Blog

  • நிர்மலா ராகவனின் சின்னஞ்சிறு காதலர்கள்

    நிர்மலா ராகவனின் சின்னஞ்சிறு காதலர்கள்

    அண்ணாகண்ணன்

    ஆசிரியரையே காதலிக்கும் மாணவர்களை நாம் திரைப்படங்களில், கதைகளில் கண்டிருப்போம். நிஜத்திலும் சிலர் உண்டு. அப்படி மாணவர்களின் காதலுக்கு உரியவர், நிர்மலா ராகவன். மலேசியாவில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தம் சின்னஞ்சிறு காதலர்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • (Peer Reviewed) வினாச் சொற்கள் சிலவற்றின் தொடரியற் பண்புகள்

    (Peer Reviewed) வினாச் சொற்கள் சிலவற்றின் தொடரியற் பண்புகள்

    தி. மோகன்ராஜ்
    முனைவர்ப் பட்ட ஆய்வாளர்
    இலக்கியத்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்
    mohr_d12@yahoo.co.in

    ஆய்வுச் சுருக்கம்

    வினா வாக்கியங்கள் மொழியாய்வில் தனியாகப் பகுத்து ஆராயப்படும் சிறப்புடையவை. வினா வாக்கியங்கள் அவற்றின் அமைப்பு நோக்கில் இரண்டாக வகுக்கப்படும். ஆம்-இல்லை வகை வினா வாக்கியங்கள் என்றும் வினாச் சொற்களை உள்ளடக்கிய வினா வாக்கியங்கள் என்றும் அவை வழங்கப்பெறும். இரண்டாம் வகை வினாக்களை எவன், எவள், எவர், யார், எது, எங்கு/எங்கே, எதனால், எத்தனை, என்ன போன்ற வினாச் சொற்களைக் கொண்டு உருவாக்கலாம். அவ்வாறு பயன்படும் வினாச் சொற்கள் சில தொடரியல் நிலையில் குறிப்பிடத்தகுந்த பண்புகளை உடையனவாக விளங்குகின்றன. அப்படிப்பட்ட வினாச் சொற்கள் சிலவற்றின் தொடரியற் பண்புகளை விளக்குவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

    முக்கியச் சொற்கள்

    வினா வாக்கியங்கள், வினாச் சொற்கள், தொடரியற் பண்புகள்.

    வினா வாக்கியங்கள்

    மொழியின் துணைக்கொண்டு நிகழ்த்தப்படும் உரையாடல்கள் யாவற்றையும் செப்பு அல்லது வினா என்னும் இருபிரிவிற்குள் அடக்க இயலும். ‘உலகத்துப் பொருளுணர்த்தும் சொல் எல்லாம் வினாவும் செப்பும் ஆகிய பொருள்மேல் நிகழ்தலின்’ என்பர் தெய்வச்சிலையார்.1 எனவே, மொழியாய்வில் வினா வாக்கியங்கள் தனியாகப் பகுத்து ஆராயப்படும் சிறப்பினை உடையவை. தமிழ் மொழிக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியமும் வினா வாக்கியங்கள் பற்றியும் அவற்றை உருவாக்கும் வினாச் சொற்கள் பற்றியும் பல இடங்களில் விளக்கியுள்ளது. வினாவும் அதற்கான செப்பாகிய விடையும் எவ்வாறு அமையலாம் என்று தொல்காப்பியக் கிளவியாக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது(தொல்.சொல்.13-16). அந்நூற்பாக்கள் தமிழ்மொழிக்கு மட்டுமன்றி உலக மொழிகள் யாவற்றுக்கும் பொதுவான விதிகளாக அமைபவை. மேலும், வினாச் சொற்களான யாவன், யாவள், யாவர் போன்றவற்றைப் பற்றியும் அவ்வவ்விடங்களில் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது.

    வினா வாக்கியங்களின் வகைகளைப் பற்றித் தொல்காப்பியம் வெளிப்படையாக எதையும் குறிப்பிடவில்லை. எனினும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் பல்வேறு வகைகளாக வகுத்துள்ளனர். உரையாசிரியர்களின் வகைப்பாட்டை அட்டவணை 1’இல் காணலாம்.

    உரையாசிரியர்கள் வினா வகைகள்
    இளம்பூரணர் (5 வகை) அறியான் வினாதல், அறிவு ஒப்புக் காண்டல், ஐயம் அறுத்தல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக் காட்டல்
    சேனாவரையர் (3 வகை) அறியான் வினா, ஐய வினா, அறிபொருள் வினா
    தெய்வச்சிலையார் வகைப்படுத்தவில்லை
    நச்சினார்க்கினியர் (3 வகை) அறியான் வினா, ஐய வினா, அறிபொருள் வினா
    கல்லாடனார் (5 வகை) அறியான் வினாதல், அறிவு ஒப்புக் காண்டல், ஐயம் அறுத்தல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக் காட்டல்
    ஒருவர் (5 வகை) அறியான் வினாதல், அறிவு ஒப்புக் காண்டல், ஐயம் அறுத்தல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக் காட்டல்

    அட்டவணை 1 :தொல்காப்பிய உரையாசிரியர்களின் வினா வகைகள்

    பிற்கால இலக்கண நூல்களும் இதே அமைப்பில் வினாக்களை வகைப்படுத்தியுள்ளன. சான்றாக, நன்னூல்,

                            அறிவுஅறியாமை ஐயுறல் கொளல்கொடை
                            ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார் (நன்.385)

    என்று ஆறு வகைகளாகப் பகுத்துள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர்களும் தமிழ் இலக்கண நூல்களும் வினவுவாரின் நோக்கத்தை அடிப்படையாக வைத்தே வினாக்களை வகைப்படுத்தியுள்ளன. வினாக்களின் மொழியமைப்பினை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடு மேற்கொள்ளப்படவில்லை. எனினும், மொழியியல், வினாக்களை அவற்றின் அமைப்பினைக்கொண்டு இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது.2 அவை,

    1. ஆம் – இல்லை வகை வினாக்கள் (Yes-No Type)

    2. வினாச் சொற்களை உள்ளடக்கிய வினாக்கள் (wh-type)

    1. ஆம் – இல்லை வகை வினாக்கள் (Yes-No Type)

    ஆம்-இல்லை வகை வினாக்கள் வினவப்பட்டார் ஆம் அல்லது இல்லை என விடை தரும் வகையில் அமைபவை. இடைச்சொற்களின் துணைக்கொண்டோ ஒலிக்கப்படும் முறையிலோ தமிழில் இவை உருவாகின்றன. தொல்காப்பியம் வெளிப்படையாக வினாக்களின் அமைப்பினை விளக்கவில்லை எனினும் ஆ, ஏ, ஓ ஆகிய மூன்று ஒலிகளையும் வினா ஒலிகளாகத் தனித்துச் சுட்டியுள்ளது(தொல்.எழுத்.32). இம்மூன்று ஒலிகளும் இடைச்சொற்களாக அமைந்து ஆம்-இல்லை வகை வினாக்களை உருவாக்குபவை. மேலும் ஆ மற்றும் ஓ ஆகிய இடைச்சொற்கள் வினாப் பொருளில் வருபவையாக இடையியலிலும் குறிப்பிடப்பட்டுள்ளன(தொல்.சொல்.251-252). எனவே, அமைப்பு நிலையிலான வேறுபாடு தொல்காப்பியத்தில் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

    தற்கால எழுத்துத் தமிழில் ஆ மற்றும் ஓ ஆகிய இரண்டும் ஆம்-இல்லை வகை வினாக்களை உருவாக்கும் இடைச்சொற்களாகப் பயன்படுகின்றன.

    1. ஆசிரியர் வந்தாரா?
    2. ஆசிரியர் வந்தாரோ?

    இடைச்சொற்களே அன்றி ஒலிப்பு முறையாலும் ஆம்-இல்லை வகை வினாக்கள் உருவாக்கப்படுகின்றன.

    1. ஆசிரியர் வந்தார்?

    என்னும் வாக்கியத்தில் வெளிப்படையாக வினாவினைக் குறிக்கும் இடைச்சொற்கள் இல்லையெனினும் ‘வந்தார்’ என்னும் சொல்லின்கண் வழங்கப்படும் ஒலி அழுத்தம் அந்த வாக்கியத்தை வா.1 மற்றும் வா.2’இன் பொருளில் வரும் வினாவாக மாற்றிவிடும்.

    2. வினாச் சொற்களை உள்ளடக்கிய வினாக்கள் (wh-type)

    வினாச்சொற்களான எவன், எவள், எவர், என்ன, எந்த, எங்கு/எங்கே, எத்தனை, எவ்வளவு, ஏன், ஏது, யார் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் வினா வாக்கியங்கள் இவ்விரண்டாம் வகையில் அடங்கும். இவ்வினாக்களுக்கு ஆம்-இல்லை என்று பதில் கூற இயலாது. ஏதேனும் ஒரு நபரையோ பொருளையோ இடத்தையோ எண்ணையோ இன்ன பிறவற்றையோ இவ்வகை வினாக்கள் விடையாக ஏற்கும். இந்த நிலையில்தான் இவை ஆம்-இல்லை வகை வினாக்களிலிருந்து வேறுபடுகின்றன.

    இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள வினாச் சொற்கள் யாவும் தற்கால எழுத்துத் தமிழில் பயன்படுபவை. இக்கட்டுரை இந்த வினாச் சொற்கள் சிலவற்றில் காணப்படும் மாறுபட்ட தொடரியல் பண்புகளை ஆய்ந்து விளக்குகிறது. அவையாவன,

    1. எங்கு/எங்கே?

    2. எதனால்?

    3. எத்தனை?

    4. என்ன?

    1. எங்கு/எங்கே?

    எங்கு என்னும் சொல்லும் எங்கே என்னும் சொல்லும் இடப்பொருளில் வரும் வினாச்சொற்கள் ஆகும். சொல்லமைப்பில் எங்கே என்பது எங்கு என்னும் சொல்லை உள்ளடக்கிய சொல்லாகும்.

    எங்கே → எங்கு + ஏ

    இவை இரண்டும்  ஓர் இடத்தை விடையாக ஏற்பவை. இரண்டும் வினா வாக்கியங்களில் உறழ்ச்சி நிலையில் இடம்பெறுவன. அதாவது, எங்கே இடம்பெறும் வாக்கியத்தில் எங்கு என்பதையும் பயன்படுத்தலாம்.

    1. ஆசிரியர் எங்கே சென்றார்?
    2. ஆசிரியர் எங்குச் சென்றார்?

    வா.4 மற்றும் வா.5 ஆகிய இரண்டும் ஒரே பொருளில் வந்துள்ள வினா வாக்கியங்கள். இந்நிலையில்தான் எங்கே மற்றும் எங்கு ஆகிய இரண்டும் உறழ்ச்சி நிலையில் வாக்கியத்தில் இடம்பெறுவன என்று விளக்கப்படுகின்றன.

    வினைமுற்று இல்லாமலும் இவ்வகை வினா வாக்கியங்கள் அமையும். அவ்வாறு  அமையும் வினா வாக்கியங்களில் எங்கே என்னும் சொல் மட்டுமே பயன்படுகிறது. எங்கு என்னும் சொல்லை இந்த வகை வாக்கியங்களில் பதிலீடு செய்யமுடிவதில்லை.

    1. ஆசிரியர் எங்கே?
    2. * ஆசிரியர் எங்கு? – இது பிழையான வாக்கியமாகும்.

    இவ்வாறு வினைமுற்று இல்லாமல் வரும் வினா வாக்கியங்கள் எல்லா வகை வினைகளுக்கும் பொருந்துவதில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தகுந்தது. செல்லுதல், இருத்தல், போதல் போன்ற தொழில்கள் இறந்த காலத்தில் அல்லது நிகழ்காலத்தில் இருக்கும் நிலையில் மட்டுமே இவ்வாறான வினா வாக்கியங்கள் உருவாகின்றன.

    1. ஆசிரியர் எங்கே சென்றார்? என்னும் வினா வாக்கியத்தை
    2. ஆசிரியர் எங்கே?

    என்றும் வழங்கலாம். ஆனால்,

    1. ஆசிரியர் எங்கே விழுந்தார்? என்னும் வினா வாக்கியத்தை
    2. * ஆசிரியர் எங்கே?

    என்று வழங்கமுடியாது.

    1. ஆசிரியர் எங்கே/எங்கு இருக்கிறார்?
    2. இங்கிருந்த வண்டி எங்கே போனது?

    போன்ற வாக்கியங்களை வினைமுற்று இல்லாமல்,

    1. ஆசிரியர் எங்கே?
    2. இங்கிருந்த வண்டி எங்கே?

    என்றும் வழங்கலாம்.

    எங்கு, எங்கே ஆகிய இரண்டு வினாச் சொற்களும் வினைமுற்றை வெளிப்படையாகக் கொண்டுள்ள வினா வாக்கியங்களில் உறழ்ச்சி நிலையில் வருவன என்றும் வினைமுற்று வெளிப்பட வாரா வினா வாக்கியங்களில் எங்கே என்பது மட்டுமே பயன்படும் என்றும் வெளிப்பட வாரா அமைப்பு எல்லா வகை வினைமுற்றுகளுக்கும் பொருந்தாது என்றும் இதன்வழி அறியலாம்.

    2. எதனால்?

    எதனால் என்னும் வினாச் சொல் தொடரியல் நிலையில் இரண்டு பொருள்களில் வருகின்றது. எனவே, இதன் தொடரியல் பண்பு இங்கு விளக்கப்படுகிறது.

    இது மூன்றாம் வேற்றுமையை உணர்த்தும் ‘ஆல்’ உருபினை ஏற்று வந்துள்ள வினாச்சொல் ஆகும். எனவே, இவ்வினாச் சொல் எந்தப் பொருளால்/கருவியால் என்று கருவியை நோக்கிய வினாவாகவும் எந்தக் காரணத்தால் என்று காரணத்தை நோக்கிய வினாவாகவும் இரண்டு பொருள்களில் வருகிறது. இவற்றை முறையே நச்சினார்க்கினியர் காரகக் கருவி என்றும் ஞாபகக் கருவி என்றும் வகைப்படுத்தியுள்ளார்.3

    1. அவர் மரத்தை எதனால் வெட்டினார்? – (கோடரியால்)
    2. அவர் மரத்தை எதனால் வெட்டினார்? – (வீட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியதால்)

    வா.16 கருவியை எதிர்பார்த்துக் கேட்கப்பட்ட வினாவாகவும் வா.17 காரணத்தை எதிர்பார்த்துக் கேட்கப்பட்ட வினாவாகவும் அமைந்துள்ளன. எனினும், அமைப்பு நிலையில் இவை இரண்டிற்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றிலக்கணத் தொடரியல் பின்னணியில் இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. வா.16’இன் பொருளில்,

    1. எது மரத்தை வெட்டியது? (கோடரி)

    என்னும் வினா வாக்கியத்தையும் உருவாக்கலாம். மாற்றிலக்கண முறைப்படி இதன் வருகையைப் பின்வருமாறு விளக்கலாம்.

    அவர் மரத்தை எதனால் வெட்டினார்? à மரம் எதனால் வெட்டப்பட்டது?(வினைமுதல் நீங்கிச் செயப்பாட்டுவினையாக மாறுதல்) à எது மரத்தை வெட்டியது? (மூன்றாம் வேற்றுமையில் உள்ள கருவி எழுவாய் நிலையை அடைதல்)

    ஆனால், வா.17’இன் பொருளில்,

    1. *எது மரத்தை வெட்டியது? (வீட்டிற்கு இடையூறு)

    என்னும் வினாவினை உருவாக்கமுடியாது. இதுவே இவற்றுக்கு இடையிலான வேறுபட்ட தொடரியல் பண்பாகும்.

    3. எத்தனை?

    எத்தனை என்னும் வினாச் சொல்லில் இரண்டு வகையான தொடரியல் பண்புகள் காணப்படுகின்றன. அவை

    அ. பெயருக்குப் பின்னர் வருதல்

    ஆ. பெயர் இல்லமால் தனித்து வருதல்

    . பெயருக்குப் பின்னர் வருதல்

    பொதுவாக எத்தனை என்னும் வினாச் சொல் ஒரு பெயருக்கு அடையாக நின்று ஒரு குறிப்பிட்ட எண்ணை/ எண்ணிக்கையை விடையாக எதிர்பார்த்து நிற்கும். அகராதிகளும் எத்தனை என்னும் சொல்லை பெயரடை என்னும் பொருளில் ‘Adjective’(Tamil Lexicon) என்றும் குறிப்புப் பெயரெச்சம்(செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி) என்றும் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்தச் சொல் பெயருக்கு அடையாக வரும் என்னும் கருத்தே ஏற்கப்பட்டுள்ளது.

    1. எத்தனை மாடுகள் வந்தன?

    வா.20’இல் எத்தனை என்னும் சொல் பெயருக்கு முன்னர் அடையாக நிற்கின்றது. எனினும், பெயருக்குப் பின்னரும் இந்தச் சொல்லை நிறுத்தி எந்தப் பொருள் மாற்றமும் இன்றி வினா வாக்கியத்தை உருவாக்கலாம்.

    1. மாடுகள் எத்தனை வந்தன?

    பெயரடைகள் தற்காலத் தமிழில் பெயருக்கு அடுத்ததாகவும் வருகின்றன என்று செ.வை.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.4 அக்கருத்திற்குச் சான்றாக,

    ஒரு மாணவன் – மாணவன் ஒருவன்; ஒரு நூல் – நூல் ஒன்று என்னும் தொடர்களைக் காட்டியுள்ளார்.

    இவ்வாறு கொள்வதேயன்றி மாணவனாகிய ஒருவன் என்றும் நூலாகிய ஒன்று எனவும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவும் கொள்ளலாம். மேலும், மாணவர்கள் இருவர், நூல்கள் மூன்று எனவரும் தொடர்களை மாணவர்களில் இருவர், நூல்களில் மூன்று என்று எல்லைப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமைத் தொகையாவோ இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவோ கருதலாம். இதே அமைப்பில்தான் வா.21’இல் உள்ள மாடுகள் எத்தனை என்பதையும் மாடுகளில் எத்தனை என்று ஐந்தாம் வேற்றுமைத் தொகையாகக் கொள்ளவேண்டும். இதில் எத்தனை என்னும் சொல் பெயரடையாக அல்லாமல் பெயராகவே நிற்கிறது. ஏனெனில் இந்த அமைப்பில் எத்தனை என்னும் வினாச்சொல்  வேற்றுமை ஏற்கவும் செய்கிறது.

    1. நீ மாடுகள் எத்தனைக்கு மருந்து கொடுத்தாய்?
    2. நீ மாடுகள் எத்தனையைப் பார்த்தாய்?

    போன்ற வினா வாக்கியங்களும் அமைகின்றன. இவற்றில் எத்தனை என்னும் சொல் பெயர்ச்சொல் போன்று வேற்றுமை ஏற்று நிற்பதைக் காணலாம்.

    1. நினைத்தது எத்தனையில் தவறாமல் (திருப்புகழ்.278)

    என்னும் திருப்புகழிலும் எத்தனை என்னும் சொல் வேற்றுமை உருபேற்று வந்துள்ளதைக் காணலாம்.

    . பெயர் இல்லமால் தனித்து வருதல்

    உரையாடலில் முன்னர்க் குறிப்பிட்டு உணர்த்தப்பட்ட ஒரு பொருள் பின்னரும் எத்தனை என்னும் சொல்லை அடுத்து வரவேண்டிய நிலை ஏற்படும்போது அங்கு அந்தச் சொல் இல்லாமல் எத்தனை என்னும் சொல் மட்டுமே நிற்கும் வகையில் வினா வாக்கியங்கள் அமைகின்றன.

    1. ஒருவர்: சந்தையில் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

                 மற்றவர்: எத்தனை வந்துள்ளன?

