பறவை மனசு
வள்ளி ராஜா
வேதா சில்லென்ற காலைப் பொழுதை ரசித்தபடி காபி குடித்தாள். மனதில் நிம்மதி, பெருமிதம். அதற்குக் காரணம் இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டு தனி ஆளாய் நின்று தன் ஒரே மகள் தீப்தியை வளர்த்து ஆளாக்கி திருமணமும் முடித்துவிட்டாள். தெரிந்தவர்கள் அத்தனை பேரும் கெட்டிக்காரி என்று பாராட்டினர். ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் பலரும் பாராட்டத்தக்க வாழ்வது பெரிய விஷயமில்லையா? இருபது நாட்கள் ஆகியிருந்தது மகள் தீப்தி அண்ணா நகரில் தனிக்குடித்தனம் போய். வேதாவுக்கு தீப்தியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
கை நிறைய பொருட்களை வாங்கிக் கொண்டு வேதா போன போது தீப்தி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்தாள். ”ஹாய் தீப்தி டார்லிங் எப்படியிருக்கே?” தீப்தி கொட்டாவியுடன்,”பைன். என்னம்மா காலையிலே வந்திருக்கே?” வேதா புன்னகையுடன் ,”காலையிலேயா? இப்ப மணி பத்து. இவ்வளவு நேரமாவா பொம்பளை தூங்கறது? மாப்ளே என்ன நினைப்பார்?” தீப்தி எரிச்சலுடன்,”அவரும்தான் தூங்கறார். வேலைக்குப் போற எங்களுக்கு இந்த ஞாயிற்றுகிழமைதான் ரிலாக்ஸ்டான நாள். என் தூக்கத்தையும் கெடுத்துட்டு அட்வைஸ் வேற பண்ணிட்டுருக்கே.” வேதா அமைதியாய்,” நீ போய் தூங்கு. நான் டிவி பார்த்துட்டுருக்கேன்.” என்றதும் தீப்தி தன் ரூமிற்குள் சென்று கதவை மூடினாள்.
வேதா சிறிது நேரம் டிவி பார்த்தாள். பிரிட்ஜை திறந்து பார்த்தாள். காய்கறிகள் இருந்தன.வேதா கடகடவென்று சமையலை முடித்தாள். சாம்பார், நூல்கோல் பொரியல், ரசம் என்று செய்து முடித்துவிட்டு அடுப்படியை சுத்தம் செய்த போது தீப்தியும், மனோஜும் வந்தார்கள். ”அடடே சமையலையே முடிச்சுட்டியா?” மனோஜ்,”அத்தே எப்ப வந்தீங்க? வந்த இடத்தில் உங்களுக்கு ஏன் வீண் சிரமம்?” வேதா,”நான் யாருக்குச்செய்றேன்? இதில் ஒண்ணும் சிரமம் இல்ல. ரெண்டு பேரும் குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்” மூவரும் சாப்பிட்டனர்.
தீப்தி ”நாங்க ஹனிமூன் கொடைக்கானல் போனபோது உனக்கு ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்தேன்.” வேதா ஆச்சர்யமாய்,” என்னது ஹனிமூன் போனீங்களா? எங்கிட்டே சொல்லவேயில்லை” தீப்தி கூலாக,” உங்கிட்டே ஏன் சொல்லணும்?” வேதா ஆடிப்போய்விட்டாள். தன் மகளே தனக்கு அந்நியமாய் போய் விட்ட மாதிரி ஒரு உணர்வு. சாப்பிட்டு முடித்ததும் மனோஜ் தீப்தியிடம் ,”சீக்கிரம் புறப்படு. டயமாயிடுச்ச.” தீப்தி,”ம் சரி. கிளம்ப வேண்டியதுதான்.” வேதா,” வெளியே போறீங்களா?” தீப்தி,” ஆமாம்மா. நீ இன்னொரு நாளைக்கு வாம்மா.” என்று உள்ளே போய் ஒரு வாக்கிங் ஸ்டிக்கை கொண்டு வந்தாள்.” இந்தாம்மா.இது தான் நான் வாங்கிட்டு வந்த கிப்ட்.” வேதா,”எனக்கு எதுக்கு வாக்கிங் ஸ்டிக்?” தீப்தி அவசரமாய்,”இது சந்தனமரத்துல செய்தது. ஹனிமூன் டிரிப்ல கூட அம்மாவை ஞாபகம் வச்சு வாங்கிட்டு வந்ததற்கு நீ பெருமைப் படணும்.” மனோஜ் ,” நீயும்தான் பெருமைப் படணும் தீப்தி… தனி ஆளாய் ஒரு குறையும் இல்லாம வளர்த்திருக்காங்களே உன்னை அதுக்கு.” தீப்தி,” பெத்தா வளர்க்கத்தான் செய்யணும். அது பெரிய விஷயமில்லை.” வேதா பதில் எதுவும் பேசவில்லை. சிறிது நேரங்கழித்து வேதா,”தீப்தி எனக்கு கொஞ்ச நாளாய் கால் வலி இருக்கு. டாக்டரைப் பார்க்கணும். நீயும் கூட வர்றீயா?” தீப்தி,” எனக்கு பல வேலை இருக்கும்மா. தெரிந்த டாக்டர்தானே நீயே போயிட்டு வந்துடு. சரிம்மா உனக்கு ஆட்டோ பிடிச்சுத் தரணுமா?”” வேதா ,”நானே பிடிச்சுக்கிறேன்.”என்று குரல் கமற கூறிவிட்டு வேதா கிளம்பினாள்.
காலையில் தன் மகள் வீட்டுக்கு வந்தபோது லேசாய் இருந்த மனசு இப்போது பாரமாய் கனத்தது.”ஏ மனமே எப்போதும் நீ நிச்சலனமாய் இருந்தால்தான் என்ன? வெளியில் நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப மாறி மனிதர்களை துன்பப்படுத்துகிறாய்?”சற்று தொலைவு நடந்தவள் திரும்பி தீப்தியின் வீட்டைப் பார்த்தாள்.ஏதோ தான் அனாதை ஆகிவிட்டது போல ஒரு உணர்வு. தீப்தி கூறியது காதில் ஒலித்தது,”பெத்தா வளர்க்கத்தான் செய்யணும்.அது பெரிய விஷயமில்லை.” எவ்வளவு ஈசியாய் சொல்லிட்டா.’ பெத்தா வளர்க்கிற கடமை எனக்கு இருந்த மாதிரி வளர்த்த தாய்க்கு மகள் செய்ய வேண்டிய கடமை ஒண்ணுமில்லையா?” ஆதரவிற்கு ஆள் இல்லாமல் தாயைக் காணாது தவிக்கும் குழந்தை போல ஒரு தவிப்பு. தெரிந்தவர்கள் யாரும் தன்னிடம் பேசினால் தான் அழுதுவிட நேரிடும் என்று அவசரமாக வீட்டிற்குள் வந்து கதவை தாளிட்டு கட்டிலில் படுத்து குமுறி அழுதாள்.
ரொம்ப நேரம் அழுதவள் தேற்ற ஆளில்லாமல் தானே எழுந்து முகம் கழுவினாள். மன பாரம் குறையவில்லை. பெட்ரூம் ஜன்னலருகே வந்து வேப்பமரக் காற்றை அனுபவித்தாள். வேப்பமரத்தில் எப்போதும் இருக்கும் காக்காவின் கூடு வெறுமையாக இருந்தது.மேல் கிளையில் ஒரு காலில் விரல்கள் இல்லாத அந்த தாய் காக்கா தனியே உட்கார்ந்து இருந்தது. ”எங்கே போயின குஞ்சுகள்? காக்காவின் மேல் பச்சாதாபம் வந்தது.” உன் பிள்ளைகளும் தொலைந்து போனார்களா?’ தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள். அப்போது தாய் காக்காவின் அருகே ஒரு குஞ்சு காக்கா வந்து தன் சிவப்பு வாயைத் திறந்தது. அதனிடமிருந்து தள்ளிப் போனது தாய் காக்கா. குஞ்சு காக்கா தாய் அருகில் திரும்பவும் வந்தது. தாய் காக்கா சற்றும் தாமதிக்காமல் குஞ்சை கொத்தி கொத்தி விரட்டியது. வேதாவிற்கு ஆச்சர்யம். தன் குஞ்சை நிராகரித்துவிட்டு தனியே பறந்துபோய்விட்டதே அந்த காக்கா. இந்த மனசு ஏன் மனிதருக்கு இல்லை? தன் குஞ்சுகள் குறிப்பிட்ட வளர்ச்சியடைந்ததும் அதை விலக்கி எப்போதும் போல் தன் ஜீவிதத்தை கவனிக்கிறது. ஆனால் மனிதன் பெத்து வளர்த்த பிள்ளைகளை எதிர்பார்த்து எதிர்பார்த்து மடிந்து போகிறார்கள். இந்த பறவைக்குள்ள மனசு மனிதருக்கும் இருந்துட்டா வீண் ஏமாற்றமில்லை, துன்பமில்லை. ஏன் முதியோர் இல்லங்கள் கூட இருக்காது. மனதில் பாரம் லேசாய் விலகியது. தெம்பு பிறந்தது போல ஒரு உணர்வு. இனி நான் கலங்க மாட்டேன். எனக்காக கடவுள் கொடுத்த நாட்கள் இவை. அதை சந்தோஷமாய் வாழ்வேன். ஐந்தறிவு பறவைக்குள்ள தெளிவு நமக்கு ஏன் இல்லாமல் போச்சு?
”ஹலோ சுகன்யாவா? நான் வேதா பேசுறேன். நீ ப்ரீயா? ஓகே பக்கத்து தியேட்டருக்கு வந்துடு. நான் டிக்கெட் எடுத்துட்டு நிற்கிறேன். வந்துடு.”என்று பேசிவிட்டு புது மனுஷியாய் தான் பளிச்சென்று ரெடியாகி வீட்டைப் பூட்டிவிட்டு துள்ளல் நடையுடன் தெருவில் இறங்கி நடந்தாள்.
படத்துக்கு நன்றி: http://nature.gardenweb.com/forums/load/bird/msg031736163036.html