என்ன செய்து கிழித்தேன்?

0

-மரபுமாமணி பாவலர் மா. வரதராசன்

(மரபுமாமணி பாவலர் மா. வரதராசன் அவர்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கவிதை.)

நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
நல்லோர்கள் போற்றுவித மென்ன செய்தேன்?
நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
நற்றமிழைப் பரப்புவழி என்ன செய்தேன்?
நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
நற்கவியை எளிதாக்க என்ன செய்தேன்?
நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்!

நாடிப்போய்த் தமிழ்கற்க வேண்டி நின்றேன்
நற்புலவர் பலபேரைக் கெஞ்சி நின்றேன்
தேடிப்போய்த் திரிந்தேன்யான் நல்லா சானைத்
தேள்கொட்டும் ஏளனத்தைப் பரிசாய்ப் பெற்றேன்
ஈடில்லை படிப்பில்லை என்று சொல்லி
இளக்காரம் செய்தார்கள் பொறுத்துக் கொண்டேன்
வாடிநின்றேன் என்தொழிலைச் சொல்லிச் சொல்லி
வாயாரச் சிரித்தார்கள் மருண்டு நின்றேன்.!

நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

ஆனாலும் என்தேடல் முடிய வில்லை
அரங்கத்தில் ‘ஓலமிட்ட ‘கவிதை கேட்டேன்
மானாக நான்துள்ளி உள்ளே செல்வேன்
மதிக்காமல் ஓரத்தே ஒதுக்கு வார்கள்.
போனால்தான் என்னென்று மானம் விட்டுப்
போய்க்கேட்பேன் சொல்லாமல் துரத்து வார்கள்
ஆனாலும் என்தேடல் முடிய வில்லை
அருந்தமிழக் காதலதும் குறைய வில்லை.!

நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

என்னென்ன வோசெய்தேன் மரபைக் கற்க
இயலாமல் ஏமாற்றம் எதிரில் நிற்கத்
தன்கையே தனக்குதவி என்று ணர்ந்து
தமிழ்த்தாயே துணையென்று துணிந்து விட்டேன்
மண்ணுக்குள் ஒளிந்திருக்கும் வளங்கள் போலே
வரமாகும் அறிவையெலாம் வகைப்ப டுத்தித்
தன்னுள்ளே வைத்திருக்கும் நூல கத்தில்
தமிழ்மரபு கவிகற்க நுழைந்தே னய்யா!

நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

எதைத்தேடிப் படிப்பதெனக் குழப்ப மாங்கே
இருந்தவற்றுள் இலக்கணத்து நூலை யெல்லாம்
கதைபோலப் படித்துவிட எண்ணி விட்டேன்
கண்ணயர்ந்து தூங்கியதே பலநா ளாகும்.
விதைப்பந்தின் உள்ளிருக்கும் மரத்தைப் போல
வியன்றமிழை என்னுள்ளில் விதைத்த தாலே
அதைத்தடுக்கும் தடையெல்லாம் உடைந்த தையா
அணுவணுவாய் இலக்கணமும் புரிந்த தையா.!

நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

புரிந்தவுடன் படிப்பதூஉம் எளிதா யிற்று
புதைந்திருந்த நுட்பங்கள் விதிக ளெல்லாம்
எரிவிளக்கி னொளிபட்ட இருளைப் போல
இலக்கணமும் இனிக்கின்ற கரும்பா யிற்று
விரிந்தகன்ற தமிழ்க்கடலின் கரையில் நின்று
விருப்போடு கால்வைத்தேன் ஈர மண்ணில்.
சுரிதகமாய்ச் சுழன்றுவரும் அலையில் இன்னும்
துணிவோடு நீந்துவிதம் அறிந்தே னில்லை.

நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்
நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்

இலக்கணத்தைக் கற்பதற்குப் பட்ட பாட்டை
இனியாரும் படவேண்டா எனுமெண் ணத்தில்
தலங்கண்டேன் களங்கண்டேன் முகநூல் வந்தேன்
தமிழ்ச்சோலை நிறுவியதில் கரைந்து போனேன்
பலவிடத்து மிருந்தபுதுக் கவிஞ ரெல்லாம்
பைந்தமிழச் சோலையினில் நுழைய லானார்
கலக்கத்தை யூட்டாமல் அனைவ ருக்கும்
கனிதமிழின் மரபுகளைச் செறிவாய்த் தந்தேன்!

நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்
நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்

கற்றவரில் பல்லோரும் செம்மை யானார்
கற்றோரும் போற்றுகின்ற ‘செம்ம லானார் ‘.
உற்றபுகழ் கூடியதால் அவர்கள் என்னை
உயரத்தில் வைத்தார்கள் ‘குருவென் றார்கள்.
நற்றமிழத் தாயவளின் தயையா லிந்த
நன்னிலையை நானடைந்தேன் வேறொன் றில்லை
மற்றபடி நானிதற்குப் பட்ட பாடு
மறவாதே மண்ணுக்குள் போகு மட்டும்.!

நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்
நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்

உயிருக்குள் கலந்துவிட்ட கவிஞர் பெற்றேன்
உணர்வோடு கலந்துவிட்ட கவிஞர் பெற்றேன்
உயிரேநான் என்கின்ற கவிஞர் பெற்றேன்
ஓரிறையாய் எனைப்போற்றும் கவிஞர் பெற்றேன்
பயிருக்கு மழைபோல வாடும் நேரம்
பரிந்தென்னைக் காக்கின்ற கவிஞர் பெற்றேன்
தயிர்க்குடத்தில் துளிநஞ்சாய்க் கவிஞ ரென்று
சழக்கர்சில் லோரையும் உறவாய்ப் பெற்றேன்!

நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

அரைகுறையாய்க் கற்றவர்கள் ஆசா னாகி
அழிக்கின்றார் அருந்தமிழின் மரபின் சீரை
விரைவாகப் புகழ்கூட வேண்டு மென்ற
வேட்கையன்றி வேறெந்தக் குறியு மில்லை
துருப்பிடித்துக் காதறுந்த ஊசி கொண்டு
துணிதைக்க முயல்கின்றார் துயர மன்றோ?
எருவாகிக் கருவாகி வாழ்வோர் தானே
எல்லோரும் போற்றுகின்ற ஆசா னாவார்?!

நானென்ன செய்திங்குக் கிழித்து விட்டேன்?
நல்லாசான் என்றென்னைப் புகழா தீர்கள்.

நீண்டதொரு பயணத்தில் செல்கின் றேன்நான்
நினைவினிலே தமிழன்றி வேறொன் றில்லை
ஆண்டமொழி யழியாமல் உலகை யாள
அயராம லுழைக்கின்றேன் அதுவ ரைக்கும்
சீண்டாதீர் சிக்கலுக்குள் இழுத்தல் வேண்டா
சிறியவனைச் செயலாற்ற விடுங்க ளென்று
மீண்டுமுங்கள் பதம்பணிந்து வேண்டு கின்றேன்
வியன்றமிழின் தொண்டாற்ற விடுவீர் என்னை!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.