Blog

  • குறளின் கதிர்களாய்…(293)

    குறளின் கதிர்களாய்…(293)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(293)

    பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
    தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
                                  – திருக்குறள் – 322 (கொல்லாமை)

     புதுக் கவிதையில்…

    பிற உயிர்களை வதைக்காமல்
    பசித்த உயிர்களுக்குப்
    பகுத்துக் கொடுத்து உண்டு
    பல உயிர்களைக் காத்தல்,
    அறநூலார் தொகுத்தளித்த
    அறங்களிலெல்லாம்
    தலையாய அறமாகும்…!

    குறும்பாவில்…

    பசித்த உயிர்களுக்குப் பகிர்ந்தளித்துண்டு
    பல்லுயிர் காத்தல், அறநூலோர் தொகுத்த
    அறங்களிலெல்லாம் முதன்மையானதே…!

    மரபுக் கவிதையில்…

    பசியில் உயிர்களை வதைக்காமல்
         பசித்த உயிர்களைப் பார்த்தவைகள்
    புசித்திடப் பகிர்ந்து கொடுத்துண்டு
         பல்லுயிர் காத்தலே பேரறமாம்,
    பசியதை யாற்றுமிந் நல்லறமே
         பலவாய் அறநூல் வல்லுநர்கள்
    நிசமாய்த் தொகுத்த அறங்களிலே
         நிச்சய மாகத் தலையாயதே…!

    லிமரைக்கூ..

    பார்த்திடு பலவுயிர் நிலையே,   
    பசிக்குணவு பகிர்ந்தளித்துப் பலவுயிர் காத்திடல்
    பேரறங்களில் எல்லாம் தலையே…!

    கிராமிய பாணியில்…

    கொல்லாத கொல்லாத
    வாயில்லா உயிர்கள
    வதச்சிக் கொல்லாத..

    பசியாயிருக்கிற உயிர்களுக்குப்
    பங்குவச்சி ஒணவுகுடுத்துப்
    பசிபோக்கிப்
    பல உயிரக் காப்பாத்துறது
    பெரிய புண்ணியந்தான்..

    இது
    பெரியவுங்க சொல்லிவச்ச
    அறங்கள் எல்லாத்திலயும்
    ரெம்ப ஒசந்ததுதான்..

    அதால
    கொல்லாத கொல்லாத
    வாயில்லா உயிர்கள
    வதச்சிக் கொல்லாத…

    Share
  • மீட்சி

    மீட்சி

    ராதா விஸ்வநாதன்

    கையில்  அடங்காக் கல்லூரி பட்டங்கள்
    அறிவு முதலீட்டில்  பல பயணங்கள்
    கால் பதியா நாடுகளே இல்லை
    வங்கியில் பொங்கி வழியும் கரன்ஸிகள்
    அன்பும் நேசமும் தொலைந்த வாழ்க்கை
    பெற்றோரின் முகம் மட்டும் முகநூலில்
    தந்தை பிள்ளை பாசம் பேசும் கைப்பேசி
    உறவுகளை உதிர்த்த பட்ட மரங்களாகி
    மறைந்து போன இந்த வாழ்க்கையைத்
    தட்டி. தூசு நீக்கி மீட்டித் தந்துள்ளது
    காற்றில் கலந்து சுவாசத்தில் நுழைந்து
    ஊனில் கலந்து உயிரைக் குடிக்கும் வைரஸ்
    கற்றுத் தருகிறது தொலைத்த வாழ்வியலை
    நீதி நூல் போதிக்க இயலவில்லை
    இயற்கையை அழிக்காமல் இயல்பான
    வாழ்க்கையை வாழக் கற்றுத் தந்துவிட்டது
    மீண்டும் தொலைந்து போய்விடாதீர்கள்

    Share
  • யார் அந்த உமா….?

    யார் அந்த உமா….?

    சாமிநாதன் ராம்பிரகாஷ்

    ஒருமுறை பள்ளி ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர். அந்தக் குழுவை வழிநடத்திச் சென்றவர், சுற்றுலா வந்த ஆசிரியர்களை நன்றாகக் கவனித்துக்கொண்டு பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்.

    சிலோனில் உள்ள கந்தர் கதிர்காமர் கோவில் தரிசனம் முடித்துவிட்டு, அனைவரையும் ஓய்வெடுத்து உறங்க வைத்துவிட்டு, அவர் வெளியில் ஒரு திண்ணையில் உட்கார்ந்துகொண்டு “மாங்கு , மாங்கு“ என எழுதிக்கொண்டிருந்தார் .

    அதைக் கவனித்த ஆசிரியை ஒருவர், என்ன சார் அப்படி என்ன எழுதறீங்க? எனக் கேட்க, அவரும் அவர் எழுதிய தாளைக் கொடுத்தார்.

    அந்த ஆசிரியை. அவர் எழுதிய நாடகத்தைப் படித்துவிட்டு, “நீங்க இன்னும் சில நாட்களுக்குப் பின் எங்கயோ போகப் போறீங்க. ரொம்ப அருமையா, ஆழமா கதாபாத்திரங்களைச் செதுக்கி இருக்கீங்க“ என்று அவரை மனதாரப் பாராட்டியுள்ளார்.

    அதற்கு அவர் “நீங்க சொல்ற மாதிரி மட்டும் நடந்துச்சுன்னா, என்னோட கதையின் நாயகிகளுக்கு எல்லாம் உங்கள் பெயரையே வைக்கிறேன்“ என்றார்.

    அந்த ஆசிரியை கூறியபடியே அவரும் மேடை நாடகங்கள் போட்டு வாகை சூடி, பிறகு வசனகர்த்தாவாக மாறி, கடின உழைப்பின் மூலம் இயக்குநர் ஆனார். இன்றளவும் அவரின் படங்கள் நடுத்தரக் குடும்பங்களின் நாதம்.

    அவரின் படங்கள் பெரும்பாலும் கூட்டுக் குடும்பம், உறவுகளின் நுட்பம், பந்தம், பாசம், பொது ஜனங்களின் வாழ்வியல் நெருக்கடிகள் ஆகியவற்றைப் பேசின.

    மிகவும் எதார்த்தப் படைப்புகள் அவை!

    அவர் பெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன். சுருக்கமாகச் சொன்னால் “விசு“. அவர் இயக்கிய “கண்மணி பூங்கா“ , “வரவு நல்ல உறவு“, “டௌரி கல்யாணம்“, “மணல் கயிறு“ , “வேடிக்கை என் வாடிக்கை“, “பெண்மணி அவள் கண்மணி“ , “சம்சாரம் அது மின்சாரம்“ போன்ற படங்கள் மிகப் பிரபலம்.

    அவர் பத்து வருடங்களுக்கு மேலாகத் தொகுத்து வழங்கிய “அரட்டை அரங்கம்“ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் மிகப் பிரபலம். அவர் அந்த ஆசிரியருக்குக் கொடுத்த வாக்கின் படியே அவர் இயக்கிய அனைத்துப் படங்களின் நாயகி கதாபாத்திரத்திரங்களின் பெயரை வைத்ததோடு நில்லாமல் “சுந்தரி“ என்கிற அவரது மனைவியின் பெயரைக்கூட (அவரின் சம்மதத்துடன்) மாற்றி அழைத்தார். முதன்முதலில் அவருக்கு ஊக்கமளித்த, பெருமதிப்பிற்குரிய அந்த ஆசிரியரின் பெயர் தான் “உமா“ .

    பின்குறிப்பு: என்னை ஈன்றேடுத்த தாயாரின் பெயரும், தாய்க்கு நிகரான பாசத்துடன் இருக்கும் என் அக்காவின் பெயரும் கூட “உமா“ தான்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-127

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-127

    நாங்குநேரி வாசஸ்ரீ

    127. அவர் வயின் விதும்பல்

    குறள் 1261

    வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்

    அவுக வருத வழிய எதிர்பாத்து என் கண்ணுங்க ஒளி மங்கிப் போச்சுது. பிரிஞ்சுபோன நாட்கள சுவத்துல குறிச்சுவச்சு எண்ணினதுல விரல்கள் தேஞ்சுபோச்சுது.

    குறள் 1262

    இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
    கலங்கழியும் காரிகை நீத்து

    நேசம் வச்சிருக்க அவுகள நான் இன்னிக்கு மறந்தேம்னா என் அழகு கெட்டு தோள் மேல பூட்டியிருக்க வளவி கழண்டு விழுதது நிச்சயம்.

    குறள் 1263

    உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
    வரல்நசைஇ இன்னும் உளேன்

    உற்சாகத்தயே தொணையா வச்சிக்கிட்டு செயிக்கதுக்காவ என்னைய விட்டுட்டுப் போன என் காதலரு திரும்பி வருவாகங்குத நெனப்புலதான் நான் இன்னமும் உசிரோட இருக்கேன்.

    குறள் 1264

    கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
    கோடுகொ டேறுமென் நெஞ்சு

    நேசம் வச்சி கூடி இருந்து பொறவு உட்டுப்போட்டு போன என் காதலரு எப்பம் வருவாகனு எதிர்பாத்து எம் மனசு மரத்தோட உச்சாணிக் கொம்புலநின்னு பாக்குது.

    குறள் 1265

    காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
    நீங்குமென் மென்தோள் பசப்பு

    கண்ணார எம் புருசன காணோணும். கண்ட பொறவுதான் என் மெல்லிசான தோள்ல படந்து கெடக்க பசலை நீங்கும்.

    குறள் 1266

    வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
    பைதல்நோய் எல்லாம் கெட

    என்னயப் பிரிஞ்சுபோன காதலன் எப்பமும் வந்துதானே ஆவணும். அப்பம் என் சங்கடமெல்லாம் அத்துப் போவுதமாரி சந்தோசத்த அனுவிப்பேன்.

    குறள் 1267

    புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
    கண்ணன்ன கேளிர் வரின்

    என் கண்ணு கணக்கா இருக்க காதலரு வந்த பொறவு பிரிஞ்சதுக்காவ கொஞ்சம் சண்டபோடுவேனா? கட்டித் தழுவிக்கிடுவேனா? அல்லது ரெண்டையும் சேத்து செஞ்சிபோடுவேனா?

    குறள் 1268

    வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து

    ராசா செய்யுத காரியத்துல செயிக்கட்டும். அவுக செயிச்சாகன்னா எனக்கு  எம் பொஞ்சாதியோட சாயங்காலம் சந்தோசமான விருந்துதான்.

    குறள் 1269

    ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
    வருநாள்வைத் தேங்கு பவர்க்கு

    தூர தொலைவு போயிருக்குத காதலர் திரும்ப வார நாளை நெனச்சி சங்கடப்படுத பெண்பிள்ளைங்களுக்கு ஒரு நாள் கழிக்கது ஏழுநாளக் கழிச்சது கணக்கா நீளமாத் தோணும்.

    குறள் 1270

    பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
    உள்ளம் உடைந்துக்கக் கால்

    பிரிஞ்ச சங்கடத்தப்பொறுத்துக்கிட முடியாம மனசு நொறுங்கிப் போச்சுதுன்னா திரும்ப ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிட்டாதான் என்ன? கூடிச் சேந்தாதான் என்ன? அதனால என்ன பிரயோசனம்?

    Share
  • எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் அண்ணாகண்ணன் உரை

    எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் அண்ணாகண்ணன் உரை

    அண்ணாகண்ணன்

    சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தமிழிணையம் – தேவைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். கணித் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சண்முகம், நிகழ்வைச் சிறப்புற ஒருங்கிணைத்தார்.

    சமூகச் சிக்கல்களுக்குத் தொழில்நுட்பங்களின் துணைகொண்டு தீர்வுகளைக் கண்டறியுங்கள். உங்கள் தாய்மொழியில் புத்தாக்கம் படையுங்கள் என்பதை என் முதன்மைச் செய்தியாக முன்வைத்தேன்.

    எனது உரையின் ஒரு பகுதி இங்கே.

     

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இறைச்சிக் கடைகளை மூடுக (Close Abattoirs and Meat shops)

    இறைச்சிக் கடைகளை மூடுக (Close Abattoirs and Meat shops)

    மறவன்புலவு க சச்சிதானந்தன்
    சிவசேனை, இலங்கை

    தீநுண்மிக் (வைரசு) கொள்ளை நோயில் இருந்து மக்களைக் காக்க இறைச்சிக் கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடுக.

    கோவிட்டு 19 என்ற தீநுண்மி (வைரசு) கொள்ளை நோயைப் பரப்புகிறது.

    இத் தீநுண்மியின் தொடக்க இடம் சீனாவின் ஊகான் மாகாணத்தில் ஓர் இறைச்சிக்கடை எனச் சீன அரசு அறிவித்தது.

    இறைச்சி உணவைத் தவிருங்கள் எனச் சீன அரசுத் தலைவர் சீன மக்களைக் கேட்டிருந்தார்.

    கோவிட்டு தீநுண்மியின் கொள்ளை நோய்த் தாக்கத்தைக் குறைக்க இந்தியாவின் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் கோழி ஆடு மாடு இறைச்சிக் கடைகளை மூடுமாறு ஆணை இட்டுள.

    இலங்கையிலும் வேகமாகப் பரவிவரும் கோவிட்டு தீ நுண்மியின் கொள்ளை நோய்த் தாக்கத்தைக் குறைக்க இலங்கை முழுவதும் இறைச்சிக் கடைகளை உடனடியாக மூடுமாறு ஆணையிட இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

    ஒன்பது மாகாணங்களிலும் உள்ள உள்ளூராட்சித் திணைக்கள ஆணையர் ஒன்பதின்மரும் உடனடியாக ஆணை இட்டு உள்ளூராட்சி அமைப்புகள் உரிமம் வழங்கிய இறைச்சிக் கடைகளை மூடுக.


    Close Abattoirs and Meat shops in Sri Lanka forthwith

    Tracing the origins to meat shops in Wuhan, China, Chinese Government appealed to the 1.3 billion Chinese people to avoid meat eating to prevent the covid 19 virus menaces. Most meat shops in China stands closed as of now. President Xi Jinping is reported to have advocated vegetarianism.

    In India, many state governments have banned the sale of chicken, mutton, beef and pork, to clamp down on abattoirs and meat shops. Kerala is the latest state to ban meat shops.

    I appeal to the Government of Sri Lanka to order the local bodies, pradeshya sabhas, urban councils and municipal councils to revoke the licences granted to abattoirs and meat shops to gear up for a long term programme to meet the challenges of covid 19.

    Even though the number of infected with covid 19 in Sri Lanka may be proportionately low, global phenomenon has been that the number of infected persons shoots up sooner or later to un-manageable levels. In addition to personal hygiene, eating habits have also contributed to the vulnerability to infection by covid 19 immensely.

    Hence this appeal to close abattoirs and meat shops in Sri Lanka forthwith.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 8

    பழகத் தெரிய வேணும் – 8

    நிர்மலா ராகவன்

    (மாணவர்களை வழிநடத்துவது)

    “நான் பரீட்சைகளில் தேர்ச்சி பெறாவிட்டால் உங்களுக்கென்ன அக்கறை? எப்படியும் உங்களுக்குச் சம்பளம்தான் கிடைத்துவிடுமே!”

    என் மாணவன் ஒருவன் இப்படி என்னைக் கேட்டபோது, நான் அதிர்ந்தேன். இதே வார்த்தைகள்தாம், ஆங்கிலத்தில்.

    பலவிதமாக மரியாதையின்றி ஆசிரியர்களை நடத்துவார்கள் வேறு சிலர்.

    ஒருமுறை, அப்படிப்பட்ட மாணவன் ஒருவனுடைய தாயிடம் நான், ‘இப்படிப் பேசுகிறானே!’ என்று ஆதங்கத்துடன் கேட்டேன், அவள் அவனுக்கு அறிவுரை கூறுவாள், இல்லை, கண்டிப்பாள் என்ற நம்பிக்கையில்.

    அவள் கூறியதோ! “வீட்டிலும் இப்படித்தான்!”

    சிறுவயதில் கண்டிக்காமல் விட்டால், பதின்ம வயதில் அவர்களை மாற்றமுடியாது.

    சில வருடங்களுக்குப்பின், பதின்ம வயதினர் அப்படிப் பேசுவது நம் தவறல்ல, அவர்கள் ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று புரிந்தது.

    அதன்பின், குறிப்பிட்ட மாணவனைத் தனியாக அழைத்துப் பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டேன்.

    ‘”வீட்டில் அப்பா இருக்கிறாரா?” என்று ஆரம்பிப்பேன்.

    (அப்பாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம். அதனால் அம்மாவுடன் ஓயாது சண்டை. அந்த நிலையில், தன்னால்தான் இருவருக்கும் மனம் ஒத்துப்போவதில்லை என்ற வருத்தம் பிள்ளைகளுக்கு எழுவது இயற்கை).

    அனேகமாக, “சில சமயம்,” என்று தயக்கத்துடன் பதில் வரும்.

    “இது பெரியவர்களுக்கிடையே இருக்கும் பிரச்னை. நீ நல்ல பையன். அதில் தலையிடாது, ‘அவர்கள் பாடு!’ என்று விடு. நீ குழம்பினால், அது உன் எதிர்காலத்தைத்தான் பாதிக்கும்,” என்று அறிவுரை கூறுவேன்.

    ஒரு பதின்ம வயதுப் பையன், “என் தாய், ‘இது நம் குடும்ப விவகாரம். பிறரிடம் சொல்லாதே,’ என்கிறார்கள்,” என்று தன் குழப்பத்தைத் தெரிவித்தான்.

    “எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம், அவர்களுக்குக் கேலியாகப் போய்விடும் என்று அப்படிச் சொல்லி இருப்பார்கள். உனக்கு நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினால், என்னிடம் சொல்லியதுபோல, நெருக்கமான நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!”

    ‘நம் மனநிலையைப் புரிந்து, இந்த ஆசிரியை ஆறுதல் அளிக்கிறார்களே!’ என்று அதன்பின், கடுமையாக உழைப்பார்கள். அம்மாதிரியான ஆசிரியைமீது காதல் வயப்படுவதும் உண்டு!

    ஆசிரியை என்றால் அதிகாரம்

    சிறு குழந்தைகளுக்கும் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இயற்கையாகவே கற்பனாசக்தி மிகுந்திருக்கும். ஆனால், பலருடைய கற்பனைத்திறன் காணாமல் போய்விடுகிறதே, ஏன்?

    சில (பல?) குடும்பங்களில் பெண்களுக்கு இரண்டாவது இடம்தான். அண்ணனுக்கோ, அல்லது வயதில் இளையவனாக இருந்தாலும் தம்பிக்கோ, கூடுதலான சலுகை கிடைக்கும்.

    இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த சில ஆசிரியைகள் தாம் சிறுவயதில் இழந்த அதிகாரத்தை மாணவர்கள்மேல் செலுத்துவார்கள்.

    கதை

    ஆங்கில மொழி போதிக்கும் மிஸஸ் தேவா முதலில் கட்டுரைக்கான தலைப்பைக் கொடுத்துவிட்டு, அதை விவாதிப்பாள். மாணவிகள் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.

    சுமித்ரா என்ற மாணவி நிறையப் படித்து, தன் அறிவைப் பெருக்கிக்கொண்டிருந்தவள். சுயமாகச் சிந்தித்து, ஆசிரியையின் கருத்துடன், தன்னுடையதையும் இணைத்து எழுதினாள்.

    வந்தது வினை. அவளுடைய கருத்தை, ‘பிழை’ என்ற குறிப்புடன் அடித்து, குறைவான மதிப்பெண்களை அளித்தாள் ஆசிரியை. திட்டு வேறு.

    வருட இறுதியில் அரசாங்கப் பரீட்சை வந்தது. வேறு பள்ளிகளில் படித்த பலரும் தத்தம் ஆசிரியைகளின் கருத்துக்களை துளியும் மாற்றாது வெளியிட்டிருந்தனர். அவர்களை யார் யோசிக்கவிட்டார்கள், பாவம்!

    சுமித்ரா மட்டும் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தாள், வயதுக்கு மீறிய சிந்தனையுடன்.

    பிற்காலத்தில் பெரிய உத்தியோகத்தில் அமர்ந்தபின்னும், ‘பள்ளிக்கூடம் என்றாலே எனக்கு வெறுப்பு,’ என்று அவள் அடிக்கடி கூறுவதில் என்ன ஆச்சரியம்?

    அறிவும் பண்பும்

    பள்ளியில் கல்வி கற்பது பரீட்சைகளில் தேர்ச்சிபெற மட்டுமில்லை. `படித்தால் அறிவு வளரும்,’ என்று புரிந்து, மாணவர்கள் என்றுமே படிக்கும் பழக்கத்தை விரும்புவர்களாக ஆக்கவேண்டும்.

    பொதுவாக, ஆசிரியர்கள் புத்தகத்திலிருப்பதுபோலவே தமது பாடங்களை நடத்துவதுடன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்கள். இளவயதிலேயே பண்பையும் புகட்ட வேண்டாமா?

    ஒரு முறை, என் வகுப்பில், ஒரு மாணவன் தும்மினான். அப்போது, `அருகிலிருப்பவர்களிடம் `sorry,’ என்று மன்னிப்புக் கேட்கவேண்டும்,’ என்று நான் கூற, `ஐயே! இதையெல்லாமா சொல்லிக்கொடுப்பார்கள்!’ என்ற சலிப்புக்குரல் கேட்டது.

    பெரிய வேடிக்கை என்றெண்ணி, தும்மியவன் எழுந்து நின்று, நாலாபுறமும் திரும்பி, மன்னிப்பு கேட்டபடி இருந்தான்!

    பாடம் மட்டும் வேண்டாமே!

    பாடத்திற்குச் சம்பந்தம் இல்லாத, ஆனால் வாழ்க்கைக்கு உதவும் விஷயங்களையும் அவ்வப்போது சொல்லிக்கொடுப்பது என் வழக்கம். இல்லாவிட்டால், அவர்களுடைய கொட்டாவி நம்மையும் தொற்றிவிடுமே!

    REFLEXOLOGY-யில் நான் பயின்றது:

    இரு கை விரல்களையும் கோர்த்துக்கொண்டு, உள்ளங்கைகள் ஒன்றையொன்று தொடும்படி பிடித்துக்கொள்ளுங்கள். நன்றாக இறுக்கிவிட்டு விலக்கினால், கைகளில் ரத்த ஓட்டம் புலனாகும்.

    இதனால் என்ன பலன்?

    நம் மன இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள. பரீட்சைக்குமுன் செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.

    விளையாட்டாக, “யாருடனாவது சண்டை போடுமுன் இப்பயிற்சியைச் செய்தால், நம்மை யாரும் வெல்ல முடியாது,” என்று சேர்த்துக்கொண்டேன்.

    “டீச்சர், நீங்கள் கணவருடன் சண்டை போடுவதற்குமுன் இப்படித்தான் செய்கிறீர்களா?” ஒரு துடுக்கான கேள்வி எழுந்தது ஆண்குரலில்.

    நான் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, “அதுவும்தான்!” என்றேன். ஆனால், புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை.

    முதலில் அதிர்ச்சியடைந்த மாணவிகளும் அப்போது எழுந்த சிரிப்பில் கலந்துகொண்டார்கள்.

    இன வேறுபாடால் எழும் பிரச்னை

    ஸியூ ஙா (SIEW NGA) என்ற மாணவி என் மேசைக்கருகே வந்து, ஒரு புத்தகத்தை என்முன் தூக்கிப்போட்டாள்.

    ”டீச்சர்! நான் நேற்று பள்ளிக்கு வரவில்லை. நீங்கள் நடத்திய பாடத்தைச் சொல்லிக்கொடுங்கள்,” என்றாள் அதிகாரமாக.

    எனக்கு வந்த ஆத்திரத்தில், “நான் இங்கு தனிப்பட்ட முறையில் டியூஷன் நடத்தவில்லை. உன் தோழிகளிடம் கேள், போ!” என்று பதிலடி கொடுத்தேன்.

    திகைப்புடன், என்னையே பார்த்தபடி நின்றாள்.

    “இன்னும் ஏன் நிற்கிறாய்? உன் இடத்திற்குப் போ!” என்று விரட்டினேன்.

    ஏற்பது நன்று (எல்லோரையும்)

    நல்ல குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது எளிது.

    குடும்பத்தில் அன்போ, அரவணைப்போ இல்லாத அபாக்கியசாலிகளையும் ஒதுக்காது, அவர்களுடைய திறமைகளைக் கூடியவரை வெளிக்கொணர்வது ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது.

    கதை

    ஸிதி நோரா என் முன்னாள் மாணவி.

    ஒருமுறை, ஆசிரியர்களின் பொது அறைக்குள் நுழைந்து, என்னருகே வந்து முகமலர்ச்சியுடன் முகமன் கூறினாள்.

    “அலுவலகத்திலிருந்து ஏதாவது எடுத்துக் கொண்டுபோக வந்தாயா?” என்று கேட்டேன்.

    ‘இல்லை,’ என்று தலையசைத்தாள்.

    “பின்னே?”

    குரல் தழதழக்க, “டீச்சரைத்தான் பார்க்க வந்தேன். உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்,” என்றபடி அழ ஆரம்பித்தாள்.

    எனக்குப் பெருமையாகிவிட்டது. “ஹேய்! இதைக் கேட்டீர்களா? என்னைப் பார்க்கவென்று வந்திருக்கிறாள்!” என்று அறிவிப்பு செய்தேன்.

    “ஆசிரியப் பயிற்சியில் என்ன பாடம் எடுத்திருக்கிறாய்?” என்று நான் கேட்டதற்கு, “ஃபிஸிக்ஸ் (PHYSICS),” என்று வேகமாகச் சொல்லிவிட்டு, வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள்.

    என்னிடம் ஆரம்பத்திலிருந்து கற்ற பாடம்!

    அன்று அவள் வேறு எந்த ஆசிரியையும் சந்தித்துப் பேசவில்லை.

    ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தபின், ‘உனக்கு எந்த ஆசிரியர்போல் ஆக விருப்பம்?’ என்று ஒரு கேள்வி எழுப்பப்படும்.

    ஸிதி நோரா என் பெயரை எழுதிவிட்டு, என்னைப் பார்க்க வந்திருக்கிறாள்.

    அவள் போனபின், பிறர் அவளை அலசினார்கள்.

    “இந்தப் பெண் ஏழை. படிப்பிலும் சுமார்தானே?”

    “ஆனாலும், நல்ல ஆசிரியையாக விளங்குவாள்!”

    அதேபோல், நானும் என் இடைநிலைப்பள்ளி ஆசிரியையைக் குறிப்பிட்டிருக்கிறேன். கண்டிப்பு, நகைச்சுவை, கருணை மூன்றும் இணைந்தவர் மிஸ்.ராதாம்பாள்.

    ‘நான் புத்திசாலி. அதனால் முன்னுக்கு வந்தேன். பெற்றோராவது, ஆசிரியர்களாவது!’ என்ற மனப்பான்மை கர்வத்தை வளர்க்கிறது. இப்படி நம்புகிறவர்கள் பிறரை மதிக்கத் தெரியாதவர்கள்.

    Share
  • நூல் அறிமுகம் – ‘ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம் – 1950 வரை’ (தொகுதி 01)

    நூல் அறிமுகம் – ‘ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம் – 1950 வரை’ (தொகுதி 01)

    எம். ரிஷான் ஷெரீப்
    mrishansh@gmail.com

    ‘ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம் – 1950 வரை (தொகுதி 01)’ எனும் தொகுப்பை அண்மையில் கிடைக்கப் பெற்றேன். மிகவும் அருமையானதும், காத்திரமானதும், கனதியானதுமான ஒரு தொகுப்பு நூல் இது.

    ஈழ இலக்கியவாதிகள் சி.ரமேஷ், கு.றஜீபன், சு.ஸ்ரீகுமரன் (இயல்வாணன்), இ.இராஜேஸ்கண்ணன் ஆகிய நால்வர் ஒன்றிணைந்து ஏழு தசாப்தங்களுக்கு முந்தைய ஈழச் சிறுகதைகளைத் தேடிச் சேகரித்து, ஒரு முழுமையான தொகுப்பாக்கித் தந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு பொக்கிஷமான இத் தொகுப்பை வடக்கு மாகாணத்தின் ‘பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு’ வெளியிட்டிருக்கிறது.

    இத்தொகுப்புக்கான நீண்ட பதிப்புரையை தொகுப்பாளர்களில் ஒருவரான கவிஞர் சி. ரமேஷ் எழுதியிருக்கிறார். தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிறுகதைகள் குறித்தும், சிறுகதையாசிரியர்கள் குறித்தும் ஆழமான திறனாய்வுப் பார்வையில் மிகுந்த தேடலுடனும், அர்ப்பணிப்புடனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

    இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு முன்பிருந்த மக்களின் வாழ்வியலையும், பாரம்பரியத்தையும் அந்த மண் வாசனையோடு பிரதிபலிக்கும் இச் சிறுகதைத் தொகுப்பு அனைவரும் வாசிக்க வேண்டியதும், பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதுமான ஒரு வரலாற்று ஆவணம் ஆகும். ஆயிரத்து நாற்பத்தெட்டுப் பக்கங்களைக் கொண்டுள்ள பாரியதும், அரியதுமான இச் சிறுகதைத் தொகுப்பு நூலை எமக்கும், வருங்கால சந்ததியினருக்குமாக அளித்துள்ள சி. ரமேஷ், கு. றஜீபன், சு. ஸ்ரீகுமரன் (இயல்வாணன்), இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியும், பாராட்டுகளும் என்றென்றும் உரித்தாகும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-126

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-126

    நாங்குநேரி வாசஸ்ரீ

    126. நிறையழிதல்

    குறள் 1251

    காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
    நாணுத்தாழ் வீழ்த்த கதவு

    வெக்கம் ங்குத தாப்பாளக் கொண்டிருக்க அடக்கம் ங்குத கதவ காதல்நோய் ங்குத கோடாலி பொளந்து போடுது.

    குறள் 1252

    காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில்

    நேசம் ங்குத நோய் இரக்கங்கெட்டது. ஏம்னா அது நடுச்சாமத்துலயும் என் நெஞ்சத்த தண்டிச்சு வேல வாங்குது.

    குறள் 1253

    மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
    தும்மல்போல் தோன்றி விடும்

    என் நேசத்த நான் ஒளிச்சுக்கிட நெனப்பேன். ஆனா அது எனக்குத் தெரியாம தும்மல் கணக்கா தன்பாட்டுல வெளிய வந்துக்கிடும்.

    குறள் 1254

    நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
    மறையிறந்து மன்று படும்

    நான் இப்பம்வரை மன அடக்கம் உள்ளவனு நெனைப்பு வச்சிக்கிட்டிருந்தேன். ஆனா என் நேசம் நான் ஒளிக்கதயும் மீறி சபையில வெளிப்பட்டு நிக்கு.

    குறள் 1255

    செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
    உற்றார் அறிவதொன் றன்று

    தன்னயப் பிரிஞ்சு போனவுக பொறத்தால போவாம நிக்குத மன அடக்கம் நேசம் வச்சவுகளுக்கு இல்ல.

    குறள் 1256

    செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
    எற்றென்னை உற்ற துயர்

    வெறுத்து ஒதுங்கிப் போனவுக பொறத்தால போவவைக்குத நிலைய உண்டாக்குத இந்த காதல் நோயோட தன்ம தான் என்ன?

    குறள் 1257

    நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
    பேணியார் பெட்ப செயின்

    நேசம் வச்சவுக காதல்நோயால நாம ஆசப்படுததச் செய்யுத நேரம் வெக்கம் ங்குத கொணத்த அறிஞ்சிக்கிடாமலே இருப்போம்.

    குறள் 1258

    பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை

    நம்மளோட பெண்மைங்குத மனக்கோட்டைய நொறுக்குத ஆயுதமா இருக்குதது மனசத் களவாண்டு பல மாயம் செய்யுததுல தெறமையா இருக்க காதலர் பம்மிக்கிட்டுபேசுத பேச்சுதானே? .

    குறள் 1259

    புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
    கலத்தல் உறுவது கண்டு

    பிணங்கணும்னு நெனச்சிதான் போனேன். ஆனா எம் மனசு என்னய உட்டுப்போட்டு அவுககிட்ட போனபொறவு இனி ஏலாது ங்குத நெனப்புல தழுவிக்கிட்டேன்.

    குறள் 1260

    நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
    புணர்ந்தூடி நிற்பேம் எனல்

    கொழுப்ப தீக்குள்ளார இட்டா அது உருகிப்போவுததுகணக்கா மனசக் கொண்டவுகளுக்கு சேந்து இருந்த பொறவு பிணங்கி நிக்கணும்ங்குத உறுதி இருக்குமா?

    Share
  • படக்கவிதைப் போட்டி – 250

    படக்கவிதைப் போட்டி – 250

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (22.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 249-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 249-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. முகம்மது ரபியின் இந்த ஒளிப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ”கள்ளமில்லா மழலையின் பார்வைநம்
    உள்ளம் கொள்ளை கொண்டாலும்
    இன்மைத் துன்பம் இல்லா நிலையை
    என்று அடைந்திடும் இவர் வாழ்க்கை?” என்றொரு வினா முள்ளாய்த் தைக்கின்றது நம் மனத்தை!

    நெஞ்சைத் தொடும் இப்படத்திற்குப் பொருத்தமாய் வரைந்த கவிதைகளோடு காத்திருக்கும் கவிஞர்களை வரவேற்போம் வாழ்த்துக்களோடு!  

    ”பெற்ற தாயினும் உற்ற துணை பிள்ளைக்கு வேறில்லை” என்று தாயின் பெருமையைப் புகல்(ழ்)கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உயர் துணை…

    பிள்ளை யதற்குப் பாதுகாப்புப்
    பெற்ற தாய்போல் வேறில்லை,
    அள்ளிக் கொடுக்க இலாதபோதும்
    அன்பது உண்டே அளவிலாதே,
    கள்ளம் கபடம் தாய்மையிலிலை
    காட்டு வழியிலும் பயமில்லை,
    உள்ளம் நிறைந்த அன்போடே
    உயர்ந்த துணையே தாய்தானே…!

    *****

    ”பிற்காலத்தை எண்ணிக் கலங்காதே குழவியே! பொற்காலம் உனதென்று பொங்கி நகை!” என்று மழலைக்கு நம்பிக்கையூட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    முழங்கையில் தளிர் மழலை
    முன்னேற்றப் பாதைக் காணும்
    வண்ண முக்காடிட்ட முகத்தழகி

    பின்னோக்கிக் காணும் அவள் குழவி
    எவரேனும் தொடர்கிறாரோ
    என்றொரு பார்வையா?
    பிற்காலம் எப்படியோ
    என்கின்ற பிரமிப்பா?

    பொற்காலம் உனதுதான்
    பொங்கிநகைப் புதுப் பொலிவே!
    கிஞ்சித்தும் தளராதே
    எழும்பி நில் கடலலையே!!

    *****

    ”நோய் வந்தபோதும் சேயைத் தீண்டத் தயங்காது அன்புபாராட்டி உயிர்காக்கும் உறவுக்குப் பெயர்தான் தாய்” என்று தாய்மையின் தன்னலமற்ற சிறப்பைக் கவிதையில் உணர்த்துகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    கொஞ்சிப் பேசி
    அள்ளி அணைத்த
    கரங்கள் யாவும்
    தீயாய்ப் பரவி வரும்
    தொற்று நோய் வந்ததென்று
    என்னைத் தீண்ட மறுத்ததே!
    வயிற்றில் சுமந்து
    உயிர் தந்தவள்
    அல்லும் பகலும் போராடி
    நோய்கொண்டு போக முயன்ற
    எனதுயிரை மீட்டுத் தந்தவள்
    தாய் என்னும் வரம் தந்த
    தெய்வக் குழந்தை நான்என்று
    என்னைச் சுமக்கத் தயங்கவில்லையே!
    வேண்டிப் பெற்ற உறவு இது
    இல்லை என்றாலும்
    உயிர் உள்ளவரை என்றும் நம்மை
    தொடர்ந்து வரும் உறவு இது!
    முகத்தை மூடியே நீ வந்து நின்றாலும்
    கண்களை மூடி ஊரே சொல்லும்
    முத்தாய் மூன்றெழுத்தில்
    நீ “அம்மா” என்று!

    *****

    தாயின் தகைமையைப் பொருள்பொதிந்த கவிதை வரிகளில் உணர்த்தியிருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!  

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    நேர்கொண்ட பார்வை!

    அன்னையர்குலப் பெண் தெய்வமென
    ஆலயந்தனிலே வைப்பதாய்ச் சொல்லிப்
    புழக்கடைத் தனிலே பூட்டிடுவார் – பெண்ணைக்
    கிணற்றுத் தவளை ஆக்கிடுவார்!

    முரட்டு உலகி(னி)ன்று காப்பதாய்ச் சொல்லி
    இருட்டு வாழ்க்கை தந்திடுவார் – மூடர்
    குருட்டுத்தனம் பல செய்திடுவார் – அவற்றைப்
    புனிதம் என்றே காட்டிடுவார்!

    கைவளை அழகென்று சொல்லிப் – பெண்ணுக்குக்
    கைவிலங் கிட்டே முடக்கிடுவார்!
    கொடியவர் பார்வைப் பழுதென்று கூறி
    முக்காட்டிட்டு அவர்திறம் மூடிடுவார்!

    தாயினத்தைத் துரத்தும் கயமைகளை – உன்
    பார்வைத் தீயால் பொசுக்கிவிட
    முண்டாசுக் கவிஞனின் வாரிசென
    நேர்கொண்ட பார்வைக் காட்டிடுவாய்!

    ”முரட்டு உலகினின்று பெண்ணைக் காப்பதாய்ச் சொல்லி, இருட்டு வாழ்க்கையில் அவளைத் தள்ளிடும் குருட்டு உலகினின்று அவளை மீட்டிட, முண்டாசுக் கவிஞனின் வாரிசாய் நேர்கொண்ட பார்வை காட்டிடு!” என்று கனிமழலைக்கு நன்மொழி நவின்றிடும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 72 (தன்னை)

    சேக்கிழார் பாடல் நயம் – 72 (தன்னை)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்
    துன்னிய யாவையும் தூய்மை செய்வது
    பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
    இன்ன தன்மையது இது வாங்கு நீ என

    திருநீலகண்டராகிய குயவரிடம் இறைவன் ஒரு சிவயோகியாக வந்தார். அவரை அடியார் வரவேற்று இல்லத்தில் உபசரித்தார். அவரிடம் ‘’யாது காரியமாக வந்தீர்கள்! உங்களுக்கு யான் செய்யத்தக்கது யாது?’’ என்று கேட்டார். சிவயோகியார் தாம் கொண்டு வந்த பிச்சைப் பாத்திரமாகிய திருவோட்டைக்  கொடுத்து, ‘’நம்பியே,  நின்பால் தந்த இவ்வோட்டை உரியவாறு பாதுகாத்து யாம் வேண்டும்போது திருப்பித் தருக’’ என்றார்.

    அப்போது தாம் தந்த திருவோட்டின் சிறப்பைச்  சிவயோகியார் கூறினார். இறைவன் தம் திருக்கரத்தில் ஏந்தியிருந்த ஓடு, பிரமனின் ஐந்தாம் தலையைக்  கிள்ளி எடுத்த போது, அவர் கரத்தில் ஒட்டிக் கொண்ட ஓடு என்று புராணம் கூறுகிறது. இறைவனைப் போலத் தாமும் ஐந்து தலையைக் கொண்டவன் ஆகவே சிவனுக்கு இணையானவன் என்று தற்பெருமை கொண்ட பிரமனின் ஐந்தாம் சிரத்தை, இறைவன் கொய்தார். அப்போது அவர் கரத்தில் அத்தலை திருவோடாக விளங்கியது. படைப்புக் கடவுளின் பெருமை மிக்க சிரம் தனிச் சிறப்புக் கொண்டது. அதனை ஏந்திய சிவபெருமானின் திருவுருவம் கண்டியூரிலும், ஈர ஓடு எனப் பெற்ற  ஈரோட்டிலும் கோயில் கொண்டது. கபாலத்தைக் கையில் ஏந்திய சிவபிரான் திருமயிலைக் கபாலீச்சுரத்திலும்  கோயில் கொண்டுள்ளார். அந்தத்  திருவோட்டையே   திருநீல கண்டரிடம்  இறைவன் கொடுத்தார். அப்போது அத்திருவோட்டின் சிறப்பை, ‘’தனக்கு ஒப்பாக வேறொன்றுமில்லாதது; தனதிடத்தினுள்ளே பொருந்திய பொருள்கள்எல்லாவற்றையும் சுத்தமாக்குவது; பொன்னையும் மணியையும்விட மிகக் காக்க வேண்டுவது; இத்தகைய தன்மையுடையது; இதனை வாங்குவாயாக!’’  என்று கூறினார்.

    தனக்குவமை  இல்லாதானாகிய சிவபிரானைச் சேர்ந்த பொருள்கள் யாவும் இணையற்றவை! ஆதலால் அத்திருவோடும் இணையற்றது, இதனைச் சேக்கிழார், ‘’தன்னை  ஒப்பு அரியது!’’ என்று பாடுகிறார். இந்தத் திருவோட்டின் உட்பரப்பு இறைவனின்  அதிகார எல்லையாகி எங்கும் விரிந்தது. தலம் – இப்பாத்திரத்தில் பலியை இடும் இயைபு உள்ள பரப்பு. அதிகார எல்லை என்பர் இக்காலத்தார். அந்தப் பரப்பு இவ்வுலகமேயன்றி எல்லா வுலகமுஞ் சென்று விரிந்தது என்பது இதன் தத்துவமாம். ‘’இதன் தலத்துள் துன்னிய எதனையும் தூய்மை செய்வது‘’ என்று அதனைப் புகழ்ந்தார். துன்னிய பொருள்கள் தூய்மையற்றவையேயாயினும் அவற்றை யெல்லாம் சுத்தமாக்குவது. யாவையும் – எல்லாவற்றையும். உயிர்கள் தமது கன்மங்களை எல்லாம் தன்வசமாக ஒப்புவித்துத் தனக்கே அர்ப்பணம் செய்தபோது இறைவன் அவற்றைப் புனிதமாக்கி அவ்வுயிர்களை ஈடேற்றுவன் என்பது சாத்திரம். இதனையே திருக்கோயில் தோறும் உள்ள பலிபீடங்கள் உணர்த்துகின்றன. உயிர்கள் இறைவன் பரமாகச் செய்யும் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் தன்மையே அவனது பலிப்பாத்திரம் எனப்படும். ஆகவே உயிர்களின் பாசமலங்களைப் போக்கி அவற்றைத் தூய்மை செய்வதே பலிபீடம்! அப்பலிகளை ஈர்க்கும் பாத்திரமே திருவோடு.

    இதனைப் பொன்னையும் மணியையும் பார்க்கிலும் அதிகமாகப் பாராட்டிக் காக்க வேண்டும்.“ ஓடும் செம்பொனு மொக்கவே நோக்குவார்“களும், “புல்லோடுங் கல்லோடும் பொன்னோடு மணியோடுஞ் சொல்லோடும் வேறுபாடிலாநிலைமை துணிந்திருந்த நல்லோர்“களும் ஆகிய அடியார்கள் விரும்பிக் கையிற் கொள்வது இவ்வோடேயாம்.

    “ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து
    தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து”

    என்ற திருவாசகமும்  காண்க. போற்றுதலை  வழிபடுதல் எனக் கொண்டு பொன்னும் மணியும் கொண்டு இதனைப் பூசிக்க வேண்டுவது என்றுரைப்பாருமுண்டு. இதனைக் கேட்ட நாயனார் இவ்வோட்டினைப் பெற்று “மனையில் ஓர் மருங்கு காப்புறும் எல்லையில் வைத்து“ வந்தனர் (376) என்றதால், போற்றல் என்பதற்குக் காப்பாற்றல் என்றுபொருள் கொள்ளுதலே சிறந்ததாம். துன்னிய  எதனையும் தூய்மை செய்வது; ஆதலின் ஒப்பரியது; ஆதலின் போற்ற வேண்டுவது எனக் காரண காரியமாகத் தொடர்ந்து பொருள் கொள்க. இவையனைத்தையும் தொகுத்து, ‘’இன்ன தன்மையது! இது வாங்குக‘’ என்று திருவோட்டை வழங்கினார். இங்கே வாங்கி வைத்துத் திருப்பித் தருக  என்று முன்பு சொன்னதைச் சுருக்கி.’’வாங்குக’’ என்று சொன்னதன் விரிவு, உன்னால் வாங்க மட்டுமே முடியும், மீண்டும் திருப்பித்தர இயலாது என்ற எதிர்கால நிகழ்ச்சியைப் புலப்படுத்துகிறது!

    “பிச்சைய தேற்றான் பிரமன் றலைதன்னிற்
    பிச்சைய தேற்றான் பிரியா வறஞ் செய்யப்
    பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
    பிச்சைய தேற்றான் பிரமன்பர மாகவே“

    என்ற திருமந்திரச் செய்யுள் திருவோட்டின் சிறப்பை உணர்த்துகிறது. திருவோடு என்ற சொல்லுக்கு  வேறு பொருளும் உண்டு. நம் உடம்பு ஒரு குடம் போன்றது என்று சித்தர்பாடல் கூறுகிறது.

    ‘’நந்தவ  னத்திலோர்  ஆண்டி – அவன்
     நாலாறு  மாதமாய்க்  குயவனை வேண்டி!
    கொண்டுவந்   தானொரு  தோண்டி – அதைக்
    கூத்தாடிக்  கூத்தாடிப்  போட்டுடைத்   தாண்டி!’’

    என்ற இந்தப் பாடல் நாலாறு (அதாவது 4+6 = 10)  மாதத்தில் பிரமனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதாவது உடம்பைப் பெற்றான் மனிதன்! ஆனால் அதைப் பல்வேறு கூத்துக்கள் ஆடி இறுதியில் போட்டு உடைத்தான்! வீணான ஆட்டம் ஆடி. உயிருடன் உள்ள  உடம்பை இழந்தான். இதிலும் ‘ஓடு’ மதிப்பு மிக்கது என்பதைப் புரிந்து கொள்கிறோம்!

    இறைவனே தம் திருக்கரத்தில் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது; பொன்னினும்  பொருளினும் உயர்ந்தது; போற்றப் பட வேண்டியது. இவ்வாறு இறைவன் சிவயோகியாய் வந்து கூறிய பின்னரும் அதனைத் தொலைத்தார்   என்பது,  இப்பாடல் காட்டும் பொருள்.நம் வாழ்க்கையில் பொருள் மிகுந்து விட்டால், தேவையான நற்பொருளை அதாவது வாழ்க்கையைத் திருநீலகண்டர் போல்  தொலைத்து விடுவோம் என்று பாடிய சேக்கிழாரின் பாடல் நயம் போற்றுதற்குரியது!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-125

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-125

    நாங்குநேரி வாசஸ்ரீ

    125. நெஞ்சோடு கிளத்தல்

    குறள் 1241

    நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கு மருந்து

    மனசே! நேசத்தால வளந்த இந்த நோயப் போக்குத மருந்து எதையாச்சும் ரோசன பண்ணி சொல்ல மாட்டியோ?

    குறள் 1242

    காத லவரிலர் ஆகநீ நோவது
    பேதமை வாழியென் நெஞ்சு

    அவுக நம்ம நேசத்த மதிச்சு வராதப்போ மனசே! நீ மட்டும் அவுகள நெனச்சு சங்கடப்படுதது உன் புத்திகெட்டதனம்.

    குறள் 1243

    இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
    பைதல்நோய் செய்தார்கண் இல்

    பிரிஞ்சிபோயி இரக்கமில்லாம இருக்க அவுகளப்பத்தி மனசே! நீ இங்ஙன இருந்துக்கிட்டு வெசனப்படுததால பிரயோசனம் ஒண்ணுமில்ல.

    குறள் 1244

    கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
    தின்னும் அவர்க்காணல் உற்று

    மனசே! நீ அவுகளக் காணப் போவுதப்போ கண்ணையும் கூட்டிக்கிட்டுப்போ. ஏம்னா அவுகளக் காணிக்கச்சொல்லி என்னயப் புடுங்கித் தின்னுதுவ.

    குறள் 1245

    செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
    உற்றால் உறாஅ தவர்

    மனசே! நான் ஆசப்பட்டு இருந்தாலும் என்னய நேசிக்காத அவுகள என்னய வெறுக்காகனு நெனச்சி கைவுட ஏலுமா?

    குறள் 1246

    கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
    பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு

    கோவப்படுத சமயம் கூடிஇருந்து சமாதானம் செய்யுத காதலரக் கண்டா ஒருதடவைக்கூட பிணங்காம இருக்க நீ இப்பம் அவுக மேல காட்டுத கோவம் பொய்தானே?

    குறள் 1247

    காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
    யானோ பொறேனிவ் விரண்டு

    நல்ல மனசே! ஒண்ணு நேசிக்கத உட்டுப்போடு. இல்லன்னா சொல்லக் கூசுத வெக்கத்த உட்டுப்போடு. ரெண்டையும் ஒரேசமயத்துல சமாளிக்க என்னால ஏலல.

    குறள் 1248

    பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
    பின்செல்வாய் பேதையென் நெஞ்சு

    இரக்கமில்லாம உட்டுப்போட்டு போயிட்டகளேனு நெனைக்க நேரம் அவுக பின்னாலயேயும் போவுத எம்மனசு கூறுகெட்டது.

    குறள் 1249

    உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
    யாருழைச் சேறியென் நெஞ்சு

    மனசே! நேசிக்கவரு உனக்குள்ளார இருக்கையில வெளியில யார்கிட்டத் தேடிக்கிட்டு சுத்திக்கிட்டுக் கெடக்க.

    குறள் 1250

    துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
    இன்னும் இழத்தும் கவின்

    சேராம பிரிஞ்சு போன நேசிக்கவர மனசுல வச்சிருக்கதால மேல மேல மேனி நொந்து மெலிஞ்சு அழகு கொறஞ்சுக்கிட்டே வருது. ..

    Share
  • ஆரோக்கியவதியான ஹெய்சல்

    ஆரோக்கியவதியான ஹெய்சல்

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

     ஆரோக்கியவதியான ஹெய்சல்

    “மேடம் வெளில போயிருக்காங்க.”

    வாட்ச்மேன் கூறினார். அவருடைய குரலிலும் பார்வையிலும் ஒரு அலட்சியம் தெரிந்தது. ஃப்ளாட்டில் குடியிருப்பவர்களை குறித்தோ பார்க்க வருபவர்களை குறித்தோ யோசிப்பது தேவையில்லாதது தன்னுடைய காவல் வேலையை தவிர நான் மற்ற எதையும் எண்ணத் தேவையில்லை என்ற உணர்வில் பாதி நரைத்த மீசை, மீசைக்கு கீழ் உதடுகளில் புகையிலை கரையுடன் நின்றான்.

    என்ன? ஆனா நான் போன் செய்தபோது சாவிய இங்கே கொடுக்கிறேன் என்று சொன்னாங்களே என்று தயக்கத்துடன் கூறினான்.

    ”ஆனா இங்க தரலையே ……..” வாட்ச்மேன் உதட்டைப்  பிதுக்கினார்.

    உள்ளிருந்து பொங்கி வருகின்ற கெட்ட வார்த்தைகள் வெளியில் வராமல் அடக்க மிகவும் சிரமப்பட்டான்.

    மெசேஜ் ஏதாவது!………..

    நோ.

    ஜேம்ஸ் திரும்பி நடந்தான். அதற்குள் ஹெய்சல் தனது இருசக்கர வாகனத்தில் வந்தாள்.

    சாரி சாரி சாவிய எப்பவும் போல பேக்ல போட்டுட்டு ஆபீஸ்க்கு போயிட்டேன் அதுக்கப்புறம் தான் ஞாபகம் வந்துச்சு ஸ்கூட்டியிலிருந்து இறங்குவதற்கு முன் கூறினாள்.

    ஜேம்ஸ் அவளை பின்தொடர்ந்தான். பிளாட் நான்காவது மாடியில். லிஃப்டில் போகும்போது ஜேம்ஸிடம் அவனுடைய புதிய திருமண வாழ்க்கை அனுபவத்தை பற்றி கேட்டதற்கு அவன் மௌனமாக தலையை மட்டும் ஆட்டினான். லிப்ட் மிகவும் மெதுவாக செல்வதாக அவனுக்குத் தோன்றியது. இதற்கு முன்பு இந்த லிப்ட் ஒரு முத்தத்தை முடிப்பதற்கு கூட இடம் கொடுக்காது இருந்தது. அந்த உணர்வில் ஜேம்ஸ் ஹெய்சலின் முகத்தை பார்த்தான். அவளும் ஏதோ நினைவில் இருந்தாள்.

    லிஃப்ப்ட் ல இருந்து இறங்கி ஹெய்சல் கையில் இருந்த பேக்கில் இருந்து சாவியை வெளியில் எடுத்தாள். கதவை திறந்த பிறகு முதலில் அவனை உள்ளே செல்ல அனுமதித்தாள்.

    ஜேம்ஸ் கடந்து சென்றது ஏற்கனவே பழக்கமான காட்சிகளுக்குள்தான். .அழுக்கு படிந்த ஆடைகளும், வீசி எறியப்பட்ட சிகரெட் துண்டுகளும், கரிந்த தீப்பெட்டிக்குச்சிகளும்,  சமீபத்திய இதழ்களும், வர்ணங்கள் முழுமை அடையாத பெயிண்டுங்குகளும்   அடங்கிய ஒரு கொளேஷ் அ ஆக வரவேற்பறை. ஒரு சுவரில் சணல் நார்களால் ஆன அலங்காரப் பொருட்களும், ஹிட்லர் வேடமணிந்த சாப்ளினும் அதுக்குக் கீழே டெரகோட்டா சிலைகளும்.

    லைட்டரின் சத்தம் கேட்டு ஜேம்ஸ் திரும்பிப் பார்த்தபோது ஹெய்சல் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டிருந்தாள்.  ஃப்ளாட்டுகளுக்கிடயில்  ஒரு குழந்தை சிவப்பு நிற மூன்று சக்கர சைக்கிள் ஓட்டி நகர்ந்து சென்றது. ஹெய்சல் கதவைச் சாத்தினாள். ஜெயிம்ஸ் புத்தகச் சல்ஃபிற்கு அருகில் சென்றான்.

    பல நாட்டினுடையவும் பல காலத்தினுடையவும் எழுத்தாளர்கள் ஒதுங்கியிருந்து ஜேம்ஸை வரவேற்றார்கள்.  அவர்களைப் பற்றி எல்லாம் இதே அறையில் மூன்றில் சேயரிலும் கீழுமாக உட்கார்ந்து இருவரும் நிறைய விமர்சித்திருக்கிறார்கள். அதற்கிடையில் பிராண்டி கலந்த காபி எவ்வளவு கொடுத்திருப்போம் என்பதற்கும் எவ்வளவு சிகரெட்டுகளை ஊதித் தள்ளினோம் என்பதற்கும் அளவில்லை. ’ஒரு சந்தோஷமான மரணம்’ என்ற புத்தகத்தின் மேல் அட்டையில் அல்பேர்கம்யூ சிகரெட் ஊதுவது அவர்களுக்கு எப்போதும் தூண்டுதலாக இருந்தது.

    ”உனக்கு சிகரெட் வேண்டுமா?” என்று ஹெய்சல் கேட்டாள் ”நிறுத்திட்டே ஜேம்ஸ் கூறினான்.

    ”ஓஹோ……….. ஹெய்சல் அற்புதம் கலந்த குரலில் சத்தமாக கூறினாள். அவள் ஊதின புகை வளையங்களுக்கு அப்புறம் நின்றுகொண்டு ஜேம்ஸ் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தான்.

    ”என்னோடதுங்கறதுக்காக எடுக்காமல் இருக்க வேண்டாம்…. வேணும்னா……….” ஹெய்சல் கூறினாள்.

    அந்த நேரத்தில் ஜேம்ஸின் கையிலிருந்து சித்தாந்த புத்தகம் உண்மையில் ஹெய்சல் வாங்கியது. முதல் தாளின் மேல் பாகத்தில் அவளின் கையொப்பம் இருந்தது. வாங்கின தேதியும். ஜேம்ஸ் தான் வாங்குகிற புத்தகங்களில் கையொப்பத்திற்கு பதிலாக தெளிவாக தனது பெயரை எழுதுவது தான் வழக்கம் அதுக்கு கீழே எங்கிருந்து வாங்கினோம் என்ற இடப்பெயரையும் எழுதுவான். அவனின் நினைவுகள் ஒவ்வொரு இடத்தோடு சம்பந்தப்பட்டவை.  ஹெய்சலினுடையது காலத்தோடு.

    புத்தகங்களைக் கண்டெடுத்த உடன் ஜேம்ஸின் வேலை பாதி முடிந்தது. அதையும் எடுத்துக் கொண்டு தனது ஆடைகளை தேடுவதற்காக அவன் படுக்கை அறைக்குப் போனான். தானும் ஹெய்சலும் ஒருவரோடு ஒருவர் இணைந்த சேர்க்கையினுடைய மணமும் சூடும் அதற்குள் இருக்கிறது என்று அவனுக்த் தோன்றியது. சுவற்றில் பெரிய கண்ணாடியிலிருந்து பிரதிபிம்பம் அவனை உற்று நோக்கியது.

    இரண்டு கப் காபியும். ஒரு ஷாப்பிங் பேகுமாக ஹெய்சல் வந்தது கண்ணாடியில் தெரிந்தது. ஷாப்பிங் பேகையும் ஒரு கப் காப்பியையும் அவள் ஜேம்ஸிற்கு நேராக நீட்டினாள். இரண்டையும் அவள் நிராகரிக்கவில்லை. காப்பியில் எப்போதும் போல அவள் கொஞ்சம் பிராண்டி கலந்திருந்தாள். பிராண்டி கலந்த காப்பி அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

    ”காபி இனியும் கொஞ்சம்  வேணுமா?” என்று ஹெய்சல் கேட்டாள்.

    “போதும்!” ஜேம்ஸ் கப்பை திருப்பிக் கொடுத்துவிட்டு ஷாப்பிங் பேகில் இருந்து துணிகள் எடுத்துவைத்துக் கொண்டிருந்தான். ஹெய்சல் காலியான கப்புகளுடன் வெளியில் போனாள்.

    தன்னுடைய சில ஆடைகள் ஹெய்சல் தேர்ந்தெடுத்தவை என்பதை அவன் நினைவு கூர்ந்தான். கருமையான நிறஙகளில் குறுக்கும் நெடுக்கும் வரைபோட்ட சட்டைகளில் அவளுக்கு விருப்பம் அதிகம்.  பாத்திக் பிரிண்ட் இட்டவையிலும்.

    ஜேம்ஸ் ஒரு சட்டையை எடுத்து விரித்துப் பார்த்தான். அதன் நிறம் மங்கி இருந்தது. ஒரு வருடம் முன்பு சென்னையில் சென்றபோது பாண்டிபஜாரில் வாங்கியது. அப்போது ஹெய்சலும் உடன் இருந்தாள். அதை நினைக்கவே அதன் தொடர்ச்சியாக ஒரு மாலை நேர மெரினா பீச்சும், இரண்டு செவலைக்குதிரைகளும் ஜேம்ஸின் மனதில் தெளிந்தது. ஏராளமான பட்டங்கள் பறக்கின்ற வானத்தின் கீழ் அவனையும் ஹெய்சலையும் சுமந்து குதிரைகள் ஓடிக் கொண்டிருந்தன. பீச் முழுவதும் சிரிப்பு முழங்கியது.

    நீ போன பின்னே நான் கொஞ்சம் குண்டாயிட்ட்னோன்னு ஒரு சந்தேகம். கையில் சிகரெட்டுடன் படுக்கை அறையின் கதவருகே நின்று கொண்டு சொன்னாள்.

    ஜேம்ஸிற்கு  அவளது உடலை கவனிக்க வேண்டியதாயிற்று. அவன் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கவே அவள் அவனை நோக்கி மெதுவாக நடந்தாள்.  நடப்பதற்கிடையில் சிகரெட்டை ஒருமுறை இழுத்து ஊதிவிட்டு மீதி பாகத்தை எங்கே என்று பார்க்காமல் வீசிவிட்டு மேலாடையின் பட்டன்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு தன்னுடைய சலனத்தை நாடகீயமாக்கினாள். ஜேம்ஸ் சலனமற்றுப்  பார்த்துக்கொண்டிருந்தான். ஹெய்சல் அவனுக்கு மிகவும் அருகில் வந்தாள் அவளுடைய மூச்சுக்காற்று தன் முகத்தை சுட்டுவிடும் என்று பயந்தான். அவன் ஏதோ கூற வாயைத் திறப்பதற்குள் அவனுடைய உதடுகளை தனது சுண்டுவிரலால் மூடினாள். ஷாப்பிங் பேக் தனது பிடியிலிருந்து நழுவி தரையில் விழுவதை அவனால் தடுக்க முடியவில்லை. பிறகு இரு கைகளால் ஆவேசத்தோடு அவன் ஹெய்சலை உடலோடு சேர்த்து அணைத்தான்.

    அப்போது அவள் சொன்னாள். ”எனக்கு இதுதான் தெரிய வேண்டி இருந்தது. இனி உனக்கு போகலாம். நான் சாவியை வாட்ச்மேன் கிட்ட குடுக்காமல் விட்டது இதற்காக மட்டும்தான்.”

    ஜேம்ஸிற்கு ஒரு புயல் காற்றில் சிக்கியது போல் இருந்தது. ஹெய்சல்….. ஹெய்சல்……. என்று நிர்கதியாக அழைக்கிற அவனை தன் உடலிலிருந்தும், படுக்கை அறையிலிருந்தும் வெளியில் தள்ளினாள்.

    நான்காவது மாடியில் குடியிருப்புகளுக்கிடையில் வராந்தாவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென ஏதோ விழுவதைப்போல  ஒருவன் தன் முன்னால் விழுவதைக்கண்டு பயந்து விட்டான்.  அடுத்த விநாடி ஒரு ஷாப்பிங் பேகும் அவன் முன்னால் வந்து விழுந்தது. பேகிலிருந்து புத்தகங்களும் ஆடைகளும் சிதறின.

    ஃப்ளாட்டின்  கதவை சத்தமாக இழுத்து அடைத்து விட்டு அவள் புறம் திரும்பி நின்றாள். பிறகு இந்த உலகிலேயே மிகவும் ஆரோக்கியவதியானப்  பெண்  தானே தான் என்ற கர்வத்துடன் அவள் சத்தமாக சிரிக்கத் தொடங்கினாள்.


    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-15

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-15

    தி. இரா. மீனா      

    காவுதி மாச்சய்யா

    கல்யாண் நகரத்தில் சரணர்களோடு சேர்ந்து சிவ வழிபாட்டில் காலம் கழித்து வந்தவர். ”கல்யாணத திரிபுராந்தக லிங்கதல்லி காவுதி மாச்சய்யா ஹேளிது தடவண்ணிரண்ணா” என்பது இவரது முத்திரையாகும்.

    “தன்னுடல் தனக்குச் சுமையானானபின்
    தான் சுமக்கப் போவதென்ன?
    கிடைத்த அறிவு மறைந்த பின்னர்
    தான் நினைப்பதெதனை?
    இதனால் திரிபுராந்தக இலிங்கத்தில்
    காவுதி மாச்சய்யன் சொன்னது உண்மையென்பீர் “

    “சரணர் பொருள் சேர்த்து உடலிருக்கும் போதே
    குருலிங்கம் ஜங்கமத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும்
    இதுவே நல்ல பக்திக்கு அடையாளம்
    தனக்குப் பின்பான செல்வம் வாரிசுகளுக்கெனில்
    அது ஒழுக்கத்திற்குக் கேடு.
    இதையறிந்து கல்யாணத திரிபுராந்தக இலிங்கத்தில்
    காவுதி மாச்சய்யன் சொன்னதைக் கேட்டு உண்மையென்பீர்”

    குப்த மஞ்சண்ணா 

    வைணவ சமயத்தைச் சேர்ந்த இவர் பசவேசரின் கருத்துக்களால் கவரப்பட்டு சிவ சாரணராக மாறியவர்.முதலில் இரகசியமாக சிவனை வழிபட்டு பின்பு அனுபவ மண்டபத்தில் எல்லோருடனும் இணைந்தவர். கல்யாணில் வாழ்ந்து சிவபக்தியை முழுவதுமாக வெளிப்படுத்தியவர். ”நாராயணப் பிரிய ராமநாதா” என்பது இவரது முத்திரையாகும். வைணவத்திலிருந்து மாறியவரென்பதால் இவர் வசனங்களில் சில கருத்துக்கள் அது தொடர்புடையதாக வெளிப் படுகின்றன.உலக அனுபவம் சார்ந்ததாக வசனங்கள் அமைகின்றன.

    “ஆன்மபலத்தால் போராடினேன் என்பவனுக்கு
    உண்மைத் தத்துவத்தின் பொருள் புரியுமா?
    வேதம் சாத்திரம் ஆகமமறிந்தவனுக்கு
    விவாதம் செய்யும் நிலயெதற்கு?
    மலரும் மணமும் போல
    தீயும் காற்றும் போல
    பாலும் நீரும் போல
    நாராயணப் பிரியன் இராமநாதனுள் இரண்டறக் கலந்தவன்
    தன்னுளுள்ள மெய்ஞ்ஞானத்தை வெளிப்படுத்த வேண்டும் “

     “புகழுக்கு உலகைப் பயன்படுத்துவது பக்தியா?
    நிந்தனைகளுக்கு முனிவர்கள் அஞ்சுவாரோ?
    புகழுக்காகச் செய்பவர்கள் பக்தர்களா?
    இச்சைக்குப்  பேசுவது பற்றற்றவனாக்குமா?
    இவற்றின் நெருக்கம்  உங்களுக்கேன்?
    நாராயணப்பிரியன் இராமநாதன் உங்களைச் சிறிதும் விரும்பான்”

    “பூவில் மணம் ,கனியில் சுவை
    பெண்ணின் ஆசையென்பன
    பருவம் சார்ந்தன்றி விருப்பம் சார்ந்ததல்ல.
    தன்னையறிவதற்கு முன்பு இலிங்க வசப்பட வேண்டும்
    பொன் பொம்மையை உருக்கிய பின்பு
    வடிவத்தை மீண்டும் பெறமுடியுமா?
    நாராயணப் பிரியனே இராமநாதனே “

    குருபுரத மல்லையா

    சிவபக்தியின் மேன்மை வசனங்களில் வெளி்ப்படுகின்றன. ”குருபுரத மல்லையா “என்பது இவரது முத்திரையாகும்.

     “நேரத்திற்கொரு மாதிரி சிந்திக்கும் மனதைக் கண்டு,
    தினமும் ஒரு வகையாகும்  உடல் கண்டு பயமெழுகிறது.
    நொடியில் விதவிதமாக மனம் நினைக்கிறது.
    உன்னை நினைக்க விடாமல் மனம் பகையாகிறது
    குருவே குருபுரத மல்லையனே”

    குருசித்ததேவா

    “சங்கண பசவேஸ்வரா“ என்பது இவரது முத்திரையாகும். தத்துவ விளக்கமாகவே இவர் வசனங்கள் அமைகின்றன.

    “உடலில் இலிங்கமணிந்து சரணரெனச் சொல்லி
    சிவவணக்கத்தின் பாதை தவறி
    உலகோர் வணங்கும் தெய்வங்கள் முன் இலிங்கத்தோடு
    விழுந்து சரண் வேண்டுகிறவனின் பிறவி நீக்கி
    நரகம் தப்பாமல் தந்து இழிபிறவி தந்து பிரளயமும்
    தருவான் காண் சங்கண பசவேஸ்வரன்”

    குகேஸ்வரய்யா 

    “குகேஸ்வர பிரிய நிராளலிங்க“ இவரது முத்திரையாகும்.

    “சிவசிவ என்று வெறுமனே உச்சரித்தால் பிறவியொழியும்
    என்னும் அறிவற்றவரின் பேச்சைக் கேட்கக் கூடாது
    இருளான வீட்டில் வெளிச்சத்தை நினைத்தால் அது வருமா?
    காமக்காய்ச்சலின் போது அரம்பையை நினைப்பின் நீங்குமா?
    இத்தகைய மனித ஆடுகளின் பேச்சு
    நகைப்பையே தரும் நம் குகையீசப்பிரிய நிராளலிங்கனுக்கு”

    கொக்கவ்வா

    சாம்பிராணி போடுவது இவரது தொழிலாகும். அதனால் ”சாம்பிராணி போடும் கொக்கவ்வா” என்ற பெயரும் இவருக்குண்டு. சிவன் மீது கொண்ட பக்தியால் திருமண வாழ்வையொதுக்கி நோன்பை ஏற்றுகல்யாண் நகருக்கு வந்தவர். “நாஸ்தி நாதா” என்பது இவரது முத்திரையாகும். இலிங்கம்—அங்கம் சமநிலை, ஆண் பெண் சமத்துவம் ஆகியவை வசனங்களில் இடம் பெறுகின்றன. காயகம் சார்ந்த சொற்கள் வெளிப்படுகின்றன.

    “மோகம் கொண்ட ஆண் பெண் கை பற்றினால்
    அது அவனுடைமையென நினைக்க வேண்டும்
    பெண் மோகம் கொண்டு ஆணின் கைபற்றினால்
    அது என்னவென்றறிய வேண்டும்
    இந்த இரண்டின் வேற்றுமையும் நீக்கி
    மகிழ்ந்தால் நாஸ்திநாதன் நிறைவுடையவானாவான்”

    “முலை தோன்றினால் பெண்ணென்பர்
    மீசை முளைத்தால் ஆணென்பர்
    இவ்விரண்டின் அறிவு
    ஆணோ பெண்ணோ நாஸ்திநாதனே”

    கோணி மாரய்யா

    கோணியை அணிந்து பசு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டவர். ”கேட்டேஸ்வரலிங்கா “இவரது முத்திரையாகும். காயகம் சார்ந்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

    “வாள் குத்திய பின்பு
    வாள்முனை குத்தியது எனச் சொல்வது மூடரின் இயல்பு
    அறிவை உள்வாங்கும் மனதுக்கு மறதி என்றேனுமுண்டா?
    உறுதி ஏற்பட்ட பின்னர்
    அதன் செயல்பாடு மறைவதில்லை
    சரணமெனச் சொல்லி பிச்சையெடுத்து பிறருக்குக்  கொடுக்கும்
    சரணருக்கு குழப்பமில்லை ; துன்பமில்லை
    கேட்டேஸ்வர இலிங்கத்தின் அடியவரானதால்”

                                        [தொடரும்]

    Share