வலி நிவாரணி வேலை செய்யும் விதம்

4

 

தேமொழி

நம் காலில் ஒரு முள் குத்தினால் நமக்கு எவ்வாறு  தெரிகிறது?

நாம்  முள்குத்தியதை அறியும் விதம் வலி என்ற உணர்வு தோன்றும் காரணத்தினால்தான். 

 

 

வலி ஏன் ஏற்படுகிறது?

வலி என்ற உணர்வு நம்மை ஆபத்தில் இருந்து காப்பதற்கு உதவுகிறது.  இது உயிர் காக்கும் ஒரு நட்பைப் போன்றது. வலியை நாம் உணராவிட்டால் நம் விரலைத் தவறுதலாக காய் வெட்டும்பொழுது வெட்டிக்கொண்டாலும் நமக்குத் தெரியப்போவதில்லை. நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டு இழப்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். அல்லது சுற்றுச் சூழலில் உருவாகும் ஆபத்தை உணராமல் நமக்கு தீங்கு நேரும், உயிருக்கும் ஆபத்து நேரும். வலி நமக்கு ஆபத்தைத் தவிர்க்க உடல் ஏற்படுத்தித் தந்த ஒரு முன்னெச்சரிக்கை  ஒலி.

நாம் வளரும்பொழுது வலியை உணர்த்தும் நரம்பு செல்கள் நம் உடலில் ஆங்காங்கே பல பகுதிகளில் நிறுவப்படுகிறது. வலியை உணரும் நரம்பு செல்கள் சாதாரண நரம்பு செல்களில் இருந்து வேறுபட்டவை, மேம்பட்டவை. இவைகளை “நோசிசெப்டர்ஸ்”(nociceptors) எனக் குறிப்பிடுகிறோம்.

இந்த நரம்பு செல்கள் தண்டுவடத்தில் இருந்து கிளம்பி தோல், தசை, எலும்பு, மூட்டுகள், உடலின் உள்ளுறுப்புகள் என பலப்  பாகங்களையும் மூளையுடன் இணைக்கிறது. மற்ற நரம்பு செல்களைப்போலவே வேலை செய்து  மின்சமிக்கைகள் மூலம் செய்திகளை மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் பரிமாற்றம் செய்கிறது. ஆனால் உடலுக்கு சேதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே இவை இயங்கத் தூண்டப்படும்.

உதாரணமாக, ஒரு ஊசியின் முனையை மெதுவாகத் தொட்டவுடன் நமக்கு வலி தெரியாது, வழக்கமான உணர்வு அதைத் தொடுகிறோம் என மட்டுமே நமக்கு அறிவுறுத்தும்.  ஆனால் முனையை மேலும் அழுத்தினால் நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களின் இயக்கம் தூண்டப்படும். உடலுக்கு சேதம் ஏற்படும் நிலை ஏற்படும் பொழுது அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலம் (arachidonic acid) எனப்படும் வேதிப்பொருட்களை வெளியிட்டு நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களை இயங்கத் தூண்டும். அந்த நரம்பு செல்கள் வலியின் தீவிரத்தை நமக்கு தெரியப்படுத்தும்.

வலியின் தீவிரம் என்பதும்  நிலையான ஒன்றல்ல.  வேதிப்பொருட்களால் அதன் தீவிரத்தை மாறுபடுத்த முடியும்.  வேதிப் பொருட்களிலான மருந்துகளை நாம் வலிநிவாரணிகளாக  உபயோகப்படுத்துவதும்  அதனால்தான். இதனால் வலியின் தீவிரத்தை நாம் குறைக்கிறோம். “ஆஸ்ப்ரின்” மற்றும் “ஐபிப்ரோஃ பின்” மருந்துகள் வலியின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. 

 

வலியை உணர்வது எப்படி? 

உடலுக்கு சேதம் ஏற்படும் நிலை தோன்றினால் அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலத்தினை உற்பத்தி செய்யும். திசுக்களில் உள்ள “காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்கள்” (COX-1 and COX-2 enzymes) இவ்வாறு வெளிக்கிளம்பும் அராக்கிடானிக் அமிலத்தினை “ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ்” (prostaglandins-H2) எனப்படும் வேதிப்பொருளாக மாற்றும்.  தொடர்ந்து ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ் வேறு பற்பல வேதிபோருட்களாக தொடர்ந்து மாறுதல்களை  அடைந்து உடலில் சுரம், அழற்சி, வீக்கம் ஏற்படுத்துவது எனப் பல வகையில் செயல் படத் தொடங்கும்.  

ஒவ்வொரு நொதிப் பொருளுக்கும் வினையூக்கி பகுதி (active site) என்ற ஒரு பகுதி ஒன்று உண்டு. இந்தப் பகுதியில்தான் வேதியியல் வினைமாற்றங்கள் நிகழும்.  காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின்  வினைப்பகுதியில், பாதிக்கப்பட்ட செல்கள் வெளியேற்றிய அராக்கிடானிக் அமிலம் கச்சிதமாக வந்து பொருந்தும். இதன் விளைவு, நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்கள்  இயங்கத் தூண்டப்பட்டு வலியை நாம் உணர்வது.

 

Pain

நியூரோபத்திக் வலி (Neuropathic pain) என்பது நரம்பு செல்களே சேதம் அடைந்தால் உண்டாவது. இந்த வலி உண்டாக உடலுக்கு வெளியில் இருந்து தூண்டப்படும் பாதிப்பு தேவையில்லை. 

 

வலிநிவாரணிகள் எவ்வாறு வேலை செய்கிறது?

ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் உட்கொள்ளப்பட்டபின் அவை இரத்தத்தில் கலந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும், அதுபோல பாதிக்கப்பட்ட உடலுறுப்பினையும் அடையும்.  அங்கு அது காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அங்கு அராக்கிடானிக் அமிலம் பொருந்த விடாமல் அப்பகுதியை செயலிழக்கச் செய்யும்.

இவ்வாறு செயலிழக்க செய்வதை ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் வேறு வேறு விதமாக நிகழ்த்தும்.  ஆஸ்ப்ரின் வினைப்பகுதியின் இடத்தில் சிதைவடைந்து அந்த வினைப்பகுதியின் இடத்தையும் அடைத்துவிடும், அந்த நொதிகளை நிரந்தராமாக செயலிழக்கச் செய்யும்.

ஐபிப்ரோஃ பின் அவ்வாறு சிதைவடையாவிட்டலும், காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அந்த இடத்தில் அது இருக்கும் வரை அராக்கிடானிக் அமிலத்தினைப் பொருந்த விடாது தடை செய்யும். இந்த வினையில் காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் தன்மை மாறுபடாது ஆனால் தற்காலிகமாக செயலிழக்கும்.

இவ்வாறு வலிநிவாரணிகள் வெவ்வேறு வகையில் செயல் பட்டு  நொதிப்பொருட்களை  வெவ்வேறு வகையில் செயலிழக்க செய்து,  நொதிப்பொருட்களை அராக்கிடானிக் அமிலத்துடன் வினை செய்வதை தடுப்பதன் மூலம் வலியின் தீவிரத்தைக் குறைத்து வலியில்  இருந்து நமக்கு நிவாரணத்தைத் தருகின்றன.

வலியை உணர்வதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் நமது மூளையும்  பெரும்பான்மையான பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு  வலியைப்பற்றியே அதே கவனத்தில் இருந்தாலோ அல்லது நாம் மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருந்தாலோ நாம் வலியின் தீவிரம் அதிகம் இருப்பது போல உணர்வோம் 

________________________________________

நன்றி: TED Ed – How Do Pain Relievers Work?

படம் உதவி: http://static3.businessinsider.com/image/4f3552766bb3f79b6c000050/headache.jpg

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வலி நிவாரணி வேலை செய்யும் விதம்

  1. நல்வரவு. ஒரு பாயிண்ட். 
    ‘…ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் உட்கொள்ளப்பட்டபின் அவை இரத்தத்தில் கலந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும்…’

    ~ இது பிரச்னை. எல்லா மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு. ஆஸ்பிரன் ரத்தத்தின் நீர்த்துப்போகும் தன்மையை கூட்டும். வயிற்றை உபற்றவம் செய்யும். ஐபிப்ரோஃபினுக்கு சிறு நீரகத்தைக்குலைக்கும் சக்தி இருக்கிறது, அதிகமாக/ வழக்கமாக எடுத்துக்கொண்டால்

  2. உங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா.
    உண்மைதான் நீங்கள் சொல்வது.
    பலமருந்துகள் கொடுக்கும் பக்க விளைவுகளும், அறியாமையின் காரணமாக இரண்டு மூன்று மருந்துகளை சேர்த்து உட்கொண்டுவிட்டு, பிறகு அவை ஒன்றுக்கொன்று வினைபுரிந்து அவை உருவாக்கும் தீங்குகளும் அதிகம்.
    நாம் உட்கொள்ளும் மருத்துகளைப் பற்றி நாம் விவராமாக அறிந்து கொள்வதே பல இடர்களைக் குறைக்கும்.
    நன்றி.

  3. நல்லது, தேமொழி. இந்த அறியாமை நம்மூர்களில் பெரிய பிரச்னை. சமீபத்தில் எனக்கு தெரிந்தவரை ஸ்கூட்டர்க்காரன் காயப்படுத்திவிட்டு ஓடி விட்டான். அவர் வார்ஃபெரின் என்ற மருந்து எடுத்துக்கொண்டிருந்தவர். அதை கண்டுகொள்ளாமல், ஒரு பெரிய கார்ப்பெரேட் ஆஸ்பத்திரி சிகிச்சை அளித்தது. அவர் செத்து விட்டார். அதனால் தான் அபாயசங்கு ஊதினேன். தவறாக நினைக்கவேண்டாம். வல்லமையில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற இழை தொடங்கினேன். அறிமுகத்தை படித்தவர்கள் 1500. முதல் கட்டுரையை அம்போ என்று விட்டு விட்டார்கள். என் பூச்சாண்டி படம் பார்த்த பயமோ?
    அது போகட்டும். நீங்கள் கவனமாக தொடரும் பக்ஷ்ஹத்தில், என்னிடம் உள்ள ஆதாரபூர்வமான தகவல்களை அனுப்பி வைக்கிறேன். அல்லது நாம் இருவரும் சேர்ந்து எழுதுவோம். என்ன சொல்கிறீர்கள்?
    இன்னம்பூரான்

  4. உண்மையைச் சொல்வதனால் உங்களைப்போன்ற வாழ்க்கை மற்றும் எழுத்துலக அனுபவசாலியிடம் இருந்து என் கட்டுரைக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது என்னை உண்மையிலேயே திக்கு முக்காடச் செய்து விட்டது ஐயா.

    நீங்கள் சொல்வது போலவே செய்யலாம். ‘நுண்பொருள் காண்பது அறிவு’ என்ற தலைப்பில் நான் எழுத எண்ணி வல்லமை ஆசிரியரின் பார்வைக்கு சமர்ப்பித்த மற்ற கட்டுரைகளை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். மேற்கொண்டு எந்த வழியில் செல்லலாம் என்பதை உங்கள் தீர்மானத்திற்கே விட்டுவிடுகிறேன், மிக்க நன்றி என்று சொல்வதைத் தவிர எனக்கு சரியான வார்த்தைகள் தெரியவில்லை என் மகிழ்ச்சியைத் தெரிவிக்க.
    அன்புடன்
    தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *