Blog

  • மார்கழி மணாளன் 24

     

     

    திருக்கோவலூர் – அருள்மிகு திருவிக்ரமப் பெருமாள் கோவில்

    ag

    வேங்கடனோ வாமனனோ விக்ரமனோ விண்ணவனே

    வித்தான அனைத்துள்ளும் சத்தான தத்துவமே !

    விடிவெள்ளி வான்மதி விண்மீன்கள் வட்டமிட

    விதியோடு விளையாட வழிவகுத்த வித்தகனே !

     

    மண்ணிருந்து  ஓரடியால் வானுயர அளந்தவனே

    வானிருந்து ஓரடியால் விக்ரமனே எங்களந்தாயோ?

    தன்னிருந்து பார்பவர்க்குத் தாளிரண்டும் தருபவனே

    கண்ணிருந்தும் காட்சியின்றிக் கலங்குகிறேன் வருவாயோ? 

     

    வானுயர்த்தித்  திருப்பாதம் திருமாலே தூக்கிநிற்க

    கூனுயர்த்திப் பார்த்தாலும் கொஞ்சமும் தெரிந்திடுமோ?

    நானழித்து வந்தோர்க்கு நாளெல்லாம் தெரிந்திடுவாய் 

    யாழிசைத்துப் பாடிடுவேன் நாளெல்லாம் நாராயணா!

     

    பித்தாகச் சேர்த்த பொருளனைத்தும்  விட்டொழித்து

    எட்டாத கனியான உனைமட்டும் உள்வைத்தால்

    வற்றாத நதியாக வளம்படைக்கும் வள்ளலன்றோ

    மற்றேதும் தீண்டிடுமோ மனமென்றும் நீயிருக்க !

     

    கற்றவை தேவையில்லை கண்ணனின் புகழ்பாட

    கற்பூரம் தேவையில்லை கண்ணனின் எழில்காண

    கற்சிலையும் தேவையில்லை கண்ணன் உளம்வாழ

    கடமையில் காதலுற்றால் கண்ணனங்கே காவலனே !

     

    வேண்டியவர்க்கு வேண்டியபடி  வடிவெடுக்கும் வேங்கடனே

    வேதனைகள் துடைத்திடவே வடிவின்றி விரைவோனே !        

    வானிருந்தும் வந்திடுவாய் தூணுடைத்துத் துரும்புடைத்து

    வழக்குரைக்கத் தேவையில்லை வருமுன்னே காப்பவனே !

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”சிம்மா சனமமர்த்தி ஸ்ரீவில்லி மங்கைக்கு
    நம்மாள்கல் யாண நலங்கிடல்: -சும்மாவா!
    ஆண்டாள் திருப்பாவை ஐயா(று) உரைப்போர்கள்
    வேண்டார் கரவரம் வேறு’’….கிரேசி மோகன்…..!
    ‘’மாரி மலைச்சிங்கம் மீது திருப்பாவை
    கூறிய கோதையார் காப்பிருக்கு, -தேரினில்
    ஆகுலம் தீர்க்கவன்று அர்சுனர்க்கு கீதைசொல்
    கோகுலத்தான் காப்பதற்கு காப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • கெய்ஷாக்கலை

    பவள சங்கரி

     

    மனித வாழ்வியலுக்கு அடிப்படைத் தேவைகளாகத் திகழ்வது உணவு, உடை, இருப்பிடம் ஆகியன. மனிதகுல வரலாற்றில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதே பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவை. இவைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிதைவுகள் அனைத்தும் வரலாறாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவைகளே ஒரு நாட்டின் அடையாளமாக ஆகிவிடுகின்றன. ஜப்பான் நாட்டின் அடையாளம் சற்றே வித்தியாசமானதாகவே தென்படுகிறது. சமீபத்தில் நான் லெஸ்லி டவுனர் அவர்களின் ஆங்கில வழி ஜப்பானிய  “கெய்ஷா” என்ற விரிவான புதினத்தை தமிழில் மொழிபெயர்த்தபோது இந்த எண்ணம் உறுதியானது. ஒரு நாட்டின் முன்னேற்றம், அதன் வீழ்ச்சி என அனைத்தும் அந்நாட்டின் பெண்களின் நிலையை வைத்தே எளிதாக எடை போட முடியும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

    மெய்க்கோ
    மெய்க்கோ

    உலக அரங்கில் நவீன ஜப்பான் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேறியிருக்கின்றது. ஜப்பானியப் பெண்கள் அதிகாரம் மற்றும் தன்னாட்சியைப் பொறுத்தவரை பாரம்பரியமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு ஆண் வீட்டின் தலைவனாகவும் குடும்பத்தின் வெளி உலக பொது விவகாரங்களைக் கட்டுப்படுத்தக்கூடியவராகவும் இருக்கின்றான். வீட்டில் உள்ள மனைவி குடும்பத்தை நிர்வகிப்பதில் கட்டுப்பாடுடன்  செயல்படலாம். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜப்பானில் குடும்ப கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பங்களில் ஆணாதிக்கம் கண்டுவருகின்றது. 1947 அரசியலமைப்பில் பாலியல் சமத்துவக்கொள்கை  நிறுவப்பட்டது.  பாரம்பரியக் குடும்ப அமைப்பு சட்டக் கட்டமைப்பை கலைத்து வந்தாலும், பெண்கள் நிலையில் சட்ட மாறுதல்களால் நடைமுறைத் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புச் சட்டங்கள், கல்வி சமத்துவம், மற்றும் வேலை, தொழில் முன்னேற்றம் போன்றவைகள் சிறந்துள்ளன.

    ஜப்பானில் பாரம்பரியக் கலைகள் என்பது காரியங்களைச் செவ்வனே செய்யும் விதத்தைக் கற்கும் வடிவமேயன்றி ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதற்கானது அல்ல. பூரணத்துவம் என்பதே இதன் கொள்கை; மரபின் பூரண வெளிப்பாடு, சரியான இடம், காலம் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு சரியான கிமோனோ உடையைத் தேர்ந்தெடுத்து அணிவது போன்றவை. ஒரு கெய்ஷா என்பவள், பாரம்பரிய முறையில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தம்மை முழுமையாக கலைக்கு அர்ப்பணிக்கும்  ஒரு கலைஞர்.

    neck-make

    கெய்ஷா என்பவர்கள் யார்?

    கெய்ஷாவின் வரலாறுகள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றாலும், அவை பழைமையான விபச்சாரத்தொழில் என்றே கருதப்பட்டும் வருகிறது. உலகளவில் பலர் ‘கெய்ஷா’ என்பது பாலியல் தொழிலாளி என்பதன் ஜப்பானியச் சொல் என்றே கருதுகிறார்கள். ‘courtesan’ என்கிற ‘அரசவை அணங்குகள்’ என்ற பதம் சற்று நெருக்கமாகத் தோன்றினாலும், அவர்களின் வரலாற்றை கருத்தில்கொண்டால் அது வேறு பாதைக்கு இட்டுச்செல்வதே நிதர்சனம். கெய்ஷா என்ற வார்த்தையின் பொருள், ‘கலைகளின் நபர்’ என்பது. ஆரம்பகால கெய்ஷாக்கள் ஆண்கள்தான். அவர்களுடைய முக்கியமான பணிகளே, நாட்டியம், இசை, கவிதை போன்றவைகளே.

    கெய்ஷா வரலாறு:

    பெண் பொழுதுபோக்காளர்களான, 7ஆம் நூற்றாண்டின் சபூருகோ, 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான ஷிராப்யோஷி போன்றோர்களை வேராகக்கொண்டிருந்தவர்களே கெய்ஷா என்பவர்கள். பிரபு வம்சத்தினருக்காகச் செயல்படுவதும், சக்கரவர்த்திகளின் காமக்கிழத்திகளாகவும் இருந்தனர். 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஜப்பானில் கேளிக்கை விடுதிகளின் முதல் தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டன. மற்ற பல ஜப்பானியக் கலாச்சார  அம்சங்கள் போன்றே அவர்கள் சீன மிங் வம்சத்தினரைப்போன்ற மாதிரிகளாயினர். 1600களின் மத்தியில் மீண்டும் இடம்பெயர்ந்த பின்பு அவர்கள் ‘ஷிமபாரா’ என்றழைக்கப்பட்டனர்.

    இதற்குள் ஈடோவில்  யோஷி-வாரா எனும் ஒரு சதுப்புநில வாழிடம், தோகுகாவா ஷோகுனேட்டின் ஆதரவுடன் விபச்சார மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் விபச்சாரங்கள் தடை செய்யப்பட்டு, அதற்கான கடுமையான சட்டங்களும் போடப்பட்டன. இதோடு, எந்தவொரு வாடிக்கையாளரும் ஒரு விபச்சார விடுதியில் 24 மணி நேரங்களுக்குமேல் தங்க அனுமதியில்லை; அரசவை அணங்குகள் சாதாரண வண்ணமிட்ட கிமோனோக்கள் மட்டுமே உடுத்த வேண்டும்; சந்தேகப்படும்படியான அல்லது முன்பின் அறிமுகம் இல்லாத புதிதாக வருபவர்கள் குறித்து நகர ஆளுநர் அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும் என்ற சட்டங்களும் போடப்பட்டன.

    ஜப்பான் வெகு நாட்களாகக் காத்திருந்த, நூற்றாண்டுகளின் உள்நாட்டுப் போர்களைத் தொடர்ந்த அமைதியான காலங்களில், பல சாமுராய்கள் சமுதாயத்திற்கு இவர்களின் சேவைகளின் தேவைகள் இனி இல்லை என்பதைக் கண்டறிந்தனர். பல முன்னாள் பிரபு குடும்பங்களின் வாரிசுகள், யோஷிவாரா, ஷிமபாரா போன்ற இடங்கள் மெருகேற்றிக்கொள்வதற்கும், கலாச்சாரத்திற்கும் உகந்த இடம் என்ற எண்ணத்தில் அரசவை அணங்குகளாகியிருந்தனர். அமைதியானச் சூழல் மகிழ்ச்சியையும், வணிகர்களின் முன்னேற்றத்தையும் உயர்த்தியிருந்தன.

    ஹானாமிச்சியினுள் பலவகையான அரசவை அணங்குகள் பிரிவுகள் இருந்தன, பத்தாண்டுகளில் தலைமை குரு மற்றும் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட தரங்கள் பல முறைகள் மாறியிருக்கின்றன என்றாலும் ஒருபோதும் அது நல்ல முறையில் அல்ல. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் அந்தச் சூழ்நிலை சற்றே மாறி, கொயோட்டோ மற்றும் ஒசாகாவில் ஒரு புதிய முறையிலான பொழுதுபோக்காளர்கள் வந்தனர். ஆரம்பகால கெய்க்கோ ஆண்களாக இருந்தனர். பின் வெகு விரைவிலேயேத் தோன்றிய பெண்கள் ‘ஓடோரிகோ’ என்ற நாட்டியக்காரிகளாகவோ அல்லது ஷேமிசென் வாசிப்பவர்களாகவோ இருந்தனர். வெகு விரைவிலேயே பெண் கெய்ஷாக்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டனர். யோஷிவாராவில் இவர்களைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர பதிவிடும் முறையை துவங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு அவர்களை வரி செலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டது. அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் என அனைத்தையும் தீவிரமாகக் கட்டுப்படுத்தினர். உண்மையில் இந்த சட்டத்திட்டங்களே கெய்ஷாக்கள் கலைஞர்களாகவும், பொழுதுபோக்காளர்களாகவும் உருவாக வழிவகுத்தது.

    அரசவை அணங்குகளைக்காட்டிலும் மிகவும் எளிமையாகவே அவர்கள் உடுத்தியிருந்தபோதும் அவர்கள் நவீன தலைவர்களாகக் கருதப்பட்டனர்.  20 ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினராலேயே கெய்ஷா வாழ்க்கைக்கு விற்கப்பட்டதோடு  அவர்களுடைய கன்னித்தன்மையும் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு, ‘மிஸூ-ஏஜ் என்ற சடங்கிற்கு உட்படுத்தப்பட்டனர்.

    இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இது போன்ற பழக்கங்கள் நிறுத்தப்பட்டு, கெய்ஷா தொழில் படிப்படியாக சரிவைச் சந்தித்தது.

    “கெய்ஷாக்களிடம் வரும் ஆண்கள் பெரும்பாலும் சமூகத்தின் மிக உயர்மட்டத்தில் இருப்பவர்கள். அதனால் அந்த அகம்பாவங்களை சுமந்தவாறே வருவார்கள். கெய்ஷா செய்யும் முதல் காரியம் அவர்களின்  அந்த ஆணவத்தை மறக்கச்செய்வதுதானாம். அதாவது அச்சம் சிறிதும் இல்லாமலும், அதேசமயம் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும், அவர்களை கோபம் கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைசாலிகளாம். அவர்களை ஒரு சாதாரண மனிதனாக்கிய பின்பு  உறவு கொண்டு அதுபோன்றொரு சுதந்திர உணர்வை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்கவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்திவிடுவார்களாம். அப்படி அங்கு வரும்  ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் சுயத்தை மீட்டெடுக்கும் கலையைத்தான் “கெய்ஷாக்கலை” என்கிறார்கள்.

    தலைநகரங்களில் காணக்கூடிய இருபெரும் பிரபலமான ஹனாமிச்சி (கெய்ஷா விடுதிகள்) டோக்கியோவும், கொயோட்டோவும். டோக்கியோ யோஷிவாரா கேளிக்கை விடுதிகளில் காபூக்கி கலைஞர்களும், நடிகர்களும் வணிகப்பெருமக்களுடன் கலந்துறவாடிக்கொண்டிருப்பர். 1600 – 1868 ஈடோ காலங்களில் ஜப்பான் வெளியுலகத் தொடர்பை பெருமளவில் குறைத்திருந்ததோடு, ஒரு மிகப்பெரும் கலாச்சார முன்னேற்றம் கண்ட காலமாகவும் இருந்தது. நடிகர்கள், ஸூமோ மல்யுத்த வீரர்கள், கெய்ஷாக்கள் போன்றோரே, கேளிக்கை உலகின் வண்ணமிகு யுகியோயி என்கிற மரத்துண்டு ஓவியங்களின் (மிதக்கும் உலகின் படங்கள்) மாதிரிகளாகக் கலக்கிக்கொண்டிருந்தனர். கொயோட்டோவைப் பொறுத்தவரை ஷிமபாரா மாவட்டம் இன்றளவிலும் கெய்கோ எனக்குறிப்பிடப்படும் மெய்க்கோ பாரம்பரியமான தேநீர் இல்லங்களில் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்டுபவர்களாக இருக்கின்றனர்.

    ஒரு முதுமொழி பகர்ந்துள்ளதைப்போல, அரசவை அணங்குகளின் பொய் என்பது, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’, அந்த வாடிக்கையாளரின் பொய், ‘நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்’ என்பதுதான். ஒரு மனிதனின் வரவை தொடரச் செய்வதற்கு, தன் காதலை பிரகடனப்படுத்துவதைக்காட்டிலும் வேறு வழி ஏதும் இருக்கமுடியாது. பதினேழாம் நூற்றாண்டில், அரசவை அணங்குகளுக்கு காதலை பிரித்துவிடும் வழிகளைக் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள் இருந்தன. உதாரணமாக, ஒருவன் கிளம்பிச் செல்ல தயாராகும்போது, சில துளிகளாவது கண்ணீர் விடவேண்டியது  மிக அவசியம். திட்டப்படி தேம்பி அழத்தெரியாத அனுபவசாலியாக இராமல் ஆரம்ப நிலையில் இருப்பவராக இருந்தால், அந்தப் புத்தகம் அவர்களுக்குக் கொடுக்கும் பாடம், தங்கள் கண் இமைகளை இரண்டு முறை இழுத்துவிட்டு, ஏதாவது சிறிய பொருளை ஒரு ஐந்து நிமிடத்திற்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்க்கவேண்டும், அல்லது தங்கள் கிமோனோவின் கழுத்தின் உட்புறம் வரும் தீச்சுவாலைகள் தங்கள் கண்களை உறுத்தும் விதமாக இருத்தல் வேண்டும்.

    ஜப்பானில் ஒழுக்கத்திற்கு முரணான கெய்ஷா என்ற பாலியல் அமைப்பும், மொத்த பாலுணர்வுக் கலாச்சாரமும், கடுமையான கன்பியூசயனிச சமூக அமைப்பினின்று எழுந்தது. சர்வாதிகாரத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பாமல் அடிபணிதல் ஒன்றே கன்பியூசனிசத்திற்கு தேவை. இந்த இருண்மையான உலகிலிருந்து இவர்கள் உருவான விதம் பற்றி தாம் அறிந்து கொண்டதை ஆழ்ந்த ஆய்வின் அடிப்படையில் வழங்கியுள்ளார், கெய்ஷா நூலின் எழுத்தாளர், லெஸ்லி டவுனர். ஆழ்ந்த அமைதியினூடே இருந்த அந்த மாயமான வரையறைக்குள்ளிருந்த ஒரு உலகில் வாழும் கெய்ஷாக்களைக் கண்டுபிடித்து சந்திப்பது சாமான்ய காரியமல்ல. விருது பெற்ற எழுத்தாளர், ஜப்பானிய அறிஞர், அருமையான கதை சொல்லியுமான லெஸ்லி டவுனர், பல மாதங்கள் அங்கேயே அவர்களுடனேயே வாழ்ந்து அந்த மாய உலகின் மறைவிலிருந்த குறிப்பிடத்தக்க பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். “பதினேழாம் நூற்றாண்டின் திருப்பத்தில் ஒருவேளை நீங்கள் கொயோட்டோவிற்கு வர நேர்ந்திருந்தால், கவர்ச்சியூட்டும் முன்னணி கேளிக்கை மனைகளாகப் பெருகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்த ஒழுக்கக் கேடான கேளிக்கைக் கும்பல் கிழக்கு மலைகளின் அடிவாரத்தில் உள்ள காமோ ஆற்றின் கரையிலுள்ள யசாகா ஆலயத்தின் அடர்சிவப்பு வாயில்வரை உங்களையும் இழுத்துச் சென்றிருக்கும்”, என்கிறார்.

    ஆச்சரியமூட்டும் ஜப்பான் கலாச்சாரம்.. ஜப்பானியப் பெண்களின் பரிதாப நிலை….

    ’எங்கள் மனைவியர் வீட்டில் சமையல் மற்றும் குழந்தைகள் என்று கட்டுண்டிருந்தனர். அவர்களுடனான எங்களின் உறவுகள் எப்பொழுதும் வீட்டு விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்களாகவே இருக்கின்றன. இதைக்கடந்து, ஆண்களுக்கு மற்ற உலக நடப்புகள் பற்றிப்பேச ஒரு மேம்பட்ட வித்தியாசமான துணையாக, கலை மற்றும் கருத்துகள் பற்றி விவாதிக்கக்கூடிய ஒரு பெண் தேவைப்படுகிறாள். எங்களுக்கு மகிழ்ச்சியூட்டி உற்சாகப்படுத்துகிற, அறிவாளியான நன்கு படித்த பெண்கள் தேவை. ஒரு கெய்ஷா இருக்க வேண்டியதும் இப்படித்தான்”

    1930 களின் மத்தியில் ஆன்றோர்கள், கவிஞர்கள், கெய்ஷாவை பணியமர்த்திய விடுதியாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் ஷிம்பாசி கெய்ஷா இல்லங்களின் கூட்டமைப்பின் இயக்குநர்கள் போன்ற அனைவரின் வாதங்களும் The Geisha Reader’ என்ற நூலில் தொடர் கட்டுரைகளாக வெளியிடப்பட்டன. அதில் கவிஞர் சக்குடாரோ ஹாகிவாரா, சமுதாயத்தில் கெய்ஷாவின் பங்கை ஒப்புக்கொள்ளக்கூடிய வாதமாக இப்படி முன்வைத்திருக்கிறார். இதிலிருந்தே ‘கெய்ஷா’ என்பதன் தத்துவம் தெளிவாக விளங்குகிறது.

    ஆம், கெய்ஷாக்கள்  ஜப்பானின் பழைய அரசாட்சிக் காலத்தில் அப்போதைய பிரபுக்களை மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட பெண்கள். இவர்களை உயர்குடித் தாசிகள் என்றும் சொல்லலாம். கெய்ஷா என்ற சொல்லின் பொருள், கலைபயின்றவள், அளிப்பவள் என்பது. ஆயிரம் ஆண்டுகளாக ஆண்களை மகிழ்விக்கும் கலையைக்கற்றுத் தேர்ந்த அதையே பிழைப்பாகவும் நடத்திக்கொண்டிருந்தவர்கள். காமம் என்பது உடற்சுகம் மட்டும் சம்பந்தப்பட்டதன்று. ஒரு  ஆணின் அகங்காரத்தை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு கலைகளைப்பயின்றவர்கள். கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிகவும் விரிவான, தெளிவான நூல், லெஸ்லி டவுனரின், ‘கெய்ஷா’.

     சுற்றுலாப் பயணிகளுக்கு ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகித பொம்மைக்கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான அனைத்து சுற்றுலா கவர்ச்சிகளைக்காட்டிலும் மிகக் கவர்ச்சிகரமான ஒரு விசயம் என்றால் அது கெய்ஷாவாகத்தான் இருக்கும். ஜப்பானில் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சொல் கெய்ஷா. பாலியலைக் கடந்து ஒரு தனிப்பட்ட சமூக அங்கீகாரம் பெற்றவள் கெய்ஷா. இவள் பிரபுக்களைத் தம் காதல் வலையில், மயக்கு மொழியில் சிக்க வைத்த கவர்ச்சி நாயகியோ அன்றி பாலியல் தொழிலாளியோ அல்ல. ஒரு சக்கரவர்த்தியாக இருந்தால்கூட அவளது விருப்பத்திற்கு மாறாக அவளைத் தீண்ட முடியாது. ஒரு கெய்ஷாவின் காதலுக்காக ஏங்கி பித்துப்பிடித்தவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் பலர் உண்டு. அதேபோல் சாமுராய்களின் உறவிற்கு மிக உண்மையாக இருந்து, அவர்களுக்காகத்தம் உயிரையும் அர்ப்பணித்த கெய்ஷாக்களும் உண்டு.

    இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், இந்த விசித்திரமான கெய்ஷா உலகத்தில் வலம் வரும் கணவன்களை ஜப்பானிய மனைவிகள் அங்கீகரிக்கிறார்கள் என்பதுதான். ஜப்பானியக் கலாச்சாரத்தின் முக்கியமான அங்கம் இந்த கெய்ஷா. ஜப்பானின் மறுக்க முடியாத அடையாளமும் கெய்ஷாதான். தனது இருபதாண்டு கால அனுபவத்தின் மூலம், ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மர்ம முடிச்சுகளை தெளிவாக விளக்கியுள்ளார் லெஸ்லி டவுனர்.

    கெய்ஷா தொழில் பழகுபவர்களை மெய்க்கோ என்பார்கள்.  மெய்க்கோவின் வாழ்க்கை முறைமைக்கும் கெய்ஷாவின் வாழ்க்கை முறைமைக்கும் பெரும் இடைவெளி இருந்தது. இது அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதொரு தொழில் என்பதே உண்மை. சமூகப் பின்னணிக்கு இங்கு இடமில்லை. மெய்க்கோ பயிற்சிகளுக்கு கடின உழைப்பும், நீண்ட நேரமும் ஈடுபட வேண்டியிருந்ததால், அவர்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. சமீப காலத்திலும் சரி இன்றும் சரி இந்த இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இதற்கான சரியான காலகட்டம் விபச்சாரம் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட 1958 ஆம் ஆண்டு என்று தன்னிடம் பேசிய அனைவரும் கூறியதாகச் சொல்கிறார் லெஸ்லி. கடந்த காலத்தில் காதல் என்பது தடை செய்யப்பட்ட கனியாக, சட்ட விரோதமாக இருந்த காரணத்தினாலேயே அதன்மீது அதீதமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.  ஆனால் இன்றும்கூட கெய்ஷாக்கள் மதிப்பிழக்கச் செய்யும் செயல்களிலிருந்து விலகி இருப்பினும், அவர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்கள் கொயோட்டோவின் அடையாளச் சின்னமாக இருந்தனர்.  மத்திய இரயில் நிலையத்திற்கு வருகிற பயணிகளை “கொயொட்டோவிற்கு வருக!” என்று வரவேற்கிற மெய்க்கோவின் படம் பொறித்த பதாகைகள் வரவேற்றன. கெய்ஷா உலகின் விளிம்பில் இருந்தவர்கள், தாங்கள் அறிந்த கெய்ஷாவை உயர்த்தும் விதமாக, அவர்களின், ஐதீகங்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை வெளிப்படையாக, மகிழ்ச்சியுடன் விவரிப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மகளை ஒரு கெய்ஷாவாக ஆக அனுமதிப்பார்களா என்று கேட்டபோது, அவர்கள் தலையைச் சாய்த்து நோக்கியவாறு, முணுமுணுப்பாக, “ஆம்.. இது சற்று சிரமமான கேள்விதான்” என்பார்களாம்.

    கெய்ஷா எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவு வீழ்ச்சியும் இருந்தது. வயது முதிர்ந்த கெய்ஷாக்களும், கடைக்காரர்களும் காமோ நதி, ஈஸ்டர்ன் ஹில்ஸ் மத்தியில் இருந்த மொத்த பகுதிகளிலும், வடக்கிலிருந்து, நான்காவது பாலத்திலிருந்து ஐந்தாம் பாலம்வரை ஒரு வித்தியாசமான உலகமாகவே இருந்த நாட்களை நினைவுகூருவார்கள். ஒவ்வொரு வசிப்பிடமும் ஒரு தேநீர் இல்லமாகவோ அல்லது கெய்ஷா இல்லமாகவோ இருந்தது. ஒவ்வொரு கடையும் கெய்ஷா சமூகத்திற்கு பணிபுரிந்தது. உச்சமான 1920 களில், நாடு முழுவதும் 80,000 கெய்ஷாக்கள் இருந்தனர். கியானில் மட்டுமே 2,500 கெய்ஷாக்களும், 106 மெய்க்கோக்களும் இருந்தனர். 1948 களில், போருக்குப் பின்னர் தேநீர் இல்லங்கள் திறக்கப்பட்டபோது, அங்கு 1,200 கெய்ஷா மற்றும் 160 மெய்க்கோ மட்டுமே கொயோட்டோவில் இருந்தனர். அந்நாட்களில், பூக்கள் மற்றும் வில்லோ உலகம் செழித்தோங்கும் தொழிற்சாலைகளாக, நெறிமுறை மற்றும் சடங்குகளால் ஆளப்பட்டு வந்தன. தேநீர் கடைக்குக் கடை, மரக்காலணிகள் தடதடத்தபடி கெய்ஷாக்கள் செல்வர். தினந்தோறும் தேநீர் இல்ல தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தி வருவார்கள். சில நேரங்களில் நாள் முழுவதும், அடுத்த நாள் வரையிலும் கூட கேளிக்கைகளில் ஈடுபட்டவாறு இருந்தனர். ஆனால் 1999 வாக்கில், 195 கெய்ஷாக்களும், 55 மெய்க்கோ மட்டுமே கொயோட்டோவில் இருந்தனர். அதில் 90 கெய்ஷா மற்றும் 22 மெய்க்கோ கியானில் இருந்தனர். ஒரு கட்டத்தில் எவை அவர்களை கெய்ஷா ஆக்கியதோ அது மறைந்த பின்னும் அவர்கள் கெய்ஷா என்று அழைக்கப்படவில்லை. நவீன ஜப்பானில், அவர்கள் அதற்கு மேலும் கேளிக்கை தொழிலின் இதயமாகவும் இருக்கவில்லை, அல்லது அந்தத் தலைமுறையின் மிக விருப்பமான பெண்களாக – கடற்கன்னிகை போலவோ ஆராதிக்கப்படுபவர்களாகவோ இல்லை. காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாக ஆனபின் அவர்கள் எந்த விதமான பங்களிப்பை அளிக்க இயலும்?

    ஆற்றோரத்து மக்களுக்கு இணையாக மதிப்பற்று இருந்த காபூக்கி நடிகர்கள், தலைவர்கள், மதிப்பிற்குரியவர்களாக மாறினர். மாற்றவொண்ணாத ஈடோ காலத்தில் புதையுண்டிருந்த அவர்கள் இப்போது மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நாடக உடைகளை அணிந்துகொள்கிறார்கள். ஆனால் கெய்ஷாவே இந்தப் போக்கை தொடர விரும்பினாலும், அவர்களுக்கு அது வாய்க்கவில்லை. அந்த மலர் மற்றும் வில்லோ உலகின் சாரமே அதன் இரகசியம்தான்.

    பணம் படைத்தவர்கள் மத்தியில் கெய்ஷாக்கள் இருந்தாலும் அதனால் பிழைப்பவர்கள் இல்லை அவர்கள் என்பதோடு அதனால் அவர்களுக்கு ஒரு இலாபமும் இருக்கவும் இல்லை.

    ஒரு கெய்ஷாவின் குடும்பம் என்பது எப்படியிருக்கும் என்ற ஆர்வம் எழுவது இயற்கை.

    ஆரம்பப் பள்ளியில் கெய்ஷாக்களின் மகள்கள் பலர் படித்துக்கொண்டிருந்தனர் . சில நேரங்களில், இன்னாருடைய தந்தைதான், இப்படியான ஒரு கட்டுமான தொழிலகத்தின் உரிமையாளர் இன்னாருடைய தந்தை ஒரு மருத்துவர் அல்லது ஒரு பல் மருத்துவர் அல்லது ஒரு நடிகர் என்றபடி வதந்திகளும் உலவின. ஏனைய ஜப்பான் மக்கள் இதை விநோதமானதாகக்கூட நினைத்திருக்கலாம் என்றாலும் இந்த கெய்ஷா மாவட்டங்களில் ஒரு பெற்றோர் குடும்பங்கள் என்பது சர்வ சாதாரணம்தான். இதனால் குழந்தைகள் குற்ற உணர்வால் சிரமப்பட்டார்களா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதுதான். உண்மையைச் சொல்லப்போனால் எவருக்கும் இரண்டாவது சிந்தனையேகூட இருந்ததில்லை. அவர்கள் கெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரே தொல்லைதான். அடிக்கடி அவர்கள், ‘இன்று மாமா வருகிறார்கள்!’ என்று சொல்வதைக் கேட்கலாம். அவர்களுடைய தந்தை வரும்போதெல்லாம் அவர்களுக்கு வேண்டுவது அனைத்தும் கிடைக்கும் என்பது அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது.  மேலும் “தயாரிப்புக்குக் கட்டணம்” என்பது அவளை உருவாக்கியதற்கும், அதுவரை வளர்த்ததற்கான கட்டணமும் ஆகும்.

    அவள் பள்ளிவிட்டு திரும்பியவுடன், சுத்தம் செய்வது, மெய்க்கோவிற்கு உதவுவது மற்றும் கெய்ஷாவிற்கு கிமோனோ அணிவதிலும் மற்றும் ஒப்பனை செய்வதிலும் ஒத்தாசையாக இருக்க வேண்டும். அவள் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருந்ததோடு, அவளுக்கென்று நண்பர்களும் கிடையாது. அவளுக்கு 7 மற்றும் 20ந் தேதி என மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு கிடைக்கும். இதெல்லாம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்நாட்களில், அனைத்து இடங்களிலும் குழந்தைகள் நிரம்பியிருந்தனர். அது சாதாரணமானதாகவே இருந்தது. எவருமே, யார் யாருடைய பெற்றோர் என்று கேட்டதே இல்லை.

    ஆக்கிரமிப்புக்கு முன்பாக, அதாவது 1958 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு  முன்பாக, ‘ஸெகென்’ – அழகான இளம் பெண்களைத் தேடி கிராமப்புறத்தின் ஏழ்மை நிறைந்த பகுதிகளுக்குச் சென்று அவர்களைக் கொயோட்டோவிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு மேலும் பயிற்சி கொடுப்பது வழக்கம். அந்நாட்களில் பணிப்பெண்கள் கொயோட்டோவிற்கு ஆறு அல்லது ஏழு வயதிற்குள் வந்து விட்டாலும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் பயிற்சிக்குப் பிறகு பதினொரு வயதில் மெய்க்கோ ஆகிவிடுவார்கள். அதனாலேயேதான் அவர்கள், தாங்கள் அதிகம் உயரமாக வளராதபோதும், தங்கள் உயரத்தை கூட்டிக் காட்ட நான்கு அங்குலம் உயரத்திற்கு காலணி அணிந்திருந்தார்கள். நவீன கால மெய்க்கோக்கள் தங்கள் வாடிக்கையாளர்களைக்காட்டிலும் அதிக உயரமாகக் காட்டிக்கொள்கிறார்கள். இன்னும் பலவித மாற்றங்கள் இருந்துகொண்டிருந்தன. முந்தைய போர்க்கால நாட்களில் கொயோட்டோவின் பெரும்பாலான மெய்க்கோக்கள் கெய்ஷா குடும்பங்களிலிருந்துதான் வந்தனர்; அவர்கள் தாய்மார்கள், பாட்டிமார்கள் மற்றும் சில நேரங்களில் அவர்கள் கொள்ளுப்பாட்டிகள் கூட கெய்ஷாவாக இருந்திருக்கின்றனர். நாட்டுப்புறத்திலிருந்துவந்த பெண்கள், சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்தனர். ஆனால், நாகரீக காலங்களில், பல கெய்ஷா மகள்கள் வேறு தொழிலை மேற்கொள்ளவோ அல்லது ஒரு சாதாரணமான மனிதனை மணந்து, ‘சாதாரண’ வாழ்க்கை வாழவோதான் விரும்பினார்கள். சில மூத்த முன்னாள் கெய்ஷாக்கள்  தங்களுடைய உண்மையான பெயரைச் சொல்லி குறிப்பிடுவதைக்கூட விரும்பவில்லை. காரணம், தன் மகன்கள், மகள்கள், தற்போது பேரக்குழந்தைகள் மற்றும் மதிப்பிற்குரிய ஏனைய குடும்ப உறுப்பினர்கள் உட்பட எவருக்கும் தான் ஒரு கெய்ஷாவாக இருந்தது தெரியாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.

    பண்டைய நாட்களில், வறுமை காரணமாக பெற்றோரே தங்கள் குழந்தைகளை விற்கும் நிலை இருந்தது. போருக்கு முன்னால், கெய்ஷாவின் பெண்கள் தங்களுடைய ஆறாவது வயது, ஆறு மாதம், ஆறு நாட்களில் நாட்டிய வகுப்புகள் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அந்நாட்களில், இது ஒரு முக்கியமான தொழிலாகக் கருதப்பட்டதோடு, போல்ஷாய் பாலே மாணவர்கள் போல இளம் வயதிலேயே குழந்தைகள் தமது பயிற்சியைத் துவங்கினர். நவீன கால மெய்க்கோ பதினான்கு அல்லது பதினைந்து வயதுவரை தங்களுக்கான பயிற்சியை ஏதும் மேற்கொள்ளவில்லை. இதற்குள் முறையான கல்வி பயின்றிருந்தனர். இந்தக் கல்வி அவர்களை கேள்வி கேட்கச் செய்திருந்தது. நாட்டிய வகுப்பில் திரும்பத் திரும்ப பயிற்சி செய்ய வேண்டும். சீடனாக கீழ்படிந்து நடக்க வேண்டும். ஒரு கெய்ஷா குடும்பத்தின் நான்காம் தலைமுறை என்ற உயரிய தகுதியுடைய ஒரு எழுபது வயது முதிய பெண்மணி, ‘பழைய காலங்களில் பெண்களிடம் குறைந்தபட்ச அடிப்படை மரியாதைகளையாவது எதிர்பார்க்க முடிந்தது,’ என்று ஆச்சரியத்தில் புருவம் உயர என்னிடம் கூறினார். தற்போது, அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை: ஒரு கிமோனோவை எப்படி அணிவது, எப்படி நடப்பது, எவ்வாறு அழகாக, ஒரு முட்டி மற்றையதைவிட, ஒன்று அல்லது இரண்டு அங்குலம் உயரமாக இருக்கும்படி மண்டியிடவோ அல்லது ஃபியூசுமா என்ற சரிவு, காகிதக் கதவுகளை, கைகள், விரல்கள் மற்றும் கட்டை விரலை நேராக வைத்துக்கொண்டு ஒன்றாக சேர்த்து நளினமாக அழுத்தம் கொடுத்து திறக்கும் முறைமையையோ அறிந்திருக்கவில்லை. சிலர் அதற்கு முன்பு தரை விரிப்பில் (டடாமி) உட்கார்ந்ததே இல்லை. சிலருக்கு சாப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்தவும்கூடத் தெரியவில்லை. ‘அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்!’ என்று ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் கூறியதையும் குறிப்பிடுகிறார் லெஸ்லி.

    சிகையலங்காரம் என்பது அவர்களின் முக்கியமான அடையாளமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் இஷிஹாரா, கியானின் பழம்பெரும்,  மெய்க்கோ மற்றும் தாயூ சிகையலங்காரங்கள் குறித்து நான்கு நூல்கள் எழுதியுள்ளார். தாயூ அரசவை அணங்குகளின் தனிப்பட்ட சிகையலங்காரத்தை உருவாக்கத் தெரிந்த ஒரே மனிதர் ஜப்பானிலேயே அவர் மட்டும்தான். ‘ஈடோ காலங்களில் ஒருவரைப் பற்றிய அனைத்தும் அவருடைய முடியைக்கொண்டே சொல்ல முடியும்’, என்கிறார் பேராசிரியர் இஷிஹாரா.

    ஆம், அந்நாட்களில் ஒவ்வொரு வகுப்பு மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான சிகையலங்காரம் இருந்துள்ளது. அதை வைத்தே அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய தொழில் மற்றும் அவர்கள் எந்த நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து வருகிறார்கள் போன்ற அனைத்தையும் கூற முடியும். அது இன்றும் தொடரும் ஒரே இடம், கெய்ஷா உலகம் மட்டுமே. கெய்ஷா தொழிலின் ஒவ்வொரு பருவத்திற்கும் வித்தியாசமான சிகையலங்காரமும், ஜப்பானின் வெவ்வேறு பகுதி கெய்ஷாக்களுக்கும் வெவ்வேறு விதமான கிமோனோவும் உண்டு.

    ‘ரிப்பன், நகைகள், பட்டு மலர்கள், பேகல் வடிவில் முடியை உருட்டி உயரமாக உச்சந்தலை கொண்டையுடன், கூடிய ஒரு சிகையலங்காரம்தான் மெய்க்கோவின் முதல் சிகையலங்காரம். இதன் அர்த்தம் அவள் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறாள் என்பதுதான். ‘ஓஃபுகு’ என்ற கீழ் முடிச்சிட்ட, சற்று குறைவான சிகை அலங்காரங்களுடன் இருந்த சிகையலங்காரத்தின் விளக்கம், அவள் மேலும் கன்னியாக இல்லை என்பதால் வாழ்த்தப்படவேண்டியவள் என்பதுதான். மெய்க்கோ தன் பதின்மூன்றாம் வயதிலேயே இது போன்ற சிகையை அணிந்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். கெய்ஷாக்கள், அந்த இளம் பதின்மூன்று வயதில், அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ, கன்னி கழிக்கப்பட்டது வேதனையான விசயம். இதனை ‘மீசுகே சடங்கு’ என்கிறார்கள்.

    சில முக்கியமான விசேசங்களுக்கு, ‘யாக்கோ – ஷிமாடா’ என்ற புத்தாண்டு விழாக்களுக்கான அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தும் உயர் அலங்காரம்  உண்டு.  ‘காட்சூயாமா’ என்பது  பதினேழாம் நூற்றாண்டின், குளியல் இல்ல பணிப்பெண் ஒருத்தியின் பெயர் கொண்ட சிகையலங்காரம் பின்னாட்களில் அவள் பிரபல அரசவை அணங்கு ஆனாள். உண்மையிலேயே பேரழகாக இருந்த மெய்க்கோக்களின் இறுதி சிகையலங்காரம், ‘சேக்கோ’ என்ற உச்சிக்கொண்டை சிகையலங்காரம்.  அவள் கெய்ஷாவாகப் பட்டம் பெறும் இறுதி மாதத்திற்கு முன்பு செய்து கொள்ளும் அலங்காரம் சாக்கோ. ஒரு முன்னாள் மெய்க்கோவை அடையாளம் காட்டுவது அவளுடைய உச்சந்தலையில்  காணப்படும் வட்ட வடிவ வழுக்கைதான். ஐந்தாண்டுகளாக வாரத்திற்கு வாரம், சிகையலங்காரம் செய்பவரால் இழுத்துக் கட்டப்பட்டு, அந்த முடி திரும்ப வளராமலே போனதால் ஏற்பட்ட சொட்டை அது.

    லெஸ்லி, பேராசிரியர் இஷிஹாராவின் பணியை அழகாக விளக்குகிறார். “தான் தேர்ந்தெடுத்த அந்தப் பொருளான தலை முடியை வைத்து அழகை உருவாக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கலைஞனைப்போல இருந்தார். ஒரு சிறிய கரி கன்னான் மீது சுருள் இரும்புகளை சூடாக்கிக்கொண்டு முடி நீண்டு பளபளப்பாக ஆகும்வரை கேசத்தை இழுத்துப் பிடித்தான். பின் நறுமண கேச எண்ணெயுடன் வாரிக்கொண்டு, பின்ஸுயூக் எண்ணெய் (ஸுமோ மல்யுத்த வீரர்களின் உச்சிக்கொண்டை  அழுத்தமாக இருப்பதற்காக  பயன்படுத்தும் எண்ணெய்) யுடன் தலையை வாரி, முடியைப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார். தலையின் மகுடப்பகுதியில் உள்ள முடியில் ஆரம்பித்து, அதை இறுக்கமாக ஒரு குதிரைவால் கொண்டையாகக் கட்டிக்கொண்டு, கையில் தயாரித்த காகிதச் சுருள்களைக் கட்டி, அடர்த்தியாகத் தெரியும்படியும், உச்சந்தலையில் முடிச்சாக வரும்படி அதைத்தள்ளிக் கட்டினார். அவர், பின்னந்தலை முடியில் சுருள், சுருளாகவும்  முடிச்சிட்டு, பின் ஒரு சன்னமான மரக்குச்சியைச் செருகி அது தன் இடத்தில் வாட்டமாகப் பொருந்தும்படிச் செய்தார். அப்படியே முன்னந்தலை முடியும் சுருளாக்கப்பட்டது. பின் அவர் பக்கவாட்டில் இருந்த இரண்டு பகுதிகளைப் பிரித்து அதில் பின்ஸூக்கே எண்ணெயைத் தடவி,  சுருட்டிக்கொண்டு, அவைகளை இரண்டு சிறகுகளைப் போன்று அமைத்து மத்தியில் இருந்த கொண்டையுடன், முகத்தின் இரு புறமும் வரும்படி முடிச்சிட்டார்.  முடிப்பட்டை (ரப்பர் பேண்ட்) போன்ற ஒரு சன்னமான மரப்பட்டை பேண்ட்டை எடுத்து அந்தச் சிறகுகள் போன்ற அமைப்பின் மத்தியில் செருகி, அது இறுக்கமாகப் பொருந்துமாறும், ஒவ்வொன்றின் இடையிலும் பொய் முடியையும் செருகி உள்ளே சரியாகப் பொருந்துமாறும் செய்தார்.

    பின் அவர் ஒரு முடிக்கற்றையை எடுத்து, திபெத்திய யாக் மாட்டின் கரிய முடி வாலை எடுத்து அதை மெய்க்கோவின் முடியுடன் சேர்த்துக் குதிரை வால் கொண்டையாகக் கட்டினார். அவர் அனைத்தையும் ஒன்றாகச்சீவி, முன்புறமாக மடித்து, பின்புறமாக முடிச்சிட்டு, அதைத் திறந்து, விரித்து, மடித்து – ஆகா, அங்கு ஒரு பேகல் போன்ற உருவமைப்பில் கொண்டை. இறுதியாக அவர், முன்னந்தலை முடியை வளைத்து, அதை நடுவில் இருந்த கொண்டையுடன் இணைத்தார். மேலும் அவர் அந்த பேகலின் இடையில் ஒரு ஊசியைச் செருகி அழுத்தமாக நிற்கச் செய்து, கடினமான கருப்பு காகிதத்தின் சில துண்டுகளால் அச்சிறகுகளின் வடிவம் குலையாமல் நிற்கவும் மற்றும் ஒரு ஜோடி வழுவழுப்பான சிகப்பு ரிப்பன்களும் கட்டினார். இந்த மொத்த அலங்காரமும் செய்து முடிக்க கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஆனாலும், இறுதியில் அது உறுதியாகவும், பளபளப்பாகவும், விளையாட்டு நேரத்திலோ தூங்கும் நேரங்களிலோகூட அவிழாமல் ஒரு வாரம்வரை அழுத்தமாகவே இருந்தது” என்கிறார்.

    அந்நாட்களில் கொயோட்டோ முழுவதும் விலையுயர்ந்த பட்டு விற்பனையாளர்கள் மற்றும் கிமோனோ வியாபாரிகள் நிறைந்திருந்தனர். அவர்கள் மெய்க்கோவை கவனித்துக்கொள்ளும் செவிலித் தாய்மார்களுக்காக அந்த டான்னா என்ற புரவலன் அந்தப் பெண்ணிற்கு ஒரு வீடு வாங்கித்தந்து, அவளுக்குரிய கன்னி கழிப்பு சடங்கிற்கான செலவும் ஏற்று அவளுக்கு ஊதியமும் அளித்து வருவான்.

    முந்நூரு ஆண்டுகளாக, ஆண்கள் பணமளிப்பது பெண்கள் கொடுக்கும் பாலியல் இன்பத்திற்காக மிகவும் யதார்த்தமாக இருந்திருக்கிறது. தற்போது அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. 1958 முதல் இவைகளனைத்தும் பெரும் மாற்றத்திற்குள்ளானது. தற்போது இன்னும் தீவிரமாக உள்ளது. அனைத்து மெய்க்கோக்களும் தங்கள் நடனத்தில் கவனம் செலுத்துகின்றனர்.

    ஷேமிசென்

    yoshida_brothers

    கெய்ஷாவின் முக்கியமான வாத்தியக்கருவியான ஷேமிசென் 3 சரமுள்ள வீணை. ஓகினாவான் சேன்ஷின் என்பதன் மாற்றாக நம்பப்படுகிறது. ஷேமிசென்னின் நீளம் 1.1 முதல் 1.4 மீட்டர் வரை இருக்கும். முதன் முதலில் ஈடோ காலமான 1600-1868 களில் கேளிக்கை மாவட்டங்களில் பிரபலமாக இருந்ததோடு காபூக்கி, புன்ராகூ நிகழ்ச்சிகளிலும் அழகுக்காக பயன்படுத்தப்பட்டது. காபூக்கி பல்வேறு நடன இசை, நீண்ட இசையின் சொந்தமானதொரு வடிவை உருவாக்கிக்கொண்டது. ஷேமிசென் செஞ்சந்தன மரத்தினால் தயாரிக்கப்பட்டு, பூனை அல்லது நாயின் தோலினால் அதன் தலைப்பகுதி மூடப்பட்டிருக்கும். சரங்களை முறுக்கப்பட்ட பட்டாகவும், ஆப்புகளை பாரம்பரிய முறைப்படி தந்தத்தினால் செய்யப்படுகின்றன. பாரம்பரியமாக ஷேமிசென் வாசிப்பவர்கள் கடினமாகவும், உணர்ச்சியற்றும் இருக்கவேண்டியுள்ளன.

    இகெபானா – மலர் அலங்காரம்

    ஜப்பானிய இகெபானா என்ற மலர் ஏற்பாடு மிகவும் சிக்கலான ஒன்று. இதைக் கற்றுக்கொடுப்பதற்கு பல பள்ளிகள் உள்ளன. அந்தப்பள்ளிகளால், செடிகள், பூச்சாடிகள் பொறுத்து பலவிதமான அலங்காரங்கள் செய்ய கற்பிக்கப்படுகின்றன. பலவிதமான மாற்றங்களுக்குப்பிறகும் இன்றும் இகெபானா என்ற மலர் ஏற்பாடு மேல்மட்டத்தினருக்கு மட்டுமே உரித்ததாக உள்ளது.

    இன்று ஜப்பானில் 3,000 இகெபானா பள்ளிகளும், உலகைச்சுற்றி ஆயிரக்கணக்கான பள்ளிகளும் உள்ளன. உலகளவில் 60,000 ஆசிரியர்கள் உள்ளனர். ஜப்பானில் பெரும்பாலும் 15 மில்லியன் இளம் பெண்கள் இகெபானா பழகியுள்ளார்கள்.

    ஜப்பானிய கிமோனோ

    ஜப்பானியக் கிமோனோ என்பது உலக மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பாரம்பரிய உடையாகும். ‘கிமோனோ’ என்பதன் பொருள் ’ஆடை’ என்பது. 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலங்கள் வரை ஜப்பானியர்கள் அனைவரும் உடுத்திய உடை. மெய்ஜி காலங்களில் மெல்ல மெல்ல இறக்குமதி செய்யப்பட்ட கால் சராய்களுக்கு மாற்றம் கண்டன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும், பருவங்களுக்கும் ஒவ்வொரு விதமான கிமோனோக்கள் உண்டு. அன்றாட பயன்பாட்டில் இருக்கும் சாதாரண கிமோனோ தவிர கலைஞர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய கலைநயம் மிக்க கிமோனோக்கள் தற்காலங்களில் அதிகம் காணப்படாவிட்டாலும் இன்றும் திருமணங்கள், பட்டமளிப்பு விழாக்கள் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில் பரவலாக அணியப்படுகிறது. அதிகமாக காணப்படாததன் காரணம் இதன் அதிக விலைதான். ஒரு நல்ல தரமான கிமோனோ உடையின் விலை ஒரு மில்லியன் யென் ஆகிறதாம். மற்றொரு காரணம் மிக வித்தியாசமான இந்த உடையமைப்பு. ஓபி என்ற அலங்காரப்பட்டை அணிவது இளம் பெண்களுக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இதனை அணிவதற்கு அவர்கள் பெரியவர்களிடமோ அல்லது கிமோனோ பள்ளியிலோ பயற்சி எடுக்க வேண்டியுள்ளது.

    ஜப்பானியர்களின் கண்களிலும் கெய்ஷா மற்றும் மனைவிகளுக்கு பெருத்த வேறுபாடு உண்டு; ஜப்பானியப் பெண்களின் இரு துருவங்களான கெய்ஷாக்களும் மனைவியரும் கிமோனோ அணிவதில் பெரும் வேறுபாடு உண்டு. கெய்ஷாக்கள் சொல்ல முடியாத அளவிற்கு கவர்ச்சியாக இருந்தனர்; ஆனால் அது குறிப்பையும் தெரிவையும் காட்டும்  மிக நுட்பமான கவர்ச்சியாக இருந்தது.

    ஒரு கெய்ஷாவிற்கு, ஒரு கிமோனோவை தேர்ந்தெடுப்பதும், அதை அணிவதும் அவளுடைய பாரம்பரிய நடனப் பயிற்சி அல்லது ஷேமிசென் வாசிப்பின் கற்றல் போன்றவற்றிற்கு ஈடானது. கிமோனோ என்பது ஒரு தேநீர் விழா, பூக்கள் அலங்காரம், அல்லது தூரிகை ஓவியம் போல  மிக நுட்பமானதும் மற்றும் சிக்கலானதுமானதொரு கலை. மிக சன்னமான, ஆடம்பரமான பட்டு நூலில் நெய்யப்பட்ட கிமோனோக்கள் மிக நேர்த்தியாகவும், பல நேரங்களில் மிகவும்  சிக்கலான வடிவமைப்புகளுடன் சாயமேற்றப்பட்டிருந்தது; இடங்களின் வரை படங்கள், பாலங்கள், நீர் நிலைகள், மரங்கள் மற்றும் பறவைகள் போன்றவைகளும் ஒரு கிமோனோவின் ஊடே உருண்டு கிடந்ததோடு நகை போன்ற வண்ணங்களும் தீட்டப்பட்டிருந்தன.

    ஒரு கெய்ஷா பருவ காலத்திற்கேற்ற கிமோனோவை இயல்பாகத் தேர்ந்தெடுப்பாள். குளிர் மாதங்களுக்கு, செப்டம்பர் மாதச் சூறாவளியிலிருந்து குளிர்பனி ஊடாக, செர்ரி மலர்கள் உதிரும் ஏப்ரல் மாத இறுதி வரை, அவள் மொத்தமான சில்க் துணியால் ஆன இரண்டு அடுக்கு கிமோனோவில் கிரேப் உள்ளடுக்கு வைத்ததை அணிகிறாள். மே மற்றும் ஜூன் மாதங்களில் அவள் மெலிதான ஒற்றை அடுக்கு கிமோனோவுக்கும், கொளுத்தும் கோடையான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவள் மிகவும் சன்னமான பஞ்சு போன்ற மென்மையான சில்க் உடைக்கும் மாறிவிடுவாள்.

    காலணிகள்

    பாரம்பரியமான ஜப்பானியக் காலணிகள் குறிப்பிட்ட அந்த ஆடை அணியும்போது மட்டுமே அணியப்படுகிறது. ஸோரி என்பது, கிமோனோவுடன், முக்கியமான நிகழ்ச்சிகளில் அணியப்பட்டும்  வைக்கோற்புல் அல்லது சாயம் பூசிய மரத்தினாலான காலணிகள். ’கெட்டா’ என்பது சாதாரண வேளைகளில் யுகாட்டா எனும் உடையுடன் அணியும் உயரமான மரக்காலணிகள். இந்த வகை கெட்டா காலணிகள் தற்காலங்களில் ஸூமோ மல்யுத்த வீரர்களின் பாதங்களில் காணமுடிகிறது. அவர்கள் நடந்து வரும் முன்னே மிக வித்தியாசமான ஓசைகள் வந்து சேரும். முதிய ஜப்பானிய மக்கள் குறிப்பிட்ட இந்த ஓசையை  நாகரீக காலங்களில் இழந்துவிட்ட முக்கியமான விசயங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர்.

    ஒரு கெய்ஷாவாக ஒரு பெண் பயிற்சி பெறுவதில் பலவகை சிரமங்கள் உள்ளதால் தற்காலத்தில் கெய்ஷா பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டன.

    உசாத்துணை:

    கெய்ஷா – ஆங்கிலத்தில் லெஸ்லி டவுனர்/ தமிழில் பவள சங்கரி

    http://www.dailymail.co.uk/femail/article-3071763/Inside-secret-world-Geisha-Intimate-photos-reveal-Japanese-women-maintain-400-year-old-traditions-modern-world.html

    https://www.japan-zone.com/culture/geisha.shtml

    http://www.historyundressed.com/2008/08/history-and-culture-of-japanese-geisha.html

    https://www.insidejapantours.com/japanese-culture/geisha/

    http://www.insidekyoto.com/kyoto-geisha

    http://www.everyculture.com/Ja-Ma/Japan.html#ixzz4QWpBDGvy

    Share
  • இதுவரைக் காணாத புதுவித இரட்டை வளையம் பூண்ட அபூர்வ வட்ட ஒளிமந்தை

     

    double-ring-galaxy

    [HOAG’s Bull’s Eye Galaxy]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பால்மய வீதியின்
    பரிதி மண்டலக் கோள்கள்
    சுழன்றோடும்
    விளையாட்டு மந்தை !
    ஒளிமந்தை

    ஒவ்வொன்றும் ஒருவிதம் !
    வட்ட வடிவத்தில்
    இரட்டை வளையங்கள் சுற்ற
    மையக்கருவை வணங்கி
    வலம்வரும்
    ஒளிமய மான மந்தை !
    புதுவித மந்தை !
    இதுவரைக் காணா விந்தை !

    சூரிய மண்டலம் சுற்றும்
    சுருண்ட பால்வீதி போலின்றி
    உருண்டை  வடிவம் !
    கோடான கோடி
    ஒளிமய மந்தைகள் விரைவாய்
    உந்திச் செல்லும்
    பிரபஞ்சக் குமிழி விரியுது
    பெரியது !

    +++++++++++

    fig-1b-the-galaxy-spirals-glow

    ‘புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது ‘

    ஜான் ஹெர்ச்செல் (John F. Herschel) (1792-1871)

    இதற்கு முன், செந்நிற மையக் கருவைச் சுற்றி நீல நிற வளையம் கொண்ட ஒளிமந்தைகளைக் கண்டிருக்கிறோம்.  அவற்றில் பலருக்குத் தெரிந்த கோக் ஒளியண்டம் [Hoag Object] போன்று சில.  ஆயினும் இந்த அபூர்வ ஒளிமந்தை [Galaxy: PGC 1000714] மங்கலான பழையச் செந்நிற உட்புற வளையம் ஒன்றை வெளிப்புற வளையத்துடன் கொண்டுள்ளது.

    பாட்ரிக் டிருதார்ட் [Patrick Treuthart, Co-author, Astrophysicist, North Carolina Museum of Natural Sciences]

    W Herschel -2

    ஜான் ஹெர்ச்செல்

    இதுவரைக் காணாத புதுவித அபூர்வ ஒளிமந்தை

    2017 ஜனவரி 4 ஆம் தேதி வானியல் விஞ்ஞானிகள் இரட்டை வளையம் பூண்ட வட்ட வடிவ மையக்கரு ஒளிமந்தை [Galaxy] ஒன்றைத் தொலை நோக்கி மூலம் கண்டதாக வெளியிட்டுள்ளார்.  அந்த காலக்ஸியின் பெயர் [PGC 1000714].  அது பூமியிலிருந்து சுமார் 359 மில்லியன் ஒளியாண்டு [Light- years] தூரத்தில் உள்ளது.  இதுவரை அதுபோல் யாரும் கண்ட தில்லை. புதிய தகவல் அதன் மையக்கரு சற்று நீள்வட்டம்.  அதைச் சுற்றிலும் உள்ளவை இரண்டு வட்ட வளையங்கள்.  இந்த ஒளிமந்தை கோக் தர காலக்ஸி  [Hoag’s-type Galaxy]  வகுப்பைச் சேர்ந்தது.  ஒளிமந்தை என்பது என்ன ?  நமது பூமி சுற்றும் பரிதி மண்டலம் போல் கோடான கோடி சூரிய மண்டலங்கள் சுழலும் நமது பால்வீதி காலக்ஸி [Milky Way Galaxy] ஓர் ஒளிமந்தையே.  நமது பால்வீதி ஒளிமந்தை போல் கோடான கோடி காலக்ஸிகள் இயங்கி விரியும் குமிழியே நமது பிரபஞ்சம்.

    [HOAG’s Bull’s Eye Galaxy]

    “கண்ணுக்குத் தெரியும் கோடான கோடி ஒளிமந்தைகளில் 0.1% எண்ணிக்கைக்குக் குறைந்தே கோக் ஒளிமந்தைகள் உள்ளன,” என்று தலைமை ஆய்வாளர், புர்சின் முட்லு பக்டில்  [Burcin Mutlu-Pakdil] கூறுகிறார்.  அந்த கண்டுபிடிப்பு அறிக்கை வெளியிட்ட புர்சின் அவரும் அவரது மாணவர் ஒருவரும் மின்னிசோடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் பௌதிக ஆய்வாளர்கள்.  கோக் ஒளிமந்தை  உருண்ட மையக்கருவை வட்ட வளையம் ஒன்று சுற்றும் தோற்றம் கொண்டது. வளையத்துக்கும் மையக்கருவுக்கும் இணைப்பு ஏதுமில்லை.  ஆய்வாளர் இருவரும் தென்னமெரிக்கா சில்லி மலைமேல் உள்ள பெருவிட்டத் தொலைநோக்கியில் ஒளிமந்தையின் பல்வேறு அலைவரிசைப் படங்கள்  [Multi-waveband Images] மூலம் தகவல் சேமித்தார்.

    fig-1c-how-galaxy-works

    பெரும்பான்மையான காலக்ஸிகள்  நமது பால்வீதி ஒளிமந்தை போல் தட்டு வடிவானவை [Disc-shaped].   ஒளிமந்தை வளையங்கள் மோதும் வாயு முகில்கள் உருவாக்கும் பரிதிகள் கொண்டவை.  உட்புற, வெளிப்புற வளையங்களின் வண்ண வேறுபாடுகள், அவை வெவ்வேறு காலத்தில் தோன்றியவை என்பதை அறிவிக்கின்றன.  ஒளிமந்தை வடிவங்கள் உட்புற / வெளிப்புற சூழ்நிலை ஈடுபாட்டு இயக்கங்களால் [Environmental Interactions] உருவாகின்றன.  ஒளிமந்தையின் வெளிப்புற வளையம், ஒரு காலத்தில் அருகே வாயு மண்டிய குள்ளி [Dwarf] காலக்ஸியின் ஒரு பகுதியைப் பற்றிக் கொண்டதாக இருக்கலாம்.

    Our Milky Way Galaxy

    பால்மய வீதியை முதன்முதலில் நோக்கிய விஞ்ஞானி கலிலியோ

    1600 ஆண்டின் ஆரம்ப காலத்தில் இத்தாலிய வானியல் விஞ்ஞான மேதை கலிலியோதான் முதன்முதல் நமது பால்மய வீதி (Milky Way Galaxy) காலக்ஸியைத் தனது தொலைநோக்கியில் கண்டு உளவு செய்தவர். அந்த ஒளி விண்ணரங்கில் எண்ணற்ற விண்மீன்கள் இருந்ததைக் கண்டு வியந்தார். அதற்குப் பிறகு 1755 இல் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவல் கென்ட் (Immanuel Kant) பால்மய வீதி குவியாடி போன்ற விண்மீன்களின் மந்தை (Lens-shaped Group of Stars) என்றும், அதனைப் போல் வேறு விண்மீன்களின் மந்தைகள் உள்ளன வென்றும் கூறினார். பிரிட்டனில் பணிபுரிந்த அடுத்தொரு ஜெர்மன் வானியல் நோக்காளர் வில்லியம் ஹெர்ச்செல்தான் (1738-1822) முதன்முதலில் விஞ்ஞான ரீதியாக பால்மய வீதியைத் துருவி ஆராய்ந்து எழுதியவர். அதற்குப் பிறகு அவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லும் புதல்வர் ஜான் ஹெர்ச்செல்லும் வில்லியத்தைப் பின்பற்ற ஏராளமான காலாக்ஸிகளைத் தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்துப் பதிவு செய்தார்கள்.

    Carina Nebula

    காலக்ஸியும் அதில் சுற்றிவரும் கோடான கோடி விண்மீன்களும்

    காலக்ஸி என்றால் என்ன ? சூரியனைப் போன்ற கோடான கோடி விண்மீன்கள் மையக்கண் ஒன்றைச் சுற்றிவரும் ஒரு பூத வடிவான விண்ணரங்கமே காலக்ஸியாகக் கருதப்படுகிறது. அந்த காலக்ஸியில் விண்மீன்களுடன், விண்மீனைச் சுற்றும் அண்டக்கோள்களும், ஒளிமய நிபுளாக்களும், வாயுக்களும், தூசிகளும் மண்டிக் கிடக்கின்றன ! மேலும் காலக்ஸிகளில் மாபெரும் திணிவும், மையத்தில் அளவற்ற ஈர்ப்பாற்றலும் கொண்ட கருந்துளை (Black Hole: A Single Point of Infinite Mass & Gravity) ஒன்றும் இருக்கலாம். பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான திணிவாகக் (Mass) கருதப்படும் 50 பில்லியனுக்கு மேற்பட்ட காலக்ஸிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் ! கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டம் இல்லாமல், அவையே பிரபஞ்சத்தின் 90% திணிவைக் கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.

    காலக்ஸிகள் சில சுருளாக இருப்பவை. சில நீள்வட்ட வடிவில் இருப்பவை. சில கோணலாக இருப்பவை. பால்மய காலக்ஸியும் அதன் அருகே உள்ள அன்டிரோமேடா காலக்ஸியும் சுருளானவை. காலக்ஸி முழுவதும் ஓர் அச்சில் சுற்றுவதால் விண்மீன்களைக் கவ்விக் கொண்டு சுருள் கரங்கள் தோன்றின. நீள்வட்ட காலக்ஸிகளில் சுருள் கரங்கள் எழாமல் பொதுவாகப் பழைய விண்மீன்களும் மிகச் சிறிதளவு வாயுக்களும், தூசிகளும் உள்ளன.

    குடை ராட்டினம் போல் நமது பரிதி மண்டலம் தனித்து ஒரு மையக் கண்ணைச் சுற்றி வருகிறது பால்மய வீதி காலக்ஸியே ! பால்மய வீதியில் பரிதியைப் போல் நூறு பில்லியன் விண்மீன்களும், ஒருவேளை கருந்துளை ஒன்றும் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. நமது பால்மய வீதியில் விண்மீன் முந்திரிக் கொத்துகளும் (Star Clusters) அண்டக் கோள்களும், ஒளிமயமான நிபுளாக்களும், வாயு மேகங்களும், தூசிகளும், வெற்றிடமும் சேர்ந்து உள்ளன. பூர்வீக விண்மீன்களும், நெருங்கி அடர்ந்த கொத்துக்களும் (Denser Clusters), காலக்ஸி மையத்துக்கு அருகிலும், இளைய விண்மீன்களும், தளர்ந்த கொத்துக்களும் (Open Clusters) காலக்ஸி தளத்தட்டில் அமைந்துள்ளன !

    பால்மய வீதி காலக்ஸியின் தனித்துவச் சிறப்புகள்

    நமது பரிதி மண்டலம் சுற்றிவரும் பால்மய வீதி என்பது ஒருவிதச் சுருள் காலக்ஸியே (Spiral Galaxy). தீபாவளி சுருளாழி மத்தாப்பு போல் சுழல்வது. பால்மய வீதியின் விட்டம் சுமார் 100 ஆயிரம் ஒளியாண்டு தூரம் (One Light Year : ஓர் ஒளியாண்டு என்பது தூர அளவு : அதாவது விநாடிக்கு 186,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி ஓராண்டு செல்லும் தூரம்). மையக்  கண்ணின் தடிப்பு ஈராயிரம் ஒளியாண்டு தூரம். மையக்கண்ணில் பழைய விண்மீன்களும் ஒரு கருந்துளையும் இருக்கலாம் என்று கருதப் படுகிறது. பால்மய வீதியைச் சுற்றிலும் ஓர் “ஒளிவட்டம்” (Halo) விண்மீன் கொத்துக்களாலும் (Band of Star Clusters), கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்ட மேகத்தாலும் (Cloud of Dark Matter) அமைக்கப் பட்டுள்ளது ! அந்த சுருள் ஆழியில் நான்கு கரங்கள் சுற்றி வருகின்றன. ஆயிரக் கணக்கான விண்மீன்கள் தோரணங்களாய்ப் பின்னிய நான்கு கரங்களைத் தாங்கி பால்மய காலக்ஸி தன் மையத்தைக் கொண்டு சுற்றி வருகிறது !

    பரிதி மண்டலம் நான்கு கரங்களில் ஒன்றான ஓரியன் கரத்தில் (Orion Arm) மையத்திலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது ! நமது பூமி சூரியனைச் சுற்றி வருவதுபோல், சூரியனும் பால்மய வீதியின் மையத்தை விநாடிக்கு 137 மைல் வேகத்தில் (220 கி.மீ./விநாடி) சுற்றி வருகிறது. அந்த வேகத்தில் சூரியன் ஒருமுறை முழுவட்டம் சுற்றிவர 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப் படுகிறது !

    விண்முகில் எனப்படும் நிபுளாக்கள் (Nebulae) என்றால் என்ன ?

    1924 இல் அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் முதன்முதல் ஒரு சுருள் வடிவான நிபுளாவைக் கலி·போர்னியா வானோக்ககத் தொலைநோக்கியில் கண்டார். நிபுளா என்றால் முகில் என்பது பொருள். அகிலத் தூசிகள், அண்டவெளி வாயுக்கள் சீர்குலைந்த விண்மீன்களில் சிதறிப்போய்க், காட்சி முறையில் கையாளப்படும் ஒரு சொல் நிபுளா ! சில வாயுக்களாய் எஞ்சிய சிதைவுக் காலக்ஸிகள் ! சில நிபுளாக்கள் பேரொளியுடன் சுருளாக, அண்டங்களாக, கதிர் வீசுபவையாக, பிரதிபலிப்பவை யாகவும் (Spiral, Planetary, Emission & Reflection Nebulae) உள்ளன. மற்றவை சூப்பர்நோவா வெடித்துச் சிதறிய துணுக்குகள். அண்ட நிபுளா என்பது (Planetary Nebula) வாயு முகில்களே ! தொலைநோக்கியில் பார்க்கும் போது கோள வடிவில் தெரிவதால் அவை அண்ட நிபுளாக்கள் என்று அழைக்கப்பட்டன. கதிர்வீச்சு நிபுளா (Emission Nebula) என்பதில் ஒளிவீசும் வாயு முகில்கள் உள்ளன. அவற்றின் உள்ளே அல்லது பின்னே சூடாக ஒளிவீசும் விண்மீன் இருக்கிறது. வாயுக்கள் அயனிகளாய்ப் பிரிந்து உயர்சக்தி புறவூதாக் கதிர்களை (High Energy Ultra-Violet Radiation) அவை உமிழ்கின்றன ! உதாரணமாக ஓரியன் நிபுளாவில் (Orion Nebula) ஹைடிரஜன் வாயுள்ள ஒருவிதப் பச்சை நிற முகில் தெரிகிறது.

    பிரபஞ்ச காலக்ஸிகளை ஆராய்ந்த ஹெர்ச்செல் குடும்பத்தார்

    பிரிட்டிஷ் ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல், அவரது தங்கை கரோலின் ஹெர்ச்செல், தனயன் ஜான் ஹெர்ச்செல் ஆகிய மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விந்தையான பல ஒளிமீன் மந்தைகளை விண்வெளியில் கண்டுபிடித்து, வானியல் வரலாற்றில் புரட்சியை உண்டாக்கினார்கள். வில்லியம் ஹெர்ச்செல் யுரேனஸ் புதுக்கோளையும், அதனிரு துணைகோளையும் கண்டவர். தங்கை கரோலின் சகோதரன் வில்லியத்துடன் துணையாகப் பணியாற்றி அவற்றைத் தொடர்ந்து பதிவு செய்து, சில வால்மீன்களையும் கண்டு பிடித்தவர். வில்லியத்தின் மகன் ஜான் ஹெர்ச்செல் வானியல், கணிதம், பெளதிகம் [Physics], நிழற்பட இரசாயனம் [Photochemistry], விஞ்ஞான வேதாந்தம் [Philosophy of Science] ஆகிய துறைகளில் தனது மேம்பட்ட பங்கை முக்கிய பகுதியில் அளித்திருக்கிறார். சார்லஸ் டார்வின், மைக்கேல் ·பாரடே, மேரி ஸோமர்வில் மற்றும் பல உலக மேதைகள் அவருடன் கொண்டிருந்த 7500 தொடர்புக் கடிதங்கள், அவரது நூற் களஞ்சியத்தில் [Archives] பாதுகாப்பாய் சேமித்து வைக்கப் பட்டுள்ளன.

    நமது பால்மய வீதி ஒளிமந்தை

    தந்தையைப் பின்பற்றி 20 அடி, 40 அடி குவிநீளத் தொலை நோக்கிகளில் வானைக் கண்ணளாவித் தனயன் ஜான் ஹெர்ச்செல் புரிந்த பணிகள் அநேகம். தென்னாப்பிக்காவின் தெற்குக் கோடியில் உள்ள நன்நம்பிக்கை முனையில் [Cape of Good Hope] பல்லாண்டுகள் தங்கி தென் மண்டல விண்கூரையைத் [Southern Celestical Hemisphere] தொலைநோக்கியில் உளவு செய்து 3347 இரட்டை விண்மீன்களையும் [Double Stars], 2602 நிபுளாக்களையும் [Nebulae] கண்டு பிடித்தார். அவர் வெளியிட்ட முதல் நிபுளா அட்டவணையில் [First Catalogue of Nebulae] காணும் 5079 பால்மய ஒளிமீன் மந்தைகளில் தந்தையார், வில்லியம் ஹெர்ச்செல் கண்டவை 2477. ஜான் கண்டவை: 2602.

    மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நிழற்படத் துறையை [Photographic Works] வளர்ச்சி செய்த முன்னோடிகளில் முக்கிய படைப்பாளியாகக் கருதப்படுவர், ஜான் ஹெர்ச்செல். ‘·போட்டோகிரா·பி ‘ [Photography] என்னும் பெயரைப் படைத்தவ§ அவர்தான். நிழற்படத் துறையில் ‘எதிர்ப்படநிழல் ‘, ‘நேர்ப்படநிழல் ‘ [Negative, Positive Films] என்னும் வார்த்தைகளைப் படைத்தவரும் ஜான் ஹெர்ச்செல்தான்!

    ஜான் ஹெர்ச்செல் புரிந்த மகத்தான விஞ்ஞானப் பணிகள்

    ஜான் ஹெர்ச்செல் 1792 இல் இங்கிலாந்து ஸ்லோவ் [Slough] என்னும் நகரில் பிரிட்டனில் குடிபுகுந்த ஜெர்மன் வில்லியம் ஹெர்ச்செலுக்குப் பிறந்த ஏக புதல்வன். கேம்பிரிட்ஜில் உள்ள புனித ஜான் கல்லூரியில் பயின்று கணிதத் துறையில் 1816 இல் பட்டம் பெற்றார். ஒப்பற்ற வானியல் விஞ்ஞானிகளான தந்தை வில்லியம், அத்தை கரோலின் இருவராலும் ஜான் வளர்க்கப் பட்டார். அவர் இருவது அருகில் வளர்ந்த ஜான் ஹெர்ச்செல் வானியல் துறையில் வல்லமையும், தொலைநோக்கி மூலம் வானோக்கி உளவும் பயிற்சியும் பெற்றார். தந்தையாரைப் பின்பற்றி அவர் கண்டுபிடித்த பால்மய ஒளிமீன்களின் எண்ணிக்கையை மிகையாக்கி ஆயிரக் கணக்கான இரட்டை மீன்கள் [Double Stars], ஒளிமீன் மந்தைகள் [Star Clusters], நிபுளாக்கள் [Nebulae] ஆகியற்றைக் கண்டுபிடித்தார். முதலில் (1864) வெளிவந்த நிபுளா, விண்மீன் திரட்சி பொது அட்டவணையில் [General Catalogue of Nebulae & Clusters] ஜான் ஹெர்ச்செல் மற்றும் தந்தையார் வில்லியம் ஹெர்ச்செல் இருவரும் கண்டவை 3347 இரட்டை விண்மீன்கள்; 2400 நிபுளாக்கள்.

    ஒளிமந்தை -1

    இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்த ஜான் ¦†ர்ச்செல் எவ்விதக் கல்வித் துறையிலும் பதவி ஏற்காமல் வாழ்நாள் முழுதும் வான்வெளி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். அவரது கல்லூரி கணித ஆசிரியர், உட்ஹவுஸ் [Woodhouse] என்பவர். நியூட்டன் ஆக்கிய கால்குலஸ் [Calculus] போலின்றி சற்று எளிதான லெப்னிட்ஸ் [Leibnitz] படைத்த, கால்குலஸ் அணுகுமுறைக் கணிதத்தை ஆங்கிலத்தில் எழுதியவர் உட்ஹவுஸ்! கேம்ப்ரிட்ஜ் கல்லூரிப் பாடத்திட்டத்தில் ஏனோ லெப்னிட்ஸின் கால்குலஸ் அணுகு முறைகள் சேர்க்கப் படவில்லை. ஜான் தனிதாகத் தானாகப் படித்து அவ்வித எளிதான கால்குலஸ் அணுகு முறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1813 இல் கணிதத்தில் முதல்வராகத் தேறி முதல்நிலைப் பட்டம் பெற்றார்.

    ‘கோட்டே தேற்றத்தின் மகத்தான விளைவுப்பயன் ‘ [On a Remarkable Application of Cotes’s Theorem] என்னும் கணித விளக்கவுரையை எழுதி, ராயல் சொஸைட்டியின் ·பெல்லோ [Fellow of Royal Society] ஆனார். 1820 இல் இரண்டு ‘முடிவுறும் வேறுபாடுகளின் பயன்கள் ‘ [Applications of Finite Differences] என்னும் கணிதச் சிறப்பு நூல்களை வெளியிட்டார். 1820 ஆண்டுகளின் முடிவில் கணித ஆய்வுகளிலிருந்து விலகி, ஜான் ஹெர்ச்செல் தன் முழு ஆர்வத்தையும் வானியல் துறையில் [Astronomy] மூழ்க்கினார்.

    ஜான் ஹெர்ச்செல் வானியல் ஆய்வுத் துறையில் நுழைவு

    78 ஆவது வயதில் [1816] தந்தை வில்லியம் ¦†ச்செல் வானியல் பணியில் தளர்ச்சி யுற்றதும், ஜான் ஹெர்ச்செல் அப்பணியை அவர்சார்ப்பில் தொடர்ந்தார். 1822 இல் வில்லியம் காலமானதும்,அத்தை கரோலின் மீண்டும் ஹானோவர், ஜெர்மனிக்குச் சென்றார். அந்த ஆண்டில்தான் ஜான் ஹெர்ச்செல் சந்திர கிரகணத்தைப் புதிய முறையில் கணிக்கும் [Eclipses of the Moon] சிறியதோர் வானியல் விஞ்ஞான முதல் ஆய்விதழை வெளியிட்டார். ஆனால் அவரது முதற் பெரும் பதிப்பு என்று கருதப்படுவது: லண்டன் ராயல் சொஸைடி வெளியிட்ட ‘இரட்டை விண்மீன்களின் அட்டவணை’ [Catalogue of Double Stars (1824)]. வில்லியம் ஹெர்ச்செல்லைப் போல், ஜானும் ஆழ்வெளியில் அதிதூரத்தில் நகரும் விண்மீன்களின் [Deep Space Distant Stars] போக்கை நோக்கி வந்தார். தொலை விண்மீன் ஒன்றின் ‘இணைத்திரிபு இடஅமைப்பைக் ‘ [Parallax of a Star] கணிக்க முயன்றார். அப்போது இரட்டை விண்மீன்கள் யாவும் ஓர் ஈர்ப்பு மையத்தைச் சுற்றி வரக் கண்டு, அவற்றின் சுற்றுவீதிகளைக் [Orbits] கணிக்க, முதன்முதல் கணித முறைகளை வகுத்தார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொஸைடி அப்பணிக்குத் தனது ராயல் தங்கப் பதக்கத்தை அளித்தது.

    பல்வகை ஒளிமந்தைகள்

    1834-1838 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் கோடியில் உள்ள நன்னம்பிக்கை முனையில் [Cape of Good Hope] தங்கி தென்னக விண்கூரையை [Southern Hemisphere] நோக்கி உளவு செய்து, பால்மய விண்மீன்கள், நிபுளாக்கள் ஆகியற்றைப் பதிவு செய்தார். அங்கே தான் கொண்டுவந்த 20 அடி குவிநீளத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வான்குடையை ஆய்வு செய்தார். தென்னாப்பிரிக்க வானில் அவர் கண்ட விந்தைகள்: 1835 இல் திரும்பி பூமி நோக்கி வந்த ஹாலியின் வால்மீன் [Halley ‘s Comet, Edmund Halley (1656-1742)] அவரது தொலைநோக்கியின் கண்ணில் பட்டது. வால்மீன்களின் விந்தை யான போக்குகளை ஆராய்ந்த போது ஈர்ப்பு விசையைத் தவிர வேறு பலதீவிர விசைகளும் அவற்றின் போக்கைப் பாதிக்கின்றன என்று அறிந்தார். பரிதியிலிருந்து வால்மீனை அப்பால் விரட்டும் விசையை அவரால் கணித முறையில் வகுக்க முடிந்தது. அப்போதுதான் ஜான் ஹெர்ச்செல் முதன் முதல் பரிதிக் காற்றைப் [Solar Wind] பற்றிக் கண்டுபிடிக்க ஏதுவாயிற்று! வால்மீனைத் தள்ளும் விலக்கு விசைக்கு [Repulsive Force], பரிதியின் காற்றே காரணம் என்பதை எடுத்துக் காட்டினார். மேலும் வால்மீனின் அண்டத்தி லிருந்து வாயுக்கள் ஆவியாய் வெளியேறுகின்றன என்று முதலில் கண்டுபிடித்தவரும் ஜான் ஹெர்ச்செல்லே! 1847 இல் தென்னாப்பிரிக்காவில்தான் கண்டுபிடித்த வானியல் விந்தைகளை நூலாக வெளியிட்டு, லண்டன் ராயல் சொஸைடியின் இரண்டாவது கோப்லே தங்கப் பதக்கத்தைப் [Copley Medal] பெற்றார்.

    ஆழ்வெளியில் ஒளிவீசும் பால்மய ஒளிமந்தை, நிபுளாக்கள்

    ஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன! பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை! அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன! ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.

    பல்வேறு ஒளிமந்தைகள்

    ஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது! அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி! நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன! காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம்! நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது! [Light Years -Distance light covers in a year at the rate of 186000 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும்! ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.

    நிபுளாக்கள் என்பவை யாவை ? காலக்ஸிகளை உற்பத்தி செய்யும் மூல ஒளிமய முத்துக்களைக் [Materials that form Galaxies] கொண்ட, அல்லது காலக்ஸி விண்மீன் மந்தைகளைப் பெற்ற ஒளிமுகில் கூட்டம்! அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble (1889-1953)] வெளியிட்ட ‘நிபுளாக்களின் பேரரங்கம் ‘ [The Realm of the Nebulae] என்னும் நூலில் காலக்ஸியானது பில்லியன் கணக்கில் விண்மீ ன்களை கோளத்தில் உள்ளடக்கிக் கொண்டு, பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் இருக்கிறது என்று சொல்கிறார். நமது பால்மய வெளிக் காலக்ஸி பில்லியன் காலக்ஸிகளில் ஒன்றானது! எத்தனை வகையான விண்மீன் ஒளித்தீவுகள் உள்ளன ?’ நிபுளா ‘: நிபுளா [Nebula] என்னும் சொல்லுக்கு ‘முகில் ‘ [Cloud] என்று அர்த்தம். அண்டக் கோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் [Planets, Comets, Astroids] தவிர ஏனைய வானியல் ஒளித்தீவுகள், ஒளி மந்தைகள் யாவும் முதலில் ஒரு சமயம் நிபுளாக்கள் என்று குறிப்பிடப் பட்டன. அப்பழைய அர்த்தத்தில் இன்னும் சில வானியல் நூல்கள் நிபுளா என்னும் பதத்தைப் பயன்படுத்தி வருவதில் குழப்பம் உண்டாகலாம்!

    சில சமயம் காலக்ஸிகள் [Galaxies (M51)], விண்மீன் மந்தைகள் [Star Clusters], அகிலவெளி மீனொளி வாயு/தூசி முகில்கள் [Intersteller Gas/Dust Clouds] ஆகியவற்றை நிபுளாக்கள் என்று குறிப்பிடுகிறோம். துல்லியமாகக் கூறப்போனால் விண்மீன் மந்தைகளைக் குறிப்பிடாது ‘நிபுளா ‘என்னும் சொல் வாயுமயம் அல்லது தூசிமயம் கொண்ட ‘முகிலுக்கு’ மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெரும்பான்மை யாக நிபுளாவின் முகிலில் இருப்பது ஹைடிரஜன் வாயு! மில்லியன் விண்மீன்கள் ஈர்ப்பு விசைகளால் கூடிய விண்வெளி மந்தைகள் இவை. பெரும்பாலும் பண்டை விண்மீன்கள் மண்டியவை! அவை சந்தை போன்று அலங்கோலமாய் அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சமாகப் பரவி, காலக்ஸியின் மட்டத்தில் திரண்டு சேராமல் உள்ளன. நமது காலக்ஸியைச் சேர்ந்த அநேக விண்மீன் திரட்சிகள் பொரி உருண்டை போன்றவை! குறிப்பிட்ட ஒரு பொரி உருண்டை ஒருசில ஒளியாண்டுகள் [A few light-years] அகலம் கொண்டது! ‘திறந்த விண்மீன் மந்தைகள் ‘ [Open Clusters (M44)]: சிதறிய முத்துக்களைப் போல் தெரிபவை இவை. நூற்றுக் கணக்கான புதிய விண்மீன்களைக் கொண்டவை. அவை யாவும் ஈர்ப்பு விசைகளால் சேர்க்கப் பட்டு, குறுகிய காலத்தில் பிரிந்து சென்று பிரகாசிப்பவை. காலக்ஸி விண்மீன் Globular Clusters மந்தைகள் [Galactic Clusters] என்றும் அழைக்கப்படுபவை. 50 ஒளியாண்டு தூரத்திற்குக் குறைந்த தொலைவில் இருப்பவை.

    பேரளவு உஷ்ண வாயு மண்டிய முகிலே ஒளி உமிழும் நிபுளாக்களாய் மிளிர்கின்றன. அண்டையில் புறவூதா ஒளியை [Ultra-violet Light] வீசும் விண்மீன் ஒன்றால், நிபுளாவின் முகிலில் உள்ள அணுக்கள் சக்தி பெற்றுக் கீழ் நிலைச் சக்திக்குத் தாவும் போது, நியான் மின்விளக்கு [Neon Light] போல வெளிச்சத்தை உமிழ்கின்றன! பெரும்பாலும் ஒளிசிந்தும் நிபுளாக்கள் செந்நிறமாய்க் காட்சி தருகின்றன! அதற்குக் காரணம், ஹைடிரஜன் வாயுவின் ‘ஒளிவீச்சு நாமம் ‘ [Emission Line] சிவப்பு நிறம்! மற்ற நிறங்கள் அருகில் தென்பட்டாலும், ஹைடிரஜன் அணுக்களே மிகுந்திருப்பதால் செந்நிறமே தனித்து மேனி முழுவதிலும் தெரிகிறது! புதிதாய்த் தோன்றிய விண்மீன் அல்லது தோன்றப் போகும் விண்மீன் அண்டவெளித் தளங்களில்தான், பொதுவாக ஒளிசிந்தும் நிபுளாக்களைக் காண முடிகிறது.

    ‘எதிரொளிக்கும் நிபுளாக்கள் ‘ [Reflection Nebulae (NGC 7023)]:

    பொதுவாக நீல நிறத்தில் தோன்றுபவை இந்த வகையான நிபுளாக்கள்! அருகில் பேரொளி வீசும் விண்மீன் ஒன்றின் ஒளியைப் பிரதிபலிக்கும் தூசி முகில்கள் [Clouds of Dust] இவை! பிரதிபலிக்கும் ஒளியில் மிகையாக நீல ஒளியே சிதறப்பட்டுக் கண்ணுக்குத் தென்படுகிறது! பொதுவாகச் செந்நிறத்தில் ஒளிசிந்தும் நிபுளாக்களும், நீல நிறத்தில் எதிரொளிக்கும் நிபுளாக்களும் அண்டவெளியில் இணையாக அருகிலே காட்சி அளிக்கின்றன! ஆதலால் அந்த இரண்டு நிபுளாக்களையும் ‘மலர்ச்சி நிபுளாக்கள் ‘ [Diffuse Nebulae] என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    ‘கரிய நிபுளாக்கள் ‘ [Dark Nebulae (NGC 2264)]:

    பின்புறம் அடிக்கும் ஒளியைத் தடுத்து வருவதால், இந்த நிபுளாக்கள் கரிய நிபுளாக்கள் போலக் காட்சி அளிக்கின்றன! நிழற்படக் கலையில் [Silhouette Photography] ஒளியைப் பின்புலமாக்கி வடிவத்தைப் படமெடுத்தால் கரிய உருவம் முகப்பில் தென்படுவதுபோல், கரிய நிபுளாக்கள் தோற்றம் அளிக்கும்! அவை எதிரொளிக்கும் நிபுளாக்களை ஒத்தவை. ஆனால் ஒரு வேறுபாடு: ஒளியானது நிபுளாவின் முகத்தில் படாது, அதன் முதுகில் படுகிறது! கரிய நிபுளாக்கள் பொதுவாக மலர்ச்சி நிபுளாக்களின் அருகே காணப்படுகின்றன!

    ‘அண்டக்கோள் நிபுளாக்கள் ‘ [Planetary Nebulae (M57)]:

    விண்மீன் தனது இறுதிக்கால நிலையில் வீசி எறிந்த வாயுக் கோளமே, அண்ட நிபுளா வென்று அழைக்கப் படுகிறது! நமது பரிதியும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அதுபோல் ஓர் அண்டக்கோள் நிபுளாவை வீசி எறியலாம்! அவற்றை அண்டங்கள் என்று விளிப்பது பிழையானது. அண்டக் கோள்களுக்கும் [Planets] அவ்வகை நிபுளாக்களுக்கும் எவ்விதப் பண்பும், ஒற்றுமையும் கிடையாது! தொலைநோக்கியில் பார்க்கும் போது அண்டங்கள் போல் தோன்றலாம். அவ்வளவுதான். சாதாரணமான ஓர் அண்டக்கோள் நிபுளா ஓர் ஒளியாண்டு தூரத்துக்கும் குறைவான அகலத்தில்தான் உள்ளது!

    ‘சூப்பர்நோவா மிச்சங்கள் ‘ [Supernova Remnants (M1)]:

    பூத வடிவான விண்மீன் ஒன்று மரணம் அடையும் போது, பேரளவு ஒளிப்பிழம்புடன் பிரகாசித்துப் பரவிச் சிதறும்! அப்போது, அது ‘சூபர்நோவா ‘ என்று பெயர் பெறுகிறது! சில நாட்கள் சூபர்நோவா வெளியேற்றும் சக்தி, முழு காலக்ஸிக்கு இணையான பேரளவுச் சக்திபோல் தெரிகிறது! அம்மாதிரிப் பிரளய வெடிப்புக்குப் பிறகு, சூபர்நோவாவில் எஞ்சுவது, விண்மீனின் ஒரு பெரும் பகுதி! அம்மிச்சப் பகுதியின் அகலம் ஒரு சில ஒளியாண்டுகளே!

    வானியல் மேதை ஜான் ஹெர்ச்செலின் மறைவு

    ஜான் ஹெர்ச்செல் வெளியிட்ட ‘இயற்பியல் வேதாந்தத் தெளிவுரை ‘ [Discourse on Natural Philosophy] என்னும் நூலைப் படித்து, மைக்கேல் ·பாரடே [Michael Faraday (1791-1867)] அவரது ஞான வல்லமையைப் புகழ்ந்து கூறியது: ‘இயற்பியல் வேதாந்த நூலைப் படித்து இன்புற்ற பலருள் நானும் ஒருவன். அந்நூல் வேதாந்த மாணவருக்கு ஒரு பாடப் பதிப்பாக உதவத் தகுதி பெற்றது. அந்நூல் என்னைச் செம்மையான ஓர் ஆராய்ச்சியாளனாய் ஆக்கியது. என் ஒழுக்கப் பண்பாட்டை உயர்த்தியது. சொல்லப் போனால் என்னைச் சிறந்த சித்தாந்த வேதாந்தி யாக்கியது ‘.

    ஜான் ஹெர்ச்செல் காலத்து விஞ்ஞானிகள் அனைவரிலும் அவர் முன்னணியில் நிற்கும் மேதையாகக் கருதப்படுபவர். 1871 ஆம் ஆண்டில் காலமான ஜான் ஹெர்ச்செல் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபேயில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது அடக்கவுரையில் பிரென்ச் கணித நிபுணர் ஷான் பயாட் [Jean Biot (1774-1862)] கூறியது: ‘கணித மேதை லாப்பிளாஸ் [Laplace] 1827 ஆண்டில் மரணம் அடைந்த பின், அவருக்குப் பிறகு இணையாக மதிக்கப் படுபவர், ஜான் ஹெர்ச்செல். பிரிட்டனில் ஸர் ஐஸக் நியூட்டன் மறைவுக்குப் பிறகு, ஜான் ஹெர்ச்செல்லின் மரணமே ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாக நான் கருதுகிறேன்!’

    aj

    ++++++++++++++++++++++++++++++++

    தகவல்:

    1. Results of Astronomical Observations of John Herschel By: London, Smith, Elder Co.

    2. Letters & Papers of Sir John Herschel from the Archives of the Royal Society [1990]

    3. Types of Nebulae http://seds.lpl.arizona.edu/billa/twn/types.html

    4. William Herschel ‘s Catalogue of Deep Sky Objects

    5. Nebulae http://www.seds.org/messier/nebula.html

    6. Nebulae http://www.enchantedlearning/subjects/astronomy/stars/nebulae.html

    7. John Herschel By: J.J. O ‘Connor & E.F. Robertson

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html(ஜான் ஹெர்செல் கண்டுபிடித்த பால்மய வீதி, காலக்ஸிகள், நிபுளாக்கள்.

    9. The Handy Space Answer Book (1998)

    10. https://www.astroleague.org/content/bright-nebula-observing-program

    11.  https://en.wikipedia.org/wiki/Orion_Nebula  [June 6, 2016]

    12. http://www.dailygalaxy.com/my_weblog/2017/01/exotic-double-ring-galaxy-unlike-any-observed-before-blue-ring-around-an-ancient-red-core  [January 4, 2017]

    13.  http://www.space.com/35219-rare-ringed-galaxy-discovery-image.html  [January 4, 2017]

    14.  http://teknoatu.com/2017/01/05/astronomers-image-infrequent-double-ring-gal/axy [January 5, 2017]

    15.  http://en.francais-express.com/news/tech-science/-101513-astronomers-photograph-rare-double-ring-galaxy/  [January 5, 2017]

    ****************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) January 6, 2017 [R-2]

    Share
  • மார்கழி மணாளன் 23

     

     

    திருவைகுண்ட விண்ணகரம் – அருள்மிகு தாமரைக்கண்ணுடையபிரான் கோயில்

     ag

    வேடங்கள் கலைந்ததும் வேண்டிட ஒன்றில்லை

    வேதவன் வாழ்ந்திடும் வைகுந்தமே வேறில்லை

    வேதங்கள் வாதங்கள் வழியினில் துணையில்லை

    பேதங்கள் இல்லையே வைகுந்தன் பார்வையில்!

     

    இழிவென்ற அழிவென்ற நினைப்பெல்லாம் நீங்கிட 

    விதியென்ற மதியென்ற கணக்கெல்லாம் பொய்த்திட

    கதியென்றே அரங்கனின் பாதங்கள் கிடக்கையிலே

    பிடியென்று அறிந்திடும் அறிவும்தான் வந்திடுமோ ?

     

    அரவத்தின் கண்கள் அச்சுறுத்தி நிற்க்கையில்

    கருமத்தின்  கணக்குகள் கவலைகள் தருகையில்

    தருமங்கள் முன்வந்து தன்வழக்கு உரைக்கையில்  

    உருவமாய் அருவமாய் வைகுந்தா வாழ்த்திடு  !

     

    பாயிரங்கள் ஒன்றேனும் உளமுருகிப் பாடாமல்

    பேய்மானமாய் அலைபாய்ந்து ஆடியே வந்தாலும் 

    மாயவனே ஏற்றிடுவாய் மனமுவந்து மலரடியில் 

    தாயவள் சேயினையே துறந்திட நினைப்பதோ?

     

    வாயில்கள் பலநூறும் வலம்வந்தேன் வழிதேடி

    கோயில்கள் எங்கெங்கோ கொண்ட பரந்தாமா !

    மாதத்தில் ஒன்றான மார்கழியில் மங்கலமாய்

    சொர்கத்தின் வாசல்வழி தந்தாயே சுந்தரனே !

     

    பொன்னங்கி முத்தங்கி பூவங்கி போட்டாலும்

    தானியங்கி தருமத்தை உள்ளங்கி போட்டவனே

    புகழங்கி போட்டோரின் பொய்யங்கி விலக்கியே

    மெய்யங்கி காட்டுவாய் சொல்லங்கி உனக்கெதற்கு?

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     
    ’’ஆண்டாள் -22’’….
    —————————————

    kesav
    ”அங்கண்மா ஞாலத்திற்(கு) ஆண்டாள் திருப்பாவை,
    திங்கள் கதிர்முகத்தோன் தேவகிசேய், -செங்கண்மால்,
    நோன்பிருந்து சொல்லியவண்ணம் நாடுவோர் நிச்சயம்
    வான்புகவை குண்டம் வசம்’’….கிரேசி மோகன்….

    ’’கேசவ் வண்ணத்திற்கு எண்ணம்’’….!
    ——————————————————————-

    ‘’விதுரநீதி(சாதம்) வாயுண்டு, வில்லிச் சிறுமி
    மதுரகீதம்(திருப்பாவை) காதுண்டு(செவிக்குணவு) மாலர் -மதுரா
    புரிமன்னர் கட்டில்கீழ் மன்னர்கள் காத்து
    வரிஎண்ணல் காணெம்பா வாய்’’….கிரேசி மோகன்….!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (225)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் 2017ஆம் ஆண்டின் முதலாவது மடலுடன் உங்களிடம் மனம் திறக்கிறேன். பல எதிர்பார்ப்புகளுடன் 2017 எனும் புதிய புத்தகம் திறக்கப்படுகிறது. ஒவ்வொன்றாக இப்புத்தகத்தில் 12 அத்தியாயங்கள் எழுதப்படப் போகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் எத்தனையோ எதிர்பாராத திருப்பங்கள், ஆச்சரியங்கள் என்பன உள்ளடங்கப் போகின்றன. உலகமெங்கும் ஒரே பரபரப்பான நிலையே தென்படுகின்றன. புதிய அரசியல் தலைமைகள், புதிய அரசியல் திருப்பங்கள் எனப் பல எதிர்பாராத நிகழ்வுகள் கிளப்பிய வினாக்களின் விடையை ஆவலோடு பலரும் எதிர்பார்த்த வண்ணமே இருக்கிறார்கள். மனிதர்களின் நியாயமான ஆசைகள் எனும் இலட்சியம் பேராசை எனும் எல்லைக் கோட்டினை நெருங்கி விட்டது போன்றதோர் உணர்வினுள் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

    ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது ஒன்றையே குறியாகக் கொண்டிருந்தோர் தமது ஆவல் எப்போது பூர்த்தியடையும் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய யூனியனிலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவது தமது பொருளாதாரச் சூழலை எவ்வகையில் பாதிக்கப் போகிறது என்பதைப் பற்றிச் சிறிதளவேனும் சிந்திப்பவர்களாகத் தென்படவில்லை.  மார்ச் மாதம் முடிவடைவதற்குள் வெளியேறுவதற்கான நெறிமுறையினைச் செயல் படுத்துவேன் என்ற பிரித்தானியப் பிரதமரின் வாக்குறுதியை இறுகப் பற்றிக் கொண்டு அதன் எதிர்பார்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் ஐக்கிய இராச்சியத்தின் ஜரோப்பிய யூனியன் வெளியேற்றத்தை முற்று முழுதாக எதிர்த்துக் கொண்டிருக்கும் பகுதியினரோ ஜரோப்பிய யூனியனின் “சிங்கிள் மார்க்கெட்” எனும் வியாபாரத் தளத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் முற்று முழுதாக விலகக் கூடாது எனும் ஏக்க்கத்தோடு ஓர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் விலகுவது எனும் முடிவுக்கு மக்களைத் தள்ளியது கட்டுப்பாடற்ற வெளிநாட்டவரின் குடியேற்றம் எனும் உண்மையின் யதார்த்தத்தை ஏனோ உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் இந்த ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதரம் ஒரு தேக்க நிலையை அடையப் போகிறது எனும் எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் நிலவுகிறதை உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

    ஐக்கிய அமெரிக்கா என்பது ஒரு தனிப்பெரும் நாடு என்பது எந்த அளவிற்கு உண்மையோ , அந்த அளவிற்கு ஐக்கிய அமெரிக்காவின் மாற்றங்கள் உலக நாடுகள் அனைத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுவும் உண்மையே!அத்தகையதோர் மாற்றமாகத்தான் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி மாற்றமும் அமைந்துள்ளது. அமெரிக்கா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு. இன, மத வேறுபாடுகளைக் கடந்து பலகாத தூரம் சென்று விட்டது எனும் எண்ணமே பல நாடுகளில் காணப்பட்டது. ஆனால் சமீபத்திய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் பிரசாரம் மக்களிடையே பல பேத உணர்வுகளை வளர்த்து விட்டது என்பதுவே வருந்தத்தக்க உண்மையாகிறது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தமது பிரசார மேடைகளில் மிகவும் சர்ச்சைக்குரிய கோஷங்களை முன்வைத்தார் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகிறது. அமெரிக்க மக்கள் மனத்தில் இருக்கும் உணர்வுகளையே தான் பிரதிபலித்ததாகவும், தனக்கு எதுவிதமான நிறவேற்றுமைப் பாகுபாடும் கிடையாது என்றும் அவர் கூறினாலும் அவரது கோஷங்களைத் தமது நிறவேற்றுமை மற்றும் இனத்துவேஷ கருத்துக்களுக்குச் சாதகமாக்கப் பல தீவிர வலதுசார அமைப்புகள் முனைந்துள்ளன என்பது உண்மையே. இத்தகைய நிகழ்வுகள் அமெரிக்காவைத் தமது தாயகமாக ஏற்றுக் கொண்டு வாழும் பல ஆசியப் பின்னணி கொண்ட மக்களுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. இன்றைய அமெரிக்க அரசியல் வெள்ளை இனத்தவருக்கும் மர்றைய இனத்தவருக்கும் இடையிலான அரசியலாகப் பரிமளிக்கக்கூடிய ஒரு சூழல் தென்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயமே. இப்படியான பல விடையில்லா வினாக்களைத் தாங்கிக் கொண்டே 2017க்குள் நுழைகிறோம்.

    அடுத்து மற்றைய முன்னணி ஐரோப்பிய நாடுகளான பிரான்சு,ஜேர்மனி, இத்தாலி ஆகியவற்றிலும் அரசியல் நிலைமை ஒரு நிறவேற்றுமைப் பரிணாமத்தினூடாகவே பயணிக்கிறது. பிரான்சு நாட்டில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 2017 என்ன முடிவை நல்கப் போகிறது என்பது மிகவும் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. பிரான்சு நாட்டில் வாழும் வெளிநாட்டவர் தமது நாட்டின் கலாசாரத்தைப் பின்பற்றாமல் தாம் எங்கிருந்து புலம் பெயர்ந்தார்களோ அந்நாடுகளின் கலாசாரத்தைப் பிரான்சு நாட்டு மக்களின் மீது திணிக்க முயல்கிறார்கள் என்றும் அதனைத் தடுப்பதே தமது அரசியல் என்றும் பிரான்சு நாட்டில் மிகவும் வேகமாக முன்னேறி வரும் தலைவரான லீ பென் எனும் இனவாதக் கட்சியின் தலைவர் பிரசாரம் செய்து வருகிறார். விரும்பியோ, விரும்பாமலோ மற்றைய தலைவர்களும் இவரது பிரசாரத்துக்கு ஈடுகொடுத்துத் தாமும் வெளிநாட்டவர் மீதான பிரசாரங்களை முடுக்கி விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஜேர்மனி நாட்டின் த;லைவரான அஞ்ஞெலா மக்கேல் அவர்களுக்கெதிராகப் போட்டியிட பிரபலமான எவரும் இல்லையெனினும் அந்நாட்டில் இடம்பெறும் தீவிரவாதிகளின் தாக்குதல்களினால் அவர்மீது விமர்சனங்கள் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு மில்லியன் அகதிகளை வரவேற்கிறேன் என்று அவர் விடுத்த அழைப்பினாலேயே மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதும் இவர் மீது விழும் குற்றச்சாட்டு. இவைகளுக்கெல்லாம் முடிவாக 2017 எதைக் கொடுக்கப் போகிறது என்பது அனைவரின் மனங்களிலும் ஊசலாடும் கேள்வியாகவே இருக்கிறது.

    தமிழகத்தைப் பொறுத்த மட்டில் 2016இன் முடிவு பல அரசியல் மாற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.முன்னாள் முதலமைச்சரான செல்வி ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவு அவரது கட்சிக்கு ஒரு புதிய தலைவரையும் அரசியல் வட்டாரங்களில் சில அதிர்வலைகளையும் கிளப்பி விட்டிருக்கிறது என்றே கூற வேண்டும். 2017ஆம் ஆண்டின் வரவோடு தி.மு.க தனக்கு ஒரு புதிய செயல் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களைத் தெரிவு செய்ததும் ஒருவகையான அரசியல் மாற்றம் என்றே கூற வேண்டும். இந்த மாற்றம் தி.மு.க வின் செயல்பாட்டில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    பலவகையான மாற்றங்களையும், அவை கொடுத்த பலவகையான எதிர்பார்ப்புகளையும் தன்னுள் சுமந்த வண்ணம் 2017 பிறந்திருக்கிறது. இவ்வாண்டு இவைகளுக்கெல்லாம் விடையளிக்குமா? இல்லை தொடரும் கேள்விக்குறியாக நாம்2018இனுள் நுழையப் போகிறோமா? என்பதற்குக் காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கையக்கூட தொடமாட்டேன்..!

        கவியோகி வேதம்

    பனங்காட்டு வயலுக்குள்ளே

    .. ..பசுமாடு மேய்க்கும்புள்ளே!

    இன்னக்கி ‘சரி’ சொல்லுபுள்ளே!

    .. இந்தாண்டில் தாலிகட்றேன்!

    .

    கல்யாணத்துக்கு சாச்சியாநான்

    ..கன்னிமுத்தம் ஒண்ணுதர்ரேன்!

    மெல்லநீயும் வந்துபுள்ளே-என்

    .மீசெபக்கம் தார்ரியா?

    .

    கொக்கிஎதும்  போடாதே-மாமா!

    .கொக்கிஇடநான் வளையமில்லே!

    சொக்கமாட்டேன் உன் மீசெயிலே!

    ..சுந்தர்ராமன் நீயுமில்லெ!

    .

    மாடுமேய்க்கும் புள்ளெதான்நான்!-

    .மக்கு இல்ல நானுமாமா!

    ஏடுகூட படிப்பேன்மாமா!-உன்

    .எண்ணமெல்லாம்  அறிஞ்சிடுவேன்!

    .

    கலியாணப் பேச்செசொல்லி-என்னெ

    கண்கலங்க வெக்கவேணாம்!

    கல்யாணம் ஆகும் முன்னெ

    .கன்னமுத்தம் ஒண்ணும்வேணாம்!

    .

    என்னெக்கட்ற ஆம்பிளைக்கி-நானு

    .என்னிக்கும்சுத்த மாயிருப்பேன்!

    உன்னெக்கண்டு மயங்கிவிட்டு

    .உளுத்துப்போயி நிக்கமாட்டேன்!

    .

    ஆம்புளெங்க  பொண்மயக்கி

    .அம்போ-ன்னு விட்டபின்னே,..

    பொம்புளெங்க யார்ட்டபோயி

    . புலம்பறது சொல்லுமாமா!

    ..

    அடிசக்க காத்தாயீ!–நீ

    . அறிவுள்ள பொம்பளைடீ!

    துளிக்கூட மயங்காத

    . துணிச்சல்உள்ள  ஆத்தாநீ!-

    .

    இந்தாண்டுத் தையில நான்

    .எசவான நாள்பார்த்து-உன்

    செந்தண்டுக் கழுத்திலநான்

    ..தாலிகட்டி மகிழ்ந்திடுவேன்!

    .

    அந்தநாளு வரும்வரெக்கும்

    ..ஆத்தீ உன்னெத் தொடமாட்டேன்!!

    நல்லஒரு பொண்ணே!-உனக்காய்

    ..நாளுமேநான் காத்திருப்பேன்!

     

     

     

     

     

     

    Share
  • புதுப்பிக்க தவறின காதல்

     

    இரா. சந்தோஷ் குமார்

    மணற் பூக்களைத் தூவி
    எனை வரவேற்றது ஆழி..!

    என் அன்பு அன்னையை போல
    தாலாட்டுக் காற்றை 
    என் மீது
    விசிறி விட்டது இயற்கை.

    என் கடந்தகால துரோகிகளைப் போல
    துர்நாற்றமடித்தது மெரீனா குப்பைகள்.

    பருவத்திற்கு வந்த
    என் அத்தை மகளைப் போல
    அந்தி தாவணியை பிடித்து
    பகல் வெண்ணிலா
    வெட்கத்தோடு எட்டி்பார்த்தது.

    கல்லூரிப் பெண்களின்
    அரட்டையென அழகாக
    ரீங்காரிமிட்டது அலைகள்.

    குட்டிப்பாப்பா ஒருத்தியின்
    மணல் வீட்டில்
    குடிப்புகுந்தது
    என் இருதயம்..!

    ராஜ ராஜ சோழர்கள்
    குதிரையிலேறி
    செல்ஃபி கிளிக்கிட்டு இருந்தார்கள்.

    என்றாலும் என்ன…
    என்னோடு வராத
    வர முடியாத அவளின்
    நினைவுகளில் புதுப்பிக்க தவறின
    என் காதல் கதைகள்.

    **

    -இரா.சந்தோஷ் குமார்.

    Share
  • பணம் படுத்தும் பாடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    பணம் படுத்தும் பாட்டைப் பற்றி பலர் பல விதமாக எழுதியாயிற்று.  இப்போது என் முறை.  நானும் எழுதுகிறேன்.

    நாங்கள் சிகாகோவில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் வசித்து வருகிறோம்.  அடுக்கு மாடிக் கட்டடத்தில் வசிப்பவர்களுக்கு அவரவர்களுடைய அபார்ட்மென்டின் சாவிகளோடு அந்தக் கட்டடத்தின் இரண்டு நுழைவாயில்களுக்குரிய சாவியையும் கொடுப்பார்கள்.  அதை வைத்திருப்பவர்கள் மட்டுமே கட்டடத்திற்குள் நுழைய முடியும்.  பாதுகாப்பிற்காக இந்த ஏற்பாடு.  தபால்காரரிடமும் பத்திரிக்கை டெலிவரி செய்பவர்களிடமும் கட்டடத்திற்குரிய சாவி இருக்கும்.  முன்பெல்லாம் நிறைய பிரதிகள் அடங்கிய ஒரு பெரிய கட்டாக பத்திரிக்கைகள் வருமாம்.  இப்போது பலர் செல்போனிலும் கணினியிலும் செய்திகளைப் பார்த்துவிடுவதால் பத்திரிக்கை படிப்பவர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.  140 அப்பார்ட்மென்ட்கள் உள்ள எங்கள் கட்டடத்திற்கு நான்கு பிரதிகள்தான் வருகின்றன.

    நான்கு வருடங்களுக்கு முன்னால் எங்களுக்குத் தினமும் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை பன்னிரெண்டாவது மாடியில் இருக்கும் எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து கொடுப்பதற்கு பத்திரிக்கை ஒருவரை ஏற்பாடு செய்திருந்தது.  எங்கள் அபார்ட்மென்டிற்கு மிக அருகில் லிஃப்ட் இருந்தது.  அதனால் பத்திரிக்கை டெலிவரி செய்பவர் லிஃப்டில் பன்னிரண்டாவது மாடிக்கு வந்து லிஃப்டிலிருந்து பத்திரிக்கையை அப்படியே எங்கள் அப்பார்ட்மென்டிற்கு அருகில் வீசிவிட்டு லிஃப்ட் மறுபடி அந்தத் தளத்தை விட்டுப் போவதற்கு முன் அதைப் பிடித்து அதிலேயே திரும்பிச் சென்றுவிடுவார்.  பலமுறை பத்திரிக்கை எங்கள் அப்பார்ட்மென்டிற்கு வெகு தொலைவில் கிடக்கும்.  அது மட்டுமல்ல, பல முறை பத்திரிக்கை பிரிந்து பலவாறாகச் சிதறிக் கிடக்கும்.  இவ்வளவு தூரம் வருபவர் லிஃப்டை விட்டு வெளியே வந்து எங்கள் அப்பார்ட்மென்டிற்கு அருகிலேயே பத்திரிக்கையை வைத்துவிட்டுப் போகலாமே என்று நாங்கள் நினைத்ததுண்டு.  ஒரு முறை அவரிடம் கூறிப் பார்த்தும் அவர் தொடர்ந்து தான் செய்ததையே செய்துவந்தார்.

    அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இன்னொருவர் பத்திரிக்கையை டெலிவரி செய்யும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார்.  இவர் முந்தையவரைப்போல் அல்லாமல் அப்பார்ட்மென்டிற்கு அருகிலேயே  மடித்த மடிப்புக் கலையாமல் அபார்ட்மென்டின் வாசலில் பத்திரிக்கையை வைத்துவிட்டுப் போவார்.  கதவைத் திறந்தாலே பத்திரிக்கை கைக்குக் கிடைக்கும்.  இரவு உடையை மாற்றாமலே பத்திரிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.  இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.  தினமும் காலை ஐந்திலிருந்து ஐந்தரைக்குள் பத்திரிக்கையை டெலிவரி செய்துவிடுவார்.  எழுந்தவுடனேயே பத்திரிக்கை கைக்குக் கிடைத்துவிடுவதால் இதுவும் எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

    ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சில நாட்கள் முன்னதாக இப்படிப் பத்திரிக்கை டெலிவரி செய்பவர்கள் பத்திரிக்கையோடு தங்கள் விலாசமிட்ட ஒரு கவரைப் பத்திரிக்கையோடு இணைத்துவைத்துவிடுவார்கள்.  அதில் அவர்களுக்குச் சன்மானமாக பத்திரிக்கையைப் பெற்றுக்கொள்பவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப பணம் வைத்து தபாலில் அனுப்பிவிடுவது வழக்கம்.  எங்களுக்கு டெலிவரி செய்தவர் நேரம் தவறாமல், நாள் தவறாமல் நேர்த்தியாக டெலிவரி செய்ததால் 25 டாலர் பணத்தை அவர் வைத்திருந்த கவரில் வைத்துத் தபாலில் அனுப்பினோம்.  அவரும் மிகவும் மகிழ்ந்துபோய் அடுத்த முறை பத்திரிக்கை டெலிவரி செய்தபோது ஒரு மூலையில் பெரிதாக நன்றி என்று எழுதியிருந்தார்.  இப்படித்தான் நாங்கள் தகவல் பரிமாறிக்கொண்டோம்.  அவர் எங்களைப் பார்த்ததில்லை; நாங்கள் அவரைப் பார்த்ததில்லை.  இரண்டு வருடங்கள் இப்படியே எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் பத்திரிக்கை எங்களுக்குக் கிடைத்துவந்தது.

    யார் கண்பட்டதோ.  மூன்றாவது வருடம் நாங்கள் இந்தியா சென்று திரும்பிய பிறகு அடிக்கடி நேரம் தவறாமல் டெலிவரி செய்வதில் தவறியதோடு எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து கொடுப்பதற்குப் பதில் எங்கள் அப்பார்ட்மென்ட் இருந்த கட்டடத்தின் வாசலிலேயே வைத்துவிட்டுப் போய்விடுவார்.  நாங்கள் இரவு உடையை மாற்றிக்கொண்டு கீழே இறங்கிப் போய் கட்டடத்தின் கதவைத் திறந்து வெளியே சென்று பத்திரிக்கையை எடுத்து வர வேண்டும்.  குளிர் காலத்தில் கட்டடத்தின் கதவைத் திறந்தாலே கடுமையான குளிர் வாட்டும்.  அதற்கும் சேர்த்து கம்பளி உடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.  சில சமயம் வாசல் வரை பனி கூட இருக்கும்.  ‘தயவுசெய்து எங்கள் அபார்ட்மென்டின் வாசலில் கொண்டுவந்து வைத்துவிடுங்கள்’ என்று கூறிப் பார்த்தோம்.  ஒரு நாள் நாங்கள் சொன்னபடிச் செய்வார்.  ஆனால் மறு நாளே பழையபடி வெளியே வைத்துவிட்டுப் போய்விடுவார்.  ஒரு முறை எங்கள் கட்டடத்தின் சாவி தன்னிடம் இல்லையென்று கூறினார்.  கட்டடத்தின் மேனேஜரிடம் சொல்லி அவருக்கு ஒரு சாவி கொடுக்கச் செய்தோம்.  ஆனாலும் எந்தவித பயனும் இல்லை.  வழக்கமாக கிறிஸ்துமஸுக்கு முன்னால் தன்னுடைய விலாசமிட்ட கவரை வைப்பதற்குச் சில நாட்கள் முன்னாலேயே ஒழுங்காக டெலிவரி செய்ய ஆரம்பித்தார்.  நாங்களும் ‘இதுவரை அவருக்கு ஏதோ கஷ்டம் இருந்திருக்க வேண்டும்.  அதனால்தான் அப்படிச் செய்தார் என்று நினைத்துக்கொண்டு வழக்கம்போல் 25 டாலரைக் கவரில் வைத்து அனுப்பினோம்.  ஒரு சில நாட்கள் ஒழுங்காக எல்லாம் நடந்து வந்தது.  மறுபடி அதே ஒழுங்கீனம் தொடர்ந்தது.  போகட்டும் என்று விட்டுவிட்டோம்.  நாங்களே கீழே போய் எடுத்துவர ஆரம்பித்தோம்.

    இந்த வருடம் இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததும் அதே ஒழுங்கீனத்தைத் தொடர்ந்தார்.  சாவிப் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்று கேட்டுப் பார்த்தோம்.  சரியாகப் பதில் வரவில்லை.  நாங்கள் தகவல் பரிமாறிக்கொள்வதெல்லாம் கடிதம் மூலம்தான்.  அவர் கூற விரும்புவதை ஒரு பேப்பரில் எழுதிப் பத்திரிக்கையோடு சேர்த்துவிடுவார்.  நாங்கள் தபால் மூலம் அவரிடம் பேசுவோம்.  அவர் சமீபத்தில்தான் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்திருந்ததால் சரியாக ஆங்கிலம் பேச வராது.  அதனால் தொலைபேசியில் பேச விரும்ப மாட்டார்.  இந்த வருடமும் கிறிஸ்மஸுக்குக் கொஞ்ச நாட்கள் முன்பு தன்னுடைய விலாசமிட்ட கவரைப் பத்திரிக்கையோடு வைத்திருந்தார்.  இந்த முறை என் கணவர் விடுமுறைக்காக ஊரை விட்டுச் செல்லும் முன் ‘நாங்கள் ஊருக்குப் போகிறோம்.  திரும்பி வந்த பிறகு எப்படி டெலிவரி செய்கிறீர்கள் என்று பார்த்துவிட்டு கிறிஸ்துமஸ் இனாமைக் கொடுக்கிறோம்’ என்று கடிதம் மூலம் அவருக்குத் தெரியப்படுத்தினார்.  நாங்கள் திரும்பி வந்த அன்று பத்திரிக்கையோடு ஒரு சிறு தாளைச் செருகிவைத்திருந்தார்.  அதில் தான் ஏன் அதுவரை சரியாக டெலிவரி செய்யவில்லை என்பதற்குப் பலவித காரணங்களைச் சொல்லியிருந்தார்.  அவற்றில் பல அப்பட்டமான பொய்கள்.  அதைப் பார்த்து எனக்கு ஆத்திரப்படுவதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை.  இப்படிப் பொய்கள் சொல்லுகிறாரே என்று ஆத்திரம்.  25 டாலர்களைப் பெறுவதற்கு இத்தனை பொய்கள் சொல்ல வேண்டுமா என்று அழுகை மற்றொரு புறம்.  பணத்திற்கு இத்தனை சக்தியா?  இனி எப்படி டெலிவரி செய்கிறார் என்பதைப் பார்க்கக்கூட விரும்பாமல் அன்றே வழக்கமாகக் கொடுக்கும் 25 டாலரை அனுப்பிவிடும்படி கணவரிடம் கூறினேன்.  அவரும் அப்படியே செய்துவிட்டார்.

    இன்னும் வரும் வருடங்களிலும் அவர் எப்படி டெலிவரி செய்தாலும் அவருக்குரிய 25 டாலர் பணத்தைக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்தோம்.

    .

    Share
  • மார்கழி மணாளன் 22

     

     

    திரு மணிமாடக்கோயில்

    அருள்மிகு பத்ரி நாராயணப் பெருமாள் திருக்கோவில்

    ag

    மணிமாடங்கள் ஆயிரம் இருந்தாலும்  மாதவனே

    மனத்துள்ளே நீயிருக்க மணிமாடக் கோயில்தானே

    அணியின்றி அரங்கத்தில் அயர்ந்தாலும் அழகனே

    அணியே ! வான்தோட்டக் கனியே ! வந்தருள்வாய் !

     

    இமயத்தில் இருந்தாலும் இதயத்தைத் தொடுவாய் 

    இணையேது உனக்கென்றும் இருள்நீக்கும் திருவே

    பனிமூடும் வாழ்க்கைக்குப் பகலவனே பத்ரிவாசா

    பணிகின்றேன் பாதங்கள் பரிவுடனே வந்திடுவாய் !

     

    பணியின்றி பாற்கடலில் படுத்தாலும் பரந்தாமா

    புவியாளும் திறனெல்லாம் புன்னகையில் வைத்தாயே

    பிணிதீர்க்கும் மருந்தென்று யாரறிந்தார் உன்னுள்ளம்

    விழிநிறையும் எழிலன்றோ திருமகளுறை திருமாலே !

     

    உறியடித்த பிள்ளையிடம்  உளம்தொலைத்த கோபியர்கள்

    உரிமையுடன் விளையாட  உன்னெழிலைத் தேடிவந்தார்

    உன்னுருவம் எத்தனையோ உலகங்கள் வியந்ததய்யா

    உலகெல்லாம் ஓருருவம் உன்னுருவமென அறிந்ததய்யா !

     

    கண்ணிமைகள் மூடியவர் கற்பனையில் வடித்துன்னை

    கண்ணனென்றும் கருநீலமெனக் காதலால்  சொன்னார்

    கண்ணொளியின்  கரைகடந்த வண்ணமன்றோ கண்ணா

    மின்னொளியும் வெட்கிவிடும் பகல்வண்ணப் பரந்தாமா !

     

    கனியமுதும் கறியமுதும் சாத்தமுதும் படைத்தாலும்

    சொல்லமுதைக் கேட்டதுமே செவிசாய்க்கும் சுந்தரனே

    விண்ணமுது உண்டவர்கள் வந்தாலும் வரிசையிலே

    கண்ணமுது கண்டபின்னே வேறமுது வேண்டுவரோ ?

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ‘’பாதாதி கேசரை பசுவின் வாலாதி கொம்பிலே வைத்தது வில்லிபுத்தூர் நாச்சியார்
    தமிழ்ப் பாசுரங்கள்’’….!

    ”வாலாதி கொம்பிலே வாய்த்த அவதாரர்
    பாலூறும் வள்ளல், பசுநேசர்: -ஏலாதி
    அக்கா ரவடிசலவ் ஆண்டாள் திருப்பாவை
    உ(ட்)க்கார வைத்தததை ஓது(முப்பதை….)’’….கிரேசி மோகன்….!

     
    ”ஆண்டாள் -21’’….
    ————————————-

    ’’போற்றக் கலங்களெதிர் பார்க்கும் கலங்கரைத்
    தோற்றத்திற்க்(கு) ஈடாய் திருப்பாவை, -சாற்றினாள்
    சம்சாரக் கப்பலது, சிக்கிடாது பக்தியாம்
    மின்சாரம் ஆண்டாள் மினுக்’’….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் 21

     

     

    திருசிறுப்புலியூர்-  அருள்மிகு அருமாக்கடல் அமுதன் திருக்கோயில்

     ag

    கண்ணுடை விரல்களும் புலியின் நகங்களும்

    கைகளில் ஏந்தியே கயிலையான் போற்றிய

    கனவுடை முனிவன் வைகுந்தம் வேண்டிட

    கனிவுடன் சிவனும்  கேட்டதைத் தந்தான்!

     

    அரங்கத்தில் அயர்ந்தவன் அருளினைப் பெற்றே 

    அலைமகள் தலைவனின் அடிகளில் அமர்ந்தே

    அருளுடை வியாகிரன் அச்சுதன் போற்றிட

    அகிலமே வியந்ததே அற்புதம் அனந்தனே !

     

    சிந்தையில் சிவனும் மூச்சினில் முகுந்தனும்

    விந்தையாய் நிறுத்தியே வேண்டிய  முனிவர்கள்

    விழியினில் ஒளியின்றி வழியினை இழந்ததும்

    வடிவினில் பாலனாய் அரங்கனும் அருளினான் !

     

     விந்தைகள் நித்தமும் வைகுந்தன் வாசலில்

    சிந்தையை அவனிடம் சிதறாமல் தந்திட

    மந்தையில் ஆடாய் சென்றிடும் மனதினை

    பந்தங்கள் நீக்கியே பக்குவம் செய்வான் !

     

    கருடனும் பறந்தவன் சுமைதனைத் தூக்கிடும்

    கருவிட   நாகமும் களைப்பின்றித் தாங்கிடும்

    கருடனின் பிடியினில் அரவினைக் காத்தாய்

    கலங்கிடும் இதயங்கள் காத்திடும் கண்ணனே !

     

    கைவிரலில் மலைதூக்கிக் கைவண்ணம் வரைந்தாய்  

    காலடியில் காளிங்கனுக்கோ கால்வண்ணம் சொன்னாய் 

    காதலுடை ராதைக்கோ தந்தாயுந்தன் கண்வண்ணம் 

    கவிதையிலே தேடவோ கண்ணா சொல்வண்ணம் ?

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • தன்னம்பிக்கை

     

     

    ரா.பார்த்தசாரதி

     

     

     

    மனிதன்  வாழ  தேவை  தன்னம்பிக்கை

    தன்னம்பிக்கையை இழந்தால் தைரியம் பிறக்காது

    சோதனையை  கண்டு  என்றும் பயந்தவனுக்கு

    சாதனை என்பது,  என்றும்  நடக்காது !

     

     

    வாழ்க்கை என்பது பொதுவாய் அமைந்த நியதியடா

    தைரியம் இல்லாத மனிதர்கள் பூமிக்கு சுமையடா

    தோல்வியை தாண்டி சென்றாலே வெற்றி கிடைக்குமே

    தொடர்ந்து முயற்சி செய்பவனுக்கே வெற்றி கிட்டுமே !

     

     

    கடனே என்று வாழ்பவனுக்கு கடமையும் சுமைதான்

    தென்றலின் இனிமையை புயலாய்  நினைப்பான்

    தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கங்களே

    மனிதனின் பலம்  நம்பிக்கையிலே, யானையின் பலம் தும்பிக்கையிலே!

     

     

    உலகில் மனித நேயத்துடன்  பழகு !

    தாமே  வந்திடும்  புகழ்  உனக்கு

    சோர்வையும், சோம்பேறித்தனத்தை அறவே நீக்கு

    வாழ்வில்  வெற்றியினை  எப்போதும்  உனதாக்கு !

     

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”நப்பின்னை போலவே நானும் அழகுதான்
    அப்பெண் அகமுடையாள் ஆனாற்போல், -இப்பெண்நான்
    பின்னாடி வந்தாலும் ”ப்ரோச்சேவா”, பக்தியில்
    கண்ணாடி காட்டுகிறாள் காண்”….கிரேசி மோகன்….!

    ”பாஸுரமுக கரிராஜுலு(யானை கஜேந்திரன்) ப்ரோச்சின(காப்பாத்தின)
    த்யாகய்யர் கீர்த்தனை” ப்ரோச்சேவா எவருரா” வாசித்ததில்….!ஆண்டாள்
    தன்னை மணம்புரிந்து காப்பாத்துமாறு கண்ணனிடம் கோருகிறாள்….
    தான் பத்தினி நப்பின்னையைப் போல் அழகானவள் என்பதை கண்ணாடி காட்டி
    CONFIRM செய்கிறாள் கோதை….!

    Share