கணக்குப் பார்த்துக் காதல் வந்ததா?
தேமொழி
படத்தில் உள்ள காதலர் தின சிறப்புப் படம் ஃபேஸ்புக் சமூகவலைதள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்தக் கணிதக் கேள்வியினைச் சமன் செய்தால் வரும் விடை “நான் உன்னைக் காதலிக்கிறேன்” (I Love You என்பதன் சங்கேதக் குறியான IOU, இங்கு ‘O’ என்பது இதயத்தைக் குறிக்கும் குறி) என்பதாகும்.
ஆனால் வேறு வகையில் கணக்குப் பார்த்து வரும் இக்காலக் காதல்களைச் சாடுகிறார் கவிஞர் மீரா. சமுதாய மறுமலர்ச்சிக்கான புரட்சிக் கருத்துக்களை கவிதைகள் மூலம் சொல்லும் அவர், அன்றைய சங்ககாலக் குறுந்தொகை சொல்லும் காதலுடன் இக்காலக் காதலை ஒப்பிடுகிறார். அக்காலத்தில் முன்னறிமுகம் இல்லாத, எவ்வகையிலும் தொடர்பு இல்லாத தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு, அச்சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு, செம்புலப் பெயல் நீர் போல அவர்கள் மனம் ஒன்றுடன் ஒன்று அன்பால் இணைந்து விடுகிறது. ஆனால் இக்காலத்தில் காதலர்கள் கணக்கிட்டு அபாயம் குறைவான (calculated risk) வகையில் துணையைத் தேர்ந்தெடுத்து காதலிக்கிறார்கள் என்பதைக் கீழ் வரும் கவிதை மூலம் சுட்டிக் காட்டி நகைக்கிறார்.
உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் –
வாசுதேவ நல்லூர் …
நீயும் நானும்
ஒரே மதம்…
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட…
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக் காரர்கள்…
மைத்துனன் மார்கள்.
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
– கவிஞர் மீரா (மீ. ராசேந்திரன்), ஊசிகள் (1974) பக். 48
இதுபோல கணக்குப் போட்டுத் துணை சேர்க்கும் சேவையையும் இக்கால இணையதளங்கள் செய்து வருகின்றன. இருவருக்கிடையே பேதங்கள் அதிகரிக்கும் பொழுது அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுகிறது. இவற்றினால் சண்டை சச்சரவுகள் எழுந்து, மனக் கசப்பு ஏற்பட்டு உறவு முறிகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு சரியானப் பொருத்தம் உள்ள துணைகளைத் தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்து வைப்பது இந்த சேவைகளைச் செய்யும் இணையதளங்களின் குறிக்கோள். இது போன்ற டேட்டிங் (dating) இணையதளங்கள் அதிகரித்து வருகின்றன, அவற்றை உபயோகப் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கோடிகளைத் தாண்டுகிறது. இந்த முயற்சி காதலின் வெற்றிக்கு வழி வகுக்கிறதா? அதன் விளைவாக திருமணமுறிவுகளும் குறைகிறதா? என்பதனைப் பொறுத்திருந்துதான் அறிந்து கொள்ள முடியும்.
இந்த தளங்கள் இயங்கும் வழி முறை, அவை பொருத்தம் செய்யும் வழி முறையின் அடிப்படையாவும் கணிதம்தான். இக்கணித முறையை ‘கிறிஸ்டியன் ரட்டர்‘ (Christian Rudder) என்பவர் விளக்கியுள்ளார். இவர் ‘ஒகேகுப்பிட்’ (OKCupid – dating websit) என்ற பொருத்தம் செய்யும் ஒரு சேவை நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
துணை தேடும் இருவரிடம் அவர்களைப் பற்றியக் கேள்விகள் பலக் கேட்கப்படுகிறது. அவற்றில் இருந்து அவர்களுக்குப் பொதுவாக எவற்றில் ஆர்வம் உள்ளது, தங்கள் துணை எவ்வாறு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்ற தகவல்கள் சேகரிக்கப் படுகிறது. இப்பதில்களை ஆராய்ந்து சரியானப் பொருத்தம் உள்ள நபர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள் என்பதை நாமறிவோம். ஆனால், இந்த முடிவு எவ்வாறு எடுக்கபடுகிறது என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
கணிப்பொறி நிரலாக்கத்தின் விதிமுறை (Computational Matching Algorithm) இந்த பொருத்தம் செய்யும் கணித முறைக்கு அடிப்படை. பலரும் ‘அல்காரிதம்’ என்று அறியும் இந்தப் பதத்தின் பொருள் எளிமையானது. முறையாக, படிப்படியாக கொடுக்கப்பட்ட விதிமுறைகளின் படி ஒரு கணக்கிற்கு விடை காண்பது என்பதுதான் அதன் விளக்கம். கூட்டல், பெருக்கல், வர்க்க மூலம் (addition, multiplication and square root) ஆகியவைதான் இந்த நிரலியில் (program) அடிப்படைக் கணித முறைகள். தகவல்களும், புள்ளிவிவரங்களும் (data) பல கேள்விகள் வழியாக உறுப்பினர்களிடம் இருந்து கேட்டுப் பெறப்படுகிறது.
இக்கேள்விகள் பொதுவாக பெரும்பாலும் உறுப்பினர்களின் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளாகவும், அவர்களது விருப்பங்கள், கொள்கைகள், ஆர்வங்கள் போன்ற பல பின்னணிகளையும் அறிந்து கொள்ளும் வகையில் தேர்வு செய்யப் பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக;
உங்களுக்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை உள்ளதா?
ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவீர்கள்?
திகில் திரைப் படங்கள் பார்க்கப் பிடிக்குமா?
கடவுள் நம்பிக்கை உள்ளதா?
எனக் கேள்விகள் மிகச் சாதாரண தகவல்கள் முதல் கொண்டு மிக முக்கியத் தகவல்கள் வரை யாவற்றையும் தெரிந்து கொள்ளுமாறு அமைக்கப் பட்டிருக்கும்.
சில பதில்கள் ஒத்திருப்பது ஒருவகையில் நல்ல பொருத்தத்தை தேர்ந்தெடுக்க உதவும், காட்டாக இருவருக்கும் திகில் படங்கள் பார்ப்பதில் உள்ள விருப்பம் அவற்றில் ஒன்று. ஆனால், நான்தான் முக்கிய நபராக இருக்க வேண்டும், என் விருப்பத்திற்கு ஏற்றவாறுதான் அனைத்தும் நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ள இருவர் பொருந்த மாட்டார்கள். அவர்களுக்குள் நாளும் பிரச்சனைதான் வரும். யாராவது ஒருவர் இதை ஒரு பொருட்டாகக் கருதாதவராக இருக்க வேண்டியது அவசியம். அதனால் மேலும் பல தகவல்களும் தேவைப்படுகிறது.
இத்தகவல்கள் மூலம் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், அந்த பண்புகளுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது. எனவே மூன்று வகைத் தகவல்கள் ஒரு நபரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவை,
(1) ஒரு நபரைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள்
(2) அவர் வாழ்க்கைத்துணையாக வரும் நபரிடம் எதிர்பார்க்கும் பண்புகள்
(3) அவற்றிற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம்
இந்த மூன்று வகை தகவல்களும் நிரலியில் உபயோகப் படுத்தப் பட்டு சரியானப் பொருத்தமுள்ள துணை தேர்வு செய்யப் படும்.
இந்தக் கணித நிரலியின் உதவியுடன் இருவரது பொருத்தத்தை நிர்ணயிக்கும் முறையை, அதாவது நிரலி எவ்வாறு ஒரு ஒழுங்கு முறையுடன் படிப்படியாகத் தீர்வு காண்கிறது என்பதை ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம். விளக்குவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு இரண்டு கேள்விகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
ஒன்று: ஒழுங்குமுறையைப் பற்றியக் கருத்து. எதுவும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று விரும்புபவரா நீங்கள்? அடுத்தவரும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புபவரா? இந்த ஒழுங்குமுறைக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன?
மற்றொரு கேள்வி: வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? இதைப் பற்றி உங்கள் துணையின் கருத்து என்னவாக இருக்க வேண்டும்? இக்கேள்விக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவம் என்ன?
இக்கேள்விகளை இருவரிடம் கேட்டு அவர்கள் அளித்த பதில்களைக் கொண்டு பொருத்தம் தெரிவு செய்யப்படுவதைக் கொடுக்கப்பட்டுள்ள படம் விளக்குகிறது. முதல் கட்டமாக, இக்கேள்விகளின் பதில்களை கணினி புரிந்தும் கொள்ளும் வகையில் அவை எண்களாக மாற்றப் பட்டு மதிப்பெண்கள் வழங்கப் படுகிறது. குறைவான முக்கியத்திற்கு குறைந்த மதிப்பெண்ணும், அதிக முக்கியத்துவம் என்பதற்கு அதிக மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக கணினி இரு சிறிய கணக்குகளை தீர்வு செய்கிறது.
முதலில், இருவரது பதில்களும் ஒப்பிடப்பட்டு, அனைத்துக் கேள்விகளின் மதிப்பெண்களும் கூட்டப் பட்டு ஒரு சதவிகிதம் நிர்ணயிக்கப் படுகிறது.
(1) ஒருவரின் பதில்கள் அடுத்தவருக்கு எவ்வளவு திருப்தியாக இருக்கிறது என்பதை இருவர் பதிலையும் ஒப்பிட்டு ஒருவரின் கண்ணோட்டத்தில் திருப்தியின் சதவிகிதம் அறியப்படுகிறது. படத்தில் பெண்ணின் கோணத்தில் குறிப்பிட்ட அந்த ஆண் 98% திருப்திகரமாகத் தெரிவார் என கணினி மதிப்பிடுகிறது.
(2) அடுத்தவரின் கோணத்தினைக் காண முதலில் உள்ளவரின் பதில்களுடன் மற்றவரது பதில்களை ஒப்பிட்டு அவர் அடையப்போகும் திருப்தியின் அளவு கணினியால் கண்டறியப்படுகிறது. படத்தில் ஆணின் எதிர்பார்ப்புகளின் படி பெண் அவருக்கு 91% திருப்திகரமாகத் தோன்றுவார். படத்தில் அடுத்தவர் கோணத்தில் மற்றவர் பெரும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வாறு பொருதுவார் என கணக்கிட இருவரது சதவிகிதங்களும் பெருக்கப்பட்டு, எத்தனை கேள்விகள் கேட்கப் பட்டதோ அக்கேள்விகளின் எண்ணிக்கை அடிப்படையில் வர்க்க மூலம் கண்டுபிடிக்கபடுகிறது. இவ்வாறு வரும் விடையே அவர்கள் இருவரின் பொருத்ததிற்கான மதிப்பெண். அதிக சதவிகிதம் இருவரும் சச்சரவின்றி அதிகம் ஒருவருக்கொருவர் ஒத்துப் போவார்கள் என்பதைக் குறிக்கும். படத்தில் காட்டப் பட்டவர்களின் பொருத்தம் 94% அக இருக்கிறது. இது விடைகளின் பெருக்கலின் சராசரி (geometric mean) மதிப்பாகும்.
இங்கு உதாரணமாகக் காட்டப் பட்டிருப்பது இரு கேள்விகள் மட்டுமே. ஆனால் கேள்விகள் அரசியல் மதம், நம்பிக்கைகள், திரைப்பட விருப்பங்கள் போன்று பற்பல கேள்விகளைக் கணக்கில் கொள்வதால் பொருத்தத்தின் துல்லியம் அதிகரிக்கும். அவ்வாறு பொருத்தம் அதிகமான இருவர் ஒருவருக்கொருவர் பரிந்துரைக்கப் படுகிறார்கள்.
