திருவள்ளுவர் யார்? – 6

புதுக்கோட்டை பத்மநாபன்
ஆதி பகவன்
திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் காணப்படுகின்றன. இந்த பத்துக் குறட்பாக்களிலும் குறிபிட்ட தெய்வத்தின் பெயரைக் குறிப்பிடாமல் ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இருள் சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அற ஆழி அந்தணன், எண்குணத்தான் என்று கடவுளுக்குரிய அசாதாரணப் பண்புகளை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்கிறார் திருவள்ளுவர். இதைவைத்து இவர் குறிப்பிடும் கடவுள் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
முதற் குறட்பாவில் வரும் ‘பகவன்’ என்ற சொல் ஒரு முக்கியமான சொல். மண்டல புருடன் இயற்றிய பதினோராவது தமிழ் நிகண்டில் பகவன் என்ற சொல்லுக்கு“பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது பகவன் என்ற சொல் சிவன், திருமால், ப்ரஹ்மன், சமண மதக் கடவுள், புத்தன் ஆகியோரைக் குறிக்கும் என்று அந்த நிகண்டு நூல் குறிப்பிடுகிறது. இந்த ஒரே சொல் ஐந்து தெய்வங்களுக்கும் பொருந்தும் என்றாலும் இவற்றுள் ஏதோ ஒரு தெய்வத்தைக் குறித்துத்தான் திருவள்ளுவர் அச்சொல்லைப் பயன்படுத்தியிருக்க முடியும். சமண, பௌத்த மதங்களின் கொள்கைகளுக்கும் திருக்குறளின் கொள்கைக்கும் ஸம்பந்தமில்லை என்பதால் இச்சொல் அம்மதங்களின் தெய்வத்தைக் குறித்துப் பயன்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது . மீதமுள்ள மூன்று தெய்வங்களில் யாரைக் குறித்து இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.
ஓருசொல் ஒரு காரணத்திற்காக ஒருவரைக் குறித்து முதலில் பயன்படுத்தப்படும். பிறகு அச்சொல் உபசாரத்திற்காக மற்றவர்களைக் குறித்தும் பயன்படுத்தப்படுவது உண்டு. அது பயனாகும் இடத்தை வைத்துத்தான் உண்மையில் அச்சொல் யாரைக் குறிக்கிறது என்பதை அறிய முடியும். அதாவது தலைமைப் பண்பு உள்ளவனைத் “தலைவன்”என்று சொல்கிறோம். சில நேரங்களில் உபசாரத்திற்காக மற்றவர்களையும் “தலைவா”என்று அழைக்கிறோம். அதுபோலத் தான் ‘பகவன்’ என்ற சொல் பரம்பொருளுக்குரிய காரணப் பெயர்ச்சொற்களில் ஒன்று. இந்த முதல் குறட்பா, ஜகத் காரணமான பரம்பொருளைப் பற்றிப் பேசுகிறது. மற்றவர்களையும் குறிக்கும் உபசாரச் சொல்லாக இச்சொல்லை யாரும் கருதிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இச்சொல்லுக்கு முன்னால் ‘ஆதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
‘ஆதி’ என்றால் முதல் என்று பொருள். அதாவது உலகத் தோற்றத்துக்குக் காரணமான முதற்பொருள் என்று கருத்து. ஸநாதன வைதிக சமயத்தில் ப்ரஹ்மா, ருத்ரன் உள்ளிட்ட அனைவரையும் படைத்த ஜகத்காரணன் திருமால்தான். “ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ:நலமுழுது அளைஇய புகரறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமும் நீ” என்ற சங்க இலக்கிய வரிகள் இவ்விஷயத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. தொன்மையான சங்க இலக்கியங்கள் ப்ரஹ்மனையோ ருத்ரனையோ ஜகத்காரணமாக எவ்விடத்திலும் காட்டவில்லை. திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்தைச் சேர்ந்த சங்கத் தமிழர் மரபில் வந்தவராகையால் ஆதி பகவன் என்ற சொல்லால் அவர் குறிப்பிடும் பரம்பொருள் திருமால்தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. மேலும் அவ்விடத்தில் அவர் காட்டியுள்ள உவமை, இவ்விஷயத்தை மேலும் உறுதி செய்கிறது.
“अक्षराणाम् अकारोस्मि” (அக்ஷ்ராணாம் அகாரோஸ்மி) என்கிறார் பகவான் கீதையில். அதாவது எழுத்துகளுக்குள் நான் அகரமாக இருக்கிறேன் என்று சொல்கிறார் பகவான். இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள உவமையை வைத்துப் பார்த்தால் எழுத்துகளுக்குள் அகரமாக இருக்கும் பகவானே ஜகத் காரணமான ஆதிபகவன் என்பதே இக்குறட்பாவின் உட்பொருளாகத் தேறுகிறது. ஆகவே திருவள்ளுவர் கூறும் ஆதிபகவன், திருமால்தான்.
மேலும் அகரம், தமிழ் மொழிக்கு மட்டும் முதல் எழுத்தன்று. உலகில் உள்ள எல்லா மொழிகளுக்குமே அகரம்தான் முதல் எழுத்து. அதைப் போல திருமாலே அகில உலகிற்கும் காரணமான ஸர்வலோகேஶ்வரன் என்ற உண்மையைக் காட்டுவதற்காகவே இந்த உவமையை இங்கு பயன்படுத்துகிறார் திருவள்ளுவர். திருமாலே ஸர்வேஶ்வரன் என்பதை சங்கஇலக்கியமும் “இருநிழல் படாமை மூவேழுலகமும் ஒரு நிழலாக்கிய ஏமத்தை” என்று தெளிவுபடுத்துவது குறிப்பிடத்தக்கது.
“வாலறிவன்”
இரண்டாவது குறட்பாவில் பகவானை “வாலறிவன்” என்ற சொல்லால் அழைக்கிறார் திருவள்ளுவர். ”வாலறிவன்” என்றால் எல்லாவற்றையும் அறிந்தவன் என்று பொருள். பரம வைதிகரான திருவள்ளுவர் முண்டகோபநிஷத்தில் சொல்லப்படும் “यःसर्वज्ञःसर्ववित्” (ய:ஸர்வஜ்ஞ:ஸர்வவித்) என்பதையே “வாலறிவன்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.”वेदाहम् समतीतानि वर्तमानानि चार्जुन।भविष्याणी च भूतानि माम् तु वेद न कश्चन॥”(வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந| பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஶ்சந||) என்று பகவானும் கீதையில் கூறுகிறான். “கழிந்து போனவையும், இருப்பவையும், இனி வரப்போகின்றவையுமான எல்லாப் பூதங்களையும் நான் அறிவேன். ஆனால் என்னை மட்டும் எவனும் அறியமாட்டான்” என்பது மேற்படிகீதை ஶ்லோகத்தின் கருத்து.
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் “ஸர்வஜ்ஞ:” என்ற நாமம் இரண்டு இடங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. படைப்புக்கு முன்னும் படைப்புகள் அழிந்த பின்னும் பகவான் ஒருவனே இருக்கிறான் என்பதால் படைக்கப்பட்டவர்களான ப்ரஹ்மனுக்கும் ருத்ரனுக்கும் இச்சொல் பொருந்தாது. மேலும்,“நீயா நினைவ” என்றும் “நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்” என்றும் சங்க இலக்கியம் திருமாலை வர்ணிக்கிறது. அந்தக் கருத்தைக் கொண்ட சொல்தான் ‘வாலறிவன்’ என்னும் சொல். ஆகவே “வாலறிவன்” என்ற சொல்லால் திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வம் திருமாலே என்பது தெளிவாக விளங்குகிறது.
“மலர்மிசை ஏகினான்”
மூன்றாவது குறட்பாவில் வரும் “மலர்மிசை ஏகினான்” என்பது ஹ்ருதய கமலத்தில் வசிப்பவன் என்ற பொருளில் பகவானையே குறிக்கிறது. மலரில் இருப்பவன் என்பதால் இது ப்ரஹ்மனையும் குறிக்கலாம் என்று சிலர் எண்ணக்கூடும். ஆனால் அது பொருந்தாது. “कारणम् तु ध्येयः”(காரணம் து த்யேய:) -“ஜகத் காரண வஸ்துவே த்யானிக்கதக்கது” என்ற வைதிக நெறியைப் பின்பற்றி திருவள்ளுவர் ஜகத்காரண வஸ்துவைப் பற்றியே பத்துக் குறட்பாக்களிலும் பேசுகிறார். ப்ரஹ்மனுக்கும் காரணமானவன் பகவான் விஷ்ணுவே என்பதால் “மலர்மிசை ஏகினான்” என்பது திருமாலையே குறிக்கும். மேலும் இந்த குறட்பாவில் இடம்பெறும் மாணடி, நிலமிசை நீடு வாழ்வார் என்ற விஷயங்களெல்லாம் ப்ரஹ்மனுக்குப் பொருந்தாது. இங்கு குறிப்பிடப்படும் நிலம் என்பது மோக்ஷ லோகத்தைக் குறிக்கும். வேதமும் சங்க இலக்கியமும் திருமாலின் உலகம்தான் மோக்ஷலோகம் என்று கூறுகின்றன. ஆகவே இந்தக் குறட்பா, திருமாலைப் பற்றிய விஷயம்தான்.
“पद्मकोशप्रतीकाशं” (பத்மகோஶப்ரதீகாஶம்) என்ற வேதவாக்யம் ஹ்ருதயம் தாமரை மலர்போல் இருப்பதாகக் கூறுகிறது. அங்கு வசிக்கும் பகவானைக் குறிப்பிடவே மலர்மிசை ஏகினான் என்றார். இவ்விடத்தில் “மலர்மிசை” என்பதற்கு “நினைவாரது உள்ளக் கமலத்திங்கண்” என்று பரிமேலழகர் உரையிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த “மலர்மிசை ஏகினான்” என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ‘மலர்’ என்பதற்கு விரிந்த அல்லது பரந்த என்ற பொருளும் உண்டு. ‘மிசை’ என்பதற்கு வானம் என்ற பொருளும் உண்டு. “மலர்மிசை” என்பதை வினைத்தொகையாகக் கொண்டு “பரந்து விரிந்த வானத்தின்கண் ஏகிய த்ரிவிக்ரமன்” என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே எல்லா வகையிலும் “மலர்மிசை ஏகினான்” என்பது திருமாலையே குறிக்கும்.
வேண்டுதல் வேண்டாமை இலான்
அடுத்த குறட்பாவில் பகவானை, வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்றால் விருப்பு வெறுப்பு அற்றவன் என்று பொருள். உலகமே அவனுடையது என்று சொல்லும் போது அவனுக்கு விருப்பு வெறுப்பு ஏற்பட வழியில்லை. அவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் என்று யாரும் இல்லை. அதனால் தான் சங்க இலக்கியம், “நினக்கு மாற்றோரும் இலர்: கேளிரும் இலர்”என்று திருமாலைக் குறித்துப் பேசுகிறது.
இதையே பகவானும் “समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः” (ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய:) என்கிறான் கீதையில். “எல்லா உயிர்களிடத்தும் நான் ஸமமாகத்தான் இருக்கிறேன். எனக்கு பகைவனோ அன்பனோ இல்லை” என்பது இந்த கீதை வரியின் பொருள். மேலும் பகவான் கீதையில் நான் அடையவேண்டிய பொருள் என்று எதுவும் இல்லை என்று கூறுகிறான். அதனால் அவனுக்கு விருப்பு வெறுப்பு ஏற்பட வேண்டிய அவஶ்யம் இல்லை. அந்த வகையில் திருவள்ளுவர் கூறும் வேண்டுதல் வேண்டாமை இலான் திருமாலே என்பது தெளிவாகின்றது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
அடுத்த குறட்பாவில் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் என்று பகவானைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அதாவது சராசரி ஜீவராசிகளுக்கு உள்ளது போல் பகவானுக்குக் கர்மவினையால் ஆன பிறவி கிடையாது என்பதே திருவள்ளுவரின் கருத்து. பகவானுடைய அவதாரங்கள் எல்லாம் கர்மவினையாலான பிறப்புகள் இல்லை என்பதை “முதல்முறை இடைமுறை கடைமுறை தொழிலின் பிறவாப் பிறப்பிலை பிறப்பித் தோரிலையே” என்று சங்க இலக்கியங்களும் கூறுகின்றன.
பகவானும் கீதையில் “न मां कर्माणि लिम्पन्ति” (நமாம் கர்மாணி லிம்பந்தி) என்று கூறுகிறான். ஆதாவது “என்னைக் கர்மங்கள் ஒட்டாது” என்று சொல்கிறான் பகவான். அதனால் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது திருமாலையே என்பது தெளிவாகிறது. இக்குறட்பாவில் இடம்பெறும் பொருள் சேர் புகழ் என்ற சொற்றொடர் குறிப்பிடத்தக்கது.
தகுதியுள்ளவரைப் புகழும் புகழுரைகளே உண்மையான புகழுரையாக இருக்கும். தகுதியில்லாதவரைப் புகழ்ந்தால் உண்மையில் அது முகஸ்துதியாகவோ பக்ஷபாதமாகவோதான் இருக்கும். பரம்பொருளும் ஸர்வேஶ்வரனுமான திருமாலே எல்லாப் புகழுரைகளுக்கும் தகுதி உடையவன். பொருள்சேர் புகழ் என்பது அவனைக் குறித்த புகழ் உரைகளே. மற்றவர்களைக் குறித்த புகழுரைகள் பொருள்சேர் புகழ் ஆகாது. அதனால்தான் சங்க இலக்கியங்கள் புகழைப் பற்றிய பேச்சு வருமிடங்களிலெல்லாம் திருமாலைப் பற்றியே குறிப்பிடுகின்றன.
“தாவா விழுப்புகழ் மாயோன்”என்று தொல்காப்பியத்திலும், “தேயா விழுப்புகழ் தெய்வம்” என்று கலித்தொகையிலும் “அருந்திறல் கடவுள்” என்று பெரும்பாணாற்றுப்படையிலும் “புள் அணி நீள்கொடிச் செல்வன்” என்று திருமுருகாற்றுப்படையிலும் “எண்ணிறந்த புகழவை, நின் புகழ் உருவின கை, ஏவலின் முதுமொழி கூறும் நற்புகழவை, நின்னொக்கும் புகழ் நிழலவை, நல் புகழவை” என்று பரிபாடலிலும் “விண் உயர் புட்கொடி விறல் வெய்யோன், புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன” என்று புறநானூற்றிலும் கூறப்படுகின்றன. அதனால் சங்கத் தமிழர்கள் உயர்ந்த புகழுக்கும் உண்மையான புகழுக்கும் உரிய தெய்வமாக திருமாலையே கொண்டாடினர் என்பது தெளிவாகிறது. அந்த வகையில் பொருள் சேர் புகழ் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது திருமாலின் புகழ்தான்.
தொடரும்…