Blog

  • சதுக்க பூதம்

    சதுக்க பூதம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    யுகம் யுகமாய் மண்ணில் கிடக்கின் பாதச் சுவடுகள்
    புனிதர்களும் புத்தர்களும் வாழ்ந்து கடந்த பூமியிது
    மிருகங்கள் மனிதர்கள் தடம் மாறிப் பெயர்ந்தனர்
    கடல்பரப்பு அவ்வப்போது சத்தியம் மீறியது
    மலையும் குன்றும் ஓர் நாள் உருவம் சிறுத்தன
    எரிமலைகள் ஆங்காங்கே முடியாமல் கக்கின
    மரங்களும் பறவைகளும் ஏதுமறியாமல் இயங்கின
    தத்துவம் சொன்னோர் தவறியே போயினர்
    மதமே பெரிதென்றோர் மாண்டே தொலைந்தனர்
    காலமும் நில்லாது – காற்றும் நில்லாது
    வாழ்ந்தவனின் ரேகை எங்குமே நிற்கவில்லை
    சென்றவனின் சாம்பல் கண்ணில் தெரியவில்லை
    நிலம் மட்டும் நின்றது, வானோடு துணையாக
    எல்லாமே மாயையிங்கு நாம் என்ன விலக்கா என்ன
    காலம் சதுக்க பூதம், கற்றுணர்ந்தோர் ஞானியிங்கு

    Share
  • குறளின் கதிர்களாய்…(292)

    குறளின் கதிர்களாய்…(292)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(292)

    செயற்பால செய்யா திவறியான் செல்வ
    முயற்பால தன்றிக் கெடும்.

           – திருக்குறள் –437 (குற்றங்கடிதல்)

    புதுக் கவிதையில்...

    செல்வத்தால் செய்யத்தகுந்த
    நற்செயல்களைச் செய்யாமல்,
    பற்றதன் மீது கொண்டு
    சேமித்து வைப்பவன் செல்வம்
    உய்வகையின்றிக்
    கெட்டழியும்…!

    குறும்பாவில்...

    செல்வத்தால் செய்துகொள்ளவேண்டிய நற்செயல்களைச்
    செய்யாமல் அதன்மீது பற்றுள்ளம்கொண்டோன் செல்வம்,
    நிலைக்கும் தன்மையின்றி அழிந்திடும்…!

    மரபுக் கவிதையில்...

    சேர்த்து வைத்த செல்வத்தால்
         செய்திட வேண்டிய நற்செயல்கள்
    பார்த்துச் செலவு செய்யாமல்
       பற்றதன் மேலே கொண்டவன்தான்
    சேர்த்த செல்வ மெல்லாமே
      சென்றிடு மவனைக் கைவிட்டே,
    பார்த்தி டதுதான் நிலைக்காதே
      பயனே யிலாது கெட்டழியுமே…!

    லிமரைக்கூ..

    செல்வத்தால் செய்திடு நல்லதே,   
    அதுவன்றி அதன்மீது பற்றுளோன் செல்வம்
    நிலைக்காதே கெட்டழிய வல்லதே…!

    கிராமிய பாணியில்...

    நல்லதுசெய் நல்லதுசெய்
    செல்வத்தால நல்லதுசெய்..

    செய்யவேண்டிய நல்லதெல்லாம்
    சேத்துவச்ச செல்வத்தால
    செய்யாம அதுமேல
    ஆசவச்சவன் செல்வமெல்லாம்
    அவங்கிட்ட நெலைக்காம
    கெட்டழிஞ்சி போவுமே..

    அதால
    நல்லதுசெய் நல்லதுசெய்
    செல்வத்தால நல்லதுசெய்…!

    Share
  • அவலநிலை போக்குதற்கு ஆண்டவனே வழிகாட்டு!

    அவலநிலை போக்குதற்கு ஆண்டவனே வழிகாட்டு!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா,
    மெல்பேண்ஸ்திரேலியா

    கட்டி அணைத்தோம்
    கைகுலுக்கி மகிழ்வடைந்தோம்
    இட்டமுடன் உணவுகளை
    எடுத்துண்டு இன்புற்றோம்
    கட்டி அணைத்தவரை
    கைகுலுக்கி நின்றவரை
    எட்டவே நில்லென்று
    எச்சரிக்கை செய்கின்றோம்!

    கைதந்தால் ஓடுகிறோம்
    கால்பட்டால் பதறுகிறோம்
    முன்னின்று மூச்சுவிட்டால்
    பின்னோக்கி ஓடுகிறோம்
    தும்மல்வந்து விட்டாலே
    துடிதுடித்து நிற்கின்றோம்
    கொரனோவின் வில்லத்தனம்
    அளவின்றிப் போகிறதே!

    கொரனோவின் பரவலினால்
    கொள்கலங்கள் தடையாச்சு
    கடையெல்லாம் சனக்கூட்டம்
    பொருள்தேடி அலைகிறது
    கல்விகற்கும் மாணவர்கள்
    கதிகலங்கி நிற்கின்றார்
    மெள்ளமெள்ள கொரனோவும்
    பள்ளிநோக்கிப் பார்க்கிறது!

    வெளிநாட்டுப் பிரயாணம்
    அத்தனைக்கும் வேட்டுவைத்து
    உள்நாட்டு விழாவனைத்தும்
    ஓரங்கட்டும் நிலையாச்சு
    யாருக்கு வருமென்று
    தெரியாத மாயமதாய்
    பாருக்குள் கொரனோவும்
    பாய்ந்துவிடத் துடிக்கிறது!

    மக்கள்கூடும் இடத்தினிலே
    தன்மதிப்பைக் காட்டுதற்கு
    கொரனோவும் ஆவலுடன்
    கொடியெடுத்து நிற்கிறது
    வீட்டுக்குள் இருந்துவிட்டால்
    வில்லனிடம் தப்பிடலாம்
    என்கின்ற அறிவுரையால்
    எல்லோரும் முடங்கிவிட்டார்!

    ஆலையெலாம் மூடிவிட
    ஆலயங்கள் அடங்கிவிட
    அரக்கனென கொரனோவும்
    ஆர்ப்பரித்து எழுந்துவிட
    ஆர்வருவார் இடர்களைய
    என்றேங்கும் அகிலமக்கள்
    அவலநிலை போக்குதற்கு
    ஆண்டவனே வழிகாட்டு ! 

    Share
  • இந்திய முஸ்லீம்களின் கதி என்ன?

    இந்திய முஸ்லீம்களின் கதி என்ன?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இன்று அமெரிக்காவிலிருந்து மைசூரில் எங்கள் பக்கத்து வீட்டு நண்பரை தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தேன்.  இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கொரோனோவைரஸின் நிலைமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.  அதன் பிறகு என்னுடைய அடுத்த புத்தகம் வியட்நாம் பற்றி என்றும் அங்கு எத்தனை உயிர்கள் – அமெரிக்கர்களும் வியட்நாமியர்களும் – அமெரிக்க ஜனாதிபதிகளின் ‘ஈகோ’வால் பலியாகின என்பதை அறிந்து என் மனம் என்ன பாடுபட்டது என்பது பற்றியும் அவரிடம் கூறினேன். அமெரிக்காவும் தாலிபானும் சமாதானம் பற்றி நடத்தும் பேச்சுவார்த்தை பற்றியும் கூறிவிட்டு ஆஃப்கானிஸ்தானில் என்றாவது அமைதி வருமா என்று கேட்டேன். அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆஃப்கானிஸ்தானில் எப்போதும் அமைதி நிலவும் சாத்தியமே இல்லை என்றார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் எனக்கு ஒப்புதலாக இல்லை. இந்தியத் துணைக்கண்டம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் ஆஃப்கானிஸ்தான் இந்தியாவின் அண்டை நாடாக இருந்திருக்கும், ஆஃப்கானிஸ்தானின் பிரச்சினைகள் இந்தியாவையும் ஓரளவு பாதித்திருக்கும் என்றேன்.  அதற்கு அவர் எதுவும் கூறாமல், ‘இந்தியத் துணைக்கண்டம் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிக்கப்பட்டபோது முஸ்லீம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும், காந்திஜியும் நேருவும் செய்த தவறுகளால் இப்போது நாம் கஷ்டப்படுகிறோம் என்றார்.  எனக்குத் திகீர் என்றது.

    அவர் எங்கள் அடுத்த வீட்டு நண்பராக இருபது வருடங்களுக்கு மேல் இருந்துவருகிறார். ராணுவத்தில் பணிபுரிந்திருப்பதால் எல்லாச் சட்டங்களையும் விதிகளையும் தவறாமல் பின்பற்றுவார். ஒரு முறை நான் இஸ்ரேலில் கிடைத்த கத்தரிக் காய்களை அங்கிருந்து நம் சுங்கத் துறைக்குத் தெரியாமல் கொண்டுவந்துவிட்டேன் என்று பெருமையாகக் கூறியபோது, ‘இப்படித்தான் நம் இந்தியர்கள் வெளிநாடுகளில் எல்லா விதிகளையும் பின்பற்றுகிறார்கள், இந்தியாவில் அதே இந்தியர்கள் விதிகளைப் பின்பற்றுவதில்லை’ என்றார். அன்றிலிருந்து இந்தியாவிற்குள் கொண்டுவரக் கூடாத எந்தப் பொருளையும் நான் கொண்டுவருவதில்லை. நாங்கள் மைசூரில் இல்லாதபோது எங்கள் வீட்டில் என்ன பிரச்சினை என்றாலும் உடனேயே கவனிப்பார். ஒரு முறை எங்கள் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் வாட்ச்மேன் மரத்திலிருந்து விழுந்து காயமுற்றபோது உடனேயே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதோடு மருத்துவமனையில் முன் பணம் கட்டச் சொன்னபோது ஆயிரம் ரூபாயைக் கட்டியதோடு அதை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேயில்லை.

    இவருக்கு பி.ஜே.பி.யிடமும் அதன் தலைவர்களிடமும் அபிமானம் உண்டு என்று எனக்கு நன்றாகத் தெரியும்.  அரசியலைப் பொறுத்தவரை அவரும் நானும் இரு துருவங்கள்.  அதனால் அரசியலைப் பற்றி அவரிடம் எதுவும் பேசுவதில்லை. அவர் பி.ஜே.பி. தலைவர்களை வெகுவாக ஆதரித்து காங்கிரஸ் தலைவர்களைக் கடுமையாகச் சாடும்போது என்னால் சும்மா இருக்க முடியாது. ஏதாவது நான் கூறப்போய் அது மனஸ்தாபத்தில் முடிந்துவிடக் கூடாதே என்பதால்தான் இந்த முன்னெச்சரிக்கை.  இன்றும், நேருவும் காந்திஜியும் செய்த தவறால் இந்தியா மதச்சார்பற்ற நாடாக ஆகிவிட்டது, அப்போதே இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த முஸ்லீம்கள அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும், அப்படிச் செய்திருந்தால் இன்று நாம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்காது, இந்தியா ஒரு இந்து நாடாக இருந்திருக்கும் என்றபோது என் உணர்ச்சிகள் எதையும் காட்டிக்கொள்ளமல் பேசாமல் இருந்துவிட்டேன்.

    பிரிவினை சமயத்தில் காங்கிரஸ் கட்சி முடிக்காமல் விட்ட வேலையை நாங்கள் இன்று நிறைவேற்றிவைக்கிறோம் என்று மோதியும் அமித் ஷாவும் பேசுவதுபோல் அல்லவா இவரும் பேசுகிறார். நினைக்க, நினைக்க ஆயாசமாக இருக்கிறது. எப்போது இவரைப் போன்றவர்களைக்கூட பி.ஜே.பி.யால் மூளைச்சலவை செய்ய முடிந்தது?  இந்தியாவில் எத்தனை இனங்கள், எத்தனை மதங்கள், எத்தனை மொழிகள் என்று இந்தியாவின் பன்மைத்துவம்தான் இந்தியாவுக்கே பலம் என்று இவர் போன்றவர்களுக்குப் புரியவில்லையா? இந்தியாவில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர்களுக்கே உரிய ஒரு கலாச்சாரம் நம் இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கின்றதே.  இதை இவர்கள் உணரவில்லையா?

    இந்தியர்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை இல்லை என்றே வைத்துக்கொள்ளுவோம்.  ‘இந்தியாவில் நாம் முதலில் எல்லோரும் இந்துக்களாகத்தன் இருந்தோம்.  பிறகு முஸ்லீம் அரசர்கள் இந்தியா மீது படையெடுத்து நம்மில் ஒரு சிலரை முஸ்லீம்களாக மாற்றிவிட்டார்கள். அதனால் எல்லோரும் இப்போது இந்து மதத்திற்கு வந்துவிடுங்கள்’ என்று பி.ஜே.பி. தலைவர்கள் கூறுவது எந்த நியாயத்தில் சேர்த்தி? எத்தனை பழங்குடி மக்களை இந்து மதத்திற்குள் கொண்டுவந்திருக்கிறோம். இன்றைய முஸ்லீம்கள் அனைவரும் அன்றைய முஸ்லீம் அரசர்களால் மதம் மாற்றப்பட்டார்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம். பல நூற்றாண்டுகளாக அந்த மதப் பழக்க வழக்கங்களுக்குப் பழக்கப்பட்டவர்களை இன்று மறுபடி மதம் மாறச் சொன்னால் அது அவர்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்?  பல நூற்றாண்டுகளக இந்திய மண்ணில் பிறந்து இந்திய மண்ணில் வாழ்ந்தவர்களை இடம் பெயரச் சொன்னால் அது அவர்களால் முடியுமா?

    தென்னிந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களை வட இந்தியாவுக்கு அப்பால் இருக்குக் பாகிஸ்தானில் குடியேறச் சொன்னால் அது அவர்களால் முடியுமா? என்னுடைய கல்லூரித் தோழி ஒருத்தி முஸ்லீம். சில பழக்கங்களைத் தவிர அவளுக்கும் எனக்கும் எந்தப் பெரிய வேற்றுமையும் இருந்ததில்லை. அவளைப் போன்றவர்களைப் பாகிஸ்தானில் குடியேறுங்கள் என்றால் அவள் குடும்பத்தாரால் முடிந்திருக்காது. அவளுடைய மதம் இஸ்லாம் என்பதைத் தவிர அவள் குடும்பம் ஒரு தமிழ்க் குடும்பம். அந்தத் தமிழ்க் குடும்பத்தை எப்படி இடம் பெயரச் சொல்லியிருக்க முடியும்? தென்னிந்தியாவில் வாழும் எல்லா முஸ்லீம்களுக்கும் இரு பொருந்தும்.

    கிறிஸ்தவர்களுக்கு நிறைய நாடுகள் இருக்கின்றன, முஸ்லீம்களுக்கு நிறைய நாடுகள் இருக்கின்றன, இந்துக்களுக்குத்தான் இந்தியாவை விட்டால் வேறு நாடு கிடையாது, அதனால் இங்கு இந்துக்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு என்கிறார்கள் பி.ஜே.பி. தலைவர்கள். முஸ்லீம்களுக்குப் பல நாடுகள் இருந்தாலும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லீம்களுக்கு இந்தியா ஒன்றுதான் அவர்களுடைய நாடு.  இதை விட்டு அவர்கள் எல்லோரும் எங்கு செல்வார்கள்?  உண்மையான இறைபக்தி உள்ளவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற மதங்களையோ மற்ற மதத்தவர்களையோ நிந்திப்பதல்லை, குறைதுப் பேசுவதில்லை.  அப்படிச் செய்தால் அவர்களுடைய இறைபக்திக்கே அது களங்கம் ஏற்படுத்தும்.  எல்லா மதங்களும் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று கற்பிக்கும்போது ‘என் மதம்தான் பெரியது, என் கடவுள்தான் பெரியவர் என்று சொல்வது எப்படிப்பட்ட அறியாமை! சிந்தித்துச் செயல்பட்டால் இந்த அறியாமை என்ற இருள் நம்மை விட்டு விலகிவிடும்.


    பின் குறிப்பு:

    முன் ஒரு வல்லமை இதழில் ‘இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு’ என்ற கட்டுரையில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராரிசியராக இருந்து ஓய்வு பெற்று சிகாகோவிலேயே வசிக்கும் எங்கள் முஸ்லீம் நண்பர் ஒருவருக்கு இந்தியத் தூதரகம் விசா கொடுக்க மறுத்ததை எழுதியிருந்தேன். அவருக்கு இப்போது விசா கிடைத்திருக்கிறது.  தூதரகத்தின் இந்த மன மாற்றத்திற்கு ஒரு காரணம் என்னைப்போல் அவருடைய வேறு சில நண்பர்களும் ஊடகங்களில் எழுதியது. மற்றொரு காரணமும் உண்டு. இந்தியாவில் குடிமகனாக இருப்பதற்கு தந்தை பற்றிய ஆவணங்கள் கேட்பதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது. பல மாநில அரசுகள் இந்தத் தகவலை சேகரிக்க மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றன. மத்திய அரசும் இந்த ஆவணங்கள் தேவையில்லை என்று பின்வாங்கி இருக்கிறது. இதனால் இந்தியத் தூதரகங்களும் விசா கொடுப்பதற்கு விதிகளைத் தளர்த்தி இருக்கின்றன. எப்படி இருந்தாலும் நண்பருக்கு விசா கிடைத்ததில் மகிழ்ச்சி.  இவரைப் போலவே இந்தியாவிலேயே இருக்கும் முஸ்லீம்களுகு ஆவணங்கள் கேட்காமலேயே குடியுரிமை கொடுப்பார்கள் என்று நம்பலாம் என்று தோன்றுகிறது.

    Share
  • ஒரு சதம் மட்டும் பத்தாது (A Century is not enough) – சவுரவ் கங்குலியின் சுயசரிதம்!

    ஒரு சதம் மட்டும் பத்தாது (A Century is not enough) – சவுரவ் கங்குலியின் சுயசரிதம்!

    சாமிநாதன் ராம்பிரகாஷ்

    சவுரவ் கங்குலி! கிட்டத்தட்ட 2008ஆம் ஆண்டே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். ஆனால் இன்றளவும் அவரை மறக்காத ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.

    “சச்சினின் சுயசரிதம் அவரின் வளர்ச்சியைப் பேசும். தோனியின் சுயசரிதம் அவரின் முன்னேற்றத்தை மட்டுமே பேசும். ஆனால் கங்குலியின் சரிதமோ, ஒட்டுமொத்த இந்திய அணியின் முன்னேற்றத்தையும் பேசும்“ – வீரேந்திர சேவாக்.

    “கங்குலி என்பது சாதாரண பெயர் அல்ல, அது ஒரு சென்சேஷன்! “ – கபில்தேவ்.

    “கங்குலி போன்ற ஓர், உயிர்ப்பான வெற்றியை மட்டுமே தேடும் கேப்டன் உங்கள் எதிரணியில் இருந்தால் அவரை மதித்தே ஆவதைத் தவிர வேறு வழியில்லை” – ஸ்டீவ் வாக்.

    “இங்கு இன்னொரு சச்சின் கூட வரலாம் ஆனால் ஒரே ஒரு கங்குலி தான்” – சச்சின் டெண்டுல்கர்.

    இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 1992ஆம் ஆண்டிலேயே இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றார். ஆனால் கங்குலிக்கு வாய்ப்பு குறைவாகவே அமைந்தது. அதையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்திய அணியும் தோல்வியுற்றது. கங்குலி அணியில் இருந்து நீக்கப்பெற்றார் .

    அதன் பிறகு 1996ஆம் ஆண்டு தான் இங்கிலாந்துத் தொடரில் மீண்டும் அணியில் இடம் பெற்றார் . அந்த இடைப்பட்ட ஆண்டுகளை அவர் விவரித்த விதம், நேர்மறையான அணுகுமுறை, சாவல்களை எதிர்கொண்டது, ஏமாற்றம் அடைந்தது என அனைத்துமே வாழ்க்கைப் பாடமாக அமைந்துள்ளது.

    சாதாரணமாகவே கங்குலி எதற்கும் அஞ்சாமல் பேசுபவர், அதுவும் அவருடைய சுய சரிதம்… அவருக்கே உரிய தொனியில், கம்பீரத்துடன் அவரே நமக்கு அருகில் அமர்ந்து பேசுவது போல அமைந்துள்ளது. மைதானங்களை வர்ணிப்பது, வீரர்களுடனான உரையாடல், சொற்போர்கள் எனப் புத்தகம் மிகவும் சுவாரஸ்யமாக நகர்கிறது.

    இங்கிலாந்துத் தொடரில் சதங்களை அடித்தாலும், இந்திய அணியில் அவரின் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவர் பட்ட பாடுகள், பந்துவீச்சால் தப்பிய தருணங்கள், விமர்சனங்கள், நெருக்கடிகள் என அவரே கூறி இருப்பது ஒரு புது வித அனுபவம்.

    “நான் விளையாடும் போது, எனது இடம் நிரந்தரமா என்கிற கேள்வி ஓடிக்கொண்டே இருக்கும். அது சில நேரங்களில் எனது ஆட்டத்தையும் பாதித்தது. எனவே நான் கேப்டன் ஆனவுடன் எனது அணியின் புதிய வீரர்களுக்கு அத்தகைய உறுதியை அளித்தேன். அதன் விளைவாக, எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் வெற்றியும் பெற்றனர் “ – கங்குலி.

    இதைப் போன்ற எண்ணற்ற சுவாரசிய தகவல்களை இப்புத்தகத்தில் அடுக்கியுள்ளார். தசரா துர்கா பூஜை சமயத்தில் அவரின் ஓய்வு அறிவிப்பு வெளிவந்தது. அதை அவர் விவரித்த விதம் கவித்துவம்.

    கிரிக்கெட் பிடித்தால் கங்குலியை ரசிக்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை!

    இப்புத்தகத்தை எனது பிறந்த நாள் பரிசாக அளித்த என் மனைவிக்கும் தம்பிக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை!  மட்டற்ற மகிழ்ச்சி!!

    Share
  • அரங்கம் -15.03.2020

    அரங்கம் -15.03.2020

    1. ஹென்ரிக் இப்சன் குறித்த அறிமுகம்
    2. அவரது படைப்புகள் குறித்த காணொளி
    3. "A Doll's House" நாடகத்தின் சில காட்சிகள் திரையிடல்
    4. கருத்து பரிமாறல்
    Share
  • காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியில்

    காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியில்

    அண்ணாகண்ணன்

    காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா & பயிலரங்கில், 16.03.2020 அன்று, நிறைவுப் பேருரை ஆற்றுகிறேன். வாய்ப்புள்ளோர் வருக.

    Share
  • சிலம்பொலி பரப்பிய செம்மல்!

    சிலம்பொலி பரப்பிய செம்மல்!

    -மேகலா இராமமூர்த்தி

    ”நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று சிலம்பின் பெருமையைப் புலப்படுத்தினார் மகாகவி பாரதி.

    சிலப்பதிகாரத்தை நினைக்கும்போதே இரண்டு சான்றோர்களின் பெயர்களும் உடனே நம் நினைவுக்கு வரும். அவர்களில் ஒருவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள். மற்றொருவர், சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள். இவ்விருவரில் இரண்டாமவரான சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ்க்கையையும் தமிழுக்கு அவர் ஆற்றியிருக்கும் அரும்பணிகளையும் கருதுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    தம்முடைய 22ஆம் அகவை தொடங்கி தாம் மண்ணுலகை விட்டகன்ற 91ஆம் அகவை வரை தமிழுக்காகத் தளராமல் உழைத்தவர்  செல்லப்பனார்.  நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் 1928ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 24-ஆம் நாள் சுப்பராயன், பழனியம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் அவர். கணிதத்தில் பட்டம்பெற்றுக் கணித ஆசிரியராகத் தமது பணியைத் தொடங்கியவர், தமிழிலக்கியங்கள்மீது கொண்ட தணியாத காதலால், தமிழில் முனைவர்ப் பட்டம் பெற்றார்.

    கவிதையைப் பற்றிக் குறிப்பிடும் ஆங்கிலக் கவிஞரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் , “Poetry is the spontaneous overflow of powerful feelings” என்பார். ”மடைதிறந்த வெள்ளமென உள்ளத்து உணர்வுகளைச் சொற்களில் பாய்ச்சுவதே கவிதை” என்று கவிதைக்கு வேர்ட்ஸ்வொர்த் வகுத்தளித்த இலக்கணத்தைத் தம் சொற்பொழிவுகளிலும் சாத்தியமாக்கிக் காட்டியவர் செல்லப்பனார்.

    சிலப்பதிகாரம் எனும் தலைப்பில் 1953ஆம் ஆண்டு இராசிபுரம் இலக்கிய மன்ற விழாவில் செல்லப்பனார் ஆற்றிய பொழிவைக் கேட்டுப் பெரிதுவந்த சிறந்த தமிழறிஞரும் வழக்குரைஞரும் தம் பேச்சுத்திறத்தால் ’சொல்லின் செல்வர்’ எனும் பட்டம் பெற்றவருமான  ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் ’சிலம்பொலி’ என்னும் சிறப்புப் பெயரை செல்லப்பனாருக்குச் சூட்டி மகிழ்ந்தார்.

    சிலப்பதிகாரம் பற்றி முழுமையாய் ஆய்வுசெய்து ’சிலம்பொலி’ என்னும் தலைப்பில் 1975இல் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டார் செல்லப்பனார்.

    சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் இந்நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில்,

    ”கண்ணகி காப்பியம் தமிழினத்தின் தேசியச் சொத்து. அதை மக்கள் மத்தியில் பரப்ப அயராது பாடுபட்டுவரும் சிலம்பொலி செல்லப்பனாருக்கு என் வாழ்த்துகள். அன்பிலும் பண்பிலும் சிறந்தவராதலால் சிலம்பு பற்றிய இவரது பேச்சிலும் எழுத்திலும் அவை எதிரொலிக்கின்றன” என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கின்றார்.

    கலைஞர் கருணாநிதி அவர்கள் அளித்த பாராட்டுரையில்,

    “அவர் இந்நூலை வெளியிட்ட பிறகு சிலம்பொலி செல்லப்பனாக ஆனவர் அல்லர்; அவர் சிலம்பொலி செல்லப்பனாகவே இருந்த காரணத்தால்தான் அவர் எழுதிய நூலுக்குச் சிலம்பொலி என்ற பெயர் வந்திருக்கிறது. இந்த நல்ல எழுத்தாளர், நல்ல ஆற்றலாளர், நல்ல தமிழ் வல்லுநர் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

    இளங்கோ அடிகள் அருளிய சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும்,  சிலப்பதிகாரச் சிந்தனைகள், பெருங்குணத்துக் கண்ணகி ஆகியவை சிலம்பு குறித்துச் செல்லப்பனார் எழுதிய பிற நூல்களாகும்.

    மணிமேகலை தெளிவுரை என்ற தலைப்பில் மணிமேகலைக் காப்பியம் முழுமைக்கும் அருமையானதொரு தெளிவுரையை எழுதி வெளியிட்டுள்ள செல்லப்பனார், நல்ல குறுந்தொகையில் நானிலம், மலர்நீட்டம் (திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள்), காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும், பெருங்கதை ஆராய்ச்சி, நெஞ்சை அள்ளும் சீறா (நான்கு தொகுதிகள்), மூன்றும் நான்கும் (திரிகடுகம் , நான்மணிக்கடிகை தெளிவுரை) உள்ளிட்ட ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.

    1990-ஆம் ஆண்டு வடசென்னைத் தமிழ் வளர்ச்சிப் பேரவையின் சார்பில் பத்துப்பாட்டு நூல்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் 18 கூட்டங்களில் தொடர் சொற்பொழிவுகளாக நிகழ்த்தியுள்ளார். இத்தொடர் சொற்பொழிவுகளிலிருந்து பத்துப்பாட்டு பற்றிய பேச்சுக்கள் தனியே தொகுக்கப்பட்டு, ‘சங்க இலக்கியத் தேன்’ என்ற தலைப்பில் மூன்று அரிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த நூலுக்குப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அளித்துள்ள ஆய்வுரையில்,

    “இந்த நூலை முற்றும் படித்துச் சுவைத்த நான், சிலம்பொலியாரின் தேமதுர நயம் காட்டும் உரையை அவர் நிகழ்த்திக் கேட்பதுபோலவே உணர்ந்து மகிழ்ந்தேன். சுருங்கச் சொல்வதெனில், இவ்விரிவுரை ஒவ்வொன்றும், கொற்கை வெண்முத்துகளைத் தங்கத் தாம்பாளத்தில் கொட்டிவைத்துப் பரிசளித்தது போன்றும், இனிய மாதுளையின் செந்நிற மணிகளை வெள்ளித் தட்டில் நிரப்பி உண்ணத் தந்தது போன்றும் உளம் மகிழ்வித்தது.

    இந்நூலைப் படித்தபோது, பல கல் தொலைவு பயணம் செய்து மேடையேறி உரையாற்ற முற்படும் புலவனுக்கு நறுமண முல்லையால் தொடுத்ததொரு மாலை அணிவித்தது போன்றும், கடுங்கோடையின் வெப்பத்தால் களைப்புற்ற ஒருவனுக்குக் குளிர் இளநீரில் நுங்கினைப் பெய்துவைத்துத் தேனும் கலந்து பருகிடத் தந்தது போன்றும் உணர்ந்தேன்; உவகையுற்றேன்.

    சிலம்பொலி செல்லப்பன் சொலல்வல்லன்; சோர்விலன்; அஞ்சான் என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்.” என்று குறிப்பிட்டுச் சிலம்பொலி செல்லப்பனாரைப் பெரிதும் புகழ்கின்றார்.

    சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமண்டபத்தில் மணிமேகலை என்ற தலைப்பில் பதினெட்டு பொழிவுகளைப் பதினெட்டு மாதங்கள் தொடர் சொற்பொழிவுகளாக நிகழ்த்தியிருக்கின்றார் செல்லப்பனார்.

    ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி குறித்து, வடசென்னைத் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் ஓராண்டுக் காலம் பதினைந்து பொழிவுகள் நடாத்தியிருக்கின்றார்.

    இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், கந்தபுராணம் திருவிளையாடற்புராணம் போன்ற புராண நூல்களையுமே அறிஞர் பெருமக்கள் தொடர் பொழிவுகளாக நிகழ்த்திவந்த அன்றைய காலச்சூழலில், ஐம்பெருங்காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், கிறித்தவ இலக்கியமான தேம்பாவணி, இசுலாமிய இலக்கியமான சீறாப்புராணம், புலவர் குழந்தையின் இராவண காவியம், பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் போன்றவற்றையெல்லாம் தொடர்சொற்பொழிவுகளாகச் செல்லப்பனார் ஆற்றியிருப்பது, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அவருடைய இலக்கிய ஈடுபாட்டையும், மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத இலக்கியச் செல்வங்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதில் அவருக்கிருந்த அளவற்ற ஆர்வத்தையும் அங்கை நெல்லியெனப் புலப்படுத்துவன.

    இவையல்லாது நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு பேருரையாற்றிய பெருந்தகையாளர் சிலம்பொலி செல்லப்பனார். சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு ஆகிய மூன்று மாநாடுகளின் சிறப்பு மலர்களைத் தயாரிக்கும் பொறுப்பினை ஏற்று அப்பணிகளைச் செவ்வனே செய்து முடித்த செம்மல் அவர்.

    பிற அறிஞர்களின் நூல்களுக்குச் சிலம்பொலியார் எழுதிய ஆய்வு அணிந்துரைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆயிரத்துக்கு மேற்பட்டதாகும். தமிழகத்தில் இவரிடம் அணிந்துரை வாங்காத நூலாசிரியர்களே மிகவும் குறைவு என்று சொல்லிவிடலாம்.

    மன்னராட்சி காலத்தில் போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாராட்டிப் பரணி பாடுவார்கள்.

    ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
    மானவனுக்கு வகுப்பது பரணி (இலக்கண விளக்கம்: 839)

    அதுபோல் ஆயிரம் நூல்களுக்குமேல் அணிந்துரை வழங்கிச் சாதனை படைத்துள்ள செல்லப்பனார் மீதும் நாம் புதியதோர் பரணி பாடலாம்.

    இவ் அணிந்துரைகள் ’சிலம்பொலியார் அணிந்துரைகள்’ எனும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. செய்திக் கருவூலமாக, கருத்துக் களஞ்சியமாக இவை திகழ்கின்றன எனில் மிகையில்லை.

    சான்றாக, குழந்தைக் கவிஞர் என்று போற்றப்பட்ட அழ. வள்ளியப்பா அவர்கள் எழுதிய ’சிரிக்கும் பூக்கள்’ எனும் குழந்தைகளுக்கான கவிதை நூலுக்கு செல்லப்பனார் எழுதிய அணிந்துரையின் ஒரு பகுதியினைக் காண்போம்.

    ”குழந்தை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதுவரவு. அவ்வாறாயின், தமிழில் இதற்கு முன்னர்க் குழந்தை இலக்கியம் இருந்ததில்லையா? தொல்காப்பியம் ‘பிசி’ என்னும் ஓர் இலக்கிய வகையைக் குறிப்பிடுகிறது.

    ’பிசி’ என்பது விடுகதை. விடுகதை சிறுவர்களுக்குரியது. எனவே, சங்க காலத்திற்கு முன்பிருந்தே குழந்தைப் பாடல்கள் இருந்தன என்பர் ஆய்வாளர். விடுகதைகள் குழந்தைகட்கு விருப்பமூட்டுவன என்றாலும் அவை குழந்தைகட்கே உரியன என்று கூறமுடியாது.

    கிபி 12-ஆம் நூற்றாண்டளவில் ஔவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நூல்களையும், அதிவீரராம பாண்டியர் வெற்றிவேற்கை எனும் நூலையும் பாடியுள்ளனர். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய உலகநாதர் உலகநீதியைப் பாடினார். இவை குழந்தைகட்குக் கற்பித்து வரப்படுகின்றன என்றாலும், இன்று நாம் கண்டுவரும் குழந்தை இலக்கிய வகையில் இவை அடங்குமெனக் கூறுதற்கில்லை.

    குழந்தைகட்கே உரிய, குழந்தைகள் பாடியும் ஆடியும் பயன்கொள்ளத்தக்க கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தாம் எழுந்தன. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் கி.பி. 1901-இல் குழந்தைகட்கெனத் தனித்த கவிதைகளை எழுதினார். அவர் ஆசிரியராயிருந்தமையால், மேனாட்டில் இருந்ததுபோன்ற தனித்த குழந்தைக் கவிதைகள் தமிழில் இல்லையென்ற குறையை உணர்ந்து, அக்குறை நீங்கும்வண்ணம் அருமையான பாடல்களை இயற்றினார்.

    இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்துதான் பாடநூல்கள் அல்லாத குழந்தைகட்கென்றே தனியாக எழுதப்பட்ட பாடல் நூல்கள் வெளிவரலாயின. இவ்வகையில் முன்னோடியாக விளங்கியவர் அழ. வள்ளியப்பா அவர்களே!

    அவர் எழுதிய குழந்தைக் கவிதைகள் அடங்கிய ’மலரும் உள்ளம்’ முதற்றொகுதி 1954இல் வெளிவந்தது. 1961இல் ’மலரும் உள்ளம்’ இரண்டாந்தொகுதி வெளிவந்தது. இன்று நூற்றுக்கணக்கானோர் அவர் நடையைத் தம் நடையாகவும், அவர் உத்தியைத் தம் உத்தியாகவும் கைக்கொண்டு கவிதைகள் எழுதிவருகின்றனர்.

    ஊரென்றால் ’உறையூர்’, பூவென்றால் ’தாமரை’ என்பதுபோல, குழந்தைக் கவிஞர் என்றாலே அஃது ’அழ. வள்ளியப்பா’வைக் குறிப்பதாகவே அமைந்துவிட்டது. கவிமணி குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டார். ஆனால் முளைத்து வளர்ந்துள்ள குழந்தைக் கவிதையெனும் ஆலின் அடிமரமாகவும், ஆணிவேராகவும் இருப்பவர் அழ. வள்ளியப்பாவே ஆவார்.”

    இவ்வாறு குழந்தை இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, அதில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பங்கு என்று ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாக நீண்டு செல்கின்றது, மலரும் உள்ளம் நூலுக்குச் செல்லப்பனார் வழங்கியிருக்கும் அணிந்துரை.

    இந்த அணிந்துரைத் தொகுதிகள், தமிழக அரசின் சிறந்த அணிந்துரை இலக்கிய நூல்களாகத் தெரிவு செய்யப்பட்டுப் பரிசு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    பட்டங்கள் பல செல்லப்பனாரின் புலமைக்குச் சான்றாய் அவரை வந்தடைந்தன. செந்தமிழ் அருவி, செந்தமிழ்க் களஞ்சியம், குறள்நெறிக் காவலர், இலக்கியச் செல்வர், சிந்தனைச் செல்வர், தமிழ்நலக் காவலர் என்பன அவற்றில் சில. பாவேந்தர் விருது, கம்பர் விருது, கலைஞர் விருது, தமிழ் வாகைச்செம்மல் விருது, தமிழ்ச் சான்றோர் விருது என ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் அன்னாருக்கு வழங்கப்பட்டமையால் பெருமையுற்றன.

    தமிழில் எந்தத் தலைப்பில் பேசச் சொன்னாலும் எவ்விதக் குறிப்புகளும் கையில் இல்லாமல், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், நெடுநேரம் திறம்படப் பேசுவதில் வல்லவர் செல்லப்பனார். தமிழகத்தில் மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஐக்கிய அரபு நாடுகள் எனப் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்துத் தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பி மகாகவி பாரதியின் கனவை நனவாக்கிய பெருமகனார் அவர்.

    தமிழைப் பிழையின்றி எழுதவேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வமும் கவனமும் கொண்டவரான செல்லப்பனார், தினமணி நாளேட்டில் ஏதேனும் சொற்குற்றம் கண்டவிடத்தும், பொருட்குற்றம் கண்டவிடத்தும், நக்கீரராய் மாறி, தொலைபேசியில் அப்பத்திரிகையின் ஆசிரியர்களை அழைத்து, அதனைச் சுட்டிக்காட்டித் திருத்தும் மாண்பாளர் என்பதைத் தினமணி, அவரது மறைவையொட்டி வெளியிட்ட இரங்கற் கட்டுரையில், நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கின்றது.

    சிலம்பைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பும் நோக்கத்துடன் ‘சிலப்பதிகார அறக்கட்டளை’ என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார் செல்லப்பனார். சிலப்பதிகார மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் முதலியவற்றை நடத்துவது, சிலப்பதிகாரத்தின் புகழைப் பரப்புவோர்க்கு ஆண்டுதோறும் ‘இளங்கோ விருது’ வழங்கிச் சிறப்பிப்பது போன்றவை இவ் அறக்கட்டளையின் முக்கியச் செயற்பாடுகள் ஆகும்.

    தரமிகு பேச்சாலும் திறமிகு எழுத்தாலும் அன்னைத் தமிழுக்கு அணிசெய்த உயர்தமிழரான சிலம்பொலி செல்லப்பனாரையும் அவருடைய அருந்தமிழ்ப் பணிகளையும் என்றும் போற்றுதல் நம் கடன்.

    *****

    http://silambolichellappan.com/page4.php

    https://ta.wikipedia.org/wiki/சிலம்பொலி_செல்லப்பன்

    https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/ 2019/apr/07/ இந்த-வாரம்-கலாரசிகன் -3128451.html

    http://www.tamilvu.org/library/nationalized/pdf/82-a.zhavalliyappa/seerikkumpookkal.pdf

    Share
  • பசுமரத்தாணி

    பசுமரத்தாணி

    பாஸ்கர் சேஷாத்ரி

    நான் கிட்டத்தட்ட ஆறு வயதில் அந்தப் பள்ளியில் சேர்ந்தேன். அறுபதுகளின் ஆரம்பத்தில் மயிலாப்பூரில் தொடக்கப் பள்ளிகள் பெரிதாக இல்லை. அப்போது கூட இந்த கான்வென்ட் மோகம் உண்டு. இருந்த சில பள்ளிகளில் இது தான் குறைவான கட்டணம். மாசம் பத்து ருபாய். அப்போதைய அதன் பெயர், மாண்டிசோரி ஸ்கூல். சோலையப்பன் தெரு பிரபலமாக இது ஒரு காரணம். அந்தக் காலத்திலேயே சறுக்கு மரம், சீசா போன்ற விளையாட்டு விஷயங்களும் உண்டு . இடமும் கொஞ்சம் பெரிது. நிறையக் கூரை வேய்ந்த இடம். கொஞ்சம் கொஞ்சமாய்ச் செலவு செய்து, நார்க்கூரை செய்தார்கள் . அப்போது அது தான் பிரபலம், குறைந்த கட்டணம் .

    மிஸ் டீச்சர்களின் ஆதிக்கம் ஆரம்பித்த காலம். எந்த வசதியான குழந்தை கூட பயப்படும் இடம் ஸ்கூல் டீச்சர் தான்- எல்லோரையும் அங்கு அப்போது துரத்தியது ஆங்கில மோகம்தான் . மாண்டிசோரி என்றால் ஒரு கௌரவம். ஒரு அரை நிஜார். ஏதோ ஒரு சட்டை. என்னவோ ஒரு படிப்பு. வீட்டை விட்டுத் துரத்த, இந்தப் பள்ளி ஓர் உபாயம். படிப்பெல்லாம் ஒரு சாக்கு. இரு பாலர்க்கும் பொதுவான பள்ளி. அந்தப் பள்ளியின் மகிமை சில வருடங்களுக்குப் பின், நான் வேறு பள்ளியில் சேர்ந்த பின் தான் தெரிந்தது. 

    எல்லாம் விளையாட்டுக் காலங்கள். எப்படித்தான் இந்த விளையாட்டுகள் எல்லாம் ஒரு பொதுவான விஷயமாய் இருந்தன என்ற ஆச்சரியம் பல வருடங்களுக்குப் பின் வந்தது. சுதந்திர உலகம் எல்லோரையும் ஒரு சிருஷ்டிகர்த்தாவாக மாற்றி வருகிறது. இதில் பெரிதான இடம், பள்ளிகளுக்கு உண்டு. எந்த மக்கு மாணவனுக்கும் ஒரு பள்ளியின் நினைவுகள் இனிமை தான். எனக்கும்தான். ஒரு புகார் கிடையாது. ஒரு விவகாரம் கிடையாது. எல்லாம் இனிமையான நாட்கள்.

    அஞ்சு வருஷ படிப்பு.பள்ளி மாறும்போது கூட வேதனை எதுவும் பற்றிக்கொள்ளவில்லை. ஆனால் நினைவுகள் பின்னாளில் தொற்றி அதற்கு உருவம் கொடுத்துச் சலனம் கொடுத்தது. சீருடை எல்லாம் பின்னால் தான் வந்தது. யாரையும் கூட்டிச் செல்ல எந்த வாகனமும் இல்லை . இரண்டு சைக்கிள் வந்தால் அதிகம் . பணக்காரக் குழந்தைகள் மிஞ்சிப் போனால் கை ரிக்க்ஷாவில் வரும்

    வாழ்வில் எல்லாவற்றையும் கைகோர்த்து ரசித்த காலங்கள் அவை. முப்பது வருடங்களுக்குப் பின், குமுதம் பத்திரிகையில் பரிசு கிடைத்த என் கவிதைக்கு பின் புலம் இந்த நினைவுதான் .இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளியை மூடப் போகிறார்கள் என்ற செய்தி அறிந்த போது கொஞ்சம் வயிறு பிசைந்தது. நேரில் போய்ப் பார்த்தேன் வகுப்பறைகள் கொஞ்சம் தான் மாறிப் போய் இருந்தன ..

    .சரோஜாவும் ஆஷாவும் ராம்சாயும் பாச்சாவும் என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தக் கண்களோடு வந்துவிட்டேன்.

     

    Share
  • அந்தக் குழந்தை

    அந்தக் குழந்தை

    சு. திரிவேணி
    கோவை

    வேலை நேரம் முடிந்த மாலை
    சுமையற்ற பை, ஜன்னலோர இடமென
    மகிழ்ச்சிகளின் அணிவகுப்பு!
    நிர்மலமான விழிகளும்
    நெகிழ்த்தும் புன்னகையுமாய்
    ஈர்த்த அந்தக் குழந்தைக்கு
    அதைப் போலவே குட்டியாய்
    இருந்த என் பை பிடித்துப் போனது.
    என் முகம் பார்த்து, விரல் தொட்டு,
    கரம் பிடித்து எனப் பையை நோக்கிப்
    பயணித்து வசப்படுத்திக் கொண்டது,
    புதிதாய் முளைக்கும் பற்களின் குறுகுறுப்புக்குப்
    பையை இரையாக்க முயன்றது.
    கடித்துப் பிடித்துக் கொண்டு
    குண்டுக் கைகளால் மத்தளம் தட்டியது.
    ஒருமுறை தவறவிட்டு
    வாங்கி விடுவேனோ என
    ஐயத்துடன் முகம் பார்த்தது.
    எடுத்து அதனிடமே கொடுத்ததும்
    பரிசாய்ப் புன்னகை கிடைத்தது.
    இறங்குமிடம் வந்ததும் –
    சேயறியாமல் தாய் மூலம்
    வந்தடைந்தது என் பை.
    திரும்பிப் பார்த்தேன்-
    பையை ஏக்கத்தோடு தேடியது குழந்தை.
    மடியிலிருந்த பை கனக்கத் தொடங்கியிருந்தது!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 7

    பழகத் தெரிய வேணும் – 7

    நிர்மலா ராகவன்

    இன்று இப்படி. அன்றோ!

    இந்தியா சுதந்திரம் வாங்கியபோது என் சுதந்திரம் பறிபோயிற்று. என்னை ஆரம்பப்பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.

    மதராஸ், டி.நகரில் இருந்த ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி அது. தரையில் போட்டிருந்த மரப்பலகைமேல் சப்பணம் கட்டி உட்காருவோம். எதிரில் மேசையெல்லாம் கிடையாது. மடியில் சிலேட்டு இருக்கும். பலப்பம்தான் எழுதுகோல். ஆசிரியர் பார்க்காத சமயங்களில் திருட்டுத்தனமாக எச்சிலைத் தொட்டு அழிப்பதில் ஓர் ஆனந்தம்.

    கணக்கு என்றால் மனக்கணக்குதான். வகுப்பில் எல்லாரையும் நிற்கவைத்து, ‘பதில் சொல்கிறவர்கள் மட்டும் உட்காரலாம்’ என்றதால், பல கைகள் ஒரே சமயத்தில் உயரும்.

    ஐயோ, பையன்!

    ஆறே வயதானாலும், பள்ளியில் ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளக்கூடாது என்ற கடுமையான உத்தரவு இருந்தது. அதனால் பயந்து, அதே பள்ளியில் படித்த அண்ணன்-தங்கையர்கூட ஒருவரையொருவர் அறியாததுபோல் நடப்பர்.

    பையன் யாராவது அருகே வந்தால், பெண்கள் என்னமோ, பிசாசைக் கண்டு பயந்து ஓடுவதைப்போல் நடப்போம், ‘பாய்’ (BOY) என்று கூவியபடி. நான் கற்ற முதல் ஆங்கில வார்த்தை அதுதான் என்று நினைக்கிறேன். (பெண்களைப் பார்த்து ஆண்கள் ஓடவில்லையே, ஏன்?)

    சிறு வயதிலிருந்தே இப்படிப் பிரித்து வைத்துவிட்டால், திருமணமானபின்னரும்கூட ஒரு பெண் கணவருடன் இயல்பாகப் பழக இயலாதுபோக நேரிடுகிறது.

    சாயந்திர வேளைகளில் என் அண்ணனுடன் விளையாட எங்கள் வீட்டுக்கு வரும் பிற பையன்கள் தோட்டத்தில் ஓடிப் பிடித்து விளையாடும்போது, என்னை வருந்தி அழைப்பார்கள். அவர்களைவிட உருவத்தில் மிகச் சிறியவளாக இருந்த என்னை எளிதாகத் தோற்கடிக்கலாம் என்கின்ற அவர்களது திட்டம் புரியாது, நானும் மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொள்வேன்.

    முதன்முறையாக வருபவனைப் பார்த்து, “உன் பேர் என்ன?” என்று மிரட்டலாகக் கேட்பேன். மரியாதையுடன் கைகளைக் கட்டிக்கொண்டு, ஆங்கிலத்தில் தந்தை பெயரின் முதல் எழுத்துடன் முழுப்பெயரையும் சொல்வான்.

    மறுநாள் பள்ளியில் பார்க்க நேர்ந்தால், முன்பின் அறியாதவர்கள்போல் கடந்துவிடுவோம். மாலையில், மீண்டும் நண்பர்கள், சண்டை, அழுகை, அம்மாவிடம் முறையீடு. (`அழுகுண்ணி ஆட்டம் ஆடறான்!)

    ஒரு முறை, மழையில் வெகுவாக நனைந்துவிட்ட பெண்ணின் சட்டையைக் கழற்றி விட்டாள் ஆசிரியை, காய்ச்சல் வந்துவிடப்போகிறதே என்ற கரிசனத்துடன். ஆண்கள் எதிரில் வெற்று மார்புடன் உட்கார நேர்ந்த அவமானம் தாங்காது, சிறுமி அன்று முழுவதும் கதறி அழுதாள்.

    நான்காவது வகுப்பில் மேசை, நாற்காலி!

    அது மட்டுமா?

