Blog

  • நுணலும் வியாபாரமும்

    -நிர்மலா ராகவன்

    நலம்… நலமறிய ஆவல் – 151

    பத்தாவது வயதில்தான் ABCD கற்க ஆரம்பித்தவள் நான் என்று அறிந்ததும், `நம்மைப்போன்று ஆங்கிலம் கற்பிக்கிறவர்களை இவள் மிஞ்சுவதாவது!’ என்ற ஆத்திரம் சில ஆசிரியைகளுக்கு ஏற்பட்டது.

    “உனக்கு முக்கியம் என்று தோன்றுவதை நீ எழுதலாம். ஆனால், அது மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்பது என்ன நிச்சயம்?”

    “நீ எழுதுவதால் ஏதாவது மாறிவிடப்போகிறதா?”

    ஒரு மயிரிழையைக் கூறு போடுவதுபோன்ற இத்தகைய தாக்குதல்களுக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குப் புரியத்தானில்லை.

    எப்படியாவது நான் எழுதுவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். அதன்படி நடந்தால், அவர்களை வெற்றிபெறச் செய்வதுபோல் ஆகிவிடுமே! வழக்கம்போல், மௌனமாகிவிட்டேன்.

    எல்லோரையும் எப்போதும் மகிழ்வித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்து நடப்பவர்களாக இருப்பவர்கள்தாம் பிறர் சொல்லுக்கு மதிப்புக்கொடுத்து, தம் முயற்சியைக் கைவிடுவார்கள்.

    தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களும், தோல்வி அடைய நேரிட்டால் பிறர் தன்னை மட்டமாக எடைபோட்டுவிடுவார்களோ என்று அஞ்சுபவர்களும் இருக்கிற நிலையே போதும், பாதுகாப்பாக இருக்கிறது என்று இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தம்மைப்போல் இல்லாது, முன்னேற்றப்பாதையில் நடக்கும் பிறரை பழிப்பதுடன் அற்பதிருப்தி அடைகிறார்கள்.

    `நானும் செய்யப்போகிறேன்!’ என்று இவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால், எப்போதுதான் காரியத்தில் இறங்குவது?

    ஸ்வீடனில், சுற்றுச்சூழல் மாசடைந்திருப்பதால் சீதோஷ்ண நிலையும் கெட்டுக்கொண்டிருப்பது கண்டு பொறுக்காது, பதின்ம வயதினர் ஒன்று சேர்ந்து, இந்நிலையை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

    `தோல்வியடைவோம்’ என்னும் அச்சத்தைவிட `வெற்றியடைவோம்’ என்கிற மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு இவர்களுக்கு அமைந்திருக்கிறது பாராட்டப்பட வேண்டிய சமாசாரம்.

    கெட்ட வார்த்தை

    மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில் செக்ஸ், மதம் ஆகிய இரண்டு பொருட்களில் எழுதக்கூடாது என்ற நிபந்தனை எழுத்துவடிவிலேயே இருந்தது.

    நான் பெண்கள் பகுதி ஆசிரியையைச் சந்தித்து, “சிறுமிகள் பாலியல் வதைக்கு ஆளாகிறார்களே! இதைப்பற்றி எடுத்துச் சொல்லாவிட்டால், பிறருக்கு எப்படித் தெரியும்?” என்று முறையிட, “இது கொடுமையான விஷயம்தான்!” என்று ஒப்புக்கொண்டாள்.

    உற்சாகத்துடன், நான் அதைப்பற்றி எழுதி அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. முயற்சியைக் கைவிடாது, மீண்டும் எழுதினேன், சற்று மாற்றி. மூன்றாவது முறை, `அடிப்படையில், செக்ஸ் என்றால் என்ன?’ என்பதுபோல் எழுத, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. வானொலியிலும் பேச அழைத்தார்கள்.

    அச்சமயத்தில், அமெரிக்க ஜனாதிபதி இது சம்பந்தப்பட்ட வழக்கில் மாட்டிக்கொள்ள, இவ்வார்த்தை அதிகமாகப் புழங்கியது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பாலியல் ரீதியில் துன்புறுத்தல் (sexual harassment), பாலியல் வதை (sexual abuse) ஆகிய தலைப்புகளில் நிறைய எழுதினேன். `செக்ஸ்’ என்கிற அந்த `கெட்ட’ வார்த்தையை பயன்படுத்தி முதன்முதலில் வெளிப்படையாக எழுதியதில், எனக்கும் (அதிலும் ஒரு பெண்!) கெட்ட பெயர்.

    அதைத் தொடர்ந்து, தன் மாணவிகளிடம் முறைகேடாக நடந்துகொண்ட ஆசிரியரைப்பற்றி பள்ளி நிர்வாகிகளிடம் முறை செய்தேன். பலனில்லாமல் போக, தொலைகாட்சியில் அதுபற்றிக் கூறினேன். (கல்வி இலாகா என்மேல் குற்றம் கண்டுபிடித்து, `ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ எனத் தாக்க, `தவறு செய்தவள் நானில்லை. செய்தவரைப்போய் கேட்பதுதானே?’ என்றேன், எரிச்சலுடன். சற்று அயர்ந்துவிட்டு, எப்படியோ சமாளித்தார்கள்).

    `தவற்றைத் தவறென்று சொல்லலாமா?’ என்று மக்கள் விழித்துக்கொண்டார்கள். பலர் அதைப்பற்றி எழுத ஆரம்பித்தார்கள். இத்தகைய தீங்குகளை எதிர்த்து சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.

    எழுதுவதால் உலக நடப்பை மாற்றமுடியும் என்று என்னைக் கேலி செய்தவர்கள் உணர்வார்களா?. வாளைவிட பேனா மகத்தானது என்று சும்மாவா சொல்லிவைத்திருக்கிறார்கள்!

    வெற்றி நிலைப்பதில்லை. அதேபோல், தோல்வியால் எவரும் மாண்டுவிடுவதுமில்லை. வழியில் பல இடர்கள் வரலாம். நல்ல சந்தர்ப்பங்கள் தாமாக அமைவதில்லை என்று புரிந்து, நாம்தான் அவைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தோல்விமேல் தோல்வி வந்தாலும், எடுத்துக்கொண்ட காரியத்தில் நம்பிக்கையும் ஆர்வமும் குன்றாது இருந்தால் வெற்றி நமதே. எவர் சொல்வதைக் கேட்டும் நம் லட்சியத்தை அலட்சியம் செய்யாதிருத்தல் அவசியம்.

    (`சொல்றதையே கேக்கமாட்டே!’ என்று என்னைத் திட்டியவர்கள் என் அந்தப் பிறவிக் குணமும் நன்மைக்குத்தான் என்று உணரவில்லை!)

    இறுதியில் நாம் சாதித்தவை பிறருக்குப் பாடமாக அமைந்தால், அதுவே நம் வெற்றி.

    தோல்வி எவருக்கும் ஏற்படுவதுதான். ஆனால், அதைக் கண்டு, `இனி நமக்குத் தோல்விதான்!’ என்று மனம் தளர்ந்துவிடுகிறோமா, அல்லது அத்தோல்வியிலிருந்து கற்று, கூடுதலான முனைப்புடன் அதே காரியத்தில் ஈடுபடுகிறோமா என்பதில்தான் வெற்றி-தோல்வி அடங்கியிருக்கிறது.

    “ஏழு முறை விழு. எட்டாவது முறை எழு! (ஜப்பானிய பழமொழி)

    அன்ன ஆகாரமின்றி உழைத்தால் விரைவில் வெற்றி கிட்டுமோ?

    வெளிநாடுகளிலிருந்து மலேசியா வந்தடைந்து, சாப்பாட்டுக்கடைகளில் வேலை பார்க்கும் பலர் இப்படி நடப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆரோக்கியம் கெட்டதுதான் அவர்கள் கண்ட பலன்.

    கதை

    ஒரு பெரிய கடையில் வேலை பார்த்த அனுமந்து என்னிடம் ஆச்சரியம் தெரிவித்தார்: “மலேசியாவில், விடுமுறை நாட்களில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வெளியில் வந்து சாப்பிடுகிறார்களே!”

    இவ்வளவு வியாபாரம் நடக்கிறதே, நாமே ஒரு சிறு கடையை ஆரம்பித்து நடத்தினால் என்ன என்று அனுமந்துவின் யோசனை போயிற்று. சில ஆண்டுகள் கழிந்ததும், சமையலில் நிபுணரான ஒருவருடன் சேர்ந்துகொண்டார்.

    `வெற்றி கிடைத்தால் இன்னும் சில கிளைகளைத் திறக்கலாம்! எங்களுக்கு வருகிறவர்களின் திருப்திதான் முக்கியம்!’ என்றார்.

    வெற்றியைப்பற்றிக் கனவு கண்டால் மட்டும் போதாது. `கிடைக்கும்’ என்ற நம்பிக்கையுடன், அதற்காக உழைக்க வேண்டும்.

    `வெற்றி கிடைக்கும்போது’ என்று உறுதியுடன் மாற்றிச் சொல்லி இருக்கவேண்டும்.

    போட்டியாளர்கள்

    வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் போட்டியாளர்களைச் சமாளிப்பது.

    ஏதாவது ஒன்றைத் தயாரிக்க தமது கடையில் என்னென்ன சாமான்களைச் சேர்க்கிறோம், அவைகளை யார், எப்படிக் கொண்டுவருகிறார்கள் என்று விவரித்தார்.

    “இவ்வளவு விவரம் வேண்டாமே! `மாதாமாதம் இறக்குமதி செய்கிறோம்,” என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போங்கள்!” என்றேன்.

    ஒருவர் வீட்டுக்கு வாங்கிப்போக விரும்புவதாகக் கூறியபோது, `ஆறிப்போனால் தோசை முறுமுறுவென்று இருக்காது!’ என்று அனுமந்து தடுத்துவிட்டாராம்.

    “நன்றாக இல்லை என்று அடுத்த முறை வராது போய்விடுவாரே! வாடிக்கையாளர்கள் முக்கியமில்லையா?’ என்றார்.

    “வந்த வியாபாரத்தை விடலாமா? `ஆறிப்போனால், இப்படியே இருக்காது!’ என்று எச்சரிக்கை செய்தாலே போதுமே! நிச்சயிப்பது அவர் பாடு!” என்றேன் அந்த இளைஞரிடம்.

    நாணயம் அவசியம்தான். அதற்காக நாம் செய்வது, நமக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வெளிப்படையாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பானேன்!

    நம் வழிகளைப் பின்பற்றி, வியாபாரத்தில் பிறர் நம்மை மிஞ்சிவிடும் அபாயம் இருக்கிறதே!

    `நுணலும் தன் வாயால் கெடும்’ என்று அதற்காகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்!

    Share
  • கல்வெட்டுகளில் அணைகள், நீர்நிலைகள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    1. கல்வெட்டுகளில் அணைகள், நீர்நிலைகள்

    நீர் உயிர்வாழ்க்கைக்கு மட்டுமல்லாது பாசனத்திற்கும் இன்றியமையாததாக இருந்தது. பண்டு ஏரிகள், குளங்கள், அணைகள் கட்டி நீர்த்தேக்கிப் பாசனம் மேற்கொண்டனர். நீர்ப்பாசனத்தால் வேண்டிய உணவுத் தேவைகளை அவ்வவ்வூரிலே நிறைவு செய்து கொண்டனர். நாகரிகம் வளர்த்தனர். இதற்கென்று தனி வரிகளும் தண்டப்பட்டன. நீர்நிலைகளைஅவ்வப்போது செப்பனிட்டுப் பேணியும் வந்தனர். சில கல்வெட்டில் அவை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. அவற்றில் நான்கனைப் பற்றி கீழே காண்போம்.

    கல்வெட்டுப் பாடம்:

    1. ஸ்வஸ்திஸ்ரீ  திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை
    2. கொண்டான் பேரூர் நாட்டுப் புகலிடங்கொடுத்த சோ
    3. ழச்சதுர்வேதி மங்கலத்துச் சபையார்க்கும்
    4. பேரூர் ஊரார்க்கும் நம்மோலை குடுத்தபடியா
    5. வது, இவர்கள் தங்களுக்கு நீர்தட்டப் பெறவே என
    6. க்கு வந்து அறிவித்தமையில் இவர்கள் தங்களூர் எல்
    7. லையில் தேவிசிறை என்கிற அணையடைத்து வாய்க்காலும்
    8. வெட்டிக் கோளூர்அணைக்குச் சேதம் வாராதபடி  அவ்வணைக்கு
    9. பின்பாக நீர்விட்டுக் கொள்ளப் பெறுபவராகவும் இவர்கள் தங்
    10. கள் ஊர் எல்லையில் மாளிகைப் பழநத்தம் என்கிற நத்தத்திலே
    11. புகலிடங்கொடுத்த சோழநல்லூர் என்று ஊரேற்றிக் கொள்வார்
    12. களாகவும், இவ்வூர்க்கு மன்றாட்டு பேரூர் மன்றாடிகளும்
    13. இவ்வூரில் ஆறில் ஒன்று _ _ _ _ கில் குணியன் புத்தூர்
    14. மன்றாடிகளும் மன்றாட்டாவதாகவும் இப்படிக் கீழ்வேண்
    15. டும் குடியிட்டுக் கொள்வார்களாகவும் இவ்வூர்க்கு இ
    16. றையாவது குடி ஒன்றுக்கு கொங்கு கலக் கண்பாகவும் குடி
    17. ஒன்றுக்குப் பொன் காலாகவும் ஆண்டுவரையும் இறுத்து
    18. வருவார்களாகவும், இறுத்துமிடத்து இவ்வூர் மன்றாடிகளும்
    19. புகலிடங்கொடுத்த சோழ சதுர்வேதி மங்கலத்துச் சபையா
    20. ர் _  _ _ _ _ _ _ _ _ _ _ _
    21. ன்று இவ்வூர் குடியேற்றின ஆண்டுமுதல் மூவாண்டு கழிந்தால்
    22. நாலாமாண்டு முதல் ஆண்டு வரையிலும் இறுப்பார்களாகவும் இவ்வொட்டின
    23. கண்பும் இப்பொன்னுமல்லது எலவை உகவை நம் கன்மிகள்
    24. பேறு சாமந்தப்பேறு மற்றும் எப்பேர்ப்பட்ட அந்தராயங்
    25. களும் இவ்வூர்க்கு இறுக்கக்கடவன அல்லவாகவும் இவ்வூர்க்கும் இவ்வணைக்கும்
    26. காவலாக இரண்டு ஊர்கள் _ _ _ _  வேண்டும் பூலுவன்
    27. _ _ _ _ _  பூலுவற்குக்கா _ _ _ _ _ _ ற்கு
    28. இவ்வூரில் மூன்றத்தொரு புன்செய் பூலுவர் இறையிலி _ _ _  மு
    29. டிவாலேவாகவும் இப்படிசெம்பிலும் சிலையிலும் வெ
    30. ட்டிக் கொள்ளப் பெறுவார்களாக யாண்டு பதினேழாவது
    31. முதல் நம் ஓலை குடுத்தோம். இவை இராசேந்திர
    32. சோழப் பிரமராயன் எழுத்து. யாண்டு 17 நாள் 55.
    33. இவை சீபாதப் பிரியன் எழுத்து.

    சொற்பொருள்: 

    தட்டம் – தட்டுப்பாடு; சிறை – அணைக்கட்டு; நத்தம் –குடிஇருப்பு நிலம்; கண்பு – ஒருவகைக் கூலம், தானியம். கம்பாக இருக்கலாம்; சபையார் – கோயிற் கருவறை பிராமணர்; மன்றாட்டு – மேய்ச்சல் நிலம்; இவ்ஒட்டின  – செலுத்திய; எலவை –  தண்டம்? உகவை – பொன், காசாக தரும் வரி; கன்மிப்பேறு – கோயிற் காணிக்கை வரி; சாமந்தப் பேறு – குறுநில ஆட்சியர்/படைத்தலைவர் வரி; அந்தராயம் – உள்நாட்டு வரி; பிரமராயர் – கோயில், சதுர்வேதி மங்கல செயற்பாட்டை கண்காணிக்கும் பிராமண அரசஅதிகாரி

    கல்வெட்டு விளக்கம்:

    இது கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் உள்ள பட்டீசுவரர் கோவில் மகாமண்டப வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு.  13 ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழன் கோனேரின்மை கொண்டான் வீரராஜேந்திரனின் 17 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1224) வெட்டுவித்த 33 வரிக் கல்வெட்டு.

    இதில் இராசேந்திர சோழப் பிரமராயன் என்ற கோவில் செயற்பாட்டை கண்காணிக்கும் பிராமண அரசஅதிகாரி கோனேரின்மை கொண்டானின் 17 ஆம்ஆண்டு ஆட்சியில் 55 ஆம் நாளில் (மே மாத இறுதி) ஓலைஆணை ஒன்றை சோழச் சதுர்வேதி மங்கலத்து கருவறை பிராமணர்களுக்கும், பேரூர் ஊரவர்க்கும் பிறப்பிக்கின்றான். அதில் பேரூர் ஊரவர் தங்களுக்கு பாசன நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை எனக்கு அறியத் தந்தார்கள். அதனால் இவர்தம் ஊரின் எல்லையில் அமைந்த தேவிசிறை என்ற அணைக்கட்டை அடைத்து வாய்க்கால் வெட்டி அந்நீரை கோளூர் அணைக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் அவ்வணைக்கு பின்புறமாக தேவிசிறை கால்வாய் நீரை எடுத்துச் செல்லவேண்டும் என்று அறிவுறுத்துகின்றான். அதோடு ஊர் எல்லையில் அமைந்து இருந்த மாளிகைப் பழந்நத்தம் என்ற இடத்தை “புகலிடங்கொடுத்த சோழநல்லூர்” எனப் பெயரிட்டு அதில் மக்களை குடியேற்றிக் கொள்ளலாம் என உரிமை தருகின்றான். இவ்வூரின் மேய்ச்சல் நிலத்தில் மேய்குக்கும் பேரூர் மன்றாடிகளான இடையர்கள் அதில் தம் பங்காக ஆறில் ஒரு பகுதியை குணியன் புத்தூர் மன்றாடிகளோடு இணைந்து மேய்க்கப் பெற்றுக்கொள்வார்கள் என்கிறான். இந்தப் புது ஊரார் வரியாக குடும்பம் ஒன்றுக்கு ஒரு கொங்கு கலத்தில் கண்பும், கால் பொன்னும் கட்ட வேண்டும். கட்டும் இடத்து இவ்வூர் மன்றாடிகளும் சோழச் சதுர்வேதி மங்கல சபையோரும் முதல் மூன்று ஆண்டுகள் தவிர்த்து நாலாம் ஆண்டுமுதல் ஒரு முழு ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு கொங்கு கலம் கண்பு கூலமும், கால் பொன்னும் வரியாகத் திரட்ட வேண்டும். இவை தவிர வேறு எந்த வகை வரியும் செலுத்த வேண்டாம் என்று வரிவிலக்கு தந்தான். இவ்வூருக்கும் இவ்வணைக்கும் காவலராக பூலுவர் என்ற வேட்டுவர் அமர்த்தப்பட்டனர். இப்புது ஊரில் குடியேற்றிய மக்களில் வேட்டுவரான பூலுவரும் இருந்தனர். இவர்கள் ஆற்றும் காவலுக்குக் கூலியாக அவர்களுக்கு புன்செய் நிலத்தில் மூன்றில் ஒருபகுதி இறையிலியாக ஒதுக்கப்பட்டது.

    இவ்வகையில் அணைகள், கால்வாய்கள் பேணிக் காக்கப்பட்டன என்பது தெரிகின்றது. பிரமராயர் சதுர்வேதி மங்கலம், கோவில் தொடர்பான மேற்பார்வை அதிகாரி என்பதால் அங்கு செய்யப்பட வேண்டிய செயலுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றிருப்பது இக்கல்வெட்டின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது, அதோடு பூலுவ வேட்டுவர் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டில் வேட்டுவர் பூலுவர்க்கு இறையிலி நிலம் பற்றிய செய்தி மட்டுமல்லாது அணைக் கால்வாய், புதுஊர் குடியேற்றம், ஊரார்க்கு வரியும் வரிச்சலுகையும், இடையர்க்கு மேய்ச்சல் நில உரிமை ஆகிய செய்திகளும் கூடுதலாக உள்ளன.

    பார்வை நூல்: வேட்டுவர் சமூக ஆவணங்கள், புலவர் செ. ராசு, ஈரோடு, 2008 வெளியீடு. பக். 90

    2. சேலம் வட்டம் மல்லூர் அருகே மூக்குத்தி பாளையம் மோழப்பாறையில் வெட்டப்பட்ட 13 ஆம் நூற்றாண்டு 8 வரிக் கல்வெட்டு.

    கல்வெட்டுப் பாடம்:  

    1. ஸ்வஸ்திஸ்ரீ எழுகரை நாட்டு அக்கை
    2. சாலை கங்கை என்று பேரிட்டு இக்கு
    3. ளம் அட்டினேன் பெரியவிலங்கி
    4. ஊராளியாகிய சுண்டை வேட்டுவன்
    5. சிலம்பன் சிறியர் ஆன எழுக
    6. ரை நாட்டு அக்கசாலைகள் மாத்
    7. த ஆராத பிள்ளையேன் பெருமலை
    8. க்கு எல்லை _ _ _ _ _

    சொற்பொருள்:  

    அட்டினேன் – தானாமாக கொடுத்தேன்; சிறியர் – இறையவர், junior; ஆராத – பொறுக்காத

    கல்வெட்டு விளக்கம்:  

    நான்காம் அதிகார அடுக்கைச் சேர்ந்த பெரியவிலங்கி எனும் ஊரின் ஊராளியான எழுகரை நாட்டின் சுண்டை வேட்டுவர் இனம் சார்ந்த சிலம்பன் இளையவர் என்பார் குளம் ஒன்றை அக்கை சாலை என்னும் இடத்தில் வெட்டி அதற்கு “அக்கைசாலை கங்கை” எனப் பெயரிட்டு தானாமாக வழங்கினார். இவர் தன்னை அக்கசாலைகள் மாற்ற ஆராத பிள்ளை என்கின்றார். இதில் அக்கைசாலைகள் என்பது காசு உருவாக்கும் பொற்கூடத்தை குறிக்கும். இந்தக் குளத்தின் எல்லைகளில் ஒன்றாகப் பெருமலை குறிக்கப்பெறுகின்றது. கல்வெட்டு முற்றாக இல்லை.

    இங்கிருக்கும் அக்கசாலைகள் இடம்மாற்றம் பெறுவதை பொறாத பிள்ளை என்று தம்மை கூறிக் கொள்வதில் இருந்து அங்குள்ள அக்க சாலைகள் நீர்தட்டுப்பாட்டின் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட இருந்ததையும் அவை இடம்மாறினால் தனக்கு வரி வருவாய் குறைந்துவிடும் என்பதையும் உணர்ந்துதான் இவர் ஒரு குளத்தை வெட்டி தானமாக கொடுத்துள்ளார் என்று புரிந்துகொள்ள முடிகின்றது. மேலுள்ள இரு கல்வெட்டுகளும் வேட்டுவர் சமூகங்கள் பற்றி அறிவதற்கு தொகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் இருந்து நாம் கூடுதல் செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

    பார்வை நூல்: வேட்டுவர் சமூக ஆவணங்கள், புலவர் செ. ராசு, ஈரோடு, 2008 வெளியீடு.

    கீழே உள்ள கல்வெட்டு திருக்காஞ்சி என்ற ஊரின் கோயிலில் வெட்டப்பட்டுள்ளது.  29 வரிகள் கொண்ட  இக்கல்வெட்டு  முதற் குலோத்துங்கனின் 40 ஆம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி.1110) வெட்டப்பட்டது.

    கல்வெட்டுப் பாடம்:  

    1. வ த ஸ்ரீ வீரமேய் துணையாகவு
    2. ம் தியாக மேய் அணியாகவும் செங்
    3. கோலோச்சிக் கருங்கலி கடிந்து
    4. புகழ்மாது விளங்க ஜய மாது விரும்
    5. ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர
    6. உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி
    7. மீனவர் நிலை கெட வில்லவர் கு
    8. லை தர ஏனை மந்னவர் இரியலுற்
    9. றிழிதர கனைத்தும் தந்சக்கரந
    10. டாத்தி வீரசிம்மாசனத்து அவநி
    11. முழு துடையாளோடும் வீற்றிருந்த
    12. ருளிய கோவிராஜ கேசரி பந்மரான
    13. திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோ
    14. த்துங்க சோழ தேவற்கு யாண்
    15. டு 40 தாவது திரிபுவனமாதே
    16. விச் சருப்பேதி மங்கலத்து ஏரி
    17. நிறை யேரியிலே பெருங்காற்றடி
    18. த்துக் குலையழிந்து கெட்டமையில்
    19. இக்கரையும் அட்டுவித்துக் குலோத்
    20. துங்க சோழநேந்து திருநாமத்தால் க
    21. ற் படையுஞ் செய்து இத்தன்மம் சந்திராதித்த
    22. வற் நிற்கச்  செய்தாந் பூதமங்கலமுடை
    23. யாந் ஒற்றியூரன் பூபாலசுந்திரநான சோழ
    24. கோநார். இவற்க்காக இக்கற்படை செய்வி
    25. தாந் ராஜேந்திர சோழ வளநாட்டு இடை
    26. வள நாட்டுச் சேவகலூருடையாந் அரை
    27. யந் திருமழ பாடியுடையாநான மலைய
    28. ப்பியராஜந். இத்தன்மம் மகாசபையார் ர
    29. ன கூடி

    சொற்பொருள்:  

    நிறைஏரி – பக்கக் கரைகளை கொண்ட ஏரி, பெருங்காற்று – சூராவளி, கடுங்காற்று; குலைஅழிந்து – செய்கரை, artificial bank, பாலம்  ; அட்டுவித்து – கட்டிக் கொடுத்து கற்படை – கருங்கல் சுவர்; மகாசபையார் – கருவறை பிராமணர் உள்ளிட்ட நிர்வாகத்தார்.

    கல்வெட்டு விளக்கம்:  

    11 ஆம் வரி வரை குலோத்துங்கனின் மெய்கீர்த்திகளைச் சொல்லும் இக்கல்வெட்டு திரிபுவன மாதேவிச் சருப்பேதி மங்கலத்து ஏரியின் நிறையேரிக் கரை கடுங்காற்று வீச்சினால் செய்கரை அழிந்து உடைப்பெடுத்து நீரவெளியேறி அழிவை உண்டாக்கியது. அதற்கு வலுவான கரையைகட்டிக் கொடுத்து அதையொட்டி குலோத்துங்க சோழனென்ற பெயரில் கல்சுவரும் எழுப்பி தானமாகக் கொடுத்தான் பூதமங்கலத்தை சேர்ந்த ஒற்றியூரன் பூபாலசுந்தரனான சோழகோனார் என்று உரைக்கின்றது. இந்த கற்சுவர் அமைப்பதில் பூபாலசுந்தரனுக்கு உறுதுணையாக இருந்து அதை கட்டுவித்தவன் இராசேந்திர சோழவளநாட்டின் இடைவளநாடான சேவகலூரின் அரையன் திருமழப்பாடியுடையானான மலையப்பிராஜன். இந்த தானம் கருவறைப் பிராமணர் உள்ளிட்டாரின் காப்பில் விடப்பட்டது.

    பார்வை நூல்: வரலற்றில வில்லியனூர் கல்வெட்டுகள், பக். 67-68, புலவர் ந.வேங்கடேசன், சூன் 1979, சேகர் பதிப்பகம், எம்ஜிஆர் நகர், சென்னை -78

    இக்கல்வெட்டு, திருவக்கரை சந்திரமௌலீசுவரர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வெட்டப்பட்டு உள்ளது (S.I.I. 12:246). 

    கல்வெட்டுப் பாடம்:  

    ஸ்வஸ்திஸ்ரீ சகலபுவன சக்கரவர்த்தி காடவன் அவனி ஆளப்பிறந்தான்  கோப் பெருஞ்சிங்கன்  ஒழுகரை ஏரிக்கு மதகுஞ் செய்வித்து இந்த ஏரிக்கு  நீர்புகிரக் காலும் கல்லுவித்தபடி

    சொற்பொருள்:  

    ஒழுகரை ஏரி – நீர்கசியும் கரை உடைய ஏரி அல்லது பெயர்; மதகு – நீர்பாயும் மடை, sluice; கால் – கால்வாய்; கல்லுவித்து – தோண்டி, வெட்டி.

    கல்வெட்டு விளக்கம்:  

    காடவப் பல்லவன் கோப்பெருஞ் சிங்கன் (1243-1273)  ஒழுகரை ஏரிக்கு மதகு செய்ததோடு இந்த ஏரியின் பிற சுற்றிடங்களில் திரண்டு சேர்ந்த நீரை ஏரியில் சேமிக்க அந்நீர் ஏரிக்குள் புகுவதற்கு கால்வாய் வெட்டினான் என்று கூறுகின்றது.

    பார்வை நூல்: வரலாற்றில் வில்லியனூர் கல்வெட்டுகள், பக். 70, புலவர் ந.வேங்கடேசன், சூன் 1979

    Share
  • வாழியே தமிழே நீயும் !!

    உலக கவிஞர்கள் தினமென்று
    தொலைக்காட்சி படித்தது
    உலக கவிஞர்கள் தினமின்று
    மனசாட்சி இடித்தது
    உலக கவிஞர்கள் தினம்-என்று
    வல்லமை விரைந்தது – மனம்
    உலக கவிஞர்கள் தினமென்றும் (என)
    தனைத் தேற்றி கொண்டது

    என்ன செய்திங்குக் கிழித்து விட்டேனென‌
    பாவலர் வரிகள் மீறும்
    இன்றும் களைக்க மாட்டோ மென்றென‌
    காவலர் வரிகள் கூறும்
    படக் கவிதைப் போட்டிக்கு வாருமென‌
    அண்ணாவின் அழைப்பில் சேரும்
    படக் கவிதைப் பாராட்டு பாருமென‌
    மேகலையின் தேர்வில் தேறும்

    ஓயாது ரேஸில் ஓடும் புரவிகளாய்
    கிரேஸியின் வெண் பாக்கள்
    தேயாது வானில் பாடும் மீன்களாய்
    செண்பகப் புது கவிகள்
    பாயாது பெருக்கு எடுத்து பாயும்ஜெய‌
    பாரதன் தரும் வரிகள்
    சாயாது சாய்ந்து கொண்டு ரசிக்க‌
    ஜெயசர்மா மரபு கவிகள்

    எத்தனை எத்தனைக் கவிகள் வாழும்
    இத்தகு வல்லமை இணையம்
    அத்தனை அத்தனைச் சிறப்பில் ஆளும்
    வாழியே தமிழே இனியும்

    Share
  • (Peer Reviewed) சிலப்பதிகாரத்தில் ஆறுகள் கட்டமைக்கும் சூழலியல் உறவும் பண்பாடும்

    முனைவர் இரா.இலக்குவன்
    வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையம்
    ம.தி.தா. இந்துக் கல்லூரி
    திருநெல்வேலி – 627610

    சிலப்பதிகாரத்தில் ஆறுகள் கட்டமைக்கும் சூழலியல் உறவும் பண்பாடும்

    ஆறு, சூழலியல் சங்கிலியில் மாபெரும் கண்ணியாகும். மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் விரவிச் சமைப்பதில் ஆற்றுக்குத் தலையாய பங்குண்டு. ஆறு மண்ணில் மட்டுமல்ல, மக்கள் உணர்வுகளிலும் ஓடுகிறது. ‘மனிதரையும் இயற்கையையும் இணைக்கும் தளை நீர், நமது அன்றாட வாழ்விலும், நீர் நீங்காத இடம் பெற்றுள்ளது. காலம் தொடங்கிய காலம் முதலே நீர் அசாதாரணமான சமூக நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறது’1 என நீரின் இன்றியமையாமையை ஹீரியா தாஜிசாதக் விளக்குகிறார். நிலத்தின் அடிப்படையில் வாழ்வு பகுக்கப்பட்ட நமது தமிழ் மரபிலும் ‘நீரின்று அமையாது உலகு’ எனும் தெளிவும் ஆறு, நீர் சார்ந்த எண்ணங்களும் அக்கறைகளும், விழாக்களும் உண்டு.

    சூழலியல் உணர்வை மண்ணில் இருந்து பெற்ற இளங்கோவடிகள், தமிழ்நாட்டின் முக்கியமான ஆறுகளையெல்லாம் சிலப்பதிகாரத்தில் காட்சிப்படுத்துகிறார். அவை அமைந்திருக்கும் அழகை மட்டுமல்லாமல் அவற்றை மையமாக கொண்டியங்குகின்ற சூழல் உறவு சங்கிலியை இளங்கோவடிகள் நுட்பமாக உணர்த்துகிறார். அது மட்டுமல்லாது, காப்பியத்தின் திருப்பு முனையையும் பாத்திரங்களின் அழுத்தமான உணர்வுகளையும், காப்பியப் போக்குகளையும் வெளிப்படுத்துவதற்கு  ஆறுகளையும், அதன் இயற்கைக் காட்சிகளையும் பயன்படுத்துகிறார். அவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

    கானல்வரிப் பாடல்

    சிலம்பின் மிக முக்கியமான திருப்பம் கானல்வரி ஆகும்.

    ‘வாழ்க வெங்கோ மாதவி மடந்தை
    கான்ற பாணி கனக விசயர்தம்
    முடித்தலை நெரித்தது’

                                             (நீர்ப்படைக்காதை (49-51)

    என மாடலமறையோன் மூலம் காப்பியத்தில் உரைக்கிறார்

    வரிப்பாடல் என்பது ஒரு பாடல் வகையாகும். அது பாட்டுத் தலைவன் பிறந்த நிலமும் அந்நிலத்துத் தொழிலும் புலப்படப் பாடுவது என்பார் அடியார்க்கு நல்லார்.2 கானல் வரியில் கோவலன் பாடுவதாக ஆற்றுவரி, சார்த்துவரி கானல்வரி, நிலைவரி, முரிவரி முதலிய பாடல்களும், மாதவி ஆற்றுவரி, சார்த்துவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி, சாயல்வரி முதலிய இசைப் பாடல்களும் உள்ளன. கோவலன், மாதவி இருவரும் பாடும் ஆற்றுவரிப் பாடலில் காவிரியாற்றை மையமாகக் கொண்டு தத்தமது கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர்.

    கோவலன் பாடும் பாடல்

    ‘திங்கண் மாலை வெண்குடையான் சென்னிச் செங்கோலது வோச்சிக்
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி’ (7:2)

    ‘மன்னுமாலை வெண்குடையான் வளையாச் செங்கோ லதுவோச்சி
    கன்னி தன்னைப் புணர்ந்தாலும் வாழி காவேரி’ (7:3)

    எனக் காவிரியாற்றைக் கோவலன் வாழ்த்துவதாக முதலிரண்டு பாடல்கள் உள்ளன.

    இப்பாடல்கள் மூலம் பாத்திரங்களின் எவ்விதக் கருத்துகளும் இயற்கையுடன் உறவுடையதாக வேண்டுமென்பதில் அடிகளுக்கிருந்த ஆர்வம் புலனாகிறது. முதல் இரண்டு பாடல்களும் ஆற்றையும், அதன் வளத்தையும் பேசுவனவாகவும், அடுத்த பாடல் ஆறு சார்ந்த வாழ்க்கையையும் பயனையும் பேசுவதாக உள்ளன.

    ‘உழவ ரோதை மதகோதை யுடைநீ ரோதை தண்பதங் கொள்
    விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி
    விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தவெல்லாம் வாய்காவா
    மழவ ரோதை வளவன்றன் வளவனே வாழி காவேரி’ (7;4)

    இது கோவலன் பாடும் மூன்றாவது பாடல். புதுப் புனல் கண்ட உழவரின் மகிழ்ச்சியொலி, மதகில் நீர் பாயும் ஒலி, மடை உடைந்து பாயும் ஒலி, புதுப்பனல் பாய்வதை விழாவாகக் கொண்டாடும் மக்களின் ஒலி எனப்பல ஒலிகள் எழுகின்ற காவிரியை அடிகள் வாழ்த்துகிறார்.

    காவிரியில் விழா

    இதில் ‘தண்பதங் கொள் விழவர் ஓதை’யும் எழுந்தது எனக் கூறுவதைக் கண்டோம். இதிலிருந்து காவிரியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து வரும் போது. மக்கள் அதைப் பெரும் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது தெரிகின்றது. இவ்விழா பல நாட்கள் நடந்திருக்கின்றது. இந்த விழாவை மன்னர் தொடங்கி வைப்பது ஒரு மரபாக இருந்துள்ளது. அத்தலைநாளை மற்ற விழா நாட்களைக் காட்டிலும் சிறப்பாகக் கருதியிருக்கின்றனர்.

    இச்செய்தி,

    ‘விண் பொரு பெரும்புகழ் கரிகால் வளவன்
    தண்பதம் கொள்ளும் தலைநாள் போல’ (6:159-160)

    எனக் ‘கடலாடுகாட்சிக்கு’ உவமையாகக் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. மேலும்,

    ‘கழாஅர் பெருந்துறை விழாவின் ஆடும்’      (அகம் 225)

    கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத்
    தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை’        (அகம் 376)

    ஆகிய அகநானூற்றுப் பாடல் வரிகள், இவ்விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆகவே இவ்விழா, சங்க காலம் தொடங்கியே மக்களிடம் இருந்து வந்துள்ளது என்பதும் தெரிகின்றது. ஒவ்வொரு நாகரிகத்திலும், மிகத் தொன்மையான மரபுகள், இந்த அரிய வள ஆதாரத்தை வாழ்க்கையின் தோற்றத்துடனும் தூய்மையுடனும், இனப்பெருக்கத்துடனும் தொடர்புப்படுத்திக் காட்டுகின்றன.5 இவ்வகையில் காவிரியில் நடக்கும் இவ்விழா இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய ஒரு சடங்கு எனலாம்.

    மாதவியின் வரிப்பாடல்கள்

    மாதவியின் ஆற்றுவரிப் பாடல்களிலும் முதலிரண்டுப் பாடல்கள் காவிரியின் வளத்தைப் பாடுகின்றன. மூன்றாவது பாடல் காவிரியில் சோழ நாட்டுக்கு விளையும் பயனைப் பேசுகிறது.

    ‘மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை யதுபோர்த்து
    கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி’    (7:25)

    ‘பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்களிசைபாடக்
    காமர் மாலை யருகசைய நடந்தாய் வாழி காவேரி’      (7:26)

    இவ்விரண்டு பாடல்களிலும் காவிரியின் சிறப்பைப் பேசுவதன் மூலம், பூக்கள் மலிந்த சோலைகள் (பல்வேறு தாவர வகைகளின் தொகுதி), மயில்கள், குயில்கள், வண்டுகள் முதலிய உயிரிகளின் சூழலும் காவிரியுடன் பிணைந்திருப்பதை விளக்குகிறார்.

    மாதவியின் மூன்றாவது பாடல்,

    ‘வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி
    ஊழி யுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி’   (7:27)

    எனக் காவிரியை வாழ்த்துகிறது.

    வேளாண்மைச் சமூகமான தமிழ்ச் சமூகம், உலகை வளர்க்கும் தாயாக ஆற்றைக் கொண்டாடுவதை ஆதிக் கருத்தாகக் கொண்டு விளங்கியிருக்கிறது. இளங்கோ, காவிரியை வளர்க்கும் தாயாகவும் சோழநாட்டைப் பேருதவி பெறும் குழந்தையாகவும் கண்டிருப்பது உணவை அடிப்படையாகக் கொண்ட மனித வாழ்வில் ஆற்றின் பங்கை உணர்த்துவதாக அமைகிறது. தமிழ்மரபு வழிச் சிந்தனையில்  ஆறு தாயாகவும், பெண்ணாகவும் கருதுவது தூய்மையுடனும் உறவுடைய சடங்குக் கருத்தாகும்.

    புரந்தூட்டும் பெண்

    காவிரியாற்றைத் தாய் எனக் கூறும் இளங்கோவடிகள், பெண் எனப் புறஞ்சேரியிறுத்த காதையில் கூறுகிறார்.

    ‘உலகு புரந்தூட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
    புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
    வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி’         (13:168-170)

    எனப் பாடுகிறார். வையை ‘பூங்கொடி’ என்பது சடங்கியல் கருத்தான தூய்மையை உணர்த்துகிறது. வையையாறு பூங்கொடி, பெண்; அருளும் பெண் அல்லள் ‘உலகு புரந்தூட்டும்’ என்று கூறுவதன் மூலம் ஆற்றுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை உரிமையின்  பாற்பட்ட உறவாக இளங்கோ கற்பிக்கிறார். இவ்வாறு ‘இயற்கையை அன்னை  என்று அழைத்துச் சீராட்டும் பாங்கு. சுரண்டுவதற்கு எதிரான கலாச்சாரத் தடையாக விளங்கியது’ என்பார் வந்தனா சிவா.6

    கடல் விழா

    தமிழர்கள் ஆறுகள், கடல் நீர்நிலைகள் சார்ந்த விழாக்களைக் கொண்டாடினர். காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் மக்கள் விழா கொண்டாடினர்,  இவ்விழாவை இந்திரனோடு தொடர்புடைய விழாவாகக் கருத முடியாது, மணிமேகலையிலும் இவ்விழா பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இந்திர விழாவின் ஒவ்வொரு கூறும், அது மழைச் செழிப்பு குறித்த ஒரு மாபெரும் மந்திரச் சடங்கு என்பதைச் சுட்டிக் காட்டும் என்றும் இங்கு இந்திரன் மழைக் கடவுள் என்ற அர்த்தத்தில் உலகச் செழிப்பைக் குறித்து நிற்கிறான் என்றும் ந. முத்துமோகன்.7 குறிப்பிடுவார். இந்திரன் மருத நிலத்து தெய்வமாவான்.

    ‘வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’

    என்பது தொல்காப்பிய நூற்பா வரி.8

    உழவைத் தொழிலாகக் கொண்ட மருத நிலத்து மக்களின் மழைத் தேவையைப் பூர்த்தி செய்யும் தெய்வமாக இந்திரன் விளங்கியதால் அவன் தீம்புனல் உலகத் தெய்வமாவான். மேலும்,

    ‘முடிவளை உடைத்தோன் முதல்வன் என்று
    இடி உடை பெருமழை எய்தா தேகப்
    பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
    மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க’

    என்று மாங்காட்டு மறையோனின் வைதீக மரபுச் சொல்லாடலும் இந்திரனை மழைக்குரிய கடவுளாகப் பேசுகிறது. பின் எக்காலத்தில் வருணன் மழைக்கடவுள் ஆனான் என்பது அறிய முடியவில்லை. ஆக இந்திரன் மழைக்கடவுள் என்பது உறுதிப்படுகிறது. எனவே ந. முத்துமோகன் சொன்ன கருத்தும் பொருந்தி வருகிறது, மேலும் அடிகள் கடலாடு காட்சியைக் ‘கடல் விளையாட்டு’ என்று குறிப்பிடுகிறார். இதுவோர் கோலாகலத்தன்மை கொண்ட மழை குறித்த சடங்கு விழா என்றும் முடிவுக்கு வரலாம்,

    சிலம்பில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பாடும்போது முதலில் அவரவருக்குரிய ஆறுகளைக் குறிப்பிட்டு வாழ்த்தப்பட்டனர்.

    ‘வாழியரோ வாழி வருபுனல்  நீர் வையை
    சூழும் மதுரையார் கோமான்தன் தொல்குலமே’    (29 : 13)
    ‘வாழியரோ வாழி லரு புனல்நீர் ஆன்பொருநை
    சூழ் தரும் வஞ்சியார்தன் தொல்குலமே’           (29 : 14)
    ‘காவிரி நாடனைப்பாடுதும் பாடுதும்
    பூவிரி கூந்தல் புகார்’                                  (29 : 15)

    என ஆறுகளுடன் இணைத்து மன்னர்களை வாழ்த்தும் மரபு இருந்துள்ளது. நாகரிகத்துக்கும் வளத்துக்கும் காரணமாய் அமைந்த ஆறுகள், அரச குலத்துடன் உறவுபடுத்திப் பேசப்படுவதன் மூலம், பேரரசு உருவாக்கத்தில் அதனுடைய பாங்கு உணர்த்தப்படுகிறது.

    தண்பொருநையில் விழா

    பொருநையாற்றை இளங்கோவடிகள் கூறும்போது, மக்கள் ஆற்றில் வண்ணமும் எண்ணமும் மலரும் கலந்தால், ஆறு வானவில் போல் காட்சியளிப்பதாகக் கூறுகிறார்.

    ‘தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட
    வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து
    விண்உறைவில் போல் வீங்கிய பெருந்துறை’      (27:231-232)

    என்கிறார், இவ்வரிகளை நோக்கும் போது விழா வயப்பட்ட பொருநையாற்றின் வருணனையாகவே கொள்ளலாம்.

    பேரியாறு

    இளங்கோவடிகள் வஞ்சிக் காண்டத்தில் மலை வளம் காணச் செல்லும் சேரன் செங்குட்டுவன், பேரியாற்றங்கரையில் தங்கியிருந்ததாகக் கூறுகிறார்.

    கோங்கம் வேங்கை தூங்கிணர் கொன்றை
    நாகம் திலகம் நறுங்காழாரம்
    மதுகரம் ஞிமிரொடு வண்டினம் பாட
    நெடியோன் மார்பில் ஆரம் போன்று
    நெடுமலை விளங்கிய பேரியாற்றங்கரை’

    என அவ்வாற்றைப் புகழ்கிறார்

    கோங்கம், வேங்கை கொன்றை, நாகம் (சுரபுன்னை), திலகம் (மஞ்சாடி சந்தனம்) முதலிய மரங்கள் உதிர்த்த மலர்களால் ஆற்றின் நீர்பரப்பு மறைந்து, பூக்களாக மிதந்து சென்றன. அப்பூக்களை மொய்த்து மதுகரம், ஞிமிறு எனும் வண்டினங்கள் இசை பாட, பேரியாறு மலையின் குறுக்காகச் செல்வது, திருமால் மார்பில் கிடந்த மாலை போன்ற தோற்றம் உடையதாக இருந்தது என்கிறார் இளங்கோ.

    பூப்படர்ந்த ஆறுகள்

    இளங்கோவடிகள் குறிப்பிடும் காவிரி, வையை, பொருநை முதலான எல்லா ஆறுகளும், நீரே தெரியாத அளவுக்குப் பூக்கள் நிறைந்து வருவதாகவே கூறப்படுகிறது. இதனை வருணனையாக மட்டுமே கொள்ள முடியாது.

    தண்நறுங்காவிரித் தாதுமலி பெருந்துறை’

    என்றும்

    மணிப்பூ ஆடை அது போர்த்தும்’

    காவிரியாறு நடப்பதாகவும்,

    புண்ணிய நறுமலராடை போர்த்து’

    வையையாறு பூம்புனல் ஆறாகப் பாய்வதாகவும்,

    வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து’

    பொருநையாறு வருவதாகவும்,

    உதிர்ப்பூம்பரம்பின் ஒழுகுபுனல் ஒளித்து ‘

    பேரியாறு பாய்வதாகவும்,

    அடிகள் குறிப்பிடுகிறார்.

    ஆக, இது வருணனை மட்டுமல்ல என்பது தெளிவு. இளங்கோ, ஆறுகளைப் பூம்புனல் ஆறுகளாகக் குறிப்பிடுவதன் மூலம் ஆறுகளின் கரைகள் பல்வகை மரங்களால் செழித்திருக்கின்றன என்பதை உணர்த்துவதுடன், தமிழ்ப் பண்பாடு சார்ந்த தூய்மைப் பண்பினை ஆற்றுக்கு அளிக்கிறார் என்றே கொள்ளல் வேண்டும்.

    வைகையை வணங்குதல்

    மதுரை நோக்கிச் செல்லும் கோவலனும் கண்ணகியும் வைகையாற்றைக் கண்டவுடன் தொழுகின்றனர் என அடிகள் குறிக்கிறார்.

    ‘புனல்யாறு அன்று பூம்புனல்யாறு யென
    அனநடை மாதரும் ஐயனும் தொழுது’

    என்பார் இளங்கோ.

    இதிலிருந்து கோவலனும், கண்ணகியும் ஆற்றைத் தெய்வமாகக் கருதித் தொழவில்லை; ஆற்றின் சிறப்பையும் வளமையையும் கருதியே தொழுதிருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. அதிலும் ஆற்றைக் கண்ணகிதான் (அனநடைமாதர்) முதலில் தொழுதாள் எனும் செய்தி பெண்களுக்கும் இயற்கைக்கும் உறவு உண்டு என்ற மானுடவியல் கருத்தைக் காட்டுகிறது.

    காவிரியும் நாடும்

    வேளாண்மைச் சமூகமான தமிழ்ச்சமூகத்தில் சோழநாட்டின் வாழ்வு காவிரியின் வளத்தினாலாகும். சோழ நாட்டின் வாழ்வு, வளம், அரசியல், பொருளாதார நிலை ஆகியவனைத்திற்கும் மூலவூற்றாய் காவிரி திகழ்வதைக் கண்ட அடிகள், அந்நாட்டை,

    ‘காவிரி புரக்கும்நாடு கிழவோன்’ எனவும்

    (காவிரி புரக்கும்நாடு கிழவோற்கு)    (27;171)

    காவிரி நாடன்’     (1;5)

    எனவும் கூறப்படுகின்றான்.

    ‘சமூக நடவடிக்கைகளை உழவர்கள் முன்னின்று இயக்குவது மறைந்துவிட்ட காலை, பண்பாடு என்பது வேளாண்மையுடன் பிணைந்திருந்த காலம் மலையேறிவிட்ட சூழலியல் உணர்வு மட்கிப் போய்விட்ட இன்று இதுபோன்ற செய்திகள் வியப்பை9 மட்டுமே ஏற்படுத்துகின்றன.

    வைதீக சமயமும் ஆறுகளும்

    இந்தியாவில் எந்தவொரு புனிதப் பயணத்திலும் நடுநாயகமாகத் திகழ்வது புனிதசீர்க்கூடல் (சங்கமம்) ஆகும். சிறிது சிறிதாக ஊற்றெடுத்து வரும் தரையடிநீர் முதல் கரைபுரண்டோடும் ஆறுகளின் நீர், அலை பாயும் கடல் நீர் வரையில் நீரின் அருகில்தான் புனிதப் பயணங்கள் தங்கள் தனித்தன்மையைப் பெறுகின்றன என்பார் ருஸ்தம் பருச்சா.10 ஆனால் தொல்தமிழ் மரபில் ஆறுகள் மட்டுமல்லாது, வேறு எவ்வகை நீர்நிலைகளும் புனிதம் என்னும் நிறுவனமயப்பட்ட கருத்தோடு சம்பந்தப்படவில்லை.

    சிலம்பிலும் புனித நீராடுதல், புனித நீராட்டுதல், புனிதப் பயணம் பற்றிய செய்திகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பேசுபவர்களாக மாங்காட்டு மறையோன், தேவந்தி, மாடலமறையோன் முதலிய பார்ப்பனப் பாத்திரங்கள் மட்டுமே விளங்குகின்றன. இன்று தமிழ் மக்களால் காவிரி, தாமிரபரணி, வைகை முதலிய ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்குத் துறை, தைப்பூசத் துறை, தைந்நீராடல் ஆகிய விழாக்கள் வைதீக சமய விழாக்களாகத் திகழ்கின்றன. இவ்விழாக்கள் யாவும் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து வரும்போது கொண்டாப்படுவனவாகும். ஆகவே இவை தூய்மை, வளமை ஆகிய சடங்கியல் கருத்தோடு ஆதிக் காலத்தில் கொண்டாடப்பட்டிருத்தல் வேண்டும்.

    தாய்வழிச் சமூகமான தமிழ்ச் சமூகம், ஆறுகளை இனப்பெருக்கம், வளமை தூய்மை ஆகிய சடங்கியல் தன்மையோடும், பாதுகாப்பு, அரவணைப்பு முதலிய வாழ்வியல் தன்மையோடும் உறவு கொண்டிருந்தது மேலும் இவ்விழாக்களின் மூலம் மக்களின் ஒட்டுமொத்த கவனமும் ஆற்றைப் பேண வேண்டிய உணர்வும் ஆற்றின் மீது குவிக்கப்படுகின்றது.

    காவிரி கட்டமைக்கும் சூழல் சங்கிலி

    குறுகிய நோக்கியல், அறிவு நதியின் பயணத்தை ஒரு நீளவாக்கில் தான் கவனிக்கிறது. ஆனால் உண்மையில் நதியின் பாய்ச்சல் வட்டப்பாதை சுழற்சியாகும் என்பார் வந்தனா சிவா11. இளங்கோ, காவிரியாற்றை, அதன் உறவு வட்டத்தை நுட்பமாகக் குறிக்கிறார். காவிரியாறு சமூகத்தின் வாழ்விற்கும் இயக்கத்திற்கும் பின்னூக்கியாகத் திகழ்வதையும் உயிரினங்களின் இருப்பையும் உயிர் – சூழல் சங்கிலியையும் கட்டமைப்பதையும் விளக்கிக் கூறுகினார். நாடுகாண் காதையில் அடிகள், காவிரியாறு சார்ந்த உயிரினங்களின் ஒழுக்கத்தைப் படம் பிடித்தாற் போல பேசுகிறார்.

    ’கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
    விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
    கால் பொருள் நிவப்பிற் கடுங்குர லேற்றோடும்
    சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
    குடமலைப் பிறந்த கொழும்பஃறமோடு
    கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
    காவிரிபுதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
    ஒவிறந்தொலிக்கும் ஒலியே யல்ல
    தாம்பியும் கிழாரும்வீங்கிசை யேத்தமும்
    ஓங்குநீர் பிழாவு மொலித்தல் செல்லாக்
    கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கிற்
    பழனத்தாமரைப் பைம்பூங் கானத்துக்
    கம்புட் கோழியுங் கனைகுர னாரையும்
    செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
    கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
    உள்ளு மூரலும் புள்ளும் புதாவும்
    வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
    பல்வேறு குழுஉக்குரல் பரந்த வோதையும்
    உழாஅ நுண்டொளி யுள்புக் கழுந்திய
    கழா அமயிர் யாக்கைச் செங்கட் காரான்
    சொரிபுற முரிஞ்சிப் புரிஞெகிழ் புற்ற
    குமரிக் கூட்டிற் கொழும்பல் லுணவு
    கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியச்
    கருங்கை வினைஞரும் கலிமரும் கூடி
    ஒருங்கு நின்றார்க்கு மொலியே யன்றியும்
    கடிமலர்க் களைந்து முடிநாறழுந்தித்
    தொழவளைத் தோளு மாகமுந் தோய்ந்து
    சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிக்
    செங்கய னெருங்கட் சின்மொழிக் கடைசியர்
    வெங்கட் டொலைக்கிய விருந்திற் பாணியும்
    கொழுங்கொடி யறுங்கையுங் குவளையும் கலந்து
    விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
    பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
    ஏரோடு நின்றோ ரேர் மங்கலமும்
    அரிந்து கால் குவித்தோ ரரிகடா வுறுத்த
    பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப்பாட்டும்
    தெண்கினைப் பொருநர் செருக்குடனெத்த
    மண்கிணை முழவின் மகிழிசையோதையும்
    பேர்யாற் றடைகரை நீரிற் கேட்டாங்கு’           (10:102 – 140)

    என்பது பாடல்.

    புதுப் புனல் வெள்ளத்தால் காவிரியில் எழும் ஓசையும், அதன் விளைவால் எழும் பறவைகள், விலங்குகள், மக்களின் ஓசைகளையும் அடிகள் விளக்குகிறார். காவிரி வெள்ளம் குடமலையில் விளையும் அகில், சந்தனம் முதலிய வளங்களை இழுத்து வந்து, முத்து பவளம் கொண்ட கடலை எதிர்கொண்டு அதன் கரையை இடிக்கும்.  காவிரியின் புதுவெள்ளம் மதகு வழி பாய்ந்து விழும்போது ஏற்படும் பெருவோசை எங்கும் நிரம்பியிருக்கும்.

    இவ்வொலியே அல்லாது ஆம்பி, கிழார், ஏற்றம், இறைகூடை முதலிய நீர் இறைக்கருவிகள் ஒலிகளும் கேட்கும். செந்நெல்லும், கரும்பும் வளர்ந்துள்ள மருத நிலத்தில் சம்மங்கோழி, கனைகுரல் நாரை, செங்கால் அன்னம், பைங்கால் கானக்கோழி, நீர்நிறக் காக்கை, உள்ளான், குளுவை, கணந்துட்புள், பெருநாரை ஆகியவை சேர்ந்து ஒலிக்கும் ஒலி, நெற்களங்களைச் சேறாக்கும் எருமைகளை விரட்டும் உழவர்களின் ஆரவாரவொலி, கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தும் உழத்தியர் கள்ளுண்ட களைப்பால் பாடும் விருந்திற்பாணி, உழவர்கள் செந்நெற்கதிரோடு அறுகையும் குவளையும் கலந்து தொடுத்த மாலையை ஏரிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பார் போல போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி ஏரைப்பாடும் ஏர்மங்கலப் பாட்டொலி, கிணைப்பொருநர் இசைக்கும் முழவின் மகிழிசையொலி என எல்லாம் கலந்து கேட்டதாக இளங்கோ கூறுகிறார்.

    பின் மக்களின் வாழ்விடங்களை விளக்குகிறார். ஆறு சூழலமைப்பின் தலைக் கண்ணியாக விளங்குவதையும், மனிதன் விரிந்த நோக்கில் இயற்கையின் ஓர் கூட்டாளியே அன்றி முதலாளி அன்று என்பதையும் தனது கவிதையின் பொருளாக அடிகள் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. மக்களின் கலை, பண்பாட்டுச் சொல்லாடல்களைக் கட்டிச் சமைப்பதில் ஆற்றுக்கு உள்ள நேரடி உறவைக் காண இயலுகிறது.

    ஆற்றின் மீது நம்பிக்கை

    கோள்களில் சனிக்கோள், இடபம், சிங்கம், மீனமென்னும் மாறுபாடினும், ஆகாயத்தே தூமகேது எனும் விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக் கண்ணே பெயரினும் காவிரியில் வெள்ளம் வரும் என்ற நம்பிக்கை அடிப்படையிலான கருத்தை அடிகள் குறிப்பிடுகிறார். இதே கருத்துக் கொண்ட பாடல் வரிகள் பட்டினப் பாலையிலும்13 உள்ளது. வெள்ளி எனும் மீன் தான் நிற்றற்குரிய வடதிசையில் நில்லாமல் தென்திசையிற் செல்லினும், மழை பெய்ய வேண்டிய காலத்துப் பொய்யாதொழியினும் காவிரியில் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கும் என பட்டினப் பாலை கூறுகிறது. இளங்கோ, வைகையைப் பொய்யாக் குலக்கொடி என்கிறார். ஆக, அக்காலத்தில் மக்கள் பருவகாலங்களின் மீது கொண்டிருந்த நம்பிக்கைகளை விட, ஆறுகளின் மீது திடமான நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதனை உணரலாம்.

    அவலமும் ஆறும்

    இளங்கோ அடிகள், காப்பியத்தின் அவல முடிவை வைகை நதியின் இயற்கை காட்சியைக் கொண்டே முன்னுணர்த்துகிறார். மதுரைப் பயணத்தில் கோவலனும் கண்ணகியும் வைகை கரையை வந்தடைகின்றனர்.

    ‘குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
    மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
    பாடலம் தன்னொடு பன்மலர்விரிந்து
    குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்
    விரிமலர் அதிரலும் வெண்கூதாளமும்
    குடகமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
    பிடவமும் மயிலையும்         (13; 151 -153)

    ஆகிய மரங்களின் மலர்களும், கரையில் கிடக்கும் முருக்க மலர்களும், அருவி நீரோடு வந்த முல்லை மலர்களும் நிறைந்த வைகையாறு, நீர்ப்பரப்பே தெரியாமல் பூம்புனல் ஆறாய்ப் பாய்கிறது. இக்காட்சியை அடிகள் தனது காப்பிய முடிவை ஏற்றிக் கூறுவதற்குப் பயன்படுத்துகிறார்.

    கண்ணகிக்கு நேர இருக்கும் துன்பத்தினை முன்னமே அறிந்தவள்போல் வைகை தூய மணமிக்க பூக்களை ஆடையாகக் கொண்டு, தன் உடல் போர்த்து, தன் கண்களில் பெருகும் கண்ணீரை மறைத்து மற்றோர் காணாதவாறு சென்றாள் என பின்நிகழப் போகும் அவலத்திற்கு வருந்துவதாக வைகை மீது ஏற்றிக் கூறுகிறார்

    ‘தையற்கு உறுவது தானறிந் தனள்போல்
    புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
    கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி’

    வைகை செல்வதாக அடிகள் குறிக்கிறார். இதன் மூலம் கண்ணகிக்காக முதன்முதல் கண்ணீர் விட்டழும் மானுடத்தன்மை கொண்ட உறவு நிலையினை வைகையாற்றிற்கு அடிகள் கற்பிக்கிறார்.

    அடிக்குறிப்புகள்

    1. ஹீரியா தாஜீ சாதக், ‘விலை மதிப்பில்லா அரிய ஆவணம்’, (க.ஆ), யுனஸ்கோ கூரியர் (மா.இ) சென்னை. தென்மொழிகள் புத்தக நிறுவனம்.
    2. பஞ்சாங்கம், க. 1993 ; சிலப்பதிகாரத் திறனாய்வுகள். – ஒரு பார்வை, சிவகங்கை ; (பிலிட்), ப. 105 (எடுத்தாண்டது)
    3. சோமசுந்தரனார், பொ.வே.1970, அகநானூறு­­, பா.எ. 376, திருநெல்வேலி, கழக வெளியீடு
    4. மேலது, பா. எ. 376

    5. பிரான்ஸ் பெக்கட் 1995 (க.ஆ), போதுமோ நீர்வளம் (கட்டுரை) யுனஸ்கோ கூரியர் (மா.இ).நவம்பர்,ப..21

    1. வந்தனாசிவா 2000 (ம.ப), உயிரோடு உலாவ (இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச்சூழலும்) சென்னை – 40, பூவுலகின் நண்பர்கள் ப.25
    2. முத்துமோகன், ந., 1998, ’மணிமேகலைக் காப்பியத்தில் இந்திரவிழா, அமுதசுரபி’ குறியியல் அணுகுமுறை’ அமைப்பியல் பின் அமைப்பில் பெங்களூர், காவ்யா பக். 158-159.
    3. இளம்பூரணர், 1989 (ம.ப.), தொல்காப்பியம் பொருளதிகாரம் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நாற்பதிப்புக் கழகம்.
    4. 10. டேனியல் பூக்னோ, 1996 ; ‘உரையாடல்’ யுனஸ்கோ கூரியர், (மா.இ) (ஏப்ரல்) ப.9
    5. ருஸ்தம் பருச்சா, ‘திரிவேணி சங்கமம்’ யுனஸ்கோ கூரியர் (மா.இ) சென்னை; தென் மொழிகள் புத்தக நிறுவனம்
    6. வந்தனாசிவா 2000 (ம.ப) ;      ‘உயிரோடு உலாவ (இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச்சூழலும்)’ சென்னை:பூவுலகின் நண்பர்கள் ப.25
    7. சோமசுந்தரனார், பொ.வே. 1962, ‘பட்டினப்பாலை’ பத்துப்பாட்டு இரண்டாம் பகுதி திருநெல்வேலி – 6 திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.

    ================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சிலப்பதிகாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஆறுகள் கட்டமைக்கும் சூழலும் பண்பாடும் குறித்த இந்த ஆய்வு, மிக நுணுக்கமான விளக்கங்களில் பரிமளிக்கிறது. இயற்கை சார்ந்த குறிப்புகள், பாத்திரங்களுக்கும் இயற்கைக்கும் உண்டான தொடர்பு ஆகியவை, சிலம்பு முழுவதும் விரவிக் கிடக்கின்றன. காப்பிய மாந்தரின் வாழ்வு, ஆறுகளைச் சார்ந்து அமையும் வண்ணம் புனைந்துள்ளது இளங்கோவடிகளின் தனிப்பெரும் புலமையைப் பறை சாற்றுகிறது என்றால், அந்த வரிகளை, காட்சிகளைப் ஆழமாக ஆராய்ந்து குறிப்புகள் வழங்கியிருப்பது இக்கட்டுரையின் சிறப்பு.

    ஆறுகளைத் தாயாக, பெண்ணாகப் பாடுவது, வேளாண்மைக்கு ஆறுகள்தான் அடிப்படை என வலியுறுத்துவது, மனிதனுக்கும் ஆறுகளுக்கும் இடையே உள்ள உரிமைத் தொடர்புகள், ஆறுகள் தொடர்பான விழாக்கள், மன்னருக்கும் ஆறுகளுக்குமான தொடர்புகள் போன்ற பல செய்திகளும் தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. சிலம்பு பேசும் ஆறுகளின் வகை வகையான வருணனைகள் பல்நோக்குகளில் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது.

    ஆறுகள் அழிந்து, வேளாண்மை நலிந்து, ஆறுகள் சார்ந்தே பண்டு அமைந்த புனிதப் பயணங்கள் முக்கியத்துவம் இழந்தது போன்ற தற்கால முரணைக் கோடிட்டுக் காட்டியுள்ளது, நாம் இழந்தவற்றை நினைவுகூர்ந்து வேதனையுற வைக்கிறது.

    ஆற்றின் நேரான ஓட்டம், வட்டமான சுழற்சி என்று மாறி வரும் காப்பிய மாந்தரின் வாழ்க்கைச் சூழலுடன் பொருத்திப் பார்த்துத் தரும் விளக்கம் இன்னுமொரு சிறப்பு.

    மழைக்கடவுள் இந்திரனா, வருணனா என்று பிற அறிஞர் கருத்தைச் சுட்டிக் காட்டித் தரும் விளக்கம், பட்டினப்பாலை, அகநானூறு தரும் ஆறு குறித்த ஒப்பீட்டு விளக்கங்கள் – ஆய்வின் கருத்துகளுக்கு மேலும் மெருகேற்றுகின்றன.

    ஆய்வு முடிவுகளைத் தனியே திரட்டி அளித்திருக்கலாம்.  ஆய்வுக் கட்டுரைக்கான அமைப்பிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். இது, தனியோர் ஆய்வேட்டுக்கான தலைப்பு ஆகும். இதை ஓர் ஆய்வுக் கட்டுரைக்குள் அடக்குவதை விட, ஆய்வுக் கட்டுரைக்கென வரையறுத்த எல்லையுடன் கூடிய தலைப்பினைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

    ================================================================

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 24

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 24 – புகழ்

    குறள் 231:

    ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
    தூதிய மில்லை உயிர்க்கு

    ஏழைங்களுக்கு குடுக்கணும். அதனால புகழ் உண்டாவும். இந்த புகழ் இல்லாம மனுசனோட வாழ்க்கைல ஆக்கம் தருததுனு  வேற எதுவும் இல்ல.

    குறள் 232:

    உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
    றீவார்மேல் நிற்கும் புகழ்

    புகழ்ந்து பேசுதவங்க எல்லாம் சொல்லுதது இல்லாதவங்களுக்கு பொருள குடுக்கவங்களோடபுகழப் பத்திதான்.

    குறள் 233:

    ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
    பொன்றாது நிற்பதொன் றில்

    ஒசந்து நிக்குத புகழத் தவித்து அதுக்கு சமமா அழிவில்லாம நெலச்சு நிக்கும் னு ஒலகத்துல எதுவும் இல்ல.

    குறள் 234:

    நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தே ளுலகு

    இந்த பூமியில பெரிய புகழ்ச்சியோட வாழ்ந்தவங்கள தான் தேவர் உலகத்துல போற்றுவாங்களே தவித்து அங்க இருக்க தேவர்கள இல்ல.

    குறள் 235:

    நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
    வித்தகர்க் கல்லால் அரிது

    வாழ்க்கைல சிரமப்படும்போது கூட புகழ வளத்துக்கிடதும் செத்த பெறகுநெலச்ச புகழ பெறுததும் ஒசந்த அறிவாளிங்களால தான் முடியும் மத்தவங்களுக்கு சங்கடந்தான்..

    குறள் 236:

    தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று

    எந்தத் துறையில ஈடுபட்டாலும் அதில புகழோட விளங்கணும். அப்டி செய்ய முடியாதவங்க அந்த துறையில ஈடுபடாம இருக்குதது நல்லது.

    குறள் 237:

    புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
    இகழ்வாரை நோவ தெவன்

    புகழ் பெறுத மாதிரி வாழ முடியாதவங்க தன்னய தானே நொந்துகிடாம தன்னய எளக்காரமா பேசுதவன நொந்துகிடதது எதனால?

