இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 12

அவ்வைமகள்

(பேராகிப் பேருக்கோர் பொருத்தமாகி)

சமயம் எனும் உயர் அறிவியலை விவாதித்த பின், சமயத்திலும், அறிவியலிலும் புரட்சிகள் முளைப்பதன் தன்மையைக் காணுதல் பொருத்தமானதாகும்.

சமுதாயத்தில் புரட்சிகள் உருவாகுவதற்கு, பல்வேறு காரணங்கள் உண்டு என்பது அறிஞர்களின் பொதுக்கூற்று [1]. இத்தகு காரணங்களை, பொதுவாக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் என்று இருவகையாகக்  கூறு படுத்தி, அவர்கள் அலசுவது வழக்கம். எனினும், பொருளாதார, அரசியல் காரணங்களைக் காட்டிலும், ஒரு புரட்சிக்கு, சமூகத் தீர்மானிகள்  (Social Determinants) தாம் மிகுந்த வலிமையான காரணங்களாக இருக்கின்றன என்பது ஒரு சார் அறிஞர்களின் கோட்பாடு (Theory).  அதே நேரத்தில், அறிஞர்களில் மற்றொரு சாரார் முன்வைப்பது, யாதெனில். பொருளாதார, அரசியல், மற்றும் சமூகத் தீர்மானிகள் ஆகிய இவை மூன்றையும் தாண்டி, தேசத்திற்கு வெளியே இருந்து வரும் புறக்காரணிகள் (External Factors)  தாம் ஒரு புரட்சியை உருவாக்குகின்றன என்பதே.

இவ்வாறு வகுத்தும் பகுத்தும் பற்பல அறிஞர்கள் காட்டியுள்ள புரட்சிக்கான பல்வேறு காரணங்களை அலசி ஆராய்ந்துவிட்டு, அவற்றைச் சற்றே நெறிப்படுத்தி, புரட்சியின் முதன்மைக் காரணங்கள் இவைதாம் என  அறிஞர்கள் கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறார்கள்:

 • வீரியம் குறைந்த பொருளாதார வளர்ச்சி (Mid-level Economic Development)
 • சுயமான குடியாட்சி அல்லாமல் வாழுதல் (Nondemocratic Regime)
 • அரசின் திறனற்ற தன்மை (State Ineffectiveness)

தேசத்திற்கு அப்பாலிருந்து வருகிற புறக்காரணிகள் பற்றி அறிஞர்கள் பேசுவது யாதெனில், அவை புரட்சிக்கு முதன்மைக் காரணிகளாக அமைவதில்லை என்றாலும் புரட்சியைத் தூண்டுவதில் வெகுவலிமையான துருப்பாய் – பொறியாய் விளங்குகின்றன என்பதே.

சமூகப் புரட்சிகள் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள் இவ்வாறு வழங்கியிருக்கிற சாராம்சத்தை நம் மொழியில், எளிமையாக, நமக்கு நாமே ஒரு விளக்கமாக அளிப்போமேயானால்,

தாம் வாழும் தேசத்துக்கு அப்பாலிருந்து வரும் புறக்காரணிகள், மனித சிந்தனையைத் தூண்டிவிட, அத்தூண்டுதல் தரும் உத்வேகத்தில், புதியதோர் வெளிச்சம் பிறக்க, அவ்வெளிச்சத்தில், தன் சமூகத்தை பீடித்துள்ள வீரியம் குறைந்த பொருளாதார வளர்ச்சியும், தம் மக்கள், சுயமான குடியாட்சி அல்லாமல் வாழும் அவதியும், தம்மை ஆளுகின்றவனின் ஆட்சியின் திறனற்ற போக்கும், ஒருவருக்கு அறிவுப் பூர்வமாயும், உணர்வுப் பூர்வமாயும் புலப்படும்போது, அங்கே  புரட்சி உருவாகிறது.

என்று கொள்ளலாம்.

வள்ளலாரை, ஒரு புரட்சியாளர் என்று நம்மில் அனைவரும் கருதுகிற வேளையில், வள்ளலார், புரட்சியை வித்திடுவதற்கு ஏதுவாக மேற்கண்ட சூழல்கள் ஏதேனும் இருந்தனவா என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

இதுபற்றி சிந்திப்போம்:

வள்ளலார் வாழ்ந்த காலம்: அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874

நமது வரலாற்றை ஒரு பின் நோக்குப் பார்வையாகப் பார்க்கிறபோது, வள்ளளார் பிறந்த ஆண்டே ஒரு பிரிட்டிஷ் இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு என அறிகிறோம் [2]. அதையடுத்து, அவர் ஐம்பத்தியொரு ஆண்டுகள் வாழ்ந்த முழு வாழ்க்கையின்  காலமானது, இந்தியாவின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் என்பதும் புலனாகிறது [3]. அக்ககாலக் கட்டத்தின் நிகழ்வுகளை (குறிப்பாக அவர் சென்னையை விட்டு வெளியேறிய காலகட்டம் – 1858 – வரை) இங்கே கீழே பட்டியலிடுகிறேன்:

 • அனுபவமின்மைக்கும் தற்குறித்தன்மைக்கும் பெயர்போன பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக, ஆம்ஹெர்ஸ்ட், 1823 ஆகஸ்ட் 1 அன்று பதவியேற்று, முதல் பர்மியப்போர் எனப்படும் முதலாவது பர்மாச் சண்டைக்கு வித்திடுகிறார்.
 • 1824 நவம்பர் 1, 2 தேதிகளில் பாரக்பூர் கிளர்ச்சி வெடிக்கிறது.

முதலாம் பர்மாச் சண்டையில் சென்று போரிடுமாறு இந்திய சிப்பாய்கள் பணிக்கப்பட்டு, போர்க்கப்பல்களில் ஏறிப்போய் பர்மா சென்று போர்புரிய உத்தரவிடப்படுகிறது. “இது அதர்மம்” என்று இந்தியச் சிப்பாய்கள் மறுக்க, அவர்களது மறுப்பினை  ஏற்க மறுத்த ப்ரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள், இந்தியச் சிப்பாய்கள், கட்டாயம் பர்மா சென்று போர் புரிந்துதான் ஆக வேண்டும் என்று கட்டளையிடுகிறது.  இதன் விளைவாக எழுந்தது தான், இந்திய சிப்பாய்களின் பாரக்பூர் கிளர்ச்சி. பிரிட்டிஷ் இராணுவம், கிளர்ச்சியாளர்கள்  மீது பீரங்கி தாக்குதல் நிகழ்த்த, அதில் 180 இந்தியச் சிப்பாய்கள் சுட்டுப்பொசுக்கப்பட்டார்கள். அடுத்து, 12 பேர் தூக்கிலடப்பட்டனர். சிப்பாய்த் தலைமையில் இருத்த அனைத்து இந்தியர்களையும் நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக ஆங்கிலேயர்களே நியமிக்கப்படுகிறார்கள்.

 • பிரிட்டிஷ் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் நடந்த சண்டை முதல் பர்மியப்போர். வீரர்கள், போர்க்கருவிகள் என மனித இழப்பும் பொருள் இழப்புமாக மிகப்பெரிய அளவு நட்டத்தை இரு நாடுகளுமே சந்தித்தன. முதல் பர்மியப் போரின் இறுதியிலே மிகபெரிய பொருளாதார வீழ்ச்சியை பிரிட்டிஷ் இந்தியா சந்தித்து அதனால் அக்காலக் கட்டத்தில், பஞ்சம், பட்டினி, நோய்கள், என்  இந்திய மக்கள் அவதிப்பட்டதை நாம் அறிகிறோம்.
 • பணம் சம்பாதிப்பதுதான் எம் கொள்கை, என்கிறதான் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை, ஆம்ஹெர்ஸ்ட் ஏற்படுத்திய மனித நட்டம், பொருள் நட்டம், போராயுத நட்டம், பண நட்டம் என எல்லா நட்டத்தையும்  கூட்டிப்பார்த்துவிட்டு, “தலைமைப் பொறுப்புக்கு லாயக்கற்றவன்” என்று முடிவு கட்டி, அவரை, 1828 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 13,ஆம் நாள் பதவியிலிருந்து விலக்க, அவர், பிரிட்டனுக்குத் திரும்பிபோக ஆணையிடப்பட்டு வெளியேற்றப்படுகிறார்.
 • 1835 ல், மெக்காலேவின் பரிந்துரையின் பேரில் ஆங்கிலக் கல்விச் சட்டம் அமுலுக்கு வருகிறது. இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மேற்கத்தியப் பாடங்களை, இந்தியர்கள் ஆங்கிலத்தின் மூலம் படிக்க ஏற்பாடாகிறது. இந்தியமொழிகளின் வாயிலாகக் கல்வி பயிலுவதற்கு மானியங்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன. இந்தியப்பாரம்பரிய முறையில், நடந்து வந்த கல்விக்கூடங்கள் (ஒரு சிலவற்றைத் தவிர) இனி இயங்கலாகாது என்று அறிவிக்கப்படுகிறது. வெளி நாட்டிலிருந்து கிறித்துவ மத அமைப்புகள இந்தியாவில் கல்வி கூடங்கள் அமைக்க, ஊக்கம் அளிக்கப்படுகிறது (இதில் நம்மவரான ராஜா ராம் மோகன் ராய்க்கு பெரும் பங்கு உண்டு) [4].
 • டல்ஹசி பிரபுவின் அவகாசியிலிக் கொள்கை (1848 லிருந்து

1856 வரை) அமுலுக்கு வந்து சதாரா, ஜெய்பூர், சம்பல்பூர், நாக்பூர், சான்சி, தஞ்சாவூர், உதய்பூர் ஆகிய மன்னர் சமஸ்தானங்களை பிரிட்டிஷ் அரசு அபகரித்துக் கொண்டது

 • முடிந்ததது போல் தெரிந்த பர்மாச் சண்டை, இரண்டாம் பர்மாச் சண்டையாக வெடிக்கிறது (Apr 5, 1852 – Jan 20, 1853).
 • 1857 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 29, மங்கள் பாண்டே எனும் இந்தியச் சிப்பாய், பாரக்பூரில் நிகழ்த்தியதோர் துணிச்சலான களேபரத்தால், அதனைத் தொடர்ந்து அவன் ஏப்ரல் 8, 1887ல் தூக்கிலடப்பட்டுக் கொல்லப்பட்டதும், நாடு முழுவதும் அதிர்ச்சியும் கலக்கமும் ஏற்படுகின்றன.
 • 1857 மே மாதம் 10 ஆம் நாள் வெடித்த சிப்பாய்க் கலகம் – நாடு முழுவதும் பரவுகிறது.
 • மே 31, 1857 ல்,சென்னை திருவல்லிக்கேணியில் முஸ்லிம்கள் கூடி, ஹைதராபாத் நிஜாமின் அழைப்பை ஏற்று,  பிரிட்டிஷுக்கு எதிராக, புனிதப்போர் நடத்த அறைகூவல் விடுக்கிறார்கள்.
 • 1858 ஜூன் 20 ஆம் நாள் சிப்பாய்க் கலகத்தை, குவாலியரில். பிரிட்டிஷ் இராணுவம் வெற்றிகொள்ள அதனால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி, அவமானம், கெடுபிடிகள், கொடூரச்செயல்கள் என இந்திய தேசம் படாத பாடுபடுகிறது.
 • 1858 ஆகஸ்ட் 2 ஆம் நாள், இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act) அரங்கேறுகிறது இதன் படி, இந்தியா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகையிலிருந்து நீக்கப்பட்டு, இங்கிலாந்தில் உள்ள British Crown எனப்படும் உச்சபட்ச ஆட்சி அமைப்பின் நேரடிப் பொறுப்பில் கொண்டுவரப்படுகிறது. சிப்பாய்க் கல்கத்தால் ஏற்பட்ட பின்விளைவு இது. இந்தியாவில், இன்னமும் கெடுபிடித்தன்மையின் கடினத்தை அதிகரிப்பதற்கான முதன்மை ஏற்பாடு இது.

