கதை வடிவில் பழமொழி நானூறு – 15

நாங்குநேரி வாசஸ்ரீ
பாடல் 31
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே;
ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்
‘ஆகாதார்க்(கு) ஆகுவது இல்’.
பழமொழி – ‘ஆகாதார்க்(கு) ஆகுவது இல்’
இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேனோ தெரியல. ஞாயிற்றுக்கிழமை நிதானமா வேலையத் தொடங்கி ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா இன்னிக்குனு பாத்து இப்படி ஒரு சோதனை. இப்ப அந்த அம்மா சொன்ன எல்லாத்தையும் உடனே செஞ்சாகணும். மொதல்ல போலீஸ் ஸ்டேஷன் அப்புறம் பாங்க். உலகமே தலைகீழா ஆனாலும் இந்த வயிறு அடங்க மாட்டேங்குது. மொதல்ல இருக்கற பிரட்ல ஜாமத் தடவி வாய்க்குள்ள போட்டுக்கணும். வரிசயாக யோசிக்கத் தொடங்கினேன்.
தூங்கி எந்திரிச்சவொடனே கண்கள உள்ளங்கையால மூடி திறக்கும்போதே மொபைல்ல முழிக்கற பழக்கம்தான் எனக்கு. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானேன்னு நெனச்சு ஒன்பது மணிக்கு முழிச்சது தப்பாப்போச்சு. என் வங்கிக் கணக்குலேந்து ஆப்பிள் கம்பெனி காரங்க மூணு தடவ 7,900 ரூபாய் எடுத்திருக்காங்க. அதுவும் இரண்டு நிமிட இடைவெளியில. காலை எட்டரை மணியிலிருந்து. நல்லவேளை பாத்தவொடனே வங்கியிலேந்து நீங்கள் பணம் எடுக்க அனுமதியளிக்கவில்லையெனில் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளவும்னு அனுப்புவாங்களே அந்த எண்ணுக்குக் கூப்பிட்டேன். அதுலபேசின அம்மா ஆப்பிள் கம்பெனி பெயர்ல வேறயாரோ ஏமாத்து வேலைசெஞ்சிருக்கரதாவும் என்னய போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் குடுத்துட்டு வங்கிக்குப் போய் பாக்கச் சொல்லியிருக்கு. என்னோட கார்டையும் ப்ளாக் பண்ணிருச்சு.
நேத்தைக்கு எ.டி.எம் ல பணம் எடுத்தேன். அப்போ என் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம்னு நினைக்கறாங்க. என்னய மாதிரி இருபதாயிரம் ரூபாய்சம்பளக்காரனுக்கு இது பெரிய இழப்புதான். எத்தன நாள்ல திரும்பக்கிடைக்குமோ தெரியல. நாலு மாசம் முன்ன எங்க ஊர் சேலத்திலேந்து சென்னைக்கு கிளம்பினப்போ தாத்தா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. பட்டணத்துக்குப் போற. தனியாளாநின்னு எல்லாத்தையும் சமாளிக்கணும். எப்பவும் நெலம ஒண்ணுபோல இருக்காது. எவனும் பணத்தகிணத்த களவாண்டு போயிட்டான்னா பயப்படாத. திரும்பக் கெடச்சா நல்லது. இல்ல விதினு உட்டுரு.
எரிச்சலோட அப்பா இடைமரித்து போற புள்ள கிட்ட நல்லதா நாலு வார்த்த சொல்லுங்க அய்யா. அதவிட்டுட்டு இப்ப எதுக்கு தேவையில்லாம…..
அப்பவும் தாத்தா விட்டபாடில்லை. ‘ஆகாதார்க்கு ஆகுவது இல்’னு பழமொழியே இருக்கு. ஒருத்தனுக்கு நல்ல விதி இருந்திச்சுன்னா அதிகமா முயற்சி செய்யாமலேயே அவங்கிட்ட பணம் வந்து குவியும். ஒருவேள தலைவிதி சரியில்லன்னா கஷ்டப்பட்டு சேத்து பாதுகாப்பா வச்சாலும் யாரும் களவாண்டுகிட்டுப் போயி அவன் நடுத்தெருவுல நிப்பான்.
தாத்தா தொடர்ந்துகொண்டே போக எரிச்சலில் அம்மா வெந்நீர் எடுத்து வச்சு ஆறிப்போவுது. குளிக்கப்போங்க என அவரை விரட்டாத குறையாக போகச்செய்தார்.
இப்ப யோசிச்சா அவர் சொன்னது சரினு தோணுது.இதையும் விதினு எடுத்துக்கிட்டா மன உளைச்சல்லேந்து தப்பிச்சிரலாம். தாத்தா பெரிய சைக்காலஜிஸ்ட் போல. மனதுக்குள் நினைத்துக்கொண்டே பிரட்டை மடித்து வாய்க்குள் அடைக்கத் தொடங்கினேன்.
பாடல் 32
ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! – மூர்க்கன்தான்
கொண்டதே கொண்டு விடானாகும்; ‘ஆகாதே
உண்டது நீலம் பிறிது’.
பழமொழி – ‘ஆகாதே உண்டது நீலம் பிறிது’.
இது என்ன புது கதையா இருக்கு. பாம்பேயிலிருந்து தவசி அய்யாவோட மச்சான் வந்திருக்காராம். நம்ம ஊரு பஸ் ஸ்டாண்டுல ரூம் எடுத்து தங்கிக்கிட்டு எல்லாரையும் கூப்பிட்டுவுட்டு பாக்குதார்னு சொன்னாவ. ஏன் ஆச்சி அவருக்கு என்ன வயசிருக்கும். நம்ம தங்கம் ஆச்சியோட கடைசி தம்பியா இருக்குமோ? புதிதாகக் குடிவந்திருக்கும் பார்வதி கேட்க..
ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தாள். அதெல்லாம் ஒண்ணுமில்ல அவருக்கு எண்பத்தைந்து வயசு ஆச்சு… இருபது வருசம் முன்ன ஒரு சின்ன மனஸ்தாபத்துல விரிசல் விழுந்து போச்சு. அதுக்குப்பொறவு வீட்டுக்கு வந்து போவுதது கிடையாது. அப்பப்ப தங்கச்சிக் கிழவியப் பாக்கதுக்காக வருவாக அவ்வளவுதான்.
அடேயப்பா. இருபது வருசமா அப்டி என்னதான் பிரச்சினை உசுப்பேத்திவிட்டாள் பார்வதி.
தங்கத்தோட மூத்த மக அதான் சேரன்மாதேவிலேந்து வந்துபோவாளே தெய்வான அவ சடங்குக்கு பத்திரிக்கை அடிக்கையில இவரு பெயரப் போடலியாமா. அதான்.
சேதி கேள்விப்பட்டவொடனே இவரு சம்சாரத்தோட தட்டு தாம்பாளம் எல்லாம் தூக்கிக்கிட்டு சீர்செய்ய வந்துட்டாரு. அதுக்குப்பிறகுதான் பத்திரிகை அடிச்சாங்க எல்லா சொந்தமும் அக்கம்பக்கத்துலயே இருந்ததால அத ஒரு சம்பிரதாயத்துக்குதான் அடிச்சாங்க. அதனால பெரிசா கவனம் எடுத்துக்கிடல. சடங்கெல்லாம் நல்லபடியா முடிஞ்சு எல்லாரும் ஊர்த்திண்ணையில உக்காந்து பொழுது போக்கையில எவனோ ஊர்க்காரன் கெளப்பி உட்டுட்டான்.
என்னவே தவசி… இம்புட்டு சிறப்பா சடங்கு செஞ்சீரு. பத்திரிக்கையில தாய்மாமன் பேரமட்டுமாவது போட்டிருக்கலாம். ஒரு சொந்தக்காரன் பெயரும் காணலியே.
அவ்வளவுதான் கேக்கவா வேணும். கோவக்கார மனுசனுக்கு உசுப்பு ஏத்திவிட்டா முறைச்சிக்கிட்டுப் போனவரு தங்கச்சிகிட்ட மட்டும் அப்பப்ப பேசுவாரு. மூணாவது மனுசன்கணக்கா வெளியில தங்கி பாத்துட்டுப் போவாரு. அவுங்களுக்கும் அது பழகிப்போச்சு. ரெண்டு பேருக்கும் பேரப்பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யுத வயசு வந்திடுச்சு. இன்னமும் அந்த மனுசன் அப்டித்தான் இருக்காரு. மூர்க்கன் என்னைக்கும் யோசிக்கமாட்டான் தன் பிடிச்சபிடியிலேந்து மாற மாட்டாங்கது இதுதான் போலிருக்கு. இதத்தான் ‘ஆகாதேஉண்டது நீலம் பிரிது’னு பழமொழியாச் சொல்லுவாங்க.
சரிதான் ஆச்சி இவுகளும் இவுக கோவமும். கோவப்படுததுக்கு ஏதும் காரணம் வேணும். இவுக இப்டியே பொழுதப் போக்கட்டும். நமக்கு ஆயிரம் சோலிகெடக்கு. கெளம்புவோம். சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பார்வதி.