    மேற்கண்ட உரையாடலில் மற்றவர் கூற்றில் எத்தனை என்னும் வினாச் சொல் பெயரைக் கொண்டு முடியாமல் தனித்து நின்று மாடு என்னும் சொல்லையும் உள்ளடக்கிய பொருளைத் தந்து நிற்கிறது. முன்னர் ஒரு பொருள் குறிப்பிடப்பட்டு உரையாடல் நிகழும் நிலையில் அந்தப் பொருளின் எண்ணிக்கையைக் குறித்துப் பின்னர் எழுப்பப்படும் வினாவில் எத்தனை என்னும் சொல் தனித்தும் நிற்கும் என்பதை இதனால் அறியலாம்.

    இவ்வாறு தனித்து நிற்கும்போதும் இவ்வினாச் சொல் பெயர்ச்சொல் போன்று வேற்றுமை ஏற்கிறது.

    1. ஒருவர்: சந்தையில் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன?

                 மற்றவர்: நாம் எத்தனையை வாங்கலாம்? அல்லது
    நாம் எத்தனைக்குப் பணம் செலுத்தலாம்?

    மேற்கண்ட உரையாடலில் மற்றவர் கூற்றில் உள்ள இரண்டு விதமான வினா வாக்கியங்களிலும் எத்தனை என்னும் சொல் தனித்து நின்று மாடு என்னும் சொல்லையும் உள்ளடக்கி வேற்றுமை ஏற்கவும் செய்கிறது.

    எனவே, முன்னர்க் குறிப்பிட்டது போன்று, எத்தனை என்னும் சொல்லை வினாப்பெயராகக் கொள்ளலாமா என்பது சிந்தித்தற்குரியது. உரையாடலின் தொடர்ச்சியாக அன்றித் தனித்த நிலையிலும் எண்களைக் குறித்த வினா வாக்கியங்களிலும் எத்தனை என்னும் சொல் வேற்றுமை ஏற்று வருகின்றது.

    1. எத்தனையிலிருந்து ஐந்தைக் கழித்தால் பத்து வரும்?
    2. ஐந்தை எத்தனையுடன் பெருக்கினால் பத்து வரும்?

    எத்தனை என்னும் வினாச்சொல் பெயரடையைப் போன்று பெயருக்கு முன்னர் வருவதேயன்றி பெயருக்கு அடுத்து வருவதும் அந்நிலையில் பெயர்ச்சொல் போன்று வேற்றுமை ஏற்பதும் பெயர் இன்றித் தனித்து வருவதும் அந்நிலையில் வேற்றுமை ஏற்பதும் எனப் பலவாறாக இதன் தொடரியல் பண்புகள் அமைந்துள்ளன.

    4. என்ன?

    என்ன என்னும் சொல்லை யாது என்னும் பொருளில் வரும் வினாப் பெயராக(Interrogative Pronouns) அகராதிகள்(Tamil Lexicon மற்றும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி) சுட்டியுள்ளன.

    1. இந்தச் சொல்லுக்குப் பொருள் என்ன?

    என்னும் வினா வாக்கியம் அகராதிகள் தரும் பொருளுக்குச் சான்றாக அமைகிறது. எனினும், இந்தச் சொல், பெயரடையாகவும் வந்து வா.29’இன் பொருளைத் தருகிறது.

    1. இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்?

    இது புறநிலை வாக்கியமாகும். இது வா.29’ஐப் புதைநிலை வாக்கியமாகக் கொண்டு மாற்றிலக்கண முறையில் உருவான புறநிலை வாக்கியம் என்று கொள்ளலாம். அல்லது,

    1. இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் உண்டு/உள்ளது?

    என்னும் புதைநிலை வாக்கியத்திலிருந்து வினைமுற்று நீக்கப்படுவதன் மூலம் உருவான புறநிலை வாக்கியமாகவும் கொள்ளலாம். எவ்வாறு இருப்பினும் எழுவாய்-பயனிலை அமைப்பு இல்லாத நிலையில் வா.29 புறநிலை வாக்கியமாகவே கொள்ளத்தக்கது.

    என்ன என்னும் வினாச் சொல் வேறொரு தொடரியல் பண்பினையும் கொண்டுள்ளது. பின்வரும் இரண்டு வாக்கியங்களைக் காண்க.

    1. ஆசிரியர் என்ன கூறினார்?
    2. ஆசிரியர் கூறியது என்ன?

    மேற்கண்ட இரண்டு வாக்கியங்களும் ஒரே பொருளில் அமைந்தவை எனினும் வா.33’இன் தொடரமைப்பு சிக்கலானது. வா.32 தனிநிலை வாக்கியமாகும்(Simple Sentence). ஆனால், அதே பொருளைத் தரும் வா.33 கலவை வாக்கியமாகும்(Complex Sentence). அது,

    1. ஆசிரியர் ஒன்று கூறினார்; அது என்ன?

    என்னும் இரண்டு வாக்கியங்கள் இணைவதன் மூலம் உருவான வாக்கியமாகும். இதில் கூறினார் என்னும் வினைமுற்று கூறியது என வினையாலணையும் பெயராக மாற்றமுறுகிறது.

    எனவே, என்ன என்னும் சொல் புறநிலை வாக்கியத்தில் பெயரடையாக வருவதும் தனிநிலை வாக்கியத்திலும் அதேபொருள் தரும் கலவை வாக்கியத்திலும் இடம்பெறுவதும் இதன் தொடரியல் பண்புகளாகக் கருதத்தகுந்தவை.

    முடிவுரை

    தமிழில் சில வினாச் சொற்கள் குறிப்பிடத்தகுந்த தொடரியற் பண்புகளைப் பெற்றுள்ள நிலையில் தொடரியல் நோக்கில் அவ்வாறான வினாச் சொற்களை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது. இதன்வழிப் பெறப்பட்ட முடிவுகள் கீழ்வரும் அட்டவணையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

    வ.எண் வினாச் சொல் தொடரியற் பண்புகள் எடுத்துக்காட்டு
    1 எங்கு/எங்கே? எங்கு/ எங்கே என்னும் இரண்டு வினாச்சொற்களும் வினைமுற்றை ஏற்றுவரும் வாக்கியங்களில் உறழ்ச்சி நிலையில் வருவனவாகும். 1. ஆசிரியர் எங்குச் சென்றார்?

    2. ஆசிரியர் எங்கே சென்றார்?

    வினைமுற்று இல்லாத வாக்கியங்களில் எங்கே என்பது மட்டுமே இடம்பெறுகிறது. ஆசிரியர் எங்கே?
    2 எதனால்? கருவிப் பொருளில் அமைந்த வினா வாக்கியத்தை மாற்றிலக்கண முறையில் வேறொரு அமைப்புடைய வினா வாக்கியமாக உருவாக்கலாம். ஆனால், காரணப் பொருளில் வரும் வாக்கியத்தை அவ்வாறு உருவாக்கமுடியாது. 1.மரம் எதனால் வெட்டப்பட்டது? (கோடரியால்)

    2. எது மரத்தை வெட்டியது? (கோடரி)

    3 எத்தனை பெயருக்கு அடையாக வருதல் 1. எத்தனை மாடுகள் வந்தன?
    பெயருக்குப் பின்னர் வருதலும் வேற்றுமை ஏற்றலும் 1. மாடுகள் எத்தனை வந்தன?

    2. நீ மாடுகள் எத்தனைக்கு மருந்து கொடுத்தாய்?

    பெயரில்லாமல் தனித்து வருதலும் வேற்றுமை ஏற்றலும் 1. எத்தனை வந்துள்ளன?

    2. எத்தனையை வாங்கலாம்?

    3. எத்தனையிளிருந்து ஐந்தைக் கழித்தால் பத்து வரும்?

    4 என்ன வினாப் பெயராக வரும் இந்தச் சொல்லுக்குப் பொருள் என்ன?
    புறநிலையில் பெயரடையாகவும் வரும். இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்?
    ஒரே வினாப் பொருள் தரும் தனிநிலை வாக்கியத்திலும் கலவை வாக்கியத்திலும் வரும். 1. ஆசிரியர் என்ன கூறினார்?

    2. ஆசிரியர் கூறியது என்ன?

    அட்டவணை 2: வினாச் சொற்களின் தொடரியற் பண்புகள்

    சான்றெண் விளக்கம்

    1. சிவலிங்கனார் ஆ(பதி.), தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் – கிளவியாக்கம், 1982, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ப.147.

    2. Radford Andrew, Transformational Grammar: A First Course, 1988, Cambridge University Press, p.462

    3. சிவலிங்கனார் ஆ(பதி.), தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம்–வேற்றுமையியல், 2015-2016, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ப.

    4. சண்முகம் செ.வை., இக்கால எழுத்துத் தமிழ், 2001, சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ், ப.31


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    ‘வினாச் சொற்கள் சிலவற்றின் தொடரியற் பண்புகள்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு.

    1. பெரும்பாலும் நாவல், சிறுகதை புதுக்கவிதை, நாளிதழ்கள் என்னும் தளங்களிலேயே  நடைபெற்றுவரும் தமிழியல் ஆய்வுக் களத்தில் தொடரியல் சார்ந்த இத்தகைய ஆய்வுகள் வரவேற்கத்தக்கன.

    2. தடம் புதியதாகவும் சராசரி திறனுடையவர்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலாததாகவும் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்ததாகவும் இருப்பதால் இத்தகைய பொருண்மையைக் கற்பார் உள்ளத்தில் பதியச் செய்வது பெரும் சவாலாகவே அமையும். இது இயல்பு. தொல்காப்பியச் செய்யுளியல் வழக்கொழிந்து போனது இங்கே சுட்டப்படலாம்.

    3. தொல்காப்பியம் சொற்களைப் பற்றி மட்டுமே ஆராய்ந்த நிலையில் தொடர்களைப் பற்றி ஆராயும் வளர்ச்சிநிலையில் இக்கட்டுரை இன்றியமையாத இடத்தினைப் பெறுகிறது.

    4. வழக்கு நோக்கிய எளிமையான எடுத்துக்காட்டுக்கள் தொடரியல் வழக்குகளில் காணப்படும் மாற்றங்களை விளக்கிக் காட்டுவதில் பெருந்துணை புரிகின்றன.

    5. ‘ஞாபகஏது காரகஏது’ பற்றி  நச்சினார்க்கினியரின் கருத்துக்களைப் பொருத்தமான  இடத்தில் கட்டுரையாளர் காட்டியிருப்பது கட்டுரைப் பொருளுக்கு வலிமை சேர்க்கிறது.

    6. கட்டுரையில் வினாத்தொடர்களுக்கு விடைகளின் அடிப்படையில் பெயரளித்திருப்பதுபற்றி கட்டுரையாளர் தருகின்ற விளக்கம் (ஆம்-இல்லை வகை வினாக்கள் வினவப்பட்டார் ஆம் அல்லது இல்லை என விடை தரும் வகையில் அமைபவை. இடைச்சொற்களின் துணைக்கொண்டோ ஒலிக்கப்படும்) பொருத்தமாக இல்லை. அவர் சொலல வருகின்ற கருத்து சரியே. ஆனால் குறியீடு பொருத்தமாக இல்லை. வினாக்களின தன்மைகள் வேறு விடைகளின் தன்மைகள் வேறு. கட்டுரையாளர் தந்திருக்கின்ற பழந்தமிழ் இலக்கண உரையாசிரியர்கள் வினாக்கள் பற்றிய பட்டியலே இதற்குச் சான்றாகும்.

    7. வாக்கியம். தொடர் இவற்றில் ஒன்று வடமொழியாகவும் மற்றொன்று தமிழாகவும் அமைத்திருப்பது மயக்கத்தை ஏற்படுத்தும். ‘வாக்யம் – பதம்’ என்று எழுதலாமே! ‘வாக்யம்’ என்பதற்கிணையான தமிழ்ச்சொல் இல்லை என்ற முடிவுக்குக் கட்டுரையாளர் வந்தபிறகு ‘வாக்யம்’ என்றே எழுதுவது பிழையன்று. அவ்விரண்டு சொற்களின் பொருள் வரையறையைச் எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கிக் காட்டிக் கட்டுரை அமைந்திருக்க வேண்டும். இரண்டு சொற்களும் வடமொழியிலேயே அமைத்துக் கொள்வதும் . இரண்டும் தமிழாகவே அமைத்துக் கொள்வதும் கட்டுரையாளர் உரிமையே. ஆனால் இரண்டு சொற்களுக்கு இரண்டு மொழி என்பது சரியன்று. ‘கட்டுரையின் தொடககத்திலேயே வாக்கியம் (SENTENCE) தொடர், (PHRASE)  தனிவாக்கியம் (SIMPLE  SENTENCE) கலவை வாக்கியம் (COMPLEX SENTENCE) என்பவற்றை எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கியிருந்தால் கட்டுரைப் பொருளைப் புரிந்து கொள்ளல் எல்லார்க்கும் எளிதாய் இருந்திருக்கும்.

    8. ‘மாற்றிலக்கண நெறி’ ‘புதைநிலை வாக்கியம்’  போன்ற தொடர்களுக்கு எடுத்துக்காட்டுடன் பொருள் வரையறை செய்து காட்டினால்தான் கட்டுரை  அதன் உண்மைப் பயனைத் தரும். இல்லையாயின் குழூஉக்குறிபோல துறைசார்ந்தவர்க்கே புலனாகும். இலக்கிய உரைகளில் ‘அனுவாதம்’ என்பது இன்னதென அறியார்க்கு ‘அனுவாதம்’ என்பதை விளக்கினால்தானே புரியும்?

    9. ‘ஆய்வுச்சுருக்கம்’ என்னும் தலைப்பில் தொடங்கப்பட்ட ‘முன்னுரை’ ‘கட்டுரையின் நோக்கமாகும்’ என முடிந்திருப்பதில் மயக்கம் நிலவுகிறது.

    10. “ஆசிரியர் வந்தார்?என்னும் வாக்கியத்தில் வெளிப்படையாக வினாவினைக் குறிக்கும் இடைச்சொற்கள் இல்லையெனினும் ‘வந்தார்’ என்னும் சொல்லின்கண் வழங்கப்படும் ஒலி அழுத்தம் அந்த வாக்கியத்தை வா.1 மற்றும் வா.2’இன் பொருளில் வரும் வினாவாக மாற்றிவிடும்”. என்னும் பகுதி வினாச்சொற்கள் தொடரியற் பண்புகள் பற்றிய ஆய்விலிருந்து மொழியியலுக்குள் சென்றுவிடுவதை ஆய்வாளர் நோக்கியிருக்க வேண்டும்.

    11. “28.  ஐந்தை எத்தனையுடன் பெருக்கினால் பத்து வரும்?”  என்று கட்டுரையாளர் காட்டும் எடுத்துக்காட்டு முற்றிலும் செயற்கையானது. ‘ஐந்தை எதனால்’ பெருக்கினால் பத்துவரும் என்பதுதான் பெருவழக்கு. ‘உடன்’ என்பது கூட்டலுக்கும் எதனை அல்லது எத்தனை என்பது கழித்தலுக்கும் .‘எதனால்’ என்பது பெருக்கலுக்கும் வகுத்தலுக்குமான உலகியல்.

    12. “இவ்வாறு கொள்வதேயன்றி மாணவனாகிய ஒருவன் என்றும் நூலாகிய ஒன்று எனவும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவும் கொள்ளலாம்”.  ஏன் கொள்ள வேண்டும்? ஒரு சொல்லுக்கு இலக்கணக்குறிப்பு என்பது பொருள் சார்ந்த நிலையில் அடர்த்தி மிகுவிக்கும் நிலையன்றித் தேவையற்ற நிலையில் இவ்வாறு கொள்வது பயனற்றது. மேலும் இது உண்மையான தொடரியல் பண்புகளை விளக்குவதாக அமையுமா என்பது சிந்தனைக்குரியது.

    13. “24.நினைத்தது எத்தனையில் தவறாமல் (திருப்புகழ்.278) என்னும் திருப்புகழிலும் எத்தனை என்னும் சொல் வேற்றுமை உருபேற்று வந்துள்ளதைக் காணலாம்.

    “கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க  அதற்குத் தக”

    என்னும் குறட்பாவில் ‘கற்றபின்’ என்னும் சொல்லில் உள்ள ‘‘பின்’ என்பது ‘கற்றதற்குப் பின்னால்’ என்பதைக் குறிக்குமா? ‘இல்’ என்று வருவதனாலேயே அது வேற்றுமையாகிவிடுமா? அது வேற்றுமை என்றால் அது குறிக்கும் பொருள் பற்றிய விளக்கம் தரவேண்டும் அல்லவா?

    ‘பயனென் கொல்?’ என்பதில கொல் அசைநிலை (2). ‘இலனாகும் மற்றும் பெயர்த்து’ (205) என்பதில் ‘மற்று’ என்பது: அசைநிலை. ‘ஓரும்’ (366) இருவழியும் அசைநிலை. ‘கனவினும் இன்னாது மன்னோ’ (819) என்பதில் மன் ஓ அசைநிலை. இடைச்சொற்கள் உணர்த்தும் பொருள் பலவாயினும் அவை பொருளுணர்த்தியே ஆக வேண்டும் என்பதில்லை.


    Share
  • திருவள்ளுவர் யார்? – 6

    திருவள்ளுவர் யார்? – 6

    புதுக்கோட்டை பத்மநாபன்

    ஆதி பகவன்

    திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் காணப்படுகின்றன. இந்த பத்துக் குறட்பாக்களிலும் குறிபிட்ட தெய்வத்தின் பெயரைக் குறிப்பிடாமல் ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இருள் சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அற ஆழி அந்தணன், எண்குணத்தான்  என்று கடவுளுக்குரிய அசாதாரணப் பண்புகளை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்கிறார் திருவள்ளுவர். இதைவைத்து இவர் குறிப்பிடும் கடவுள் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

    முதற் குறட்பாவில் வரும் ‘பகவன்’ என்ற சொல் ஒரு முக்கியமான சொல். மண்டல புருடன் இயற்றிய பதினோராவது தமிழ் நிகண்டில் பகவன் என்ற சொல்லுக்கு“பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது பகவன் என்ற சொல் சிவன், திருமால், ப்ரஹ்மன், சமண மதக் கடவுள், புத்தன் ஆகியோரைக் குறிக்கும் என்று அந்த நிகண்டு நூல் குறிப்பிடுகிறது. இந்த ஒரே சொல் ஐந்து தெய்வங்களுக்கும் பொருந்தும் என்றாலும் இவற்றுள் ஏதோ ஒரு தெய்வத்தைக் குறித்துத்தான் திருவள்ளுவர் அச்சொல்லைப் பயன்படுத்தியிருக்க முடியும். சமண,  பௌத்த மதங்களின் கொள்கைகளுக்கும் திருக்குறளின் கொள்கைக்கும் ஸம்பந்தமில்லை என்பதால் இச்சொல் அம்மதங்களின் தெய்வத்தைக் குறித்துப் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது . மீதமுள்ள மூன்று தெய்வங்களில் யாரைக் குறித்து இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

    ஓருசொல்  ஒரு காரணத்திற்காக ஒருவரைக் குறித்து முதலில் பயன்படுத்தப்படும். பிறகு அச்சொல் உபசாரத்திற்காக மற்றவர்களைக் குறித்தும் பயன்படுத்தப்படுவது உண்டு. அது பயனாகும் இடத்தை வைத்துத்தான் உண்மையில் அச்சொல் யாரைக் குறிக்கிறது என்பதை அறிய முடியும். அதாவது தலைமைப் பண்பு உள்ளவனைத் “தலைவன்”என்று சொல்கிறோம். சில நேரங்களில் உபசாரத்திற்காக மற்றவர்களையும் “தலைவா”என்று அழைக்கிறோம். அதுபோலத் தான் ‘பகவன்’ என்ற சொல் பரம்பொருளுக்குரிய காரணப் பெயர்ச்சொற்களில் ஒன்று. இந்த முதல் குறட்பா, ஜகத் காரணமான பரம்பொருளைப் பற்றிப் பேசுகிறது. மற்றவர்களையும் குறிக்கும் உபசாரச் சொல்லாக இச்சொல்லை யாரும் கருதிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இச்சொல்லுக்கு முன்னால் ‘ஆதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

    ‘ஆதி’ என்றால் முதல் என்று பொருள். அதாவது உலகத் தோற்றத்துக்குக் காரணமான முதற்பொருள் என்று கருத்து. ஸநாதன வைதிக சமயத்தில் ப்ரஹ்மா, ருத்ரன் உள்ளிட்ட அனைவரையும் படைத்த ஜகத்காரணன் திருமால்தான். “ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ:நலமுழுது அளைஇய புகரறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமும் நீ” என்ற சங்க இலக்கிய வரிகள் இவ்விஷயத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. தொன்மையான சங்க இலக்கியங்கள் ப்ரஹ்மனையோ ருத்ரனையோ ஜகத்காரணமாக எவ்விடத்திலும் காட்டவில்லை. திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்தைச் சேர்ந்த சங்கத் தமிழர் மரபில் வந்தவராகையால் ஆதி பகவன் என்ற சொல்லால் அவர் குறிப்பிடும் பரம்பொருள் திருமால்தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. மேலும் அவ்விடத்தில் அவர் காட்டியுள்ள உவமை, இவ்விஷயத்தை மேலும் உறுதி செய்கிறது.

    “अक्षराणाम् अकारोस्मि” (அக்ஷ்ராணாம் அகாரோஸ்மி) என்கிறார் பகவான் கீதையில். அதாவது எழுத்துகளுக்குள் நான் அகரமாக இருக்கிறேன் என்று சொல்கிறார் பகவான்.  இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள உவமையை வைத்துப் பார்த்தால் எழுத்துகளுக்குள் அகரமாக இருக்கும் பகவானே ஜகத் காரணமான ஆதிபகவன் என்பதே இக்குறட்பாவின் உட்பொருளாகத் தேறுகிறது. ஆகவே திருவள்ளுவர் கூறும் ஆதிபகவன், திருமால்தான்.

    மேலும் அகரம், தமிழ் மொழிக்கு மட்டும் முதல் எழுத்தன்று. உலகில் உள்ள எல்லா மொழிகளுக்குமே அகரம்தான் முதல் எழுத்து. அதைப் போல திருமாலே அகில உலகிற்கும் காரணமான ஸர்வலோகேஶ்வரன் என்ற உண்மையைக் காட்டுவதற்காகவே இந்த உவமையை இங்கு பயன்படுத்துகிறார் திருவள்ளுவர். திருமாலே ஸர்வேஶ்வரன் என்பதை சங்கஇலக்கியமும் “இருநிழல் படாமை மூவேழுலகமும் ஒரு நிழலாக்கிய ஏமத்தை” என்று தெளிவுபடுத்துவது குறிப்பிடத்தக்கது.

    “வாலறிவன்”

    இரண்டாவது குறட்பாவில் பகவானை “வாலறிவன்” என்ற சொல்லால் அழைக்கிறார் திருவள்ளுவர். ”வாலறிவன்” என்றால் எல்லாவற்றையும் அறிந்தவன் என்று பொருள். பரம வைதிகரான திருவள்ளுவர் முண்டகோபநிஷத்தில் சொல்லப்படும் “यःसर्वज्ञःसर्ववित्” (ய:ஸர்வஜ்ஞ:ஸர்வவித்) என்பதையே “வாலறிவன்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.”वेदाहम् समतीतानि वर्तमानानि चार्जुन।भविष्याणी च भूतानि माम् तु वेद न कश्चन॥”(வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந| பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஶ்சந||) என்று பகவானும் கீதையில் கூறுகிறான். “கழிந்து போனவையும், இருப்பவையும், இனி வரப்போகின்றவையுமான எல்லாப் பூதங்களையும் நான் அறிவேன். ஆனால் என்னை மட்டும் எவனும் அறியமாட்டான்” என்பது மேற்படிகீதை ஶ்லோகத்தின் கருத்து.

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் “ஸர்வஜ்ஞ:” என்ற நாமம் இரண்டு இடங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. படைப்புக்கு முன்னும் படைப்புகள் அழிந்த பின்னும் பகவான் ஒருவனே இருக்கிறான் என்பதால் படைக்கப்பட்டவர்களான ப்ரஹ்மனுக்கும் ருத்ரனுக்கும் இச்சொல் பொருந்தாது. மேலும்,“நீயா நினைவ” என்றும் “நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்” என்றும் சங்க இலக்கியம் திருமாலை வர்ணிக்கிறது. அந்தக் கருத்தைக் கொண்ட சொல்தான் ‘வாலறிவன்’ என்னும் சொல். ஆகவே “வாலறிவன்” என்ற சொல்லால் திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வம் திருமாலே என்பது தெளிவாக விளங்குகிறது.

    “மலர்மிசை ஏகினான்”

    மூன்றாவது குறட்பாவில் வரும் “மலர்மிசை ஏகினான்” என்பது ஹ்ருதய கமலத்தில் வசிப்பவன் என்ற பொருளில் பகவானையே குறிக்கிறது. மலரில் இருப்பவன் என்பதால் இது ப்ரஹ்மனையும் குறிக்கலாம் என்று சிலர் எண்ணக்கூடும். ஆனால் அது பொருந்தாது. “कारणम् तु ध्येयः”(காரணம் து த்யேய:) -“ஜகத் காரண வஸ்துவே த்யானிக்கதக்கது” என்ற வைதிக நெறியைப் பின்பற்றி திருவள்ளுவர் ஜகத்காரண வஸ்துவைப் பற்றியே பத்துக் குறட்பாக்களிலும் பேசுகிறார். ப்ரஹ்மனுக்கும் காரணமானவன் பகவான் விஷ்ணுவே என்பதால் “மலர்மிசை ஏகினான்” என்பது திருமாலையே குறிக்கும். மேலும் இந்த குறட்பாவில் இடம்பெறும் மாணடி, நிலமிசை நீடு வாழ்வார் என்ற விஷயங்களெல்லாம் ப்ரஹ்மனுக்குப் பொருந்தாது. இங்கு குறிப்பிடப்படும் நிலம் என்பது மோக்ஷ லோகத்தைக் குறிக்கும். வேதமும் சங்க இலக்கியமும் திருமாலின் உலகம்தான் மோக்ஷலோகம் என்று கூறுகின்றன. ஆகவே இந்தக் குறட்பா, திருமாலைப் பற்றிய விஷயம்தான்.

    “पद्मकोशप्रतीकाशं” (பத்மகோஶப்ரதீகாஶம்) என்ற வேதவாக்யம் ஹ்ருதயம் தாமரை மலர்போல் இருப்பதாகக் கூறுகிறது. அங்கு வசிக்கும் பகவானைக் குறிப்பிடவே மலர்மிசை ஏகினான் என்றார். இவ்விடத்தில் “மலர்மிசை” என்பதற்கு “நினைவாரது உள்ளக் கமலத்திங்கண்” என்று பரிமேலழகர் உரையிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த “மலர்மிசை ஏகினான்” என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ‘மலர்’ என்பதற்கு விரிந்த அல்லது பரந்த என்ற பொருளும் உண்டு. ‘மிசை’ என்பதற்கு வானம் என்ற பொருளும் உண்டு. “மலர்மிசை” என்பதை வினைத்தொகையாகக் கொண்டு “பரந்து விரிந்த வானத்தின்கண் ஏகிய த்ரிவிக்ரமன்” என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே எல்லா வகையிலும் “மலர்மிசை ஏகினான்” என்பது திருமாலையே குறிக்கும்.

    வேண்டுதல் வேண்டாமை இலான்

    அடுத்த குறட்பாவில் பகவானை, வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்றால் விருப்பு வெறுப்பு அற்றவன் என்று பொருள். உலகமே அவனுடையது என்று சொல்லும் போது அவனுக்கு விருப்பு வெறுப்பு ஏற்பட வழியில்லை. அவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் என்று யாரும் இல்லை. அதனால் தான் சங்க இலக்கியம், “நினக்கு மாற்றோரும் இலர்: கேளிரும் இலர்”என்று திருமாலைக் குறித்துப் பேசுகிறது.

    இதையே பகவானும் “समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः” (ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய:) என்கிறான் கீதையில். “எல்லா உயிர்களிடத்தும் நான் ஸமமாகத்தான் இருக்கிறேன். எனக்கு பகைவனோ அன்பனோ இல்லை” என்பது இந்த கீதை வரியின் பொருள். மேலும் பகவான் கீதையில் நான் அடையவேண்டிய பொருள் என்று எதுவும் இல்லை என்று கூறுகிறான். அதனால் அவனுக்கு விருப்பு வெறுப்பு ஏற்பட வேண்டிய அவஶ்யம் இல்லை. அந்த வகையில் திருவள்ளுவர் கூறும் வேண்டுதல் வேண்டாமை இலான் திருமாலே என்பது தெளிவாகின்றது.

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

    அடுத்த குறட்பாவில் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் என்று பகவானைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அதாவது சராசரி ஜீவராசிகளுக்கு உள்ளது போல் பகவானுக்குக் கர்மவினையால் ஆன பிறவி கிடையாது என்பதே திருவள்ளுவரின் கருத்து. பகவானுடைய அவதாரங்கள் எல்லாம் கர்மவினையாலான பிறப்புகள் இல்லை என்பதை “முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலின் பிறவாப் பிறப்பிலை பிறப்பித் தோரிலையே” என்று சங்க இலக்கியங்களும் கூறுகின்றன.

    பகவானும் கீதையில் “न मां कर्माणि लिम्पन्ति” (நமாம் கர்மாணி லிம்பந்தி) என்று கூறுகிறான். ஆதாவது “என்னைக் கர்மங்கள் ஒட்டாது” என்று சொல்கிறான் பகவான். அதனால் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது திருமாலையே என்பது தெளிவாகிறது. இக்குறட்பாவில் இடம்பெறும் பொருள் சேர் புகழ் என்ற சொற்றொடர் குறிப்பிடத்தக்கது.

    தகுதியுள்ளவரைப் புகழும் புகழுரைகளே உண்மையான புகழுரையாக இருக்கும். தகுதியில்லாதவரைப் புகழ்ந்தால் உண்மையில் அது முகஸ்துதியாகவோ பக்ஷபாதமாகவோதான் இருக்கும். பரம்பொருளும் ஸர்வேஶ்வரனுமான திருமாலே எல்லாப் புகழுரைகளுக்கும் தகுதி உடையவன். பொருள்சேர் புகழ் என்பது அவனைக் குறித்த புகழ் உரைகளே. மற்றவர்களைக் குறித்த புகழுரைகள் பொருள்சேர் புகழ் ஆகாது. அதனால்தான் சங்க இலக்கியங்கள் புகழைப் பற்றிய பேச்சு வருமிடங்களிலெல்லாம் திருமாலைப் பற்றியே குறிப்பிடுகின்றன.

    “தாவா விழுப்புகழ் மாயோன்”என்று தொல்காப்பியத்திலும், “தேயா விழுப்புகழ் தெய்வம்” என்று கலித்தொகையிலும் “அருந்திறல் கடவுள்” என்று பெரும்பாணாற்றுப்படையிலும் “புள் அணி நீள்கொடிச் செல்வன்” என்று திருமுருகாற்றுப்படையிலும் “எண்ணிறந்த புகழவை, நின் புகழ் உருவின கை, ஏவலின் முதுமொழி கூறும் நற்புகழவை, நின்னொக்கும் புகழ் நிழலவை, நல் புகழவை” என்று பரிபாடலிலும் “விண் உயர் புட்கொடி விறல் வெய்யோன், புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன” என்று புறநானூற்றிலும் கூறப்படுகின்றன. அதனால் சங்கத் தமிழர்கள் உயர்ந்த புகழுக்கும் உண்மையான புகழுக்கும் உரிய தெய்வமாக திருமாலையே கொண்டாடினர் என்பது தெளிவாகிறது.  அந்த வகையில் பொருள் சேர் புகழ் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது திருமாலின் புகழ்தான்.

    தொடரும்…

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 7

    பரிமேலழகர் உரைத் திறன் – 7

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பலரும் பரவிய பத்தினி ‘ஆற்றல்’!

    முன்னுரை

    திருக்குறளில் பெரும் விவாதத்திற்கும் கருத்து மாறுபாடுகளுக்கும் ஆளான குறட்பாக்களில் ஒன்று இந்தக் கிழமை ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்ற தலைப்பில் ஆராயப்பட உள்ளது. இக்கட்டுரையினால் அக்குறட்பாவின் எளிய பொருளை எல்லாரும் புரிந்து கொண்டு சிக்கலுக்கு முடிவு வந்துவிடும் என்னும் நம்பிக்கையெல்லாம் கட்டுரையாளருக்கு அறவே கிடையாது. ‘தூங்குபவனை  எழுப்பலாம். தூங்குவதுபோல நடிப்பவனை எழுப்ப இயலாது’ என்னும் உண்மை இலக்கிய விவாதங்களுக்கும் பொருந்தும். திருக்குறள் அதிகாரம் ‘ஒரு பொருளே நுதலியது’ என்ற கருத்தியல் நிலையும், திருக்குறளைத் தனித்தனி அலகாகக் கொண்டு உரை செய்யலாம் என்னும் தாராளமய ‘உரைநெறியும்’ நிலவும் வரையிலும் இத்தகைய உரைக்குழப்பங்களையும் குளறுபடிகளையும் நீக்கவே முடியாது. திருக்குறளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. புத்துரை காண்பார்தம் அவசரத்தையும் துடிப்பையும் யாரும் தடுக்கவும் இயலாது.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தில் ஐந்தாவதாக அமைந்திருப்பது

    “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை” (55)

    என்னும் குறட்பாவாகும். இதற்குத்,

    • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் — பிற தெய்வம் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழாநின்று துயில் எழுவாள்
    • பெய்யெனப் பெய்யும் மழை — ‘பெய்’ என்று சொல்ல மழை பெய்யும்

     என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘தெய்வம்’ என வாளா திருக்குறளில் இருக்கப், பரிமேலழகர் ‘பிற தெய்வம்’ என உரை காண்கிறார். இதனால் கணவன் உள்ளிட்ட தெய்வங்களுள் பிறதெய்வத்தினும் கணவனையே தெய்வமாகக் கருதும் மனைவியின் மனநிலையைப் பெற வைக்கிறார். அதாவது மற்ற தெய்வங்கள் எல்லாருக்கும் பொது. ‘கணவனோ தனக்கு மட்டுமே தெய்வம்’ என்பது பெறலாயிற்று. இந்த நுட்பத்தைத் ‘தன் தெய்வம்’ என்னும் தொடரால் அவர் குறிப்பது காண்க.
    • ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்பதற்குப் ‘பெய்’ என்று சொன்னால் மழை பெய்யும்.’ என மிக எளிமையாக உலகியல் நோக்கி உரை காண்கிறார்.

    விளக்கவுரை

    “தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயில் எழும் காலத்தாகலின் தொழுது எழுவாள்” என்றார். ‘தொழா நின்று’ என்பது தொழுது எனத் திரிந்து நின்றது. தெய்வம் தான் ஏவல் செய்யும் என்பதாம். இதனால் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது”.

    விளக்கவுரையில் கண்ட உரையருமை 

    • இறைவழிபாடு என்பது மனந் தெளிந்தார்க்கே உரியதாம். திருக்குறள் கடவுள் வாழ்த்தில் ‘மனநிலை – மெய்ந்நிலை’ ஆகிய இருவகை வழிபாட்டில் ‘மாணடி சேர்தல்’ என்பதனான் மனவழிபாட்டையும் ‘எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்பதனான் மெய்வழிபாட்டையும் திருவள்ளுவர் குறித்திருப்பதைக் காணலாம். இந்தக் குறட்பாவில் இல்லத்தரசி தன் கணவனையே வழிபடுதற்குரிய தெய்வம் என்னும் தெளிவு பெற்றவள் என்பதனைத் ‘தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது’ என்னும் பரிமேலழகர் குறிப்பால் உணர்க.
    • தொழுதல் மனத்தது வினை. எழுதல் மெய்யினது வினை. எழுதல் என்னும் வினையால் துயில் நீங்கும் காலம் பெறப்பட்டது. இறை வழிபாட்டிற்கு ஏற்றதும் உரியதும் வைகறைப் பொழுதே என்பது தமிழ்ப்பண்பாடு. ‘திருப்பள்ளியெழுச்சி’, ‘திருவெம்பாவை’, ‘திருப்பாவை’ என்பவைகளும் வைகறையில் பாடப்படும் இலக்கியங்கள் என்பது அறிக.
    • இனித் ‘தொழுதெழுவாள்’ என்பதற்கு மனத்தால் தொழுதுகொண்டே துயில் நீங்குவாள் என்றே பரிமேலழகர் உரை கொள்ள, பிற உரையாசிரியர்கள் தொழுதெழுவாள் என்பதனை முன்பின்னாக மாற்றி ‘எழுந்துத் தொழுவாள்’ என உரை காண்கின்றனர். ‘சிரித்து வந்தான்’, ‘ஓடி வந்தான்’ என்பன போலத் ‘தொழுது எழுவது’ என்பது ஆகாது என்பது அவர் கருத்து.
    • ‘தொழாஅநின்று எழுவாள் என்னும் நிகழ்கால வினையெச்சம் தொழுது எழுவாள் என இறந்தகால வினையெச்சமாகத் திரிந்து நின்றது என்பதைத் ‘’தொழா நின்று’ என்பது ‘தொழுது’ எனத் திரிந்து நின்றது என்னும் தொடரால் குறிக்கின்றார். இதனால் ‘தொழுது முடித்த பின் எழுவாள்’ என்றில்லாமல் ‘தொழுதுகொண்டே எழுவாள்’ என்பது பெறப்படும்.
    • ஐம்பெரும்பூதங்களில் ஒன்றாகிய மழையைப் ‘பெய்யென’ ஏவல் கொள்ளும் பேராற்றல் உடையவள் என்பதனால் தெய்வத்தையும் ஏவல் கொள்ளும் ஆற்றல் உடையவள் என்பார், ‘தெய்வந்தான் ஏவல் செய்யும்’ என்பதாம் என நுண்பொருள் காண்கிறார். என்ன நுண்பொருள்? இவள் ஆணைக்காகத் தெய்வம் காத்திருக்குமாம்!
    • இந்தக் குறட்பாவின் ஒருவரிக் கருத்தாக (இதன் விரிவு பின்வரும் பத்தியில் காணலாம்) ‘இதனான் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது’ என எழுதிக் காட்டுகிறார். அதாவது இந்தப் பாட்டுக் கற்பின் சிறப்பையோ, கற்புடையாளது சிறப்பையோ கூறவில்லை. கற்புடையாளது ஆற்றலைக் கூறுகிறது எனத் தெளிவுபடுத்துகிறார். இதனால் ஒரு பண்பின் சிறப்பு வேறு, அப்பண்பை உடையார் சிறப்பு அதனினும் வேறு, அப்புண்புடையாரின் ஆற்றல் அவற்றினும் வேறு என்பது தெளிவாகும்.

    அதிகாரப் பொருண்மை பகுப்பு

    திருக்குறள் அவ்வதிகாரக் கருத்துக்கள் அதிகாரத் தலைப்பினை விளக்குவதாக மட்டுமே அமைந்துள்ளன என்பதில் பரிமேலழகருக்கு உடன்பாடில்லை. பிறருக்கும் பரிமேலழகருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே அதுதான். அவர் தலைப்பின் பல பரிமாணங்களையும் திருக்குறள் ஆராய்வதாகக் கருதுகிறார். அதாவது கடவுள் வாழ்த்து என்னும் தலைப்பை மட்டுமே கருத்திற் கொண்டால் ‘கடவுளை வாழ்த்துவது’ மட்டுமே பொருளாகிவிடும். ஆனால் அந்த அதிகாரத்தில், கடவுளை வாழ்த்துவது மட்டும் பொருளாக அமைந்திருக்கவில்லை. இத்தொடரின் முந்தைய கட்டுரைகள் பலவற்றிலும் இக்கருத்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. .’வாழ்க்கைத் துணை நலம்’ என்பதற்கு அவ்வில்வாழ்க்கைக்குத் துணையாகிய இல்லாளது நன்மை. வாழ்க்கைக்குத்தான் அவள் துணையே தவிர கணவனுக்கு அல்ல. இருந்திருந்தால் ‘கணவன் துணை நலம்’ என எழுதியிருப்பார். இந்த நுண்ணியம் பிறிதொரு கட்டுரையில் விளக்கப்படும்.

    வாழ்க்கைத் துணைநலம் அதிகாரப் பொருண்மை பகுப்பு

    வாழ்க்கைத் துணைநலம் (6) என்னும் அதிகாரப் பொருண்மையைப் பின்வருமாறு பரிமேலழகர் பகுத்துக் கொள்கிறார். பத்துப் பாடல்களும் ஒன்பது வகையான கருத்துக்களைச் சொல்வதற்காகத் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார் எனக் கருதுகிறார்.

    1. இரண்டு நன்மையும் சிறந்தன (நற்குண நற்செய்கைகள் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை என்னும் இரண்டு) (1)
    2. இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல (2-3)
    3. கற்பு நலத்தது சிறப்பு (4)
    4. கற்புடையாளது ஆற்றல் (5)
    5. கற்புடையாளது சிறப்பு (6)
    6. தற்காத்தற் சிறப்பு (7)
    7. புத்தேளிரால் பேணப்படுவாள் (8)
    8. தகைசான்ற சொற்காவா வழிப் படும் குற்றம் (9)
    9. வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலன் (10)

    இதுபோல அதிகாரப் பொருண்மை பகுப்பு எல்லா அதிகாரங்களிலும் செய்திருந்தாலும் அறன் வலியுறுத்தல் (4), மெய்யுணர்தல் (36), அவா அறுத்தல் (37), கயமை (108) ஆகியன உட்பட ஐந்து அதிகாரங்களில் மட்டுமே ‘பத்துக்கு ஒன்பது’ எனப் பகுத்துக் கொள்வதைக் காணமுடிகிறது. வான்சிறப்பு (2) என்னும் அதிகாரத்தை மட்டும் ‘உலகம் நடத்தற்கு ஏது’ என்பதாக ஏழுகுறட்பாக்களையும் (1-7) ‘அறம் பொருள் இன்பம் நடத்துவதற்கு ஏது’ என்பதாக மூன்று குறட்பாக்களையும் (8-10) பகுத்துக் குறைவான பகுப்புக்கு உரிய அதிகாரமாகக் காட்சிப்படுத்துகிறார். இந்த அடிப்படையில் ‘தெய்வந்தொழாஅள்’ எனத் தொடங்கும் இக்குறட்பா ‘கற்புடையாளது ஆற்றல் கூறியது’ எனத் தெளிவுபடுத்திக் காட்டுகிறார். இந்தப் பாட்டில் வேறு எதனையும் எதிர்பார்க்கக்கூடாது. அவற்றுக்கான களம் இப்பா அன்று. பரிமேலழகரின் இந்த உரை புலனெறி வழக்கம் மற்றும் உலகியல் ஆகிய இரண்டும் சார்ந்து எழுதப்பட்டது என்பது இனி விளக்கப்படும்.

    புலனெறி வழக்கத்தில் கற்பின் பேராற்றல்

    உலகியலைச் சாராத புலனெறிவழக்கு நிலைக்காது. அது வெற்றுப் புனைவாகவே முடியும். அதனால்தான் சான்றோர்கள் இலக்கியப் புனைவினை “உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தலும், உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும், இல்லோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும்,  இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தலும்’ எனப் பகுத்துக் கொண்டார்கள். உலகியல் என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. போலிப்பகுத்தறிவுக்கு அங்கு இடமில்லை. அந்த நம்பிக்கை தொடர்ச்சியாகப் பலிக்க வேண்டும் என்னும் தேவையும் இல்லை. நம்பிக்கை மக்கள் சமுதாயத்து உரிமை. மூடநம்பிக்கையையும் மரபு சார்ந்த பழக்கவழக்கங்களையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்ளுதல் நெறியன்று.

    “என்தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே!” (குறிஞ்சிக் கலி)

    “வள்ளி கீழ்விழா., வரைமிசைத் தேன் தொடா., கொல்லை குரல் வாங்கி ஈனா., – மலை வாழ்நர் அல்ல புரிந்தொழுகலான்” (குறிஞ்சிக்கலி 3)

    “கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
    செய்வகை செய்வான் தவசி, கொடிது ஒரீஇ
    நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
    பெய்யெனப் பெய்யும் மழை” (திரிகடுகம் 96)

    “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
    பெய்யும் மழை’ (மூதுரை) என்பது ஔவையின் நம்பிக்கை.

    “வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
    நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
    மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை
    மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!”

    என்னும் விவேக சிந்தாமணி மக்கள் சமுதாயத்தின் நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

    • ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி’ என்பது ஆண்டாள் வாக்கு.
    • பாரதி ஒருபடி மேலே போய் ‘மூவருக்கு மூன்று மழை’ என்பதை மாற்றி,

     “முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்— ஓத
    மூன்று மழை பெய்யுமடா மாதம்
    இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்—இவர்
    ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார்” (பாரதி  மறவன் பாட்டு)

    வேதம் ஓதிய அந்தணர்களுக்காகவே மழை என்கிறார். இது அவரது நம்பிக்கை. இவைகளெல்லாம் மூட நம்பிக்கைகள் அன்று. என்ன பாவம் செய்தாலும் இறைவன் மன்னிப்பார் என்பதுதான் மூடநம்பிக்கை. ‘பரிகாரத்திற்காகவே பாவம்’ என்பதுதான் மூடநம்பிக்கை. இவைபோக புலவர்களும் கவிஞர்களும் இயலாததையெல்லாம் இயலும் என்பதாக உலகியல் நோக்கிப் பாடியிருப்பதையும் காணமுடியும்.

    • ஒரு நாட்டில் பத்தினிப் பெண்டிர் வாழ்வார்களேயானால் அந்நாட்டில் “வானம் பொய்யாது, வளம் பிழைப்பு அறியாது, நீணில வேந்தர் கொற்றம் சிதையாது” (சிலப். 2475-77) என்னும் கருத்தியல் கவுந்தியடிகள் காலத்துக்கும் முற்பட்ட சமுதாய நிலைப்பாடு.
    • “ஆடகப் பூம்பாவை அவள்போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிபிறந்தேன்” என்பதற்காகப் பெருமைப்பட்டுப் “பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசொடு ஒழிப்பேன்” (சிலப். 3160- 62) என்று வஞ்சினம் கூறிய கண்ணகிக்குத் தகுதியாக இருந்தது அவள் பத்தினி என்பதுதான்.
    • “மாபத்தினி நின்னை” (சிலப். 3174) என அங்கியங்கடவுள் கண்ணகியை வழிபட்டதற்கும், “யார் பிழைப்பா ஈங்கு?” (சிலப். 3176) எனக் கண்ணகியின் ஏவல் கேட்டதற்கும் அவள் மாபெரும் பத்தினி என்பதுதான் காரணம்.
    • ‘எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்’ (கம்ப. 5362) என்னும் சீதையின் மன உறுதி அவளுடைய கற்பொழுக்கத்தின் மேல் வைத்த நம்பிக்கையைக் காட்டுகிறது
    • “காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதல் பெண்களின் கடைக்கண் பார்வையிலே” (பெண்மை) என்று பாரதி சொல்வது கடைக்கண் பார்வை தரும் ஆற்றலால் அல்லவா?
    • “கார்த்தடங்கண்ணி எந்தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை” (பாஞ்சாலி சபதம்) என அர்ச்சுணன் செய்யும் சபதத்தைக் காண்பார்க்கு என்ன தோன்றும்? காண்டிவத்தின் மீது ஆணை என்பது சரி! பாஞ்சாலியின் கடைக்கண்ணை மையமாக்கி வஞ்சினம் கூறுவது எப்படிக் கொள்வது?
    • “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

    மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்!”

    (சஞ்சீவி பர்வதத்தின் சாரல்) பாரதியின் நண்பர் பாரதிதாசன் தன் குருவை அப்படியே பின்பற்றுகிறார்.

    நிறைவுரை

    திருக்குறளில் “ஒவ்வொரு அதிகாரமும் பல பொருண்மைகளை ஆராய்வதாக அமைக்கப்பட்டுள்ளது” என்னும் செந்நெறி கண்டவர் பரிமேலழகர். அந்நுண்ணியத்தால் “தெய்வம் தான் ஏவல் செய்யும் என்பதாம்., இதனால் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது” என இரண்டு தொடர்களில் ‘இதுவே இப்பாட்டுக்கான மையக்கருத்து’ என உலகியல் நோக்கி உரைகண்டதே பரிமேலழகரின் உரைத்திறனாகும்.

     (தொடரும்…)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 17

    கதை வடிவில் பழமொழி நானூறு – 17

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 35

    மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
    உறுமனத்த னாகி ஒழுகின் – செறுமனத்தார்
    பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?
    ‘ஆயிரம் காக்கைக்கோர் கல்’.

    பழமொழி —  ‘ஆயிரம் காக்கைக்கு ஓர்கல்’

    ஈசிச்சேரில் படுத்துக்கொண்டு டீ குடித்துக்கொண்டு இருக்கிறேன். டீ குடிக்கிற நேரமா இது மனைவியின் குரல். அரை மணிநேரத்துல டின்னர் ரெடியாயிடும். சொன்னா கேட்டாதானே. எப்ப பாத்தாலும் நியூஸ்வேற. தனக்குத்தானே பேசிக்கொண்டு சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறாள். எனக்குத்தானே தெரியும் இன்னிக்கு என்ன நடந்ததுனு. காலையிலேருந்து நடந்ததச் சொன்னா டென்ஷன் ஆயிடுவா.அப்பறம் மெதுவா சொல்லலாம். நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறேன். ”

    காலையில்,

    என்ன சார் இங்க கெடுபிடி. கேட்டுக்கொண்டே என் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தப் பெரிய வணிகவளாகத்தினுள் நுழைந்தேன். சொந்தமாக மிட்டாய்க் கடை வைத்திருக்கும் எனக்கு இங்கு கூட்டம் கூடுவது ஒண்ணும் புதுசு இல்ல. இருந்தாலும் தெரிஞ்சிக்கிற ஆர்வம். ஏதும் சினிமா ஷூட்டிங் எடுக்கப்போறாங்களா. போலீசெல்லாம் வந்திருக்கு.

    அது ஒண்ணுமில்ல சார். புதுசா ஒரு போலீஸ்அதிகாரி வந்திருக்கார் போல. அவர் எல்லா இடத்திலயும் பாதுகாப்ப உறுதி செய்யறார். அவ்ளோதான். சொல்லிவிட்டு பான்கடை வைத்திருக்கும் நண்பன் சதீஷ் சென்றுவிட்டான்.

    எனக்கு என்னவோ சரியாகப் படல. வேறு என்னவோ இருக்கு. நேராப் போய் போலீஸ்கிட்டயே கேட்டுரலாம். தீர்மானத்துடன் நடந்தேன்.

    ஆமாப்பா. நேத்தைக்கு நடந்த சம்பவத்த விசாரிச்சுட்டுப் போலாம்னு வந்திருக்கோம். இன்னும் இரண்டு அதிகாரிகள் வரணும். வந்தவொடனே ஒவ்வொரு கடையா விசாரிப்போம்.

    சம்பவமா. என்ன ஆச்சு சார். பதட்டத்துடன் கேட்கிறேன்.

    ஏம்பா.. இங்க கடை வைச்சிருக்கேன்னு சொல்லற. நடந்த திருட்டப் பத்தி ஒண்ணுமே தெரியாதா.

    திருட்டா…… அச்சச்சோ.. என் கடை என்ன ஆச்சோ. பதட்டத்துடன் அவரிடம் விடைபெற்று ஓடினேன். கடையைத் திறந்தவுடன்தான் நிம்மதி. என் கடைக்கு ஒண்ணுமில்ல. வேற எங்க திருட்டு போயிருக்கும். எப்படியோ. நமக்கு ஒண்ணுமில்ல. அவங்க விசாரிச்சுட்டு வரும்போது தெரிஞ்சுக்கலாம்.

    மொத்தம் நூற்றுநாற்பது கடைகள் உள்ள வணிக வளாகம். எங்க, யாருக்கு திருட்டு போச்சோ. இன்னிக்கு முழுசும் அப்டியே கழிஞ்சுபோச்சு. டீ குடுக்க வர பையன் தொடங்கி சுத்தம் செய்யற அண்ணா வர எல்லாரும் போலீஸ் விசாரணையப் பத்தியே பேசிக்கிறாங்க. ஆனா யாருக்கும் எதுவும் தெரியல.

    மதிய உணவுக்கப்புறம்தான் என் கடைக்கு வந்தாங்க. சரியா இரண்டு நிமிடம் நின்னிருப்பாங்க. பிரச்சினை ஒண்ணுமில்லனு தெரிஞ்சவொடனே ஒரு போட்டோமட்டும் எடுத்துட்டுக் கிளம்பிட்டாங்க. அவங்க போனப்புறம் பக்கத்து பிளாக் இரண்டாவது தளத்துல மின்சாதனப் பொருட்கள் விக்கற கடையிலேந்து வாஷிங்மெஷின் திருடுபோயிடுச்சுனு பேசிக்கிட்டாங்க. எது எப்டியோ. ஒருவழியா கடைய மூடி வீட்டுக்குவந்து டிவி நியூஸ் பாத்துக்கிட்டு இருக்கேன்.

    எல்லா சேனலிலயும் எங்க வணிகவளாகத்தோட போட்டோதான்.

    போலீஸின் அதிரடி நடவடிக்கை. கயவர்கள் கட்டாயம் பிடிபடுவார்கள். போன்ற வாசகங்களுடன். இதில போலீஸ் உயரதிகாரி தன்னோட பேட்டியில காவல்துறை உங்கள் நண்பன். உங்களின் பாதுகாப்பு எங்கள் கையில். நிம்மதியாக இருங்க. ‘ஆயிரம் காக்கைக்கு ஓர்கல்’னு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்க. அதுபோல இந்த ஒரு திருடனுக்கு நாங்க குடுக்கப்போற தண்டனையப் பாத்து மத்தவன் எவனும் சின்னப் பொருளக்கூட திருட நினைக்கமாட்டான்னு பேசிக்கிட்டிருக்கார்.

    என்ன ஆச்சு திடீர்னு. நாட்டுல தினமும் ஒவ்வொரு இடத்துலயும் கொஞ்சநாளா திருட்டு அதிகரிச்சுட்டுதான் இருக்கு. ஒரு வாஷிங்மெஷின்  திருடுபோனதுக்கு இவ்வளவு அளப்பறையா. ஒருவேள கடை ஓனர் அரசியல்வாதியா இருப்பாரோ. அல்லது புதுசா வந்திருக்கிற உயரதிகாரி நியாயமானவரோ. எப்படியோ அவர்சொல்ற மாதிரி திருடங்களே இல்லாமப் போனா என்னயமாதிரி வியாபாரிகளுக்கு நிம்மதிதான்.

    சாப்பிட வாங்க. மனைவி அழைக்கிறாள்.

    பாடல் 36 

    விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
    முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
    அளிந்தார்கண் ஆயினும் ஆராயா னாகித்
    தெளிந்தான் விளிந்து விடும்.

    பழமொழி – ‘ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்’

    நான் சொன்னமாதிரியே ஆகிப்போச்சு பாத்தியா. ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா புலம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த பொண்ணு மேல விழுந்து ஈஷிக்கிட்டு நிக்கறதப் பாத்தே நான் கண்டுபிட்டிச்சிட்டேன். இமாசலப்பிரதேசத்தில்  கசௌலி எனும் ஊரில் வசிக்கும் என் வீட்டிற்கு அம்மா எப்போதாவது தான் வருகிறாள். நாங்க வருசத்துக்கு ஒருதடவ ஊருக்குப் போயிடறதால சந்தர்ப்பம் கிடைக்கறதில்ல. மேலும் மாலதியும் டீச்சரா வேல பாக்கறதால அம்மாக்கு இங்க வந்தா போர்தான். இந்த வருசம்தான் டில்லி சித்தப்பா பெண் கல்யாணத்த சாக்கா வச்சி ரெண்டுதடவ வந்திருக்காங்க.

    மனைவி மாலதி அதிகம் பேசற டைப் இல்ல. அக்கம்பக்கத்து வீடுகள்ல எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் வச்சுக்குவா. இது மலைப் பகுதிங்கறதால தனித்தனி வீடுகள்.அதுவும் எங்கவீட்டுப்பக்கத்துல மூணு வீடுகள்தான் இருக்கு. மத்தபடி மேட்டுமேல ஏறிப்போனா என் நண்பன் விஜய் வீடு. கூட இரண்டு வீடுகள் இருக்கு. அவங்க யாரையும் எனக்குத் தெரியாது.

    நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் அவனும் ஒருகிலோமீட்டர் நடந்தே போய் பாய் கடையில இஞ்சி டீ குடிச்சிட்டு வருவோம். இப்ப சமீபத்துலதான் வீட்டுப்பக்கத்துல குடியிருக்கிற பெங்காலி பொண்ணு தன்னு பாத்ரா ப்ரெண்ட் ஆனா. மாலதி வேலை பாக்கற சரஸ்வதி வித்யாலயால கணக்கு டீச்சரா சேந்திருக்கா. எனக்கு புத்தகம் வாசிக்கற பழக்கம் இருக்கறதால அப்பப்ப வந்து புக் வாங்கிக்கிட்டுப் போவா.

    காலையில ரெண்டுபேரும் சேந்துதான் ஸ்கூல் போவாங்க. கொஞ்சம் பழகினப்புறம் சொல்ல ஆரம்பிச்சா உங்க மனைவி ரொம்ப ரிசர்வ்ட் டைப் போல. கேட்ட கேள்விக்குப் பதில் அவ்வளவுதான். எவ்வளவு முயற்சித்தும் பேசவே மாட்டேங்கிறாங்கனு. எல்லாம் கொஞ்சநாள் நல்லாத்தான் போயிக்கிட்டிருந்தது. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சா. மாலதி இருக்கிறதப் பத்தி கொஞ்சம் கூடக் கவலைப்படாம சத்தமா பேசிச் சிரிச்சு என்னய வம்புக்கு இழுப்பா.

    சனி ஞாயிறுகளில் விஜய் குடும்பத்தோட சில சமயம் மங்கி ஹில்ஸ் வரை நடந்து ஏறிட்டுவருவோம். அவன் கிறித்துவன்ங்கறதால அனுமார் கோவிலுக்குள்ள வரமாட்டான். சிலநேரம் அவனுக்காக நாங்க எதிர் மேட்டிலிருக்கிற சர்ச்சுக்குப் போவோம். தன்னு வந்ததிலேந்து அவளும் அண்ணா அண்ணானு எங்ககூட ஒட்டிக்கிட்டு வர ஆரம்பிச்சா.  எதுசெஞ்சாலும் அவ இல்லாம இல்லங்கற நெலமைக்கு வந்திருச்சு. அப்பதான் அம்மா சித்தப்பா பொண்ணு நிச்சயதார்த்தம் அட்டெண்ட் பண்ணிட்டு இங்க வந்திருந்தாங்க.

