நெல்லைத் தமிழில் திருக்குறள்-127
நாங்குநேரி வாசஸ்ரீ
127. அவர் வயின் விதும்பல்
குறள் 1261
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்
அவுக வருத வழிய எதிர்பாத்து என் கண்ணுங்க ஒளி மங்கிப் போச்சுது. பிரிஞ்சுபோன நாட்கள சுவத்துல குறிச்சுவச்சு எண்ணினதுல விரல்கள் தேஞ்சுபோச்சுது.
குறள் 1262
இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து
நேசம் வச்சிருக்க அவுகள நான் இன்னிக்கு மறந்தேம்னா என் அழகு கெட்டு தோள் மேல பூட்டியிருக்க வளவி கழண்டு விழுதது நிச்சயம்.
குறள் 1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்
உற்சாகத்தயே தொணையா வச்சிக்கிட்டு செயிக்கதுக்காவ என்னைய விட்டுட்டுப் போன என் காதலரு திரும்பி வருவாகங்குத நெனப்புலதான் நான் இன்னமும் உசிரோட இருக்கேன்.
குறள் 1264
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு
நேசம் வச்சி கூடி இருந்து பொறவு உட்டுப்போட்டு போன என் காதலரு எப்பம் வருவாகனு எதிர்பாத்து எம் மனசு மரத்தோட உச்சாணிக் கொம்புலநின்னு பாக்குது.
குறள் 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு
கண்ணார எம் புருசன காணோணும். கண்ட பொறவுதான் என் மெல்லிசான தோள்ல படந்து கெடக்க பசலை நீங்கும்.
குறள் 1266
வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட
என்னயப் பிரிஞ்சுபோன காதலன் எப்பமும் வந்துதானே ஆவணும். அப்பம் என் சங்கடமெல்லாம் அத்துப் போவுதமாரி சந்தோசத்த அனுவிப்பேன்.
குறள் 1267
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்
என் கண்ணு கணக்கா இருக்க காதலரு வந்த பொறவு பிரிஞ்சதுக்காவ கொஞ்சம் சண்டபோடுவேனா? கட்டித் தழுவிக்கிடுவேனா? அல்லது ரெண்டையும் சேத்து செஞ்சிபோடுவேனா?
குறள் 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து
ராசா செய்யுத காரியத்துல செயிக்கட்டும். அவுக செயிச்சாகன்னா எனக்கு எம் பொஞ்சாதியோட சாயங்காலம் சந்தோசமான விருந்துதான்.
குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு
தூர தொலைவு போயிருக்குத காதலர் திரும்ப வார நாளை நெனச்சி சங்கடப்படுத பெண்பிள்ளைங்களுக்கு ஒரு நாள் கழிக்கது ஏழுநாளக் கழிச்சது கணக்கா நீளமாத் தோணும்.
குறள் 1270
பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்
பிரிஞ்ச சங்கடத்தப்பொறுத்துக்கிட முடியாம மனசு நொறுங்கிப் போச்சுதுன்னா திரும்ப ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிட்டாதான் என்ன? கூடிச் சேந்தாதான் என்ன? அதனால என்ன பிரயோசனம்?