இவ்வாறு அறிமுகப் படுத்தப் படுபவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பழகும் பொழுது அவர்களுக்குள் காதல் பிறக்கிறதா? அது திருமணத்தில் முடிகிறதா? அவ்வாறு அமையும் திருமணங்களும் மணமுறிவு கேட்டு நீதிமன்றங்களை நாடாமல் இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
சிந்தனைக்கு: பொருத்தம் பார்ப்பதன் அடிப்படையே மணமக்கள் ஒத்துபோகும் மணவாழ்க்கையை அமைத்துக் கொடுக்கத்தான். இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப் படுகிறது. அம்முறையில் கணினி நிர்ணயிப்பது போலவே, பெற்றோர்களும் ஆண் பெண் இருவரின் பின்புலத்தையும் கருத்தில் கொண்டு, முடிந்தவரை குடும்ப வாழ்வில் சச்சரவுகளைக் குறைக்கும் பண்புகளைத் தவிர்த்து பொருத்தம் செய்கின்றனர். கீழை நாடுகளில் ஜோசியம் பார்க்கும் வழக்கமும் உள்ளது. இந்தியாவில் இது திருமணத்தை நிச்சயம் செய்வதிலும் பங்கு வகிக்கிறது. இதன் அடிப்படை, வானில் கோள்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமைந்திருக்கும் நேரத்தில் பிறந்தவர்களை அவர்கள் பிறந்த நட்சத்திரம், அது அமைந்த ராசியினைக் கொண்டு பிரித்து அவர்களுக்கு சில பிறவிக் குணங்கள் அமைந்திருக்கும் என அறிந்து கொள்வது. அந்தக் குணங்களுக்கு ஒத்துப் போகும் குணங்கள் மற்றொரு நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு இருக்கும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு ஜோசியப் பொருத்தமும் பார்க்கப் படுகிறது. கணினி, பெற்றோர், ஜோசியம் எனப் பொருத்தம் காணும் முறைப் பலவாறாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து வாழும் பண்புகள் உள்ள ஆணுக்கும் பெண்ணுக்குமே மனவாழ்க்கை மகிழ்ச்சி தருவதாக அமையும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. [குறள் 45]
Sources:
How OkCupid Sets You Up With The Perfect Match, Megan Rose Dickey, February 14, 2013, San Francisco Chronicle – http://www.sfgate.com/technology/businessinsider/article/How-OkCupid-Sets-You-Up-With-The-Perfect-Match-4278690.php
“The math of online dating, the algorithm behind ‘hitting it off,” Christian Rudder, OkCupid co-founder of dating site OKCupid, TED-Ed – http://ed.ted.com/lessons/inside-okcupid-the-math-of-online-dating-christian-rudder
How the Matching Algorithm Works, an example – http://www.nrmp.org/res_match/about_res/algorithms.html
OkCupid – http://en.wikipedia.org/wiki/OkCupid
Join the best dating site on Earth – http://www.okcupid.com/
Picture Sources:
TED-Ed, http://www.facebook.com/pages/Nerd-love-solve-for-i-9x-7i33x-7u-i3u/123506964330770
டேட்டிங் இணையதளம் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறீர்கள் தேமொழி. பாராட்டுக்கள்! ஆயினும், எவ்வளவுதான் கணினி வாயிலாகப் பொருத்தம் பார்த்தாலும் மனித மனங்கள் அடிக்கடி மாறும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. நேற்றைய விருப்பங்கள் இன்றைக்கு மாறுகின்றன. எனவே நீங்கள் கூறியபடி அன்பும் அறனும் துணைக்கொண்டு அத்தோடு தன்முனைப்பை (ego) அகற்றி வாழ்ந்தால் வாழ்க்கை சுவைக்கும். இக்கோட்பாடு காதல் திருமணம், பெற்றோர் செய்துவைக்கும் திருமணம் என்ற இரண்டு வகைக்குமே பொருந்தும்.
–மேகலா
கட்டுரையைப் பற்றிய தங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேகலா.
….. தேமொழி
சிந்தனையை தூண்டும் அலசல். உலகெங்கும் இல்லறம் பற்றிய பிரச்னை உண்டு. தென்னிந்தியாவின் கல்யாணமாலை போன்ற புதுமைதரகர்கள் மூலமும் ஆண்-பெண் பிணைப்பு (திருமணம் என்ற சொல்லை நான் உபயோகிக்கவில்லை.) அமெரிக்காவில் இதற்கான செல்வகளஞ்சிய தரகு நிறுவனங்கள். இங்கிலாந்தில் ஓயாத ‘வா வா’ விளம்பரங்கள். காதலோ, கட்டி வைத்ததோ, புதிய பறவை தானே.
அன்பு இன்னம்பூரான் ஐயா, உண்மை… புதிய உறவில் இணைபவர் யாவரும் புதிய பறவைகள்தான். நீங்கள் கூறுவது போல இது உலகெங்கும் உள்ள பிரச்சனைதான். தம்பதிகளோ, உறவுகளோ, நண்பர்களோ, உடன் பணியாற்றுபவர்களோ, பக்கத்து வீட்டுக் காரர்களோ ஒருவரை ஒருவர் வாழ்வில் அனுசரித்துப் போகும் குணம் தேவையாக இருக்கிறது. பிறர் ஒத்து வராவிடில் இருவரிடையே சேதம் இல்லாமல் பிரிந்து போக இருக்கும் வாய்ப்பு போல திருமண உறவில் இருப்பதில்லை. பிள்ளைகளுக்காகவதாவது ஒத்துபோவது அவசியம். உங்கள் கருத்துரைக்கு நன்றி.
….. தேமொழி