பன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு

0

முனைவர் சு. சத்தியா,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை,
பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,  தஞ்சாவூர்.

**********

சங்க காலத்திலிருந்து இன்றுவரை எண்ணற்ற புலவர்கள் தோன்றித் தமிழின் பெருமையையும் தமிழனின் வாழ்வியலையும் அவர்தம் படைப்புகள்வழிப் பறைசாற்றி வருகின்றனர். அவர்களுள் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனத்தில் நிற்பவர் யார்? என்றால் குறிப்பிட்ட நபர்களைத்தாம் நம்மால் சொல்ல முடியும். அக்குறிப்பிட்ட நபர்களுள் தமிழுக்காகத் தம் வாழ்நாளையே அர்ப்பணித்த பெருமைக்குரியவர்தாம் பன்மொழிப் புலவர் மு.ச. சிவம். இவர்தம் வாழ்வையும் தமிழ் வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய பணிகளையும் வெளிக்கொணர்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பிறப்பும் வாழ்வும்

சேலம் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்திலுள்ள உஞ்சனைக் கவுண்டம் பாளையம் கிராமத்தில் 1936இல் நெசவுத்தொழிலாளியான முருகேசன், பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தாம் மு.ச.சிவம் எனும் சதாசிவம் ஆவார். சிறுவயதிலிருந்தே தந்தையுடன் இணைந்து நெசவுத்தொழிலை செய்துகொண்டே திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார். பிறகு, அருகில் உள்ள உலகப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை பயின்றார். “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பதற்கு ஏற்ப, ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே 11-ஆம் வகுப்புத் தமிழ்ப்பாடத்திலுள்ள கம்பராமாயணம், திருக்குறள், நளவெண்பா முதலியவற்றைப் படித்து தமிழின்மீது அளவில்லாத காதல் கொண்டார். மேலும் திருச்செங்கோட்டிலுள்ள உயர்நிலைப் பள்ளிக்கு மிதிவண்டியிலேயே சென்று படிப்பினைத் தொடர்ந்தார். இரவு வெகுநேரம்வரை தறிக்குழியில் மிதிப்பலகை ஓட்டித் தந்தை நெய்யும் நெசவுத்தொழிலுக்கு உறுதுணையாய் இருந்துள்ளார். தறி நெய்யும்போது பக்கத்திலேயே புத்தகத்தை வைத்துப் படித்து வந்துள்ளார். மனப்பாடப் பகுதிகளைத் தாளிலே எழுதிவைத்து மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்பும்போதும் படித்த வண்ணமாக இருந்துள்ளார்.

இத்தகு விடாமுயற்சியால் 1952இல் நடைபெற்ற பள்ளி இறுதித்தேர்வில் 77 விழுக்காடு எடுத்து முதல் மதிப்பெண் பெற்று பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவ்வளவு மதிப்பெண் பெற்றவருக்கு மேல்படிப்பினைத் தொடரமுடியாத வறுமைநிலை! பெற்றோரோ தவித்தனர். என்ன? செய்வதென்ற இனம்புரியாத வேளையில், உறவினர்களின் உதவியால் மேல்படிப்பினைத் தொடர வாய்ப்புக் கிடைத்தது. தன்னுடன் உயர்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் க.ர.கந்தசாமி அவர்கள் உதவியால் இலயோலாக் கல்லூரியில் கணிதப்பிரிவைச் சிறப்புப் பாடமாக எடுத்து பயின்றுள்ளார். கணக்கு இவரை முழுவதும் வணங்கியது. தமிழோ இவரை முழுதும் ஆட்கொண்டது. ஓய்வு நேரங்களில் தமிழ் நூல்களைப் பயின்றவர் உள்ளத்தைக் குறுந்தொகை கொள்ளைகொண்டது. இடைநிலைத்தேர்வு முடிந்ததும் தமிழ்மேல் உள்ள அளவில்லாத காதலால் தமிழ்த்துறையில் தடம்பதித்தார்.

 தமிழ்த்தேடல்

1953இல் இலயோலாவில் படிக்கும்போதே விடுப்பு எடுத்துவிட்டு பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் வகுப்புக்குச் சென்று அவரது அனுமதி பெற்றுப் பாடம் கேட்டுள்ளார். தம் நண்பரின் உதவியால் மு.வ. அவர்களின் அனுமதியுடன் அவரை ஒருநாள் ஆசானாக ஏற்று அகநானூற்றுப் பாடத்தைக் கேட்டு மகிழ்ந்ததோடு நில்லாமல் தன்னையே தமிழுக்கு அர்ப்பணித்தார். கவிஞர் மரிய விசுவாசம் தொகுத்த “முயற்சியின் வழிகாட்டி மு.வ.” என்ற நூலில் “என் ஒரு நாள் பேராசிரியர்” என்ற தலைப்பில் மு.ச.சிவம் அவர்கள் சில பாடல்களை எழுதியுள்ளார். பேராசிரியர் அன்பழகன் அவர்கள் வகுப்பில் சென்று பாடம் கேட்டுள்ளார். இத்தகு விடாத்தேடலால் தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். எதிர்பாராத விதமாகத் திரு.வி.க. அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றது இவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் தமிழ்த்துறையில் படிக்கத் தொடங்கினார். அங்குதான் பல்துறை வித்தகரானார். அனைத்துத் துறைக்கும் சென்று மாலைதோறும்   நடைபெறும் சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்று பல்துறை அறிவையும் வளர்க்கலானார். ஆர்வமுடன் வடமொழித் துறைக்குச் சென்று சிறப்புச் சொற்பொழிவுகளைக் கேட்டவர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுடன் ஓராண்டு ஆங்கில வகுப்பில் படித்த பெருமைக்குரியவர். அவ்வப்போது நடைபெறும் பெரியாரின் சொற்பொழிவினை ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தவர்.

உந்துதல் சக்தியாக அமைந்தவை       

காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன், தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ச.வே.சுப்பிரமணியம், தென்மொழி ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திருக்குறளார் வீ. முனுசாமி போன்றோரின் உரைகள் இவரின் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உந்துசக்தியாக இருந்தன.

பரிசும் பாராட்டும்

1954-இல் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையைப் படித்து பாராட்டினைப் பெற்றார்.

 1955-1956 இரண்டு ஆண்டுகளிலும் தொடர்ந்து டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆராய்ச்சிப் பரிசினைப் பெற்றார். மேலும், திருக்குறள் அமைச்சியல், மணிமேகலை எனும் தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிப் பாராட்டினைப் பெற்றார்.

 1955-இல் குறுந்தொகை விளக்கம் என்ற நூலைத் திறனாய்வு செய்து எழுதிய கட்டுரைப் போட்டியில் மகாவித்துவான் ஆர். இராகவையங்கார் ஆராய்ச்சிப் பரிசினை வென்றார். அதே ஆண்டில் நடைபெற்ற திருக்குறள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

1956-ஆம் ஆண்டில் திருச்சி சிந்தனைக் குழுவினர் நடத்திய திருவள்ளுவர் உருவக் காட்சிப் போட்டியில் நூறு பக்கத்துக்குமேல் ஆய்வுக் கட்டுரை எழுதி முதல் பரிசு 100 ரூபாயும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் பெற்றார்.

இவ்வாறு படிக்கும்போதும் பணியாற்றும்போதும் பல்வேறு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்ற பெருமைக்குரியவர் ஆனார்.

புகழ் பெற்ற நண்பர்களுடனான தொடர்பு

குமரிஅனந்தன், தமிழறிஞர் ச.அகத்தியலிங்கம், வேலூர் வேலம்மையார் போன்றோருடன் படித்த பெருமைக்குரியவர். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழ்ப் பேராசிரியர் பெ.வரதராசன், டாக்டர் சோ.ந. கந்தசாமி போன்றோரிடம் தோழமை கொண்டவர்.

மு.ச.சிவத்தின் பொன்மொழி

“படியாத நாளெல்லாம் பிறவாநாளே”
“படியாமல் ஒருநாளும் படுக்கவேண்டா”

ஒரு நாளில் 24 மணிநேரம்தான் இருக்கிறது என்று வருத்தமுற்றவர். 1959-இல் திருமணம் செய்து கொண்டவர். குடும்பத்தைவிடப் புத்தகமே உலகம் என்று கல்விசார் நிலைக்கே முதலிடம் கொடுத்து வாழ்ந்துள்ளார்.

