அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 273

 1. சுதந்திர பறவை

  எங்கு வேண்டுமானாலும்
  எப்பொழுது வேண்டுமானாலும்
  எல்லைகள் தாண்டியே பயணம்

  உடைமை கொண்டாட்டமில்லை
  மடைமை கொண்டாடுவதில்லை

  ஆசைகள் பிறப்பதில்லை
  யாரையும் பின்பற்றுவதில்லை

  என்னை வழிநடத்துபவன் என்
  என்னுள்ளே இருப்பதால்
  சூழ்ச்சி வலையில்
  வீழ்ச்சி. வழியில்லை

  என்னைக் கேட்டுத்தான்
  எல்லாமே நடக்கனும்
  சர்வாதிகார சிந்தனை
  சந்நதிக்கே இல்லையப்பா

  மானிடா
  உங்களுக்குள்ளே
  எத்தனை எத்தனை பிரிவுகள்

  பிரிவுகளுக்குள்ளே
  எத்தனை எத்தனை
  உட்பிரிவுகள்

  வளர்கிறோமே
  வாதாடுவாய்

  சாதனைகள்
  பட்டியலிடுவாய்

  ஒரே கேள்வி

  நிம்மதியாக
  வாழ்கிறாயா

 2. அவன் செயல்…

  சிறகில்
  சுதந்திரத்தைக் கட்டிப்
  பறக்கும் பறவைக்கு
  வசப்பட்டுவிடுகிறது
  வானம்..

  மண்ணில்தான்
  மாறுபாடாகிறது மனிதனால்..

  உயர்ந்த மரக்கிளையில்
  ஓவியமாக் கூடுகட்டி
  இனத்துடன்
  ஒற்றுமையாய் வாழ்ந்தாலும்
  இடர்ப்பாடு வந்துவிடுகிறது
  இவனால்-
  மரத்தையே வெட்டிவிடுகிறானே
  அடியோடு..

  கலக்கத்துடன்
  பார்த்துக்கொண்டிருக்கிறது
  பறவை யொன்று…!

  செண்பக ஜெகதீசன்…

 3. படக்கவிதைப் போட்டி 273

  மஞ்சள் வெல்வெட்டில்
  கருப்பு நிற கருகுமணி உன் கண்கள்
  பேனாவின் கூர்மை கொண்ட உன் அலகு
  பதிய வைத்தக் கால்களுடன்
  மரக்கிளையில் நீ ஊஞ்சலாடும் அழகு
  நளினத்தின் நளினம்
  இயந்திர நகர நரக வாழ்க்கையில்
  உந்தன் குரலை மறந்திருந்தோம்
  ஊரடங்கில் உந்தன் குரல்
  கேட்கக் கேட்க எத்தனை இனிமை
  அமைதியினிடையில் ஆனந்தம் தந்ததே
  இறுகிய மனத்தூடே இனிமை தந்ததே
  உன்னிசையை தந்துக் கொண்டேயிரு
  எங்களைக் குதூகலிக்க
  மஞ்சள் மைனாவே
  மறவாதே எங்களை!!!

  சுதா மாதவன்

 4. தன்னம்பிக்கை

  தன் துணை
  தனிமைப்படுத்தியதின்
  தாபமோ!

  தன் கூட்டம்
  தள்ளி வைத்ததின்
  கோபமோ!

  தன்னந்தனியாய்
  தண்ணீருக்கான
  தேடலோ!

  தனியொரு பறவையாய்
  தடித்த மரக்கிளையில்
  தவிக்க விட்டது
  தலைவிதியென்று
  தளராதே குருவியே!

  தன்னம்பிக்கையையும்
  தைரியத்தையும்
  தடைகளைத்
  தகர்த்திடும் ஆயுதங்களாக்கு!

  தவிக்க விட்ட
  சொந்தங்கள்
  தன்னால் வரும்
  உன் பின்னால்!

  கோ.சிவகுமார்
  மண்ணிவாக்கம்

 5. சிட்டுக்குருவிகள் சொல்லும் சேதி

  காலை எழுந்து கடமையைச் செய்ய
  மாடத்தில் தினமும் கூவிடுவாய்
  மாலை நேரமாய் வீடுவந்து
  சொந்தம் கூடி வாழச் சொல்லிடுவாய்

  சோம்பித் திரிந்து வாடிடாமல்
  உழைப்பைக் கொண்டே உலகைச் சுற்றி
  உண்மைக் களிப்பைப் பெற்று வாழும்
  சிறப்பை தினமும் காட்டிடுவாய்

  படைப்பின் நியதிகள் மீறிடாமல்
  அடைந்துக் கிடந்துத் தேங்கிடாமல்
  சிறகை விரித்துப் பறந்து செல்லும்
  விடுதலை வேட்கை விதைத்திடுவாய்

  ஆட்டம் காட்டும் கிளை அமர்ந்தும்
  வாட்டம் முகத்தில் காட்டி வைத்து
  அழுது பொழுதைப் போக்காமல்
  நிலையாய் நிற்கும் உறுதி சொன்னாய்

  சின்னச்சின்ன குருவி நீயும்
  சொல்லும் சேதிகள் ஏராளம்
  எண்ணத்தில் அவற்றை நிலையிருத்தி
  முன்னேற்றம் நாங்களும் கண்டிடுவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *