Blog

  • யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் தேர்த் திருவிழா

    யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் தேர்த் திருவிழா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    நல்லூரான் தேரிழுக்க நாடெல்லாம் வந்திருக்கும்
    எல்லையில்லா மகிழ்வுடனே எல்லோரும் வடம்பிடிப்பார்
    அல்லலினை அகற்றென்றே அடியார்கள் வேண்டிடுவார்
    நல்லநிலை அகன்றதனால் நாட்டுமக்கள் கலங்குகிறார்!

    தேரென்று சொன்னாலே ஊர்முழுக்கக் கூடிநிற்கும்
    யார்யாரோ வருவார்கள் தேரிழுத்துத் தரிசிப்பார்
    ஊர்முழுக்க ஆவலுடன் ஒன்றுகூடி வந்துநின்று
    தேரிழுக்க முடியாமல் திணறுகிறார் இவ்வருடம்!

    காவடிகள் வீதியெலாம் கணக்கின்றி வந்துவிடும்
    காளையரும் கன்னியரும் களிப்புடனே குவிந்திடுவார்
    குழந்தைகளின் குதூகலத்தால் கோவில்வீதி களைகட்டும்
    கோவில்வீதி கட்டுப்பாட்டில் தேரோட்டம் நிகழ்கிறதே!

    வாய்கட்டு கைகட்டு வயிற்றையும் கட்டென்றார்
    வாழ்வெல்லாம் சுகமாக வாழ்ந்திடலாம் எனவுரைத்தார்
    எதையுமே கேட்காது எப்படியோ நாம்நடந்தோம்
    வாய்கட்டி கைகட்டி வகையறியா நிற்கின்றோம்!

    தேரேறி வருங்குமரா திருவருளைத் தந்திடுவாய்
    ஊரெல்லாம் உனையணுகி உவந்தேற்ற விரும்புகிறார்
    பேரரக்கர் தருந்துயரை வேரோடு அழித்தவனே
    பேதலிக்கும் அடியவரைப் பேணிடுவாய் முருகையா!

    நல்லூரான் தேர்காண நாளெண்ணிப் பலரிருந்தார்
    நல்லூரில் பண்ணிசைக்கப் பலபேர்கள் காத்திருந்தார்
    அத்தனையும் நிறைவேறாது ஆக்கிவிட்ட  காலமதை
    அகற்றிடுவாய் முருகையா அடிபணிந்து இறைஞ்சுகிறோம்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(314)

    குறளின் கதிர்களாய்…(314)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(314)

    ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா
    வூக்க முடையா னுழை.

    – திருக்குறள் -594 (ஊக்கமுடைமை)

    புதுக் கவிதையில்...

    இடர்கள் போன்றவற்றால்
    தளர்வுறாது
    சோர்வு இல்லா
    ஊக்கம் உடையானிடம்,
    அதன் பயனாகிய
    செல்வம்
    வழி கேட்டு
    வலியப் போய்ச் சேரும்…!

    குறும்பாவில்...

    சோர்வது ஏதுமில்லா
    ஊக்கம் உடையவனைச் செல்வம் வழிகேட்டுத்
    தேடிச்சென்று சேரும்…!

    மரபுக் கவிதையில்...

    வாழ்வில் வந்திடும் துன்பங்களால்
    வருத்தங் கொண்டு சோர்வுறாமல்
    தாழ்விலா ஊக்கமாம் நற்குணத்தைத்
    தன்னிடம் கொண்டவன் ஒருவனையே,
    பாழ்படாப் பெருநிதிச் செல்வமது
    பாதை கேட்டே அன்னவனின்
    வாழ்விடம் தன்னைத் தேடித்தான்
    வந்தே யவனிடம் சேர்ந்திடுமே…!

    லிமரைக்கூ..

    இருந்தால் ஒருவனிடம் ஊக்கம்,
    தளர்விலா அவனைத்தேடி வழிகேட்டு
    வந்துசேரும் பெருநிதியாம் ஆக்கம் …!

    கிராமிய பாணியில்...

    வேணும் வேணும் ஊக்கம் வேணும்
    வாழ்க்கையில ஊக்கம் வேணும்,
    தளர்ச்சி இல்லாத ஊக்கம் வேணும்..

    துன்பம் வந்தாலும்
    தொவண்டு போகாத
    ஊக்கமுள்ள ஒருத்தனத்தான்
    அவன் இருப்பெடத்துக்கு
    வழிகேட்டுத் தேடிவந்து
    செல்வமெல்லாம்
    அவங்கிட்ட சேருமே..

    அதால
    வேணும் வேணும் ஊக்கம் வேணும்
    வாழ்க்கையில ஊக்கம் வேணும்,
    தளர்ச்சி இல்லாத ஊக்கம் வேணும்…!

    Share
  • மருத்துவர் தாரா நடராசன் மறைவு

    மருத்துவர் தாரா நடராசன் மறைவு

    அண்ணாகண்ணன்
     
    மருத்துவ மாமணி, அம்மா தாரா நடராசன் அவர்கள், 14.08.2020 அன்று இரவு 10 மணியளவில் மறைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், கோவிட்-19 சிகிச்சைக்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் மறைந்த செய்தியை அன்னாரின் மகன் முனைவர் அருள் நடராசன் தெரிவித்திருந்தார்.
     
    தாரா நடராசன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தியாகராய நகரில் ஐயா ஔவை நடராசன் அவர்களைச் சந்திக்கும்போது, பல நேரங்களில் அம்மாவுடன் கலந்துரையாடி மகிழ்ந்தது உண்டு. மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அன்பே உருவானவர். எவருடனும் எளிமையுடனும் கனிவுடனும் பழகியவர். 2019ஆம் ஆண்டு அம்மா தாரா, பேஸ்புக்கில் எனக்கு வேவ் செய்து, என்னுடன் உரையாடினார்.
     
     
    2019இல் ஔவை நடராசன், தன் மாமனார் மாசிலாமணி குறித்து எழுதிய கட்டுரையை வல்லமையில் வெளியிட்டோம். அதில், மாமனாருடன் சேர்த்து, தாரா அம்மையார் குறித்தும் எழுதியுள்ளார். ஔவை நடராசனாரின் தந்தை ஔவை துரைசாமிப் பிள்ளையின் தாய்மாமன் மகளே தாரா ஆவார். அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:
     
    என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து, தன் வியர்வையையும் உதிரத்தையும் கண்ணீரையும் குடம் குடமாகச் சிந்தி, ஒப்பற்ற மகளிர் திலகங்களாக இருவரையும் வளர்த்தார்.
     
    என் உறவினர்கள் யாரும் எட்ட முடியாதிருந்த கான்வென்டு பள்ளியில் சேர்த்துத் தாயாகி, தந்தையாகித் தெய்வமாக ஒவ்வொரு நாளும் வளர்த்தார்.
     
    சென்னையில் வாழ்ந்தபோது, அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் அச்சம் நிலவியது. சென்னையை விட்டு எல்லோரும் குடி பெயர்ந்தார்கள். பெயருக்கு ஏற்ற மாசிலாமணியாகத் திகழ்ந்த என் தாத்தா, வேலூருக்குக் குடிபெயர்ந்தார். வேலூரில், தன் மக்கட் செல்வங்களை நாளும் காலையில் கொண்டு போய்ப் பள்ளியில் விடுவதும், தாமே உணவு சமைத்து மதியம் பள்ளி வந்து ஊட்டுவதும் உருக்கம் தரும் காட்சியாகும்.
     
    இந்நிலையிலும் கூட, விடியலில் எழுந்து தாம் வல்லவராக இருந்த தச்சுப் பணியில் தம் கை நோக உழைத்தார். உடன் இருந்தவர்கள் எல்லாம் இந்தப் பெண் மக்களுக்குப் பத்தாம் வகுப்பு போதாதா என்று கேட்டபோது, வெகுண்டு எவ்வளவு படிக்க விரும்புகிறார்களோ, எந்த உயரத்துக்கு எட்ட விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு உயிர் உள்ள வரையில் அவர்களை உயரே அமர்த்திப் பார்ப்பதுதான் நான் எடுத்துக்கொண்ட சபதம் என்று வாழ்ந்து காட்டினார். உழைப்புக்கும் உறுதிக்கும் ஒரே சான்று என் மாமன்தான் என்று என் தந்தை சொல்வார் . தாராவைப் பார்த்துத் தான் மரபார்ந்த எங்கள் குடும்பத்தினரும், உறவினரும், பெண் மக்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.
     
    என் துணைவியார் தாரா ஒருவர் தான், எங்கள் மரபிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, பயின்று முதன் முதலில் வெற்றிச் சிறப்புப் பெற்றார். என் துணைவியார், மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மனச் சோர்வு முதலில் வந்தது. ஆந்திர மாநிலத்து விசாகப்பட்டினத்தில் அவருக்கு இடம் தந்து அங்கே வரச் சொன்னார்கள். வேலூரில் இருந்து மீளவும் திரும்பிச் சென்னைக்கு வந்து துன்பக் கடலில் தாயில்லாத தனிமைத் துயரில் தவித்துக்கொண்டிருக்கும் நாங்கள் விசாகப்பட்டினத்துக்கு எப்படிச் செல்ல முடியும்? ஒரு மகளைச் சென்னையிலும் மற்றொரு மகளை விசாகப்பட்டினத்திலும் நான் போய்ச் சேர்ப்பதா என்று எள்ளளவும் என் மாமனார் மனம் கலங்கவில்லை.
     
    மன உறுதி மட்டும் இருந்தால் போதும். மலைகளையும் கூடத் தகர்த்துவிடலாம் என்று தன் மகளை விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றார். மொழி தெரியாத மாநிலம், உறவினர்கள் என்று ஒருவர்கூட இல்லாத நிலை. கை உழைப்பைத் தவிர வேறு கதி இல்லாத நிலை.
     
    வீட்டுத் திண்ணை கிடைத்தால் போதும். என் கண்ணிலும் மடியிலும் வளர்ந்த மகளைத் தோளில் சுமந்தாவது துன்பம் வராமல் அவளைக் காப்பது என் கடமை என்று உறுதிபூண்டார். ஒரு கதை படித்தது போல இருக்கும். தாரா அம்மையாரின் தளராத மனமும் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்கிற தனிப்பெரும் முயற்சியும் பத்து நாளில் சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே மாற்றம் பெற்று வந்து சேரும் ஆணையைப் பெற்றார்கள்.
     
     
    மாசிலாமணி, ஔவை நடராசனிடம் கூறியது:
     
    என் கடமை முடிந்துவிட்டது. என் அருமை மகளைப் போல இன்னொரு திருமகளை நான் எந்தப் பிறவியில் பெறப் போகிறேன் என்றாலும், என் மகள் தான் எனக்கு அன்னை. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் பிள்ளைகள் தான் எனக்குக் குல தெய்வங்கள் என்று புலம்பிய நிலையில் தான் அவர் உயிர் பிரிந்தது.
     
    உலகின் எத்தனை நாடுகளுக்கு நீ போவதென்றாலும் நான் உடன் வருவேன் என்று சொல்லி, மலை போன்ற மனத்துணிவை மகளுக்கு ஊட்டினார். இப்போதும்கூட, என் மனைவியைப் பார்த்து நான் பேசும்போதெல்லாம் என் மனக்கண்ணில் அவர் தான் நிற்கிறார்.
     
    “தாயாகி, தந்தையாகி எம்மைத் தாங்கி நின்ற தெய்வம்” என்ற தொடர்தான் அவர் கல்லறையில் எழுதப்பெற்றது.
     
    அவர் வளர்த்த குடும்பக் கொடி, இன்று செழித்தோங்கி நிற்கிறது. மகனும் பெயர்த்தியும் எனக் குடும்பத்தினரும், உறவினரும் மருத்துவ மணிகளாகத் மிளிர்கிறார்கள். எந்த உயர்வு அவர்களுக்கு வந்தாலும் மாசிலாமணி அவர்களின் நினைவுக்குத்தான் காணிக்கையாக்குகின்றனர்.
     
    இவ்வாறு அதில் ஔவை நடராசன் எழுதியிருந்தார்.
     
    இத்தகைய அருமை மிக்க தந்தையால் வளர்க்கப்பெற்று, பெருமை மிக்க குடும்பத்துக்குக் குலவிளக்காய் உயர்ந்து நின்றவர், தாரா நடராசன். அவர் என்றென்றும் நினைவுகளால் வாழ்வார்.
    Share
  • என் தமிழ் ஆசான்

    என் தமிழ் ஆசான்

    டாக்டர் இராதா தியாகராசன்

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து எட்டாம் ஆண்டு நவம்பர் திங்கள் நான்காம் நாள், என் வாழ்வில் நினைவிற்குரிய ஒரு பெருநாள். என் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்ட நாள். வாழ்வின் உயிரெனப் போற்றப்படும் மொழித் திருப்பம் ஏற்பட்ட திருநாள்.

    மேற்கு மலைத் தொடர்களுக்கு அப்பால் பிறந்து, கன்னித் தமிழின் கடிமணம் கமழப் பெறாத என்னுள்ளத்தில், தமிழணங்கின் தனி நடம் நிகழத் தொடங்கிய தனி நாளது.

    நாளும் கோளும் நனி சிறந்த நன்னாளாகிய அந்நாளில், கலைத்தந்தை அவர்கள், பேராசிரியர் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்களை எங்கள் வளமனைக்கு வரவழைத்து,பரிமேலழகரின் உரையோடு பொருந்திய திருக்குறளை அவர் கைகளில் வழங்கி, அடியேனுக்குத் தமிழ்ச் சுவையூட்டுமாறு பணித்தார்கள். “தண்டமிழின் மேலாந்தரம்” என்று சிறப்பிக்கும் திருமறையைக் கனிவோடு பெற்றுக்கொண்டு, ஔவையவர்கள் கலைத் தந்தையவர்களையும், தமிழின் நெடுங்கணக்கறியாத என்னையும், பரிமேலழகரின் உரையையும் மாறி மாறி விழித்த விழி, இன்னும் என் கண்விட்டகலாக் காட்சியாக நிற்கின்றது.

    எழுத்துகள் முப்பத்துமூன்றும் கற்பித்துப் பின், பரிமேலழகரின் உரைப் பாயிரத்துக்குச் சென்றார். அவருக்கே இயல்பாய் அமைந்த கணீர் என்ற வெண்கலக் குரலோசையுடன் பாடம் கற்பிக்கத் தொடங்கினார்.

    இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்
    அந்தமிழ் இன்பத்து அழிவில் வீடும்,
    நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு,
    உறுதியென உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு.

    நடுங்கினேன். குன்று முட்டிய குருவிபோல் திகைத்தேன். குறிஞ்சி புக்க மான்போல் விழித்தேன். அதை எழுத்துக் கூட்டிப் படிக்கவே தடுமாறிக் கலங்கிய என் நிலைமை கண்டு இரங்கி, “வரட்டும் – வரட்டும் – மெல்ல வரட்டுங்க” என்று கருணை நிறைந்த உள்ளத்தோடு ஆர்வமொழி புகன்று, ஆறுதல் கூறி, எனக்கு ஊக்கம் ஊட்டி, மேலும் சென்றார்.

    இங்ஙனம் மெல்ல, மெல்ல என்னுடைய நிலைமை அறிந்து, நான் எளிதில் உணர்ந்துகொள்ளும் பொருட்டு, மிக எளிமையாகவும், பெரும்பாலும் ஆங்கிலத்திலுமே கற்பிக்கத் தொடங்கி, எனக்குத் தமிழிலக்கியத்தின் பெருஞ் சுவையைக் காட்டினார். பவணந்தியார் கூற்றுக்கு ஏற்ப, “விழையாது, வெகுளாது, விரும்பி முகமலர்ந்து, கோட்டமில் மனத்தோடு என் உளம் கொள நூல் கொடுத்தார்.”

    பாடம் கேட்கும் பேறு பெற்ற நான், அவர்பால் ஆழ்ந்த புலமையும், செந்தமிழ்த் திறனும் மட்டுமின்றி, ஆன்று அவிந்தடங்கிய சான்றாண்மையும், அறம் பயின்றமைந்த நல்லடக்கமும் தெளிந்து தோன்றக் கண்டேன். நாநலமும் பாநலமும் நனி சிறக்கக் கண்டேன். அவர்பால் பணிவுடைமையும், இன் சொல்லும் மட்டுமல்ல, நூலறிவும், நுண்ணறிவும் களிநடம் புரியக் கண்டேன்.

    பயில்வோரும் பயிற்றுவிப்போரும் பல்லாயிரக் கணக்கில் உளராகலாம். தண்டமிழ் கற்போரும், கற்பிப்போரும் தமிழகம் எங்கும் காணப் பெறலாம். ஆனால் நல்வினை வயத்தால் எனக்குக் கிடைக்கப் பெற்ற இப்பேராசான் எங்குமுள்ள ஒரு வீட்டாசான் அல்லர். ஏதோ ஊதியம் கருதிப் பணியாற்றி, நேரத்தை ஓட்டிவிட்டுத் தம் வீட்டுக்குச் செல்வதே நினைவாகக் கடிகாரத்தை இடைவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் இயல்புடையார் வீட்டாசான்கள் சிலர்.

    ஔவையவர்களோ, ஏற்றுக் கொண்ட பணி, தாம் செவ்வன செய்து முடிக்கக் கடமைப்பட்ட ஓர் அறப் பணியாக கருதினார். ஒரு சிறிதும் அயர்வின்றி, உள்நிறை விருப்பினோடும், ஓங்குயர் ஆர்வத்தோடும் உளம் தொடும் உண்மையோடும், ஒரு தளபதியின் தறுகண்மையுடனும், வீரத்துடனும், துணிச்சலுடனும் எடுத்த பணியைத் தொடுத்து நடத்தினார். இத்தகைய தளபதிகளைத்தான், இன்றைய சூழ்நிலையில் தமிழன்னை வேண்டி நிற்கின்றார்.

    நூல் நயங்களையும் கருத்துச் செறிவுகளையும் விளக்கும் ஆர்வத்தில் பல மணி நேரங்கள் செல்வதைக் கூட அறிய மாட்டார். நான் அயர்வுற்று, அன்றைய பாடத்தை நிறுத்திக்கொள்ளும் எண்ணம் கொண்டு, அதனைக் குறிப்பாய் அறிவுறுத்த வேண்டி, “ஐயா நேரமென்ன ஆயிற்றோ” என்று வினவினால், “என்னிடம் கடிகாரம் இல்லைங்க” என்று சுருங்க உரைத்துப் பாடத்தை மேலும் தொடர்வார். இக்குறிப்பு பயனற்றதாகக் கண்டு, நான் சிறிது நேரம் கழித்து மீண்டும் “இன்றைக்கு இத்துடன் நிறுத்தலாமா?” என்று கேட்பேன். “முந்நூறாவது பாட்டுடன் நிறுத்தலாமே! இன்னும் –” என்று கூறிப் பின்னும் தொடர்வர்.

    இங்ஙனம் அயரா உள்ளத்துடனும் தளரா ஊக்கத்துடனும் உண்மை அன்புடனும் நான் நன்கு கற்க வேண்டுமென்ற நல் விருப்பத்துடனும் – அவரெனக்குத் தமிழ் நல்லறிவு கற்பித்திலரேல் நான் இன்று தமிழில் இந்தச் சிற்றறிவும் பெற்றிருக்க மாட்டேன். கற்க வேண்டுமென்ற எனதார்வத்தை விட, எனக்கு நன்றாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற பேரார்வத்துடன் எனக்குத் தமிழறிவும் சமய உணர்வும் வாரி வழங்கிய இச்செம்புலச் செல்வரின் செம்மனப் பாங்கு பெரிதும் போற்றத்தக்கது.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 3

    எட்டுக் கோணல் பண்டிதன் – 3

    தி. இரா. மீனா

    நீரில் மூழ்கிய பிறகு கடலின் அடிப்பகுதியான வருணனின் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கஹோதாவிடம் வருணன், தான் அவரிடம் என்ன விரும்புகிறான் என்பதை விரிவாக விளக்குகிறான். அறிஞர்கள் பலரும் கூடிச் செய்கிற வேள்விப் பணி அது. வருணனின் கட்டளையை அடுத்து, வேள்விக்கான பணிகளில் கஹோதாவும், மற்றவர்களும் ஈடுபடுகின்றனர். வேள்வி முடியும் கட்டத்திற்கு வந்த பிறகு வருணன் கஹோதாவிடம் ஜனகரின் அவையில் அஷ்டவக்கிரன்  பண்டியைத் தோற்கடித்த செய்தியைச் சொல்கிறான். மகனுக்கும், பண்டிக்கும்  இடையே நடந்த விவாதம் பற்றிக் கேள்விப்பட்டு கஹோதா பெருமையடைகிறான்.

    கஹோதா தண்ணீரை விட்டு வெளியே வந்த தன்னைச் சுற்றிக் கூடியுள்ள கூட்டத்தைப் பார்க்கிறான்… ஆனால் அவன் கண்கள் ஒரே ஒருவனிடம் தான் நிலைக்கின்றன. வளைந்த உறுப்புகளோடு, உடல் கோணலோடு முகத்தில் வெற்றிப் புன்னகையுடன் ஓர் இளைஞன்…. அவனைப் பார்த்துச் சிரிக்கிறான். தந்தைக்கு மனமும் உடலும் துடிக்கிறது. மகனைப் பார்த்த கணம், உலகையே தன் வசமாக்கியவன் போல என் மகன் இருக்கிறானே என மனம் கும்மாளமிடுகிறது. நீரிலிருந்து வருவது தன் தந்தை என அஷ்டவக்கிரன் உணர்ந்த தருணத்தில், தந்தை மகனை நோக்கி ஓடி வந்து அன்புடன் அணைக்கிறார். அறிஞர்கள் அனைவரும் அருகே வந்து பண்டியை வெற்றி கொண்ட தன் மகனைப் புகழும் போது எல்லையற்ற உவகையுண்டாகிறது..

    ஆசிரமத்திலிருக்கும் கஹோதாவின் மனைவி சுஜாதா, தன் மகன் அஷ்டவக்கிரன் என்ன செய்திருப்பான், எம்மாதிரியான நிகழ்வுகள் அவையில் நடந்திருக்கும் என்று ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாள். தன் பணிகளில் அவளால் முழுமையாக ஈடுபட இயலவில்லை… அடிக்கடி ஆசிரமத்தின் வாயில் கதவுகளைப் பார்த்தபடி இருக்கிறாள். திடீரென எதையோ பார்த்துக் கண்கள் வெறித்து மீண்டும் அங்கேயே பார்க்கிறாள்… அஷ்டவக்கிரனும், சுவேதகேதுவும் வருகின்றனர்…அவர்களுடன் ஒரு மனிதன்— கஹோதா.. அவர்களைக் கண்ட அதிர்ச்சியில் பெரிதாக குரலெழுப்பியபடி அவள் வாயிலருகே ஓட, சத்தம் கேட்டு என்ன நடக்கிறது என்றறிய ஆசிரமத்தில் உள்ளவர்கள் பதற்றத்துடன் வெளியே வருகின்றனர். தங்கள் கண்கள் பார்க்கும் காட்சியை அவர்களால் நம்ப இயலவில்லை.

    வெற்றிக் களிப்புடன் மகிழ்ச்சி பொங்க அஷ்டவக்கிரன்… கூடவே சுவேத கேதுவும், கஹோதாவுமிருக்கின்றனர். குருவான உத்தாலக ஆருணி முன்னே வர, அவர்கள் அவரை வணங்கி, நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் விவரிக்கின்றனர். பண்டியை அஷ்டவக்கிரன் தோற்கடித்த கதையை முழு ஆசிரமும் கேட்டு அஷ்டவக்கிரனைப் பெருமையோடு பார்த்து மகிழ்கிறது. பின்பு வருணன் தன்னை வேண்டிக்கொண்டது, அதற்கு தாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டு அதை விரும்பிய வகையில் அமைத்துக் கொடுத்தது என வேள்வியில் நடந்தவற்றை கஹோதா விவரிக்கிறார்.

    “வருணன் என்னிடம் இன்னொரு செய்தியும் கூறினான்’

    உத்தாலகா, அஷ்டவக்கிரன், சுவேதகேது அனைவரும் அவரையே பார்க்க, ’மகனே,  இங்கே வா” என அழைக்கிறார். வருத்தம் வாட்ட அவனைத் தழுவிக்கொண்டு ”என்னை மன்னித்து விடு. உன் தாயின் கருப்பையிலிருக்கும் போதே என் தவறைச் சுட்டிக் காட்டும் தைரியம் உனக்கிருந்தது.. நான்..’

    ஒரு நிமிடம் நிறுத்தி விட்டுத் தொடர்கிறார்.

    ’அந்நாட்களில் நான் உணர்வுபூர்வமாக பக்குவப்படாத ஒரு நிலையிலிருந்தேன்… நான் உன்னை இம்மாதிரியான நிலைக்குத் தள்ளியிருக்கக் கூடாது. இதனால் நீ அனுபவித்ததென்பது…’

    அஷ்டவக்கிரன் தலையை ஆட்டி மறுத்து ஏதோ சொல்ல நினைக்க,  கஹோதா தொடர்கிறான்.

    ’சுஜாதா, நீ செய்ய வேண்டிய செயல் ஒன்றுள்ளது. நீயும் அருகில் வா’ என்று மனைவியை அழைக்கிறார்.

    பின்பு  ஆசிரமத்தின் எதிரான பாதையில்  நடக்க, அனைவரும்  அவரைத் தொடர்கின்றனர். அங்குள்ள சமங்கா ஆற்றின் அருகே சென்று நின்றுகொண்டு ’மகனே! கடற்கடவுளை வணங்கி விட்டு நீ ஒருமுறை நீருக்குள் மூழ்க வேண்டும்…’ என்றார்.

    இந்த ஆணையால் அஷ்டவக்கிரன் சிறிது குழப்பமடைந்தாலும் தந்தை சொன்னபடி செய்கிறான்.

    ’சுஜாதா, நீயும்  கடற்கடவுளிடம் உன் மகனுக்காக வேண்டிக்கொள்’ என்கிறார்.

    அஷ்டவக்கிரன் நீருக்குள் மூழ்கும் போது பெற்றோர் கடவுளை வணங்குகின்றனர். சில கணங்களுக்குப் பிறகு, சுஜாதா கண்களைத் திறந்த போது, அவளால் தன்னையே நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு இன்னொரு முறை பார்க்கிறாள். கண் முன்னரான காட்சி, அவள் வழிபாட்டிற்கு கடவுள் செவி சாய்த்திருப்பதைப் புரிய வைக்கிறது. அவளது அஷ்டகோணலான மகன்… உடல் முழுவதும் குறையுள்ளவன்.. நீரிலிருந்து வரவில்லை! புதுத் தோற்றமும் பொலிவும் மிக்க அஷ்டவக்கிரன் முழுமையாக வெளியே வந்த போது அவள் மட்டுமில்லை, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களும் தங்களை  நம்ப முடியாமல் உறைந்து, அதிர்ந்து போய்ப் பார்க்கின்றனர். அவன் இப்போது எந்தக் குறையும் உடையவனில்லை.. முழுமையானவன்… அவன்… தனக்குள் இருக்கும் அறிவினாற்றலை வெளிப்படுத்தும் உறுதியான, பொருத்தமான தோற்றம் கொண்டவனாக…. முழுமையும் நிறைவும் உடையவனாக..

    [தொடரும்]

    Share
  • பழகத் தெரிய வேணும் – 29

    பழகத் தெரிய வேணும் – 29

    நிர்மலா ராகவன்

    (அன்பா, அதிகாரமா?)

    தலைவர்கள் எவ்வழியோ, அவ்வழியில்தான் பிறரும் நடக்க முனைகிறார்கள்.

    ஜனநாயகமாக ஆரம்பித்த அரசியல் கட்சிகள்கூட மெல்ல மெல்ல, தலைவர்கர் ஒரு சிலரின் கைகளுக்குப் போய்விடுகிறது. அவர்களுடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலையில், பெயரளவில்தான் மக்களுக்கான அரசியல்.

    அதிகாரத்தால் எது வேண்டுமானால் செய்யலாம் என்பது நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் அலுவலகத்திலும்கூட, தலைவர்கர் பலருடைய கொள்கை.

    அலுவலகத்தில் சர்வாதிகாரிகள்

    ‘பெண்தானே!’ என்று, வீட்டில் இரண்டாந்தர அங்கமாக நடத்தப்படுபவர்களே பெரும்பாலும் பிறரைக் கேவலமாக நடத்த முற்படுகிறார்கள்.

    படித்து, பெரிய உத்தியோகத்தில் அமர்ந்துவிட்டதால், பிறரை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றிப் போகிறது அவர்களுக்கு.

    கதை

    குடும்ப வாழ்வில் தோல்வி கண்டவள் அந்த கல்வி அதிகாரி. அவளுக்குப் பிள்ளைப்பேறு இல்லாததைச் சாக்காக வைத்து, இரண்டாவது, பின்னர் மூன்றாவது மணம் புரிந்துகொண்டிருந்தார் அவளுடைய கணவர். அவர்களுடைய மதமும் அதை ஆதரித்ததால், அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

    ஒரு பள்ளிக்குத் தலைமை ஆசிரியையாக ஆனபோது, குடும்ப வாழ்வில் தனக்குக் கிடைக்காத மதிப்பையும் மரியாதையையும் இங்காவது பெறவேண்டும் என்று நிச்சயித்தவள்போல் நடந்துகொண்டாள்.

    அண்மையில், ‘ராட்சசி’ படத்தில் வந்ததுபோல், ஓர் ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, உள்ளே நுழைந்து, அவரைத் தரக் குறைவாகப் பேசுவாள்.

    பள்ளி முழுவதும் கேட்கும்படி, கடமையிலிருந்து வழுவிய ஆசிரியைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒலிபெருக்கியில் அலறுவாள். அல்லது, வாராந்திரப் பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டுவாள்.

    ‘பள்ளிக்கூடத்தில் கட்டொழுங்கை நிலைநாட்டிவிட்டேன்!’ என்று இத்தகைய தலைமை ஆசிரியைகள் மார்தட்டிக்கொள்ளலாம்.

    ஆனால், மாணவ மாணவிகள் ஆசான்கள் மீது வைத்திருக்கும் நல்லெண்ணம் அகன்றுவிடுமே!

    தன்கீழ் வேலை பார்க்கிறவர்களை ஏளனத்திற்கு ஆளாக்கிவிடுவது சிறந்த தலைமைத்துவத்தின் லட்சணமா?

    “அது எப்படி, வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எல்லாரும் இப்படிப் பிரகாசமாக ஆகிவிடுகிறீர்கள்?” என்று என்னுடன் வேலை பார்த்த ஒருவர் கேட்டார் (அவர் யாருக்கும் அடங்கியதில்லை).

    `எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலிடத்தில் இருப்பவர் என்ன சொன்னாலும், செய்தாலும் பணிந்து போகவேண்டிய நிலையில் இருக்கிறேன்!’ என்ற உறுத்தல் ஒருவரது தன்னம்பிக்கையைப் பாதிக்காதா?

    அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டால் கசப்புதான் மிஞ்சும். அப்புறம் எப்படி உற்சாகமாக வளையவர முடியும்?

    அதிகாரம் செலுத்துபவர்களின் உத்தி

    “ஒரு பெண்ணை அழவைத்தால், அதன்பின் அவளை அடக்குவது எளிது!” சிறிதும் கூச்சமின்றி, தான் கடைப்பிடிக்கும் வழியைப் பெருமையுடன் என்னுடன் பகிர்ந்துகொண்டாள் நபீசா. உதவித் தலைமை ஆசிரியை என்பதால் பள்ளி  அவள் கட்டுப்பாட்டில் இருந்தது.

    ஒரு மாணவி, காதில் இரு துளைகள் போட்டிருந்த குற்றத்திற்காக, ஆசிரியர்களின் பொது அறைக்கு வரவழைக்கப்பட்டாள்.

    “நம் மதத்தின்படி, இது தவறு,” என்ற வசவு பெற்றாள்.

    “அம்மா ஒன்றும் சொல்லவில்லையே!” என்றாள் அப்பெண், திமிராக.

    அவ்வளவுதான்! ஆசிரியைகள் பலர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு, அவளைச் சரமாரியாகத் திட்ட, தாக்குப் பிடிக்க முடியாது, அப்பெண் அழத் தொடங்கினாள்.

    பதின்ம வயது மாணவிகள் புருவத்தைச் சீர்ப்படுத்திக்கொண்டு வந்தாலும் இதே கதிதான்.

    நானும் கட்டொழுங்கு ஆசிரியையாக இருந்ததால், ஒரு பெண்ணிடம் மெல்ல, “ஆசிரியைகளே இப்படித்தான் அலங்கரித்துக்கொள்கிறோம். படிப்பு முடிந்ததும், உன் விருப்பப்படி இரேன். எதற்காக வீணாகத் தண்டனைக்கு ஆளாகிறாய்?” என்று கூற, அவள் முகத்தில் சிரிப்பு.

    இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு மாணவியின் காதிலுள்ள துளைகளோ, திருத்தப்பட்ட புருவமோ பிரச்சினை இல்லை. அதிகாரம் ஒன்றே பிரதானமாகிவிடுகிறது.

    தம்மைப் பார்த்துப் பிறர் அஞ்சுவதைப் பெருமையாக நினைப்பவர்கள் இவர்கள். பயம் மதிப்பாகாது என்பதைப் புரிந்துகொள்ளாத அறிவிலிகள்!

    “ஒரு பொய்யைப் பெரிதாக்கு. ஆனால், எளிமையாக வைத்திரு. மக்கள் நம்பிவிடுவார்கள்!” என்ற ஹிட்லரின் வாக்கைக் கடைப்பிடிப்பவர்கள் அதிகார வர்க்கத்தினர்.

    ‘மதம்’ என்ற ஒரு வார்த்தையால் மிரட்டியே பிறரை அடக்கிவிடுவார்கள். (மதத்தின்வழி கடவுளை அடைய நல்ல மனமும் நடத்தையும் மட்டும் போதாதா?)

    இன்னொரு சர்வாதிகாரியான ஜோசப் ஸ்டாலின், “பிறரை யோசிக்க விடக்கூடாது”; “பிரச்னை செய்கிறார்களா? அவர்களைக் கொன்றுவிட்டால், பிரச்னை மறைந்துவிடும்,” என்றெல்லாம் தன் பங்கிற்கு `அறிவுரை’ வழங்கியிருக்கிறார்.

    கொல்ல முடியாவிட்டாலும், ஒருவர் அகாரணமாகத் தண்டிக்கப்படுவதைப் பார்த்து, பிறராவது ஒழுங்காக இருப்பார்கள் என்று கணக்குப் போடுகிற வர்க்கம் இவர்கள்.

    இப்படிப்பட்டவர்களைக் குடும்பங்களிலும் பார்க்கலாம்.

    கதை

    இரண்டு வயதுக்கு மேற்பட்ட தன் மகன்கள் பின்னாலேயே நடப்பார் கிட்டன்.

    எப்படித் தெரியுமா?

    கையில் பிரம்புடன்.

    குழந்தைகள் பயத்தால் மிரள.

    ‘ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை ஊட்டுகிறேன்,’ என்ற சாக்கை வைத்து, தனக்குத்தானே அதிகாரத்தை அளித்துக்கொள்ளும் வழி அது.

    குழந்தைகளுக்கு வயது வந்ததும், சிறுபிராயத்தில் அடக்கி வைத்திருந்த பயம் ஆத்திரமாக மாற, அது மனைவியிடமும், அத்துடன் பிற பெண்களிடமோ, குழந்தைகளிடமோ திரும்பும்.

    இத்தகைய தந்தையுடன் பேச்சுவார்த்தை இல்லாது, அவருடைய இறுதிக் காலத்தில் அவரை ஒதுக்கி வைத்த மகன்களை நான் அறிவேன்.

    ‘நான் என் மகனை எவ்வளவு கண்டிப்பாக வளர்த்தேன்!’ என்று வருந்துவார் தந்தை.

    கதை

    அப்படி ஒரு தந்தைக்குப் பிறந்தவன் செல்வா.

    அவனே அப்பாவான பிறகு, அவனையும் அறியாமல், தன்னைத் தந்தை நடத்தியது போலவே மூன்றே வயதாகியிருந்த தன் குழந்தையையும் நடத்த முற்பட்டான்.

    ‘பிரம்பால் அடிக்காத குழந்தை எப்படி உருப்படும்?’ என்பது அவனுடைய தர்க்கம்.

    அவனுடைய கோபம் தந்தையின்மேல் மட்டுமில்லை, அவரை எதிர்க்க முடியாத தன்மேலேயும்தான் என்று, படித்த மனைவிக்குப் புரிந்தது.

    “நீங்கள் உங்கள் அப்பாவுடன் பேசுவதை நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டன. உங்கள் மகனும் அப்படி உங்களை நடத்த வேண்டுமா?” என்று வாதாடினாள். `அவனுக்கு உங்கள்மேல் மரியாதை போய்விடும்,” என்று மேலும் எச்சரித்தாள்.

    வீம்புடன், “அவன் முன்னுக்கு வந்தால் போதும். என்னை மதிக்காவிட்டால் போகிறான்,” என்றான் செல்வா.

    அவன் சொந்த வியாபாரம் ஆரம்பித்த புதிது. தான் எதிர்பார்த்தபடி உடனே கொழிக்க முடியவில்லையே என்ற ஆத்திரம் அப்பாவிக் குழந்தைமேல் திரும்பியது.

    தந்தைக்கு எதிராகக் குழந்தையைப் பரிந்தால், அவனுக்கு அப்பாவிடமிருக்கும் மரியாதை போய்விடாது என்பது புரிந்து, அவன் திட்ட ஆரம்பித்ததுமே, குழந்தையை அப்பால் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் மனைவி.

    பன்னிரண்டு வயதில் சற்று விவரம் புரிந்ததும், “அப்பாவுக்கு ஏம்மா என்னைப் பிடிக்கல்லே?” என்று கேட்டான் மகன்.

    அப்பாவின் குடும்பப் பின்னணியை அம்மா எடுத்துச் சொல்ல, “பாவம்! அப்பாவுக்குக் கொஞ்சம் சிகிச்சை கொடுக்கலாம்,” என்று சொல்லும் அளவுக்கு அவனுடைய விவேகம் வளர்ந்திருந்தது.

    அன்புடன் வளர்க்கப்பட்டவர்களுக்குத்தானே வெளியுலகம் பந்தாடும்போது அதை எதிர்க்கும் துணிவும் அறிவும் இருக்கும்?

    இது புரியாது, ‘இது ரொம்ப கெட்ட உலகம். அதைச் சமாளிக்க இவனுக்குத் தெரியவேண்டாமா?’ என்று தங்களுடைய அதிகாரப் போக்கிற்கு நியாயம் கற்பிக்கிறவர்களின் அறியாமையை என்னவென்று சொல்ல!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 271

    படக்கவிதைப் போட்டி – 271

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (16.08.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 270இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 270இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. முகமது ரஃபி எடுத்திருக்கும் இந்தக் கறுப்புவெள்ளைப் படம் மழலைகளின் மங்கல முகங்களால் வண்ணம் பெற்றுவிட்டதாகவே தோன்றுகின்றது. இந்த அழகிய படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்!

    மனித வாழ்வினை இனிமையாக்குபவர்கள் மழலையர்!

    ”பகைவரும் விரும்பக்கூடிய குற்றமற்ற அழகிய பிள்ளைகளைப் பெற்றோர், இம்மை உலகத்திலே புகழும், மறுமை உலகத்து வாழ்வும் எவ்விதக் குறையுமின்றி எய்துவர்” என்று மழலையரின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்துகின்றது அகநானூறு.

    இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
    மறுமை உலகமும் மறுவின்று எய்துப
    செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
    சிறுவர்ப் பயந்த செம்மலோர்.
     (அகம் – 66)

    மழலைப் பட்டாளம் நிறைந்த இந்தப் படம் நம் கவிஞர்களின் மனங்களில் எத்தகைய கற்பனைகளை விதைத்திருக்கின்றது என்பதை அறியும் நேரமிது!

    *****

    சித்தப்பன் சட்டையை இழுத்துப்பிடிக்கும் சத்தான வாண்டுகள், திரும்பிப் பார்க்கும் முத்தான முதல்பிள்ளை என்று பாட்டாளி வாழ்க்கையின் எளிய இன்பங்களையும், அதிலே நிறைவுகாணும் பண்பாட்டு நாயகியையும் தம் பாட்டிலே சுவையாக எடுத்துக் காட்டியிருக்கின்றார் திருமிகு. ச. கண்மணி கணேசன்.

    அன்பு மனதின் ஆர்வம் மிகுந்தால்…

    வெட்ட வெளியில் சட்டியில் சோறாக்க
    சுட்ட செங்கலால் அடுப்புக் கூட்டி
    சுள்ளி பொறுக்கப் பெற்றவன் சென்றாலும்
    உள்ளம் மகிழ அண்ணன் பிள்ளைகளை
    அள்ளித் தழுவும் தம்பியின் பாசம்…

    அழகான பந்தம் ஆயுசுக்கும் இன்பம்
    இரண்டு பக்கம் சுமந்து செல்வதில்
    தொல்லை ஏதும் இல்லா தாகும்
    இரண்டு கைகளை ஆண்டவன் படைத்ததே
    இதற்குத் தான் என்பது போல…

    பின்னால் இருந்து படம் எடுப்பவரைக்
    கண்ணால் பார்க்கும் மருட்சிக்கு மத்தியில்
    சித்தப்பன் சட்டையை இழுத்துப் பிடிக்கும்
    சத்தான நம்பிக்கை இரண்டு வாண்டுக்கும்
    இடுப்பில் உடையின்றிப் போனால் என்ன…

    முத்தான முதல்பிள்ளை திரும்பிய பார்வை
    மொத்த பூமியும் சொந்தம் ஆக்கும்
    கெத்தான குடும்பத்தை இழுத்துக் கட்டி;
    கூட்டாகச் சேர்த்து; வாழ்க்கை நடத்தும்
    பாட்டாளி மகளே! பண்பாட்டு நாயகியே!

    நீகுனிந்து வளைந்து செய்யும் வேலை
    நித்தம் எழுதும் நிறைவு எதுவென்று
    அன்பு மனதின் ஆர்வம் மிகுந்தால்…

    *****

    ”தங்கைகளைத் தூக்கித் தமையன் தான் காட்டும் பாசத்தில்
    தந்தையை மிஞ்சிவிட்டான்” என்று நெகிழ்ச்சியோடு இந்தத் தமையனுக்குப் புகழாரம் சூட்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நல்லதொரு குடும்பம்…

    காட்டில் வேலை
    கணவன் மனைவி சமையலில்,
    கல்லையடுக்கி அடுப்பு போட்டுக்
    காய்ந்த சுள்ளி பொறுக்கி
    விறகாக்கி
    உலைவைத்தனர் வெயிலிலே..

    சின்னப் பிள்ளைகளைப்
    பார்த்திடச்
    சேர்ந்தான் வந்து அண்ணனுமே..

    பார்த்தனர் பிள்ளைகள்
    பாசத்துடன்
    அண்ணனில் ஆயிரம்
    அன்னை தந்தையை..

    தங்கைகளைத் தூக்கித்
    தமையன்
    தான் காட்டும் பாசத்தில்
    தந்தையை மிஞ்சிவிட்டான்..

    ஏழ்மையில் இருந்தாலும்
    இந்தக் குடும்மொரு
    பல்கலைக் கழகமே…!

    *****

    ”கனமழையின் விளைவால் மண்சரியும் என மனம்பதைத்து, ’பிகு’ செய்யும் மழலையரோடு அடிவாரம் செல்ல ஆயத்தமாகும் மலைக் கிராமக் குடும்பம் இதுவோ?” என்று வினவுகின்றார் திரு. கோ. சிவகுமார்.

    மலைக் கிராம நிலை

    மலைச் சரிவின்
    மண் குடிசைகளில் வாழும்
    மண்ணின் மைந்தர்களின்
    மலைக் கிராமம் இதுவோ!
    அந்தி சாயும் முன்
    அடிவாரம் போய் விடுங்கள்;.
    மழைவெள்ளம் பெருகி
    மண் சரிவால்
    மரணங்கள் நிகழுமென்னும்
    கனமழை எச்சரிக்கையால்
    கலங்கிய உள்ளமொன்று
    வைத்தது வைத்தபடி இருக்க…
    போட்டது போட்டபடி கிடக்க…
    கைத்தலங்களில்
    மழலைகளைச் சுமந்து
    மலையடிவாரம் செல்ல ஆயத்தமாகின்றதோ?
    நிலைமையறியாத‌
    சிறார்களிரண்டும்
    பின் தொடர
    ‘பிகு’ செய்கின்றனரோ?
    காணப் பதைபதைக்கும் காட்சியின்று
    மலைக் கிராம நிலையானதோ!

    *****

    ”மனிதா! இன்று பணம் காசு உன் கையில் இல்லை என்றால் என்ன? பளிச்சென்ற ஒளியோடு எதிர்காலம் உனை அழைக்கிறது! குழந்தைகளை அள்ளு! கொஞ்சும் முத்தங்களே கள்ளு” என்று தம் கவிதை வரிகளில் நம்பிக்கை விதைகளை நட்டிருக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    உன் இரு கைகளால் தாங்கிய குழந்தைகள்
    நீ வருகிறாயா எனப் பின்னோக்கும் ஒரு குழந்தை
    எங்கு போகிறாய்?
    தாயை எதிர்நோக்கும் குழந்தையின் கண்களோ
    பசியால் வாடிய முகத்தினிலே

    விலைவாசி ஏற்றத்தில்
    வகைவகையாய் உணவு உண்டா?
    ருசிருசியாய்க் கனிதான் உண்டா?
    உழைப்பின் மார்க்கங்கள் தாளிட்டு நிற்கப்
    பணம் காசு கையில் இல்லை
    பளிச்சென்ற ஒளியோடு எதிர்காலம் உனை அழைக்கப்
    பட்டென ஒழியும் பரிதவித்த காலம்
    அப்போ குழந்தைகளை அள்ளு
    கொஞ்சும் முத்தம் உனக்கு கள்ளு

    *****

    மழலையர் சூழ்ந்த இந்தப் படத்துக்குத் தம்முடைய அழகிய சிந்தனைகளால் அணிசேர்த்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருகின்றது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    மேன்மக்கள்

    தங்க வீடு கட்ட வசதியில்லை – உலை
    பொங்க அடுப்பைக் கட்டி வைத்திருப்பார்!
    உடுத்திடும் கந்தை ஆடையிலே
    உறைபனி வெக்கைத் தாங்கிடுவார்…

    புழுதிப் புயலாய்ப் போர்த்தினாலும்
    அழுது புலம்பி வாடிடாமல்
    இருக்கும் இடத்தைச் சீர்செய்து
    வசிக்கும் கலைகள் தானறிவார்…

    கொட்டும் இடிமழை பெய்தாலும்
    கட்டிவெல்லமெனக் கரைந்திடாமல்
    கூடி அனைவரும் சேர்ந்து நின்று – தம்
    வாட்டம் தாமே தீர்த்துக்கொள்வார்….

    கொடுமையில் பெரிது வறுமையென
    வெறுமையில் வீணாய்ப் போக்கிடாமல்
    இயற்கையோடியைந்து வாழ்ந்திருந்து
    இன்பம் துய்த்து மகிழ்ந்திடுவார்!

    ஏழ்மை ஏறி மிதித்தாலும்
    கீழே கிடந்தது உழலாமல்
    மீண்டு எழுந்து வாழ்வதனால்
    இவரே இந்நாட்டின் மேன்மக்கள்!

    ”ஏழ்மை ஏறி மிதித்தபோதும், வறுமை இரக்கமின்றி வாட்டிய போதும் அதுகண்டு அஞ்சி வெறுமையாய்ப் போய்விடாமல் இயற்கையோடியைந்து வாழ்ந்து இன்பம் துய்க்கும் இவரே இந்நாட்டின் மேன்மக்கள்” என்று இவ் எளியோரை ஏத்தும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

     

     

    Share
  • Q & A: எங்கே புத்தாக்கம்? – அண்ணாகண்ணன் பதில்கள்

    அண்ணாகண்ணன்

    தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். இதில் பேராசிரியர்கள் உமாராஜ், சிதம்பரம், துரை.மணிகண்டன், மென்பொருளாளர் நீச்சல்காரன், யாழ்பாவாணன், எட்வர்டு பாக்கியராஜ், ஆய்வு மாணவர் தமிழ் பாரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக் கேள்வி – பதில் அமர்வை, இந்தப் பதிவில் காணலாம்.

     

    09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு தொடங்கி நடைபெற்றது.

    நன்றி: முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 8

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 8

    -மேகலா இராமமூர்த்தி

    ’ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்’ இயல்புகொண்ட மெய்யடியார்களைப் போல, நாடாளும் வாய்ப்பையும் காடேகும் கட்டளையையும் ஒன்றாகவே மதித்தான் இராமன். சிற்றன்னை கைகேயியை வணங்கிவிட்டு அவள் அரண்மனையிலிருந்து அகன்றவன், தன்னைப் பெற்ற அன்னையான கோசலையைக் காணப் புறப்பட்டான்.

    கவரி வீசுவோர் முன்னேவர, வெண்கொற்றக் குடை பிடிப்போர் பின்னேவர, பச்சைமா மலைபோல் மேனியும் பவளவாய் கமலச்செங்கணும் கொண்ட தன் மகன் அரசனாய் முடிபுனைந்து, கம்பீரநடை பயின்று, தன்னைக் காணவருவான் என்ற எதிர்பார்ப்போடு தன் அரண்மனையில் காத்திருக்கின்றாள் கோசலை. ஆனால் இராமனோ அரசனுக்குரிய அலங்காரங்கள் ஏதுமின்றித் தனியனாய் வருகின்றான்.

    உண்மையிலேயே அவன் தனியனாகத்தான் வருகின்றானா? இல்லை! அவனுக்கு முன்னால் விதி செல்ல, பின்னால் தருமமானது இரங்கி அழுதுகொண்டே வருகின்றது என்கிறார் கம்பர்.

    குழைக்கின்ற கவரி இன்றி
         கொற்ற வெண்குடையும் இன்றி
    இழைக்கின்ற விதிமுன் செல்ல
         தருமம்பின் இரங்கி ஏக
    மழைக்குன்றம் அனையான் மௌலி
         கவித்தனன் வரும்என்று என்று
    தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்
    முன்ஒரு தமியன் சென்றான்.
    (கம்ப: நகர்நீங்கு படலம் – 1695)

    அன்னையின் அருகில்வந்த இராமன் அவள் பாதம் பணிந்து நிமிர்கின்றான். அவன் தோற்றத்தைக் கண்ட கோசலை அவனைப் பார்த்து, “மகனே! முடிபுனைவதில் ஏதேனும் இடையூறு நேர்ந்துவிட்டதா?” என்று ஐயத்தோடு வினவுகின்றாள்.

    ”அம்மா! உங்கள் அன்புக்குரிய திருமகன் பரதன் முடிசூட விருக்கின்றான்!” என்றான் இராமன். மகனைக் கூர்ந்துநோக்கினாள் கோசலை. அவள் திருவாயிலிருந்து பின்வரும் சொல்முத்துக்கள் உதிர்ந்தன!

    ”மகனே! பரதன் முடிசூடுகின்றானா? மூத்தவன் இருக்க இளையவன் முடிசூடுதல் அரச வழக்கமன்று என்ற ஒருகுறையை வேண்டுமானால் நாம் இவ் விசயத்தில் சொல்லலாமே தவிர, பரதனைப் பொறுத்தவரை உங்கள் மூவரைவிடவும் நிறைகுணங்கள் கொண்டவன்; உன்னைவிட நல்லவன்! எக்குறையும் அற்றவன்; ஆக, அரசனாக இருக்க முழுத்தகுதியும் வாய்ந்தவன் அவன்” என்று பரதனுக்குப் புகழாரம் சூட்டுகின்றாள் நான்கு புதல்வர்களிடத்தும் அன்பினில் எவ்வித வேற்றுமையும் பாராட்டாத அருமைத் தாயான கோசலை.

    முறைமை அன்று என்பது ஒன்று
         உண்டு மும்மையின்
    நிறை குணத்தவன்
         நின்னினும் நல்லனால்
    குறைவுஇலன் எனக்
         கூறினள் நால்வர்க்கும்
    மறுஇல் அன்பினில்
         வேற்றுமை மாற்றினாள். (கம்ப: நகர்நீங்கு படலம் – 1698)

    இப்பாடலில் இடம்பெற்றுள்ள ’நின்னினும் நல்லனால்’ என்ற தொடர் வெண்ணிக் குயத்தியார் எனும் புலவர்பெருமாட்டியின் சங்கப் பாடலில் பயின்றுவந்துள்ள ’நின்னினும் நல்லன்’ தொடரை நமக்கு நினைவூட்டுகின்றது.

    அப்பாடல்…

    நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
    களிஇயல் யானைக் கரிகால் வளவ
    சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
    வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
    மிகப் புகழ் உலகம் எய்திப்
    புறப்புண் நாணி வடக் கிருந்தோனே.
    (புறம்: 66)

    தஞ்சைக்கு அருகிலுள்ள வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சோழமன்னன் கரிகாலன், சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னனையும், வேளிர்குலத்தைச் சேர்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்று வாகை சூடினான். அப்போரில் சேரமானுடைய மார்பில் பாய்ந்த வேலானது, அவனுடைய முதுகைத் துளைத்து வெளியேறியது; அதனால் அவனுக்குப் புறப்புண் ஏற்பட்டுவிட்டது. அதற்கு நாணியவன், அதன்பின்னர் உயிர்வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர்துறந்தான்.

    வெண்ணிப் பகுதியைச் சேர்ந்தவரான குயத்தியார் இந்நிகழ்வினை நன்கறிந்திருந்தார். அதனால் கரிகாலனைச் சந்தித்தபோது, மன்னா! நீ போரில் வென்றதனால் வெற்றிக்குரிய புகழடைந்தாய் என்று அவனைப் பணிந்துரைத்ததோடு நில்லாமல், புறப்புண்ணுக்காக நாணி உயிர்துறந்த பெருஞ்சேரலாதன் உன்னைவிடவும் மிகுபுகழ் எய்தியிருக்கின்றான். ஆதலால் நின்னினும் நல்லன் அவனே என்றும் துணிந்துரைந்தார்.

    இத்தொடரால் கவரப்பட்ட கம்பர், இராமனைவிடவும் நல்லவன் பரதன் என்று கோசலை அவனைப் புகழுமிடத்து, ’நின்னினும் நல்லனால்’ என்று பொருத்தமாய் அந்தச் சங்கச் சொல்லாடலைக் கையாண்டிருக்கின்றார். 

    பரதன் குறித்த கோசலையின் பாராட்டுமொழிகளை ஆமோதித்தான் இராமன்!

    ”சரி மகனே! அரசனின் ஆணை எதுவாயினும் அதனை ஏற்று நடப்பதுதான் உனக்குரிய அறமாகும்; ஆதலால் பரதன் நாடாளட்டும்! நீ அவனோடு ஒன்றுபட்டிருந்து நெடுங்காலம் வாழ்வாயாக!” என்று அவனை வாழ்த்தினாள் கோசலை.

    ”அம்மா! நான் நல்வழியில் செல்வதற்கு ஏற்றவகையில் எனக்கு மற்றொரு பணியையும் அரசர் அளித்திருக்கின்றார். அதன்படி நான் கானகம் சென்று மாதவம் செய்வாரோடு ஏழிரண்டு ஆண்டுகள் வசித்துத் திரும்பவேண்டும்.” என்று தேர்ந்தசொற்களால் இராமன் தன் கடமையை விளக்க, அதனைக் கேட்ட கோசலை அதிர்ந்துபோனாள். அவள் கண்கள் கண்ணீர்மழையைப் பொழியத் தொடங்கின.

    ”மைந்த! அரசற்கு நீ இழைத்த பிழைதான் என்ன? எதற்கு இப்படியோர் கட்டளை!” என்று கதறியவளைக் கண்டு, ”அம்மா! இப்பணி எனக்கு நன்மையே செய்யும்; நீங்கள் கலங்காதீர்கள்!” என்று தேற்றினான் இராமன்.

    கோசலை தன் மகன் மனத்தை மாற்றுவது கடினம் என்றுணர்ந்தவளாய், அரசனைக் கண்டு இக்கட்டளையை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்றெண்ணிக்கொண்டு கைகேயியின் அரண்மனை நோக்கிப் புறப்பட்டாள்.

    இதற்கிடையில் அண்ணனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்ட செய்தியை அறிந்த இலக்குவன், கடுங்கோபத்தோடு ஊரையே அழித்துவிடும் ஆவேசத்தில் வில்லின் நாணொலி எழுப்பினான். அவ்வொலியின் அதிர்வைக் கேட்ட இராமன் இளையவனின் மனக் குறிப்பறிந்தான். அவனை நோக்கி விரைந்துவந்தவன், ”இத்துணைக் கடுமையும் கோபமும் எதற்கு இலக்குவா?” என்று வினவ, ”என்னை எதிர்க்கவரும் அனைவரையும் வீழ்த்தி உன்னை அரசனாக்குவேன் அண்ணா!” என்று சீற்றத்தோடு உரைத்தான் இலக்குவன்.

    புன்சிரிப்பை உதிர்த்த புயல்வண்ணன், ”தம்பி நதியிலேயே நீரில்லை எனில் அது நதியின் குற்றமில்லை; அதுபோல் அரசாட்சி எனக்குக் கிட்டாமல் போனது நம் தந்தையின் குற்றமுமில்லை; நம்மைப் பேணிவளர்ந்த அன்னை கைகேயியின் குற்றமுமில்லை; அவளுடைய மகனான பரதனின் குற்றமும் இல்லை!”

    ”பின் யாருடைய குற்றம் என்கிறாயா? இது நம் ஊழ்வினையால் விளைந்த குற்றமே அப்பா! இதற்குப்போய் நீ பிறரிடம் கோபிப்பது சற்றும் முறையில்லை” என்று இலக்குவனைச் சமாதானப்படுத்தினான்.

    நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
    பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
    மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த
    விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது என்றான்.
    (கம்ப: நகர்நீங்கு படலம் – 1824)

    இந்தப் பாடலின் கருத்தில் மனம்நெகிழந்த கவியரசு கண்ணதாசன், இதனை மேலும் எளிமைப்படுத்தி,
    ”நதிவெள்ளம் காய்ந்துவிட்டால் நதிசெய்த குற்றமில்லை;

    விதிசெய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா? என்றுதியாகம்’ திரைப்படப் பாடலில் பயன்படுத்தினார்.

     [தொடரும்]

    *********
    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைகம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • பாயும் குயில் | Diving Cuckoo

    பாயும் குயில் | Diving Cuckoo

    அண்ணாகண்ணன்

    களிவளர் குயிலே – மின்னும்
    கவினெழு சுடரே
    குளிரிளந் திருவே – வண்ணக்
    குழலிசை அமுதே
    ஒளிமுகிழ் கனவே – பண்ணில்
    உயிர்வளர் ஒயிலே
    வெளியிது உனக்கே – நன்கு
    விரித்திடு சிறகே

    குயில், விண்ணில் பாயும் அழகைப் பாருங்கள்

    பாயும் குயில் – 1 | Diving Cuckoo – 1

    விண்ணுக்கும் மண்ணுக்கும் இந்தக் குயில் பாயும் அழகு, அந்தரத்தில் ஆடும் ஓர் எழில் நாட்டியம்.

    பாயும் குயில் – 2 | Diving Cuckoo – 2

    இந்தக் குயில், பறந்து பறந்து வானில் வரைந்து காட்டுவது என்ன?

    பாயும் குயில் – 3 | Diving Cuckoo – 3

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 9 (குயவன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 9 (குயவன்)

    ச. கண்மணி கணேசன்
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

    முன்னுரை 

    குயவன் ஒரே ஒரு அகப்பாடலின் பின்புலத்தில் வருணிக்கப்படுகிறான். சிறுபாத்திரம் என்னும் தகுதியையும் வேறு ஒரு அகப்பாடலில் மட்டுமே பெறுகிறான். பண்டைத்தமிழர் சமுதாயத்தில் நிலவிய பன்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளத் துணைசெய்வதே இப்பாத்திரத்தின் சிறப்பம்சம் ஆகும்

    புற இலக்கியத்தில் குயவன் 

    புறப்பாடல்களில் ஈமத்தாழி செய்யும் குயவன் ‘கலம்செய் கோ’ என்று அழைக்கப்படுகிறான் (புறம்.- 228& 256).

    “வேட்கோச் சிறாஅர் தேர்கால் வைத்த
    பசுமட் குரூஉத்திரள் போல” (புறம்.- 32)

    என்னும் உவமையில் இடப்பெறும் வேட்கோ என்பதும் குயவனையே குறிக்கிறது. பச்சை மண்ணைச் சக்கரத்தில் வைத்துத் தம் கைவினையால் செய்யும் சிவந்த பாண்டங்கள் அவர்கள் திறத்திற்கேற்ப வடிவம் பெறுவது போல என்பதால்; மண்ணைக் குறிக்கும் ‘வேள்’ என்னும் அடிச்சொல் குயவனுக்கும் பொருந்தி வருவது ஒருதலை.

    குயவனின் தோற்றமும் பொறுப்பும்

    அகப்பாடலின் இடப்பின்புலம் விளங்கத் தோன்றும் குயவன்; ‘பளிச்’சென்று கொத்தாகப் பூத்திருக்கும் நொச்சி மலர்களைத் தெரியலாக்கி அணிந்திருக்கிறான்; அவனது கடமையும் பொறுப்பும் மதிப்பிற்குரியன.

    “மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
    பலிகள் ஆர்கை பார்முது குயவன்
    இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து
    விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்” (நற்.- 293)

    என்பதால் அகன்ற ஊர் மன்றத்தில் விழா எடுக்குங்கால் தெய்வத்திற்குரிய  பலியைப் படைக்கும் தகுதி பெற்றவன் குயவன் என்பது பெற்றோம். அப்பலிப்பொருட்களை உண்ணுதற்குக் காக்கைகளை அழைப்பவனும் அவனாகிறான். பதிற்றுப்பத்து போருக்கு முந்தைய முரசு வழிபாட்டில் காட்சிப்படுத்தும் கிணைப்பொருநராகிய திணைமாந்தர் இங்கு ஒப்பீட்டிற்கு உரியவர் ஆகின்றனர். குயவனும் பலிகொடுத்துக் காக்கையை அழைப்பது தமிழ்ச் சமூகம் பற்றிய தனி ஆய்விற்கு உரியது.

    குயவனின் தொழிலும் அகப்பாடலில் இடப்பின்புலத்தை விளக்கும் காட்சிக்கு உவமை ஆகிறது.

    “இலங்கு மலை புதைய வெண்மழை கவைஇக்
    கலம்சுடு புகையின் தோன்றும் நாட” (அகம்.- 308)

    என்ற பாடலடிகள்; தலைவனது மலையின் உச்சியை மறைத்துக் கொண்டு  வெண்மேகங்கள் சூழ்ந்திருக்கும் காட்சி குயவனின் சூளையிலிருந்து வெளிப்படும் புகை போல அடர்ந்திருந்தமையை உணர்த்துகின்றது.

    குயவனின் செயல்

    குயவன் எந்த அகப்பாடலிலும் பேசவில்லை; அவனுக்குப் பேசும் உரிமை ‘பாடல் சான்ற புலனெறி வழக்கி’ல் இல்லை. அவனை அழைத்துத் தலைவி பேசுவதால் அவனுக்குச் சிறுபாத்திரத் தகுதி கிடைக்கிறது.

    “கண்ணி கட்டிய கதிர அன்ன
    ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி
    யாறு கிடந்தன்ன அகநெடுந் தெருவில்
    சாறு என நுவலும் முதுவாய்க் குயவ” (நற்.- 200)

    என்ற பாடலடிகள் முன்னர் சுட்டிய நற்றிணைப் பாடலில் உள்ள குயவனின் தோற்றத்தை மீண்டும் அரண் செய்கின்றன. இங்கும் குயவன் நொச்சித் தெரியல் சூடியுள்ளான்.

    ‘யாறு கிடந்தன்ன அகநெடுந் தெருவில்’ என்னும் தொடர் பத்துப்பாட்டிலும் காப்பியங்களிலும் பயின்று வரும் வாய்மொழிப்பாடற் கூறு என்பதால் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட நாட்டார் வழக்காற்றின் துளி ஒன்று இன்று நமக்குக் கிடைத்திருப்பது  நினைந்து இன்புறத்தக்கது.

    அவன் அணிந்திருந்த நொச்சித் தெரியலுக்குத் தலைவி சொல்லும் உவமை பண்டைச் சமூகச் செய்தியைத் தாங்கியுள்ளது. நெற்கதிரைக் கண்ணியாகக் கட்டியது போல அந்த நொச்சிப்பூக்கட்டு காட்சி அளித்ததாம். இந்த உவமை உணர்த்தும் குறிப்பு என்னவெனில் பாடலின் தலைவி ஒரு வேளாளர் குலப்பெண் என்பதாகும். நான்காம் வருணத்தாராகிய வேளாளர் நெல்வேளாண்மை செய்தவராதலால் அவர்கள் தொடர்பான செய்திகளில் நெல் பற்றிய குறிப்புகள் ஏதேனும் ஒரு வடிவில் இடம் பெறுவதுண்டு. பாடலில் ஆம்பல் பூக்களால் கட்புலனுக்கு இனிதாகத் தோன்றும் பழனப் பொய்கை உள்ள ஊர்க்காட்சி தொடர்வதும் அவள் வேளாளர் குலப்பெண் என்பதை உறுதி செய்கிறது. நீர்மேலாண்மையும் நெல்வேளாண்மையும் சேர்ந்தே நிகழ வேண்டியவை அல்லவா.

    குயவன் விழா அறைகிறான்; தெருவெங்கும் அவன் சாற்றுவதைத் தலைவி அவனை விளிக்கும் முறையில் புலப்படுத்துகிறாள். விழா அறையும் நிகழ்ச்சி தமிழின் முதற்காப்பியங்கள் இரண்டிலும் உள்ளது. அங்கு வேந்தர் ஆளுகையின் கீழ் பொதுமக்களுக்கு ‘முதுகுடிப் பிறந்தோன்’ விழா அறைவான். முதுகுடியினராக அறியப்படுவோர் மாங்குடி கிழார் வரிசைப்படுத்தும் துடியர், பாணர், பறையர், கடம்பர் என்போராவர். அவ்வரிசையில் குயவருக்கு இடமில்லை. ஆயினும் ‘முதுவாய்க் குயவ’ என்று அழைப்பது அவன் தொன்றுதொட்டு விழா அறையும் தகுதி பெற்றவன் என்பதைக் காட்டுகிறது. இதனால் குயவர் தமிழ் மண்ணின் மைந்தர் அல்லர்; தமிழகத்துப் பூர்வ குடியினர் அல்லர்; வேளிர் வந்தேறியதைப் போன்றே குயவரும் வந்தேறினர்; வேளிர் ஆளுகைக்கு உட்பட்ட ஊர்களில் விழா அறைவதும், பலிப்பொருள் செலுத்துவதும், காக்கைகளை அழைப்பதும் குயவரின் பொறுப்பாக இருந்தது என்பது பெறுகிறோம். ஆய்வாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள் தம் (The pot route) ஆய்வுக்கட்டுரையில் சொல்லும் செய்தி உறுதிப்படுகிறது.

    “இதுவும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ
    ஆம்பல் அகன்ற தீம்பெரும் பழனத்துப்
    பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகிக்
    கைகவர் நரம்பிற் பனுவற் பாணன்
    செய்த அல்லல் பல்குவ வையெயிற்று
    ஐதகல் அல்குல் மகளிர் இவன்
    பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின் எனவே” (மேற்.)

    என்ற பாடலின் பிற்பகுதியில் தலைவி தமிழ்நாட்டுச் சமூகநிலைமை பற்றி  மேலும் தெளிய  வைக்கிறாள். ‘முதுவாய்க் குயவ’ என குயவனைப் புகழ்ந்த தன் வாயால் பாணனைப் ‘பொய்பொதி கொடுஞ்சொல்’ பேசுபவன் என்று இழித்து உரைக்கிறாள். இது தலைவனின் புறத்தொழுக்கத்திற்கு பாணன் துணை இருப்பதை விரும்பாத தலைவியின் விமர்சனம் ஆகும். ‘பாணனால் ஏற்படும் துன்பங்கள் பெருகுகின்றன; பெண்கள் இவனை நம்பவேண்டாம்’ என்றும் சேர்த்து அறிவிப்பாயாக என்று குயவனை வேண்டுகிறாள்.

    குயவனையும் பாணனையும் ஒப்பிட்டு; குயவனின் பேச்சைப் பெண்டிர் ஏற்றுக்கொள்வர் என்னும் நம்பிக்கையோடு; பாணனின் பேச்சை நம்பக்கூடாதென்று; ஒருவரோடொருவர் முரண்படும் ஏற்றத்தாழ்வை வெளிப்படையாகச் சுட்டி; முகத்துக்கு நேரே துணிவுடன்; யாழின் நரம்பை மீட்டிக்கொண்டே  பாடும் தொழில்வல்ல பாணனின் குறையைக் கூறச் சொல்லும் தலைவியின் முயற்சியில் இனச்சாடலின் சாயல் தென்படுகிறது என்று சொல்வது மிகையாகத் தோன்றவில்லை.

    முடிவுரை

    ஒரே ஒரு பாடலில் சிறுபாத்திரம் ஆகும் குயவன் சமூகச் செய்திகளைத் தாங்கி இருப்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக உள்ளான்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-36

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-36

    தி. இரா. மீனா

    சித்தராமன் தொடர்ச்சி

    1. “நீரிலுள்ள மீன் தன் நாசியிடம்
    நீரைச் சேரவிடாத விதத்தைப் பாரய்யா
    சரணன்  உலகத்தினூடே இருப்பினும்
    உலகத்தைத் தன்னருகே விடமாட்டான் பாரய்யா.
    மீனுக்கு அந்த அறிவையும்
    சரணனுக்கு இந்த அறிவையும் கொடுத்தனையே
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

    2. “எனக்குத் தெரியும் எனக்குத் தெரியுமெனச்
    சொன்ன பலரும் அகந்தையில் சென்றனர்.
    எனக்குத் தெரியவில்லை,தெரியவில்லையெனச்
    சொன்ன பலரும் மறதியில் சென்றனர்.
    தெரிந்தோம் என்பதும் தெரியவில்லையென்பதும்
    ஞானத்தின் முட்டுக்கட்டை.
    தெரிந்தால் அறிவு, மறந்தால் அறிவீனம்
    தெரிந்தும் தெரியாதவன் தெளிந்த
    நீரின் கமல கபிலசித்த மல்லிகாஜூனன் தானே”

    3. “அத்வைதம் பேசமுடியும் கோடி தடவைகள்.
    தூயபக்தி நன்னடத்தையில் உறுதியோடு
    ஒரு தடவை ஒழுகமுடியுமா?
    சொற்படி நடந்து , நடப்பது போல் சொல்கின்ற
    தூயபக்தி நன்னடத்தையில் உயர்ந்தோர்தம்
    பதம் வணங்கி வாழ வைப்பாய் ஐயனே,
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

    4. “எண்ணம் விரிய இலிங்கமென்றானது
    எண்ணம் பிரிய கல்லென்றானது
    எண்ணம் ஒன்றாதபோது யாதொன்றும் ஆகாது
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

    5.  “களிமண் ஒன்று சட்டிகள் பன்னூறு
    மனம் ஒன்று செயல்கள் பன்னூறு
    தந்தை ஒருவன் சந்ததிகள் பன்னூறு
    கபிலசித்த மல்லிகார்ஜூனனுள் உலகங்கள் பன்னூறு”

    6.  “தாங்கள் வேதப்பிரியனல்லன் ஐயனே;
    தாங்கள் சாத்திரப் பிரியனல்லன் ஐயனே ;
    தாங்கள் நாதப் பிரியனல்லன் ஐயனே ;
    தாங்கள் புகழ்ச்சிப் பிரியனல்லன் ஐயனே;
    தாங்கள் உத்திப் பிரியனல்லன் ஐயனே;
    பக்திப் பிரியனென நம்பினேன்
    காத்திடுவாய் கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

    7. “பெண் அழிந்தபின் மண்ணின் விருப்பமேன்?
    மண் அழிந்தபின் பொன்னின் விருப்பமேன்?
    முக்கண்ணன் ஆனபின் மூன்றின் விருப்பமேன்?
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

    சித்தாந்தி வீரசங்கய்யா

    பெயருக்கேற்றாற் போல சித்தாந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர். ’கோளாகார விஸ்வ விரகிதலிங்க ’இவரது முத்திரையாகும்.

    “நீராலான முத்தை அமைதியான நீரில் போட
    அந்நாளின் நீர் அதுவென முத்து கெட்டியாகுமா?
    அல்லது மீண்டும் அது நீராகுமா?
    இவ்விரண்டின் பேதமறிந்தால்,
    துவைதம், அத்துவைதம் அறிந்தவரென்பேன்.
    இதுவன்றி வெற்றி தோல்விக்குச் சமர் புரியும்
    கல் மனத்தவருக்கு எங்குள்ளதோ
    கோளாகார விஸ்வவிரகித இலிங்கமும் அதன் சாத்தியமும்”

    சுங்கத பங்கண்ணா

    சுங்கம் வசூலிப்பது இவரது காயகம். ’பங்கேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    1. “உணவு மீது முனைப்பு
    உறக்கம் மீது முனைப்பு
    பெண்மீது முனைப்பிருப்பது போல
    இலிங்கம் மீதுமிருக்க வேண்டும்
    சிவலிங்கத்தில் கவர்ச்சி கொண்டால்
    தன்னையே கொடுப்பான் சென்ன பங்கநாத தேவன்”

    2.  “உடல் போர்க்களமானது
    புலன்களின் கூட்டம் சிதைந்தது
    உடலரசன் தடுமாறினான்
    சுயமெனும் ஆற்றலின் பேரரசன் வென்றான்
    பங்கேவரனின் அன்பினால்“

    சூளே சங்கவ்வா

    ’நிர்வச்சேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

    “ஒருவனுக்கு நேரமொதுக்கி
    வேறொருவனோடு கூடினால்
    நிர்வாணமாக்கி அடிப்பாரையா
    விரதக்கேடுடையவனோடு சேர்ந்தால்
    காய்ச்சிய கம்பியால் கை செவி மூக்கறுப்பாரையா
    இதையறிந்து விரும்பேன், விரும்பேன்
    உம்மீதாணை நிர்வச்சேஸ்வரனே.”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 92 (வழிவரும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 92 (வழிவரும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வழிவரும்  இளைப்பி  னோடும்  வருத்திய  பசியி  னாலே
    அழிவுறும்  ஐயன்  என்னும்  அன்பினிற்  பொலிந்து  சென்று
    குழிநிரம்  பாத  புன்செய்க்  குறும்பயிர்  தடவிப்  பாசப்
    பழிமுதல்  பறிப்பார் போலப்  பறித்து அவை கறிக்கு  நல்க

    இளையான்குடி மாறனார், வந்தஅடியாரின் ஈரமேனியைத்துடைத்து வேறு ஆடையளித்து ‘அடியார்மிகவும்பசியோடு இருக்கிறார்’ என்றபோது, ‘நம் வறுமை நீங்க  இன்று பகலில்   விதைத்த முளைநெல்லை வயலிலிருந்து வாரிக்கொண்டு வந்தால் என்னால் ஆனதைச் செய்வேன்’ என்றார். வயலில் இருந்து வந்த ஈரநெல்லை வறுத்து, இடித்து அரிசியாக்கி உணவு  சமைக்க அடுப்பில் எரிதுரும்பு இல்லைஎன்றார் உடனே நாயனார்   தம்வீட்டின் உட்கூரை மூங்கில் வரிச்சுக்களைப் பிடுங்கிப் போட்டார். அடுப்பு மூட்டிநெல்லை வறுத்து  அரிசியாக்கிச்   சோறாக்கினார். அடுத்து ‘கறிக்கு இனிஎன்னசெய்வது?’ என்றுகேட்டார். அப்போது நாயனார் பின்பக்கம் புன்செய்ப் பயிராக முளைத்திருந்த  கீரையைப்  பறித்து  நல்கினார்

    இப்பாடலின் பொருள்: “வழி வந்ததாலுளதாகும் இளைப்பினுடனே அதன் முன்னரே வருத்திய பசியினாலே எமது ஐயன் வருந்தும்“ என்கின்ற அன்பினாற் கிளர்ந்து சென்று தமது கொல்லையிலே, முளைக்கவைத்த குழிகளினின்றும் மேலே கிளம்பும் பருவம் உறாத சிறிய இலைக்கறிப் பயிர்களைக் கையினாற்றடவிப் பாசப் பழிமுதலை அறவே பறிப்பவர்போல அவற்றை வேரோடும் பிடுங்கி வந்து கறிக்காக (நாயனார்) மனைவியார் கையிற் கொடுக்க, இப்பாடலில்  வழிவரும் இளைப்பினோடும் வருத்திய பசி என்பது – வழி வருதலாலுள தாகிய இளைப்பு – அயர்ச்சி. வழிவருதலென்னும் புறத்து நிகழ்ச்சியாகிய அயர்ச்சியுடன் உள்ளிருந்து வருத்திய பசியும் என்க. எனவே உள்ளும் புறமுமாக இருவழியானும் அடியவர் வருந்தினார் என்று அவர்பாற் சென்ற அன்பு காரணமாக நாயனார் தம்  கவலைகொண்ட உள்ளத்தைக்  குறித்தது.

    அடுத்து அன்பினிற் பொலிந்து சென்று  என்ற தொடர்,  அன்பு நிறைதலால் மிகக் கிளர்ச்சியுடன் விரைந்துபோய். இது நாயனார் பயிர்களைப் பறிப்பதற்குச் சென்ற விரைவினையும், அது போழ்து அவரது மன நிலையையும் குறித்தது. ஒவ்வோர் கணமும் அடியவர் பசி அதிகரித்தலைப் பொறுத்துக் கொள்ளாமல்  இவ்விருவரும் செய்த செயல்களின் தன்மை குறித்தபடியாம்.

    மேலும்,  குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் – புன்செய்ப் பயிர் – கீரை முதலிய இலைக்கறிப் பயிர். இவை புன்செய் நிலத்தில் பயிரிடப்பெறுவன. குழிநிரம்பாத – பயிர்கள் இடப்பெற்ற குழிகளின் அளவுக்கு மேற்பட்ட உயரம் மேலே வளர்ந்து வராத. புன்செய் – வீட்டுக் கொல்லையாக நாயனார் பயன்படுத்திய புன்செய் நிலம் நாயனார் முளை வாரிவந்தது நெல் விளையும் நன்செய் நிலமென்றும்,கறிக்காகும் குறும்பயிர் பறித்து வந்தது அவரது மனையை அடுத்துக் கொல்லைப் பயிர் செய்துவந்த புன்செய் நிலமென்றும் அறியலாம். இப்போது பரமக் குடியை அடுத்த இளையான் குடி என்னும் இவ்வூரில் வீட்டு மனைகளின் அடுத்து இங்குக் குறித்த புன்செய் மேடு என்று வழங்கும் ஒரு புன்செய் இடமும், அதனை அடுத்து இது குறித்த முளைவாரி அமுதளித்த ‘’முளைவாரிக்குட்டை’’ எனவழங்கும் நன்செய் நிலமும் இன்னுங் காணப்பெறுகின்றன.

    இவ்விரண்டு நிலங்களினும் நாயனார் நென்முளையும், பயிரும் மேல் விளையாமல் வாரியும் பறித்ததும் விட்டபடியால் இன்றைக்கும் ஒன்றும் விளையாமலிருந்து வருகின்றன என்பது அவ்வூரார் சொல்லக்  கேட்ட செய்தியாம். இவற்றை வேலியிட்டுப் பாதுகாத்து உலகிற்கு அறிவிக்குமாறு கல்வெட்டு முதலிய, நினைவின் அடையாளங்கள் பொறித்துக் காவல்செய்து போற்றுதல் சைவர்களின் முதற்கடமைகளில் ஒன்றாம்.

    அடுத்து தடவி   என்ற  சொல் , குழி நிரம்பாத குற்றளவுடைமையானும், நள்ளிருட் காலமாதலானும் அக்குறும் பயிர்களைத் தடவிப் பறிக்க வேண்டியதாயிற்று என்க. பாசப் பழிமுதல் பறிப்பார்போல நாயனார் பறித்தவை குறும்பயிர் அன்று; அவை அவரது பாசத்தின் பழிமுதல் பறித்தலே போல நின்றன என்றார். பாசப் பழிமுதல் – ஆணவமாகிய சகல மலத்திற்கும் வேராகி நிற்கும் மூலமலம் என்பர். “யாக்கை தன்பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்றும் அற ‘’ என்பது கண்ணப்ப நாயனார் புராணம்.  பிற்காலத்துச் செல்லல் நீங்குதற்காக வித்தியிருந்த நெல் முளை வாரியதனானே வித்துமேல் விளையாமல் செய்த செயல் ஆகாமிய கர்மங்களைக் கிழித்தலும், குறும்பயிர் வேருடன் பறித்ததனானே பிராரத்த வினைகளை அழித்தலும், மனையின் அலக்குக்களை அறுத்து மேலும் புவன போகங்களை இல்லாமல் வீட்டியதனாலே சஞ்சித கர்மங்களை அழித்தலும் குறிக்கப்பெற்றன என்று இங்கு விசேடப்பொருள் காண்பாருமுண்டு. இவை ஆணவம் முதலான  மும்மலங்களின் அழிவு குறித்தன என்பாருமுண்டு. இவையெல்லாம்  சிவாநுபவப்  பொருள்;

    முதல் – மூலவேர்.  பறிப்பார்போல – இங்கு போல என்ற உவமவுருபு பயன்பற்றித் தோன்றிச் சிறப்பு நிலைக்களமாயின உவமம் என்பர். உவமிக்கப்பட்ட பொருளும் உவமையும் பண்பினால் ஒன்றேயாயின ஒற்றுமை நிலைகுறித்து நின்ற அழகும் காண்க.  குறும்பயிர்கள் வேரோடு பறிக்கப் பெற்றபடியால் பாசப் பழிமுதல் என்றார்

    நயம் : இப்பாடலில்  சைவ நன்மக்கள் தம்  முன்வினை, கடந்த பிறப்பின்  வினை, இப்பிறவி வினை  என்ற  சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் ஆகிய  வினைகளை  அறுத்த பின்னரே இறையருள் பெறலாம் . இவற்றை கூரை வரிச்சு , குறும்பயிர் ஆகிய  அடையாளங்களால்  உணர்த்திய  சேக்கிழார் பெருமானின்  பாடல் நயம்  எண்ணியெண்ணி  இன்புறத்தக்கது!

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 13

    கதை வடிவில் பழமொழி நானூறு – 13

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 27

    உறுகண் பலவும் உணராமை கந்தாத்
    தறுகண்மை ஆகாதாம் பேதை, – ‘தறுகண்
    பொறிப்பட்ட வாறல்லால், பூணாதுஎன் றெண்ணி,
    அறிவச்சம் ஆற்றப் பெரிது‘.

    பழமொழி –  பேதை எதையும் செய்யமாட்டான்

    வியாபாரம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குள் திடீரென அவனுக்கு என்ன வந்துவிட்டது. இந்த ஐந்து வருடத்தில் அவன் எப்படியெல்லாம் விருத்திசெய்திருப்பான் என கோட்டை கட்டிக்கொண்டு வந்ததுதான் மிச்சம். ஏன் இப்படி. என்னவாக இருக்கும்.

    தீபாவளி பலகாரங்கள் எதுவும் இனிக்கவில்லை. மனம் ஒரு குரங்குதானே. அதனால்தானோ என்னவோ முன்னால் தட்டு நிறைய வீட்டில்செய்த இனிப்புகள் இருந்தும் எதையும் கையில் எடுக்க மனம் வரவில்லை.

    நண்பனின் தந்தை அவனைத் திட்டும்போதெல்லாம் எப்படி வக்காலத்து வாங்கி இருக்கிறேன். மனம் யோசனையில் ஆழ்ந்தது.

    நீ எதுக்கும் லாயிக்கில்லாதவன்டா. உக்காந்து தின்னே காலத்தக் கழிச்சிரு. உன் சோம்பேறித்தனத்த வளக்கறதுக்கு எட்டு காரணத்தச் சொல்லு. வெளியில இறங்கி உலகத்தப்பாத்ததானே பிழைக்கிற வழி தெரியும். நாலு சுவத்துக்குள்ள உக்காந்து நீயும் உங்கம்மாவும் கோட்ட கட்டிக்கிட்டே இருங்க. ஏண்டாப்பா நீ கூடவா இவனுக்கு புத்தி சொல்லக்கூடாது. ஏதோ சென்னைக்குப் போகப்போறதா கேள்விப்பட்டேனே. உண்மையா.

    ஆமா அங்கிள். நான் எங்க சித்தப்பா வீட்ல போய் இருந்துக்கிட்டு வேல தேடப்போறேன்.

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சவொடனே இவனையும் கூப்பிட்டுக்கறேன். ஒப்புக்குச் சொன்ன வார்த்தை அன்று.

    பள்ளிப்படிப்பில் தொடங்கி கும்பகோணம் கல்லூரி வரை நானும் என் நண்பன் நாகுவும் ஒண்ணாத்தான் படிச்சோம். அவன் கொஞ்சம் பயந்த சுபாவம். எதிலயும் ரிஸ்க் எடுக்க மாட்டான். அவங்க அம்மாவும் அந்தக் கொணத்த திசை திருப்பி பலமான கடவுள் நம்பிக்கைய விதைச்சாங்க. நாளாவட்டத்துல அது கடவுள் நம்பிக்கையா இல்லாம கடவுள் பயமா மாறிப்போச்சு. டேய் பரீட்சைக்கு முன்ன பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டுட்டு வரேன். கோபிச்சுக்கப் போறாருங்கற அளவில்.

    இதை அவன் அம்மாவின் பார்வைக்கு கொண்டு சென்றபோது நல்லது தம்பி நான் அவனுக்கு புத்தி சொல்றேன் என்றாள். அவள் புத்தி சொல்லி வளர்த்தவிதத்தைத் தான் நான் இப்ப பாக்கறேனே. போனவாரம் தீபாவளி அன்று அவன் அப்பாவின் தொலைபேசி அழைப்பு வந்தது.

    கால ஓட்டத்தில் ஒருவரையொருவர் மறந்து வேலை, திருமணம் என்று வேறு வேறு திசைகளை நோக்கி பயணித்து விட்ட பின் அவரின் குரல் என் கடந்த காலத்தை மீண்டும் வரவழைத்ததுபோல்….

    தம்பி நான் உங்க நண்பர் நாகுவோட அப்பா பேசறேன். ஊர மறந்துட்டீங்க போல. இந்தப்பக்கமே வரதில்ல. முடிஞ்சப்போ குடும்பத்தோடவந்து எங்க வீட்ல தங்கிட்டுப்போங்க. உங்க நண்பரும் சந்தோஷப்படுவாரு. உங்கபையனும் என் பேரனும் சேந்து விளையாடலாம்.

    கேட்க நன்றாக இருந்தது. இதோ வந்தேவிட்டோம். என்ன ஆச்சர்யம். நாகு மட்டும் மாறவேயில்லை. ஏதோ கடை வைத்து நடத்துகிறானாம். அதைப்பெரிசாக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அதே ஓட்டுவீட்டில்தான் வசிக்கிறார்கள்.

    எனக்கு என்னடா குறைச்சல். சாப்பாட்டுக்கு கடை வருமானம் இருக்கு. போய்வர சைக்கிள் வாகனம் இருக்கு. ஒத்த பையன். நாம படிச்ச பள்ளிக்கூடத்திலயே அவனையும் சேத்திருக்கேன். நல்லாப் படிக்கிறான். மனைவி நச்சரிப்புதான் தாங்கமுடியல. வருமானம் பத்தாதாம். எங்கப்பாவும் அவகூட ஜால்ரா போடறார். வங்கியில கடன் வாங்கி கடையை விரிவுபடுத்துனு.

    நீயே சொல்லு. கடவுள் யாருக்கு எது கொடுக்கணும்னு விதிச்சிருக்காரோ அதுதானே கிடைக்கும்.  அதுக்குமேல ஆசப்பட்டா அவருக்குக் கோபம் வராதா. இந்த விஷயத்துல எங்கம்மா தான் சரி.  என்னய தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லச் சொல்லியிருக்காங்க. கடவுளா மனமிரங்கி கொடுத்தா கொடுக்கட்டும். இல்லன்னா விதிவிட்ட வழினு இருப்பேன். அவன் பேசப்பேச எனக்கு ஆச்சரியம்

    ‘அறிவச்சம் ஆற்றப் பெரிது’ என்னும் பழமொழி ஞாபகத்துக்கு வந்தது. தனக்கு வந்து சேர்ந்த துன்பம் பலவற்றுக்கும் காரணம் அறியாமலேயே அது விதிப்பயன் என்றெண்ணி தீர்க்க முயற்சிக்காமலிருப்பவன் பேதையாவான். ஆம் நாகுவும் ஒரு பேதையே.

    பாடல் – 28

    சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
    பட்ட இழுக்கம் பலவானால் – பட்ட
    பொறியின் வகைய கருமம்; அதனால்,
    ‘அறிவினை ஊழே அடும்’.

    பழமொழி – ‘அறிவினை ஊழே அடும்’

    நம்ம ராஜேந்தர் சாரோட வழக்கப் பத்தி கேள்விப்பட்டயா. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்குடா. எவ்வளவு பொறுப்பான வாத்தியார். ஒழுக்கத்த நம்மளுக்கு கத்துக் கொடுத்தவரே அவர் தான். என்னால அவர் அப்படிச் செஞ்சிருப்பாருன்னு நம்ப முடியல. நீங்க கண்டிப்பா ஒருநாள் ரொம்ப பேமஸ் ஆவிங்க சார்னு நான்பலமுறை சொல்லியிருக்கேன். அதுக்காக இப்படியா. சென்னையிலிருந்து வந்திருக்கும் நான் என் பால்ய நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

    பத்தாண்டுகளுக்கு முன்பு உள்ளூர் அரசுப்பள்ளியில் படித்த எங்களுக்கு இராஜேந்தர் சார் பன்னிரண்டாம் வகுப்பு கணித ஆசிரியர். அவராலேயே நல்ல மதிப்பெண் பெற்று சென்னை பொறியியற்கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்மட்டும் இல்லையெனில் எங்களில் பாதிபேரின் வாழ்க்கை ப்ளம்பர் மற்றும் பிட்டர் எனதான் கழிந்திருக்கும். பொறியியல் படிப்பை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

    கடந்த ஒருவாரமாக ஊடகங்களில் அவரைப்பற்றி வரும் செய்திகளை மற்றவர்கள் போல் கடந்துபோக என்னால் முடியவில்லை. இப்போது நல்லபணியில் இருக்கும்நான் ஏதாவது ஒருவகையில் அவருக்கு உதவ வேண்டும். அதனால் தான் என் உற்ற நண்பனிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறேன். அவன் தற்போது நாங்கள் படித்த மேல்நிலைப்பள்ளியிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறான்.

    ஆமாண்டா. நான் அந்தப் பள்ளியில ஆசிரியர்னாலும் சார எதிரில பார்க்க நேர்ந்தா இப்பவும் எழுந்து நிப்பேன். அவருக்குச் சரிசமமா உட்காற மனசு வராது. திடீர்னு அவரப் பத்தி புகார் வந்தவொடனே பள்ளிக்கூடமே ஆடிப்போயிடுச்சு.

    அவருடைய கடைசி தம்பி தன் மகன டாக்டர் ஆக்கணும்னு விருப்பப்பட்டிருக்கார்போல. அதுக்காக சார்கிட்ட உதவி கேட்டிருக்காரு. தம்பி ஊர்ப்பக்கம் விவசாயம் பாத்துக்கிட்டிருக்கறதால சார் அவர் மகனத் தன் வீட்லயே வச்சி படிக்க வச்சிருக்கார். அப்பறம் கோச்சிங் சென்டர்ல சேக்கணும்னு நெனச்சப்போதான் வினையே தொடங்கிச்சு. நம்ம பள்ளியில புதுசா ஒரு கெமிஸ்டரி சார் சேந்திருக்கார். அவர் குடும்பமே கோச்சிங்சென்டர் வச்சு நடத்தறவங்க போல. அவர நம்பி நீட் கோச்சிங்காக தன் தம்பி மகன அவரோட சென்டர்லயே சேத்து விட்டுருக்காரு. சேரும்போது பத்துபக்கத்துக்கு ஒரு விண்ணப்பம் நிரப்பச்சொல்லியிருப்பாங்க போல. அதில கீழ எழுதியிருந்தத எல்லாம் சரியாவாசிக்காம கூட வேலை பாக்கறவர்தானேனு நினைச்சு சார் கையெழுத்து போட்டிருக்கார்.

    இவருடைய தம்பி மகனுக்கு நீட் தேர்வுல சரியா மதிப்பெண் கிடைக்கல. ஆனா அவங்க உங்க தம்பிமகன் பெயரில வேற ஒருபையனும் எழுதி இருக்கான் அது க்ளியர் ஆயிருக்கு. நீங்க இருபதாயிரம் கட்டணம் எங்களுக்குக் குடுத்தீங்கன்னா உங்களுக்கு சீட் நிச்சயம்னு சொன்னாங்களாம். அப்ப அவருக்குக் கோபம் வந்திருச்சு. முறையாப் படிச்சு வாங்கினவங்க பாதிக்கப்படுவாங்கனு கூக்குரல் போட்டு போலீசுக்குத் தகவல் குடுத்துட்டாரு போல.

    அப்பதொடங்கினது தலவலி. அந்த கோச்சிங் சென்டர் காரருக்கு அரசியல்ல பெரியபுள்ளிகளத் தெரியும்போல. பணம் குடுத்து சரிகட்டிட்டாரு. பழி முழுக்க சார்மேல வந்திருச்சு. பேராசப்பட்டு அவர் சென்டர நிர்ப்பந்தப் படுத்தினதாவும் அதுக்காக அவர் எழுத்துல எழுதிக்கொடுத்ததாவும் வழக்கு பதிவு பண்ணிட்டாங்க.

    முன்ன அவர் படிக்காம கையெழுத்து போட்டது வினையாப் போச்சு. அதில தாங்கள் எந்த வழியிலாவது (ஆள் மாறாட்டம் செய்தோ/பிற வழியிலோ) நீட் தேர்வில் என்மகனைத் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்த நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன்னு எழுதியிருந்தத கவனிக்காம அவர் கையெழுத்துபோட்டிருக்கார் போல.

    இப்போ என்னடான்னா….  என்னய்யா நீயே கையெழுத்து போட்டுட்டு கெடைக்கலன்ன வொடனே இவுங்கள மாட்டி விடப் பாக்கறனு போலீசு திட்டறதப் பாக்க சகிக்கல. இதத்தான் ‘அறிவினை ஊழே அடும்’ னு பழமொழியாச்சொல்லுவாங்க போல. அறிவாளி கூட தன்னோட தலையெழுத்தால சிலநேரம் அவத்தைப்படுவாங்கறது தான் அதோட அர்த்தம். .

    Share