திருச்சி புலவர் இராமமூர்த்தி

சேதிநன்   னாட்டி   னீடு   திருக்கோவ   லூரின்  மன்னி
மாதொரு  பாக  ரன்பின்   வழிவரு  மலாடர்   கோமான்
வேதநன்  னெறியின்  வாய்மை  விளங்கிட   மேன்மை  பூண்டு
காதலா   லீசர்க்   கன்பர்   கருத்தறிந்   தேவல்  செய்வார்;

பொருள்:

இனி, அடுத்த புராணமாகிய  மெய்ப்பொருள்  நாயனார் வரலாற்றைக் குறித்து சேக்கிழார் பாடும்பாடல்களின் நயங்களைக் காண்போம்

நன்மை பொருந்திய சேதி நாட்டிலே திருக்கோவலூரிலே நிலைபெற்ற அரசு செலுத்தி வாழ்ந்த காலத்தில் உமாதேவியாரை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமானிடத்தில் வைத்த அன்பிலே வழிவழியாக வருகின்ற மலாடர் கோமானாகிய மெய்ப்பொருள்நாயனார், வேத நன்னெறியினது உண்மைத் திறம்  உலகிலே விளக்கமடையும்படி மேன்மை பூண்டவராய் மிக்க அன்பினாலே இறைவனது அடியார்களது கருத்தறிந்து அவர்களுக்கு ஏவல் செய்து வருவாரானார்…

விளக்கம்:

சேதி நன்னாட்டுத் திருக்கோவலூர் – சேதி என்பது  நாட்டின் பெயர். திருக்கோவலூர் என்பது நகரின் பெயர். எனவே, இப்புராணத்திற்குரிய நாடும் நகரமும் கூறியவாறு. நன்னாடு, நீடுதிருக்கோவலூர் என்பன முறையே அவற்றின் சிறப்பைக் கூறுகின்றன. மலாடர்கோமான் அன்பின்வழிவரும்  ஏவல் செய்வார்  என்ற தொடர், அந்நாட்டு மக்கட் சிறப்பும், அரசு மரபுச் சிறப்பும், அரசரும் அவரது பண்பும் என்ற இவற்றை எடுத்துரைக்கிறது.

சேதிநாடு – இது நடுநாட்டின் ஒரு சிறு உட்பகுதியாம் தொண்டைநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் நடுவில் உள்ளதாதலின் நடுநாடு எனப் பெறும். தொண்டைநாடும் அதன் வடக்கில் உள்ள வடநாடும், சோழநாடும் அதன் தெற்கில் உள்ள தென்னாடு எனப் பெறும் பாண்டிநாடும் என்ற பலவற்றுள்ளும் நடுவில் உள்ளது இந்த நடுநாடு என்றலும் பொருந்தும். இந்த நடுநாட்டினுள், வழிவழி வந்த பல சிற்றரசு மரபினர்களால் ஆளப்பெற்ற பல உட்பகுதிகளான சிறு நாடுகள் உண்டு. அவற்றிலே சேதிநாடு ஒன்று. நாட்டினை ஆளும் அரசமரபினர் பேரால் வழங்கும் சோழநாடு, பாண்டியநாடு என்பனபோல, இந்நாட்டினை ஆளும் சேதியர் மரபுப்பேரால் சேதிநாடு எனும் பேரும் வந்தது என்பர். திருவிசைப்பாப் பாடிய சேதிராயர் இம்மரபில் வந்த அரசர்களில் ஒருவர்.  மலாடர் கோமான் – இந்தச் சிற்றரசு மரபு வழியிலே மலையமான், நத்தமான், சுருதிமான் என மூன்று உட்பிரிவினர் உள்ளார் எனவும், அவர்களில் மெய்ப்பொருள்  நாயனார் மலையமான் என்ற பிரிவினைச் சேர்ந்தவர் எனவும் கூறுவர். சோழன் நாடு சோணாடு என வந்ததுபோல, மலையமான்நாடு மலாடு என மருவி வந்ததென்பர். மரூஉ வழக்கிற்கு இலக்கணங்களில் மலாடுஎன்றசொல்லைப்  புலவர் உதாரணங்காட்டுவர்.

திருநாவலூரில் அரசு செலுத்திய நரசிங்கமுனையரைய நாயனார் இம்மூன்றுட்பிரிவுகளில் ஒன்றனைச் சார்ந்தவர் என்று கூறுவாருமுண்டு. சுருதிமான் மரபினர்க்கு மூப்பர் என்ற பேரும் உண்டென்பர். முனையதரையர் என்பதே முனையரையர் என்றாயிற்றென்றும், அம்மரபும் இவற்றுடன் விரவியதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுப. இவற்றின் விரிவெல்லாம் சரித்திர ஆராய்ச்சி செய்வோர்   காணலாம்.

நீடு திருக்கோவலூர் – திரு நீடு கோவலூர் என மாற்றியுரைத்துக்கொள்க. திரு என்பது,  கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்பர் பேராசிரியர்.

கோவலூர் – சிவபெருமான் வீரஞ்செய்த எட்டுத் தலங்களுள் ஒன்றாய் அந்தகாசுரனைச் சங்கரித்த தலம். இதனைத் திருக்கு -ஓவல் – ஊர் – எனப் பிரித்து அறியாமையை ஒழித்து உயிர்களுக்கு அருள் புரியும் தலம் என்று தலமான்மியம்  கூறும். எனவே உயிர்களுக்கு ஊனத்தை நீக்கி அருளும் தன்மை நீடிய ஊர் என்பதுபொருள்.

மன்னி – இவ்வரச மரபு நெடுங்காலமாக நிலைபெற்று வழிவழி இந்நகரைத் தமது தலைநகராகக் கொண்டு அரசளித்தது என்பதாம்.

அன்பின் வழிவரும் – இரு மரபிலேயும் சிவனடியார்களான பரம்பரையில் வழி வழி வந்த சைவ மரபினர் என்க.

“வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த, பழவடியார்“  என்பது திருமுறை. மாதொரு பாகர் அன்பின் வழிவரும் – பல பிறவிகளிலேயும் சிவனுக்கு அன்பு செய்த வழி எனவும், சிவன் வைத்த அருளின் மூலவழியிலே வந்த எனவும்  இருவழியும் உரைக்க நின்றது.

வேத நன்னெறியின் வாழ்மை விளங்கிட மேன்மை பூண்டு – சித்தாந்த சைவம் வேத நெறிகளையெல்லாம் தன்னுள்ளே அங்கமாய் அடங்கத் தான் இவற்றுள் அடங்காது முழுமுதற் றன்மை பெற்று விளங்குவது.

“வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறைவிளங்க“ என்று திருஞானசம்பந்தர்  புராணம் கூறும் . வேதத்திற் சொல்லிய பலவுங் சைவத்தின் அங்கமாவன. அங்கங்கள் விளங்கவே முழுமையும்  விளங்குவதாம். “வேதமோது நெறியினான் வீரட்டானம்“ என்பது இத்தலத் தேவாரம்

வேதநெறி என்னாது வேத நன்னெறி எனவும், அதனோடமையாது வேத நன்னெறியின் வாய்மை எனவும்  கூறியது,  வேதங்களின் உள்ளுறை உண்மையான சைவத்திறத்தினைக் குறித்தது. “வேத உள்ளுறையாவன“ அரனடியார் பூசையும், அரன் பூசையுமே எனத் திருநீலநக்க நாயனார் புராணம் கூறுகிறது.

வேதநெறி விளங்கிட மேன்மை பூண்ட இவ்வரசர் பொதுப்பட அதனுள் விதித்த எல்லா அறங்களையும் கடைப்பிடித்தனரேனும், தாம் காதலால் ஈசர்க்கன்பர் கருத்தறிந்து ஏவல் செய்வாராயினார் என்றதாம். அரசராதலின் எல்லா அறங்களையும் காக்குங் கடப்பாடுடையவர் ஆயினும், அவற்றின் உண்மைநிலையினைத் தம் ஒழுக்கத்திலே வைத்து உலகில் நடந்து காட்டினார் என்பது. ‘விளங்கிட’ என்ற சொல், தாம் நிற்பதனோடு உலகினையும் நிறுத்தும் பொருட்டு  விளங்கச் செய்ய என்பதைக் குறிக்கிறது.

காதலால் – ஆசையினாலே. பிறிதோர் பயன் கருதாது உள்ளெழுந்த ஆசையே காரணமாக. ஈசர்க்கன்பர் கருத்தறிந்து – அவர் கருதியவற்றை, அவர்கள் சொல்லாமல் தாமே குறிப்பின் அறிந்துஏவல்  செய்ததைக் குறித்தது

ஆகவே இப்பாடல்  சேதிநாட்டின், திருக்கோவலூரில் வாழ்ந்து, ஈசனடியார் கருத்தறிந்து தொண்டு புரிந்த  மெய்ப்பொருள்நாயனார்  என்ற அடியாரின் சிறப்பை அறிமுகம் செய்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.