தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 20

0
0-1

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

இலக்கணக் குறியீடுகளும் உவமங்களும்

முன்னுரை

இலக்கண நூல்களில் அவற்றின் ஆசிரியர்கள் பொருள் புலப்பாட்டுக்காகப் பயன்படுத்தும் உவமங்கள், இலக்கண உரையாசிரியர்கள் நூற்பாக்கள் விளக்கம் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் உவமங்கள் என்னும் இவற்றைக் கடந்து இலக்கணக் குறியீடுகளையே இலக்கிய விளக்கத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு இலக்கியச் சூழலைக் காணமுடிகிறது. உயிர், மெய், குற்றியலுகரம், ஆய்தம், உடம்படுமெய், தழாஅத்தொடர் என்னும் இத்தகைய குறியீடுகளைப் பொருத்தமான உவமங்களாகக் கையாள்வதன் வழிக் கற்பனையைச் செழுமை செய்து கொள்ளும் முயற்சியைக் காணலாம். அன்புக்குரியவர்கள் தங்களை உயிரும் மெய்யுமாகக் கருதிக் கொள்வதும் எழுதுவதும் பேசுவதும் பெருவழக்கு. தாய் தன் குழந்தையை இவ்வாறு கொஞ்சி மகிழ்வதைத் தவிர மற்றவையெல்லாம் அவ்வளவு உயிர்ப்புடையன அல்ல என்பது வேறு. மேற்சொன்ன இலக்கணக் குறியீடுகளை இலக்கியச் சித்திரிப்பில் உவமங்களாகக் கையாள்வதற்கு விரிந்து பரந்த புலமையும் ஆழ்ந்த நுண்ணுணர்வும் தேவை. எனவேதான் இத்தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தவர் எண்ணிக்கையும் வெற்றி பெற்றவர் எண்ணிக்கையும் எதிர்விகிதத்தில்  அமைந்துபோயிருக்கிறது.

இதுதான் ‘உடம்படுமெய்’ இலக்கணம்

எழுத்துக்களில் மெய்யும் உயிரும் கலக்கும். ஆனால் உயிரும் உயிரும் கலப்பதில்லை. மானுட உறவுகளில் உடல் கலப்பு இல்லாமல் உயிர்க்கலப்பு அரிது. இரண்டு உயிர் கலக்குமா எனின் கலக்காது. ‘உடல் கலக்குமா?’ எனின் கலக்கும். எழுத்துக்களில் மிக அரிதான நிலையில் நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் உயிராகவே நிற்கக் கலக்க வேண்டிய நிலை வரும். அப்போது அவ்விரு உயிர்களும் புணர்வதற்கு மெய்யின் துணை தேவைப்படும். அந்த மெய்க்கு ‘உடம்படுமெய்’ என்று பெயர். (இதனை மெத்த கற்ற மேதைகள் சிலர் உடன்படுமெய் என்று எழுதுவர்) ஒற்றுமைப்படாத இரண்டு உயிர்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு மெய்யின் உதவி தேவை என்பதையே இது காட்டுகிறது. தொல்காப்பியம் இதனை,

“எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படுமெய்யின் உருவுகொளல் வரையார்”

என்று இலக்கணம் செய்திருக்கிறது. மெய்யுறு புணர்ச்சியைக் காட்சிப்படுத்துங்கால் மிகவும் எச்சரிக்கையாகச் சித்திரிக்க வேண்டிய பொறுப்பு கவிஞர்களுக்கு உண்டு. வள்ளற்பெருமான் தாம் எழுதிய இங்கிதமாலையில் இதனை வெளிப்படுத்தியிருப்பார். கலவியின்பத்தை மொழியில் காட்சிப்படுத்துவது அரிய கவிதைத் தொழில் நுட்பம்!