    இந்தப் பொண்ணு யாரு என்னன்னு விசாரிடா. கூடப்பொறந்தவ மாதிரி உன் வீட்ல ரொம்பதான் உரிமை கொண்டாடறா. அப்பா அம்மா எங்க இருக்காங்களாம்? அடுக்கடுக்கான கேள்விகள். அதுவரை நாங்கள் அதைப்பற்றி கவலைகூடப் படவில்லை.

    சொல்லிவச்சாமாதிரி அம்மா ஊருக்குப்போயிட்டு ஆறுமாசம் கழிச்சு திரும்ப இப்ப கல்யாணத்துக்கு வரதுக்குள்ள இவ்வளவு பிரச்சினை. அவ வீட்டுக்கு ஒரு சிடுமூஞ்சி ஆசாமி போனமாசம் வந்தாரு. அவர எங்களுக்கு மாமானு அறிமுகப்படுத்தினா. அவர் ஏதோ சுற்றுலாவுக்காக வரவங்க தங்கறதுக்கு ரிசார்ட் கட்டி வாடகைக்கு விடப்போறாராமா. அதனால இங்க ஒரு வருசம் தங்குவார்னு சொன்னா.

    என்னமோ நாங்க தன்னுவோட கேர்டேக்கர் மாதிரி அவரும் உரிமையா எப்பபாத்தாலும் எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சார். இடம் பாத்து காண்ட்ராக்டர் புடிக்கிற வரை என்னயும் விஜயையும் கூட்டிக்கிட்டு திரிஞ்சாரு. சரி கார் இருக்கறதால உதவி கேக்கறாருனு நெனைச்சோம். விஜய்கூட என்னடாஇந்த ஆளு மூஞ்சிய சிடுசிடுனு வச்சிக்கிட்டு காரியத்திலயே குறியா இருக்காருனு சொன்னான். தன்னு கேட்டுக்கிட்டதால உதவி பண்ணினோம்.

    திடீர்னு அந்த ஆளு ஓடிப்போயிட்டாராமா. தன்னு வந்து சொல்றா. அண்ணா அந்த மாமா எனக்கு தூரத்து உறவுதான். புரோக்கர், காண்ட்ராக்டர் எல்லாருக்கும் என் அட்ரசையும், உங்க ரெண்டுபேர் அட்ரசையும்தான் குடுத்திருக்காராம். புரோக்கர்பணம் கேட்டு போன்ல மிரட்டறான். எல்லாத்தையும் செட்டில் பண்ணி குளோஸ் பண்ண மூணுலட்சம் செலவாகும். போலீஸ் கேசாயிடுச்சின்னா நம்மளுக்குதான் பிரச்சினை.

    என்கிட்ட ரெண்டு லட்சம் இருக்கு. நீங்களூம் விஜய் அண்ணாவும் ஒருலட்சம் ஏற்பாடு பண்ணினா போதும்.  தெளிவான ஹிந்தியில் பேசிவிட்டுப் போய்விட்டாள்.

    மாலதி அம்மாவுக்கு மொழிபெயர்த்துச் சொன்னவுடன் கிடைக்கும் வசவுதான் இது. நம்மகிட்ட பாசமா இருக்கறவன்கிட்டயே பாத்துதான் பழகணும்னு இருக்குறப்போ இந்தமாதிரி யாரு என்னனு சொல்லாமயே வந்து உரிமை கொண்டாடற தன்னு மாதிரி ஆளுங்களையும் எப்ப பாத்தாலும் சிடுசிடுனு கோவக்காரன் மாதிரியே காட்டிக்கிட்டு காரியத்துலயே கண்ணா இருக்கற அவ மாமாவையும் ஆராயாம நம்பின உன் மாதிரி ஆளுங்க  நெலமைய பழமொழி நானூறே சொல்லுதே. ‘ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்’னு.

    பெரியவங்க பேச்ச எங்க கேக்கறீங்க. திரும்ப அந்தப் பொண்ணுவந்தா. உன் பிரச்சினை உன்னோடனு மூஞ்சியில அடிச்சா மாதிரி சொல்லிடு.  போலீசு கீலீசு எல்லாம் ஒண்ணும் வராது. இவளே நாடகம் ஆடறாளோ என்னமோ. உன்னால முடியலன்னா சொல்லு நான் பேசறேன். அத அவளுக்குப் புரியறமாதிரி மொழிபெயர்த்து சொல்லிடு.

    சொல்லிவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள் அம்மா.

    Share
  • குறளின் கதிர்களாய்…(316)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(316)

    விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
    வாக்கம் பலவுந் தரும்.

    -திருக்குறள் – 522 (சுற்றந்தழால்)

    புதுக் கவிதையில்...

    அன்பு
    அகலாத சுற்றம்
    ஒருவன்
    அடைவது பெருஞ்சிறப்பு..

    அவ்வாறு கிடைப்பது,
    அவனுக்கு
    அதிகமாய் வளர்தல் நீங்காத
    அளவற்ற செல்வங்கள்
    பலவற்றை
    அள்ளிக் கொடுக்கும்…!

    குறும்பாவில்...

    அன்பு நீங்காச் சுற்றமதை
    அடைந்திடும் ஒருவனுக்கு வளர்தல் நீங்காப் ,
    பலசெல்வம் வந்து சேரும்…!

    மரபுக் கவிதையில்...

    அகில வாழ்வி லொருவனுக்கு
    அன்ப தகலாச் சுற்றமது
    மகிழ்ச்சி யளிக்கும் பெரும்பேறாய்
    மனதில் தருமே இன்பமதை,
    மகிமை மிக்கப் பேறிதுதான்
    மறைத லில்லா வளர்ச்சியுடன்
    வகைகள் பலவாய்ச் செல்வங்கள்
    வரவே வைக்கு மவனுக்கே…!

    லிமரைக்கூ..

    அன்பு அகலாச் சுற்றம்
    அமைந்தவன் இருப்பிடமே குறையாச் செல்வம்
    பலவும் சேரும் முற்றம்…!

    கிராமிய பாணியில்...

    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்,
    நல்ல ஒறவுகளோடச் சேந்திருப்பது
    செல்வத்தில யெல்லாம் பெருஞ்செல்வம்..

    அன்பு கொறயாத
    ஒறவு கெடைப்பது பெருஞ்செல்வம்,
    அது கெடைச்சவங்கிட்ட
    அள்ளக் கொறயாத
    பலவக செல்வமெல்லாம்
    அதுவா வந்து சேருமே..

    அதால
    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்,
    நல்ல ஒறவுகளோடச் சேந்திருப்பது
    செல்வத்தில யெல்லாம் பெருஞ்செல்வம்…!

    Share
  • பூனைகளைப் புரிந்துகொள்ள – நிர்மலா ராகவன் நேர்காணல்

    பூனைகளைப் புரிந்துகொள்ள – நிர்மலா ராகவன் நேர்காணல்

    அண்ணாகண்ணன்

    மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன், 30 ஆண்டுகளாக இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவரது நூல்கள் பலவும், அச்சு நூல்களாக, மின்னூல்களாக, ஒலி நூல்களாக வெளிவந்துள்ளன. வல்லமையில் தொடர்ந்து பத்திகள் எழுதி வருகிறார். பாடல்கள் புனைந்து பாடியுள்ளார். எழுத்தாளர் என்ற முகத்தைக் கடந்து, இவருக்கு இன்னொரு முகமும் உண்டு. இவர், பூனைகள் வளர்த்து வருகிறார்.

    பூனைகள் தொடர்பான எனது காணொலிகள் சிலவற்றை அண்மையில் யூடியூபில் வெளியிட்டேன். அதில் பூனைக்கு என்ன மன அழுத்தம் என்று கேட்டிருந்தேன். பூனைக்கு எதனால் எல்லாம் மன அழுத்தம் ஏற்படும் என எனக்கு விளக்கினார்.

    அதைத் தொடர்ந்து, பூனைகள் தொடர்பான எனது கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாகவும் பூனையுடனான அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலும் இந்த நேர்காணலை வடிவமைத்தோம்.

     

    இந்த அமர்வில், பூனைகளின் இயல்புகள், நடத்தை, பழக்க வழக்கங்கள், உணர்வுகள் உள்ளிட்ட பலவற்றையும் மிக அழகாக விளக்கியுள்ளார். பூனையின் அசைவுகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என விளக்கினார் (பூனை மல்லாக்கப் படுத்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?).

    மனித மொழியைப் பூனை புரிந்துகொள்கிறது என்றார் (பூனைக்குத் தமிழ் புரியும்). பூனை கர்நாடக சங்கீதமும் பாடும் (விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியை பூனை அசையாமல் உட்கார்ந்து பார்த்தது). பூனைக்கு மனிதனை விட ஐந்து மடங்கு அதிகமான நுண்ணிய கேட்கும் திறன் உண்டு என்றார். பூனையின் வேட்டைத் திறன் பற்றியும் விளக்கினார் (இவர் வீட்டுப் பூனை, நான்கு பாம்புகளைக் கொன்றுள்ளது).

    பூனை வளர்ப்போர், வளர்க்க விரும்புவோர் ஆகியோருடன் பூனைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் பதிவை அவசியம் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவள்ளுவர் யார்? – 5

    திருவள்ளுவர் யார்? – 5

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவருடைய பெயரைக் காரணம் காட்டி அவர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுடைய கருத்து மிக மிகத் தவறானது.

    திருவள்ளுவருக்குத் திருவள்ளுவர் என்ற பெயரைத் தவிர நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என்ற பெயர்களும் உண்டு. “திருவள்ளுவர்” என்ற அவருடைய பிரபலமான பெயரே “திருவல்லவன்” என்ற பெயரின் மருவிய வடிவம்தான். பிங்கல நிகண்டிலும் சூடாமணி நிகண்டிலும் கணவனைக் குறிக்கும் பெயர்களின் வரிசையில் “வல்லவன்” என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது. “திருவல்லவன்” என்றால் திருமகளின் கணவனான திருமால் என்று பொருள். ஆகவே “திருவல்லவன்” என்பது திருமாலின் பெயர்.

    ‘குறள்’ என்றால் குட்டையான என்று பொருள். திருமால் குறள் வடிவெடுத்து வந்து தன் திருவடிகளால் உலகங்களை அளந்தார். இவரும் குட்டையான குறள் வெண்பாக்களால் அறிவுலகை அளந்தார். அதனால் இவருக்குத் “திருவல்லவன்” என்ற பெயர் பொருத்தமானதுதான். இந்தத் “திருவல்லவன்” என்ற பெயர்தான் நாளைடைவில் “திருவள்ளுவன்” என்று மருவிவிட்டது. ஆகவே இவரது பெயரை வைத்து இவரைத் தாழ்ந்த குலத்தவர் என்று கூறுவது பரம அபத்தமாகும். நீதிநூல் என்பது மனித சமூஹத்திற்கான சட்டம். அதை அரசனுக்கு அறிவுரை கூறும் ஸ்தானத்தில் இருப்போரால் தான் எழுத முடியும்.

    இதுதவிர, அவரது படைப்பான திருக்குறளே அவர் யார் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. எந்த ஒரு வர்ணத்தவனும் தன் வர்ணத்தைப் பற்றிய குறை நிறைகளைப் பற்றித்தான் சிந்திப்பானேயொழிய மற்ற வர்ணத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான். ஒழுக்கம் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறவந்த இடத்தில் மற்ற வர்ணத்தவரைப் பற்றிப் பேசாமல் அந்தணரின் ஒழுக்கம் பற்றிப் பேசுகிறார் திருவள்ளுவர். அதுவும் அந்தணனின் பிறப்பு, உயர்ந்த பிறப்பு என்கிறார். கீழ்க்குலத்தைச் சேர்ந்தவனால் இப்படிக் கூற முடியுமா?

    மேலும் எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை பூண்டு ஒழுகுவதால் அந்தணர் அறவோர் எனப்படுகின்றனர் என்று அந்தணருக்கு ஓர் இலக்கணத்தைக் கூறுகிறார். அந்த இலக்கணப்படி வாழ்ந்த அந்தணராக அவர் இருந்ததால் தான் கொல்லாமை பற்றி அவரால் எழுத முடிந்தது. மாட்டுக்கறி தின்னும் ஒரு மனிதனால் கொல்லாமை பற்றியும் புலால் மறுத்தல் பற்றியும் மதுப் பழக்கத்தைக் கண்டித்தும் எழுத முடியுமா? அதனால் திருவள்ளுவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்தான். அதற்கு அவர் எழுதிய திருக்குறளே சாட்சி.

    திருவள்ளுவர் தனது நூலில் வேதத்தையும் வைதிக வேள்விகளையும் வைதிக அந்தணர்களையும் வர்ண தர்மங்களையும் ஆதரித்துப் பேசியிருக்கிறார் என்பதை இதுவரை விரிவாகப் பார்த்தோம். இனி அவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்பது பற்றிப் பார்ப்போம்.

    திருவள்ளுவரின் சமயம்

    திருவள்ளுவர் ஸநாதன வைதிக சமயத்தில் சொல்லப்படும் மனித வாழ்வின் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு இலக்குகளைப் பற்றியும் கல்வி, இல்வாழ்க்கை, விலகல், துறவு என்ற நான்கு ஆஶ்ரம தர்மங்களைப் பற்றியும் தனக்கே உரிய முறையில் தனது நூலில் எழுதியிருக்கிறார். இதுதவிர தெய்வங்கள் என்று எடுத்துக்கொண்டால் திருமால், இந்திரன், லக்ஷ்மி, பிரஹ்மா, பித்ருக்கள், யமன் என்ற வைதிக தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் தான் திருக்குறளில் காணப்படுகின்றன.

    திருமாலை இரண்டு (610, 1103) குறட்பாக்களிலும் திருமகளை ஐந்து (84, 179, 519, 617, 920) குறட்பாக்களிலும் நேரடியாகவே குறிப்பிடுகிறார். யமனை ஐந்து (269, 326, 765, 1083,1085) குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். பிரஹ்மாவைப் பற்றி 1062ஆம் குறளிலும், இந்திரனைபற்றி 25ஆம் குறளிலும் பித்ருக்களைப் பற்றி 43ஆம் குறளிலும் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது திருவள்ளுவர் ஒரு ஸநாதன வைதிக மதத்தைச் சேர்ந்தவர் என்பது தான் புலப்படுகிறது.

    ஸநாதன வைதிக சமயம் தான் திருவள்ளுவர் காலத்திலும் அவருக்கு முற்பட்ட சங்க காலத்திலும் தமிழ்நாட்டில் நிலவி வந்த ஒரே சமயம். ஸநாதன வைதிக சமயத்தில் பரம்பொருளாகச் சொல்லப்படும் கடவுள் திருமால்தான். வேதத்தை அடிப்படையாகக்கொண்ட வேள்வி மூலமான வழிபாடே திருமாலைக் குறித்த வழிபாடுதான்.

    “கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்”, “வேதத்து மறை நீ”, “விறல் மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும் அறனும் நீ”, “கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும், புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி, திகழ் ஒளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும், நின் உருபுடன் உண்டி பிறர் உடம்படுவரா, நின்னொடு புரைய அந்தணர் காணும் வரவு” , “ஏந்தல் சான்ற இடனுடை வேள்வி, ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி, மாயவண்ணனை மனன் உறப்பெற்று” முதலிய சங்க இலக்கிய வரிகள் வேதத்தில் சொல்லப்படும் பரம்பொருளும் வேள்வியால் ஆராதிக்கப்படும் பரமனும் திருமாலே என்பதைத் தெளிவாக முழங்குகின்றன.

    சங்கத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலப் பகுதிக்குத் தக்கவாறு நான்கு தெய்வங்களையும் மற்றும் சில சிறு தெய்வங்களையும் வழிபட்டிருந்தாலும் அவர்கள் பரம்பொருளாகக் கருதிய ஒரே தெய்வம் திருமால்தான். வேறு தெய்வங்களை அவர்கள் பரம்பொருளாகக் கருதவில்லை. இவ்விஷயம் சங்க இலக்கியங்களில் தெளிவாக உள்ளது. ”அருள் குடையாக அறம் கோலாக இருநிழல் படாமை மூவேழுலகமும் ஒரு நிழலாக்கிய ஏமத்தை” என்று தமிழகம் மட்டுமல்லாது அகில உலகிற்கும் திருமாலே பரம்பொருள் என்று கூறியிருக்கிறார்கள் சங்கத் தமிழர்கள்.

    வேள்வி வழிபாட்டின் நீட்சியாக ஆலய வழிபாடு தோன்றிய காலத்திலும் நம் நாட்டில் முதலில் தோன்றிய ஆலயங்கள் திருமாலுக்குரிய ஆலயங்களே. காலத்தால் முற்பட்ட சங்க இலக்கியங்களில் திருவரங்கம், திருவேங்கடம், திருவெஃகா, திருவனந்தபுரம் முதலிய திருமாலின் திவ்ய தேசங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே ஓழியத் தற்காலத்தில் பிரபலமாகவுள்ள மற்ற தெய்வக் கோயில்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்புக்கூடக் காணப்படவில்லை.

    மேலும் பகவானுடைய அவதாரப் பெருமைகளும் பரத்வமும் ஸ்ரீவைஷ்ணவ ஸிந்தாந்தக் கோட்பாடுகளும் பாஞ்சராத்ர ஆகமக் குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. இதனால் தொல்பழம் வைதிக சமயமான ஸ்ரீவைஷ்ணவ மதம் தான் பழம் தமிழரின் மதம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. பழந்தமிழரான திருவள்ளுவரின் மதமும் அந்த மதம் தான் என்பதை அவரது நூலான திருக்குறளே தெளிவாகக் காட்டுகிறது. எப்படியென்று பார்ப்போம்.

    – தொடரும்

    Share
  • பழகத் தெரிய வேணும் – 31

    பழகத் தெரிய வேணும் – 31

    நிர்மலா ராகவன்

    தன்னம்பிக்கை கொண்ட பெண்ணா? ஐயோ!

    அம்மாவின் பாராட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒரு சின்ன உதவி செய்துவிட்டு, “நான் சமத்து, இல்லே?” என்று கேட்பான் நான்கு வயதான அக்குழந்தை.

    திரும்பத் திரும்ப ‘நான் குட் பாய், இல்லே?’ என்னும் குழந்தையிடம், `உனக்கு ஆனாலும் ரொம்பத்தான் கர்வம்!’ என்று பழிப்பவர்கள் குழந்தைகளின் மன வளர்ச்சியைப் புரிந்துகொள்ளாதவர்கள்.

    அக்குழந்தை பிறரைத் தாழ்த்தவில்லை. தான் எப்படிப்பட்டவன் என்று பிறர் சொல்லித்தான் தெரியவேண்டிய நிலை அப்பிராயத்தில்.

    பாராட்டு கிடைத்தால், தன்னம்பிக்கையும் அவனுடன் வளரும்.

    ஆனால், பெரியவர்களாகியும் பிறரைத் தாழ்த்தி, தன்னை உயர்த்திக் கொள்பவர்கள்தாம் அகங்காரம் (ஈகோ) பிடித்தவர்கள்.

    ஆண் ஒருவன் பிறர் தன்னை அவமானப்படுத்தும்போது எதிர்த்தால், ‘தன்னம்பிக்கை உடையவன்’ என்று பாராட்டும் இவ்வுலகம்.

    ஆனால், தன்னம்பிக்கை கொண்ட பெண் அப்படிச் செய்யும்போது, கர்வி, அகங்காரம் பிடித்தவள் என்று பலவாறான பழிச்சொற்களுக்கு ஆளாகிறாள். எல்லாம், ஆணாதிக்கவாதிகளின் கைங்கரியம்தான்!

    சில சமயங்களில், நம் கௌரவத்தை நிலைநாட்டிக்கொள்ள கர்வமாக இருப்பதுபோல் நடக்க வேண்டியிருக்கிறது.

    கதை

    கோலாலம்பூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், சங்கத் தலைவர் ஒருவர் ஆணித்தரமாகக் கூறியது: ”எல்லாப் பெண்களுக்கும் தம் கணவரைக் கொல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதனால்தான் தொலைக்காட்சியில் வரும் தமிழ் சீரியல்களை விரும்பிப் பார்க்கிறார்கள்!”

    பெண்களை மட்டம் தட்டுவது அவருக்கு வேண்டுமானால் பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கலாம்.

    ஆனால், எல்லாப் பெண்களும் தலையைப் பக்கவாட்டில் அசைத்து, நெற்றியைச் சுருக்கியபடி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

    எனக்கும் அவர் கருத்தில் உடன்பாடில்லை.

    ‘நம்மை அவமானப்படுத்திவிட்டாரே!’ என்று குமுறிய பெண்கள் சார்பில் நான் மேடையேறி, “நான் சீரியல் பார்ப்பதில்லை,” என்று ஆரம்பித்தேன்.

    எதிர்ப்பு எழலாம் என்பதையே எதிர்பாராதிருந்தவர் அவசரமாக, “அப்போ, உங்க திருமண வாழ்க்கையிலே பிரச்னை இல்லை,” என்று குறுக்கிட்டு, சமாளிக்கப் பார்த்தார்.

    தான் எப்படிப்பட்டவன் என்பது புரியாதவனுக்குத்தான், ‘நீங்கள் என்னைப்போல் இல்லை!’ என்று வெளிப்படையாகவே பிறரைத் தாழ்த்திப் பேசும் குணம் எழுகிறது.

    “எனக்குத் தெரிந்த அன்பான பெண்களும் பார்ப்பதுண்டு. ‘இப்படிக்கூட பெண்கள் இருப்பார்களா!’ என்ற மலைப்பு எழ, இத்தகைய நாடகங்களைத் தொடர்ந்து பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்,” என்று விவரித்துவிட்டு, “இது ஒரு பெண்ணின் கண்ணோட்டம்,” என்று முடித்தேன்.

    அரங்கத்தில் சிரிப்பு.

    பிறரைப் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசுகிறவர்கள் தன்னம்பிக்கை இருப்பதுபோல் காட்டிக்கொள்பவர்கள்.

    எல்லாரும், எப்போதும், தம் அதிகாரத்திற்குப் பணிவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு, மரியாதையை எதிர்பார்ப்பவர்கள்.

    என்னைப் போல் சிலர், ‘நம்மை மதிக்காதவர்களை நாம் என் மதிக்கவேண்டும்?’ ‘யாரும் நம்மைத் தாழ்த்த விடக்கூடாது,’ என்று சிந்தித்து, அதன்படி நடப்பதை எதிர்பாராதவர்கள்.

    தன்னம்பிக்கை அகங்காரமில்லை

    பெரியவர்களானதும், தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு, பிறரது பாராட்டு அவசியமில்லை. வெற்றி, தோல்வி இரண்டையும் ஒரே மாதிரி ஏற்பது இத்தகையவர்களின் குணம்.

    வேறு பலர் பிறர் புகழ்வதை எதிர்பார்த்துத்தான் ஏதாவது செய்கிறார்கள்.

    “வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது” என்று யாரோ, என்றோ சொல்லியிருப்பது இவர்களுக்குப் பொருந்தாது. கொஞ்சமாகச் செய்தாலும், அவர்களது `ஆற்றல்’ பலருக்கும் தெரியும்படி செய்வார்கள். அப்போதுதானே பிறர் புகழ்வார்கள்!

    “வெற்றி பெறுவது கடினம். அதைவிடக் கடினம் அதைப் பற்றித் தம்பட்டம் அடிக்காமல் இருப்பது!” என்று கூறுகிறார் திரு.அனுபவசாலி.

    அடக்கம் என்பது..

    ஒருவர் தன்னைப்பற்றிய உண்மையை ஒத்துக்கொள்வதுதான் அடக்கம்.

    அமெரிக்காவில் பேராசிரியையாக இருக்கும் என் மகள், “நான் முன்னுக்கு வந்த காரணம் என் தாய்தான். பள்ளிக்கூடமும் பெரிதளவில் உறுதுணையாக இருந்தது,” என்று சொல்லக் கேட்டு அங்குள்ளவர்கள், “உன் வெற்றிக்கு நீ மட்டும்தான் காரணம். அதில் ஏன் பிறருக்குப் பங்கு அளிக்கிறாய்?” என்று கோபித்தார்களாம்.

    இவ்வாறு நன்றியைக் கொன்றுதான் அகங்காரம் வளர்கிறது. இங்கு நேர்மைக்கோ, எளிமைக்கோ இடமில்லை.

    காலம் மாறும்போது

    மனைவி இருக்க, வேறொரு பெண்ணை நாடினான் அவன்.

    “நீங்கள் ஏதோ செய்துகொள்ளுங்கள். ஆனால், என்னை விட்டுப் போய்விடாதீர்கள்!” என்று மனைவி கதறியதாகப் பெருமையுடன் எழுதிக்கொண்டான்.

    பெண்கள் ஆண்களை எதிர்ப்பது தகாத குணம், அவர்களைச் சார்ந்து இருப்பதுதான் அழகு என்று காலம் காலமாக நம்ப வைத்திருக்கிறார்கள். அவள் ஏன் கதறமாட்டாள்?

    காலப் போக்கில் சமூகமும் மாறிக்கொண்டு வருகிறது. தன்னை மிதியடிபோல் பாவிக்கும் கணவருடன் வாழ விரும்பாது, அத்தகைய பந்தங்களிலிருந்து விலகுகிறார்கள் பெண்கள்.

    இந்த நூதனப் போக்கு ஆண்களை அதிரவைக்கிறது.

    “என் மாமியாரே மனைவிக்குப் போதிக்கிறாள், ‘விவாகரத்து வாங்கிவிடு,’ என்று. வயதானவர்கள் புத்தி சொல்லவேண்டாமா?” என்று ஒருவர் என்னிடம் புலம்பினார்.

    குடும்பச் செலவுக்குப் பணமே கொடுப்பதில்லை என்று அவர்மேல் புகார் என்று மட்டும் தெரிவித்தார்.

    பின், கிடைக்கும் சம்பளம் எந்த வழியில் செலவழிகிறது? அதை நான் கேட்கவில்லை.

    வேண்டாத பாடம்

    குழந்தைகள் நல்லது, கூடாதது இரண்டையும் பெரியவர்களிடமிருந்துதான் கற்கிறார்கள்.

    கதை

    பாட்டி மருமகளான தன் தாயை மட்டமாக நடத்துவதையும், அவள் அதைப் பொறுத்துப்போவதையும் பார்த்தே வளர்ந்தவள் பிருந்தா.

    அவளோ பாட்டிக்குச் செல்லம். அதனால், தான்தான் உயர்த்தி, அம்மாவிடம் ஏதோ குறை என்று தோன்றிப் போயிற்று அந்த எட்டுவயதுப் பெண்ணுக்கு. அவளுடைய அகங்காரம் பெற்ற தாயையே தாக்கும் அளவுக்கு வளர்ந்தது.

    ஒரு முறை, பாட்டியைப் போலவே அச்சிறுமியும் அலட்சியமாக, அவமரியாதையாக தன் அம்மாவை நடத்த முற்பட்டதைக் கண்டுவிட்ட நான், “நம் குழந்தைகளே நம்மை மதிக்காவிட்டால் எப்படி? இனிமே இப்படிப் பேசினா, வாயில ரெண்டு போடு,” என்றேன் கோபமாக. (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்!)

    ‘குழந்தைதானே!’ என்ற அன்புடன், மகளே தன்னைச்  சிறுமைப்படுத்துவதைப் பொறுத்துக்கொண்டாள் தாய்.

    மிகவும் தாழ்ந்து போய்விட்டால், நமக்கே நம்மைப் பிடிக்காமல் போய்விடும் அபாயம் இருக்கிறதே!

    அன்புக்காக சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்கலாமா?

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 11 (குறமகள்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 11 (குறமகள்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    குறமகள்  என்னும் பாத்திரம் தேவைக்கேற்ப சிறுபாத்திரமாகவும், தலைமைப் பாத்திரமாகவும், முருகனின் காதல் மனைவி வள்ளியைக் குறிப்பதாகவும் அமைவதே அதன்  தனித்தன்மை ஆகும். குறிஞ்சித் திணை சார்ந்த தலைவியும்; புனம் காக்கும் பெண்டிரும் குறமகள்கள் எனினும்; வெளிப்படையாகத் தலைவியைக் ‘குறமகள்’ என்று சொல்லும் பாடல் ஒன்றே ஒன்று தான் (அகம்.- 188). அகப்பாடலில் வள்ளியும் ‘குறமகள்’ என அழைக்கப்படுகிறாள் (பரி.- 8).   அவற்றைத் தவிர்த்து குறமகள் என்னும் சிறுபாத்திரம் இடம் பெறும் பாடல்கள் மூன்று. அப்பாடல்களில் ‘குறமகள்’ தோழியின் கூற்றிலும் தலைவியின் கூற்றிலும் இடம் பெறுகிறாளே அன்றிக் காட்சியில் நேரடியாக இடம் பெறவில்லை.

    உவமை உருவாக்கத்தில் குறமகள்

    ஒரு மலைப்புறம்; அது நறவுமலி பாக்கம். அதாவது கள் மிகுந்த மலைப்பக்கத்துச் சீறூர்; அங்கே குறமகள் ஈன்ற புதல்வர். எந்த அளவு பிள்ளைமைப் பருவமெனின்; முன்கை மிகவும் சிறிது. அதைக் ‘குறியிறைப் புதல்வர்’ என்னும் தொடரால் புலவர் நமக்குப் புரிய வைக்கிறார். பெயர் தெரியாத அப்புலவருக்கு இந்தத் தொடரே பெயராகவும் அமைந்தது. ஆம்; குறுந்தொகையைத் தொகுத்தோர் அவருக்குச் சூட்டிய பெயர் குறியிறையார்.

    இந்தப் புதல்வருடன் அவர் முரண்படுத்திக் காட்டுவது ஒரு யானைக்கன்று. அக்கன்று இரும்பிடி ஈன்ற கன்று; அதாவது கருமையான பெண்யானையின் கன்று. அந்தக் கன்றும் இளம்பருவத்தினை உடையதே. மெல்லிய தலையை உடைய கன்றாக  இருப்பினும்  யானையின் முழந்தாள் குறிப்பிட்டுச் சுட்டிக்  காட்டக்கூடிய அளவு தோற்றமளித்தது.

    “நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
    குறியிறைப் புதல்வ”ரோடு (குறுந்.- 394) அக்கன்று சுற்றிச்சுற்றி ஓடி விளையாடி இனிமை பயக்கிறது. காலம் செல்லச் செல்ல நிலைமை  மாறுகிறது. யானைக்கன்று வளர்ந்த பிறகு தினைப்புனத்தை மேய்ந்து துன்பத்தைத் தருவதாகி விட்டது.

    ஆக இருவேறு சூழல்கள்; ஒன்று குழந்தைப் பருவத்துச் சூழல்; மற்றொன்று வளர்ந்த பிறகு தோன்றும் சூழல்.  முதல் காட்சியில் யானைக்கன்றுடன் சேர்ந்து விளையாடும் சிறார்; இரண்டாம் காட்சியில்  புனத்தில் மேய வந்த யானையை விரட்டும் இளைஞர். அதுபோல…; என்று தலைவனை இயற்பழித்துத் தோழி பேசுகிறாள். ஆற்றவியலாத தலைவியை ஆற்றுவிக்கிறாள்.

    மேற்சுட்டிய உவமையோடு ஒப்பிடப்படுவது தலைவன் தலைவியின் கேண்மை. முதலில் தலைவனின் நகைவிளையாட்டு இனிதாக இருந்தது; பின்னர் தலைவியின் நற்பெயருக்குப் பகை ஆகிவிட்டது. இந்த உவமையை வடிவமைக்கக் கருவியாக குறமகள் என்னும் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

    உள்ளுறை உருவாக்கத்தில் குறமகள்

    கிள்ளைப் பத்தில் சிறப்பிடம் பெறுவது கிளி தான் எனினும்; அக்கிளியைக் கடியும் குறமகள் உள்ளுறையில் சிறப்பிடம் பெறுகிறாள்.

    “பின்னிருங் கூந்தல் நன்னுதற் குறமகள்” (ஐங்.- 285)

    ‘மென்தினை நுவணை உண்டு பசி தீர்கிறாள்; பின்னர் தட்டையைப் புடைத்து மலைநெற் கதிர்களைக் கொய்யவரும் சிறுகிளிகளை ஓட்டுகிறாள். இதற்கிடனான நாட்டை உடைய தலைவனே’ என்று தோழி விளிப்பதில் உள்ளுறை அழகு சேர்க்கிறது. குறமகள் தினைமாவினை உண்டு பசியாறுவது தலைவி தலைவனோடு சேர்ந்து  நுகரும் இன்பத்திற்கு ஒப்பானது. சிறுகிளி ஓட்டிக் காவலில் ஈடுபடுவது;  தலைவனது மனைச் செல்வத்தைப் பிறரொழியத் தானே நுகரும் வேட்கையைப் புலப்படுத்துவது. இத்தன்மையுடைய தலைவியைப் பற்றி அறிந்திருந்தும் அவள் மெலியும்படி நீ பிரிந்து சென்றது தகுமோ என்று தோழி தலைவனிடம் வினவுகிறாள்.

    உள்ளுறையில் இடம்பெறும் குறமகள் தான் நாடனின் தலைவியோ என்னும் ஐயம் எழாமல் இல்லை. ஆயினும் நாடனை விளிக்கும் பகுதி உள்ளுறை இடம்பெறும் பகுதியாக இருப்பதே அகப்பாடலின் பொதுவான அமைப்பு. அந்த மரபு மீறிய பாடல் எதுவும் தொகைநூல்களில் இல்லை. எனவே இங்கு ‘குறமகள்’ சிறுபாத்திரமே.

    படிமப்பொருளாகும் குறமகள்

    செவிலித் தாயிடம் தோழி அறத்தொடு நிற்பாள் எனவுணர்ந்த தலைவி ‘உயிரே போனாலும் சரி; கண்களின் பசலைக்குக்  காரணம் காமநோய் என்று சொல்லிவிடாதே’ எனப் பதறுகிறாள். அவளது பேச்சில் இடம்பெறுபவள்;

    “கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப்
    பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்” (அகம்.- 52)

    ஆவாள்.   தலைவியின் கூற்று தொடர்கிறது.  மலைப்புறத்தில் வள்ளிக்கொடி சுற்றிய வேங்கை மரத்தில் மிகவுயர்ந்த கிளையில் பொன்னை ஒத்துப் பூத்திருக்கும் பூக்களைப் பெற விரும்பிய குறமகள் ‘இன்னா இசைய பூசல் பயிற்று’கிறாள். அதாவது ‘துன்பத்தை வரவழைக்கக் கூடிய ஆரவாரம் செய்கிறாள்’  என்பது பாடலடியிலிருந்து தெரிகிறது. அதற்கு மேல் அந்த ஆரவாரம் என்ன என்பது பற்றிய விளக்கம் மற்றொரு அகப்பாடல் மூலமே நமக்குப் புரிகிறது.

    “ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்
    புலிபுலி என்னும் பூசல் தோன்ற” (அகம்.- 48)

    என்றும் செவிலியிடம் அறத்தோடு நிற்கும் தோழியே பேசுகிறாள். இப்போது துன்பத்தை வரவழைத்த பூசல் ‘புலிபுலி’ என்று ஆரவாரிப்பதென்பது ஐயமின்றிப் புலனாகிறது. அப்படிப் பூசலிட்டால் எட்டாத உயரத்தில் இருக்கும் வேங்கைப்பூ உதிரும்  என்று ஒரு நம்பிக்கை. நாம் புத்தகத்திற்குள் மயிலிறகை வைத்து மூடி ‘அது குட்டி போடும்’ என்று காத்திருந்தோமே அது போன்ற நம்பிக்கை தான்.

    இந்த ஆரவாரத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு;  அப்பூசலுக்குக் காரணம் பக்கமலையிலுள்ள குகையில் இருந்து பசுவினைக் கவரும் வலிய புலி என்று கருதித் தம் சீறூர் தனித்தொழியக் குன்றத்து மக்களெல்லாம் ஆரவாரித்து வில்லோடு சென்றனர். இது தலைவன் நாட்டில் காணக் கூடிய நிகழ்வு.

    இங்கு வள்ளிக்கொடி சுற்றிய வேங்கைமரம் தலைவன் தலைவியின் கேண்மையை உள்ளுறையாக உரைக்கும் படிமமாக உள்ளது. ஒன்று இன்னொன்றாக மனதில் படிவதே படிமம் ஆகும். புராணத்து வள்ளி ஒரு குறமகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த தொன்மக்கருத்து. அதனால் வள்ளிக்கொடியும் வேங்கை மரமும் கட்புல உருக்காட்சியாகத் தோன்றியவுடன் முறையே வள்ளிக்குறத்தி, முருகன் என்று நம் மனதில் படிகிறது.

    வேங்கை பூத்தமை கண்ட குறமகளின் ‘புலி புலி’ எனும் ஆரவாரம் ஊர் முழுவதும்  பேரிரைச்சல் எழக் காரணமாயினமை; அவர்களது கேண்மையால் பிறந்த கௌவை ஊர் முற்றும் பரவி அலராயிற்று என்னும் பொருளையும் தருகிறது.

    உள்ளுறையோடு தெரிய வரும் அக்கால மக்களின் நம்பிக்கையைப் புரிய வைப்பதற்கும், படிமப்பொருளாக்குவதற்கும் குறமகள் எனும் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

    முடிவுரை

    குறமகள் தோழியின் கூற்றிலும் தலைவியின் கூற்றிலும் இடம் பெறுகிறாளே அன்றிக் காட்சியில் நேரடியாக இடம் பெறவில்லை. உவமை உருவாக்கத்திற்கும், உள்ளுறை உருவாக்கத்திற்கும் துணை செய்பவளாகக் காணப்படுவதுடன்; படிமப்பொருளுக்குத் துணையாகி அக்கால மக்களின் நம்பிக்கையையும் புலப்படுத்துகிறாள்.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 5

    எட்டுக் கோணல் பண்டிதன் – 5

    தி. இரா. மீனா

                   அத்தியாயம் – 2 தன்னை ’உணர்தல்

    ‘இதுவரை மாயையால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த நான் இப்போது அதிலிருந்து விடுபட்டு குறைபாடுகளற்று, அமைதியானேன்’ என ஜனக மன்னர் தத்துவத்தின நுட்பமுணர்ந்து வியப்புடன் சுவானுபவம் உணர்த்தல் இரண்டாவது அத்தியாயமாகும். இதில் இருபத்தைந்து வசனங்கள் உள்ளன.

    1. படைப்பிற்கப்பால் குற்றமற்ற அமைதிமயமான அறிவே நானாகயிருக்க இத்தனை காலம் மயக்கத்தில் நான் ஏமாறினேனே.
    2. நானொருவன் இந்த உடலை ஒளிர்விப்பது போல உலகத்தையும் ஒளிர்விக்கிறேன். ஆதலால் உலகமனைத்தும் என்னுடையது அல்லது ஒன்றுமே எனதல்ல.
    3. உடலுடன் உலகை விட்டு நீங்குவதும், ஏதோ ஒரு நுட்பத்தால் என பரம்பொருள் எனக்குக் காட்டுகிறது.
    4. அலைகளும் நீர்க்குமிழிகளும் நீரிலிருந்து வேறானவையில்லை என்பது போலவே ஆத்ம வெளிப்பாடான உலகம் ஆத்மாவிலிருந்து வேறானதில்லை.
    5. ஆராய்ந்து பார்க்கும் போது ஆடை என்பது நூல் என்ற ஒன்றே என்பது போல படைப்பும் ஆன்மமயமானதாக உள்ளது.
    6. கரும்பின் சாற்றில் உண்டாகும் சர்க்கரை அதனாலேயே [சாற்றால்] வியாபிக்கப்படுவது போல உலகம் என்னிடம் உண்டாகி இடைவிடாமல் என்னால் வியாபிக்கப்படும்.
    7. தன்னையுணராத போது உலகம் உண்டாகும்; தன்னையுணர்ந்தால் உலகம் தோன்றாது. கயிற்றைப் பார்க்காதபோது அரவு தோன்றும்; கயிற்றைக் கண்டால் அரவு தோன்றாது.
    8. எனது சுயவடிவம் ஒளியேயன்றி வேறில்லை; உலகம் ஒளிரும் போது நானே ஒளிர்கிறேன்.
    9. கிளிஞ்சலில் வெள்ளியென, கயிற்றில் பாம்பென, வெயிலில் கானலென அறியாமையால் உலகம் என்பால் விகர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
    10. என்னிடமிருந்து வெளிப்பட்ட உலகம் என்னிடம்தான் ஒடுங்கும். மண்ணில் குடமும், நீரில் அலையும் பொன்னில் பணியும் போல.
    11. பிரமன் முதல் புழுவரை உலகின் அழிவிலும், அழிவின்றி நிற்கும் வியப்பு மிகும் யான் போற்றி.
    12. உடலுற்றாலும் ஒருவனாயிலகும் நானே நான்! எனக்கே வணக்கம். வருவது, போவது எங்குமெனக்கில்லை. உலகம் முழுவதும் நிறைந்திருப்பவன் நானே.
    13. உடலால் எதையும் தொடாமல், தொன்று தொட்டு உலகு தாங்குமெனக்கு நிகர் சமர்த்தானவர் எவர்? நானே நான்! என்னை வணங்குகிறேன்.
    14. என்னை வணங்குகிறேன். ஒன்றுமில்லையெனக்கு. இல்லையெனில் மனம், வாக்குகளுக்கு, இலக்கு எல்லாம் என்னுடை யதே.
    15. அறிபவன், அறிவு, அறிகின்ற பொருள் என்ற இந்த மூன்றும் உண்மையல்ல. அறியாமையால் இவை எங்கிருக்குமோ அங்கு களங்கமில்லாப் பொருள் நான்
    16. துன்பத்தின் மூலம் துவைதம். அதற்கு முன்பு பார்ப்பது முழுவதும் பொய். ஏகமாம் தூய ஞான ரஸமே நான் என்பதிலும் வேறு மருந்தில்லை.
    17. ஞானமுடையவன் நான்; அறியாமையால் சிலவற்றைக் கற்பிதம் செய்து கொண்டேன். தொடர்ந்து ஆய்ந்ததன் மூலம் எனக்கு விகற்பமில்லா நிலை வாய்த்தது.
    18. பந்தமெனக்கில்லை; மோட்சமுமில்லை. ஆதாரமற்ற குழப்பம் அடங்கியது. உலகம் என்னிடமுள்ளது; [ஆயினும்] உண்மையில் என்னிடமில்லை.
    19. உடலுடன் இவ்வுலகம் ஒன்றுமேயில்லையென்றும், ஆத்மா தூய அறிவு மயமென்றும் துணிந்தேன். ஆனால் இப்போது கற்பனை எதனிடம்?
    20. உடலும், சொர்க்க – நரகங்களும், பந்த முக்திகளும், பயமும் – இவையெல்லாம் கற்பனையே. ஞான ஆத்மாவாம் எனக்கு இதனாலென்ன பயன்?
    21. துவைதம் காணாத எனக்கு மக்கள் கூட்டம் காடு போலாகியது. எதனிடம் நான் மகிழ்வடைவேன்?
    22. உடல் நானல்ல; எனக்கு உடலில்லை. ஜீவனும் நானல்ல; ஞானமே நான். வாழ்க்கை விருப்பமே என் பந்தமாக இருந்தது.
    23. எல்லையில்லாத பெரும் கடலாகிய என்னிடம் மனமாகிய காற்றெழ பற்பல உலகத் திரைகள் திடீரென விந்தையாய்க் கிளம்புகின்றன.
    24. எல்லையில்லாத பெருங்கடலாகிய என்னிடம் மனக்காற்று ஒடுங்க, ஜீவனாகிய வியாபாரியின் உலகக் கப்பல் அழிவடைகிறது.
    25. கரையில்லாத பெருங்கடலாகிய என்னிடம் ஜீவ தரங்கங்கள் இயற்கையாகவே உண்டாகி மோதி விளையாடி ஒடுங்குகின்றன.

    [தொடரும்]

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 16

    கதை வடிவில் பழமொழி நானூறு – 16

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 33

    தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
    வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
    மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! ‘ஆகுமோ
    நந்துழுத எல்லாம் கணக்கு?’.

    பழமொழி – ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு

    என்ன உலகநாதன் ஏதோ பெரும பேசிக்கிட்டிருக்கீங்க போல. கொஞ்சம் நக்கலுடன் ஆரம்பித்தேன்.

    இது தினமும் நாங்கள் சந்திக்கும்இடம் தான். என் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பூங்கா. உலகநாதனும் நானும் பால்ய நண்பர்கள். இயல்பாகவே அதிகம் பேசும் அவனுக்கு தினமும் வரும் இந்தப் பூங்காவில் நிறைய நண்பர்கள். அவன் வீடு இங்கேயிருந்து ஒருகிலோமீட்டர் தான். நான்தான் தினமும் ஜாகிங் வந்து பத்து நிமிடம் ரெஸ்ட் எடுத்தவுடன் திரும்பவும் அரக்க பரக்க ஓடிவிடுவேன். சனி,  ஞாயிறு மட்டும் கொஞ்சம் அதிக நேரம் கிடைக்கும். என்ன செய்வது பிரைவேட் கம்பெனி வேலை. அவனுக்கு சொந்த பிசினஸ்தான்.  நினைச்ச நேரத்துக்குக் கடைக்குப்போவான். துணி வியாபாரம். அது அவங்க பரம்பரைத்தொழில்.

    இன்னிக்கு என்ன பேசிக்கிட்டிருக்கானோ கேட்போம். மனதை நிலைநிறுத்தினேன்.

    ஒண்ணுமில்லடா நான் புதுசா கட்டியிருக்கற வீட்டுக்குக் குடிபோகப்போறோம் ஆரம்பித்தான்.

    ஓ அப்டியா சந்தோசம் அது எங்க வீட்லேந்து ரொம்ப பக்கமில்ல.

    ஆமாம்.  ஆனா இனிமே லோ லோன்னு இவ்ளோ தூரம் வாக்கிங் வர வேண்டியதில்ல.  அவன் சொல்ல ஆரம்பித்தவுடன் எனக்குள் உற்சாகம் குறைந்தது. ஒருவேளை வீட்டுப் பக்கத்திலிருக்கும் வேறு ஏதாவது பார்க்குக்கு வரச் சொல்லுவானோ.

    என்னடா யோசனை. இந்த முழி முழிச்சிட்டிருக்க. நண்பனின் குரலால் சுதாரித்துக்கொண்டேன். ஒண்ணுமில்ல நீ சொல்லு.

    அதாண்டா நான் நாளையிலேருந்து பார்க் வரமாட்டேன்.  நான் குடிபோற சொசையிட்டியிலேயே ஒரு சின்ன பார்க் இருக்கு. புல்லுல கால் வச்சு நடந்தா நல்லதுன்னு தானே இத்தன தூரம் வரோம். என்னோட புது வீட்டுக்குள்ளயே ஒரு ரூம்ல சின்னதா செயற்கைப்புல் தரை இருக்கும். அதுல நடந்தாலும் இதே எபக்ட் தானாம். அப்பறம் ஜிம், நீச்சல்குளம் எல்லாம் உள்ளயே இருக்கு. விளையாட கிளப்ல டேபிள் டென்னிஸ்,  கேரம் எல்லா இன்டோர் கேமும் இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு.

    அவன் பேசப்பேச ஏதோ மனதில் நெருடிற்று.

    அவன்தொடர்ந்தான்.  நான் முதல்ல குடிபோயிடறேன். அதுக்கப்புறம் உனக்கும் ஒரு நல்ல வீட்டப் பாத்துக் கொடுக்கறேன். அங்கேயும் சேந்து என்ஜாய் பண்ணலாம். சோகமா மூஞ்சிய வச்சிக்காத.

    எனக்கு சோகமெல்லாம் இல்ல. குழப்பம் தான். அதெப்படி நீ இப்படி செயற்கை விசயங்கள்ல மயங்கிப் போய் பேசறன்னு. நீ சொல்லற ஒவ்வொண்ணும் தொடக்கத்துல வேணா நல்லா இருக்கும். அப்பறம் அதத் தொடர்ந்து பராமரிக்கணும். ஒரு வருசம்கழிஞ்சா அதே முகங்களப் பாத்துப் பாத்து போரடிச்சுடும். எப்டியிருந்தாலும் நாம இப்ப வாக்கிங் வரும்போது எத்தன பேரப் பாக்கறோம். புதுப்புதுவண்டிகள், முகங்கள்,  காற்றோடு கலந்து வரும் வாசனைகள்.  அந்த மாதிரி.

    என்னதான் நீ ரொம்ப வசதின்னு நெனச்சாலும் ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு ங்கற பழமொழி மாதிரிதான் நினைக்கத் தோணுது. நத்தைப் புழு மண்ணத் தோண்டுறதும் உழுவதற்குச் சமானம்னு சொல்லி நிலத்த  உழாம பயிர விளைவிச்சிற முடியுமா என்ன. நான் சொல்றதச்சொல்லிட்டேன். அப்பறம் உன் விருப்பம். நீ கூப்பிட்டாக்கூட நான் அந்தமாதிரி வீட்டுக்கெல்லாம் குடிவர மாட்டேன். தீர்மானமாகச் சொல்லிவிட்டு நடந்தேன் சந்தோசத்துடன்.

    பாடல் 34

    பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்
    தெருளும் திறந்தெரிதல் அல்லால் – வெருளவெழுந்து
    ஆடு பவரோடே ஆடார், உணர்வுடையார்,
    ‘ஆடுபணைப் பொய்க்காலே போன்று’.   

    பழமொழி – ஆடுபணைப் பொய்க்காலே போன்று

    ஒண்ணும் பிரச்சினையில்ல. அமைச்சர் வேதநாயகம் நம்ம கூட்டத்தார்தான். சொல்லறவிதமா சொல்லி காரியத்த முடிச்சிக்குடுத்திடறேன்.  அப்பறம் பேசினபடி தொகைய மாத்தி உட்றணும். புரிஞ்சுதா. அமைச்சரின் அள்ளக்கை மோகன் வாக்கு குடுத்ததால் பூமி பூசைக்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன். நிம்மதி பூசைக்கு அமைச்சரையே கூட்டிக்கிட்டு வரப்போறான்னு நினைச்சிக்கிட்டு இருக்கும்போது இப்டி வந்து நிக்கறான்.

    இப்ப போயி தலைய சொரிஞ்சிட்டு நின்னா எப்படி. பாங்குல பணத்த மாத்தி உடச்சொன்னப்போ குரல் நல்லா வெளிய வந்தது. இப்ப சத்தமே வர மாட்டேங்குது. என்ன விளையாட்டு இது. 450 வீடுகள் கட்டறதுன்னா சும்மாவா. அதான் சொன்னேனே. ஐந்து வீடுகள இலவசமா உங்க அமைச்சர் யாரையெல்லாம் கையக் காட்டுறாரோ அவங்களுக்குக் குடுத்துடறென்னு. அதச் சொன்னியா.

    மரியாதை குறைந்துகொண்டே போக மோகன் செய்வதறியாது நெளிந்து கொண்டே நிற்கிறான்.

    கொஞ்சம் பொறுமையா இருங்க. அவரு சம்மதிக்கத்தான் செஞ்சாரு. கூட இருந்த அவரோட நண்பர்தான் காரியத்தக் கெடுத்துட்டாரு. நீங்க வீடு கட்டப்போற இடம் முன்ன குளமா இருந்ததாலதான் பிரச்சினை. அதுக்கும் பலவிதமா சொல்லிப்பாத்தேன். எப்படியிருந்தாலும் பல வருசமா இந்த நிலம் வறண்டுதான் இருக்கு. ஏதோ ஒருகாலத்துல குளம் இருந்ததா சொல்லறாங்க. அப்டிப் பாத்தா எங்கயுமே மனுசன் வீடுகட்டி குடியிருக்க முடியாதுன்னு.

    கூட இருந்தவர்தான் அமைச்சரக் குழப்பிட்டாரு. நீதி, நேர்மை, நியாயம் எதுவுமே இல்லாம எப்படி இப்படி அனுமதி கேக்க வந்துட்டீங்க. அமைச்சருக்கு வெளிய நடக்கற நல்லது கெட்டதப் பாத்துட்டுவந்து எடுத்துச்சொல்ல வேண்டிய நீங்களே தப்பு செஞ்சீங்கன்னா அவரால எப்படி மத்த பொறுப்புகள நியாயமா கவனிக்க முடியும். அப்டி இப்டீன்னு. கடைசியில என் பேச்சு எடுபடவே இல்ல.

    அவரு இல்லாதநேரம் பாத்து திரும்பவும் வீட்டுக்குப் போய் முயற்சி பண்ணினயா.

    அங்கயும் போனேன்.  ஆனா…………..மனதுள் நிகழ்ந்ததை அசைபோட ஆரம்பித்தான் மோகன்.

    ஏன்யா….. இங்கயும் வந்துட்டீரா நீர். யாரையும் உருப்படியா செயல்பட உடமாட்டீரு போல…. கேட்டுக்கொண்டே வருகிறார் அதே நபர்.

    இவர் யாராக இருக்கக் கூடும். அமைச்சரின் நண்பரா சொந்தக்காரரா. சுத்தி சுத்தி என்னயே கேள்வி கேக்கறார்.  யோசித்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் தொடர்கிறார்.

    படிச்சுப்படிச்சு சொன்னேன் வேதநாயகத்துக்கு. இந்தமாதிரி நியாயங்கெட்ட அரைகுறை முட்டாளுங்கள கட்சியில வச்சிக்காதன்னு. எவ்வளவு முயற்சி செஞ்சாலும் உன் பாச்சா இங்க பலிக்காது. ‘ஆடுபணைப் பொய்க்காலே போன்று’னு பழமொழி கேள்விப்பட்டிருக்கியா.

    அரசன உன்னயமாதிரி யாரவது பொய்பேசி குழப்பினா கூட இருக்கற அமைச்சருங்க உண்மய எடுத்துச்சொல்லி தெளிய வைப்பாங்களாம். அந்த பொய்யர்கள் கூட சேந்து தாங்களும் பொய்க்கால் கட்டிக்கிட்டு ஆடமாட்டாங்களாம். அந்தமாதிரி தான். நான் கூட இருக்கற வரை இந்த வீடு ப்ராஜக்ட் நடக்காது. யார்கிட்ட கைநீட்டி பணம் வாங்கிட்டு இந்தக் காரியத்தச் செய்யறயோ அந்த ஏஜண்ட்கிட்ட முடியலனுஒத்துக்கிட்டு திருப்பிக்குடுத்துடு. மிரட்டுகிறார்.

    அச்சச்சோ….. அங்க நடந்ததச் சொல்லக்கூடாது.  பணத்த திருப்பிக்குடுக்கறதப் பத்தி யோசிச்சிற வேண்டியதுதான்.

    என்னய்யா மோகன் என்ன பலத்த யோசனை. நான் கேட்கிறேன்.

    அவனிடத்தில் பதில் இல்லை. மீண்டும் என்முன் தலையைச் சொரிந்துகொண்டு நிற்கிறான்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 273

    படக்கவிதைப் போட்டி – 273

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 272இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 272இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கள்ளமில்லாப் புன்னகைப் பூக்களை காமிராவுக்குள் அடைத்து வந்திருப்பவர் திருமிகு. நித்தி ஆனந்த். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்கு ஏற்றதெனத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்!

    ”பொங்கிவரும் மழலையரின் மங்கலச் சிரிப்பதனில் 
    தங்காது பறந்திடும்நம் துயரமெல்லாம் வெகுதூரம்!”

    இனி, கவிஞர்கள் வருகிறார்கள்… மழலையர் குறித்துக் கவிசொல்ல!
    நம் மனம் வெல்ல!

    *****

    தாயில்லாப் பிள்ளைகளின் முகத்தில் புன்னகை ஒளிரத் தன்னைத் தியாக தீபமாய் மாற்றிக்கொண்ட அக்காவின் தூய அகத்தைப் போற்றுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தியாக தீபம்…

    மானாவாரிப் பயிராய்த்
    தானாய் வளரும்
    தாயில்லாப் பிள்ளைகள்..

    பெற்றவர்கள் இல்லாதபோது
    மற்றவர்கள் போற்ற
    உடன்பிறப்பு உறுதுணையாகிறது,
    அன்னையாய் தந்தையாய்
    ஆகிறாள் அக்காவே..

    உடன்பிறப்புகளின்
    உதட்டுச் சிரிப்பு நிலைக்க
    அவள்
    உருகும் மெழுகுவர்த்தியாய்
    உதவி,
    தன்சுகம் மறந்த
    தியாக தீபமாய் ஒளிர்கிறாள்…!

    *****

    ”வாழ்க்கைப் பயணம் தருகின்ற வலிகளால் சிரிப்பைத் தொலைத்துவிடாதீர்கள்! காலங்கள் கடந்தாலும் தொடரட்டும் இந்தக் களிப்பு!” என்று மழலையருக்கு அறிவுரை பகர்கின்றார் திரு. கோ. சிவகுமார்.

    சிரிப்புத் தொடரட்டும்!

    கள்ளமில்லா
    வெள்ளைச் சிரிப்பு!
    கடவுள் வாழும்
    உள்ளங்களின் சிரிப்பு!
    வித்தை காட்டுபவர் செய்த
    வேடிக்கையால்
    விளைந்த சிரிப்போ!
    விலங்கினக் குரங்கின்
    சேட்டைகளால்
    எழுந்த சிரிப்போ!
    வளர வளர
    வாழ்க்கைப் பயணத்தில்
    வருகின்ற சோதனைகளின்
    வலிகளால்
    வாய்விட்டுச் சிரிக்காமல்
    நோய்த் தொற்றுக்கு ஆளாகி
    நொறுங்கி விடாதீர்கள்!
    காலங்கள் பல கடந்தாலும்
    தொடரவேண்டும்
    இந்தக் களிப்பு!

    *****

    அறிவைச் சொல்லிக் கொடுப்பதில் மாற்றங்கள் கொண்டு வந்து
    வெற்றி காணுங்கள்! அதைவிடுத்து அறிவைச் சோதிக்கத் தேர்வு என்பது
    தீர்வு ஆகுமோ? என்று மழலையர்க்குப் பொதுத்தேர்வு நடத்துவதன் பாதகத்தைத் தன் பாவில் விளக்குகின்றார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    ஐந்தாவது
    எட்டாவது
    வகுப்பு
    மாணவர்கள்
    கண்டிப்பாக
    அரசு பொதுத்தேர்வு
    அறிவித்தீர்கள்

    பிஞ்சு மனதில்
    அச்சமோ அச்சம்

    நடந்தது என்ன

    ஒன்று முதல்
    பதினொன்று
    வரையில்
    தேர்வே இல்லை

    ஒன்பது வரையில்
    ஆல்பாஸ்

    குழந்தையும் தெய்வமும்
    ஒண்ணுன்னு
    உணர்த்தி விட்டது
    காலக் கடிகாரம்

    மாற்றம் வேண்டும்
    ஆணிவேரில்
    கிளைகளில் அல்ல

    அறிவைச் சொல்லி
    கொடுப்பதில்
    மாற்றங்கள்
    கொண்டு வந்து
    வெற்றி காணுங்கள்!

    அதை விட்டுவிட்டு
    அறிவை சோதிக்கத்
    தேர்வு என்பது
    தீர்வு ஆகுமோ?

    மழலைப் பள்ளி
    மகத்தான
    மாற்றங்கள்
    கண்டால்

    மற்ற பள்ளியில்
    புரிதல் எளிது!

    ஜப்பானியக்
    கல்விமுறை
    மழலைப் பள்ளிக்கே
    முன்னுரிமை

    தேசப் பற்று
    ஒழுக்கம்
    தற்காப்புக் கலை
    வாழ்வியல் பாடமாக!

    அதை விட்டு விட்டுத்
    தேர்வில் மட்டுமே
    மாற்றங்கள் என்பது
    தடுமாற்றங்கள்!

    *****

    ”காமிராவைக் காவிக்கிட்டுக் கனபேரு திரியிறாக
    சாமிக்கிட்ட வேண்டிக்குங்க காத்துக்கச் சொல்லி – நம்ம
    சந்ததியின் தலையை காதைப் பார்த்துக்கச் சொல்லி.” என்று இந்நிழற்படத்தை எடுத்த நிபுணர் அனைவரையும் முழுமையாகப் படத்தில் கொண்டுவராததைப் பகடி செய்து பாட்டெழுதியிருக்கின்றார் திரு. சித்தி கருணானந்தராஜா.

    கொலை வெறி

    அண்ணாவின் தலையை வெட்டி அக்காவின் காதறுத்து
    என்ன மட்டும் உருப்படியா விட்டிருக்காரு – அவரு
    எங்க ஊரு தலைசிறந்த போட்டோக் கிராபரு

    சிரிச்சுக்கிட்டு நிக்கச்சொல்லி சிதறாமப் பதறாம
    மறிச்சு வச்சி எங்களையவர் படமெடுத்தாரு – அண்ணன்
    மண்டையைில்தான் பாதியில்லை பேத்துப்பிட்டாரு

    தலைவெட்டி நித்தியண்ணன் தரமான காமிராமென்
    கொலைவெறியில் நின்னுக்கிட்டு படமெடுத்தாரு – எங்களைக்
    கொல்லாமல் விட்டுவிட்டார் கடவுள் காத்தாரு.

    காதைவெட்டி அக்காவின் கதை முடிக்கப் பாத்தாரு
    வேதனையைத் தாங்கிக்கிட்டு சிரிச்சு நின்னாளு – அவளு
    வீரமுள்ள பொண்ணு நெல்ல விவரமான ஆளு

    கொத்துனாலும் கொதறினாலும் நித்தியண்ணன் கொலைவெறிய
    எத்தனைதான் தரமின்னாலும் நாங்க தாங்குவோம் – அவரு
    எடுக்கப் போகும் படத்துக்கெல்லாம் போஸு குடுப்போம்.

    இரக்கமுள்ள மனிதரவர் என்னை மட்டும் வுட்டுப்பிட்டார்
    சிரத்தை வெட்டி அரியாமத் தப்ப விட்டாரு – அவரு
    சிந்தையில கனிவிருக்கு உயிரைத் தந்தாரு.

    காமிராவைக் காவிக்கிட்டுக் கனபேரு திரியிறாக
    சாமிக்கிட்ட வேண்டிக்குங்க காத்துக்கச் சொல்லி – நம்ம
    சந்ததியின் தலையை காதைப் பார்த்துக்கச் சொல்லி.

    அரகரோகரா சாமி அரகரோகரா
    அரகரோகரா சாமி அரகரோகரா

    *****

    ”கடற்கரைச் சோழிகளாய், காந்தக் கதிர்களாய், கபடமில்லா நகைசிந்தி என்றும் மகிழ்ந்திருங்கள்” என்று மழலையரை வாழ்த்துகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    கண்களைச் சுருக்கி
    வெண்பற்களைக் காட்டும்
    உங்கள் புன்னகை
    அதில் எத்தனை வெகுளித்தனம்!!

    முத்துப் பற்களாய் முல்லைப் பூக்களாய்
    கடற்கரைச் சோழிகளாய்க்
    காந்தக் கதிர்களாய்
    இதில் கள்ளமில்லை கபடமில்லை
    இப்படியே நகைத்திரு
    சுற்றமும் நட்பும் என்றும் சூழ
    சிரித்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

    *****

    ”சென்றதை எண்ணி வருத்தமில்லை; வருவதை நாடி ஏக்கமில்லை; இன்றைய பொழுதின் இன்பமதை இயல்பாய்க் கொண்டாட மறப்பதில்லை” என்று பிள்ளைகளின் குணத்தை எதார்த்தமாய்த் தம் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பிள்ளைப்பருவம்

    பட்டிதொட்டி அனைத்திலுமே
    பகைமை கொண்ட அனைவரையும்
    முட்டிமோதி வெற்றி கொண்டு
    பட்டம் சூடும் சூழ்ச்சியில்லை…

    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
    ஒட்டிக் கட்டி முடித்து வைத்து
    கவலைக் கடலில் தத்தளித்துத்
    துன்பம் கொள்ளும் நிலைமையில்லை!

    தோல்விக்கு அஞ்சும் வீரமில்லை
    வெற்றிக்கு வாடும் வாட்டமில்லை
    அச்சம் நாணம் இச்சை இல்லை
    ஏதும் இல்லையென்ற வாட்டமில்லை

    சென்றதை எண்ணி வருத்தமில்லை
    வருவதை நாடி ஏக்கமில்லை
    இன்றைய பொழுதின் இன்பமதை
    இயல்பாய்க் கொண்டாட மறப்பதில்லை

    கள்ளம் கபடம் சூதுமின்றி
    வெள்ளை உள்ளம் கொண்டு
    பிள்ளைகள் வாழும் வாழ்க்கையைப்போல்
    இன்பம் ஏதும் உலகிலில்லை

    *****

    மழலையரின் மனத்தைப் பல்வேறு உளவியல் கோணங்களில் ஆராய்ந்து எழிலார் கவிவடித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது…

    சிரித்து வாழ வேண்டும்
    சிரித்து வாழ வேண்டும்
    சிரித்து வாழ்கிறோம்
    நிகழ்காலமே முக்காலமென!

    இறந்த கால நினைப்பேது?
    எதிர்காலச் சிந்தனையேது?

    சிரித்து சிரித்து வாழ்கிறோம்
    அரை வயிற்றுக் கஞ்சி
    அழுக்கடைந்த ஆடை
    வறுமை இல்லை
    மனதின் எண்ணத்திற்கு!

    சிரித்தே வாழ்கிறோம்
    சிரித்தே வாழ்கிறோம்
    நிகழ்காலமே
    முக்காலமென!

    எக்காள ஏளனம் இல்லை
    எவர் மீதும் பொறாமை
    எண்ணம் எள்ளளவும் இல்லை!

    சிரித்தே வாழ்கிறோம்
    சிரித்தே வாழ்கிறோம்
    நிகழ்காலமே முக்காலமென!

    அன்பு தானே வலிமை
    புகட்டியது எளிமை

    பெரியோரை மதிக்கிறோம்
    பெரியோரைத் துதிக்கிறோம்

    சிரிக்கும் சிரிப்பு
    தருமாமே ஆரோக்கியம்!

    ஆரோக்கியம் தானே
    வாழ்வின் பாக்கியமே!

    மனிதருக்கு
    இறைவன் தந்த வரம்
    சிரிப்பு தானே!

    சிரிக்க மறந்தால்
    சிரிப்பைத் துறந்தால்
    பூரிப்போ பரிதவிப்பிலே!

    சிரிப்போம்
    சிரிப்போம்
    சிரித்துக்கொண்டே
    மற்றவர்களையும்
    சிரிக்க வைப்போம்!

    ”அரைவயிற்றுக் கஞ்சி குடித்தாலும், அழுக்கடைந்த ஆடை உடுத்தினாலும் அன்பே வலிமையாய்க் கொண்டு, எண்ணத்தில் ஏழ்மையின்றிச் சிரித்து மகிழும் மழலையர் இவர்” என்று எளிய வாழ்க்கையிலும் இனிமைகாணும் குழந்தைகள் மனத்தைத் தம் கவிதையில் படம்பிடித்திருக்கும் திரு. சீ. காந்திமதிநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 10

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 10

    -மேகலா இராமமூர்த்தி

    தயரதன் இறந்தபின்னர் அவனுடலைத் தைலத்தில் இட்டுவைத்து, கேகய நாட்டிலிருந்த பரதனை அழைத்துவருவதற்குக் கோசலத்திலிருந்து தூதுவர்கள் செல்கின்றனர். அயோத்திக்குப் புறப்பட்டுவரும்படி எழுதப்பட்ட மன்னனின் திருமுகத்தை (ஓலை) பரதனிடம் நீட்டுகின்றனர்.

    மகிழ்ச்சியோடு அவ் ஓலையைப் பெற்ற பரதன், ”அயோத்தி அரசர் நலந்தானே?” என்று வினவ, ”ஆம்” என்கின்றனர் தூதுவர்கள். ”இராமனும் இலக்குவனும் நலமா?” என்று அடுத்த வினாவைப் பரதன் தொடுக்க, ”அவர்களும் நலமே” என்று பதிலிறுக்கின்றனர்.

    இராமாயணத்தில் வருகின்ற மிகச் சிறந்த பாத்திரப் படைப்புக்களில் ஒன்றான பரதனை நாம் முதன்முதலாகச் சந்திக்கின்ற இடம் இதுவே. அவனுடைய குணத்தின் மாண்பை மெல்ல மெல்ல நமக்குக் கம்பநாடர் விரித்துக் காட்டும் பாங்கு, அழகிய ஓவியத்தை ஒவ்வோர் உறுப்பாய்த் தீட்டி முழுமைப்படுத்துவதுபோல் சிறப்பாய் உள்ளது.

    இனி விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடருவோம்…

    மூத்த மகன் இராமன்மீது கொண்டிருந்த தாளாத பாசத்தினால் மகன் கானகம் சென்றதறிந்து தயரதன் வானகம் சென்றுவிட்ட இக்கட்டான சூழலில், பரதனை அழைத்துச் செல்லக் கேகய நாடு வந்த தூதுவர்கள் தயரதனும், இராம இலக்குவர்களும் நலமாக இருக்கிறார்கள் என்று எதற்காகப் பரதனிடம் பொய்யுரைக்க வேண்டும்?

    ஊருக்குச் சென்றதும் பரதனே உண்மையை உணர்ந்துகொள்ளட்டும்; கேகய நாட்டிலேயே அவனைக் கலவரப்படுத்திக் கண்ணீர்சிந்த வைக்கவேண்டாம் எனும் நல்லெண்ணத்தின்பால் சொல்லப்பட்ட பதில்களாகவே இவற்றை நாம் கருதவேண்டியிருக்கின்றது.

    அந்தப் பொய்யுரையை மெய்யென்று நம்பித் தாதையையும் உடன்பிறப்புக்களையும் காணும் ஆவலோடு கோசலத்துக்கு விரைகின்றனர் பரதனும் அவனைப் பிரியாத சத்ருக்கனனும். ஆனால் அங்கே அவர்கள் கண்ட காட்சியோ வேறுவிதமாய் இருந்தது.

    நாவினால் விளம்புதற்கரிய வளங்கள் பொருந்திய கோசல நன்னாடு, தாமரை மலரை இழந்ததாக, அத்தாமரை மலரில் உறைபவளாகிய திருமகளும் அந்நாட்டைவிட்டு நீங்கி நெடுந்தொலைவு சென்றுவிட, உயிரிழந்த உடல்போல அவலமாய்க் காட்சியளிப்பதைக் கண்டான் பரதன்.

    நாவின் நீத்து அரு நல்வளம் துன்னிய
    பூவின் நீத்தென நாடு பொலிவு ஓரீஇ
    தேவி நீத்து அருஞ் சேண் நெறி சென்றிட
    ஆவி நீத்த உடல் எனல் ஆயதே. 
     (கம்ப: பள்ளிபடைப் படலம் – 2217)

    எப்போதும் மக்களின் மகிழ்ச்சியால் பொலியும் நாடு களையற்றிருப்பது கண்டு கவலையோடு பேசியபடியே அரண்மனையை அடைந்தனர் பரதனும் சத்ருக்கனனும்.

    அரண்மனையில் தந்தையைக் காணாது நொந்த சிந்தையனான பரதன் தாயைக் காணச் செல்கின்றான்.

    தனக்குக் கோசல நாட்டையும், அண்ணன் இராமனுக்குக் காட்டையும், தந்தைக்கு வானுலகையும் பெற்றுத் தந்திருக்கும் அவள் செயலறிந்து திகைக்கின்றான்.  தாய் செய்த அடாதவை அனைத்தும் தன்னை உத்தேசித்தே செய்யப்பட்டிருப்பதை அறிந்து மனத் துணுக்கமும் பெருங்கலக்கமும் உற்ற பரதன்,

    ”தாய் கைகேயியைப் பார்த்து, உன் கொலைகார வாயால் என் தந்தையை நானே கொன்றுவிட்டேன்; அம்மட்டோ? அண்ணனைக் கானகத்துக்கு அனுப்பிவிட்டேன். இதோ (இவ்வளவு நல்ல காரியங்களையும் செய்துவிட்டு) அயோத்தி அரசை ஆளுவதற்கு நான் ஆயத்தமாக இருக்கின்றேன். இதில் உன் பிழை ஏதுமில்லை!  எல்லாம் என்னுடைய பிழைதான்; குற்றந்தான்! இப்பழி நீங்கும் காலம் என்றைக்கேனும் எனக்கு வாய்க்குமா?” என்று ஏக்கத்தோடு கூறிவிட்டுக் கண்ணீர் சிந்துகின்றான்.

    கொன்றேன்  நான் என் தந்தையை
         மற்று உன் கொலை வாயால்
    ஒன்றோ கானத்து அண்ணலை
         உய்த்தேன் உலகு ஆள்வான்
    நின்றேன் என்றால் நின் பிழை
         உண்டோ பழி உண்டோ
    என்றேனும் தான் என் பழி
         மாயும் இடம் உண்டோ   (கம்ப: பள்ளிபடைப் படலம் – 2274)

    இங்கே முக்கியமான செய்தி ஒன்றைக் குறிப்பிடவேண்டும். கைகேயியைத் தயரதன் திருமணம் செய்தபோது ’கன்யா சுல்கமாக’ (பெண்ணுக்கு அளிக்கும் சீதனம்) அவளுக்குக் கோசலநாட்டை அளித்ததாக வால்மீகி இராமாயணத்தில் ஒரு குறிப்புண்டு. அப்படியானால் அவள் மிக எளிதாக, எவ்விதப் பிரயத்தனமும் இன்றியே, தனக்குரிய கோசல நாட்டின் மன்னனாகப் பரதனை ஆக்கியிருக்கலாம். அதைவிடுத்து, சம்பராசுரப் போரின்போது தயரதன் கொடுத்த இரு வரங்களை அவனுக்கு நினைவூட்டி அவற்றின்மூலமாக ஏன் பரதனுக்கு அரசுரிமை வாங்கினாள்; இராமனைத் தேவையில்லாமல் காட்டுக்கு அனுப்பினாள் என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன.

    காப்பியத்தின் நோக்கத்தை நிறைவேற்றவும், இராமனுக்கு அரசளிக்க முனைந்துவிட்ட தன் கணவன் தயரதனை வாய்மை தவறியவன் என்ற பழியினின்று தப்புவிக்கவும் ’தீயவள்’ என்ற பழியைக் கைகேயி தான் ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்கின்றனர் இதற்கு விடையளிக்கும் இராமாயண ஆராய்ச்சியாளர்களில் சிலர்.

    வேறு சிலரோ, வால்மீகி இராமாயணத்தில் பிற்காலத்தில் பல இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்கின்றன. பால காண்டமும், உத்தர காண்டமும் அவ்வாறு பின்னாளில் இணைக்கப்பட்டவையே என்ற கருத்துண்டு. அவ்வகையில் கன்யா சுல்கமும் இடைச்செருகலாக இருக்கலாம் என்கின்றனர்.

    இந்தக் குழப்பமெல்லாம் வேண்டாம் என்று கருதியோ என்னவோ ’கன்யா சுல்கம்’ பற்றிக் கம்பர் தம் காப்பியத்தில் வெளிப்படையாக எதுவும் குறிப்பிடவில்லை.

    தாயின் செயல்களை வெறுத்து அவள் அரண்மைனையைவிட்டு நீங்கிய பரதன், கோசலையைக் காணச் செல்கின்றான். தன் தாயின் சூழ்ச்சியில் தனக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை அவள் கால்பிடித்துக் கதறித் தெளிவுபடுத்துகின்றான். அந்தத் தாயுள்ளம் கனிகின்றது; தூயனான பரதனை வாயார வாழ்த்துகின்றது!

    பின்பு, வசிட்டரோடு சென்று தைலத்தில் வைக்கப்பட்டிருக்கும் தந்தையின் உடலைக் காண்கின்றான் பரதன்; கண்டவன் மண்ணில் வீழ்ந்து அலறி அழுகின்றான். அவனியைக் காத்த அண்ணலில் பொன்னெழில் மேனி எண்ணெயில் கிடப்பதைக் கண்டு துடிதுடித்து, அதனைத் தன் கண்ணீரில் கழுவினான் என்கிறார் கம்பர். [எண்ணெய் ஆட்டியதால் தயரதன் மேனி பொன்னிறம் பெற்றது என்பது வான்மீகத்திற் காணப்படும் குறிப்பு.]

    மண்ணின்மேல் விழுந்து அலறி மாழ்குவான்
    அண்ணல் ஆழியான் அவனி காவலான்
    எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை
    கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்.
    (கம்ப: பள்ளிபடைப் படலம் – 2313)

    அதனைத் தொடர்ந்து தயரதனுக்கு ஈமக்கடன்களை ஆற்ற பரதன் முனைந்தபோது, தன்னை மகனல்லன் என்று தந்தை தயரதன் துறந்துவிட்டதையும், அதனால் ஈமக்கடனாற்றும் உரிமையும் தனக்கில்லை என்பதையும் அறிகின்றான்; அவனடைந்த துயருக்கோர் அளவில்லை.  எனவே வசிட்டரின் வழிகாட்டுதல்படி ஈமக்கடனாற்றும் பணியைச் சத்துருக்கனன் நிறைவேற்றுகின்றான்.

    சின்னாட்களுக்குப் பின், பரதனைச் சந்தித்த இரவிகுல குருவான வசிட்டர், ”அரசனில்லாமற்போனால் நாடு அழிந்துபடும்; ஆதலால் பரதனே நீ முடிசூட்டிக் கொள்” என்று அவனிடம் வேண்டுகின்றார். அதனைக் கேட்ட பரதன், நஞ்சுண்ணச் சொன்னதுபோல் நெஞ்சு நடுங்கி, அதனை மறுத்துவிடுகின்றான்.

    அரசவைக்கு வந்தவன் அங்கிருந்தோரை நோக்கி, ”ஐயன்மீர்! எனக்கு மூத்தவனிருக்க நான் நாட்டையாளுதல் முறைமையன்று! எனவே கானகத்தினின்று இராமனை அழைத்துவந்து அரசனாக்குவேன்; அவன் மறுத்தால் அவனுடனேயே அடர்வனத்தில் தவமியற்றுவேன்; இதற்குமேலும் என்னை ஆட்சிசெய்யச் சொல்லி வற்புறுத்துவீராயின் என் உயிரைப் போக்குவேன்!” என்று கம்பீரமாக உரைத்து ஆட்சிப்பொறுப்பை ஏற்க மறுத்துவிட,  அவனது கருத்தறிந்து அவை களித்தது; நீடு வாழ்கவென அவனைக் கூடி வாழ்த்தியது!

    தவக்கோலம் பூண்டு மரவுரி தரித்து இராமனை அழைத்துவரக் கானகம் புறப்பட்டான் பரதன்; சேனையும் அவனைப் பின்தொடர்ந்தது!  

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share