குறளின் கதிர்களாய்…(355)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(355)

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.

– திருக்குறள் – 998 (பண்புடைமை)

புதுக் கவிதையில்...

நட்புடன் இல்லாமல்
தம்முடன் பகைமைகொண்டு
தீமையே செய்பவர்களிடம் கூடப்
பண்புடையவராய்
நடக்க முடியாமல் போனால்
அறிவுடையோர்க்கு
அது பேரிழுக்காகும்…!

குறும்பாவில்...

நட்புகொள்ள முடியாதவராய்த் தீமையே
செய்வோரிடத்தும் பண்புடன் நடக்க இயலாதுபோனால்,
இழுக்காகும் அது அறிவுடையவர்க்கே…!

மரபுக் கவிதையில்...

நண்பராய் நடந்திட இயலாமல்
நலமிலாப் பகைமை தனைக்கொண்டே
புண்படத் தீமை பலவற்றைப்
பொறுப்பே யின்றிச் செய்தாலும்
பண்பே யில்லா அவரிடத்தும்
பகைய தேதும் கொள்ளாமல்
பண்புடன் நடக்க இயலாதெனில்
பாரில் இழுக்காம் அறிந்தவர்க்கே…!

லிமரைக்கூ...

நட்பில்லை உள்ளத்தில் அழுக்கே,
பகையுடன் தீதுசெய்பவரிடமும் பண்போடிருக்க இயலாதெனில்
அறிவுடையோர்க்கு அதுபேர் இழுக்கே…!

கிராமிய பாணியில்..

பண்பிருக்கணும் பண்பிருக்கணும்
மனுசனுக்கு
நல்ல பண்பிருக்கணும்,
எல்லார்கிட்டயும் பண்போட பழகணும்..

நட்பே இல்லாம
பகயோடே
நமக்குக் கெடுதலே
செய்யிறவன் கிட்டேயும்
பகயில்லாம
பண்போட நடக்க முடியல்லண்ணா
படிப்பறிவு உள்ளவங்களுக்கு
அது
பெரிய கொறதான்..

அதால
பண்பிருக்கணும் பண்பிருக்கணும்
மனுசனுக்கு
நல்ல பண்பிருக்கணும்,
எல்லார்கிட்டயும் பண்போட பழகணும்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க