“சொல்லரிதாய் மிக இனிதாய் நாழி கைபோம்!
சுடர்விழிகள் ஈரிரண்டு நான்கு பூக்கள்
புல்லிதழில் போய்ஒடுங்கும் தமைம றந்து
பூரிப்பார் நலம்பாடி இரவு செல்லும்”

என்பார் பாவேந்தர். பாவேந்தருக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலம்பாசிரியர் இளங்கோ கண்ணகியும் கோவலனும் துய்த்த புணர்ச்சி இன்பத்துக்குத் ‘தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என’ப் பாம்பின் புணர்ச்சியை உவமமாக்கி உணரவைத்தார். பாவேந்தருடைய நேரடி மாணாக்கர்களில் ஒருவரான சுரதா இதனை இன்னும் கூடுதல் இலக்கண நயத்தோடு பாடியிருக்கிறார். ‘பொருத்தம் உடலிலும் வேண்டும்’ என்பதை மறக்காத கவிஞர், தலைவனும் தலைவியும் கூடி மகிழ்ந்து அனுபவித்த இன்பதைக் காட்சிப்படுத்துகிறபோது,

“நாவில் நீ! நெஞ்சில் நீ! அஞ்சன் ஆட்சி
நல்லதமிழ்ப் பாடல் நீ அன்றோ?” என்றான்.
ஓவம்மாள் ஈன்ற மகள் சிரிப்பை ஈன்றாள்
உடம்படுமெய் இலக்கணத்தை இரவில் கண்டார்!

எந்த உடல் முதலில் கலந்தது என்பது இருட்டுக்கும் தெரியாத புதிர். பாவேந்தர் இளங்கோவை மறக்கவில்லை. சுரதா பாவேந்தரை மறக்கவில்லை. இக்கவிஞர் யாரும் தமிழ்ப் பண்பாட்டையும் மரபையும் மறக்கவில்லை! இதுதான் தமிழினப் பண்பாட்டுக் கூறு! கவிதை என்பது ஒன்றினை உணர்த்துவது! விவரிப்பது அல்ல!

தோன்றா எழுவாய்

‘படித்தாயா?’ என்னும் வினா இருக்கிறது. ‘நீ’ என்னும் எழுவாய் இல்லை. ‘படித்தானா?’ என்னும் வினா இருக்கிறது ‘அவன்’ என்னும் எழுவாய் இல்லை. ‘படித்தார்களா?’ என்னும் வினா இருக்கிறது. ‘அவர்கள்’ என்னும் எழுவாய் இல்லை. எழுவாய் இல்லை என்றாலும் அவ்வினாச் சொற்கள் இடத்தை உணர்த்தி வினாப்பொருளையும் உணர்த்துகின்றன. இவ்வாறு எழுவாய்த் தொடர் ஒன்றில் வெளிப்பட நிற்காது மறைந்து நிற்கும் எழுவாய்க்குத் ‘தோன்றா எழுவாய்’ என்று பெயர். தோன்றா எழுவாயின் மறைந்து நிற்கும் இந்தத் தன்மையைக் கவிஞர் ஒருவர் உவமமாக்குகிறார். எப்படி? இப்படி!. ‘வன்னிய வீரன்’ என்பது கவிஞர் சுரதா எழுதிய குறுங்காப்பியம். அந்தக் காப்பிய நாயகனான காத்தவராயனைப் பகைவன் கொல்ல முடியாமல் தவிக்கிறான். வெல்ல முடியாமல் விழிக்கிறான். பரத்தை ஒருத்தியைக் கொண்டு சூழ்ச்சியால் வன்னிய வீரனை வெல்ல திட்டமிடுகிறான். பரத்தை குப்பாச்சியிடம் மயங்கிக் கிடக்கும் வன்னியவீரனுக்குப் பாலில் நஞ்சு கலந்து கொடுக்கிறாள் குப்பாச்சி. குவளை தெரிகிறது. குவளையில் பால் தெரிகிறது. ஆனால் பாலுக்குள் கிடக்கின்ற நஞ்சு தெரியவில்லை. சுரதா,

“ஆதிப்பொதுமகள் அளித்த சாறதனில்
தோன்றா எழுவாய் போல் தோன்றாது இருந்த
புதுவிடம் அன்னவன் உடலுட் புகுந்ததால்
முத்தம் கொடுத்து முடித்தோன் முடிவில்
சத்தம் கொடுத்தபடி சாய்ந்தனன் மெத்தையில்”

என்று எழுதுகிறார். ‘தோன்றா எழுவாய் போல் இருந்த புதுவிடம்’ என்னும் இலக்கண உவமத்தால் மறைந்திருந்த நஞ்சினைக் காட்சிப்படுத்துகிறார். இலக்கணப் புலமை பெற்ற இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சிலருள் ஒருவரான சுரதாவே உவமைக் கவிஞர் என்னும் சிறப்புக்குரியவரானார்!.

இடைநிலையும் வெண்டளையும்

கடையெழு வள்ளல்களில் ஏனைய ஐந்து வள்ளல்களிலும் பாரியும் பேகனும் தனிச்சிறப்புக்கு உரியவர். இதனை ‘முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும்’ என்னும் வெண்பாமாலையால் அறியலாம். இவருள் பேகன் குளிரினால் நடுங்கிய மயிலுக்குப் போர்வை தந்ததாகக் கூறப்படுகிறது. இவனைப் பரணர், வன்பரணர், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் முதலிய சான்றோர்கள் பாடியிருக்கிறார்கள். மனைவியிடமிருந்து பிரிந்து வேறொருத்தியுடன் வாழும் பேகனுக்கு அறிவூட்டி மீண்டும் இல்லறத்தில் ஈடுபட வைக்க அனைவரும் முயன்றனர். மன்னரில்லாப் புலவர் அவையில் புலவர் பலரும் வீற்றிருக்கப் பரணர் பேகன் புகழ் பாடுகிறார். பரணரின் புகழ்ப்பரணியைக் கேட்டவுடன் சினங்கொண்ட பெரும்பூதனார் எழுந்து பரணரை வினவுவதாக ஒரு கற்பனையைத் தற்காலக் கவிஞர் செய்திருக்கிறார். தமது இலக்கணப் புலமையைப் பயன்படுத்திப் பேகனைப் பாரட்டிய பரணரைக் கடிந்து கொள்கிறார்.

நாட்டியத்து மயிலா? நடுங்குகின்ற மயிலா?

தொன்மம் மற்றும் வரலாறு ஆகியவற்றில் காணும் நிகழ்ச்சிகளைத் தம் கற்பனையோடு இணைத்துப் புதியன படைப்பது தமிழுக்குப் புதியதன்று. இந்த நிரலில் பெரும்பூதனார் அறிவுரையும் அமைந்துள்ளது. பூதனார் என்ன வினவுகிறார்? “அவன் மயிலுக்குப் போர்வை தந்ததே அறியாமையின் விளைவு!. மயில் நடுங்கிறதா? கார்மேகம் கண்டு நாட்டியமாடுகிறதா? என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை!. அத்தகையவன் மனைவியின் வேதனையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? வருகின்ற பேரொலியெல்லாம் வேட்டுச் சத்தமாகத்தான் இருக்கவேண்டுமா? தும்மலாகவும் இருக்கலாம் அல்லவா?” என்று வினவும் பூதனார் “இடைநிலைகள் காலம் காட்டும்! சரி. அதற்காகக் காலம் காட்டுபவையெல்லாம் இடைநிலைகளாகிவிடுமா? வெண்பாவில் வெண்டளைகள் விரவும். சரி. அதற்காக வெண்டளைகள் விரவுகிற பாட்டெல்லாம் வெண்பாவாகிவிடுமா? மயில் தோகை விரித்தது உண்மை. மழைக்கு மயில் நடுங்கித்தான் தோகைவிரிக்குமா? அது மேகங்கண்டு நாட்டியமாடக் கூடாது என்று விதி உண்டா? கண்ணகியின் கண்ணீரைத் துடைத்தெறிய ஆவன செய்வீர்! என்று பரணரை நோக்கிக் கூறுகிறார். அந்தப் பாடல் இப்படி அமைந்திருக்கிறது!.

“நாட்டியத்து மயிலுக்கும் குளிரி னாலே
நடுங்குகின்ற மயிலுக்கும் வேறு பாடு
காட்டுக்குள் அறியாத வேந்தன் நாட்டுக்
கடமைகளை எவ்வாறு புரிந்து கொள்வான்?
வேட்டுக்கும் தும்மலுக்கும் வேறு பாடு
விளங்காதா? வெண்டளைகள் விரவு கின்ற
பாட்டெல்லாம் வெண்பாவா? காலம் காட்டு
பவையெல்லாம் இடைநிலையா? பாட்டுவேந்தே!

“கார்போன்ற கருங்கூந்தல் நடுங்க ஏக்கக்
கண்ணிரண்டும் புண்ணாகி நடுங்க வில்லின்
கூர்போன்ற உதட்டுமுனை நடுங்க செங்கை
குலைக்காந்தள் போல்நடுங்க உருட்டி விட்ட
தேர்போலக் கிடக்கின்றாள் மனைவி! அந்தத்
தென்பொதினிப் பொன்மயிலை மூடுதற்குப்
போர்வைகொண்டு போகட்டும் பேகன்! என்று
பூதனங்கு முழக்கமிட்டான்! பரணர் போனார்!”

இலக்கணச்சுவை

இந்தக் கவிதையில் பொருத்தமான இடத்தில் பொருத்தமான இலக்கணக் குறிப்புக்களை உவமமாக்கியிருக்கிறார். வினைச்சொல்லில் பெரும்பாலும் இடைநிலை காலம் காட்டும். சிறுபான்மை விகுதி காலம் காட்டும். பகுதி காலம் காட்டாதெனினும் பகுதி ஒற்று இரட்டித்துச் சிறுபான்மை இறந்த காலம் காட்டும். எனவே இடைநிலைதான் காலம் காட்டும் என்பதில்லை. வெண்பாவுக்குரிய தளை வெண்டளை. அதனால் அதில் அது வரவேண்டும் என்பதன்றி அதில் மட்டுந்தான் வரவேண்டும் என்பதில்லை. இந்த இலக்கணச் சிந்தனைகளை மயிலின் அசைவு பற்றிய சித்திரிப்புக்கு உட்படுத்தி, உவமமாக்கிக் கவிதை நயத்தை உயர்த்தியிருக்கிறார் கவிஞர் முருகுசுந்தரம்.

தழுவு தொடரும் தழாஅத் தொடரும்

வேற்றுமை, அல்வழி ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் ‘தழுவுதொடர்’ என்றும் ‘தழாஅத்தொடர்’ என்றும் இரண்டு உண்டு. ‘சங்கர் நூலைப் படித்தான்’ என்ற தொடரில் ‘நூலை’ என்னும் சொல் இயையாமல் விடுபட்டு நின்றாலும் பொருள்தொடர்பு அறாது. அதாவது ‘சங்கர்’ என்பது நிலைமொழி. ‘படித்தான்’ என்பது வருமொழி. இடையில் வந்திருக்கும் ‘நூலை’ என்னும் சொல் இரண்டனையும் பிரித்தாலும் சங்கர் படித்தான் என்னும் அவ்விரண்டுக்குமான பொருள் தொடர்பு அறுந்துவிடவில்லை என்பதைக் காணலாம். நிலைமொழி வருமொழிகள் அல்வழி, வேற்றுமைப் பொருள் புலப்பட ஒருங்கியைந்து நில்லாது இடையே பிற சொற்கள் வரச், சேய்மைப்பட நிற்கும் தொடர்மொழிக்கே தழாஅத் தொடர் என்று பெயர். அடுத்த சொல்லைத் தழுவாவிடினும் தொடர்ப் பொருள் சிதையவில்லை என்பதையே ‘தழாஅத் தொடர்’ என்பது உணர்த்துகிறது.  இதனை இன்னும் எளிமையாகப் புரியவைக்க முடியும். ‘நீர் குடித்தான்’ என்பது வேற்றுமைத் தொடர். ‘நீரைக் குடித்தான்’ என்பது வேற்றுமை வரி. இவ்விரண்டு தொடர்களிலும் நீர் என்பதும் குடித்தான் என்பதும் தழுவியே நிற்கின்றன என்பதை அறியலாம். ஆனால் நீர்க்குடம் என்று ஒரு தொடரை எடுத்துக் கொள்ளலாம். இது ‘நீரை உடைய குடம்’ என விரியும். ‘நீர்க்குடம்’ என்பதில் நீரும் குடமும் ஒன்றையொன்று தழுவி நிற்கிறது. ஆனால் ‘நீரை உடைய குடம்’ என்பதில் ‘நீரை’ என்ற சொல்லையும் ‘குடம்’ என்ற சொல்லையும் தழுவவிடாமல் ‘உடைய’ என்னும் சொல் தடுக்கிறது. (அதனால் நீர்க்குடம் என்பதை வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்பர்) நீரை உடைய குடம் என்பதைத்தான் தழாஅத்தொடர் என்கிறோம். இந்தத் தழாஅத்தொடர் என்னும் புணர்ச்சியிலக்கணக் குறியீட்டைக் கவிஞர் ஒருவர் பொருத்தமான இடத்தில் உவமமாகக் கொள்கிறார்.

தலைவன் தழுவாத தலைவி

தினைப்புனம் காக்கிறாள் தலைவி. அவள் நோக்கம் அங்குவரும் தலைவனைக் கண்டு மகிழ்வதே!. ஆனால் செவிலி அங்கு வந்து அவளை அழைத்துச் செல்கிறாள். தன்னோடு அண்மையாக வேண்டிய தலைவனைச் சேயனாக்கிச் செவிலியோடு இணைந்து இல்லம் திரும்பும் நிலையைக் கூறித் தலைவி தோழிக்கு அறத்தோடு நிற்பதை,

“விழாத்தொறும் நூல்வெளியாக்கி என்றென்றும் விரிவுரைசெய்
குழாத்தொடு தொண்டு செய்து ஓங்கும்கரந்தை குளிர்புனம் விட்டு
அழாத்துயரோடு எமர் ஆணையிற்சோலை “அன்பர் வரின்
தழாத் தொடர் ஆயினம்” என்று உரை சாற்றுவீர் எம் தத்தையரே”

(கரந்தைக் கோவை)

என்று பாடுகிறார் கவிஞர். ‘தன்னைத் தேடிவரும் தலைவரோடு தழாஅத் தொடர் ஆயினம்’ என்னும் தொடரில் தலைவனைத் தழுவாத, (தழுவ இயலாத) தன்னிலையைத் தழாஅத்தொடரோடு ஒப்பிடும் அருமை அறிக. நீரையும் குடத்தையும் ‘உடைய’ என்னும் சொல் தழுவவிடாமல் தடுக்கிறதாம்.  தலைவனையும் தன்னையும் செவிலி தழுவவிடாமல் தடுக்கிறாளாம். எனவே தழுவு தொடராயிருக்க வேண்டிய அவள் தழாஅத்தொடர் ஆனாளாம். இலக்கணத்தை இனிக்க வைக்க இப்படியும் ஒரு முயற்சி!

மெல்லினம் விகாரமான கதை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிஞர்களில் தமது சிந்தனையால் தனித்து விளங்குபவர் கவிஞர் அப்துல் ரகுமான். தனித்தன்மை மிக்க கருத்துக்கள், அளவையியல் சார்ந்து, அழகியல் குறையாமல் வெளிப்பட்டு நிற்கும் பாங்கை அவர்தம் கவிதைகளில் காணலாம். அகல்விளக்குகளாக இருக்க வேண்டிய பெண்களை ‘ஆண்கள் அடிமைப்படுத்தினார்கள்’ என்ற ஒரே ஒரு முழக்கத்தை முன்னிலைப்படுத்தித் தெருவிளக்குகளாக மாற்றி வைத்திருக்கும் கொடுமையை இன்றையச் சமுதாயம் செய்து கொண்டிருக்கிறது. அதற்குப் ‘பெண்ணுரிமை என்றும் பெயர் கொடுத்துத் தன் பெருமையை இழந்து கொண்டிருக்கிறது. பெண்மையின் அடர்த்தியைப் புரிந்து ஆற்றலைத் தெளிந்து, அதனை வணங்குவது வேறு. உரிமையளிப்பதாகச் சொல்லி அவர்களைத் தந்திரமாக அலுவலகத்துக்கு அனுப்பி உழைக்கச் செய்து அவர்தம் உழைப்பைச் சுரண்டுவது என்பது வேறு. இது தனித்த ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. ஆனால் இதுபற்றிய அப்துல் ரகுமான் கருத்து மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அக்கருத்தை அவர் உவமை வழியாக வெளிப்படுத்தும் பாங்கும் அளவையியல் நெறியும் மிகுந்த கவனத்திற்குரியதாகிறது.

“பெண்ணே!
உன் தளைகளை அகற்றும்
ஆவேசத்தில்
வாழ்க்கைக்கு ஆதாரமான
பந்தங்களையும் அல்லவா வெட்டிவிட்டாய்!
முன்பு
புறம் உனக்கு
மறுக்கப்பட்டது.
இப்பொழுது
அகத்தை நீ
மறுதலிக்கிறாய்.
மெல்லினமே!
வல்லினமாகும் முயற்சியில்
விகாரமாகி விட்டாயே”

மேற்கண்ட கவிதை வரிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் மிகவும் ஆழமான சிந்தனைக்குப் பிறகு செய்யப்பட்ட பதிவுகளாகும். தளையும் பந்தமும் ஒரு பொருள் குறித்த இருசொல்லாயினும் இருவேறு நிலைப்பாடுகளைக் குறிக்கும். தளை பந்தமாகிறபோது பாட்டு இனிமையாகிறது. பந்தம் தளையாகிறபோது பாட்டு கசக்கிறது. தளை இலக்கண நெறி. பந்தம் இலக்கண உறவு. மறுக்கப்பட்ட புறத்தைப் பெறவேண்டிய பெண், மயக்கத்தால் தனக்குரிய அகத்தை மறுதலிப்பதையும், மெல்லினமாக இறைவனால் படைக்கப்பட்ட பெண், ஆணைப் போல் வல்லினமாக வேண்டும் என எண்ணியதன் விளைவாக இறுதியில் விகாரமாகி நிற்கின்றாள் என்ற உண்மையையும் இலக்கணக் குறியீடுகளால் சுட்டிக்காட்டும் உவமத்திறன் பெரிதும் சுவைத்தற்குரியது.

நிறைவுரை

மேற்சொல்லப்பட்ட இலக்கணக் குறியீடுகளை உவமமாகப் பயன்படுத்துவதில் கவிஞர் பலரும் ஈடுபட்டு வந்திருந்தாலும் எண்ணிக்கையில் மிகக்குறைந்த விழுக்காட்டினரே இதில் வெற்றி பெற்றுள்ளனர். ஆழ்ந்த இலக்கணப்புலமையும் இலக்கணக் குறியீடுகளுக்கான ஆழ்பொருளை நன்கு உள்வாங்குதலும் அவற்றை மறித்து நோக்கும் பேராற்றலும் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்தலும் பொருளுக்கான பொருத்தத்தை நன்கு சிந்தித்து அமைத்தலுமாகிய ஆற்றல் எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை.  கவிப்பேரரசர் பலரும் வெல்ல முடியாத இந்தக் கவிதைத் தொழில் நுட்பம் அறிவும் உணர்வும் உணர்ச்சியும் கலந்த கலவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.