    எழுதுவதற்குப் பேனா! மிகப் பெருமையாக இருந்தது. இனி, எச்சிலைத் தொட்டு அழித்துவிட்டதைப் பார்த்துவிட்டு, ஆசிரியர் திட்டமாட்டார்.

    பேனா என்றால், மரத்தாலான நீண்ட பிடியில் கூரான முனையுடன்கூடிய ஒரு உலோகம், மைக்கூடு. அவ்வளவுதான். அவ்வப்போது மைக்கூட்டில் பேனாவின் நுனியை விட்டு எழுத வேண்டும். காகிதத்தில் மை புள்ளியாக புள்ளியாக விழுந்து தொலைக்கும். எப்படிச் சரியாக எழுதுவது என்று பிடிபடுவதற்குள் இடைநிலைப்பள்ளியை அடைந்தேன்.

    எட்டு வயதில் ஒரு கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு வாங்கினாலும் வாங்கினேன், `வருங்காலத்தில் எழுத்தாளராக வேண்டும், அப்போது என் பெயர் எல்லாருடைய கண்ணிலும் படுமே!’ என்ற அடக்கமுடியாத ஆசை எழுந்தது. (அடுத்த பத்தாண்டுகள், `உபயோகமா ஏதாவது பண்ணேன்!’ என்று அம்மா கெஞ்சியதைப் பொருட்படுத்தாது, கிறுக்கித் தள்ளினேன். யோசிக்கும்போது நன்றாக இருப்பதைப்போல் தோன்றும். எழுதியபின் எனக்கே சகிக்காது).

    அடுத்து, பெங்களூர் கமலாபாய் பள்ளியில் ஆறாம் வகுப்பு. அங்கு மையை உள்ளே அடைத்திருக்கும் பேனாவை உபயோகிக்கவேண்டும். சற்று நிம்மதி. ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து பள்ளிவரை மைக்கூட்டை பத்திரமாக எடுத்துக்கொண்டு போக வேண்டியதில்லை.

    ஒன்றன்பின் ஒன்றாக, உயர்ந்த ரகப் பேனாக்களாக அம்மா வாங்கித் தருவார்கள், மகள் ஆசையாக எழுதுகிறாளே என்று.

    ‘பன்மை ஏன்?’ என்று கேட்கிறீர்களா?

    எனக்கிருந்த படபடப்பில், அடிக்கடி பேனா கீழே விழுந்து, கூர்முனை வளைந்து போய்விடும். அம்மாவிடம் கூறப் பயந்து, அதையே வைத்துக்கொண்டு எப்படியோ சமாளிப்பேன்.

    ‘ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை’ என்று ஆசிரியைகள் ஒருமொத்தமாகத் திட்டுவார்கள். (பல வருடங்கள் கழித்து, ‘நீ முன்னுக்கு வருவேன்னு அப்பவே தெரியும்,’ என்று கட்டி அணைத்தார்கள். திட்டி முன்னுக்குக் கொண்டுவர முயலும் கலாசாரம்!)

    ‘கையெழுத்து மோசம்!’ என்ற ஆசிரியரின் குறிப்பைப் பார்த்துவிட்டு, புதிய பேனா வாங்கித் தருவார்கள். (அதனால் கையெழுத்து அப்படியொன்றும் சிறந்துவிடவில்லை).

    என் எண்ண ஓட்டத்திற்கு சிறு கையால் ஈடுகொடுக்க முடியவில்லை. அடித்து, அடித்து எழுதுவேன். பேனா என்ன பண்ணும், பாவம்!

    புகுமுக வகுப்பில் புகுந்தேன், பெங்களூர் மவுண்ட் கார்மல் பெண்கள் கல்லூரியில்.

    தமிழாசிரியை, “உங்கள் வகுப்பில் எல்லாருடைய கையெழுத்தும் மகா மோசம். இரட்டைக் கோடுகள் போட்டிருக்கும் காகிதத்தில் தினமும் ஒரு பக்கம் எழுதிக் கொண்டுவாருங்கள்,” என்று கட்டளையிட்டார்.

    ‘அவமானம்!’ என்று பல பெண்கள் அழுதனர். இரு மாணவிகள் மட்டும் தப்பித்தனர். அதில் நானும் ஒருத்தி.

    முதலில் தமிழில் எழுதிப் பழகியதால், ஆங்கில எழுத்து அழகாக இல்லை என்று, பிற வகுப்புகளில் நிறைய திட்டு வாங்கினேன்.

    கையெழுத்தைக் குறைகூறினார்களே! அதை எப்படி நல்லவிதமாக மாற்றிக்கொள்வது என்று சொல்லத் தெரியவேண்டாம்?

    ‘ஒரு பக்கமாவது அடித்துத் திருத்தாமல் எழுத வேண்டும்’ என்று உறுதி செய்துகொண்டபின், ஒழுங்காக எழுத முடிந்தது.

    மலேசியாவில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தபோது, தங்கத்தினால் ஆன பேனா முனையைப் பயன்படுத்தினேன். காகிதத்தில் வழுக்கிக்கொண்டு போகும். ஆனால், அடிக்கடி மொக்கையாகிவிடும்.

    ‘கையெழுத்து மோசமாக இருந்தால், படைப்பும் அப்படித்தானே இருக்கும்!’ என்று பத்திரிகை ஆசிரியர் நிராகரித்துவிட்டால்? பேனாவின் நுனியை அவ்வப்போது மாற்ற வேண்டியிருந்தது.

    மாற்றும்போது, ‘இது வேண்டுமா?’ என்று கடைக்காரர் வளைந்த நுனியைக் காட்டி விசாரிப்பார்.

    ‘என்ன விலை இருக்கும்?’ என்று கேட்டுவிட்டு, அலட்சியமாக மறுத்துவிடுவேன்.

    என் எதிரிலேயே, பதினெட்டு காரட் தங்கத்தால் செய்யப்பட்ட முனையை குப்பைத்தொட்டியில் வீசிவிடுவார்.

    மலேசியாவில் தங்கம் மிகுதியாகக் கிடைத்ததால், 1960, 1970-களில் அதற்கு மதிப்பு கிடையாது. அதன் விலை இப்படி ஏறும் என்று அன்று தெரியாமல் போய்விட்டதே!

    பல வருடங்களுக்குப்பின் கணினி. (முதலிலேயே கண்டுபிடித்திருக்கக் கூடாதோ? நான் எத்தனையோ வசவுகளிலிருந்து தப்பித்திருக்கலாம்).

    ஆரம்பத்தில் கற்பது கடினமாக இருந்தாலும், அடித்துத் திருத்தும் வேலையெல்லாம் இல்லாமல் இருப்பது பெரிய சௌகரியம். எங்கேயோ, மூன்றாம் பக்கத்தில் இருப்பதை முதலில் கொண்டு வந்து, எப்படி எப்படியோ புரட்டிப்போட்டு, கதையையோ, கட்டுரையையோ எனது திருப்திக்கேற்ப மாற்ற முடிகிறது.

    இப்போதும், அவ்வப்போது பேனா பிடிக்கிறேன், கடைகண்ணியில் வாங்கவேண்டிய சாமான்களுக்கான பட்டியல் போடும்போது.

    காசோலையில் கையெழுத்திடும்போது, `கிறுக்கலான என் கையெழுத்தை யாரால் காப்பி அடித்துவிட முடியும்!’ என்ற பெருமிதம் எழுகிறது.

    ‘காசு கொடுக்கமாட்டோம், கையெழுத்து நன்றாக இல்லை,’ என்று சொல்லிவிடுவார்களோ?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-124

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-124

    நாங்குநேரி வாசஸ்ரீ

    124. உறுப்புநலன் அழிதல்

    குறள் 1231

    சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
    நறுமலர் நாணின கண்

    இங்ஙன நம்மள உட்டுப்போட்டு தூரதொலைவு போயிட்டாகளேன்னு நேசம் வச்சவர நெனச்சி அழுதவளோட கண்ணு அழகுகெட்டு பூக்களுக்கு முன்ன வெக்கப்பட்டு கெடக்கதுங்க.

    குறள் 1232

    நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
    பசந்து பனிவாரும் கண்

    பசல படந்து கண்ணீரு உட்டு இருக்க கண்ணுங்க நேசம்வச்சவரு எங்கிட்ட பாசமா இல்லங்கத சொல்லிக்காட்டிப் போடும்.

    குறள் 1233

    தணந்தமை சால அறிவிப்ப போலும்
    மணந்தநாள் வீங்கிய தோள்

    கூடி இருந்த நேரம் சந்தோசத்துல பெருத்த என் தோளுங்க இப்பம் எளச்சி அவரு பிரிஞ்சதக் காட்டிக்குடுக்குதுங்க.

    குறள் 1234

    பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்

    அவுக என்னயவுட்டு பிரிஞ்சதால பழைய அழகு கெட்டு வாடி இருக்க என் தோளுங்க இப்பம் வளவி கழண்டு விழுத அளவு மெலிஞ்சு போச்சுது.

    குறள் 1235

    கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
    தொல்கவின் வாடிய தோள்

    வளவி கழண்டு பழைய அழகு கெட்டுநிக்க என் தோளுங்க அவரு என்னயப் பிரிஞ்ச கொடுமய ஊருக்கு சொல்லுதுங்க.

    குறள் 1236

    தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
    கொடியார் எனக்கூறல் நொந்து

    என் தோள் மெலிஞ்சு வளவி கழண்டு விழுததக் கண்ட பொறத்தியார் அவரக் கொடியவருனு சொல்லுததக் கேக்க சங்கடமா இருக்கு.

    குறள் 1237

    பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
    வாடுதோட் பூசல் உரைத்து

    மனசே! வாடி வதங்கி இருக்க என் தோள் மெலிஞ்சு நான் படுத சங்கடத்த அவுகளுக்கு சொல்லி பெரும பட்டுக்கிடுவயோ?

    குறள் 1238

    முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
    பைந்தொடிப் பேதை நுதல்

    இறுக அணைச்சிக்கிட்டிருக்க என் கைய பைய வெலக்குததுக்குள்ளார தங்க வளவி போட்டிருக்க அவ நெத்தியில பசலை வண்ணம் படர்ந்துபோச்சு.

    குறள் 1239

    முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
    பேதை பெருமழைக் கண்

    இறுக அணைச்சு இருக்கையில இடையில குளுந்த காத்து(காற்று) உள்ளார நுழைஞ்சுச்சு. அதக்கூட பொறுக்க ஏலாம அவ கண்ணு பசல பூத்துப் போச்சு.

    குறள் 1240

    கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
    ஒண்ணுதல் செய்தது கண்டு

    பிரிஞ்ச சங்கடத்துல நெத்தியில பசலை பூத்ததப் பாத்து அவ கண்ணோட பசலையும் சங்கடப்பட்டுப் போச்சு.

    Share
  • வால்டன்

    வால்டன்

    செல்வன்

    1845ம் ஆண்டு….தத்துவஞானியும், எழுத்தாளருமான ஹென்றி டேவிட் தெரோ தன் சக எழுத்தாளர் ரால்ப் வால்டோ எமர்சனுக்கு சொந்தமான காட்டுப்பகுதி ஒன்றில் ஒரு பரிசோதனை மேற்கொண்டார்.

    நல்ல வேலை, வருமானம் அனைத்தையும் விட்டுவிட்டு காட்டுபகுதிக்கு சென்று இரண்டு ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? அதையும் நகர்ப்புற வாழ்க்கையையும் ஒப்பிட்டால் என்ன தெரிந்து கொள்ளமுடியும்?

    ஒரே ஒரு கோடரியை மட்டும் கடன்வாங்கிக்கொண்டு கையில் ஒரு பைசா இல்லாமல் காட்டுக்கு சென்ற தெரோ அங்கே சின்ன காட்டேஜ் ஒன்றை தானே கட்டினார். நாற்காலி, கட்டில் எல்லாம் அவரே மரத்தில் செதுக்கினார். கட்டிடம் கட்டிமுடிக்கும்வரை அவர் கொண்டுபோன புத்தகங்களை அவர் படிக்கவில்லை. அதன்பின் தான் கொண்டுபோன ஹோமரின் இலியாட் நூலை படித்தார். காட்டுபகுதியில் பீன்ஸ், உருளைக்கிழங்கை தானே பயிரிட்டார்.

    அதன்பின் அன்றைய “நவீன (1845ம் ஆண்டு)” வாழ்க்கைமுறையை விமர்சித்து “புதிய பொருளாதார கொள்கை” ஒன்றை உருவாக்கினார்

    உணவு, இருப்பிடம், எரிபொருள்…இதை தவிர மனிதனுக்கு வேறு எதுவும் அவசியமில்லை.

    தேவைகளை மிக சுருக்கிகொண்டால் ஏராளமான நேரம் கிடைக்கும்.

    மனிதனின் மிகப்பெரிய செல்வம் நேரம் தான் என தெரோ நம்பினார். பணத்தை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரன், அவன் இறக்கும் தருவாயில் “உன்னிடம் இருக்கும் எல்லா பணத்தையும் கொடு. இன்னும் ஒரே ஒரு ஆண்டு கூடுதலாக வாழ முடியும்” என்றால் அந்த டீலை மறுக்கவா போகிறான்?

    “என் தேவைகளை உணவு, இருப்பிடம், எரிபொருள் என மட்டுமே சுருக்கியதால் ஒரு வாரத்துக்கு தேவையான பணத்தை ஒரே நாளில் சம்பாதிக்கமுடிகிறது. மற்றவர்களுக்கு வாரம் இரு நாள் விடுமுறை. எனக்கு ஆறு நாள் விடுமுறை” என்கிறார்.

    தெரோ விடுமுறை நாட்களில் காடுகளில் நடப்பார். அருகே இருக்கும் கிராமங்களுக்கு செல்வார். அவரை காணவரும் நண்பர்களிடம் உரையாடுவார். தப்பி ஓடும் அடிமைகளை ரயில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பிவைப்பார். வால்டன் குளத்தில் மீன்பிடிப்பார். நூல்களை படிப்பார்.

    “இந்த அளவு மகிழ்ச்சியாக நான் என்றுமே இருந்ததில்லை. அறுபது ஏக்கர் நிலம், ஏகபட்ட குதிரைகள், மாடுகள் என வைத்து வாழும் விவசாயிகள் வாரம் ஏழு நாளும் உழைக்கிறார்கள். வாழ்நாள் முழுக்க வேலை செய்தே உழைத்து இறந்துவிடுகிறார்கள். அதற்கு பரிசாக அவர்களுக்கு கிடைப்பது நல்ல வேலைப்பாடு உள்ள வீடு, கட்டில், ஜன்னலில் திரைகள்..இவைதான். தன் வாழ்நாளை முழுக்க இதற்காக இழக்கிறோம் என அவர்கள் உனர்வதில்லை..”

    “குதிரை வண்டி இருந்தால் நேரம் மிச்சமாகும். நான் நடந்துபோகிறேன். நேரம் கூடுதலாக பிடிக்கதான் செய்கிறது. ஆனால் ஒரு குதிரைவண்டி, குதிரைகள், தீனி..இதை எல்லாம் வாங்க ஒரு ஆண்டு வருமானத்தை இழக்கவேண்டும். பெரியவீடு, ஆடம்பரங்கள் எல்லாம் சம்பாதிக்க நம் வாழ்நாளில் விலைமதிப்பில்லாத ஆண்டுகளை இழந்துதான் பெறுகிறோம். காலத்தை கணக்குபோட்டால் இவை எல்லாம் மிகப்பெரிய இழப்புகள் தான்..”

    1845 வாழ்க்கைமுறையையே இப்படி விமர்சித்தவர் இப்போது இருந்தால் என்ன சொல்லி இருப்பார் என யோசித்தால் சிரிப்புதான் வருகிறது.

    நாம் வாங்கும் ஆடம்பரபொருள் எல்லாமே நம் வாழ்க்கையின் விலைமதிக்கமுடியாத ஆண்டுகளை இழந்து பெறப்படுபவைதான். அந்த பொருள்களால் நமக்கு கிடைக்கும் பலன்கள் நிச்சயம் நாம் இழக்கும் காலத்தை விட மதிப்பு குறைவானவையே.

    வாரத்தில் ஆறுவிடுமுறைநாட்கள்-> அம்பானிக்கும், ஜெப் பிசோசுக்கும் இன்னும் கிடைக்காத ஆடம்பரம்தானே?

    இரு ஆண்டுகள் காடுகளில் வசித்துவிட்டு நகர்ப்புறம் திரும்பி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து பல நூல்களை எழுதி மறைந்தார் தெரோ. அவரது வனப்பகுதி அனுபவங்கள் வால்டன் எனும் நூலாக வெளிவந்தது. 19ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்று வால்டன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 249

    படக்கவிதைப் போட்டி – 249

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முகம்மது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (15.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share