ஆசிரியர்! நூலகர்! பன்மொழிப் புலவர்!

கோவை அரசினர் கலைக்கல்லூரியில் ஓராண்டு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். நூல் பசி! அறிவு பசி! என்று வாழ்ந்தவருக்குச்  சென்னைக் கீழ்திசைச் சுவடி நூலகத்தில் நூலகர் பணி கிடைக்கவே மகிழ்வோடு பணியாற்றிட முனைந்தார். வேலை பார்த்துக்கொண்டே மாலை நேரங்களில் பிரெங்சு, இந்தி, வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றார்.

 பதிப்பும் அகராதித் தொகுப்பும்

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் பதிப்பாசிரியராகப் பணியில் சேர்ந்து பதிப்பித்தல், அச்சுப்பிழை திருத்தல், கட்டுரைகள், நூல்கள் எழுதுதல், அகராதிகள் தொகுத்தல், மொழிபெயர்த்தல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டதோடு நில்லாமல் செயலாக்கப்படுத்தவும் முனைந்தார்.

 “A SHORT  ACCOUNT  OF  SANGAM  LITERATURE”  எனும் ஆங்கில நூலினை 1961இல் எழுதி வெளியிட்டுள்ளார். இருபது ஆண்டுகளாக அகராதிப் பணியில் தம்மை முழுதும் அர்ப்பணித்துப் பல்வேறு அகராதி நூல்களைத் தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவர். அவை,

1. அடுக்குமொழி அகராதி
2. ஒலிக்குறிப்பு அகராதி
3. ஒருபொருட் பன்மொழி அகராதி
4. ஐம்பொறி அகராதி
5. கருத்துக்களஞ்சியம்
6. மன அகராதி
7. பல பொருள் அகராதி
8;. காரணப்பெயர் அகராதி
9. பெண்மைச்செல்வம்
10. பெண்ணோவியம்
11. எதுகை இன்பம்
12. அழகுத்தொடர் அகராதி
13. தமிழின் அழகுகள்
14. நயமொழி அகராதி
15. அகப்பொருள் அகராதி
16. இலக்கியச் சொல்லகராதி
17. இலக்கியச் சொற்றொடர் அகராதி
18. உவமை அகராதி
19. உருவக அகராதி
20. தொடர் அகராதி

இவ்வாறு 150க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றித் தமிழுக்கும் தமிழனுக்கும் பெரும் புகழினைத் தேடித்தந்துள்ளார்.

வெளிநாட்டவரின் பாராட்டு

1972இல் அமெரிக்கக் கவிஞர் எட்வர்டு லூடர்சு  தலைமையில் ஐத்ராபாத் அமெரிக்க ஆய்வுக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் வால்ட் விட்மனின் கவிதைச் சிறப்பினை ஒருமணி நேரம் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரிய மாண்பாளர். மேலும், யுகோஸ்லோவியா நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் இவரது அகராதித் தொகுப்பினைப் பார்த்துப் பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது, எண்ணற்ற ஆங்கில நூல்கள், 25க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிப் பல்வேறு அறிஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

“இலக்கியங்களை உணருவதற்குக் கருவியாக இருப்பதுடன் தானே இலக்கியமாகத் திகழும் சிறப்பினைப் பெற்றது அகராதி” என்பதை உலகுக்கு உணர்த்தியவர் மு.ச.சிவம் என்றால் மிகையாகாது! இவரது படைப்புகள் ஆய்வு மாணவர்களுக்கு ஆய்வுக்குரிய களமாகும். இவரது ஒவ்வொரு படைப்பினையும்  தனி ஆய்வுத் தலைப்பாகக் கொண்டு ஆய்வு செய்யலாம். மேலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இவரது படைப்புகள் ஒரு வழிகாட்டியாய் அமையும் என்பது திண்ணமே!

*****

பார்வை நூல் 

பன்மொழிப் புலவர் மு.ச.சிவம் வாழ்க்கைக் குறிப்புகளும் தமிழுக்குச் செய்த ஆக்கப் பணிகளும், புலவர் இரா. வடிவேலன், முத்துநாராயணன் அச்சகம், ஈரோடு, முதற்பதிப்பு 1980.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *