-மேகலா இராமமூர்த்தி

முல்லையை அடுத்து மானுடப் பெயர்ச்சி நிகழ்ந்த இடம் நிலவளம் நிறைந்த மருத நிலமாகும். நகரங்கள் முதன்முதலாய்த் தோன்றியதும் உழவுத்தொழிற்குச் சிறந்த மருதநிலத்திலேயே. உழவுத்தொழிலும், அதனால் கிடைத்த வருவாயால் ஏற்பட்ட நிலையான குடியிருப்புகளும், ஊர்ப்பெருக்கமும் நாகரிகத்தின் துரித வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தன. உழவுத் தொழிலால் வேளாண்மையும், அதுசார்ந்த பிற பக்கத் தொழில்களும், அத்தொழில் செய்வார்க்குப் போதியவுணவும், வாணிகமும் ஏற்பட்டன.

நிலையான குடியிருப்புகளில் வாழத்தொடங்கியதாலேயே உழவனுக்குக் ’குடியானவன்’ எனும் பெயர் ஏற்பட்டது. ’இல்வாழ்வான்’ என்று வள்ளுவரால் சிறப்பிக்கப்பட்டவனும் உழவனே ஆவான். இல்வாழ்வானைக் குறிக்கும் husbondi (house-dweller) என்னும் பழ நார்வேயச் சொல்லிலிருந்து (Old Norwegian word) உழு அல்லது பயிர்செய் என்று முன்பு பொருள்பட்ட husband எனும் ஏவல் வினைச்சொல்லும், உழவனைக் குறிக்கும் husbandman எனும் பெயர்ச்சொல்லும், உழவுத்தொழிலைக் குறிக்கும் husbandry எனும் தொழிற்பெயரும், ஆங்கிலத்தில் தோன்றியிருக்கின்றன என்பது மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கருத்து.

வளமும் வசதி வாய்ப்புகளும் பெருகிய மருதநிலத்து நகர வாழ்க்கை மாந்தர்தம் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலும் அதன் எதிர்வினையாய்ச் சில தீங்குகளையும் பயக்கத் தவறவில்லை. குறைவான உடலுழைப்பில் நிறைவான செல்வ வளம் கிட்டியதால் ஆடவரின் புலனின்ப நாட்டம் மிகுந்து அதன்பயனாய் ஒழுக்கக்கேடுகளும் மலிந்தன.

விளைவு? வரைவின் மகளிரின் மயக்கத்திலும் முயக்கத்திலும் தம்மை மறந்து, கற்புக் கடம்பூண்ட இல்லாளைத் துறந்தனர். பரத்தையர் சேரிகளிலேயே (சேரி என்பது இழிவாய்ப் பார்க்கவும் பேசவும் படாத காலமது!) காலங்கழித்தனர்.

நகரங்களை உருவாக்கி நாகரிகத்தை மேம்படுத்திய மருத நிலமே தனிமனித ஒழுக்கத்துக்கும் பண்பாட்டுக்கும் உலைவைக்கும் வேலையையும் செய்தது நகைமுரணே!

இல்லக்கிழத்தியராக இருந்த பெண்டிர் தம் கணவன்மாரின் கூடாவொழுக்கத்தை ஏன் கண்டிக்கவில்லை? அவ் ஆடவரைத் ஏன் தண்டிக்கவில்லை? எனும் கேள்விகளும் இங்கு எழுவது இயல்பே. தறிகெட்டுத் திரியும் கணவன்மாரை அடக்குதல் அன்றைய பெண்டிர்க்கு அவ்வளவு சுலபமான செயலாக இல்லை என்பதே இதற்கான விடையாக அமையும்.

அதற்கு முதற்காரணம் பெண்ணிடம் அன்று பொருளாதாரச் சுதந்தரம் இல்லை; ஆடவனை அண்டிப் பிழைக்கவேண்டிய அவலநிலையே அவளுக்கு வாய்த்திருந்தது. இரண்டாவது காரணம் கணவனைப் பகைத்துக்கொண்டு தனித்து வாழும் வாய்ப்பையோ, மற்றோர் ஆடவனைத் தன் விருப்பப்படி தேடிக்கொள்ளும் உரிமையையோ அன்றைய தமிழ்ச் சமூகம் பெண்ணுக்குத் தரவில்லை.

இத்தகு இக்கட்டான சூழலில் குழந்தை குட்டிகளுடன் ஒரு பெண் என்ன செய்ய முடியும்…கணவனுக்கு அடங்கிப் போவதைத் தவிர! அதனால்தான் குடும்பப் பொறுப்பின்றிக் காமுகனாய் அலையும் கணவனின் அருவருக்கத்தக்க செயல்களை, குழந்தைகளின் நலன்கருதி, தாய் எனும் மனமுதிர்ச்சியோடும், பக்குவத்தோடும் அவள் பொறுத்துக்கொள்ள வேண்டியவளானாள்.

கற்புக்கடம்பூண்ட தலைவியொருத்தி தலைவனின் கூடாவொழுக்கத்தால் நேர்ந்த கொடுமையை மறைத்துக்கொண்டு, அவன் இழிகுணத்துக்காகத் தான் நாணி, மேனி வாடியவளாய் அவனை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையைத் தோழி விதந்தோதும் சங்கப் பாடலிது.

யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோதம் மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்முன் நாணிக் கரப்பா டும்மே
. (குறுந்: 9 – கயமனார்)

குடும்பப் பெண்டிரின் நிலை இவ்வாறு இரங்கத்தக்கதாயிருக்க, பரத்தையரின் நிலைகுறித்தும் நாம் ஆராயவேண்டியது அவசியமாகின்றது.

ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் நுவலும் பரத்தை கீழ்மகள் அல்லள். ஆடலும் பாடலும் பயின்றவள்; கலைகளில் சிறந்தவள். இல்லறத்துக்கேற்ற பண்புகளும் உடையவள். தலைவியை மணந்துகொள்ளுதல்போல் பரத்தையையும் மணந்துகொள்ளும் உரிமை பெற்றவனாகத் தலைவன் இருந்தமையால் தலைவிபோல் அவளும் உரிமைபெற்றுத் திகழ்ந்தாள்; தலைவனையும் தலைவியையும் அவர்களுடைய குழந்தையையும் மதித்தொழுகும் பெற்றியோடு இருந்தாள் என்பதை மருதத் திணைச் செய்யுட்கள் புலப்படுத்துகின்றன.

தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த தலைவனின் இளம் புதல்வனைக் கண்ட காதற் பரத்தை, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்றெண்ணியவளாய் அக்குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக்கொள்ள, அதைத் தலைவி பார்த்துவிட்டாள். அதுகண்டு நாணித் தன் காலால் நிலங்கீறி நின்றவளைக் கண்டு, ”ஏன் அஞ்சுகிறாய்? நீயும் தலைவனின் புதல்வனுக்குத் தாய்தான்!” என்று தான் அவளைப் போற்றியதாகத் தலைவனிடம் (சற்றே எள்ளல் தோன்றக்) கூறும் தலைவியைக் காண்கிறோம் சாகலாசனாரின் அகப்பாடலில்.

…யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
கூரெயிற் றரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்
பொலங்கலஞ் சுமந்த பூண்தாங் கிளமுலை
வருக மாளஎன் னுயிரெனப் பெரிதுவந்து
கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன்
மாசில் குறுமகள் எவன்பே துற்றனை
நீயுந் தாயை இவற்கென யான்தன்
கரைய வந்து விரைவனென் கவைஇக்
களவுடம் படுநரில் கவிழ்ந்துநிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணினென் அல்லனோ மகிழ்ந…  (அகம்: 16 – சாகலாசனார்)

இவ்வாறு பரத்தையர் தொடர்பு மருதநில ஆடவரிடம் மிக்கிருந்தபோதினும் இக்கூடாவொழுக்கமின்றி ஒரே மனையாளுடன் உயர்வாய் வாழ்ந்த நல்லாடவரும் அங்கு இல்லாமலில்லை.

”…தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தன் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே.”
 (புறம் – 73) என்று ஒழுக்க வஞ்சினம் கூறிய சோழன் நலங்கிள்ளியும்,

”…சிறந்த
பேரமர் உண்கண் இவளின் பிரிக…” (புறம் – 71)
என்று மனைவி மீதான காதலைப் பகிரங்கமாக வெளிப்படுத்திய பூதப்பாண்டியனும் இதற்குச் சான்றுகள்.

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

  1. புறநானூறு மூலமும், ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை உரையும்.
  2. அகநானூறு மூலமும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையும்.
  3. ஐங்குறுநூறு – டாக்டர் உ.வே.சா. உரை
  4. குறுந்தொகை – டாக்டர் உ.வே.சா. உரை
  5. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் – பாவாணர்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *