நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-21

3

 

பெருவை பார்த்தசாரதி

வருடக்கணக்கில், இரவு, பகல் பாராமல், அதிகாலை முதல்  அந்தி சாயும் வரை, அரசியல் கலந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு என்றைக்குமே மகிழ்ச்சியும், மனஅமைதியும் என்பது மற்றவர்களைவிட சற்று குறைவாகவே இருக்கும்.  ஏனென்றால் நகரங்களில் பெருகிவரும் மக்கள் கூட்டம், எந்திர வாழ்க்கை, எதையோ தேடிக்கொண்டு வாகன நெறிசலோடு ஓடிக்கொண்டேயிருக்கும் சாமானியர்கள், சம்பளத்திற்காக உழைத்தது போக, கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தையும் மறுபடி அலுவலகத்திலேயே செலவிட்டு (Overtime) மேன்மேலும் பொருள் ஈட்டுவது… ஒரு பக்கம். முழுநேரமும் அலுவலகத்தில் செலவிட்டு களைப்புடன் வீட்டுக்கு வரும்போது, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பு மணிக்கணக்கில் மேன்மேலும் உடலுக்கு உபாதைகள் வரும் அளவில், குரோதம், சண்டை, வக்கிரங்கள் நிறைந்த மெகா சீரியல் பார்ப்பது… இன்னொரு பக்கம்.

 

இப்படி நமக்கு அபூர்வமாகக் கிடைக்கும் மிகக் குறைந்த நேரத்தையும் பயனற்ற ஏதாவதொன்று சாப்பிட்டு விடுகிறது. ஆக ஒரு வகையில் நற்பொழுதுபோக்கு என்பது நம் வாழ்வில் அறவே இல்லாமல் போய்விடுகிறது. மனதுக்கு இதமளிக்கும் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்வதற்கோ, நல்ல விஷயங்களைப் படித்துப் பயன்பெறவோ, இன்றய அவசர உலகத்தில் நல்ல நேரம் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம் என்பதே உண்மை. மனதுக்கும் நாம் பின்பற்றுகின்ற ஒழுக்கத்துக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு, மனதைப் பின் தொடர்ந்துதான் நல்லொழுக்கமும், பண்பும் அமைகின்றன.

 

தமிழ் இலக்கணத்தில் திணை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும் என்பதை நம் பள்ளிப்  பருவத்தில் படித்திருக்கிறோம். உயரிணை, அஃறிணை என்ற பாகுபாடு நல்லொழுக்கத்தைத் அடிப்படையாகக் கொண்டு பிரிவு செய்யப்பட்டது. நல்லொழுக்கமுடைய மனித உயிருக்கு மட்டுமே உயரிணை, மற்ற உயிர்களெல்லாம் அஃறிணை. மனிதனுக்கு நல்லொழுக்கமே அடிப்படை. மனிதனிடத்தில் மறைந்து கிடக்கும் ஆக்க சக்திகளை பூரணமாக உபயோகப் படுத்திக் கொள்ள மனிதனுக்கு இன்றியமையாத துணை ஒழுக்கம். ஒழுக்கம் என்பது மனதோடு உறவாடுவது. மனதைக் கட்டுப்படுத்தி ஒழுக்கத்தில் சிறந்து விளங்குபர்வர்கள்தான் உத்தம சீலர்களாக உலகத்தால் போற்றப்படுகிறார்கள். விஞ்ஞானத்திலே வியத்தகு முன்னேற்றத்தைக் கொண்டுவந்த அறிஞர்கள், மனதை ஒரு சீரான நோக்கில் செலுத்தினால் மட்டுமே சாதனை புரிவதோடு மட்டுமல்லாமல் பிறருக்கும் வழிகாட்ட முடிகிறது. மண்ணில் தோன்றிய எந்த ஒரு உயிரினத்துக்கும் இயற்கையாகவே ஒரு ஆற்றல் பிறவியிலேயே அமைந்துள்ளது. சிந்தனை என்கிற ஒப்பிடமுடியாத ஆற்றலை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி, மனிதனுக்கு அமைந்திருப்பதும் இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்று என்று கூறலாம். சாதாரண மனிதர்கள், அதை நெறிமுறைப்படுத்தும் போதுதான் “மாமனிதர்கள்” என்ற பட்டத்தோடு மற்றவரிடமிருந்து வேறுபடுகிறார்கள். இத்தகய வியத்தகு ஆற்றலைப் பெற முயற்ச்சிக்கும் போது, கடவுளின் அருளும் துணை நின்றால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பதை மஹாகவியின் சிந்தனையின் மூலமாக அறிந்து கொள்ளமுடியும்.

