இலக்கியம்கட்டுரைகள்

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 10

-மேகலா இராமமூர்த்தி

தயரதன் இறந்தபின்னர் அவனுடலைத் தைலத்தில் இட்டுவைத்து, கேகய நாட்டிலிருந்த பரதனை அழைத்துவருவதற்குக் கோசலத்திலிருந்து தூதுவர்கள் செல்கின்றனர். அயோத்திக்குப் புறப்பட்டுவரும்படி எழுதப்பட்ட மன்னனின் திருமுகத்தை (ஓலை) பரதனிடம் நீட்டுகின்றனர்.

மகிழ்ச்சியோடு அவ் ஓலையைப் பெற்ற பரதன், ”அயோத்தி அரசர் நலந்தானே?” என்று வினவ, ”ஆம்” என்கின்றனர் தூதுவர்கள். ”இராமனும் இலக்குவனும் நலமா?” என்று அடுத்த வினாவைப் பரதன் தொடுக்க, ”அவர்களும் நலமே” என்று பதிலிறுக்கின்றனர்.

இராமாயணத்தில் வருகின்ற மிகச் சிறந்த பாத்திரப் படைப்புக்களில் ஒன்றான பரதனை நாம் முதன்முதலாகச் சந்திக்கின்ற இடம் இதுவே. அவனுடைய குணத்தின் மாண்பை மெல்ல மெல்ல நமக்குக் கம்பநாடர் விரித்துக் காட்டும் பாங்கு, அழகிய ஓவியத்தை ஒவ்வோர் உறுப்பாய்த் தீட்டி முழுமைப்படுத்துவதுபோல் சிறப்பாய் உள்ளது.

இனி விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடருவோம்…

மூத்த மகன் இராமன்மீது கொண்டிருந்த தாளாத பாசத்தினால் மகன் கானகம் சென்றதறிந்து தயரதன் வானகம் சென்றுவிட்ட இக்கட்டான சூழலில், பரதனை அழைத்துச் செல்லக் கேகய நாடு வந்த தூதுவர்கள் தயரதனும், இராம இலக்குவர்களும் நலமாக இருக்கிறார்கள் என்று எதற்காகப் பரதனிடம் பொய்யுரைக்க வேண்டும்?

ஊருக்குச் சென்றதும் பரதனே உண்மையை உணர்ந்துகொள்ளட்டும்; கேகய நாட்டிலேயே அவனைக் கலவரப்படுத்திக் கண்ணீர்சிந்த வைக்கவேண்டாம் எனும் நல்லெண்ணத்தின்பால் சொல்லப்பட்ட பதில்களாகவே இவற்றை நாம் கருதவேண்டியிருக்கின்றது.

அந்தப் பொய்யுரையை மெய்யென்று நம்பித் தாதையையும் உடன்பிறப்புக்களையும் காணும் ஆவலோடு கோசலத்துக்கு விரைகின்றனர் பரதனும் அவனைப் பிரியாத சத்ருக்கனனும். ஆனால் அங்கே அவர்கள் கண்ட காட்சியோ வேறுவிதமாய் இருந்தது.

நாவினால் விளம்புதற்கரிய வளங்கள் பொருந்திய கோசல நன்னாடு, தாமரை மலரை இழந்ததாக, அத்தாமரை மலரில் உறைபவளாகிய திருமகளும் அந்நாட்டைவிட்டு நீங்கி நெடுந்தொலைவு சென்றுவிட, உயிரிழந்த உடல்போல அவலமாய்க் காட்சியளிப்பதைக் கண்டான் பரதன்.

நாவின் நீத்து அரு நல்வளம் துன்னிய
பூவின் நீத்தென நாடு பொலிவு ஓரீஇ
தேவி நீத்து அருஞ் சேண் நெறி சென்றிட
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே. 
 (கம்ப: பள்ளிபடைப் படலம் – 2217)

எப்போதும் மக்களின் மகிழ்ச்சியால் பொலியும் நாடு களையற்றிருப்பது கண்டு கவலையோடு பேசியபடியே அரண்மனையை அடைந்தனர் பரதனும் சத்ருக்கனனும்.

அரண்மனையில் தந்தையைக் காணாது நொந்த சிந்தையனான பரதன் தாயைக் காணச் செல்கின்றான்.

தனக்குக் கோசல நாட்டையும், அண்ணன் இராமனுக்குக் காட்டையும், தந்தைக்கு வானுலகையும் பெற்றுத் தந்திருக்கும் அவள் செயலறிந்து திகைக்கின்றான்.  தாய் செய்த அடாதவை அனைத்தும் தன்னை உத்தேசித்தே செய்யப்பட்டிருப்பதை அறிந்து மனத் துணுக்கமும் பெருங்கலக்கமும் உற்ற பரதன்,

”தாய் கைகேயியைப் பார்த்து, உன் கொலைகார வாயால் என் தந்தையை நானே கொன்றுவிட்டேன்; அம்மட்டோ? அண்ணனைக் கானகத்துக்கு அனுப்பிவிட்டேன். இதோ (இவ்வளவு நல்ல காரியங்களையும் செய்துவிட்டு) அயோத்தி அரசை ஆளுவதற்கு நான் ஆயத்தமாக இருக்கின்றேன். இதில் உன் பிழை ஏதுமில்லை!  எல்லாம் என்னுடைய பிழைதான்; குற்றந்தான்! இப்பழி நீங்கும் காலம் என்றைக்கேனும் எனக்கு வாய்க்குமா?” என்று ஏக்கத்தோடு கூறிவிட்டுக் கண்ணீர் சிந்துகின்றான்.

கொன்றேன்  நான் என் தந்தையை
     மற்று உன் கொலை வாயால்
ஒன்றோ கானத்து அண்ணலை
     உய்த்தேன் உலகு ஆள்வான்
நின்றேன் என்றால் நின் பிழை
     உண்டோ பழி உண்டோ
என்றேனும் தான் என் பழி
     மாயும் இடம் உண்டோ   (கம்ப: பள்ளிபடைப் படலம் – 2274)

இங்கே முக்கியமான செய்தி ஒன்றைக் குறிப்பிடவேண்டும். கைகேயியைத் தயரதன் திருமணம் செய்தபோது ’கன்யா சுல்கமாக’ (பெண்ணுக்கு அளிக்கும் சீதனம்) அவளுக்குக் கோசலநாட்டை அளித்ததாக வால்மீகி இராமாயணத்தில் ஒரு குறிப்புண்டு. அப்படியானால் அவள் மிக எளிதாக, எவ்விதப் பிரயத்தனமும் இன்றியே, தனக்குரிய கோசல நாட்டின் மன்னனாகப் பரதனை ஆக்கியிருக்கலாம். அதைவிடுத்து, சம்பராசுரப் போரின்போது தயரதன் கொடுத்த இரு வரங்களை அவனுக்கு நினைவூட்டி அவற்றின்மூலமாக ஏன் பரதனுக்கு அரசுரிமை வாங்கினாள்; இராமனைத் தேவையில்லாமல் காட்டுக்கு அனுப்பினாள் என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன.

காப்பியத்தின் நோக்கத்தை நிறைவேற்றவும், இராமனுக்கு அரசளிக்க முனைந்துவிட்ட தன் கணவன் தயரதனை வாய்மை தவறியவன் என்ற பழியினின்று தப்புவிக்கவும் ’தீயவள்’ என்ற பழியைக் கைகேயி தான் ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்கின்றனர் இதற்கு விடையளிக்கும் இராமாயண ஆராய்ச்சியாளர்களில் சிலர்.

வேறு சிலரோ, வால்மீகி இராமாயணத்தில் பிற்காலத்தில் பல இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்கின்றன. பால காண்டமும், உத்தர காண்டமும் அவ்வாறு பின்னாளில் இணைக்கப்பட்டவையே என்ற கருத்துண்டு. அவ்வகையில் கன்யா சுல்கமும் இடைச்செருகலாக இருக்கலாம் என்கின்றனர்.

இந்தக் குழப்பமெல்லாம் வேண்டாம் என்று கருதியோ என்னவோ ’கன்யா சுல்கம்’ பற்றிக் கம்பர் தம் காப்பியத்தில் வெளிப்படையாக எதுவும் குறிப்பிடவில்லை.

தாயின் செயல்களை வெறுத்து அவள் அரண்மைனையைவிட்டு நீங்கிய பரதன், கோசலையைக் காணச் செல்கின்றான். தன் தாயின் சூழ்ச்சியில் தனக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை அவள் கால்பிடித்துக் கதறித் தெளிவுபடுத்துகின்றான். அந்தத் தாயுள்ளம் கனிகின்றது; தூயனான பரதனை வாயார வாழ்த்துகின்றது!

பின்பு, வசிட்டரோடு சென்று தைலத்தில் வைக்கப்பட்டிருக்கும் தந்தையின் உடலைக் காண்கின்றான் பரதன்; கண்டவன் மண்ணில் வீழ்ந்து அலறி அழுகின்றான். அவனியைக் காத்த அண்ணலில் பொன்னெழில் மேனி எண்ணெயில் கிடப்பதைக் கண்டு துடிதுடித்து, அதனைத் தன் கண்ணீரில் கழுவினான் என்கிறார் கம்பர். [எண்ணெய் ஆட்டியதால் தயரதன் மேனி பொன்னிறம் பெற்றது என்பது வான்மீகத்திற் காணப்படும் குறிப்பு.]

மண்ணின்மேல் விழுந்து அலறி மாழ்குவான்
அண்ணல் ஆழியான் அவனி காவலான்
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்.
(கம்ப: பள்ளிபடைப் படலம் – 2313)

அதனைத் தொடர்ந்து தயரதனுக்கு ஈமக்கடன்களை ஆற்ற பரதன் முனைந்தபோது, தன்னை மகனல்லன் என்று தந்தை தயரதன் துறந்துவிட்டதையும், அதனால் ஈமக்கடனாற்றும் உரிமையும் தனக்கில்லை என்பதையும் அறிகின்றான்; அவனடைந்த துயருக்கோர் அளவில்லை.  எனவே வசிட்டரின் வழிகாட்டுதல்படி ஈமக்கடனாற்றும் பணியைச் சத்துருக்கனன் நிறைவேற்றுகின்றான்.

சின்னாட்களுக்குப் பின், பரதனைச் சந்தித்த இரவிகுல குருவான வசிட்டர், ”அரசனில்லாமற்போனால் நாடு அழிந்துபடும்; ஆதலால் பரதனே நீ முடிசூட்டிக் கொள்” என்று அவனிடம் வேண்டுகின்றார். அதனைக் கேட்ட பரதன், நஞ்சுண்ணச் சொன்னதுபோல் நெஞ்சு நடுங்கி, அதனை மறுத்துவிடுகின்றான்.

அரசவைக்கு வந்தவன் அங்கிருந்தோரை நோக்கி, ”ஐயன்மீர்! எனக்கு மூத்தவனிருக்க நான் நாட்டையாளுதல் முறைமையன்று! எனவே கானகத்தினின்று இராமனை அழைத்துவந்து அரசனாக்குவேன்; அவன் மறுத்தால் அவனுடனேயே அடர்வனத்தில் தவமியற்றுவேன்; இதற்குமேலும் என்னை ஆட்சிசெய்யச் சொல்லி வற்புறுத்துவீராயின் என் உயிரைப் போக்குவேன்!” என்று கம்பீரமாக உரைத்து ஆட்சிப்பொறுப்பை ஏற்க மறுத்துவிட,  அவனது கருத்தறிந்து அவை களித்தது; நீடு வாழ்கவென அவனைக் கூடி வாழ்த்தியது!

தவக்கோலம் பூண்டு மரவுரி தரித்து இராமனை அழைத்துவரக் கானகம் புறப்பட்டான் பரதன்; சேனையும் அவனைப் பின்தொடர்ந்தது!  

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க