காதல் பாடம்…!
ஜெயஸ்ரீ ஷங்கர்
கவின் முகில் மெல்லக் கடந்தது காடு…!
இருள் சூழ் வேளை தனில் சூழ்ந்தது தென்றல்
தொட்ட மரங்கள் சிலிர்த்தெழுந்தது
பச்சை இலைகளுக்குள் கலகலப்பு…. சலசலப்பு…!.
இச்சைக் கிளிகள் இரவோடு இரவாக
அலகுரசிக் கொஞ்சும்போது….
குண்டு விழிகள் கெஞ்சும்..அஞ்சும்..
மிஞ்சியே சேர்ந்து விரிக்கும் சிறகு..
காதல் கிளிகளாய் மலர்ந்த விடியலில்
உல்லாச ஊர்கோலம் மோகங்களோடு
மேகங்களும் சந்தோஷ வானில்
காதல் கொண்டு கட்டிக் கலக்கும்..
உயர் மலைகள் ஊடே புகுந்து
ஆடை கலைந்து அழுதிடுங்கால்
பூமி சிலிர்த்துச் சிரித்துப் பூக்கும்
காய்த்துப் பழுத்து இனிக்கும்…!
இங்கிருந்து அங்கு சென்று
வண்ணக் கால்கள் ஊன்றி
வான் வீதியில் ஊஞ்சல்
கட்டி தூது சாற்றும் வானவில்…!
மௌனமாய்த் தலை திருப்பும்
ஆதவனின் நாயகி…காந்தி..
காந்தமாய் இழுப்பிற்கெல்லாம்
உறவு சொல்லிச் சிரிக்கும் முகம்..!.
கார் வண்டு மொய்த்துத்
தடாகத் தட்டில் பெயர் பொறித்து
மலருக்கு மலர் தூது சொல்லித்
தேனால் கவி எழுதும் தாமரைகள்..!
உலகத்து நாயகிகள் காதலாய்
நித்தமிடும் கையெழுத்து
உள்ளத்தைத் தட்டி இன்பம்
தரும் இயற்கை தேவதைகள் ..!
குற்றால அருவி போல்
வற்றாத அலைகள் போல்
பாரெங்கும் சிதறிச் சிரிக்கும்
காதல் சில்மிஷங்கள்.!
ஏட்டிக்குப் போட்டியில்லை….
கண்களில் பொறாமையில்லை….
இதயத்தில் ஈட்டி எரிவதில்லை…
முகத்தில் திராவக வீச்சுமில்லை..!
மனங்களைக் கொல்லாமல்
மதங்களைக் கொள்ளாமல்
மௌனமாய் நித்தம் நடத்தும்
புகட்டும் காதல் பாடம்…!
கண்ணிறைந்து நெஞ்சம் நிறைத்து
அழகு தரும் அற்புத காட்சி கண்டு
காதலர் மனம் ஆழ்ந்து சுவாசிக்க
இயற்கையாய் காதல் செய்வோம்..!
உறவால் பிரிவின்றி
உயிருள் பயமின்றி
புள்ளிமான் மனதோடு
திடமாய் காதல் செய்வோம்…!
ஆயிரம் பிறைகள் கடந்தும்
ஜென்மங்கள் பல தொடர்ந்தும்
தோன்றிய காதலாய் நெஞ்சங்கள்
அமைதியில் ஆடட்டுமே..!