விரிசலுக்குப் பிற்பாடும்
உனக்கும் எனக்குமான நட்பில்
விழுந்த விரிசல் – உன்
ஒரு சொல்லால் விளைந்தது
பிற்பாடு நீ கேட்ட மன்னிப்புகள் அத்தனையும்
உன்னையே நிலை நிறுத்தி
என்மீதுக் கவிழ்ந்ததாய் இருக்க
விரிசல் விரிவடைந்த பிற்பாடு
நீயோ, நானோ பரஸ்பரம்
பார்ப்பதைத் தவிர்த்தும்
எதேச்சையாய் உன்னை எங்காவது
காணும் போதினில் இதயம் சுற்றி
வலையொன்று இறுக்கும்..
கண்கள் தானாய் வேறிடம் நோக்கி
கால்கள் அதுவாய்த் திரும்பி நடக்கும்
மனதுள் மட்டும் ஏக்கம் புரண்டு
நீ அழைக்கும் குரல் கேட்க
காதுகள் விடைத்துக் கூர்மையாகும்
உனக்கும் வாய்வரை வார்த்தைகள் வரலாம்
அடக்கிக் கொள்கிறாய் என்னைப் போலவே
எது எப்படியாயினும் உன்னைப் பற்றி
தவறாய் எவரேனும் சொல்லும் போது
என்னையும் அறியாக் கோபம் வரும்
இன்னமும் உள்ளே
எங்கோக் கிடக்கிறது உனக்கான
என் நட்பின் உதிரித் துளிகள் ..
படத்துக்கு நன்றி: http://www.youthkiawaaz.com/2011/04/power-of-friendship/
சில நொடிகள் ஆத்திரத்தால் நட்பில் ஏற்படும் விரிசல்களையும், அதன் பின் நண்பர்களின் மன உணர்வுகளையும் தெளிவாக எடுத்துக்காட்டும் கவிதை மிக அருமை.
Aravnidhan, I liked this one as well. Continue your promotion of Tamil literature