இந்நிலையில் தான் வள்ளலார், சென்னையிலிருந்து இடமாற்றம் செய்துகொண்டு சிதம்பரம் சென்று, அங்கிருந்து கருங்குழிக்குச் சென்று அங்கு 9 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாவாறு  இருந்த நிலையில், அவரது சமரச வேத சன்மார்க்க சங்கம் முதலான பணிகள் தொடர்கின்றன.

மேலே வரிசைப்படுத்தியிருக்கிற 12 இத்யாதிகளையும் உற்று நோக்கினால், வள்ளலாரின் புரட்சிக்கு, அரசியல், பொருளாதாரக் காரணங்களோடு சமூகத் தீர்மானிகளும், புறக் காரணிகளும்  அமையப்பெற்றன என்பது புலனாகின்றது. (வெளிப்படையாக இருப்பதால், எந்தெந்த இத்யாதிகள் எவ்வெவை என வகைப்படுத்தத் தேவையில்லை).

புரட்சிக்கு வித்தாக அமைவதான அனைத்து அம்சங்களும் ஒருவரது சிந்தையிலே, இறங்கி, அங்கே அவை ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டு சங்கமித்து  புதியதோர் பரிணாமத்துடன் முளையாய் வீறிடும் தருணம்,  அந்தப் புரட்சி எவ்வகையான புரட்சியாய் அமையும் என்பது புரட்சியாளனின் தனித்துவ குணாதிசயங்களைப் பொறுத்தது என்பதோடு அவன(ள)து இலக்கு எது என்பதையும் அவன(ள)து தீர்க்கதரிசனத் திறனையும் பொறுத்தே  அமைகிறது.

புரட்சியாளனின் குணாதிசயங்களைப் பற்றிப் பேசுகிறவர்கள், பொதுவாக, கீழ்க்காணுபவற்றைக் குறிப்பிடுவார்கள்:

 • சுயநம்பிக்கை
 • விடாப்பிடித்தனம்
 • கொள்கை வெறி
 • சினம்
 • அச்சமின்மை
 • தீவிரம்

ஆனால், வெறும் முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து போயின, (சுட்டுக் கொல்லப்பட்ட) கொரில்லாப் போராளியும், ஆர்ஜன்டின மார்க்சிஸ்ட் தீவிரனும். கியூபப் புரட்சியின் வேந்தனுமான ஏர்நெசஸ்டோ கேவேரா (Ernesto Guevera) [5] சொல்லுவான்: “ஒரு புரட்சியாளனுக்கு வேண்டிய  ஒன்றே ஒன்று அன்பு எனும் உணர்வு தான். இந்தப்பண்பு இல்லாத எவரையும் ஒரு உண்மையான புரட்சியாளனாக எண்ணவும் முடியாது!” என்று. (“At the risk of seeming ridiculous, let me say that the true revolutionary is guided by a great feeling of love. It is impossible to think of a true revolutionary lacking in this quality”)  [6].

கேவேரா சும்மா அல்பசொல்பமானவன் அல்லன். “கொரில்லாத் தலைவன் தானே!” என்று எவரும் அவனை மூர்க்கன் என்று மட்டமாய் எடை போட்டுவிட முடியாது – அவன் மெத்தப் படித்தவன் – ஒரு மருத்துவன் – ஒரு எழுத்தாளன் – ஒரு ராஜதந்திரி – ராணுவக் கோட்பாளன் (Military Theorist).

சரி, உண்மையான புரட்சியாளனுக்கு, அன்பு உணர்வு எனும் பண்பு  இருக்கவேண்டும் என்பது இன்றியமையாதது என்றால், வள்ளலாருக்கு, இந்தப் பண்பு இருந்ததா என்ற வினாவை நாம் எழுப்பத் தேவையில்லை ஏனெனில் அவரது, ஜீவகாருண்யத்தினை  உலகே அறியும். சென்னையை விட்டுத்  தான் ஏன் வெளியேறினார் என்று வெளிப்படுத்தும்  வள்ளலாரின்  “பிள்ளைப் பெரு விண்ணப்பம்” (ஆறாம் திருமுறை) இப்புரட்சியாளனினின் புரட்சியை உருவாக்கி, வழிநடத்தியது அவனுக்குள் ஊறி விளைந்திருந்த அன்பு உணர்வு என்னும் பண்பு மட்டுமே எனபதை எவருக்குமே வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. இப்பாடல் வரிகளைக் இக்கட்டுரைக்குக் கீழே காண்க:

அன்பு என்றால் உலப்பிலா அன்பு கொண்டவர் சிதம்பரம் ராமலிங்கம். எல்லா உயிருமாய்த் தழைத்து, பிழைத்தவையல்லையாய்  நிற்கும் அனைத்தின் மீதும் இராமலிங்கன்  கொண்ட அந்த உலப்பிலா அன்பினால் தான், “அடிகளார்” என்றதான  அந்த சிறு வித்து “வள்ளலார்” என்கிற ஆன்மீகப் புரட்சியாளனாக வெகு இயல்பாய் வீறிட்டது.

புரட்சி இயல் அறிஞர்கள், புரட்சிகளின் தன்மையை இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள் [1]: துரிதப் புரட்சி, திட்டமிட்ட புரட்சி என்று.

துரிதப் புரட்சிகள் – அவ்வப்போது அடிக்கடி நிகழ்பவை. திட்டமிட்ட புரட்சிகள் எப்போதோ நடப்பவை. துரிதப் புரட்சிகள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்  மூலதனமாய் வைத்து எழுபவை – இவற்றிற்கு அறிவும் விவேகமும் தேவை என்றாலும், பெரும்பாலும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் வேகவேகமாக நடத்தப்படுவதால், அறிவும் விவேகமும் முழுமையாகப் பயன்படுத்தப் படாததாலும், பின்விளைவுகளைப் பற்றிய போதிய அனுமானமும் அளவீடும் இல்லாது போவதால் – பெரும்பாலும் அவை, தோல்வியையேத் தழுவுவன. சொல்லப்போனால், துரிதப் புரட்சிகளை நடத்துவது சுலபம்.

வள்ளளார் பிறப்பதற்குக் கொஞ்சம் முன் (1802) நடந்த வேலூர்க் கலகம், அவர் பிறந்த பின் நடந்த பாரக்பூர் கலகங்கள், சிப்பாய்க் கலகம் ஆகியனவெல்லாம் வெகு சிறப்பாகத் திட்டமிட இயலாத காரணத்தால் எதிர்ப்பார்த்த வெற்றியைத் தராமல் தோற்றுப் போயின. அது போன்றே ராஜா ராம் மோகன் ராயின் புரட்சிகரமான நடவடிக்கைகள், குறுகிய கால நோக்கில், முழுமையான ஆலோசனையின்றி, உடனடி சுயலாப நோக்கினைக் குறிவைத்து – செய்யப்பட்டதால், நாட்டிற்கு, இடர்பாடாகவே முடிந்திருந்த  நிலையினையும் அன்று வள்ளலார் தனது சிந்தையில் ஆய்வு செய்திருக்க  வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. எனவே தான், வள்ளலார், நீண்ட நெடிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு,  சரியான காலம் கனியும் வரைக் காத்திருந்து பருவத்தே புரட்சிப் பயிர் விளைக்கவேண்டியதாயிற்று என்பதாக உணர்கிறோம்.

வேலூர்க் கலகம், பாரக்பூர் கலகங்கள், சிப்பாய்க் கலகம், இவையாவற்றிலுமே இருந்தது ஒரே ஒரு அடிப்படைக் காரணம் தான். இந்தியமண்ணில் அன்று வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத உணர்வைக் கொச்சைப் படுத்தியும், புண்படுத்தியும், மதத்திற்குப் புறம்பான நடவடிகைகளில் இந்தியச் சிப்பாய்கள் ஈடுபடுமாறு அவர்களை வற்புறுத்தியும் ப்ரிட்டிஷார் நடந்து வந்தனர் என்பதாலும், கிறித்துவ மதத்தைப் பரப்புமுகமான செயல்களில் அவர்கள ஈடுபட்டனர் என்பதாலும் தான் இக்கலகங்கள் எழுந்தவையே.

இக்கலகங்களை உற்று நோக்குங்கால், மதம் என்கிற அதி அற்புதமான நுண்மை, ஒரு சமூகக் கலாச்சாரப் பெட்டகம் என்பதை அறியா அதிகாரப் போக்கு அங்கே தெரிந்தது.

மதத்திலே, தெய்வம் மட்டுமில்லை, தேசமும், மொழியும், இலக்கியங்களும், ஆடல்-பாடல்-ஓவியம் – சிற்பம் முதலான கலைகளும், மனிதர்களின் பழக்கவழக்கங்களும், மண்ணும், நதிகளும், காடும், மலையும், ஆகாயமும், காற்றும், மூச்சும், நம்பிக்கையும், உறவும், சுற்றமும், நட்பும், உடையும் உணவும், அணிகலன்களும், அணியாகக் கலன்களும், அலங்காரமும், புழக்கும் பொருட்களும் கூட உண்டு என்கிற உண்மையை அறியாத அல்லது ஏற்றுகொள்ள மறுத்த எஜமானத்தனம் தெரிந்தது. ஆனால் அந்த எஜமானனுக்கு, பராக்ரம பலம் இருந்தது, சேனை இருந்தது, துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன, ஆட்சி அதிகாரம் இருந்தது.

“நான் நினைப்பதை நான்  நடத்தியாக வேண்டும் – நீ வெறும்  அடிமைதானே – சொல்வதைச் செய் – அன்றேல்  உன் வாழ்வு என் வசம் தானே – செத்துத் தொலை!” என்கிற ராட்சதம் இருந்தது. சொல்லொணாக் கொடூர நிலையில் இருந்தது இந்தியா. இத்தகைய நிலையில், இடம், பொருள், ஏவல் என எல்லாவற்றையும் சரிவரத் தயார் செய்து கொள்ளாமல் எதனையும் செய்யமுடியாது என்கிற சூழல்.

இடனறிதலில் வள்ளுவர் கூறுவார்:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்  அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்

பகைவர்களிடையே வாழும்போது, நாம் நினைத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்யவேண்டுமென்றால் அதற்குச் சரியான, பாதுகாப்பான, இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இக்குறளின் எளிமையான பொருள்.

1858 ல், பிரிட்டிஷ் மகுடம் (British Crown) என்ற உச்ச பட்ச பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ், இந்தியா வரவும், விக்டோரியா மகாராணியின் ஆட்சி தொடங்கவும், சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை வெகு மும்முரமாகிறது. கூடுதல் இராணுவப் பொறுப்புக்களை இக்கோட்டையில் வைத்து நடத்தும்படியாகிறது. சென்னையில், சாலைகள், பாலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டப்  பல்வேறு நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. 1852-53ன், இரண்டாவது பர்மியப்போரின் அனுபவத்தின் அடிப்படையில், சென்னைத் துறைமுகம் விரிவாக்கத் திட்டம் தீட்டப்பட்டு, பணிகள் துவங்குகின்றன. பிரிட்டிஷ் மகுடத்தின் நேரடிப் பார்வையில் வந்த பிறகு, ப்ரிட்டிஷரரின் மிகமுக்கியமான தலைமைப் பீடங்களுள் ஒன்றானது சென்னை என்பதால், மிக அதிகமான அளவு இராணுவப் படைகள் சென்னையில் நிறுத்தப்படுகின்றன. அத்தனை இராணுவ வீரர்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்குமான குடியிருப்பு, அவர்களது உல்லாச நடவடிக்கைகளுக்கான தலங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியும், துறைமுகத்தைச் சுற்றியும் உள்ள இடங்களும், முதல் கடற்கரைச் சாலை  (First Line Beach) மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் வெகு அளவில் பிரிட்டிஷாரின் நடமாட்டப் பகுதிகளாகின்றன.

வள்ளலார் அப்போது சென்னையில் வாழ்ந்துவந்த ஏழு கிணறு, வீராசாமி பிள்ளைத் தெரு இருந்தது (இருப்பது) இந்தப் பகுதியில்தான். கந்த கோட்டம் இருந்ததும் (இருப்பதும்) இப்பகுதியில் தான்.

சிப்பாய்க் கலகத்தின் போதுகூட அமைதியாகவே காணப்பட்டது சென்னை என்று வரலாற்று ஏடுகளிலே அறிகிறோம். “தருமமிகு சென்னை” என்று வள்ளலாரே வாயரப்புகழ்ந்த சென்னை தானே!. ஆனால், பிரிட்டிஷ் மகுடத்தின் நேரடிப் பார்வையில் வந்த வகையில்,  இப்போது, சென்னை, அளப்பிலா அந்நிய ஆரவாரத்தோடும், ஒருவித கெடுடுபிடியோடும் மாறிவிட்டதை  அறிகிறோம்.

எனவே தான், தனது திட்டமிட்டப் புரட்சிக்கு, சரியான இடத்தை தேர்ந்தெடுத்து நடத்தவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தவராக. அன்றைய நிலையில், பிரிட்டிஷாரின் ஓயாதத் தொந்தரவுகள் நிரம்பி வழிந்த சென்னையைக் காட்டிலும், வேறு இடத்தில் தனது  புரட்சியை விளைவிக்க. வள்ளலார் புறப்பட்டிருக்கவேண்டும்  என்றே நம்மால் காணமுடிகிறது.

                                                                              (மேலும் பேசுவோம்)

குறிப்புகள்

“பிள்ளைப் பெரு விண்ணப்பம்” (ஆறாம் திருமுறை).

http://www.thiruarutpa.org/thirumurai/v/T248/tm/pillaip_peru_vinnappam

 1. உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
  கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
  புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
  தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
 2. மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம்
  கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
  நண்ணிநின் றொருவர் அசப்பிலேஎன்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா
  தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
 3. தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
  நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
  காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை
  ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.
 4. என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
  துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
  வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
  அன்புடையவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
 5. காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
  ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
  கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
  வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
 6. பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
  அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
  பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
  முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
 7. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
  வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
  நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
  ஈடின்மானிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

[1] Gizachew Tiruneh (2014). Social Revolutions: Their Causes, Patterns, and Phases   https://doi.org/10.1177/2158244014548845

[2] Ernest Guevara https://en.wikipedia.org/wiki/Che_Guevara

[3] P.N. Chopra, B.N. Puri, M.N, Das, and A.C. Pradan (2003). A Comprehensive History of India; Sterling Publishers.

[4] Poonam Upadhyaya Social, Political, Economic, and Educational Ideas of Raja Rammohun Roy

[5]  “Socialism and Man in Cuba” Archived 2008-03-23 at the Wayback Machine A letter to Carlos Quijano, editor of Marcha, a weekly newspaper published in Montevideo, Uruguay; published as “From Algiers, for Marcha: The Cuban Revolution Today” by Che Guevara on March 12, 1965

[6] Guevara, Che. “Socialism and man in Cuba”. www.marxists.org. Archived from the original on 10 August 2017. Retrieved 6 May2018.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.