சாமிநாதன் ராம்பிரகாஷ்

ஒருமுறை பள்ளி ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர். அந்தக் குழுவை வழிநடத்திச் சென்றவர், சுற்றுலா வந்த ஆசிரியர்களை நன்றாகக் கவனித்துக்கொண்டு பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்.

சிலோனில் உள்ள கந்தர் கதிர்காமர் கோவில் தரிசனம் முடித்துவிட்டு, அனைவரையும் ஓய்வெடுத்து உறங்க வைத்துவிட்டு, அவர் வெளியில் ஒரு திண்ணையில் உட்கார்ந்துகொண்டு “மாங்கு , மாங்கு“ என எழுதிக்கொண்டிருந்தார் .

அதைக் கவனித்த ஆசிரியை ஒருவர், என்ன சார் அப்படி என்ன எழுதறீங்க? எனக் கேட்க, அவரும் அவர் எழுதிய தாளைக் கொடுத்தார்.

அந்த ஆசிரியை. அவர் எழுதிய நாடகத்தைப் படித்துவிட்டு, “நீங்க இன்னும் சில நாட்களுக்குப் பின் எங்கயோ போகப் போறீங்க. ரொம்ப அருமையா, ஆழமா கதாபாத்திரங்களைச் செதுக்கி இருக்கீங்க“ என்று அவரை மனதாரப் பாராட்டியுள்ளார்.

அதற்கு அவர் “நீங்க சொல்ற மாதிரி மட்டும் நடந்துச்சுன்னா, என்னோட கதையின் நாயகிகளுக்கு எல்லாம் உங்கள் பெயரையே வைக்கிறேன்“ என்றார்.

அந்த ஆசிரியை கூறியபடியே அவரும் மேடை நாடகங்கள் போட்டு வாகை சூடி, பிறகு வசனகர்த்தாவாக மாறி, கடின உழைப்பின் மூலம் இயக்குநர் ஆனார். இன்றளவும் அவரின் படங்கள் நடுத்தரக் குடும்பங்களின் நாதம்.

அவரின் படங்கள் பெரும்பாலும் கூட்டுக் குடும்பம், உறவுகளின் நுட்பம், பந்தம், பாசம், பொது ஜனங்களின் வாழ்வியல் நெருக்கடிகள் ஆகியவற்றைப் பேசின.

மிகவும் எதார்த்தப் படைப்புகள் அவை!

அவர் பெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன். சுருக்கமாகச் சொன்னால் “விசு“. அவர் இயக்கிய “கண்மணி பூங்கா“ , “வரவு நல்ல உறவு“, “டௌரி கல்யாணம்“, “மணல் கயிறு“ , “வேடிக்கை என் வாடிக்கை“, “பெண்மணி அவள் கண்மணி“ , “சம்சாரம் அது மின்சாரம்“ போன்ற படங்கள் மிகப் பிரபலம்.

அவர் பத்து வருடங்களுக்கு மேலாகத் தொகுத்து வழங்கிய “அரட்டை அரங்கம்“ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் மிகப் பிரபலம். அவர் அந்த ஆசிரியருக்குக் கொடுத்த வாக்கின் படியே அவர் இயக்கிய அனைத்துப் படங்களின் நாயகி கதாபாத்திரத்திரங்களின் பெயரை வைத்ததோடு நில்லாமல் “சுந்தரி“ என்கிற அவரது மனைவியின் பெயரைக்கூட (அவரின் சம்மதத்துடன்) மாற்றி அழைத்தார். முதன்முதலில் அவருக்கு ஊக்கமளித்த, பெருமதிப்பிற்குரிய அந்த ஆசிரியரின் பெயர் தான் “உமா“ .

பின்குறிப்பு: என்னை ஈன்றேடுத்த தாயாரின் பெயரும், தாய்க்கு நிகரான பாசத்துடன் இருக்கும் என் அக்காவின் பெயரும் கூட “உமா“ தான்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “யார் அந்த உமா….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.