(Peer Reviewed) வினாச் சொற்கள் சிலவற்றின் தொடரியற் பண்புகள்

0

தி. மோகன்ராஜ்
முனைவர்ப் பட்ட ஆய்வாளர்
இலக்கியத்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
mohr_d12@yahoo.co.in

ஆய்வுச் சுருக்கம்

வினா வாக்கியங்கள் மொழியாய்வில் தனியாகப் பகுத்து ஆராயப்படும் சிறப்புடையவை. வினா வாக்கியங்கள் அவற்றின் அமைப்பு நோக்கில் இரண்டாக வகுக்கப்படும். ஆம்-இல்லை வகை வினா வாக்கியங்கள் என்றும் வினாச் சொற்களை உள்ளடக்கிய வினா வாக்கியங்கள் என்றும் அவை வழங்கப்பெறும். இரண்டாம் வகை வினாக்களை எவன், எவள், எவர், யார், எது, எங்கு/எங்கே, எதனால், எத்தனை, என்ன போன்ற வினாச் சொற்களைக் கொண்டு உருவாக்கலாம். அவ்வாறு பயன்படும் வினாச் சொற்கள் சில தொடரியல் நிலையில் குறிப்பிடத்தகுந்த பண்புகளை உடையனவாக விளங்குகின்றன. அப்படிப்பட்ட வினாச் சொற்கள் சிலவற்றின் தொடரியற் பண்புகளை விளக்குவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

முக்கியச் சொற்கள்

வினா வாக்கியங்கள், வினாச் சொற்கள், தொடரியற் பண்புகள்.

வினா வாக்கியங்கள்

மொழியின் துணைக்கொண்டு நிகழ்த்தப்படும் உரையாடல்கள் யாவற்றையும் செப்பு அல்லது வினா என்னும் இருபிரிவிற்குள் அடக்க இயலும். ‘உலகத்துப் பொருளுணர்த்தும் சொல் எல்லாம் வினாவும் செப்பும் ஆகிய பொருள்மேல் நிகழ்தலின்’ என்பர் தெய்வச்சிலையார்.1 எனவே, மொழியாய்வில் வினா வாக்கியங்கள் தனியாகப் பகுத்து ஆராயப்படும் சிறப்பினை உடையவை. தமிழ் மொழிக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியமும் வினா வாக்கியங்கள் பற்றியும் அவற்றை உருவாக்கும் வினாச் சொற்கள் பற்றியும் பல இடங்களில் விளக்கியுள்ளது. வினாவும் அதற்கான செப்பாகிய விடையும் எவ்வாறு அமையலாம் என்று தொல்காப்பியக் கிளவியாக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது(தொல்.சொல்.13-16). அந்நூற்பாக்கள் தமிழ்மொழிக்கு மட்டுமன்றி உலக மொழிகள் யாவற்றுக்கும் பொதுவான விதிகளாக அமைபவை. மேலும், வினாச் சொற்களான யாவன், யாவள், யாவர் போன்றவற்றைப் பற்றியும் அவ்வவ்விடங்களில் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது.

வினா வாக்கியங்களின் வகைகளைப் பற்றித் தொல்காப்பியம் வெளிப்படையாக எதையும் குறிப்பிடவில்லை. எனினும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் பல்வேறு வகைகளாக வகுத்துள்ளனர். உரையாசிரியர்களின் வகைப்பாட்டை அட்டவணை 1’இல் காணலாம்.

உரையாசிரியர்கள் வினா வகைகள்
இளம்பூரணர் (5 வகை) அறியான் வினாதல், அறிவு ஒப்புக் காண்டல், ஐயம் அறுத்தல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக் காட்டல்
சேனாவரையர் (3 வகை) அறியான் வினா, ஐய வினா, அறிபொருள் வினா
தெய்வச்சிலையார் வகைப்படுத்தவில்லை
நச்சினார்க்கினியர் (3 வகை) அறியான் வினா, ஐய வினா, அறிபொருள் வினா
கல்லாடனார் (5 வகை) அறியான் வினாதல், அறிவு ஒப்புக் காண்டல், ஐயம் அறுத்தல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக் காட்டல்
ஒருவர் (5 வகை) அறியான் வினாதல், அறிவு ஒப்புக் காண்டல், ஐயம் அறுத்தல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக் காட்டல்

அட்டவணை 1 :தொல்காப்பிய உரையாசிரியர்களின் வினா வகைகள்

பிற்கால இலக்கண நூல்களும் இதே அமைப்பில் வினாக்களை வகைப்படுத்தியுள்ளன. சான்றாக, நன்னூல்,

                        அறிவுஅறியாமை ஐயுறல் கொளல்கொடை
                        ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார் (நன்.385)

என்று ஆறு வகைகளாகப் பகுத்துள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர்களும் தமிழ் இலக்கண நூல்களும் வினவுவாரின் நோக்கத்தை அடிப்படையாக வைத்தே வினாக்களை வகைப்படுத்தியுள்ளன. வினாக்களின் மொழியமைப்பினை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடு மேற்கொள்ளப்படவில்லை. எனினும், மொழியியல், வினாக்களை அவற்றின் அமைப்பினைக்கொண்டு இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது.2 அவை,

1. ஆம் – இல்லை வகை வினாக்கள் (Yes-No Type)

2. வினாச் சொற்களை உள்ளடக்கிய வினாக்கள் (wh-type)

1. ஆம் – இல்லை வகை வினாக்கள் (Yes-No Type)

ஆம்-இல்லை வகை வினாக்கள் வினவப்பட்டார் ஆம் அல்லது இல்லை என விடை தரும் வகையில் அமைபவை. இடைச்சொற்களின் துணைக்கொண்டோ ஒலிக்கப்படும் முறையிலோ தமிழில் இவை உருவாகின்றன. தொல்காப்பியம் வெளிப்படையாக வினாக்களின் அமைப்பினை விளக்கவில்லை எனினும் ஆ, ஏ, ஓ ஆகிய மூன்று ஒலிகளையும் வினா ஒலிகளாகத் தனித்துச் சுட்டியுள்ளது(தொல்.எழுத்.32). இம்மூன்று ஒலிகளும் இடைச்சொற்களாக அமைந்து ஆம்-இல்லை வகை வினாக்களை உருவாக்குபவை. மேலும் ஆ மற்றும் ஓ ஆகிய இடைச்சொற்கள் வினாப் பொருளில் வருபவையாக இடையியலிலும் குறிப்பிடப்பட்டுள்ளன(தொல்.சொல்.251-252). எனவே, அமைப்பு நிலையிலான வேறுபாடு தொல்காப்பியத்தில் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

தற்கால எழுத்துத் தமிழில் ஆ மற்றும் ஓ ஆகிய இரண்டும் ஆம்-இல்லை வகை வினாக்களை உருவாக்கும் இடைச்சொற்களாகப் பயன்படுகின்றன.

  1. ஆசிரியர் வந்தாரா?
  2. ஆசிரியர் வந்தாரோ?

இடைச்சொற்களே அன்றி ஒலிப்பு முறையாலும் ஆம்-இல்லை வகை வினாக்கள் உருவாக்கப்படுகின்றன.

  1. ஆசிரியர் வந்தார்?

என்னும் வாக்கியத்தில் வெளிப்படையாக வினாவினைக் குறிக்கும் இடைச்சொற்கள் இல்லையெனினும் ‘வந்தார்’ என்னும் சொல்லின்கண் வழங்கப்படும் ஒலி அழுத்தம் அந்த வாக்கியத்தை வா.1 மற்றும் வா.2’இன் பொருளில் வரும் வினாவாக மாற்றிவிடும்.

2. வினாச் சொற்களை உள்ளடக்கிய வினாக்கள் (wh-type)

வினாச்சொற்களான எவன், எவள், எவர், என்ன, எந்த, எங்கு/எங்கே, எத்தனை, எவ்வளவு, ஏன், ஏது, யார் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் வினா வாக்கியங்கள் இவ்விரண்டாம் வகையில் அடங்கும். இவ்வினாக்களுக்கு ஆம்-இல்லை என்று பதில் கூற இயலாது. ஏதேனும் ஒரு நபரையோ பொருளையோ இடத்தையோ எண்ணையோ இன்ன பிறவற்றையோ இவ்வகை வினாக்கள் விடையாக ஏற்கும். இந்த நிலையில்தான் இவை ஆம்-இல்லை வகை வினாக்களிலிருந்து வேறுபடுகின்றன.

இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள வினாச் சொற்கள் யாவும் தற்கால எழுத்துத் தமிழில் பயன்படுபவை. இக்கட்டுரை இந்த வினாச் சொற்கள் சிலவற்றில் காணப்படும் மாறுபட்ட தொடரியல் பண்புகளை ஆய்ந்து விளக்குகிறது. அவையாவன,

1. எங்கு/எங்கே?

2. எதனால்?

3. எத்தனை?

4. என்ன?

1. எங்கு/எங்கே?

எங்கு என்னும் சொல்லும் எங்கே என்னும் சொல்லும் இடப்பொருளில் வரும் வினாச்சொற்கள் ஆகும். சொல்லமைப்பில் எங்கே என்பது எங்கு என்னும் சொல்லை உள்ளடக்கிய சொல்லாகும்.

எங்கே → எங்கு + ஏ

இவை இரண்டும்  ஓர் இடத்தை விடையாக ஏற்பவை. இரண்டும் வினா வாக்கியங்களில் உறழ்ச்சி நிலையில் இடம்பெறுவன. அதாவது, எங்கே இடம்பெறும் வாக்கியத்தில் எங்கு என்பதையும் பயன்படுத்தலாம்.

  1. ஆசிரியர் எங்கே சென்றார்?
  2. ஆசிரியர் எங்குச் சென்றார்?

வா.4 மற்றும் வா.5 ஆகிய இரண்டும் ஒரே பொருளில் வந்துள்ள வினா வாக்கியங்கள். இந்நிலையில்தான் எங்கே மற்றும் எங்கு ஆகிய இரண்டும் உறழ்ச்சி நிலையில் வாக்கியத்தில் இடம்பெறுவன என்று விளக்கப்படுகின்றன.

வினைமுற்று இல்லாமலும் இவ்வகை வினா வாக்கியங்கள் அமையும். அவ்வாறு  அமையும் வினா வாக்கியங்களில் எங்கே என்னும் சொல் மட்டுமே பயன்படுகிறது. எங்கு என்னும் சொல்லை இந்த வகை வாக்கியங்களில் பதிலீடு செய்யமுடிவதில்லை.

  1. ஆசிரியர் எங்கே?
  2. * ஆசிரியர் எங்கு? – இது பிழையான வாக்கியமாகும்.

இவ்வாறு வினைமுற்று இல்லாமல் வரும் வினா வாக்கியங்கள் எல்லா வகை வினைகளுக்கும் பொருந்துவதில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தகுந்தது. செல்லுதல், இருத்தல், போதல் போன்ற தொழில்கள் இறந்த காலத்தில் அல்லது நிகழ்காலத்தில் இருக்கும் நிலையில் மட்டுமே இவ்வாறான வினா வாக்கியங்கள் உருவாகின்றன.

  1. ஆசிரியர் எங்கே சென்றார்? என்னும் வினா வாக்கியத்தை
  2. ஆசிரியர் எங்கே?

என்றும் வழங்கலாம். ஆனால்,

  1. ஆசிரியர் எங்கே விழுந்தார்? என்னும் வினா வாக்கியத்தை
  2. * ஆசிரியர் எங்கே?

என்று வழங்கமுடியாது.

  1. ஆசிரியர் எங்கே/எங்கு இருக்கிறார்?
  2. இங்கிருந்த வண்டி எங்கே போனது?

போன்ற வாக்கியங்களை வினைமுற்று இல்லாமல்,

  1. ஆசிரியர் எங்கே?
  2. இங்கிருந்த வண்டி எங்கே?

என்றும் வழங்கலாம்.

எங்கு, எங்கே ஆகிய இரண்டு வினாச் சொற்களும் வினைமுற்றை வெளிப்படையாகக் கொண்டுள்ள வினா வாக்கியங்களில் உறழ்ச்சி நிலையில் வருவன என்றும் வினைமுற்று வெளிப்பட வாரா வினா வாக்கியங்களில் எங்கே என்பது மட்டுமே பயன்படும் என்றும் வெளிப்பட வாரா அமைப்பு எல்லா வகை வினைமுற்றுகளுக்கும் பொருந்தாது என்றும் இதன்வழி அறியலாம்.

2. எதனால்?

எதனால் என்னும் வினாச் சொல் தொடரியல் நிலையில் இரண்டு பொருள்களில் வருகின்றது. எனவே, இதன் தொடரியல் பண்பு இங்கு விளக்கப்படுகிறது.

இது மூன்றாம் வேற்றுமையை உணர்த்தும் ‘ஆல்’ உருபினை ஏற்று வந்துள்ள வினாச்சொல் ஆகும். எனவே, இவ்வினாச் சொல் எந்தப் பொருளால்/கருவியால் என்று கருவியை நோக்கிய வினாவாகவும் எந்தக் காரணத்தால் என்று காரணத்தை நோக்கிய வினாவாகவும் இரண்டு பொருள்களில் வருகிறது. இவற்றை முறையே நச்சினார்க்கினியர் காரகக் கருவி என்றும் ஞாபகக் கருவி என்றும் வகைப்படுத்தியுள்ளார்.3

  1. அவர் மரத்தை எதனால் வெட்டினார்? – (கோடரியால்)
  2. அவர் மரத்தை எதனால் வெட்டினார்? – (வீட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியதால்)

வா.16 கருவியை எதிர்பார்த்துக் கேட்கப்பட்ட வினாவாகவும் வா.17 காரணத்தை எதிர்பார்த்துக் கேட்கப்பட்ட வினாவாகவும் அமைந்துள்ளன. எனினும், அமைப்பு நிலையில் இவை இரண்டிற்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றிலக்கணத் தொடரியல் பின்னணியில் இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. வா.16’இன் பொருளில்,

  1. எது மரத்தை வெட்டியது? (கோடரி)

என்னும் வினா வாக்கியத்தையும் உருவாக்கலாம். மாற்றிலக்கண முறைப்படி இதன் வருகையைப் பின்வருமாறு விளக்கலாம்.

அவர் மரத்தை எதனால் வெட்டினார்? à மரம் எதனால் வெட்டப்பட்டது?(வினைமுதல் நீங்கிச் செயப்பாட்டுவினையாக மாறுதல்) à எது மரத்தை வெட்டியது? (மூன்றாம் வேற்றுமையில் உள்ள கருவி எழுவாய் நிலையை அடைதல்)

ஆனால், வா.17’இன் பொருளில்,

  1. *எது மரத்தை வெட்டியது? (வீட்டிற்கு இடையூறு)

என்னும் வினாவினை உருவாக்கமுடியாது. இதுவே இவற்றுக்கு இடையிலான வேறுபட்ட தொடரியல் பண்பாகும்.

3. எத்தனை?

எத்தனை என்னும் வினாச் சொல்லில் இரண்டு வகையான தொடரியல் பண்புகள் காணப்படுகின்றன. அவை

அ. பெயருக்குப் பின்னர் வருதல்

ஆ. பெயர் இல்லமால் தனித்து வருதல்

. பெயருக்குப் பின்னர் வருதல்

பொதுவாக எத்தனை என்னும் வினாச் சொல் ஒரு பெயருக்கு அடையாக நின்று ஒரு குறிப்பிட்ட எண்ணை/ எண்ணிக்கையை விடையாக எதிர்பார்த்து நிற்கும். அகராதிகளும் எத்தனை என்னும் சொல்லை பெயரடை என்னும் பொருளில் ‘Adjective’(Tamil Lexicon) என்றும் குறிப்புப் பெயரெச்சம்(செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி) என்றும் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்தச் சொல் பெயருக்கு அடையாக வரும் என்னும் கருத்தே ஏற்கப்பட்டுள்ளது.

  1. எத்தனை மாடுகள் வந்தன?

வா.20’இல் எத்தனை என்னும் சொல் பெயருக்கு முன்னர் அடையாக நிற்கின்றது. எனினும், பெயருக்குப் பின்னரும் இந்தச் சொல்லை நிறுத்தி எந்தப் பொருள் மாற்றமும் இன்றி வினா வாக்கியத்தை உருவாக்கலாம்.

  1. மாடுகள் எத்தனை வந்தன?

பெயரடைகள் தற்காலத் தமிழில் பெயருக்கு அடுத்ததாகவும் வருகின்றன என்று செ.வை.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.4 அக்கருத்திற்குச் சான்றாக,

ஒரு மாணவன் – மாணவன் ஒருவன்; ஒரு நூல் – நூல் ஒன்று என்னும் தொடர்களைக் காட்டியுள்ளார்.

இவ்வாறு கொள்வதேயன்றி மாணவனாகிய ஒருவன் என்றும் நூலாகிய ஒன்று எனவும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவும் கொள்ளலாம். மேலும், மாணவர்கள் இருவர், நூல்கள் மூன்று எனவரும் தொடர்களை மாணவர்களில் இருவர், நூல்களில் மூன்று என்று எல்லைப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமைத் தொகையாவோ இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவோ கருதலாம். இதே அமைப்பில்தான் வா.21’இல் உள்ள மாடுகள் எத்தனை என்பதையும் மாடுகளில் எத்தனை என்று ஐந்தாம் வேற்றுமைத் தொகையாகக் கொள்ளவேண்டும். இதில் எத்தனை என்னும் சொல் பெயரடையாக அல்லாமல் பெயராகவே நிற்கிறது. ஏனெனில் இந்த அமைப்பில் எத்தனை என்னும் வினாச்சொல்  வேற்றுமை ஏற்கவும் செய்கிறது.

  1. நீ மாடுகள் எத்தனைக்கு மருந்து கொடுத்தாய்?
  2. நீ மாடுகள் எத்தனையைப் பார்த்தாய்?

போன்ற வினா வாக்கியங்களும் அமைகின்றன. இவற்றில் எத்தனை என்னும் சொல் பெயர்ச்சொல் போன்று வேற்றுமை ஏற்று நிற்பதைக் காணலாம்.

  1. நினைத்தது எத்தனையில் தவறாமல் (திருப்புகழ்.278)

என்னும் திருப்புகழிலும் எத்தனை என்னும் சொல் வேற்றுமை உருபேற்று வந்துள்ளதைக் காணலாம்.

. பெயர் இல்லமால் தனித்து வருதல்

உரையாடலில் முன்னர்க் குறிப்பிட்டு உணர்த்தப்பட்ட ஒரு பொருள் பின்னரும் எத்தனை என்னும் சொல்லை அடுத்து வரவேண்டிய நிலை ஏற்படும்போது அங்கு அந்தச் சொல் இல்லாமல் எத்தனை என்னும் சொல் மட்டுமே நிற்கும் வகையில் வினா வாக்கியங்கள் அமைகின்றன.

  1. ஒருவர்: சந்தையில் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

             மற்றவர்: எத்தனை வந்துள்ளன?

மேற்கண்ட உரையாடலில் மற்றவர் கூற்றில் எத்தனை என்னும் வினாச் சொல் பெயரைக் கொண்டு முடியாமல் தனித்து நின்று மாடு என்னும் சொல்லையும் உள்ளடக்கிய பொருளைத் தந்து நிற்கிறது. முன்னர் ஒரு பொருள் குறிப்பிடப்பட்டு உரையாடல் நிகழும் நிலையில் அந்தப் பொருளின் எண்ணிக்கையைக் குறித்துப் பின்னர் எழுப்பப்படும் வினாவில் எத்தனை என்னும் சொல் தனித்தும் நிற்கும் என்பதை இதனால் அறியலாம்.

இவ்வாறு தனித்து நிற்கும்போதும் இவ்வினாச் சொல் பெயர்ச்சொல் போன்று வேற்றுமை ஏற்கிறது.

  1. ஒருவர்: சந்தையில் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன?

             மற்றவர்: நாம் எத்தனையை வாங்கலாம்? அல்லது
நாம் எத்தனைக்குப் பணம் செலுத்தலாம்?

மேற்கண்ட உரையாடலில் மற்றவர் கூற்றில் உள்ள இரண்டு விதமான வினா வாக்கியங்களிலும் எத்தனை என்னும் சொல் தனித்து நின்று மாடு என்னும் சொல்லையும் உள்ளடக்கி வேற்றுமை ஏற்கவும் செய்கிறது.

எனவே, முன்னர்க் குறிப்பிட்டது போன்று, எத்தனை என்னும் சொல்லை வினாப்பெயராகக் கொள்ளலாமா என்பது சிந்தித்தற்குரியது. உரையாடலின் தொடர்ச்சியாக அன்றித் தனித்த நிலையிலும் எண்களைக் குறித்த வினா வாக்கியங்களிலும் எத்தனை என்னும் சொல் வேற்றுமை ஏற்று வருகின்றது.

  1. எத்தனையிலிருந்து ஐந்தைக் கழித்தால் பத்து வரும்?
  2. ஐந்தை எத்தனையுடன் பெருக்கினால் பத்து வரும்?

எத்தனை என்னும் வினாச்சொல் பெயரடையைப் போன்று பெயருக்கு முன்னர் வருவதேயன்றி பெயருக்கு அடுத்து வருவதும் அந்நிலையில் பெயர்ச்சொல் போன்று வேற்றுமை ஏற்பதும் பெயர் இன்றித் தனித்து வருவதும் அந்நிலையில் வேற்றுமை ஏற்பதும் எனப் பலவாறாக இதன் தொடரியல் பண்புகள் அமைந்துள்ளன.

4. என்ன?

என்ன என்னும் சொல்லை யாது என்னும் பொருளில் வரும் வினாப் பெயராக(Interrogative Pronouns) அகராதிகள்(Tamil Lexicon மற்றும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி) சுட்டியுள்ளன.

  1. இந்தச் சொல்லுக்குப் பொருள் என்ன?

என்னும் வினா வாக்கியம் அகராதிகள் தரும் பொருளுக்குச் சான்றாக அமைகிறது. எனினும், இந்தச் சொல், பெயரடையாகவும் வந்து வா.29’இன் பொருளைத் தருகிறது.

  1. இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்?

இது புறநிலை வாக்கியமாகும். இது வா.29’ஐப் புதைநிலை வாக்கியமாகக் கொண்டு மாற்றிலக்கண முறையில் உருவான புறநிலை வாக்கியம் என்று கொள்ளலாம். அல்லது,

  1. இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் உண்டு/உள்ளது?

என்னும் புதைநிலை வாக்கியத்திலிருந்து வினைமுற்று நீக்கப்படுவதன் மூலம் உருவான புறநிலை வாக்கியமாகவும் கொள்ளலாம். எவ்வாறு இருப்பினும் எழுவாய்-பயனிலை அமைப்பு இல்லாத நிலையில் வா.29 புறநிலை வாக்கியமாகவே கொள்ளத்தக்கது.

என்ன என்னும் வினாச் சொல் வேறொரு தொடரியல் பண்பினையும் கொண்டுள்ளது. பின்வரும் இரண்டு வாக்கியங்களைக் காண்க.

  1. ஆசிரியர் என்ன கூறினார்?
  2. ஆசிரியர் கூறியது என்ன?

மேற்கண்ட இரண்டு வாக்கியங்களும் ஒரே பொருளில் அமைந்தவை எனினும் வா.33’இன் தொடரமைப்பு சிக்கலானது. வா.32 தனிநிலை வாக்கியமாகும்(Simple Sentence). ஆனால், அதே பொருளைத் தரும் வா.33 கலவை வாக்கியமாகும்(Complex Sentence). அது,

  1. ஆசிரியர் ஒன்று கூறினார்; அது என்ன?

என்னும் இரண்டு வாக்கியங்கள் இணைவதன் மூலம் உருவான வாக்கியமாகும். இதில் கூறினார் என்னும் வினைமுற்று கூறியது என வினையாலணையும் பெயராக மாற்றமுறுகிறது.

எனவே, என்ன என்னும் சொல் புறநிலை வாக்கியத்தில் பெயரடையாக வருவதும் தனிநிலை வாக்கியத்திலும் அதேபொருள் தரும் கலவை வாக்கியத்திலும் இடம்பெறுவதும் இதன் தொடரியல் பண்புகளாகக் கருதத்தகுந்தவை.

முடிவுரை

தமிழில் சில வினாச் சொற்கள் குறிப்பிடத்தகுந்த தொடரியற் பண்புகளைப் பெற்றுள்ள நிலையில் தொடரியல் நோக்கில் அவ்வாறான வினாச் சொற்களை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது. இதன்வழிப் பெறப்பட்ட முடிவுகள் கீழ்வரும் அட்டவணையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

வ.எண் வினாச் சொல் தொடரியற் பண்புகள் எடுத்துக்காட்டு
1 எங்கு/எங்கே? எங்கு/ எங்கே என்னும் இரண்டு வினாச்சொற்களும் வினைமுற்றை ஏற்றுவரும் வாக்கியங்களில் உறழ்ச்சி நிலையில் வருவனவாகும். 1. ஆசிரியர் எங்குச் சென்றார்?

2. ஆசிரியர் எங்கே சென்றார்?

வினைமுற்று இல்லாத வாக்கியங்களில் எங்கே என்பது மட்டுமே இடம்பெறுகிறது. ஆசிரியர் எங்கே?
2 எதனால்? கருவிப் பொருளில் அமைந்த வினா வாக்கியத்தை மாற்றிலக்கண முறையில் வேறொரு அமைப்புடைய வினா வாக்கியமாக உருவாக்கலாம். ஆனால், காரணப் பொருளில் வரும் வாக்கியத்தை அவ்வாறு உருவாக்கமுடியாது. 1.மரம் எதனால் வெட்டப்பட்டது? (கோடரியால்)

2. எது மரத்தை வெட்டியது? (கோடரி)

3 எத்தனை பெயருக்கு அடையாக வருதல் 1. எத்தனை மாடுகள் வந்தன?
பெயருக்குப் பின்னர் வருதலும் வேற்றுமை ஏற்றலும் 1. மாடுகள் எத்தனை வந்தன?

2. நீ மாடுகள் எத்தனைக்கு மருந்து கொடுத்தாய்?

பெயரில்லாமல் தனித்து வருதலும் வேற்றுமை ஏற்றலும் 1. எத்தனை வந்துள்ளன?

2. எத்தனையை வாங்கலாம்?

3. எத்தனையிளிருந்து ஐந்தைக் கழித்தால் பத்து வரும்?

4 என்ன வினாப் பெயராக வரும் இந்தச் சொல்லுக்குப் பொருள் என்ன?
புறநிலையில் பெயரடையாகவும் வரும். இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்?
ஒரே வினாப் பொருள் தரும் தனிநிலை வாக்கியத்திலும் கலவை வாக்கியத்திலும் வரும். 1. ஆசிரியர் என்ன கூறினார்?

2. ஆசிரியர் கூறியது என்ன?

அட்டவணை 2: வினாச் சொற்களின் தொடரியற் பண்புகள்

சான்றெண் விளக்கம்

1. சிவலிங்கனார் ஆ(பதி.), தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் – கிளவியாக்கம், 1982, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ப.147.

2. Radford Andrew, Transformational Grammar: A First Course, 1988, Cambridge University Press, p.462

3. சிவலிங்கனார் ஆ(பதி.), தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம்–வேற்றுமையியல், 2015-2016, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ப.

4. சண்முகம் செ.வை., இக்கால எழுத்துத் தமிழ், 2001, சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ், ப.31


ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

‘வினாச் சொற்கள் சிலவற்றின் தொடரியற் பண்புகள்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு.

1. பெரும்பாலும் நாவல், சிறுகதை புதுக்கவிதை, நாளிதழ்கள் என்னும் தளங்களிலேயே  நடைபெற்றுவரும் தமிழியல் ஆய்வுக் களத்தில் தொடரியல் சார்ந்த இத்தகைய ஆய்வுகள் வரவேற்கத்தக்கன.

2. தடம் புதியதாகவும் சராசரி திறனுடையவர்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலாததாகவும் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்ததாகவும் இருப்பதால் இத்தகைய பொருண்மையைக் கற்பார் உள்ளத்தில் பதியச் செய்வது பெரும் சவாலாகவே அமையும். இது இயல்பு. தொல்காப்பியச் செய்யுளியல் வழக்கொழிந்து போனது இங்கே சுட்டப்படலாம்.

3. தொல்காப்பியம் சொற்களைப் பற்றி மட்டுமே ஆராய்ந்த நிலையில் தொடர்களைப் பற்றி ஆராயும் வளர்ச்சிநிலையில் இக்கட்டுரை இன்றியமையாத இடத்தினைப் பெறுகிறது.

4. வழக்கு நோக்கிய எளிமையான எடுத்துக்காட்டுக்கள் தொடரியல் வழக்குகளில் காணப்படும் மாற்றங்களை விளக்கிக் காட்டுவதில் பெருந்துணை புரிகின்றன.

5. ‘ஞாபகஏது காரகஏது’ பற்றி  நச்சினார்க்கினியரின் கருத்துக்களைப் பொருத்தமான  இடத்தில் கட்டுரையாளர் காட்டியிருப்பது கட்டுரைப் பொருளுக்கு வலிமை சேர்க்கிறது.

6. கட்டுரையில் வினாத்தொடர்களுக்கு விடைகளின் அடிப்படையில் பெயரளித்திருப்பதுபற்றி கட்டுரையாளர் தருகின்ற விளக்கம் (ஆம்-இல்லை வகை வினாக்கள் வினவப்பட்டார் ஆம் அல்லது இல்லை என விடை தரும் வகையில் அமைபவை. இடைச்சொற்களின் துணைக்கொண்டோ ஒலிக்கப்படும்) பொருத்தமாக இல்லை. அவர் சொலல வருகின்ற கருத்து சரியே. ஆனால் குறியீடு பொருத்தமாக இல்லை. வினாக்களின தன்மைகள் வேறு விடைகளின் தன்மைகள் வேறு. கட்டுரையாளர் தந்திருக்கின்ற பழந்தமிழ் இலக்கண உரையாசிரியர்கள் வினாக்கள் பற்றிய பட்டியலே இதற்குச் சான்றாகும்.

7. வாக்கியம். தொடர் இவற்றில் ஒன்று வடமொழியாகவும் மற்றொன்று தமிழாகவும் அமைத்திருப்பது மயக்கத்தை ஏற்படுத்தும். ‘வாக்யம் – பதம்’ என்று எழுதலாமே! ‘வாக்யம்’ என்பதற்கிணையான தமிழ்ச்சொல் இல்லை என்ற முடிவுக்குக் கட்டுரையாளர் வந்தபிறகு ‘வாக்யம்’ என்றே எழுதுவது பிழையன்று. அவ்விரண்டு சொற்களின் பொருள் வரையறையைச் எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கிக் காட்டிக் கட்டுரை அமைந்திருக்க வேண்டும். இரண்டு சொற்களும் வடமொழியிலேயே அமைத்துக் கொள்வதும் . இரண்டும் தமிழாகவே அமைத்துக் கொள்வதும் கட்டுரையாளர் உரிமையே. ஆனால் இரண்டு சொற்களுக்கு இரண்டு மொழி என்பது சரியன்று. ‘கட்டுரையின் தொடககத்திலேயே வாக்கியம் (SENTENCE) தொடர், (PHRASE)  தனிவாக்கியம் (SIMPLE  SENTENCE) கலவை வாக்கியம் (COMPLEX SENTENCE) என்பவற்றை எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கியிருந்தால் கட்டுரைப் பொருளைப் புரிந்து கொள்ளல் எல்லார்க்கும் எளிதாய் இருந்திருக்கும்.

8. ‘மாற்றிலக்கண நெறி’ ‘புதைநிலை வாக்கியம்’  போன்ற தொடர்களுக்கு எடுத்துக்காட்டுடன் பொருள் வரையறை செய்து காட்டினால்தான் கட்டுரை  அதன் உண்மைப் பயனைத் தரும். இல்லையாயின் குழூஉக்குறிபோல துறைசார்ந்தவர்க்கே புலனாகும். இலக்கிய உரைகளில் ‘அனுவாதம்’ என்பது இன்னதென அறியார்க்கு ‘அனுவாதம்’ என்பதை விளக்கினால்தானே புரியும்?

9. ‘ஆய்வுச்சுருக்கம்’ என்னும் தலைப்பில் தொடங்கப்பட்ட ‘முன்னுரை’ ‘கட்டுரையின் நோக்கமாகும்’ என முடிந்திருப்பதில் மயக்கம் நிலவுகிறது.

10. “ஆசிரியர் வந்தார்?என்னும் வாக்கியத்தில் வெளிப்படையாக வினாவினைக் குறிக்கும் இடைச்சொற்கள் இல்லையெனினும் ‘வந்தார்’ என்னும் சொல்லின்கண் வழங்கப்படும் ஒலி அழுத்தம் அந்த வாக்கியத்தை வா.1 மற்றும் வா.2’இன் பொருளில் வரும் வினாவாக மாற்றிவிடும்”. என்னும் பகுதி வினாச்சொற்கள் தொடரியற் பண்புகள் பற்றிய ஆய்விலிருந்து மொழியியலுக்குள் சென்றுவிடுவதை ஆய்வாளர் நோக்கியிருக்க வேண்டும்.

11. “28.  ஐந்தை எத்தனையுடன் பெருக்கினால் பத்து வரும்?”  என்று கட்டுரையாளர் காட்டும் எடுத்துக்காட்டு முற்றிலும் செயற்கையானது. ‘ஐந்தை எதனால்’ பெருக்கினால் பத்துவரும் என்பதுதான் பெருவழக்கு. ‘உடன்’ என்பது கூட்டலுக்கும் எதனை அல்லது எத்தனை என்பது கழித்தலுக்கும் .‘எதனால்’ என்பது பெருக்கலுக்கும் வகுத்தலுக்குமான உலகியல்.

12. “இவ்வாறு கொள்வதேயன்றி மாணவனாகிய ஒருவன் என்றும் நூலாகிய ஒன்று எனவும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவும் கொள்ளலாம்”.  ஏன் கொள்ள வேண்டும்? ஒரு சொல்லுக்கு இலக்கணக்குறிப்பு என்பது பொருள் சார்ந்த நிலையில் அடர்த்தி மிகுவிக்கும் நிலையன்றித் தேவையற்ற நிலையில் இவ்வாறு கொள்வது பயனற்றது. மேலும் இது உண்மையான தொடரியல் பண்புகளை விளக்குவதாக அமையுமா என்பது சிந்தனைக்குரியது.

13. “24.நினைத்தது எத்தனையில் தவறாமல் (திருப்புகழ்.278) என்னும் திருப்புகழிலும் எத்தனை என்னும் சொல் வேற்றுமை உருபேற்று வந்துள்ளதைக் காணலாம்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க  அதற்குத் தக”

என்னும் குறட்பாவில் ‘கற்றபின்’ என்னும் சொல்லில் உள்ள ‘‘பின்’ என்பது ‘கற்றதற்குப் பின்னால்’ என்பதைக் குறிக்குமா? ‘இல்’ என்று வருவதனாலேயே அது வேற்றுமையாகிவிடுமா? அது வேற்றுமை என்றால் அது குறிக்கும் பொருள் பற்றிய விளக்கம் தரவேண்டும் அல்லவா?

‘பயனென் கொல்?’ என்பதில கொல் அசைநிலை (2). ‘இலனாகும் மற்றும் பெயர்த்து’ (205) என்பதில் ‘மற்று’ என்பது: அசைநிலை. ‘ஓரும்’ (366) இருவழியும் அசைநிலை. ‘கனவினும் இன்னாது மன்னோ’ (819) என்பதில் மன் ஓ அசைநிலை. இடைச்சொற்கள் உணர்த்தும் பொருள் பலவாயினும் அவை பொருளுணர்த்தியே ஆக வேண்டும் என்பதில்லை.


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.