இன்னம்பூரான்

அன்பார்ந்த நண்பர்களே.

இனிமேல் எல்லாம் கடுதாசி தான். நலம் நலம் அறிய அவா. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி எழுதுகிறார்கள். நான் கடிதம் போடுகிறேன். அதில் என்ன வசதியென்றால், நாமே திசை மாறலாம்; திசை திருப்பலாம், மற்றவர்கள் கடுக்காய் கொடுக்கும் முன். இன்று மிகவும் அசதி. அதை போக்க வந்து சேர்ந்த வரன்கள் பல.

ஆதவன் மறையும் வேளையில் இந்தியாவிலிருந்து பரிச்சியம் இல்லாத நண்பர் ஒருவரிடமிருந்து, என் மகன் மூலமாக வந்த பரிசுகள் என்னை திக்குமுக்காட வைத்தன. தத்க்ஷணமே அவர் இன்னம்பூர் ஶ்ரீநிவாசப்பெருமாளுக்கு (குலதெய்வம்) என் பெயரில் அர்ச்சனை செய்து அனுப்பிய பிரசாதம்; திருமலை தேவஸ்தான காலெண்டர், டயரி, லட்டு, காஞ்சி மஹாப்பெரியவாளின் அனுக்ரஹவர்ஷா 2013 & வேதகோஷம் ஆடியோ பதிவுகள். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இந்த சாயரக்ஷை, ஒரு உஷத்கால ஆலயமணி. அவை என் முன் வந்து குவிந்து, என்னை வியப்பிலும், இறை வணக்கத்திலும் ஆழ்த்துவதற்கு முன்னால், இந்த கடிதம் எழுதுவதற்குப் பிரமேயமாக சில காரியங்கள் நடந்தன. எனவே, வேறொரு திசையில் இது ஒரு அறிமுகம் என்க.

ஒரு வருடமாக திறக்காத ஒரு கருவூலத்தை, யதேச்சையாக பார்வையிட்டேன். அது சொன்ன கதை. வருடங்கள் கடந்தோடின. 60 வருடமே ஒரு சுற்று. 70 வருடங்கள் ஆயின. முனைவர் பாண்டியராஜா கணக்குப்போட சொல்லிக்கொடுத்தாலும், பத்து விரலை வைத்துக்கொண்டு 85 வருடங்களை எப்படி எண்ணுவது, ஐயா? 85 வருடங்களுக்கு முன்னால் திருச்சி பிரமுகர் ஒருவரின் பரிந்துரையின் படி, ஏகலைவனாகிய என்னுடைய குருநாதர் திரு.வி.க. அவர்களின் நவசக்தியில் ‘தேனீ ‘ என்ற பெயரால் ஒருவர் உதவி ஆசிரியராக பணி புரிந்தார். மஹாகவி பாரதியாரின் அருமை தம்பி பரலி.சு.நெல்லையப்பர் அங்கு அவருடைய சகபாடி. அவர் ‘தேனீ’’யை ஒரு இதழாசிரியரிடம் அழைத்து செல்கிறார். அடுத்து வருவது தேனீயின் ‘ஏட்டிக்குப்போட்டி’ என்ற படைப்பு. ஹாஸ்யம் துள்ளாமல், துள்ளி விளையாடுகிறது. அதிசயித்த இதழாசிரியர் அதை தன் அன்னையிடம் வாசித்துக் காண்பிக்கிறார். அவரும் சுவைக்க, ‘ஏட்டிக்குப்போட்டி’ அச்சேறுகிறது. தமிழுக்கு ஒரு புதிய இலக்கிய நீச்சல்/தவழல்/தளர்நடை/காந்தியை போல் விறுவிறுப்பு நடை/ துள்ளல்/ ஓட்டம் எல்லாம் புதிய வரவுகளாக திகழ்கின்றன. எல்லாம் சொற்பகாலத்தில் மட்டும். (15 வருடங்கள்) ‘தேனீ’ யாக வந்து செந்தமிழை நமக்கு தேனாக, தேன்பாகாக, பாகு வெல்லமாக, வெல்ல அச்சுகளாக, அக்காரவடிசலாக அளித்த கல்(யாண) கி(ருஷ்ணமூர்த்தி மறைந்து விடுகிறார், 70 வருடங்கள் முன்னால். பிற்காலம் தான் அவர் எழுதி பிரசுரமாகாத கையெழுத்து பிரதி ஒன்று கிடைத்தது. அது 1976ல் கல்கியில் தொடராக வந்திருந்தாலும், ப்ராஜெக்ட் மதுரை வாயிலாக இன்று தான் சற்று நேரம் முன்னால் மின்னாக்கப்பதிவாகக் கிடைக்கப்பெற்றேன். அதிலிருந்து, நம்ம கமலாவின் கடிதத்தை உங்கள் பார்வைக்கு வைத்து மகிழ்கிறேன். இந்த வரவுக்கு அடிகோலியவர் நம் மின் தழிழர் நு.த.லோ. என்பது கூடுதல் மகிழ்ச்சி.

அப்பப்போ லெட்டர் போட்றது. என்ன சொல்றேள்? எஸ். எஸ். வாசன் எழுதிய உபயகுசலோபரி படித்தீர்களோ? வருத்தமாக இருக்கிறது.

வரேன்.

இன்னம்பூரான்

16 02 2013

***********

கமலாவின் கடிதம்

“மகாஶ்ரீஶ்ரீ கல்யாணம் அவர்களுக்கு, அடியாள் கமலா எழுதிக் கொண்டது…”

திருவாளர் கல்யாணம் அவர்களுக்கு அபாக்கியவதி கமலா அநேக கோடி நமஸ்காரங்கள்…..”

“வணக்கம்’… இந்தக் கடிதம் தங்களுக்கு வியப்பளிக்கலாம்…”

இப்படிப் பலவிதமாகக் கடிதம் எழுத ஆரம்பித்துக் கிழித்துப் போட்டுக் கொண்டே இருந்தாள் கமலா. நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தில் பாதித் தாள்களுக்கு மேல் அடுப்பெரிக்கக் குவிந்துவிட்டன. பாக்கிப் பத்துத் தாள்களைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, ‘இதுதான் கடைசி முயற்சி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.

“என் இன்னுயிர்க் காதலர்’ கல்யாணம் அவர்களுக்கு,

ஆம், இந்தக் கடிதத்திலாவது ஒரே ஒருமுறை இப்படித் தங்களை அழைக்க அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். தயவு செய்து இந்தக் கடிதத்தைப் படித்து முடித்த தும் உடனடியாகக் கிழித்துப் போட்டுவிடுவதுடன் என்னைப் பற்றிய நினைவுகள் தப்பித் தவறித் தங்கள் மனத்தில் ஏதும் இருந்தால் அவற்றையும் அழுத்துவிடுமாறு கோருகிறேன்.

இக்கடிதம் தபால் மூலம் தங்களுக்கு வந்துசேரும்போது நான் இந்த ஊரைவிட்டோ அல்லது உலகை விட்டோ (எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை) கிளம்பிப் போய் நீண்ட நேரமாகி விட்டிருக்கும்.

சிறு வயதிலிருந்தே பெரிய படிப்பெல்லாம் படித்து உலகம் வியக்க விளங்கப் போவதாகக் கனவு கண்டவள் நான். கடைசியில் அடுப்பு ஊதுவது தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவள் என்பதாக என் தாய் தகப்பனார் தீர்மானித்து விட்டனர். தங்களை முதன் முதலாகப் பார்த்த கணத்திலிருந்து பட்டம் பதவியெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம் தங்கள் மனைவி என்ற பட்டமும் தங்கள் இதய சிம்மாசனப் பதவியும் கிடைத்தாலே நான் பெரிய பாக்கியசாலி என்று கருதினேன். அதற்கும் நான் கொடுத்து வைக்கவில்லை.

இரண்டு ஆசைகளுமே நிறைவேறாவிட்டாலும் பாதகமில்லை. ஏதோ வீட்டோடு இருந்து பெற்றோருக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாலே, எனக்குப் போதும். ஆனால் அதுவும் முடியாது போலிருக்கிறது. அப்பாவும் அம்மாவும் என் பெற்றோர்களே இல்லை என்பதும் நான் வளர்ப்பு மகள்தான் என்பதும் சமீபத்தில் எனக்குத் தெரியவந்தது. அத்துடன் இவர்கள் சுயநலம் கருதி என்னைப் பெரும் பணக்காரரான ஒரு கிழக் கோட்டானுக்கு விற்றுவிடத் தீர்மானித்துவிட்டார்கள். குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்ற கதையாகி விட்டது என் வாழ்க்கை.

இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் எனக்கு இல்லை. பவானி அக்காவாக இருந்தால் பணிந்து கொடுக்கவே மாட்டாள். ஆனால் நான் பவானி இல்லையே? இந்தத் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் சக்தியும் எனக்கு இல்லை. எனவே நான் யாருமறியாமல் ஓடிவிடப் போகிறேன். தற்கொலை செய்து கொண்டு சாவேனோ, பிச்சை எடுத்துப் பிழைப் பேனோ அல்லது எங்கோ கண் காணாத ஊரில் யார் வீட்டிலாவது பத்துப் பாத்திரம் தேய்த்துப் போட்டு வயிறு வளர்ப்பேனோ தெரியாது. இறைவன் விட்ட வழி.

உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப மனம் இடம் தரவில்லை. அதனால்தான் எழுதினேன். தவறானால் மன்னித்து விடுங்கள். என் நினைவால் தாங்கள் அல்லல் ..” **** கமலா கையெழுத்துப் போடப் போன சமயம் வாசலில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. பரபரப்புடன் எழுந்து சென்று ஜன்னல் வழியே பார்த்தாள். “யார் அது?”

“நான் தான் ரங்கநாதன்” என்று பதில் கிடைத்தது.

“அப்பா,   அம்மா இல்லையே?”

“பரவாயில்லை. நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.”

கமலாவுக்குக் ‘குப்’ பென்று வியர்த்துவிட்டது. ‘இப்போது என்ன செய்வது? கதவைத் திறப்பதா, கூடாதா?’

இரண்டொரு கணங்களே யோசித்த கமலா மனத்தைத் தேற்றிக் கொண்டாள். ‘இந்தப் பட்டப் பகலில் என்னை என்ன செய்து விடும் அந்தக் கிழம்?’ என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டு வாசல் கத வைத் திறந்தாள். ‘ஏண்டி மாப்பிள்ளையை வாசலில் நிற்க வைச்சே பேசி அனுப்பிவிட்டாயா? அவர் தன்னை அவமதித்து விட்டதா எண்ணிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது?’ என்று அம்மா கேட்டுத் தன்னைக் கோபித்துக் கொள்வாளே என்ற பயமும் கமலாவை இயக்கியது.

கதவைத் திறந்ததுமே சில்லென்ற வாடைக் காற்று ரங்கநாதனுக்கு முன்பாக வீட்டினுள் நுழைந்தது. மேஜை மேலிருந்து காகிதங்கள் பறந்தன. “அடடா! ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாய் போலிருக்கிறது. எல்லாம் பறந்து விட்டதே” என்ற ரங்கநாதன், ஒரு மூலையில் போய் விழுந்த, எழுதிய தாளைப் பொறுக்கி எடுக்க நடந்தார்.

“பாதகமில்லை, இருக்கட்டும். நான் எடுத்துக்கொள்கிறேன்” என்று பதறினாள் கமலா. வாய் குளறிப் பேசியதே தவிர உடல் செயலற்றுப் போயிற்று. ரங்கநாதன் செல்கிற அறையின் அந்த மூலைக்கு அவசரமாகத் தானும் விரைந்து அவர் மீது பட்டும் படாததுமாக நெருங்கி நின்று தாளைப் பொறுக்க அவளுக்குக் கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது. தான் அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ள ஏதோ ஒன்றை அவரிடமிருந்து மறைக்க முயல்வதாக அவர் கருதிவிடக் கூடாதே என்ற கவலை வேறு.

அவள் நின்ற இடத்தை விட்டு நகராமலே பதறிக் கொண்டிருக்க அவர் போய் அந்தத் தாளைக் குனிந்து எடுத்து விட்டார். கமலாவுக்கு உள்ளமெல்லாம் வெல வெலத்துப்போக உடலும் நடுங்க ஆரம்பித்தது.

“யாருக்குக் கடிதம்?” என்று கேட்ட படியே நிமிர்ந்து அவளைப் பார்த்தார் ரங்கநாதன்.

***************

சித்திரத்துக்கு நன்றி: http://s-pasupathy.blogspot.co.uk/2012/06/blog-post_28.html

உசாத்துணை:

Project Madurai 443 அரும்பு அம்புகள்

http://s-pasupathy.blogspot.co.uk/2012/06/blog-post_28.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.