பாஸ்கர்

பள்ளி நாட்கள் எப்படிப்பட்டவர்க்கும் ஒரு இனிமையான விஷயம். படிப்பவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் , ஆளுமை எல்லாம் தாண்டி, பள்ளி நாட்கள் ஒரு கூட்டு வாழ்க்கை. அதுவும் இரண்டு மாத விடுமுறை முடிந்து அடுத்த வகுப்பில் எல்லோரும், புது இடத்தில கூடும்போது ஏற்படும் சந்தோஷம் எந்த சினிமாவும் பணமும் கொடுக்க முடியாதது.

சின்ன சட்டை, அதில் பிய்ந்த பொத்தானைத் தைக்க வேண்டாம். அதனை அப்பாவோ அம்மாவோ உள்வழியாக பின்னை வைத்துக் குத்தி (தலையை குனியாதடா) ஊக்கு மாட்டி அனுப்பும் போதே தெரியும். ஒரு விளையாட்டில் அது படக்..

இருந்தாலும் அவர்களின் அன்பு இன்றும் என் கண்ணில் நீர் வரவழைக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத செயல்.

இங்கு மாதாவும் பிதாவுமே குருவும் தெய்வமும். அறுபதுகளில் மயிலாப்பூரில் அம்பிகா ஸ்டோர்ஸ் புத்தகக் கடை மிகப் பிரசித்தம். அங்கு லேபில் வாங்கி அதனைக் கட்டுக் கட்டாய் வைத்துக்கொண்டு வகுப்பில் பீத்திகொள்ள அவ்வளவு ஆசை. என் தந்தை புத்தகங்களுக்கு நேர்த்தியாய் அட்டைபோட்டு நாலு பக்கமும் அதனைச் சோற்றுப் பருக்கை வைத்து ஒட்டி, அதனை வெயிலில் காய வைத்து, அடுத்த நாள் அந்த அட்டையில் பெயரை, கூர்ப்பான பௌண்டைன் பேனாவால் எழுதி, துணிப்பையில் போட்டுக் கொடுப்பார். எனக்கு எந்தப் பக்கம் கிழிந்தாலும் கவலை இல்லை. அப்பா ஒட்டின லேபிளும் அவர் கையெழுத்தும் ஒன்றும் ஆக கூடாது.

இன்று என் அலுவல் பணி சம்பந்தமாய் ஒரு புத்தகக் கடைக்குச் சென்ற போது அந்தக் கடை வாசம், என் நினைவுகளைப் பள்ளிக்கு அனுப்பியது. ஒரு புதுப் புத்தகம் எடுத்து, அதனை அழகாய் மடித்து, சீட்டுக்கட்டு போல, பக்கங்கள் புரட்டி, வாசக் காற்று முகர்ந்தேன். என் தந்தை வாசம் காற்றில் மலர்ந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *