Tag: நுண்பொருள் காண்பதறிவு

  • கைவிளக்கை உருவாக்கிய காரிகை

    தேமொழி

    கனடா நாட்டின் ‘பிரிட்டிஷ் கொலம்பியா’ பகுதியில் உள்ள ‘விக்டோரியா’ என்ற இடத்தில வசிப்பவர் 16 வயதான ‘ஆன் மாக்கசின்ஸ்கி’ (Ann Makosinski from Victoria, British Columbia, Canada) என்ற பள்ளிச் சிறுமி.

    இந்த பதின்மவயது பள்ளி மாணவி செய்த சாதனை, மின்கலம் ஏதுமின்றி ஒளிதரும் கைவிளக்கு (LED torch light/flashlight without batteries) ஒன்றினை உருவாக்கியது. இவரது கண்டுபிடிப்பான கைவிளக்கு ஒளிர்வதற்கு மின்சக்தி அளிக்க மின்கலம் தேவையில்லை என்பதுடன், இரவு பகல் எந்நேரமும் எங்கும் ஒளிரக்டியது.

    இவரது தாய் பூர்வீகத்தில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், தந்தை கனடா நாட்டைச் சேர்ந்தவர். ஒரு முறை பள்ளி விடுமுறைக்கு தனது தாயின் நாடான ஃபிலிப்பைன்சுக்குச் சென்றார் மாணவி ஆன். அங்கு அவருக்கு விளையாடப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். நாடு திரும்பிய பிறகு ஒரு முறை அவரைத் தொடர்பு கொண்ட அவரது ஃபிலிப்பைன்ஸ்தோழி தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும், மின்சாரம் இல்லாததால் விளக்கின்றிப் படிக்க முடியாது போனதே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

    சிறுவயதில் இருந்தே அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆன். அத்துடன் எதையாவது உருவாக்குவதிலும் வல்லமை கொண்டும் விளங்கினார். தனது தோழி போன்று மின்சார வசதியற்ற இடங்களில் வாழும் பள்ளி மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே உடனே செயலில் இறங்கினார்.

    பொதுவாகவே மின்கலம் இன்றி மின்சாரத்தை சேகரிக்க சோலார் செல் என்றழைப்படும் சூரியமின்கலங்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறின்றி பயன்படுத்துபவரின் உடல்வெப்பம் தரும் மின்சாரம் (thermoelectric) கொண்டு விளக்கை ஒளிரச் செய்யவது அவருக்கு சிறந்த வழியாகத் தோன்றியது.

    இவரது முயற்சியைக் கேள்விப்பட்ட இவரது பள்ளியின் அறிவியல் ஆசிரியை,கூகிள் இளைஞர்களை ஊக்குவிக்க நடத்து அறிவியல் போட்டியில் இவரது கண்டுபிடிப்பை சமர்பித்து பங்கு பெறும்படி ஆலோசனை வழங்கினார். ஆனும் அதன்படியே செய்தார். இவர் பங்கேற்ற 15 – 16 வயதினர்கானப் பிரிவில் இவரது கண்டுபிடுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டத்தால் 2013 ஆண்டிற்கான பரிசும் பெற்றார்.

    இவர் உருவாக்கிய கைவிளக்கின் பாகங்களாக இருப்பவை நான்கே நான்கு மின்னணு பாகங்களும், அத்துடன் ஓர் அலுமினியக் குழலும், அதனை உள்ளடக்கி வைத்த பி.வி.சி. பிளாஸ்டிக் குழல் ஆகியவை மட்டுமே. மிகக் குறைந்த விலையில் தயாரிக்கக் கூடியதும், எளிமையானக்  கட்டமைப்பும், அத்துடன் இந்த கைவிளக்கு பரவலான வகையில் அளிக்கக் கூடிய பயன்தரும் தன்மையே இவரது கண்டுபிடிப்புக்குப்  பரிசினைத் தேடித் தந்துள்ளது.

    Thermoelectric Flashlight

    Peltier Tilesஇவரது விளக்கினை கையில் பிடித்துக் கொண்டால் நம் உடலில் உள்ள வெப்பம், விளக்கில் பொருத்தப்பட்டுள்ள ‘பெல்டியர் ஓடுகள்’ (Peltier tiles) கொண்டு சேகரிக்கப்படும். கையில் வெளிப்படும் வெப்பத்திற்கும் சுற்றுபுறக் காற்றில் உள்ள வெப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டினால் பெல்டியர் ஓடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு அவை விளக்கை ஒளிர பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு வெப்பமின்சக்தி உருவாக்கும் அறிவியல் கோட்பாடு ‘பெல்டியர் விளைவு’ (Peltier effect) என்று அழைக்கப்படும். சுருக்கமாக, இரு வேறுபட்ட மின்கடத்திகளின்  இடையில் வெப்பம் பாய்ந்து அதன் மூலம் மின்சாரம் தோன்றுவது ‘பெல்டியர் விளைவு’ ஆகும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த வெப்பமின்சக்தியை  உருவாக்கும் பெல்டியர் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது. இரு பெல்டியர் ஓடுகள் இடையில் உள்ள வெப்பநிலை வேறுபாடுகள் மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது. பெட்லியர் ஓடுகள் என்பவை மேலும் கீழுமாக இரு வனையோடுகள் (ceramic tiles) கொண்டது. இவற்றினிடையே குறைமின்கடத்திகள் (semiconductors) பொருத்தப்படிருக்கும். இரு வேறுபட்ட மின்கடத்திகளில் ஒன்று வெப்பத்தை உள்ளே உறிஞ்சும் பொழுதும், மற்றொன்று வெப்பத்தை வெளிவிடும்போழுதும், அந்த வெப்பம் குறைகடத்திகள் வழியாக ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு செல்லும் பொழுது வெப்ப மின்சக்தி உருவாகிறது.

    பெல்டியர் விளைவு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே  சிறந்த வழிமுறை எனக் கருதி, அதனைப் பயன்படுத்தி கைவிளக்கு ஒன்றினை உருவாக்க விரும்பினார் ஆன். இதற்காக, மனித உடல் வெளிவிடும் வெப்பத்தின் அளவு எவ்வளவு, இந்த வெப்பம் நாம் பொதுவாக வசிக்கும் சூழலில் ஒரு கைவிளக்கு ஒன்றினை ஒளிரச் செய்ய எந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டு, அந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டுமானால் அதற்கு எத்தனை பெல்டியர் ஓடுகள் தேவைப்படும் என்று கணக்கிட்டார். விளக்கினை உருவாக்க நான்கு பெல்டியர் ஓடுகள் தேவை என அறிந்து, ஒரு அலுமினியம் குழாயில் ஒரு பக்கத்தில் இந்த பெல்டியர் ஓடுகளை அமைத்து விளக்குடன் இணைத்தார். பெல்டியர் ஓடுகள் அமைந்த குழாயின் பகுதியை கையில் பிடிக்கும்பொழுது, கையில் உள்ள பெப்பம் பெல்டியர் ஓடுகள் வழி ஊடுருவி, குறைந்த வெப்பம் உள்ள அலுமினியக் குழாயினுள் உள்ள காற்றினை நோக்கி குறைமின்கடத்திகள் மூலம் கடத்தப்படும் பொழுது மின்சக்தி உருவாகி கைவிளக்கை எரிய வைக்கிறது. இந்த வகை வெப்பமின்சக்தி உருவாக இரு முனைகளுக்கும் இடையில், அதாவது கைக்குக்ம் சூழ்நிலையில் உள்ள காற்றுக்கும் இடையில் குறைந்த அளவு ஐந்து பாகை வெப்ப வேறுபாடே போதுமானதாகும்.

    பலருக்கு பயனளிக்கும் நல்லதோர் கண்டுபிடிப்பினை உருவாக்க வயது ஒரு தடையல்ல, ஆர்வமும் முயற்சியும் போதுமென்று நிரூபித்துள்ளார் இப்பள்ளி மாணவி. இவருடைய அறிவியல் ஆர்வத்திற்குப்  பாராட்டுகள்.

      தகவல் மற்றும் படங்கள் சேகரித்த தளங்கள்: This Could Be Big: Teen Invents Flashlight That Could Change The World – http://news.yahoo.com/blogs/this-could-be-big-abc-news/teen-invents-flashlight-could-change-world-182121097.html?vp=1 Meet This Year’s Google Science Fair Finalists – http://www.businessinsider.com/2013-google-science-fair-finalists-2013-6?op=1#ixzz2uNuGEZgU Student’s flashlight works by body heat, not batteries – http://phys.org/news/2013-07-student-flashlight-body-batteries.html Peltier effect: http://en.wikipedia.org/wiki/Thermoelectric_effect Peltier tiles: http://www.tellurex.com/technology/peltier-faq.php

    Share
  • பயணப்பிணி வரக் காரணம் என்ன?

    தேமொழி

    பயணப்பிணி எனப்படும் “மோஷன் சிக்னெஸ்” (motion sickness) பயணத்தினால் ஏற்படும் ஓர் உடல்நலக்குறைவு.

    மக்களில் மூன்றில் ஒருவருக்கு பயணம் செய்யும் பொழுது, பயணம் ஒவ்வாத உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப் படுகிறார்கள். கொந்தளிப்பு, ஆட்டம், குலுக்கல் நிறைந்த பயணங்கள் சிலரை மிகவும் பாதிக்கும். இப்பாதிப்பு கப்பல், ஊர்திகள், விமானமப் பயணங்களிலும் ஏற்படுவதால் இந்த பயணப்பிணி முறையே seasickness, car sickness, airsickness என்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாகக் குறிப்பிடப் படுவதும் உண்டு. இவ்வாறு பயணங்கள் மட்டும் அல்லாது இராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டிலும், வேகமாக பயணிக்கும் திரைப்படக் காட்சிகளைக் காண்பதிலும் கூடப் பயணப்பிணி உடல்நலக் குறைவு ஏற்படுவதுண்டு.

    ‘Motion sickness’ அல்லது ‘Travel sickness’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் இந்நோய் ‘கின்னட்டோசிஸ்’ (kinetosis) என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. பயணப்பிணி ஏன் ஏற்படுகிறது என்ற சரியான விடையை இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் பல காரணங்களும் ஆராயப்பட்டு வருகிறது.

    அறிகுறிகள்:
    குமட்டல் (nausea), வாந்தி (vomiting), தலைசுற்றல் (dizziness), மயக்கம் (fainting) , தலைவலி (headache), சோர்வு (fatigue) ஆகியவற்றை பயணப்பிணியினால் பாதிக்கபட்டோர் உணரும் அறிகுறிகளாகக் குறிப்பிடுவர்.

    பயணப்பிணி தோன்றக் காரணம்:
    பொதுவாகக் கருதப்படும் காரணம்; தனக்குக் கிடைக்கும் முரணான சமிக்கைகளை மூளை கையாளும் விதமே பயணப்பிணி தோன்றக் காரணம். நாம் ஓர் ஊர்தியில் பயணிக்கும் பொழுது, நமது புலன்கள் முரணான சமிக்கைகளை மூளைக்கு அனுப்புவதால், குழப்பமடைந்த மூளையின் எதிர்விளைவு பயணப்பிணியாக உருவெடுக்கிறது. நமது பயணத்தின் போது திசை, இயக்கம், அசைவு பற்றிய தகவல்களை மைய நரம்பு மண்டலதிற்கும், மூளைக்கும் அனுப்பும் புலனுறுப்புகள் கண், காது மற்றும் தோலின் திசுக்கள் ஆகியன.

    கண் பார்வை மூலம் காணும் காட்சியின் வழி திசை மற்றும் இயக்கத்தையும், காதில் உள்ள உட்செவியின் உள்ள ‘செவி முன்றில்’ (vestibular system) உதவியால் சமநிலை, அசைவு ஆகியவற்றையும், தோலின் கீழ் உள்ள தசைகளில் பொதிந்துள்ள உணர்வு நரம்புகள் ஈர்ப்புவிசை, வேகம் போன்ற தகவல்களையும் உள்வாங்கி புலனுறுப்புகள் மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. பயண ஊர்தியில் பயணிக்கும் பொழுது நமது கண்ணானது நாம் அறையில் அசையாமல் அமர்ந்திருப்பது போன்ற தகவலை மூளைக்கு அனுப்புகிறது, ஆனால் காதின் சமநிலைக்குக் காரணமான செவிமுன்றில் நாம் வேகமாகப் பயணிப்பதாகத் தகவல் அனுப்புகிறது. முரண்பட்ட இச்சமிக்கைகளால் மூளை குழப்பமடைந்து பயணப்பிணி தோன்றுகிறது. அது குமட்டலாக, வாந்தி வரும் உணர்வாக மாறுகிறது (Motion sickness caused by motion that is felt but not seen). திரைப்படத்தில் தோன்றும் பயணக் கட்சிகளும் இவ்வாறே குழப்பத்தைத் தரும். ஆனால் அது சற்று மாறுபட்ட வகையில் செயல்படுகிறது. கண் பார்வை திரையில் தோன்றும் வேகமாகப் பயணிக்கும் தகவலை மூளைக்கு அனுப்பும் பொழுது, காது அது போன்ற இயக்கம் ஏதும் நிகழவில்லை என்ற தகவலை மூளைக்கு அனுப்பும், இதன் விளைவாகவும் சிலர் எதிர் கொள்வது பயணப் பிணியைதான்  (i.e., Motion sickness caused by motion that is seen but not felt).

    பயணப்பிணி பக்க விளைவுகளுக்கு விளக்கம்:
    இவ்வாறு வயிற்றினைப் பாதிக்கும் குமட்டலுக்கும் வாந்திக்கும் காரணம் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் விளக்கப்படுகிறது. விரைவுப் பயணங்கள் வரலாற்றில் நிகழ்வது சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளில்தான். அதற்குமுன் மனிதர்களின் இயக்கம் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்தது. இயற்கையில் மனிதர்கள் நச்சினை உண்டுவிட்டால், உடல் மனித உயிரைக் காக்கும் பொருட்டு குமட்டல், வாந்தி எடுப்பதன் மூலம் உடலில் இருந்து அவற்றை வெளியேற்றி மனித உயிரைக் காக்கும். அது போலவே, முரணான தகவல்களையும் நரம்புமண்டலம் நச்சுப் பொருள் என்ற வகையிலேயேக் கையாண்டு, குமட்டல், வாந்தி மூலம் நச்சை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கையை எடுக்கிறது. குமட்டல், வாந்தி என்ற பயணப்பிணியின் முக்கியமானப் பக்க விளைவுகளைக் கொண்டே இந்த விளக்கம் பிறந்ததுள்ளது. ஆனாலும் இக்கூற்று பல விளக்கங்களைத் தருவதில் தவறிவிடுகிறது. எதனால் பார்வையற்ற பயணிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது? எதனால் ஆடவரைவிட மகளிர் அதிகம் பயணப்பிணியினால் பாதிக்கபடுகிறார்கள்? வண்டி ஓட்டுனரைக் காட்டிலும் பயணிகள் பெரும்பாலும் பாதிப்படைவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு சரியான விளக்கங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

    பழக்கமற்ற சூழ்நிலைகளிலும், இடங்களிலும் நம் உடல் சமநிலையில் இருக்கமுடியாததால் ஏற்படும் கோளாறு இவ்வாறு பயணப்பிணியாக வெளிப்படுகிறது என்றும் மற்றொரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. பற்பல அறிவியல் முன்னேற்றங்கள் நிகழ்ந்துவிட்ட பொழுதும் எவ்வாறு சளி பிடிப்பதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோமோ அது  போலவே பயணப்பிணியும் மனித குலத்திற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

    பயணப்பிணி மருந்தும் சிகிச்சையும்:
    மூளைக்குக் குழப்பம் தரும் இயக்கம் நின்று போனாலும், அல்லது நாம் அதைத் தவிர்க்கும் பொழுதும் பயணப்பிணி நிலைமை பெரும்பாலும் மாறிவிடும். மேலும் இப்பிணியைத்தவிர்க்க, பயணிக்கும் பொழுது தொடுவானத்தில் பார்வையை நிலை நிறுத்தவும், அல்லது பயணம் செல்வதற்கு எதிர்திசையை நோக்கி  அமர்ந்து பயணிப்பதைத் தவிர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப் படுகிறது.

    பயணங்களில் இஞ்சியை மெல்லுவதும் உதவுவதாக அனுபவபூர்வமான அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது, பேருந்து நிலையங்களில் நம்மூரில் ‘இஞ்சி மொரப்பா’ மிட்டாய்கள் விற்கப்படும் காரணமும் இதனால்தான்.

    சீனமருத்துவமான ‘அக்யூபங்க்ச்சர்’ (Acupuncture) முறையில் கண்டுணரப்பட்ட சிகிச்சைக்கான அதே உடற் பாகங்களிலேயே கொடுக்கப்படும் அழுத்தங்கள் (acupressure) உதவுவதாகவும் நம்பப்படுவதால் அந்த முறை சிகிச்சையினை அடிப்படையாகக் கொண்டு கைக்காப்பு போன்ற பட்டைகளும் சிலரால் கை மணிக்கட்டில் அணியப்படுகிறது.

     

    கட்டுரைக்கான சான்றுகள்:

    1. FYI: What Causes Motion Sickness, And How Do You Cure It? Brooke Workneh, Popular Science, December 2012

    2. Treisman, M. Motion sickness: an evolutionary hypothesis. Science 197: 493-495, 1977.

    3. The mystery of motion sickness, Rose Eveleth, TED Ed Lessons, January 2014.

     

     

    படம் உதவி:
    http://www.popsci.com/sites/popsci.com/files/styles/article_image_large/public/images/2012/12/motion_sick.jpeg?itok=UXY3YxRV

    Share
  • உயிர்ப்புவியியல் துறையின் முன்னோடி யார்?

    தேமொழி

     

    “உயிர்ப்புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயிரினத்தின் பரவல் நிலையை பற்றி ஆய்வதாகும். இத்துறையின் முதன்மைக் குறிக்கோள் யாதெனில், ஓர் உயிரினம் எங்கெங்கெல்லாம் வாழ்கின்றது மற்றும் எத்தனை எண்ணிக்கை உள்ளது என்று அறிவது” (விளக்கம் உதவி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா).

    புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்?
    உயிர்ப்புவியியலின் முன்னோடிகளில்  (one of the founders of  Biogeography) ஒருவர் என்று கருதப்படுபவர் ‘அலெக்ஸாண்டர் வோன் ஹம்போல்ட்’ (Alexander von Humboldt / Friedrich Wilhelm Heinrich Alexander von Humboldt – 1769-1859). இன்றைய அறிவியல் உலகம் இவரையும் இவரது பங்களிப்பையும் மறந்துவிட்டது, காலத்தால் வரலாற்றில் இருந்து மறைந்துபோன ஒரு அறிவியல் அறிஞராக இவர் பெயர் பெரும்பாலும் மறக்கப்பட்டும்விட்டது. ஆனால் இவர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாவில் இவர் சிறந்த அறிவாளி எனப் பெயர் பெற்று புகழின் முன்னணியில் இருந்தார். உலகில் பற்பல இடங்களுக்கு, மற்ற புகழ் வாய்ந்தவர்களையும் விட இவர் பெயர்தான் அதிகம் சூட்டப்பட்டுள்ளது. பல தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் முன்னால் அதிபதி, ‘தாமஸ் ஜெஃபர்சன்’ (Thomas Jefferson, the third President of the United States) “நான் சந்தித்த அறிவியல் அறிஞர்களில் மிக முக்கியமானவர் ஹம்போல்ட்” என்று குறிப்பிட்டுள்ளார். வெனிசுலாவின் இராணுவ அதிகாரியான ‘சைமன் போலிவர்’ (Simón Bolívar, Venezuelan military leader) “தென்னமெரிக்கக் கண்டத்தை முதலில் கண்டறிந்தவர் ஹம்போல்ட்”தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது புகழைக் கண்டு நெப்போலியன் இவர் மீது பொறாமை கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஹம்போல்ட்டின் நூறாவது பிறந்த நாளன்று அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் முதல் பக்க செய்திகள் அனைத்தும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டு இவர் புகழ் பாடின. அறிவுமேதைகள் பலர் குழுமிய பாரிஸ் (center of intellectual life in Paris) நகரிலும் இவர் புகழ் பெற்றிருந்தார். நான்கைந்து மொழிகளில் நன்கு உரையாடவும், அருமையாக ஓவியங்கள் வரையவும், அத்துடன் அனைவருடன் இசைந்து நன்கு பழகவும் அறிந்து வைத்திருந்தார்.

    தனது அறிவியல் பயணத்தைப் பற்றி ‘காஸ்மோஸ்’ (Cosmos) என்ற நூலாக ஹம்போல்ட் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக எழுதிய முப்பது நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஆங்கிலத்தில் மூன்று முறை இவையாவும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது நூல்கள் பல இளம் அறிவியல் அறிஞர்களைத் தோற்றுவிக்க உதவியது, குறிப்பாக, பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிமுகப் படுத்திய ‘சார்லஸ் டார்வின்’ (Charles Darwin) என்ற உயிரியல் மேதையை இவரது எழுத்துக்கள் ஊக்குவித்தது.

    “I am at present fit only to read Humboldt; he like another sun illuminates everything I behold” ― Charles Darwin

    என்று தம் இளவயதில் தான் வழிகாட்டியாகக் கொண்ட ஹம்போல்ட்டைப் பற்றி அவரது பேனா/அஞ்சல் நண்பரான டார்வின் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். டார்வின் தனது அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த ‘உயிரினங்களின் தோற்றம்’ (Origin of Species) என்ற நூலை வெளியிட்ட காலத்தில் ஹம்போல்ட் புகழின் உச்சியில் இருந்தவர். உலக வரலாற்றிலேயே சிறந்த அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சிறந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டவர். ஆனாலும் காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சிக்கு இவர் அளித்த பங்களிப்பு மறக்கப்பட்டது. மிகுந்த புகழ் வாய்ந்த ஒருவர் வரலாற்றில் மறக்கப்பட்டது மிகவும் விந்தையானதுதான்.

    வாழ்க்கைக் குறிப்பு:
    ஜெர்மனி நாட்டின் அறிவியல் அறிஞரான இவர் 1769 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள், பெர்லின் நகரில் அலெக்ஸாண்டர் ஜார்ஜ் வோன் ஹம்போல்ட் என்ற அரசு அதிகாரிக்கும், மேரி எலிசபெத் என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக, ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அறிவியியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது உடலில் ஏற்பட்ட புண்ணில் மின்முனைகளைப் (electrode) பொருத்தி மின்சாரத்தைச் செலுத்தி உடலில் ஏற்படும் மாறுதலை ஆராயும் அளவிற்கு அறிவியலில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

    Alexander Von Humboldt

    அக்கால ஐரோப்பிய அறிவியல் அறிஞர்கள் கொண்ட ‘அறிவியல் தத்துவங்கள்’ (Philosophy of Science) என்ற கருத்துக் கோட்பாட்டின்வழி, அறிவியல் அறிஞராக வேண்டுமானால் புத்தகங்களில் இருந்தும், நூலகங்களில் இருந்தும், ஆய்வுக்கூடங்களில் இருந்தும் விடுபட்டு, உலகைச் சுற்றி வந்து ஆய்வு நடத்தி, இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற முறையைப் பின்பற்ற விரும்பினார். நிலக்கரி சுரங்கம், சுரங்க ஆய்வு போன்றவற்றைத் தானாகவே தன்னார்வமுடன் பயின்று இக்காலத்தில் ‘நிலவியல்’ (Geology) என்று அழைக்கப்படும் துறையின் நிலவியலாளர் /ஜியாலஜிஸ்ட் (Geologist) ஆகப் பணிபுரிந்தார். ஆனால் அவர் காலத்தில், அறிவியல் பல துறைகளாக உயிரியல், நிலவியல், தாவரவியல் (Biology, Geology, Botany) என்றெல்லாம் தனித்தனியாகப் பலப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கவில்லை. இவரைப் போன்ற முன்னோடியான அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பே பின்னர் அறிவியலில் பல பிரிவுகள் ஏற்படக் காரணமாக இருந்தது. மாவீரன் நெப்போலியனுடன் எகிப்து நாட்டிற்கும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கும் சென்று ஆராய்ச்சிப் பயணம் செய்ய நினைத்த இவர் பயணம் தடைபட்டுப் போனது.

    பெற்றோர்கள் மறைவிற்குப் பிறகு இவரது இளம் வயதிலேயே பரம்பரைச் சொத்து இவர் கைவசமானது. இதானால் பயணம் செய்ய பிறரின் நிதியுதவி இவருக்குத் தேவைப் படவில்லை. அறிவியல் ஆராய்ச்சியை தொடர தனது சொந்த செலவிலேயே ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டார். இவருடன் பிரெஞ்சு தாவரவியலார் ‘அய்மி பான்பிளான்ட்’ (Aimé Bonpland, French Botanist) என்பவரும் உடன் சென்றார். இவர்கள் சென்ற காலத்தில் உலக அரசியல் சூழ்நிலையும் இவர்களின் பயணத்திற்குச் சாதகமாக அமைந்தது. ஸ்பெயின் நாட்டின் மன்னர் தென்னமெரிக்கக் கண்டத்தை தங்கள் நாட்டின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர எண்ணினார். ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கத்தால் அக்காலத்தில் தென்னமெரிக்கா ‘இலத்தீன் அமெரிக்கா’ அல்லது ‘ஸ்பானிஷ் அமெரிக்கா’ என்றும் பரவலாக அழைக்கப் பட்டு வந்தது. தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் இருப்பதாகக் கருதப்பட்ட தங்கச் சுரங்கத்தை கைப்பற்றுவது, தென்னமெரிக்காவின் செல்வத்தைச் சுரண்டுவது அக்கால ஸ்பெயின் நாட்டின் குறிக்கோளாக இருந்தது. இக்கொள்கையை நிறைவேற்றும் பொருட்டு ஹம்போல்ட் பயணத்திற்கு ஸ்பெயின் மன்னர் தடையின்றி தாராளமாக அனுமதி அளித்தார். அக்காலத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த(?) கொலம்பஸ் போன்று ஹம்போல்ட் ‘இரண்டாவது கொலம்பஸ்’ என்ற சிறப்புத் தகுதியை அடைந்திருந்தார்.

    அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் (1799-1804):
    ஸ்பெயின் நாட்டின் சார்பாக ஹம்போல்ட் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பயணதிற்கான காலம் சரியாக ஐந்து ஆண்டுகளும் மூன்று மாதங்களும் ஆகும். இதைத் தொடர்ந்து உருவாகிய ஆராய்சி முப்பது நூல்களாக வெளியிடப்பட்டன. ஏறத்தாழ 24,000 மைல்கள் கொண்டது இப்பயணம், அதாவது உலகை ஒருமுறை சுற்றிவரும் தூரம் கொண்டது இப்பயணம். இவரும் இவரது நண்பர் தாவரவியலார் அய்மி பான்பிளான்ட்டும் தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுலா (Venezuela), கொலம்பியா (Colombia), இக்குவேடார் (Ecuador), பெரு (Peru) நாடுகளிலும், மற்றும் மெக்சிகோ (Mexico), கியூபா(Cuba) நாட்டுப் பகுதிகளிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். அவற்றில் மிக முக்கியமான ஆராய்ச்சிகள் பெரு நாடு மற்றும் இக்குவேடார் நாட்டின் பகுதிகளில் உள்ள ‘ஆண்டீஸ் மலை’த்தொடரின் (Andes mountains) பகுதிகளிலும், குறிப்பாக இக்குவேடார் நாட்டின் ‘சிம்பராசோ’ (Mount Chimborazo in Ecuador) என்ற உறங்கும் எரிமலை சிகரத்தின் பகுதியிலும், வெனிசுலா(Venezuela) நாட்டுக் காடுகளிலும், அங்குள்ள ‘ஆர்நிக்கோ’ ஆற்றிலும் (Orinoquia/Orinoco River) மேற்கொள்ளப்பட்டது. ஆர்நிக்கோ ஆற்றின் முழு நீளமும், அதன் 1,700 மைல்கள் தொலைவும் இவர்களால் ஆராயப்பட்டது. இப்பகுதியின் காடுகள் அபாயகரமான விலங்குகளாலும், கொடிய நோய்களாலும் மரணத்தைக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.

    அப்பொழுது அக்காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள் உபயோகப்படுத்திய ‘குரேர்’ தாவரம் (Curare plant) கொண்டு உருவாக்கப்படும் நஞ்சு தடவிய அம்பு தயாரிக்கும் முறையை அவர்களிடம் இருந்து அறிந்து கொண்டார். மலேரியா (Malaria) நோய்க்கு மருந்தான குயினின் (quinine) தயாரிக்கப் பயன்படும் சின்கோனா (Cinchona tree bark) மரப்பட்டையைப் பற்றிய தகவலையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் பெரு கடற்கரையை ஒட்டிய பசுஃபிக் கடலில் உள்ள நீரோட்டத்தையும் (Pacific water current), அதனால் பெருவிற்கு கிடைக்கும் மழைப்பொழிவைப் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர்  இந்நீரோட்டம் ‘ஹம்போல்ட் நீரோட்டம்’ என்று இவரது பெயராலேயே அழைக்கப் படுகிறது. புதிய வகை மின்சார ஈல் (Electric Eel) மீன்  இருப்பதும் இவரால் குறிப்பெடுக்கப்பட்டது. பல விலங்குகளின் தோல்கள், பற்பல பறவைகளின் சிறகுகள், ஏராளமான தாவரங்களின் இலை மற்றும் பூக்கள் என ஒரு பெரிய சேகரிப்பு இப்பகுதியில் ஹம்போல்ட்டிற்குக் கிடைத்தது. பெரு நாட்டின் பகுதியின் ஆண்ட்டீஸ் மலைத்தொடரின் பகுதி இவரால் விரிவாக வரையப்பட்டது.

    இக்குவேடார் நாட்டின் பகுதியில் உள்ள ஆண்டீஸ் மலைத்தொடரில் உள்ள சிம்பராசோ மலையின் சிகரத்தின் பல உயரங்களிலும் காற்றழுத்தம் ஹம்போல்ட்டினால் அளக்கப்பட்டது. இவர் பயணக் காலத்தில் சிம்பராசோ சிகரம்தான் உலகின் மிக உயரமான சிகரம் எனக் கருதப்பட்டது. கடலில் தொலைவில் இருந்து காணமுடிந்த இச்சிகரத்தில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை காற்றழுத்தமும் மற்ற பிற அளவுகளும் இவரால் குறிக்கப் பட்டன. ஒவ்வொரு உயரத்திலும் காணப்படும் விலங்குகளும் தாவரங்களும் இவரால் ஆவணப்படுத்தப்பட்டன. உயிரினங்களின் வகையும், அவற்றின் இருப்பும் உயரத்திற்கு ஏற்ப வேறுபடுவதை அப்பொழுது அவர் கண்டுகொண்டார். ஆனால் இவரால் சிகரத்தை அடைய முடியாமல் முயற்சியைக் கைவிட்ட பிறகு எழுபது ஆண்டுகள் கழித்தே ‘எட்வர்ட் வைம்ப்பெர்’ (Edward Whymper, 1886) என்ற ஆங்கிலேயர் ஒருவரால் சிம்பராசோ சிகரத்தை அடைய முடிந்தது. ஆனால் ஹம்போல்ட் வரைந்த விரிவான வரைபடங்களும் அதில் குறிக்கப்பட்ட பற்பல அளவீடுகளும் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the theory of unity of nature) என்ற அவரது கோட்பாட்டிற்கு உறுதுணையான ஆதாரங்களாக விளங்கின.

    ஒத்தவெப்பநிலை வரைபடங்கள் (Isotherms):
    ஹம்போல்ட்டின் மிக முக்கியப் பங்களிப்பு அவர் உருவாக்கிய ஒத்தவெப்பநிலை (Isotherm) வரைபடங்கள். தனது தென்னமெரிக்க ஆராய்ச்சிப் பயணத்தில் பல அறிவியல் சோதனைக் கருவிகளை ஹம்போல்ட் தன்னுடன் எடுத்துச் சென்றார். பதினான்கு கோவேறு கழுதைகள் பொதி சுமந்து செல்லும் அளவுக்கு பெட்டிப் பெட்டியாகக் கருவிகளை எடுத்துச் சென்றார். அக்கால பிரெஞ்சு நிறுவனகள் சுற்றுச்சூழலை துல்லியமாக அளக்கும் பல்வேறு அறிவியல் உபகரணங்களை வடிவமைத்திருந்தன. ஹம்போல்ட்டும் எதையம் முறையாக அளந்து துல்லியமாகக் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தும் பண்பைக் கொண்டவர். எனவே தான் சென்ற இடங்களின், ஆச்சிஜன், வானின் நீலநிறத்தின் அளவு, காற்றின் வேகம், காற்றழுத்தம் (air pressure), உயரம், வெப்ப நிலை (temperature), நிலத்தின் அமைப்பு (shape of the land), காந்தப்புலத்தின் வலிமை (strength of magnetic field), ஒவ்வொரு இடத்திலும் உள்ள விலங்குகள், தாவரங்கள் அவற்றின் எண்ணிக்கை எனப் பற்பல குறிப்புகளை ஒன்றுவிடாமல் கவனமாகக் குறிப்பெடுத்து தனது வரைபடத்தில் குறித்துக் கொண்டார்.

    Isotherms

    பிறகு ஒத்த வெப்பநிலை உள்ள இடங்களின் புள்ளிகளை ஒரே கோட்டில் இணைத்தார், இவ்வாறு உருவாக்கிய படங்களுக்கு ‘ஐஸோதெர்ம்’ (Isotherm) வரைபடங்கள் எனப்பெயரிட்டார். இவை வளைந்த கோடுகளை உடைய கோட்டோவிய (contour line maps) வரைபடங்கள். அவ்வாறு ஒத்த இயற்கை தட்ப வெட்ப சூழ்நிலையில் வசிக்கும் உயிரினங்கள் (விலங்குகளும், தாவரங்களும்) யாவும் ஒத்திருப்பதை இக்கோட்டோவிய வரைபடம் தெளிவு படுத்தியது. அதுவரை இந்த அடிப்படைத் தகவலை, வாழுமிடங்களுக்கு ஏற்ப உயிரனங்கள் மாறுபடும் என்ற தொடர்பை (connection with the ‘habitats’ and the species living at that place) அறிவியல் அறிஞர்கள் கவனிக்கத் தவறியிருந்தனர். முதன் முதலில் தரவுகளை அனைவருக்கும் விளங்கும் வண்ணம் வரைபடங்களாக வரைந்து விளக்கியவர் ஹம்போல்ட்தான். அதற்கு முந்தைய நூற்றாண்டுவரை உருவாக்கப்பட்ட ‘டோப்போக்ராஃபிக்’ (topographic maps) என்றழைக்கப்பட்ட நிலவியல் வரைபடங்கள் இதுபோன்ற தகவல்கள் இன்றியே வரையப்பட்டு வந்தன. மேலும் இவர்காலத்தில் அச்சுகூடங்களின் தொழில் நுட்பம் சிறந்த வளர்ச்சியடைந்து இருந்ததால், வரைபடங்களை அதிக அளவில் குறைந்த விலையில் பிரதிகள் எடுப்பதும் சாத்தியாமாயிற்று.

    இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature):
    “Everything Is Interrelated”—Alexander von Humboldt

    அறிவியல் தகவல்களை வரைபடக் காட்சி வழியாக (visual-presentation of scientific data as maps, charts and graphs) ஹம்போல்ட் விளக்கிய முறை அறிவியலில் ஒரு திருப்புமுனை. இதனால் இயற்கை சூழலுக்கேற்ப உயிரினங்கள் வாழ்வதும் இடத்திற்கு இடம் அவை வேறுபடுவதும் தெளிவாகியது. நிலப்புவியியலுக்கு இதுவே அடிப்படை என்பதால் இவர் இத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அத்துடன் இந்த பங்களிப்பே சுற்றுச்சூழலியலிலும் (ecology) இவரை முன்னோடியாகக் கருத வைக்கிறது. இயற்கையும், சுற்றுச்சூழலும், உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை (intersconnectedness of all nature, intersconnectedness of geography) அதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப் படவேண்டும் என்பதும், இயற்கையில் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதும் புலனாகிறது. இயற்கையில் பல்வேறு சக்திகள் உள்ளன (forces make up nature). அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன (interrelated forces in nature). அவ்வாறு ஏற்பட்டுள்ள தொடர்பு ஓர் ஒருமைப்பாட்டுடேன் இயங்குவதால் இயற்கை சம நிலையில் இருக்கிறது (balance of forces in nature) என்று ஹம்போல்ட் முடிவிற்கு வந்தார். இதனை ஹம்போல்ட் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature) என்று விளக்கினார்.

    ஹம்போல்ட்டின் அறிவியல் பங்களிப்பு:
    இவரது அறிவியல் கண்டுபிடிப்புகள், செய்முறைகள், பங்களிப்புகள் தற்கால அறிவியலில் பலதுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேதியியல், பொறியியல், இயற்பியல், மருத்துவம், உயிரியல், கணிதம் போன்ற துறைகள் யாவும் ஏதோ ஒரு விதத்தில் பயனடைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமாகக் கருதப்படுவது, அளவுகளை துல்லியமாகக் குறிப்பிடும் ஒத்தவெப்பநிலை வரைபடங்களும் (Isotherm), இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடும் (the unity of nature) ஹம்போல்ட்டினால் அறிவியல் உலகத்திற்கு காட்டப்பட்டதுதான். இதுவே டார்வினின் உயிரினங்களின் தோற்றம் என்ற கோட்பாட்டிற்கு தாக்கமாக அமைந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

    (1) துல்லியமாக வரைபடத்தில் அளவீடுகளைக் குறிப்பது என்பது அறிவியலில் திருப்புமுனையைக் கொண்டுவரும் அளவிற்கு ஒருமிகப்பெரிய மாற்றம் இல்லை எனவும், (2) ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற டார்வினின் கோட்பாடு போல இவரது முப்பது நூல்களிலும் விரவிக் கிடந்த ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ என்ற அறிவியல் தகவல்கள் சுருங்க விளக்கப்படவில்லை எனவும், (3) டார்வினின் கோட்பாடு இவரது கோட்பாட்டின் தகவலை மங்கச் செய்து விட்டது எனவும், இதனாலேயே இவரைப் பற்றிய தகவல்கள் நாளடைவில் மறக்கப் பட்டது எனப் பல காரணங்கள் இவர் புகழ் மங்கியதற்குக் கற்பிக்கப்படுகின்றன.

     

    சிந்தனைக்கு:
    இயற்கை சூழலுக்கேற்ப, தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப உயிரினங்கள் வாழ்ந்திருப்பதும் இடத்திற்கு இடம் வேறுபடுவதும் (role of environment on diversity of life) அதனால் உயிர்ப்புவியியலுக்கு ஹம்போல்ட் முன்னோடியாகக் கருதப்படுகிறார் என்ற தகவலையும் நாம் அறிந்து கொள்ளும் வேளையில்; தவறாமல் சிந்தனையில் குறுக்கிடும் ஒரு கேள்வி இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லையா என்பதே.

    “மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
    (அகத்திணை 5)
    என்றுரைக்கின்றார் தொல்காப்பியர்.

    முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை,
    “முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
    நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
    (காடுகாண் காதை, 64-66)
    என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.

    அது போலவே சங்கல கால இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு திணைப்புலதிற்கும் சிறப்பான பறவைகளை, விலங்கினங்களை, மரங்களை, பூக்களை என விலங்கின, தாவரக் குறிப்புகள் யாவற்றையும் தருவது இங்கு தேவையற்றது என்ற காரணத்தினால் கீழ்கண்ட சுருக்கமானப் பட்டியல் கொடுக்கப் பட்டுள்ளது. காப்புரிமை பெறாத, பலரும் அறிந்த எளிய உண்மைகள் மீண்டும் மேலைநாட்டினர் வசமானதாகத் தோன்றுவதை ஏனோத் தவிர்க்க இயலவில்லை.

    Tamil - Ainthinai Habitat

     

    References:
    உயிர்ப்புவியியல் – http://ta.wikipedia.org/s/2cz

    Alexander von Humboldt-Stiftung/Foundation – http://www.avh.de/web/home.html

    History: Alexander von Humboldt – http://humboldt.edu/avhconference/2014_history_avh.html

    Alexander von Humboldt – http://en.wikipedia.org/wiki/Alexander_von_Humboldt

    Everything is interrelated – The University of Texas at Arlington – http://blog.uta.edu/~omalley/files/2009/09/brochure-fall09-copyright.pdf

    Baron Friedrich W.K.H. Alexander von Humboldt, History of Geology, James S. Aber – http://academic.emporia.edu/aberjame/histgeol/humboldt/humboldt.htm

    Humboldt’s Cosmos By Gerard Helferich – http://books.google.com/books/about/Humboldt_s_Cosmos.html?id=ua8n5fLZx5MC

    கட்டுரையின் தமிழ் இலக்கியப் பாடல்கள் – http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043222.htm

     

    Images:
    Images from the fall 2009 exhibit in Special Collections at the University of Texas-Arlington Library. The exhibit runs from August 24, 2009 till January 9, 2010. – http://www.flickr.com/photos/spcouta/sets/72157622803883913/

     

    Videos:
    Who is Alexander von Humboldt? – George Mehler – http://ed.ted.com/lessons/who-is-alexander-von-humboldt-george-mehler
    Humboldt – the last Renaissance man – A BBC Radio Interview – http://www.youtube.com/watch?v=VfK7jaUfTU0

     

    Pictures courtesy:
    AvHumboldt – http://en.wikipedia.org/wiki/File:AvHumboldt.jpg
    Isotherm – http://commons.wikimedia.org/wiki/File:Isotherms_ugglan.jpg

     

     

     

     

     

    Share
  • நிலவின் மறுபக்கத்தை நம்மால் ஏன் காணமுடிவதில்லை?

    தேமொழி

    மனித இனம் தோன்றியது முதல் நிலவினைப் பார்த்து வியந்து வந்திருக்கிறது. நிலவைப் பற்றியத் தெளிவான உண்மைகள் அறிந்திராத பொழுதும் புனைக்கதைகள் பல புனைந்து வந்திருக்கிறது, அக்கதைகளைப் புராணங்களில் ஏற்றி கடவுளர்களின் வரிசையில் நிலவினை இடம்பெறவும் செய்துள்ளது.  மேலும் மனித இனம் நிலவின் அழகில் மயங்கி சில நேரங்களில் நிலவைப் பெண்ணாகவும் பாவித்து கவிதைகள் பலப் பாடிப் போற்றியுள்ளது, நிலவையே காதலுக்குத் தூதகவும் அனுப்பியிருக்கிறது.

    காலம் உருண்டோட, அறிவியல் வளர, நிலவைப் பற்றிய உண்மைகள் அறிவியல் மூலமாக நிரூபிக்கப்பட்ட பொழுது கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் அந்த உண்மைகளையும் எடுத்தாண்டனர்.

    ஜூலை 21, 1969 அன்று அமெரிக்க விண்வெளி வீரர் ‘நீல் ஆர்ம்ஸ்ட்ராங்’ (Neil Armstrong) நிலவில் காலடி வைத்த பிறகு, அதுவும் கவிதைகளில் வெளிப்பட்டது.

    “நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
    இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
    வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்”
    என்று கவியரசர் புதிய உலகம் நோக்கி நம்பிக்கைத்  தொனிக்கும் கருத்தைப் பாடினார்.

    அத்துடன் நில்லாது, காதலன் தன் காதலியிடம் கேட்பதாக,
    “உறவின் ஒருபக்கம் நீயறிவாய்,
    இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்?”

    என்றும் கவியரசர் கண்ணதாசன் மற்றுமொரு கவிதை வரிகளிலும் ஓர் அறிவியல் உண்மையைப் புகுத்திப் பாடல் வழங்கியிருப்பார்.

    பூமியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நிலவைக் காலம் காலமாக அண்ணாந்து நோக்கினாலும் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து வருகிறோம். நிலவின் மறு பக்கத்தைப் பார்க்க முடிந்ததில்லை. இதுவரை நிலவைச் சுற்றிய விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே நிலவின் மறுபக்கத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    நாம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது நம் கண்களுக்குப் புலப்படாவிட்டாலும் உண்மையில் நிலவு சுழல்கிறது. பூமியைப் போலவே நிலவுக்கும் தன் அச்சிலேயே (own axis) சுழற்சி உண்டு, ஆனால் நம் கண்களால் அறிந்து கொள்ளும் வண்ணம் அச்சுழற்சி அமையவில்லை.

    நிலவு அவ்வாறு சுழலும் பொழுது நிலவின் மறுபக்கம் நமக்குத் தெரிந்துதானே ஆகவேண்டும், பின் ஏன் நிலவின் மறுபக்கத்தை நம்மால் காண இயலவில்லை?

    இதற்கு புவியின் சுழற்சியும் நிலவின் சுழற்சியும் ‘ஒத்த சுழற்சிப்பிணைப்பு’ (Tidal locking or captured rotation) என்ற வகையில் அமைந்திருப்பதே காரணம்.  இந்த ஒத்த சுழற்சிப் பிணைப்பு என்ற பண்பினால் நிலவின் ஒருபக்கம் மட்டுமே எப்போதும் புவியை நோக்கி அமைகிறது. இதனைக் கீழ்வரும் படம் விளக்குகிறது.  இடது பக்கம் உள்ள சுழற்சி ஓர் ஒத்த சுழற்சிப்பிணைப்பு. நிலவு புவியைச் சுற்றும் பொழுது கரும்புள்ளிகள் அமைந்த பகுதி புவியை எப்பொழுதும் நோக்கிய வண்ணமே உள்ளது.  புவியும் நிலவும் சுழல்கின்றன.  ஆனால் அவற்றின் சுழற்சி ஒத்திருக்கிறது.  மாறாக வலது பக்கம் உள்ள படம், ஒத்த சுழற்சிப்பிணைப்பு அமைந்திராவிட்டால் எவ்வாறு நிலவின் கரும்புள்ளிகள் அற்ற மறுபக்கமும் புவியை நோக்கித் திரும்பும் என்று விளக்குகிறது.

    ஒத்த சுழற்சிப்பிணைப்பு

    இந்த ஒத்த சுழற்சிப் பிணைப்பிற்குக் காரணம், நிலவு தன்னைத் தானே முழுமையாக ஒருமுறை சுற்றிவரும் காலமும், புவியை அது முழுமையாக ஒருமுறை சுற்றிவரும் கால அளவும் ஒன்றாகவே இருப்பதால் அமைகிறது.   நிலவு தன் அச்சில் ஒரு முழுமையான சுழற்சியை முடிக்கும் கால அளவு 27 நாட்கள். அதேபோல, நிலவு புவியை ஒருமுறை முழுமையாகச் சுற்றிவரும் கால அளவும் 27 நாட்களே. இவ்வாறான ஒத்த சுழற்சியினால் (synchronous rotation) நிலவின் ஒரே பக்கமே புவியை நோக்கி இருக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

    புவியின் நிலா அதனுடன் ஒத்தசுழற்சிப்பிணைப்பில் இருப்பது போலவே, சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களான செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களின் நிலவுகளும் அந்தந்தக் கோள்களுடன் ஒத்த சுழ்ற்சிப்பிணைப்பிலேயே சுழன்று வருகின்றன.

    கடந்த நான்கு ஆண்டுகளாக, ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் (The National Aeronautics and Space Administration / NASA) செலுத்திய ‘நிலவு ஆய்வு விண்கலம்’ (Lunar Reconnaissance Orbiter / LRO) நிலவைச்சுற்றி வந்து,அதனைப் படங்கள் பல எடுத்து, அத்துடன் இன்றியமையாதத் தகவல்கள் பலவற்றையும் நாசாவிற்கு அனுப்பி வருகிறது.

    ‘நிலவு ஆய்வு விண்கலம்’ (Lunar Reconnaissance Orbiter / LRO)

    விண்வெளி ஆய்வு மையம் இத்தரவுகளையும் படங்களையும் ஆராய்ந்து,  நிலவின் ஒவ்வொரு கோணத்தின் படத்தையும் பொருத்தி இணைத்து “நிலவின் சுழற்சி”யை ஒரு காணொளியாக  சென்ற வாரம் (செப்டம்பர்  11, 2013 அன்று) வழங்கியுள்ளது.  இருபத்தியைந்து நொடிகளே கொண்ட இக்காணொளி மூலம் நாம் இன்று நிலவின் மறுபக்கத்தையும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  உண்மையில் எப்பக்கம் பார்த்தாலும் நிலவின் அழகு மனத்தைக் கவரும் வண்ணமே அமைந்துள்ளது.

    காணொளி: நாசா விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய நிலவின் சுழற்சிப் படம்

     

     

    References:
    [1]
    Amazing NASA video shows the moon like you’ve never seen it before, September 16, 2013, Scott Sutherland, Geekquinox, YAHOO News, http://news.yahoo.com/blogs/geekquinox/amazing-nasa-video-shows-moon-ve-never-seen-164200739.html?vp=1

    [2]
    Lunar Reconnaissance Orbiter – http://www.nasa.gov/mission_pages/LRO/main/index.html#.UjtQVRD9UQp & http://lro.gsfc.nasa.gov/

    [3]
    A Unique View Of The Moon – http://lroc.sese.asu.edu/news/index.php?/archives/790-A-Unique-View-Of-The-Moon.html

    [4]
    Tidal locking – http://en.wikipedia.org/wiki/Tidal_locking

    Videos:
    Rotating Moon from LRO – http://youtu.be/sNUNB6CMnE8

     

    Pictures:
    Tidal locking of the Moon with the Earth – http://en.wikipedia.org/wiki/File:Tidal_locking_of_the_Moon_with_the_Earth.gif
    Lunar Reconnaissance Orbiter  – http://www.nasa.gov/sites/default/files/styles/466×248/public/screen_shot_2013-06-12_at_10.42.00_am.png?itok=nwO6p8x-

     

     

     

    Share
  • மறுவளர்ச்சி மருத்துவச் சிகிச்சை முறை சாத்தியமா?

    தேமொழி

    அசுரனின் தலையை வெட்ட வெட்டப் புதிய தலை முளைப்பது, அல்லது கையை வெட்டினால் புதிய கை முளைப்பது போன்ற நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் உள்ள புராணக்கதைகளில் நாம் படித்திருக்கலாம். ஆனால் உண்மையில் இது சாத்தியமா? சில உயிரினங்களிடம் இந்தப் பண்பு காணப் படுகிறது. காட்டாக, கடலில் வாழும் நட்சத்திர மீன்கள் சேதமடைந்த பகுதியைப் புதுப்பித்துக் கொள்வதையும், வாலை இழந்த பல்லிக்கு புது வால் முளைப்பதையும் நாம் அறிவோம்.

    எனினும் பரிணாம வளர்ச்சியில் மிகவும் மேம்பட்ட, சிக்கலான உடலமைப்பைப் பெற்றுள்ள மனித இனத்திற்கு இது சாத்தியமல்ல. சேதமடைந்து இழந்த உடலுறுப்பு இழந்ததுதான், மீண்டும் அதனை வளரவைக்க முடியாது. உறுப்பு தானமாக வழங்கப்பட்டால், பதிலுக்கு அது பொருத்தப்பட்டு குறையை நீக்கும் வகையில் தற்கால மருத்துவம் முன்னேறியுள்ளது. ஆனால், நம்மால் இழந்த உறுப்பை புராணக் கதைகள் குறிப்பிடப்படுவது போல வளர்த்துக் கொள்ள இயலாது. இருப்பினும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ‘மறுவளர்ச்சி மருத்துவம்’ (regenerative medicine) என்ற முறையை வெகு முனைப்புடன் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.

    மனிதர்கள் இருவரின் உடலமைப்பும், அதற்கேற்ற மருத்துவ சிகிச்சைத் தேவைகளும் ஒரே போன்று ஒத்திருப்பதன் வாய்ப்பு மிக மிகக் குறைவு. இதற்குக் காரணம், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் நமக்குத் தேவையான உடல்நலம் மற்றும் சுகாதாரத் தேவைகள் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறாகவே அமைந்திருப்பதே. அறிவியல் அறிஞர்களும் மருத்துவர்களும் மருத்துவச் சிகிச்சைகளை ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு வடிவமைக்க விரும்பித் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றனர்.

    இந்த முயற்சிக்கு அடிப்படையாக விளங்குவது ‘மூலஉயிரணுக்கள்’ ஆராய்ச்சி (Stem Cells Research) . இந்த மூலஉயிரணுக்கள் கொண்ட பண்பின் சிறப்பு, உயிரினங்களின் உடல் செயல்பாட்டில் அவைகளின் பங்கு என்ன என்பது வரையறுக்கப்படாததே. இவ்வாறு வேறுபடுத்தப்படாத மூலஉயிரணுக்கள் குறிப்பிட்ட எந்த வேலையையும் அவற்றிற்கு என்று நிர்ணயிக்கபடாத நிலையில் இருக்கின்றன.

    தோலின் உயிரணுக்கள் (skin cells), தசை உயிரணுக்கள் (muscle cells), நரம்பு உயிரணுக்கள் (nerve cells), என உடலின் ஒவ்வொரு வகை உயிரணுக்களுக்கும் முறையே பாதுகாப்பு, சுருங்கிவிரிதல், சமிக்கைகளைக் கடத்துதல் என்ற செயல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் மூலஉயிரணுக்களின் செயல்கள் இவையிவை என வரையறுக்கப்படாததால், மற்ற எந்த உயிரணுவாகவும் மாற்றம் கொண்டு அந்தப் பணிகளை அவைகளால் செய்ய இயலும். அதனால் உடலின் மற்ற உயிரணுக்கள் பழுதடைந்தோ அல்லது இறந்தோ போகும் பொழுது மூலஉயிரணுக்கள் அவற்றினை ஈடு செய்யும் வகையில் அந்த உயிரணுக்களாக மாற்றம் அடைந்து செய்ய வேண்டியப் பணியை தொடர்ந்து மேற்கொள்ளும்.

    காட்டாக, நம் சிறுகுடலின்(intestine) சுவரின் உயிரணுக்கள் நான்கு நாட்களுக்கொருமுறை முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கப்படுகிறது. சிறுகுடலின் சுவரின் அடியில் அமைந்திருக்கும் மூலஉயிரணுக்கள், சிறுகுடலின் சுவரின் உயிரணுக்கள் பழுதடைய பழுதடைய அந்த உயிரணுக்களாக மாறி அச்சுவரினைப் புதுப்பிக்கிறது. இது போலவே தினமும் பல்லாயிரக் கணக்கான இரத்த உயிரணுக்களும் புதுப்பிக்கப் படுகின்றன.

    மூலஉயிரணுக்களின் இத்தகைய பண்பினால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அவற்றைக் கொண்டு ‘தனித்துவம் கொண்ட சிறப்பு மருத்துவச்சிகிச்சை’ (individualized treatment) முறையை மேற்கொள்ள ஆராய்ந்து வருகிறார்கள். தேவையேற்பட்டால் பழுதடைந்த நமது உடலுறுப்புக்களை நீக்கிவிட்டு, பதிலுக்கு நம் உடலுறுப்புக்களையே வைத்து செயற்படுத்தும் ‘மறுவளர்ச்சி மருத்துவம்’ என்ற முறையைப் பயன்படுத்த முயல்கிறார்கள்.

    சுருங்கச் சொல்லின், பழுதடைந்த உடல் உறுப்புக்களின் பகுதிகளில் உள்ள சேதமடைந்த திசுக்களுக்குப் (tissues) பதில், மூலஉயிரணுக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய திசுக்களைக் கொண்டு மாற்றியமைக்கும் முயற்சியே மறுவளர்ச்சி மருத்துவம் ஆகும்.

    stem cells

    இப்பொழுது இரத்தத்தின் வெள்ளையணுப் புற்றுநோய்க்கு (leukemia, blood cancer) மூலஉயிரணுக்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது. வெள்ளையணுப் புற்றுநோய் நம் உடலின் எலும்பு மஞ்ஞையைத் (bone marrow) தாக்குகிறது. எலும்பு மஞ்ஞையில் இருந்து இரத்ததிற்குத் தேவையான உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெள்ளையணுப் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி உற்பத்தியாகி வெள்ளையணுப் புற்றுநோய் கொண்டவரின் எலும்பு மஞ்ஞையில் உள்ள மூலஉயிரணுக்களைச் சூழ்ந்து கொண்டு அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. இந்நோய் கண்டவர்களுக்கு புதிய மூலஉயிரணுக்கள் உடலினுள் செலுத்தப்படுகிறது (stem cells transplant). இவை உடலுக்குத் தேவையான இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன.

    மூன்று வகையான மூலஉயிரணுக்களை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிகளில் பயன் படுத்துகிறார்கள். அவை:
    1. திசு நிர்ணயிக்கப்பட்ட மூலஉயிரணுக்கள் (Adult/Tissue specific stem cells)
    2. பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள் (Embryonic stem cells/ Pluripotent stem cells)
    3. பல்லாற்றல் தூண்டப்பெற்ற மூலஉயிரணுக்கள் (Induced Pluripotent stem cells)

    1. திசு நிர்ணயிக்கப்பட்ட மூலஉயிரணுக்கள்:
    இந்த மூலஉயிரணுக்கள் இயற்கையிலேயே நம் உடலுறுப்புகளின் திசுக்களில் குறைந்த எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன. இவை உடலுறுப்புகளின் திசுக்கள் தேய்ந்து அழியும் பொழுது அத்திசுவின் உயிரணுக்களாக மாற்றம் பெற்று உடலுறுப்புகளைப் புதுப்பித்து அவற்றின் பணியை மேற்கொள்ளும்.

    2. பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள்:
    இவை கருவில் உள்ள மூலஉயிரணுக்கள் ஆகும். செயற்கைமுறைக் கருத்தரிப்பு நிலையங்களில் (fertility clinic) பயன்படுத்தப்படாத கருக்கள் அவற்றின் உரிமையாளர்களால் ஆராய்சிகளுக்கு மனமுவந்து நன்கொடையாக வழங்கப்படும். இது போன்ற கருவில் உள்ள மூலஉயிரணுக்களின் பண்பு, அவை எந்த உயிரணுவாக செயல் பட வேண்டும் என்பதோ அதன் பணி என்ன என்பதோ நிர்ணயிக்கப் படாததால் இவை எந்த ஒரு திசுவாகவும் வளர்சியடைந்து அந்தத் திசுவின் பணியை மேற்கொள்ளும் ஆற்றல் கொண்டதாகும். அதனால் பல்லாற்றல் கொண்ட மூலஉயிரணுக்கள் என அவை அழைக்கப்படுகின்றன (pluripotent stem cells /iPS cells).

    3. பல்லாற்றல் தூண்டப்பெற்ற மூலஉயிரணுக்கள்:
    இயற்கையாக தோல், நரம்பு, தசை போன்ற உடலுறுப்புகளின் திசுக்களில் உள்ள உயிரணுக்களே இவை. ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக அறிவியல் முறைப்படி இவ்வுயிரணுக்களைத் தூண்டி, பல்வேறு திசுக்களின் உயிரணுக்களாகவும் மாறும் பண்புள்ள மூலஉயிரணுக்களாக இவற்றை மாற்றமுறச் செய்கிறார்கள். இவை கருவில் உள்ள மூலஉயிரணுக்கள் போன்றே எந்த ஒரு திசுவாகவும் உருவெடுத்து அதன் பணிகளை மேற்கொள்ளும் பண்பினைப் பெற்றுவிடுகின்றன.

    மருத்துவ, உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் மறுவளர்ச்சி மருத்துவ முறைகளுக்கு மூலஉயிரணுக்களைப் பயன்படுத்துவதுடன், இவற்றின உதவியுடன் மேலும் ஆராய்ந்து உடலின் செயல்பாடுகளையும் நன்கு அறிந்து கொள்ளவும் முடியும். மேலும், மூலஉயிரணுக்கள் திசுவாக வளர்ந்து குறிப்பிட்ட ஒரு உடலுறுப்பாக மாறுவதையும், அவ்வாறு அவை மாறும் செயல்முறைகளையும் பற்றி கண்காணிப்பு நிறைந்த ஆய்வுக் கூட ஆராய்சிகளின் வழியாக அறிவியல் அறிஞர்கள் அறிந்து கொள்ள இந்த ஆராய்சிகள் வழி வகுக்கிறது.

    இவ்வாறு ஆராய்ச்சி வழி பெரும் தகவல்கள்: 1. மறுவளர்ச்சி மருத்துவச் சிகிச்சை முறை, 2. தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை, 3. நோயுற்றிற்கும் பொழுதோ அல்லது உடல் நலத்துடன் இருக்கும்போழுதோ உடல் இயங்கும் விதம் பற்றி அறிந்து நோய் தடுக்கும் முறைகளை வடிவமைக்க உதவி செய்யும்.

    இவ்வாரத்தில் வெளியான செய்திகளின் படி (செப்டம்பர் 11, 2013), ஆராய்ச்சியாளர்கள் உயிருள்ள எலிகளின் உடல்களிலேயே, அவற்றின் வளர்ச்சியடைந்த உயிரணுக்களை மூலஉயிரணுக்களாக மாற்றமடையச் செய்ய மேற்கொண்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. ஆராய்ச்சிக் கூடத்தில் கலன்களில் வளர்க்கப்படாது, உயிரினங்களின் உடலிலேயே மூலஉயிரணுக்களை தேவைகேற்ப வளரச் செய்வது மறுவளர்ச்சி மருத்துவத் துறையில் ஒரு முக்கியமானத் திருப்புமுனையாகும். எதிர்காலத்தில் சேதமடைந்த இதயத்தின் தசையையோ, தண்டுவடத்தையோ மாற்றியமைத்து மனிதர்களின் இதய, தண்டுவட நோய்களைக் குணப்படுத்தும் முறைக்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நம்பிக்கைத் தருவதாக அமைந்திருக்கிறது.

    மனித குல உயர்வுக்காக வளர்ச்சியடைந்து வரும் இந்த மூலஉயிரணுக்கள் ஆராய்ச்சித் துறை, நன்னெறி வழிகளைச் சார்ந்ததா என்ற கேள்விகளையும், சர்ச்சைகளையும், போராட்டத்தையும் எதிர்கொண்டே வளர்ந்து வருகிறது.

    References:
    [1]
    New possibilities in regenerative medicine: Researchers grow new stem cells in living mice, September 11, 2013, Kate Kelland, Reuters News.
    http://medcitynews.com/2013/09/new-possibilities-in-regenerative-medicine-researchers-grow-new-stem-cells-in-living-mice/

    [2]
    Scientists Force Mature Cells to Revert to Stem Cells, September 11, 2013, Elizabeth Lopatto, Bloomberg.
    http://www.bloomberg.com/news/2013-09-11/scientists-force-mature-cells-to-revert-to-stem-cells.html

    [3]
    A step closer to regenerative medicine, September 12, 2013, R. Prasad, The Hindu.
    http://www.thehindu.com/sci-tech/science/a-step-closer-to-regenerative-medicine/article5117603.ece

    [4]
    Stem Cell Information, National Institutes of Health, U.S. Department of Health and Human Services – http://stemcells.nih.gov/info/basics/pages/basics1.aspx

    [5]
    What are stem cells? Craig A. Kohn. TED-Ed – http://ed.ted.com/lessons/what-are-stem-cells-craig-a-kohn

    [6]
    Regenerative medicine – http://en.wikipedia.org/wiki/Regenerative_medicine

     

     

    படம் உதவி:
    http://www.news-medical.net/health/What-are-Stem-Cells.aspx

     

     

    அறிவியல் கலைச்சொற்கள் உதவி:
    மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், மணவை முஸ்தபா.
    (http://www.tamilvu.org/library/nationalized/pdf/MaanavaiMustappa/009-MARUTHUVAKKALAICHOLKALANCHIYAM.pdf)

     

     

     

     

    Share
  • படைப்பாற்றல் நம் மூளையின் எப்பகுதியில் உருவாகிறது?

    தேமொழி

    [குறிப்பு:  இக்கட்டுரை சென்ற மாத,  ‘சயின்டிஃபிக் அமெரிக்கன்’ (Scientific American, August 19, 2013 issue) இதழில் வெளியான, பேராசிரியர். முனைவர். காப்ஃமன் ஸ்காட்  பேரி (Dr. Kaufman Scott Barry) அவர்களின் கட்டுரையின் மொழி பெயர்ப்பு.  இதனை மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றும் திருவாளர்.காப்ஃமன் ஸ்காட்  பேரி அவர்களிடம் அனுமதி பெற்ற பின்பு மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. அனுமதி கொடுத்த பேராசிரியர். முனைவர். காப்ஃமன் ஸ்காட்  பேரி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.]

     

    ஆராய்ச்சிக் கண்ணோட்டம் கொண்டு அலசி ஆராயும் தன்மை, செயல்களில் ஒழுங்குமுறையைக் கடைபிடிக்கும் தன்மை, காரண காரியத் தொடர்புடைய வகையில் தர்க்க ரீதியில் சிந்திக்கும் தன்மை, நிகழக்கூடியவற்றை யதார்த்தமானவற்றை சிந்திக்கும் தன்மை, இயல்பான நடைமுறைக்கேற்ப செயல்படும்  தன்மை போன்ற பண்புகளை வெளிப்படுத்துவது  மனிதர்களின் இடது பக்க மூளையின் செயல் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது.

    அது போலவே படைப்பாற்றல், உணர்வுப்பூர்வமான வண்ணமயமான சிந்தனைகள், இன்பம் சுவை போன்றவற்றை அனுபவிக்கும் தன்மை, மனம் கவரும் செயல்பாடுகளை, கவிதைத்துவமான எண்ணங்களை வெளிப்படுத்துதல் போன்ற மென்மையான உணர்வுகளை சித்தரிப்பது மூளையின் வலது பக்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கருதப்பட்டு வந்தது.

    crative barain

    தற்கால நரம்பியல் ஆராய்ச்சியில் முன்னோடிகளாகத் திகழும் நரம்பியல் துறை ஆராய்ச்சி வல்லுனர்கள் (Rex Jung, Darya Zabelina, John KouniosMark Beeman, Kalina ChristoffOshin Vartanian, Jeremy Gray, Andreas Fink, Hikaru Takeuchi and others; கொடுக்கபட்டுள்ள சுட்டிகளைச் சொடுக்கி இந்த ஆராய்ச்சியாளர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்), மூளை தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பொழுது அது எவ்வாறு இயங்குகிறது என்று தற்கால தொழில் நுட்பங்களின் உதவியுடன் ஆராய்ந்து வருகிறார்கள்.  இவர்களின் கண்டுபிடிப்புகள் இதுவரை படைப்பாற்றல் திறனை மூளை கையாளும் விதத்தைப் பற்றி நாம் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றி அமைப்பதாக விளங்குகிறது.

    நரம்பியல் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆராய்ச்சி முடிவுகள் இதுவரை நாம் எண்ணியது போல மூளை வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என்று தனித்தனியாக இயங்குவதாக நாம் நினைப்பது தவறு என்று அறிவுறுத்துகிறது.  மொழி தொடர்பான செயல்களில் இடதுபக்க மூளை அதிக பங்கு வகித்தாலும், இடம் சார்ந்த ‘ஸ்பாட்டியல்’ செயல்களில் வலது மூளையின் பகுதி அதிகம் பங்கு வகித்தாலும்; மூளை படைப்பாற்றலில் ஈடுபட்டிருக்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியோ அல்லது மூளையின் ஒரு பக்கமோ மட்டும் அதில் பங்கேற்பதில்லை என்ற உண்மை இப்பொழுது தெரிய வந்திருக்கிறது.

    உண்மையில், படைக்கும் எண்ணம் கருக்கொண்டு, வளர்ச்சியடைந்து, முழுமையாக முற்றுப் பெறும் வரை மூளையின் புலன் மற்றும் உணர்வு தொடர்புடைய பகுதிகள் பல இணைந்து செயலாற்றுகின்றன. நாம் எதனைப் படைக்கிறோமோ அதற்கு ஏற்றவாறு, படிப்படியாக உருவாகும் ஒவ்வொரு நிலைக்கும் தேவையான பணிகளைச் செய்ய மூளையின் வெவ்வேறு பகுதிகள் பங்கேற்கின்றன.  மூளையின் வெவ்வேறு பகுதிகள் தேவைக்கேற்ப ஒருங்கிணைந்து செயலாற்றியே படைப்பாற்றல் வெளிப்படுத்தப்படுகிறது.

    முக்கியமாக, ஒரு செயலை நிறைவு செய்ய மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள பல்வேறு பகுதிகள் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டியத் தேவை இருக்கிறது என்பதைத் தற்கால ஆராய்ச்சி முடிவுகள் வலியுறுத்துகின்றன. மூளையின் நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் ஒருங்கிணைத்து பெருமளவில் செயல்படுவதாலேயே நம் புலன்கள் சரிவர செயல்படுகின்றன.

    இவ்வாறு மூளையின் பல்வேறு பகுதிகளும் இணைந்து செயல் படுவது நாம் செய்யும் செயலைப் பொருத்து அமைகிறது. காட்டாக, ஒரு சிற்றுந்தின் பின்புறம் உள்ள சாமான்கள் வைக்கும் பகுதியில் பொருட்களை அடுக்கும்பொழுது, அவற்றைத் தேவைக்கேற்றவாறு சுழற்றி சீராக அடுக்க விஷுவோ ஸ்பாட்டியல் என்னும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் (Visuospatial Network)  செயல் தூண்டப்படுகிறது.  இதுபோன்று இடஞ்சார்ந்த முடிவுகளை எடுக்கும் பொழுது மூளையின் பின்புற சுவர் புறணி மற்றும் முன்புற கண் துறைகள் (posterior parietal cortex and frontal eye fields) ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன.

    இது போன்றே, ஒரு உரையாடல் அல்லது சொற்பொழிவு ஆற்றும் பொழுது மொழி மற்றும் பேச்சுக்குத் தொடர்புடைய நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் செயல் தூண்டப்படுகிறது.  அப்பொழுது மூளையின் ‘புரோக்கா’ மற்றும் ‘வெர்னிக்’ பகுதிகள் (Broca’s area and Wernicke’s area  of the brain) இணைந்து செயலாற்றுகின்றன.

    அதுபோலவே மூளை படைப்பாற்றலில் ஈடுபடும்பொழுது மூன்று வித நரம்புகளின் வலைக்கட்டமைப்புகளின் செயல்கள்  தூண்டப்படுகின்றன. அவை:
    1. கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Attentional Control Network)
    2. கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Imagination Network)
    3. கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு (The Attentional Flexibility Network)

    1. கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
    ஒரு செயலில் ஒருமித்த ஆழ்ந்த கவனம் செலுத்தத் தேவை இருக்கும் பொழுது இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு தூண்டப்படுகிறது. ஒரு விரிவுரையில் கவனம் செலுத்தும் பொழுதோ அல்லது ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும் பொழுதோ நம் நினைவுகளுக்கு அதிக வேலை கொடுக்கப்படுகிறது.  அப்பொழுது மூளையின் புறப்பகுதி, முன்புறம் மற்றும் பின்புறப் பகுதிகள் (lateral regions of the prefrontal cortex and areas toward the posterior of the parietal lobe) யாவும் இணைந்து செயலாற்றத் தேவையாக இருக்கிறது.  இப்பகுதிகளை இணைக்கும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு தூண்டப்பட்டு செயலாற்றுகிறது.

    2. கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:

    படைப்பாற்றலின் பொழுது, மூளையின் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு ஒருவருக்கு கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களினால் கிடைத்த அடிப்படையான நினைவுகள், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் ஆகியவற்றைக் கொண்டு, தற்காலத் தேவைக்கேற்ப மாறுபட்ட கோணங்களையும் சிந்திக்கும் வகையில் நாம் செய்யும் செயலில் தொடர்ந்து மாற்றங்களை தூண்டிக்கொண்டிருக்கும். அத்துடன் இந்த கற்பனைத்திறன் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு சமூகத் தாக்கத்தையும் உள்ளடக்கியது.  உதாரணமாக, நாம் அடுத்தவர் இப்பொழுது என்ன சிந்தித்துக் கொண்டிருப்பார் என்று யோசிக்கும்பொழுது இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கும். பெருமூளைப் புறணியின் (cerebral cortex) முன்பகுதியின் உட்புறம், நடுப்பகுதியின் உட்புறம், மற்றும் பக்கவாட்டுப் பகுதியின் உட்புற மற்றும் வெளிப்புறங்கள் யாவையையும் இணைக்கும் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு ஒருங்கிணைந்து செயல்படுவதால் கற்பனை செய்யும் திறன் செயல்பாட்டிற்கு வருகிறது.

    crative barain2crative barain3

    3. கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு:
    இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் தன்மை கொண்டது. இது வெளிப்புறத்தில் இருந்து கிடைக்கும் சமிக்கைகளையும், உடலினுள் இருந்து கிடைக்கும் சமிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்தவண்ணம் இருக்கும்.  சமிக்கைகளின் தேவைக்கு ஏற்றவாறு  கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்புக்கோ அல்லது கற்பனைத்திறனுக்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்புக்கோ சமிக்கைகளை அனுப்பி தேவையான முடிவெடுத்து, தக்க வகையில் செயலை முடிக்க வழி செய்கிறது. இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்பு பெருமூளைப் புறணியின் மேல்முன்புறம் உள்ள சிங்குலேட் கார்ட்டெக்ஸ் பகுதிகளையும் (dorsal anterior cingulate cortices), முன்புறம் தனித்திருக்கும் கார்ட்டெக்ஸ் (anterior insular) பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த அமைப்பு தேவைகேற்ப கவனத்திற்கோ அல்லது கற்பனைக்கோ என சமிக்கைகளை மாற்றிவிட உதவுகிறது.

    படைப்பற்றலைப் பற்றிய தோராயமான புரிதல்:
    நரம்பியல் அடிப்படையில் படைப்பாற்றலைப் பற்றி அறிந்து கொள்வதில், இந்த மூன்று வகை நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் எவ்வாறு இயங்குகிறது, எந்த வகைகளில் இவற்றின் செயல்கள் தூண்டிவிடப்படுகிறது அல்லது செயலிழக்கச் செய்யப்படுகிறது, எந்த நிலைகளில் எந்தெந்த மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்வது இன்றியமையாதது. சிலநேரங்களில் இந்த நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் இணைந்தும், சில நேரங்களில் அவ்வாறு இணைந்து செயல்படுவது படைப்பாற்றலைக் குறைக்கும் என்பதால் தனித்தும் இயங்கத் தேவையாகிறது.

    சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் ரெக்ஸ் யுங் (Rex Jung and Colleagues) மற்றும் அவருடன் ஆராய்ச்சியில் பங்குபெற்ற நரம்பியல் வல்லுனர்கள் மூளையின் படைப்பாற்றல் உருவாகும் விதத்தின் ஒரு தோராயமான முதல் நிலையை (first approximation) எடுத்துக் காட்டியுள்ளனர். இந்தத் தோராயமான முதல்நிலை வரையறையின்படி, படைக்கும் செயலில் எவ்வாறு நாம் சிந்திக்கும் திறனை கட்டவிழ்க்க வேண்டும், சிந்தனையை சுதந்திரமாக பரவ விட வேண்டும், புதிய வழிகளை கற்பனை செய்ய வேண்டும், உள்மன விமர்சனங்களை அமைதிப் படுத்த வேண்டும், கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பை சிறிதே செயலிழக்கச் செய்ய வேண்டும், மற்ற இரு கற்பனைத்திறனுக்கான மற்றும் கவனத்திற்கு தக்கவாறு செயல்படும் நரம்புகளின் வலைக்கட்டமைப்புகளின் செயல் திறனை அதிகரிக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.  சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றும் ஜாஸ் மற்றும் ராப் இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை மேம்படுத்த செய்யும் படைப்பாற்றல் முயற்சிகளில் அவர்களது மூளை கட்டற்று சுதந்திரமாக செயல்படும் பொழுது இந்த தோராயமான வரைமுறை குறிப்பிடும் வகையில் படைப்பாற்றல் வெளிப்படுவதைக் காட்டியது.

    எனினும், கவனக்கட்டுப்பாட்டிற்கான நரம்புகளின் வலைக்கட்டமைப்பின் செயல் திறனை சில சமயங்களில் மறுபடியும் தூண்டிவிட்டு படைப்பாற்றலால் உருவாகிய படைப்பை கவனத்துடன் மதிப்பீடு செய்யவும், அந்த எண்ணங்களை செயல் படுத்தவும் தேவை ஏற்படுகிறது.

    ரெக்ஸ் யுங் ஆராய்ச்சிக் குழுவினர் வரையறுக்கும் மூளையின் படைப்பாற்றல் திறனின் செயல்முறை பற்றிய இந்தத் தோராயமான கணிப்பு ஆராய்ச்சியின் முதல்படிதான். ஆனால் இது மூளையின் நரம்புகளின் வலைக்கட்டமைப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள வழி வகுக்கும் விதத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. படைப்பாற்றல் என்பது மூளையின் பல நரம்புகளின் வலைக்கட்டமைப்புகள் இணைந்து செயலாற்றுவதாலேயே நிகழ்கிறது என்று அறிவியல் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னர் எண்ணியது போல மூளையின் ஒரு சில பகுதிகளோ அல்லது மூளையின் ஒரு பக்கம் மட்டுமோ படைப்பாற்றலுக்குக் காரணம் என்ற எண்ணம் தவறு என்று காண்பிக்கப்பட்டுள்ளது.

    இத்தகவலுடன் பிற ஆராய்ச்சித் தகவல்களையும் இணைத்துப் பார்த்தால்; பகல்கனவு காணுதல், எதிர்காலக் கற்பனைகள், தன்னைச் சார்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்தல், ஆக்கப்பூர்வமான சுய பரிசோதனைகள், பொருள் புரிந்து கொள்ளல், சமூக அறிவு போன்றவற்றிக்குக் காரணமான மூளையின் மற்ற பகுதிகள் யாவும் படைப்பாற்றலுக்கு உதவி செய்வது தெரிய வருகிறது. மேலும் தொடரும் ஆராய்ச்சிகள் பல இன, கால வேறுபாடுகள் ஆகியவற்றின்  அடிப்படையிலும் எவ்வாறு படைப்பாற்றல் உருவாகிறது என்பதை விளக்குவதாய் அமைவது படைப்பாற்றல் பற்றி மேலும் அறிய வழி வகுக்கும்.

    மூளையின் படைப்பாற்றல் எவ்வளவு சிக்கல் நிறைந்த செயல்பாடு என்பதை ஆராய்ச்சியாளர்கள் பலரின் மூளைகளும் இணைந்து விளக்க முற்படும் இத்தருணம்  நரம்பியல் ஆராய்ச்சியில் ஒரு ஆக்கப்பூர்வமான காலக்கட்டம், இந்நேரத்தில் படைப்பாற்றல் பற்றிய நமது பழைய தகவல்களை விட்டொழித்து படைப்பாற்றல் என்பது மூளையின் பலபகுதிகளையும் உபயோகித்து உருவாகும் செயல்திறன் என்பதை உணரவேண்டும்.

    Reference:
    Kaufman Scott Barry , The Real Neuroscience of Creativity, August 19, 2013 ,  Scientific American.
    http://blogs.scientificamerican.com/beautiful-minds/2013/08/19/the-real-neuroscience-of-creativity/

    Note: The author of this article (Dr. Kaufman Scott Barry) granted permission to publish the translation of his work.

     

     

     

    Share
  • மரபுவழி அறிதலில் தாய்க்குலத்தின் பங்கு

    தேமொழி

    உலக வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு; அவர்கள் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கு ஆற்றும் பணிகள் சரியான முறையில் மதிக்கப்படுவதில்லை என்றும், அவர்களது திறமைகள் அங்கீகரிக்கப் படுவதில்லை என்ற குறைபாடும் காலம் காலமாகப் பெண்களாலும், அவர்கள் நலம் விரும்பும் ஆண்கள் சிலராலும் எடுத்துரைக்கப்படுகிறது. எனினும் பெண்களின் பங்களிப்பு எந்த அளவு இன்றியமையாததாக இருக்கிறது என்பதினை மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்கள் உண்டு. புவியில் தோன்றி, அதனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பதன் காரணமாக மற்ற உயிரினங்களை விட மேம்பாடு அடைந்த வாழ்வினை வாழ்வது மனித இனம். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கை முறையை மாற்றி வாழும் பிற உயிரினங்கள் போல அல்லாது, சூழ்நிலையை ஒரளவுக்கு தங்கள் வாழ்விற்கு ஏற்றவாறு மாற்றும் திறன் கொண்டது மனித இனம்.

    இந்த மனித இனம் தங்கள் வரலாற்றை, பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராய விரும்பும் பொழுதோ பெரிதும் உதவுவது பெண்கள்தான். பெண்களின் மரபணுவின் அடிப்படையிலான பரம்பரை ஆராய்ச்சியே மனித குலத்தின் ஆரம்பக் கால வாழ்க்கையையும், உலகம் முழுவதும் அவர்கள் பரவிய வரலாற்றையும் அறிய விரும்பும் பொழுது உபயோகப் படுத்தப் படுகிறது. ஆண்களின் மரபணு வழி ஆராய்ச்சியைவிட, ‘ஆணித்தரமான அறுதியிட்டுக் கூற உதவுவது’ பெண்களின் மரபணு வழி ஆராய்ச்சி முடிவுகளே. இதற்கு உதவுவது பெண்களின் உடல் செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ (mtDNA) ஆகும். மைட்டோகாண்ட்ரியாவினை ஆண் பெண் இருபாலரும் கொண்டிருகிறார்கள். இருந்தாலும் ஏன் பெண்களின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ மட்டுமே பரம்பரை வழி ஆராய்சிகளில் அதிகம் பயன் படுத்தப் படுகிறது என்பதனையும், செல்லில் உள்ள நியூகிலியஸின் டி.என்.ஏ வைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ எந்த அடிப்படையில் பரம்பரை வழி ஆராய்ச்சிக்கு உதவுகிறது என்பதையும் விளக்க முற்படுகிறது இக்கட்டுரை.
    [மைட்டோகாண்ட்ரியா (mitochondria) தமிழில் “இழைமணி” அல்லது “இழைத்தணுக்கு” என குறிப்பிடப்பட்டாலும், பரவலாக மைட்டோகாண்ட்ரியா என்றே அறியப்பட்டுள்ளதால் இக்கட்டுரையில் மைட்டோகாண்ட்ரியா என்றே குறிப்பிடப்படுகிறது. அவ்வாறே தமிழில் ‘ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்’ என வழங்கப்படும் (Deoxyribonucleic acid – DNA) டி.என்.ஏ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காரணத்தின் அடிப்படையில் மற்றும் சில அறிவியல் பதங்களும் தமிழ்ப் பதங்களாகக்  கொடுக்கப்படுவது தவிர்க்கப் பட்டுள்ளது, எனவே வாசகர்கள் மன்னிக்கவும்.]

    மனித குல வரலாறு:
    பரிணாம வளர்ச்சி (evolution) ஆராய்ச்சிகளும், படிம (fossil) ஆராய்ச்சிகளும் உலகின் முதல் நாகரீக வளர்ச்சி அடைந்த ‘ஹோமோ சாப்பியன்ஸ்’ (Homo sapiens) என்னும் மனித இனம் தோன்றியது ஆஃப்ரிக்காவின் ‘எதியோப்பியா’ (Ethiopia) பகுதியில் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு எனத் தெரிவிக்கிறது. பிறகு, அங்கேயே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மனித இனம், சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி உலகம் முழுவதும் பரவ எத்தனித்தது. இந்த வெளியேற்றத்திற்குக் காரணம் சுற்றுப் புறச் சூழலில் ஏற்பட்ட வாழ முடியாத சில மாறுதல்களாக இருக்கலாம் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். அக்காலத்தில் மக்கட் தொகை 10,000 ஆகவும் குறைத்திருக்கலாம் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது. உலகில் ஏற்பட்டக் கடுங் குளிர் காலமும், உறைபனி காலமும் (ice age) மனித குலத்தின் இந்தப் பரவலுக்குக் காரணமாகக் கருதப்பட்டு, இந்தப் பரவல் ‘ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியற்றம்’ (‘Out-of-Africa’ theory) என்ற கோட்பாடாக விளக்கப் படுகிறது. இது நிகழ்ந்தது ‘ப்ளிஸ்டோஸின்’ காலத்தின் இறுதியில் (Late Pleistocene Era). இந்த மனிதகுலப் பரவலை மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. (mtDNA)வின் உதவியுடன், மனிதர்களின் தாய்வழிப் பாரம்பரியத்தை (Maternal Ancestry) ஆராய்வதன் வழியாக அறியப்பட்டுள்ளது.

    மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. (mtDNA) என்பது என்ன?
    செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவின் பங்கு, வளர்சிதை மாற்றத்தில் (metabolism) உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுப்பதாகும். ஆண், பெண் இருவர் உடலில் உள்ள செல்களிலும் மரபுவழிக் கட்டளைகளைக் கொண்ட மரபணு மூலக்கூறு டி.என்.ஏ. உள்ளது. பெரும்பான்மையான டி.என்.ஏ. செல்லில் உள்ள ‘நியூகிலியஸ்’ (nucleus) இல் இருந்தாலும், செல்லின் உட்காருவான நியூகிலியசைச் சூழ்ந்துள்ள சைட்டோபிளாசத்தில் (cytoplasm) உள்ள நுண்மமான மைட்டோகாண்ட்ரியாவிலும் அவை உள்ளது. இது ‘மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.’ (mtDNA) என அழைக்கப் படுகிறது.

    ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரியாவிலும் பல மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. நகல்கள் உள்ளன. அத்துடன், ஒவ்வொரு செல்லிலும் பல மைட்டோகாண்ட்ரியாக்கள் உள்ளன. எனவே செல்லின் நியூகிலியஸில் உள்ள ஒரே ஒரு இழையான டி.என்.ஏ. அளவைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் அளவு செல்லில்அதிகம். அளவில் அதிகமாக இருப்பதாலும், அத்துடன் அது நியூகிலியஸின் டி.என்.ஏ. போல எளிதில் சேதமடையாப் பண்பினைப் பெற்றிருப்பதாலும் பெரும்பான்மையான அகழ்வாராய்ச்சிகள் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

    ஆண், பெண் இருவர் உடலிலும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது அவர்களது தாயிடம் இருந்து பெறப்பட்டது. அத்தாய்க்கு கிடைத்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. அவளது தாயிடம் இருந்து வந்தது. இவ்வாறு தாய் வழியாகாவேப் பெறப்படுவதன் காரணம் இனப்பெருக்க நிகழ்வு அமைந்துள்ள முறையினால் ஆகும்.

    இனப்பெருக்கத்தின் பொழுது, ஆண்விந்துவும் (sperm), பெண் முட்டையும் (egg), இணைந்து கருமுட்டை (zygote) உருவாகிறது. தலைப்பிரட்டை (tadpole) வடிவில் உள்ள ஆண் விந்து முட்டையை நோக்கி நீந்துவதற்கு அதன் வால் உதவுகிறது. விந்துவின் இந்த வால் பகுதி, நீந்த சக்தியைக் கொடுக்கும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது. முட்டையை அடைந்து விந்துவின் நியூகிலியசைக் கொண்ட தலைப்பாகம் உள் நுழைகிறது. காரியம் முடிந்தவுடன் தேவையட்ற விந்துவின் வால் பகுதி கழற்றி விடப் படுகிறது. அத்துடன் வால் பகுதியில் இருந்த (தந்தை வழியாகப் பெறப் பட வேண்டிய) மைட்டோகாண்ட்ரியாவும், அதிலுள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வும் கரு முட்டையில் இடம் பெறாமல் போய் விடுகிறது. இதனால் ஆணின் சைடோப்லாஸத்தில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாவின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது சந்ததியின் செல்களில் இடம் பெறுவதில்லை. சந்ததிகளில் செல்களில் தாயின் வழி வந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மட்டுமே இருக்கும்.



    நியூகிலியஸின் டி.என்.ஏ. போல அல்லாது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. தாய்வழி மரபு மட்டும் என மாறுபட்டிருப்பதன் காரணம் இதுதான். மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. தாயிடம் இருந்து சந்ததிகளுக்குச் செல்கிறது, ஆண் பெறுவது தாயின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ., ஆனால் இதனை ஆணால் தனது சந்ததிகளுக்குத் தர இயலாது. மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. பெண்களின் வழியாகவே ஒவ்வொரு சந்ததியையும் சென்றடைகிறது.

    தாய்வழிப் பாரம்பரியத்தை அறிதலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.” வின் பங்கு:
    பொதுவாக இனப்பெருக்கத்தின் பொழுது தாயின் பாதி மரபணுக்களும், தந்தையின் பாதி மரபணுக்களும் ஒன்றாகக் கலப்படையும். ‘ஜான் கிரிகர் மெண்டல்’ (Johann Gregor Mendel) இதனை விளக்கியதால் இந்தக் கலப்பு முறை ‘மெண்டலியன் கலப்பு’ என விளக்கப் படுகிறது. ஆனால் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. இது போன்ற எந்த ஒரு மாற்றமும் இன்றி பரம்பரைப் பரம்பரையாக அப்படியே தாயிடமிருந்து சந்ததிகளின் வழி தொடரும். அதனால் நம் உடலில் இருக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது, நம் கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டியான பெண்ணிடமிருந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் நகலே ஆகும். இவ்வாறு பல 100 அல்லது பல 1000 தலைமுறைகளுக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மாறாமலே இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நமது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை நாம் அறிந்து கொண்டால், அது பல ஆயிரம் தலைமுறைகளுக்கு முன்பிருந்த நமது பாட்டி ஒருவரின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வினை அறிந்து கொள்வதற்கு ஒப்பாகும். இவ்வாறு மரபு வழியை அறிந்துணர்வது ‘மனித மைட்டோகாண்ட்ரிய மரபியல்’ (human mitochondrial genetics) என மரபியல் துறையில் வகைப் படுத்தப் படுகிறது.

    காலப்போக்கில் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வில் ஏற்படும் ‘மரபணு திடீர்மாற்றங்கள்’ (genetic mutation) சந்ததிகளுக்குத் தொடரும் பொழுது, அந்த மனிதக் கூட்டம் வேறு ஒரு இனமாக அல்லது குழுவாகப் பிரியத் தொடங்குகிறது. ஒரு மனித குழுவுக்கும் மற்றொரு மனித குழுவுக்கும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் வேறுபாடுகளின் தொகுப்பு, மனித மரபியலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்”(mitochondrial DNA haplogroup) என வரையறுக்கப் படுகிறது. இவ்வாறு மனித இனப் பரிமாண வளர்ச்சியில் கிளைகளாகப் பிரிவது ‘இனவரலாறு /இனவளர்ச்சி’ (phylogeny) என அறியப்படுகிறது. இவ்வாறு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் உதவியுடன் தாய்வழி மரபின் பாரம்பரியத்தை (matrilineal inheritance) அறிந்து கொள்வதால், மனித இனம் ஃ ஆப்ரிக்காவில் தோன்றி எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்பது தெரிய வருகிறது.

    மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள தாய்வழி மரபு முறை ஆராய்ச்சி மிகவும் உதவியுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்ட முதுதாய் ‘மைட்டோகாண்ட்ரியல் ஏவாள்’ (Mitochondrial Eve) எனப் பெயரிடப்பட்டுள்ளாள். இந்த ஏவாள் இப்பொழுது வாழும் மனிதர்களுக்கான தாயாகக் கண்டறியப்பட்டவள் (most recent common ancestor – MRCA). இது போலவே ஆணின் Y- குரோமோசோம் (chromosome) டி.என்.ஏ. வழியாகக் கண்டறியப்படுவது ‘தந்தை வழி மரபு’ (patrilineal line studied by Y – DNA) என அறியப்படுபிறது. அவ்வாறு கண்டறியப்பட்ட முது தந்தை ‘ஒய் குரோமொசோமல் ஆதாம்’ ( Y-chromosomal Adam) எனவும் குறிப்பிடப்படுகிறான். இவர்கள் முன்னொரு காலத்தில் ஃஆப்ரிக்காவில் வாழ்ந்த நமது பொது மூதாதையர்கள் (common ancestor) ஆவார்கள்.

    இந்த மரபியல் துறை ஆராய்ச்சியில், ஆங்கில எழுத்துக்களான A முதல் Z வரையான எழுத்துக்கள், ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்பிற்கும் அடையாளமாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பெயரிடப் பட்டதற்கு உயர்வு தாழ்வோ, தரவரிசை முறையோ, குழுக்களுக்கிடையே ஆன மரபணுத் தொடர்போ அடிப்படை அல்ல. எந்த வரிசைமுறையில் ஹாப்லோக்ரூப்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அந்த வரிசைமுறையிலேயே A – Z எனப் பெயரிடப் பட்டுள்ளது. நமது முது பெற்றோர்களின் ஹாப்லோக்ரூப் L. இந்த ஆதிகால மனிதர்களில் இருந்து மாறுபாடுகள் ஏற்பட்டு L0, L1, L2, L3, M, N, R எனப் பல குலங்கள் தோன்றி உலகம் முழுவதும் மனித இனத்தினர் பரவினர். இந்தக் குலப் பிரிவுகளையும் அவர்கள் பரவிய விதத்தையும் கொடுக்கப் பட்டுள்ள படங்களின் மூலம் அறியலாம். பெரிய ஹாப்லோக்ரூப் (macro-haplogroup) என இப்பிரிவுகள் அழைக்கப் பகுகின்ற. இப்ரிவுகளில் ஏற்படும் உப பிரிவுகள் ‘உப ஹாப்லோக்ரூப்’ (sub haplogroup) என அழைக்கப் படுகின்றன.

    இந்தியாவின் மனித குலப்பிரிவுகள்:

    இந்தியாவில் அல்லது தெற்காசியப் பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும், அதாவது 60% த்தினர் M ஹாப்லோக்ரூப் வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் “ஏவாள்” > L1/L0 > L2 > L3 > M என்ற முறையில் வழித் தோன்றல்களாக உதித்தவர்கள். L3 ஹாப்லோக்ரூப் பிரிவிலிருந்து தோன்றியவர்கள் ஹாப்லோக்ரூப் M மற்றும் N குழுக்கள். M ஹாப்லோக்ரூப் பிரிவினத்தவரைத் தவிர N ஹாப்லோக்ரூப், மற்றும் அந்த N ஹாப்லோக்ரூப் வழித் தோன்றல்களாகிய R ஹாப்லோக்ரூப் பிரிவினரும் இந்தியப் பகுதியில் உள்ளனர். M ஹாப்லோக்ரூப் குலத்தினர் முதன் முதலில் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி யவர்கள். கடலோரப் பகுதி வழியாக பயணம் செய்து இன்றைய இந்தியாவை அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

    ஆங்கிலேய மன்னன் மூன்றாம் ரிச்சர்ட் (English king Richard III) உடலின் எலும்புகளை மரபணு பரிசோதனையின் மூலம் அடையாளம் கண்டு தகுந்த முறையில் அடக்கம் செய்யவும், மறைந்த ரஷ்ய அரசப் பரம்பரையினரை  (Russian royal family) அவர்களது எலும்புகளின் மூலம் அவர்கள்தான் என உறுதிப் படுத்தவும் தாய்வழி மரபு மரபணுச் சோதனையே பயன்படுத்தப் பட்டது.

    இந்த அறிவியல் தகவல்கள் உறுதிப் படுத்துவது யாதெனில், வரலாற்றினைத் திரும்பிப் பார்க்கும் பொழுது, மனித குலத்தின் வரலாற்றையே உணர பெண்ணகளின் பங்குதான் பெரிதும் உதவி புரிந்துள்ளது என்பதும், வரலாற்றில் அவர்களுக்கு அசைக்க முடியாத இடமும் முக்கியத்துவமும் உள்ளது என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.


    உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
    உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
    உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
    ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.
    -பெண்மை, பாரதியார்

    பெண்ணின் பெருமையை உணர்ந்து கொள்வோம்….
    மகளிர் தின வாழ்த்துக்கள்……

    தங்களது தாய்வழி மரபினை அறிய விரும்புவோருக்கானத் திட்டம்:
    TO PARTICIPATE IN A GENOGRAPHIC PROJECT:
    Geno 2.0 – Genographic Project
    https://genographic.nationalgeographic.com/
    Geno 2.0 – Genographic Project Participation and DNA Ancestry Kit
    http://shop.nationalgeographic.com/ngs/browse/productDetail.jsp?productId=2001246&gsk&code=MR20944

    ______________________________________________

    தகவல் ஆதாரங்கள்:
    CONTENT SOURCES:
    Human mitochondrial genetics –
    http://en.wikipedia.org/wiki/Human_mitochondrial_genetics

    Human mitochondrial DNA haplogroup –
    http://en.wikipedia.org/wiki/Human_mitochondrial_DNA_haplogroups

    mtDNA and its role in ancestry –
    http://www.genebase.com/learning/article/17

    Haplogroup M –
    http://www.openthemagazine.com/article/living/haplogroup-m

    More than a hunch: identifying Richard III with DNA –
    http://theconversation.edu.au/more-than-a-hunch-identifying-richard-iii-with-dna-11999

    மேலதிகத் தகவலுக்காக பரிந்துரை செய்யப்படும் ஆய்வு அறிக்கைகள்:
    RESEARCH ARTICLES:
    Deep Rooting In-Situ Expansion of mtDNA Haplogroup R8 in South Asia.
    Thangaraj et al; PLoS ONE;2009, Vol. 4 Issue 8, p1
    http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0006545

    Phylogeography of mtDNA haplogroup R7 in the Indian peninsula.
    Chaubey et al; BMC Evolutionary Biology 2008
    http://www.biomedcentral.com/1471-2148/8/227

    Phylogeny of Mitochondrial DNA Macrohaplogroup N in India, Based on Complete Sequencing: Implications for the Peopling of South Asia
    Palanichamy et al; Am J Hum Genet. 2004 December; 75(6): 966–978.
    http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1182158/

    Mother’s curse: the effect of mtDNA on individual fitness and population viability.
    Gemmell NJ, Metcalf VJ, Allendorf FW. Trends Ecol Evol. 2004 May;19(5):238-44
    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16701262

    பட உதவி:
    http://3.bp.blogspot.com/-kQRXiQhc_J0/ToN6yifvb_I/AAAAAAAABWI/UFJYPXs-P70/s1600/mDNA+migration+map+-+small.jpg
    https://genographic.nationalgeographic.com/wp-content/uploads/2012/09/human-journey_940.jpg
    http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1MDI=.jpg?download=1
    http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1MTA=.jpg?download=1
    http://leavingbio.net/HUMAN%20REPRODUCTION-WEB_files/image004.gif
    http://katiephd.com/wp-content/uploads/2011/02/humanlifecyc.jpg
    http://www.starchildproject.com/images/dna2011mtdnadiagram1.jpg
    http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1Mzc=.jpg?download=1
    http://jonciwolff.com/wp-content/uploads/2012/12/mitochondrialdna22.gif
    http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c4/Peopling_of_eurasia.jpg
    http://www.openthemagazine.com/sites/default/files/imagecache/435by290/article_images/8308.haima.jpg

     

    Share
  • திமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?

    தேமொழி

    உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவும் இயற்கையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  அரளிச்செடி ஆலமரம் போல உயரமாக வளருவதில்லை. பூனையும் யானையின் அளவுக்குப் பெரியதாக வளருவதில்லை.  இதன் காரணத்தை சிறு வயதிலேயே நாம் அறிந்து கொள்ள விரும்பியிருப்போம்.  நம் பெற்றோரை நாம் கேட்டு நச்சரித்த கேள்விகளில் இது ஒன்றாகவும் இருக்கலாம்.

    ஆன்மீக வழியில் வாழ்க்கையைப் பார்ப்பவர்களுக்கு இக்கேள்விக்கு விடை சுலபம். இதற்குக் காரணம் இறவைனின் விருப்பம், இறைவன் படைத்தபடி உலகம் இயங்குகிறது, அதில் வாழும் உயிரினங்களும் இயங்குகின்றன என்று விளக்குவார்கள். ஆனால் அறிவியல் அறிஞர்கள் இதற்கும் மேலான விளக்கத்தைத் தேடி ஆராய்வார்கள், இந்த ஆர்வம் அவர்கள் இயல்பு. உயிரியல் (biology), சூழலியல் (ecology),  பரிணாமம் (evolution) போன்ற துறைகளின் அறிவியல் அறிஞர்கள் உயிரினங்களின் வளர்ச்சியின் அளவு, விலங்கினங்களின் கூட்டத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை என இவையாவற்றையும் ஆராய்ந்து அவற்றை விளக்கும் கோட்பாடுகளை உருவாக்குவார்கள். மேலும் அதிக அறிவியல் தகவல்கள் தெரியத் தெரிய, விளக்கம் தரும் இக்கோட்பாடுகளும் இவர்களால் மாற்றியமைக்கப் படும். ஆனால் காரணம் அறிய விரும்பும் ஆராய்ச்சி மட்டும் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

    அந்நாள் அறிவியல் அறிஞர் ‘சார்லஸ் டார்வின்’ (Charles Darwin), தற்கால அறிவியல் அறிஞர்களான ‘டெட் கேஸ்’ (Ted Case), ‘ஜான் டைலெர் போனெர்’ (John Tyler Bonner) போன்றவர்கள் உயிரினங்களின் வளர்ச்சி பற்றி  ஆராயந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.  ஒரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவை நிர்ணயிப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ள உலகிலேயே மிகப் பெரிய உயிரினமான நீலத்திங்கிலம் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டு அதன் மூலம் இக்கேள்விக்கு விடை காண முயல்வோம்.

     

    புவியினை வாழுமிடமாகக் கொண்ட உயிரினங்களில், அதாவது இதுவரை புவியின் வரலாற்றில் தோன்றி அழிந்த மற்றும் இன்றும் வாழும் உயிரினங்களைக் கணக்கில் கொண்டால், திமிங்கிலங்கள் தான் அளவில் பெரியவை.  உலகின் மிகப் பெரிய விலங்கினங்களைப் பட்டியலிட்டால், பட்டியலில் தரவரிசைப்படி வரும் முதல் பத்து விலங்குகளுமே வெவ்வேறு வகையான திமிங்கிலங்கள்தான். நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்கான யானையைவிடப் பலமடங்குப் பெரியவை திமிங்கிலங்கள். இந்த திமிங்கிலங்களிலும் நீலத்திமிங்கிலமே மிகப் பெரியது.

    பெருங்கடல்களில் வாழும் நீர்வாழ் விலங்கான திமிங்கிலம் முன்னொரு காலத்தில் நிலத்தில் வாழ்ந்ததாகவும், ஏதோ சில சுற்றுச்சூழல் காரணங்களினால் கடலுக்கு இடம் பெயர்ந்ததாகவும், அத்துடன் பரிணாம வளர்ச்சியின் காரணமாக நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளைப் பெற்றிருப்பதாகவும் அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். எனவே குட்டியீன்று பாலூட்டும் பாலூட்டி வகையான திமிங்கிலங்களின் தோற்றம் நீர்வாழ்கைக் கேற்ற தகவமைப்புகளைப் பெற்று மீன்கள் போன்று தோன்றுகின்றன. ஆனால் மீன் போன்ற தோற்றமளித்தாலும் திமிங்கிலங்கள் மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல.

    மற்ற பாலூட்டிகளைப் போலவே உடல் உறுப்புகள் கொண்டவை நீலத்திமிங்கிலங்கள். இதய அமைப்பு, நுரையீரல்கள் வழி சுவாசிப்பது என யாவும் பாலூட்டிகள் போன்றே இவற்றிற்கு அமைந்திருக்கிறது.  மீன்களைப்போல செவுள்களால்  நீலத்திமிங்கிலங்கள் சுவாசிப்பதில்லை.   நீலத்திமிங்கிலங்கள் தலையில் உள்ள துவாரங்கள் வழியே காற்றை உள்ளிழுத்து சேமித்து வைத்துக்கொள்ளும். உணவிற்காகக் கடலின் ஆழம் வரை சென்றாலும் 20 நிமிடங்கள் வரை கூட நீலத்திமிங்கிலங்களால் தாக்குப் பிடிக்க முடியும்.  மீண்டும் காற்றை வெளியேற்ற நீர்பரப்பிற்கு வந்து துவாரங்கள் வழியே கற்றை வெளியேற்றும் பொழுது 30 அடிகள் உயரம் வரை ஒரு நீர் ஊற்றுபோல நீரைப் பீய்ச்சி அடிக்கும்.

    இந்த நீலத்திமிங்கிலங்கள் (Balaenoptera musculus, விலங்கியல் இனப் பெயர்), பாலூட்டிகள் வகுப்பு (Class: Mammalia), கடற்பாலூட்டி வரிசை (Order: Cetacea) என வகைப்படுத்தப் படுகிறது. நீலத்திமிங்கிலம் ஒரு ஊனுண்ணி/விலங்குண்ணி (carnivore). இது உண்பது ஓரிரு சென்டிமீட்டர் நீளம் அளவேயுள்ள கூனிப்பொடி (Krill) என்னும் அளவில் மிகச் சிறிய இறால் வகை கணுக்காலி (tiny Crustaceans, a group of Arthropods). சராசரியாக 90 ஆண்டுகள் வரை உயிர்வாழும் ஒரு நீலத்திமிங்கிலத்தின் நீளம் ஏறத்தாழ 100 அடிகள் (up to 33 meters in length). இதன் உடல் எடையோ 200 டன்கள் வரை இருக்கும்.  அதாவது ஒரு நீலத்திமிங்கிலத்தின் எடை 40 யானைகளின் மொத்த உடல் எடைக்குச் சமம். இரு மிகப் பெரிய டயனோசாரின் உடல் எடைக்குச் சமம். மனித உடலின் நீளத்துடனும், யானையின் உடல் எடையுடனும் ஒப்பிடப்பட்ட படங்கள் விளக்கத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.

    நீலத்திமிங்கிலத்தின் நாக்கின் பரப்பளவு 50  பேர் அமரும் அளவு பெரியது. அதன் நாக்கின் எடை ஒரு யானையின் எடையளவு ஆகும். அதன் இதயத்தின் அளவு ஒரு சிறிய ஊர்தியின் (car) அளவும், அதன் குருதி நாளங்கள் ஒருசிறிய மனிதன் அதன் வழியே நீந்திச் செல்லும் அளவு பெரியவை. ஆனால் அதன் உணவுக்குழாய் (oesophagus) மிகவும் சிறியது. ஒரு சிறிய ரொட்டித் துண்டும் அதன்வழியாகச் செல்லமுடியாமல் சிக்கிக் கொள்ளும் அளவு சிறியது.  நீலத்திமிங்கிலத்தின் வாய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனால் பெரிய விலங்குகளை உண்ண முடியாது. உருவில் மிகச்சிறிய கூனிப்பொடி இறால்களையும், அதே அளவுள்ள மிகச் சிறிய மீன்களை மட்டுமே உண்ணமுடியும்.  ஆனால் இக்குறையைத் தீர்க்கும் வண்ணம் அதன் உணவு உண்ணும் முறை தகவமைந்துள்ளது.

     

    நீலத்திமிங்கிலம் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன?
    நீலத்திமிங்கிலம் உணவு உண்ணும் முறை பெரிதும் வேறுபட்டது.  இதன் வாயில் ஒரு மீட்டர் அகலமுள்ள பலீன் தகடுகள் (baleen plates) 30 இருக்கிறது.  இவை சீப்பு போன்ற உருவத்தில் பல சிறிய இழைகளைக் கொண்டிருக்கும்.  இதன் உணவான கூனிப்பொடி இறால்கள் கூட்டம் கூட்டமாக கடலில் நீந்தும்.  இக்கூட்டத்தை நெருங்கியதும் நீலத்திமிங்கிலம் வாயை மிக அகலமாகத் திறந்து நீருடன் கூனிப்பொடி இறால்களை விழுங்கும் (lunge feeding behavior).  இவ்வாறு விழுங்கும் உணவும் நீரும் நீலத்திமிங்கிலத்தின் உடல் எடையைவிட 125% அதிகமாக இருக்கும்.  இவ்வாறு விழுங்குவதற்கு ஏதுவாக அதன் வாயும் கீழ்தாடையும் மிக அகலமாகத் திறக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிறகு விழுங்கிய நீரை பலீன் தகடுகள் வழியாகத் துப்பும். நாவை மேல்நோக்கி அழுத்தி நீரை வெளியேற்றும்.  அப்பொழுது பலீன் தகடுகளின் இழைகளால் கூனிப்பொடி இறால்கள் சலிக்கப் பட்டு அதன் வாய்க்குள் சிக்கி விடும்.  இவற்றை அப்படியே நீலத்திமிங்கிலம் விழுங்கி விடும்.

    ஒரு நாளைக்கு 40 மில்லியன்கள் கூனிப்பொடி இறால்களை (4 டன்கள் எடை வரை) நீலத்திமிங்கிலம் உணவாக உண்ணும், அதனால் அது பெறும் சக்தியின் அளவு 480,000 கலோரிகள். நீலத்திமிங்கிலத்தின் உணவான கூனிப்பொடிகளின் தொகையும் உலகில் மிக மிக அதிகம். கூனிப்பொடிகளின் உருவ அளவும் அதிகத் தொகையும்; அது போலவே நீலத்திமிங்கிலத்தின் வாயும் உணவு உண்ணும் முறையும் ஒன்றுக்கொன்று மிகவும் பொருந்தியுள்ளது. நீலத்திமிங்கிலங்களின் உணவாவதற்கே கூனிப்பொடிகள் பிறந்தது போலவும், அவற்றை உண்ணவே நீலத்திமிங்கிலங்கள் பிறந்தது போலவும் இயற்கையில் அமைந்திருக்கிறது.  இந்த சாதகமான உணவு சூழ்நிலை நீலத்திமிங்கிலம் அதிகம் உண்டு மிகப் பெரிய அளவாக வளர பரிணாம வளர்ச்சிப்படி ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

    மற்றொரு காரணம் அது வாழும் நீர்நிலை செய்யும் உதவி.  நிலத்தில் வாழும் உயிரினங்கள் பெரிதானால்,  அந்த உடலுக்கேற்ற அதிக எடை புவியீர்ப்பு விசையினால் புவி நோக்கி இழுக்கப்பட்டு சிரமம் கொடுக்கும்.  அதற்குத் தீர்வாகப் பெரிய விலங்குகள் உடல் எடையைத் தாங்கும் பருத்த கால்களைக் கொண்டிருக்கும், காட்டாக யானையைக் கொள்ளலாம்.

    நிலவாழ் உயிரனங்களுக்கு இருக்கும் புவியீர்ப்புத் தாக்கம் நீர்வாழும் உயிரினங்களுக்கு இல்லை.  மாறாக நீரின் மேல்நோக்கு விசை (buoyancy) நீர்வாழ் விலங்குகளுக்கு நீரில் மிதக்க உதவுகிறது. ஆர்கிமிடீஸ் கொள்கை விளக்கும் நீரின் இப்பண்பினால் பெறப்படும் உதவியால் சக்தி விரயமாவது குறைகிறது. இதுபோல வாழும்  நீர்நிலையின் சூழல் வழங்கும் உதவி, அதிக உணவு வளம், அதை உண்ணும் உடலின் தகவமைப்பு ஆகியவை நீலத்திமிங்கிலங்கள் உருவில் பெரியவையாக வளர உதவியிருக்கிறது. அடுத்து நமக்கு நியாயமாக எழ வேண்டிய கேள்வி, அவ்வாறானால் நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேலும் ஏன் பெரிதாக வளரக்கூடாது என்பது.

    உயிரினத்தின் உருவம் பெரிதாகப் பெரிதாக,  அதன் வளர்ச்சிக்கேற்ப வளர்சிதை மாற்றத் தேவைகள் அதிகரிக்கும். அதனால் உடலினைப் பராமரிப்பதற்கும் அதிக சக்தி தேவைப்படும்.  அதற்கு வேண்டிய சக்தியைப் பெற அதிகம் உண்ண வேண்டியிருக்கும். இவ்வாறு உணவைத் தேடி உண்டு, செரிமானம் செய்து சக்தி பெறுவதற்கும் அந்த உயிரினம் சக்தியை விரயம் செய்ய வேண்டி இருக்கிறது. நீலத்திமிங்கிலம் நிலையாக ஒரிடத்தில் நிலைத்து இருந்து உணவு உண்ணுவதற்கு 15 மடங்கு அதிக சக்தி செலவழிக்கப் படுகிறது.  இது நீந்துவதற்குத் தேவையான சக்தியை விடவும் 5 மடங்கு அதிகம்.

    வணிகத்தில் முதல் போட்டு வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது போன்ற செயலை இந்த உணவு தேடும் முயற்சிக்கு ஒப்பிடலாம். இவ்வாறு உணவின் மூலம் பெறப்படும் சக்தி (வரவு), அந்த சக்தியைப் பெற செலவழித்த சக்தியையும் அத்துடன் உடலைப் பராமரிக்க செலவிடப்படும் வளர்சிதை மாற்றதிற்கு தேவையான சக்தியையும் (செலவு) விட அதிகமாக இருந்தாலே இந்த உணவு வேட்டை லாபம் தரும் செயலாக இருக்கும். உபரியாக கிடைக்கும் சக்தி உடலை மேலும் வளர்க்க உதவும். இதற்கு உதவும் வகையில் உயிரினம் உண்ணும் உணவும் தகுந்த அளவு கிடைக்க வேண்டும்.

    ‘ஜான் டைலெர் போனெர்’ என்னும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக உயிரியல் பேராசிரியர் ஒரு உயிரினத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பதன் முக்கிய உயிரியல் காரணிகள் எனக் குறிப்பிடுபவை (1) உயிரினத்தின் திறன், (2) உடலின் புறப் பரப்பளவு, (3) உடலின் கட்டமைப்பு, (4) வளர்சிதை மாற்றத்தின் அளவு, மற்றும் (5) உயிரினத்தின் எண்ணிக்கையின் தொகை (five important biological features: strength, surface area, complexity, rate of metabolism, and organism abundance). அறிவியல் அறிஞர்கள் இந்தக் காரணிகளை ஒரு கணித சமன்பாடு/வாய்ப்பாடாக உருவாக்கிய  பின்பு, ஒரு உயிரினத்தின் தகவல்களை அதில் பொருத்தி கணக்கிடுவார்கள். கணித மதிப்பீடுபடி அந்த உயிரினத்தின் வளர்ச்சி அதன் சூழ்நிலைக்கேற்ற வாழ்க்கைத் தகவமைப்பு படி, அதற்கு சாதகமான முறையில் எந்த அளவு வளர்ச்சி அடைய முடியும் என்பது இதனால் தெரிய வரும்.

    இவ்வாறு நீலத்திமிங்கிலத்தினைப் பற்றிய தகவல்களைக் கொண்டு மதிப்பிட்ட பொழுது, அது தேவைகளை சமாளித்து வெற்றிகரமான வாழ்க்கை வாழ 33 மீட்டர் வரை வளர முடியும் எனத் தெரிந்தது.  இதுவரை காணப்பட்ட நீலத்திமிங்கிலங்களின் சராசரி நீளமும் ஏறத்தாழ இதே அளவுதான்.  இதிலிருந்து நீலத்திமிங்கிலத்தின் உணவு வகை, அதன் சூழ்நிலை காரணிகள் நிர்ணயித்தபடி நீலத்திமிங்கிலங்கள் இதற்கும் மேல் வளர வாய்ப்பில்லை என்பதை இயற்கை நிர்ணயித்துள்ளது தெரிய வருகிறது.

     

    சிந்தனைக்கு: ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எதற்காக? போன்ற கேள்விகளைக் கேட்கும் ஆர்வமுள்ள குழந்தைகளின் மனநிலையை வளர்ந்த பின்பு பலர் கைவிட்டு விடுகிறோம்.  ஆனால் இது போன்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குக் காரணம்.   இவ்வாறு ஆர்வத்தில் ஆராய்ந்து தாங்கள் கண்டறிந்து சொல்லப்படும் உண்மைகள், சமுதாயத்தில் காலம் காலமாக நம்பப்பட்ட கொள்கைகளுக்கு மாறாக இருந்தால், அவற்றைச் சொல்லுபவர்கள் அனுபவிக்கும் இன்னல்களும் ஏராளம். எடுத்துக் காட்டாக, நவீன அறிவியலின் தந்தை என ஐன்ஸ்டினால் புகழப்பட்டவர் வானியல் மேதை கலிலியோ, இவர் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை வலியுறுத்தியதற்காகக் கிறிஸ்துவ மதக் குருமார்களால் கண்டிக்கப் பட்டார். முதுமையிலும் வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைக்கப் பட்டுத் தண்டிக்கப்பட்டார். அறிவியல் முன்னேற்றம் அடைந்த இக்காலத்திலும், முதன் முதல் நிலவில் காலடி எடுத்து வைத்த  நாடான அமெரிக்காவின் சில பள்ளிகளில் டார்வினின் ‘இயற்கைத் தேர்வு நியதி’யைக் (Theory of Natural Selection) கற்பிக்கத் தடைகள் போடப்படுகின்றன.  இது போன்ற ‘மதத் துரோகம்!’ என்று கூறி தடைகள் போடும் குறுகிய மனப்பான்மை மனித அறிவு வளர்ச்சிக்கு உதவாது என்பதை மக்கள் உணர்வது மனித குல மேம்பாட்டிற்கு வழி வகுக்கும்.

     

    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
    [குறள் 396]

    Content References:
    Blue whale
    http://en.wikipedia.org/wiki/Blue_whale
    http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/

    National Geographic Explorer : Kingdom of the Blue Whale
    http://channel.nationalgeographic.com/channel/videos/kingdom-of-the-blue-whale/
    http://animals.nationalgeographic.com/animals/mammals/blue-whale/

    Why are blue whales so enormous?
    http://ed.ted.com/lessons/why-are-blue-whales-so-enormous-asha-de-vos

    John Tyler Bonner, Why Size Matters: From Bacteria to Blue Whales, 2011, Princeton University Press; Reprint edition
    http://books.google.com/books/about/Why_Size_Matters.html?id=pNIkFBA0kdAC

    Ted J. Case, 1979, Optimal body size and an animal’s diet, Acta Biotheoretica, Volume 28, Issue 1, pp 54-69
    http://link.springer.com/article/10.1007%2FBF00054680?LI=true

    Pictures Source:
    http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/004/cache/blue-whale_477_600x450.jpg
    http://animals.nationalgeographic.com/animals/blue-whale-interactive/
    http://channel.nationalgeographic.com/channel/content/kingdom-of-the-blue-whale-3302/blue-whale-facts/#/compare/length
    http://channel.nationalgeographic.com/channel/content/kingdom-of-the-blue-whale-3302/blue-whale-facts/#/compare/weight
    http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/006/cache/krill_601_600x450.jpg
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Buoyancy.svg/301px-Buoyancy.svg.png

     

    Share
  • கணக்குப் பார்த்துக் காதல் வந்ததா?

    தேமொழி

    படத்தில் உள்ள காதலர் தின சிறப்புப் படம் ஃபேஸ்புக் சமூகவலைதள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.  இந்தக் கணிதக் கேள்வியினைச் சமன் செய்தால் வரும் விடை “நான் உன்னைக் காதலிக்கிறேன்” (I Love You என்பதன் சங்கேதக் குறியான IOU, இங்கு ‘O’ என்பது இதயத்தைக் குறிக்கும் குறி) என்பதாகும்.

    ஆனால் வேறு வகையில் கணக்குப் பார்த்து வரும் இக்காலக் காதல்களைச் சாடுகிறார் கவிஞர் மீரா. சமுதாய மறுமலர்ச்சிக்கான புரட்சிக் கருத்துக்களை கவிதைகள் மூலம் சொல்லும் அவர், அன்றைய சங்ககாலக் குறுந்தொகை சொல்லும் காதலுடன் இக்காலக் காதலை ஒப்பிடுகிறார். அக்காலத்தில் முன்னறிமுகம் இல்லாத, எவ்வகையிலும் தொடர்பு இல்லாத தலைவனும்  தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு, அச்சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு,  செம்புலப் பெயல் நீர் போல அவர்கள் மனம் ஒன்றுடன் ஒன்று அன்பால் இணைந்து விடுகிறது.  ஆனால் இக்காலத்தில் காதலர்கள் கணக்கிட்டு அபாயம் குறைவான (calculated risk) வகையில் துணையைத் தேர்ந்தெடுத்து காதலிக்கிறார்கள் என்பதைக் கீழ் வரும் கவிதை மூலம் சுட்டிக் காட்டி நகைக்கிறார்.

    உனக்கும் எனக்கும்
    ஒரே ஊர் –
    வாசுதேவ நல்லூர் …
    நீயும் நானும்
    ஒரே மதம்…
    திருநெல்வேலிச்
    சைவப் பிள்ளைமார்
    வகுப்பும் கூட…
    உன்றன் தந்தையும்
    என்றன் தந்தையும்
    சொந்தக் காரர்கள்…
    மைத்துனன் மார்கள்.
    எனவே
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

    – கவிஞர் மீரா (மீ. ராசேந்திரன்), ஊசிகள் (1974) பக். 48

    இதுபோல கணக்குப் போட்டுத் துணை சேர்க்கும் சேவையையும் இக்கால இணையதளங்கள் செய்து வருகின்றன. இருவருக்கிடையே பேதங்கள் அதிகரிக்கும் பொழுது அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுகிறது. இவற்றினால் சண்டை சச்சரவுகள் எழுந்து, மனக் கசப்பு ஏற்பட்டு உறவு முறிகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு சரியானப் பொருத்தம் உள்ள துணைகளைத் தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்து வைப்பது இந்த சேவைகளைச் செய்யும் இணையதளங்களின் குறிக்கோள்.  இது போன்ற டேட்டிங் (dating) இணையதளங்கள் அதிகரித்து வருகின்றன, அவற்றை உபயோகப் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கோடிகளைத் தாண்டுகிறது.  இந்த முயற்சி காதலின் வெற்றிக்கு வழி வகுக்கிறதா? அதன் விளைவாக திருமணமுறிவுகளும் குறைகிறதா? என்பதனைப் பொறுத்திருந்துதான் அறிந்து கொள்ள முடியும்.

    இந்த தளங்கள் இயங்கும் வழி முறை, அவை பொருத்தம் செய்யும் வழி முறையின் அடிப்படையாவும் கணிதம்தான்.  இக்கணித முறையை ‘கிறிஸ்டியன் ரட்டர்‘ (Christian Rudder) என்பவர் விளக்கியுள்ளார். இவர் ‘ஒகேகுப்பிட்’ (OKCupid – dating websit) என்ற பொருத்தம் செய்யும் ஒரு சேவை நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.

    துணை தேடும் இருவரிடம் அவர்களைப் பற்றியக் கேள்விகள் பலக் கேட்கப்படுகிறது.  அவற்றில் இருந்து அவர்களுக்குப் பொதுவாக எவற்றில் ஆர்வம் உள்ளது, தங்கள் துணை எவ்வாறு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்ற தகவல்கள் சேகரிக்கப் படுகிறது. இப்பதில்களை ஆராய்ந்து சரியானப் பொருத்தம் உள்ள நபர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள் என்பதை நாமறிவோம்.  ஆனால், இந்த முடிவு எவ்வாறு எடுக்கபடுகிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

    கணிப்பொறி நிரலாக்கத்தின் விதிமுறை (Computational Matching Algorithm) இந்த பொருத்தம் செய்யும் கணித முறைக்கு அடிப்படை. பலரும் ‘அல்காரிதம்’ என்று அறியும் இந்தப் பதத்தின் பொருள் எளிமையானது.  முறையாக, படிப்படியாக கொடுக்கப்பட்ட விதிமுறைகளின் படி ஒரு கணக்கிற்கு விடை காண்பது என்பதுதான் அதன் விளக்கம்.  கூட்டல், பெருக்கல், வர்க்க மூலம் (addition, multiplication and square root) ஆகியவைதான்  இந்த நிரலியில் (program) அடிப்படைக் கணித முறைகள்.  தகவல்களும், புள்ளிவிவரங்களும் (data) பல கேள்விகள் வழியாக உறுப்பினர்களிடம் இருந்து கேட்டுப் பெறப்படுகிறது.

    இக்கேள்விகள் பொதுவாக பெரும்பாலும் உறுப்பினர்களின் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளாகவும், அவர்களது விருப்பங்கள், கொள்கைகள், ஆர்வங்கள் போன்ற பல பின்னணிகளையும் அறிந்து கொள்ளும் வகையில் தேர்வு செய்யப் பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக;
    உங்களுக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை உள்ளதா?
    ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவீர்கள்?
    திகில் திரைப் படங்கள் பார்க்கப் பிடிக்குமா?
    கடவுள் நம்பிக்கை உள்ளதா?
    எனக் கேள்விகள் மிகச் சாதாரண தகவல்கள் முதல் கொண்டு மிக முக்கியத் தகவல்கள் வரை யாவற்றையும் தெரிந்து கொள்ளுமாறு அமைக்கப் பட்டிருக்கும்.

    சில பதில்கள் ஒத்திருப்பது ஒருவகையில் நல்ல பொருத்தத்தை தேர்ந்தெடுக்க உதவும், காட்டாக இருவருக்கும் திகில் படங்கள் பார்ப்பதில் உள்ள விருப்பம் அவற்றில் ஒன்று.  ஆனால், நான்தான் முக்கிய நபராக இருக்க வேண்டும், என் விருப்பத்திற்கு ஏற்றவாறுதான் அனைத்தும் நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ள இருவர் பொருந்த மாட்டார்கள்.  அவர்களுக்குள் நாளும் பிரச்சனைதான் வரும். யாராவது ஒருவர் இதை ஒரு பொருட்டாகக் கருதாதவராக இருக்க வேண்டியது அவசியம். அதனால் மேலும் பல தகவல்களும் தேவைப்படுகிறது.

    இத்தகவல்கள் மூலம் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், அந்த பண்புகளுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது.  எனவே மூன்று வகைத் தகவல்கள் ஒரு நபரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவை,
    (1) ஒரு நபரைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள்
    (2) அவர் வாழ்க்கைத்துணையாக வரும் நபரிடம் எதிர்பார்க்கும் பண்புகள்
    (3) அவற்றிற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம்

    இந்த மூன்று வகை தகவல்களும் நிரலியில் உபயோகப் படுத்தப் பட்டு சரியானப் பொருத்தமுள்ள துணை தேர்வு செய்யப் படும்.
    இந்தக் கணித நிரலியின் உதவியுடன் இருவரது பொருத்தத்தை நிர்ணயிக்கும் முறையை, அதாவது நிரலி எவ்வாறு ஒரு ஒழுங்கு முறையுடன் படிப்படியாகத் தீர்வு காண்கிறது என்பதை ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம். விளக்குவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு இரண்டு கேள்விகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

    ஒன்று: ஒழுங்குமுறையைப் பற்றியக் கருத்து.  எதுவும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று விரும்புபவரா நீங்கள்? அடுத்தவரும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புபவரா?  இந்த ஒழுங்குமுறைக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?

    மற்றொரு கேள்வி: வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? இதைப் பற்றி உங்கள் துணையின் கருத்து என்னவாக இருக்க வேண்டும்?  இக்கேள்விக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவம் என்ன?

    இக்கேள்விகளை இருவரிடம் கேட்டு அவர்கள் அளித்த பதில்களைக் கொண்டு பொருத்தம் தெரிவு செய்யப்படுவதைக் கொடுக்கப்பட்டுள்ள படம் விளக்குகிறது. முதல் கட்டமாக, இக்கேள்விகளின் பதில்களை கணினி புரிந்தும் கொள்ளும் வகையில் அவை எண்களாக மாற்றப் பட்டு மதிப்பெண்கள் வழங்கப் படுகிறது. குறைவான முக்கியத்திற்கு குறைந்த மதிப்பெண்ணும், அதிக முக்கியத்துவம் என்பதற்கு அதிக மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக கணினி இரு சிறிய கணக்குகளை தீர்வு செய்கிறது.
    முதலில், இருவரது பதில்களும் ஒப்பிடப்பட்டு, அனைத்துக் கேள்விகளின் மதிப்பெண்களும் கூட்டப் பட்டு ஒரு சதவிகிதம் நிர்ணயிக்கப் படுகிறது.


    (1) ஒருவரின் பதில்கள் அடுத்தவருக்கு எவ்வளவு திருப்தியாக இருக்கிறது என்பதை இருவர் பதிலையும் ஒப்பிட்டு ஒருவரின் கண்ணோட்டத்தில் திருப்தியின் சதவிகிதம் அறியப்படுகிறது. படத்தில் பெண்ணின் கோணத்தில் குறிப்பிட்ட அந்த ஆண் 98% திருப்திகரமாகத் தெரிவார் என கணினி மதிப்பிடுகிறது.

    (2) அடுத்தவரின் கோணத்தினைக் காண முதலில் உள்ளவரின் பதில்களுடன் மற்றவரது பதில்களை ஒப்பிட்டு அவர் அடையப்போகும் திருப்தியின் அளவு கணினியால் கண்டறியப்படுகிறது.  படத்தில் ஆணின் எதிர்பார்ப்புகளின் படி  பெண் அவருக்கு 91% திருப்திகரமாகத் தோன்றுவார்.  படத்தில் அடுத்தவர் கோணத்தில் மற்றவர் பெரும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வாறு பொருதுவார் என கணக்கிட இருவரது சதவிகிதங்களும் பெருக்கப்பட்டு, எத்தனை கேள்விகள் கேட்கப் பட்டதோ அக்கேள்விகளின் எண்ணிக்கை அடிப்படையில் வர்க்க மூலம் கண்டுபிடிக்கபடுகிறது.  இவ்வாறு வரும் விடையே அவர்கள் இருவரின் பொருத்ததிற்கான மதிப்பெண்.  அதிக சதவிகிதம் இருவரும் சச்சரவின்றி அதிகம் ஒருவருக்கொருவர் ஒத்துப் போவார்கள் என்பதைக்  குறிக்கும்.  படத்தில் காட்டப் பட்டவர்களின் பொருத்தம் 94% அக இருக்கிறது. இது விடைகளின் பெருக்கலின்  சராசரி (geometric mean) மதிப்பாகும்.

    இங்கு உதாரணமாகக் காட்டப் பட்டிருப்பது இரு கேள்விகள் மட்டுமே.  ஆனால் கேள்விகள் அரசியல் மதம், நம்பிக்கைகள், திரைப்பட விருப்பங்கள் போன்று பற்பல கேள்விகளைக் கணக்கில் கொள்வதால் பொருத்தத்தின் துல்லியம் அதிகரிக்கும்.  அவ்வாறு பொருத்தம் அதிகமான இருவர் ஒருவருக்கொருவர் பரிந்துரைக்கப் படுகிறார்கள்.

    இவ்வாறு அறிமுகப் படுத்தப் படுபவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பழகும் பொழுது அவர்களுக்குள் காதல் பிறக்கிறதா?   அது திருமணத்தில் முடிகிறதா? அவ்வாறு அமையும் திருமணங்களும் மணமுறிவு கேட்டு நீதிமன்றங்களை நாடாமல் இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    சிந்தனைக்கு: பொருத்தம் பார்ப்பதன் அடிப்படையே மணமக்கள் ஒத்துபோகும் மணவாழ்க்கையை அமைத்துக் கொடுக்கத்தான். இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப் படுகிறது. அம்முறையில் கணினி நிர்ணயிப்பது போலவே, பெற்றோர்களும் ஆண் பெண் இருவரின் பின்புலத்தையும் கருத்தில் கொண்டு, முடிந்தவரை குடும்ப வாழ்வில் சச்சரவுகளைக் குறைக்கும் பண்புகளைத் தவிர்த்து பொருத்தம் செய்கின்றனர்.  கீழை நாடுகளில் ஜோசியம் பார்க்கும் வழக்கமும் உள்ளது.  இந்தியாவில் இது திருமணத்தை நிச்சயம் செய்வதிலும் பங்கு வகிக்கிறது. இதன் அடிப்படை, வானில் கோள்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமைந்திருக்கும் நேரத்தில் பிறந்தவர்களை அவர்கள் பிறந்த நட்சத்திரம், அது அமைந்த ராசியினைக் கொண்டு பிரித்து அவர்களுக்கு சில பிறவிக் குணங்கள் அமைந்திருக்கும் என அறிந்து கொள்வது.  அந்தக் குணங்களுக்கு ஒத்துப் போகும் குணங்கள் மற்றொரு  நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு இருக்கும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு ஜோசியப் பொருத்தமும் பார்க்கப் படுகிறது.  கணினி, பெற்றோர், ஜோசியம் எனப்  பொருத்தம் காணும் முறைப் பலவாறாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து வாழும் பண்புகள் உள்ள ஆணுக்கும் பெண்ணுக்குமே மனவாழ்க்கை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

        அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
        பண்பும் பயனும் அது. [குறள் 45]

    Sources:
    How OkCupid Sets You Up With The Perfect Match, Megan Rose Dickey, February 14, 2013, San Francisco Chronicle – http://www.sfgate.com/technology/businessinsider/article/How-OkCupid-Sets-You-Up-With-The-Perfect-Match-4278690.php

    “The math of online dating, the algorithm behind ‘hitting it off,” Christian Rudder, OkCupid co-founder of dating site OKCupid, TED-Ed – http://ed.ted.com/lessons/inside-okcupid-the-math-of-online-dating-christian-rudder

    How the Matching Algorithm Works, an example – http://www.nrmp.org/res_match/about_res/algorithms.html

    OkCupid – http://en.wikipedia.org/wiki/OkCupid

    Join the best dating site on Earth – http://www.okcupid.com/

    Picture Sources:

    TED-Ed, http://www.facebook.com/pages/Nerd-love-solve-for-i-9x-7i33x-7u-i3u/123506964330770

    Share
  • பிக்கோலிம் போர்

    தேமொழி

    முதலாம், இரண்டாம், மூன்றாம் பானிபட் போர் எனத் தொடர்ந்து நடந்த பானிபட் போர்களையும், போரின் கொடுமை கண்டு மனம் மாறி அசோகரை புத்த மதத்தை ஆதரிக்கச் செய்த கலிங்கப் போர் பற்றியும் இந்திய வரலாற்றுப் பாடத்தில் படிக்காத இந்தியப் பள்ளி மாணவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றிப் படித்ததுண்டா?

    படித்திருக்காவிட்டால் கவலை வேண்டாம். உங்கள் தேச பக்தி, பொது அறிவு எதிலும் குறை இருப்பதாக வருந்தவும் தேவை இல்லை.  காரணம், அப்படி  ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது.

    கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர்  நடந்ததாக ஒரு கட்டுக் கதை.  1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது.   இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது.  உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது.  இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, சமீபத்தில் அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை.  தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict ).

    அதிலும் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை சிறந்த கட்டுரை என்ற பாராட்டுப் பெற்றிருக்கிறது.  அனைத்திற்கும் மேலாக விக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரை (featured article) வரிசையில் இடம் பெற வேண்டும் என்ற முயற்சி  எடுக்கப்பட்டு, பரிந்துரையையும் செய்யப்பட்டு அது நிறைவேறாமல் போயிருக்கிறது. இது போன்ற மோசடிப்  பதிவுகள் இந்தப் பதிவினைவிடவும் அதிக காலம் வலம்  வந்திருக்கிறது.   ஜூலியஸ் சீசரைக் கொன்றவன் என்று ஒரு கற்பனை கொலைகாரனின் கதை எட்டு ஆண்டுகளும், சீன நகர் ஒன்றின் நகராட்சித் தலைவர் என்று ஒரு சீன மாணவன் தனது பெயரையே வைத்து எழுதி வைத்த பதிவு ஒன்று ஏழு ஆண்டுகளும் விக்கியில் இடம் பெற்று பின்பு உண்மை அறிந்து நீக்கப் பட்டிருக்கிறது.

    மோசடிக் கட்டுரைக்காக கொடுக்கபட்டிருந்த படங்கள்:

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg

    இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது; ஒரு விக்கி கட்டுரை தகுந்த ஆதாரங்கள் தரத் தவறினால், விக்கியின் மற்ற கட்டுரைகளுக்கு அக்கட்டுரை வழி தொடர்பு கொடுக்கப் படாவிட்டால், இணையத்திலும் தேடும் செய்தி நம்பிக்கைக்குரிய தளங்களில் கொடுக்கப் படாவிட்டால், அதற்கு நாம் முக்கியம் கொடுக்கக் கூடாது.  அதனை ஆதாரமாக உபயோகிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    சிந்தனைக்கு:  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையல்ல தீர விசாரிப்பதே மெய் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  கற்பனைத்திறன் வாய்ந்த ஒருவரால் நடந்த வரலாறு என ஒரு கட்டுக் கதை புனைந்து மோசடி செய்ய இயலுமானால், காலம் காலமாக நாம் கேட்டு வளரும் வரலாற்று  மற்றும்  இதிகாசக் கதைகளை எவ்வளவு தூரம் நம்புவது என்பது குழப்பத்தைத் தருகிறது. பொதுவாகவே எந்த ஒரு வரலாற்று உண்மையும் வெற்றி பெற்றவர் கண்ணோட்டத்தில்தான் வழங்கப் படுகிறது என்பதும் நாம் அறிந்ததே.  புரட்சியில் தோல்வி அடைந்தால் தோற்றவரை தீவிரவாதி அடக்கப்பட்டார், சர்வாதிகாரி ஒடுக்கப்பட்டார் என்று நமக்கு அறிவிக்கப் படுவதும், புரட்சியில் வெற்றி பெற்றவரை  நாட்டிற்காக உழைத்த தன்னலமற்ற தியாகி வரிசையில் இடம் பெறச் செய்வதும் நம் வாழ் நாளிலேயே நாம் பார்ப்பதுதான்.

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    செய்தி ஆதாரம்:

    http://www.dailydot.com/news/wikipedia-bicholim-conflict-hoax-deleted/

    http://www.dailymail.co.uk/news/article-2257482/The-war-Wikipedia-fooled-years-Bicholim-Conflict-article-elaborate-4-500-word-hoax.html?ito=feeds-newsxml

    படம் உதவி:

    http://upload.wikimedia.org/wikipedia/commons/6/63/Wikipedia-logo.png

    http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/War-elephant-illustrated-london-news.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24759000005DC-508_306x423.jpg

    http://i.dailymail.co.uk/i/pix/2013/01/05/article-0-16C24751000005DC-431_306x423.jpg

    Share
  • ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சி

     

    தேமொழி

     

    னைத்து மொழிகளும் காலப் போக்கில் மாறுதலடையும். அவ்வாறு மாறுதலடையும் பொழுது, ஆதி காலத்தில் பேசப்பட்ட மொழிக்கும் தற்காலத்தில் பேசப்படும் அதே மொழிக்கும் இடையே அதிக வேறுபாடுகள் இருக்கும். இவ்வாறு மிகக் குறைந்த ஒற்றுமை உள்ள, காலத்தால் முந்திய படைப்புகளை அறிஞர்கள் பதம் பிரித்து பொருள் சொன்னால்தான் நமக்கே நம் மொழியைப் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. நம் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்திற்கும் இதே விதி பொருந்தும்.

     

    English - Evolution

     

    ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்க முற்பட்டு, அதற்குதவியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு வசனங்களுக்கும் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் கற்பனை செய்வோம். அவற்றை கூறுபவர்கள் யாராக இருக்கும், அவர்களுடைய நடை, உடை, பாவனை, கலாச்சாரம் எப்படி இருக்கும் என்று நம் கற்பனையை விரிவாக்குவோம்.

    காட்சி ஒன்று:  “They gave us a hearty welcome”

    காட்சி இரண்டு:  “They gave us a cordial reception”

    அந்த கற்பனையில் எழும் காட்சிகள் எவ்வாறு வேறுபட்டு காண்கிறது என்பதற்கு ஆங்கில மொழியில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி மாறுதல்கள் சான்றாக அமையும். வார்த்தைகளை உபயோகப்படுத்திய விதத்தை வைத்து, அவற்றைப் பேசியவர்களின் சமூக சூழ்நிலையை, உருவத்தை, உடைகளை, உணர்வுகளைப்பற்றி உங்களுக்கு ஓர் கற்பனை உருவாகி இருக்கலாம். அதற்கு அந்த வார்த்தைகள் உதவி செய்திருக்கும். இதை மேலும் ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் ஏன் என்று நாம் தெளிவாகப் புரிந்து கொள்வோம்.

     

    பொது ஆண்டு 400 இல் (கி.பி. 400) இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளின் பகுதிகள் ரோமானியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இதனால் விளைந்த ஒரு நன்மை என்னவெனில்; இந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு ஐரோப்பாவின் வடபகுதியில் வாழ்ந்த, நாகரீகமற்ற இனமாகக் கருதப்பட்ட சாக்ஸ்சன் (Saxons) என்ற இனந்தினரிடம் இருந்து பாதுகாப்பு கிடைத்தது. சாக்ஸ்சன் இனத்தவர் இன்றைய ஜெர்மனி நாட்டுப் பகுதியில் வசித்த பழங்குடி இனத்தவர்.

    ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்த பொழுது, அவர்கள் இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் பகுதிகளை ஆள்வதைக் கைவிட்டனர், பின் வாங்கினர். இதன் விளைவாக ஜெர்மானியர், ஆங்கில்ஸ், சாக்ஸ்சன், ஃப்ரீஷியன்(Frisian) போன்ற வட ஐரோப்பிய இனத்தைச் சார்ந்த மக்கள் இங்கிலாந்து தீவுகளை நோக்கிப் படையெடுத்தனர். அங்கிருந்தவர்களை வீழ்த்தி அத்தீவுகளில் தங்கள் அரசை அமைத்தனர்.

    பிறகு பலநூற்றாண்டுகளாக இவர்கள் அந்த மண்ணில் ஆட்சி செலுத்தினர். இவர்களது ஜெர்மானிக் மொழியான ‘ஆங்கிலோ-சாக்ஸ்சன்’ (Anglo-Saxon) என அழைக்கப்பட்ட மொழி பரவலாக நடைமுறை வாழ்க்கையில் உபயோகப்படுத்தப்பட்டது. இந்த மொழியை மொழியியல் வல்லுனர்கள் “பழமையான ஆங்கிலம்” (Old English) என்று குறிப்பிடுவார்கள்.

    தற்கால ஆங்கிலம் பேசுபவர்களுக்கு ‘ஓல்ட் இங்கிலீஷ்’ என்பது முற்றிலும் வேறுபட்ட மொழியாகத் தோன்றக்கூடும். ஆனால் உன்னிப்பாக ஆராய்ந்தால் நமக்கு நன்கு அறிமுகமான சில வார்த்தைகளும் ஆங்காங்கே புலப்படும். உதாரணமாக, படத்தில் காண்பது போல, ஓல்ட் இங்கிலீஷ்ஷில் சில சொற்களின் எழுத்துக்கோர்வையை தற்கால உச்சரிப்பிற்கு ஏற்றவாறு மாற்றினால் பொதுவான வழக்கத்தில் உள்ள சில ஆங்கில சொற்கள் தெரிய வரும்.

     

    Old Engli

     

    வ்வாறு சில நூற்றாண்டுகள் அந்நாட்டு மக்கள் பழைய ஆங்கில வழக்கில் பேசி வந்தார்கள். ஏழாம் நூற்றாண்டில் வைக்கிங்களின் (Vikings) படையெடுப்பு நிகழ்ந்தது. இவர்கள் நார்ஸ்மென் (Norsemen) என்றும் அழைக்கப் படுவார்கள். அப்போரின் காரணமாக விளைந்த ஒப்பந்தத்தின்படி போர் ஒரு முடிவக்கு வந்தது. உடன்படிக்கையின் விளைவாக இங்கிலாந்து தீவுகள் இரு சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தென்பகுதி சாக்ஸ்சன்களுக்கும் வடபகுதி டேன்ஸ் (Danes) மக்களுக்கும் என முடிவானது. இந்த டேன்ஸ் இனத்தினர் தற்கால டென்மார்க் (Denmark) பகுதியில் வசித்து வந்த இனத்தவர். இவர்கள் ‘ஓல்ட் நார்ஸ்’ (Old Norse) என்ற மொழியினைப் பேசி வந்தார்கள். ஓல்ட் நார்ஸ் மொழி வடஜெர்மானிய மொழி பிரிவிற்குள் வகைப் படுத்தப்படுகிறது.

    சாக்ஸ்சன் இனத்தவரும், டேன்ஸ் இனத்தவரும் காலப்போக்கில் கலந்துறவாடிய பிறகு, அவர்களது ஓல்ட் இங்கிலீஷ் மொழியும் ஓல்ட் நார்ஸ் மொழியும் இணைந்துவிட்டன. பல ஓல்ட் நார்ஸ் வார்த்தைகள், உதாரணமாக, Freckle, Leg, Skin, Root, Want போன்ற வார்த்தைகள் இன்றும் ஆங்கில மொழியின் உபயோகத்தில் இருக்கின்றன.

     

    முந்நூறு ஆண்டுகள் கழித்து, பொது ஆண்டு 1066 இல் இங்கிலாந்து தீவுகளில் மீண்டும் போர் நிகழ்ந்தது. இம்முறை ‘நார்மன்’ (Normans) இன மக்கள் போரில் வெற்றி பெற்றார்கள். இந்தப் போர் ‘நார்மன் கான்குவெஸ்ட்’ (Norman conquest of England) என்று வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. நார்மண்டியின் இரண்டாம் வில்லியம், இங்கிலாந்தின் இரண்டாம் ஹெரால்ட் மீது நிகழ்த்திய வாரிசுரிமைப் போரில் இங்கிலாந்து மன்னர் வீழ்த்தப் பட்டு ஆட்சி கைமாறியது.

    இந்த நார்மன் இனத்தவரும் வைக்கிங் இனத்தவர்கள்தான். ஆனால் காலப்போக்கில் தங்கள் வைக்கிங் அடையாளங்களையும், கலாச்சாரத்தையும், மொழியையும் கைவிட்டு ஃபிரான்ஸ் நாட்டில் வசித்தவர்கள். பின்னர் ஃபிரான்ஸ் மக்களின் கலாச்சாரத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டவர்கள். நார்மன் கான்குவெஸ்ட் போருக்குப் பிறகு மூன்று நூற்றாண்டுகள் இங்கிலாந்து நாடு ஃபிரெஞ்ச் மன்னர்களின் கட்டுபாட்டிற்கு கீழ் வந்தது. ஃபிரெஞ்ச் மொழியும் இங்கிலாந்தின் ஆட்சி மொழி நிலைக்கு உயர்த்தப்பட்டது.

    இதனால் இங்கிலாந்தில் சமூக உயர்வு தாழ்வு நிலை ஏற்பட்டது. ஃபிரெஞ்ச் மொழி பேசும் அரசகுலம், பிரபுக்கள் போன்ற உயர்குல ஆட்சியாளர்கள் என்று ஒரு பிரிவும்; ஓல்ட் இங்கிலீஷ் பேசும், உழவுத் தொழில் புரியும் வேளாண் குடிமக்கள் என மற்றொரு பிரிவும் தோன்றியது. ஃபிரெஞ்ச் ஆட்சியில் கத்தோலிக்க குருமார்கள் இங்கிலாந்திற்கு வரவழைக்கப் பட்டு ஆதரிக்கபட்டர்கள். இந்தக் கத்தோலிக்க குருமார்கள் தங்கள் பங்கிற்கு லத்தீன் மொழியை இங்கிலாந்தில் நுழைத்தார்கள்.

    இது போன்ற பல மொழிகளின் கலப்பின் காரணமாக ஆங்கிலம் தன் தன்மையை மாற்றி வளைந்து கொடுத்து, பிறமொழிச் சொற்களையும் காலத்திற்கேற்றவாறு தன்னகத்தே இணைத்துக் கொண்டு வளர்ந்து செழித்தது. ஆங்கிலத்தின் ஆயிரக்கணக்கான புதிய சொற்கள்; அரசாங்கம், சட்டம், பெருமை மிகு உயர்குடி மக்களின் பிரபுத்துவம் (aristocracy) போன்றவற்றைக் குறிக்கும் சொற்கள், ஃபிரெஞ்ச் மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்து எடுத்து கையாளப்பட்டன.

    இந்த மொழிக்கலப்பின் காரணமாக ஆங்கிலத்தில் தற்காலத்தில் பயன் படுத்தப்படும் அந்நிய மொழிச் சொற்களுக்கான உதாரணங்கள்: Council, Marriage, Damage, Sovereign, Govern, Parliament ஆகியவை. இவ்வாறு மொழி விரிவடைந்ததும், ஆங்கில மொழி பேசும் மக்கள் தங்களை உயர்நிலையில் உள்ளவர்களாக காட்டிக்கொள்ள விரும்பி ஓல்ட் இங்கிலீஷ் சொற்களைத் தவிர்த்தார்கள். இதனால் உழைக்கும் வர்கத்தில் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டார்கள். இவர்கள் பிரபுத்துவ மேல்குடி மக்கள் உபயோகித்த ஃபிரெஞ்ச் மற்றும் லத்தீன் மொழிகளின் சொற்களை ஆங்கிலத்தில் உரையாடும் பொழுது அதிகம் உபயோகித்தார்கள்.

     

    ப்பொழுது முதலில் கற்பனை செய்த காட்சிகளை மீள்பார்வை செய்வோம்.

    காட்சி ஒன்று:   “They gave us a hearty welcome” – இந்த வாக்கியத்தைக் கேட்கும் பொழுது சாதாரண மக்கள் உங்கள் கற்பனையில் எழுந்திருக்கலாம்.
    காட்சி இரண்டு:  “They gave us a cordial reception” – இந்த வாக்கியத்தைக் கேட்கும் பொழுது நாகரீகத்தில் மேம்பட்ட மக்கள் உங்கள் கற்பனையில் எழுந்திருக்கலாம்.

     

     

    கராதியின்படி ஒரே பொருள் கொண்ட சொற்கள் இது போன்று மாறுபட்ட உருவகங்களை மனதில் தோற்றுவிக்க என்ன காரணம்?

    hearty, welcome போன்ற சொற்கள் ஆங்கிலோ-சாக்ஸ்சன் சொற்களாகும்.
    cordial, reception போன்ற சொற்கள் ஃபிரெஞ்ச் மொழியில் இருந்து எடுத்து ஆங்கிலத்தில் உபயோகப் படுத்தப்படும் சொற்களாகும்.

    அதிகாரம், உயர் பண்புகள் போன்ற பொருள் தரும் சொற்கள் ஃபிரெஞ்ச் மொழியில் இருந்து தோன்றியவை. உழைப்பாளிகள், சாதாரண மக்கள் போன்றவர்களின் பண்புகளைக் குறிப்பது போன்ற பொருள் தரும் சொற்கள் ஆங்கிலோ-சாக்ஸ்சன் மொழியில் தோன்றியவை.

    ஆங்கில மொழியில் நிகழ்ந்த இந்த பரிணாம வளர்ச்சி வரலாற்றை அறியாதவர்களும் கூட, ஆங்கிலச் சொற்கள் உபயோகப்படுத்தப் படும் சூழ்நிலைக்கேற்ப இந்த வேறுபாடை அடிமனதில் அவர்கள் அறியாமல் வளர்த்துக் கொள்வார்கள்.

    நாம் சொல்லும், பேசும் சொற்களின் வழியேதான் வரலாறு வாழ்கிறது.

     

    சிந்தனைக்கு: இது போன்ற மொழி வளர்ச்சியை தமிழ் மொழி வளர்ச்சியுடன் ஒப்பிட்டாலும் இந்த உண்மை பொருந்தும்.
    முன்னர் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து தமிழ் எழுத்துக்களில் எழுதப்படுவதை ‘மணிப்ரவாளம்’ (தமிழில் ‘மணிமிடை பவளம்’) என்று குறிப்பிடுவார்கள். தற்காலத் தலைமுறையினர் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து ‘தங்லீஷ்’ என்று (அங்கீகரிக்கபடாத ஆனால் வழக்கில் உள்ள ஒரு சொல்) ‘கொலைவெறியுடன்’ பேசி வருகிறோம்.

    அக்கால ஆங்கிலேயரைப் போலவே, எக்காலத்திலும் தமிழரிடையே வேற்று மொழி வார்த்தைகளை அதிகம் உபயோகித்தால் நாகரீகத்தில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணமும் நடைமுறையில் உள்ளது.

     

    வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திரு நாடு.

     

     

    ஆதாரம், படங்கள் உதவி: Ted ED: How did English evolve?

     

    Share
  • உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணும் வழி

     

    தேமொழி

     

    மனித இனத்தினர் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதைப் பற்றிச் சில தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர் என்கிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ். நெதர்லாந்தில் இருக்கும் ‘டச்சு’ ஆராய்ச்சி நிறுவனமான ‘ப்ளாண்ட் லாபில்’ தோட்டயியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ் (Gertjan Meeuws, Horticultural Engineer at Dutch based group called PlantLab, Netherlands).

     

    Gertjan Meeuws

     

    பல்கிப் பெருகி வரும் மனித இனத்திற்குத் தேவையான உணவுத் தேவைகளைத் தற்பொழுது இருக்கும் விவசாயத் தொழில் நுட்பத்தை வைத்தே சமாளித்துவிட முடியும் என்பது தவறான கருத்துகளில் முதன்மையானது என்கிறார் இந்த ஆராச்சியாளர்.

    உலக மக்கட்தொகை இப்பொழுது ஏழு பில்லியனில் இருந்து ஒன்பது பில்லியன்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் பெரும்பான்மையான மக்கள் நகரங்களில் வசித்து வருகிறார்கள். மக்கள் அனைவர்க்கும் தேவையான உணவை உற்பத்தி செய்ய மிக முக்யமாகத் தேவைப்படுவது நீர். எதிர்காலத்தில் பெட்ரோலை விட நீர்தான் ஒரு நாட்டின் முக்கிய சொத்து எனக் கருதப்படும் நிலை வந்துவிடும்.

    அத்துடன் அனைவரது உணவுத் தேவையையும் நிறைவு செய்வதற்காக விவசாயத்திற்கு பொருத்தமற்ற நிலங்களையும் விளைநிலமாக மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது போன்ற ஒவ்வாத வளரும் சூழ்நிலைகளில் உள்ள விளைநிலங்களில் வளரும் தாவரங்கள் பூச்சிகளினாலும், நோய்களினாலும் எளிதில் பாதிக்கப்படும். இதனை நிவர்த்தி செய்ய நாமும் வேதிப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட உரங்களையும், பூச்சிக்கொல்லி இரசாயன மருந்துகளையும் உபயோகிக்க வேண்டிவரும். மேலும், இவ்வாறு பயிர் செய்த உணவை தேவையான இடத்திற்கு கொண்டுசென்று சேர்க்கவும், மீண்டும் விளைநிலங்களுக்கு கொள்முதல் செய்ய வரும் செய்கைகளே 35 சதவிகித போக்குவரத்து ஊர்திகளின் வேலையாகவும் இருக்கும். இவை போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு நாம் உணவு உற்பத்தி முறையில் பலப் புதுமைகள் செய்யவேண்டும்.

     

    விவசாயத்தைப் பற்றிய மற்றொரு தவறான கருத்து: பயிர் வளர்ப்பு இயற்கை முறையைச் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுவது. இக்கருத்தும் உணமையல்ல என்பது ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ் அவர்களின் கருத்து.

    இயற்கையிலோ அல்லது சிறந்த சோதனைக்கூட சூழ்நிலையிலோ தாவரங்கள் தங்களுக்குத் தேவையாக 9% திறனை மட்டுமே உபயோகித்துக் கொள்கின்றன. தாவரங்கள் எந்த சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டு உயிர் வாழும் தன்மை வாய்ந்தவை. தாவரங்களின் இந்தப் பண்பினை நமக்கு சாதகமாக்கி விவசாயத்தில் புதுமைகளை நாம் புகுத்தலாம்.

     

    தாவரம் நன்கு வளர நல்ல சூரிய ஒளி தேவை என்பதும் மற்றொரு தவறான கருத்து என்கிறார் ஜெர்ட்ஜன் மீயுவ்ஸ்.

    தாவரங்கள் சூரிய ஒளிக்கற்றையில் உள்ள சிவப்பு, நீலம் மற்றும் ஊதா வண்ண (Purple) ஒளிக்கதிர்களை மட்டுமே உபயோகிக்கின்றன. இதனால் செயற்கைமுறையில் கட்டிடங்களின் உட்புறம் விவசாயம் செய்து உணவு உற்பத்தியைப் பெருக்க நம்மால் முடியும். நகரங்களில் ஊர்திகளை நிறுத்துவதற்கு கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் போன்றவற்றில் பயிர் செய்யத் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி ஊதாக்கதிர்களையும், குறைந்த அளவு நீரையும் பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்க முடியம். பயிர் செய்ய சூரிய ஒளியை உபயோகிக்கத் தேவையில்லை என்ற காரணத்தால் அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பயன்படுத்துவது ஏதுவாகிறது.

    ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு உணவாக 200 கிராம் காய் மற்றும் பழங்களை உற்பத்தி செய்ய ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவு போதுமானது. எனவே ஒரு லட்சம் மக்களுக்கு தேவையான தாவரங்களைப் பயிரிட நூறு மீட்டர் நீள அகலமுள்ள, பத்து அடுக்குகளைக் கொண்ட அடுக்கு மாடிக்கட்டிடம் போதுமானது.

    plant lab production unit

    indoor farming

    Plant lab product

     

    இந்த முறையைப் பயன்படுத்தினால், தாவரங்களின் மரபணுக்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யத் தேவையில்லாமலே, சுத்தமான சுகாதாரமான முறையில், ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த தாவரங்களைக் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி, இரசாயன பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல், குறைந்த செலவில் விளைவிக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த பயிராக வளர்வதால் நோயை எதிர்க்க மருந்துகள் தேவையில்லை. தோட்டங்களில் அல்லது வயல்வெளிகளில் பயிரிடுவதைவிட 40% அதிக மகசூலை 90% குறைந்த அளவு நீரை உபயோகித்துப் பெற முடியும். அதனால், இந்த விவசாய முறை, பயிரிட நிறைய நிலப்பரப்பும், நீரும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் தேவை என்பது எவ்வளவு தவறான கருத்து என்பதையம் புலப்படுத்துகிறது.

     

    indoor farming benefits

     

    எந்த ஒரு தாவரத்தையும் இந்த உட்புறப் பண்ணை முறையைப் பயன்படுத்தி பயிரிட முடியும். தக்காளி, ஸ்டராபெர்ரி, கீரைவகைகள், வெள்ளரிக்காய், அவரை, மருத்துவத்திற்கான மூலிகைகள், என எந்தப் பயிரையும் பயிரிடலாம். இதனால், தாவரங்கள் நன்கு வளரக்கூடிய தட்பவெப்ப நிலை உள்ள இடங்களில் பயிரடப்பட்டு, அதிக தொலைவில் வசிப்பவர்களுக்கு ஊர்திகளில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் தவறானக் கருத்தாகிறது. ஆனால் தற்பொழுது அதிக தொலைவு பயணத்திற்கு ஏற்றவாறு காய்கனிகள் அவைகள் பக்குவம் பெரும் முன்னரே பறிக்கப்பட்டு அவை அழுகி வீணாகும் நிலை குறைக்கப்படுகிறது. சரியான தருணத்தில் அறுவடை செய்யாத காய்கனிகள் சுவையற்றும் இருக்கின்றன.

    தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்திப் பயிரிடப்படும் உட்புறப் பண்ணை முறை இந்த நிலையை மாற்றியமைக்கும். நுகர்வோர்கள் இருக்கும் இடத்திலேயே பயிரிட்டு, பக்குவமான நேரத்தில் தேவையானவற்றை மட்டும் பறித்துப் பயன்படுத்தலாம், இதனால் வீணாவதும் தவிர்க்கப்படும்.பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு தங்கள் தேவைக்கேற்ப சுவையான காய்கனிகளை உடனே பறித்துப் பயன்படுத்தினார்களோ, அது போலவே நாமும் பயன் பெறலாம். தட்பவெட்பத்தைக் கட்டுப்படுத்திப் பயிரிடப்படும் உட்புறப் பண்ணை முறையினால் எக்காலத்திலும், இரவோ பகலோ, கோடையோ மழைக்காலமோ எந்தக் காலத்திலும் பயிரிடலாம். அது போலவே எந்த ஒரு இடத்திலும், துருவப் பிரதேசம், பாலைவனம், பெரிய நகரங்கள் என எந்த இடங்களிலும் பண்ணைகள் அமைக்கப்பட்டு பயிரிடமுடியும்.

     

    பொதுவாக விவசாயத்தைப் பொறுத்தவரை உள்ள மற்றொரு தவறான கருத்து பெரிய அளவில் பயிரிடப்பட வேண்டும் என்பது. இந்த உட்புறப் பண்ணை முறையினால் அந்தக்கருத்தும் பொய்யாகிறது.

    உட்புறப் பண்ணை முறையில் பயிரிட சிறிய இடங்கள் கூடப் போதுமானது. எனவே, காய்கறி அங்காடிகளின் ஒரு பகுதியிலோ, உணவகங்களின் ஒரு பகுதிகளிலோ, ஏன் நமது வீட்டின் சிறிய சமயலறைகளிலோக் கூட நம் தேவைக்கேற்ப பயிரிட முடியும். நமக்குத் தேவையான தக்காளிகளை நம் சமயலறையிலேயே அலமாரியைத் திறந்தும் பறித்துக் கொள்ளலாம். உன் சமையலறையில் நான் கீரையா? புதினாவா? என்றும் பாடலாம்.

     

    அனைத்தையும்விடத் பெருந்தவறான கருத்து இதுபோன்ற முறையில் பயிரிடத் தயாராவதற்குப் பல்லாண்டுகள் ஆகும் என்பது. உட்புறப் பண்ணை முறையில் பயிரிடுவதை இன்றே எந்த நாட்டிலும், இந்தியா உட்பட, தொடங்க முடியும். அதிக மூலதனம் தேவை இல்லை.

     

    சிந்தனைக்கு: முதற்படியாக சென்னை மாநகரின் கடற்கரையை ஒட்டி (நீரில்லாவிட்டால் கடற்கரை ஊற்று நீரைக்கொண்டு பயிரிடும் வகையில்) அரசு ஒரு அடுக்கு மாடியைக் கட்டி உட்புறப் பண்ணையை அமைக்கலாம். அதனை ஆர்வமுள்ளவர்களுக்கு குத்தகைக்கு விட்டு வருமானமும் ஈட்டலாம். வெளிப்புறம் காய்கனிகளை விற்க அங்காடியும் துவங்கலாம். அது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முதல் கட்டப் பரிசோதனை நடவடிக்கையாக இருக்கும்.

     

    “பண்ணையெல்லாம் பொன் கொழிக்கச் செய்திடுவோம், அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்”

     

    ஆதாரம்: TEDxBrainport 2012 – Indoor planting
    படங்கள் உதவி: PlantLab, Netherlands
    காணொளி சுட்டி: http://www.youtube.com/watch?v=Ct3dK2_ksvk

     

    Share
  • திருமண வாழ்க்கை ஆண்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்குமா?

     

    தேமொழி

     

    திருமணம் செய்து கொண்ட ஆண்கள் நீண்ட ஆயுளை உடையவர்களாகவும், ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு ஆதாரமாகப் பல புள்ளிவிவரங்களும்(data) கொடுக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சி முடிவினைக் கேட்ட சிலர், “என்ன செய்வது? என் வாழ்க்கைத் துணையுடன் ஒரு நாளைக் கழிப்பதே ஒரு மாமாங்கம் போலத் தோன்றுகிறது. இது போன்ற எண்ணம் உள்ள மணமானவர்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்று இருப்பார்கள் போலிருக்கிறது”, என்று கேலி செய்து வேடிக்கை பேச்சும் பேசுவது உண்டு. 

     

     

    தற்கால உலகில், திருமண வாழ்க்கைக்கு மதிப்பு குறைந்து வரும் கால கட்டத்தில், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறையினை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை ஆதாரமாகக் காட்டி, இளைஞர்களுக்கு திருமண வாழ்க்கையின் மேன்மையை எடுத்துச் சொல்லி போதிக்க முற்படுவார்கள்.

    ஆனால், இந்த ஆராய்ச்சியின் முடிவு சரியா? இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் புள்ளிவிவரங்களை அலசி சரியான முடிவை எடுத்தார்களா? என்ற சந்தேகக் கேள்விகள் பொதுவாக ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்களுக்கு எழும். ஏனெனில், சற்று கவனம் இல்லாமல் ஆராய்ந்தால் புள்ளிவிவரங்களைக் கொண்டு தவறான முடிவுகளையும் எடுக்க வாய்ப்புள்ளது.  

    அதற்கு  புள்ளியியல்(statistics) பயில்பவர்களுக்கு உதாரணப் பாடமாக சொல்லிக்கொடுக்கப் படுவதை முதலில் பார்ப்போம். இந்த உதாரணம் மிகவும் பிரபலமான ஒன்று. ஐஸ்க்ரீம் விற்பனை அதிகரிக்கும் நாட்களில் மக்கள் பலர் நீரில் மூழ்கி மரணமடைகிறார்கள் என்பதனைக் குறிக்கும் புள்ளிவிவரங்கள் உள்ளன. இதனை மேலோட்டமாகப்  பார்த்து “அதிக ஐஸ்க்ரீம் சாப்பிடுவது நீரில் மூழ்கி மரணமடைவதற்கு காரணமாகிறது” என்ற கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டு முடிவெடுப்பது தவறு.

    இதனை ஆராய்ச்சியாளர்கள் கூறும் மொழியினை உபயோகித்திச் சொல்வோமானால், “ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கும் நீரில் முழுவதற்கும் இடையே தொடர்பு/’இடைத்தொடர்பு’ (correlation) உள்ளது. இதனால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதுதான் நீரில் மூழ்கி மரணமடைவதற்கு காரணம் என்ற ‘காரண காரியத் தொர்பினை’ (causality) முடிவாகக்  கொள்ளுவது அபத்தமாக முடியும்.”

    இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும்; அதாவது ஐஸ்க்ரீம் விற்பனை மற்றும் நீரில் மூழ்குதல், இவற்றிக்கு வேறு ஒரு ‘பொதுவான காரணம்’ (underlying factor)  உள்ளது.  இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் உள்ள பொதுவான காரணம்; நல்ல தட்பவெட்ப நிலை உள்ள கோடை காலம்.  மாணவர்கள் விடுமுறையில் கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று உல்லாசமாக நீந்தி விளையாடுவது கோடை காலத்தில்தான். அதுபோன்றே, இந்த இடங்களில் கூடும் கூட்டத்தினரின் தேவைக்கேற்ப வெயில் காலத்தில் ஐஸ்க்ரீம்  விற்பனையும் அதிகரிக்கும். இது இயல்பான ஒன்று.  இந்நாட்களில் அதிக மக்கள் நீரில் விளையாடுவதால் நீரில் மூழ்கி மரணமடையும் நிகழ்வுகளும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப்  பொதுவான காரணத்தைக் கருத்தில் கொள்ளாமல் முடிவுக்கு வருவது தவறாக அமையும்.

    இரண்டு நிகழ்வுகளுக்கிடையில் தொடர்பு இருப்பதாகத் தெரிந்தால், இது நிகழ இதுதான் காரணம் என்று உடனே அவசர முடிவுக்கு வருவது, ஆராயாமல் கொள்ளும் தவறான முடிவாகும். 

     

    ப்பொழுது நாம் அறிந்து கொள்ள விரும்பும், திருமணத்திற்கும் ஆண்களின்  நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கும் உள்ளத் தொடர்பைக்  கண்டறிந்த ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி மேலும் விளக்கமாக அறிந்து கொள்வோம்.  

    உண்மையில் என்ன நிகழ்கிறது என்றால், நல்ல கல்வியும் உடல் ஆரோக்கியமும் உள்ள செல்வந்தர்களால் அதிக நாள் வாழ முடிகிறது.  அவர்களுக்கு வாழ்க்கைத்துணை கிடைப்பதும் இக்காரணங்களால் சுலபமாகிவிடுகிறது. ஆண்களுக்கு மட்டுமின்றி, இதே காரணங்கள் பெண்களுக்குத் திருமண வாழ்க்கை அமைவதிலும் உதவி புரிகின்றன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

    இதற்கு மாறாக கல்வித் தகுதி குறைவாகவோ, அதனால் வருமானம் குறைவாகவோ இருப்பவர்களுக்கு இதே காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிறது.  அத்துடன் நோய் ஏற்படும்பொழுது அதற்கு மருத்துவம் பார்ப்பதோ,ஆரோக்கிய உணவு, வாழ்க்கைமுறைகளைக் கடைபிடித்து உடலைப் பேணிக் காப்பதோ இயலாது போகிறது. இக்காரணங்களினால் அதிக நாட்கள் அவர்களால் உயிர் வாழ முடிவதில்லை. 

    நீண்ட ஆயுளைப் பெறும் வாய்ப்புள்ள சமூக சூழ்நிலை உள்ளவர்களுக்கு விரைவில் திருமண வாழ்க்கை அமைவதும், அத்தகுதி அற்றவர்களுக்கு திருமணம் நிகழ தடைகள் ஏற்படுவதுமே சரியான காரணம் என்று பின்னாளில் மேலும் பல ஆராய்ச்சி முடிவுகள் உணர்த்தின. அதனால் மணவாழ்க்கை நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்பது சரியல்ல.  நிம்மதியற்ற திருமண வாழ்க்கை நேர் மாறான விளைவைத் தருவதையும் நாம் அறிவோம்.  

     

    correlation

     

    து போன்று மேலோட்டமாக உள்ள தொடர்புகளை மட்டும் கவனித்துவிட்டு, முற்றிலும் தவறாக வெளியிடப்படும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு உதாரணமாக புள்ளியியல் துறையில் இருந்து பல ஆதாரங்களைக் கொடுக்க இயலும்.   சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் வெளியான ஒரு ஆராய்ச்சியானது தன்னம்பிக்கை உள்ள பிள்ளைகளுக்கும் அவர்கள் பள்ளியில் நன்கு பயின்று நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கும் உள்ள தொடர்பினைக் கண்டறிந்தது.  அதனால் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கையை  ஊட்டி வளர்க்க அறிவுரைக் கூறப்பட்டது.

    தொடர்ந்து பின்நாளில் நிகழ்த்தப் பட்ட ஆராய்ச்சி, இது தவறு, உண்மையில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் தங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெறுகிறார்கள்.  நல்ல மதிப்பெண்கள் பெறுவதே தன்னம்பிக்கைக்யை அதிகரித்து தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறக் காரணமாகிறது.  நல்ல மதிப்பெண்கள்தான் தன்னம்பிக்கையைத் தருகிறது, மாறாக தன்னம்பிக்கை நல்ல மதிப்பெண்களைப் பெற வழி செய்வதில்லை என்று கண்டறிந்தார்கள்.

     

    கவே, நிகழ்வுகளுக்கு இடையில் தொடர்பு உள்ளது என்று புள்ளி விபரங்கள் குறிப்பிட்டாலும், அந்த தொடர்புக்கு இதுதான் காரணமா என்ற நாம் கவனமாக ஆராய வேண்டும். இது நிகழ்ந்தால் நிச்சயம் இதுவும் நிகழ்ந்தே தீரும், ஆகவே இது நிகழ இதுவே காரணம் என அவசரப்பட்டு எந்த முடிவெடுக்கக் கூடாது.  காரணம் எதுவாகவும் இருக்க வாய்ப்புள்ளது,

    எனவே, இடையே உள்ளத் தொடர்பு மட்டும் எதனையும் ஆணித்தரமாக சொல்ல உதவாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேண்டுமானால் அத்தொடர்புகள் சிற்சில குறிப்புகளைக் கொடுத்து யூகிக்க வாய்ப்பளிக்கலாம். அதனை அடிப்படையாகக் கொண்டு இது ஏன் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? என்ன காரணம்? என்று ஆராய வேண்டியது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி.  சந்தேகம் வரும் சமயங்களில் ‘ஐஸ்க்ரீம் விற்பனை ஆராய்ச்சி’ உதாரணத்தையும் நினைவு படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

     

     

    நன்றி: TED X – The danger of mixing up causality and correlation
    படம் உதவி: http://lh5.ggpht.com/_hEtlcZt0xFs/S9Ytx3wPSpI/AAAAAAAAD5Y/P7fE1IYDG54/bengali%20wedding%20doll%5B7%5D.jpg

     

     

    Share
  • வேதியியல் வரலாற்றில் இன்றியமையாத ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு

     

    தேமொழி

    இதுவரை உலகில் 120  தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இத்தனிமங்கள் அனைத்தையும் தனித்தனியாக அவற்றின் பண்புகளை அறிந்து நினைவில் கொள்வது கடினம்.

    இதற்கு உதவுவது தனிம வரிசை அட்டவணை. தனிம வரிசை அட்டவணையில்,  தனிமங்களை  அதன் பண்புகளின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரித்து அட்டவணையாக வரிசைப்படுத்திய விதம் தனிமத்தின் வேதியியல் பண்புகளை நினைவில் நிறுத்திக் கொள்ள உதவுகிறது. தனிம வரிசை அட்டவணையானது மனிதகுலம் உருவாக்கிய, மனித குலத்தின் அறிவாற்றலைக் காட்டும் ஒரு ஈடு இணையற்ற படைப்பாகும்.

     

     

    டோபரின்னர், ஜான் நியூலேண்ட், லோதர் மேயர் போன்ற அறிவியியல் அறிஞர்கள் தனிமங்களின் பண்புகளை அடிப்படையாகக்கொண்டு அவற்றை வரிசைப்படுத்த முயன்றுள்ளனர்.  ஆனால், ரஷ்ய வேதியியல் அறிஞர் ‘டிமிட்ரீ மெண்டலீயா’ (Dmitri Mendeleev) என்பவர் 1871ஆம் ஆண்டில் உருவாக்கிய தனிம வரிசை அட்டவணை அனைத்தையும் விட மிகச் சிறப்பானது.

    மெண்டலீயா தனிமங்களை அவைகளின் அணுநிறைகளின் அடிப்படையில், குறைந்த அணுநிறையிலிருந்து அதிக அணுநிறை உள்ள தனிமங்களை இடமிருந்து வலமாக (நாம் எழுதுவதுபோல) அட்டவணைப்படுதினார். அவர் அவ்வாறு வரிசைப்படுத்தி ஆராய்ந்த பொழுது, வரிசையில் ஒத்த தன்மை இல்லாத தனிமங்களுக்கு இடையில் வெற்றிடம் விட்டு  அங்கு  இடம்பெற வேண்டிய பண்புகளையுடைய  தனிமங்கள் இனிமேல்தான் கண்டறியப்பட வேண்டும் என நிர்ணயித்தார். இதுதான் மிகவும் ஆச்சரியகரமான அறிவியியல் கண்டுபிடிப்பு. 

     

    Mendelejevs_periodiska_system_1871

     

    இவ்வாறு வெற்றிடங்களில் இடம் பெற வேண்டிய தனிமங்கள் என அவர் குறிப்பிட்டவை  அவர் அட்டவணையைத்  தயாரித்த காலத்தில் கண்டறியப் பட்டிருக்கவில்லை. எனினும்,  இன்னமும் கண்டறியப்படாத அந்த தனிமங்களின் பண்புகளை அட்டவணையில் அவை இடம் பெற்ற இடத்தினையும், அருகே சூழ்ந்திருக்கும் மற்ற தனிமங்களின் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு யூகிக்க முடியும்.  இதுவே இவரது தனிம அட்டவணையின் சிறப்பிற்குக்  காரணம்.

    அவ்வாறு தனிம அட்டவணையில் இடம் பெற வேண்டிய தனிமங்களின்  இடத்தினை  கருத்தில் கொண்டு, அவற்றின் பண்புகளை யூகித்து  சில தனிமங்களை  ‘எகா  அலுமினியம்’ (அலுமினியத்தின் பண்பினை ஒத்தது), ‘எகா சிலிக்கான்’ (சிலிக்கானின் பண்பினை ஒத்தது)  என்று குறிப்பிட்டார்.  ஆனால் அது போன்ற பண்புகளைக் கொண்ட தனிமங்கள் அப்பொழுது கண்டறியப் பட்டிருக்காவிட்டாலும், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மெண்டலீயா யூகித்தது போன்றே அவற்றின் பண்புகளும் இருந்தன.

    மெண்டலீயா 1871 ஆம் ஆண்டு எகா  அலுமினியத்தின் பண்புகளைக் குறிப்பிட்டார். அதன் பிறகு 1875 ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘பால் எமிலி லெகாக் டி பாய்ஸ்பவுட்ரன்’ (Paul Emile Lecoq de Boisbaudran) ‘காலியம்’ (gallium) என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். ஃபிரான்ஸ் நாட்டினைக் குறிக்கும் ‘கால்’ (Gaul) என்ற சொல் இந்தப் பெயரினையிட அடிப்படைக் காரணமானது. இந்த தனிமத்தின் பண்புகள் அலுமினியத்தைப் போன்றே இருக்கிறது.  காலியத்தைத் தவிர ஸ்கேண்டியம், ஜெர்மானியம், ரேனியம் ஆகிய தனிமங்களின் பண்புகளையும் அவைகளைக் கண்டுபிடிக்கப்படும் முன்பே மெண்டலீயா குறிப்பிட்டு விட்டார். 

    மெண்டலீயா ‘எகா மாங்கனீஸ்’ எனக் குறிப்பிட தனிமம் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ‘டெக்னீடியம்’ என்று பெயரிடப்பட்டது. டெக்னீடியம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1937, அதாவது மெண்டலீயா அத்தனிமத்தின்  பண்புகளை குறிப்பிட்ட பின்பு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகே, அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே கண்டு பிடிக்கப்பட்டது.

    நோபெல் பரிசுகள் கொடுக்க ஆரம்பித்த ஆரம்ப ஆண்டுகளில், 1907 ஆம் ஆண்டு மெண்டலீயா இறந்துவிட்டதால் அவரது கண்டுபிடிப்புக்கு நோபெல் பரிசு கிடைக்காமல் போனது. ஆனால், 1955 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம் (University of California, Berkeley) உருவாக்கிய, அணுஎண்  101 ஐக் கொண்ட தனிமத்திற்கு மெண்டலீயாவினைப் போற்றும் விதமாக மெண்டலீயம் (mendelevium) எனப் பெயரிடப்பட்டது. இந்த கெளரவம் நோபெல் பரிசை விட உயர்ந்தது. இதுவரை நோபெல் பரிசை 800 க்கும் அதிகமானவர் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தனிம வரிசை அட்டவணையில் இடம் பிடித்த அறிவியியல் அறிஞர்கள் 15  பேர்கள் மட்டுமே, அவர்களில் மெண்டலீயாவும்  ஒருவர்.

     

    Periodic_table

     

    mendaleviyam

     

    இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக் கழகங்களின்  ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.  ‘மெண்டலீயா தங்கப் பதக்கம்’ என்ற பரிசும் 1962 ஆம் முதல் சிறந்த அறிவியியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ___________________________________________________

    ஆதாரம்: TED Ed – The genius of Mendeleev’s periodic table

    படம் உதவி:
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/DIMendeleevCab.jpg/427px-DIMendeleevCab.jpg
    http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/Mendelejevs_periodiska_system_1871.png
    http://upload.wikimedia.org/wikipedia/commons/8/84/Periodic_table.svg

     

     

    Share
  • வலி நிவாரணி வேலை செய்யும் விதம்

     

    தேமொழி

    நம் காலில் ஒரு முள் குத்தினால் நமக்கு எவ்வாறு  தெரிகிறது?

    நாம்  முள்குத்தியதை அறியும் விதம் வலி என்ற உணர்வு தோன்றும் காரணத்தினால்தான். 

     

     

    வலி ஏன் ஏற்படுகிறது?

    வலி என்ற உணர்வு நம்மை ஆபத்தில் இருந்து காப்பதற்கு உதவுகிறது.  இது உயிர் காக்கும் ஒரு நட்பைப் போன்றது. வலியை நாம் உணராவிட்டால் நம் விரலைத் தவறுதலாக காய் வெட்டும்பொழுது வெட்டிக்கொண்டாலும் நமக்குத் தெரியப்போவதில்லை. நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டு இழப்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். அல்லது சுற்றுச் சூழலில் உருவாகும் ஆபத்தை உணராமல் நமக்கு தீங்கு நேரும், உயிருக்கும் ஆபத்து நேரும். வலி நமக்கு ஆபத்தைத் தவிர்க்க உடல் ஏற்படுத்தித் தந்த ஒரு முன்னெச்சரிக்கை  ஒலி.

    நாம் வளரும்பொழுது வலியை உணர்த்தும் நரம்பு செல்கள் நம் உடலில் ஆங்காங்கே பல பகுதிகளில் நிறுவப்படுகிறது. வலியை உணரும் நரம்பு செல்கள் சாதாரண நரம்பு செல்களில் இருந்து வேறுபட்டவை, மேம்பட்டவை. இவைகளை “நோசிசெப்டர்ஸ்”(nociceptors) எனக் குறிப்பிடுகிறோம்.

    இந்த நரம்பு செல்கள் தண்டுவடத்தில் இருந்து கிளம்பி தோல், தசை, எலும்பு, மூட்டுகள், உடலின் உள்ளுறுப்புகள் என பலப்  பாகங்களையும் மூளையுடன் இணைக்கிறது. மற்ற நரம்பு செல்களைப்போலவே வேலை செய்து  மின்சமிக்கைகள் மூலம் செய்திகளை மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் பரிமாற்றம் செய்கிறது. ஆனால் உடலுக்கு சேதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே இவை இயங்கத் தூண்டப்படும்.

    உதாரணமாக, ஒரு ஊசியின் முனையை மெதுவாகத் தொட்டவுடன் நமக்கு வலி தெரியாது, வழக்கமான உணர்வு அதைத் தொடுகிறோம் என மட்டுமே நமக்கு அறிவுறுத்தும்.  ஆனால் முனையை மேலும் அழுத்தினால் நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களின் இயக்கம் தூண்டப்படும். உடலுக்கு சேதம் ஏற்படும் நிலை ஏற்படும் பொழுது அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலம் (arachidonic acid) எனப்படும் வேதிப்பொருட்களை வெளியிட்டு நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களை இயங்கத் தூண்டும். அந்த நரம்பு செல்கள் வலியின் தீவிரத்தை நமக்கு தெரியப்படுத்தும்.

    வலியின் தீவிரம் என்பதும்  நிலையான ஒன்றல்ல.  வேதிப்பொருட்களால் அதன் தீவிரத்தை மாறுபடுத்த முடியும்.  வேதிப் பொருட்களிலான மருந்துகளை நாம் வலிநிவாரணிகளாக  உபயோகப்படுத்துவதும்  அதனால்தான். இதனால் வலியின் தீவிரத்தை நாம் குறைக்கிறோம். “ஆஸ்ப்ரின்” மற்றும் “ஐபிப்ரோஃ பின்” மருந்துகள் வலியின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. 

     

    வலியை உணர்வது எப்படி? 

    உடலுக்கு சேதம் ஏற்படும் நிலை தோன்றினால் அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலத்தினை உற்பத்தி செய்யும். திசுக்களில் உள்ள “காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்கள்” (COX-1 and COX-2 enzymes) இவ்வாறு வெளிக்கிளம்பும் அராக்கிடானிக் அமிலத்தினை “ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ்” (prostaglandins-H2) எனப்படும் வேதிப்பொருளாக மாற்றும்.  தொடர்ந்து ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ் வேறு பற்பல வேதிபோருட்களாக தொடர்ந்து மாறுதல்களை  அடைந்து உடலில் சுரம், அழற்சி, வீக்கம் ஏற்படுத்துவது எனப் பல வகையில் செயல் படத் தொடங்கும்.  

    ஒவ்வொரு நொதிப் பொருளுக்கும் வினையூக்கி பகுதி (active site) என்ற ஒரு பகுதி ஒன்று உண்டு. இந்தப் பகுதியில்தான் வேதியியல் வினைமாற்றங்கள் நிகழும்.  காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின்  வினைப்பகுதியில், பாதிக்கப்பட்ட செல்கள் வெளியேற்றிய அராக்கிடானிக் அமிலம் கச்சிதமாக வந்து பொருந்தும். இதன் விளைவு, நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்கள்  இயங்கத் தூண்டப்பட்டு வலியை நாம் உணர்வது.

     

    Pain

    நியூரோபத்திக் வலி (Neuropathic pain) என்பது நரம்பு செல்களே சேதம் அடைந்தால் உண்டாவது. இந்த வலி உண்டாக உடலுக்கு வெளியில் இருந்து தூண்டப்படும் பாதிப்பு தேவையில்லை. 

     

    வலிநிவாரணிகள் எவ்வாறு வேலை செய்கிறது?

    ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் உட்கொள்ளப்பட்டபின் அவை இரத்தத்தில் கலந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும், அதுபோல பாதிக்கப்பட்ட உடலுறுப்பினையும் அடையும்.  அங்கு அது காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அங்கு அராக்கிடானிக் அமிலம் பொருந்த விடாமல் அப்பகுதியை செயலிழக்கச் செய்யும்.

    இவ்வாறு செயலிழக்க செய்வதை ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் வேறு வேறு விதமாக நிகழ்த்தும்.  ஆஸ்ப்ரின் வினைப்பகுதியின் இடத்தில் சிதைவடைந்து அந்த வினைப்பகுதியின் இடத்தையும் அடைத்துவிடும், அந்த நொதிகளை நிரந்தராமாக செயலிழக்கச் செய்யும்.

    ஐபிப்ரோஃ பின் அவ்வாறு சிதைவடையாவிட்டலும், காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அந்த இடத்தில் அது இருக்கும் வரை அராக்கிடானிக் அமிலத்தினைப் பொருந்த விடாது தடை செய்யும். இந்த வினையில் காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் தன்மை மாறுபடாது ஆனால் தற்காலிகமாக செயலிழக்கும்.

    இவ்வாறு வலிநிவாரணிகள் வெவ்வேறு வகையில் செயல் பட்டு  நொதிப்பொருட்களை  வெவ்வேறு வகையில் செயலிழக்க செய்து,  நொதிப்பொருட்களை அராக்கிடானிக் அமிலத்துடன் வினை செய்வதை தடுப்பதன் மூலம் வலியின் தீவிரத்தைக் குறைத்து வலியில்  இருந்து நமக்கு நிவாரணத்தைத் தருகின்றன.

    வலியை உணர்வதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் நமது மூளையும்  பெரும்பான்மையான பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு  வலியைப்பற்றியே அதே கவனத்தில் இருந்தாலோ அல்லது நாம் மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருந்தாலோ நாம் வலியின் தீவிரம் அதிகம் இருப்பது போல உணர்வோம் 

    ________________________________________

    நன்றி: TED Ed – How Do Pain Relievers Work?

    படம் உதவி: http://static3.businessinsider.com/image/4f3552766bb3f79b6c000050/headache.jpg

     

     

    Share