(Peer Reviewed) சிலப்பதிகாரத்தில் ஆறுகள் கட்டமைக்கும் சூழலியல் உறவும் பண்பாடும்
முனைவர் இரா.இலக்குவன்
வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையம்
ம.தி.தா. இந்துக் கல்லூரி
திருநெல்வேலி – 627610
சிலப்பதிகாரத்தில் ஆறுகள் கட்டமைக்கும் சூழலியல் உறவும் பண்பாடும்
ஆறு, சூழலியல் சங்கிலியில் மாபெரும் கண்ணியாகும். மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் விரவிச் சமைப்பதில் ஆற்றுக்குத் தலையாய பங்குண்டு. ஆறு மண்ணில் மட்டுமல்ல, மக்கள் உணர்வுகளிலும் ஓடுகிறது. ‘மனிதரையும் இயற்கையையும் இணைக்கும் தளை நீர், நமது அன்றாட வாழ்விலும், நீர் நீங்காத இடம் பெற்றுள்ளது. காலம் தொடங்கிய காலம் முதலே நீர் அசாதாரணமான சமூக நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறது’1 என நீரின் இன்றியமையாமையை ஹீரியா தாஜிசாதக் விளக்குகிறார். நிலத்தின் அடிப்படையில் வாழ்வு பகுக்கப்பட்ட நமது தமிழ் மரபிலும் ‘நீரின்று அமையாது உலகு’ எனும் தெளிவும் ஆறு, நீர் சார்ந்த எண்ணங்களும் அக்கறைகளும், விழாக்களும் உண்டு.
சூழலியல் உணர்வை மண்ணில் இருந்து பெற்ற இளங்கோவடிகள், தமிழ்நாட்டின் முக்கியமான ஆறுகளையெல்லாம் சிலப்பதிகாரத்தில் காட்சிப்படுத்துகிறார். அவை அமைந்திருக்கும் அழகை மட்டுமல்லாமல் அவற்றை மையமாக கொண்டியங்குகின்ற சூழல் உறவு சங்கிலியை இளங்கோவடிகள் நுட்பமாக உணர்த்துகிறார். அது மட்டுமல்லாது, காப்பியத்தின் திருப்பு முனையையும் பாத்திரங்களின் அழுத்தமான உணர்வுகளையும், காப்பியப் போக்குகளையும் வெளிப்படுத்துவதற்கு ஆறுகளையும், அதன் இயற்கைக் காட்சிகளையும் பயன்படுத்துகிறார். அவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
கானல்வரிப் பாடல்
சிலம்பின் மிக முக்கியமான திருப்பம் கானல்வரி ஆகும்.
‘வாழ்க வெங்கோ மாதவி மடந்தை
கான்ற பாணி கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது’
(நீர்ப்படைக்காதை (49-51)
என மாடலமறையோன் மூலம் காப்பியத்தில் உரைக்கிறார்
வரிப்பாடல் என்பது ஒரு பாடல் வகையாகும். அது பாட்டுத் தலைவன் பிறந்த நிலமும் அந்நிலத்துத் தொழிலும் புலப்படப் பாடுவது என்பார் அடியார்க்கு நல்லார்.2 கானல் வரியில் கோவலன் பாடுவதாக ஆற்றுவரி, சார்த்துவரி கானல்வரி, நிலைவரி, முரிவரி முதலிய பாடல்களும், மாதவி ஆற்றுவரி, சார்த்துவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி, சாயல்வரி முதலிய இசைப் பாடல்களும் உள்ளன. கோவலன், மாதவி இருவரும் பாடும் ஆற்றுவரிப் பாடலில் காவிரியாற்றை மையமாகக் கொண்டு தத்தமது கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர்.
கோவலன் பாடும் பாடல்
‘திங்கண் மாலை வெண்குடையான் சென்னிச் செங்கோலது வோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி’ (7:2)
‘மன்னுமாலை வெண்குடையான் வளையாச் செங்கோ லதுவோச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் வாழி காவேரி’ (7:3)
எனக் காவிரியாற்றைக் கோவலன் வாழ்த்துவதாக முதலிரண்டு பாடல்கள் உள்ளன.
இப்பாடல்கள் மூலம் பாத்திரங்களின் எவ்விதக் கருத்துகளும் இயற்கையுடன் உறவுடையதாக வேண்டுமென்பதில் அடிகளுக்கிருந்த ஆர்வம் புலனாகிறது. முதல் இரண்டு பாடல்களும் ஆற்றையும், அதன் வளத்தையும் பேசுவனவாகவும், அடுத்த பாடல் ஆறு சார்ந்த வாழ்க்கையையும் பயனையும் பேசுவதாக உள்ளன.
‘உழவ ரோதை மதகோதை யுடைநீ ரோதை தண்பதங் கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி
விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தவெல்லாம் வாய்காவா
மழவ ரோதை வளவன்றன் வளவனே வாழி காவேரி’ (7;4)
இது கோவலன் பாடும் மூன்றாவது பாடல். புதுப் புனல் கண்ட உழவரின் மகிழ்ச்சியொலி, மதகில் நீர் பாயும் ஒலி, மடை உடைந்து பாயும் ஒலி, புதுப்பனல் பாய்வதை விழாவாகக் கொண்டாடும் மக்களின் ஒலி எனப்பல ஒலிகள் எழுகின்ற காவிரியை அடிகள் வாழ்த்துகிறார்.
காவிரியில் விழா
இதில் ‘தண்பதங் கொள் விழவர் ஓதை’யும் எழுந்தது எனக் கூறுவதைக் கண்டோம். இதிலிருந்து காவிரியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து வரும் போது. மக்கள் அதைப் பெரும் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது தெரிகின்றது. இவ்விழா பல நாட்கள் நடந்திருக்கின்றது. இந்த விழாவை மன்னர் தொடங்கி வைப்பது ஒரு மரபாக இருந்துள்ளது. அத்தலைநாளை மற்ற விழா நாட்களைக் காட்டிலும் சிறப்பாகக் கருதியிருக்கின்றனர்.
இச்செய்தி,
‘விண் பொரு பெரும்புகழ் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல’ (6:159-160)
எனக் ‘கடலாடுகாட்சிக்கு’ உவமையாகக் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. மேலும்,
‘கழாஅர் பெருந்துறை விழாவின் ஆடும்’ (அகம் 225)
கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத்
தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை’ (அகம் 376)
ஆகிய அகநானூற்றுப் பாடல் வரிகள், இவ்விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆகவே இவ்விழா, சங்க காலம் தொடங்கியே மக்களிடம் இருந்து வந்துள்ளது என்பதும் தெரிகின்றது. ஒவ்வொரு நாகரிகத்திலும், மிகத் தொன்மையான மரபுகள், இந்த அரிய வள ஆதாரத்தை வாழ்க்கையின் தோற்றத்துடனும் தூய்மையுடனும், இனப்பெருக்கத்துடனும் தொடர்புப்படுத்திக் காட்டுகின்றன.5 இவ்வகையில் காவிரியில் நடக்கும் இவ்விழா இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய ஒரு சடங்கு எனலாம்.
மாதவியின் வரிப்பாடல்கள்
மாதவியின் ஆற்றுவரிப் பாடல்களிலும் முதலிரண்டுப் பாடல்கள் காவிரியின் வளத்தைப் பாடுகின்றன. மூன்றாவது பாடல் காவிரியில் சோழ நாட்டுக்கு விளையும் பயனைப் பேசுகிறது.
‘மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை யதுபோர்த்து
கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி’ (7:25)
‘பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்களிசைபாடக்
காமர் மாலை யருகசைய நடந்தாய் வாழி காவேரி’ (7:26)
இவ்விரண்டு பாடல்களிலும் காவிரியின் சிறப்பைப் பேசுவதன் மூலம், பூக்கள் மலிந்த சோலைகள் (பல்வேறு தாவர வகைகளின் தொகுதி), மயில்கள், குயில்கள், வண்டுகள் முதலிய உயிரிகளின் சூழலும் காவிரியுடன் பிணைந்திருப்பதை விளக்குகிறார்.
மாதவியின் மூன்றாவது பாடல்,
‘வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி
ஊழி யுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி’ (7:27)
எனக் காவிரியை வாழ்த்துகிறது.
வேளாண்மைச் சமூகமான தமிழ்ச் சமூகம், உலகை வளர்க்கும் தாயாக ஆற்றைக் கொண்டாடுவதை ஆதிக் கருத்தாகக் கொண்டு விளங்கியிருக்கிறது. இளங்கோ, காவிரியை வளர்க்கும் தாயாகவும் சோழநாட்டைப் பேருதவி பெறும் குழந்தையாகவும் கண்டிருப்பது உணவை அடிப்படையாகக் கொண்ட மனித வாழ்வில் ஆற்றின் பங்கை உணர்த்துவதாக அமைகிறது. தமிழ்மரபு வழிச் சிந்தனையில் ஆறு தாயாகவும், பெண்ணாகவும் கருதுவது தூய்மையுடனும் உறவுடைய சடங்குக் கருத்தாகும்.
புரந்தூட்டும் பெண்
காவிரியாற்றைத் தாய் எனக் கூறும் இளங்கோவடிகள், பெண் எனப் புறஞ்சேரியிறுத்த காதையில் கூறுகிறார்.
‘உலகு புரந்தூட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி’ (13:168-170)
எனப் பாடுகிறார். வையை ‘பூங்கொடி’ என்பது சடங்கியல் கருத்தான தூய்மையை உணர்த்துகிறது. வையையாறு பூங்கொடி, பெண்; அருளும் பெண் அல்லள் ‘உலகு புரந்தூட்டும்’ என்று கூறுவதன் மூலம் ஆற்றுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை உரிமையின் பாற்பட்ட உறவாக இளங்கோ கற்பிக்கிறார். இவ்வாறு ‘இயற்கையை அன்னை என்று அழைத்துச் சீராட்டும் பாங்கு. சுரண்டுவதற்கு எதிரான கலாச்சாரத் தடையாக விளங்கியது’ என்பார் வந்தனா சிவா.6
கடல் விழா
தமிழர்கள் ஆறுகள், கடல் நீர்நிலைகள் சார்ந்த விழாக்களைக் கொண்டாடினர். காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் மக்கள் விழா கொண்டாடினர், இவ்விழாவை இந்திரனோடு தொடர்புடைய விழாவாகக் கருத முடியாது, மணிமேகலையிலும் இவ்விழா பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இந்திர விழாவின் ஒவ்வொரு கூறும், அது மழைச் செழிப்பு குறித்த ஒரு மாபெரும் மந்திரச் சடங்கு என்பதைச் சுட்டிக் காட்டும் என்றும் இங்கு இந்திரன் மழைக் கடவுள் என்ற அர்த்தத்தில் உலகச் செழிப்பைக் குறித்து நிற்கிறான் என்றும் ந. முத்துமோகன்.7 குறிப்பிடுவார். இந்திரன் மருத நிலத்து தெய்வமாவான்.
‘வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’
என்பது தொல்காப்பிய நூற்பா வரி.8
உழவைத் தொழிலாகக் கொண்ட மருத நிலத்து மக்களின் மழைத் தேவையைப் பூர்த்தி செய்யும் தெய்வமாக இந்திரன் விளங்கியதால் அவன் தீம்புனல் உலகத் தெய்வமாவான். மேலும்,
‘முடிவளை உடைத்தோன் முதல்வன் என்று
இடி உடை பெருமழை எய்தா தேகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க’
என்று மாங்காட்டு மறையோனின் வைதீக மரபுச் சொல்லாடலும் இந்திரனை மழைக்குரிய கடவுளாகப் பேசுகிறது. பின் எக்காலத்தில் வருணன் மழைக்கடவுள் ஆனான் என்பது அறிய முடியவில்லை. ஆக இந்திரன் மழைக்கடவுள் என்பது உறுதிப்படுகிறது. எனவே ந. முத்துமோகன் சொன்ன கருத்தும் பொருந்தி வருகிறது, மேலும் அடிகள் கடலாடு காட்சியைக் ‘கடல் விளையாட்டு’ என்று குறிப்பிடுகிறார். இதுவோர் கோலாகலத்தன்மை கொண்ட மழை குறித்த சடங்கு விழா என்றும் முடிவுக்கு வரலாம்,
சிலம்பில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பாடும்போது முதலில் அவரவருக்குரிய ஆறுகளைக் குறிப்பிட்டு வாழ்த்தப்பட்டனர்.
‘வாழியரோ வாழி வருபுனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்தன் தொல்குலமே’ (29 : 13)
‘வாழியரோ வாழி லரு புனல்நீர் ஆன்பொருநை
சூழ் தரும் வஞ்சியார்தன் தொல்குலமே’ (29 : 14)
‘காவிரி நாடனைப்பாடுதும் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்’ (29 : 15)
என ஆறுகளுடன் இணைத்து மன்னர்களை வாழ்த்தும் மரபு இருந்துள்ளது. நாகரிகத்துக்கும் வளத்துக்கும் காரணமாய் அமைந்த ஆறுகள், அரச குலத்துடன் உறவுபடுத்திப் பேசப்படுவதன் மூலம், பேரரசு உருவாக்கத்தில் அதனுடைய பாங்கு உணர்த்தப்படுகிறது.
தண்பொருநையில் விழா
பொருநையாற்றை இளங்கோவடிகள் கூறும்போது, மக்கள் ஆற்றில் வண்ணமும் எண்ணமும் மலரும் கலந்தால், ஆறு வானவில் போல் காட்சியளிப்பதாகக் கூறுகிறார்.
‘தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட
வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து
விண்உறைவில் போல் வீங்கிய பெருந்துறை’ (27:231-232)
என்கிறார், இவ்வரிகளை நோக்கும் போது விழா வயப்பட்ட பொருநையாற்றின் வருணனையாகவே கொள்ளலாம்.
பேரியாறு
இளங்கோவடிகள் வஞ்சிக் காண்டத்தில் மலை வளம் காணச் செல்லும் சேரன் செங்குட்டுவன், பேரியாற்றங்கரையில் தங்கியிருந்ததாகக் கூறுகிறார்.
கோங்கம் வேங்கை தூங்கிணர் கொன்றை
நாகம் திலகம் நறுங்காழாரம்
மதுகரம் ஞிமிரொடு வண்டினம் பாட
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
நெடுமலை விளங்கிய பேரியாற்றங்கரை’
என அவ்வாற்றைப் புகழ்கிறார்
கோங்கம், வேங்கை கொன்றை, நாகம் (சுரபுன்னை), திலகம் (மஞ்சாடி சந்தனம்) முதலிய மரங்கள் உதிர்த்த மலர்களால் ஆற்றின் நீர்பரப்பு மறைந்து, பூக்களாக மிதந்து சென்றன. அப்பூக்களை மொய்த்து மதுகரம், ஞிமிறு எனும் வண்டினங்கள் இசை பாட, பேரியாறு மலையின் குறுக்காகச் செல்வது, திருமால் மார்பில் கிடந்த மாலை போன்ற தோற்றம் உடையதாக இருந்தது என்கிறார் இளங்கோ.
பூப்படர்ந்த ஆறுகள்
இளங்கோவடிகள் குறிப்பிடும் காவிரி, வையை, பொருநை முதலான எல்லா ஆறுகளும், நீரே தெரியாத அளவுக்குப் பூக்கள் நிறைந்து வருவதாகவே கூறப்படுகிறது. இதனை வருணனையாக மட்டுமே கொள்ள முடியாது.
தண்நறுங்காவிரித் தாதுமலி பெருந்துறை’
என்றும்
மணிப்பூ ஆடை அது போர்த்தும்’
காவிரியாறு நடப்பதாகவும்,
புண்ணிய நறுமலராடை போர்த்து’
வையையாறு பூம்புனல் ஆறாகப் பாய்வதாகவும்,
வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து’
பொருநையாறு வருவதாகவும்,
உதிர்ப்பூம்பரம்பின் ஒழுகுபுனல் ஒளித்து ‘
பேரியாறு பாய்வதாகவும்,
அடிகள் குறிப்பிடுகிறார்.
ஆக, இது வருணனை மட்டுமல்ல என்பது தெளிவு. இளங்கோ, ஆறுகளைப் பூம்புனல் ஆறுகளாகக் குறிப்பிடுவதன் மூலம் ஆறுகளின் கரைகள் பல்வகை மரங்களால் செழித்திருக்கின்றன என்பதை உணர்த்துவதுடன், தமிழ்ப் பண்பாடு சார்ந்த தூய்மைப் பண்பினை ஆற்றுக்கு அளிக்கிறார் என்றே கொள்ளல் வேண்டும்.
வைகையை வணங்குதல்
மதுரை நோக்கிச் செல்லும் கோவலனும் கண்ணகியும் வைகையாற்றைக் கண்டவுடன் தொழுகின்றனர் என அடிகள் குறிக்கிறார்.
‘புனல்யாறு அன்று பூம்புனல்யாறு யென
அனநடை மாதரும் ஐயனும் தொழுது’
என்பார் இளங்கோ.
இதிலிருந்து கோவலனும், கண்ணகியும் ஆற்றைத் தெய்வமாகக் கருதித் தொழவில்லை; ஆற்றின் சிறப்பையும் வளமையையும் கருதியே தொழுதிருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. அதிலும் ஆற்றைக் கண்ணகிதான் (அனநடைமாதர்) முதலில் தொழுதாள் எனும் செய்தி பெண்களுக்கும் இயற்கைக்கும் உறவு உண்டு என்ற மானுடவியல் கருத்தைக் காட்டுகிறது.
காவிரியும் நாடும்
வேளாண்மைச் சமூகமான தமிழ்ச்சமூகத்தில் சோழநாட்டின் வாழ்வு காவிரியின் வளத்தினாலாகும். சோழ நாட்டின் வாழ்வு, வளம், அரசியல், பொருளாதார நிலை ஆகியவனைத்திற்கும் மூலவூற்றாய் காவிரி திகழ்வதைக் கண்ட அடிகள், அந்நாட்டை,
‘காவிரி புரக்கும்நாடு கிழவோன்’ எனவும்
(காவிரி புரக்கும்நாடு கிழவோற்கு) (27;171)
காவிரி நாடன்’ (1;5)
எனவும் கூறப்படுகின்றான்.
‘சமூக நடவடிக்கைகளை உழவர்கள் முன்னின்று இயக்குவது மறைந்துவிட்ட காலை, பண்பாடு என்பது வேளாண்மையுடன் பிணைந்திருந்த காலம் மலையேறிவிட்ட சூழலியல் உணர்வு மட்கிப் போய்விட்ட இன்று இதுபோன்ற செய்திகள் வியப்பை9 மட்டுமே ஏற்படுத்துகின்றன.
வைதீக சமயமும் ஆறுகளும்
இந்தியாவில் எந்தவொரு புனிதப் பயணத்திலும் நடுநாயகமாகத் திகழ்வது புனிதசீர்க்கூடல் (சங்கமம்) ஆகும். சிறிது சிறிதாக ஊற்றெடுத்து வரும் தரையடிநீர் முதல் கரைபுரண்டோடும் ஆறுகளின் நீர், அலை பாயும் கடல் நீர் வரையில் நீரின் அருகில்தான் புனிதப் பயணங்கள் தங்கள் தனித்தன்மையைப் பெறுகின்றன என்பார் ருஸ்தம் பருச்சா.10 ஆனால் தொல்தமிழ் மரபில் ஆறுகள் மட்டுமல்லாது, வேறு எவ்வகை நீர்நிலைகளும் புனிதம் என்னும் நிறுவனமயப்பட்ட கருத்தோடு சம்பந்தப்படவில்லை.
சிலம்பிலும் புனித நீராடுதல், புனித நீராட்டுதல், புனிதப் பயணம் பற்றிய செய்திகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பேசுபவர்களாக மாங்காட்டு மறையோன், தேவந்தி, மாடலமறையோன் முதலிய பார்ப்பனப் பாத்திரங்கள் மட்டுமே விளங்குகின்றன. இன்று தமிழ் மக்களால் காவிரி, தாமிரபரணி, வைகை முதலிய ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்குத் துறை, தைப்பூசத் துறை, தைந்நீராடல் ஆகிய விழாக்கள் வைதீக சமய விழாக்களாகத் திகழ்கின்றன. இவ்விழாக்கள் யாவும் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து வரும்போது கொண்டாப்படுவனவாகும். ஆகவே இவை தூய்மை, வளமை ஆகிய சடங்கியல் கருத்தோடு ஆதிக் காலத்தில் கொண்டாடப்பட்டிருத்தல் வேண்டும்.
தாய்வழிச் சமூகமான தமிழ்ச் சமூகம், ஆறுகளை இனப்பெருக்கம், வளமை தூய்மை ஆகிய சடங்கியல் தன்மையோடும், பாதுகாப்பு, அரவணைப்பு முதலிய வாழ்வியல் தன்மையோடும் உறவு கொண்டிருந்தது மேலும் இவ்விழாக்களின் மூலம் மக்களின் ஒட்டுமொத்த கவனமும் ஆற்றைப் பேண வேண்டிய உணர்வும் ஆற்றின் மீது குவிக்கப்படுகின்றது.
காவிரி கட்டமைக்கும் சூழல் சங்கிலி
குறுகிய நோக்கியல், அறிவு நதியின் பயணத்தை ஒரு நீளவாக்கில் தான் கவனிக்கிறது. ஆனால் உண்மையில் நதியின் பாய்ச்சல் வட்டப்பாதை சுழற்சியாகும் என்பார் வந்தனா சிவா11. இளங்கோ, காவிரியாற்றை, அதன் உறவு வட்டத்தை நுட்பமாகக் குறிக்கிறார். காவிரியாறு சமூகத்தின் வாழ்விற்கும் இயக்கத்திற்கும் பின்னூக்கியாகத் திகழ்வதையும் உயிரினங்களின் இருப்பையும் உயிர் – சூழல் சங்கிலியையும் கட்டமைப்பதையும் விளக்கிக் கூறுகினார். நாடுகாண் காதையில் அடிகள், காவிரியாறு சார்ந்த உயிரினங்களின் ஒழுக்கத்தைப் படம் பிடித்தாற் போல பேசுகிறார்.
’கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால் பொருள் நிவப்பிற் கடுங்குர லேற்றோடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பஃறமோடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிபுதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஒவிறந்தொலிக்கும் ஒலியே யல்ல
தாம்பியும் கிழாரும்வீங்கிசை யேத்தமும்
ஓங்குநீர் பிழாவு மொலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கிற்
பழனத்தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியுங் கனைகுர னாரையும்
செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளு மூரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக்குரல் பரந்த வோதையும்
உழாஅ நுண்டொளி யுள்புக் கழுந்திய
கழா அமயிர் யாக்கைச் செங்கட் காரான்
சொரிபுற முரிஞ்சிப் புரிஞெகிழ் புற்ற
குமரிக் கூட்டிற் கொழும்பல் லுணவு
கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியச்
கருங்கை வினைஞரும் கலிமரும் கூடி
ஒருங்கு நின்றார்க்கு மொலியே யன்றியும்
கடிமலர்க் களைந்து முடிநாறழுந்தித்
தொழவளைத் தோளு மாகமுந் தோய்ந்து
சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிக்
செங்கய னெருங்கட் சின்மொழிக் கடைசியர்
வெங்கட் டொலைக்கிய விருந்திற் பாணியும்
கொழுங்கொடி யறுங்கையுங் குவளையும் கலந்து
விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரோடு நின்றோ ரேர் மங்கலமும்
அரிந்து கால் குவித்தோ ரரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப்பாட்டும்
தெண்கினைப் பொருநர் செருக்குடனெத்த
மண்கிணை முழவின் மகிழிசையோதையும்
பேர்யாற் றடைகரை நீரிற் கேட்டாங்கு’ (10:102 – 140)
என்பது பாடல்.
புதுப் புனல் வெள்ளத்தால் காவிரியில் எழும் ஓசையும், அதன் விளைவால் எழும் பறவைகள், விலங்குகள், மக்களின் ஓசைகளையும் அடிகள் விளக்குகிறார். காவிரி வெள்ளம் குடமலையில் விளையும் அகில், சந்தனம் முதலிய வளங்களை இழுத்து வந்து, முத்து பவளம் கொண்ட கடலை எதிர்கொண்டு அதன் கரையை இடிக்கும். காவிரியின் புதுவெள்ளம் மதகு வழி பாய்ந்து விழும்போது ஏற்படும் பெருவோசை எங்கும் நிரம்பியிருக்கும்.
இவ்வொலியே அல்லாது ஆம்பி, கிழார், ஏற்றம், இறைகூடை முதலிய நீர் இறைக்கருவிகள் ஒலிகளும் கேட்கும். செந்நெல்லும், கரும்பும் வளர்ந்துள்ள மருத நிலத்தில் சம்மங்கோழி, கனைகுரல் நாரை, செங்கால் அன்னம், பைங்கால் கானக்கோழி, நீர்நிறக் காக்கை, உள்ளான், குளுவை, கணந்துட்புள், பெருநாரை ஆகியவை சேர்ந்து ஒலிக்கும் ஒலி, நெற்களங்களைச் சேறாக்கும் எருமைகளை விரட்டும் உழவர்களின் ஆரவாரவொலி, கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தும் உழத்தியர் கள்ளுண்ட களைப்பால் பாடும் விருந்திற்பாணி, உழவர்கள் செந்நெற்கதிரோடு அறுகையும் குவளையும் கலந்து தொடுத்த மாலையை ஏரிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பார் போல போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி ஏரைப்பாடும் ஏர்மங்கலப் பாட்டொலி, கிணைப்பொருநர் இசைக்கும் முழவின் மகிழிசையொலி என எல்லாம் கலந்து கேட்டதாக இளங்கோ கூறுகிறார்.
பின் மக்களின் வாழ்விடங்களை விளக்குகிறார். ஆறு சூழலமைப்பின் தலைக் கண்ணியாக விளங்குவதையும், மனிதன் விரிந்த நோக்கில் இயற்கையின் ஓர் கூட்டாளியே அன்றி முதலாளி அன்று என்பதையும் தனது கவிதையின் பொருளாக அடிகள் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. மக்களின் கலை, பண்பாட்டுச் சொல்லாடல்களைக் கட்டிச் சமைப்பதில் ஆற்றுக்கு உள்ள நேரடி உறவைக் காண இயலுகிறது.
ஆற்றின் மீது நம்பிக்கை
கோள்களில் சனிக்கோள், இடபம், சிங்கம், மீனமென்னும் மாறுபாடினும், ஆகாயத்தே தூமகேது எனும் விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக் கண்ணே பெயரினும் காவிரியில் வெள்ளம் வரும் என்ற நம்பிக்கை அடிப்படையிலான கருத்தை அடிகள் குறிப்பிடுகிறார். இதே கருத்துக் கொண்ட பாடல் வரிகள் பட்டினப் பாலையிலும்13 உள்ளது. வெள்ளி எனும் மீன் தான் நிற்றற்குரிய வடதிசையில் நில்லாமல் தென்திசையிற் செல்லினும், மழை பெய்ய வேண்டிய காலத்துப் பொய்யாதொழியினும் காவிரியில் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கும் என பட்டினப் பாலை கூறுகிறது. இளங்கோ, வைகையைப் பொய்யாக் குலக்கொடி என்கிறார். ஆக, அக்காலத்தில் மக்கள் பருவகாலங்களின் மீது கொண்டிருந்த நம்பிக்கைகளை விட, ஆறுகளின் மீது திடமான நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதனை உணரலாம்.
அவலமும் ஆறும்
இளங்கோ அடிகள், காப்பியத்தின் அவல முடிவை வைகை நதியின் இயற்கை காட்சியைக் கொண்டே முன்னுணர்த்துகிறார். மதுரைப் பயணத்தில் கோவலனும் கண்ணகியும் வைகை கரையை வந்தடைகின்றனர்.
‘குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
பாடலம் தன்னொடு பன்மலர்விரிந்து
குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்
விரிமலர் அதிரலும் வெண்கூதாளமும்
குடகமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் (13; 151 -153)
ஆகிய மரங்களின் மலர்களும், கரையில் கிடக்கும் முருக்க மலர்களும், அருவி நீரோடு வந்த முல்லை மலர்களும் நிறைந்த வைகையாறு, நீர்ப்பரப்பே தெரியாமல் பூம்புனல் ஆறாய்ப் பாய்கிறது. இக்காட்சியை அடிகள் தனது காப்பிய முடிவை ஏற்றிக் கூறுவதற்குப் பயன்படுத்துகிறார்.
கண்ணகிக்கு நேர இருக்கும் துன்பத்தினை முன்னமே அறிந்தவள்போல் வைகை தூய மணமிக்க பூக்களை ஆடையாகக் கொண்டு, தன் உடல் போர்த்து, தன் கண்களில் பெருகும் கண்ணீரை மறைத்து மற்றோர் காணாதவாறு சென்றாள் என பின்நிகழப் போகும் அவலத்திற்கு வருந்துவதாக வைகை மீது ஏற்றிக் கூறுகிறார்
‘தையற்கு உறுவது தானறிந் தனள்போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி’
வைகை செல்வதாக அடிகள் குறிக்கிறார். இதன் மூலம் கண்ணகிக்காக முதன்முதல் கண்ணீர் விட்டழும் மானுடத்தன்மை கொண்ட உறவு நிலையினை வைகையாற்றிற்கு அடிகள் கற்பிக்கிறார்.
அடிக்குறிப்புகள்
- ஹீரியா தாஜீ சாதக், ‘விலை மதிப்பில்லா அரிய ஆவணம்’, (க.ஆ), யுனஸ்கோ கூரியர் (மா.இ) சென்னை. தென்மொழிகள் புத்தக நிறுவனம்.
- பஞ்சாங்கம், க. 1993 ; சிலப்பதிகாரத் திறனாய்வுகள். – ஒரு பார்வை, சிவகங்கை ; (பிலிட்), ப. 105 (எடுத்தாண்டது)
- சோமசுந்தரனார், பொ.வே.1970, அகநானூறு, பா.எ. 376, திருநெல்வேலி, கழக வெளியீடு
- மேலது, பா. எ. 376
5. பிரான்ஸ் பெக்கட் 1995 (க.ஆ), போதுமோ நீர்வளம் (கட்டுரை) யுனஸ்கோ கூரியர் (மா.இ).நவம்பர்,ப..21
- வந்தனாசிவா 2000 (ம.ப), உயிரோடு உலாவ (இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச்சூழலும்) சென்னை – 40, பூவுலகின் நண்பர்கள் ப.25
- முத்துமோகன், ந., 1998, ’மணிமேகலைக் காப்பியத்தில் இந்திரவிழா, அமுதசுரபி’ குறியியல் அணுகுமுறை’ அமைப்பியல் பின் அமைப்பில் பெங்களூர், காவ்யா பக். 158-159.
- இளம்பூரணர், 1989 (ம.ப.), தொல்காப்பியம் பொருளதிகாரம் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நாற்பதிப்புக் கழகம்.
- 10. டேனியல் பூக்னோ, 1996 ; ‘உரையாடல்’ யுனஸ்கோ கூரியர், (மா.இ) (ஏப்ரல்) ப.9
- ருஸ்தம் பருச்சா, ‘திரிவேணி சங்கமம்’ யுனஸ்கோ கூரியர் (மா.இ) சென்னை; தென் மொழிகள் புத்தக நிறுவனம்
- வந்தனாசிவா 2000 (ம.ப) ; ‘உயிரோடு உலாவ (இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச்சூழலும்)’ சென்னை:பூவுலகின் நண்பர்கள் ப.25
- சோமசுந்தரனார், பொ.வே. 1962, ‘பட்டினப்பாலை’ பத்துப்பாட்டு இரண்டாம் பகுதி திருநெல்வேலி – 6 திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.
================================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
சிலப்பதிகாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஆறுகள் கட்டமைக்கும் சூழலும் பண்பாடும் குறித்த இந்த ஆய்வு, மிக நுணுக்கமான விளக்கங்களில் பரிமளிக்கிறது. இயற்கை சார்ந்த குறிப்புகள், பாத்திரங்களுக்கும் இயற்கைக்கும் உண்டான தொடர்பு ஆகியவை, சிலம்பு முழுவதும் விரவிக் கிடக்கின்றன. காப்பிய மாந்தரின் வாழ்வு, ஆறுகளைச் சார்ந்து அமையும் வண்ணம் புனைந்துள்ளது இளங்கோவடிகளின் தனிப்பெரும் புலமையைப் பறை சாற்றுகிறது என்றால், அந்த வரிகளை, காட்சிகளைப் ஆழமாக ஆராய்ந்து குறிப்புகள் வழங்கியிருப்பது இக்கட்டுரையின் சிறப்பு.
ஆறுகளைத் தாயாக, பெண்ணாகப் பாடுவது, வேளாண்மைக்கு ஆறுகள்தான் அடிப்படை என வலியுறுத்துவது, மனிதனுக்கும் ஆறுகளுக்கும் இடையே உள்ள உரிமைத் தொடர்புகள், ஆறுகள் தொடர்பான விழாக்கள், மன்னருக்கும் ஆறுகளுக்குமான தொடர்புகள் போன்ற பல செய்திகளும் தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. சிலம்பு பேசும் ஆறுகளின் வகை வகையான வருணனைகள் பல்நோக்குகளில் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆறுகள் அழிந்து, வேளாண்மை நலிந்து, ஆறுகள் சார்ந்தே பண்டு அமைந்த புனிதப் பயணங்கள் முக்கியத்துவம் இழந்தது போன்ற தற்கால முரணைக் கோடிட்டுக் காட்டியுள்ளது, நாம் இழந்தவற்றை நினைவுகூர்ந்து வேதனையுற வைக்கிறது.
ஆற்றின் நேரான ஓட்டம், வட்டமான சுழற்சி என்று மாறி வரும் காப்பிய மாந்தரின் வாழ்க்கைச் சூழலுடன் பொருத்திப் பார்த்துத் தரும் விளக்கம் இன்னுமொரு சிறப்பு.
மழைக்கடவுள் இந்திரனா, வருணனா என்று பிற அறிஞர் கருத்தைச் சுட்டிக் காட்டித் தரும் விளக்கம், பட்டினப்பாலை, அகநானூறு தரும் ஆறு குறித்த ஒப்பீட்டு விளக்கங்கள் – ஆய்வின் கருத்துகளுக்கு மேலும் மெருகேற்றுகின்றன.
ஆய்வு முடிவுகளைத் தனியே திரட்டி அளித்திருக்கலாம். ஆய்வுக் கட்டுரைக்கான அமைப்பிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். இது, தனியோர் ஆய்வேட்டுக்கான தலைப்பு ஆகும். இதை ஓர் ஆய்வுக் கட்டுரைக்குள் அடக்குவதை விட, ஆய்வுக் கட்டுரைக்கென வரையறுத்த எல்லையுடன் கூடிய தலைப்பினைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
================================================================
நல்ல தலைப்பு.
பாடல் வரிகளைக் குறிப்பிட்டு விட்டு செய்திகளை அதிகமாக்கி இருக்கலாம்