திருவள்ளுவர் யார்? – 5
புதுக்கோட்டை பத்மநாபன்
திருவள்ளுவருடைய பெயரைக் காரணம் காட்டி அவர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுடைய கருத்து மிக மிகத் தவறானது.
திருவள்ளுவருக்குத் திருவள்ளுவர் என்ற பெயரைத் தவிர நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என்ற பெயர்களும் உண்டு. “திருவள்ளுவர்” என்ற அவருடைய பிரபலமான பெயரே “திருவல்லவன்” என்ற பெயரின் மருவிய வடிவம்தான். பிங்கல நிகண்டிலும் சூடாமணி நிகண்டிலும் கணவனைக் குறிக்கும் பெயர்களின் வரிசையில் “வல்லவன்” என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது. “திருவல்லவன்” என்றால் திருமகளின் கணவனான திருமால் என்று பொருள். ஆகவே “திருவல்லவன்” என்பது திருமாலின் பெயர்.
‘குறள்’ என்றால் குட்டையான என்று பொருள். திருமால் குறள் வடிவெடுத்து வந்து தன் திருவடிகளால் உலகங்களை அளந்தார். இவரும் குட்டையான குறள் வெண்பாக்களால் அறிவுலகை அளந்தார். அதனால் இவருக்குத் “திருவல்லவன்” என்ற பெயர் பொருத்தமானதுதான். இந்தத் “திருவல்லவன்” என்ற பெயர்தான் நாளைடைவில் “திருவள்ளுவன்” என்று மருவிவிட்டது. ஆகவே இவரது பெயரை வைத்து இவரைத் தாழ்ந்த குலத்தவர் என்று கூறுவது பரம அபத்தமாகும். நீதிநூல் என்பது மனித சமூஹத்திற்கான சட்டம். அதை அரசனுக்கு அறிவுரை கூறும் ஸ்தானத்தில் இருப்போரால் தான் எழுத முடியும்.
இதுதவிர, அவரது படைப்பான திருக்குறளே அவர் யார் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. எந்த ஒரு வர்ணத்தவனும் தன் வர்ணத்தைப் பற்றிய குறை நிறைகளைப் பற்றித்தான் சிந்திப்பானேயொழிய மற்ற வர்ணத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான். ஒழுக்கம் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறவந்த இடத்தில் மற்ற வர்ணத்தவரைப் பற்றிப் பேசாமல் அந்தணரின் ஒழுக்கம் பற்றிப் பேசுகிறார் திருவள்ளுவர். அதுவும் அந்தணனின் பிறப்பு, உயர்ந்த பிறப்பு என்கிறார். கீழ்க்குலத்தைச் சேர்ந்தவனால் இப்படிக் கூற முடியுமா?
மேலும் எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை பூண்டு ஒழுகுவதால் அந்தணர் அறவோர் எனப்படுகின்றனர் என்று அந்தணருக்கு ஓர் இலக்கணத்தைக் கூறுகிறார். அந்த இலக்கணப்படி வாழ்ந்த அந்தணராக அவர் இருந்ததால் தான் கொல்லாமை பற்றி அவரால் எழுத முடிந்தது. மாட்டுக்கறி தின்னும் ஒரு மனிதனால் கொல்லாமை பற்றியும் புலால் மறுத்தல் பற்றியும் மதுப் பழக்கத்தைக் கண்டித்தும் எழுத முடியுமா? அதனால் திருவள்ளுவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்தான். அதற்கு அவர் எழுதிய திருக்குறளே சாட்சி.
திருவள்ளுவர் தனது நூலில் வேதத்தையும் வைதிக வேள்விகளையும் வைதிக அந்தணர்களையும் வர்ண தர்மங்களையும் ஆதரித்துப் பேசியிருக்கிறார் என்பதை இதுவரை விரிவாகப் பார்த்தோம். இனி அவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்பது பற்றிப் பார்ப்போம்.
திருவள்ளுவரின் சமயம்
திருவள்ளுவர் ஸநாதன வைதிக சமயத்தில் சொல்லப்படும் மனித வாழ்வின் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு இலக்குகளைப் பற்றியும் கல்வி, இல்வாழ்க்கை, விலகல், துறவு என்ற நான்கு ஆஶ்ரம தர்மங்களைப் பற்றியும் தனக்கே உரிய முறையில் தனது நூலில் எழுதியிருக்கிறார். இதுதவிர தெய்வங்கள் என்று எடுத்துக்கொண்டால் திருமால், இந்திரன், லக்ஷ்மி, பிரஹ்மா, பித்ருக்கள், யமன் என்ற வைதிக தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் தான் திருக்குறளில் காணப்படுகின்றன.
திருமாலை இரண்டு (610, 1103) குறட்பாக்களிலும் திருமகளை ஐந்து (84, 179, 519, 617, 920) குறட்பாக்களிலும் நேரடியாகவே குறிப்பிடுகிறார். யமனை ஐந்து (269, 326, 765, 1083,1085) குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். பிரஹ்மாவைப் பற்றி 1062ஆம் குறளிலும், இந்திரனைபற்றி 25ஆம் குறளிலும் பித்ருக்களைப் பற்றி 43ஆம் குறளிலும் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது திருவள்ளுவர் ஒரு ஸநாதன வைதிக மதத்தைச் சேர்ந்தவர் என்பது தான் புலப்படுகிறது.
ஸநாதன வைதிக சமயம் தான் திருவள்ளுவர் காலத்திலும் அவருக்கு முற்பட்ட சங்க காலத்திலும் தமிழ்நாட்டில் நிலவி வந்த ஒரே சமயம். ஸநாதன வைதிக சமயத்தில் பரம்பொருளாகச் சொல்லப்படும் கடவுள் திருமால்தான். வேதத்தை அடிப்படையாகக்கொண்ட வேள்வி மூலமான வழிபாடே திருமாலைக் குறித்த வழிபாடுதான்.
“கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்”, “வேதத்து மறை நீ”, “விறல் மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும் அறனும் நீ”, “கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும், புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி, திகழ் ஒளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும், நின் உருபுடன் உண்டி பிறர் உடம்படுவரா, நின்னொடு புரைய அந்தணர் காணும் வரவு” , “ஏந்தல் சான்ற இடனுடை வேள்வி, ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி, மாயவண்ணனை மனன் உறப்பெற்று” முதலிய சங்க இலக்கிய வரிகள் வேதத்தில் சொல்லப்படும் பரம்பொருளும் வேள்வியால் ஆராதிக்கப்படும் பரமனும் திருமாலே என்பதைத் தெளிவாக முழங்குகின்றன.
சங்கத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலப் பகுதிக்குத் தக்கவாறு நான்கு தெய்வங்களையும் மற்றும் சில சிறு தெய்வங்களையும் வழிபட்டிருந்தாலும் அவர்கள் பரம்பொருளாகக் கருதிய ஒரே தெய்வம் திருமால்தான். வேறு தெய்வங்களை அவர்கள் பரம்பொருளாகக் கருதவில்லை. இவ்விஷயம் சங்க இலக்கியங்களில் தெளிவாக உள்ளது. ”அருள் குடையாக அறம் கோலாக இருநிழல் படாமை மூவேழுலகமும் ஒரு நிழலாக்கிய ஏமத்தை” என்று தமிழகம் மட்டுமல்லாது அகில உலகிற்கும் திருமாலே பரம்பொருள் என்று கூறியிருக்கிறார்கள் சங்கத் தமிழர்கள்.
வேள்வி வழிபாட்டின் நீட்சியாக ஆலய வழிபாடு தோன்றிய காலத்திலும் நம் நாட்டில் முதலில் தோன்றிய ஆலயங்கள் திருமாலுக்குரிய ஆலயங்களே. காலத்தால் முற்பட்ட சங்க இலக்கியங்களில் திருவரங்கம், திருவேங்கடம், திருவெஃகா, திருவனந்தபுரம் முதலிய திருமாலின் திவ்ய தேசங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே ஓழியத் தற்காலத்தில் பிரபலமாகவுள்ள மற்ற தெய்வக் கோயில்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்புக்கூடக் காணப்படவில்லை.
மேலும் பகவானுடைய அவதாரப் பெருமைகளும் பரத்வமும் ஸ்ரீவைஷ்ணவ ஸிந்தாந்தக் கோட்பாடுகளும் பாஞ்சராத்ர ஆகமக் குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. இதனால் தொல்பழம் வைதிக சமயமான ஸ்ரீவைஷ்ணவ மதம் தான் பழம் தமிழரின் மதம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. பழந்தமிழரான திருவள்ளுவரின் மதமும் அந்த மதம் தான் என்பதை அவரது நூலான திருக்குறளே தெளிவாகக் காட்டுகிறது. எப்படியென்று பார்ப்போம்.
– தொடரும்