பெண் மக்களைப் பாதிக்கும் போது மட்டும் ஆண்கள் “லெட்டெர்ஸ் டு த எடிட்டர்” எழுதி என்ன லாபம்?

சிறு வயதில் பெற்றோருக்கும், மணமான பின் கணவனுக்கும் அடிமையாக வாழும் ஒரு பெண் குணக்கோளாறுக்கு உள்ளாகித் தான் ஆட்டிப் படைக்க ஓரு ஆன்மா கிடைத்ததும், அவிழ்த்துவிடப்பட்ட வெறிபிடித்த காளையைப் போல் நடந்து கொள்ளுவதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? இந்த வெறிக்குரிய குறைபாடு யாரால் ஏற்பட்டது, அதைக் களைய என்ன செய்யவேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்காமல் “பெண்ணுக்குப் பெண்ணே எதிரி” என்று பெருமூச்சு விடுவது என்ன நியாயமாம்? ஆண்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் இந்தச் சொற்சாலத்தைப் பெண்களும் சிந்திக்காமல் பயன்படுத்தாலாகுமா? ‘அவனுக்கென்ன! ஆண்பிள்ளை! முன்னே, பின்னேதான் இருப்பான். நீ பொட்டச்சி. அடங்கித்தான் போகணும்’ என்றுதானே பெண்ணின் பெற்றோர்கள் சொல்லுகிறார்கள்! ஆண் குழந்தைகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே தாயும் தகப்பனும் இவ்வாறு அறிவிக்கும்போது அந்த ஆண்குழந்தையின் மனத்தில் விஷவித்தல்லவோ விதைக்கப்படுகிறது!

தன் கணவனிடம் கொடுமைப்பட்ட ஒரு பெண்மணி தன் மருமகளிடம், ‘நீதான் அனுசரித்துப் போக வேண்டும்’ என்று கூறித் தன் பொல்லாத பிள்ளைக்கு வக்காலத்து வாங்குவதும், தன் மகள் கொடுமைக்கு ஆளாகும்போது தாங்கிக்கொள்ள முடியாமல் – ஆனால் தன் மனைவியைக் கொடுமைப்படுத்திய  – ஓர் ஆண் கண்கலங்குவதும் இந்த அநீதியின் விளைவுகள்தானே! கொஞ்சமேனும் சிந்தித்தால், இந்த மாமியாரும் இந்தத் தகப்பனும் மாறுவார்களன்றோ?

சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால், நம் குழந்தைகளிடம் நற்பண்புகள் ஏற்படும் வண்ணம் நம் கல்வி முறை அமைந்தால் ஓரளவுக்கேனும் நிலைமை சீர்ப்படும். முன்பெல்லாம் “மாரல் க்ளாஸ்” என்பதாய் “நீதி போதனை” வகுப்பு ஒன்று இருந்தது. அது இப்போது பெரும்பாலான பள்ளிகளில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அப்படியே இருந்தாலும் இவ்வகுப்பைப் பெண்களுக்கு மட்டுமே அறிவுரை சொல்லும் ஒரு தலைப்பட்சமான வகுப்பாக மாற்றாது, பெண்களை மதிக்க ஆண்கள் பயில வேண்டியதன் நியாயத்தை வலியுறுத்தும் ஒன்றாகவும் ஆக்க வேண்டியது கல்வித் துறையினரின் கடமையாகும். கெட்டவற்றை விதைக்க முடிவது போல் காலப் போக்கில் நல்லவற்றையும் சிறுகச் சிறுகவேனும் மக்கள் மனங்களில் விதைக்க முடியும் தானே?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.