 

மஹாகவி பாரதியின்  வாழ்க்கை வரலாற்றை அலசிப் பார்த்தோமானால், அவர் தன் மனது ஒரு நிலையில் இல்லாதபோது, அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானித்த பின்பு சிந்தனையில் உதித்ததை உடனே ஒரு பேப்பரில் எழுதி விடுவாராம். அப்போது அவர் மனக்கண் முன்னே மாயக்கண்ணனே வந்துதிப்பானாம். மற்ற தோழர்களோடு, மாயக்கண்ணனையும் தன் நெருங்கிய தோழனாகக் கொண்டு, மனதால் நலிவுற்ற நண்பர்களுக்கு தமது பாடல்கள் மூலம், வலிமை சேர்க்கிறார். “கண்ணன் என் தோழன்” என்ற பாடலில்…. ஊனை வருந்திடு நோய் வரும் போதினில், உற்ற மருந்து சொல்வான், நெஞ்சம் ஈனக்கவலைகளைய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடுவான் பிழக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு, பேச்சினிலே சொல்வான், உழைக்கும் வழி வினையாளும் வழிபயன் உண்ணும்வழியுரைப்பான்……..என்று நமது மனம் எப்போதெல்லாம் சஞ்சலப்படுகிறதோ, அப்போதெல்லாம் மனதுக்கு இதமளிக்கின்ற செவிக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்த ஒரு பாடல் இது. மனம் ஒரு நிலையில் இல்லாதபோது, எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும், பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னையே! என்றவாறு மனதில் நல்லெண்ணம் தோன்றிட மகாசக்தியை தியானிப்பது நமக்கும் நலம் பயக்கும் அல்லவா!…

 

ஒரு நூற்றாண்டு கால கனவுக்குப் பின் தற்போதுதான்  ‘நாசா’ (NASA) விஞ்ஞானிகளுக்கு தங்கள் கனவு நனவாகியிருக்கிறது. சமீபத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு ‘கியூரியாசிட்டி’ (CURIOUSITY) என்கிற செயற்கைக்கோள் விண்கலம் சென்றிறங்கியது விஞ்ஞான முன்னேற்றத்துக்கு மேலும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பலகோடி மைல்களுக்கு அப்பால் பயணிக்கின்ற விண்கலத்தைக் தனது கட்டுக்குள் வைப்பது மனிதன். விண்கலத்தின் அத்துணை செயல்களையும் தனது கட்டளைகளாலும் சமிஞ்கைகளாலும் கட்டுப்படுத்தும் மனிதனுக்கு தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்துவது பெறும் சவாலகவே உள்ளது என்பதை வியந்து தெரிவித்திருந்தார்கள். மனத்த்தையும், மனநலத்தையும் பேணிக்காப்பதின் மூலம், தன்னம்பிக்கையோடு சுய ஆற்றலை வெளிக்கொணர முடியும் இவர்கள் கூற்று. முனிவர்களாலும், ரிஷிகளாலும் மட்டும்தான் மனதைக் கட்டுப்படுத்த முடியும், இதெல்லாம் நம்மைப் போன்ற சாமான்ய மனிதர்களால் முடியாது என்று ஒதுக்கி விடாமல் முயற்சித்தால் தெளிவான சிந்தனையை உறுதியாக அடையமுடியும் என்பதை நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம்மை உணரச்செய்திருக்கிறார்கள்.

 

மாமுனிகளும், சித்தர்களும், ஞானிகளும் தம்மை நாடி வருபவர்களுக்கு ஆசிர்வாதம் செய்வதைப் பார்க்கிறோம். சிரசைத் தொட்டு தங்களது பிராண சக்தியை பாதிக்கப்பட்டவர்கள் உடலில் செலுத்தும்போது ஆச்சர்யப்படும் வகையில் சில நோய்கள் பறந்தோடிவிடுவதாகப் படித்திருக்கிறோம். இது எவ்வாறு சாத்தியமாகிறது என்று சிந்தித்தோமானால், அவர்கள் தங்கள் மனதைத் தூய்மையாக வைத்திருந்து, ஒருநிலைப்படுத்தி, உயரிய சிந்தனையாலும், திண்மையான எண்ணத்தாலும் சேகரித்து வைத்துள்ள இத்தகய சக்தியை தக்க சமயங்களில் வேண்டுமென்னும்போது பயன் படுத்துவதால் வியத்தகு சாதனைகளைப் புரிய முடிந்ததை இதிகாசங்களில் படித்தாலும் பலர் இதை நம்ப மறுப்பதைக் காண்கிறோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதே செய்முறையை சற்று வித்தியாசமாக “பிரானிக் ஹீலிங்” (Pranic Healing) என்று ஆங்கிலத்திலே பெயரிட்டு அற்புதங்களை நிகழ்த்துவதை நாம் அனுபவித்து உணரும்போது அதை எளிதாக நம்பி விடுகிறோம். இது எல்லாமே மனதோடு சம்பந்தப் பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மனது தான் மூலக்காரணம். மனம் தூய்மையாயிருந்தால் மட்டுமே இத்தகய சக்திகளைப் பெற்று பிறருக்கு உதவ முடியும். மனதில் எழுகின்ற அளவுக்கு மீறிய கோபம், காழ்ப்புணர்ச்சி, பந்த பாசம் இணக்கம் போன்றவை கூட நமது உடல் நலத்தைப் பாதிக்கிறது என்பதுதான் மனநல மருத்துவ மேதைகளால் சொல்லக்கூடிய முக்கிய காரணங்களாகும். மனதைப் பக்குவப்படுத்தி விட்டால் சவால் மிகுந்த உலகத்தில் வெற்றிபெற முடியும் என்பதை இன்று செயல்படும் யோக மையங்கள் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் எல்லாவற்றுக்கும் ஆதாரமான மனோசக்தியைப் பெறுவது எளிதல்ல என்பது யாவரும் அறிந்ததே.

 

தற்போது மனநல மேம்பாட்டிற்காக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாரத நாட்டின் பண்பாட்டிற்கு ஏற்றபடி யோகா, தியானம், ஆழ்நிலை தியானம் போன்றவை இன்றும் உலகெங்கிலும் நமது சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. எண்ணற்ற ஒழுக்க சீலர்கள் இன்றும் நம்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே வழிகாட்டியாக அமைந்திருப்பதை இன்று நடைமுறையில் நாம் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். மனதை உயர்ந்ததாக வைத்துக்கொண்டால் இலட்சியம் உயர்ந்ததாக அமையும். ஒருவரது வாழ்க்கை எவ்வாறு அமையுமென்றால் அவரது மனதைப் பொருத்தே அமையும். மனம் மகிழ்ச்சியோடு இருக்கும் போதுதான் வாழ்த்துகளும் பாராட்டுகின்ற மனமும் வரும். பண்டிகைக் காலத்தில், சிலரிடம் வாழ்த்து வாங்க எத்தனிக்கிறோம். சிலரிடம் ‘இவர் நல்ல உள்ளம் கொண்டவரல்ல’ என்று சொல்லி விலகிவிடுகிறோம். ஒருவரது மனதைப் பொருத்தே ‘நல்லவர்’, ‘கெட்டவர்’ என்ற பாகுபாடு ஏற்படுகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைவது உளப்பாங்குதான் என்பதை இராமாயணத்தில் இராவணனின் மனநிலையும், விபீஷணனின் மனநிலையும், தருமரின் மனநிலை, துரியோதனன் மற்றும் திருதராட்டினனின் மனநிலையைக் கருத்தில் கொண்டு எளிதாக யூகிக்க முடியும்.

 

மஹாகவியைப் போலவே  கண்ணன்மீது பேரன்புகொண்ட இன்னொருவர், 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான ஸ்ரீகிருஷ்ணபாதர். இவருக்கு இன்னொரு பெயர் பெரியவாச்சான் பிள்ளை. ஆழ்வார் பாசுரங்களுக்குள் நுழைந்து ஆழமாக சிந்தித்து உரை எழுதியவர். வியாக்கியானத்தில் வல்லவர். இவருடைய வியாக்கியானத்தில் மனிதப் பிறவியின் சிறப்பை விளக்கியிருக்கிறார். மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்றால், தூய்மையான மனம், தெளிவான சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் இவை மூன்றும் ஒன்று சேரவேண்டும், அது மனிதனை உன்னதமான உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதை பின்வரும் பாடல் மூலம் அர்த்தம் கொள்ளலாம். ஐந்தறிவு ஜீவிகளிலிருந்து மேம்பட்டு மனிதராக வேண்டுமெனில், சேவை மனப்பான்மையோடு எப்படி நமது மனதைப் பக்குவப்படுத்த வேண்டுமென்பதை மூன்று நிலைகளில் எடுத்துச் சொல்லுகிறார்.

 

பிறரை இம்சித்துத் தன் வயிற்றை

வளர்க்க வேணும் என்றிருக்குமவன்  அதமன்,

பிறரும் ஜீவிக்க வேனும், நாமும் ஜீவிக்க

வேணும்  என்றிருக்குமவன் மத்தியமன்

தன்னை அழிய மாறியாகிலும் பிறர்  ஜீவிக்க

வேனும்  என்னுமவர் உத்தமன்.

 
சிறிய மற்றும் பெரிய பல்சக்கரங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி கடிகாரத்தை இயங்கச்செய்யும் மின்சக்தியைப் போல, எந்தப் பொருளையும் கண்ணால் பார்த்து களிப்படைவதும், வாயால் தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வதும், மூக்கால் வாசனை நுகர்ந்து முகம் மலர்வதும், மெய்யால் உற்றறிதலும், காதால் நன்னெறிகளைக் கேட்டலும் சரிவர நடைபெற வேண்டுமானால் “நமது உள்ளம்” அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே நாம் அனைவரும் கண்டுணரும் உண்மை.

தொடரும்

படத்திற்கு நன்றி :

http://www.successories.com/categories/Motivational-Posters/14/1

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-21

  1. தன்னை அழிய மாறியாகிலும் பிறர் ஜீவிக்க வேனும் என்னுமவர் உத்தமன். என்ற பெரியவாய்ச்சான் பிள்ளை தமிழுக்கேற்ப தங்கள் இனிமையான மனதை தொடும் கட்டுரை அமைந்தது. தங்கள் தந்தையாரின் பரிபூரண ஆசீர்வாதமும். பெருகவாழ்ந்தான் ஸ்ரீபட்டாபிராமர் அனுக்ரஹமும் தங்களிடம் நிறைய இருப்பதாலே பிறர் இப்படி படித்து சந்தோஷமடைகிறது. மிக்க சந்தோஷம். தாஸன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *