புதுக்கோட்டை பத்மநாபன்

திருவள்ளுவர் கூறும் ஒழுக்கம் என்பது, அவரவரின் வர்ணத்திற்குரிய ஒழுக்கம்தான்.

“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”

இந்தக் குறட்பா, ஓர் அந்தணனுக்கு அறிவுரை சொல்வதுபோல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓதல் முதலிய ஆறு தொழில்களே அந்தணருக்கு உரியவை. திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அந்தணர்களில் சிலர் தங்களது அறுதொழிலை விட்டுவிட்டு, அத்தொழில்களுக்கு அடிப்படையான வேதத்தையும் மறந்துவிட்டு, வேறு தொழில்களை நாடிச் சென்றிருக்கின்றனர். வேள்வி முதலிய வைதிக கர்மங்களை விட்டுவிட்டு வேறு தொழில் செய்பவர்களை ‘வேளாப் பார்ப்பான்’ என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகச் சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அந்த வகை அந்தணர்களை நோக்கித்தான் இந்தக் குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் அறிவுரை கூறுகிறார்.

வேதத்தை அந்தணர் மறக்கலாகாது. அந்தணர்களின் அறு தொழில்களுக்கு அடிப்படையே வேதம்தான். வேதம் மறந்து போய்விட்டால் அவர்கள் தங்களது தொழிலைச் செய்ய முடியாது. வேதம் நினைவில் இருக்க வேண்டுமானால் தங்களது அறுதொழில்களையும் அவர்கள் செய்து கொண்டிருக்க வேண்டும். தங்கள் தொழிலைச் செய்ய முடியாத நிலையில் ஜீவனத்துக்காக அவர்கள் வேறு தொழிலை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. அப்படி வேறு தொழிலை நாடிச் செல்லும் அந்தணர்களை நோக்கித்தான் திருவள்ளுவர், இக்குறட்பாவின் மூலம் அறிவுரை கூறுகிறார். அதாவது, “நீங்கள் வேதத்தை மறந்து விட்டாலும் மறுபடி கற்றுக்கொள்ளலாம். ஆனால் வேதம் மறந்து போய்விட்டது என்பதற்காக நீங்கள் வேறு தொழிலை நாடிச் சென்றால் அத்தொழிலுக்கு உரிய பழக்க வழக்கங்கள் உங்களைப் பற்றிக் கொண்டுவிடும். உங்களது ஒழுக்கம் போய்விடும். அதனால் உங்கள் உயர்வு கெட்டுப் போய்விடும். பிறப்பால் அமைந்த உங்களது சிறப்பை இழந்துவிடுவீர்கள். ஆகவே வேறு தொழிலை நாடிச் செல்லாதீர்கள்”என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

எல்லாக் காலங்களிலுமே அறுதொழில் செய்யும் அந்தணரை சமூஹம் உயர்ந்த இடத்தில் வைத்துத்தான் மதித்திருக்கிறது. அறுதொழில் செய்யும் அந்தணரை அரசனே வணங்கியிருக்கிறான் என்று சங்க இலக்கியம் சொல்கிறது. ஆனால் ஜீவனத்துக்காகத் தன் தொழிலை விட்டுவிட்டுத் தாழ்ந்த தொழிலைச் செய்யும் அந்தணருக்கு அவரது பிறவிக்குரிய மரியாதை கிடைப்பதில்லை. வேள்வி செய்யும் பார்ப்பானுக்குக் கிடைக்கும் மரியாதை, சங்கறுத்து வளையல் வியாபாரம் செய்யும் பார்ப்பானுக்குக் கிடைக்காது. வேறு தொழிலை நாடிச் சென்றாலும் தன் பிறவிக்குத் தாழ்வு ஏற்படுத்தும் தொழிலை நாடி ஓர் அந்தணன் செல்லக் கூடாது. தான் பிறருக்கு அறிவுரை கூறும் அளவிற்குத் தலைமைத் தன்மை உள்ள தொழிலைத்தான் அந்தணன் எப்போதும் செய்யவேண்டும். தன் தகுதிக்குத் தாழ்ந்த தொழிலைச் செய்தால் அத்தொழிலுக்குரிய தாழ்ந்த ஒழுக்கங்கள் அவனைப் பற்றிக்கொண்டு அவனது அந்தணத் தன்மையைப் போக்கிவிடும். இந்தக் குறட்பாமூலம் வர்ண தர்மத்தை சிறப்பாக ஆதரிக்கிறார் திருவள்ளுவர்.

அந்தணர்கள் வேதத்தை ஏன் மறக்கிறார்கள் என்றால் அதற்கும் திருவள்ளுவரே காரணம் கூறுகிறார். ‘ஆபயன் குன்றும்’ என்ற குறட்பாவில் அரசன் நல்லாட்சி புரியாத நாட்டில், அந்தணர்கள் வேதத்தை மறந்துவிடுவார்கள் என்று கூறுகிறார். அதாவது ஓர் அரசன், அந்தணர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் முதலிய சௌகர்யங்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை மதித்து ஆதரித்துப் பாதுகாக்க வேண்டும். அப்படி அரசனால் கௌரவிக்கப்படும் அந்தணர்கள், தங்களுக்குரிய அறுதொழில்களைச் செய்துகொண்டு ஜீவனம் செய்வார்கள். அரசன் அவர்களை இம்முறையில் ஆதரிக்கவில்லை என்றால் அவர்கள் தங்கள் தொழிலை விட்டுவிட்டு ஜீவனத்துக்காக வேறு தொழிலை நாடவேண்டிய சூழ்நிலை தான் ஏற்படும். வேறு தொழிலில் வேதத்தின் தேவை இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக வேதத்தை அவர்கள் மறந்துவிடுவார்கள். அதனால்தான், ‘காவலன் காவான் எனின் அறுதொழிலோர் நூல் மறப்பர்’ என்கிறார். எனவே தான் அந்தணர்களைப் பாதுகாப்பது அரசனுடைய கடமை என்கிறார்.

அந்தணரின் அறுதொழிலின் சிறப்பையும் அவர்களது பண்பட்ட வாழ்க்கை முறையின் சிறப்பையும் எடுத்துக் காட்டத்தான் மற்றவர்களின் தொழில்களைப் பற்றி எல்லாம் பேசாமல், நல்லாட்சியில்லாத நாட்டில் அந்தணர்கள் தங்கள் தொழிலை விட்டுவிடுவார்கள் என்று கூறினார். அரசன் எல்லோரையும் பாதுகாக்க வேண்டியவன் என்றாலும் குறிப்பாக அந்தணரை அவன் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னது அந்தணரின் பெருமை கருதியே.

திருவள்ளுவர் தன் வாழ்நாளில் ஒரு கொடுங்கோல் அரசனையும் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது என்பதை இதனால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கொடுங்கோலனின் ஆட்சிக் காலத்தில் இருந்த அந்தணர்கள், தங்களை அரசன் முறைப்படி ஆதரிக்காததால் தங்கள் தொழிலை விட்டுவிட்டனர். அதனால் அவர்களுக்கு வேதம் மறந்துபோய்விட்டது. அந்த நிலையில் அவர்கள் வேறுதொழிலை நாடிச் செல்ல நினைத்த போதுதான் அவர்களுக்குக் கூறும் அறிவுரையாக ‘மறப்பினும் ஓத்துக்கொளலாகும்’ என்ற குறட்பாவை எழுதினார் திருவள்ளுவர்.

“அந்தணர்களே! அரசன் உங்களை ஆதரிக்காததால் உங்கள் தொழிலைக் கைவிட்ட நீங்கள் அத்தொழிலுக்கு ஆதாரமான வேதத்தையும் மறந்து விட்டீர்கள். நீங்கள் கற்ற வேதத்தை மறந்துவிட்டாலும் திரும்பக் கற்றுக் கொள்ளலாம். மறந்து போய்விட்டதே என்று கவலைகொள்ள வேண்டாம். அந்த வேதம் உங்களுக்கு என்றும் பாதுகாப்புத் தரும். ஆனால் ஜீவனம் போய்விட்டதே என்பதற்காக வேறு தொழிலுக்குப் போய்விடாதீர்கள். வேறு தொழிலுக்கு நீங்கள் சென்றால் அத்தொழிலுக்குரிய பழக்கவழக்கங்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் வர்ண ஒழுக்கம் குறைந்துவிடும். அதனால் உங்களது உயர்வு கெட்டுப் போய்விடும்” என்பதுதான் திருவள்ளுவர் அந்தணர்களுக்கு கூறும் அறிவுரை.

ஜீவனத்துக்காக அந்தணர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் தகுதிக்குப் பொருந்தாத தொழிலைச் செய்யக்கூடாது என்பதும், தங்களது பெருமைக்குக் குறைவு ஏற்படுத்தாத தொழிலைத்தான் எப்போதும் அவர்கள் செய்யவேண்டும் என்பதும் இதனால் தெளிவாகிறது. ”சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”என்ற இடத்தில் தொழில்களில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும் காட்டிவிட்டார் திருவள்ளுவர். அதனால் திருவள்ளுவர், வர்ண தர்மத்தை முழுக்க முழுக்க ஆதரித்த ஒரு வைதிகர் என்பது தெளிவாகிறது.

உயர்ந்த குலத்தில் பிறந்த ஒருவனிடம் உயர்ந்த குணம்தான் இருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் இவ்விஷயம் மாறுபட்டுக் காணப்படுகிறது. அதாவது நடைமுறையில் சில இடங்களில் உயர்ந்த குலத்தில் பிறந்தவனிடம் இழிவான குணங்களும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவனிடம் உயர்ந்த குணங்களும் காணப்படுகின்றன. இவ்விஷயம் குறித்தும் விளக்குகிறார் திருவள்ளுவர்.

“மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு”

“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழ்அல் லவர்”

என்ற குறட்பாக்கள் மூலம் கல்வி ஞானம், ஒழுக்கம், நற்பண்பு இவையெல்லாம் மேற்குலத்தில் பிறந்தவனிடம் இல்லையென்றால் அவன் மேற்குலத்தில் பிறந்தவனாகக் கருதப்படமாட்டான் என்றும் மேற்படி விஷயங்கள் கீழ்க்குலத்தில் பிறந்தவனிடம் காணப்பட்டால், அவன் கீழ்குலத்தில் பிறந்தவனாகக் கருதப்படமாட்டான் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர். மேற்குலத்தில் பிறந்தவனிடம் கல்வி, ஞானம் முதலிய நற்பண்புகள் இல்லாமற் போவதற்கும் கீழ்க்குலத்தில் பிறந்தவனிடம் அந்த நற்பண்புகள் காணப்படுவதற்கும் என்ன காரணம் என்றால் அதற்கும் அவரே பதிலளிக்கிறார். குடிமை என்ற அதிகாரத்தில்,

“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்”

என்று ஒரு குறட்பா இடம்பெறுகிறது. உயர்ந்த குலத்தில் பிறந்த ஒருவனிடம் நற்பண்பு காணப்படாவிட்டால் அவனது பிறப்பு சந்தேகத்துக்குரியது என்பது இக்குறட்பாவின் கருத்து.

“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.”

என்பது அதற்கு அடுத்த குறட்பா. நிலத்தின் தன்மையை அந்நிலத்தில் முளைத்து வரும் முளையை வைத்து நாம் அறிந்துகொள்வது போல ஒருவன் உயர்குலத்தில் பிறந்தவன் என்பதை அவனது வாய்ச்சொல் காட்டிவிடும் என்பது இக்குறட்பாவின் கருத்து. அதாவது நல்ல நிலத்தில் நல்ல விதையை விதைத்தால் நல்ல பயிர் உருவாகும். கெட்ட நிலத்தில் நல்ல விதையையோ நல்ல நிலத்தில் கெட்ட விதையையோ விதைத்தால் விளையும் பயிர் நல்ல பயிராக இருக்காது. இதுதான் திருவள்ளுவர் சொல்ல வரும் விஷயம்.

மஹாபாரதம் வனபர்வத்தில் தர்மராஜரான யுதிஷ்டிரருக்கும் ஒரு மலைப் பாம்புக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் சொல்லப்படுகிறது. அவ்வுரையாடலில் தர்மராஜர் “அந்தணனாகப் பிறந்த ஒருவனிடம் நான்காம் வருணத்தவனுக்குரிய குணங்களும் பழக்கவழக்கங்களும் காணப்பட்டால் அவன் அந்தணனாகமாட்டான். நான்காம் வர்ணத்தில் பிறந்த ஒருவனிடம் அந்தணனுக்கு உரிய குணங்களும் நடவடிக்கைகளும் காணப்பட்டால் அவன் நான்காம் வர்ணத்தவன் ஆகமாட்டான்” என்று கூறுகிறார். அதைக் கேட்ட அந்த மலைப்பாம்பு “ஒழுக்கத்தினால் தான் ஒருவன் அந்தணன் என்று சொல்லப்படுவான் என்றால் அந்தணனுக்குரிய ஒழுக்கம் இல்லாதபோது ஜாதி பயனற்றதாகிவிடுமே” என்று கேட்டது. அதற்கு தர்மராஜர், “ஆம், இந்த மானிட ஜாதியில் தற்காலத்தில் வர்ணபேதமின்றி ஆண்களும் பெண்களும் உறவு வைத்துக்கொள்வதால் அதற்குத் தக்கபடி அவர்களுக்குக் குழந்தைகளும் பிறக்கின்றன. ஆகவே, வர்ணக் கலப்பு ஏற்படுவதால் எல்லாவிதத்திலும் ஜாதி ஆய்வு செய்யத்தகாது என்பது என் கருத்து. இவ்விஷயத்தில் ஆசாரத்தையே (ஒழுக்கம்) பிரதானமாகக் கொள்ளவேண்டும் என்று தத்துவமறிந்தோர் கூறுகின்றனர்” என்று பதிலளிக்கிறார்.

கல்வி ஞானமும் உயர்ந்த ஒழுக்கங்களும் இல்லாத ஒருவன் உயர்ந்த குலத்தில் பிறப்பதற்கும் கல்வி ஞானமும் உயர்ந்த ஒழுக்கங்களும் உள்ள ஒருவன் தாழ்ந்த குலத்தில் பிறப்பதற்கும் குலக் கலப்பே காரணமென்கிறார் தர்மராஜர். இதைத்தான் “நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்” என்ற குறட்பா மூலம் திருவள்ளுவரும் சொல்கிறார். உயர்ந்த குலத்தவனான ஓர் அந்தணனுக்கு மூடனும் துர்புத்தி உள்ளவனுமான ஒரு பிள்ளை பிறப்பதற்கும், தாழ்ந்த குலத்தவனுக்கு நற்பண்புகளும் கல்வி ஞானமும் நிறைந்த ஒரு பிள்ளை பிறப்பதற்கும் நிலம், விதை இவற்றின் தன்மைதான் காரணம் என்று திருவள்ளுவரும் தர்மராஜரும் சொல்கிறார்கள். இவ்விடத்தில்,

वाङ्मैथुनमथो जन्म मरणम् च समम् नृणाम् (வாங்மைதுநமதோ ஜந்ம மரணம் ச ஸமம் ந்ருணாம்) என்று தர்மராஜர் சொன்னதையே திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறார். ஆகவே சில அம்சங்களில் பிறப்பு எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும், ஒருவனுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனுடய பிறப்பே காரணமாகிறது என்று கூறுவதால் திருவள்ளுவர், வர்ணக் கலப்பை ஆதரிக்காத ஸநாதன வைதிகர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

-தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *