Blog

  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 12

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 12

    அவ்வைமகள்

    (பேராகிப் பேருக்கோர் பொருத்தமாகி)

    சமயம் எனும் உயர் அறிவியலை விவாதித்த பின், சமயத்திலும், அறிவியலிலும் புரட்சிகள் முளைப்பதன் தன்மையைக் காணுதல் பொருத்தமானதாகும்.

    சமுதாயத்தில் புரட்சிகள் உருவாகுவதற்கு, பல்வேறு காரணங்கள் உண்டு என்பது அறிஞர்களின் பொதுக்கூற்று [1]. இத்தகு காரணங்களை, பொதுவாக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் என்று இருவகையாகக்  கூறு படுத்தி, அவர்கள் அலசுவது வழக்கம். எனினும், பொருளாதார, அரசியல் காரணங்களைக் காட்டிலும், ஒரு புரட்சிக்கு, சமூகத் தீர்மானிகள்  (Social Determinants) தாம் மிகுந்த வலிமையான காரணங்களாக இருக்கின்றன என்பது ஒரு சார் அறிஞர்களின் கோட்பாடு (Theory).  அதே நேரத்தில், அறிஞர்களில் மற்றொரு சாரார் முன்வைப்பது, யாதெனில். பொருளாதார, அரசியல், மற்றும் சமூகத் தீர்மானிகள் ஆகிய இவை மூன்றையும் தாண்டி, தேசத்திற்கு வெளியே இருந்து வரும் புறக்காரணிகள் (External Factors)  தாம் ஒரு புரட்சியை உருவாக்குகின்றன என்பதே.

    இவ்வாறு வகுத்தும் பகுத்தும் பற்பல அறிஞர்கள் காட்டியுள்ள புரட்சிக்கான பல்வேறு காரணங்களை அலசி ஆராய்ந்துவிட்டு, அவற்றைச் சற்றே நெறிப்படுத்தி, புரட்சியின் முதன்மைக் காரணங்கள் இவைதாம் என  அறிஞர்கள் கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறார்கள்:

    • வீரியம் குறைந்த பொருளாதார வளர்ச்சி (Mid-level Economic Development)
    • சுயமான குடியாட்சி அல்லாமல் வாழுதல் (Nondemocratic Regime)
    • அரசின் திறனற்ற தன்மை (State Ineffectiveness)

    தேசத்திற்கு அப்பாலிருந்து வருகிற புறக்காரணிகள் பற்றி அறிஞர்கள் பேசுவது யாதெனில், அவை புரட்சிக்கு முதன்மைக் காரணிகளாக அமைவதில்லை என்றாலும் புரட்சியைத் தூண்டுவதில் வெகுவலிமையான துருப்பாய் – பொறியாய் விளங்குகின்றன என்பதே.

    சமூகப் புரட்சிகள் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள் இவ்வாறு வழங்கியிருக்கிற சாராம்சத்தை நம் மொழியில், எளிமையாக, நமக்கு நாமே ஒரு விளக்கமாக அளிப்போமேயானால்,

    தாம் வாழும் தேசத்துக்கு அப்பாலிருந்து வரும் புறக்காரணிகள், மனித சிந்தனையைத் தூண்டிவிட, அத்தூண்டுதல் தரும் உத்வேகத்தில், புதியதோர் வெளிச்சம் பிறக்க, அவ்வெளிச்சத்தில், தன் சமூகத்தை பீடித்துள்ள வீரியம் குறைந்த பொருளாதார வளர்ச்சியும், தம் மக்கள், சுயமான குடியாட்சி அல்லாமல் வாழும் அவதியும், தம்மை ஆளுகின்றவனின் ஆட்சியின் திறனற்ற போக்கும், ஒருவருக்கு அறிவுப் பூர்வமாயும், உணர்வுப் பூர்வமாயும் புலப்படும்போது, அங்கே  புரட்சி உருவாகிறது.

    என்று கொள்ளலாம்.

    வள்ளலாரை, ஒரு புரட்சியாளர் என்று நம்மில் அனைவரும் கருதுகிற வேளையில், வள்ளலார், புரட்சியை வித்திடுவதற்கு ஏதுவாக மேற்கண்ட சூழல்கள் ஏதேனும் இருந்தனவா என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

    இதுபற்றி சிந்திப்போம்:

    வள்ளலார் வாழ்ந்த காலம்: அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874

    நமது வரலாற்றை ஒரு பின் நோக்குப் பார்வையாகப் பார்க்கிறபோது, வள்ளளார் பிறந்த ஆண்டே ஒரு பிரிட்டிஷ் இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு என அறிகிறோம் [2]. அதையடுத்து, அவர் ஐம்பத்தியொரு ஆண்டுகள் வாழ்ந்த முழு வாழ்க்கையின்  காலமானது, இந்தியாவின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் என்பதும் புலனாகிறது [3]. அக்ககாலக் கட்டத்தின் நிகழ்வுகளை (குறிப்பாக அவர் சென்னையை விட்டு வெளியேறிய காலகட்டம் – 1858 – வரை) இங்கே கீழே பட்டியலிடுகிறேன்:

    • அனுபவமின்மைக்கும் தற்குறித்தன்மைக்கும் பெயர்போன பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக, ஆம்ஹெர்ஸ்ட், 1823 ஆகஸ்ட் 1 அன்று பதவியேற்று, முதல் பர்மியப்போர் எனப்படும் முதலாவது பர்மாச் சண்டைக்கு வித்திடுகிறார்.
    • 1824 நவம்பர் 1, 2 தேதிகளில் பாரக்பூர் கிளர்ச்சி வெடிக்கிறது.

    முதலாம் பர்மாச் சண்டையில் சென்று போரிடுமாறு இந்திய சிப்பாய்கள் பணிக்கப்பட்டு, போர்க்கப்பல்களில் ஏறிப்போய் பர்மா சென்று போர்புரிய உத்தரவிடப்படுகிறது. “இது அதர்மம்” என்று இந்தியச் சிப்பாய்கள் மறுக்க, அவர்களது மறுப்பினை  ஏற்க மறுத்த ப்ரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள், இந்தியச் சிப்பாய்கள், கட்டாயம் பர்மா சென்று போர் புரிந்துதான் ஆக வேண்டும் என்று கட்டளையிடுகிறது.  இதன் விளைவாக எழுந்தது தான், இந்திய சிப்பாய்களின் பாரக்பூர் கிளர்ச்சி. பிரிட்டிஷ் இராணுவம், கிளர்ச்சியாளர்கள்  மீது பீரங்கி தாக்குதல் நிகழ்த்த, அதில் 180 இந்தியச் சிப்பாய்கள் சுட்டுப்பொசுக்கப்பட்டார்கள். அடுத்து, 12 பேர் தூக்கிலடப்பட்டனர். சிப்பாய்த் தலைமையில் இருத்த அனைத்து இந்தியர்களையும் நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக ஆங்கிலேயர்களே நியமிக்கப்படுகிறார்கள்.

    • பிரிட்டிஷ் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் நடந்த சண்டை முதல் பர்மியப்போர். வீரர்கள், போர்க்கருவிகள் என மனித இழப்பும் பொருள் இழப்புமாக மிகப்பெரிய அளவு நட்டத்தை இரு நாடுகளுமே சந்தித்தன. முதல் பர்மியப் போரின் இறுதியிலே மிகபெரிய பொருளாதார வீழ்ச்சியை பிரிட்டிஷ் இந்தியா சந்தித்து அதனால் அக்காலக் கட்டத்தில், பஞ்சம், பட்டினி, நோய்கள், என்  இந்திய மக்கள் அவதிப்பட்டதை நாம் அறிகிறோம்.
    • பணம் சம்பாதிப்பதுதான் எம் கொள்கை, என்கிறதான் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை, ஆம்ஹெர்ஸ்ட் ஏற்படுத்திய மனித நட்டம், பொருள் நட்டம், போராயுத நட்டம், பண நட்டம் என எல்லா நட்டத்தையும்  கூட்டிப்பார்த்துவிட்டு, “தலைமைப் பொறுப்புக்கு லாயக்கற்றவன்” என்று முடிவு கட்டி, அவரை, 1828 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 13,ஆம் நாள் பதவியிலிருந்து விலக்க, அவர், பிரிட்டனுக்குத் திரும்பிபோக ஆணையிடப்பட்டு வெளியேற்றப்படுகிறார்.
    • 1835 ல், மெக்காலேவின் பரிந்துரையின் பேரில் ஆங்கிலக் கல்விச் சட்டம் அமுலுக்கு வருகிறது. இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மேற்கத்தியப் பாடங்களை, இந்தியர்கள் ஆங்கிலத்தின் மூலம் படிக்க ஏற்பாடாகிறது. இந்தியமொழிகளின் வாயிலாகக் கல்வி பயிலுவதற்கு மானியங்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன. இந்தியப்பாரம்பரிய முறையில், நடந்து வந்த கல்விக்கூடங்கள் (ஒரு சிலவற்றைத் தவிர) இனி இயங்கலாகாது என்று அறிவிக்கப்படுகிறது. வெளி நாட்டிலிருந்து கிறித்துவ மத அமைப்புகள இந்தியாவில் கல்வி கூடங்கள் அமைக்க, ஊக்கம் அளிக்கப்படுகிறது (இதில் நம்மவரான ராஜா ராம் மோகன் ராய்க்கு பெரும் பங்கு உண்டு) [4].
    • டல்ஹசி பிரபுவின் அவகாசியிலிக் கொள்கை (1848 லிருந்து

    1856 வரை) அமுலுக்கு வந்து சதாரா, ஜெய்பூர், சம்பல்பூர், நாக்பூர், சான்சி, தஞ்சாவூர், உதய்பூர் ஆகிய மன்னர் சமஸ்தானங்களை பிரிட்டிஷ் அரசு அபகரித்துக் கொண்டது

    • முடிந்ததது போல் தெரிந்த பர்மாச் சண்டை, இரண்டாம் பர்மாச் சண்டையாக வெடிக்கிறது (Apr 5, 1852 – Jan 20, 1853).
    • 1857 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 29, மங்கள் பாண்டே எனும் இந்தியச் சிப்பாய், பாரக்பூரில் நிகழ்த்தியதோர் துணிச்சலான களேபரத்தால், அதனைத் தொடர்ந்து அவன் ஏப்ரல் 8, 1887ல் தூக்கிலடப்பட்டுக் கொல்லப்பட்டதும், நாடு முழுவதும் அதிர்ச்சியும் கலக்கமும் ஏற்படுகின்றன.
    • 1857 மே மாதம் 10 ஆம் நாள் வெடித்த சிப்பாய்க் கலகம் – நாடு முழுவதும் பரவுகிறது.
    • மே 31, 1857 ல்,சென்னை திருவல்லிக்கேணியில் முஸ்லிம்கள் கூடி, ஹைதராபாத் நிஜாமின் அழைப்பை ஏற்று,  பிரிட்டிஷுக்கு எதிராக, புனிதப்போர் நடத்த அறைகூவல் விடுக்கிறார்கள்.
    • 1858 ஜூன் 20 ஆம் நாள் சிப்பாய்க் கலகத்தை, குவாலியரில். பிரிட்டிஷ் இராணுவம் வெற்றிகொள்ள அதனால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி, அவமானம், கெடுபிடிகள், கொடூரச்செயல்கள் என இந்திய தேசம் படாத பாடுபடுகிறது.
    • 1858 ஆகஸ்ட் 2 ஆம் நாள், இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act) அரங்கேறுகிறது இதன் படி, இந்தியா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகையிலிருந்து நீக்கப்பட்டு, இங்கிலாந்தில் உள்ள British Crown எனப்படும் உச்சபட்ச ஆட்சி அமைப்பின் நேரடிப் பொறுப்பில் கொண்டுவரப்படுகிறது. சிப்பாய்க் கல்கத்தால் ஏற்பட்ட பின்விளைவு இது. இந்தியாவில், இன்னமும் கெடுபிடித்தன்மையின் கடினத்தை அதிகரிப்பதற்கான முதன்மை ஏற்பாடு இது.

    இந்நிலையில் தான் வள்ளலார், சென்னையிலிருந்து இடமாற்றம் செய்துகொண்டு சிதம்பரம் சென்று, அங்கிருந்து கருங்குழிக்குச் சென்று அங்கு 9 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாவாறு  இருந்த நிலையில், அவரது சமரச வேத சன்மார்க்க சங்கம் முதலான பணிகள் தொடர்கின்றன.

    மேலே வரிசைப்படுத்தியிருக்கிற 12 இத்யாதிகளையும் உற்று நோக்கினால், வள்ளலாரின் புரட்சிக்கு, அரசியல், பொருளாதாரக் காரணங்களோடு சமூகத் தீர்மானிகளும், புறக் காரணிகளும்  அமையப்பெற்றன என்பது புலனாகின்றது. (வெளிப்படையாக இருப்பதால், எந்தெந்த இத்யாதிகள் எவ்வெவை என வகைப்படுத்தத் தேவையில்லை).

    புரட்சிக்கு வித்தாக அமைவதான அனைத்து அம்சங்களும் ஒருவரது சிந்தையிலே, இறங்கி, அங்கே அவை ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டு சங்கமித்து  புதியதோர் பரிணாமத்துடன் முளையாய் வீறிடும் தருணம்,  அந்தப் புரட்சி எவ்வகையான புரட்சியாய் அமையும் என்பது புரட்சியாளனின் தனித்துவ குணாதிசயங்களைப் பொறுத்தது என்பதோடு அவன(ள)து இலக்கு எது என்பதையும் அவன(ள)து தீர்க்கதரிசனத் திறனையும் பொறுத்தே  அமைகிறது.

    புரட்சியாளனின் குணாதிசயங்களைப் பற்றிப் பேசுகிறவர்கள், பொதுவாக, கீழ்க்காணுபவற்றைக் குறிப்பிடுவார்கள்:

    • சுயநம்பிக்கை
    • விடாப்பிடித்தனம்
    • கொள்கை வெறி
    • சினம்
    • அச்சமின்மை
    • தீவிரம்

    ஆனால், வெறும் முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து போயின, (சுட்டுக் கொல்லப்பட்ட) கொரில்லாப் போராளியும், ஆர்ஜன்டின மார்க்சிஸ்ட் தீவிரனும். கியூபப் புரட்சியின் வேந்தனுமான ஏர்நெசஸ்டோ கேவேரா (Ernesto Guevera) [5] சொல்லுவான்: “ஒரு புரட்சியாளனுக்கு வேண்டிய  ஒன்றே ஒன்று அன்பு எனும் உணர்வு தான். இந்தப்பண்பு இல்லாத எவரையும் ஒரு உண்மையான புரட்சியாளனாக எண்ணவும் முடியாது!” என்று. (“At the risk of seeming ridiculous, let me say that the true revolutionary is guided by a great feeling of love. It is impossible to think of a true revolutionary lacking in this quality”)  [6].

    கேவேரா சும்மா அல்பசொல்பமானவன் அல்லன். “கொரில்லாத் தலைவன் தானே!” என்று எவரும் அவனை மூர்க்கன் என்று மட்டமாய் எடை போட்டுவிட முடியாது – அவன் மெத்தப் படித்தவன் – ஒரு மருத்துவன் – ஒரு எழுத்தாளன் – ஒரு ராஜதந்திரி – ராணுவக் கோட்பாளன் (Military Theorist).

    சரி, உண்மையான புரட்சியாளனுக்கு, அன்பு உணர்வு எனும் பண்பு  இருக்கவேண்டும் என்பது இன்றியமையாதது என்றால், வள்ளலாருக்கு, இந்தப் பண்பு இருந்ததா என்ற வினாவை நாம் எழுப்பத் தேவையில்லை ஏனெனில் அவரது, ஜீவகாருண்யத்தினை  உலகே அறியும். சென்னையை விட்டுத்  தான் ஏன் வெளியேறினார் என்று வெளிப்படுத்தும்  வள்ளலாரின்  “பிள்ளைப் பெரு விண்ணப்பம்” (ஆறாம் திருமுறை) இப்புரட்சியாளனினின் புரட்சியை உருவாக்கி, வழிநடத்தியது அவனுக்குள் ஊறி விளைந்திருந்த அன்பு உணர்வு என்னும் பண்பு மட்டுமே எனபதை எவருக்குமே வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. இப்பாடல் வரிகளைக் இக்கட்டுரைக்குக் கீழே காண்க:

    அன்பு என்றால் உலப்பிலா அன்பு கொண்டவர் சிதம்பரம் ராமலிங்கம். எல்லா உயிருமாய்த் தழைத்து, பிழைத்தவையல்லையாய்  நிற்கும் அனைத்தின் மீதும் இராமலிங்கன்  கொண்ட அந்த உலப்பிலா அன்பினால் தான், “அடிகளார்” என்றதான  அந்த சிறு வித்து “வள்ளலார்” என்கிற ஆன்மீகப் புரட்சியாளனாக வெகு இயல்பாய் வீறிட்டது.

    புரட்சி இயல் அறிஞர்கள், புரட்சிகளின் தன்மையை இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள் [1]: துரிதப் புரட்சி, திட்டமிட்ட புரட்சி என்று.

    துரிதப் புரட்சிகள் – அவ்வப்போது அடிக்கடி நிகழ்பவை. திட்டமிட்ட புரட்சிகள் எப்போதோ நடப்பவை. துரிதப் புரட்சிகள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்  மூலதனமாய் வைத்து எழுபவை – இவற்றிற்கு அறிவும் விவேகமும் தேவை என்றாலும், பெரும்பாலும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் வேகவேகமாக நடத்தப்படுவதால், அறிவும் விவேகமும் முழுமையாகப் பயன்படுத்தப் படாததாலும், பின்விளைவுகளைப் பற்றிய போதிய அனுமானமும் அளவீடும் இல்லாது போவதால் – பெரும்பாலும் அவை, தோல்வியையேத் தழுவுவன. சொல்லப்போனால், துரிதப் புரட்சிகளை நடத்துவது சுலபம்.

    வள்ளளார் பிறப்பதற்குக் கொஞ்சம் முன் (1802) நடந்த வேலூர்க் கலகம், அவர் பிறந்த பின் நடந்த பாரக்பூர் கலகங்கள், சிப்பாய்க் கலகம் ஆகியனவெல்லாம் வெகு சிறப்பாகத் திட்டமிட இயலாத காரணத்தால் எதிர்ப்பார்த்த வெற்றியைத் தராமல் தோற்றுப் போயின. அது போன்றே ராஜா ராம் மோகன் ராயின் புரட்சிகரமான நடவடிக்கைகள், குறுகிய கால நோக்கில், முழுமையான ஆலோசனையின்றி, உடனடி சுயலாப நோக்கினைக் குறிவைத்து – செய்யப்பட்டதால், நாட்டிற்கு, இடர்பாடாகவே முடிந்திருந்த  நிலையினையும் அன்று வள்ளலார் தனது சிந்தையில் ஆய்வு செய்திருக்க  வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. எனவே தான், வள்ளலார், நீண்ட நெடிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு,  சரியான காலம் கனியும் வரைக் காத்திருந்து பருவத்தே புரட்சிப் பயிர் விளைக்கவேண்டியதாயிற்று என்பதாக உணர்கிறோம்.

    வேலூர்க் கலகம், பாரக்பூர் கலகங்கள், சிப்பாய்க் கலகம், இவையாவற்றிலுமே இருந்தது ஒரே ஒரு அடிப்படைக் காரணம் தான். இந்தியமண்ணில் அன்று வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத உணர்வைக் கொச்சைப் படுத்தியும், புண்படுத்தியும், மதத்திற்குப் புறம்பான நடவடிகைகளில் இந்தியச் சிப்பாய்கள் ஈடுபடுமாறு அவர்களை வற்புறுத்தியும் ப்ரிட்டிஷார் நடந்து வந்தனர் என்பதாலும், கிறித்துவ மதத்தைப் பரப்புமுகமான செயல்களில் அவர்கள ஈடுபட்டனர் என்பதாலும் தான் இக்கலகங்கள் எழுந்தவையே.

    இக்கலகங்களை உற்று நோக்குங்கால், மதம் என்கிற அதி அற்புதமான நுண்மை, ஒரு சமூகக் கலாச்சாரப் பெட்டகம் என்பதை அறியா அதிகாரப் போக்கு அங்கே தெரிந்தது.

    மதத்திலே, தெய்வம் மட்டுமில்லை, தேசமும், மொழியும், இலக்கியங்களும், ஆடல்-பாடல்-ஓவியம் – சிற்பம் முதலான கலைகளும், மனிதர்களின் பழக்கவழக்கங்களும், மண்ணும், நதிகளும், காடும், மலையும், ஆகாயமும், காற்றும், மூச்சும், நம்பிக்கையும், உறவும், சுற்றமும், நட்பும், உடையும் உணவும், அணிகலன்களும், அணியாகக் கலன்களும், அலங்காரமும், புழக்கும் பொருட்களும் கூட உண்டு என்கிற உண்மையை அறியாத அல்லது ஏற்றுகொள்ள மறுத்த எஜமானத்தனம் தெரிந்தது. ஆனால் அந்த எஜமானனுக்கு, பராக்ரம பலம் இருந்தது, சேனை இருந்தது, துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன, ஆட்சி அதிகாரம் இருந்தது.

    “நான் நினைப்பதை நான்  நடத்தியாக வேண்டும் – நீ வெறும்  அடிமைதானே – சொல்வதைச் செய் – அன்றேல்  உன் வாழ்வு என் வசம் தானே – செத்துத் தொலை!” என்கிற ராட்சதம் இருந்தது. சொல்லொணாக் கொடூர நிலையில் இருந்தது இந்தியா. இத்தகைய நிலையில், இடம், பொருள், ஏவல் என எல்லாவற்றையும் சரிவரத் தயார் செய்து கொள்ளாமல் எதனையும் செய்யமுடியாது என்கிற சூழல்.

    இடனறிதலில் வள்ளுவர் கூறுவார்:

    முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்  அரண்சேர்ந்தாம்
    ஆக்கம் பலவுந் தரும்

    பகைவர்களிடையே வாழும்போது, நாம் நினைத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்யவேண்டுமென்றால் அதற்குச் சரியான, பாதுகாப்பான, இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இக்குறளின் எளிமையான பொருள்.

    1858 ல், பிரிட்டிஷ் மகுடம் (British Crown) என்ற உச்ச பட்ச பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ், இந்தியா வரவும், விக்டோரியா மகாராணியின் ஆட்சி தொடங்கவும், சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை வெகு மும்முரமாகிறது. கூடுதல் இராணுவப் பொறுப்புக்களை இக்கோட்டையில் வைத்து நடத்தும்படியாகிறது. சென்னையில், சாலைகள், பாலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டப்  பல்வேறு நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. 1852-53ன், இரண்டாவது பர்மியப்போரின் அனுபவத்தின் அடிப்படையில், சென்னைத் துறைமுகம் விரிவாக்கத் திட்டம் தீட்டப்பட்டு, பணிகள் துவங்குகின்றன. பிரிட்டிஷ் மகுடத்தின் நேரடிப் பார்வையில் வந்த பிறகு, ப்ரிட்டிஷரரின் மிகமுக்கியமான தலைமைப் பீடங்களுள் ஒன்றானது சென்னை என்பதால், மிக அதிகமான அளவு இராணுவப் படைகள் சென்னையில் நிறுத்தப்படுகின்றன. அத்தனை இராணுவ வீரர்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்குமான குடியிருப்பு, அவர்களது உல்லாச நடவடிக்கைகளுக்கான தலங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியும், துறைமுகத்தைச் சுற்றியும் உள்ள இடங்களும், முதல் கடற்கரைச் சாலை  (First Line Beach) மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் வெகு அளவில் பிரிட்டிஷாரின் நடமாட்டப் பகுதிகளாகின்றன.

    வள்ளலார் அப்போது சென்னையில் வாழ்ந்துவந்த ஏழு கிணறு, வீராசாமி பிள்ளைத் தெரு இருந்தது (இருப்பது) இந்தப் பகுதியில்தான். கந்த கோட்டம் இருந்ததும் (இருப்பதும்) இப்பகுதியில் தான்.

    சிப்பாய்க் கலகத்தின் போதுகூட அமைதியாகவே காணப்பட்டது சென்னை என்று வரலாற்று ஏடுகளிலே அறிகிறோம். “தருமமிகு சென்னை” என்று வள்ளலாரே வாயரப்புகழ்ந்த சென்னை தானே!. ஆனால், பிரிட்டிஷ் மகுடத்தின் நேரடிப் பார்வையில் வந்த வகையில்,  இப்போது, சென்னை, அளப்பிலா அந்நிய ஆரவாரத்தோடும், ஒருவித கெடுடுபிடியோடும் மாறிவிட்டதை  அறிகிறோம்.

    எனவே தான், தனது திட்டமிட்டப் புரட்சிக்கு, சரியான இடத்தை தேர்ந்தெடுத்து நடத்தவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தவராக. அன்றைய நிலையில், பிரிட்டிஷாரின் ஓயாதத் தொந்தரவுகள் நிரம்பி வழிந்த சென்னையைக் காட்டிலும், வேறு இடத்தில் தனது  புரட்சியை விளைவிக்க. வள்ளலார் புறப்பட்டிருக்கவேண்டும்  என்றே நம்மால் காணமுடிகிறது.

                                                                                  (மேலும் பேசுவோம்)

    குறிப்புகள்

    “பிள்ளைப் பெரு விண்ணப்பம்” (ஆறாம் திருமுறை).

    http://www.thiruarutpa.org/thirumurai/v/T248/tm/pillaip_peru_vinnappam

    1. உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
      கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
      புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
      தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
    2. மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம்
      கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
      நண்ணிநின் றொருவர் அசப்பிலேஎன்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா
      தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
    3. தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
      நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
      காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை
      ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.
    4. என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
      துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
      வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
      அன்புடையவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
    5. காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
      ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
      கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
      வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
    6. பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
      அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
      பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
      முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
    7. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
      வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
      நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
      ஈடின்மானிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

    [1] Gizachew Tiruneh (2014). Social Revolutions: Their Causes, Patterns, and Phases   https://doi.org/10.1177/2158244014548845

    [2] Ernest Guevara https://en.wikipedia.org/wiki/Che_Guevara

    [3] P.N. Chopra, B.N. Puri, M.N, Das, and A.C. Pradan (2003). A Comprehensive History of India; Sterling Publishers.

    [4] Poonam Upadhyaya Social, Political, Economic, and Educational Ideas of Raja Rammohun Roy

    [5]  “Socialism and Man in Cuba” Archived 2008-03-23 at the Wayback Machine A letter to Carlos Quijano, editor of Marcha, a weekly newspaper published in Montevideo, Uruguay; published as “From Algiers, for Marcha: The Cuban Revolution Today” by Che Guevara on March 12, 1965

    [6] Guevara, Che. “Socialism and man in Cuba”. www.marxists.org. Archived from the original on 10 August 2017. Retrieved 6 May2018.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 10

    பழகத் தெரிய வேணும் – 10

    நிர்மலா ராகவன்

    (சிடுசிடுப்பான கடைக்காரர்கள்)   

    “புன்னகை புரியும் முகமாக இல்லாதவன் கடை திறக்கக் கூடாது” (சீனப் பழமொழி). சீனாவிலிருந்த ஒருவர் தன் எட்டு வயது மகனை மலேசியாவுக்கு கப்பலில் ஏற்றிவிட்டார், தனியாக.

    ‘அங்கு போய் பிழைத்துக்கொள்!’ என்ற அறிவுரை மட்டும் கூறி வழியனுப்பினார்.

    என் பக்கத்து வீட்டில் குடியிருந்த பெட்ரீஷியா என்ற கணக்காய்வாளர் தன் தந்தையைப்பற்றிக் கூறிய கதை இது.

    எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு சிறு வயதில் தனியாக ஏதோ ஒரு நாட்டுக்கு அனுப்புவார்களா!

    ‘நேர்மையாக இரு. கடுமையாக உழை,’ என்று தான் போதித்த பாடங்களை வைத்துக்கொண்டு மகன் பிழைத்துவிடுவான் என்ற நம்பிக்கை அந்த தந்தைக்கு இருந்திருக்கிறது.

    சிறுவன் வாங் ஒரு மளிகைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.

    பள்ளிக்கூடத்தில் அவன் கல்வி பெறவில்லை.

    ஆனாலும், கடின உழைப்பு, எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம், பிறரை மரியாதையாக நடத்துவது முதலிய குணங்கள் அவனை சொந்தக்கடை நடத்தும் அளவிற்கு படிப்படியாக உயர்த்தின.

    தன்னைப்போல் தன் குழந்தைகளும் கஷ்டப்படக்கூடாது என்ற உறுதியுடன், அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினான் வாங்.

    அவர்களது மதிப்பெண்கள் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தபோது அவர்களுக்கு அடி விழும். மாறுகின்ற காலத்தை ஒட்டி நடக்க குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்று கடையின் ஓரத்தில் ஒரு கணினி.

    சாயங்கால வேளைகளில் விளையாடி முடிந்ததும், எல்லாக் குழந்தைகளையும் ஓர் அறையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போகச் சொல்லி, கதவை வெளியில் சாத்திவிடுவான் வாங்.

    ‘சிறிது நேரம் சும்மா உட்கார்ந்திருப்போம். அப்புறம், என்ன செய்வதென்று புரியாது, படிக்க ஆரம்பித்துவிடுவோம்,’ என்கிறாள் பெட்ரீஷியா.

    தந்தை எதிர்பார்த்தபடியே, எல்லாரும் உயர்கல்வி பெற்று, நல்ல வேலைகளில் அமர்ந்தார்கள்.

    தந்தை தன் வாழ்க்கையைப்பற்றி அடிக்கடி கூறி வளர்த்திருந்ததால், அவருடைய நற்குணங்கள் குழந்தைகளிடமும் அமைந்தன.

    கடையில் வேலை செய்யும் ஒருவருக்கு அவசியம் இருக்கவேண்டிய குணங்களை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

    ஒரு கடைக்காரர் எப்படி இருக்கக்கூடாது?

    1. பல வருடங்களுக்கு முன்பு, கோலாலம்பூரில் பிரபலமாக இருந்த ஒரு கிளினிக்கிற்குப் போயிருந்தேன். சிறிது தாமதத்திற்குப்பிறகு மருத்துவரின் அறைக்குள் நுழைய அனுமதி.

    அந்த மனிதரோ, நான் வந்ததைக் கவனியாது, சுவாரசியமாக ஒரு ஜனரஞ்சகமான தமிழ் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தார்.

    நான் பொறுமையை இழந்துகொண்டிருந்தேன்.

    அது புரிந்தோ என்னவோ, மெல்ல தலைநிமிர்ந்து, “கொஞ்சம் இருங்கள்,” என்றுவிட்டு, மீண்டும் படிப்பதில் ஆழ்ந்தார்.

    அடுத்த முறை போனபோது, நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை.

    அங்கிருந்த சீன மருத்துவரின் அறைக்குள் எதற்கோ நுழைந்தவர், என்னை அங்கு பார்த்து திடுக்கிட்டார்.

    ‘நம் இனத்தவரே நம்மை ஒதுக்குகிறார்களே!’ என்று வருந்தியிருப்பார்.

    இதில் யார்மேல் தவறு?

    கடைக்கு வரும் வாடிக்கையாளரோ, மருத்துவமனைக்கு வரும் நோயாளியோ, நம்மை நாடி வருகிறவர்களின் தேவை அல்லது பிரச்னை என்னவென்று புரிந்துகொள்ள ஆர்வம் காட்டவேண்டாமா?

    சுரத்தே இல்லாது, வேறு வேலையில் ஈடுபட்டிருப்பது ஒருவரை அவமதிப்பதுபோல்தான்.

    2. அதே கிளினிக் இரவு ஒன்பது மணிவரை திறந்திருக்கும் என்று தெரிந்து, நான் போனபோது, எட்டே முக்கால் மணி.

    “கொஞ்சம் முன்னாலேயே வருவதற்கென்ன?” என்று ஒரேயடியாகக் கோபித்தாள் மருந்துகளை எடுத்துக் கொடுக்கும் பெண்.

    இனி யாரும் வராவிட்டால், வீட்டுக்கு முன்னதாகவே போய்விடலாமே என்ற ஆசை அவளுக்கு. உடல்நலக்குறைவுடன் வருகிறவர்களிடம் இனிமையாகப் பேச அவளுக்குத் தெரியவில்லை. நிர்வாகத்தினர் சொல்லிக்கொடுக்கவும் இல்லை.

    3 . இரவில் ஒரு மளிகைக்கடைக்குப் போனபோது, கடை மூட அரைமணி இருந்தது.

    நாற்பது வயது மதிக்கத்தக்க கடைச் சிப்பந்தி, “கடைசி நிமிஷத்திலே வந்து உயிரை வாங்கறீங்களே!” என்று இரைந்தார்.

    ‘நாள் முழவதும், குறைந்த சம்பளத்தில் வேலை செய்து, களைத்துப்போயிருக்கிறார், பாவம்!’ என்று புரிந்தது. இவரை எப்படிக் கோபிப்பது?

    “சாமான்கள் எங்கே இருக்குன்னு காட்டினா, நாங்களே எடுத்துக்கறோம்,” என்றேன்.

    அவருடைய வேலை பாதியாகக் குறைய, இறுதியில், “இன்னிக்கு ரொம்ப வேலை,” என்றார், மன்னிப்புக் கேட்கும் வகையில்.

    வாடிக்கையார்களை உற்ற நண்பர்கள்போல் நடத்தினால் வியாபாரம் செழிக்கும்.

    4. சில கடைக்காரர்கள் தாம் விற்கும் சாமான்களை ஒரேயடியாகப் புகழ்ந்து, வலுக்கட்டாயமாக நம் தலையில் கட்டப்பார்ப்பார்ப்பார்கள்.

    “நான் இவ்வளவு சொல்கிறேன், உங்களுக்கு வேண்டாமா?” என்று ஒரு சீனர் இரைய, எரிச்சல் தாங்காது, “உங்களுக்குத்தான் இவ்வளவு பிடித்திருக்கிறதே! நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்,” என்று நடையைக்கட்டினேன்.

    5. நானும், மகளும் ஒரு கடையில் சாப்பிடும்போது, மடியில் இருந்த ஒருவயதுப் பேரனுக்கும் ஒரு வாய் ஊட்டினேன்.

    “பிள்ளைக்கும் குடுத்தீங்களே!” என்று மூன்று பேருக்கான பணத்தைக் கேட்டான் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவன்.

    சீக்கிரமே பெரும் பணக்காரனாகிவிடலாம் என்று எண்ணியிருப்பான். அதனால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை அவன் அறியவில்லை.

    (அதற்குப்பிறகு நாங்கள் அங்கு போகவில்லை. கடையையும் காணோம்).

    6. எங்கள் வீட்டருகே, தன் வீட்டின் முன்பகுதியையே மளிகைக்கடையாக மாற்றி இருந்தார் அந்த மலாய்க்காரர். பாக்கிச் சில்லறை கொடுப்பதில் ஏமாற்றுவது, யாரும் பார்க்காத சமயத்தில் அழுகலான உருளைக்கிழங்கை அவர்கள் சாமான்களுடன் சேர்த்துப் போட்டுவிடுவது – இதிலெல்லாம் கைதேர்ந்தவர். எல்லாரிடமும் எரிந்துவிழுவார். அந்த இடமே அசுத்தமாக இருக்கும்.

    யாரோ புகார் செய்ய, ‘இப்பகுதியில் உள்ள வீடுகளில் கடை வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. வேறு இடத்திற்குப் போகவும்,’ என்று அரசாங்க சார்பில் கடிதம் வந்திருந்தது.

    சில வார்த்தைகள் புரியாது, என்னை விளக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.

    “பொறாமை!” என்று புகார் செய்தவர்களைத் திட்டினார்.

    ஆனால், அன்றிலிருந்து என் குடும்பத்தினருக்கு அலாதி மரியாதை. நான் அவருக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியை ஆயிற்றே!

    சிறு லாபம், கடுமையான உழைப்பு

    பொதுவாக, எந்தத் துறையானாலும், பிரதிபலனை எதிர்பார்க்காது நேர்மையான வழியில் சென்றால் என்றாவது பலன் கிடைக்கும்.

    லாபம் சிறிதாக இருந்தாலும் அதற்காக கடுமையாக உழைப்பது வியாபாரத்தில் முன்னுக்கு வரும் வழி.

    சில கடைகளில் சிப்பந்திகள் எல்லாரும் சிரித்த முகமாக இருப்பார்கள். நமக்கு வேண்டிய பொருள் இன்னதென்று கோடி காட்டினாலே போதும். புரிந்துகொள்வார்கள். அவர்கள் முதலாளியால் நல்லவிதமாக நடத்தப்படுகிறார்கள் என்று அவர்களுடைய பணிவிலிருந்தும், வேலையில் அவர்கள் காட்டும் ஆர்வத்திலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.

    கதை

    தமிழ்நாட்டிலிருந்து வந்த சாப்பாட்டுக்கடை சிப்பந்தி வேலு. ஐம்பது வயதிருக்கும்.

    ஒரு மாலை வேளையில், நான் அங்கு போயிருந்தபோது, அவர் முகம் சிடுசிடுவென்று இருந்தது.

    “ரொம்ப வேலையா?” என்று கேட்டேன், மெல்ல.

    ‘நம் நலனில்கூட ஒருவர் அக்கறை காட்டுகிறாரே!’ என்ற நிறைவுடன், தன் கஷ்டங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

    காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பதுவரை வேலை. அதன்பின், கணக்குவழக்கைப் பார்க்கவேண்டும்.

    சாப்பாடு இலவசம் என்றாலும், குடும்பத்தைவிட்டு, தனியாக அயல்நாட்டில் உழைப்பது எளிதல்ல.

    வந்துவிட்டாலோ, புதிய வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டியதுதான். எரிச்சலுடன் செயல்பட்டால், பணம் கிடைத்தாலும், மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்குமா?

    Share
  • (Peer Reviewed) சிலம்பில்  கோவில் வழிபாட்டு முறைகள்

    (Peer Reviewed) சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்

    முனைவர் மூ.சிந்து
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    காளப்பட்டி, கோவை6410428
    மின்னஞ்சல்sindujasms@gmail.com

    முன்னுரை

    ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம். சிலம்பை மையமாகக் கொண்டு எழுந்த காரணத்தால் இப்பெயர் பெற்றமையை உணரமுடிகிறது. சிலப்பதிகாரம் அறம், பொருள். இன்பம் என்ற மூன்று நிலைகளில் அறத்தினை உட்புகுத்தி மக்களிடையே அறவுணர்வினை உட்புகுத்தும் நோக்கில் அமைத்தமையை உணரலாம். வழிபாட்டு முறைகளைப் பகுத்தும் விரித்தும் கூறுவதாக இவ்வாய்வு அமைகிறது.

    நோக்கம்

    சிலப்பதிகாரம் அகம் , புற நிகழ்வுகளைச் சுட்டினாலும் ஊழ்வினை நிலையை வெளிப்படுத்தும் போக்கில் அமையப் பெற்றும் அதில் அறம் சார்ந்த வழிபாட்டு நிலையில் இறைவனை வழிபட்ட நிலையையும் எடுத்துக் கூறுவதாக அமைகிறது.

    வழிபாடு

    சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதும், இயற்கையானது மாறும் போது அதனோடு போராடும் சூழலில் தனக்கு மேலான சக்தி ஒன்று உள்ளது என்பதை உணர்ந்து அதை நம்பினர். அந்த சக்தியே பின்னாளில் தெய்வமாக மாறி அவற்றைப் பின்பற்றி வந்த முறையானது வழிபாடாக மாறியது.

    வழிபாடு என்பது தெய்வத்தையோ அல்லது இயற்கை சக்தியை நோக்கி முறையான அல்லது முறைசாராத குழுக்கள் அல்லது அதற்கென நியமிக்கப்பட்டவரால் மேற்கொள்ளப்பட்ட முறை வழிபாடாகும்.

    வழிபாடு என்பது வணங்குதல், பூசை செய்தல் என்பதாம். இது வழக்கமாகச் செய்தல் என்னும் பொருள்களில் வழங்கப்படுகிறது.

    வழிபாட்டு முறை

    வழிபாடானது பாடல்கள் பாடியோ, மந்திரங்கள் கூறியோ பொருட்களைப் படைத்தோ நடைபெறுகிறது. மனிதன் தன் தேவைக்காகவும், சுயநலத்துக்காகவும் இறைவனை நாடிச்செல்லும் நிலையே வழிபாடாக மேற்கொள்ளப்படுகிறது. மனிதனின் இன்பமான  வாழ்க்கைக்கும் தன் சிக்கல்கள் தீரவும் வழிபாடானது அவரவர் விருப்பத்திற்கு இணங்க மாற்றம் கொண்டமையைக் காணமுடிகிறது.

    இலக்கியங்கள் போற்றும் வழிபாடு

    வழிபாடானது பழக்கங்களில் தோன்றியமை என்பதைப் புலப்படுத்தும் வகையாக தொன்மையான இலக்கண நூலானத் தொல்காப்பியம்,

    வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
    பழிதீர் செல்வமொடு வழிவழிழச் சிறந்து
    பொலிமின்..                                           தொல் .1367

    என்னும் வரிகளால் வழிபாட்டு நிலையினை உணர்த்துகிறது. வழிபாட்டினால் வாழ்க்கை வளம்பெறும் என்பதை மக்கள் நம்பிக்கையாகக் கொண்டனர் என்பதும், பண்டைத் தமிழ் மன்றங்களிலும்,மரங்களிலும்,கற்களிலும் தெய்வம் உறைவதாக நம்பி அவற்றை வழிபட்டனர் என்பதைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது.

    எட்டுத்தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூலான பரிபாடலில்,

                      ……….. யாம் இரப்பவை
                    பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
                    அருளும் அன்பும் அறனும் மூன்றும்
                    உருளிணர்க் கடம்பின் ஒலிதாராயோ                பரி.5.78-81  

    என்னும் வரிகளால் மனிதன் தன் வாழ்க்கை நிலையை உயர்த்தும் பொருட்டும், நிலைப்படுத்தும் பொருட்டும் வழிபாட்டை மேற்கொண்டான் என்பதை உணர்த்துகிறது.

    சிலப்பதிகாரத்தில் கோயில்  வழிபாட்டு நிலையானது பல்வேறு நிலைகளாக மேற்கொண்டமையையும், அவற்றின் சிறப்புகளையும் பின்வரும் நிலைகள் விவரிக்கின்றன.

    • கோயில் வழிபாடு
    • நன்னீராட்டு
    • மந்திரம் உச்சரித்தல்
    • பாடல்கள் பாடுதல்
    • புண்ணிய நதிகளில் நீராடுதல்
    • பலியிடுதல்
    • தெய்வ அருள் பெறல்

    கோயில் வழிபாடு

             சிலம்பில் கோயில் வழிபாட்டு முறையில் முதலில் பலிபீடத்தை மலரிட்டு வழிபடுதல் பின்பற்றப்படுகிறது. கொற்றவையின் உருவமாகக் கொண்ட பெண்ணை வணங்கும் முன்,

                    விலைப்பலி யுண்ண மலர்ப்பலி பீடிகைக்
                    கலைப்பா யூர்தியைக் கைதொழுது            சிலம்பு. 12.43-44

    பலிபீடத்தை வணங்கிய வழிபாட்டினைக் கூறுகிறது. பலிபீடத்திற்கு பிறகு தெய்வ வாகனத்தை வழிபடும் நிலையானது இருந்தமையைச்  சிலம்பு குறிப்பிட்டுச் சொல்கிறது.

    கோட்டம்  என்ற சொல்லானது கோயில் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. கோட்டம் கட்டிடங்கள் இல்லாமல் திறந்த வெளியில் வேல், வச்சிரம் போன்றவற்றை நட்டுச் சுற்றிலும் வேலியமைத்த பகுதியானது கோட்டம் என்றழைக்கப்படுகிறது.

                    அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
                    ………………
                    நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் 
                                                                                                                                                  சிலம்பு. 9..9-13

    என்று பல்வேறு வகையான கோயில்களைச் சிலம்பில் எடுத்துரைத்துச் செல்கிறார் இளங்கோ.

                    பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
                    அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
                    ………..
                    கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்          சிலம்பு. 5.169-181

    என்னும் வரிகள் கோயில் வழிபாட்டின் சிறப்பினை உணர்த்துகிறது.

    நன்னீராட்டு

    கோயிலில் செய்யப்படும் அபிடேக முறையானது ”நீரணி விழா” என்று சிலம்பில் வழங்கப்படுகிறது.

                       நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவனும்     சிலம்பு. 10.22

    திருமஞ்சனநீரைப் பொன்னாலாகிய குடத்தில் ஏந்தி மண்ணில் வாழ்வோர் அதிசியிக்கவும், விண்ணுலகத்தார் வியப்புறும்  வகையிலும் தேவர் கோமானாகிய இந்திரனின் திருவுருவத்திற்கு திருமஞ்சனம் நீராட்டல் நடைபெற்றமையை,

                     புண்ணிய நல்நீர்  பொன்குடத்து ஏந்தி
                    மண்ணகம் மருள வானகம் வியப்ப
                    விண்ணவர் தலைவனை விழுநீர ஆட்டி     சிலம்பு. 10.166-168

    கண்ணகியின் உருவக் கல்லை சேரமன்னன் கங்கையின் புனித நீரிலே கற்றறிந்தோர் கூறியநெறியுடனும், முறையுடனும் நீராட்டித் தூய்மை செய்ததை,

                    கங்கைப் பேர்யாற்றுக் கரை அகம் புகுந்து
                    பால்படு மரபிற் பத்தினிக் கடவுளை                 
                     நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து          சிலம்பு. 27.14-16

    என்பதைச் சிலப்பதிகார வரிகள் உணர்த்துகிறது.

    மந்திரம் உச்சரித்தல்

    இறைவனது நாமத்தைப் பலமுறை உச்சரிப்பதால் நன்மை என்பதை மக்கள் நம்பினர். இறைவனது வழிபாட்டில் மந்திரம் உச்சரித்தல் முக்கிய இடம் வகுத்தமையை உணரமுடிகிறது.

                    மறைமொழிதானே மந்திரம் என்ப                  தொல்.1434

    இறைவனது நாமம், மந்திரம் என்பதைத் தொல்காப்பியம் எடுத்துக்கூறுகிறது.

                    துன்னிய மந்திரம் துணைஎனக் கொண்டு
                    வாயி லாளரை மயக்குதுயில் உறுத்து        சிலம்பு. 16.143-144

    விழித்துக் கொண்டிருப்போரை மந்திரத்தால் தூங்கச் செய்யும் கள்வர்களின் செயலைச் சிலம்பில் இளங்கோகூறுகிறார்.

                    மந்திரம் நாவிடை வழுதுத்துவராயின்
                    இந்திரகுமரரின் யாங்காண் குவமோ         சிலம்பு. 27.172-173

    இந்திரனின் ஆபரணத்தைக் களவாடும் ஆற்றல் பெறுவர் என்னும் செய்திகள் வாயிலாக மந்திரம் உச்சரித்தல் தீமைக்கும் பயன்படுத்தியமையை அறியமுடிகிறது.

    பாடல் பாடுதல்

    வழிபாட்டு நிலையில் பாட்டுப்பாடி வழிபாடு செய்தல் என்னும் நிலையானது ஒரு அங்கமாக அமைகிறது.

                     மாயோன் பாணியும் வருணப்பூதர்
                    நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
                    வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்                  சிலம்பு. 6.35-37

    என்னும் வரிகளில் குறத்தியரின் குறிஞ்சிப்பாணி, ஓதைப்பாணி, குழலின் பாணி போன்றவை நீர்படைக்காதையில் பாடியமைக் காணலாகிறது.

                    ……………….அணங்குமுன் நிறீஇ
                    விலைப்பலி உண்ணும் மலர்ப்பலி பீடிகைக்
                    கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி           சிலம்பு.12.42-44

    என்னும் வரிபாடலில் மானுடரை வாழ்த்தியும், தெய்வத்தைப் போற்றியும் அமைந்த வேட்டு வரிப்பாடல்கள் சான்றாகும்.

    புண்ணிய நீராடல்

    திருத்தலங்களில் உள்ள நீர் புனிதநீராடல் போற்றப்படுகிறது. அத்தகைய நீரின் சிறப்புகள் சிலம்பில் எட்டு இடங்களில் பேசப்படுகின்றது.

                       குமரியும் பெருந்துறை கொள்கையிற் படிந்து      சிலம்பு.15.15

    என்னும் பாடல்வரி மாடலன் குமரியில் நீராடியதையும்,

                    என்வாய்க் கடெடார் இறந்தேர்ர் உண்மையின்
                    நன்னீர்க் கங்கை ஆடப் போந்தேன்   சிலம்பு.27.109-110

    என்னும் பாடல்வரிகள் மாடலன் கங்கையில் நீராடியதையும்,

                    ஆர்த்த கணவன் அகன்றன்ன் போய் எங்கும்
                    தீர்த்த்த் துறைபடிவேன்                            சிலம்பு.9.37-38

    என்னும் வரிகள் தேவந்தியானவள் தான் பிரிந்த கணவனைச் சேரும் பொருட்டு புண்ணிய நீரில் நீராடியமையை எடுத்துரைக்கிறது.இறைவனை வழிபடும் முன்பு அங்குள்ள புண்ணிய தலத்தில் நீராடல் என்பது முக்கிய அங்கமாக அமைந்தமையைக் காணமுடிகிறது.

    பலியிடுதல்

    வழிபாட்டில் இறைவனுக்கு பலியிட்டு வழிபடல் என்ற நிலையானது நன்றியை செலுத்தும் வகையிலும் தன் வழிபாட்டின் குறைகளையும்  போக்கும் பொருட்டும் இந்நிகழ்வு நடைபெற்றது. பலியீட்டு முறையில் இறைவனுக்கு விலங்குகள், பறவைகள், கனிகள், மலர்கள் படைத்து வழிபாடானது நடைபெற்றதை அறியமுடிகிறது.

                    உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
                    மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிர
                                                                                                                                           சிலம்பு 26.195-196

     என்னும் சிலப்பதிகார வரிகள் உயிர்ப்பலி கொடுத்தமையை உணர்த்துகிறது.

    புறத்திணையில் வெட்சித்திணை ஆநிரைக் கவருதலை எடுத்துரைக்கிறது. அந்நிலையில் ஆநிரையைக் கவரச் செல்லும் வெட்சி வீரருக்கு வெற்றி தெய்வமான கொற்றவை துணை நிற்பதை,

                    அடல்வலி எயினர் நின்னடிதொடு கடனிது
                    மிடறுகு குருதிகொள் விரல்தரு விலையே ………….

    என்னும் வரிகள் வெற்றிக்குப் பின் கொற்றவைக்கு உயிர்ப்பலியிட்டு வெற்றியைக் கொண்டாடியமையை எடுத்துரைக்கிறது.

    அருள் பெறல்

    மக்களின் நிறைகுறைகளையும் அவர்களது தீமைகளையும் எடுத்துக்கூறுபவர் தெய்வத்தின் அருள் பெற்றவர். அவர் வழிபாட்டின் போது மக்களுக்கு அருள்கூறி வழிசெய்வர்.

                     பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி
                    தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்தி சிலம்பு 12.7-8

    என்னும் வரியில் சாலினி தெய்வ அருள்பெற்ற நிலையை எடுத்துரைக்கிறது.

                       …………….. உயர்மொழி கூறித்
                    தெய்வம்உற்று எழுந்த தேவந்திகைதான்  சிலம்பு 30.44-45
                    பாசாண்டன்யான் பார்ப்பனி தன்மேல்
                    மாடல மறையோடு வந்தேன்            சிலம்பு 30.69-70

    என்னும் வரிகளில் தேவந்தி தெய்வ அருள் பெற்ற நிலையினை எடுத்துரைக்கிறது.

    முடிவுகள்

    • சங்ககால மக்கள் இயற்கை சத்திகளைத் தெய்வமாக வழிபட்டனர்.
    • வழிபாட்டு நிலையில் பூசை,பாடல்கள்,மந்திரங்கள் கட்டாயமாக அமைந்தமையைக் காணமுடிகிறது.
    • வழிபாடானது பழக்கத்தின் அடிப்படையில் தோன்றியமை என்பது புலப்படுகிறது.
    • கோயில் வழிபாட்டு நிலையில் பலியிடல் நிகழும் இடம் முதலில் வழிபட்டதன் மூலமாக சக்தி நிறைந்த பீடமாக அமைந்தமையை உணரமுடிகிறது.
    • நீரணிவிழா வாயிலாக திருவுருவங்களுக்கு நீராட்டல் அமைந்தன.
    • மந்திரம் என்பது நன்மை, தீமை இரண்டிற்கும் உச்சரித்த நிலையைக் காணமுடிகிறது.
    • வழிபாட்டில் தன் வேண்டுதல் நிறைவேற அல்லது நிறைவேறிய பின்பு கடவுளுக்கு பலியிடதல் என்பது வழக்கமாகக் கொள்ளப்பட்டது.
    • வழிபாட்டின் உச்சநிலை தெய்வத்தின் அருள்பெற்று அதனடிப்படையில் மக்கள் நன்முறையில் வாழ்ந்த நிலையைக் காணமுடிகிறது.
    • வழிபாட்டு நிலையானது ஒன்றன் தொடர்ச்சியாக மன்றொன்று இந்தமையைக் காணமுடிகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. சிலம்பொலி சு.செல்லப்பன், சிலப்பதிகாரம், பாரதி நிலையம், சென்னை
    2. சுப்பிரமணியன் ச.வே, சிலப்பதிகாரம், கங்கை புத்தக நிலையம், சென்னை
    3. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை
    4. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணார் உரை,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
    5. பரிபாடல் , சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    வழிபாட்டு முறைகள் தொன்றுதொட்டு இன்றுவரை தொடர்ந்து வரும் நிலையில், இடம் காலத்துக்கு ஏற்ப அவை மாறுபட்டும் விளங்குகின்றன. இக்கட்டுரை, சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகளைப் பன்முகங்களில் தொகுத்து வழங்குகிறது.

    சிலம்பின் மையப்புள்ளயான ‘ஊழ்வினை’ சார்ந்து விளங்கும் வழிபாட்டுமுறை எனச் சுட்டியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். தொல்காப்பியம் விளக்கும் வழிபாட்டுமுறையை மேற்கோள் காட்டி, சிலம்பில் வழிபட்டதை விளக்கியிருப்பது சிறப்பு.

    வழிபாட்டு விளக்கம், முறை, இலக்கியங்களில் வழிபாடு இவை தகுந்த சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. அவை சிலம்பின் கதையோட்டத்துடன் பொருந்தியிருப்பதை
    இக்கட்டுரையில் சுட்டியிருப்பது சிறப்பு.
    ஏழு குறுந்தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள இக்கட்டுரை கோவில் அமைப்பு,  அபிடேக முறை, பாடல்முறை, பலியிடுதல் முதலியனவற்றைத் திறம்பட எடுத்தியம்புகிறது. மக்கள் வாழ்வியலை ஒட்டி வாழிபாட்டுமுறை இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
    வழிபாட்டின் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து கூறும் முடிவுரைக் கருத்துகள் குறுகத் தரித்த, செழிப்பான தன்மையுடன் விளங்குகின்றது.
    சிலம்பு  வழிபாடு  குறித்த கருத்துகளை, பிற  இலக்கியங்களில் கூறப்பட்ட வழிபாட்டு முறைகளுடன் ஒப்பிட்டு விரிவான ஆய்வுத் தொகுப்பாக வழங்க முயற்சி செய்யலாம். குறுந்தலைப்பின் கீழ்வரும் கருத்துகளை விரிவாக்கிப் பெரிய அளவில் ஆய்வுத்தொகுப்பாக வழங்கலாம்.

    படிக்கப் படிக்க வியக்க வைக்கும், சிலம்பில் கொட்டிக்கிடக்கும் ஆழமான வாழ்வியலின் ஒரு துளியாக இக்கட்டுரை தரும் வழிபாட்டுச் செய்திகள் சிலம்பு அனுபவத்துக்கு மேலும் நயம் கூட்டுகின்றது.  


     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 252

    படக்கவிதைப் போட்டி – 252

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிரேம்குமார் சச்சிதானந்தம் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (05.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 251-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. அமுதா ஹரிஹரனின் இந்த ஒளிப்படத்தைப் படக்கவிதைப்போட்டி 251க்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்படக்கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    கண்ணாமூச்சி விளையாடும் இந்தப் பிள்ளைகள் போல் சில நேரங்களில் விதியும் மனிதர்களோடு கண்ணாமூச்சி விளையாட்டில் இறங்கிவிடுகின்றது. அதனை வெற்றிகொள்ள மனிதர்படும் பாடு சொல்லும் தரமன்று. எனினும் அறிவின் துணைகொண்டு மானுடம் ஊழையும் உப்பக்கம் காணும் எனும் நம்பிக்கையோடு வாழ்க்கைப் பயணத்தை வையத்தில் தொடர்வோம்!

    இந்தப் படத்துக்குக் கவிதையெழுத வாருங்கள்! உங்கள் கவின் கருத்துகளைத் தாருங்கள்! என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!

    *****

    ”காரிருள் தனிலும் கலக்கம் வேண்டாம்; மறுபடியும் வெளிச்சக்கீற்று வந்தே தீரும்; முயற்சி முடிவில்(லா) வெற்றியே தரும்” என்று நம்பிக்கை தீபத்தைக் கவிதையில் ஏற்றுகிறார் திருமிகு. நித்யா சுந்தரம்.

    கண்டுபிடி….கண்டு பிடி…

    இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும்
    இடையில் ஓரிழை தூரமே!
    நம்பிக்கையின் விளிம்பு
    தட்டுத்தடுமாறும் கைகளில்
    வசப்படும் எனும் வானளாவிய புரிதலில்…
    வாழ்வெனும் மாயக் கண்கட்டு விளையாட்டில்
    கண்களில் தெரிவதும் தவறாய்ப் போகலாம்….
    இதோவெனக் கைக்கெட்டும்
    இடைவெளி முடிவில் கானல்நீர் ஏமாற்றலாம்…
    காரிருள் தனிலும் கலக்கம் வேண்டாம்
    மறுபடியும் வெளிச்சக்கீற்று வந்தேதான் தீரும்…
    முயற்சியென்றும் முடிவில்லா வெற்றியே!
    கைதவறிப் போனதெல்லாம்
    கரம்சேரும் தருணம் நீயும்
    இருளுக்குள் விழித்து இறுகப்
    பற்றிவிட்டால் எல்லா நாளும்
    இன்ப ஒளியே!..
    இயல்பாய் வானமும் வசப்படும் அந்நாளிலே!….

    *****

    ”அண்மையில் சென்றால் ஒட்டுமென்ற தொற்றுநோய் வந்ததும் கண்கட்டு விளையாட்டும் கானலாகிப் போனதே!” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    காலம் மாறியது…

    கண்ணைக் கட்டிக் களிப்புடனே
    காடு மேடெலாம் விளையாடிய
    எண்ண மெல்லாம் வருகிறதே
    எல்லாம் மாறிப் போனதுவே,
    அண்மையில் சென்றால் ஒட்டுமென
    அகன்றே விலகிச் செல்வதுடன்
    மண்ணில் மாந்தர் முகம்மறைக்கும்
    மாய நோயதும் வந்ததுவே…!

    *****

    ”கொல்லும் கொரனா மனித வாழ்வைக் கொள்ளை கொண்டதனால் கூடிவாழ்ந்த நமதுவாழ்வு குலைந்து போனதடா! இந்தக் கொடுமைதீர இறைவா நீ வழிகாட்டு!” என்று இறையிடம் முறையிடுகின்றார் திரு. கருணானந்தராஜா.

    கண்ணைக்கட்டிக் காட்டில்விட்ட
    கதையாய் ஆனதடா – யாவும்
    கனவாய்ப் போனதடா.
    எண்ணிக்கூடப் பார்க்க முடியா(து)
    எல்லாம் மாறுதடா இனிமேல்
    எதுவும் இல்லையடா
    நாலுபேர்கள் தூக்கிப்போக நமக்கு ஆளில்லை –
    நம்மைச் சூழவிருந்த சுற்றம் நமக்குத் துணையில்லை
    கொல்லும் கொரனா நமதுவாழ்வைக்
    கொள்ளை கொண்டதடா!
    கூடிவாழ்ந்த எமதுவாழ்வு குலைந்து போனதடா!
    கொரனா வென்னும் மரணப் பொறியில்
    கூட்டாய் வீழ்ந்தோமே – நாம்
    கொத்துக்கொத்தாய் வீழப்போகும் குழியைப் பறித்தோமே!
    அரனே அல்லா உடனே வந்தெம் நிலையைப் பாராயோ
    ஆற்றலிழந்தோம் எம்கண்கட்டை அவிழ்த்து விடுவாயோ
    சொந்தம் சுற்றம் தூர விலகும்
    துயரைப் பொறுப்போமோ- நாம்
    தூய்மை தேடி வாழ்வின் இனிய
    சுகங்கள் மறப்போமோ
    இந்தக் கொடுமை என்றுதீரும் இறைவா வழிகாட்டு
    எமது வாழ்வை மீட்டு இந்த இன்னல்தனை நீக்கு!

    *****

    ”ஒற்றச் சோரனாய் வந்திட்டப் பார்ப்பிணி நம்மை அண்டாதகல, சித்தமருந்தைச் சித்தத்தில் வைத்துப் போற்றுமின்! அதன்மூலம் தொற்று நோயைத் தொற்றா நோயாக்க முயல்மின்!” என்று தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தைச் செப்புகின்றார் திருமிகு. அவ்வைமகள்.  

    தொற்றும் கால்கள்? வெற்றுக் கால்கள்? தோற்றம்
    தோற்றினும் அவையே வைரக் கால்கள்!
    சுற்றிக் கட்டியக் கண்களை எத்திடும் கால்கள்
    எற்றிடங் காட்டியே வைரசை லகுவாய் ஓட்டிடும்
    ஏற்றினார் கட்டில் அவர் கட்புலன் சோருமேல்
    முற்றுமோ தேடல் தொடர்வறியாமல்?
    அற்றைப் பதங்கள் நகர்த்திய வளியும்
    சொற்றைத் துறந்த மூச்சும் இறக்குமோ?
    மாற்றிய பாதையில் மற்றவர் போவதால்
    பற்றிய பாதையை மாற்றவு மெண்ணுமோ?
    நேற்றிய தாவரமருங்கிலாடும் ஞானப் பிள்ளைகாள்!
    ஏற்ற முகனில், மறைகீறிட்ட நோக்கில், தாவரந்தர
    ஊற்றிடும் ஒளி, அருள் புரிதலைக் கண்டமின்!
    ஒற்றச் சோரனாய் வந்திட்டப் பார்ப்பிணி இன்று
    செற்றம் காட்டாது ஓடிடச் செய்யுமின்! “சித்தமருந்தில்
    ஒற்றம் வாரா! பிணியண்டாதகலும்!” எனவே பகர்மின்!
    “முற்றும் கண்டிலராதலால் முழுதாயறியுமின்!” என்றே
    “உற்றிடம் இருந்து மற்றவர் எழுக! ஆய்க!” என்னுமின்!
    “தொற்றுக் கொரோனா எம்மவர் முறையால் ஒழிந்துறும்
    தொற்றா நிலையினை அறியுமின்!!” என்றே அறிவியுமின்!!
    “கற்றிடும் வித்தை கண்க(கா)ட்டி வித்தைதான்!” உங்கள்
    சுற்றமும் நட்பும் கூடிப் பகர்மின்!! ஆழப்பகர்மின்!
    ஒற்றை வாழ்க்கைத் தாளாது மனிதம்! இனியென்றும் அது
    ஒற்றிப் பற்றியே வாழந்திட வாழ்வியல் செய்யுமின்!!

    *****

    நாசியைக் கட்டச்சொன்னால் கண்ணைக் கட்டிவிளையாடும் பிள்ளாய்! கொரோனாவை ஒழிப்பதற்கு விழித்திரு! விலகியிரு! வீட்டிலிரு! என்று விழிப்புணர்வூட்டும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய மற்றொரு கவிதையில், ”நெருக்கத்தில் இருப்பவனை நெருங்கிவந்து பிடித்து விடு!
    அவன் சட்டெனவே ஓடுகின்றான்; விரைந்தோடிப் பிடித்து விடு!” என்று கண்கட்டிய பிள்ளைக்குக் கருத்தாய் வழிகாட்டவும் செய்கின்றார். 

    கொரோனா!

    நாசியைத் தான் கட்டச் சொன்னோம்
    நீ கண்களைக் கட்டியதேன்?
    ஒருவருக்கொருவர் இடைவெளி என்றோம்
    அவனை எம்பியெம்பி பிடிப்பதேன்
    கைகளைக் கழுவு என்றோம்
    நீயோ களியாட்டம் போடக் கண்டோம்
    ஊரடங்கு உத்தரவென்றோம்
    நீங்கள் வீதிகளில் ஆடக் கண்டோம்
    சமுதாயக் கூட்டம் கூடாதென்றோம்
    உங்கள் சடுதியாட்டம் காணக் கண்டோம்
    உன் புன்னகை அருமைதான்
    இல்லையென்று சொல்லவில்லை
    சிறிது காலம் உன்பங்கும் அவசியம்தான்
    கொரோனாவை ஒழிப்பதற்கு
    விழித்திரு
    விலகியிரு
    வீட்டிலிரு கண்ணே
    குடும்பத்தோடிரு
    குதூகலமாயிரு
    ஒத்திவைப்பாய் விளையாட்டை
    ஒரு சில நாட்கள்தானே?
    உலகமே ஒளிமயமாக
    ஒன்றுபடுவோம் அதை ஒழிப்பதற்கே!

    *****

    அண்ணனோ நண்பனோ
    அருகிலிருப்பதாய் உன் உணர்வு
    கரம் பிடிக்கத் துடிதுடிப்பு
    வெண்பற்கள் புன்சிரிப்பு
    கறுப்பு வைரமாய் உன் கைகள்
    மண் தரையில் பதிந்திட்ட கோல் கால்கள்
    பின்னொருவன் பார்த்திருக்க
    முன் நின்ற(வ)னைப் பாய்வதேன்!!
    புல் தரையை விட்டுவிட்டு
    மண்தரையை ஏன் கண்டாய்
    மிருதுவான கால்களில்
    தூசிகள் படுவதற்கா?
    நெருக்கத்தில் இருக்கின்றான்
    நெருங்கி வந்து பிடித்து விடு!
    அவன் சட்டெனவே ஓடுகின்றான்
    உன் சந்தோசம் குறைந்து விடும்
    விரைந்தோடிப் பிடித்து விடு
    துள்ளித் துள்ளி நகைத்து விடு!
    கண் கட்டை அவிழ்த்திட்டோம்
    நீ காணும் பொருட்கள் சுழன்றனவோ?!

    *****

    ”மழைதரும் நீர்த்துளியை புழைசெய்து தேக்காமல், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் குற்றங்களை நிறுத்தாமல், அறியாமைக் காரிருளில் புரியாமல் நின்றுவிட்டு விதியாடும் கண்ணாமூச்சியென வீணாக உழலுகின்றேன்” என மானுடனின் பொறுப்பற்ற வாழ்வைப் பாட்டில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    கண்ணாமூச்சி

    மழைதரும் நீர்த்துளியை
    புழைசெய்துத் தேக்கிவைக்க
    வழியேதும் செய்யாமல்
    காலமதைக் கழித்திருந்தேன்!

    சுற்றுப்புறம் மாசு செய்யும்
    குற்றங்களை நிறுத்திடாமல்
    வெற்றுச் செயல்களையே
    கொற்றம் செய்ய விட்டுவிட்டேன்!

    புயல் வருமோர் காலந்தன்னில்
    சுயமுயற்சி ஏதுமின்றி
    இயலாமைக் காப்புப்பூட்டி
    முயலாமல் நின்றிருந்தேன்!

    பட்டுபோன பழமைகளை
    மனதினிலே தேக்கிவைத்துப்
    புதுமைகளைத் துரத்திவிட்டு
    புரட்சிக்காகக் காத்திருந்தேன்!

    அறியாமைக் காரிருளில்
    புரியாமல் நின்றிருந்தது
    விதியாடும் கண்ணாம்பூச்சியென
    வீணனாக உழலுகின்றேன்!

    *****

    ”நாமும் நம் உடன்பிறவாச் சொந்தங்களும் சுகவாழ்வு பெற்றிடவே இல்லுக்குள் அடைந்திருக்கும் நாம் கைதிகள் அல்லர்! தியாகிகள்!” என்று நல்விளக்கம் தருகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    ஆட்டம்
    பாட்டம்
    கொண்டாட்டம்
    தொடரட்டும்
    ஆனந்தம்
    பொங்கட்டும்
    அன்பு பெருகட்டும்
    கண்ணுக்குத் தெரியாத
    கிருமியுடன்
    கண்ணாம்பூச்சி ஆடுகிறோம்
    உறவுகளுடன்
    கை கோத்துப்
    பலம் சேர்த்து
    உயிருக்கு பயந்து
    வீட்டில் இருந்தே
    போராடுகிறோம்
    உடன் பிறவா
    சகோதர சகோதரிகள்
    உயிர் வாழ்க எண்ணியே
    வீட்டுக்குள்ளே
    சிறைப் பிடிக்கப்பட்ட
    கைதிகள் இல்லை நாம்
    தியாகிகள்

    நற்கருத்துகளைத் தம் கவிதைகளில் அற்புதமாய்த் தந்திருக்கும் படைப்பாளிகளைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    கண்ணாமூச்சி!

    கைக்கெட்டாக் கனிகளின்
    சுவைக்கு அலைந்து,
    கருத்தைக் கடந்தவற்றையும்
    கைப்பற்ற முயன்று,
    மூடியிருந்த கண்களுடன்
    மூளையும் சேர்ந்தே முடங்கி,
    கீறப்பட்ட ரணங்களால் சுருண்டு,
    அஞ்ஞானமெனும் இருளில்
    அடைபட்டிருந்தேன்!

    கட்டுகளை அவிழ்க்கும் அறிவற்றுத்
    தளைகளைத் தகர்க்கும் திறமிழந்து
    தெருவெலாம் திரிந்தழிந்தேன்!

    இகவாழ்வே கண்கட்டு வித்தையெனச்
    சுகவாழ்வின் நிலையேக நினைந்து
    இமைமூடிய இடுக்குகளில் வழிந்த
    உள்ளொளிக் கீற்றின் நுனிபற்றி
    ஞானமெனும் வானத்தையும்
    எட்டிப் பிடிக்கும் தருணம்
    கண்ணாமூச்சி முற்றுப்பெறும்!

    ”இகவாழ்வே ஒரு கண்கட்டு வித்தைதான்! இமைமூடிய இடுக்குகளில் வழிந்த உள்ளொளிக் கீற்றின் நுனிபற்றி ஞான வானை எட்டிப்பிடிக்கும் தருணம் கண்ணாமூச்சி முற்றுப்பெறும்!” எனும் வாழ்வியல் தத்துவத்தைத் தேர்ந்த சொற்களில் வெளிப்படுத்தியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு சக்திப்ரபா இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வுபெறுகின்றார்; அவருக்கு என் பாராட்டுகள்!

     

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)

    சேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ஆவதென்   நின்பால்   வைத்த  அடைக்கலப்   பொருளை  வௌவிப்
    பாவகம்    பலவும்  செய்து  பழிக்குநீ   ஒன்றும்  நாணாய் ,
    ‘’யாவரும்   காண  உன்னை   வளைத்துநான்   கொண்டே  யன்றிப்
    போவதும்  செய்யேன் ‘’ என்றான்   புண்ணியப்  பொருளாய்  நின்றான்.

    தில்லைமூதூர்க்  குயவராகிய  திருநீலகண்டரிடம் சிவவேதியராய் இறைவனே வந்து தம் கரத்தில் உள்ள  திருவோடு  ஒன்றனைத் தந்தார். ‘’இது சிறந்த ஓடு, இதனை உன் வீட்டில் பாதுகாப்புடன் வைத்து வை. பின்னர் ஒருநாள் வந்து இதைக் கேட்பேன்!‘’ என்றுரைத்துச் சென்றார். நீண்ட காலம் கழித்து அவரே திருநீலகண்டரிடம் வந்தார் . அவ்வேதியரை வணங்கி உரிய வழிபாடு செய்தபின்‘’ உங்களுக்கு அடியேன் செய்யத்தக்கது யாது?’’ எனக் கேட்டார்.

    ‘’முன்பு   உன்னிடம்  தந்து, பாதுகாப்பாய் வைத்திரு, என்று கூறி யாத்திரை சென்று மீண்டேன்! அந்தத் திருவோட்டை  இப்போது எடுத்துத் தருக!’’ என்று கேட்டார். திருநீலகண்டர் அந்தத் திருவோட்டை வீட்டினுள் வைத்த இடத்தில் தேடினார். அவ்வோடு அங்கில்லை. எல்லா இடங்களிலும் தேடினார். அக்கம் பக்கத்தில் இருந்தோரிடம் கேட்டுப் பார்த்தார். எங்கு  தேடியும்  அந்தத்   திருவோடு கிட்டவில்லை! மிகவும் வியந்து  அச்சம் கொண்டவராய் வேதியரிடம் சென்றார். ‘’எங்கு தேடியும் அந்தத் திருவோடு கிட்டவில்லை! யான் குயவன், ஆதலால்  வேறுஓர்  ஓடு செய்து  தருகிறேன்‘’ என்றார். அவர்பால்  பிணக்கம்  கொண்டவர்போல் அங்கேயே நின்று, நான் தந்த மண்ணாலான ஓட்டினைத் தருக!, வேறேதும் வேண்டா!’’ என்று கூறி நகராமல்  நின்றார். உடனே திருநீலகண்டர், ‘’மண்ணாலான ஓட்டைவிட மதிப்பு மிக்க பொன்னால் ஆன திருவோடு வாங்கித் தருகிறேன்!’’ என்றார். அடைக்கலப் பொருளை மீண்டும் கேட்டபோது தர இயலாத பழிக்கு அடியார் அஞ்சி, அவ்வோட்டை விடப்  புறமதிப்பு அதிகம் உள்ள பொன் ஓட்டைத்  தருவதாகக் கூறினார்!

    அதுகேட்ட  வேதியர் “உன்னால் இனி ஆகக் கடவது என்ன இருக்கிறது? உன்னிடம் அடைக்கலமாக ஒப்புவித்த ஓட்டினைக் களவு செய்து, பலப்பல வஞ்ச நடிப்புச் செய்துஅதனால் வரும் பழிக்கு ஒரு சிறிதும் நாணமடையாதவனாயினாய்; யாவரும்காணும்படியாக உன்னை வளைத்துப் பற்றி (எனது பாத்திரத்தை வாங்கிக்கொண்டே யல்லாமல் இங்கு நின்று ஓர் அடி பெயர்த்து) போவதுங்கூடச் செய்ய மாட்டேன்“ என்று புண்ணியங்களுக்கெல்லாம் பொருளாய் நின்ற வேதியராகிய  இறைவன் கூறினார்.

    விளக்கம் :-

    இப்பாடலில்  ஆவதென்  என்ற சீர், உன் உயிரறிவு என்ற பசுபோதம் கெட்டது. இனிமேல் உன் செயலாவது என்ன உள்ளது? என்ற குறிப்புடையது. அடுத்துப் ‘பாவகம்  பலவும் செய்து‘  என்ற தொடர் உண்மையாக அல்லாமல் உண்மைபோலப் பாவித்துச் செய்த செயலைக் குறிக்கும். ஒன்றை வேறொன்றாக எண்ணிச் செய்யும் செயலே  பாவனை ஆகும். தானே பாவித்துச் செய்தல், பிறரை அவ்வாறு பாவிக்கும்படி  செய்தல் என இருவகைப்படும். பிறர் தன்  பாசாங்கை  உண்மை என நம்பும்படிச் செய்தல். இது வஞ்சனையாகும்.

    இறையருளின் வண்ணமே நடந்து கொள்ளாமையால், ‘பழிக்கு அஞ்சும் நாணமும், அச்சமும் உன்னிடம் இல்லை’ என்று சிவவேதியர் குற்றம் சாட்டினார். இதனைப் ‘’பழிக்குநீ  ஒன்றும் நாணாய்‘’ என்ற தொடர் குறிப்பிடுகிறது. பொய் வழக்குப் போடுவது இறைவனின் கருனைச் செயலல்லவா?

    ‘பாவகம் பலவும் செய்து‘ என்ற தொடரில்  திருநீலகண்டத்தின் வைத்த உறைப்பேறிய பாவனை உபாசனையினாலே உலகப்பற்றை வென்றார் என்பதும், பழிக்கு நீ ஒன்றும்   நாணாய் என்ற விடத்து “நாடவர் பழித்துரை பூணதுவாக“ என்றாற் போல அப்பாவனையினாலேவரும் உலகநிலைப் பழிக்கு அஞ்சார் என்பதும் குறிப்பாக  விளங்குகிறது!

    யாவரும் காண   என்பதற்கு திருநீலகண்ட நாயனாரது  விளக்கமான தொண்டை  உலகம் காணக் காட்டுமாறு  வந்தவர்  என்பது   குறிப்பு.

    வளைத்து நான்கொண்டே யன்றிப் போவதும் செய்யேன் என்பதில் – உன்னையும் உன் மனைவியையும் சேர்த்துப் பிடித்துக் குடும்பத்துடன் என் உலகத்திற்கு உடன் கொண்டு போவதன்றி இங்கு நின்று அகல்வதில்லை என்ற பிற்சரிதக் குறிப்பும் காண்க.  இதுவே இறைவனின் சங்கற்பம்! இறைவன் அடியார்பால் கொண்ட பேரருளை இது குறிக்கிறது.

    புண்ணியப் பொருளாய் நின்றான் – உயர்வாகிய பதிபுண்ணியம் செய்யும் யாவரும் பெறும் பொருளாக நின்றவர், புண்ணியங்களின் குறிக்கோளானவர். நின்றான் – நிலைபெற்றிருப்பவர். நீங்க இயலாமையின் நின்றான் என்றார். நாயனார் இதுவரை செய்த புண்ணியம் எல்லாவற்றிற்கும் இவரே பொருளாயினார் என்ற குறிப்புமாம்.

    இப்பாடலால், இறைவனின் பேரருள், உறுதிப்பாடு, திருநீலகண்டரின் உள்ளத்து  உறுதி, அடியாரின் குடும்பத்தவர் பால் காட்டிய அருள் ஆகியவை விளங்கும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-131

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-131

    நாங்குநேரி வாசஸ்ரீ

    131. புலவி

    குறள் 1301

    புல்லா திராஅப் புலத்தை அவருறும்
    அல்லல்நோய் காண்கம் சிறிது

    பிணங்குத நேரம் அவுக அடையுத சங்கடத்த காணுததுக்காவ அவுகளத் தழுவாம செத்த பிணங்கி நில்லு.

    குறள் 1302

    உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்

    பிணங்கி நிக்கதுக்கும் சேந்து சந்தோசப்படுததுக்கும் இடையில இருக்க நேரம் சாப்பாட்டுல சரிஉப்பு சேத்துக்கிடது கணக்கா ஆவும். அந்த நேரம் சாஸ்தி ஆவுதது உப்புகரிச்ச சாப்பாடு கணக்காதான்.

    குறள் 1303

    அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்

    பிணங்கி நிக்குதவுகளோட பிணக்க வெலக்கி தழுவாம இருக்கது ஏற்கனவே சங்கடத்துல இருக்கவங்களுக்கு மேல சங்கடத்த உண்டாக்குதது கணக்கா ஆவும்.

    குறள் 1304

    ஊடி யவரை உணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று

    பிணங்கி இருக்கவுகளுக்கு புத்தி சொல்லி நேசம் வைக்காம விடுதது முன்னம் வாடி கெடக்க கொடிய அடிப்பாகத்துல அத்துப் போடுதது கணக்கா ஆவும்.

    குறள் 1305

    நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
    பூவன்ன கண்ணார் அகத்து

    நல்ல கொணத்தால ஒசந்தவுகளுக்கு அழகுதருதது பூ கணக்கா கண் இருக்க பெண்பிள்ளைங்க மனசுக்குள்ளார நடக்குத பிணக்கு ஆவும்.

    குறள் 1306

    துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று

    பெரும்பிணக்கும் சிறு பிணக்கும் இல்லையினா பழுத்துக்கொழுத்து ஓஞ்ச பழம் கணக்காவும், ஒண்ணுத்துக்கும் ஒதவாத பிஞ்சுகணக்காவும் காதல் பிரயோசனமில்லாமப் போவும்.

    குறள் 1307

    ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
    நீடுவ தன்றுகொல் என்று

    சேந்துஇருக்க சந்தோசம் நீட்டிக்குமோ இல்லையோன்னு ஏங்கி ரோசன பண்ணுததால பிணக்குலையும்  ஒருவகையான சங்கடம் இருக்கு.

    குறள் 1308

    நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
    காதலர் இல்லா வழி

    நம்மள நெனச்சுதான் வெசனப்படுதான்னு (வருத்தப்படுதான்னு)  உணந்துக்கிடதுக்கு காதலர் இல்லாத சமயம் வெசனப்படுததால என்ன பிரயோசனம்?

    குறள் 1309

    நீரும் நிழல தினிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது

    தண்ணிகூட வெயில்ல இல்லாம நிழலில இருந்தாத்தான் குளுந்து இனிமையா இருக்கும். அதுகணக்கா பிணக்கும் நேசம் இருக்கவுககிட்ட காட்டுனாதான் இனிமை.

    குறள் 1310

    ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
    கூடுவேம் என்ப தவா

    பிணங்குத நேரம் எனக்கு உணர்த்தி தெளிவிக்காம மனச வாட விடுதவுககிட்ட கிட்ட கூடிஇருக்கணும்னு எம்மனசு மொனையுததுக்குக் காரணம் அதோட ஆசதான்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-17

    குழவி மருங்கினும் கிழவதாகும்-17

    மீனாட்சி பாலகணேஷ்

    (உடைவாள் செறித்தல்)

    அரிதாகப் பாடப்பட்ட பிள்ளைப்பருவங்களின் வரிசையில் அடுத்து வரும் ஆண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவம் ‘உடைவாள் செறித்தல்’ என்னும் பருவமாகும். இப்பருவத்தைப் பற்றிப் பாடியுள்ள ஒரே நூலான கதிர்காம பிள்ளைத்தமிழில் இது  கடைசிப்பருவமாக வைக்கப்பட்டுள்ளது.

                ‘………………….. பன்னீ ராண்டினிற்
             கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்1 என்று இதனை பிங்கல நிகண்டு எடுத்தியம்பும்.

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் குழந்தை சிறுவனாகிப் பின் அரசுகட்டில் ஏறும்வரை வகைப்படுத்திப் பாடப்பெறும். அரசுகட்டில் ஏறுவதற்கு முந்தைய பருவமே ‘கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்’ என்பதாகும் எனக்கொள்ள இடமிருக்கின்றது. இது ‘உடைவாளினைக் காண்போர் விருப்பங்கொள்ளும்வண்ணம்  இடைக்கச்சில் அணிந்து கொள்ளுதல்’ எனப் பொருள்படும். அரசனாகப் போகும் இளம்சிறுவன், வாள், வில் வித்தைகளில் தேர்ச்சிபெற்று விளங்க வேண்டும். தனது வீரத்தை இவ்வித்தைகளைக் கொண்டு போர்களில் வீரச்செயல்கள் செய்து வெற்றி பெறுவதன் மூலம் வெளிப்படுத்தல் வேண்டும் என்பது அவனது நாட்டுக் குடிமக்களின் எதிர்பார்ப்பு. கிடைக்கப்பெற்ற மூன்று பாடல்களின் சிறப்பையும் நயத்தையும் காணலாம்.

    கொடியதொரு வேடன், மானைக்கொன்று அவ்விறைச்சியை வேலனுக்குப் படைத்து வழிபாடு செய்த தலமே வலவையாற்றங்கரையினில் அமைந்துள்ள கதிர்காமம் எனும் பதியாகும்.

    ஒருகாலத்தில் தாரகாசுரன் முதலான அசுரர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் குமரனின் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளில் வீழ்ந்து உளறிப்புலம்பி தம்மைக் காக்குமாறு முறையீடு செய்தனராம்; சிவபிரான் அவர்களிடம், “உமது தலைவனாகிய முருகன் இன்னும் சிறியவன்; மழலைச்சொல் பேசுபவன்; ஆதலால் இப்போது போருக்குச் செல்ல இயலாது. ஆகவே நான்கைந்து ஆண்டுகள் சென்றபின் நீவிர் வருக; இப்போது செல்க!” என்றான்.

    “அவ்வாறு கூறியவன் கொடியதான போருக்குச் சென்றுவரத் தன் மகனாகிய உன்னை (முருகனை) அனுப்ப முனைபவன் போன்று, உனக்குக் கச்சினில் உடைவாளைச் செறித்து அணிவித்துப் ‘போர்க்கலையைப் பழகுவாயாக’ என்று கூறினான். நீயும் அங்ஙனம் செய்வதனைப் பருவமங்கையர் தம் வாள்போலும் கண்களாற்கண்டு காமுறும்வண்ணம் உடைவாளை இடையில் செருகிப் பயிலுவாயாக!” எனக் கூறும் பாடலிது.

    ‘கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்’ எனும் இலக்கணக் கூற்றிற்கேற்ப இப்பாடல் மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்டதனைக் கண்டு வியந்து களிக்காமல் இருக்கவியலுமா?

                ஊன்குன்ற மாமசுரர் ………… ……………
                                உம்பரர் நுந்தையடிவீழ்ந்
                       துளறிப்பு லம்பிமுறை யிட்டனர் …..
                                உந்தையஞ் சற்கவென்று        
             …………………… நும் தலைவனின் னுஞ்சிறிஞன்
                                மழலையுநி ரம்பிற்றிலன்
                       வருகநா லைந்தாண்டி னிப்போக …………….
                                ………….. கடிதுபோர்க்குத்
             தான்சென்று வரவிடுப் பான்போலு நின்னைவாள்
                                சாலுடைசெ றித்தல்பயிலே
                       தகுமிளம் பருவமங் கையர்பிறழ்கண் வாளோடு
                                …………………… பயிலே2!

    இப்பாடலின் ஆசிரியர் ஒரு கம்பராமாயணக் கருத்தைத் தன் பாடலில் கொணர்ந்துள்ள அருமையையும் கண்டு இரசிக்கலாம்.

    விசுவாமித்திர முனிவன் தனது வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களை அழிக்கும்பொருட்டு இராமனை அனுப்பித்தருமாறு தசரதனிடம் வேண்டுகோள் விடுக்கிறான். துணுக்குற்ற தசரதன், “என் மகன் இராமன் சிறியவன்; படைக்கலங்களில் தேர்ந்த பயிற்சி இல்லாதவன்; ஆகவே நானே வந்து உமக்கு உதவுகிறேன்,” எனக் கூறுகிறான்.

                ‘படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய்
                       பணி இதுவேல் 3………….,

    என்பன பாடல்வரிகள்.

    இவ்வாறு அரிதாகப் பாடப்பட்ட பருவங்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்பட்டாலும் அவை புதுமையான நயங்களையும் கருத்துக்களையும் தொன்மங்களையும் கொண்டமைந்துள்ளன என நாம் உணர்ந்துகொள்ளலாம்.

    அடுத்த பாடலைக் காண்போம்:

    இது முருகனை உடைவாள் செறிக்க வேண்டுங்காலை, அவனது அருள்செய்யும் பெற்றியையும், அருளின் திறத்தையும் விளக்கும் பாடல்.

    எளியேங்களாகிய நம் புலன்களிற் பொருந்தும் ஆசையை ஒழித்த தன்மையானது ஐம்புலன்களையும் கேடுவராமல் காக்கின்றது; அதனால் அது ஓவியங்களமைத்து  நிரப்பிய  சட்டை அல்லது கவசம் எனும் மெய்யுறையாக உருவகிக்கப்படுகின்றது. முருகப்பெருமானே இந்த அவவாற்ற தன்மையை, ஆசைகளொழிந்த நிலையை நமது உள்ளத்திற் குடியிருந்து நமக்கு அளித்து அருள்பவன்.

    ‘ஆசை அறுமின்கள்! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்4!’ என திருமந்திரம் கூறுவது இதனால்தான் என்னவோ! இத்தகைய கேடு விளைவிக்கும் ஆசை எனப்படும் பற்றானது இருவகைப்படும்; அகப்பற்று, புறப்பற்று என்பன அவை. அதாவது தம்மிடமுள்ள பொருளை விடாமல் பிடித்துக் கொள்ளுதலும், தமதல்லாதவற்றைத் தாமடைய விழைவதுமாகும். இந்த இருவகைப் பற்றையும் இல்லாமற் செய்து தனது பொன்னாலான (செருப்பணிந்த) திருவடிக் கழல்களில் நம்மைச் சேர்த்துக் கொள்கிறான் முருகப்பெருமான். அது மட்டுமின்றி, அருள்சுரந்து குறுமுறுவல் பூத்து உபசரிக்கிறான். அத்தகையவன் இந்த கதிர்காமப் பெருமான்!

    அவன், இந்த அழகன் முருகன், உடைவாளை அணிந்துகொள்ளும் முன்பு அரைக்கவசம் எனப்படும் வட்டுடையை அதனைக் கட்டுவதற்குரிய கயிற்றுடன் முழந்தாளிலிருந்து இடுப்புவரை புதுமையானதொரு முறையில் விளங்குமாறு அழகாக விரித்துச் சுருக்கி, குறுக்கிக் கட்டி, தொடையும் இடுப்பும் மறைய உடுத்தியுள்ளான்; அந்த ஆடையின் விளிம்பில் அதனை எடுப்பாகக் காண்பிக்கும் பச்சைநிற மரகதங்கள் வைத்துத் தைத்ததும் சுருண்ட பாம்பினை ஒத்ததுமான கச்சினை அணிந்துள்ளான். அதன்மீது கடற்சிப்பிகள் உமிழ்ந்த முத்துக்களாலான வாளின் உறையைக் கச்சிதமாகப் பொருத்தி அணிந்து அதனுள் வயிரங்கள் பதித்த உடைவாளைஅவன் செறித்தருள வேண்டும் எனப் புலவர் வேண்டுகிறார்.

                பொருந்து மெளியே மவவின்மைப்
                                பொதியோ வியமெய் யுறைபோர்க்க
             ………………………………………….
                       முந்து குறங்கில் வட்டுடைஞாண்
                                முழந்தா டொடங்கி நுசுப்புவரை
             …………………………………………
                       விளிம்பிற் பச்சை மணிநிரைத்த
                                வெருள்பாம் பன்ன கச்சினையார்த்
             ………………………………………..
                       யெண்செந் நிலைக்கைப் பிடிவயிர
                                வீர்வாண் ஞானஞ் செறித்தருளே5!

    இங்கு வட்டுடையும், கச்சும் கலையின் செல்வமான நிரம்பிய அறிவும், அதன் தொடர்பாக உண்டாகும் நல்லொழுக்கமும் என உருவகிக்கப்பட்டன. அதன்மீது சாந்தத்தையே கைப்பிடி எனக்கொண்ட வாளினை, உறுதியான வயிரம் போலும் வாள் எனும் ஞானத்தை,  வேதங்களாலான உறையினுள் (எம் அகத்தே, உள்ளத்தில்) செறித்தருள் என முருகப்பெருமானிடம் அடியார் வேண்டுவதாக அமைத்துள்ளார் புலவனார். வாள் எனும் ஞானம் வேதம் எனும் வாளுறையில் பொருந்துகிறது. இப்பாடலுள்ளும் மற்றப் பாடல்களைப் போலவே அருமையான தத்துவக் கருந்து பொதிந்துள்ளது.

    அடுத்த பாடலும் இவ்வண்ணமே அருமையான கருத்தை உள்ளடக்கிப் பொலிகின்றது.

    முருகனுக்கு முன் செல்லும் பூதப்படைகளே அவனது சுற்றமாக விளங்குகின்றன. அவை வெற்றிபெற்றதாகக் கருதி வெற்றிக்கூத்தாகிய குணலைக் கூத்தினை ஆடின. பெருமைவாய்ந்த தேவர்கள் யாழினையும் குழலினையும் இசைத்தும் முழவினை அடித்தும் பூக்களைச் சொரிந்தும் செல்ல, முருகப்பெருமானைத் தாங்கிச்செல்ல அம்புபோல விரைந்து செல்லும், குடைபோலத் தோகையை விரித்த மயிலாக இந்திரனே வந்தான். போர்க்களத்தே இந்திரனே மயிலாக வந்து முருகனைத் தாங்கினான் என்பர். இவ்வாறு முருகன் போருக்கு எழுந்தருளுங்காலை, தமிழ்பாடும் ஞானத்தொண்டராகிய அடியார்களின் படையாகிய குழாம் வாயினால் ஒலியெழுப்பி ஆரவாரம் செய்தனர். ‘ஆவலங் கொட்டுதல்’ என்பது வெற்றி முழக்கங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படும். சூரனுக்கு அடிமையாக தேவர்கள் வாழ்ந்த வாழ்வு தொலைந்தது. படையெழுந்ததால் மூவுலகிலும் தூசிப்பொடி எழுந்து பரவிப் பூசியது. அறங்கள் செழித்து வளரவும், பகைவர் அச்சமுற்று நாணி உன்னை வணங்கவும் ஆகும்படிக்கு நீ மாலையணிந்த வாளினை இடையாடையில் அணிந்தருளுக! எனப் புலவர் வேண்டுவதாக அமைந்த பாடலிதுவாகும்.

                கூளிச் சுற்றத் தூசிப் பஞிலங்
                                குணலைக் கூத்தியலும்
                       கொன்புத் தேளிர் யாழ்குழல், முழவிசை
                                குவிபூப் பொதுளுமரோ
             …………………………………………
             தூளிப் பொடிமூ வுலகும் பூசச்
                                சூரடி மைவாழ்வு
                       தொலைவுற …………………..
             …………………………………………….
                                தார்வா ளுடைசெறியே
                       தமியேங் கதிர்மலை யாண்டகை! வாழி
                                தார்வா ளுடைசெறியே6!

    உடைவாள் செறித்தல் எனும் பருவமான இது மிக அழகான பருவம். பாடல்களால் போற்றிக் களிக்க மிகவும் அருமையான இப்பருவத்தை ஏன் புலவர்கள் பாடவில்லை எனும் வினா நம்முள்ளத்தே எழுகின்றது.

    இத்துடன் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் நிறைவு பெறுகின்றன. இனி வரும் பகுதிகளில் அரிதாகப் பாடப்பெற்ற பெண்பாற் பிள்ளைத்தமிழின் அருமையான பருவங்களைக் காண்போம்.

    பார்வை நூல்கள்:

    1. பிங்கல நிகண்டு- பாடல் 267- பிங்கல முனிவர்
    2. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்
    3. கம்பராமாயணம்- கம்பர், பாலகாண்டம். கையடைப்படலம். பா.
    4. திருமந்திரம்- திருமூலர்
    5, 6. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17

    தி. இரா. மீனா                                                                                                        

    சென்னபசவண்ணர்

    அல்லமாபிரபுவால் “ஞானி” என்று போற்றப்பட்ட சென்ன பசவண்ணர் சரணர்கள் மத்தியில் வயதில் சிறியவர். எனினும் நிறைந்த பக்குவமுடையவர். கூடலசங்கமம் இவரது ஊராகும்.பசவேசரின் புரட்சிகரமான போராட்டங்களில் பங்கேற்றவர். சித்தராமனுக்கு இஷ்டலிங்க தீட்சை தந்தவர். ”கூடல சென்ன சங்கமதேவா” இவரது முத்திரையாகும். ”சுவரவசனா“,  ”மந்திரகோப்யா”,  “மிச்ரார்ப்பணா“ போன்ற நூல்களின் ஆசிரியர்.

    1. “உடலில் இலிங்கம் இணைந்தபிறகு உடலே இலிங்கம்
    மனதில் இலிங்கம் இணைந்தபிறகு ஐம்பொறிகள் இலிங்கம்
    உயிரில் இலிங்கம் இணைந்தபிறகு ஞானபோகம் இலிங்கம்
    உடல் முழுவதிலுமான இலிங்கம் சர்வபோக இலிங்கம்
    கூடல சென்னசங்கம தேவனே.”

    2. “புறத்தில் செயல்படாமல்
    அகத்தில் அறிந்தென்ன?
    உடலில்லாவிட்டால் உயிருக்கும் புகலிடமேது?
    கண்ணாடியில்லா விட்டால் முகம் காணமுடியுமா?
    நம் கூடல் சென்ன சங்கமதேவன்
    உருவம் அருவம் இரண்டும் ஒன்றானவன்”

    3. “உணவிடுவது புண்ணியம் உடை தருவது அறம்
    பொருள் தருவது மேன்மை.
    மனம் உடல் வாக்கு தூய்மையுடன்
    கூடல சென்ன சங்கமதேவனை நினைப்பது முக்தி ”

    4. “அறிவையறிய கையில் அடையாளம் தந்தான் குரு
    அறிவை மறந்து அடையாளத்தை முதன்மையாக்கும்
    மனிதரைப் பார்ப்பாய்
    கூடல சென்ன சங்கம தேவனே “

    5. “பொருள் பெருமை நானெனும் பெருமை ,குலப்பெருமை நீக்காமல்
    ஜங்கம ஒழுக்கம் ,ஜங்கமபக்தி கிடைப்பதில்லை
    சொல்லின் ஜாலத்தில் மயங்கும் மக்களுக்கு
    ஜங்கம பக்தி எப்படியிருக்கும்?
    கூடல் சென்ன சங்கமதேவனே “

    6. “பறக்கும் பட்டமானாலும் நூல் துணை வேண்டும்
    வீரனானாலும் பயிற்சி வேண்டும்
    வண்டியோட தரை வேண்டும்
    இலிங்கத்துடன் உடலிணைந்திருக்க வேண்டும்
    கூடல சென்ன சங்மகதேவருள் இணையாமல்
    இலிங்கத்தை விட்டவனெனச் சொல்லலாமா?”

    7. “முன்னோர் வசனமென்ன ,பாதையில் கிடைக்கும் பணமா?
    ஒவ்வொரு வீடு சென்று போதிப்பதும் மகிழ்விப்பதும்
    பக்தியின் இடமா ? ஜங்கமத்தின் இடமா?
    பக்தன் என்பவன் சேவகன்.
    இயல்பற்றவர்களை எனக்குக் காட்டாதே
    கூடல சென்ன சங்கமதேவனே “

    8. “இருந்தும் கட்டுப்பட்டவன் இல்லை
    சுற்றி வந்தும் மாசுடையவன் இல்லை
    எதனோடும் யாரோடும் சேராமல்
    உண்மையாய் இணைந்தவன்
    வேண்டும் வேண்டாம் என்றில்லாமல்
    அழிந்தும் அழியாமல் கற்பூர மலையை
    அனல் பற்றியது போல இருப்பான்
    கூடல சென்ன சங்கம இலிங்கத்தில் இணைந்தவன் “

    9. “இல்லாத மாயயைத் தன்னுள் வைத்து
    ஆளுமைக்கு மயங்குவதேன்?
    இல்லாத மாயையை இல்லையென அறியாமல்
    குழம்பி நின்று தவிப்பதேன் ?
    எல்லாவற்றிலும் தன்னையே தானறிந்து பார்த்தால்
    தானே கூடல சென்ன சங்கய்யனன்றி வேறில்லை “

     10. “குரு ஒருவனே ,இலிங்கம் ஒன்றே
    மனைவிக்கொன்று ,மகனுக்கொன்று அண்ணனுக்கொன்று
    பணிப்பெண்ணுக்கொன்று என இலிங்கமிராது.
    ஒரு வீட்டிற்கு குரு இலிங்கமென இரண்டிருப்பின்
    மகிழமாட்டார் ,நம் கூடல சென்ன சங்கமனின் அடியார் “

     11. “அந்தரங்கம் பகிரங்கம் இரண்டுமழியாமல்
    அறிவொழுக்கம் தன்வயமாவதில்லை.
    அறிவொழுக்கம் தன்வயமாகாமல்
    இலிங்கவொளி காணமுடியாது இலிங்கவொளி காணாமல்
    கூடல சென்ன சங்கமய்யனுள் அமைதியில்லை  “

    12. “பக்தனுக்கும் இறைவனுக்கும் ஒரே உணவென்பர்
    இதை நாம் அறிகிலேம்
    உடலில் இலிங்கம் கொண்ட பின்னர்
    இலிங்கத்திற்கும் தனக்கும் ஒரே உணவேயன்றி
    வேறு உணவுண்டோ?
    வேறுவுணவிருப்பின் உடலில் இலிங்கம் தரிக்க இயலுமா?
    இந்த இரகசியம் அறிவான் கூடல சென்ன சங்கமதேவனே “

    13. “விரும்பாத வரையில் காமதேனு தருவதில்லை
    கற்பனை இல்லையெனில் கற்பகத்தரு தருவதில்லை
    சிந்தனை இல்லாத போது சிந்தாமணி தருவதில்லை
    நினைக்காத வரையில் சிவனருள் கிடைப்பதில்லை
    விருப்பமின்றி,கற்பனையின்றி சிந்தனையின்றி,நினைவின்றி
    இருப்பினும்உன்னடியார் தருவர் கூடலசென்ன சங்கம தேவனே”

    14. “உறுதியோடு தாஸோகம் செய்யும் சரணர்
    ஏழையாயின் அவருக்கு உதவி செய்து வழிபட்டு
    மீண்டுமவரை தாஸோகம் செய்ய வைத்தால்
    அவரே ஜங்கமன்,அவருக்கு வணக்கம்
    அதுவன்றி முன்னாள் செய்தீர் இந்நாள் செய்வீரென்று
    கண்டனம் செய்பவர் ஜங்கமராவாரோ?
    வெறும் பிறப்பைச் சுமப்பவர் கூடல் சென்ன சங்கமதேவனே”

    15. “உடல் பிரம்மசாரியாகி என்ன பயன்
    ஆசை பிரம்மச்சாரி ஆகவில்லையெனில்?
    வார்த்தைகள் மௌனமாகியென்ன
    நினைவுகள் மௌனமாகவில்லையெனில்?
    உடல் நிர்வாணமாகியென்ன
    உள்ளம் நிர்வாணமாகவில்லையெனில் ?
    கூடல சென்ன சங்கமதேவனே
    உன் சரணரின் இடத்தை
    யாரும் தன்வயப்படுத்த முடியாது”

    16. “ஏரியில் பார்க்கும் போது நீரென்பேன்
    வீட்டிற்குக் கொண்டு வந்தால் தீர்த்தமென்பேன்
    கடையில் இருக்கும்போது நெல் என்பேன்
    அது வீட்டிற்கு வந்தால் புனித தானியமென்பேன்
    சமைக்கும் போது உணவென்பேன்
    பிறருக்குத் தரும் போது பிரசாதமென்பேன்
    அஞ்சி அதை எச்சிலென்றால்
    விரதம் தவறியவனென்பேன்
    கூடல சென்ன சங்கம தேவனே “

    17. “பிறர் வீட்டைத் தன் வீடென்றெண்ணும் குருவி போல
    மண் பொருள்,பெண் ஆகியவை தனதென்று எண்ணி
    உயிர் துடித்துச் சாகிறது,
    படைத்தவன் கூடல சென்ன சங்கமதேவன் என்றறியாமல் ”

    18. “உடல் காமம் உள்ளக் காமம்
    பொருள் காமம் உணவு உடை காமமன்றி
    இலிங்கத்தை விரும்புபவரை
    கூடல சென்ன சங்கமதேவனென்பேன் “

    19. “நெய் ,உறை நெய் இரண்டிற்கும் வேறுபாடுண்டோ?
    தீபத்திற்கும் ஒளிக்கும் வேறுபாடுண்டோ?
    உடலுக்கும் உயிருக்கும் வேறுபாடுண்டோ?
    பாலுக்கும் சுவைக்கும் வேறுபாடுண்டோ?
    உருவமே அருவமென்றறிந்து
    அங்கலிங்க நட்பில்லாதவரின் உறவு கெடுதலென
    கூடல் சென்ன சங்கமதேவனின் சரணர் சொல்வதில்லை “

    20.  “வேண்டுமென்பது மனித குணம்
    வேண்டாமென்பது ஆசையற்ற குணம்
    இரண்டும் நல்லதன்று
    இரண்டைப் புறக்கணித்து வாழ்பவன்
    கூடல சென்ன சங்கம தேவனின் சரணராவர் “

                                                                   [தொடரும்]   

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை

    மீ.விசுவநாதன்

    “முன்னுரை”

    இன்று  திங்கள் கிழமை (30.03.2020) தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்த ஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் எழுபதாவது பிறந்த தினம் (வர்த்தந்தி தினம்).

    பதினொரு வருடங்களுக்கு முன்பு “அம்மன் தரிசனம்” ஆன்மீக மாத இதழில் தொடராக வெளிவந்த “ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை” என்ற கவிதைத் தொடரை மகாஸ்வாமிகளின் பிறந்த தினமான இன்று முதல் (30.03.2020) ஒவ்வொரு திங்கள்கிழமையும் “வல்லமை” மின்னிதழில் தொடர்ந்து வெளியிட உள்ளோம்.

    அன்பர்கள் அனைவரும் ஆரோக்கியமும், மன அமைதியும், வளமையும் பெற்று வாழ குருவின் அருளை வேண்டுகின்றேன்.

    அன்பன்,

    மீ.விசுவநாதன்

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை

           (காப்பு)

    வாரண மூர்த்தி நல்ல
       வரப்பிர சாதி யான
    தோரண வாயி லோனைத்
       துதிசெய நன்மை ஓங்கும்;
    பூரண ஞானப் பிள்ளை
       பொலிகிற பிள்ளை யாரே
    ஆரண மென்பர் மேலோர்
       அவரடி போற்று கின்றேன். (1)

         “குரு வணக்கம்”

    மூடரைச் சான்றோ(ன்) ஆக்கி
        முதலவன் காணச் செய்து  
    சீடரைப் ஞானி ஆக்கும் 
       சிருங்ககி ரிக்கோன், முத்தித்
    தேடரை, மோக மற்ற
       திருவினை, நல்லோர் நித்தம்
    பாடவே வாணி வந்தாள்
       பாரதீ தீர்த்த ரென்றே.              (2)

     பிறந்த ஊரும், நதிக்கரையும்

    குண்டூ ரென்னும் ஊரில்
       குளிர்ந்து பாயும் ஆறு
    பண்சேர் “நாகு லேரு”;
      பவானி சங்கர் என்னும்
    மண்விண் காக்கும் ஈசன்
      மகிழ்வாய்க் கோவில் கொண்டு
    கண்கள் திறந்து பார்த்துக்
      கனிவாய் அருள்வர் உண்மை.    (3)

     “சீதா ராம ஆஞ்சநேயலு”

    வேத வாழ்க்கை வாழும்
       “வேங்க டேச வதானி”
    பாதம் வணங்கிச் சேர்ந்த
       பண்பாள் “அனந்த லெக்ஷ்மி”
    ஐந்தாம் பிள்ளை யாக
       அவனி வந்த முத்து;
    அந்தச் செல்வன் “சீதா
       ராம ஆஞ்ச நேயர்”.   (4)

           அதிசயம்

    மூன்றாம் வயதில் ஓர்நாள்
       ஓவென் றழுத போது
    ஏன்தா னென்று ஏங்கி
       இறைவன் முன்னே அன்னை
    வேண்ட, அழுகை நின்று
       சிவனைப் பார்த்த பிள்ளை
    வேண்டி “சம்போ” வென்று
      வீழ்ந்து பணிந்த தென்பர்.  (5)

       

    பண்பும் படிப்பும்

    வருடம் செல்லச் செல்ல
       வளர்ந்த தறிவு, பண்பு;
    பெருகும் அறிவுத் தாக
       வெள்ளம் அறிந்து கொண்டு
    அக்கா பிரிய மாக
      அன்பாய்க் கற்றுத் தந்தார்;
    அக்கா லம்பொற் காலம்
       அவருக் கமைந்த தாகும்.  (6)

    ஆஞ்ச நேய லுவின்
       அபார ஞானம் கண்டு
    வாஞ்சை யாகப் பாடம்
       வழங்கப் “பிரதா பகிரி”
    வந்தார்; பாடம் சொன்னார்;
      மனது மகிழ்ந்து சீடன்
    சிந்தை ஒன்றிக் கற்ற
      சிறப்பில் மகிழ்ந்தா ரம்மா.   (7)

           உபநயனம்

    ஏழு வயதில் பூணூல்
       இனிது நடந்த பின்பு
    ஆழ மாக வேத
       அறத்தைப் பற்றிக் கொண்டு
    கூழோ கஞ்சி ஏதோ
       கொஞ்சம் குடித்து நன்கு
    வாழும் பண்பு தன்னை
       வரமாய்க் கொண்டு விட்டார்.  (8)

    நித்ய கர்மா செய்வார்
       நெஞ்சில் காமம் நீக்கும்
    “சத்கா யத்ரி” சொல்வார்
       சத்யம் தவற மாட்டார்
    உத்த மத்தன் தந்தை
       உயிராம் வேத பாடம்
    நித்தம் சொல்லக் கேட்டு
       நிறைவாய் அடங்கி நின்றார்.  (9)

    கருவில் கேட்ட நல்ல
       கருத்துக் கதைக ளெல்லாம்
    திருவாய் அமைந்த தாலே
       “கிருஷ்ண யஜுரும்” கற்றார்;
    பெருமை பெற்றார் பெற்றோர்;
      பிறரும் மெச்ச நாளும்
    அருளை அள்ளி அள்ளி
       ஆண்ட வனவர்க் கீந்தார்.    (10)

                                                                          (யாத்திரை தொடரும்)

    Share
  • ஆட்கொல்லி

    ஆட்கொல்லி

    சி. ஜெயபாரதன், கனடா

    ஆட்கொல்லி , ஆட்கொல்லி
    நச்சுக் கிருமி இது !
    உடனே கொல்லாத
    நாட்கொல்லி  இது !
    யுகப்போராய்
    ஞாலத்தில் தீப்போல் பற்றிவரும்
    காலக் கிருமி இது !
    மனிதரால் உண்டாகி,
    மனிதரால் பரவி,
    மனிதரைக் கொல்லும் கிருமி இது !
    உலகை ஒன்றாக்கி,
    ஒருவரை ஒருவர் மதித்து,
    உதவி செய்ய இணைத்த கிருமி  இது !
    ஒளிந்திருந்து சில நாளில்
    உயிரைக் குடிப்பது !
    கடவுளுக்கு அஞ்சாதவன்
    குடலும் நடுங்குது !
    குவலயம் ஒடுங்குது !
    கத்தியின்றி
    ரத்த மின்றி யாவரும் புரியும்
    யுத்தமிது !
    செத்துப் போவார்
    சிலர் !
    பித்துப் பிடிப்பார் சிலர் !
    நித்தம் தவிப்பார்
    சிலர் !
    ஜாதிப் போரில்லை  இது !
    மதப்போ ரில்லை !
    இது இனப்போரில்லை !
    ஊமைப் போராய்த் துவங்கி
    உலகப் போராய்
    இமைப் பொழுதில் மூண்டு
    விசுவரூபம் எடுத்த
    அசுரப் போர் இது !
    ஆட்கொல்லி,  நாட்கொல்லிக்கு
    வேட்டு வைப்பது
    எப்படி ?

    Share
  • அன்பின் உறவே

    அன்பின் உறவே

    சக்தி சக்திதாசன்

    நான் இங்கிலாந்திலே நீயோ
    தாயகத்திலே
    வசதிகள் நிறைந்தது இதுவென்றும்
    வசதிகள் வளர்ந்திடும் நாடு அதுவென்றும்
    வாயோயாது உரைத்திடும் பலருண்டு
    ஆனால் இன்றோ!
    உனக்கும் ஊரடங்கு எனக்கும் ஊரடங்கு
    வசதிகள் நிறைந்திடினும் வசதிகள்
    வளர்ந்திடினும் வேறுபாடு தெரிந்தா
    கொரோனா நுழைந்தது ?
    எனக்கொரு மதம், உனக்கொரு மதம்
    எனக்கொரு மொழி, உனக்கொரு மொழி
    நானொரு நிறம், நீயொரு நிறம்
    நீயொரு ஜாதி, நானோரு ஜாதியென
    எத்தனை, எத்தனை பேதமை பார்த்து
    வக்கிரமாக பற்பல உயிர் கொய்தோம்
    அகிலம் முழுவதும் நிறைந்திட்ட மாந்தர்
    அனவரும் ஒன்றேயென்று வேறுபாடின்றி
    அழித்திட வந்தது கொரோனா வைரஸே
    கொரோனாவை அழித்திட போராடும்
    உலக வைத்திய சுகாதார மன்றம்
    மருந்து தேடி உலகெங்கும் ஆய்ந்திடும்
    மருத்துவ உலகம் போராடிக் கொண்டே
    எல்லைகள் இல்லா உலகமிது
    எல்லைகள் வீணெ வகுத்த மனிதனை
    எள்ளி நகையாடுதோ இந்த கொரோனா?
    உலகம் என்ற உருண்ட பந்தில்
    உண்டு, இல்லை என்றே மனிதன்
    உள்ளதை வைத்தே எடைபோட்டு வாழ்ந்து
    உருவாக்கி விட்டதோர் தன்னல சமுதாயம்
    உயிரைப் பணயம் வைத்தேமைக் காத்திட
    உழைத்திடும் வைத்தியர், தாதியர்,
    சுத்தம் பண்ணிடும் ஊழியர் அனைவரும்
    ஆண்டவன் அளித்திட்ட செல்வங்கள்
    அவர்கள் காக்கப்பட்டால்தான் நமதிந்த
    அகிலம் காக்கப்படும் உணர்ந்திடு உறவே!
    சராசரி மானிடனாய் எம்மிடம் அவர்கள்
    எதிர்பார்ப்பது ஒன்றே சற்றே காலம்
    விலகியிரு என்பது ஒன்றே எந்தன் உறவே!
    இதைச் செய்திடக்கூடவா எமது
    தன்னலம் தடைபோடுது ? . . . .

    Share
  • குறளின் கதிர்களாய்…(294)

    குறளின் கதிர்களாய்…(294)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(294)

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்.

           – திருக்குறள் –305 (வெகுளாமை)

     புதுக் கவிதையில்…

    தன்னைத் தான்
    துன்பம் வராமல்
    காத்துக்கொள்ள விரும்பிடில்,
    தன் மனத்தில்
    கோபம் வராமல்
    காத்திட வேண்டும்..

    அவ்விதம் காவாதபோது,
    அச்சினம்
    தன்னையே அழித்திடும்
    துன்பங்கள் தந்தே…!

     குறும்பாவில்…

    தன்னைத்தான் காத்திடக் கோபம்
    தன்மனதில் எழாமல் காத்திடவேண்டும்,
    இலையேல் தன்னையேயழிக்கும் அக்கோபமே…!

    மரபுக் கவிதையில்…

    தனக்குத் துன்பம் வந்திடாமல்
         தன்னை யொருவன் காத்திடத்தன்
    மனதில் சினமது தோன்றிடாமல்
         முயன்று காத்திடல் அவசியமே,
    சினமதைக் காவா திருந்துவிட்டால்
         சீக்கிரம் முடிவது வந்திடுமே,
    சினமதே யழித்திடும் அவன்தனையே
         சிதைத்திடும் துன்பம் பலதந்தே…!

    லிமரைக்கூ..

    சினமெழாமல் காத்திடவேண்டும் மனத்திலே
    தனையொருவன் காத்திடவே, அவ்விதம் காக்காவிடில்
    அழிந்திடுவான் அவனேயச் சினத்திலே…!

    கிராமிய பாணியில்…

    கோவப்படாதே கோவப்படாதே
    எதுக்கும் கோவப்படாதே
    மனசால எப்பவும் கோவப்படாதே..

    தன்ன ஒருத்தன் காக்கணுண்ணா
    தனக்கு மனசாலக்
    கோவம்வராமக் காக்கணுமே,
    அதுபோலக் காக்கலண்ணா
    அந்தக் கோவமே
    ஆபத்தாகி
    அவன அழிச்சிடுமே..

    அதால
    கோவப்படாதே கோவப்படாதே
    எதுக்கும் கோவப்படாதே
    மனசால எப்பவும் கோவப்படாதே..!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-130

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-130

    நாங்குநேரி வாசஸ்ரீ

     130. நெஞ்சோடு புலத்தல்

    குறள் 1291

    அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
    நீயெமக் காகா தது

    ஏ நெஞ்சே! அவுகளோட நெஞ்சம் அவுகளுக்கு தொணையா நிக்குதப்போ நீ மட்டும் எனக்குத் தொணையாகாம அவுகள நெனச்சு உருகுதது ஏன்?

    குறள் 1292

    உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
    செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

    நெஞ்சே நம்ம மேல நேசம் வைக்காதவர்னு தெரிஞ்ச பொறவும் வெறுக்க மாட்டாகனு நம்பி அவுக பொறத்தால போவுதுயே.

    குறள் 1293

    கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
    பெட்டாங் கவர்பின் செலல்

    நெஞ்சே! நீ என்னய உட்டுப்போட்டு அவுக பொறத்தால போவுதது சங்கடத்தால வெசனப்படுதவங்களுக்கு சேக்காளி இருக்க மாட்டாக ங்குத நெனப்புலயோ.

    குறள் 1294

    இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
    துனிசெய்து துவ்வாய்காண் மற்று

    நெஞ்சே! நீ சண்டபோட்டு பொறவு கூடிச் சேந்து அனுவிக்கலாம்னு நெனக்க மாட்ட. அதனால அதப்பத்தி உங்கிட்ட யார் பேசப்போவுதாங்க. நான் பேச மண்டேன்.

    குறள் 1295

    பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
    அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு

    என் நெஞ்சம் காதலரக் காங்கலன்னு சங்கடப்படும் வந்த பொறவு உட்டுப்போட்டுப் போயிடுவாகளோன்னு சங்கடப்படும்.

    குறள் 1296

    தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
    தினிய இருந்ததென் நெஞ்சு

    காதலரப் பிரிஞ்சு ஒத்தேல கெடந்து ரோசன பண்ணுதப்போ எம்மனசே என்னயத் தின்னுபோடுதது கணக்கா சங்கடமா இருந்திச்சு.

    குறள் 1297

    நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
    மாணா மடநெஞ்சிற் பட்டு

    அவுகள அயத்துப்போவ முடியாம திணருத என் கூறுகெட்ட மனசோட சேந்து நான் என் வெக்கத்தையும் அயத்துக் கெடக்கேன்.

    குறள் 1298

    எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
    உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

    பிரிஞ்சுபோன அவுகள எளக்காரமா நெனச்சா தனக்கும் தாழ்ச்சினு நெனச்சு எம் மனசு அவுகளோட ஒசந்தகொணத்தையோ நெனப்புல வச்சிக்கிட்டிருக்கும்.

    குறள் 1299

    துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி

    சங்கடம் வருத நேரம் உரிம உள்ள நெஞ்சமே தொணையா நிக்கலன்னா வேற யாரு வருவாக?

    குறள் 1300

    தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
    நெஞ்சம் தமரல் வழி

    நம்மளோட நெஞ்சமே நம்மகிட்ட ஒட்டுஒறவா இல்லாதநேரம் அல்லசல் ஒட்டாம இருக்கது சுளுவு.

    Share
  • பன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு

    பன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு

    முனைவர் சு. சத்தியா,
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை,
    பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  தஞ்சாவூர்.

    **********

    சங்க காலத்திலிருந்து இன்றுவரை எண்ணற்ற புலவர்கள் தோன்றித் தமிழின் பெருமையையும் தமிழனின் வாழ்வியலையும் அவர்தம் படைப்புகள்வழிப் பறைசாற்றி வருகின்றனர். அவர்களுள் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனத்தில் நிற்பவர் யார்? என்றால் குறிப்பிட்ட நபர்களைத்தாம் நம்மால் சொல்ல முடியும். அக்குறிப்பிட்ட நபர்களுள் தமிழுக்காகத் தம் வாழ்நாளையே அர்ப்பணித்த பெருமைக்குரியவர்தாம் பன்மொழிப் புலவர் மு.ச. சிவம். இவர்தம் வாழ்வையும் தமிழ் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய பணிகளையும் வெளிக்கொணர்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    பிறப்பும் வாழ்வும்

    சேலம் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்திலுள்ள உஞ்சனைக் கவுண்டம் பாளையம் கிராமத்தில் 1936இல் நெசவுத்தொழிலாளியான முருகேசன், பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தாம் மு.ச.சிவம் எனும் சதாசிவம் ஆவார். சிறுவயதிலிருந்தே தந்தையுடன் இணைந்து நெசவுத்தொழிலை செய்துகொண்டே திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார். பிறகு, அருகில் உள்ள உலகப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை பயின்றார். “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பதற்கு ஏற்ப, ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே 11-ஆம் வகுப்புத் தமிழ்ப்பாடத்திலுள்ள கம்பராமாயணம், திருக்குறள், நளவெண்பா முதலியவற்றைப் படித்து தமிழின்மீது அளவில்லாத காதல் கொண்டார். மேலும் திருச்செங்கோட்டிலுள்ள உயர்நிலைப் பள்ளிக்கு மிதிவண்டியிலேயே சென்று படிப்பினைத் தொடர்ந்தார். இரவு வெகுநேரம்வரை தறிக்குழியில் மிதிப்பலகை ஓட்டித் தந்தை நெய்யும் நெசவுத்தொழிலுக்கு உறுதுணையாய் இருந்துள்ளார். தறி நெய்யும்போது பக்கத்திலேயே புத்தகத்தை வைத்துப் படித்து வந்துள்ளார். மனப்பாடப் பகுதிகளைத் தாளிலே எழுதிவைத்து மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்பும்போதும் படித்த வண்ணமாக இருந்துள்ளார்.

    இத்தகு விடாமுயற்சியால் 1952இல் நடைபெற்ற பள்ளி இறுதித்தேர்வில் 77 விழுக்காடு எடுத்து முதல் மதிப்பெண் பெற்று பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவ்வளவு மதிப்பெண் பெற்றவருக்கு மேல்படிப்பினைத் தொடரமுடியாத வறுமைநிலை! பெற்றோரோ தவித்தனர். என்ன? செய்வதென்ற இனம்புரியாத வேளையில், உறவினர்களின் உதவியால் மேல்படிப்பினைத் தொடர வாய்ப்புக் கிடைத்தது. தன்னுடன் உயர்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் க.ர.கந்தசாமி அவர்கள் உதவியால் இலயோலாக் கல்லூரியில் கணிதப்பிரிவைச் சிறப்புப் பாடமாக எடுத்து பயின்றுள்ளார். கணக்கு இவரை முழுவதும் வணங்கியது. தமிழோ இவரை முழுதும் ஆட்கொண்டது. ஓய்வு நேரங்களில் தமிழ் நூல்களைப் பயின்றவர் உள்ளத்தைக் குறுந்தொகை கொள்ளைகொண்டது. இடைநிலைத்தேர்வு முடிந்ததும் தமிழ்மேல் உள்ள அளவில்லாத காதலால் தமிழ்த்துறையில் தடம்பதித்தார்.

     தமிழ்த்தேடல்

    1953இல் இலயோலாவில் படிக்கும்போதே விடுப்பு எடுத்துவிட்டு பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் வகுப்புக்குச் சென்று அவரது அனுமதி பெற்றுப் பாடம் கேட்டுள்ளார். தம் நண்பரின் உதவியால் மு.வ. அவர்களின் அனுமதியுடன் அவரை ஒருநாள் ஆசானாக ஏற்று அகநானூற்றுப் பாடத்தைக் கேட்டு மகிழ்ந்ததோடு நில்லாமல் தன்னையே தமிழுக்கு அர்ப்பணித்தார். கவிஞர் மரிய விசுவாசம் தொகுத்த “முயற்சியின் வழிகாட்டி மு.வ.” என்ற நூலில் “என் ஒரு நாள் பேராசிரியர்” என்ற தலைப்பில் மு.ச.சிவம் அவர்கள் சில பாடல்களை எழுதியுள்ளார். பேராசிரியர் அன்பழகன் அவர்கள் வகுப்பில் சென்று பாடம் கேட்டுள்ளார். இத்தகு விடாத்தேடலால் தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். எதிர்பாராத விதமாகத் திரு.வி.க. அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றது இவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

    பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் தமிழ்த்துறையில் படிக்கத் தொடங்கினார். அங்குதான் பல்துறை வித்தகரானார். அனைத்துத் துறைக்கும் சென்று மாலைதோறும்   நடைபெறும் சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்று பல்துறை அறிவையும் வளர்க்கலானார். ஆர்வமுடன் வடமொழித் துறைக்குச் சென்று சிறப்புச் சொற்பொழிவுகளைக் கேட்டவர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் ஓராண்டு ஆங்கில வகுப்பில் படித்த பெருமைக்குரியவர். அவ்வப்போது நடைபெறும் பெரியாரின் சொற்பொழிவினை ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தவர்.

    உந்துதல் சக்தியாக அமைந்தவை       

    காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன், தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ச.வே.சுப்பிரமணியம், தென்மொழி ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திருக்குறளார் வீ. முனுசாமி போன்றோரின் உரைகள் இவரின் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உந்துசக்தியாக இருந்தன.

    பரிசும் பாராட்டும்

    1954-இல் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையைப் படித்து பாராட்டினைப் பெற்றார்.

     1955-1956 இரண்டு ஆண்டுகளிலும் தொடர்ந்து டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆராய்ச்சிப் பரிசினைப் பெற்றார். மேலும், திருக்குறள் அமைச்சியல், மணிமேகலை எனும் தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிப் பாராட்டினைப் பெற்றார்.

     1955-இல் குறுந்தொகை விளக்கம் என்ற நூலைத் திறனாய்வு செய்து எழுதிய கட்டுரைப் போட்டியில் மகாவித்துவான் ஆர். இராகவையங்கார் ஆராய்ச்சிப் பரிசினை வென்றார். அதே ஆண்டில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

    1956-ஆம் ஆண்டில் திருச்சி சிந்தனைக் குழுவினர் நடத்திய திருவள்ளுவர் உருவக் காட்சிப் போட்டியில் நூறு பக்கத்துக்குமேல் ஆய்வுக் கட்டுரை எழுதி முதல் பரிசு 100 ரூபாயும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் பெற்றார்.

    இவ்வாறு படிக்கும்போதும் பணியாற்றும்போதும் பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற பெருமைக்குரியவர் ஆனார்.

    புகழ் பெற்ற நண்பர்களுடனான தொடர்பு

    குமரிஅனந்தன், தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம், வேலூர் வேலம்மையார் போன்றோருடன் படித்த பெருமைக்குரியவர். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழ்ப் பேராசிரியர் பெ.வரதராசன், டாக்டர் சோ.ந. கந்தசாமி போன்றோரிடம் தோழமை கொண்டவர்.

    மு.ச.சிவத்தின் பொன்மொழி

    “படியாத நாளெல்லாம் பிறவாநாளே”
    “படியாமல் ஒருநாளும் படுக்கவேண்டா”

    ஒரு நாளில் 24 மணிநேரம்தான் இருக்கிறது என்று வருத்தமுற்றவர். 1959-இல் திருமணம் செய்து கொண்டவர். குடும்பத்தைவிடப் புத்தகமே உலகம் என்று கல்விசார் நிலைக்கே முதலிடம் கொடுத்து வாழ்ந்துள்ளார்.

    ஆசிரியர்! நூலகர்! பன்மொழிப் புலவர்!

    கோவை அரசினர் கலைக்கல்லூரியில் ஓராண்டு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். நூல் பசி! அறிவு பசி! என்று வாழ்ந்தவருக்குச்  சென்னைக் கீழ்திசைச் சுவடி நூலகத்தில் நூலகர் பணி கிடைக்கவே மகிழ்வோடு பணியாற்றிட முனைந்தார். வேலை பார்த்துக்கொண்டே மாலை நேரங்களில் பிரெங்சு, இந்தி, வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றார்.

     பதிப்பும் அகராதித் தொகுப்பும்

    சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் பதிப்பாசிரியராகப் பணியில் சேர்ந்து பதிப்பித்தல், அச்சுப்பிழை திருத்தல், கட்டுரைகள், நூல்கள் எழுதுதல், அகராதிகள் தொகுத்தல், மொழிபெயர்த்தல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டதோடு நில்லாமல் செயலாக்கப்படுத்தவும் முனைந்தார்.

     “A SHORT  ACCOUNT  OF  SANGAM  LITERATURE”  எனும் ஆங்கில நூலினை 1961இல் எழுதி வெளியிட்டுள்ளார். இருபது ஆண்டுகளாக அகராதிப் பணியில் தம்மை முழுதும் அர்ப்பணித்துப் பல்வேறு அகராதி நூல்களைத் தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவர். அவை,

    1. அடுக்குமொழி அகராதி
    2. ஒலிக்குறிப்பு அகராதி
    3. ஒருபொருட் பன்மொழி அகராதி
    4. ஐம்பொறி அகராதி
    5. கருத்துக்களஞ்சியம்
    6. மன அகராதி
    7. பல பொருள் அகராதி
    8;. காரணப்பெயர் அகராதி
    9. பெண்மைச்செல்வம்
    10. பெண்ணோவியம்
    11. எதுகை இன்பம்
    12. அழகுத்தொடர் அகராதி
    13. தமிழின் அழகுகள்
    14. நயமொழி அகராதி
    15. அகப்பொருள் அகராதி
    16. இலக்கியச் சொல்லகராதி
    17. இலக்கியச் சொற்றொடர் அகராதி
    18. உவமை அகராதி
    19. உருவக அகராதி
    20. தொடர் அகராதி

    இவ்வாறு 150க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றித் தமிழுக்கும் தமிழனுக்கும் பெரும் புகழினைத் தேடித்தந்துள்ளார்.

    வெளிநாட்டவரின் பாராட்டு

    1972இல் அமெரிக்கக் கவிஞர் எட்வர்டு லூடர்சு  தலைமையில் ஐத்ராபாத் அமெரிக்க ஆய்வுக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் வால்ட் விட்மனின் கவிதைச் சிறப்பினை ஒருமணி நேரம் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரிய மாண்பாளர். மேலும், யுகோஸ்லோவியா நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் இவரது அகராதித் தொகுப்பினைப் பார்த்துப் பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது, எண்ணற்ற ஆங்கில நூல்கள், 25க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிப் பல்வேறு அறிஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

    “இலக்கியங்களை உணருவதற்குக் கருவியாக இருப்பதுடன் தானே இலக்கியமாகத் திகழும் சிறப்பினைப் பெற்றது அகராதி” என்பதை உலகுக்கு உணர்த்தியவர் மு.ச.சிவம் என்றால் மிகையாகாது! இவரது படைப்புகள் ஆய்வு மாணவர்களுக்கு ஆய்வுக்குரிய களமாகும். இவரது ஒவ்வொரு படைப்பினையும்  தனி ஆய்வுத் தலைப்பாகக் கொண்டு ஆய்வு செய்யலாம். மேலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இவரது படைப்புகள் ஒரு வழிகாட்டியாய் அமையும் என்பது திண்ணமே!

    *****

    பார்வை நூல் 

    பன்மொழிப் புலவர் மு.ச.சிவம் வாழ்க்கைக் குறிப்புகளும் தமிழுக்குச் செய்த ஆக்கப் பணிகளும், புலவர் இரா. வடிவேலன், முத்துநாராயணன் அச்சகம், ஈரோடு, முதற்பதிப்பு 1980.

     

    Share