    குறள் 238:

    வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
    எச்சம் பெறாஅ விடின்

    தனக்குப் பின்னால நெலச்சு நிக்குத புகழ பெறாதவங்களுக்கு அது அந்த வாழ்க்கைக்கே வந்த பொல்லாப்பு னு ஒலகம் சொல்லும்.

    குறள் 239:

    வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
    யாக்கை பொறுத்த நிலம்

    புகழ் இல்லாத ஒடம்ப இந்த பூமி சுமந்ததுனா அது வளம் கொறஞ்சு வெளச்சல் இல்லாம போயிடும்.

    குறள் 240:

    வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
    வாழ்வாரே வாழா தவர்

    பொல்லாப்பு இல்லாம வாழுதது தான் வாழ்க்கை. புகழ் இல்லாம வாழுதது செத்ததுக்கு சமானம்.

     

    Share
  • என்ன செய்து கிழித்தேன்?

    -மரபுமாமணி பாவலர் மா. வரதராசன்

    (மரபுமாமணி பாவலர் மா. வரதராசன் அவர்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கவிதை.)

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லோர்கள் போற்றுவித மென்ன செய்தேன்?
    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நற்றமிழைப் பரப்புவழி என்ன செய்தேன்?
    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நற்கவியை எளிதாக்க என்ன செய்தேன்?
    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்!

    நாடிப்போய்த் தமிழ்கற்க வேண்டி நின்றேன்
    நற்புலவர் பலபேரைக் கெஞ்சி நின்றேன்
    தேடிப்போய்த் திரிந்தேன்யான் நல்லா சானைத்
    தேள்கொட்டும் ஏளனத்தைப் பரிசாய்ப் பெற்றேன்
    ஈடில்லை படிப்பில்லை என்று சொல்லி
    இளக்காரம் செய்தார்கள் பொறுத்துக் கொண்டேன்
    வாடிநின்றேன் என்தொழிலைச் சொல்லிச் சொல்லி
    வாயாரச் சிரித்தார்கள் மருண்டு நின்றேன்.!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    ஆனாலும் என்தேடல் முடிய வில்லை
    அரங்கத்தில் ‘ஓலமிட்ட ‘கவிதை கேட்டேன்
    மானாக நான்துள்ளி உள்ளே செல்வேன்
    மதிக்காமல் ஓரத்தே ஒதுக்கு வார்கள்.
    போனால்தான் என்னென்று மானம் விட்டுப்
    போய்க்கேட்பேன் சொல்லாமல் துரத்து வார்கள்
    ஆனாலும் என்தேடல் முடிய வில்லை
    அருந்தமிழக் காதலதும் குறைய வில்லை.!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    என்னென்ன வோசெய்தேன் மரபைக் கற்க
    இயலாமல் ஏமாற்றம் எதிரில் நிற்கத்
    தன்கையே தனக்குதவி என்று ணர்ந்து
    தமிழ்த்தாயே துணையென்று துணிந்து விட்டேன்
    மண்ணுக்குள் ஒளிந்திருக்கும் வளங்கள் போலே
    வரமாகும் அறிவையெலாம் வகைப்ப டுத்தித்
    தன்னுள்ளே வைத்திருக்கும் நூல கத்தில்
    தமிழ்மரபு கவிகற்க நுழைந்தே னய்யா!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    எதைத்தேடிப் படிப்பதெனக் குழப்ப மாங்கே
    இருந்தவற்றுள் இலக்கணத்து நூலை யெல்லாம்
    கதைபோலப் படித்துவிட எண்ணி விட்டேன்
    கண்ணயர்ந்து தூங்கியதே பலநா ளாகும்.
    விதைப்பந்தின் உள்ளிருக்கும் மரத்தைப் போல
    வியன்றமிழை என்னுள்ளில் விதைத்த தாலே
    அதைத்தடுக்கும் தடையெல்லாம் உடைந்த தையா
    அணுவணுவாய் இலக்கணமும் புரிந்த தையா.!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    புரிந்தவுடன் படிப்பதூஉம் எளிதா யிற்று
    புதைந்திருந்த நுட்பங்கள் விதிக ளெல்லாம்
    எரிவிளக்கி னொளிபட்ட இருளைப் போல
    இலக்கணமும் இனிக்கின்ற கரும்பா யிற்று
    விரிந்தகன்ற தமிழ்க்கடலின் கரையில் நின்று
    விருப்போடு கால்வைத்தேன் ஈர மண்ணில்.
    சுரிதகமாய்ச் சுழன்றுவரும் அலையில் இன்னும்
    துணிவோடு நீந்துவிதம் அறிந்தே னில்லை.

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்

    இலக்கணத்தைக் கற்பதற்குப் பட்ட பாட்டை
    இனியாரும் படவேண்டா எனுமெண் ணத்தில்
    தலங்கண்டேன் களங்கண்டேன் முகநூல் வந்தேன்
    தமிழ்ச்சோலை நிறுவியதில் கரைந்து போனேன்
    பலவிடத்து மிருந்தபுதுக் கவிஞ ரெல்லாம்
    பைந்தமிழச் சோலையினில் நுழைய லானார்
    கலக்கத்தை யூட்டாமல் அனைவ ருக்கும்
    கனிதமிழின் மரபுகளைச் செறிவாய்த் தந்தேன்!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்

    கற்றவரில் பல்லோரும் செம்மை யானார்
    கற்றோரும் போற்றுகின்ற ‘செம்ம லானார் ‘.
    உற்றபுகழ் கூடியதால் அவர்கள் என்னை
    உயரத்தில் வைத்தார்கள் ‘குருவென் றார்கள்.
    நற்றமிழத் தாயவளின் தயையா லிந்த
    நன்னிலையை நானடைந்தேன் வேறொன் றில்லை
    மற்றபடி நானிதற்குப் பட்ட பாடு
    மறவாதே மண்ணுக்குள் போகு மட்டும்.!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்

    உயிருக்குள் கலந்துவிட்ட கவிஞர் பெற்றேன்
    உணர்வோடு கலந்துவிட்ட கவிஞர் பெற்றேன்
    உயிரேநான் என்கின்ற கவிஞர் பெற்றேன்
    ஓரிறையாய் எனைப்போற்றும் கவிஞர் பெற்றேன்
    பயிருக்கு மழைபோல வாடும் நேரம்
    பரிந்தென்னைக் காக்கின்ற கவிஞர் பெற்றேன்
    தயிர்க்குடத்தில் துளிநஞ்சாய்க் கவிஞ ரென்று
    சழக்கர்சில் லோரையும் உறவாய்ப் பெற்றேன்!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    அரைகுறையாய்க் கற்றவர்கள் ஆசா னாகி
    அழிக்கின்றார் அருந்தமிழின் மரபின் சீரை
    விரைவாகப் புகழ்கூட வேண்டு மென்ற
    வேட்கையன்றி வேறெந்தக் குறியு மில்லை
    துருப்பிடித்துக் காதறுந்த ஊசி கொண்டு
    துணிதைக்க முயல்கின்றார் துயர மன்றோ?
    எருவாகிக் கருவாகி வாழ்வோர் தானே
    எல்லோரும் போற்றுகின்ற ஆசா னாவார்?!

    நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
    நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

    நீண்டதொரு பயணத்தில் செல்கின் றேன்நான்
    நினைவினிலே தமிழன்றி வேறொன் றில்லை
    ஆண்டமொழி யழியாமல் உலகை யாள
    அயராம லுழைக்கின்றேன் அதுவ ரைக்கும்
    சீண்டாதீர் சிக்கலுக்குள் இழுத்தல் வேண்டா
    சிறியவனைச் செயலாற்ற விடுங்க ளென்று
    மீண்டுமுங்கள் பதம்பணிந்து வேண்டு கின்றேன்
    வியன்றமிழின் தொண்டாற்ற விடுவீர் என்னை!

    Share
  • திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [1]

    -இன்னம்பூரான்

    சான்றோர்களைத் தற்காலத் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் போது, அவர்களின் பிறந்து, வளர்ந்து, மறைந்த கதையை விட அவர்களின் வாழ்நெறியைக் கூறுவது முக்கியம். அத்தருணம் சில நிகழ்வுகளை முன்னிறுத்தி அலசுவது தான் வாழ்க்கைப்பாடங்களை அளிக்கும் வழி. அவ்வாறு தொகுக்கும்போது அட்டவணை போட்டு கட்டை விரல் சப்பியதில் தொடங்கி மரணாவஸ்தை வரை வரிசைப்படுத்துவது தேவையல்ல. சில சம்பவங்கள் அந்த சான்றோர்களின் பெருமைக்குக் கட்டியம் கூறும். சில அவர்களின் தர்மசங்கடங்களை பூடகமாகத் தெரிவிக்கும் – திறந்த மனதுடன் தேடினால். நான் என்னவோ என் மனம் அழைத்துச்செல்லும் ராஜபாட்டையில் தான் உங்களை அழைத்துச்செல்வேன். எனக்கு தெரிந்தது அவ்வளவு தான். பொறுத்தாள்க.

    மஹாத்மா காந்தியின் ஜன்மதினம் அன்று உலகெங்கும் அவரது நினைவாக விழாக்கள் எடுக்கப்படும். அவரது சிலைகளுக்கு மாலை மரியாதை நடக்கும். சொற்பொழிவுகள் நிகழும். இந்தியாவில் விடுமுறையல்லவா! சிறார்கள் விளையாடுவார்கள். வயது வந்தோர் ஓய்வு எடுப்பார்கள். காந்திஜியை நினைவு கூர்பவர்கள் சொற்பம். அது கூட இல்லை. ‘தமிழ் காந்தி’ ‘தமிழ்தென்றல்’ திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம் அவர்களை தமிழர்கள் அறவே மறந்துவிட்டார்கள். ஏதோ விருது அளிக்கும் தினத்தில் ஒரு வரி உதட்டளவு புகழுரை. அத்துடன் சரி. அங்கும், இங்கும், எங்கும் இறைவனின் சிலாரூபத்தைப் பழிப்பவர்கள் எழுப்பிய மானிடஜன்மங்களில் சிலைகள் மலிந்த நம் நாட்டில், எனக்குத் தெரிந்து மூவருக்கு மட்டும் தான் ஆளுக்கு ஒரே ஒரு சிலை, பொது மக்களே முன் வந்து ஆர்வத்துடன் சந்தா அளித்து எழுப்பபட்டவை. அவர்களில் ஒருவர் திரு.வி.க. அவர்கள். மாஜி பி & ஸி மில் முன் நிற்கிறார், அஃறிணை ஆகி விட்ட திரு.வி.க. மற்ற இருவரை பற்றி யாராவது கேட்டால் சொல்கிறேன். இது நிற்க.

    கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரிஜனல் காந்தியிடம் செல்வோம். காந்திஜிக்கு ராமன் இஷ்டதெய்வம். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவருக்கு இஷ்ட மந்திரம். ‘ரஹம்’ என்ற இஸ்லாமியத்தின் நங்கூரசொல்லின் பொருள் கருணை. அதையும் இணைத்தல்லவோ, அவருடைய பஜனை அமைந்தது. அண்ணலின் விருப்பம் இனியாவது நிறைவேற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அந்த கனிவை ந்யூஸிலாந்தில் காண்கிறோம். அங்கு ஒரு பயங்கரவாதி பலரை சுட்டுத்தள்ளி விட்டான். அந்த நாட்டு வெள்ளையர் மக்கள் இஸ்லாமியர்களை தேடி அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அவர்களுக்கு காந்தி மஹான் அறிமுகம் இருக்கிறது. நமக்குத்தான் இல்லை.

    “ஒரு தனிமனிதன், தன்னுடைய மனசாட்சியை மட்டுமே, பாற்கடலை கடையும் மத்தாக, வாய்மை என்ற கயிறை, கடைவதற்கான சாதனமாக வைத்துக்கொண்டு, அஹிம்சை என்ற பிரணவ உச்சாடனத்துடன், ஸ்வதேச அபிமானம் என்ற அமிர்தத்தை எடுத்து அளித்ததும், அடிமைமோஹத்திலிருந்து விடுபட்டு, இந்திய மக்கள், இந்த நோன்பில், ஒரே திரளாக திரண்டு வந்து வடம் பிடித்ததும், அமிர்தம் பருகியதும் வரலாறு. அத்தருணம், இந்த உலகமே ஆட்டம் கண்டதும் வரலாறு. அந்த தனிமனிதன்: அண்ணல் காந்தி.” -இன்னம்பூரான்.

    நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. நாமகரணம்: ஸத்யாக்கிரஹ தினம். தனித்தழில் சொன்னால், ‘உண்மை மேலாண்மை ஏற்றுக்கொண்டது’. இடம்: இந்தியா முழுதும். குறிப்பாக இங்கு சென்னை நிகழ்வுகளின் அணி. அதற்கு முன் ஒரு பின்னணி. அரசு, நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், மார்க்கம் ஒன்று வேண்டாமோ? காந்திஜி மீது குறை காண்பது தற்கால நாகரீகம். அவர் மறைந்து எழுபது வருடங்கள் ஆயின. இரண்டு/மூன்று தலைமுறைகளுக்கு அவர் ஐநூறு ரூபாய் நோட்டின் சித்திரம் மட்டும்! எனினும், ஒரு வகையிலாவது அவரை போற்றவேண்டும். கறார் மேனேஜர், அவர்.

    சட்டம் அமலுக்கு வரும் தினம் முன்பே யாவருக்கும் தெரியும் என்பதால், முன்கூட்டியே, ஏபரல் 6 தான் சத்யாக்ரஹ தினம் என்று அறிவித்து, நாடு முழுதும் பயணித்து, யாவரிடமும், ஒரு பிரதிஞ்ஞை பெற்றுக்கொண்டார் – ‘சட்டத்தை மீறவும் வேண்டும். நன்னடத்தையையும் வெளிப்படையாக காட்டவும் வேண்டும்.’ இந்த மந்திரம் காட்டுத்தீ போல் பரவியது என்கிறார், திரு.வி.க.

    சென்னையில் பலத்த ஏற்பாடு. ராஜாஜியின் தலைமையில், ஒரு கண்காணிப்புக்குழு. அக்காலம் ஃப்ளெக்ஸ்போர்ட் கலாச்சாரம் கிடையாது. போஸ்டர்களும், துண்டறிக்கைகளும் மட்டும் தான். ராயப்பேட்டையும், [உறுதுணை: காமத்] தொழிலாளர்கள் பேட்டைகளும், [உறுதுணை: தண்டபாணி பிள்ளை] திரு.வி.க. அவர்களின் பொறுப்பு. ராஜாஜிக்குழுவில், திரு.வி.க.வும், கே.வி. ரங்கசாமி ஐய்யங்காரும். பெரம்பூரில் ஒரே கலவரம், முதல் நாளே. வ.உ.சி. யாலேயே தொழிலாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ‘தமிழ் காந்தி’ திரு.வி.க. அவர்கள் மேடை ஏறி பேசினார் -வசிஷ்டர், பிரஹ்லாதன், ஏசு கிறிஸ்து,, அப்பர்! ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’ என்றார். கட்டுப்பட்டார்கள்.

    கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று.

    (தொடரும்)

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 204-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பிரேமின் இந்தப் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 204க்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தெரிவாளர் இருவருக்கும் என் நன்றி!

    கைகளை அகல விரித்துத் தன் அகலா மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்தப் பெண்ணைப் பார்க்கும்போது, சிட்டுக்குருவியாகக் கட்டுக்களின்றி மாந்தரை வாழப் பணித்த மாக்கவி பாரதியின்,

    “விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்
    சிட்டுக் குருவியைப் போலே

    எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
    ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
    மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
    வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு”
    எனும் சிந்தனை என் மனவானில் சிறகடிக்கின்றது.

    தளைநீங்கி விடுதலையொடு வாழ விழைபவையே மண்ணில் வாழும் உயிர்கள் அனைத்தும்!

    இதோ…இவ்வாரப் புகைப்படத்துக்குப் பொருத்தமாய்க் கவி தீட்ட கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். வரவேற்போம் அவர்களை!

    *****

    எல்லார்க்கும் எல்லாமாகப் பெண்கள் இருந்தபோதிலும் இன்னல்கள் வெந்தணலாய் வாட்டுவதென்னவோ அவர்களைத்தான்! வல்லூறுகள் இணைய வானில் வட்டமிட்டும்; வலைகள் வசீகரமாய்த் திறன்பேசிகளில் விரிக்கப்படும்; பொல்(ள்)லா(ளா)ட்சிக் கசப்புகள் நமக்கு புத்தி புகட்டுமா? என்று தன் வேதனையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கிறார் திரு. யாழ். பாஸ்கரன்.

    பொல்(ள்)லா(ளா)ட்சி கசப்புகள்!

    மானுடம் உயிர்த்திட மண்ணுலகம் நிலைத்திட மடிதந்த
    மாதவ மங்கையர்க்கு மனம்நிறை மகிழ்வான தலைவணக்கம்
    மாசில்லாப் பெண்மையின் மாண்புகள் காப்போம்
    மதியுடை மாதர்கள் மானம் காப்போம்

    அன்பு காட்டும் தாயாய்
    அறிவுரை சொல்லும் அமைச்சராய்த் தாரம்
    அள்ளிக்கொஞ்சும் மழலையாய் மகள்கள்
    ஆறுதல்தரும் ஆதரவாய் அக்கா தங்கைகள்

    இயன்றவரை எல்லார்க்கும் எல்லாம் தரும்
    இறையாய் மங்கையர் இருந்தும்
    இன்னல்கள் எல்லாம் வெந்தணலாய் வருவது
    இந்தத் தேவதைகளுக்குத்தான்!

    மேலை நாட்டின் பண்பாடு
    ஏழை நாட்டுக்கு ஏன் வேண்டும்?
    வாழும் முறையில் மாற்றம் வேண்டும்தான்
    வழுக்கி விழுவது சேறாக இருத்தல்தான் வேண்டுமா?

    வல்லூறுகள் இணைய வானில் வட்டமிட்டும்
    வலைகள் விரிக்கப்படும் திறன்பேசிகளில் வசீகரமாய்
    பொல்(ள்)லா(ளா)ட்சிக் கசப்புகள் புத்தி புகட்டுமா நமக்கு?
    வழக்குகள் வலுவிழக்கப்படும் வாதாட நேரமின்றியே!

    துள்ளல் நடைக்கும் உடலொட்டி உடைகளுக்கும் விடையளிப்போம்
    நிலை தடுமாறாமல் இருக்க மீசை பாரதியின்
    நிமிர்நேர் பார்வை பெறுவோம்!
    பொல்லாச் சுவர்ணத்தின் தேவதைகளாக வேண்டாம்
    பொல்லாங்கில்லா நல்லாட்சிப் புவியின் பூ மகள்களாவோம்!

    *****

    ”தற்காத்துக்கொள்ளாத பெண்மையும், பெண்மையின் பெருமை காக்க உதவா ஆண்மையும் அர்த்தமற்றவையே” என்று அழுத்தமாய் உரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆட்டம்…

    எல்லை தாண்டிடும் ஆட்டங்கள்
    வாழ்வில்
    எடுத்துத் தருவது வாட்டம்தான்..

    ஆணோ பெண்ணோ
    ஆட்டம் அதிகமானால்
    ஆபத்து அருகினில்தான்,
    ஆனாலும்
    பாதிப்பு அதிகம்
    பெண்ணுக்குத்தானே..!

    காலம் காலமாய்க்
    காண்பதும் இதுதானே..!

    தன்னைக் கட்டுப்படுத்தித்
    தற்காத்துக்கொள்ளாத
    பெண்மையும்,
    பெண்ணின் பெருமைக்குத்
    துணை நில்லா
    ஆண்மையும்,
    அகில வாழ்வில்
    அர்த்தமற்றவைதான்…!

    *****

    இணைய யுகத்துக்கேற்ற அறிவுரைகளைச் சிறப்பாய் வழங்கியிருக்கும் பாவலர்களைப் பாராட்டுகின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து… 

    பெண் சுதந்திரம்!

    பெண் என்று அறிந்து 
    கலைக்கப்படும் கருவில் தப்பி
    இனிதாய்த் துவங்கியது உனது வெற்றி பயணம்!
    கள்ளிப்பால் கொலையில் தப்பி 
    வெற்றிப்பாதையின் முதல் படியில்
    பள்ளி சென்று பட்டம் படித்து
    வெளிச்சத்திற்கு வந்த வாழ்க்கைப் படிகள் 
    வாசல்வரை வந்து வழியனுப்பிக் 
    காத்திருந்த காலம்போய்
    காற்றைக் கிழித்து செல்லும் 
    விமான ஓட்டியாய் வளர்ந்து நின்றாய்! 
    மூலையில் முடங்கிக் கிடந்த காலம்போய் 
    முன்னேற்றப் பாதையில் முந்திச் சென்றாய்! 
    பின்தொடர்ந்து சென்றதெல்லாம் போதும் என்று
    உன் நிழல்கூட முன்னேற்றப் பாதையில்
    முன்னே விழுந்ததோ?!
    காந்தி கண்ட கனவு சுதந்திரம்
    வந்ததோ என்று வியந்தது 
    பல விழிகள் உன்னைக் கண்டு! 
    வரைபடம்கூட உயிர்த்தெழுந்ததே
    தேவதை உன்னைக் கண்டு
    சொர்க்கம் என்று எண்ணி! 
    சுதந்திரம் என்பது பார்க்கும் விழிகளில் இல்லை
    உரிமைக்காகப் போராடும் பாவை உன் மனதில் இருக்கும்! 
    முடிந்தவரை போராடி முன்னேறு
    வெற்றி உன்னைத் தொடர்ந்துவரும் பின்னோடு! 

    ”கள்ளிப்பால் கொலையில் தப்பி, பள்ளிசென்று படித்து, விமானத்தில் வானை அளக்கும் வனிதையே! வரைபடம்கூட உன்னைக்கண்டு உயிர்த்தெழுகின்றது உற்சாகத்தால்! முன்னேற்றத்தையே நாடும் உன் மனத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உன்நிழல்கூட முன்னால் விழுகின்றதே!” என்று படத்தில் காணும் பாவையைப் போற்றிப் பாடியிருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 205

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நம்மைப் பிறருக்குப் பிடிக்க

    -நிர்மலா ராகவன்

    நலம்.. நலமறிய ஆவல் – 150

    நம்மைப் பிறருக்குப் பிடிக்க

    சிலருக்குப் பிறரைப் புகழ்ந்துதான் பழக்கம். தம்மை யாராவது புகழ்ந்தால் அவர்களுக்குத் தர்மசங்கடமாகிவிடும். என்ன சொல்வது என்று புரியாது விழிப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கே தம்மிடம் ஏதாவது திறமை இருப்பது தெரியாது.

    எத்தனை சிறு சமாசாரமாக இருந்தாலும், பிறரிடம் இருக்கும் திறமையையோ, நல்ல குணத்தையோ பாராட்டுவது ஒருவரது நற்குணத்தை, இரக்கத்தை, காட்டுகிறது. ஒருவரது நற்பண்பு செவிப்புலன் அற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்குக் கேட்கும்; பார்வை இல்லாதவர்களுக்கும் தெரியும் எனப்படுகிறது.

    நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள் பிறரையும் நல்லவிதமாகவே எடைபோடுவார்கள்.

    நம் மனம்போனபடி நடந்தால் என்ன? ஏன் பிறரிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும்?

    இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா?

    அப்போதுதான், `என்னைப் பிறருக்குப் பிடிக்கிறது. நான் நல்லவன்தான்!’ என்ற நிறைவு உண்டாகும். வீட்டிலும் வெளியிலும் நம் உறவுகள் பலப்படுவது நம் பண்பால்தான்.

    தாம் பெற்ற அன்பை யாரும் சேமித்து வைத்துக்கொள்வது கிடையாது. தமக்குக் கிடைத்ததை மேலும் பரப்புகிறார்கள்.

    கதை

    கோலாலம்பூரிலுள்ள ஒரு நாட்டியப்பள்ளியில் வசதிகுறைந்த மாணவிகளுக்கு என்று ஆரம்பித்து, பயில வரும் அனைவருக்கும் இலவசமாகப் போதிக்கப்படுகிறது. முறையாகப் பயின்றதால் கட்டொழுங்கும், தன்னம்பிக்கையும் பெருக, பத்து ஆண்டுகளுக்குமேல் அங்கு பயின்றவர்கள் தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற வேண்டும் என்று உறுதி பூண்டார்கள். நகரின் பல பாகங்களில் வசித்த ஏழை மாணவிகளுக்கு இவர்கள் போதிக்கிறார்கள்.

    எல்லாரும் இந்தியப்பெண்கள். `இந்தியர்கள் முட்டாள்கள்!’ என்று பள்ளிக்கூடங்களில் ஒயாத வசவு வாங்கியிருப்பார்கள். இது புரிந்து, தடுமாறி நிற்கும் சிறுமிகளைத் திட்டாது, ஆனால் மிகுந்த கண்டிப்புடன் நடத்த, வட்டம் பெருகிவருகிறது.

    அமைதியோ, மகிழ்ச்சியோ இல்லாதிருக்கும் குடும்பத்திலிருந்து வருகிறவர்களுக்கு எதையும் கற்றுக்கொடுப்பது எளிதல்ல. தமக்கு உதவ வருகிறார்கள் என்பது புரியாது, `எங்களைவிட்டால் உங்களுக்கு வேறு கதியில்லை!’ என்பதுபோல் திமிராக நடப்பவர்களும் உண்டு. அக்கம்பக்கத்தினர், சகமாணவியர் ஆகியோரைப்பற்றி அவதூறாகப் பேசுகிறவர்களும் உண்டு. சிறிது காலம் இவர்களிடம் பராமுகமாக நடந்துகொண்டால், தானே மாறிவிடுவார்கள்.

    இதெல்லாம் புரிந்து நடந்த ஆசிரியரைப்போலவே, அவரது மூத்த மாணவிகளும் பிறரை வழிநடத்திச் செல்லும் தலைமைக்குணத்தைப் பெற்றுவிட்டார்கள்.

    இவர்கள் சுயமாக நாட்டிய வகுப்பு என்று ஆரம்பித்தால், சேரப் போகும் ஒரு மாணவியிடமிருந்தே நாற்பது, ஐம்பது என்று ஒரு மாதத்தில் பல ரிங்கிட்டுகளைக் கறக்கலாம். சலங்கை பூஜை நடத்தினால் ஆயிரக்கணக்கில்! ஆனால், பணத்தைவிட தம்மைப்போல் இருக்கும் பிறரை மேலே தூக்கிவிடுவதே இவர்களது குறிக்கோளாக இருக்கிறது.. நிலைத்திருக்கும் மகிழ்ச்சி என்னவென்று இவர்களுக்குப் புரிந்திருக்கிறது.

    பிறருக்கு நன்மையே செய்பவர்களை ஏமாளிகள் என்று உலகம் நினைக்கலாம். இத்தகைய எண்ணப்போக்கால் சிறிதும் பாதிக்கப்படாத உறுதியும், சுதந்திரமான மனப்போக்கும் பலனை எதிர்பார்க்காது நன்மை செய்பவர்களுக்குக் கிட்டுகிறது. (`பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று எப்போதும் அஞ்சுகிறவர்கள் சுதந்திரமாக நடக்கும் திறனை இழந்து, பிறரை நாடிக்கொண்டே இருக்கிறார்கள்).

    கதை

    `என் சிறுவயதில், பெற்றோர் என்னிடம் அன்பு காட்டவில்லை. ஒழுக்கம் போதிப்பதாக எண்ணி, வன்முறையைப் பிரயோகித்தார்கள். இப்போது அவர்களுக்கு வயதான நிலையில், என்னால் அவர்களிடம் இரக்கம் காட்ட முடியவில்லை. முதியோர் இல்லத்தில் விட்டதில் என்ன தவறு?’ என்று நியாயம் கேட்டு ஒருவர் தினசரியில் எழுதியிருந்தார்.

    இவரைப்போல் கடந்த காலத்தின் கசப்புக்களிலேயே வாழ்ந்துகொண்டிருந்தால் நிம்மதிதான் கெடும். `பெற்றோரின் காலமே வேறு. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று தோன்றிப்போனால், அவர்களிடம் பணிவாக நடக்க முடியும்.

    அதிகாரத்தால் சாதிக்க முடியாததை அன்பினால் வெல்லலாம் என்பதைப் பலரும் அறிவதில்லை.

    கதை

    பாலர் பள்ளியில் சேர்க்கப்பட்ட சுந்தர் காலையில் புறப்படும் முன் தினமும் கதறி அழுவான் — அப்படியாவது, பெற்றோர் மனமிளகி வீட்டிலேயே விளையாடிக்கொண்டிருக்க அனுமதி கொடுப்பார்கள் என்று நம்பிக்கையால்தான்! அவர்களே இப்படித்தானே செய்திருப்பார்கள்! அதனால் மசியவில்லை.

    வேண்டாவெறுப்பாக பள்ளிக்குப் போக நேரிட்டபிறகு, அங்கு அளிக்கப்பட்ட எந்த வேலையையும் செய்ய மறுத்தான். அது என்ன, அவனுக்குப் பிடிக்காததையெல்லாம் செய்யச் சொல்லிப் பிறர் வற்புறுத்துவது!

    ஏதாவது எழுத்துவேலை கொடுத்தால், (தான் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் படங்களில் வரும் மிருகங்களைப்போல்) முகத்தில் இறுக்கத்தைக் காட்டிய பையனை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை அவன் வகுப்பாசிரியைக்கு.

    தன் இயலாமையை ஒத்துக்கொண்டு, தலைமை ஆசிரியை மாலாவிடம் கொண்டுவிட்டாள். அவள் கனிவுடன், `என் மடியில் உட்கார்ந்து எழுதுகிறாயா?’ என்று கேட்க சிறுவனும் சம்மதித்தான்.

    சில நாட்கள் மாலாவின் மடியில் உட்கார்ந்து எழுதியதில், எழுதுவது அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை என்று தோன்றிப்போயிற்று சுந்தருக்கு. அதன்பின், வகுப்பில் நடப்பவைகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டான்.

    அன்பினால் எதையும் வெல்லலாம் என்று சிறுபிராயத்தில் கற்கும் பாடம் எப்போதும் மறக்காது.

    கதை

    திருமணமாகி வெளிநாடு வந்திருந்தாள் சுபத்ரா. புதிய சூழ்நிலை. புக்ககத்தினரும் அனுசரணையாக நடக்கவில்லை.

    அப்போது, பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு அம்மாள், `குழந்தைக்காகப் பண்ணினேன்!’ என்று மைசூர்பாகு செய்து கொண்டுவந்து கொடுத்தாள். அவள் `குழந்தை’ என்று குறிப்பிட்டது சூல்கொண்டிருந்த தாயை.

    எதிர்பார்ப்பின்றி வழங்கப்பட்ட அந்த அன்பினால் சுபத்ராவின் மனம் நெகிழ்ந்துபோயிற்று.

    கருவாக இருந்தபோது அம்மாவின் மனதைக் குளிரச்செய்த அந்த நிகழ்ச்சி பிறந்த குழந்தையின் உள்ளத்திலும் பதிந்துபோயிருக்கவேண்டும். இல்லாவிட்டால், பாலில் சர்க்கரை சேர்த்தால் துப்பிவிடும் குழந்தை வளர்ந்தபிறகு மைசூர்பாகை மட்டும் விரும்பிச் சாப்பிடுமா?

    ஈகை என்பது வசதியானவர்களுக்கு மட்டுமே உரிய குணமல்ல.

    கதை

    நங்கநல்லூர் கோயில் வாசலில் இருந்த பூக்கடையில் ஆசையுடன் ஒரு ரோஜாவைக் கையில் எடுத்தேன். என்னிடமிருந்த காசை பூக்காரியிடம் நீட்டியபோது, “சில்லறை இல்லே!” என்றாள்.

    நான் சிறிது வருத்தத்துடன் பூவை அது இருந்த கூடையிலேயே திரும்பப் போட்டேன்.

    “தலையில் வச்சுக்கத்தானே கேக்கறே? எடுத்துக்கோ!” அவள் என் கையில் திணிக்காத குறை.

    பிரமிப்புடன் நான் அதைப் பெற்றுக்கொண்டேன். என்னால் அவளுக்கு அன்று ஐந்து ரூபாய் நஷ்டம்.

    எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி பரீட்சை எழுதிவிட்டோ, வேலை பார்த்துவிட்டோ களைத்து வருகிறவர்களின் கால்விரல்களை நக்கிக்கொடுத்து, அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும்!

    மனிதனோ, மிருகமோ, ஒருவரது செய்கைகளும் சொற்களும் பிறருக்கு ஆறுதலாக, ஊக்கம் அளிப்பதாக இருந்தால் மகிழ்வை அளிக்கிறது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 23

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 23 – ஈகை.

    குறள் 221:

    வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து

    இல்லாதவங்களுக்கு குடுக்குதது தான் ஈகை. மத்ததெல்லாம் ஏதோ ஒண்ண பதிலுக்கு எதிர்பாத்து செய்யுதது போல தான்.

    குறள் 222:

    நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று.

    மத்தவங்ககிட்டேந்து நல்ல மொறைல பொருள பெற்றுக்கிட்டாலும் அது பெரும ஆவாது. தானம் குடுக்குததுனால மேலோகத்துல எடமில்ல னு சொன்னாலும் குடுத்து வாழுததுதான் நல்லது.

    குறள் 223:

    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே யுள

    நான் ஏழ னு பொறத்தியார் கிட்ட சொல்லாம இருக்குததும் இல்லாதவங்களுக்கு கொடுக்குததும் நல்ல குடும்பத்துல பொறந்தவனுக்கு மட்டுமே உள்ள கொணம்.

    குறள் 224:

    இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணு மளவு

    குடுக்குத கொணம் இருக்கவங்களுக்கு கூட தங்கிட்ட பொருள வாங்கிக்கிடுதவனோட சந்தோசமான மொகத்த பாக்குத வரைக்கும் அவனுக்காக இரக்கப் படுதது துன்பமாத்தான் தோணும்.

    குறள் 225:

    ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
    மாற்றுவா ராற்றலிற் பின்

    பசிய பொறுத்து நோம்பு இருக்குதவங்களோட வலிமகூட பொறத்தியாரோட பசிய போக்குதவங்களோட வலிமைக்கு பொறவு தான்.

    குறள் 226:

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி

    ஒண்ணும் இல்லாதவங்களோட வயித்துப்பசிய போக்கணும். அதுதான் பொருள் இருக்குத ஒருத்தன் தன்னோட பிற்காலத்துக்கு ஒதவுததுக்காக சேமிச்சு வக்கித எடம்.

    குறள் 227:

    பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
    தீப்பிணி தீண்ட லரிது

    தனக்கு கெடச்ச சாப்பாட்ட பலபேர் கூட பங்குபோட்டு சாப்பிடுதவனுக்கு பசிங்குத கெட்ட நோவு சுளுவா அண்டாது.

    குறள் 228:

    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்

    ஏழ பாழங்களுக்கு கொடுக்காம தன் சம்பாத்தியத்த வம்பா தொலச்சுபோடுத ஈரங்கெட்ட மனசுக்காரங்க மத்தவங்களுக்கு கொடுக்குததனால வர சந்தோசத்த புரிஞ்சுக்கிடமாட்டாங்களோ?.

    குறள் 229:

    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமிய ருணல்

    சொத்து கொறஞ்சுபோயிடும் னு யாருக்கும் குடுக்காம தனியா திங்குதது மத்தவங்க கிட்ட கை ஏந்துத விட கொடும.

    குறள் 230:

    சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
    ஈத லியையாக் கடை

    சாவுதது விட துக்கம் வேற ஒண்ணுமில்ல. ஆனா இல்லாதவங்களுக்கு ஒண்ணும் குடுக்கமுடியாமப் போகுத நெலம வந்துச்சின்னா அதவிட சாவுததே நல்லது.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 30

    – திருச்சி புலவர் இராமமூர்த்தி

    சுந்தரரைத்  திருமணத்தின் போது  தடுத்தாட்கொண்ட  முதிய அந்தணர்  வேடத்தில்   வந்த   இறைவன் தம்  வழக்கில்  வென்றார்! அவர் சுந்தரரின் தந்தைக்குத்  தந்தையின் அடிமை  என்றும் , தம் திருப்பெயர்  ஆரூரன்  என்றும் கூறி, அதற்குரிய  ஆவணங்களை  வழங்கினார். அவரை அறியாத சபையினர் அவர் வாழுமிடத்தைக் காட்டுமாறு வேண்டினர்! அவரோ நேராக அவ்வூர்க்  கோயிலாகிய  திருவருட்டுறையுள்  அந்தணர்களை சுந்தரரையும் அழைத்துச் சென்று  மறைந்தார்.

      திருவருட்டுறை – திருவெண்ணெய்நல்லூர்க்கோயிலின் பெயர். திருப்பெண்ணா கடத்திலே திருத்தூங்கானைமாடம் என்பதும், திருச்சாத்த மங்கையிலே அயவந்தி என்பதும் அவ்வத் திருக்கோயில்களுக்குப் பெயராதல் போலக் காண்க. துறையே புக்கார் – அருளாகிய துறையிலே ஒளிப்பவர் இறைவனாதல் குறிப்பு. பவக்கடலிலே வீழ்ந்தாரைத் துறையிலே ஏற்றும் தோணியாக இறைவனைக் கூறுவர் பெரியோர். ‘இடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங் கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்கும் தோணியை……“ (திருவாவடுதுறை – தாண்டகம் – 4). தோணிக்காரர் இருப்பதும், தொழில் செய்வதும் துறையிலேதான். தோணி தான் துறையிலே நின்று தன்னை அடைந்தோரைத் துறைச்சேர்த்திக் கரையேற்றுவதுபோல இறைவனும் இவ்வருட்டுறையிலே உலகத்தாரைக் கரை ஏற்றும் பொருட்டுச்  சமயாசாரியராகிய ஆரூர நம்பிகளையும், சந்தான ஆசாரியரான

    மெய்கண்டாரையும் கரை ஏற்றினார். திருத்துறையூரிலே அருணந்திசிவாசாரியாரை ஏற்றினார். இத்துறைகளிற் பெரியதாகிய திருப்பெருந்துறையிலே மாணிக்கவாசகரை ஏற்றினார். ‘பெருந்து றைப்பெருந் தோணி பற்றி யுகைத்தலும்’ என்ற திருவாசகமும் காண்க. அப்பர் சுவாமிகளைத் திருவையாற்றிலே ‘நெடுநீரினின்றேற நினைந்தருளிய’ (திருவிருத்தம் – 3 – 4.) அவரே, பிரமபுரத்திலே பிள்ளையாரைப் பொய்கைக் கரையிலே ‘அறியாப் பருவத்தே எடுத்த’ தோணியப்பராம் என்பதும் இங்கு  வைத்துக் காண்க

    முன்நிலையிலே கயிலையிலே நீ நமக்குத் தொண்டு செய்தவன்; மாதர்மேல் மனம் வைத்ததனாலே நமது கட்டளையின்படி இப்பிறவியை அடைந்தாய்; துன்பந் தரும் இவ்வுலக  வாழ்க்கை உன்னைத் தொடராதபடி அங்கே அருளிய சாலுமொழியினாலே உன்னைத் தொடர்ந்துவந்து அந்தணர்கள் முன்னிலையில் நாமே தடுத்தாட்கொண்டோம்’ என்று உண்மை உணர்த்தி யருளினார்.

    தென்புவி, மீதுதோன்றி அம்மெல்லியலாருடன் காதலின்பம் கலந்து பின் அணைவாய்’ (வரிசை – 37) என்று நாம் ஏவிய வாழ்க்கை உன்னைத் துன்பத்தினின்று விடுவிப்பது; ஆனால் இப்போது தடுத்த மணவாழ்க்கை அதற்கு வேறாய்த் துன்பத்தில் மேன்மேலும் இருத்தும்  வாழ்க்கை. இன்பம் போலக் காட்டி உண்மையிலே துன்பமாயிருக்கிற வாழ்க்கை என்றபடி. எனவே மக்கள் உலக வாழ்வின் துறைகளிலே ஈடுபடும்போது இது துன்பறு வாழ்வா? அன்றித் துன்புறு வாழ்வா? என்று உணர இறைவனை வேண்டக் கடவர்.- இவை சிவக்கவிமணியாரின்  தெளிவுரை!  ஆதலால் ,

    அவரே தம் இறைவன் என்பதை  உணர்ந்து கொண்ட சுந்தரர், இறைவனின் பெருங்கருணைத் திறத்தைப்  போற்றி வணங்கினார்! முன்பு   கைலைமலையில்

    வாக்குறுதி  அளித்தவாறே , சுந்தரர் தென்னாட்டில் பிறந்தபின்னும் அவரைத் தொடர்ந்து வந்து தடுத்தாட்கொண்டார்! இதனைக் கூறும் பெருமானின்  குரலைக்  கேட்ட சுந்தரர், தன்னை விட்டுப் பிரிந்த தாய்ப்பசுவின்  குரலைக் கேட்ட  பசுங்கன்று போல பதறிக் கலங்கிக்  கதறினார் சுந்தரர். அவர்தம் கரங்களும் கால்களும் மேலுமுள்ள அங்கங்களும் மயிர்க்கூச்செறிந்து, தலைமேல் குவிந்த  கரங்களுடன் இறைவனை நோக்கி, ‘’ என்னை எங்கும் தொடர்ந்து வந்து, இழுத்து ஆட்கொண்ட மன்றத்து வழக்காடியின் செயலோ இது!’’ என்று கூறினார்.  இதனைச் சேக்கிழார் ,

    ‘’என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
     கன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்
     துன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக
     “மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது” என்றார்.

    என்று  பாடுகிறார்! இப்பாடலில் ‘’மன்றுளீர்’’ என்று, தில்லைப்பொன்னம்பலத்தில் உள்ளஇறைவனைக் கூறிப்போற்றுகிறார்! இப்பாடலில் இறைவனைத் தாய்ப்பசு வாகவும், சுந்தரரைக் கன்றாகவும் கூறிய நயம் எண்ணி மகிழத்  தக்கது!   புராணத்  தொடக்கத்தில்   ‘’திருவாரூர்த் திருநகரச்சிறப்பு’’ பகுதியில் ஈசனே  பசுவாக வந்து, தன்  கன்றுக்காக ஆராய்ச்சி  மணியை அசைத்து ,  அரசனை  வீதிக்கு   இழுத்து, வழக்காடி வென்றதைக்   கண்டோம். அந்த  இளங்கன்று ,  தெருவில்    செல்லும்  தேர்ச்சக்கரத்தின்   இடையே  புகுந்து இறந்தபோது  தாய்ப்பசு  அரசன்முன்   சென்று  நீதிகேட்டு  நாடகமாடியது போல , இங்கும்  மற்றவர்கள் சூழ்ந்து அழைத்துவர, மண  மன்றத்தில்  ஏறிய சுந்தரரைத்  தடுத்து ஆட்கொள்ள   ஓலைகாட்டி ஒரு நாடகம் ஆடினார்!  இக்காப்பியத்தின்    பாவிகமாக  முன்னர் நிகழ்ந்த  நிகழ்ச்சியைக் கூறலாம்!

    கம்பராமாயணத்தில்  சேற்றில் இறங்கிய எருமையின் பாலை  அதற்குரிய கன்று  உண்ணாத  போது ,  தாமரையில்  உறங்கிய  அன்னத்தின் குஞ்சு பருகிய காட்சி மூலம்,  இராமனுக்கு உரிய  அரசாட்சியை  கைகேயி  சூழ்ச்சியால் பரதனுக்கு  வழங்கிய   நிகழ்ச்சியை,

    ‘’சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம்
    மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை
    கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த
    பால் உண்டு துயில பச்சை தேரை தாலாட்டும் பண்ணை!’’

    என்றபாட்டில் காட்டுவார்! இதனைப் பாவிகம்   என்று  நூலிலக்கணம்  கூறும்! அதைப் போலவே , இக்காப்பியத்தின்  திருவாரூர்க் காட்சியில்  தாய்ப்பசு நீதி கேட்டு வென்றது . இதன்  நுட்பத்தை ,

    ‘’என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
     கன்று போல் ‘’ 

    என்ற  உவமை மூலம்  சேக்கிழார் நமக்குப்  ,புலப்படுத்துகிறார்!  ஈசனைப் பசுவாகவும், சுந்தரரைக்  கன்றாகவும் காட்டியமையால், கூட்டத்தினர்  காட்டிய வழியில்  இழுக்கப்பட்டுச் சென்ற   கன்று போன்றவர் சுந்தரர் என்பதும், உறவும் அரசும் காட்டிய பாதையில்  இழுக்கப்பெற்று  மையல் மானிடமாய்ச்  சுந்தரர்   மயங்கினார் என்பதும்,   சேக்கிழாரின் பேரறிவுத் திறனால்  விளங்குகிறது!

    Share
  • அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமை

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்கச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு வெளிப்படையாகத் தெரிய வந்திருக்கிறது. எல்லாச் சமூகங்களிலும்போல் அமெரிக்காவிலும் இடதுசாரிகள், வலதுசாரிகள், பழமை விரும்பிகள், புதுமைவாதிகள் என்று பல பிரிவுகள் உண்டு. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதுவரை அரசல் புரசலாக இருந்த இந்தப் பிளவுகள் இப்போது வெளிப்படையாகத் தோன்றியிருக்கின்றன. வெள்ளை இனவாதிகளின் கை மிகவும் ஓங்கியிருப்பதாகத் தெரிகிறது.

    இவர் சொல்லும் பொய்களுக்கு அளவேயில்லை. தினமும் பொய்களாகக் கூறிக்கொண்டு நடுநிலை வகிக்கும் பத்திரிக்கைகளை மக்களின் எதிரிகள் என்கிறார். நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் அடிக்கடி உண்மையே வெல்லும்,உண்மையை மறைக்க முடியாது என்ற வாக்கியங்கள் அடங்கிய ஒரு பக்க விளம்பரங்களை வெளியிட்டாலும் ட்ரம்ப் பொய்களை உதிர்ப்பதை நிறுத்துவதில்லை. மற்றவர்கள் என்னென்ன பொய்கள் சொல்லுகிறார்கள் என்று இவர் சொல்கிறாரோ அந்தப் பொய்களை இவர்தான் தினமும் கூறிவருகிறார். அமெரிக்காவில் ஜனாதிபதிகள் தங்கள் நெருங்கிய உறவினர்களைத் தங்களுடைய ஆலோசகர்களாகவோ பெரிய அரசுப் பதவிகளிலோ வைத்துக்கொள்ளுவதில்லை. எங்கேயோ ஒரு சிலர்தான் அப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள். ஜான் கென்னடி தன்னுடைய தம்பி ராபர்ட் கென்னடியை அட்டர்னி ஜெனரலாக வைத்துக்கொண்டார் என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பட்ட ஜனாதிபதிகள் மிகவும் குறைவு. ட்ரம்ப்போ தன் மகள், மருமகன், மகன் என்று நெருங்கிய உறவினர்களைத் தனக்கு அரசியல் ஆலோகசகர்களாக அரசாங்கச் செலவில் வைத்துக்கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்தும் அவர்களை வற்புறுத்தித் தன் மருமகனுக்கு மிகவும் ரகசியமான அரசாங்க ஆவணங்களைப் பார்க்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்கும் அமெரிக்க நடுவராக மருமகனை நியமித்திருக்கிறார். இவர் இந்தத் தீர்வுக்குப் பாலஸ்தீனத்தில் நிறையத் தொழில்களைத் தொடங்கி பால்பஸ்தீனர்களின் வாழ்க்கையை மேம்படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். இந்தச் சாக்கில் பாலஸ்தீனத்தில் நிறைய முதலீடு செய்து கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். இதுதான் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இவருடைய தீர்வு!

    உலகில் சர்வாதிகாரிகள் உள்ள நாடுகளைப்போல் அமெரிக்காவில் தானும் சர்வாதிகாரியாக விளங்க வேண்டும் என்று ட்ரம்ப்ஆசைப்படுகிறார். பதவிக்கு வரும் முன் ஒரு வியாபாரியாக இருந்த இவர் ஒரு ஜனநாயக நாட்டில் அரசை நடத்துவதற்குப் பல checks & balances இருக்கின்றன என்பதை அடியோடு புறக்கணித்துவிட்டுத் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்கிறார்.தான் பொய்களாகச் சொல்வதோடு தன்னைச் சார்ந்த மற்றவர்களையும் பொய்கள் சொல்லவைக்கிறார். பதவி ஆசையால் இவருடைய மந்திரிசபையில் பதவி ஏற்ற சிலர் இவருடைய அட்டகாசம் தாங்காமல் பதவியைத் துறந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்; இவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொல்பவர்களைப் பதவியிலிருந்து தடித்தனமாக விலக்கியிருக்கிறார்.

    சமீபத்தில் சென்ற பத்து வருடங்களாக ட்ரம்ப்புக்கு வழக்கறிஞராக இருந்த மைக்கேல் கோகன் என்பவர் ட்ரம்ப் தன்னை நடத்திய விதத்தையும் பொய்கள் சொல்லவைத்ததையும் தாங்க முடியாமல் அவருக்கு எதிராகப் பல உண்மைகளை அமெரிக்கப் பாராளுமன்ற கீழவை உறுப்பினர்களிடம் கூறியிருக்கிறார். அரசு ஒழுங்காகக் காரியங்கள் செய்கின்றதா என்பதைக் கண்காணிக்க கீழவை அங்கத்தினர்கள் யாரையும் விசாரிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு விசாரணையின்போது தான் ட்ரம்ப்பால் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்பதை விலாவாரியாக கோகன் விளக்கினார். மேலும் ஒரு பெரிய எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார். 2020-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தோற்றுவிட்டால் அதை ஏற்றுஅவர் எளிதில் பதவி விலக மாட்டார் என்றும் நாடுபலாத்காரத்தில் இறங்கலாம் என்றும்ட்ரம்ப்பிற்காகத் தான் வேலைசெய்தபோது ஏற்பட்ட தன்னுடைய அனுபவத்திலிருந்து இதைக் கூறுவதாகவும் கூறியிருக்கிறார். இவருடைய எச்சரிக்கை அப்படியொன்றும் நடப்புக்கு அப்பாற்பட்டதல்லவென்றும் ட்ரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தின் தன்மையைக் குறைப்பதோடு அதை அழித்துவிடவும் கூடும் என்று பல பத்திரிக்கையாளர்கள் பயப்படுகிறார்கள். கிளின்டனின் வெளியுறவு மந்திரியாக இருந்த மேடலின் ஆல்பர்ட் எழுதிய ‘Fascism: A Warning’ என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளதுபோல் நாஜிக்கள் ஜெர்மனியைக் கைப்பற்றியது போலவோ ஃபாஸிஸம் இத்தாலியில் தலையெடுத்தது போலவோஅமெரிக்காவிலும் நடக்கலாம் என்றும் பலர் பயப்படுகிறார்கள். கலிபோர்னியா மாநிலகீழவை அங்கத்தினர் அமெரிக்க ஜனநாயகம் பெரிய ஆபத்தில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர் அமெரிக்கக் குடியரசின் ஸ்தாபனங்கள் (institutions)– எஃப்.பி.ஐ, நீதித்துறை, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள் – மிகவும் வலுவாக இருப்பதாகவும் ட்ரம்ப்பிற்கு எதிராகச் செயல்படத் தயங்காது என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

    ‘ஜனநாயக அரசுகள் எவ்வாறு தங்கள் முடிவை எதிர்கொள்கின்றன’(How Democracies Die)என்னும் புத்தகத்தை எழுதிய ஸ்டீவன் லெவிட்ஸ்கியும் டேனியல் ஸிப்லாட்டும் அமெரிக்க ஜனநாயகத்தை அப்படி எளிதாக ட்ரம்ப்பால்அழித்துவிட முடியாது என்கிறார்கள். 1930-களில் இருந்த ஜெர்மனி போலவோ இப்போதுள்ள துருக்கி, வெனிஸுவேலா, ஹங்கேரி போலவோ அமெரிக்கா இல்லையென்றும் அமெரிக்காவில் ஜனநாயக ஸ்தாபனங்களும் எதிர்க் கட்சியும் மிகவும் வலுவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இருந்தாலும், அமெரிக்க விழுமியங்கள் மாறிக்கொண்டு வந்ததாலேயே ட்ரம்ப் போன்றவர்கள் பதவிக்கு வந்ததாகவும், இன்னும் மாறிய எண்ணங்கள் தொடர்ந்து இருப்பதாகவும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எச்சரிக்கிறார்கள். 2018 தேர்தலில் ஜனநாயக் கட்சியின் அங்கத்தினர்கள் பெரும்பான்மையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ட்ரம்ப்பின் ஏகாதிபத்தியத் தோரணைக்கு மக்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள். இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

    நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒரு பத்திரிக்கையாளர் ட்ரம்ப்பின் ஏகாதிபதியாக (autocrat) வேண்டும் என்ற ஆசைக்குத் தடைபோடத் தேர்தல்களும் எதிர்க்கட்சியும் இருக்கும்வரை ட்ரம்ப்பால் அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்த முடியாது என்கிறார்.

    இதே மாதிரி நாம் இந்தியாவைப் பற்றியும் சொல்ல முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். இந்திய ஜனநாயகம் அமெரிக்க ஜனநாயகத்தின் அளவு வலிமை பொருந்தியதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்ல முடியவில்லை. இந்து மதத்தையும் அதன் அங்கமாக விளங்கும் ஜாதிகளையும் அறவே ஒழிக்க வேண்டும் என்று பறைசாற்றிய பெரியார் வழியில் வந்த திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வும் இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிக்கும் பி.ஜே.பி.யும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றுசேர்ந்திருப்பதைப் பார்த்தால் இந்தியாவில் அரசியல் விழுமியங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன என்று சொல்ல வேண்டும். அதன் விளைவாக இப்போது இருக்கும் ஜனநாயகத்தின் கொஞ்சநஞ்ச சாயலையும் முழுவதுமாக அழித்துவிட்டு, சந்தர்ப்பவாத அரசியல் மோதியை ஏகாதிபதி ஆக்கிவிடும்போல் தெரிகிறது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(249)

    செண்பக ஜெகதீசன்

    தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை.

    -திருக்குறள் -672(வினைசெயல் வகை)

    புதுக் கவிதையில்…

    செயல்படும்போது
    காலம் கடத்திச்
    செய்யவேண்டியதை,
    அவசரப்படாமல்
    காலம் கடத்தி
    உரிய தருணத்தில்
    செய்யவேண்டும்..

    காலம் கடத்தாமல்
    உடனடியாகச்
    செய்யவேண்டியதைச்
    செய்வதற்குக்
    காலம் கடத்தித் தூங்கிடாதே…!

    குறும்பாவில்…

    வினைசெய்யக் காலதாமதமாய்ச் செய்யவேண்டியதைத்
    தாமதித்து உரிய காலத்தில் செய்யவேண்டும்,
    தாமதிக்காது செய்யவேண்டியதை உடனே செய்யவேண்டும்…!

    மரபுக் கவிதையில்…

    செயல்கள் செய்யும் வேளையிலே
    செய்யக் காலம் தாழ்த்தியேதான்
    செயல்பட வேண்டிய வினைகளிலே
    செய்யத் தாமதம் காட்டிவிடு,
    பயனது பெற்றிட உடனடியாய்ப்
    பணியது செய்திட வேண்டியதில்
    துயிலது கொள்ளும் தடையின்றி
    தொடங்கிடு வினையை உடனடியே…!

    லிமரைக்கூ..

    செயல்படுவதில் வேண்டும் தூக்கம்,
    செயலதற்குத் தாமதம் வேண்டுமெனில், இல்லையேல்
    உடனேசெய் பெற்றிடவே ஆக்கம்…!

    கிராமிய பாணியில்…

    காலநேரம் பாத்துத்தான்
    எந்த
    காரியத்தயும் செய்யணும்,
    கவனமாத்தான் செய்யணும்..

    காலங்கடத்திச் செய்யவேண்டியத
    அவசரப்படாம
    காலங்கடத்திதான் செய்யணும்..

    காலங்கடத்தாம
    ஒடனே செய்யவேண்டியதுல
    காலங்கடத்திடாத,
    ஒடனே செய்யி…

    தெரிஞ்சிக்கோ,
    காலநேரம் பாத்துத்தான்
    எந்த
    காரியத்தயும் செய்யணும்,
    கவனமாத்தான் செய்யணும்…!

     

    Share
  • திரையிசைக் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ்

    க.பாலமுருகன்,
    உதவிப் பேராசிரியர்,
    அ. வ. அ. கல்லூரி(தன்.),
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை.
    மின்: elygsb@gmail.com

    ******************************************

    முன்னுரை

           மனித இனம் தோன்றி வளர்ந்தபோது பாடல்கள் தோன்றின எனலாம். தொடக்க காலத்தில் மனிதன் தன் இன்ப துன்ப உணர்வுகளை ஒலிமூலம் வெளிப்படுத்தினான். ஒலி மொழியாக வளர்ந்தது. மொழியின் வளர்ச்சி பாடலாக அரும்பியது. முதலில் வாய்மொழிப் பாடலாகத் தொடங்கி இன்று திரையிசைப்பாடல்களாக பல்வேறு நிலைகளில் வளர்ந்துள்ளது.

          திரைப்படத்துறையில் பல கலைஞர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் எளிதில் மக்களுக்குத் தெரிபவர்கள் நடிகர்களும், பாடலாசிரியர்களும்தாம். ஒரு திரைப்படம் வெற்றிபெறத் திரைப்படப் பாடல்களின் பங்கு முக்கியமானது. திரைப்படப் பாடலாசிரியர் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தஞ்சை ராமையாதாஸ் ஆவார். இத்தகைய சிறப்புமிக்கவரின் பிறப்பு, தொழில், கவித்திறன், பெற்ற விருதுகள், தனித்தன்மை இவை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

    பிறப்பும் படிப்பும்

           காவிரியன்னை சோறூட்டி, சோழமன்னர்கள் சீராட்டி, பாவலர்கள் பாராட்டிய மகத்துவம் கொண்ட தஞ்சாவூர் அங்காடிப் பகுதியைச் சேர்ந்த மகர் நோன்புச் சாவடி என்ற மானாம்புச் சாவடியில், இல்லற ஞானி கோ. நாராயணசாமி நாயனாருக்கும், பாப்பம்மாளுக்கும் 05.06.14 அன்று தலைமகனாகப் பிறந்தார். ஓர் இளைய சகோதரரும் இரு இளைய சகோதரிகளும் அவருக்குண்டு.1

    கல்வி

          தஞ்சாவூர் செயின்ட் பீட்டர் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். தஞ்சை கரந்தைக் கல்லூரியில் வித்துவான் பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றார். சரபோஜி மன்னர் கல்லூரியில் நடைபெற்ற நிலா நானூறு தொகுப்புப் போட்டியில் கலந்து பாடல்கள் புனைந்து வெற்றிபெற்றார்.2 தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள சுப்பையா நாயுடு நடுநிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.3 

    தேசப்பற்று

          இளம்பருவத்திலே ஆங்கில ஆட்சிக்கு எதிராகத் தேசப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார். தூய கதராடையை அணிந்து தமது நாட்டுப்பற்றை நிலைநாட்டினார். பல்வேறு மேடைகளில் பேசும்போது இவருடைய தேசப்பற்றுக் கொண்ட பேச்சுத்திறனால் அதிகாரியின் கண்டனத்துக்கும் உள்ளானார். தமது பணியைவிட, இவர் கொண்ட தேசப்பற்று மிகுதி என்பதால், தம்முடைய ஆசிரியர் பணியை விட்டுவிலகினார்.

    எழுத்துத் திறமை

          இவரின் எழுத்துத் திறமையை அறிந்த ஜெகந்நாத நாயுடு என்பவர் நடத்தி வந்த சுதர்ஸன கானசபாவில் வாத்தியாராக சேர்த்துக் கொண்டார். இக்குழுவில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு ஜெயலெட்சுமி நாடகசபா என்ற ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். மச்சரேகை, விதியின் வெற்றி, கம்பர், துருவன், பகடை பன்னிரெண்டு, அல்லி அர்ஜுனா, டம்பாச்சாரி, வள்ளித்திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்களை நடத்தி வந்தார். அது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றது.  பல ஊர்களிலும் நாடகங்களை நடத்தி வந்தார். சேலத்தில் அண்ணாவின் நாடகம் முடிந்தவுடன் இரவு முழுவதும் இராமையாதாஸின் புராண இதிகாச நாடகங்களைக் காண்பதற்கு அறிஞர் அண்ணாவும் நடிப்பிசைப்புலவர் ராமசாமியும் காத்திருந்தார்கள்.

    முதல் பாடல் வாய்ப்பு

           சேலம் மாநகரில் மச்சரேகை நாடகத்தை நடத்தியபொழுது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் டி.ஆர். மகாலிங்கம் நடித்துக்கொண்டிருந்தார். நாடகத்தைப் பார்த்த டி.ஆர். மகாலிங்கம் மாடர்ன் தியேட்டர் அதிபர் சுந்தரத்திடம் அறிமுகம் செய்து இவருடைய எழுத்து வன்மையையும் திறனையும் எடுத்துரைத்துத் திரைப்படப்பாடல் எழுதுவதற்கு அடிகோலினார். அந்த வகையில் 1947ஆம் ஆண்டில் 33ஆம் வயதில் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற பட்டத்திற்கு ராமனாதய்யர் இசையில் முதல் பாடலை எழுதினார்.4

          ”வச்சேன்னா வச்சதுதான் புள்ளி வச்சேன்னா வச்சது தான்!” என்ற பாடலை மாடர்ன் தியேட்டர்ஸில் வைத்த புள்ளியைக் கொண்டு திரையுலகில் கோலம் போடத்தொடங்கினார்.

    திரைப்படங்களுக்கு வசனம்

          இவர் எழுத்தின் மேன்மையைக் கண்ட விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த பல படங்களுக்கு வசனம் படல்கள் எழுதும் வாய்ப்பளித்து, தங்கள் நிறுவனத்தின் நிலையான கவியாக ஏற்றுக்கொண்டனர். இந்நிறுவனம் தயாரித்த பைரவி, கல்யாணம் பண்ணிப்பார், சந்திரஹாரம், குணசுந்தரி, மாயாபஜார், கடன் வாங்கிக் கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய எட்டுப் படங்களில்  எழுத்தாக்கப் பங்களிப்பை அளித்துள்ளார். சர்வதேச பிலிம் விழாவிற்கு பாதாள பைரவி படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

          இவரின் தேசப்பற்றால் பெருந்தலைவர் காமராஜர், மனிதரில் புனிதர் கக்கன் போன்ற தலைவர்களின் நட்பையும் பாராட்டையும் பெற்றார். அரசியலில் இவருக்கு விருப்பம் இல்லை. கவிஞருக்குக் கிடைத்த சுதந்தரப் போராட்டத் தியாகி பட்டத்தையும் பெற மறுத்துவிட்டார். நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர் திரு. சங்கரய்யரை ஆதரித்து வந்தார். இவரின் புதுமனை புகுவிழாவில் தியாகராஜ பாகவதரின் கச்சேரி நடைபெற்றது. நாடகத் தந்தையின் புகழ்பரப்பினார்.  மணிமண்டபம் அமைத்துக் குருபூஜையும் செய்து வழிபாடு செய்தார்.

          ஸ்ரீதர் 1956ஆம் ஆண்டு திரையிட்ட அமரதீபம் படத்திற்காகப் பாடல் ஒன்றை எழுதினார். “நம்புனா நம்புங்க நம்பாட்டி போங்க” என்று தொடங்கினார். படம் வாங்குபவர்களிடையே எதிர்மறையான எண்ணத்தை உண்டு பண்ணும் என்றவுடன் “ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா”5 என்று பல்லவியைத் தொடங்கினார். பொருள் புரியாமல் ஸ்ரீதர் கேட்டார்; கதையின் காட்சிப்படி இது குறவன் குறத்தி பாடும் பாடல். மொழி உனக்கும் புரியாது எனக்கும் தெரியாது என்றார். இப்பாடல் பெரும் புகழைத் தேடித்தந்தது. தயாரிப்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பாமர மக்களை மகிழ்விக்க

    1950ஆம் ஆண்டில் சென்னைக்குக் குடிபெயர்ந்து பல படங்களுக்குப் பாடல் எழுதி வந்தார். படித்தவர்களை விடுத்துப் பாமர மக்களை அதிகம் எழுதியதால் இலக்கிய இலக்கணப்பாடல்களை எழுதமுடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இவர் உடுமலை நாராயண கவியிடம், “நான் பாட்டு எழுதினேன் என்பதைவிட , நான் பாட்டுக்கு எழுதினேன்  என்பதுதான் உண்மை. நீங்களாவது தமிழுக்காக எழுதுங்கள்” என்றாராம். கவிஞரை தரமுள்ள பாடல்களைத் தவிர்த்து ஜாலியான பாடல்களை எழுதும்படி தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கேட்டதற்கு இணங்க எழுதினார்.

    பரிசும் பாராட்டும்

           சிங்காரி படத்தின் ”ஒரு சாண் வயிறே இல்லாட்டா” பாடலும் தூக்குத்தூக்கி படப்பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தவை. டி.ஆர். மகாலிங்கம் இவரின் மச்சரேகை நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரித்தார். 1960ஆம் ஆண்டு நோயின் காரணமாகப் படுக்கையிலிருந்தபடியே எழுதினாராம். கண்ணதாசன், “என் பிள்ளைகள் என் பாட்டைப்பாடாமல் ராமையாதாஸின் பாட்டைப் பாடுதுங்க” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். இவருடைய பாடல்கள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் அவை வெற்றியடைந்தன. 1955இல் வெளியிடப்பட்ட குலேபகாவலி படத்திற்கான வசனம், பாடல்களை உருவாக்கித் தந்தார்.  இவை எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்தன. இதனால் தஞ்சை ராமையாதாஸ் ஒரு எக்ஸ்பிரஸ் கவிஞர் என்று புகழாரம் சூட்டினார். மலைக்கள்ளன் படத்தில், ”எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”, ”ஏச்சுப்பிழைக்கும் தொழிலே சரிதானா, ஆனந்தக்கோனே அநியாயம் இந்த ஆட்சியிலே” பாடல்கள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பாடல்களாகும். சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எம்.ஜி.ஆர். போன்றோரைக் கதாநாயகர்களாக வைத்துத் திரைப்படம் தயாரித்து வெளியிட்டார். லலிதாங்கி, மிஸ்ஸியம்மா, உத்தமபுத்திரன் போன்ற படங்கள்தாம் அவை. முத்துமொழிகள் 3000 என்ற தலைப்பில் மூன்று தொகுதியாக இவரைப் பற்றிய வாழ்க்கைப் பதிவுகள் வெளிவந்துள்ளன. தஞ்சை ராமையாதாஸின் படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. 16.07.2010 அன்று இதற்கான பரிசுத்தொகையும்,  காசோலையும் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கவிஞரின் வாரிசுகளிடம் வழங்கினார்.

    இறப்பு

         ராமையாதாஸிற்குத் தாயாரம்மாள், ரங்கநாயகி என இரு துணைவியர் இருந்தனர். திரைத்துறையில் படத் தொகுப்பாளராகப் பணியாற்றிவரும் திரு. இரவீந்திரனும் இவரது இளைய சகோதரி திருமதி. விஜயராணி நடராஜனும் கவிஞரின் வாரிசுகள் ஆவர். தமது முதுமையில் சர்க்கரை, எலும்புருக்கி நோய்களால் பாதிக்கப்பட்டார். வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உடல்நலம் குன்றி 15.01.1965ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தில் இறைவனடி சேர்ந்தார். இறுதி ஊர்வலத்தில் பெருந்தலைவர் காமராஜர், கக்கன், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார், உவமைக்கவிஞர் சுரதா, ஜெமினிகணேசன், வசனகர்த்தா ஆரூர்தாஸ் உட்பட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    முடிவுரை

           கவிஞர் தஞ்சை ராமையாதாஸின்  திரைப்பாடல்கள் தனித்தன்மை உடையவை. சிறந்த கருத்துகளும் எதார்த்த நிகழ்வுகளும் எளிய வடிவமும் கொண்டு படைக்கப்பட்டவை. சமுதாய நோக்கினை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் எழுதி எல்லா மக்களுக்கும் பொதுவானவராக அவர் திகழ்ந்தார் என்பது புலனாகின்றது.

    சான்றெண் விளக்கம்:

    1. கவிஞர் பொன்.செல்லமுத்து, தஞ்சை ராமையாதாஸ் திரையிசைப்பாடல்கள் (தொகுப்பு),ப.320.
    2. மேலது,
    3. மேலது, ப.321
    4. மேலது, ப.324
    5. மேலது, ப.327
    6. வே. நல்லதம்பி, தொலைக்காட்சியும் பிற தகவல்துறைகளும்.
    7. அறந்தை நாராயணன், தமிழ் சினிமாவின் கதை.

     

    Share