Blog

  • செம்பகம், தமிழீழத்தின் தேசியப் பறவை

    செம்பகம், தமிழீழத்தின் தேசியப் பறவை

    அண்ணாகண்ணன்

    இன்று கடைக்குப் போய்விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென்று தோன்றியது. வழக்கமான தெருவின் வழியல்லாது, பக்கத்துத் தெரு வழியாகச் செல்வோமே என்று வண்டியைத் திருப்பினேன். அந்தத் தெருவில் குகுக் குகுக் எனப் பெரிய ஒலி தொடர்ச்சியாகக் கேட்டது. அது ஒரு பறவையின் குரல். இதுவரை நான் கேட்காத குரல். வண்டியை நிறுத்திவிட்டு, பறவையைத் தேடத் தொடங்கினேன். குரல் மட்டும் நன்றாகக் கேட்டது. பறவையைக் காணவில்லை.

    முதலில் ஒன்றிரண்டு காக்கைகள் கரைந்தன. அவை இதர காக்கைகளையும் அழைத்தன. சிறிது நேரத்தில் ஏராளமான காக்கைகள் அந்தப் பகுதியில் குவிந்து கரையத் தொடங்கின.

    இறுதியில் அந்தப் பறவையைக் கண்டேன். காகம் போன்ற தோற்றத்தில் கபில நிற இறக்கைகளைக் கொண்டிருந்தது. ஜோடிப் பறவையாக வந்திருக்க வேண்டும். நான் ஒரு பறவையை மட்டும் கண்டேன். மற்றது குரல் கொடுத்துக்கொண்டிருந்தது.

    இந்தப் பறவையின் பெயர், செம்பகம். இதைத் தமிழீழத்தின் தேசியப் பறவையாகப் பிரபாகரன் பிரகடனம் செய்துள்ளார். செம்போத்து, செம்பகம், செங்காகம் (Centropus sinensis) என்ற பெயர்களைக் கொண்ட இது, குயில் வரிசையில் உள்ள பறவை. இதைச் செம்பூழ் என்று சங்க இலக்கிய நூல்களான அகநானூறும் ஐங்குறுநூறும் குறிப்பிடுகின்றன. குகுக் குகுக் என்ற செம்பகத்தின் ஒலி, மிகத் தொலைவு வரை கேட்கக் கூடியது.

     

    நாம் திட்டமிடாமலே சில செயல்கள் நிகழ்கின்றன. இன்று நான் செம்பகத்தைக் கண்டதும் அப்படி ஓர் எதிர்பாராத நிகழ்வே.

    Ref: https://ta.wikipedia.org/wiki/செம்போத்து

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒரே நாடு! ஒரே சட்டம்! வரவேற்கிறோம்!

    ஒரே நாடு! ஒரே சட்டம்! வரவேற்கிறோம்!

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை, இலங்கை

    மேதகு குடியரசுத் தலைவர் கோதபய இராசபட்சர், நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஆற்றிய உரையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை முன் வைத்துள்ளார்கள்.

    சைவர்கள் ஆகிய நாங்கள், இந்தக் கொள்கையை முழுமனதோடு வரவேற்கிறோம். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையால் இலங்கையின் வேரோடும் வேரின் மண்ணோடும் கூர்ந்து கிளர்ந்த பண்பாடும் வாழ்வு முறையும் செழிக்கும்.

    பல்லாயிரம் ஆண்டுகளாக, தொடர்ச்சியாக இலங்கையில் சைவத் தமிழர் தமக்கெனப் படிப்படியாகக் காலங்கள் ஊடாகத் திருத்தியும் சேர்த்தும் நீக்கியும் உருவாக்கிச் சட்டமாக்கிய தேசவழமைச் சட்டத்தின் கூறுகள், புத்த சிங்கள மக்களிடையேயும் வேரூன்றிப் பரவியுள்ளன.

    தேசவழமைச் சட்டத்தையே நடைமுறைப்படுத்துவேன் என விடாப்பிடியாகக் கூறிய சங்கிலி மன்னனை வீழ்த்தியவர்கள் வந்தேறிகளான கத்தோலிக்கப் போர்த்துக்கேயர்.

    தேசவழமைச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தங்களுக்கு தாமே சட்டங்களை எழுதி வாழ்வாகக் கொள்பவர்கள் வந்தேறிகளான முகமதியர்கள்.

    தென்னிந்தியாவில் தமிழர், வடுகர், கன்னடர், கேரளர் என நான்கு இனத்தாரும் தேசவழமைச் சட்டத்தினைக் கைக் கொள்வதில்லை. ஆனால் தெற்கே வாழும் சிங்கள புத்த மக்கள் பலர் தேசவழமைச் சட்டத்தின் கூறுகளையே வாழ்வியல் ஆக்கியுள்ளார்கள்.

    மேலைத்தேய மற்றும் முகமதியச் சட்டக் கூறுகள், இலங்கை மண்ணுக்கு முற்றிலும் பொருந்தாதவை. அவை இங்கு உருவாகியவை அல்ல. இலங்கையின் மண், காற்று, வானம், பகல், இரவு, காடுகள், மரங்கள் என மண்ணின் மக்களின் பூமி புத்திரரின் வாழ்வியலோடு கலந்தவை அல்ல.

    உரோம ஒல்லாந்த ஆங்கிலேயர் முகமதிய வந்தேறிச் சட்டங்களின் நற்கூறுகளை உள்வாங்கித் தேசவழமைச் சட்டத்தின் அடித்தளத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் உருவாகுவதை மேதகு குடியரசுத் தலைவரின் கடந்த வார நாடாளுமன்ற உரையில் கூறியதை, சைவ மக்களின் சார்பில் சிவசேனை வரவேற்கிறது. இந்த முயற்சியை வாழ்த்துகிறது, பாராட்டுகிறது.

    Share
  • திருவள்ளுவர் யார்? – 4

    திருவள்ளுவர் யார்? – 4

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவர் கூறும் ஒழுக்கம் என்பது, அவரவரின் வர்ணத்திற்குரிய ஒழுக்கம்தான்.

    “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”

    இந்தக் குறட்பா, ஓர் அந்தணனுக்கு அறிவுரை சொல்வதுபோல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓதல் முதலிய ஆறு தொழில்களே அந்தணருக்கு உரியவை. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அந்தணர்களில் சிலர் தங்களது அறுதொழிலை விட்டுவிட்டு, அத்தொழில்களுக்கு அடிப்படையான வேதத்தையும் மறந்துவிட்டு, வேறு தொழில்களை நாடிச் சென்றிருக்கின்றனர். வேள்வி முதலிய வைதிக கர்மங்களை விட்டுவிட்டு வேறு தொழில் செய்பவர்களை ‘வேளாப் பார்ப்பான்’ என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அந்த வகை அந்தணர்களை நோக்கித்தான் இந்தக் குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் அறிவுரை கூறுகிறார்.

    வேதத்தை அந்தணர் மறக்கலாகாது. அந்தணர்களின் அறு தொழில்களுக்கு அடிப்படையே வேதம்தான். வேதம் மறந்து போய்விட்டால் அவர்கள் தங்களது தொழிலைச் செய்ய முடியாது. வேதம் நினைவில் இருக்க வேண்டுமானால் தங்களது அறுதொழில்களையும் அவர்கள் செய்து கொண்டிருக்க வேண்டும். தங்கள் தொழிலைச் செய்ய முடியாத நிலையில் ஜீவனத்துக்காக அவர்கள் வேறு தொழிலை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. அப்படி வேறு தொழிலை நாடிச் செல்லும் அந்தணர்களை நோக்கித்தான் திருவள்ளுவர், இக்குறட்பாவின் மூலம் அறிவுரை கூறுகிறார். அதாவது, “நீங்கள் வேதத்தை மறந்து விட்டாலும் மறுபடி கற்றுக்கொள்ளலாம். ஆனால் வேதம் மறந்து போய்விட்டது என்பதற்காக நீங்கள் வேறு தொழிலை நாடிச் சென்றால் அத்தொழிலுக்கு உரிய பழக்க வழக்கங்கள் உங்களைப் பற்றிக் கொண்டுவிடும். உங்களது ஒழுக்கம் போய்விடும். அதனால் உங்கள் உயர்வு கெட்டுப் போய்விடும். பிறப்பால் அமைந்த உங்களது சிறப்பை இழந்துவிடுவீர்கள். ஆகவே வேறு தொழிலை நாடிச் செல்லாதீர்கள்”என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

    எல்லாக் காலங்களிலுமே அறுதொழில் செய்யும் அந்தணரை சமூஹம் உயர்ந்த இடத்தில் வைத்துத்தான் மதித்திருக்கிறது. அறுதொழில் செய்யும் அந்தணரை அரசனே வணங்கியிருக்கிறான் என்று சங்க இலக்கியம் சொல்கிறது. ஆனால் ஜீவனத்துக்காகத் தன் தொழிலை விட்டுவிட்டுத் தாழ்ந்த தொழிலைச் செய்யும் அந்தணருக்கு அவரது பிறவிக்குரிய மரியாதை கிடைப்பதில்லை. வேள்வி செய்யும் பார்ப்பானுக்குக் கிடைக்கும் மரியாதை, சங்கறுத்து வளையல் வியாபாரம் செய்யும் பார்ப்பானுக்குக் கிடைக்காது. வேறு தொழிலை நாடிச் சென்றாலும் தன் பிறவிக்குத் தாழ்வு ஏற்படுத்தும் தொழிலை நாடி ஓர் அந்தணன் செல்லக் கூடாது. தான் பிறருக்கு அறிவுரை கூறும் அளவிற்குத் தலைமைத் தன்மை உள்ள தொழிலைத்தான் அந்தணன் எப்போதும் செய்யவேண்டும். தன் தகுதிக்குத் தாழ்ந்த தொழிலைச் செய்தால் அத்தொழிலுக்குரிய தாழ்ந்த ஒழுக்கங்கள் அவனைப் பற்றிக்கொண்டு அவனது அந்தணத் தன்மையைப் போக்கிவிடும். இந்தக் குறட்பாமூலம் வர்ண தர்மத்தை சிறப்பாக ஆதரிக்கிறார் திருவள்ளுவர்.

    அந்தணர்கள் வேதத்தை ஏன் மறக்கிறார்கள் என்றால் அதற்கும் திருவள்ளுவரே காரணம் கூறுகிறார். ‘ஆபயன் குன்றும்’ என்ற குறட்பாவில் அரசன் நல்லாட்சி புரியாத நாட்டில், அந்தணர்கள் வேதத்தை மறந்துவிடுவார்கள் என்று கூறுகிறார். அதாவது ஓர் அரசன், அந்தணர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் முதலிய சௌகர்யங்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை மதித்து ஆதரித்துப் பாதுகாக்க வேண்டும். அப்படி அரசனால் கௌரவிக்கப்படும் அந்தணர்கள், தங்களுக்குரிய அறுதொழில்களைச் செய்துகொண்டு ஜீவனம் செய்வார்கள். அரசன் அவர்களை இம்முறையில் ஆதரிக்கவில்லை என்றால் அவர்கள் தங்கள் தொழிலை விட்டுவிட்டு ஜீவனத்துக்காக வேறு தொழிலை நாடவேண்டிய சூழ்நிலை தான் ஏற்படும். வேறு தொழிலில் வேதத்தின் தேவை இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக வேதத்தை அவர்கள் மறந்துவிடுவார்கள். அதனால்தான், ‘காவலன் காவான் எனின் அறுதொழிலோர் நூல் மறப்பர்’ என்கிறார். எனவே தான் அந்தணர்களைப் பாதுகாப்பது அரசனுடைய கடமை என்கிறார்.

    அந்தணரின் அறுதொழிலின் சிறப்பையும் அவர்களது பண்பட்ட வாழ்க்கை முறையின் சிறப்பையும் எடுத்துக் காட்டத்தான் மற்றவர்களின் தொழில்களைப் பற்றி எல்லாம் பேசாமல், நல்லாட்சியில்லாத நாட்டில் அந்தணர்கள் தங்கள் தொழிலை விட்டுவிடுவார்கள் என்று கூறினார். அரசன் எல்லோரையும் பாதுகாக்க வேண்டியவன் என்றாலும் குறிப்பாக அந்தணரை அவன் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னது அந்தணரின் பெருமை கருதியே.

    திருவள்ளுவர் தன் வாழ்நாளில் ஒரு கொடுங்கோல் அரசனையும் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது என்பதை இதனால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கொடுங்கோலனின் ஆட்சிக் காலத்தில் இருந்த அந்தணர்கள், தங்களை அரசன் முறைப்படி ஆதரிக்காததால் தங்கள் தொழிலை விட்டுவிட்டனர். அதனால் அவர்களுக்கு வேதம் மறந்துபோய்விட்டது. அந்த நிலையில் அவர்கள் வேறுதொழிலை நாடிச் செல்ல நினைத்த போதுதான் அவர்களுக்குக் கூறும் அறிவுரையாக ‘மறப்பினும் ஓத்துக்கொளலாகும்’ என்ற குறட்பாவை எழுதினார் திருவள்ளுவர்.

    “அந்தணர்களே! அரசன் உங்களை ஆதரிக்காததால் உங்கள் தொழிலைக் கைவிட்ட நீங்கள் அத்தொழிலுக்கு ஆதாரமான வேதத்தையும் மறந்து விட்டீர்கள். நீங்கள் கற்ற வேதத்தை மறந்துவிட்டாலும் திரும்பக் கற்றுக் கொள்ளலாம். மறந்து போய்விட்டதே என்று கவலைகொள்ள வேண்டாம். அந்த வேதம் உங்களுக்கு என்றும் பாதுகாப்புத் தரும். ஆனால் ஜீவனம் போய்விட்டதே என்பதற்காக வேறு தொழிலுக்குப் போய்விடாதீர்கள். வேறு தொழிலுக்கு நீங்கள் சென்றால் அத்தொழிலுக்குரிய பழக்கவழக்கங்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் வர்ண ஒழுக்கம் குறைந்துவிடும். அதனால் உங்களது உயர்வு கெட்டுப் போய்விடும்” என்பதுதான் திருவள்ளுவர் அந்தணர்களுக்கு கூறும் அறிவுரை.

    ஜீவனத்துக்காக அந்தணர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் தகுதிக்குப் பொருந்தாத தொழிலைச் செய்யக்கூடாது என்பதும், தங்களது பெருமைக்குக் குறைவு ஏற்படுத்தாத தொழிலைத்தான் எப்போதும் அவர்கள் செய்யவேண்டும் என்பதும் இதனால் தெளிவாகிறது. ”சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”என்ற இடத்தில் தொழில்களில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும் காட்டிவிட்டார் திருவள்ளுவர். அதனால் திருவள்ளுவர், வர்ண தர்மத்தை முழுக்க முழுக்க ஆதரித்த ஒரு வைதிகர் என்பது தெளிவாகிறது.

    உயர்ந்த குலத்தில் பிறந்த ஒருவனிடம் உயர்ந்த குணம்தான் இருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் இவ்விஷயம் மாறுபட்டுக் காணப்படுகிறது. அதாவது நடைமுறையில் சில இடங்களில் உயர்ந்த குலத்தில் பிறந்தவனிடம் இழிவான குணங்களும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவனிடம் உயர்ந்த குணங்களும் காணப்படுகின்றன. இவ்விஷயம் குறித்தும் விளக்குகிறார் திருவள்ளுவர்.

    “மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்திலர் பாடு”

    “மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழ்அல் லவர்”

    என்ற குறட்பாக்கள் மூலம் கல்வி ஞானம், ஒழுக்கம், நற்பண்பு இவையெல்லாம் மேற்குலத்தில் பிறந்தவனிடம் இல்லையென்றால் அவன் மேற்குலத்தில் பிறந்தவனாகக் கருதப்படமாட்டான் என்றும் மேற்படி விஷயங்கள் கீழ்க்குலத்தில் பிறந்தவனிடம் காணப்பட்டால், அவன் கீழ்குலத்தில் பிறந்தவனாகக் கருதப்படமாட்டான் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர். மேற்குலத்தில் பிறந்தவனிடம் கல்வி, ஞானம் முதலிய நற்பண்புகள் இல்லாமற் போவதற்கும் கீழ்க்குலத்தில் பிறந்தவனிடம் அந்த நற்பண்புகள் காணப்படுவதற்கும் என்ன காரணம் என்றால் அதற்கும் அவரே பதிலளிக்கிறார். குடிமை என்ற அதிகாரத்தில்,

    “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்”

    என்று ஒரு குறட்பா இடம்பெறுகிறது. உயர்ந்த குலத்தில் பிறந்த ஒருவனிடம் நற்பண்பு காணப்படாவிட்டால் அவனது பிறப்பு சந்தேகத்துக்குரியது என்பது இக்குறட்பாவின் கருத்து.

    “நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.”

    என்பது அதற்கு அடுத்த குறட்பா. நிலத்தின் தன்மையை அந்நிலத்தில் முளைத்து வரும் முளையை வைத்து நாம் அறிந்துகொள்வது போல ஒருவன் உயர்குலத்தில் பிறந்தவன் என்பதை அவனது வாய்ச்சொல் காட்டிவிடும் என்பது இக்குறட்பாவின் கருத்து. அதாவது நல்ல நிலத்தில் நல்ல விதையை விதைத்தால் நல்ல பயிர் உருவாகும். கெட்ட நிலத்தில் நல்ல விதையையோ நல்ல நிலத்தில் கெட்ட விதையையோ விதைத்தால் விளையும் பயிர் நல்ல பயிராக இருக்காது. இதுதான் திருவள்ளுவர் சொல்ல வரும் விஷயம்.

    மஹாபாரதம் வனபர்வத்தில் தர்மராஜரான யுதிஷ்டிரருக்கும் ஒரு மலைப் பாம்புக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் சொல்லப்படுகிறது. அவ்வுரையாடலில் தர்மராஜர் “அந்தணனாகப் பிறந்த ஒருவனிடம் நான்காம் வருணத்தவனுக்குரிய குணங்களும் பழக்கவழக்கங்களும் காணப்பட்டால் அவன் அந்தணனாகமாட்டான். நான்காம் வர்ணத்தில் பிறந்த ஒருவனிடம் அந்தணனுக்கு உரிய குணங்களும் நடவடிக்கைகளும் காணப்பட்டால் அவன் நான்காம் வர்ணத்தவன் ஆகமாட்டான்” என்று கூறுகிறார். அதைக் கேட்ட அந்த மலைப்பாம்பு “ஒழுக்கத்தினால் தான் ஒருவன் அந்தணன் என்று சொல்லப்படுவான் என்றால் அந்தணனுக்குரிய ஒழுக்கம் இல்லாதபோது ஜாதி பயனற்றதாகிவிடுமே” என்று கேட்டது. அதற்கு தர்மராஜர், “ஆம், இந்த மானிட ஜாதியில் தற்காலத்தில் வர்ணபேதமின்றி ஆண்களும் பெண்களும் உறவு வைத்துக்கொள்வதால் அதற்குத் தக்கபடி அவர்களுக்குக் குழந்தைகளும் பிறக்கின்றன. ஆகவே, வர்ணக் கலப்பு ஏற்படுவதால் எல்லாவிதத்திலும் ஜாதி ஆய்வு செய்யத்தகாது என்பது என் கருத்து. இவ்விஷயத்தில் ஆசாரத்தையே (ஒழுக்கம்) பிரதானமாகக் கொள்ளவேண்டும் என்று தத்துவமறிந்தோர் கூறுகின்றனர்” என்று பதிலளிக்கிறார்.

    கல்வி ஞானமும் உயர்ந்த ஒழுக்கங்களும் இல்லாத ஒருவன் உயர்ந்த குலத்தில் பிறப்பதற்கும் கல்வி ஞானமும் உயர்ந்த ஒழுக்கங்களும் உள்ள ஒருவன் தாழ்ந்த குலத்தில் பிறப்பதற்கும் குலக் கலப்பே காரணமென்கிறார் தர்மராஜர். இதைத்தான் “நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்” என்ற குறட்பா மூலம் திருவள்ளுவரும் சொல்கிறார். உயர்ந்த குலத்தவனான ஓர் அந்தணனுக்கு மூடனும் துர்புத்தி உள்ளவனுமான ஒரு பிள்ளை பிறப்பதற்கும், தாழ்ந்த குலத்தவனுக்கு நற்பண்புகளும் கல்வி ஞானமும் நிறைந்த ஒரு பிள்ளை பிறப்பதற்கும் நிலம், விதை இவற்றின் தன்மைதான் காரணம் என்று திருவள்ளுவரும் தர்மராஜரும் சொல்கிறார்கள். இவ்விடத்தில்,

    वाङ्मैथुनमथो जन्म मरणम् च समम् नृणाम् (வாங்மைதுநமதோ ஜந்ம மரணம் ச ஸமம் ந்ருணாம்) என்று தர்மராஜர் சொன்னதையே திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறார். ஆகவே சில அம்சங்களில் பிறப்பு எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும், ஒருவனுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனுடய பிறப்பே காரணமாகிறது என்று கூறுவதால் திருவள்ளுவர், வர்ணக் கலப்பை ஆதரிக்காத ஸநாதன வைதிகர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

    -தொடரும்

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-38

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-38

    தி. இரா. மீனா

    ஹடப்பத ரேச்சண்ணா

    தாம்பூலப் பெட்டி சுமக்கும் காயகம் இவருடையது. கல்யாண் புரட்சியின் போது சரணரின் கூட்டத்தோடு உளுவி வரை சென்றவர். ’நிக்களங்க கூடல சங்கம தேவா’ இவரது முத்திரையாகும்.

    “பக்தன் மும்மலங்களில் மனம் வைப்பானோ?
    துறவி இந்திரியத்தில் ஈடுபட்டு மீண்டும் துறவியாவானோ?
    இவ்விரண்டின் எண்ணம் உறுதிப்படுமானால்
    மலரின் மணம்போல் ,கண்ணாடியின் பிம்பம் போல்
    எரியும் கற்பூரத்தின் நிலை போலாம்
    நிக்களங்க கூடலசென்ன சங்கம தேவனான அடியான்.“

    ஹாதரகாயகத மாரய்யனின் புண்ணியஸ்திரி கங்கம்மா 

    மாரய்யனின் மனைவி இவர். ’கங்கேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    “காயகம் எது செய்தாலும் உடலொன்றே ஐயனே
    உறுதி எதுவாயினும் ஒன்றே ஐயனே
    அபாயம் தப்பினால் இறப்பில்லை
    உறுதி தப்பினால் இணைதல் சாத்தியமில்லை
    காகம் கோகிலம் போல இணைந்தால் கொடிய நரகாம்
    கங்கேஸ்வர இலிங்கத்தில்“

    ஹாவினநாள கல்லய்யா

    பொற்கொல்லர் இவரது காயகம். கல்யாண் புரட்சியில் பங்கு பெற்றவர். ’கல்லேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    1. “வாழ்க்கை ஒவ்வொரு தினத்தையும் அப்படியே ஏற்கிறது.
    ஐயனே யானென்று உனை நினைப்பேன் தொழுவேன்
    ஒரே எண்ணத்தில் உனை நினைப்பின்
    நாளையை விட இன்று நல்லது
    மகாலிங்க கல்லேஸ்வரனே.’

    2. “பேராசையென்பது பாவம், வேறு பாவங்கள் இல்லை ஐயன!
    பக்குவமென்பது பரமசுகம் உலகில் வேறில்லை ஐயனே!
    இகபரத்தின் ஆசையின்றேல் சிவயோகம்,
    மகாலிங்க கல்லேஸ்வரன் அறிவான், சித்தராமனின் மேன்மையை”

    3. “உணவின் இன்பமும், புலன்களுமுள்ள வரையில்
    உம்மை நினைப்பது பொய்யாம் ஐயனே,
    உம்மை வழிபடுவது பொய்யாம் ஐயனே,
    என் பசிக்குத் தாங்களே உணவானால்
    உம்மை நினைப்பது உறுதி காணாய்
    மகாலிங்க கல்லேஸ்வரனே“

    4. “குருவுண்டு இலிங்கமுண்டு ஜங்கமருண்டு புனிதநீர் பிரசாதமுண்டு
    இருந்தும், துன்பத்திலுள்ளேன் இயல்பான பக்தி வசமாகாததால்
    மகாலிங்க கல்லேஸ்வரனே
    நிஜ சத்பாவ, சத்திய சரணர் மகான்களின் நட்பில்லாததால்
    இவர்தம் வாய்ப்பின் மர்மமறியாமல்
    மீண்டும் உழல்கிறேன் துன்பத்தில்“

    5. “வள்ளலானாலென்ன அவன் கேட்டதனைத்தும் அறியக் கூடாது
    போர்க்களத்து தீரனாயினென்ன வாள் மழுங்கியது அறியக் கூடாது
    நட்பாயிருந்தென்ன பிரிந்ததை அறியக் கூடாது
    தங்கக் கொடியானால் என்ன உரைத்ததை அறியக் கூடாது
    மகாலிங்க கல்லேஸ்வரனின் மேன்மையறியின்
    சம்சார சாகரம் தாண்டியதை அறியக் கூடாது“

    6. “வரவில்லை, ஏதுக்கய்யா? உன் வருகையை எதிர்பார்த்திருந்தேன்.
    அருகில் வரவில்லை, ஏதுக்கய்யா? அருகாமையை எதிர்பார்த்திருந்தேன்.
    காட்டவில்லை, ஏதுக்கய்யா? உன் இலிங்கவடிவமாம் திருஞானமாம்.
    பூசைக்குக் கொள்ளும் போதன்றி என் மனதுள் வராததேன்
    மகாலிங்க கல்லேஸ்வரனே?”

    7. “சரணர் உறவு அறிந்தபின்
    குலச்செருக்கு பிடிவாதச் செருக்கு கிடையாது பாரய்யனே!
    இலிங்க உறவறிந்தபின்
    ஒழுக்க உறவில்லை பாரய்யனே!
    பிரசாத உறவறிந்தபின்
    இகம்பரமென்பதில்லை பாரய்யனே!
    மகாலிங்க கல்லேஸ்வரனே இம்மூவகை உறவுக்கு
    இதுவே அடையாளம்“

    ஹூஞ்சின காளகத தாசய்யா

    சேவல் சண்டையை ஏற்பாடு செய்வதுதான் இவரது காயகம். ’சந்திரசூடேஸ்வர லிங்கா’ இவரது முத்திரையாகும்.

    “குஞ்சு தோற்றால் தாங்குவேன் ,
    விரதம் பொய்த்தவரைப் பாரேன்,
    சந்திர சூடேஸ்வர இலிங்கமே. “

    ஹெண்டத மாரய்யா

    கள் விற்கும் தொழிலைச் செய்து வந்த இவர் சரணராக மாறியவர். ’தர்மேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    “மண்ணெனும் குடத்தின் நடுவே
    பொன்னெனும் கள் உற்பத்தியானது
    பெண்ணெனும் வட்டிலில் பருக போதை தலைக்கேறியது
    இந்தப் போதையில் மூழ்கியோர் அனைவரையும்
    எப்படி மிகவும் உயர்ந்தோர்கள் என்பது ?
    பக்தி பற்றற்றவன் என்பது இப்பக்கமே எஞ்சியது
    தர்மேஸ்வர இலிங்கத்தை எட்டவில்லை.”

     [தொடரும்]

    Share
  • ஹாப்பி மெட்ராஸ் டே

    ஹாப்பி மெட்ராஸ் டே

    பாஸ்கர் சேஷாத்ரி

    மல்லில்லாம் மொழம் பத்து
    உருளை வெண்டை இருபது
    நாலாம் நம்பர் டேபுளுக்கு மசாலா
    கஸ்மாலம் சிக்னல் தாண்டி நிப்பியா
    கோல மா கோல மா ஆஆஆஆஆ
    தே புட் போர்ட்ல நிக்காத
    சில்ற இல்லாம ஏன் ஏறின ?
    தோ பாரு போன் பேசிண்டே வண்டிஓட்றத
    நீ பேசாம வாடி – அவன் கிடக்கான்
    ஐயரம்மா – மாங்கா இஞ்சி வாங்கல
    பாரேன் கை போடாம லெப்ட்ல ஓடைக்கிறான்
    பாத்திர கடைக்கு சைனா டீ
    ஸ்வாமின் என்னிக்கு அமாவாசை…
    அவன் கடைல எல்லாமே ஜாஸ்தி – கொள்ளை
    தே ,,மாஸ்கை போட்டு பேசு
    தல அந்த பக்கம் பூடாதே – சஸ்பூன் புட்டுகிச்சு-கப்ப
    மயிலாப்பூர் கொளம் இறங்கு

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 94

    சேக்கிழார் பாடல் நயம் – 94

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    சேதிநன்   னாட்டி   னீடு   திருக்கோவ   லூரின்  மன்னி
    மாதொரு  பாக  ரன்பின்   வழிவரு  மலாடர்   கோமான்
    வேதநன்  னெறியின்  வாய்மை  விளங்கிட   மேன்மை  பூண்டு
    காதலா   லீசர்க்   கன்பர்   கருத்தறிந்   தேவல்  செய்வார்;

    பொருள்:

    இனி, அடுத்த புராணமாகிய  மெய்ப்பொருள்  நாயனார் வரலாற்றைக் குறித்து சேக்கிழார் பாடும்பாடல்களின் நயங்களைக் காண்போம்

    நன்மை பொருந்திய சேதி நாட்டிலே திருக்கோவலூரிலே நிலைபெற்ற அரசு செலுத்தி வாழ்ந்த காலத்தில் உமாதேவியாரை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமானிடத்தில் வைத்த அன்பிலே வழிவழியாக வருகின்ற மலாடர் கோமானாகிய மெய்ப்பொருள்நாயனார், வேத நன்னெறியினது உண்மைத் திறம்  உலகிலே விளக்கமடையும்படி மேன்மை பூண்டவராய் மிக்க அன்பினாலே இறைவனது அடியார்களது கருத்தறிந்து அவர்களுக்கு ஏவல் செய்து வருவாரானார்…

    விளக்கம்:

    சேதி நன்னாட்டுத் திருக்கோவலூர் – சேதி என்பது  நாட்டின் பெயர். திருக்கோவலூர் என்பது நகரின் பெயர். எனவே, இப்புராணத்திற்குரிய நாடும் நகரமும் கூறியவாறு. நன்னாடு, நீடுதிருக்கோவலூர் என்பன முறையே அவற்றின் சிறப்பைக் கூறுகின்றன. மலாடர்கோமான் அன்பின்வழிவரும்  ஏவல் செய்வார்  என்ற தொடர், அந்நாட்டு மக்கட் சிறப்பும், அரசு மரபுச் சிறப்பும், அரசரும் அவரது பண்பும் என்ற இவற்றை எடுத்துரைக்கிறது.

    சேதிநாடு – இது நடுநாட்டின் ஒரு சிறு உட்பகுதியாம் தொண்டைநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் நடுவில் உள்ளதாதலின் நடுநாடு எனப் பெறும். தொண்டைநாடும் அதன் வடக்கில் உள்ள வடநாடும், சோழநாடும் அதன் தெற்கில் உள்ள தென்னாடு எனப் பெறும் பாண்டிநாடும் என்ற பலவற்றுள்ளும் நடுவில் உள்ளது இந்த நடுநாடு என்றலும் பொருந்தும். இந்த நடுநாட்டினுள், வழிவழி வந்த பல சிற்றரசு மரபினர்களால் ஆளப்பெற்ற பல உட்பகுதிகளான சிறு நாடுகள் உண்டு. அவற்றிலே சேதிநாடு ஒன்று. நாட்டினை ஆளும் அரசமரபினர் பேரால் வழங்கும் சோழநாடு, பாண்டியநாடு என்பனபோல, இந்நாட்டினை ஆளும் சேதியர் மரபுப்பேரால் சேதிநாடு எனும் பேரும் வந்தது என்பர். திருவிசைப்பாப் பாடிய சேதிராயர் இம்மரபில் வந்த அரசர்களில் ஒருவர்.  மலாடர் கோமான் – இந்தச் சிற்றரசு மரபு வழியிலே மலையமான், நத்தமான், சுருதிமான் என மூன்று உட்பிரிவினர் உள்ளார் எனவும், அவர்களில் மெய்ப்பொருள்  நாயனார் மலையமான் என்ற பிரிவினைச் சேர்ந்தவர் எனவும் கூறுவர். சோழன் நாடு சோணாடு என வந்ததுபோல, மலையமான்நாடு மலாடு என மருவி வந்ததென்பர். மரூஉ வழக்கிற்கு இலக்கணங்களில் மலாடுஎன்றசொல்லைப்  புலவர் உதாரணங்காட்டுவர்.

    திருநாவலூரில் அரசு செலுத்திய நரசிங்கமுனையரைய நாயனார் இம்மூன்றுட்பிரிவுகளில் ஒன்றனைச் சார்ந்தவர் என்று கூறுவாருமுண்டு. சுருதிமான் மரபினர்க்கு மூப்பர் என்ற பேரும் உண்டென்பர். முனையதரையர் என்பதே முனையரையர் என்றாயிற்றென்றும், அம்மரபும் இவற்றுடன் விரவியதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுப. இவற்றின் விரிவெல்லாம் சரித்திர ஆராய்ச்சி செய்வோர்   காணலாம்.

    நீடு திருக்கோவலூர் – திரு நீடு கோவலூர் என மாற்றியுரைத்துக்கொள்க. திரு என்பது,  கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்பர் பேராசிரியர்.

    கோவலூர் – சிவபெருமான் வீரஞ்செய்த எட்டுத் தலங்களுள் ஒன்றாய் அந்தகாசுரனைச் சங்கரித்த தலம். இதனைத் திருக்கு -ஓவல் – ஊர் – எனப் பிரித்து அறியாமையை ஒழித்து உயிர்களுக்கு அருள் புரியும் தலம் என்று தலமான்மியம்  கூறும். எனவே உயிர்களுக்கு ஊனத்தை நீக்கி அருளும் தன்மை நீடிய ஊர் என்பதுபொருள்.

    மன்னி – இவ்வரச மரபு நெடுங்காலமாக நிலைபெற்று வழிவழி இந்நகரைத் தமது தலைநகராகக் கொண்டு அரசளித்தது என்பதாம்.

    அன்பின் வழிவரும் – இரு மரபிலேயும் சிவனடியார்களான பரம்பரையில் வழி வழி வந்த சைவ மரபினர் என்க.

    “வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த, பழவடியார்“  என்பது திருமுறை. மாதொரு பாகர் அன்பின் வழிவரும் – பல பிறவிகளிலேயும் சிவனுக்கு அன்பு செய்த வழி எனவும், சிவன் வைத்த அருளின் மூலவழியிலே வந்த எனவும்  இருவழியும் உரைக்க நின்றது.

    வேத நன்னெறியின் வாழ்மை விளங்கிட மேன்மை பூண்டு – சித்தாந்த சைவம் வேத நெறிகளையெல்லாம் தன்னுள்ளே அங்கமாய் அடங்கத் தான் இவற்றுள் அடங்காது முழுமுதற் றன்மை பெற்று விளங்குவது.

    “வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறைவிளங்க“ என்று திருஞானசம்பந்தர்  புராணம் கூறும் . வேதத்திற் சொல்லிய பலவுங் சைவத்தின் அங்கமாவன. அங்கங்கள் விளங்கவே முழுமையும்  விளங்குவதாம். “வேதமோது நெறியினான் வீரட்டானம்“ என்பது இத்தலத் தேவாரம்

    வேதநெறி என்னாது வேத நன்னெறி எனவும், அதனோடமையாது வேத நன்னெறியின் வாய்மை எனவும்  கூறியது,  வேதங்களின் உள்ளுறை உண்மையான சைவத்திறத்தினைக் குறித்தது. “வேத உள்ளுறையாவன“ அரனடியார் பூசையும், அரன் பூசையுமே எனத் திருநீலநக்க நாயனார் புராணம் கூறுகிறது.

    வேதநெறி விளங்கிட மேன்மை பூண்ட இவ்வரசர் பொதுப்பட அதனுள் விதித்த எல்லா அறங்களையும் கடைப்பிடித்தனரேனும், தாம் காதலால் ஈசர்க்கன்பர் கருத்தறிந்து ஏவல் செய்வாராயினார் என்றதாம். அரசராதலின் எல்லா அறங்களையும் காக்குங் கடப்பாடுடையவர் ஆயினும், அவற்றின் உண்மைநிலையினைத் தம் ஒழுக்கத்திலே வைத்து உலகில் நடந்து காட்டினார் என்பது. ‘விளங்கிட’ என்ற சொல், தாம் நிற்பதனோடு உலகினையும் நிறுத்தும் பொருட்டு  விளங்கச் செய்ய என்பதைக் குறிக்கிறது.

    காதலால் – ஆசையினாலே. பிறிதோர் பயன் கருதாது உள்ளெழுந்த ஆசையே காரணமாக. ஈசர்க்கன்பர் கருத்தறிந்து – அவர் கருதியவற்றை, அவர்கள் சொல்லாமல் தாமே குறிப்பின் அறிந்துஏவல்  செய்ததைக் குறித்தது

    ஆகவே இப்பாடல்  சேதிநாட்டின், திருக்கோவலூரில் வாழ்ந்து, ஈசனடியார் கருத்தறிந்து தொண்டு புரிந்த  மெய்ப்பொருள்நாயனார்  என்ற அடியாரின் சிறப்பை அறிமுகம் செய்கிறது.

    Share
  • திருவள்ளுவர் யார்? – 3

    திருவள்ளுவர் யார்? – 3

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவர் வர்ணாஶ்ரம தர்மங்களுக்கு எதிரானவர் என்றும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வை அவர் அங்கீகரிக்கவில்லை என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இக்கருத்தை முன் வைப்பவர்கள், தங்கள் கருத்துக்கு ஆதாரமாக

    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.”

    என்ற குறட்பாவை மேற்கோள் காட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் மேற்கோள் காட்டும் இந்தக் குறட்பாவில் பிறப்பால் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு உண்டு என்றுதான் திருவள்ளுவர் கூறுகிறார். எப்படியென்று பார்ப்போம்.

    இக்குறட்பாவின் உட்பொருளைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஓர் இலக்கியமும், அது தோன்றிய காலத்தில் உள்ள ஸமுதாய நிலையைப் பிரதிபலிப்பதாகத் தான் இருக்கும். ஒரு காலத்தில் ஒரு நீதிநூல் உருவாகிறது என்றால் அந்நூல் உருவான காலத்தில் இருந்த ஸமுதாயத்தில், அந்நூலில் சொல்லப்பட்ட நீதிகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை அல்லது அறவே பின்பற்றப்படவில்லை என்றுதான் பொருள். அக்கால ஸமுதாய மக்களுக்கு அறிவுரை சொல்லத்தான் அந்த நீதிநூல் ஏற்பட்டது என்று கொள்ளவேண்டும். அக்கால ஸமுதாயத்தில் எழும் பல கேள்விகளுக்குப் பதிலாகவும் அந்நூலில் சில விஷயங்கள் அமைந்திருக்கும்.

    திருவள்ளுவர், திருக்குறளை ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு ஒரே நாளில் எழுதி முடிக்கவில்லை என்பது திருக்குறளின் அமைப்பைப் பார்த்தாலே புரியும். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஸமுதாயத்தில் தன் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அநுபவங்கள், ஸமுதாயத்தில் தான் கண்ட காட்சிகள், தன்னை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள் இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் திருக்குறளை அவர் எழுதியிருக்கிறார். அதுவும் அந்தந்த அனுபவங்கள், காட்சிகள், கேள்விகள் ஏற்படுகின்ற ஸமயத்தில்தான் அவற்றுக்குத் தகுந்த குறட்பாக்களை எழுதினாரேயொழிய ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே நாளில் 1330 குறட்பாக்களையும் அவர் எழுதிவிடவில்லை. இப்படித் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் தான் கற்ற கல்வி ஞானத்தின் உதவியோடு பல்வேறு சமயங்களில் தான் எழுதிய குறட்பாக்களை ஒரு நூலாக அமைத்திருக்கிறார். ஆகவே திருவள்ளுவர் தான் வாழ்ந்த ஸமுதாய நிலையைத் தான் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் என்பதை அவரது நூலிலிருந்தே அறிய முடிகிறது.

    திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஸமுதாயத்தில் வர்ணாஶ்ரம தர்மம் பின்பற்றப்பட்டது. ஸமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் தங்களின் தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டுத் தங்களை விட உயர்ந்தவர்கள்மீது பொறாமைப்படுவதும் தங்களது தாழ்வுநிலையை நினைத்து ஆதங்கப்படுவதும் எல்லாக் காலத்திலும் இயற்கைதான். அவ்வுணர்வுகளால் உந்தப்பட்டவர்களில் சிலர், ஸமூகத்தில் மனிதர்களுக்கு இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்துக் கேள்விகள் எழுப்புவதும் இயற்கைதான். “எல்லோரும் பெண் வயிற்றில் பத்து மாதம் இருந்து தான் பிறக்கிறார்கள். எல்லோரின் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தான் ஓடுகிறது; எல்லோரின் பிறவிக்கும் ஆண்-பெண் சேர்க்கைதான் காரணம்; எல்லோரும் ஒருநாள் மரணமடையத் தான் போகிறார்கள். அப்படியிருக்கும் போது மனிதர்களுக்குள் ஏன் ஏற்றத்தாழ்வு?” என்று இக்காலத்தவர் கேட்பது போல் அக்காலத்திலும் திருவள்ளுவரிடம் இக்கேள்வியை எழுப்பியிருக்கிறான் ஒருவன். அவனுக்குப் பதில் சொல்வதாக அமைந்ததுதான் ‘பிறப்பொக்கும்’ என்ற குறள்.

    அந்தக் கேள்வியை எழுப்பியவனுக்குத் திருவள்ளுவர் என்ன பதில் சொல்கிறார் என்றால், “அப்பா! நீ சொல்வதுபோல் மனிதர்கள் மட்டுமல்ல. எல்லா உயிரினங்களுமே ஒரே மாதிரியாகத்தான் பிறக்கின்றன. ஏதோ ஒருவகையில் ஆண்-பெண் சேர்க்கையால் தான் பிறக்கின்றன. அதனால் பிறக்கும் தன்மை எல்லா உயிர்களுக்கும் ஸமமானது தான். ஆனால் செய்கின்ற தொழிலை வைத்துப் பார்க்கின்றபோது சிறப்பு என்பது ஸமமானதாக இருக்காது. செய்யும் தொழிலின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்” என்று கூறுகிறார். இதுதான் அந்த ‘பிறப்பொக்கும்’ என்ற குறட்பாவின் கருத்து.

    “தொழிலில் சிறப்பான தொழில், சிறப்பில்லாத தொழில் என்று வேறுபடுத்திப் பார்த்து அதன் அடிப்படையில் மனிதர்களை ஏற்றத்தாழ்வோடு பார்ப்பது சரியா?” என்ற கேள்வி எழலாம். தொழிலின் அடிப்படையிலான அந்த ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாதது என்று தான் இக்குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் கூறுகிறார். இக்காலத்துக்குத் தக்கபடி இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். கலெக்டரும் கலெக்டரின் பியூனும் பத்து மாதத்தில் பிறந்தவர்கள்தான். இருவருடைய உடம்பிலும் சிவப்பு ரத்தம் தான் ஓடுகிறது. இருவரும் ஆண்-பெண் சேர்க்கையால் பிறந்தவர்கள்தான். இருவரும் ஒருநாள் மரணமடையத்தான் போகிறார்கள். ஆனால் கலெக்டருடைய இருக்கையில் பியூன் அமரமுடியுமா? அமர்ந்தால் என்ன நடக்கும்? கலெக்டரோடு சரிசமமாக அமர்ந்து அந்த பியூன் பேச முடியுமா? அந்த பியூனும் மனிதன்தானே!

    இந்த ஏற்றத்தாழ்வு என்பது ஒவ்வொரு காலத்திலும் காலத்துக்குத் தக்க வடிவத்தில் இந்த ஸமுதாயத்தில் இருக்கின்ற இயல்பான நிலை தான். இன்று தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் ஒரு கடைநிலை ஊழியனின் நிலை, மனு சொன்ன ஶூத்ரனின் நிலையை விட மோசமானது என்பதை அந்த ஊழியனிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம். இதெல்லாம் சரியா, தவறா என்பதெல்லாம் வேறு விஷயம். இதுதான் ஸமூஹத்தின் யதார்த்த நிலை. ஸமூஹத்தின் யதார்த்த நிலையைத்தான் நீதி நூல்கள் பிரதிபலிக்கின்றன. அதனால் ஸமூகத்தில் மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு என்ற யதார்த்த நிலையைத் திருவள்ளுவர் அங்கீகரித்திருக்கிறார் என்பதுதான் இந்தக்குறட்பா நமக்குக் கூறும் செய்தி.

    மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு என்பது பிறப்பின் அடிப்படையிலானது தான் என்பதற்கும் “பிறப்பொக்கும்” என்ற குறட்பாவே சான்றாக உள்ளது. எப்படியெனில் ஒருவன் செய்யும் தொழில் என்பது அவனது திறமை, அறிவாற்றல், குணம் இவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் திறமை, அறிவாற்றல், குணம் இவை எல்லாம் ஒருவனுக்குப் பிறப்பால் ஏற்படும் பண்புகள். பெற்றோரிடமுள்ள பண்புகள்தான் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் இருக்கும் என்பதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. பெற்றோர் எந்தத் தொழிலில் திறமை உள்ளவர்களோ அந்தத் தொழிலில் தான் அவர்கள் பெற்ற பிள்ளைக்கும் திறமை இருக்கும். தொழில்களில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்குத் தக்கபடியே அந்தத் தொழில்களைச் செய்யும் மனிதர்களுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.

    பிறவிக் குணத்தின் அடிப்படையில் ஏற்படும் தொழில் ரீதியிலான பிரிவுகளே அக்காலத்தில் வர்ணம் என்று அழைக்கப்பட்டன. வர்ணம், ஜாதி என்ற சொற்களைத் திருவள்ளுவர் தனது நூலில் பயன்படுத்தவில்லை என்றாலும் அச்சொற்களின் பொருளைக் கொண்ட குலம், குடிமை என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். குலம், குடிமை என்ற சொற்களுக்குத் தற்காலத்தில் உள்ளோர் சிலர் வேறுவிதமாகப் பொருள் கொள்கின்றனர். அவர்கள் எவ்விதமாகப் பொருள் கொண்டாலும் அவர்கள் சொல்லும் பொருளின் அடிப்படையில் பார்த்தாலும் குலம், குடிமை என்பவை ஒருவனது பிறப்பின் அடிப்படையில் ஏற்படும் அடையாளங்களே.

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும்.”-

    என்ற குறளில் தன் அறிவை வளர்த்துக்கொள்ள ஒருவன் எத்தனை நூல்களைப் படித்தாலும் அவனிடம் அவனது இயற்கையான அறிவுதான் மிகுந்து இருக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். இங்குத் திருவள்ளுவர் கூறும் ‘உண்மை அறிவு’ என்பதற்குப் பிறவிக் குணம் என்பதுதான் பொருள். அந்த வகையில் ஒரு தொழிலைச் செய்யத் தகுந்த ஆற்றலும் ஞானமும் பிறவியில்தான் அமைகிறது என்பதால் தொழிலின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு என்பது பிறப்பின் அடிப்படையில் ஏற்படுவதுதான் என்பதே ‘பிறப்பொக்கும்’ என்ற குறட்பாவின் மையக் கருத்து. இதைப் புரிந்துகொள்ளாமல் இக்குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் வர்ண தர்மத்தை எதிர்க்கிறார் என்று கூறுவது அறியாமையாகும்.

    ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் மற்றவர்களையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லாமல்,

    “மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”

    என்ற குறளில் அந்தணன் தன் ஒழுக்கத்தை விடலாகாது என்றும் அந்தணனது உயர்வு, அவனது பிறப்பால்தான் என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் திருவள்ளுவர். மனிதர்களுக்கு இடையிலான உயர்வும் தாழ்வும் பிறப்பின் அடிப்படையில் அமைவதில்லை என்பதே திருவள்ளுவரின் கொள்கை என்றால் இக்குறளில் ‘பிறப்பு’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தாமல் ‘சிறப்பு’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதாவது குறளின் இரண்டாவது வரி ‘சிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்றுதான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் திருவள்ளுவர் அப்படி எழுதாமல் ‘பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்று ஏன் எழுதியிருக்கிறார் என்றால் அந்தணன் பிறப்பால் உயர்ந்தவன் என்பதைத் தெளிவுபடுத்தத்தான்.

    அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வர்ணப் பிரிவுகளில் மற்ற மூவரைப் பற்றிக் குறிப்பிடாமல் அந்தணரின் பிறப்பை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியம் என்னவெனில், மற்ற மூவரும் அந்தணரைப் பின்பற்றியே வாழ்கின்றனர் என்பதாலேதான். மேலும் அந்த மூன்று வர்ணத்தார்கள் தங்கள் ஒழுக்கங்களிலிருந்து தவறினால், அந்தணர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களைத் திருத்திவிடலாம். ஆனால் அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் எப்படி ஒரு கட்டடம் நிலைநிற்காதோ அதைப்போல ஒரு நல்ல ஸமுதாயத்துக்கு அஸ்திவாரமான அந்தணரின் வாழ்வியல் ஒழுக்கம் குன்றினால், அந்த ஸமுதாயம் நிலைகுலைந்துவிடும். அதனால்தான் ஒழுக்கம் பற்றிக் கூறுகின்ற இடத்தில் மற்றவர்களைக் குறிப்பிடாமல் அந்தணரைப் பற்றி மட்டும் குறிப்பிட்டுப்பேசுகிறார். இதை மனதிற்கொண்டுதான் பரிமேலழகர் இக்குறட்பாவிற்கு உரையிடுமிடத்தில் “சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்களுக்கும் கொள்ளப்படும்”என்று எழுதினார்.

    -தொடரும்

    Share
  • பாடவா இசைநிலவே

    பாடவா இசைநிலவே

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா,
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பாடும் நிலவாகப் பவனிவந்தாய் பாலுவே
    பாடல்தர விரைவாக வந்திடுவாய் பாலுவே
    ஆடிவரும் தென்றலிலும் ஐயாவுன் குரலிருக்கு
    அழகான சிரிப்புடனே பாடவா இசைநிலவே

    உன்னிசை கேட்பதற்கு உலகமே காத்திருக்கு
    உணர்வுடனே உந்தனிசை ஒட்டியே இருக்குதையா
    செந்தமிழை உச்சரித்துச் சிறப்பாகப் பாடிடுவாய்
    வந்திருந்து பாடுதற்கு வாபாலு விரைவாக

    இளையராஜா இசைபெருக என்றுமே துணையானாய்
    ஏஆர் ரகுமானின் இசைக் கோலம் உட்புகுந்தாய்
    விஸ்வநாதன் இசையினிலும் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய்
    விரைவாக ஓடிவா வெள்ளித்திரை காத்திருக்கு

    டிஎம்எஸ் பின்னாலே யார்வருவருவார் பாடவென
    காத்திருக்க வைக்காமல் கலக்கலுடன் வந்துநின்றாய்
    உன்வரவால் திரையிசைக்கு உத்வேகம் பிறந்ததையா
    எழுந்தோடி வந்திடுவாய் எங்கள்பாலு பாடுதற்கு

    சுந்தரத் தெலுங்கானாலும் சொக்கவைத்தாய் தமிழிசையை
    மந்திரமாய் உந்தனிசை மயக்குதையா கடவுளையே
    சொந்தமுடன் எல்லோரும் கொண்டாடும் இசைமன்னா
    சுகம்பெற்று எழுந்துவர இறைவனிடம் வேண்டுகிறோம்

    பாலுநீ பாடவேண்டும் பலபேரும் மகிழவேண்டும்
    தாள லயத்துடனே தரவேண்டும் தமிழிசையை
    வாழவைக்கும் இசைதந்தாய் வாழ்ந்திடுவாய் பாலுவையா
    ஆழநிறை அன்புடனே அழைக்கின்றோம் வந்திடையா

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 6

    பரிமேலழகர் உரைத் திறன் – 6

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இடைச்சொல் ‘உரைச்சொல்’ ஆன கதை!

    முன்னுரை

    ‘அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள்’ என வரையறுத்துக் கொண்டதால் ‘கூறியது கூறலும் குன்றக் கூறலும்’ திருக்குறளில் அமைந்திருப்பதாகக் கூறுவாரும் உளர். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ (314) எனக் கூறிய பிறகும் ‘இன்னாச் செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?’ (987) எனக் கூறுவானேன்? என்பாரும், ‘இரவு’ கூறிய வள்ளுவர் ‘இரவச்சம்’ கூறுவானேன்? என்பாரும் திருக்குறளில் தமது ‘தோய்ந்த புலமையை’ வெளிப்படுத்துவர். அன்னாருடைய கருத்துக்கள் பற்றிய ஆய்வு ஒரு பக்கம் இருப்பினும் திருக்குறள் அதிகாரங்களில் ஒரு கருத்து மட்டுமே சொல்லப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு மாறானது என்பதை மட்டும் குறிக்க வேண்டியுள்ளது. திருக்குறள் ஒரு நீதி இலக்கியம் என்பதால் ஒரு  பொருண்மை பற்றிய பல்வகைச் சிந்தனைகளையும் பாகுபடுத்திக் கூறுவதே அதிகாரக் கருத்துக்களின் சாரம். சான்றாகக் ‘கடவுள் வாழ்த்து’ எனப் பொதுவாக அமைந்திருக்க வேண்டிய அதிகாரக் கருத்துக்களை, முதற்கடவுளது உண்மை (1) அறிவிற்குப் பயன் (2) இறைவனை நினைத்தல், வாழ்த்தல், நெறிநிற்றல், பயன்பெறுதல் (3-6) அவை செய்யாவழிப்படும் குற்றம் (7-9) அடி நினைப்பார்க்குப் பிறவி அறுதல் மாறி நினைப்பார்க்கு அறாது நிற்றல் (10) என ஐந்து வகையாகப் பகுத்துரைப்பதைப் பரிமேலழகர் உரையால் அறியலாம். இத்தகைய பாகுபாடு அறத்துப்பால், பொருட்பால் ஆகிய பகுதிகளில் எல்லா அதிகாரங்களிலும் அமைந்துள்ளன. காமத்துப்பால் அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப்பகுதியாதலின் அப்பொருள் துறைகளுக்கேற்ப அமைந்த பாகுபாடுகளை அங்கே காணலாம். இந்தப் பின்புலத்தில் சினத்தின் பின்விளைவு பற்றிய மூன்று குறட்பாக்களில் ஒரு குறட்பாவில் காணப்படும் பரிமேலழகரின் உரைத்திறன் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    துறவறவியலில் ‘வெகுளாமை’ என்னும் அதிகாரத்தில் ஆறாவது குறட்பாவாக அமைந்திருப்பது,

    “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
    ஏமப் புணையைச் சுடும்” (306)

    என்னும் குறட்பா. இக்குறட்பாவிற்குச்,

    ‘சினம்’ என்னும் சேர்ந்தாரைக் கொல்லி – சினம் என்னும் நெருப்பு இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும் – தனக்கு இடமானவரையே அன்றித் அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும்.

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார். பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட்பாகுபாடுகளை நோக்குவது கட்டுரைப் பொருள் எளிதில் புரிவதற்கு ஏதுவாகும். திருக்குறளைத் தனித்தனி அலகாகக் கொண்டு உரைசொல்வார் பலர்.  அது பிழையாகாதெனினும் கருத்து முழுமைபெறாது என்பதோடு அக்கருத்தினை முற்றுப் பெற வைக்கும் ஏனைய குறட்பாக்கள் பின்னுக்குத் தள்ளப்படும்.

    கருத்துப் பகுப்பு

    திருக்குறள் அதிகாரக் கருத்துக்களைப் பாகுபடுத்துவது பற்றி முன்னுரையிலேயே குறிப்பிடப்பட்டது. அதன்படி ‘வெகுளாமை’ என்னும் இவ்வதிகாரப் பொருண்மை பின்வருமாறு பரிமேலழகரால் வகுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது வெகுளாமை என்னும் அதிகாரத்தில் வெகுளாமையைத் திருவள்ளுவர் பொதுவாக ஆராயவில்லை என்பதாம்.

    1. வெகுளாமைக்கான இடம் (1)
    2. வெகுளியது தீங்கு (2-4)
    3. வெகுண்டார்க்கு வரும் தீங்கு (5-7)
    4. வெகுளாமையது நன்மை (8)
    5. வெகுளாதார்க்கு வரும் நன்மை (9)
    6. வெகுண்டார்க்கும் வெகுளாதார்க்கும் நேரும் விளைவு (10)

       இப்பகுப்புக்களில் வெகுளி பற்றிய பல பரிமாணங்களைத் திருக்குறள் சிந்தித்திருக்கிறது என்பதையும் அது ‘வெகுளி’ என்ற ஓர் எதிர்மறைப் பண்பை மட்டும் சிந்திக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்தப் பொருண்மை பற்றிய இத்தகைய பகுப்புக்கள் வராதபோதுதான் திருவள்ளுவர் இன்னொரு அதிகாரத்தில் இது பற்றிய சிந்தனையை நீட்டித்துக் கொள்கிறார். சான்றாக ‘அறிவு’ என்னும் உயர்நிலையை ஒருவன் அடையவேண்டுமானால்  கல்வியின் சிறப்பு, கல்லாமையின் குற்றம், கேள்வி என்னும் முப்பரிமாணங்ளையும் அவர் ஆராய்ந்து அதன் தொடர்ச்சியாகவே ‘அறிவுடைமை’ என்பது பற்றி எழுதுகிறார். உழைத்துச் சேர்ப்பதுதானே உடைமை? இந்தப் பகுப்பில் மூன்றாவதாக உள்ள ‘வெகுண்டார்க்கு வரும் தீங்கு’ என்னும் ஒரு பொருள் பற்றி மூன்று பாடல்கள் கூறுவதாகப் பரிமேலழகர் கூறுகிறார்.

    • தன்னையே கொல்லும் (305)
    • இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும் (306)
    • நிலத்தறைந்தான் கைபிழையாது அற்று (307)

    பொழிப்புரை நுட்பம்

    • சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்னுந் தொடரை ‘சினம் என்னும் நெருப்பு’ எனச் சுருக்கிக் கொள்கிறார்.
    • ‘இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும்’ என்றே குறட்பாவில் இருக்க, ‘தனக்கு இடமானவரையே (கொல்லும்) அன்றி’ என சினத்தின் முதற் செயல்பாட்டை நினைவு கூர்கிறார். அதாவது ‘இனத்தைச் சுடுவதற்கு முன்னால் தன்னைச் சுடும்’ என்பதைச் சுட்டுகிறார். இக்கருத்தினை இதற்கு முந்தைய குறட்பாவிலுள்ள ‘தன்னையே கொல்லும் சினம்’ (305) என்னும் தொடரிலிருந்து தழுவிக் கொள்கிறார்.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது ஏதுப்பெயர். தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது என்றவாறு. ‘சேர்ந்தாரை’ உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின்.  ‘சினமென்னும் நெருப்பு’ என்ற ‘விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே; இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்’ என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு ‘இனம்’ என்றது முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகம் நோக்கிச் சுடும் என்னும் தொழில் கொடுத்தாராயினும் ‘அகற்றும்’ என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை – ஏமத்தை உபதேசிக்கும் புணை. ‘இனம் என்னும் ஏமப்புணை’ என்ற ஏகதேச உருவகத்தால், ‘பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற’ என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.

    விளக்கவுரையில் கண்ட உரை நுட்பம்

    • ‘நெருப்பு’ என்னும் ஒரு சொல் இருக்க மற்றவரைக் கொல்லுதற்கு அது காரணமாக இருப்பதால் ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என இரு சொல்லால் உருவகப்படுத்தினாராம். ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது ஏதுப்பெயர் என்கிறார் பரிமேலழகர்.
    • ‘சேர்ந்தார்’ என்பது உயர்திணைப் பன்மை. எனின் சேர்ந்தாரைத்தான் கொல்லுமா? சேர்ந்தவன், சேர்ந்தவள், சேர்ந்தது, சேர்ந்தவை முதலியவற்றைக் கொல்லாதா? என்னும் ஐயத்தினைக் களைகிறார். ஈண்டு சினம் என்பது இல்லறத்தானுக்கு வருகிற சினமன்று ‘கணமேயும் காத்தற்கு அரிய’ துறந்தார்க்குக் கூடாத சினம். ஐம்பால் பகுப்பில் சிறந்தது உயர்திணைப் பலர்பால். அப்பாலில் வைத்துச் சொல்லியதால் ஏனைய பால்களும் அடங்கும் என்பது அவர் கருத்து. அதனைச் ‘சேர்ந்தாரை’ உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின்’ என எழுதுகிறார்.
    • ‘சினம் சுடும் என்றாலேயே ‘சுடும்’ என்னும் வினையால் ‘சினம் என்பது நெருப்பு’ என்பது பெறப்படும். குறட்பாவில் பயின்றுள்ள ‘சினமென்னும் நெருப்பு சுடும்’ என்னுந் தொடரில் ‘நெருப்பு’ என்பது விதப்பு (தேவையற்ற சொல் பயன்பாடு) சான்றோர் கூறிய விதப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் எனக் கருதிய பரிமேலழகர், ‘சினமென்னும் நெருப்பு’ என்ற விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்’ என்னும் வேற்றுமை தோன்ற  நின்றது என எழுதுகிறார். முனிவர் சினத்தின் எதிர்மறை விளைவின் முழுப்பரிமாணத்தையும் குறிக்கிறதாம். தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பதற்குப் “பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும் பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் தீயினும் அஞ்சப்படும் என்றார் (202) என்னும் பரிமேலழகரின் உரை ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாம்.
    • திருவள்ளுவர் நட்பு பற்றி ஆழமாகச் சிந்தித்தவர். பல அதிகாரங்களில் அதுபற்றி ஆராய்ந்திருக்கிறார். இங்கே முனிவர் குழாஅத்தைப் பற்றி ஆராய்ந்து பதிவிடுகிறார். முனிவருடைய இனம் எத்தகையதாக இருக்க வேண்டும்? அதாவது இந்தச் சினத்தால் எத்தகைய பெருமையுடையாரை இழக்க நேரிடும்? என்பதை நுட்பமாகப் பதிவு செய்கிறார்.
    1. முற்றத் துறந்தவர்
    2. தவஞானங்களால் பெரியார் ஆனவர்
    3. கேட்டார்க்கு மட்டும் நெறிகாட்டுபவர்
    4. உறுதிபயக்கும் சொற்களைச் சொல்பவர்
    5. அவற்றையும் இனிமையாகச் சொல்பவர்

    இத்தகைய பண்புகளின் தொகுப்பான இனத்தைப் பாழ்படுத்திவிடும் ஆற்றல் சினத்திற்கு உண்டாம். இதனை “ஈண்டு ‘இனம்’ என்றது முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை”  என்று எழுதுவதால் அறியலாம்.

    • ‘சினம் இனத்தைச் சுடும்’ என்றால் நெருப்புத்தானே சுடும். சினம் என்னும் பண்பு எப்படிச் சுடும்? என்னும் ஐயத்தை அவராகவே எழுப்பிக்கொண்டு சினத்தை நெருப்பென உருவகம் செய்ததால் சுடும் என்று சொன்னார். இவருடைய சினம் மேற்சொன்ன பண்பாளர்களை இவரிடமிருந்து அகற்றிவிடும். ஆதலின் சுடும் என்பதற்கு ‘அகற்றும்’ எனப் பொருள் கொள்க’ என்கிறார். “இதனை உருவகம் நோக்கிச் சுடும் என்னும் தொழில் கொடுத்தாராயினும் ‘அகற்றும்” என்பது பொருளாகக் கொள்க” என எழுதுகிறார்.
    • ‘ஏமப்புணை’ என்பதற்கு ‘ஏமமாகிய புணை’ என்னாது ‘ஏமத்தை உபதேசிக்கும் புணை’ என உரையெழுதுகிறார். ‘ஏமம்’ என்றால் பாதுகாப்பு. உயிர்ப் பாதுகாப்புக்கான உபதேசங்களைக் கூறும் இனமாம். உயிர் பாதுகாப்பு என்றால் வீடு பேறு. இனம் பாதுகாப்பாகாது. இனம் காட்டும் நன்னெறியே பாதுகாப்பு .. எனவேதான் ‘ஏமத்தை உபதேசிக்கும் இனம்’ என்று எழுதுகிறார்.
    • இனி இனம் என்னும் ஏமப்புணை என்பது எவ்வாறு ஏகதேசம் ஆகும்? ஏகம் என்றால் ஒன்று. தேசம் என்றால் பகுதி. சினத்தால் இழக்கக்கூடிய இனத்தைப் புணை என்றால் எதனைக் கடப்பதற்குரிய புணை? என்னும் வினா எழும். அதனைக் குறட்பா நேரிடையாகவோ மறைமுகமாகவோ கூறவில்லை. பரிமேலழகர் அறிந்து கூறுகிறார். ஞானத்தைப் புகட்டும் இனத்தைப் புணையாக உருவகம் செய்தவர், பிறவியைக் கடலாகவும் வீடுபேற்றைக் கரையாகவும் உருவகப்படுத்தவில்லை. எனவே ஏமப்புணை என்பது ஏகதேச உருவகம். இது முற்றுருவகமாக இருந்திருந்தால், “சினம் என்னும் நெருப்பு, பிறவிக்கடலை நீந்தி வீடுபேறாகிய கரையினை அடைவதற்கேற்ற ஞானத்தை உபதேசிக்கும் இனமாகிய புணையை அகற்றும்” என அமைந்திருக்கும். இதனை ‘இனம்’ என்னும் ஏமப்புணை என்னும் ஏகதேச உருவகத்தால் பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்து உரைக்க’ என்ற விளக்கத்தில் காணலாம்.
    • ‘எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எனக் குறட்பாவில் இல்லாத உம்மையைக் கண்டறிகிறார். இந்த உம்மைதான் பாட்டின் ஒரு வினையை இருவினையாக்குதற்கு உதவுகிறது. பாட்டு ‘சினம் இனத்தைச் சுடும்’ என்ற ஒரு வினையையே சுட்டுகிறது. பரிமேலழகரோ ‘இனத்தையே சுடும்’ என்றால் ‘கொண்டவனைச் சுடாதா?’ என்னும் வினாவை எழுப்பிக் கொள்கிறார். கொண்டு இருவரையும் சுடும் என்பதுதானே பொருள்? எனக் கருதுகிறார். கருதிப் பின்னது முன்னதைத் தழுவிக் குறட்பா அமைந்திருந்தால் ‘புணையைச் சுடும்’ என்று அமையாது ‘புணையையும் சுடும்’ என்றல்லவா அமைந்திருக்க வேண்டும்? ‘உம்’ என்ன ஆனது? எனச் சிந்திக்கிறார். சிந்தித்து, ‘உம்’ என்னும் எச்சம் தொகுதல் என்னும் விகாரத்தால் மறைந்து நிற்கிறது என்பார், ‘எச்சவும்மை விகாரத்தால் தொக்கது’ என எழுதுகிறார்.

    நிறைவுரை

    ‘சினம் இனத்தைச் சுடும்’ என்னும் ஒருவரி கருத்தினை, ‘உம்’ என்னும் குறட்பாவில் இல்லாத இடைச்சொல்லாகிய எச்சத்தை வருவித்துச் “சினம் தன்னையும் கொல்லும், தன்னைச் சேர்ந்தாரையும் கொல்லும், வீடுபேற்றுக்குரிய ஞானநெறியைக் காட்டும் இனைத்தையும் விலக்கிவிடும்” என்னும் கருத்துக்களையெல்லாம் பெற வைத்ததே இக்குறட்பாவில் பரிமேலழகரின் உரைத்திறனாகும்.

    (தொடரும்)

    Share
  • மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

    பாஸ்கர் சேஷாத்ரி

    ஆந்திரா ஆஸ்பத்திரியில் பிறந்தது முதல் எனக்கு எல்லாமே இந்த மெட்ராஸ் தான். எங்கப்பன் காலத்து பாஷையில் சொல்ல வேண்டுமெனில் பட்டணம் தான். ரெண்டு பைசாவை வைத்துக்கொண்டு தேன் மிட்டாய் கடித்ததும் சேமியா ஐஸ் உறிஞ்சியதும் இந்த மெட்ராசில் தான்.

    சொல்லிக்கொள்ள செட்டிபுண்ணியம் எனது சொந்த ஊராக இருந்தாலும் என்னைச் சீராட்டியது இந்த மெட்ராஸ் தான். அந்தக் குந்துமணி பங்களாவும் ஆபிரகாம் தெருவும் என்னை அய்யா எனச் செல்லமாய்க் கொஞ்சி. மாண்டிசோரி பள்ளியின் சறுக்குமரம் எனக்குக் கொடுத்த குதூகுலம், வேறேதும் தரவில்லை.

    பீ எஸ் பள்ளிகூட நண்பர்களுக்கு சீ எஸ் பீ. கல்லூரித் தோழர்களுக்கு பாச்சு. என்னைத் தாங்கிய இந்த மெட்ராஸ், பல இயற்கைப் பேரிடர்களைத் தாங்க, நான் அதை கண்டு மிரண்டு இருக்கிறேன். இந்திப் போராட்டம் புரியாத நாளில் இதே பெரிய குளம் அருகே லத்தி அடி கொடுத்ததும் (என்னா அடி) இந்த மெட்ராஸ் தான்.

    தேர்த் திருவிழாவில் நசுங்கி, நீர்ப் பந்தலில் நனைந்து, சுமார் அம்பது வருடம் மேல் கரைத்துத் தேய்ந்து போனது இந்த மெட்ராசில் தான். இன்று எல்லோருக்கும் அது சென்னை. ஆனால் எனக்கு தினம் மெட்ராஸ் பிறப்பது போல இருக்கிறது. காரணம் எனக்கு அதன் மேல் காதல்.

    எனக்குச் சென்னைக் கடற்கரை, அடையாறு ஆலமரம், நாகேஸ்வர ராவ் பூங்கா புல்வெளி தாண்டி உலகம் இல்லை. நான் சென்னையின் வித்து. சென்னை எனது ரஹசிய சிநேகிதன். மயிலைக்கு என்று ஒரு வாசனை உண்டு. அதனைப் பெரிதும் நுகர்ந்தவன் இவன் – எவ்வளவு நாட்கள் இதனை நான் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 15

    கதை வடிவில் பழமொழி நானூறு – 15

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 31

    ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
    போகும் பொறியார் புரிவும் பயனின்றே;
    ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்
    ‘ஆகாதார்க்(கு) ஆகுவது இல்’.

    பழமொழி – ‘ஆகாதார்க்(கு) ஆகுவது இல்’

    இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேனோ தெரியல. ஞாயிற்றுக்கிழமை நிதானமா வேலையத் தொடங்கி ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா இன்னிக்குனு பாத்து இப்படி ஒரு சோதனை. இப்ப அந்த அம்மா சொன்ன எல்லாத்தையும் உடனே செஞ்சாகணும். மொதல்ல போலீஸ் ஸ்டேஷன் அப்புறம் பாங்க். உலகமே தலைகீழா ஆனாலும் இந்த வயிறு அடங்க மாட்டேங்குது. மொதல்ல இருக்கற பிரட்ல ஜாமத் தடவி வாய்க்குள்ள போட்டுக்கணும். வரிசயாக யோசிக்கத் தொடங்கினேன்.

    தூங்கி எந்திரிச்சவொடனே கண்கள உள்ளங்கையால மூடி திறக்கும்போதே மொபைல்ல முழிக்கற பழக்கம்தான் எனக்கு. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானேன்னு நெனச்சு ஒன்பது மணிக்கு முழிச்சது தப்பாப்போச்சு. என் வங்கிக் கணக்குலேந்து ஆப்பிள் கம்பெனி காரங்க மூணு தடவ 7,900 ரூபாய் எடுத்திருக்காங்க. அதுவும் இரண்டு நிமிட இடைவெளியில. காலை எட்டரை மணியிலிருந்து. நல்லவேளை பாத்தவொடனே வங்கியிலேந்து நீங்கள் பணம் எடுக்க அனுமதியளிக்கவில்லையெனில் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளவும்னு அனுப்புவாங்களே அந்த எண்ணுக்குக் கூப்பிட்டேன். அதுலபேசின அம்மா ஆப்பிள் கம்பெனி பெயர்ல வேறயாரோ ஏமாத்து வேலைசெஞ்சிருக்கரதாவும் என்னய போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் குடுத்துட்டு வங்கிக்குப் போய் பாக்கச் சொல்லியிருக்கு. என்னோட கார்டையும் ப்ளாக் பண்ணிருச்சு.

    நேத்தைக்கு எ.டி.எம் ல பணம் எடுத்தேன். அப்போ என் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம்னு நினைக்கறாங்க. என்னய மாதிரி இருபதாயிரம் ரூபாய்சம்பளக்காரனுக்கு இது பெரிய இழப்புதான். எத்தன நாள்ல திரும்பக்கிடைக்குமோ தெரியல. நாலு மாசம் முன்ன எங்க ஊர் சேலத்திலேந்து  சென்னைக்கு கிளம்பினப்போ தாத்தா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. பட்டணத்துக்குப் போற. தனியாளாநின்னு எல்லாத்தையும் சமாளிக்கணும். எப்பவும் நெலம ஒண்ணுபோல இருக்காது. எவனும் பணத்தகிணத்த களவாண்டு போயிட்டான்னா பயப்படாத. திரும்பக் கெடச்சா நல்லது. இல்ல விதினு உட்டுரு.

    எரிச்சலோட அப்பா இடைமரித்து போற புள்ள கிட்ட நல்லதா நாலு வார்த்த சொல்லுங்க அய்யா.  அதவிட்டுட்டு இப்ப எதுக்கு தேவையில்லாம…..

    அப்பவும் தாத்தா விட்டபாடில்லை. ‘ஆகாதார்க்கு ஆகுவது இல்’னு பழமொழியே இருக்கு. ஒருத்தனுக்கு நல்ல விதி இருந்திச்சுன்னா அதிகமா முயற்சி செய்யாமலேயே அவங்கிட்ட பணம் வந்து குவியும். ஒருவேள தலைவிதி சரியில்லன்னா கஷ்டப்பட்டு சேத்து பாதுகாப்பா வச்சாலும் யாரும் களவாண்டுகிட்டுப் போயி அவன் நடுத்தெருவுல நிப்பான்.

    தாத்தா தொடர்ந்துகொண்டே போக எரிச்சலில் அம்மா வெந்நீர் எடுத்து வச்சு ஆறிப்போவுது. குளிக்கப்போங்க என அவரை விரட்டாத குறையாக போகச்செய்தார்.

    இப்ப யோசிச்சா அவர் சொன்னது சரினு தோணுது.இதையும் விதினு எடுத்துக்கிட்டா மன உளைச்சல்லேந்து தப்பிச்சிரலாம். தாத்தா பெரிய சைக்காலஜிஸ்ட் போல. மனதுக்குள் நினைத்துக்கொண்டே பிரட்டை மடித்து வாய்க்குள் அடைக்கத் தொடங்கினேன்.

    பாடல் 32

    ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
    மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! – மூர்க்கன்தான்
    கொண்டதே கொண்டு விடானாகும்; ‘ஆகாதே
    உண்டது நீலம் பிறிது’.

    பழமொழி – ‘ஆகாதே உண்டது நீலம் பிறிது’.

    இது என்ன புது கதையா இருக்கு. பாம்பேயிலிருந்து தவசி அய்யாவோட மச்சான் வந்திருக்காராம். நம்ம ஊரு பஸ் ஸ்டாண்டுல ரூம் எடுத்து தங்கிக்கிட்டு எல்லாரையும் கூப்பிட்டுவுட்டு பாக்குதார்னு சொன்னாவ. ஏன் ஆச்சி அவருக்கு என்ன வயசிருக்கும். நம்ம தங்கம் ஆச்சியோட கடைசி தம்பியா இருக்குமோ? புதிதாகக் குடிவந்திருக்கும் பார்வதி கேட்க..

    ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தாள். அதெல்லாம் ஒண்ணுமில்ல அவருக்கு எண்பத்தைந்து வயசு ஆச்சு… இருபது வருசம் முன்ன ஒரு சின்ன மனஸ்தாபத்துல விரிசல் விழுந்து போச்சு. அதுக்குப்பொறவு வீட்டுக்கு வந்து போவுதது கிடையாது. அப்பப்ப தங்கச்சிக் கிழவியப் பாக்கதுக்காக வருவாக அவ்வளவுதான்.

    அடேயப்பா. இருபது வருசமா அப்டி என்னதான் பிரச்சினை உசுப்பேத்திவிட்டாள் பார்வதி.

    தங்கத்தோட மூத்த மக அதான் சேரன்மாதேவிலேந்து வந்துபோவாளே தெய்வான அவ சடங்குக்கு பத்திரிக்கை அடிக்கையில இவரு பெயரப் போடலியாமா. அதான்.

    சேதி கேள்விப்பட்டவொடனே இவரு சம்சாரத்தோட தட்டு தாம்பாளம் எல்லாம் தூக்கிக்கிட்டு சீர்செய்ய வந்துட்டாரு. அதுக்குப்பிறகுதான் பத்திரிகை அடிச்சாங்க எல்லா சொந்தமும் அக்கம்பக்கத்துலயே இருந்ததால அத ஒரு சம்பிரதாயத்துக்குதான் அடிச்சாங்க. அதனால பெரிசா கவனம் எடுத்துக்கிடல. சடங்கெல்லாம் நல்லபடியா முடிஞ்சு எல்லாரும் ஊர்த்திண்ணையில உக்காந்து பொழுது போக்கையில எவனோ ஊர்க்காரன் கெளப்பி உட்டுட்டான்.

    என்னவே தவசி… இம்புட்டு சிறப்பா சடங்கு செஞ்சீரு. பத்திரிக்கையில தாய்மாமன் பேரமட்டுமாவது போட்டிருக்கலாம். ஒரு சொந்தக்காரன் பெயரும் காணலியே.

    அவ்வளவுதான் கேக்கவா வேணும். கோவக்கார மனுசனுக்கு உசுப்பு ஏத்திவிட்டா முறைச்சிக்கிட்டுப் போனவரு தங்கச்சிகிட்ட மட்டும் அப்பப்ப பேசுவாரு. மூணாவது மனுசன்கணக்கா வெளியில தங்கி பாத்துட்டுப் போவாரு. அவுங்களுக்கும் அது பழகிப்போச்சு. ரெண்டு பேருக்கும் பேரப்பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யுத வயசு வந்திடுச்சு. இன்னமும் அந்த மனுசன் அப்டித்தான் இருக்காரு. மூர்க்கன் என்னைக்கும் யோசிக்கமாட்டான் தன் பிடிச்சபிடியிலேந்து மாற மாட்டாங்கது இதுதான் போலிருக்கு. இதத்தான் ‘ஆகாதேஉண்டது நீலம் பிரிது’னு பழமொழியாச் சொல்லுவாங்க.

    சரிதான் ஆச்சி இவுகளும் இவுக கோவமும். கோவப்படுததுக்கு ஏதும் காரணம் வேணும். இவுக இப்டியே பொழுதப் போக்கட்டும். நமக்கு ஆயிரம் சோலிகெடக்கு. கெளம்புவோம். சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பார்வதி.

    Share
  • குறளின் கதிர்களாய்…(315)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(315)

    பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்.

    – திருக்குறள் – 580 (கண்ணோட்டம்)

    புதுக் கவிதையில்...

    யாவரும் விரும்பும்
    நாகரிகமான கண்ணோட்டமாம்
    இரக்கத்தை
    விரும்பிக் கைக்கொள்பவர்,
    தம்முடன் பழகியோர்
    நஞ்சிடக் கண்டும்
    மறுக்காதே
    அதையுண்டு அமைவர்…!

    குறும்பாவில்...

    நம்பிடும் நண்பர் உணவாய்
    நஞ்சு கொடுப்பினும் விருப்புடனதை உண்பார்,
    நாகரிகமாம் கண்ணோட்டம் கொண்டவர்…!

    மரபுக் கவிதையில்...

    எவரும் விரும்பும் நாகரிகம்
    ஏற்றம் மிக்கக் கண்ணோட்டம்,
    உவந்தே யதனை விரும்புபவர்
    உயர்ந்த குணத்தைக் கொண்டவரே,
    சுவைக்கும் உணவில் நண்பன்தான்
    சூழ்ச்சி கொண்டே நஞ்சிடினும்
    அவனுக் காக யிரக்கத்தால்
    அதனை வாங்கிக் குடிப்பாரே…!

    லிமரைக்கூ..

    உணவில் கலப்பர் நஞ்சும்
    அதையும் விரும்பி உண்பார், அவரிடம்
    இரக்க குணமே மிஞ்சும்…!

    கிராமிய பாணியில்...

    எல்லாருக்கும் வேணும்
    நல்லகொணமாம் எரக்ககொணம்,
    அதுவே
    நாகரிகமான நல்லகொணம்..

    எல்லாரும் விரும்பும்
    நல்ல கொணமான
    எரக்கத்த விருப்பத்தோட
    ஏத்து நடக்கிற
    ஒசந்த மனுசனுக்கு,
    கூட உள்ளவன்
    ஒணவோட வெசத்தக் குடுத்தாலும்
    வேண்டாமுண்ணு சொல்லாம
    அத அவன்
    வாங்கிக் குடிப்பானே..

    அதுபோல
    எல்லாருக்கும் வேணும்
    நல்லகொணமாம் எரக்ககொணம்,
    அதுவே
    நாகரிகமான நல்லகொணம்…!

    Share
  • கணபதிராயன்

    கணபதிராயன்

    அண்ணாகண்ணன்

    இன்று முடிச்சூர் சாலையில் சென்றபோது, ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் வாசலில் இருந்த பிள்ளையாருக்கு அப்போதுதான் அபிஷேகம் முடிந்து, அலங்காரம் தொடங்கியிருந்தது. கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவேன் எனப் பிடித்து, நின்னைச் சில வரங்கள் கேட்பேன், அவை நேரே இன்றெனக்குத் தருவாய் எனப் பாரதி கேட்பது போல், எனக்குக் கேட்க ஏதுமில்லை. எனினும் பக்தர்கள் உள்ளம் குளிர, அந்த அருட்காட்சியைப் படம் பிடித்து வந்தேன்.

    Lord Ganesha Orchestra

     

    விநாயகப் பெருமானின் பூசைக்குரிய மலரான எருக்கம்பூவை வண்ணத்துப்பூச்சிகளும் வண்டுகளும் ஆராதிப்பதைப் பாருங்கள்.

    எருக்கம்பூவில் வண்ணத்துப்பூச்சி!

    எருக்கம்பூவில் வண்ணத்துப்பூச்சி! – 1

     

    எருக்கம்பூவில் கருவண்டு!

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஐக்கிய அரபு நாடுகள் அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒப்பந்தம்

    ஐக்கிய அரபு நாடுகள் அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒப்பந்தம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஐக்கிய அரபு நாடுகள் அமீரகமும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.  அதன்படி இரு நாடுகளுக்கிடையேயும் தூதரக உறவுகள் ஆரம்பிக்கப்படும்.  இதற்கு இஸ்ரேல் கொடுத்திருக்கும் ‘சலுகை’ வெஸ்ட் பேங்கில் இருக்கும் யூதக்குடியிருப்புகளை நேத்தன்யாஹு இஸ்ரேலோடு இணைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்த முடிவை இப்போதைக்கு நிறுத்திவைப்பது. இந்தச் செய்தியை ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அறிவித்தார்.  இது இஸ்ரேல்-அரபு நாடுகளின் உறவைப் பொறுத்தவரை ஒரு பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் வரவேற்றிருக்கின்றன. இஸ்ரேலோடு இல்லாமல் இருந்த தூதரக உறவை ஆரம்பித்த பாரதிய ஜனதா கட்சி ஆளும் இந்தியா இஸ்ரேலின் எதிரிகளைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறதா என்பது மோதிக்கே வெளிச்சம்.

    இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு நாடுகள் அமீரகத்திற்கும் சென்ற சில வருஷங்களாகவே இரகசியத் தொடர்பு இருந்துவந்திருக்கிறது.  இப்போது வெளிப்படையாக அந்த இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டு தங்கள் உறவைப் பலப்படுத்திக்கொள்ள முன் வந்திருக்கின்றன.  சோழியன் குடுமி சும்மா ஆடுமா?  இந்தப் புது உறவால் இதை ஏற்படுத்திய மூன்று நாடுகளுக்கும் என்ன ஆதாயம் என்று பார்ப்போம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு  எதையாவது சாதித்ததாகக் காட்டிக்கொள்ள வேண்டும்.  முதலாவதாக ஈரானோடு அமெரிக்காவின் முந்திய ஜனாதிபதி  போட்ட ஒப்பந்தத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். ஒபாமா செய்த எல்லா நல்ல காரியங்களையும் கெடுப்பதுதான் ட்ரம்ப்பின் முதல் குறிக்கோள். ஈரானுக்கு எதிராக அரபு நாடுகளைத் திருப்பி முஸ்லீம் நாடுகளைப் பிரிப்பது. இரண்டாவது இஸ்ரேல்-அரபு நாடுகளின் உறவை சுமுகமாக்கி இஸ்ரேலைப் பாதுகாப்பது. மூன்றாவது அமெரிக்க ஆயுதங்களை அரபு நாடுகளுக்கு விற்பனைசெய்து ஆயுதங்கள் தயாரிக்கும் அமெரிக்கக் கம்பெனிகளின் பணஆதரவைப் பெறுவது.

    இஸ்ரேலைப் பொறுத்தவரை இஸ்ரேல் 1948-இல் உருவாக்கப்பட்டபோது அதற்கு எதிராகத் திரெண்டெழுந்து போர்புரிந்த அரபு நாடுகளை இஸ்ரேலுக்கு எதிரான பாதையிலிருந்து திருப்புவது.  1978-லேயே 1948-இல் இஸ்ரேல் எகிப்திடமிருந்து கைப்பற்றிய சினாய் தீபகற்பகத்தை எப்படியும் இஸ்ரேலிடமிருந்து பெற்றுவிட வேண்டும் என்று உறுதிபூண்டிருந்த சதாத்தைத் திருப்திப்படுத்த சினாயைத் திருப்பிக்கொடுத்து அதனோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டது.  இதற்காக அமெரிக்கா எகிப்துக்கு பண உதவி செய்தது.  அதோடு எகிப்தின் வாயை அடைத்தாகிவிட்டது.  1994-இல் ஆஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஜோர்டான் அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்ட பண உதவியை ஏற்றுக்கொண்டு இஸ்ரேலோடு ஒப்பந்தம் செய்துகொண்டது. இப்போது மூன்றாவதாக ஐக்கிய அரபு அமீரகத்தோடு தூதரக உறவுகள் வைத்துக்கொள்கிறது. ஆக, ஒவ்வொன்றாக இஸ்லாமில் சுன்னிப் பிரிவைப் பின்பற்றும் அரபு நாடுகளைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு தான் பயப்படும் ஈரானுக்கு எதிராக நாடுகளைச் சேர்ப்பது இஸ்ரேலின் நோக்கம்.  இதற்கு அமெரிக்காவின் பணபலமும் அதிகார பலமும் ட்ரம்ப் போன்ற கோமாளி ஜனாதிபதிகளும் உடந்தை என்பது வெளிப்படை.

    இனி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இதில் என்ன லாபம் என்று பார்ப்போம்.  வசதி படைத்த நாடு என்றாலும் படைபலம் இல்லாத நாடு. தங்கள் படைபலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று எல்லா நாடுகளும் விரும்புவது இயற்கை. மேலும் இஸ்ரேலிடமிருந்து அமீரகத்திற்குப் பல நன்மைகள் – தொழிநுட்ப உதவி, ஆயுத உதவி – கிடைக்கும்.  அமெரிக்காவின் தளராத உதவியால் இஸ்ரேல் எல்லா விதங்களிலும் மற்ற பல நாடுகளைவிட மேலோங்கி நிற்கிறது.  அமீரகம் இஸ்ரேலிடமிருந்து பலதுறை முதலீடுகள், சுற்றுலாப் பயணம், நேரடி விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், தொலைதூரத் தொடர்புகள், தொழில்நுட்பம், எரிசக்தி, மருத்துவ உதவி என்று பல உதவிகளைப் பெற முடியும். முன்னால் இஸ்ரேலோடு எந்த உறவும் வைத்துக்கொள்வதில்லை என்ற உறுதிமொழியில் எல்லா அரபு நாடுகளும் கையெழுத்திட்டதையெல்லாம் இப்போது அமீரகம் மறந்துவிட்டது. தன் நலன் என்று வரும்போது பொதுநலம் மறந்து போயிற்று.

    அமீரகத்துக்கு மக்கள் புரட்சியில் எழுந்து மன்னராட்சியை ஒழித்துவிடக்கூடாது என்று பயம். எகிப்தில் புரட்சியால் சர்வாதிகாரி முபாரக் கவிழ்ந்தது ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது, அப்போது ஒபாமாவின் தலைமையில் இருந்த அமெரிக்க அரசு முபாரக்கின் வீழ்ச்சியைத் தடுக்கவில்லை. அமெரிக்காவை நம்ப முடியாது என்று அமீரகம் தன் ராணுவ பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள விரும்புகிறது.

    பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு கிடைப்பதில் அவர்களோடு சேர்ந்து பாடுபட வேண்டும் என்பதெல்லாம் இப்போது அமீரகத்திற்கு மறந்துவிட்டது. பாலஸ்தீனர்கள்தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தை அடைந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காகப் பாடுபட்ட அராபத் இறந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன; இப்போதிருக்கும் பாலஸ்தீன அதிபர் அப்பாஸுக்கு 80-க்கு மேல் வயதாகிவிட்டது. அடுத்த தலைமுறையினருக்கு இஸ்ரேல் ஸ்தாபகர் பென்குரியன் சொன்னதுபோல் எல்லாம் மறந்துகொண்டிருக்கிறது; மேலும் போராடிப் போராடி அலுத்துவிட்டது. தனி நாடு கூட வேண்டாம், இஸ்ரேல் தங்களுக்கு சம குடியுரிமைகள் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.  தங்கள் இனத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றே இஸ்ரேலோடு சேர்ந்துகொண்டால் அவர்கள் தான் என்ன செய்வார்கள்? ‘லபோ லபோ’ என்று அடித்துக்கொள்வதைத் தவிர அவர்களால் என்னதான் செய்ய முடியும்?

    இந்தச் செய்தி கொடுத்த அதிர்ச்சி நீங்குமுன் இன்னொரு செய்தி வந்திருக்கிறது.  இஸ்ரேல் எஃப்-16 விமானிகள் ஜெர்மனிக்குப் போய் ஜெர்மனி விமானிகளுக்குப் பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம்! ஏற்கனவே ஜெர்மனி விமானிகள் இஸ்ரேலுக்கு வந்துவிட்டுப் போயிருக்கிறார்களாம். ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்கு ராணுவ ஒத்துழைப்பு இருக்கப் போகிறதாம்.  ஜெர்மனியின் ராணுவம் பலம் இழந்து இருக்கிறதாம்.  நேட்டோ நாடுகள் ஜெர்மனியை தங்கள் ராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனவாம். ட்ரம்ப் நேட்டோவையே ஒழித்துவிடலாம் என்னும் பயமும் இருக்கிறது. அதற்காகத்தான் இஸ்ரேலிடமிருந்து ராணுவ உதவியைப் பெறப்போகிறார்களாம். ஜெர்மனிக்குப் போகப் போகும் இந்த எஃப்-16 விமானங்களில் பணியாற்றப் போகிற இஸ்ரேல் விமானிகளில் பலர் யூதப்படுகொலையிலிருந்து தப்பித்தவர்களின் வாரிசுகள். ஜெர்மனிக்குச் செல்வது இவர்களுக்கெல்லாம் வேதனை அளிக்கக் கூடும் என்றாலும் இது செய்ய வேண்டிய ஒன்று என்று ஜெர்மன் விமானப் படையின் தலைவர் கூறுகிறார்.

    யூதப்படுகொலை நடந்து முடிந்து 75 ஆண்டுகள் ஆகின்றன என்பது உண்மைதான்.  காலம் ஆறாத புண்களை ஆற்றிவிடும் என்பதுபோல் நினைவுகளையும் மறக்கடித்துவிடலாம். இருந்தாலும் ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த இத்தனை பெரிய கொடுமையை எப்படி இஸ்ரேலால் இவ்வளவு சீக்கிரம் மறக்க முடிந்தது? எங்கள் யூத நண்பர் ஒருவர் – அவருடைய உறவினர்கள் யாரும் நேரடியாக யூதப்படுகொலையில் உயிர் இழந்தவர்கள் இல்லை என்ராலும் – ஜெர்மனியில் செய்யப்பட்ட கார்களைக்கூட வாங்குவதில்லை.  அந்த அளவுக்கு அவருக்கு ஜெர்மனி மேல் கோபம், வெறுப்பு. ஆனால், இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் நட்புக் கிடைத்தால் ஐரோப்பிய யூனியனின் நட்புக் கிடைக்கும்.  பாலஸ்தீனத்தைக் கபளீகரம் செய்வதுதான் அதன் நோக்கம். அதற்காக எந்தக் கூட்டிலும் சேரத் தயார்.

    மனிதன் தன் சுய லாபத்திற்காக எந்த நிலையிலும் தன்னை மாற்றிக்கொள்ளலாம் போலும்.  வேதனை தரும் உண்மை.

    Share
  • திருவள்ளுவர் யார்? – 2

    திருவள்ளுவர் யார்? – 2

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்திற்கு எதிரானவர் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அது முற்றிலும் தவறான கருத்து.

    “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
    காவலன் காவான் எனின்”

    “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.”

    “அரசன் ஒழுங்காக அரசாட்சி செய்யாவிட்டால், ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர்கள் தங்களது வேதத்தை மறந்து விடுவார்கள். பசுமாட்டில் பால் குறைந்துவிடும். அந்தணர்களின் வேதமும் அவர்களின் வேத தர்மமும் அரசனின் செங்கோலைப் பற்றியே நிற்கின்றன” என்பது தான் இந்த இரண்டு குறட்பாக்களின் பொருள். வேதம் ஓதுதல், பிறர்க்கு அந்த வேதத்தைக் கற்பித்தல், வேள்வி செய்தல், பிறருக்கு வேள்வி செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் என்பவையே அந்தணர்களுக்குரிய ஆறு தொழில்கள். இதுவே வடமொழியில் அத்யயனம், அத்யாபனம், யஜனம், யாஜனம், தானம், பரிக்ரஹம் என்று சொல்லப்படுகிறது.

    இந்த ஆறு தொழிலுக்கும் வேதமே அடிப்படை. அரசன் ஒழுங்காக ஆட்சி செய்யாவிட்டால் அந்தணர்கள் வேதத்தை மறந்துவிடுவார்கள் என்றும் அதனால் பசுமாடுகளில் பால் குறைந்துவிடும் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர். பசுமாட்டிற்கும் அந்தணர்க்கும் ஒரு ஸம்பந்தம் உள்ளது. அதாவது, அந்தணர்கள் செய்யும் வேள்வியில் பசுமாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய் இவையே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே சுழற்சி முறையிலான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. வேள்விமுறைகள் நினைவில் இருக்க வேண்டுமானால், வேதம் நினைவிலிருக்க வேண்டும். வேதம் மறந்துபோய்விட்டால் வேள்வி செய்ய முடியாது. வேள்வி இல்லையென்றால் மழை பொழியாது. மழை இல்லையென்றால் புல் தழைக்காது. புல் இல்லை என்றால் பசுமாட்டிற்கு உணவு இல்லாமல் போய்விடும். உணவில்லாத பசு, பால் கொடுக்காது. பால் இல்லை என்றால் தயிர், நெய் இவை கிடைக்காது. பால்,தயிர்,நெய் இவை இல்லாமல் வேள்வி செய்யமுடியாது. இதனால்தான் பசுவையும் அந்தணரையும் தொடர்புபடுத்திப் பேசுகிறார் திருவள்ளுவர்.

    பசு பால் கொடுக்காது என்று சொல்வதன் மூலம் அந்தணர்கள் வேதத்தை மறந்துவிட்டால் நாட்டில் வளம் குன்றிவிடும் என்பதையும் நாட்டின் வளமையும் செழிப்பும் அந்தணர்களின் தொழிலாலும் அறத்தாலுமே நிலைநிற்கின்றன என்பதையும் நிலைநாட்டுகிறார். அந்த அந்தணர்களின் அறமும் தொழிலும் ஒழுங்காக நடக்க வேண்டுமென்றால் நாட்டில் நல்லாட்சி நடக்கவேண்டும். இந்தக் குறட்பாக்கள் மூலம் அந்தணர்களின் வேதம் மற்றும் அவர்களது அறமான வைதிக தர்மம், பசுக்கள் இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டியது ஒரு மன்னனின் கடமை என்பதையும் இவற்றுக்குப் பாதுகாப்புக் கொடுக்காத மன்னன் அரசாளும் நாட்டில் வளம் குன்றிவிடும் என்பதையும் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.

    अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः।
    यज्ञाद्भवति पर्जन्यो यज्ञःकर्मसमुद्भवः॥

    அந்நாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:|
    யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:||

    என்ற பகவத்கீதை ஶ்லோகத்தின் கருத்தை இந்தக் குறட்பாக்கள் பிரதிபலிப்பது கவனிக்கத்தக்கது. அதனால் இந்த இரண்டு குறட்பாக்களின் கருத்தைக் கொண்டு பார்க்கின்றபோது, திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்தை முழுக்க முழுக்க ஆதரிப்பவர் என்பது  தெளிவாகிறது. ஆகவே திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்திற்கு எதிரானவர் என்று கூறுவது ஆதாரமற்ற பிதற்றல்தான்.

    திருவள்ளுவர், வைதிக வேள்விகளுக்கு எதிரானவரா?

    “வைதிக வேள்விகளில் உயிர்பலி கொடுக்கப்படுகிறது. ஆனால் திருவள்ளுவர் கொல்லாமயை வலியுறுத்தியவர்.

    “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று”

    என்ற குறட்பாவில் அவர் அஹிம்ஸையை ஆதரிக்கிறாரேயொழிய வேள்வியை ஆதரிக்கவில்லை. அதனால் அவர், வைதிக வேள்விகளுக்கு எதிரானவர்தான்” என்று சிலர் கூறுகிறார்கள்.

    இதுவும் தவறான கருத்துத்தான். இவர்கள் எடுத்துக் காட்டும் குறளில் உள்ள அவி என்பது யாகங்களில் உபயோகப்படும் நெய், அன்னம் இவற்றைக் குறிக்கும். “நெய்யையும் அன்னத்தையும் கொட்டி ஆயிரம் வேள்விகள் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உண்ணாமல் இருப்பது நல்லது” என்பதே இந்தக் குறட்பாவின் கருத்து. இதனால் திருவள்ளுவர், வேள்விக்கு எதிரானவர் என்பது எப்படித் தேறும்?

    இந்தக் குறட்பாவின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், வேள்வியை விட அஹிம்ஸை சிறந்தது என்று சொல்கிறார். வேள்வியைவிட அஹிம்ஸை சிறந்தது என்று சொன்னால் வேள்வியை அவர் புறக்கணித்துவிட்டார் என்று அர்த்தமில்லை. மாறாக வேள்வியை அவர் ஆதரித்திருக்கிறார் என்பது தான் அதற்குப் பொருள். மாம்பழத்தைவிட பலாப்பழம் இனிமையானது என்று ஒருவன் சொன்னால், மாம்பழத்தை அவன் இனிமையற்றது என்று சொல்லிவிட்டான் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? அதைப்போல இந்தக் குறட்பாவில் வேள்வியின் சிறப்பையும் அஹிம்ஸையின் சிறப்பையும் ஒப்பீட்டு அடிப்படையில் கூறுகிறார் திருவள்ளுவர்.

    ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூற வேண்டுமானால் அவ்விஷயத்தை வேறொரு விஷயத்தோடு ஒப்பிட்டுக் கூறுவது மரபு. அந்த வகையில் இந்தக் குறட்பாவில் திருவள்ளுவர் வலியுறுத்த விரும்பும் விஷயம் கொல்லாமை. கொல்லாமையின் சிறப்பை வேள்வியின் சிறப்போடு ஒப்பிடுகிறார். வேள்வியால் ஒருவன் அடையும் நன்மையையைவிட ஒரு உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்னாமல் இருப்பதால் அடையும் நன்மை உயர்ந்தது என்பதே அந்தக் குறளின் உட்பொருள். அவர் வேள்விக்கு எதிரானவராக இருந்திருந்தால் ‘ஆபயன் குன்றும்’ என்ற குறளையும் ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறளையும் அவர் எழுதியிருக்கவே முடியாது. ‘ஆபயன் குன்றும்’, ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறட்பாக்களின் மூலம் திருவள்ளுவர், வைதிக வேள்வியைச் சிறப்பாக ஆதரித்தே பேசுகிறார்.

    “செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து”

    என்ற குறட்பாவில் தேவர்களுக்கு உரிய உணவு அவி உணவுதான் என்கிறார். வேள்வியை ஆதரிக்காதவராக அவர் இருந்திருந்தால் தேவர்களின் உணவு அவி உணவுதான் என்று அவரால் எழுதியிருக்க முடியாது. ஆகவே திருவள்ளுவர் நெய், அன்னம் இவற்றால் அக்னியில் செய்யப்படும் வைதிக வேள்விகளை ஆதரித்தவர் தான் என்பதே இக்குறட்பாக்கள் நமக்குக் கூறும் செய்தி.

    வைதிக வேள்விகள் சிலவற்றில் உயிர்ப்பலி சொல்லப்படுகிறது. அஹிம்ஸையைப் பெரிதும் வலியுறுத்தும் திருவள்ளுவர் உயிர்பலியுள்ள வைதிக வேள்வியை எப்படி ஆதரித்தார் என்ற கேள்வி எழுவது இயற்கை. இக்கேள்விக்கு பதில் திருக்குறளிலேயே இருக்கிறது. அதாவது விதி என்ற ஒன்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்று இருந்தே தீரும். விதிவிலக்கில்லாத விதி என்றுமே இருந்தது கிடையாது. ஒரு உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்னக் கூடாது என்பது பொதுவிதி. இந்தப் பொதுவிதியை வலியுறுத்திக் கூறும் திருவள்ளுவர், வைதிக வேள்வியை ஆதரிப்பதன் மூலம் வேள்விகளில் செய்யப்படும் உயிர்ப்பலியை விதிவிலக்காக அவர் ஏற்கிறார் என்பது தெளிவாகிறது.

    “உயிர் செகுத்து உண்ணாமை நன்று” என்ற இடத்தில் அவர் சொல்லவருவது என்னவென்றால் உணவுக்காக ஓர் உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்பது தவறு என்பதே. வேள்விகளில் உணவுக்காக உயிர்ப்பலி செய்யப்படுவதில்லை. தேவர்களுக்கு ஹவிர்பாகம் அளிக்கப்பட்ட பிறகு மிகுந்ததை வேள்வி செய்யும் கர்த்தாவும் வேள்வி செய்துவைக்கும் ரித்விக்குகளும் பிரஸாதமாக உண்பது மரபு. கொல்லாமையைப் பெரிதும் வலியுறுத்தும் திருவள்ளுவர் போரில் மனிதர்கள் கொல்லப்படுவதையும் குற்றவாளிக்கு அரசன்  மரண தண்டனை கொடுப்பதையும் எப்படி விதிவிலக்காக ஆதரித்துள்ளாரோ அதே அடிப்படையில்தான் யாகங்களில் செய்யப்படும் உயிர்ப்பலியை விதிவிலக்காக ஆதரித்துள்ளார் என்பதே இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். அதனால் திருவள்ளுவர் வைதிக வேள்விகளை ஆதரித்தவர் என்பதே அவரது நூலான திருக்குறள் நமக்குக் கூறும் செய்தி.

    ‘அவிசொரிந்து’

    ‘அவிசொரிந்து’ என்ற குறட்பாவில் புலால் உண்ணாமையின் சிறப்பு வலியுறுத்தப்படுகிறதேயொழிய வேள்வி செய்வது தவறு என்று கூறப்படவில்லை. இதே கருத்து வைதிக ஶாஸ்த்ரங்களான மனுஸ்ம்ருதியிலும், மஹாபாரதத்திலும் கூடச் சொல்லப்படுகிறது.

    वर्षे वर्षेश्वमेधेन यो यजेत शतम् समाः।
    माम्सानि च नखादेद्यस्तयोःपुण्यफलम् समम्॥

    வர்ஷே வர்ஷேஶ்வமேதேந யோயஜேத ஶதம்ஸமா:|
    மாம்ஸாநிச நகாதேத்யஸ் தயோ: புண்யபலம் ஸமம்||

    என்று மனுஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது. “எவன் நூறு வருடம் வரை வருடம் தோறும் அஶ்வமேதயாகம் செய்கிறானோ அவனுக்கும் எவன் தன் உயிருள்ளவரை கொல்லாமையைப் பின்பற்றி மாம்ஸத்தை உண்ணாமலிருக்கிறனோ அவனுக்கும் புண்ய பலன் ஒன்றுதான்” என்பது இந்த ஶ்லோகத்தின் பொருள். இதைப் போலவே மஹாபாரதத்தில்,

    इष्टम् दत्तमधीतम्च क्रतवश्च सदक्षिणाः।
    अमाम्स भक्षणस्यैव कलाम् नार्हन्ति षोडशीम्॥

    இஷ்டம் தத்த மதீதஞ்ச க்ருதவஶ்ச ஸதக்ஷிணா:|
    அமாம்ஸ பக்ஷணஸ்யைவ கலாம் நார்ஹந்தி ஷோடஶீம்||

    என்று சொல்லப்படுகிறது. அதாவது, ”பெருமளவில் தக்ஷிணைகள் கொடுத்துச் செய்யப்படும் யாகம், அக்னிஹோத்ரம், தானம் வேதாத்யயனம் இவையெல்லாம் புலால் உண்ணாமல் இருப்பதன் பதினாறில் ஒரு பங்குக்குக் கூட ஈடாகாது” என்பது இதன் கருத்து. உணவுக்காக ஓர் உயிரைக்கொன்று அதன் உடலைப் புசிப்பவன் யாகம் செய்வது என்பது வீணான வேலை என்று மனுஸ்ம்ருதியும் மஹாபாரதமும் கூறுகின்றன. இதிலிருந்து இன்னொரு அர்த்தமும் கிடைக்கிறது. அதாவது புலால் உணவு உண்ணாமல் இருப்பவன் யாகம் செய்தால், புலால் உண்ணாமல் இருப்பதால் ஏற்படும் புண்ணியத்தையும் யாகம் செய்வதால் உண்டாகும் புண்ணியத்தையும் அடைந்து இரட்டித்த புண்ய பலனை அடைகிறான் என்பதையும் அறிய முடிகிறது. மனுஸ்ம்ருதியும் மஹாபாரதமும் சொன்ன கருத்தையே ‘அவிசொரிந்து’ என்ற குறட்பா பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தணரைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தாரைக் குறித்துச் சொல்லப்பட்ட செய்திதான், இக்குறட்பாவில் சொல்லப்பட்ட விஷயம். அந்தணரைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தவர்களும் உணவுக்காக உயிர்களைக் கொல்கின்றனர். அந்த மூவருள் அரசர், வணிகர் என்ற இரண்டு வர்ணத்தவருக்கு மட்டுமே வேள்வி செய்ய அதிகாரம் உண்டு. நான்காம் வர்ணத்தவருக்கு வேள்வி விதிக்கப்படவில்லை. அரசர், வணிகர் இருவரும் உணவுக்காக உயிர்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் யாகமும் செய்கிறார்கள். அந்த இரண்டு வர்ணத்தாரையும் நோக்கித்தான், “நீங்கள் வேள்விகள் செய்வதைவிட உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாமல் இருப்பதே சிறந்தது” என்று திருவள்ளுவர் இந்தக் குறட்பா மூலம் கூறுகிறார். அதேபோல, வேள்வி செய்யத் தகுதியில்லாத நான்காம் வர்ணத்தவரை நோக்கி, “நீ வேள்வி செய்ய முடியவில்லையே என்று கவலைகொள்ளத் தேவையில்லை. நீ வாழ்நாள் முழுவதும் புலால் உண்ணாமல் இருந்தாலே உனக்கு வேள்வியின் பலன் கிடைத்துவிடும்” என்றும் திருவள்ளுவர் இக்குறட்பா மூலம் கூறுகிறார். அதாவது நான்காம் வருணத்தவர் உட்பட யாராக இருந்தாலும் மாமிசம் உண்ணக் கூடாது என்பதுதான் இந்தக் குறட்பாவின் திரண்ட கருத்து.

    அந்த வகையில் வேள்வி செய்ய இயலாதவரும் உய்வடைவதற்கு வழிகாட்டியுள்ளார் திருவள்ளுவர். அதனால் மாமிச உணவுப் பழக்கம் உள்ளவர்கள், திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட இயலாது. அவர்களுக்குச் சொந்தம் கொண்டாட உரிமையும் இல்லை. ஆகவே இக்குறட்பா, அந்தணர் தவிர்த்த மற்ற மூன்று வர்ணத்தாருக்காக எழுதப்பட்டது. இக்குறட்பாவில் உணவுக்காக எவ்வுயிரையும் கொல்லாமல் இருப்பது வேள்வியைவிடச் சிறந்தது என்று சொல்லப் படுவதால் புலால் உணவுப் பழக்கம் உள்ளவர்கள், வேள்வி செய்வதால் பயனில்லை என்பதும் புலால் உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் வேள்வி செய்வதால் அவர்களுக்கு இரட்டித்த புண்ய பலன் கிடைக்கும் என்பதும்தான் இக்குறட்பாவின் திரண்ட பொருள்.

    மஹாபாரதத்தில் பீஷ்மர், தர்மராஜருக்கு தர்மோபதேஶம் செய்யும் சமயத்தில் புலால் உணவில் உள்ள தோஷங்களை எடுத்துக் கூறி ‘க்ஷத்ரியர்களும் புலால் உணவைத் தவிர்ப்பது தான் உத்தமம்’ என்று கூறுகிறார். யாகங்களில் உயிப்பலி சரியா, தவறா என்பது குறித்த சர்ச்சை ரிஷிகளுக்கு மத்தியில் எழுந்ததாகவும் உயிர்பலி இல்லாமலும் யாகங்கள் செய்யலாம் என்ற முடிவுக்கு ரிஷிகள் வந்ததாகவும் மஹாபாரதத்தில் சொல்லப்படுகிறது. மேலும் அஶ்வமேதம் முதலிய உயிர்ப்பலி உள்ள பெரிய வேள்விகள் கலியுகத்தில் செய்யக் கூடாது என்றும் ஶாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவ்விஷயங்களையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டவரே திருவள்ளுவர்.

    “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.”

    என்று அந்தணருக்கான இலக்கணத்தைச் சொல்கிறார் திருவள்ளுவர். அதாவது எந்த உயிரிடத்தும் கருணையோடு இருப்பதால் அந்தணர் அறவோர் எனப்படுகின்றனர் என்று கூறுகிறார். அதே நேரத்தில் அந்தணரின் ஆறு தொழில்களில் ஒன்றான வேள்வியையும் ‘ஆபயன் குன்றும்’ முதலிய குறட்பாக்களால் ஆதரித்துப் பேசுகிறார். வைதிக வேள்வியில் உயிர்க்கொலை அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியாத விஷயமன்று. இதிலிருந்து வேள்வியில் செய்யப்படும் உயிர்க்கொலையை அவர் எதிர்க்கவில்லை என்பதே தெரிகிறது.

    ஆகவே, எல்லாவுயிர்களிடத்தும் செந்தண்மை கொண்டவர்களாக இருப்பதால் அந்தணர்கள் அறவோர் எனப்படுகின்றனர் என்று அந்தணருக்கு ஓர் இலக்கணத்தை வரையறை செய்த திருவள்ளுவர், ‘ஆபயன் குன்றும்’ முதலிய குறட்பாக்கள் மூலம் அந்தணர்களின் ஆறு தொழில்களில் ஒன்றான உயிர்ப்பலியுள்ள வேள்வியை ஆதரித்துப் பேசுவதால், எப்படிப் போர்களில் மனிதர்கள் கொல்லப்படுவதையும் அரசன் குற்றவாளிக்குக் கொடுக்கும் மரண தண்டனையையும் விதிவிலக்காக ஆதரித்தாரோ அதைப் போலவே வேள்விகளில் செய்யப்படும் மந்த்ர ஸம்ஸ்காரத்துடன் கூடிய உயிர்ப்பலியையும் வேள்வியோடு தொடர்புடையவர்கள் செய்யும் மாம்ஸ பக்ஷணத்தையும் விதிவிலக்காக அவர் ஆதரிக்கிறார் என்பதே இங்கு தெளிவாகின்ற விஷயம். ஆகவே இந்தக் குறட்பா, கொல்லாமை, புலால் உண்ணாமை இவற்றின் சிறப்பை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயொழிய வேள்வியை மறுப்பதற்காக எழுதப்பட்டதன்று. அதனால் திருவள்ளுவர் வைதிக வேள்விகளுக்கு எதிரானவர் என்ற கருத்து மிகவும் தவறானது.

    —தொடரும்

    Share