அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

பிரேம்குமார் சச்சிதானந்தம் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (05.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 252

  1. கன்றிலே ஒன்றாய்…

    பயமதை அறியாக் கன்றுகளைப்
    பாசம் ஒன்றாய்ச் சேர்த்திடுமே,
    வயலில் மேய்ந்திடும் பசுமாடு
    வந்தே ஊட்டிடும் கன்றுக்கே,
    வெயிலில் ஆடிய பிள்ளைகளும்
    வந்து சேர்ந்தார் கன்றுடனே,
    செயலில் பெரியோர் செய்யாததைச்
    சின்னஞ் சிறிதுகள் செய்திடுமே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. எங்க வீட்டுக் கண்ணுக்குட்டி இனிமையான செல்லக்குட்டி
    திங்கப் புல்லைக் குடுத்திட்டாலும் தேடித்தாயை ஓடும்குட்டி
    முட்டி முட்டிப் பால்குடிக்க மோதி மோதித் தாய்மடியை
    எட்டிக் எட்டிக் கவ்வும் குட்டி எம்பி எம்பிக் குதிக்கும் குட்டி

    எங்க வீட்டுப் பாப்பாவுக்கும் என்றுபாலை மிச்சம் வச்சி
    பங்கு போட்டுக் குடிக்கும் குட்டி பாசமுள்ள ஆசைக்குட்டி
    அங்க இங்க எண்ணு சொல்லி அடிக்கொருக்கா பாயுங்குட்டி
    தங்கமான குணம்படைச்ச தாவி வந்து அணையும் குட்டி.

    கிட்டப்போயி அணைச்சிட்டாலும் எட்டித் திமிறி ஓடிடாது
    கட்டிப் புடிச்சிக் கொஞ்சினாலும் காலையுதறி எகிறிடாது
    பட்டுப்போல உடம்பும் நல்ல பாசங்கொட்டும் முகமும் கொண்ட
    கெட்ட குணம் எதுவுமில்லாக் கீழ்ப்படியும் தங்கக் கட்டி

    தாயை மேய அனுப்பினாலும் தானுமட்டும் தொழுவத்தில
    காயக்காய நிக்கும் குட்டி கண்டு விட்டா எங்கமீது
    பாயநின்னு தவிக்கும் குட்டி பாலை மறந்து மகிழும் குட்டி
    தூய நெஞ்சில் அன்புகாட்டி துயர்மறந்து துள்ளும் குட்டி.

    மாலை நேரம் அம்மாவர மகிழ்ந்து கொஞ்சி செல்லங்காட்டி
    பாலைக் குடித்துப் பசியைப்போக்கி பாப்பாவுக்கும் வைக்கும் குட்டி.
    வாலைத்தூக்கி நிமிர்த்திக்கோண்டு வாளி பாஞ்சி ஓடும்குட்டி
    சோலையெல்லாம் துள்ளித்துள்ளி சோர்வில்லாமல் திரியும் குட்டி

    (வாளி பாய்தல் – இளங்கன்றுகள் சுற்றிச்சுற்றிப் பாய்ந்தோடுதல்)

  3. படக்கவிதை 252

    இளங்கன்றை இறுக்கிப் பிடிக்கும்
    இளஞ்சிறார்கள் நீங்கள்தானோ
    வாய் நிறையப் புன்னகைக் குவியல்
    வாரியணைத்த மகிழ்ச்சியால்தானோ

    உங்கள் புன்னகையில் கள்ளமில்லை
    அவைப் பூத்துக் குலுங்கும் பன்னீர்ப் பூக்கள்
    நீங்கள் வாரியணைத்தக் கன்றும் கூட
    வாகாய்தான் சிரிக்கிறதே

    கோமாதா நம் குலமாதாவெனப்
    போற்றுகின்ற உலகமிது
    அதன் கோமியமும் சிறந்த மருந்தென்று
    சொன்னாரே முன்னோர் அன்று

    பால் மட்டும் பொழிகின்ற
    பசுமாடாய் இல்லையவள்
    நம்மையெல்லாம் ரட்சிக்கின்ற
    காமதேனு தெய்வமவள்

    பசுஞ்சாணத்தை உரமாக்கி
    எரிவாயுவும் அதிலுருவாக்கி
    எண்ணிலடங்கா வளம் நல்கும்
    கற்பக விருட்சமவள்

    பாய்ந்தோடக் காத்திருக்கும்
    பசுங்கன்றை விடுங்கடா
    பரிதவிக்கும் அதன் தாயோடு
    மனம் களிக்கப் புறளட்டும்

    சுதா மாதவன்

  4. உங்கள் கைகளால் கட்டிப்போட்ட
    கன்றினை அவிழ்த்து விடலாமே
    அது பாய்ந்தோடக் காத்திருக்கு
    பாசத்தாயைக் காண்பதற்கு

    ஆயர்பாடிக் கண்ணனாய் நீங்கள்
    ஆழிமழைக் கண்ணனும் நீங்கள்
    என் கண்களுக்குத் தெரிகிறீர்
    கன்றினை அணைத்தப்படி
    நான் காணும் உங்கள் கோலம்

    தாய்ப்பசு எதிரில் வருகிறதா
    தாவித்திரிய கன்றும் முயல்கிறதா
    அதன் சுதந்திரத்தைப் பறிக்காதீர்
    கரம் கொட்டி அனுப்பி விடும்
    உறவோடு சேர்த்து விடும்
    தாயென்ற உறவோடு சேர்த்து விடும்

    சுதா மாதவன்

  5. வீட்டுக் கன்றுக்குட்டி

    வீடு முழுதும் துள்ளிச் செல்லும்
    காடு முழுதும் சுற்றித் திரியும்
    நாடியாரும் வரும் போதெல்லாம்
    ஓடிப் பதுங்கி ஒளிந்து அவரை
    ஓரக்கண்ணால் பார்த்திருக்கும்
    கள்ளங்கபடமின்றி கனிவாய் நின்றிருக்கும்
    எல்லைகள் ஏதுமின்றி எங்கும் திரிந்து வரும்
    தொல்லைகள் பல செய்தாலும்
    சுகமாய் அவைகள் தோன்றும்
    பிள்ளையும் கன்றும் ஒன்றாய் எங்கள்
    வாழ்க்கையில் கலந்தே இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *