Blog

  • நலம்… நலமறிய ஆவல் – 144

    -நிர்மலா ராகவன்

    நேர்மைக்கும் உண்டு எல்லை

    `உங்களுக்குப் பிறகு உங்கள் குழந்தைகளுக்கு என்ன விட்டுப் போகப் போகிறீர்கள்?’

    `வங்கியில் கோடிக்கணக்கான பணம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பங்களாக்கள், இன்னும்..!’ பெருமை பேசுகிறார்.

    நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. நேர்மை, உண்மை போன்ற குணங்களையும் இவர் தன் பிள்ளைகளுக்கு அளித்திருப்பாரா?

    தந்தை நம் அறியாத்தனத்தைக் கண்டு சிரிக்கிறார். `நேர்மையாக இருந்தால் இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா?’

    அவரே மாட்டிக்கொண்டு, `எப்போது சிறைச்சாலையில் குற்றவாளிகளோடு குற்றவாளியாகத் என்னைத் தள்ளிவிடுவார்களோ!’ என்று அஞ்சும்போதும், `வேண்டாதவர்கள் என்மேல் பழி சுமத்துகிறார்கள்!’ என்றெல்லாம் (பொய்யென்று தெரிந்தே) வாதாடுகிறார்.

    நேர்மையின் பலன்

    நேர்மை என்பது கபடமற்ற தன்மையையும், உண்மையை வெளிப்படையாகப் பேசுவதையும் குறிக்கிறது. உண்மை பேசிவந்தால், எப்போது என்ன சொன்னோம் என்று ஞாபகம் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய தொல்லை கிடையாது. எதையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லாததால் ஒருவிதச் சுதந்திர உணர்வு உண்டாகும்.

    தம் குறைநிறைகளுடன் தம்மையே ஏற்க, நேர்மையானவர்கள் பிறரால் பாதிக்கப்படுவதில்லை. `இவரை நம்பலாம்!’ என்ற நம்பிக்கை எழுவதால் தரமான நண்பர்கள் வாய்ப்பார்கள். இவர்கள் எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. பிறர்தான் பயப்படுவார்கள் — தமது பொய்யான வாழ்க்கையைக் கேலி செய்கிறார்களோ என்று.

    இருப்பினும், சிலர் பிறரது மதிப்பைப் பெற பலரும் கொஞ்சமாவது பொய்யுரைக்கிறார்கள்.

    கதை

    மலேசியக் கல்வி திட்டப்படி, எட்டாவது படிவ அரசாங்கப் பரீட்சையில் மொத்தம் எட்டு பாடங்கள் இருந்தன.

    முடிவு வந்ததும், என் சக ஆசிரியை மிஸஸ் ஃபூங் (Foong), தன் மகள் ஜென்னி ஏழு பாடங்களில் மிகச் சிறப்பான `ஏ’ வாங்கியிருப்பதாகப் பெருமையுடன் அறிவித்தாள். அவள் மறந்தது: அதே பள்ளியில் என் மகளும் அப்பெண்ணுடன் இணைந்து படித்தாள் என்பது.

    குட்டு வெளிப்பட்டது.

    மிஸஸ் ஃபூங் இல்லாதபோது, எல்லாரும் சிரித்தார்கள். ஒருத்தி, “போனால் போகிறாள்! அவள் ஒரு அம்மா! நமக்குப் புரியாதா!’ என்றாள் கேலியுடன்.

    எவரும் அவளிடம் மேற்கொண்டு எதையும் விசாரிக்கவில்லை. அதன்பின், அவள் எது சொன்னாலும் நம்பத் தயாராகவும் இல்லை. அப்போது அடைந்த அவமானத்தில், `நீ ஏன் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறவில்லை?’ என்று ஜென்னியை வாட்டி வருத்தியிருப்பாளோ? எதனாலோ, அப்பெண்ணின் மனநிலை குன்றி, பதினாறாவது வயதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

    அவளுடைய கவுன்சிலர் மிஸஸ் ஹோ (Ho), “பெற்றோரது கடுமையான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாது, அந்த `வார்டு’ பூராவும் சீனப் பெண்கள்தாம்!” என்றாள் கசப்புடன். “இந்தப் பெண்ணோ, வாயே திறக்கமாட்டேன் என்கிறாள்!”

    என் மகள் தன் சிநேகிதியைப் பற்றி உத்தேசமாகக் கூறியது: “ஜென்னி நல்ல பெண். மிக நேர்மையானவள். இப்படிப்பட்ட கீழ்த்தரமான அம்மா இருந்தாலே பிரச்னைதான்!”

    ஆனால், சில சமயங்களில், நேர்மைகூட தண்டனைபோல் ஆகிவிடுகிறது.

    கதை

    பயிற்சியாளராக ஒரு நிறுவனத்தில் சேர்ந்திருந்தான் கந்தன். கணக்காய்வாளராக சில பரீட்சைகளே பாக்கியிருந்தன. அங்குப் பொய்க்கணக்கு எழுதத் தூண்டியபோது, மனம் பொறுக்காமல் வேலையை விட்டான். படிப்பும் பாதியில் நின்றது. `இந்தத் துறையே வேண்டாம்!’ என்று முடிவெடுத்தான். வேறு வேலையும் கிடைக்காத நிலையில், மாமியார் வீட்டு மருமகனாக, மதிப்பு குன்றி இருக்க நேரிட்டது.

    அவனுடைய நிலைமைக்கு பரிதாபப்பட்டு, ஒரு முதியவர் தன் கம்பெனியில் வேலை போட்டுக் கொடுத்தார். முதலில் ஒழுங்காக இருந்தவன், `நேர்மையாக இருந்து என்ன கண்டோம்!’ என்று தோன்றிப் போக, நன்றி மறந்து, அவ்விடத்திலேயே திருட ஆரம்பித்தான். கிடைத்த ஒரு வேலையும் போயிற்று.

    எல்லா கார்களும் தெருவில் தவறான வழியில் செல்லும்போது, ஒருவன் மட்டும், `சரியான வழியில்தான் போவேன்!’ என்றால் என்ன ஆகும்? கந்தனைப் போன்ற சிலர், நேர் எதிரான பாதைக்கு மாறுகிறார்கள். வேறு சிலர் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவதும் உண்டு.

    எப்போது பொய் சொல்லலாம்?

    குழந்தைகளிடம் பொய் சொல்லாத தாய்மார்கள் இருவரை மட்டும்தான் நான் சந்தித்திருக்கிறேன். இருவருக்குமே திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து அருமையாகப் பிறந்த குழந்தை.

    பிற தாய்மார்கள், எந்த சந்தர்ப்பத்தில் பொய்யுரைப்பார்கள்?

    `சீக்கிரம் சாப்பிடு. காக்கா கொத்திண்டு போயிடும்!’

    `நானும் அப்பாவும் டாக்டரைப் பாக்கப் போறோம்!’ நன்கு அலங்கரித்துக்கொண்டு திரைப்படத்திற்குப் புறப்படும் தாய், இளம்பிள்ளையிடம் கூறுகிறாள். ஓரிரு முறை அழைத்துப் போயிருப்பார்கள். அங்கு அவனைச் சமாளிக்க முடியாது போக, வேறு வழி தெரியவில்லை.

    மற்றபடி, நம்மிடம் அபயம் நாடி வந்த ஒருவரைக் காப்பற்றப் பொய் சொல்லலாம். அல்லது, நமக்கு உற்ற நண்பர் ஒருவரைக் காட்டிக் கொடுக்காது இருப்பதற்காக.

    கதை 1

    பதின்ம வயது மாணவர்களின் கை, சும்மா இருக்காது. வகுப்பிலிருக்கும் மேசைமேல் பேனாவினாலோ, ஏதாவது கூரான சாமானாலோ கிறுக்குவார்கள். அதில் கெட்ட வார்த்தைகளே மிகுந்திருக்கும்.

    அப்படி ஒரு முறை நடந்தபோது, நான் அருகிலிருந்த முஸ்தபாவிடம், “யார் கன்னா பின்னாவென்று எழுதியது?” என்று மிரட்டலாகக் கேட்க, “எனக்குத் தெரியாது, டீச்சர்!” என்றான் மெல்லிய குரலில். அவன் முகத்தில் சிறு வேதனை – பொய் சொல்கிறோமே என்று. அவன் முகத்திலிருந்த நேர்மையைக் கண்டு, நான்தான் அவனை மாணவத் தலைவனாகத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

    முஸ்தபாவின்மேல் எனக்கிருந்த மதிப்பு அதிகரித்தது. நண்பனை ஆசிரியையின் கோபத்திலிருந்து காப்பாற்ற, இவன் உண்மையை மறைக்கிறான்!

    அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில், அந்தப் பையன் பள்ளியில் பல பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். பள்ளிப் படிப்பு முடிந்ததும், ஒரு கௌரவமான வேலையில் அமர்ந்தான்.

    கதை 2

    ரத்னாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின், திடீரென நின்று போயிற்று – பல முறை. அவள் வீட்டார் காரணத்தைக் கேட்டபோது, ஒரு மொட்டைக் கடிதம் அவர்களிடம் காட்டப்பட்டது. பெண்ணின் சித்தியின் கையெழுத்தில் இருந்ததன் வாசகம்: `இப்பெண் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டவள்!’

    அடுத்த முறை, தாங்களே வலிய மாப்பிள்ளை வீட்டாரிடம் உண்மையைத் தெரிவிக்க, கல்யாணம் நல்லபடியாக நடந்தேறியது. சித்திக்கு அழைப்பில்லை.

    `அநியாயமாக ஒருவரை ஏமாற்றலாமா? அதனால்தான் நடந்த உண்மையை எல்லாருக்கும் தெரிவித்தேன்!’ அரிச்சந்திரனின் வாரிசாகத் தன்னைப் பாவித்துக்கொண்ட சித்தி.

    யார் செய்தது சரி? செய்த தவற்றை ஒத்துக்கொண்ட ரத்னாவும் அவள் பெற்றோருமா, சித்தியா?

    Share
  • தமிழ்த் தொழுகை

    -விவேக்பாரதி

    தொழுதால்நான் தமிழ்த்தாயைத் தொழவேண்டும்! – புதுத்
    தோரணமாய் அவள்புகழை நடவேண்டும் – இனி
    அழுதாலும் தமிழில்தான் அழவேண்டும் – அந்த
    ஆனந்தம் போல்மண்ணில் எதுவேண்டும்? – வந்து
    முழுதாக எனைவார்த்த செந்தமிழே – நாவை
    முத்துரத மாக்கிவைத்த முத்தமிழே – உன்னை
    மொழியாகக் கொண்டதலால் இச்சிறுவன் – எந்த
    முக்தியையும் பெற்றதில்லை வான்தமிழே!

    பாரதியின் பாட்டுவழி உள்வந்தாய் – அந்தப்
    பாட்டமுதம் வழியென்னுள் கள்தந்தாய் – ஒரு
    காரணமில் லாமலுயர் பொன்தந்தாய் – ஆ
    ககனத்தைக் கைசேர்க்கும் கவிதந்தாய் – உனைச்
    சாரதியாய் நான்கொண்ட தேதிமுதல் – உமை
    சன்னிதிக்கு மட்டுந்தான் கால்பயணம் – மீதி
    நேரமெல்லாம் நீயோட்டும் வெள்ளிரதம் – இது
    நேர்ந்துவிட நான்செய்த தென்னதவம்?

    தொட்டாலே பொன்னாக்கும் வித்தையினை – எனைத்
    தொடாமலே தந்தபுதுச் சித்திரமே – விழி
    பட்டாலே பாடுகின்ற பாவலனாய் – உயர்
    பாதைமாற்றி விட்டதொரு பெட்டகமே – இனி
    கெட்டாலும் கவலையிலை நீகாப்பாய் – நான்
    கேட்டதெலாம் உமைகொடுக்கக் கவிசேர்ப்பாய் – நீ
    சுட்டாலும் சுகம்சேர்க்கும் காலைவெயில் – உன்
    சுருதிக்கு நானாடும் காட்டுமயில்!!

    27.01.2019

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 4

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

    குறள் 31:

    சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு!

    நாலு பேர் முன்னால நம்மள ஒசத்திய காட்டி நமக்கு சீரையும் சிறப்பையும் கொடுக்குத அறத்த விட ஆக்கமான பாத வேற ஏதும் இருக்கா என்ன?

    குறள் 32:

    அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு

    அறம் செய்யுதத போல நல்லது வேற எதுவும் இல்ல. அத செய்ய ஓர்ம கெட்டு அலையுதத (மறப்பதப்) போல தீங்கும் வேற இல்ல.

    குறள் 33:

    ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்

    முடிஞ்ச மட்டும் சொணங்காம எல்லா இடத்திலயும் நல்லதையே (அறச்செயலயே) செய்யணும்.

    குறள் 34:

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற.

    மனச சுத்தபத்தமா வச்சிக்கிடணும். அறம் னு சொல்லுதது அம்புட்டுதான். அத உட்டுபோட்டு பேசுத பசப்பு வார்த்த நடிப்பு எல்லாம் வெறும் வெத்துவேட்டு ஆரவாரந்தான்.

    குறள் 35:

    அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்

    மத்தவங்கள பாத்து பொறாமல புழுங்குதது, அஞ்சு புலனால வெளையற ஆசை, ஆசைக்கு தட சொல்லுதபோது வர கோவம், கோவத்துல சொல்லுத கெட்ட வார்த்த இந்த நாலயும் நீக்கிட்டு தொடர்ச்சியா செய்யுத செயலத்தான் நல்ல செயல் (அறம்னு) சொல்லுவாங்க.

    குறள் 36:

    அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை

    சின்ன வயசில பொறவு பாத்துக்கிடலாம் னு தள்ளிப்போடாம நல்ல விசயங்கள (அறம்) செய்யணும். அப்பந்தான் அது நாம செத்த பிறவு கூட நமக்கு தொணையா நிக்கும்.

    குறள் 37:

    அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோ டூர்ந்தான் இடை

    அற வழில நடக்கவனுக்கு துக்கம் சொகம் ரெண்டும் ஒண்ணு போலத்தோணும். பல்லக்குக்கு உள்ள ஒக்காந்து அலுங்காம போகுதது மாதிரி. கெட்ட செயல செய்தவன் பல்லக்கு தூக்கிட்டுப் போவுதவன மாதிரி சொகத்தயும் அறியமுடியாம துக்கத்தையும் தாள மாட்டாம அவதிப்படுவான்.

    குறள் 38:

    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்

    தெனக்கும் தவறாம நல்லது (அறம்) செய்யுதவனுக்கு அது அவன் மறு பிறப்பு எடுக்குத வழிய அடைக்குத கல்லா நின்னு துணை நிக்கும்.

    குறள் 39:

    அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
    புறத்த புகழும் இல

    நல்லத செஞ்சவனுக்கு கெடைக்குததே இன்பம். மத்த வழில வருதது எல்லாம் புகழ்ச்சி ஆவாது.

    குறள் 40:

    செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி

    ஒருத்தன் புகழடயணும் னு நெனைச்சாம்னா அவன் பழி பாவம் செய்யாம நல்ல செயல (அறத்தை) மட்டுந்தான் செய்யணும்

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • உயிர்மண்

    -மு.செல்லமுத்து

    அன்றைய அறுவடைநாளின்
    மாலைப்பொழுதில்
    சிதறவிட்ட நெற்கதிர்களை
    வயல்வெளியிலிருந்து
    சேகரித்து வந்திருந்தேன்
    ஒரு புண்சிரிப்போடு பற்றிக்கொண்டவள்
    கைகளால் உதிர்த்து
    சொளகிலிட்டு தூசிதட்டினாள்.

    என்னுடன் பிறந்தவன் ருசித்துவிட்டு
    அவ்வப்போது வீசியெறிந்த
    புளியம் விதையொன்று
    என்வீட்டின் சந்தடியில் முளைத்திருந்தது
    புடைத்தெடுத்த நெல்மணியை
    அடுக்குப்பானையில் கொட்டியவாறே
    ‘கம்மாத்தண்ணீ வத்துவதற்குள்
    தெக்கவுள்ள நம்மகாட்டுக் கரையில
    கொண்டுபோய் நடுயென்றாள் அம்மா’

    பத்திரமாகப் பெயர்த்தெடுத்து
    பனையோலைப் பெட்டியில்
    உயிர்மண்ணை கொண்டுசேர்த்தேன்
    வாழ்வதில் அலுத்துப்போனவனைப்போல்
    ஓரிருநாட்கள் அந்தக்கரையில்
    கதியற்று நின்றாலும்
    அதனுயர்வை விரும்பாதவர்களிடமிருந்தும்
    வான்தந்த வறட்சியைத் தாங்கியும்
    எப்படியோ திமிறியெழுந்து
    எண்ணி ஏழாண்டிற்குள் எனக்கும்
    என்காட்டுப் பறவைகளுக்கும்
    அவ்வப்போது தங்குமிடமானது.

    உழைத்தவர் எவரேனும்
    அங்கு சென்றிருக்கக் கூடும்
    களைத்ததால் சற்று
    கண்ணயரக் கருதியோ,
    பறித்துக்கொணர்ந்த
    விளைபொருள்கள் எதையேனும்
    உலர்த்தியெடுக்க எண்ணியோ,
    கள்ளமில்லா மழழைகள்
    தூலிகட்டி அதன் மடியில் துள்ளவோ
    காதலிக்கத் தெரிந்த எவரும்
    கனவின் யாசகனாய்
    வாசிப்பதற்கு புத்தகங்களோடு
    அங்கு வந்திருக்கக்கூடும்.

    விழித்திருக்கும் போது
    எந்தச் சூறாவளிக்கும் அசைந்துகொடுக்கும்
    பெருமழைக்கும் அப்படித்தான்
    இருந்தாலும்
    அது மௌனித்திருக்கும் வேளையில்
    அவர்கள் வந்துவிட்டார்கள்
    அதன் உடலெங்கும் துண்டுபட்டு
    என்னுயிரும் வெற்றிடமானது
    பசுமை வழித்திட்டமாம்
    கலங்கிய விழிகளோடு
    நான் அங்கு வந்திருந்தேன்
    கையில் இன்னொரு
    உயிர்மண்ணை சுமந்தவாறு…

    கவிஞரைப் பற்றி…

    மு.செல்லமுத்து
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழியற்புலம், தமிழியல்துறை,
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
    மதுரை – 21
    மின்னஞ்சல் : cmchellamuthu.muthu83@gmail.com

    Share
  • அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்

    -மறவன்புலவு க. சச்சிதானந்தன்

     இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைமை இடமாகக் கொண்டு அமைந்த சைவத்தமிழ் அரசானது 400 ஆண்டுகளாகச் சங்கிலித் தொடர்ச்சியாக அமைந்த அரசு.தென்மேற்கே ‘வாய்க்கால் ஆறு’ அதன் எல்லை.தென்கிழக்கே ‘கொம்புக்கல் ஆறு’ அதன் எல்லை. சில காலங்களில் ‘மாணிக்கக் கங்கை’ வரை அதன் எல்லை விரிந்து இருந்ததாம்.

    அந்த 400 ஆண்டுகளில் தமிழீழ அரசின் ஆட்சியில் சைவ சமயமும் தமிழ் மொழியும் மட்டுமே பண்பாட்டு நெறிகள்.புத்த சமயமும் சிங்கள மொழியும் தெற்கே கண்டியைத் தலைநகராகக் கொண்ட ஆட்சியாலும் தென்மேற்கே கோட்டையை தலைநகராக கொண்ட ஆட்சியாலும் சமகாலத்தில் விளங்கின.மேலை நாட்டு மொழிகள், சமயங்கள் மற்றும் அரபு நாட்டு மொழிகள், சமயங்கள், அக்காலங்களில் இலங்கையில் இல்லை. நல்லூரைத் தலைநகராகக் கொண்ட சைவத்தமிழ் அரசு 400 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ந்தது.

    கலியுகம் 4720 சகாப்தம் 1541 திருவள்ளுவராண்டு 1650
    விபவ ஆண்டு 27 வைகாசி புதன்கிழமை (05.06.1619) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்தது. வீழ்த்தியவர்கள் மேலைநாட்டுப் போர்த்துக்கேயர்.

    1617இல் கோவாவில் தமிழீழ அரசை வீழ்த்துமாறு

    போர்த்துக்கேய ஆளுநர் ஆணையிட்டார். போர்த்துக்கேயர் திறை கொடுக்குமாறு ஆணைகளை அனுப்பினர்.ஆனால், அக்காலத் தமிழீழ அரசன் சங்கிலியன், அதனை நிறைவேற்ற மறுத்தான்.

    மன்னரின் பேசாலையில் போர்த்துக்கேய யேசூற்றப் பாதிரிமார்களால் வாள்முனையிலோ சோற்றுக்காகவோகத் தோலிக்கராக மதம் மாறிய தனது குடிமக்களைச் சங்கிலியன் அழித்தான்.

    போர்த்துக்கேயரின் படையெடுப்புகளைச் சந்திக்கத் தமிழகப் பழவேற்காட்டில் முகாமிட்டிருந்த ஒல்லாந்தர்களையும் தஞ்சை நாயக்கர் படைகளையும் மலையாளக் குஞ்சலி வீரர்களின் கடற்படையையும் துணைக்கு அழைத்தான். கண்டி அரசுக்கும் செய்தி அனுப்பினான்.

    1619 பங்குனியில் பிலிப்பு  டி ஒலிவேரா தலைமையில் தெற்கே கொழும்பிலிருந்து நூறு போர்த்துக்கேய வீரரும் சில ஆயிரம் சிங்களக் கூலிப்படைகளும் இணைந்த படை ஒன்று வடக்கு நோக்கிக் கிளம்பியது

    தமிழகம், நாகப்பட்டினத்திலிருந்து போர்த்துக்கேயக் கடற்படை கப்பல்கள் யாழ்ப்பாணம் நோக்கிக் கிளம்பின.1619 சித்திரையில் பூநகரி வந்த போத்துக்கேயப் படைகள் கேரதீவுக் கடலைக் கடக்க மீனவர்களைப் பயன்படுத்தினர்.1619 சித்திரைக் கடைசியில் குடாநாட்டுக்குள் போத்துக்கேயப் படைகள் நுழைந்தன.

    கலியுகம் 4720, சகாப்தம் 1541, திருவள்ளுவராண்டு 1650, விபவ ஆண்டு, வைகாசி 27ஆம் நாள், புதன்கிழமைபூரட்டாதி நாளில் (05.06.1619) வண்ணார்பண்ணையில் நடந்த பெரும் போரில் சங்கிலியன் படை தோற்றது. சைவத் தமிழ்ப் படை தோற்றது.பிலிப்பு டி ஒலிவேராவின் கத்தோலிக்கப் போர்த்துக்கேயப் படை வென்றது.

    நல்லூரைத் தலைமையகமாகக் கொண்ட தமிழீழ அரசு வீழ்ந்தது.சைவத் தமிழ் அரசன் சங்கிலியனும் பல்லாயிரம் சைவத் தமிழ்ப் படை வீரரும் கத்தோலிக்கப் போர்த்துகேயப் படையிடம் தோற்று மாவீரராகிய நாள், அந்த நாள்.

    அந்த நாளின் 400ஆவது ஆண்டு நிறைவு நாள், அதே திதி, இந்த ஆண்டு கலியுகம் 5120, சகாப்தம் 1941,திருவள்ளுவராண்டு 2050, விகாரி ஆண்டு, வைகாசி 13, திங்கள்கிழமை, தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி, சதயநாளன்று (27.05.2019) வருகிறது.அந்நாள் இலங்கையின் வரலாற்று நாள். சைவத் தமிழரின் இதயத் துடிப்பு நாள்.மன்னன் சங்கிலியனையும் அவனோடு உயிர்துறந்த தமிழர் படையினரையும் நினைவுகொள்ளும் நாள். 400ஆவது ஆண்டு நினைவு நாள்.

    “கீரிமலையில் திரள்வோம், பாலியாற்றில் திரள்வோம். பாலாவியில் திரள்வோம், மோதரகம் ஆற்றில் திரள்வோம். நந்திக் கடலில் திரள்வோம், கொட்டியாற்றில் திரள்வோம். கல்லடியில் திரள்வோம், கொம்புக்கல் ஆற்றில் திரள்வோம். வாய்க்கால் ஆற்றில் திரள்வோம்,சங்கிலிய மன்னனுக்கும் படைவீரர்களுக்கும் நீத்தார் கடன் ஆற்றுவோம்.”

    இந்த ஆனி தொடக்கம் அடுத்த ஆனி வரை ஓராண்டு காலத்துக்குச் சங்கிலியன் 400வது ஆண்டு நினைவு நிகழ்வுகளை இலங்கை முழுவதும் நடத்துவோம். புலம்பெயர் தமிழர்களிடையே நடத்துவோம்.ஊர்கள் தோறும் சங்கிலியன் சிலைகள் நிறுவுவோம்.வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் சங்கிலியன் வரலாறு என்ற தலைப்பில் ஒரு பகுதி சேர்ப்போம்.

    சங்கிலியன் நாடகம் ஓரங்க நாடகமாக நாடகக் குழுகளிகளிடையே போட்டி நடத்துவோம்.சங்கிலியின் கதையில் ஏதாவது ஒரு பகுதியைப் பரதநாட்டியமாக அமைக்கும் போட்டி நடத்துவோம்.சங்கிலியன் வரலாற்றைத் தமிழிசைப் பாடல்களாக்கி இசைக்கும் போட்டி நடத்துவோம்.சங்கிலியன் வரலாறு தொடர்பாக மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி எனப் போட்டிகள் நடத்துவோம்.

    வைகாசித் தேய்பிறை எட்டாம் நாள் மன்னன் சங்கிலியன் மற்றும் தமிழ் படை வீரருக்கு நினைவு நாள்.ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்.

    Share
  • கவிஞர் சுரேஷ்மணி கவிதைகள்

    -கவிஞர் சுரேஷ்மணி

    1.

    படித்து முடித்துவிட்டேன்
    வேலை கிடைத்துவிடும்
    வேலை கிடைத்துவிடும்
    என்றது மனது
    கிடைத்தது
    தன்மானத்தையும்
    சுயமரியாதையையும் இழந்த
    ஆட்டுவித்தால்
    ஆடவைக்கும்
    மரப்பாவை வேலை….

    2.

    குடும்பத்தைக் கடந்த
    பணியின் சுமை
    நாட்காட்டியின் வேகத்திற்கு
    ஈடுகொடுக்க முடியாத
    வாழ்க்கையில்
    உயிர்
    இலை உதிர்வதைப் போல்
    உதிர்கின்றது.
    தினம் தினம்..

    3.

    கற்களின் இடுக்குகளில்
    விழுந்த விதையொன்று
    வீரியத்துடன்
    வளர்ந்து
    கற்களை வென்றது.

    4.

    முதலாளித்துவத்தின் பிடியில்
    படித்த பாமரர்
    நாங்கள்
    எதிர்த்துக்கேட்காமல்
    மௌனம் காக்கும்
    இக்காலத்து
    மார்க்சும் லெனினும்

    Share
  • படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    மைக்கேல் கோகென் என்பவர் ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர். இவர் இவ்வளவு நாட்களாக ட்ரம்ப் செய்த சில தவறுகளை மூடிமறைத்து வந்தார். இப்போது வேறு வழியில்லாமல் தான் அமெரிக்கப் பாராளுமன்ற கமிட்டியின் முன்னால் பொய் கூறியதாக ஒப்புக்கொண்டார். இதற்கு அவருக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் இம்மாதிரிக் குற்றங்கள் எல்லாம் – அதுவும் மேல் மட்டத்தில் நடந்தால் – கண்டுகொள்ளப்படாமலே போய்விடும். என்ன இருந்தாலும் கோகெனும் ட்ரம்பும் அமெரிக்காவில் இருப்பவர்கள் அல்லவா? அமெரிக்கா இன்னும் இந்தியா அளவுக்குத் தாழ்ந்து போகவில்லை.

    இம்மாதிரிக் குற்றங்களைப் படித்தவர்கள் செய்யும் குற்றங்கள் (white collar crimes) என்று அழைக்கிறார்கள். இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோர்களை – அவர்கள் மேல்மட்டத்தவர் என்றாலும் – அமெரிக்கா தண்டிக்காமல் விடுவதில்லை. இருப்பினும் அவர்கள் எந்த மாதிரி சிறைச்சாலைக்குப் போக விரும்புகிறார்கள் என்ற சலுகையை அமெரிக்கா அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

    கோகென் நியூயார்க் அருகிலுள்ள ஆடிஸ்வில் என்னும் ஊரிலுள்ள ஒரு சிறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை ஒரு சிறை என்றுகூட சொல்ல முடியாது. ஒரு முகாமுக்குரிய எல்லா வசதிகளும் இங்கு உண்டு. கோகென் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த முகாம் இம்மாதிரியான மற்ற முகாம்களைவிட வசதிகள் குறைந்ததுதான். இருப்பினும் கோகென் இதைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு முக்கிய காரணம் இங்கு யூதக் குற்றவாளிகள் பலர்  இருப்பதுதான். மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள் பலர், படித்தவர்கள் புரியும் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள். நியூயார்க் மாநில சட்டசபையின் பெரும்பான்மை கட்சித் தலைவர் ஷெல்டனும் இவர்களில் ஒருவர்.

    இன்னொரு காரணம், யூதர்கள் உண்ண விரும்பும் ஒரு வகையான இறைச்சி. இதை இந்தச் சிறையில் கொடுக்கிறார்கள். யூதர்கள் ஒரு குறிப்பிட்ட சடங்கு செய்துமாடுகளையும் மற்ற மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அந்த இறைச்சியைத்தான் உண்ணுவார்கள். இன்னொரு காரணம், பெரும்பான்மையான யூதக் குற்றவாளிகளால் மதகுருவாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இங்குள்ள யூதக் கோவில்களில் மத சம்பந்தப்பட்ட வகுப்புகளை நடத்துகிறார்கள். இவர்கள் வெளியே இருந்தபோது மதகுருவாக வேலை பார்த்தவர்கள். தினம் மூன்று முறை இம்மாதிரி கூட்டங்கள் நடத்த வசதி இருக்கிறது.

    மேலும் வாரம் ஒரு முறை – வெள்ளிக்கிழமை சூரியன் மறைந்ததிலிருந்து சனிக்கிழமை சூரியன் மறையும்வரை – யூதர்கள் வேலை செய்யாத விதியைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த விதியைக் கடைப்பிடிக்கவும் யூதர்களுக்கு இந்தச் சிறையில் அனுமதி உண்டு. யூதர்கள் பாஸோவர் (Passover) என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடுவார்கள். எகிப்திலிருந்து யூதர்களின் தலைவரான மோசஸ், அவர்களை எகிப்து அரசனின் அனுமதியோடு கானான் தேசத்திற்கு அழைத்துச் சென்றபோது அரசன் மனம் மாறி அவர்களை மறுபடி சிறைப்பிடிக்க முயன்றபோது, அவர்கள் அவசர அவசரமாகத் தயாரித்த உணவுகளைத் தங்களோடு எடுத்துச் சென்றார்களாம். அந்த உணவுகளை இப்போதும் பாஸோவர் அன்று சாப்பிடுகிறார்கள். இந்த உணவுகளைச் சிறையிலேயே தயாரித்துக்கொள்வதற்கும் அங்கு வசதி இருக்கிறதாம்.

    கோஷர் இறைச்சி, தினந்தோறும் மூன்று முறை வழங்கப்பட்டாலும் மௌனம் இருக்கும் சனிக்கிழமையன்றும் பாஸோவர் தினத்தன்றும் அந்தத் தினங்களுக்கு உரிய உணவுகளைச் சமைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. யூதர்கள் அணியும் தலைக்குல்லா, அவர்கள் அருந்தும் ஒரு வகைப் பானம், ஒரு வகையான ரொட்டி ஆகியவையும் இவர்களைப் பார்க்க வருபவர்களைச் சந்திக்கும் அறையில் விற்கப்படுகின்றனவாம். அவை கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் சிறையில் கிடைக்கிறதே என்று இந்தச் சிறையில் இருக்கும் யூதர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

    இவ்வளவு வசதிகள் இருந்தாலும் இந்தச் சிறை ஒன்றும் பிக்னிக் போகும் இடமல்ல என்கிறார், இங்கு பதினெட்டு மாதங்களைக் கழித்த ஒரு யூதர். ஒவ்வொரு நாள் காலையும் ஆறு மணிக்கு அங்குள்ளவர்களின் எண்ணிக்கையைப் பட்டியல் போடும்போது எல்லோரும் எழுந்திருக்க வேண்டும். சிறைக் காவலாளிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகளின் அறைகளுக்குள் வரலாம். அந்தரங்கம் கிடையாது. குறட்டை விடும் பலருக்கு அருகில்தான் தூங்க வேண்டும் என்றால் அதைத் தவிர்க்க முடியாது. மதவழிபாட்டைப் பின்பற்றுவதால் இந்தக் கஷ்டங்களை ஓரளவு தாங்கிக்கொள்ள முடிகிறதாம். இப்படி இந்தச் சிறையில் மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். மற்ற சிறைச்சாலைகளில் நிலைமை நேர் எதிர்.

    இங்குள்ள யூதர்களில் பலர், பெரிய பதவிகளில் இருந்தவர்கள். உதாரணமாக பலர் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், நிதி ஆலோசகர்கள், வணிகர்கள், மதகுருக்கள். இந்த மதகுருக்கள் பலர், பல வகையான மோசடிகள் புரிந்திருக்கிறார்கள். மதகுருக்கள் சிலருக்கு யூதர்களின் வேதமான தோராவின் உரையான டால்முட் (Talmud) தலைகீழ்ப் பாடம். ஆனாலும் எப்படி இவ்வகையான குற்றங்கள் புரிந்தார்கள் என்று தெரியவில்லை. இப்படிக் குற்றங்கள் புரிந்தவர்களே சிறைக்கு வந்ததும் மனம் மாறி மற்றவர்களுக்கு வேதத்தைப் போதிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    அமெரிக்க சமூகம் படித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வசதியானவர்கள் செய்யும் குற்றங்களைக் (white collar offences) கண்டித்து அவர்களையும் சிறைக்கு அனுப்பித் தண்டிக்கிறதே என்ற வியப்பு ஒரு பக்கம். தங்கள் மதத்தின் வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்களும் பெரிய பெரிய ஊழல்களும் பணம் சம்பந்தப்பட்ட மோசடிகளும் புரிந்திருக்கிறார்களே என்ற வியப்பு இன்னொரு பக்கம். வேதங்களை முழுமையாகப் படித்துவிட்டு இவர்களால் எப்படி இப்படிப்பட்ட குற்றங்களைப் புரிய முடிகிறது? பின்னால் சிறையில் மறுபடி எப்படி மத போதகர்களாக மாற முடிகிறது? அங்கும் இவர்களைப் பின்பற்றுவதற்கு பலர் இருக்கிறார்களே. இவற்றையெல்லாம் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(242)

    -செண்பக ஜெகதீசன்

     

    உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்

    கட்காதல் கொண்டொழுகு வார்.

    -திருக்குறள் -921(கள்ளுண்ணாமை)

     

    புதுக் கவிதையில்..
     

    கள்மீது பற்றுற்றே

    என்றும்

    குடிக்கு அடிமையான

    காவலன்முன்

    பகைவன்கூடப் பயப்படமாட்டான்,

    பெற்ற புகழும்

    நிலைப்பதில்லை…!

     

    குறும்பாவில்…
     

    கள்ளிற்கு அடிமையாகி அதன்மேல்

    அன்புற்றொழுகுவோக்கு எதிரியும் அஞ்சான்,

    நில்லாதே எல்லாப் புகழும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    குடிக்கும் கள்ளுக் கடிமையாகி

    கூற்றா மதன்மீ தன்புகொண்டு

    தொடர்ந்தே யொழுகும் மன்னவரும்

    தீதாம் குடியின் சேர்க்கையாலே

    தொடரும் பகைவரும் அஞ்சிடாத

    தன்மை தன்னைப் பெறுவதுடன்,

    கிடைத்த புகழையும் தானிழந்து

    கீழ்நிலை யதனை அடைவாரே…!

     

    லிமரைக்கூ..

    கள்ளிற்கு அடிமையரசனை இகழும்

    நாட்டில் எதிரியும் அவனுக்கு அஞ்சுவதில்லை,

    போய்விடுமே சேர்த்துவைத்த புகழும்…!

     

    கிராமிய பாணியில்…
     

    குடிக்காதே குடிக்காதே

    கள்ளு குடிக்காதே,

    குடியக் கெடுக்கிற

    கள்ளக் குடிக்காதே..

     

    கள்ளுகுடிக்கு அடிமயாகி

    கண்டபடி வாழுறவன் ராசாண்ணாலும்

    எதிரிகூட மதிக்கமாட்டான்,

    அவனுக்கு

    எள்ளளவும் பயப்படமாட்டான்..

     

    சேத்துவச்ச செல்வாக்கு

    பெருமயெல்லாம்

    சேந்தாலப் போயிடுமே..

     

    அதால

    குடிக்காதே குடிக்காதே

    கள்ளு குடிக்காதே,

    குடியக் கெடுக்கிற

    கள்ளக் குடிக்காதே…!

     

     

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 10

    -சி. ஜெயபாரதன்

     

    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

    [Miss me, But let me go]

    +++++++++++++

    [34] மனமுடைந்த நான்கு மாதர்

     

    அன்னிய மாதர் அனைவரும்,

    ஒட்டுமில்லை எனக்கு

    உறவுமில்லை !

    மருத்துவ மனையில்

    மனமுடைந்து

    நான் அழும் போது

    ஒடிவந்து அணைத்துக் கொண்டு

    ஆறுதல் அளித்த அந்த

    மருத்துவ மாது !

    “மனைவி பிழைக்க மாட்டாள்

    போவென,” என்னை

    டாக்சியில் அனுப்பிய கனிவு

    டாக்டர் மாது !

     

    மனைவி மரித்து விட்டாள்

    எனத் தகவல் கேட்ட

    உடனே

    இரங்கல் மடலோடு

    ஏந்திய

    மலர்க் கொத்தோடு

    இருகண்களில்

    தாரை தாரையாய்க்

    கண்ணீர் சிந்த

    ஓடிவந்து அணைத்துக் கொண்டு

    ஆறுதல் அளித்த

    ஜெவோஹா விட்னஸ்

    மாது !

    அடுத்த நாள் ஆவி பறக்க

    சுடச்சுட சூடாக

    சூப்பு தயாரித்து எனது

    கரங்களில் கொடுத்த அதே

    கிறித்துவ மாது !

     

    மாதமிரு முறை

    வீட்டைத் துடைக்க வரும்

    பணி மாது !

    வேலை செய்யப் போன

    வீட்டில்

    மனைவி மரித்து விட்டாள் எனக்

    கேட்ட போதே

    தேம்பித் தேம்பி அழுத மாது !

    அடுத்த நாள்

    பூக்கும்பா கொண்டு வந்த

    வீட்டுப் பணி மாது !

     

    துணைவி மரித்து விட்டாள் எனக்

    பக்கத்து வீட்டுக்

    காவல்துறை நண்பரிடம் நான்

    சொல்லிச் சென்ற பின்,

    நோயுடன் படுத்துக் கிடந்த

    அவரது மனைவி,

    கதவைப் பட்டெனத் திறந்து

    போர்வை எதுவு மின்றித்

    துள்ளி ஓடி வந்து

    என்னை நிறுத்தி

    தெருவிலே அழத மாது !

     

    மனைவி மரித்த தற்குக்

    கண்ணீர் விட்ட

    அன்னிய வனிதையர்.

    மனப் பாறையில் செதுக்கி நான்

    மறக்க முடியாத அந்த

    மாதரெல்லாம்

    பூதலத்தில் பிறந்த

    தேவ மகளிர் !

     

    +++++++++++++++++

    [35] இறுதி நிகழ்வுகள்

    [9/11] [நவம்பர் 9, 2018]

     

    வெள்ளிக் கிழமை !

    இறுதிப் பயண நாள் அது

    தலைவலி

    உள்ளதெனக் கூறி மாலை

    ஐந்து மணிக்கு,

    ஆரஞ்சுவில் ஓட்டலில்

    காபி தயாரித்து

    என்னுடன் காபி அருந்தி

    உரையாடியது,

    அதன் பிறகு

    இளைய புதல்வியுடன் இனிதாய்ப்

    பேசியது !

    ஹார்வி, சுவிஸ் சாலே

    ஓட்டலுக்குப் போவீர் என்று

    எங்கள் திசையை மாற்றியது

    இளைய மகள் !

    இரவு உணவு உண்ணப்

    போவது

    ஆறு மணிக்குத் தான் என்று

    மீண்டும் மீண்டும்

    அழுத்திக் கூறியது

    மனைவி !

    ஆறு மணி தாண்டி

    நாங்கள்

    கார் போகும் போதுதான்

    நேர்ந்தது 9/11 விபத்து !

    இரத்தக் குழல் குமிழ் விரிந்து

    உள்வெடிப்பு !

    உரத்த குரலில் வலியில்

    கத்தினாள் !

    என் நெஞ்சைப் பிளந்தது

    அக்குரல் !

    911 எண்களைத் தட்டினேன் !

    மணியடித்து

    அவசரக் காப்பு வாகனம்

    வந்தது உடனே !

    மருத்துவரிடம்

    வலியோடு தன் பெயரை

    வயதைச்

    சொல்லி இருக்கிறாள் !

    ஒருமுறை

    மருத்துவ மனையில்

    தாங்கா வலியுடன் தவித்துக்

    கண்திறந்து பார்த்து

    என் இடது கையைப் பற்றியது

    இறுதியில் !

    கண்மூடி, வாய்மூடிய சமயம்,

    புதல்வியர் பேசிய போது

    கால், கைவிரல் மட்டும் அசைந்தன,

    இடது கண்ணில்

    வடிந்தது ஒரு சொட்டுக்

    கண்ணீர் !

    இறுதிக் கண்ணீர் !

     

     

    Share
  • (Peer Reviewed) ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம்

    முதுமுனைவா் இரா. சங்கர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூா், வேலூா் மாவட்டம்

    ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம்

    சங்க இலக்கியம் ஐந்திணையை அடிப்படையாகக் கொண்டு அக்கால மக்களின் வாழ்க்கை முறையினைக் கூறும் வாழ்க்கைக் களஞ்சியமாகும்.  சங்க இலக்கியத்திற்கு முதன்மைப் பொருளாக விளங்குவது நிலமும் பொழுதுமே.  முதன்மைப் பொருளாக விளங்கும் நிலத்தினைச் சான்றோர்கள் நான்கு வகையாகப் பிரித்து ‘நானிலமென’ முறையாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலெனப் பெயா் வைத்திருந்தனா்.  இருப்பினும், சங்க இலக்கியங்களில் ‘பாலை’ என்கின்ற ஒருவகை நில அமைப்பினைச் சங்க இலக்கிய புலவா்கள் தம் பாடல்களில் புனைந்துள்ளதைக் காண்கிறோம். அத்தகைய நிலத்தைப் பற்றியும், அந்நில மக்களின் வாழ்வியல் முறைகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    நிலப் பாகுபாடு

    இயற்கை சார்ந்த தமிழக நில அமைப்பை மலை, காடு, வயல், கடலென நான்கு கூறுகளாகப் பிரித்திருந்தனா். மலையும் மலை சார்ந்த பகுதியிலும் குறிஞ்சி மலா் சிறப்புற்ற காரணத்தினால் குறிஞ்சி நிலமென்றும்;  காடும் காடு சார்ந்த பகுதியிலும் முல்லை மலரின் அழகுமிக்க காட்சியினைக் கண்டு முல்லை நிலமென்றும்; வயலும் வயல் சார்ந்த பகுதியிலும் மருத மரத்தின் செழிப்பினைக் கண்டு மருத நிலமென்றும்; கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் உப்பங்கழிகளில் பூத்துக் குலுங்கும் நெய்தல் மலரின் அழகினைக் கண்டோர் நெய்தல் நிலம் என்றும் அந்தந்த நிலத்தின் அழகுமிக்க மலரினை நிலத்திற்குரிய பெயராக வைத்திருந்தனா்.

    இதனைத் தொல்காப்பியா் ‘தமிழகத்தின் ஒட்டுமொத்த நில அமைப்பினை இயற்கையின் அடிப்படையில் நான்காகப் பிரித்திருந்தனா்’ என்பதை,

    நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்

    படுதிரை வையம் பாத்திய பண்பே(தொல்.பொருள்: அகம்: 2)

    என்று, நடுவில் இருக்கின்ற பாலையைத் தவிர ஏனையவற்றைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலென நிலத்தினை நான்காகப் பிரித்து, பாலை நிலத்திற்கு நிலவரையறை செய்யாமல் விடுத்திருக்கிறார்.  இந்நூற்பாவிற்கு உரையெழுதிய உரையாசிரியா்கள் பாலை நிலத்தினைப் பற்றிப் பலவாறாகக் கருத்து கூறுகின்றனா்.

    உரையாசிரியா்களின் கருத்து

    தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணனார், “பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற்காலம் பற்றி வருதலால், அக்காலத்தில் தளிரும் சினையும் வாடி நிற்பது.  பாலை என்பதோர் மரம் வேனிற் வெப்பத்திலும் காய்ந்து போகாமல் பூத்துக் குலுங்குவதால் அதன் சிறப்பு அந்நிலத்திற்குப் பாலையென்று பெயா் வைத்திருக்கின்றனா்” (தொல்.பொருள் உரை, இளம்பூரணனார்) என்று குறிப்பிடுகின்றார்.

    வித்வான் இரா. மாணிக்கனார் ‘நிலத்தினை வளமுள்ள பகுதியாகப் பிரித்தலே நாட்டிற்கு நிறைவைத் தரும் எனக் கருதி, வளமுள்ள பகுதியாகிய மலை, காடு, வயல், கடல் என்பனவற்றை அடிப்படையாக வைத்தே நிலம் பகுக்கப்பட்டது என்றும்;  வளமில்லாப் பாலையையும் ஒரு பகுதியாகக் கொள்ளின் குறைவைத் தருவதாகும் எனக் கருதியே வளமற்ற பாலையை ஒரு பகுதியாகப் பிரிக்கவில்லை’ என்று கூறுகின்றார் (பாலை, கு. சொ. பொ.  ப. 110).

    வௌ்ளைவாரணனார் பாலை நிலத்தைப் பற்றிக் கூறும் உரையில்  ‘பாலையென்பதற்கு நிலமில்லையாயினும் வேனிலாகிய காலம் பற்றி வருதலின், அக்காலத்துத் தளிரும் சினையும் வாடாமல் நிற்கும் பாலையென்னும் பெயருடைய மரம் உண்டாகலின் அச்சிறப்பு நோக்கிப் பாலையென்று பெயரிட்டனா்.  ஆகவே குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே வேனில் வெப்பத்தால் வளங்குறைந்து நடத்தற்கரியதாய் மாறிய காலத்துப் பாலையென வழங்கப்படும்’ எனக் கூறுகிறார் (தொல்.பொருள் – உரை ப.84).

    இவ்வாறாக உரைகூறும் உரையாசிரியா்களின் கூற்றிற்கு இணங்க,

    “——————- வெங்கதிர் வேந்தன்

    தானலம் திருகத் தன்மையில் குன்றிய

    முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

    நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்

    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

    (சிலம்பு. காடுகாண் காதை: 62-66)

    என்ற சிலப்பதிகார அடிகளில் ‘வெவ்விய கதிர்களையுடைய அரசனான ஞாயிறு மாறுபட்டு நிலத்தைச் சுட்டெரிக்க, குறிஞ்சியும் முல்லையும் நல்லியல்பு கெட்டுப் பாலையென்ற தன்மையினைப் பெறும்’ என்று கூறுவதிலிருந்து பாலை நிலமென்பது குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த இடமென்பது புலனாகிறது.

    உரிப்பொருள்

    இயற்கையின் அமைவிற்கு ஏற்றாற்போல் நிலத்தினைப் பகுத்த தொல்காப்பியா், ஒழுக்கத்தினையும் திணை அமைப்பிற்கு ஏற்ப,

    புணா்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

     ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை

    தேருங்காலை திணைக்குரிப் பொருளே

    (தொல்.பொருள்.அகம்:16)

    என ஐவகையாகப் பகுத்திருக்கிறார்.

    மலையும் மலைசார்ந்த பகுதியில் புணா்தலுக்குரிய சூழல் மற்ற நிலங்களைக் காட்டிலும் மிகுதியாகக் கொண்டுள்ளமையால் புணா்தலும் புணா்தலுக்குரிய  நிமித்தமும் குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கமென்றும்; காடும் காடு சார்ந்த பகுதியில் ஆநிரைகளை மேய்த்தற் பொருட்டாகச் சென்ற ஆடவரை எதிர்பார்த்து மாலைப்பொழுதில் இல்லின்கண் தலைவி ஆற்றியிருப்பதால் ‘இருத்தலும் இருத்தல் நிமித்தமும்’ முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கமென்றும்; வயலும் வயல் சார்ந்த பகுதி நீா்ப் பாசனத்தின் பொருட்டு  செழிப்புற்று விளங்கியமையால் இந்நிலத்தில் வாழும் செல்வந்தா்கள் மனைவியை விட்டுப் பரத்தமை கொள்வதும், அதனை அறிந்த தலைவி தலைவனுடன் ஊடல் கொள்வதுமான நிகழ்வுகள் மிகுதியாகக் கொண்டிருந்தமையால் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’ மருத நிலத்திற்குரியது என்றும்; கடலும்  கடல்சார்ந்த பகுதியுமான நெய்தல் நிலத்தில் தலைவன் மீன் பிடித்தற்பொருட்டு கடல் பயணம் மேற்கொள்கின்ற பொழுது, அலைகடலின் நிலையை அறிந்து, தலைவன் திரும்புவானா? திரும்பமாட்டானா என்று வருந்திக்கொண்டிருப்பதால் ‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’ நெய்தல் நிலத்திற்குரியது என்று கூறும் தொல்காப்பியா், ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்னும் ஒருவகை ஒழுக்கத்தினையும் உணா்த்துகிறார்.  இவ்வாறாக உணா்த்தப்பட்ட ஒழுக்கத்தின் நிலைதான் என்ன என்று எண்ணும்பொழுது, உரையாசிரியா்கள் ‘நான்கு நிலங்களிலும் வினையின் காரணமாகவோ, ஊடலின் காரணமாகவோ, பிரிதல் வேண்டிய சில காரணங்களினால், தலைவனும் தலைவியும் பிரிதலுண்டு; இதனை உணா்த்துவதாகப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் அமைகிறது என்று கூறுகின்றார்.

    எல்லா மக்களிடத்தேயும் இயல்பாக நடைபெறுகின்ற பிரிவைப் பற்றி ஓர் ஒழுக்கமாக உணா்த்திய தொல்காப்பியா், அதனைப் போன்றே அமையும் கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் உரிய ஒழுக்கத்தினைக் கூட்டி, ஒழுக்கத்தினையாவது ஏழாகக் கூறி இருக்கலாம்.  ஆனால் அவா் அவ்வாறாகக் கூறவில்லை. இதிலிருந்து தொல்காப்பியா் ஒழுக்கங்கள் திணையின் அடிப்படையில்தான் புனைந்துள்ளார் என்பது புலனாகிறது.  இதன் அடிப்படையில் பாலையென்கின்ற ஒருவகை நில அமைப்பு தொல்காப்பியா் காலத்தில் மறைமுகமாகப் புனையப் பெற்றிருக்கிறது என்பது உறுதியாகிறது.

    இதனைக் காட்டிலும் இன்னமும் சிறப்பாக உணா்த்த வேண்டுமானால், பாலை நிலமென்பது நிலைத்து நிற்கும் தன்மையற்றது, குறிஞ்சியும் முல்லையும் வேனிற்காலத்தில் திரிந்தால் பாலை, மீண்டும் செழிப்புற்றால் அந்நிலம் முல்லையாகவும், குறிஞ்சியாகவும் மாறிவிடும் என்பதனை,

    வாகைதானே பாலையது புறனே(தொல்.பொருள்.அகம்:73:1)

    என்ற நூற்பாவில் ‘வாகையாகிய வெற்றி ஒரே மன்னனுக்கு நிலைத்திருப்பதில்லை பாலை நிலத்தினைப் போன்று மாறி மாறி வரும் தன்மையது என்பதை உணா்த்துவதாக இந்நூற்பா அமைகிறது.

    கருப்பொருள்

    வேனிற்காலத்து வெம்மையால் திரிந்த நிலமே பாலை என்பதை மறைமுகமாக உணா்த்திய தொல்காப்பியா், நிலங்களுக்குரிய கருப்பொருளை உணா்த்துவதில் பொதுத்தன்மை காட்டியதற்குக் காரணம் திரிந்த நிலத்திற்குப் பொருள் உணா்த்துவதில் உள்ள சிக்கலேயாகும்.  ஆகையால் அந்தந்த நிலத்திற்குரிய கருப்பொருளைத் தனித்தனியே கூறாமல்

    தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

       செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

       அவ்வகை பிறவும் கருஎன மொழிப (தொல்.பொருள்.அகம்:20)

    என்று, நிலம் எத்தனை வகையாக இருப்பினும், அந்தந்த நிலத்தில் உள்ள தெய்வம், உணவுமுறைகள், மரங்கள், பறவைகள், விலங்குகள், நீா்நிலைகள் மற்றும் இசைக்கருவிகள் போன்றவையே அந்நிலத்திற்குரிய கருப்பொருளாக விளங்குமெனக் கூறுகிறார்.

    பொதுத் தன்மையாகக் கூறிச் சென்ற தொல்காப்பியரைத் தொடா்ந்த நாற்கவிராச நம்பி, அவா் விட்டுச் சென்ற குழப்ப நிலைக்குத் தீா்வுகாணும் வண்ணமாக, அந்தந்த நிலத்திற்குரிய கருப்பொருளைப் பற்றித் தெளிவாக விளக்குகிறார்.  அவற்றுள் பாலை நிலத்திற்குரிய கருபொருளாக,

    கன்னி விடலை காளை மீளி

     இன்னகை எயிற்றி எயினா் எயிற்றியா்

     மறவா், மறத்தியா் புறவுபருந்து எருவை

     கழுகு செந்நாய் கல்கெழு குறும்பு

     குழிவறுங் கூவல் குராஅ மராஅ

     வழிஞ்சில் பாலை யோமை யிருப்பை

     வழங்குகதிர் பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சுரம்

     பகற் சூறை யாடல் பாலங் கருப்பொருள்(அ.பொ.வி:21)

    என்று, ‘பாலை நிலத்திற்குரிய தெய்வம் கொற்றவையென்றும்; அந்நிலத்தில் வாழும் தலைமக்கள் விடலை, காளை, மீளியென்றும்; குடிமக்கள் எயினா், எயிற்றியா், மறவா், மறத்தியரென்றும்; வேனிற் வெப்பத்தினால் காய்ந்து போன நீா்நிலையும், மரங்களும், வலிமை இழந்த விலங்குகளும், பறவைகளும் பாலை நிலத்திற்குரிய கருப்பொருளெனக் கூறுகின்றார்.

    இவ்வாறாகத் தொல்காப்பியரும், இளங்கோவடிகளும், நாற்கவிராச நம்பியும், உரையாசிரியா்களும் பாலை நிலத்தினைப் பற்றிக் கூறிய குறிப்புகள் யாவுமே, பாலை என்கின்ற ஒருவகை நிலம் திரிநிலமாக இருந்தது என்பதனை உறுதிப்படுத்துகின்றன. அத்தகைய திரிநிலமான பாலை நிலத்தின் தன்மையைச் சங்க இலக்கியப் பாடல்கள் பலவாறாக விளக்குகின்றன.

    பாலை நிலத்தின் தன்மை

    குறிஞ்சியும் முல்லையுமாய்ப் பூத்துக் குலுங்கும் சோலைவனம், மழை பொய்த்ததால் கதிரவனின் கதிர்வீச்சு பட்டு, பாலையாகக் காட்சி தரும் இந்நிலத்தில் வற்றிய சுனையும், வறண்ட நீா்நிலையும், காய்ந்த மரங்களும் கடத்தற்கரிய வழியுமாய் இருந்திருக்கிறது.

    இந்நிலத்தினைப் பற்றி நச்சினார்க்கினியா், ‘பாலைத் தன்மையாவது காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம் பயன்துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவது’ (தொல். பொருள்.உரை – ப. 84) எனக் கூறுகிறார்.

    நச்சினார்க்கினியாரின் கூற்றின்படி பாலைத் தன்மையினைக் கூறும் சங்கப் பாடல்களில் அந்நிலத்தினை நீரற்றது என்றும், வழிப் போக்கா்க்குத் துன்பம் தருவதென்றும், கொலைத் தொழில் புரியும் ஆறலைக் கள்வா் வாழும் பகுதியென்றும் கூறுகின்றனவேயன்றி அந்நிலத்தினை உயா்வாகக் கூறிய பாடல்கள் இல்லை.

    இவ்வாறாகப் புலவா்களால் கொடிய தன்மையனவாகப் பாடப்பட்டதற்குக் காரணம், அந்நிலத்தின் சூழல், கொடிய தன்மை வாய்ந்ததாக விளங்கியமையே ஆகும்.  இக்கொடிய தன்மைக்குக் காரணம், வேனிற் வெம்மையே.

    வெம்மை

    வேனிற் வெப்பத்தினால் உண்டானதே பாலை நிலமாதலின் இந்நிலத்தில் வெம்மையின் கொடுமை மிகுதியாக இருந்திருக்கும்.  பாலை நிலத்தின் வேனிற் வெப்பத்தினை உணா்த்தும் பாடலாக,

    உலைக்கல் அன்ன பாறை யேறிக்

    கொடுவில் எயினா் பகழி மாய்க்கும் சுரம்(குறுந்:12:2-3)

    என்ற குறுந்தொகை அடிகளில் ‘தலைவன் பொருளீட்டச் சென்ற பாலை வழியானது, கொல்லனது உலைக்களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்று வெம்மையையுடைய பாறைகள் நிறைந்த காட்டில், எயினா்கள் தம் அம்பினைத் தீட்டிக் கொண்டிருப்பா்.  அத்தகைய கொடுமை வாய்ந்த பாலை நிலத்தின் வழியில் எம்மைப் பிரிந்து சென்றான் நம் தலைவன்’ எனத் தலைவி கூறுவதாக அமைந்த இப்பாடல், வேனிற் வெப்பத்தினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    கொடுமையான வெப்பத்தினால் இந்நிலத்தில் காணப்படும் மரங்கள் யாவும் உலா்ந்த நிலையில், மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பிடித்து காடெங்கும் பற்றி எரிந்து கரிக்காடாய் விளங்கியது என்பதை,

    நிழல் கவின் இழந்த கவா் மரத்த (நற்:256:3)

    என்ற நற்றிணையடி விளக்குகிறது.

    இத்தகைய கொடுமை வாய்ந்த நிலத்தின் வழியாக உமணா்கள் உப்பு விற்கச் செல்கின்ற பொழுது, பாலை நிலம் வந்துவிட்டது என்பதனை அறிந்தவுடன் மனம் வருந்துவா் என்பதனை,

     “வேங்கை கொய்யுநா் பஞ்சுரம் விளிப்பினும்

       ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூவஉங்காடு (ஐங்:311:1-2)

    என்ற ஐங்குறுநூற்று அடிகளில் ‘வேங்கை மலரினைச் சூடுதற்காக மரத்திலேறி மலா் கொய்யும் ஆயர் மகளிர், விளையாட்டின் காரணமாகப் பஞ்சுரம் என்னும் பாலைப் பண்ணைப் பாடுவதைக் கேட்டவுடன், இனி வருவது பாலைநிலமென வழிப்போக்கா் அஞ்சும் கொடிய தன்மை வாய்ந்த நிலமாக இருந்திருக்கிறது.

    மணல்

    தீப்பற்றி எறியாத இடங்களும் வறட்சியுடன் மணல் மிகுந்த பகுதியாகவும் பாலை நிலம் இருந்திருக்கிறது.  மழைக் காலங்களில் குறிஞ்சி நிலத்தில் பெய்த மழை, மருத நிலத்தினை நோக்கி வரும் காட்டாறு, வேனிற்காலத்தில் வற்றிப் போன நிலையில் மணற்பரப்பாக இருந்திருக்கிறது.  பாலை வனத்தினைப் போன்ற காட்டாற்றுப் பாதையில் மணல் காணப்படுவதால் இந்நிலத்திற்குப் பாலை நிலமெனப் பெயா் அமைந்திருக்கலாம்.  இயல்பான நிலங்களில் பாலைவனம் போன்று மிகுதியான மணல் இருந்தமையால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழகத்தில் அதிகமான மழையும் அதற்கு ஏற்றாற் போன்ற வெம்மையும் இருந்திருக்கிறது என்பதனை உணர முடிகிறது.

    நீர்வழியில்லா மேட்டு நிலங்கள், நீரற்ற நிலையில் சூறாவளிக் காற்றுடன் புழுதி பறக்கும் தன்மையனவாக இருந்தது என்பதனை,

    களிறு உதைத்து ஆடிய கவிர் கண் இடுநீறு

     வெளிறு இல் கார் வெலம் நீடிய

     பழங்கண் முது நெறி மறைக்கும்,

     வழங்க அருங் கானம் ——–” (நற்:302:7-9)

    என்ற நற்றிணைப் பாடல் ‘மக்கள் நடந்து செல்லுதற்கு அரிய சுரவழியில், யானை நிலத்தைக் கால்களால் உதைத்து விளையாடியதால் எழும்பிய மிகுதியான புழுதி, வயிரமேறிய வேல மரங்களின் மீது மேலும் கீழுமாகப் படிந்து நிறம்மாறி நெருக்கமாக அமைந்திருக்கும்’ என்று மேட்டுநிலத்தின் தன்மையைக் கூறுகிறது.

    பத்துப் பாட்டில் ஆற்றுப்படுத்துவதாக அமையும் ஆற்றுப்படை நூல்களில் பாலை நிலத்தினைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

    நல்லியங் கோடனிடம் பரிசில் பெறுவதற்காக ஆற்றுப்படுத்தும் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், பாலை நிலத்தினைப் பற்றிக் கூறுவதாக,

    வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப

     வேனில் நின்ற வெம்பத வழிநாள்

     காலை ஞாயிற்றுக் கதிர்கடா வறப்ப

     பாலை நின்ற பாலை நெடுவழிச்

     சுரன்முதன் மரா அத்த வரிநிழல் அசைஇ” (சிறுபாண்.ஆ:8-12)

    என்ற சிறுபாணாற்றுப்படை  அடிகளில் ‘அதிகாலையிலே நண்பகல்போல் வெப்பம் தரும் கதிரவன், அப்பாலை நிலத்திலுள்ள பரற்கற்களைச் சூடேற்றி, அந்நிலத்தின் வழியாக வருகின்றவா்களின் கால்களைக் கிழிக்கச் செய்யும் தன்மை வாய்ந்த பாலை நெடுவழியில், கடம்ப மரத்தினுடைய வரிநிழல் காணப்படும். அந்த நிழலில் சிறிது இளைப்பாறி, பின்னா் அவ்விடத்தினை விட்டுக் கடந்து சென்றால், நல்லியங்கோடனின் நாடு வரும்’ என்று உணா்த்தும் இப்பாடலடியில், பாலை நிலம் வெப்பமிக்கது என்றும், அவ்வழியில் பரற்கற்கள் மிகுதியாகக் காணப்படும் என்றும், இளைப்பாறுவதற்கு நல்ல நிழல் இருக்காது என்றும் பாலை நிலத்தின் தன்மையினைப் படம் பிடிக்கிறது.

    இதனைப் போன்றே பெரும்பாணாற்றுப்படையில் பாலை நிலம் நீரற்ற தன்மையினை,

     “மான்அடி பொறித்த மயங்குஅதா் மருங்கின்,

     ……………………………………

     அருஞ்சுரம் இறந்த அம்பா்(பெரும்பாண்.ஆ:106-117)

    என்ற அடிகளில், ‘மான்களின் அடிச்சுவடு பதிந்து கிடக்கும். மயங்குதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில், மழை வறண்ட காலத்தில் நீா் பெறும்பொருட்டுத் தோண்டப்பட்ட பல குழிகள் காணப்படும்.  அக்குழிகளை ஆழக்  குழிதோண்டி, அதன் அகத்தே மறைந்தொடுங்கி, நடு இரவில், அகத்திப் பூப்போன்ற வளைந்த மருப்பினையுடைய பன்றிகள் நீருண்ண வரும் வருகையைப் பகுதிநேரம் பார்த்து நிற்பா் எயினா்.  அவ்வாறாக எதிர்பார்த்திருக்கும் எயினருக்குப் பன்றி வேட்டை கிடைக்கவில்லையென்றால், எஞ்சிய அரை நாளில் அங்காந்த வாயையுடைய நாய்களுடன், பசிய தூறுகளை அடித்துக் குவித்த இடத்தே வேலியில் தொடா் வலை கட்டி விடுவா். புதா்களினின்றும் வெளிவரும் முயல்களைத் தப்பிப் போக விடாமல் வலையினகத்தே வளைத்துப் பிடிப்பா்.  பின்னா் தறுகண்மையுடைய அக்காட்டில் வாழ்வோர் அவற்றைக் கூடித் தின்கின்ற நீா் வறண்ட, அரிய பாலைக் கடுஞ்சுரம்’ என்று கூறும் இப்பாடலில் பாலை நிலத்தின் நீரற்ற தன்மையினையும், அந்நிலத்தில் வாழும் மக்கள் இடைவிடாமல் வேட்டையாடும் தொழிலைச் செய்கின்றவா் என்பதனையும் விளக்குகிறது.

    இவ்வாறாகப் பாலை நிலத்தின் தன்மையினைக் கூறும் பாலைப் பாடல்கள், புலவா்களோ, அந்நிலத்தின் வழியாகச் சென்று வந்தவா்களோ அந்நிலத்தின் தன்மையைக் கூறுவது போன்ற பாடல்கள் இல்லை.  தலைவன் பொருளீட்டப் பிரிவதும், அவன் பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துவதுமாக அமையும் பாலைப் பாடல்களில், தலைவன் பிரிந்த வழி இவ்வாறெல்லாம் இருக்குமெனத் தலைவி நினைப்பதாகவே பல பாடல்கள் அமைந்திருக்கின்றன.

    இலக்கியங்களில் இன்பியல் நிகழ்வைக் காட்டிலும் துன்பியல் நிகழ்வே முதன்மையிடத்தைப் பெறுகின்ற நிலையில், பிரிவைப் பற்றிப் புனையும் பாடல்கள் அப்பிரிவுத் துன்பத்தை மிகுவிப்பதற்காக வேண்டி மிகுவருணனை கொண்டிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.  குறிப்பாக, இந்நில வருணனை புனையும் பல பாடல்கள், ‘அக்கொடிய நிலத்தின் வழியாகச் செல்வோர் ஆறலைக் கள்வரிடமிருந்து மீள்வது அரிது’ என்ற கருத்தினைப் புனைகின்றன.  இவ்வாறான வருணனை யாவுமே இக்காலச் சிறுகதை, நாவல் போன்று அக்காலத்தில் தோன்றிய உயா் கற்பனையே ஆகும்.  ‘பாலை நிலம் வறண்ட தன்மையால் அமைந்திருக்கலாம்,  அந்நிலத்தின் வழியாகச் செல்வோர்க்குத் தாகம் தீா்க்கத் தண்ணீரற்ற நிலை நிலவி இருக்கலாம், வறட்சியால் நீரற்ற நிலை நிலவியதால் எவ்வகையான விளைச்சலுமின்றித் தங்களின் உணவுத் தேவைக்காக வழிப்பறி செய்திருக்கலாமே தவிர, கொலை செய்தனா் என்பது சிந்திக்க வேண்டிய  கருத்தாக இருக்கிறது.

    நீர் நிலைகள்

    பாலை நிலத்தின் நீா் நிலைகளைக் குறிப்பிடும் பாடல்கள் பொய்த்துப் போன காட்டாற்றையும், வற்றிய சுனையையுமே குறிப்பிடுகின்றன. அந்நிலத்தில்  வாழ்கின்ற மக்களும், விலங்குகளும் தாகம் தீா்க்க மரப்பட்டைகளையும், வேனிற் காலத்தில் விளையும் நெல்லிக் கனியையும் தின்று தாகம் தீா்ப்பதாகப் பாடல்கள் புனையப்பட்டுள்ளன.

    சுனை நீர்

    காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற மக்களுக்குச் சுனை நீரே குடிநீராக இருந்திருக்கிறது. பாறைகளின் நடுவே நீா்த் தங்கும் அளவிற்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையைத் தான் சுனை என்கின்றனா்.  இவ்வாறான சுனைகள் இயற்கையாகவும் நீா்த் தேவைக்காகச் செயற்கையாகவும் அமைக்கப்பட்டிருக்கலாம்.

    பாரியின் பறம்பு மலையிலுள்ள சுனைகள், வானத்திலுள்ள விண்மீன்களையொத்தன என்பதை,

    “———————— வானத்து

    மீன் கண் அற்று, அதன் சுனையே ஆங்கு (புறம்:109:9-10)

    என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது.  வானத்திலுள்ள விண்மீனைப் போல் பாரியின் மலையில் சுனைகள் காணப்படுகின்றன என்பதனால், சுனைகள் எல்லாம் இயற்கையாக அமைந்தனவாக இருக்காது, செயற்கையாகவும் அமையப் பெற்றிருக்கும் என்பதனை உணா்த்துகிறது.

    காடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு நீர் தரும் சுனை, குளம் போன்றவை அமைந்திருந்தன என்பதை,

    சுனையெல்லாம் நீலம் மலர, சுனை சூழ்

      சினை யெலாம் செயலை மலர, காய்கனி

     உறழ நனை வெங்கை ஒள் இணர் மலர,

     மாயோன் ஒத்த இன் நிலைத்தே (பரி :15 : 30-33)

    என்ற பரிபாடலில் ‘திருமாலிருஞ் சோலை மலையின்கண் சுனையிடமெல்லாம் நீலமலா் மலரவும் சுனையைச் சுற்றி நிற்கும் அசோக மரத்தின் கிளைகளில் மலா்கள் மலரவும், காட்சிக்கினிய தோற்றத்தினை உடையதாயிற்று’ என்று கூறுவதிலிருந்து சுனைகள் குளம் போல இருந்திருக்கின்றன என்பது புலனாகிறது.

    இவ்வாறாக மழைக் காலங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கும் சுனைகள் வேனிற் வெப்பம் தோன்றியவுடன் நீர் வற்றிய சுனையாக மாறி அந்நிலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு நீர் கொடுக்காத நிலையினைப் பெற்றிருக்குமென்பதை,

    சுவைக்காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கா்

     வீழ் கடைத் திரற் காய் ஓங்குடன் தின்று

     வீசுனை சிறுநீா் குடியினா்(நற்:14:5-7)

    என்ற நற்றிணைப் பாடலில் ‘தலைவனுடன் உடன்போக்கு செய்த தலைவி பாலை நிலத்தின் வழியாகச் செல்கின்ற பொழுது, அவ்வேனிற் காலத்தில் விளையும் தன்மையுடைய நெல்லி மரத்தின் நெல்லிக்கனியைத் தின்று, வற்றிய சுனையில் உள்ள குடிநீரைக் குடித்தனா் என்று குறிப்பிடுவதிலிருந்து பாலை நிலத்திலுள்ள சுனை, பெரும்பாலும் வற்றியே காணப்படும் என்பது புலனாகிறது.

    இத்தகைய தன்மை வாய்ந்த பாலை நிலங்களில் உள்ள சுனைகள் முற்றிலுமாகக் காய்ந்து போன நிலையில் காட்டாறு ஓடிய மணற் பாதையை அகழ்ந்து அதில் கிடைக்கும் ஊறல் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தியிருக்கின்றனா்.

    மரங்கள்

    பாலை நிலங்களில் காணப்படும் மரங்கள் யாவுமே காய்ந்து போனதும், புள்ளிய நிழலைத் தருவதுமான நிலையையே பாடல்களில் புனையப் பெற்றிருக்கின்றன.  இவ்வாறாகப் புனையப்பட்ட வருணனைகள் யாவுமே பாலை நிலத்தின் தன்மையைத் தலைவன் தோழிக்கு உரைப்பதாகவும், அந்நிலத்தின் வழியாகச் செல்கின்ற தலைவனை நினைத்துத் தலைவி வருந்துவதுமாகவே காணப்படுகின்றன.

    உகாய் மரம்

    பாலைப் பாடல்களில் அதிகமாகப் பேசப்படும் இம்மரம், சாம்பல் நிறத்தினைப் போன்ற அடிப்பகுதியையும் வேனிற் காலத்திலும் நிழல் தரும் தன்மை வாய்ந்தது என்பதை, பொருளீட்டி வருவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிய இருக்கும் தலைவனுக்குத் தோழி அறிவுரை கூறுவதாக அமையும்,

    புல்லரை யுகாஅய் வரிநீழல் வதியும்

     இன்னா வடுதிறம் மிறத்தல்

     இனிதோ ———————(குறுந்:363:4-6)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் ‘பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவனே! நீவிர் செல்லும் வழியில் கொடுமையான பாலை நிலம் உள்ளது.  அந்நிலத்தில் வாழும் எருது, செவ்விய தண்டினையுடைய அறுகினது நீண்ட கொத்தைக் காத்துத் தின்று, உகாய் மரத்தின் புள்ளிய நிழலில் தங்கும் கொடிய நிலமாகும்.  ஆதலால் பொருளீட்டுதலைக் கைவிடுவாயாக’ எனக் கூறுவதாக அமையும் இப்பாடல் வரியில், இயல்பாகவே மழையென்றும், வெயிலென்றும் பாராமல் வாழும் காட்டெருது, மிகுந்த வேனிற் வெப்பத்தினைத் தாங்காமல் மர நிழலில் தங்குகின்றனவென்றும், அரிய அவ்வழியில் மரங்களெல்லாம் உலா்ந்து போன நிலையில் புள்ளி நிழலே காணப்படுமென்றும் பாலை நிலத்தின் தன்மையை விளக்குகிறது.

    கள்ளிமரம்

    இயல்பான காலங்களில் புதா்ச்செடிகள் நிறைந்து காணப்படும் காடுகள், வேனிற் காலத்தில் கள்ளிக் காடாகக் காணப்பட்டன என்பதனை,

    வள்ளிளெயிற்றுச் செந்நாய் வயவறு பிணவிற்

     கள்ளியங் கடத்திடைக் கேழல் பார்க்கும்(ஐங்:323:11-21)

    என்ற ஐங்குறுநூற்று அடிகளில் ‘கூரிய பற்களையுடைய செந்நாய், கருவுற்றிருக்கும் பெண் நாய்க்கு ஊன் வழங்குதற்காகக் கள்ளிக் காட்டினூடே பதுங்கிக் கிடந்து பன்றியின் வரவினை எதிர்பார்க்கும்’ என்று கூறுவதிலிருந்து கள்ளி மரங்கள் நிறைந்த காடாக வேனிற்காலத்துப் பாலை நிலம் விளங்கியது என்பதனை உணர முடிகிறது.

    வெட்பாலை மரம்

    கள்ளிக்காடும், புள்ளி நிழலும், நீரற்ற நிலையுமாய் விளங்கும் பாலை நிலத்தில், மழைக் காலங்களில் பெய்த மழைநீரைத் தண்டுப்பகுதியில் சேகரித்து வைக்கும் தன்மையனவாக விளங்கும் வெட்பாலை மரம், வேனிற் காலத்தில் வெண்மையான பூக்களைப் பூக்கும் தன்மை வாய்ந்ததாகும். வேனிற் காலத்து நீரற்ற நிலையில், அந்நிலத்தில் வாழ்ந்த விலங்குகள், இம்மரத்தின் தண்ணீர் நிறைந்த தண்டுப்பகுதியைத் தின்று தாகம் தணிக்கும் என்பதை,

    “———————- வள் உதிர்ப்

     பிடி பிறந்திட்ட நார்இல் வெண்கொட்டுக்

     கொடிறு போல் காய வால் இணர்ப்பாலை(நற்:107:1-3)

    என்ற நற்றிணை அடிகளில், பெரிய நகத்தினையுடைய பெண்யானை, நீர் வேட்கையின் காரணமாகப் பாலை மரத்தின் பட்டையை உரித்துத் தின்றதால் நாரில்லாத வெண்மையான கிளைகளையுடைய இம்மரம், குரடுபோன்ற காய்களை உடையது என்பதனை விளக்குகிறது.

    குரடு போன்ற, கனியாகும் தன்மை பெறாத இம்மரக்காய்கள் காய்ந்து வெடிக்கும் தன்மையவாகும் என்பதனை,

    “————————– இலை தீர் நெற்றம்

    கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்(நற்:107:4-5)

    என்ற நற்றிணைப் பாடலடிகள் விளக்குகிறது.

     இருப்பை மரம்

    பாலை நிலப் பாடல்களில் குறிப்பிடப்படும் மரங்களில் இவையும் ஒன்று.  இம்மரம் வேனிற்காலத்தில் பூக்கும் என்பதனை,

    கான விருப்பை வெனல் வெண்பூ

    வளிபொரு நெடுஞ்சினை யுகுத்தலின் ஆர்கழல்பு

     களிறுவழங்கு சிறுநெறி புதையும் (குறுந்:329:1-3)

    என்ற குறுந்தொகை அடிகளில் ‘வேனிற் காலத்தில் வௌ்ளிய மலரினைப் பூக்கும் இருப்பை மரம், சூறாவளிக் காற்று வீசுதலால் பூக்களை உதிர்க்கும். அவ்வாறு உதிர்ந்த பூக்கள் யானைகள் செல்லும் சிறுவழியை மறைக்குமென்று

    கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுதின்,

    வில்லோர் தூணி வீங்கப் பெய்த

    அம்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை

    செப்பு அடா; அன்ன தீம் புழல் தய்வாய்

    உழுது காண் துறைய ஆகி, சூர் சுழல்பு

    ஆலி வானின் காலொடு பாறி

    துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்

    நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பார்க்கும் (அகம்:9:1-9)

    அகநானூற்றுப் பாடலடிகளில் ‘கொல்லும் தொழிலில் சிறந்ததும், கூா்மையானதும், குறும் புழுகு எனப் பெயா் கொண்டதும் வில்வீரா்களின் அம்பறாத் துணிகளில் மிகுதியாக இட்டு வைக்கப்படுவதுமாகிய குப்பியின் நுனிகளைப் போன்ற இருப்பை மரங்களின் மொட்டுகள் அரும்பின் செப்புத் தகடுகள் போன்ற அம்மரங்களின் சிவந்த தளிர்களெல்லாம் நெய்யைப் போன்ற வெண்மையாகக் காணப்படும் மலா்கள், வேனிற் காற்று வீசுவதால் மரக்கிளையிலிருந்து உதிர்ந்து பவளம் போன்ற சிவந்த மேடாகிய வழிகளில் வீழ்ந்து கிடப்பது குருதி மீது கொழுப்பு பரந்து கிடப்பது போல் காணப்படும்’ என்று கூறுவதிலிருந்து இம்மரம் வேனிற் காலத்தில் பூக்கும் தன்மையது என்பது புலனாகிறது.

    மரா மரம்

    குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தில் காணப்படும் கடம்ப மரமென்று அழைக்கப்படும் மரா மரம் வேனிற் காலத்தில் பூக்கும் தன்மையினைப் பெற்றதாகும்.  இம்மரம் வெண்மை பூவினையும், சிவந்த பூவினையும் பூக்கும் இரு வகை மரமாகும்.  வௌ்ளிய மலரினைப் பூப்பது வெண் கடம்பமென்றும், சிவந்த மலரினைப் பூப்பது செங்கடம்பமென்றும் அழைப்பர். மலையில் வாழ்கின்ற மக்கள் இம்மரத்தில் தெய்வம் இருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர்.  இதனை,

    மன்ற மரா அத்த பெஎமுதிர் கடவுள்

     கொடியோர்த் தெறுஉ மென்ப (குறுந்:87:1-2)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகள், ‘பொதுவிடத்திலிருக்கும் மராமரத்தில், கொடியோரைக் கொல்வதற்காக இறைவன் தங்கியிருக்கிறானென்று நம்பிக்கை கொண்டிருந்த குறிஞ்சி நில மக்கள், இம்மரத்தினடியில் மேடையிட்டு மன்றமாகக் கொண்டு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்’ எனக் கூறுகிறது.

    யா மரம்

    வெட்பாலை மரத்தினைப் போன்றே மழைக் காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரைத் தண்டுப்பகுதியில் சேமித்து வைக்கும் இயல்பினைப் பெற்ற இம்மரம், நெடுங்காலம் நிலைத்திருக்கும் வைரம் பாய்ந்த மரமாக விளங்கியது என்பதை,

    பொத்தில் காழ வத்த யா அத்துப்

    பொரியரை முழுமுதல் உருவக் குத்தி(குறுந்:255:1-2)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

    இம்மரப்பட்டைகள் வேனிற் காலத்தில் காய்ந்து போகாமல் நீா்த்தன்மைப் பெற்றிருப்பதால், யானைகள் இம்மரப் பட்டையைத் தின்று தாகம் தணிக்கும் என்பதை,

    பிடிபசி அளைஇய பெருங்கை வேழம்

    மென்சினை யாஅம் பொளிக்கும்(குறுந்:37:2-3)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் ‘பெண்யானையினது பசியைப் போக்குவதற்காகப் பெரிய துதிக்கையுடைய ஆண்யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்பிடிக்குக் கொடுத்து தாகத்தைத் தணிக்குமென விளக்குகிறது.

    குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம் பாலையாதலால், இவ்விரண்டு நிலங்களில் உள்ள அனைத்து மரங்களுமே பாலை நிலத்திற்குரிய மரங்களாகக் கொள்ளாமல், அவ்வேனில் வெப்பத்தினைத் தாங்காமல் மாய்ந்த மரங்களை விடுத்து, வெம்மையினைத் தாங்கி, புள்ளி நிழலையும் வரி நிழலையும் தரும் ஒருசில மரங்களைப் பற்றியே பாலைத் திணைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.  இவ்வாறாகப் பாலைத் திணைப் பாடல்களில் குறிப்பிடும் மரங்கள் யாவுமே வேனிற் காலத்து மலரும் தன்மை வாய்ந்தவையாகவே இருக்கின்றன.

    பறவைகள்   

    மரங்களின் நிலையைப் போன்றே, பல்வேறு வகையான பறவைகள் குறிஞ்சியிலும், முல்லையிலும் காணப்பட்டாலும், அவ்விரண்டு நிலங்களும் திரிந்த நிலமான பாலை நிலத்திற்குப் பறவைகளாகக் கணந்துள், எழால், பருந்து, வங்கா, புறா போன்றவற்றைக் குறிப்பிடுகின்றனா்.  மற்ற பறவைகளைக் குறிப்பிடாமல் இப்பறவைகளை மட்டும் குறிப்பிட்டமைக்குக் காரணம் வேனிற் வெப்பத்தினைத் தாங்கும் தன்மையைப் பெற்றமையாக இப்பறவைகள் விளங்கியமையே அதற்குக் காரணமாகும்.

    கணந்துள்

    [கணந்துள்–ஆள்காட்டி (Lapwing) – http://www.vallamai.com/?p=81865]

    பாலை நிலத்தில் வாழும் இப்பறவை நீண்ட கால்களையும் ஓங்கிய குரலெழுப்பும் இயல்புடையதாக இருந்தது என்பதை,

    பார்வை வேட்டுவன் படுவலை வொரிஇ

    நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ் விளி

     சுரம் செல் கொடியா் கதுமென இசைக்கும்(நற்:212:1-3)

    என்ற நற்றிணைப் பாடலடிகளில், ‘பாலை நிலத்தில் முயல் வேட்டைக்காகக் கட்டிய வலையைக் கண்டு நெடிய காலையுடைய கணந்துள் பறவை அச்சமுற்று மிகுந்த ஒலியெழுப்பும்.  அவ்வாறு கணந்துள் பறவைகள் கத்தும் ஓசை, பாலை நிலத்தின் வழியாகச் செல்லும் கூத்தா்கள் வழிச் செல்லும் வருத்தம் புலப்படாதவாறு திடீரென இசைக்கும் யாழிசையுடன் சோ்ந்து ஒத்து ஒலிக்கும்’ என்று கூறுவதில் கணத்துள் பறவை நீண்ட காலினையும் ஓங்கிய குரலையும் உடையது என்பது விளங்குகிறது.

    கொடிய தன்மை வாய்ந்த பாலை நிலத்தின் வழியாகச் செல்வோர், இப்பறவைகள் கத்துவதைக் கேட்டவுடன் இப்பகுதியில் ஆறலைக் கள்வா்கள் இருக்கின்றனரென அறிவா் என்பதை,

    நெடுங்காற் கணந்துள் ஆளறி வறீஇ

    ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்(குறுந்:350:5-6)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

    பருந்து

    பாலை நிலத்தில் வாழும் பறவைகளுள் ஒன்றான பருந்து, வானளாவி பறக்கும் தன்மை வாய்ந்தது.  நுண்ணிய பார்வையும் கூரிய வாயையுமுடைய இப்பறவை, நிணத்தினையே விரும்பி உண்பது. ‘ஆறலைக் கள்வா்களால் கொலை செய்யப்பட்ட வழிப்போக்கரின் நாறும் புலாலை விரும்பியுண்ணும் சிவந்த காதுகளையுடைய ஆண் பருந்து, நெருங்கிய தன் சுற்றத்தினை அழைத்துண்ணும்’ என்பதனை,

    படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி

     எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்(அகம்:161:5-6)

    என்ற அகநானூற்று பாடல் வரிகள் விளக்குகின்றன.

    பாலை நிலத்து ஆறலைக் கள்வா் போன்ற கொடிய தன்மை வாய்ந்த இப்பறவை உயா்ந்த மரக்கிளையில் கூடுகட்டி, முட்டை ஈன்று அக்கூட்டைச் சுற்றி வரும் பெட்டைப் பறவைக்கு, ஆண்பறவை இரையாகக் குடிகளில் வளா்க்கப்படும் கோழிக் குஞ்சுகளையும், சிறு குருவிகளையும் எலிகளையும் கொண்டு வரும் கொடிய பறவையாக இருக்கிறது.

    வங்கா

    பாலை நிலத்தில் வாழும் இப்பறவை, சிவந்த கால்களையும் புல்லாங்குழலின் ஓசையைப் போன்ற குரலையும் உடைய பறவை என்பதை,

    வங்காக் கடந்த செங்காற் பேடை

      எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது

     குழலிசைக் குரல் குறும்பல அகவும்(குறுந்:153:1-3)

    என்ற குறுந்தொகை அடிகளில் ‘ஆண் வங்காப் பறவை இரை தேடுவதற்காகச் சென்றுவிட்ட பொழுது, தனித்திருக்கும் சிவந்த கால்களையுடைய பெண் வங்கா, புல்லூறு என்னும் பறவை தன்னை இரையாகக் கொள்வதற்கு நெருங்கி வருவதைக் கண்டு தம்முடைய கணவனாகிய ஆண் பறவையை வேய்ங்குழல் போன்ற குரலினால் அழைக்கும்’ என்று கூறுவதிலிருந்து இப்பறவை சிவந்த கால்களையும், வேய்ங்குழல் போன்ற குரலினை உடையதுவென்றும், புல்லூறு என்னும் ஒருவகைப் பறவைக்கு அஞ்சி வாழும் இயல்பினது என்றும் உணர முடிகிறது.

    எழால்

    புல்லூறு என்னும் எழால் பறவையும் பாலை நிலத்தில் வாழ்ந்திருக்கிறது.  இப்பறவையைப் பற்றித் தொல்காப்பியர்,

    மயிலு மெழாஅலும் பயிலத் தோன்றும் (தொல்.பொருள்.மரபு:589)

    என்ற நூற்பாவில் ‘ஆண்மயிலையும், ஆண் எழாலையும் போத்து என்று கூறப்பெறும்’ என்று கூறுவதிலிருந்து இப்பறவை மயிலைப் போன்ற பெரிய பறவையாக இருக்குமென உணர வைக்கிறது.

    புறா

    பாலை நிலப் பாடல்களில் அதிகப் புலவா்களால் பாடப்பெற்ற பறவையான புறா, குறுகிய கால்களையும் சாம்பல் நிறம் போன்ற சிறகுகளையும் உடையது.  வறட்சிக் காலங்களில் புலா்ந்த நிலத்திலுள்ள பொரிந்த தானியங்களைக் கொத்தித் தின்னும் தன்மை வாய்ந்தது.  வேனிற் காலத்திலும் திரண்டிருக்கும் கள்ளிமரத்தில் கூடுகட்டி வெண்மையான முட்டை ஈனுவது என்பதை,

    “—————————– பாம்பின்

      உரிநிமிர்ந் தன்ன வுருப்பவிர் அமையத்து

      இரைவேட்டு எழுந்த சேவல் உள்ளிப்

      பொறிமயிர் எருத்தில் குறுநடைப் பேடை

      பொரிகாற் கள்ளி விரிகா யங்கட்டுத்

      தயங்க விருந்து புலம்பக் கூஉம்(குறுந்:154:1-6)

    என்ற பாடலில் ‘பாம்பானது உரி மேலெழுந்தாற் போன்ற கானல் விளங்குகின்ற நண்பகற்காலத்தில், இரை தேடுவதற்காக மேலெழுந்து பறந்து சென்ற ஆண் புறாவை நினைத்து, முட்டை ஈன்ற புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுக அடியிடும் நடையினையுடையதுமான பெண் புறா, பொரிந்த அடியையுடைய கள்ளி மரத்தில் வருந்திக் கொண்டிருக்குமென்று கூறுவதிலிருந்து, புறா கள்ளி மரத்தில் கூடுகட்டி வாழும் பறவை என்பது விளங்குகிறது.

    பாலை நிலங்களில் காணப்படும் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் சங்கப் பாடல்கள் யாவுமே, தலைவியை விட்டுப் பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன், அந்நிலத்தில் காணப்படும் பறவைகளின் அன்புப் பிணைப்பினைக் கண்டு வருந்துவதாகவே அமைந்திருக்கின்றன.

    விலங்குகள்

    சங்க இலக்கியப் பாலைப் பாடல்களில் பாலை நிலத்தில் வாழும் விலங்காக, வலிமை இழந்த யானை, வலிமையிழந்த புலி, வலிமையிழந்த செந்நாய், கரடி போன்றவற்றையே குறிப்பிடுகின்றனர்.

    நிலம் திரியாக் காலங்களில் வலிமை வாய்ந்தவையாக இருக்கும் இவ்விலங்குகள், வேனிற் வெப்பத்தினால் காடழிந்த நிலையில் தேவையான இரை கிடைக்காததால் இவ்விலங்குகள் வலிமையிழந்து காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றன.

    யானை

    கரிய நிறத்தினையுடைய யானை, மலையில் வாழும் விலங்கினங்களுள் ஒன்று.  மலைகளில் விளைகின்ற தினையினை உண்ணுதலைக் காட்டிலும் மிதித்தலையே மிகுதியாகக் கொண்டிருக்கும் யானை, வேனிற் காலத்தில் புழுதிக் காடாகக் கிடக்கும் பாலை நிலத்தில் தாகம் தீர்க்கத் தண்ணீரின்றி கலங்கிய நீரை உண்ணுமென்பதை,

    துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

     பிடி ஊட்டி பின் உண்ணும்  களிறு(கலி:11:8-9)

    என்ற கலித்தொகைப் பாடலடிகளில் ‘துடிபோன்ற அடியினையுடைய ஆண்யானை, நீரற்ற பாலை நிலத்திலுள்ள கலங்கிய நீரைத் தான் உண்ணாமல் தன் பிடிக்குக் கொடுக்குமென்று கூறுவதிலிருந்து பாலை நிலத்தில் யானைகள் இருந்தன என்பது விளங்குகிறது.

    செந்நாய்

    பாலை நிலத்தில் வாழும் விலங்குகளை வேட்டையாடும் தன்மை வாய்ந்த செந்நாய், பசிய கண்களையும் நாய் போன்ற உருவமைப்பும் உடையது.  இத்தகைய கொடுமைத் தன்மை வாய்ந்த செந்நாயையும் நன்நாயாகப் புனைந்திருக்கும்,

    ஈா்ம்பிணவு புணா்ந்த செந்நாய் ஏற்றை

     மறியுடைய மான்பினை கொள்ளாது கழிய

     மரிய சுரன் வந்தனரே” (ஐங்:354:1-3)

    என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் ‘அன்புமிக்க நெஞ்சையுடைய பெண் நாயைப் புணா்ந்த செந்நாய், குட்டிகளையுடைய பெண்மானை இரக்கங் காரணமாக இரையாக வேட்டங்கொள்ளாமல் விட்டுச் செல்லும் பாலை நிலம்’ என்று கூறுவதில், பாலை நிலத்தில் செந்நாய் என்கின்ற ஒருவகை விலங்கு, மானைக் கொல்லும் தன்மையினவாக இருந்திருக்கிறது என்பதனை உணர முடிகிறது.

    புலி

    மலைகளில் வாழும் இவ்விலங்கு, யானையைத் தாக்குதலும், யானையால் தாக்கப்பட்டு வலி சோ்தலும் உண்டு.  யானை, செந்நாய், மரையினம் முதலியவற்றைக் கொன்று உண்ணும் கொடிய புலிக்கு உடலில் வளைந்த கோடும், கண்களில் செவ்விய நிறமும் உடையது.  இவ்விலங்கு நின்றபடியே இருபக்க நிகழ்வைப் பார்க்கும் தன்மை வாய்ந்தது.  இத்தகைய கொடுமைத் தன்மை வாய்ந்த இவ்விலங்கு, தான் கொன்ற விலங்குகளை மலைக் குகையிலே இட்டு வைத்திருந்ததென்பதை,

    ஒலிகழை நிவந்த வோங்கமலைச் சாரல்

     புலிபுகா விறுத்த புலவுநாறு கல்லளை

     ஆறுசென் மாக்கள் சேக்கும்

    கோடுயா பிறங்கன் மலை(குறுந்:253:5-8)

    என்ற குறுந்தொகைப் பாடலில், ‘ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளா்ந்த மலைப்பக்கத்தில், புலி தனக்குரிய உணவைச் சேகரித்து வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகையினிடத்து, வழிப்போக்கா்கள் தங்குவா்’ என்று கூறுவதில் ‘வேட்டையாடுதலில் வீரமிக்க புலி, தான் கொல்லும் விலங்கு இடப்பக்கம் விழுந்தால், அவ்விலங்கின் நிணத்தைத் தின்னுதலைத் துறக்கும்.  அத்தகைய தன்மை வாய்ந்த புலி வேனிற்காலத்தின் வறட்சியினால் கிடைக்கின்ற நிணத்தினைக் கற்குகையில் சேகரித்து வைத்து உண்ணுமெனப் பாலை நிலத்தில் வாழும் புலியின் நிலையினைக் குறிப்பிடுகின்றது.

    இவ்வாறாகக் கூறும் விலங்கின் நிலையாவுமே பாலை நிலத்தின் வறட்சியினை உணா்த்துவதாகவே அமைகிறது.

    மக்கள்

    பாலை நிலத்தில் வாழும் மக்கள் எயினா், எயிற்றியா், மறவா், மறத்தியா் என்று இலக்கண நூலாரும், உரையாசிரியா்களும் கூறுகின்றனா்.  இக்கருத்தினை ஏற்கும் வண்ணமாகப் பல சங்க இலக்கியப் பாடல்களில் எயினா், மறவா் என்னும் பெயா்க் குறிப்பு காணப்படுகிறது.

    கொடுவில் எயினா் குறும்பிற்கு ஊக்கும்

     கடுவினை மறவா் வில்லிடத் தொலைந்தோர்

     படுபிணம் கவரும் பாழ்படு நனந்தலை(அகம்:319:3-5)

    கொடுவில் எயினா் கோட்சுரம் படர(அகம்:79:15)

    என்ற அகநானூற்று அடிகள், ‘பாலை நிலமக்கள் எயினா், மறவா்’ என்பதனை உணர்த்துகின்றன.

    வேனிற் காலத்தில் மட்டும் பாலையாகக் காட்சி தரும் பாலை நிலத்தில், எயினா் எயிற்றியா் என்ற குடி நிலைத்திருந்தது என்பது ஏற்கத்தக்கதாக இல்லை.  இருப்பினும், சங்க இலக்கியங்களில் எயினா் பாலை நிலத்தில் வாழ்ந்தனா் என்ற குறிப்பு கிடைக்கிறது.  இதனடிப்படையில் பாலை நில மக்களாகக் கூறப்படும் எயினா் யார்? என்ற வினா நம்மிடையே தோன்றுகிறது.  அவ்வினாவிற்குப் பதில் கூறும் வண்ணமாகச் ச. கு. கணபதி அவர்கள், “நாட்டிலே அரசரது ஆணையை மதியாமல் கொலை, கொள்ளை, திருட்டு முதலிய குற்றங்களைச் செய்தவா்களை, அரசா் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். அவ்வாறாக மன்னனால் வெளியேற்றப்பட்ட அம்மக்கள் குடும்பங்களுடன் பாலை நிலத்திலே வாழ்க்கையை நடத்தக் குடிபுகுந்தனா்,  அம்மக்களே எயினராவா்.  குற்றம் புரிந்தவா்களைக் கொலை புரியும் அக்காலத்தில், அம்மக்களை மன்னன் கொலை புரியாமல், காட்டுப் பகுதியில் வாழ வைத்ததற்குக் காரணம் போர்க் காலங்களில் போருக்குப் பயன்படுத்துவதற்காகவே” என்று குறிப்பிடுகிறார். அப்போரிலே அம்மக்கள் மாண்டு போவதாக  நம்பிக்கை.

    எயினர்

    பாலை நிலமக்களைப் பற்றிச் சங்கப் பாடல்களில் எயினரெனப் பல குறிப்பு காணப்படுவதால், காடுகளிலும் மலைகளிலுமென இரண்டு பகுதியிலும் எயினரெனும் ஒருவகை குடி வாழ்ந்திருக்கலாம்.  அக்காடும் மலையும் திரிந்து பாலையாகிய காலத்து, காடுகளில் வாழ்ந்த ஆயரை நில மக்களாகக் கொள்வதா? அல்லது மலைகளில் வாழ்ந்த குறவரை நிலமக்களாகக் கொள்வதா? என்ற குழப்பம் நிலவியிருக்கும்.  இந்நிலையில் இரண்டு குடியிலும் சிறுகுடியாக வாழ்ந்த எயினா் குடி, இரண்டு நிலங்களும் திரிந்து ஒருநிலமாகிய காலத்து அந்நிலத்திற்குரிய பெருங்குடியாகி இருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.

    குறிஞ்சியும் முல்லையுமே பாலையாதலால், குறிஞ்சியிலும், முல்லையிலுமென இரு நிலங்களிலும் வாழ்ந்த எயினரே இந்நிலத்திற்குரிய குடிமக்களாக இருந்தனா் என்பது தெளிவாகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. அகப்பொருள் விளக்கம், கோவிந்தராச முதலியார் (குறிப்புரை), திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.
    2. ஐங்குறுநூறு, சோமசுந்தரனார், பொ. வே, திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.
    3. கலித்தொகை, விசுவநாதன், அ., நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட், சென்னை.
    4. குறுந்தொகை, சண்முகம் பிள்ளை,மு., தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    5. குறுந்தொகை, சாமிநாதையர், உ. வே., அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
    6. சிலப்பதிகாரம், ஸ்ரீ சந்திரன், ஜெ., வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
    7. சிறுபாணாற்றுப்படை, சோமசுந்தரனார், பொ. வே., திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
    8. தமிழ் இலக்கிய வரலாறு, அடைக்கலசாமி, எம். ஆர்., ராசி பதிப்பகம், சென்னை.
    9. தமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம், வௌ்ளைவாரணனார், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
    10. தெய்வங்களும் சமூக மரபுகளும், பரமசிவன், தொ., நியூ செஞ்சுரி புக் அவுஸ் லிமிடேட், சென்னை.
    11. தொல்காப்பியம் – பொருளதிகாரம், இளம்பூரணனார், சாரதா பதிப்பகம், சென்னை-600014.
    12. நற்றிணை, பாலசுப்பிரமணியன், கு. வே, நியூ செஞ்சுரி புக் அவுஸ்., சென்னை.
    13. வாழ்வியல் களஞ்சியம் (தொகுதி மூன்று), பாலுசாமி, ந. (பதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம்

    ================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழ் நில அமைப்பில் பாலை நில உருவாக்கம் பற்றிய தெளிவை முன்வைக்கும் தன்மையில் இக்கட்டுரை அமைந்துள்ளது. பாலை நில உருவாக்கத்தைத் தெளிவுபடுத்த, ஆய்வாளர் தொல்காப்பியம் மற்றும் நம்பியகப்பொருள் கூறும் நிலம் சார்ந்த செய்திகள், தொல்காப்பிய உரையாசிரியர்கள், வெள்ளைவாரணர் மற்றும் இரா.மாணிக்கனார் போன்றோர் கருத்துகள், சிலப்பதிகாரம் கூறும் வரையறை ஆகிய சான்றாதாரங்களைக் கொண்டு பாலை நிலம் உருவான தன்மையை விளக்கியுள்ளார்.

    மேலும் பாலை நிலத்திற்கு வரையறை செய்யப்பட்ட உரிப்பொருள், கருப்பொருள்கள் சார்ந்து, சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகளைச் சான்றுகாட்டி  நிறுவியுள்ளார். குறிப்பாக எட்டுத் தொகையில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாலை நிலம் சார்ந்த பதிவுகளையும் பத்துப் பாட்டில் ஆற்றுப்படை நூல்களில் இடம் பெற்றுள்ள பதிவுகளையும் சான்று காட்டியுள்ளார்.

    பாலை நிலம் என்பதும் பாலை நிலமக்கள், பொருள்கள் என்பதும் தற்கால நாவல், சிறுகதைகளில் வரும் கற்பனை போன்றது என்று கூறுமிடத்து ஆய்வாளர் சற்று இன்னும் சிந்தித்துப் பதிவு செய்திருக்கலாம். இருப்பினும் ஆய்வாளர் பாலை நிலம் சார்ந்த ஒரு தெளிவை, இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்களுக்குத் தரும் தன்மையில் அமைத்திருப்பது வரவேற்கத் தக்க ஒன்று. மேலும் இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள், ஐந்திலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள பாலை நிலம் சார்ந்த பதிவுகளையும் ஆய்வில் சுட்டிக் காட்டி இருப்பின் கட்டுரைக்குச் சிறப்பு சேர்த்திருக்கும். ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

    ================================================

    Share
  • நல்லதை நாளும் செய்வோம்!

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

    மண்ணிலே நல்ல வண்ணம்
    வாழவே வேண்டு மாயின்
    கண்ணிலே கருணை கொண்டு
    கடவுளை நினைக்க வேண்டும்

    எண்ணிடும் எண்ண மெல்லாம்
    இனியதாய் இருந்தே விட்டால்
    மண்ணிலே எங்கள் வாழ்வு
    மங்கலம் தந்தே நிற்கும்

    புண்ணியம் பாவம் என்று
    எண்ணியே இருந்தே விட்டால்
    கண்ணிலே தெரியும் யாவும்
    கலக்கமாய் தெரியு மன்றோ

    பெரியவர் சென்ற பாதை
    விரிவென நிற்கும் போது
    குறுகிய பாதை சென்று
    குழம்பி நாம் நிற்கலாமா

    வறுமையில் வாழும் போதும்
    வாய்மையை மனதில் கொண்டு
    நெறியொடு வாழ்வோ மாயின்
    நிம்மதி வந்தே சேரும்

    அறிவொடு நடந்து கொள்வோம்
    அனைவர்க்கும் உதவி நிற்போம்
    பெருமைகள் வந்தே சேரும்
    பிறந்ததில் மகிழ்ச்சி கொள்வோம்

    நல்லதை நாளும் செய்வோம்
    நாளெலாம் உழைத்தே நிற்போம்
    வெல்லுவோம் என்று எண்ணி
    வெற்றியை நோக்கிச் செல்வோம் !

    Share
  • ஒவ்வொரு நாளும் நல்ல நாளே

    -தி.இரா.மீனா

     கர்நாடக இசைக்கும்,கன்னட மொழிக்கும் பெருமை சேர்ப்பதான தாச இலக்கியம் இறைவனை அடைய இசை ஓர் எளிய வழி என்பதை குறிக்கோளாகக் கொண்டது. சாதாரண மனிதனும் விரும்பி ஏற்கும் வகையில் பண்பாடு மற்றும் சமய மேன்மை சார்ந்த கருத்துக்களை தாசர்கள் கீர்த்தனைகளாக்கி தங்கள் பக்தியை வளப்படுத்தினர். ’நாதோபாசனா ’என்ற பெயரில் அமையும் இது இசை,பக்தி,இலக்கியம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது என்றாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இனம் கண்டறிய முடியாத அளவுக்குத் தமக்குள் இணைந்துள்ளது. ஹரிதாசர்களின் இலக்கியத்தைப் பொதுப் பாடல்கள், கவித்துவப் பாடல்கள், தத்துவப் பாடல்கள் என்ற மூன்று பிரிவுகளில் அடக்கலாம். ஹரிதாசர்களின் படைப்பில் மிக முக்கியமானது கீர்த்தனைகளே.இது கன்னட மொழியில் தேவர்நாமா என்றும் அழைக்கப்படுகிறது.

    சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் வேதம், உபநிடதம், புராணம் குறிப்பாக தசாவதாரம் ஆகியவற்றின் கருத்துக்களை எளிமையாக வெளிப்படுத்தியவர்கள் ஹரி தாசர்கள்.எளிய கருத்துக்களைக் கொள்கை போல இல்லாமல் இயல்பான கதைப் பாங்கில்,பேச்சு முறையில் கீர்த்தனைகள் வடிவத்தில் அமைத்ததால் மனிதர்கள் மனதில் அவை எளிதாகப் பதிந்தன. மறுக்கப்படாத சமய நிலைகளை எல்லாப் பாடல் களும்,கீர்த்தனைகளும் வெளிப்படுத்தின. வாழ்க்கையை, அதன் போக்கை மனிதன் தனக்குப் பிடித்தவகையில் தெரிந்து கொள்ள அவை உதவின. தசாவதாரக் கதைகளின் பின்னணியில் இறைவனின் தன்மையை வெளிப்படுத்தியதால் மத்ய,கூர்ம,வராக,நரசிம்ம அவதாரங்களின் கதைகளைக் படிப்பதும் ,குறிப்பாகக் கீர்த்தனைகளின் மூலம் அதை அறிந்து கொள்வதும் அன்று அவர்களுக்கு விருப்பமாக இருந்தது.வேதம் ,புராணம் ஆகியவைகள் சொன்ன கருத்துக்களை தாசர் கீர்த்தனைகள் மக்களுக்குக் காட்டின. ஹரிதாசர்கள் ஒன்றையும் விடாமல் எல்லா முக்கிய அம்சத் தையும்.கீர்த்தனைகளில் வெளிக்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


    பாடல்களில் சொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான விஷயங்கள் ஒவ்வொரு வகையில் விஷேசமானவை ;அர்த்தம் நிறைந்தவை. மனிதன் தானாகப் புரிந்து கொண்டிருக்க முடியாதவை.இதனால் தனிமனிதன் அறிவு பெற்றதோடு மட்டுமில்லாமல் வாழ்க்கைச் செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவனாகவும் வாழமுடிந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையின் திக்குத் தெரியாமல் இருந்த சாதாரண மனிதர்களுக்கு உண்மைகளின் அறிக்கைகளாக இருந்த கடினமான இலக்கிய வகைகள் புரியவில்லை.அந்நேரத்தில்ஹரிதாசர்களின் கீர்த்தனைகள் மக்களை வழிநடத்திச் செல்லும் விளக்காக இருந்தன. விறுவிறுப்பான நிலையில் சொற்றொடர்களை எளிமையான கன்னட மொழியில் வெளிப் படுத்தினர்.அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பழமொழிகள் போலக் கீர்த்தனைகளை அமைத்தனர்.எளிமை அவர்களின் அழகாகும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவையோ,துறையையோ பற்றிப் பேசவில்லை.பொதுவான பார்வையைக் கையாண்டதால் எல்லோரையும் ஈர்க்கின்ற தன்மை அந்த இலக்கியத்திற்கு இருந்தது. அகந்தை, ஆங்காரம், தந்திரம், ஆகியவைகளை ஒழித்த நிலையில் தான் அவர்கள் பாடல்களிருந்தன.மனித இனத்தைக் காப்பாற்றுவது பக்திதான் என்ற அடிப்படைத் தத்துவத்தை ஆழமாக வலி யுறுத்தியவர்கள். சாதாரண மனிதர்களோடு இவர்களுக்கிருந்த நெருங்கிய தொடர்பு வாழ்க்கையை அவர்கள் பார்வையில் தாசர்களைப் பார்க்க வைத்தது.அதனால் அவர்கள் பாடல்கள் இயற்கையாகவும், இயல்பாகவும் அமைந்து உள்ளத்தைக் கவர்ந்தன.மனித வாழ்க்கையின் குறுகிய ஆயுளைக் காட்டிப்,பொய்யான உலகத்தை வெளிப்படுத்தி இறைவனின் அருள் பெறும் போதனை நிலையில் அவர்கள் பாடல்கள் அமைந்தன. ஒவ்வொரு ஹரிதாசனுக்கும் தனியான நடையிருந்தது. தாசர்களில் புகழ்பெற்றவரான புரந்தரதாசர் சொற்றொடர்களையும்,உவமைகளையும பயன்படுத்தினார்.பல தத்துவக் கொள்கைகளும் கூட அவரால் எல்லோருக்கும் புரியும்படி எளிதில் சொல்லப்பட்டுள்ளன.

    தாசர்களின் தலைவனாகப் போற்றப்படும் புரந்தரதாசன் செல்வப் பரம்பரையில் வந்தவர். ஒரு கட்டத்தில் எல்லாவற்றிலிருந்தும் விலகி விஷ்ணு பக்தனானார்.உலக வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து பல்வேறு சூழ்நிலைகளில் பழகியதால் அவர் கீர்த்தனைகளின் அணுகுமுறை நகைச்சுவை,கண்டனம்,சமூக விமர்சனம், அறிவுரை என எல்லாவற்றின் கலவையாகவும் அமைந்தது. நாமமகிமை,துதி,நிவேதனம், கிருஷ்ணலீலை, சமூக விமர்சனம்,அறிவுரை என்ற பிரிவுகளில் அவர் கீர்த்தனைகள் அடங்குகின்றன.’வயிற்று வைராக்கியம் ”என்ற கீர்த்தனை சமூக வாழ்க்கையின் குறைபாடுகளை பிரதிபலிக்கும் கீர்த்தனையாகும் ”வைகறையில் எழுந்து குளிரில் குளித்துவிட்டு மதம்,மாச்சர்யம்,கோபம் ஆகியவைகளோடு வாழ்தல்..நாவில் மந்திரம் சொல்லிக் கொண்டு மனதை அலையவிட்டு வெளியில் பரம நல்லவனாகக் காட்டிக் கொள்ளுதல்..மேடை வேடம் போட்டு வாழும் சோற்று ஞானம் “என்று சமூகத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டிச் சொல்கிறார்.’மடி மடி என்று [ ’ மடிமடியென்து’ ] என்ற பாடலில் ஈரஆடைகளை அணிந்து உலகத்தவருக்குத் தன்னைக் காட்டிக் கொள்வது மடியாகாது.மனதிலிருக்கும் கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவைகளைஒழிப்பதுதான் உண்மையான மடி, என்கிறார். வெளிப்புறச் செயல்களுக்கு அதிக மதிப்புத் தந்து மற்றவர்கள் முன்பு தன்னைக்காட்டிக் கொள்ளும் தன்மை மனிதர்களிடம் அதிகமாகவுள்ளதுள்ளது. அது ஒழியவேண்டும்.புரந்தரதாசனின் காலகட்டத்தில் இருந்த சமூக அவலம் இன்று நாம் வாழ்கிற சூழலிலும்உள்ளது என்பது தான் அவலம் அநீதி யையும், ஆடம்பரத்தையும் பழிப்பதான பார்வையிலும் சில கீர்த்தனைகள் உண்டு.”சிரிப்புத்தான் வருகிறது.[’நகுவே பர்த்திதே நநகே]உடல் தண்ணீருக்குள் இருந்து பயன் என்ன?வேம்பினை வெல்லத்தில் இணைப்பதால் என்ன பயன்?புலையன் நம்மிடையிலன்றி வெளியிலா இருக்கிறான் உடல் அழுக்கை கழுவ முடியும்போது மனஅழுக்கைக் கழுவ முடியாதா?”என்பன போன்ற கருத்துக்கள் குறிப்பிடத் தக்கவை.சமூக போதனைக்குச் சான்றாக “தருமமே ஜயம்”[தர்மவே ஜயா ’] என்ற கீர்த்தனை அமைகிறது.”நஞ்சு கொடுத்தவனுக்கு நல்ல உணவு தர வேண்டும்: பழித்தவனைப் பாராட்ட வேண்டும்”என்ற கருத்து இன்னா செய்தவனுக்கும் நன்னயம் செய்யத் தூண்டும் வள்ளுவத்தை நினைவுபடுத்துகிறது’ இது பாக்கியம் [இது பாக்யா’] என்ற கீர்த்தனையில் “கல்லாயிருக்க வேண்டும் கடின சம்சாரத்தில்,வில்லாக வளைய வேண்டும் பெரியோரிடம்”என்ற வரி பழமொழிபோல இன்றும் எல்லோராலும் பயன்படுத்தப்படும் எளியதொடராகிறது.எதையும் எதிர்த்து நிற்கும் ஆன்மபலம் மனிதனுக்கு வேண்டும் என்ற வற்புறுத்தல் அவர் பாடல்களில் தொடர்ந்து இடம் பெறுகிறது பக்தி என்பது பல கோயில்களுக்குச் செல்வதல்ல.சரியான வாழ்க்கை முறைதான் பக்தி என்கிறார்.மண்,பொன்,பெண் மீது இருக்கும் ஆசை நீக்கப்பட வேண்டும் என்ற செய்தி சொல்லப்படும் விதம் புதுமையானதாக உள்ளது.”ஆசைகளை நீக்கும் படி நேரில் உபதேசம் செய்வது இயல்பு. ஆனால் திருமால் தன் கையால் கடிதமெழுதி இவைகளை நீக்கும்படி வேண்டுகிறான்”என்ற தொனியிலான கீர்த்தனை புதுமையாக மட்டுமின்றி வியப்பையும்,கற்பனை ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. மனிதனின் உயர்வு, அவனுடைய குணம்செயல்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவைகளால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர சாதியால் தீர்மானிக்கப் படுவதில்லை என்ற ஆழமான எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தை பல பாடல்கள் காட்டுகின்றன. ஏழைகளின் உணவான ராகியைப் பாடலாக்கி ’ராகி என்ற சொல்லை ’பல்வேறு பாவனைகளில் வெளிப்படுத்தியிருக்கும் தன்மை அற்புதமானது. ஒரு வயதான மூதாட்டியிடம் தனக்கு உணவு தரும்படி விட்டலன் வேண்டுகிறான்.தன்னிடம ராகிரொட்டி மட்டுமே இருப்பதாக அவள் சொல்கிறாள்.அது தனது தேவைக்கு மேலானது என்கிறான். அது முதல் தினமும் பிச்சைக்கு வந்து ராகியையே வேண்டுகிறான்.இந்தப் பாடலின் மிகச் சிறந்த அம்சம் ’ராகி’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் விதம்தான்.”யோக்ய ராகி”,”போக்யராகி”, ”பாக்யவந்தராகி” என்று எல்லாம் இரட்டைப் பொருளில் அமைகின்றன.சான்றாக “யோக்ய +ராகி—சாப்பிடுவதற்கு ஏற்ற ராகி ,”யோக்யர்+ஆகி—கொடை கொடுப்பதற்கு தகுதியானவர், போக்யர்+ ஆகி கொடுப்பதில் அவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி “என இந்தப் பாடலுக்கு அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர்.இது அவருடைய மிகச் சிறந்த பாடலெனவும் கூறப்படுகிறது.

    “ராகி தந்தீரோ பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரோ
    அன்னதான மாடுவராகி அன்னசத்ராவணிதவாராகி
    குருகள் சேவைய மாடுவராகி
    புரந்தரவிட்டலன சேவிப்பவராகி
    போக்யராகி யோக்யராகி பாக்யவந்தராகி
    ராகி தந்தீரா பிக்ஷ்க்ஷேக்கே ராகி தந்தீரா”

    ஒவ்வொரு நாளும் நல்லநாளே.திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம் ஆகியவை பற்றியெல்லாம் மனிதர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.கடவுளை வழிபட்டால் எல்லா நாளும் நல்லநாளாகும் என்ற மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையான முறையில் “இந்த தினம் சுபதினம்[’ஈ தின சுபதின ’] இந்த நட்சத்திரம் சுபநட்சத்திரம் “என்ற பாடல் காட்டுகிறது.“மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது வானவில்லைப் போல பல்நிறம் கொண்டதாக, கவர்ச்சி யானதாகத் தெரிகிறது.ஆனால் அவையெல்லாம் மாயையே என்பதை அவர்களுக்கு நினைவு படுத்தும் வகையில் .”யாருக்குக் கவலை” என்ற பாடலில் [’யாரிகே யாரெந்து ’] எந்த நேரமும் உடையும் நீர்க்குமிழியைப் போல உள்ள வாழ்க்கையில் யாரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். யானைகள்,குதிரைகள், கஜானா, நாடு,கௌரவம், புனிதமான உறவுகள்,நட்பு எல்லாம் மாயையும் ,குறைவான ஆயுளும் உடையவைநிரந்தமற்ற தன்மையை உணர வைப்பது அவர் கருத்தாகிறது.என்ன சாதியாக ,இருந்தாலும மனித நேயத்தைப் புரிந்து கொள்ளா விட்டால் என்ன பயன் .வெவ்வேறு நிறமுடைய பசுக்கள் தரும் பாலும், வெவ்வேறு வடிவங்கள் கொண்ட கரும்பின் சுவையும் வித்தியாசப்பட முடியுமா? தோற்றத்திலிருக்கும் வேறுபாடு யாருடைய தன்மையையும், பக்குவத்தையும் மாற்ற முடியாது என்பது அவரது கொள்கை.
    தீண்டாமை அவரால் பொறுக்க முடியாததாகிறது.பிறந்த சாதியை வைத்து மனிதன் தீண்டத்தகாதவன் என்று முத்திரை குத்துவது சரியல்ல.அவன் செயல்பாடுகள்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.தீண்டாமை என்பது தொடுவுணர்ச்சியை முன் வைத்து அமையும் பொருளல்ல என்றொரு பாடல் சொல்கிறது. [ ’ஹொலையா ஹொரகிதனே ’} சுயஒழுக்கமில்லாதிருப்பது, செல்வனாக இருந்து கொண்டு பொருள்தர மறுப்பது, மென்மையான பேச்சைப் பயன்படுத்தத் தெரியாமலிருப்பது இறுதியில் புரந்தர விட் டலனை வணங்காமலிருப்பது ஆகியவைகள்தான் அவர் பார்வையில் தீண்டாமையாகும். புரந்தரதாசனின் அக்கருத்து நம் சமூகத்தின் தீண்டாமைக்குத் தரும் அடியாகும்.புரந்தர விட்டல என்பது எந்தக் கடவுளுக்கும் பயன்படுத்தப்படும் பெயராகும் என்ற கருத்தையும் அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

    புரந்தரதாசர் சிறந்த கணக்குப்பிள்ளையும் கூட.நல்ல செயல்களைச் செய்யும் போதும்,கெட்ட செயல்களைச் செய்யும் போதும் ஒருவன் தன் மனதையே தணிக்கை செய்து கொள்ளவேண்டும் மனம்தான் தணிக்கைக் கருவி என்கிறார்.”மனதைச் சோதித்துக் கொள்” [”மனவ சோதிசபேக்கு” ] என்ற பாடல் இதைக் காட்டுகிறது பாடல் இப்படித் தொடங்குகிறது.”எல்லா ஹரிதாசர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை அழைப்பு. நேரம் குறைந்துவிட்டது. நூறுஆண்டுகள் ஆயுளாக இருந்தால் ஐம்பதாண்டுகள் தூக்கத்தில் போய்விடுகிறது.மீதமுள்ள ஐம்பதாண்டுகளில் முதல் பதினைந்து ஆண்டுகள் அறிவுக் குறைவான இளமையிலும்,கடைசி இருபத்தைந்தாண்டுகள் முதுமையிலும் கழிகின்றன.இடையிலுள்ள இளமையான நிலையிலுள்ள இருபதாண்டுகள் இளரத்தம் என்பதால் மனம் அரேபியக் குதிரை போல உலகத்து ஆசைகளை நோக்கி ஓடுகிறது.இப்படி இருந்தால் எந்த நேரத்தில் கடவுளை நினைத்து வாழமுடியும்’.என்று பாடல் அமைகிறது.

    சில கருத்துக்கள் பழமொழி போல சமுதாயநலம் சார்ந்து அமைகின்றன.”வயது முதிர்ந்தவனோடு திருமண உறவுக்கு எதிர்ப்பு, இரு மனைவியர் வாழ்க்கைக்கு எதிர்ப்பு, கீழ்ச்சாதி வந்தான் என்ற பேச்சுக்கு எதிர்ப்பு ” எனச் சமூக அவலங்களை அகற்ற முயல்கிறார். ’லம்போதர லகுமிரா’, ’கஜவதனா பேடுவே’,’பாக்யதலட்சுமி பாரம்மா ”,என்று எல்லோரும் அறிந்த சில பாடல்கள் அவருடைய எளிமை நடைக்கும், எவரும் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் சான்றுகளாகும் புரந்தரதாசருக்குப் பின்வந்தவர்கள் அவர் மரபையே பின்பற்றினர்.இன்றும் அது தொடரப்படுகிறது..தியாகராஜரும் ராகம்,பாவம்,தாளம்.என்று புரந்தரதாசர் வழியைத் தொடர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ’தாசர் என்றால் புரந்தரதாசர்தான்”என்ற அடைமொழியோடு கன்னட மண்ணில் இன்றும் போற்றப்படுபவராக உள்ள அவரையும் ,கனகதாசரையும் இணைத்து ’கனக புரந்தரா’ என்ற செய்திப்படம் ஒன்று கிரீஷ் கர்னாடால் இயக்கப்பட்டுள்ளது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 3

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

    குறள் 21:

    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு

    ஒசத்தி னு படிச்ச பெருமக்களோட நூல்கள் சொல்லுதது எல்லாம் ஒலகத்து ஆசையெல்லாம் தொறந்த துறவிங்கள பத்திய பெருமையத்தான்.

    குறள் 22:

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

    ஆசையெல்லாம் விட்டவங்களோட பெருமைய அளக்குதது ஒலகத்துல செத்தவங்க எத்தன பேரு னு எண்ணுததுக்கு சமானம்.

    குறள் 23:

    இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற் றுலகு

    நல்லது கெட்டத ஆஞ்சு அறிஞ்சு பொறவு நல்லதையே செய்யற மனுசங்க தான் ஒசத்தியானவங்க.

    குறள் 24:

    உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

    கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பு இந்த அஞ்சு பொறியால விளையுத ஆசைய அதோட போக்குல உடாம மன திடங்குத அங்குசத்தால அடக்குதவன துறவறம் ங்குத நிலத்துக்குண்டான விதை மாதிரி நெனைச்சிக்கிடலாம்.

    குறள் 25:

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி

    பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி இந்த அஞ்சுபுலனால விளையுத ஆசைய அடக்கி இருக்கவனக்கு உதாரணம் சொல்லணும்னா அது வான லோகத்துல இருக்க தேவர்களோட ராசா இந்திரன் தான்.

    குறள் 26:

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்

    மத்தவங்களால செய்ய முடியாதத ஒருத்தன் செய்தாம்னா அவந்தான் ஒசந்த ஆள். அப்டி செய்யாதவன் தாழ்த்திதான்.

    குறள் 27:

    சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு

    பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி இந்த அஞ்சு புலனையும் அறிஞ்சு அத அடக்கி ஆளுதவன இந்த ஒலகம் ஒசத்தியா பேசும்.

    குறள் 28:

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்

    ஒசந்த படிப்பாளி மக்களோட பெருமைய ஒலகத்துல அழியாம வெளங்குத அவங்களோட நூல்களே காட்டிக் கொடுத்துடும்.

    குறள் 29:

    குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயுங் காத்தல் அரிது

    நல்ல குணத்த மல போல கொண்டிருக்குத பெரிய மனுசங்க கோவப்பட்டாங்கன்னா அவங்க மனசுல அந்த கோவம் ஒரு கணம் கூட நெலைச்சு நிக்காது.

    குறள் 30:

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்

    எல்லா உயிர்கிட்டயும் நேசத்தோட பாசங்காட்டுத நல்ல மனுசங்க (அறவோர்) யாரோ அவர தான் நாம அந்தணர் னு சொல்லுதோம்.

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 3

    -மேகலா இராமமூர்த்தி

    முல்லையை அடுத்து மானுடப் பெயர்ச்சி நிகழ்ந்த இடம் நிலவளம் நிறைந்த மருத நிலமாகும். நகரங்கள் முதன்முதலாய்த் தோன்றியதும் உழவுத்தொழிற்குச் சிறந்த மருதநிலத்திலேயே. உழவுத்தொழிலும், அதனால் கிடைத்த வருவாயால் ஏற்பட்ட நிலையான குடியிருப்புகளும், ஊர்ப்பெருக்கமும் நாகரிகத்தின் துரித வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தன. உழவுத் தொழிலால் வேளாண்மையும், அதுசார்ந்த பிற பக்கத் தொழில்களும், அத்தொழில் செய்வார்க்குப் போதியவுணவும், வாணிகமும் ஏற்பட்டன.

    நிலையான குடியிருப்புகளில் வாழத்தொடங்கியதாலேயே உழவனுக்குக் ’குடியானவன்’ எனும் பெயர் ஏற்பட்டது. ’இல்வாழ்வான்’ என்று வள்ளுவரால் சிறப்பிக்கப்பட்டவனும் உழவனே ஆவான். இல்வாழ்வானைக் குறிக்கும் husbondi (house-dweller) என்னும் பழ நார்வேயச் சொல்லிலிருந்து (Old Norwegian word) உழு அல்லது பயிர்செய் என்று முன்பு பொருள்பட்ட husband எனும் ஏவல் வினைச்சொல்லும், உழவனைக் குறிக்கும் husbandman எனும் பெயர்ச்சொல்லும், உழவுத்தொழிலைக் குறிக்கும் husbandry எனும் தொழிற்பெயரும், ஆங்கிலத்தில் தோன்றியிருக்கின்றன என்பது மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கருத்து.

    வளமும் வசதி வாய்ப்புகளும் பெருகிய மருதநிலத்து நகர வாழ்க்கை மாந்தர்தம் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலும் அதன் எதிர்வினையாய்ச் சில தீங்குகளையும் பயக்கத் தவறவில்லை. குறைவான உடலுழைப்பில் நிறைவான செல்வ வளம் கிட்டியதால் ஆடவரின் புலனின்ப நாட்டம் மிகுந்து அதன்பயனாய் ஒழுக்கக்கேடுகளும் மலிந்தன.

    விளைவு? வரைவின் மகளிரின் மயக்கத்திலும் முயக்கத்திலும் தம்மை மறந்து, கற்புக் கடம்பூண்ட இல்லாளைத் துறந்தனர். பரத்தையர் சேரிகளிலேயே (சேரி என்பது இழிவாய்ப் பார்க்கவும் பேசவும் படாத காலமது!) காலங்கழித்தனர்.

    நகரங்களை உருவாக்கி நாகரிகத்தை மேம்படுத்திய மருத நிலமே தனிமனித ஒழுக்கத்துக்கும் பண்பாட்டுக்கும் உலைவைக்கும் வேலையையும் செய்தது நகைமுரணே!

    இல்லக்கிழத்தியராக இருந்த பெண்டிர் தம் கணவன்மாரின் கூடாவொழுக்கத்தை ஏன் கண்டிக்கவில்லை? அவ் ஆடவரைத் ஏன் தண்டிக்கவில்லை? எனும் கேள்விகளும் இங்கு எழுவது இயல்பே. தறிகெட்டுத் திரியும் கணவன்மாரை அடக்குதல் அன்றைய பெண்டிர்க்கு அவ்வளவு சுலபமான செயலாக இல்லை என்பதே இதற்கான விடையாக அமையும்.

    அதற்கு முதற்காரணம் பெண்ணிடம் அன்று பொருளாதாரச் சுதந்தரம் இல்லை; ஆடவனை அண்டிப் பிழைக்கவேண்டிய அவலநிலையே அவளுக்கு வாய்த்திருந்தது. இரண்டாவது காரணம் கணவனைப் பகைத்துக்கொண்டு தனித்து வாழும் வாய்ப்பையோ, மற்றோர் ஆடவனைத் தன் விருப்பப்படி தேடிக்கொள்ளும் உரிமையையோ அன்றைய தமிழ்ச் சமூகம் பெண்ணுக்குத் தரவில்லை.

    இத்தகு இக்கட்டான சூழலில் குழந்தை குட்டிகளுடன் ஒரு பெண் என்ன செய்ய முடியும்…கணவனுக்கு அடங்கிப் போவதைத் தவிர! அதனால்தான் குடும்பப் பொறுப்பின்றிக் காமுகனாய் அலையும் கணவனின் அருவருக்கத்தக்க செயல்களை, குழந்தைகளின் நலன்கருதி, தாய் எனும் மனமுதிர்ச்சியோடும், பக்குவத்தோடும் அவள் பொறுத்துக்கொள்ள வேண்டியவளானாள்.

    கற்புக்கடம்பூண்ட தலைவியொருத்தி தலைவனின் கூடாவொழுக்கத்தால் நேர்ந்த கொடுமையை மறைத்துக்கொண்டு, அவன் இழிகுணத்துக்காகத் தான் நாணி, மேனி வாடியவளாய் அவனை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையைத் தோழி விதந்தோதும் சங்கப் பாடலிது.

    யாயா கியளே மாஅ யோளே
    மடைமாண் செப்பில் தமிய வைகிய
    பெய்யாப் பூவின் மெய்சா யினளே
    பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
    இனமீ னிருங்கழி யோதம் மல்குதொறும்
    கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
    தண்ணந் துறைவன் கொடுமை
    நம்முன் நாணிக் கரப்பா டும்மே
    . (குறுந்: 9 – கயமனார்)

    குடும்பப் பெண்டிரின் நிலை இவ்வாறு இரங்கத்தக்கதாயிருக்க, பரத்தையரின் நிலைகுறித்தும் நாம் ஆராயவேண்டியது அவசியமாகின்றது.

    ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் நுவலும் பரத்தை கீழ்மகள் அல்லள். ஆடலும் பாடலும் பயின்றவள்; கலைகளில் சிறந்தவள். இல்லறத்துக்கேற்ற பண்புகளும் உடையவள். தலைவியை மணந்துகொள்ளுதல்போல் பரத்தையையும் மணந்துகொள்ளும் உரிமை பெற்றவனாகத் தலைவன் இருந்தமையால் தலைவிபோல் அவளும் உரிமைபெற்றுத் திகழ்ந்தாள்; தலைவனையும் தலைவியையும் அவர்களுடைய குழந்தையையும் மதித்தொழுகும் பெற்றியோடு இருந்தாள் என்பதை மருதத் திணைச் செய்யுட்கள் புலப்படுத்துகின்றன.

    தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த தலைவனின் இளம் புதல்வனைக் கண்ட காதற் பரத்தை, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்றெண்ணியவளாய் அக்குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக்கொள்ள, அதைத் தலைவி பார்த்துவிட்டாள். அதுகண்டு நாணித் தன் காலால் நிலங்கீறி நின்றவளைக் கண்டு, ”ஏன் அஞ்சுகிறாய்? நீயும் தலைவனின் புதல்வனுக்குத் தாய்தான்!” என்று தான் அவளைப் போற்றியதாகத் தலைவனிடம் (சற்றே எள்ளல் தோன்றக்) கூறும் தலைவியைக் காண்கிறோம் சாகலாசனாரின் அகப்பாடலில்.

    …யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
    தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
    கூரெயிற் றரிவை குறுகினள் யாவரும்
    காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்
    பொலங்கலஞ் சுமந்த பூண்தாங் கிளமுலை
    வருக மாளஎன் னுயிரெனப் பெரிதுவந்து
    கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன்
    மாசில் குறுமகள் எவன்பே துற்றனை
    நீயுந் தாயை இவற்கென யான்தன்
    கரைய வந்து விரைவனென் கவைஇக்
    களவுடம் படுநரில் கவிழ்ந்துநிலங் கிளையா
    நாணி நின்றோள் நிலைகண் டியானும்
    பேணினென் அல்லனோ மகிழ்ந…  (அகம்: 16 – சாகலாசனார்)

    இவ்வாறு பரத்தையர் தொடர்பு மருதநில ஆடவரிடம் மிக்கிருந்தபோதினும் இக்கூடாவொழுக்கமின்றி ஒரே மனையாளுடன் உயர்வாய் வாழ்ந்த நல்லாடவரும் அங்கு இல்லாமலில்லை.

    ”…தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
    பல்லிருங் கூந்தன் மகளிர்
    ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே.”
     (புறம் – 73) என்று ஒழுக்க வஞ்சினம் கூறிய சோழன் நலங்கிள்ளியும்,

    ”…சிறந்த
    பேரமர் உண்கண் இவளின் பிரிக…” (புறம் – 71)
    என்று மனைவி மீதான காதலைப் பகிரங்கமாக வெளிப்படுத்திய பூதப்பாண்டியனும் இதற்குச் சான்றுகள்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. புறநானூறு மூலமும், ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை உரையும்.
    2. அகநானூறு மூலமும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையும்.
    3. ஐங்குறுநூறு – டாக்டர் உ.வே.சா. உரை
    4. குறுந்தொகை – டாக்டர் உ.வே.சா. உரை
    5. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் – பாவாணர்

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 197

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அண்ணாகண்ணன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.01.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share