திருக்கோவலூர் – அருள்மிகு திருவிக்ரமப் பெருமாள் கோவில்

ag

வேங்கடனோ வாமனனோ விக்ரமனோ விண்ணவனே

வித்தான அனைத்துள்ளும் சத்தான தத்துவமே !

விடிவெள்ளி வான்மதி விண்மீன்கள் வட்டமிட

விதியோடு விளையாட வழிவகுத்த வித்தகனே !

 

மண்ணிருந்து  ஓரடியால் வானுயர அளந்தவனே

வானிருந்து ஓரடியால் விக்ரமனே எங்களந்தாயோ?

தன்னிருந்து பார்பவர்க்குத் தாளிரண்டும் தருபவனே

கண்ணிருந்தும் காட்சியின்றிக் கலங்குகிறேன் வருவாயோ? 

 

வானுயர்த்தித்  திருப்பாதம் திருமாலே தூக்கிநிற்க

கூனுயர்த்திப் பார்த்தாலும் கொஞ்சமும் தெரிந்திடுமோ?

நானழித்து வந்தோர்க்கு நாளெல்லாம் தெரிந்திடுவாய் 

யாழிசைத்துப் பாடிடுவேன் நாளெல்லாம் நாராயணா!

 

பித்தாகச் சேர்த்த பொருளனைத்தும்  விட்டொழித்து

எட்டாத கனியான உனைமட்டும் உள்வைத்தால்

வற்றாத நதியாக வளம்படைக்கும் வள்ளலன்றோ

மற்றேதும் தீண்டிடுமோ மனமென்றும் நீயிருக்க !

 

கற்றவை தேவையில்லை கண்ணனின் புகழ்பாட

கற்பூரம் தேவையில்லை கண்ணனின் எழில்காண

கற்சிலையும் தேவையில்லை கண்ணன் உளம்வாழ

கடமையில் காதலுற்றால் கண்ணனங்கே காவலனே !

 

வேண்டியவர்க்கு வேண்டியபடி  வடிவெடுக்கும் வேங்கடனே

வேதனைகள் துடைத்திடவே வடிவின்றி விரைவோனே !        

வானிருந்தும் வந்திடுவாய் தூணுடைத்துத் துரும்புடைத்து

வழக்குரைக்கத் தேவையில்லை வருமுன்னே காப்பவனே !

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.