அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 11 (குறமகள்)

0

ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

குறமகள்  என்னும் பாத்திரம் தேவைக்கேற்ப சிறுபாத்திரமாகவும், தலைமைப் பாத்திரமாகவும், முருகனின் காதல் மனைவி வள்ளியைக் குறிப்பதாகவும் அமைவதே அதன்  தனித்தன்மை ஆகும். குறிஞ்சித் திணை சார்ந்த தலைவியும்; புனம் காக்கும் பெண்டிரும் குறமகள்கள் எனினும்; வெளிப்படையாகத் தலைவியைக் ‘குறமகள்’ என்று சொல்லும் பாடல் ஒன்றே ஒன்று தான் (அகம்.- 188). அகப்பாடலில் வள்ளியும் ‘குறமகள்’ என அழைக்கப்படுகிறாள் (பரி.- 8).   அவற்றைத் தவிர்த்து குறமகள் என்னும் சிறுபாத்திரம் இடம் பெறும் பாடல்கள் மூன்று. அப்பாடல்களில் ‘குறமகள்’ தோழியின் கூற்றிலும் தலைவியின் கூற்றிலும் இடம் பெறுகிறாளே அன்றிக் காட்சியில் நேரடியாக இடம் பெறவில்லை.

உவமை உருவாக்கத்தில் குறமகள்

ஒரு மலைப்புறம்; அது நறவுமலி பாக்கம். அதாவது கள் மிகுந்த மலைப்பக்கத்துச் சீறூர்; அங்கே குறமகள் ஈன்ற புதல்வர். எந்த அளவு பிள்ளைமைப் பருவமெனின்; முன்கை மிகவும் சிறிது. அதைக் ‘குறியிறைப் புதல்வர்’ என்னும் தொடரால் புலவர் நமக்குப் புரிய வைக்கிறார். பெயர் தெரியாத அப்புலவருக்கு இந்தத் தொடரே பெயராகவும் அமைந்தது. ஆம்; குறுந்தொகையைத் தொகுத்தோர் அவருக்குச் சூட்டிய பெயர் குறியிறையார்.

இந்தப் புதல்வருடன் அவர் முரண்படுத்திக் காட்டுவது ஒரு யானைக்கன்று. அக்கன்று இரும்பிடி ஈன்ற கன்று; அதாவது கருமையான பெண்யானையின் கன்று. அந்தக் கன்றும் இளம்பருவத்தினை உடையதே. மெல்லிய தலையை உடைய கன்றாக  இருப்பினும்  யானையின் முழந்தாள் குறிப்பிட்டுச் சுட்டிக்  காட்டக்கூடிய அளவு தோற்றமளித்தது.

“நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறியிறைப் புதல்வ”ரோடு (குறுந்.- 394) அக்கன்று சுற்றிச்சுற்றி ஓடி விளையாடி இனிமை பயக்கிறது. காலம் செல்லச் செல்ல நிலைமை  மாறுகிறது. யானைக்கன்று வளர்ந்த பிறகு தினைப்புனத்தை மேய்ந்து துன்பத்தைத் தருவதாகி விட்டது.

ஆக இருவேறு சூழல்கள்; ஒன்று குழந்தைப் பருவத்துச் சூழல்; மற்றொன்று வளர்ந்த பிறகு தோன்றும் சூழல்.  முதல் காட்சியில் யானைக்கன்றுடன் சேர்ந்து விளையாடும் சிறார்; இரண்டாம் காட்சியில்  புனத்தில் மேய வந்த யானையை விரட்டும் இளைஞர். அதுபோல…; என்று தலைவனை இயற்பழித்துத் தோழி பேசுகிறாள். ஆற்றவியலாத தலைவியை ஆற்றுவிக்கிறாள்.

மேற்சுட்டிய உவமையோடு ஒப்பிடப்படுவது தலைவன் தலைவியின் கேண்மை. முதலில் தலைவனின் நகைவிளையாட்டு இனிதாக இருந்தது; பின்னர் தலைவியின் நற்பெயருக்குப் பகை ஆகிவிட்டது. இந்த உவமையை வடிவமைக்கக் கருவியாக குறமகள் என்னும் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

உள்ளுறை உருவாக்கத்தில் குறமகள்

கிள்ளைப் பத்தில் சிறப்பிடம் பெறுவது கிளி தான் எனினும்; அக்கிளியைக் கடியும் குறமகள் உள்ளுறையில் சிறப்பிடம் பெறுகிறாள்.

“பின்னிருங் கூந்தல் நன்னுதற் குறமகள்” (ஐங்.- 285)

‘மென்தினை நுவணை உண்டு பசி தீர்கிறாள்; பின்னர் தட்டையைப் புடைத்து மலைநெற் கதிர்களைக் கொய்யவரும் சிறுகிளிகளை ஓட்டுகிறாள். இதற்கிடனான நாட்டை உடைய தலைவனே’ என்று தோழி விளிப்பதில் உள்ளுறை அழகு சேர்க்கிறது. குறமகள் தினைமாவினை உண்டு பசியாறுவது தலைவி தலைவனோடு சேர்ந்து  நுகரும் இன்பத்திற்கு ஒப்பானது. சிறுகிளி ஓட்டிக் காவலில் ஈடுபடுவது;  தலைவனது மனைச் செல்வத்தைப் பிறரொழியத் தானே நுகரும் வேட்கையைப் புலப்படுத்துவது. இத்தன்மையுடைய தலைவியைப் பற்றி அறிந்திருந்தும் அவள் மெலியும்படி நீ பிரிந்து சென்றது தகுமோ என்று தோழி தலைவனிடம் வினவுகிறாள்.

உள்ளுறையில் இடம்பெறும் குறமகள் தான் நாடனின் தலைவியோ என்னும் ஐயம் எழாமல் இல்லை. ஆயினும் நாடனை விளிக்கும் பகுதி உள்ளுறை இடம்பெறும் பகுதியாக இருப்பதே அகப்பாடலின் பொதுவான அமைப்பு. அந்த மரபு மீறிய பாடல் எதுவும் தொகைநூல்களில் இல்லை. எனவே இங்கு ‘குறமகள்’ சிறுபாத்திரமே.

படிமப்பொருளாகும் குறமகள்

செவிலித் தாயிடம் தோழி அறத்தொடு நிற்பாள் எனவுணர்ந்த தலைவி ‘உயிரே போனாலும் சரி; கண்களின் பசலைக்குக்  காரணம் காமநோய் என்று சொல்லிவிடாதே’ எனப் பதறுகிறாள். அவளது பேச்சில் இடம்பெறுபவள்;

“கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப்
பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்” (அகம்.- 52)

ஆவாள்.   தலைவியின் கூற்று தொடர்கிறது.  மலைப்புறத்தில் வள்ளிக்கொடி சுற்றிய வேங்கை மரத்தில் மிகவுயர்ந்த கிளையில் பொன்னை ஒத்துப் பூத்திருக்கும் பூக்களைப் பெற விரும்பிய குறமகள் ‘இன்னா இசைய பூசல் பயிற்று’கிறாள். அதாவது ‘துன்பத்தை வரவழைக்கக் கூடிய ஆரவாரம் செய்கிறாள்’  என்பது பாடலடியிலிருந்து தெரிகிறது. அதற்கு மேல் அந்த ஆரவாரம் என்ன என்பது பற்றிய விளக்கம் மற்றொரு அகப்பாடல் மூலமே நமக்குப் புரிகிறது.

“ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்
புலிபுலி என்னும் பூசல் தோன்ற” (அகம்.- 48)

என்றும் செவிலியிடம் அறத்தோடு நிற்கும் தோழியே பேசுகிறாள். இப்போது துன்பத்தை வரவழைத்த பூசல் ‘புலிபுலி’ என்று ஆரவாரிப்பதென்பது ஐயமின்றிப் புலனாகிறது. அப்படிப் பூசலிட்டால் எட்டாத உயரத்தில் இருக்கும் வேங்கைப்பூ உதிரும்  என்று ஒரு நம்பிக்கை. நாம் புத்தகத்திற்குள் மயிலிறகை வைத்து மூடி ‘அது குட்டி போடும்’ என்று காத்திருந்தோமே அது போன்ற நம்பிக்கை தான்.

இந்த ஆரவாரத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு;  அப்பூசலுக்குக் காரணம் பக்கமலையிலுள்ள குகையில் இருந்து பசுவினைக் கவரும் வலிய புலி என்று கருதித் தம் சீறூர் தனித்தொழியக் குன்றத்து மக்களெல்லாம் ஆரவாரித்து வில்லோடு சென்றனர். இது தலைவன் நாட்டில் காணக் கூடிய நிகழ்வு.

இங்கு வள்ளிக்கொடி சுற்றிய வேங்கைமரம் தலைவன் தலைவியின் கேண்மையை உள்ளுறையாக உரைக்கும் படிமமாக உள்ளது. ஒன்று இன்னொன்றாக மனதில் படிவதே படிமம் ஆகும். புராணத்து வள்ளி ஒரு குறமகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த தொன்மக்கருத்து. அதனால் வள்ளிக்கொடியும் வேங்கை மரமும் கட்புல உருக்காட்சியாகத் தோன்றியவுடன் முறையே வள்ளிக்குறத்தி, முருகன் என்று நம் மனதில் படிகிறது.

வேங்கை பூத்தமை கண்ட குறமகளின் ‘புலி புலி’ எனும் ஆரவாரம் ஊர் முழுவதும்  பேரிரைச்சல் எழக் காரணமாயினமை; அவர்களது கேண்மையால் பிறந்த கௌவை ஊர் முற்றும் பரவி அலராயிற்று என்னும் பொருளையும் தருகிறது.

உள்ளுறையோடு தெரிய வரும் அக்கால மக்களின் நம்பிக்கையைப் புரிய வைப்பதற்கும், படிமப்பொருளாக்குவதற்கும் குறமகள் எனும் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

முடிவுரை

குறமகள் தோழியின் கூற்றிலும் தலைவியின் கூற்றிலும் இடம் பெறுகிறாளே அன்றிக் காட்சியில் நேரடியாக இடம் பெறவில்லை. உவமை உருவாக்கத்திற்கும், உள்ளுறை உருவாக்கத்திற்கும் துணை செய்பவளாகக் காணப்படுவதுடன்; படிமப்பொருளுக்குத் துணையாகி அக்கால மக்களின் நம்பிக்கையையும் புலப்படுத்துகிறாள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *