புதுக்கோட்டை பத்மநாபன்

திருவள்ளுவர் வர்ணாஶ்ரம தர்மங்களுக்கு எதிரானவர் என்றும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வை அவர் அங்கீகரிக்கவில்லை என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இக்கருத்தை முன் வைப்பவர்கள், தங்கள் கருத்துக்கு ஆதாரமாக

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”

என்ற குறட்பாவை மேற்கோள் காட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் மேற்கோள் காட்டும் இந்தக் குறட்பாவில் பிறப்பால் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு உண்டு என்றுதான் திருவள்ளுவர் கூறுகிறார். எப்படியென்று பார்ப்போம்.

இக்குறட்பாவின் உட்பொருளைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஓர் இலக்கியமும், அது தோன்றிய காலத்தில் உள்ள ஸமுதாய நிலையைப் பிரதிபலிப்பதாகத் தான் இருக்கும். ஒரு காலத்தில் ஒரு நீதிநூல் உருவாகிறது என்றால் அந்நூல் உருவான காலத்தில் இருந்த ஸமுதாயத்தில், அந்நூலில் சொல்லப்பட்ட நீதிகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை அல்லது அறவே பின்பற்றப்படவில்லை என்றுதான் பொருள். அக்கால ஸமுதாய மக்களுக்கு அறிவுரை சொல்லத்தான் அந்த நீதிநூல் ஏற்பட்டது என்று கொள்ளவேண்டும். அக்கால ஸமுதாயத்தில் எழும் பல கேள்விகளுக்குப் பதிலாகவும் அந்நூலில் சில விஷயங்கள் அமைந்திருக்கும்.

திருவள்ளுவர், திருக்குறளை ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு ஒரே நாளில் எழுதி முடிக்கவில்லை என்பது திருக்குறளின் அமைப்பைப் பார்த்தாலே புரியும். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஸமுதாயத்தில் தன் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அநுபவங்கள், ஸமுதாயத்தில் தான் கண்ட காட்சிகள், தன்னை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகள் இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் திருக்குறளை அவர் எழுதியிருக்கிறார். அதுவும் அந்தந்த அனுபவங்கள், காட்சிகள், கேள்விகள் ஏற்படுகின்ற ஸமயத்தில்தான் அவற்றுக்குத் தகுந்த குறட்பாக்களை எழுதினாரேயொழிய ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே நாளில் 1330 குறட்பாக்களையும் அவர் எழுதிவிடவில்லை. இப்படித் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் தான் கற்ற கல்வி ஞானத்தின் உதவியோடு பல்வேறு சமயங்களில் தான் எழுதிய குறட்பாக்களை ஒரு நூலாக அமைத்திருக்கிறார். ஆகவே திருவள்ளுவர் தான் வாழ்ந்த ஸமுதாய நிலையைத் தான் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் என்பதை அவரது நூலிலிருந்தே அறிய முடிகிறது.

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்த ஸமுதாயத்தில் வர்ணாஶ்ரம தர்மம் பின்பற்றப்பட்டது. ஸமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் தங்களின் தாழ்வு மனப்பான்மையால் உந்தப்பட்டுத் தங்களை விட உயர்ந்தவர்கள்மீது பொறாமைப்படுவதும் தங்களது தாழ்வுநிலையை நினைத்து ஆதங்கப்படுவதும் எல்லாக் காலத்திலும் இயற்கைதான். அவ்வுணர்வுகளால் உந்தப்பட்டவர்களில் சிலர், ஸமூகத்தில் மனிதர்களுக்கு இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்துக் கேள்விகள் எழுப்புவதும் இயற்கைதான். “எல்லோரும் பெண் வயிற்றில் பத்து மாதம் இருந்து தான் பிறக்கிறார்கள். எல்லோரின் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தான் ஓடுகிறது; எல்லோரின் பிறவிக்கும் ஆண்-பெண் சேர்க்கைதான் காரணம்; எல்லோரும் ஒருநாள் மரணமடையத் தான் போகிறார்கள். அப்படியிருக்கும் போது மனிதர்களுக்குள் ஏன் ஏற்றத்தாழ்வு?” என்று இக்காலத்தவர் கேட்பது போல் அக்காலத்திலும் திருவள்ளுவரிடம் இக்கேள்வியை எழுப்பியிருக்கிறான் ஒருவன். அவனுக்குப் பதில் சொல்வதாக அமைந்ததுதான் ‘பிறப்பொக்கும்’ என்ற குறள்.

அந்தக் கேள்வியை எழுப்பியவனுக்குத் திருவள்ளுவர் என்ன பதில் சொல்கிறார் என்றால், “அப்பா! நீ சொல்வதுபோல் மனிதர்கள் மட்டுமல்ல. எல்லா உயிரினங்களுமே ஒரே மாதிரியாகத்தான் பிறக்கின்றன. ஏதோ ஒருவகையில் ஆண்-பெண் சேர்க்கையால் தான் பிறக்கின்றன. அதனால் பிறக்கும் தன்மை எல்லா உயிர்களுக்கும் ஸமமானது தான். ஆனால் செய்கின்ற தொழிலை வைத்துப் பார்க்கின்றபோது சிறப்பு என்பது ஸமமானதாக இருக்காது. செய்யும் தொழிலின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்” என்று கூறுகிறார். இதுதான் அந்த ‘பிறப்பொக்கும்’ என்ற குறட்பாவின் கருத்து.

“தொழிலில் சிறப்பான தொழில், சிறப்பில்லாத தொழில் என்று வேறுபடுத்திப் பார்த்து அதன் அடிப்படையில் மனிதர்களை ஏற்றத்தாழ்வோடு பார்ப்பது சரியா?” என்ற கேள்வி எழலாம். தொழிலின் அடிப்படையிலான அந்த ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாதது என்று தான் இக்குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் கூறுகிறார். இக்காலத்துக்குத் தக்கபடி இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். கலெக்டரும் கலெக்டரின் பியூனும் பத்து மாதத்தில் பிறந்தவர்கள்தான். இருவருடைய உடம்பிலும் சிவப்பு ரத்தம் தான் ஓடுகிறது. இருவரும் ஆண்-பெண் சேர்க்கையால் பிறந்தவர்கள்தான். இருவரும் ஒருநாள் மரணமடையத்தான் போகிறார்கள். ஆனால் கலெக்டருடைய இருக்கையில் பியூன் அமரமுடியுமா? அமர்ந்தால் என்ன நடக்கும்? கலெக்டரோடு சரிசமமாக அமர்ந்து அந்த பியூன் பேச முடியுமா? அந்த பியூனும் மனிதன்தானே!

இந்த ஏற்றத்தாழ்வு என்பது ஒவ்வொரு காலத்திலும் காலத்துக்குத் தக்க வடிவத்தில் இந்த ஸமுதாயத்தில் இருக்கின்ற இயல்பான நிலை தான். இன்று தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் ஒரு கடைநிலை ஊழியனின் நிலை, மனு சொன்ன ஶூத்ரனின் நிலையை விட மோசமானது என்பதை அந்த ஊழியனிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம். இதெல்லாம் சரியா, தவறா என்பதெல்லாம் வேறு விஷயம். இதுதான் ஸமூஹத்தின் யதார்த்த நிலை. ஸமூஹத்தின் யதார்த்த நிலையைத்தான் நீதி நூல்கள் பிரதிபலிக்கின்றன. அதனால் ஸமூகத்தில் மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு என்ற யதார்த்த நிலையைத் திருவள்ளுவர் அங்கீகரித்திருக்கிறார் என்பதுதான் இந்தக்குறட்பா நமக்குக் கூறும் செய்தி.

மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு என்பது பிறப்பின் அடிப்படையிலானது தான் என்பதற்கும் “பிறப்பொக்கும்” என்ற குறட்பாவே சான்றாக உள்ளது. எப்படியெனில் ஒருவன் செய்யும் தொழில் என்பது அவனது திறமை, அறிவாற்றல், குணம் இவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் திறமை, அறிவாற்றல், குணம் இவை எல்லாம் ஒருவனுக்குப் பிறப்பால் ஏற்படும் பண்புகள். பெற்றோரிடமுள்ள பண்புகள்தான் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் இருக்கும் என்பதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. பெற்றோர் எந்தத் தொழிலில் திறமை உள்ளவர்களோ அந்தத் தொழிலில் தான் அவர்கள் பெற்ற பிள்ளைக்கும் திறமை இருக்கும். தொழில்களில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்குத் தக்கபடியே அந்தத் தொழில்களைச் செய்யும் மனிதர்களுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.

பிறவிக் குணத்தின் அடிப்படையில் ஏற்படும் தொழில் ரீதியிலான பிரிவுகளே அக்காலத்தில் வர்ணம் என்று அழைக்கப்பட்டன. வர்ணம், ஜாதி என்ற சொற்களைத் திருவள்ளுவர் தனது நூலில் பயன்படுத்தவில்லை என்றாலும் அச்சொற்களின் பொருளைக் கொண்ட குலம், குடிமை என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். குலம், குடிமை என்ற சொற்களுக்குத் தற்காலத்தில் உள்ளோர் சிலர் வேறுவிதமாகப் பொருள் கொள்கின்றனர். அவர்கள் எவ்விதமாகப் பொருள் கொண்டாலும் அவர்கள் சொல்லும் பொருளின் அடிப்படையில் பார்த்தாலும் குலம், குடிமை என்பவை ஒருவனது பிறப்பின் அடிப்படையில் ஏற்படும் அடையாளங்களே.

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.”-

என்ற குறளில் தன் அறிவை வளர்த்துக்கொள்ள ஒருவன் எத்தனை நூல்களைப் படித்தாலும் அவனிடம் அவனது இயற்கையான அறிவுதான் மிகுந்து இருக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். இங்குத் திருவள்ளுவர் கூறும் ‘உண்மை அறிவு’ என்பதற்குப் பிறவிக் குணம் என்பதுதான் பொருள். அந்த வகையில் ஒரு தொழிலைச் செய்யத் தகுந்த ஆற்றலும் ஞானமும் பிறவியில்தான் அமைகிறது என்பதால் தொழிலின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு என்பது பிறப்பின் அடிப்படையில் ஏற்படுவதுதான் என்பதே ‘பிறப்பொக்கும்’ என்ற குறட்பாவின் மையக் கருத்து. இதைப் புரிந்துகொள்ளாமல் இக்குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் வர்ண தர்மத்தை எதிர்க்கிறார் என்று கூறுவது அறியாமையாகும்.

ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் மற்றவர்களையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லாமல்,

“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”

என்ற குறளில் அந்தணன் தன் ஒழுக்கத்தை விடலாகாது என்றும் அந்தணனது உயர்வு, அவனது பிறப்பால்தான் என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் திருவள்ளுவர். மனிதர்களுக்கு இடையிலான உயர்வும் தாழ்வும் பிறப்பின் அடிப்படையில் அமைவதில்லை என்பதே திருவள்ளுவரின் கொள்கை என்றால் இக்குறளில் ‘பிறப்பு’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தாமல் ‘சிறப்பு’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதாவது குறளின் இரண்டாவது வரி ‘சிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்றுதான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் திருவள்ளுவர் அப்படி எழுதாமல் ‘பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்று ஏன் எழுதியிருக்கிறார் என்றால் அந்தணன் பிறப்பால் உயர்ந்தவன் என்பதைத் தெளிவுபடுத்தத்தான்.

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வர்ணப் பிரிவுகளில் மற்ற மூவரைப் பற்றிக் குறிப்பிடாமல் அந்தணரின் பிறப்பை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அவசியம் என்னவெனில், மற்ற மூவரும் அந்தணரைப் பின்பற்றியே வாழ்கின்றனர் என்பதாலேதான். மேலும் அந்த மூன்று வர்ணத்தார்கள் தங்கள் ஒழுக்கங்களிலிருந்து தவறினால், அந்தணர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களைத் திருத்திவிடலாம். ஆனால் அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் எப்படி ஒரு கட்டடம் நிலைநிற்காதோ அதைப்போல ஒரு நல்ல ஸமுதாயத்துக்கு அஸ்திவாரமான அந்தணரின் வாழ்வியல் ஒழுக்கம் குன்றினால், அந்த ஸமுதாயம் நிலைகுலைந்துவிடும். அதனால்தான் ஒழுக்கம் பற்றிக் கூறுகின்ற இடத்தில் மற்றவர்களைக் குறிப்பிடாமல் அந்தணரைப் பற்றி மட்டும் குறிப்பிட்டுப்பேசுகிறார். இதை மனதிற்கொண்டுதான் பரிமேலழகர் இக்குறட்பாவிற்கு உரையிடுமிடத்தில் “சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின் இஃது ஏனைய வருணங்களுக்கும் கொள்ளப்படும்”என்று எழுதினார்.

-தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “திருவள்ளுவர் யார்? – 3

  1. முதலில் இவர் தமிழை தேவையில்லாமல் வடமொழி கலந்து எழுதுவதை வைத்தே இவரது மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். இவரைப்போன்ற அரைகுறைகளால் திருவள்ளுவரின் ஞானத்தை புரிந்து கொள்ள முடியாது. வர்ணாசிரமத்தை எப்படியாவது மீண்டும் கொண்டு வந்து விடமுடியாதா அதை வைத்து தங்களை பிறப்பால் உயர்ந்தவர்கள் என ஏமாற்ற முடியாதா என பகல் கனவு காண்கிறார். பாவம் இவர் அறியாமைதான் இவர் எழுத்தில் பளிச்சிடுகிறது. நல்ல மனநல மருத்துவரை அணுகி மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டும்

  2. வணக்கம்!அரைவேக்காடடுத்தனமான இந்தக் கட்டுரைக்கு யாரும் பின்னூட்டம் அளிக்கமாட்டார்கள் என நம்பியிருந்த வேளையில் அன்பர் ஒருவர் பண்பாடான விளக்கத்தைத் தந்திருக்கிறார். கட்டுரையாளர் தமது கட்டுரையில் ‘அடியேன்’ என்று சொல்லிவிடுவதனாலேயே அப்பர் பெருமான் ஆகிவிடமாட்டார். இவர் நம்மை யாரும் மறுக்க மாட்டார்கள் என்னும் அசட்டுத் துணிச்சலில் இதழுக்குக் களங்கம் விளைவிக்கிறார் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். சொல், பொருள், சொற்பொருள்,தொடர்நிலை, வெளிப்பாடடு உத்தி, கருத்துக்களின் வன்மை மென்மை ஆகிய அனைத்திலும் சிறுபிள்ளைத்தனமான போக்கு ஒன்றே காணப்படுகுிறது. வெட்கக்கேடு! எவ்வளவோ அறிஞர்கள் வள்ளுவரை ஆராய்ந்திருக்கிறார்கள். மாறுபட்ட பல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய திருக்குறள் உரையின் முன்னுரையைக் கட்டுரையாளர் படிக்க வேண்டும். அதனை விட்டுப் படிப்பவர்களைப் “புரிந்து கொள்ள் வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும்’ என்றெலலாம் எழுதுவது அறியாமையின் உச்சம்! ஆணவத்தின் எச்சம்!! படைப்புக்களில் வடமொழிப் பயன்பாட்டைத் தொல்காப்பியம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. தமிழுக்கும் வடமொழிக்குமான உறவு நிலை பற்றிய வரலாற்றின் ஒரு துளியைக் கூட கட்டுரையாளர் அறியாமல் சமுதாயத்தை ‘ஸமுதாயம்’ என்று எழுதுவதிலிருந்தே இவர் முடிவுக்குப் பின் ஆராய்கிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிவிடுகிறது.! இத்தகைய பின்னூட்டஙக்ளுக்கு ஏனோ தானோ என்று இவர் விடையிறுத்தால் அதற்கு எங்கைளப் போன்றவர்கள் தரும் விடைகளையும் தணிக்கைசெய்யாமல் வல்லமை வெளியிட வேண்டும் எனப் பணிவன்புடன் வேண்டுகிறேன்!. இந்தக் கட்டுரைத் ;தொடர் முடிந்தபின் எழுதலாம் என்றுதான் இருந்தேன்!. முந்தைய பின்னூடத்து அன்பரை நான் வழிமொழிய வேண்டிய நிலையில் இந்தக் கட்டுரையை ஒரு பண்பாடு குறைவான மனிதரால் பண்பாடு குறைவான வெளிப்பாட்டு உத்தியால் அமைக்கப்பட்டு இருக்கிறது! திருவள்ளுவர் திராவிடர்க் கழக உறுப்பினர் அல்ல!. அவரை அய்யராகவோ அய்யங்காராகவோ வைத்துக் கொள்வதில் யாருக்கும் எந்தத் தடையும் இல்லை.! ஆனால் பண்பாடு என்பது இன்றியமையாத ஒன்று. கடடுரையார் இதனை அறிந்து கொள்வது நல்லது! நன்றி!

  3. வணக்கம்! பின்னூட்டப் பதிவுகளின் எழுத்து, சொல், மற்றும் தொடர்ப்பிழைகள் முதலியவற்றைத் திருத்திக் கொள்ள பின்னூட்டப் பதிவுகளில் தொடர்புடைய பின்னூட்ட அன்பர்களுக்குத் தணிக்கை (EDIT) செய்து கொள்ள வசதிக்காக ஆவன செய்ய வேண்டுகிறேன். அந்த வசதி இப்போது இருந்தால் அதனை விளக்கமாகத் தெரிவிக்கவும் பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *