-நிர்மலா ராகவன்

நலம்… நலமறிய ஆவல் – 151

பத்தாவது வயதில்தான் ABCD கற்க ஆரம்பித்தவள் நான் என்று அறிந்ததும், `நம்மைப்போன்று ஆங்கிலம் கற்பிக்கிறவர்களை இவள் மிஞ்சுவதாவது!’ என்ற ஆத்திரம் சில ஆசிரியைகளுக்கு ஏற்பட்டது.

“உனக்கு முக்கியம் என்று தோன்றுவதை நீ எழுதலாம். ஆனால், அது மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்பது என்ன நிச்சயம்?”

“நீ எழுதுவதால் ஏதாவது மாறிவிடப்போகிறதா?”

ஒரு மயிரிழையைக் கூறு போடுவதுபோன்ற இத்தகைய தாக்குதல்களுக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குப் புரியத்தானில்லை.

எப்படியாவது நான் எழுதுவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். அதன்படி நடந்தால், அவர்களை வெற்றிபெறச் செய்வதுபோல் ஆகிவிடுமே! வழக்கம்போல், மௌனமாகிவிட்டேன்.

எல்லோரையும் எப்போதும் மகிழ்வித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைத்து நடப்பவர்களாக இருப்பவர்கள்தாம் பிறர் சொல்லுக்கு மதிப்புக்கொடுத்து, தம் முயற்சியைக் கைவிடுவார்கள்.

தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களும், தோல்வி அடைய நேரிட்டால் பிறர் தன்னை மட்டமாக எடைபோட்டுவிடுவார்களோ என்று அஞ்சுபவர்களும் இருக்கிற நிலையே போதும், பாதுகாப்பாக இருக்கிறது என்று இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தம்மைப்போல் இல்லாது, முன்னேற்றப்பாதையில் நடக்கும் பிறரை பழிப்பதுடன் அற்பதிருப்தி அடைகிறார்கள்.

`நானும் செய்யப்போகிறேன்!’ என்று இவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால், எப்போதுதான் காரியத்தில் இறங்குவது?

ஸ்வீடனில், சுற்றுச்சூழல் மாசடைந்திருப்பதால் சீதோஷ்ண நிலையும் கெட்டுக்கொண்டிருப்பது கண்டு பொறுக்காது, பதின்ம வயதினர் ஒன்று சேர்ந்து, இந்நிலையை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

`தோல்வியடைவோம்’ என்னும் அச்சத்தைவிட `வெற்றியடைவோம்’ என்கிற மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு இவர்களுக்கு அமைந்திருக்கிறது பாராட்டப்பட வேண்டிய சமாசாரம்.

கெட்ட வார்த்தை

மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில் செக்ஸ், மதம் ஆகிய இரண்டு பொருட்களில் எழுதக்கூடாது என்ற நிபந்தனை எழுத்துவடிவிலேயே இருந்தது.

நான் பெண்கள் பகுதி ஆசிரியையைச் சந்தித்து, “சிறுமிகள் பாலியல் வதைக்கு ஆளாகிறார்களே! இதைப்பற்றி எடுத்துச் சொல்லாவிட்டால், பிறருக்கு எப்படித் தெரியும்?” என்று முறையிட, “இது கொடுமையான விஷயம்தான்!” என்று ஒப்புக்கொண்டாள்.

உற்சாகத்துடன், நான் அதைப்பற்றி எழுதி அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. முயற்சியைக் கைவிடாது, மீண்டும் எழுதினேன், சற்று மாற்றி. மூன்றாவது முறை, `அடிப்படையில், செக்ஸ் என்றால் என்ன?’ என்பதுபோல் எழுத, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. வானொலியிலும் பேச அழைத்தார்கள்.

அச்சமயத்தில், அமெரிக்க ஜனாதிபதி இது சம்பந்தப்பட்ட வழக்கில் மாட்டிக்கொள்ள, இவ்வார்த்தை அதிகமாகப் புழங்கியது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பாலியல் ரீதியில் துன்புறுத்தல் (sexual harassment), பாலியல் வதை (sexual abuse) ஆகிய தலைப்புகளில் நிறைய எழுதினேன். `செக்ஸ்’ என்கிற அந்த `கெட்ட’ வார்த்தையை பயன்படுத்தி முதன்முதலில் வெளிப்படையாக எழுதியதில், எனக்கும் (அதிலும் ஒரு பெண்!) கெட்ட பெயர்.

அதைத் தொடர்ந்து, தன் மாணவிகளிடம் முறைகேடாக நடந்துகொண்ட ஆசிரியரைப்பற்றி பள்ளி நிர்வாகிகளிடம் முறை செய்தேன். பலனில்லாமல் போக, தொலைகாட்சியில் அதுபற்றிக் கூறினேன். (கல்வி இலாகா என்மேல் குற்றம் கண்டுபிடித்து, `ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ எனத் தாக்க, `தவறு செய்தவள் நானில்லை. செய்தவரைப்போய் கேட்பதுதானே?’ என்றேன், எரிச்சலுடன். சற்று அயர்ந்துவிட்டு, எப்படியோ சமாளித்தார்கள்).

`தவற்றைத் தவறென்று சொல்லலாமா?’ என்று மக்கள் விழித்துக்கொண்டார்கள். பலர் அதைப்பற்றி எழுத ஆரம்பித்தார்கள். இத்தகைய தீங்குகளை எதிர்த்து சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.

எழுதுவதால் உலக நடப்பை மாற்றமுடியும் என்று என்னைக் கேலி செய்தவர்கள் உணர்வார்களா?. வாளைவிட பேனா மகத்தானது என்று சும்மாவா சொல்லிவைத்திருக்கிறார்கள்!

வெற்றி நிலைப்பதில்லை. அதேபோல், தோல்வியால் எவரும் மாண்டுவிடுவதுமில்லை. வழியில் பல இடர்கள் வரலாம். நல்ல சந்தர்ப்பங்கள் தாமாக அமைவதில்லை என்று புரிந்து, நாம்தான் அவைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தோல்விமேல் தோல்வி வந்தாலும், எடுத்துக்கொண்ட காரியத்தில் நம்பிக்கையும் ஆர்வமும் குன்றாது இருந்தால் வெற்றி நமதே. எவர் சொல்வதைக் கேட்டும் நம் லட்சியத்தை அலட்சியம் செய்யாதிருத்தல் அவசியம்.

(`சொல்றதையே கேக்கமாட்டே!’ என்று என்னைத் திட்டியவர்கள் என் அந்தப் பிறவிக் குணமும் நன்மைக்குத்தான் என்று உணரவில்லை!)

இறுதியில் நாம் சாதித்தவை பிறருக்குப் பாடமாக அமைந்தால், அதுவே நம் வெற்றி.

தோல்வி எவருக்கும் ஏற்படுவதுதான். ஆனால், அதைக் கண்டு, `இனி நமக்குத் தோல்விதான்!’ என்று மனம் தளர்ந்துவிடுகிறோமா, அல்லது அத்தோல்வியிலிருந்து கற்று, கூடுதலான முனைப்புடன் அதே காரியத்தில் ஈடுபடுகிறோமா என்பதில்தான் வெற்றி-தோல்வி அடங்கியிருக்கிறது.

“ஏழு முறை விழு. எட்டாவது முறை எழு! (ஜப்பானிய பழமொழி)

அன்ன ஆகாரமின்றி உழைத்தால் விரைவில் வெற்றி கிட்டுமோ?

வெளிநாடுகளிலிருந்து மலேசியா வந்தடைந்து, சாப்பாட்டுக்கடைகளில் வேலை பார்க்கும் பலர் இப்படி நடப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆரோக்கியம் கெட்டதுதான் அவர்கள் கண்ட பலன்.

கதை

ஒரு பெரிய கடையில் வேலை பார்த்த அனுமந்து என்னிடம் ஆச்சரியம் தெரிவித்தார்: “மலேசியாவில், விடுமுறை நாட்களில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வெளியில் வந்து சாப்பிடுகிறார்களே!”

இவ்வளவு வியாபாரம் நடக்கிறதே, நாமே ஒரு சிறு கடையை ஆரம்பித்து நடத்தினால் என்ன என்று அனுமந்துவின் யோசனை போயிற்று. சில ஆண்டுகள் கழிந்ததும், சமையலில் நிபுணரான ஒருவருடன் சேர்ந்துகொண்டார்.

`வெற்றி கிடைத்தால் இன்னும் சில கிளைகளைத் திறக்கலாம்! எங்களுக்கு வருகிறவர்களின் திருப்திதான் முக்கியம்!’ என்றார்.

வெற்றியைப்பற்றிக் கனவு கண்டால் மட்டும் போதாது. `கிடைக்கும்’ என்ற நம்பிக்கையுடன், அதற்காக உழைக்க வேண்டும்.

`வெற்றி கிடைக்கும்போது’ என்று உறுதியுடன் மாற்றிச் சொல்லி இருக்கவேண்டும்.

போட்டியாளர்கள்

வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் போட்டியாளர்களைச் சமாளிப்பது.

ஏதாவது ஒன்றைத் தயாரிக்க தமது கடையில் என்னென்ன சாமான்களைச் சேர்க்கிறோம், அவைகளை யார், எப்படிக் கொண்டுவருகிறார்கள் என்று விவரித்தார்.

“இவ்வளவு விவரம் வேண்டாமே! `மாதாமாதம் இறக்குமதி செய்கிறோம்,” என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போங்கள்!” என்றேன்.

ஒருவர் வீட்டுக்கு வாங்கிப்போக விரும்புவதாகக் கூறியபோது, `ஆறிப்போனால் தோசை முறுமுறுவென்று இருக்காது!’ என்று அனுமந்து தடுத்துவிட்டாராம்.

“நன்றாக இல்லை என்று அடுத்த முறை வராது போய்விடுவாரே! வாடிக்கையாளர்கள் முக்கியமில்லையா?’ என்றார்.

“வந்த வியாபாரத்தை விடலாமா? `ஆறிப்போனால், இப்படியே இருக்காது!’ என்று எச்சரிக்கை செய்தாலே போதுமே! நிச்சயிப்பது அவர் பாடு!” என்றேன் அந்த இளைஞரிடம்.

நாணயம் அவசியம்தான். அதற்காக நாம் செய்வது, நமக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வெளிப்படையாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பானேன்!

நம் வழிகளைப் பின்பற்றி, வியாபாரத்தில் பிறர் நம்மை மிஞ்சிவிடும் அபாயம் இருக்கிறதே!

`நுணலும் தன் வாயால் கெடும்’ என்று அதற்காகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *