அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (16.08.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி – 271

 1. படக்கவிதைப் போட்டி-271

  சொட்டும் மிச்சமின்றி
  கொட்டி விட்டேன் காதலை
  சுமக்கிறாய்,
  உன் மேனியெங்கும்
  முத்தத்தடங்கள் போல.
  ஏந்துகிறாய்
  அன்னை போல்
  கண்ணாடி குழந்தைகள் போல
  முகம் பார்த்துக்கொள்கிறேன்
  நெடுநாள் கழித்து
  என் சாயல் அதனில்.
  சூரியனைப் பற்றி
  கவலை கொள்ளாதே.
  நாளையும் வருவேன்
  காதலிக்க.
  இப்படிக்கு
  உன் நான்
  மேகத்திலிருந்து.

  -ரா.விஜயகுமாரி
  திசையன்விளை

 2. கண்ணீர் துடைக்க…

  முள்ளாலும்
  முழுப் பாதுகாப்பில்லை,
  எட்டா உயரத்தில்
  மொட்டாய் இருந்தாலும்
  எட்டிப் பறித்துவிடுகிறான்
  மனிதன்..

  அழகு அழகு என்று
  கூறிக்கொண்டே
  அழகை அழிப்பதுதான்
  அவன் வேலை..

  அதிலும் இப்போது
  காலா காலத்தில்
  பூவும் வரவில்லை
  பொழுதும் போகவில்லை,
  அழுது வடிகிறது
  அழகு ரோஜாச் செடி..

  அதோ,
  ஆறுதல் சொல்லிக்
  கண்ணீர் துடைக்க
  கீழை வானில் வருகிறான்
  கதிரவன்…!

  செண்பக ஜெகதீசன்…

 3. படக்கவிதைப் போட்டி 271

  பனித்துளித் தாங்கிய இலைகள்
  பருவப்பெண்ணின் அழகிய உதடுகள்
  வண்ணவண்ண நிறப்பதிலிருப்பதனால்
  வானவில் வடிவில் நின்றதுவோ?
  பளப்பள நிறத்தில் பனித்துளிகள்
  மழைத்துளியின் மாற்று உருவமதோ
  மொத்தத்தில்
  பனித்துளையால் இலைக்கழகா
  இலையால் பனித்துளி அழகா
  விடையைத்தான் கூறுங்கள்
  வெகுநேரம் காத்திருப்பேன்

  சுதா மாதவன்

 4. செடியின் உள்ளக் குமுறல்

  வசதி உள்ளவன்
  வீட்டு தோட்ட்த்து
  செடி நான்

  பணம் கொடுத்து
  தண்ணீர் வாங்கி
  என்னை வாழ வைத்து
  என்ன பயன்

  அழகுக்கான செடி
  பூக்காத கொடி
  நீரே என் குடி
  செல்லாத உருப்படி

  அடுத்த வீட்டு
  துளசி மாடம்
  நீரின்றி வாட்டம்

  குடிக்க நீரின்றி
  தெரு எல்லாம்
  தவியோ தவிப்பில்
  பணக்கார வீட்டில்
  தோட்ட்த்து செடியாக
  நானிருப்பது
  எனக்கது சிறுமையே

  சீ.காந்திமதிநாதன்
  கோவில்பட்டி

 5. சிவந்த இதழுடன்
  சிரித்த முகத்துடன்
  கிளையுடன் இருந்தாலும்
  சிலையாக நின்றாலும்
  தனியாக இருககிறேன்
  வேரில் ஈரமில்லை
  வீழவும் துணி வில்லை
  ஆணிவேர் ஆனேன்
  ஆசை பல கொண்டேன்
  அடையவில்லை அனைத்தையும்
  ஏணி ப்போல
  ஏற்றிவிட்டேன்
  ஏனோ……
  நான் ஏறவில்லை
  ஏமாற்றமும் எனக்குஇல்லை
  அகிலத்தை
  அசத்தும்
  அழகிய
  அழுகாத
  மலர் நான்
  என் மீது விழுந்த
  பனித்துளியால
  இன்னும்
  வாடாமல் வாழ்கிறேன்!

  -செ.சீத்தாலட்சுமி அய்யப்பன்

 6. முள்ளும் மலரும்

  ஒருபக்கம்…
  மற்றோரின் வாழ்வு கண்டு
  ஆற்றாமை கோபம் கொண்டு
  விழுமியங்கள்யாவும் கெட்டு
  அழுக்காறு முள்ளாய் வளரும்
  மறுபக்கம்…
  எளியோரின் இன்னல் கண்டு-அவர்
  துயர் நீக்கி வாழவைத்துக்
  களிப்பூட்டி உய்விக்கும்
  உயர் எண்ணம் பூவாய் மலரும்…

  ஒரு நேரம்….
  காலமதை வீணடித்துக்
  களிப்பொன்றே வாழ்வென்று
  முயற்சியென்ற சொல்கூட
  முள்ளாய் குத்தும்….
  மறு நேரம்….
  புதுமுயற்சி பலசெய்து
  பழமைகளைக் கலாய்ந்து
  புத்துலகம் படைப்பதற்கு
  உத்வேகம் பூவாய் மலரும்…

  வாழ்க்கையென்ற செடியினிலே
  வளர்வது முள்ளா? மலரா?
  வளர்கையில் எதுவும் விளங்குவதில்லை

  சில நேரங்களில் ….
  முள் கொடுத்த சுகானுபவமும்
  மலர் கொடுத்தக் காயங்களின் வடுக்களும்
  அனுபவ வானில் மின்னலாய் கீற்றுவிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *