
”விளம்பி வருடம் வழிபிறக்கும் பாராய்,
அலம்பு மனதின் அழுக்கை -குளம்பதில்(கண்ணன் திருவடியில்)
மேய்ந்தே வருடுடிடும் மாடாக பூமியில்
ஆய்ந்தே(ஆராய்ந்து) கிடப்பாய்’நான் ஆர்’(யார்)’’….கிரேசி மோகன்….!
ஆண்டுக்கு ஆண்டு புது பெயருடன் பிறக்கின்றாய்
அறுபது எண்ணிற்குள் அடங்கி வருகின்றாய்
விளம்பி என்ற பெயருடன் பிறக்கின்றாய்
நாங்கள் விரும்பியதை தர மறுக்கின்றாய் !
புத்தாண்டிற்கு ஓர் தோரணம் கட்டுவோம்
தமிழரிடையே ஒற்றுமை எனும் பாலம் அமைப்போம்
ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தை ஒழித்திடுவோம்
நீதி,நியாத்தை என்றும் நிலை நாட்டிடுவோம் !
நீரின்றி அமையாது இவ்வுலகம் என அறிந்ததே
விவசாயம் நீரின்றி அழிவதும் எல்லோர்க்கும் தெரிந்ததே ,
வாடிய பயிரை கண்டு வாடிய நந்தனாரே
மனம் மாறாத தன்மையுடைய ஆட்சியாளர்களே !
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அறிவுடைமை
ஒன்று கூடி செயல் படுத்துவோம் நதிநீர் மேலாண்மை
எங்கே சென்றிடும் காலம், அது நம்மை வாழவைக்கும்
விளம்பி ஆண்டில் அடையவேண்டியதை அடைந்திடுவோம் !
ரா.பார்த்தசாரதி
வல்லமை வாசக அன்பர்களுக்கும்
உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும்
தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
சித்திரை முதல் நன்னாளில்..சிந்தனையில்
……சிறப்பாகத் தோன்றி யதைச் சொல்கிறேன்.!
பத்தரை மாற்றுத் தங்கமாமது! மாதங்கள்
……பன்னிரண்டில் முதன் மையாய்த் திகழுமே.!
அத்துணை நன்மைகளும் நம்மிடம் வந்து
……அடையுமாறு அச் சித்திரையும் வழிசெயும்.!
முத்திரை பதிக்கும் வாழ்விலொரு நாளாக
……சித்திரை நாட்களனைத்தும் நல் நாட்களே.!
சித்திரைத் திருநாள் பிறந்தநன் நாளில்நம்
……சிந்தனையும் நன்றே சிறப்புற வேண்டும்.!
தித்திக்கும் பல திருவிழாவைத் தருகின்ற
……தெவிட்டாத இன் பத்தையுமது அளிக்கும்.!
கத்திரி வெயிலின் வெப்பமிக விருந்தாலும்
……குளிருமது!கொண்டாடும் திரு விழாவால்.!
புத்தாண்டின் முதல் நாளாமின்று அதைப்
……புன்னகையோடு புகழுற வர வேற்போம்.!

உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
துருவன் விழிகள் திறக்க -அருவமது(திருமால் அலயஸ் கண்ணபிரான்)
கூரியமூக் கர்புள்ளை(கருடனை) காண்டீபர்க் கா(ய்)இறங்கித்(இரங்கி)
தேரேறி கீதை தொடுப்பு(வகுப்பு)’’….கிரேசி மோகன்….!
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்
அவன் பேசி முடித்த போது அவன் உடல் மாறி வெளிச்சத்தால் நிரம்பியது. அவனுடைய குரல் வானிலிருந்து வருவதைப் போல் உரத்த சத்தத்தோடு கேட்டது.
“எல்லா மனிதர்களும் தங்கள் தேவைகளைத் தாங்கள் பூர்த்தி செய்து கொள்வதால் மட்டும் வாழ்வதில்லை, அன்பினால் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
“அந்தச் சிறுமிகளின் தாய்க்குத் தன் குழந்தைகளுக்கு எது தேவை என்பது தெரிவிக்கப் படவில்லை. அது போல் அந்தச் செல்வந்தனுக்கும் எது தேவை என்று அறிய முடியவில்லை. ஒருவருக்கும் மாலை வரும் போது தனக்கு அணியப் பூட்ஸ் அவசியமா அல்லது தன் சடலத்திற்குச் செருப்புகள் தேவையா என்று பகுத்தறிய வாய்ப்பு அருளப்படவில்லை”.
“நான் மனிதனாக இருந்த போது உயிரோடு இருந்ததின் காரணம் ஒரு வழிப்போக்கனும் அவன் மனைவியும் காட்டிய இரக்கத்தாலும் அன்பினாலுமேயன்றி என்னுடைய முயற்சியினால் அல்ல. அந்த அனாதைச் சிறுமிகள் இப்போது உயிரோடு இருப்பது அவர்களின் தாயின் வளர்ப்பல்ல. ஒரு அந்நியப் பெண்ணின் கருணையினாலும் அன்பினாலும் தான்.
எல்லா மனிதர்களும் வாழ்வதின் காரணம் மனிதனில் காணப்படும் அன்பினால்தான். ஒருவருடைய தனி முயற்சியால் அல்ல. இறைவன் மனிதர்களுக்கு எது தேவை என்று வெளிப்படுத்தவில்லை. மனிதர்கள் தனித்து வாழ்வதை அவர் விரும்பாமல் அன்பினால் ஒன்று சேர்ந்திருப்பதை விரும்புகிறார்.
அன்பாயிருப்பவனிடத்தில் இறைவன் குடியிருக்கிறார். ஏனெனில் தேவன் அன்பாக இருக்கிறார்”.
இவைகளைக் கூறி முடித்த பின் அவன் இறைவனைத் துதித்தான். அவனுடைய குரலால் அந்தக் குடிசை நடுங்கியது. கூரை திறந்து அக்னி ஜூவாலை வானை நோக்கி எழும்பியது. தேவ தூதனுக்குச் சிறகுகள் தோன்றி பரலோகம் சென்றான். சைமனும், மனைவியும் குழந்தைகளும் கீழ் விழுந்து அவனை வணங்கினர்.
சைமன் தன்னிலைக்கு வந்தபோது அந்தக் குடிசை எப்போதும் போலிருந்தது. அவனும் குடும்பத்தினரையும் தவிர்த்து வேறு ஒருவரும் அங்கு இல்லை.
முற்றும்
மக்கள் குறை தீர் மன்றங்கள்
இங்குறங்க,
சிற்சில இயங்கிட
பற்பல அலுவலர் சாய்ந்துறங்க
குறை எங்குறைக்க
தீர்வெங்கு கண்டிட??
காலந்தோறும் காண்பது
தேர்தல் விழாக்கள்
செப்படி வித்தைகள்
மக்கள் மயங்கிட……
நம்குறை தீர்க்கா
நல்லதோர் அரசு
பின்னோரு நாளும்
பயனுறா திட்டங்கள்
வகுப்பதோடு ஏறிடும்
பரண்களிலே,
எமக்கென்ன ‘நீர்’ கேட்கும்
தோரணை பிரச்சாரத்திலே
நீர்சொல்லக் கேட்பது
ஓர் வழக்கமானது
ஆட்சியில் அமர்ந்தபின்னே??
யாமிட்ட பிச்சையினை
துச்சமெனக்
கண்டனையோ?
முட்டாள் யாசகா
இனியாவது உன்பெயரென
மட்டும் அறிந்துகொள்!
சொல்லிச் செய்வது
உம் நாடகம்
செய்தபின் சொல்வது
எம் நாடகம்
ஏ.ஆர்.முருகன்
விளம்பி ஆண்டிலேனும்
கிளம்பிவருமா?காவிரி!
புலம்பவைத்தமத்தியரசு
மேலாண்மைஅமைக்குமா?
வேளாண்மையைக்காக்குமா?
முத்துநகரில் வித்தைகாட்டும்
தாமிர ஆலை மூடப்படுமா??
காஞ்சு போன டெல்டாவில்
பாஞ்சு வருது!!தண்ணீரல்ல
மீத்தேன் வாயு!!உறிஞ்சுவது
மண்ணையல்ல!! உயிரை!!
பச்சைப்பிரதேசம் வறண்ட
பாலைவனமாகி விட்டால்
பசிக்கு சோறு கிடைக்காது!!
வருங்காலம் நினைத்தாலே
கண்ணைக்கட்டுகிறது!!
இத்தனை பிரச்சினைகள்
எள்ளி நகையாடினாலும்
துள்ளிவரும் புத்தாண்டு
அள்ளித்தராதா?ஆனந்தத்தை!
சொல்லொனாத்துயர் ஓடாதா?
வெள்ளந்திதமிழர்களுக்கு
உள்ளார்ந்த வேதனை தீர..
தில்லிக்கு ஞானோதயம்தந்து
நல்ல தீர்ப்பைக்கொண்டுவருமா?
எதிர்பார்க்கும் ஈர விழிகளோடு
துதித்திடுவோம் சித்திரையை!!
பதித்திடுவோம் முத்திரையை!!
விலக எண்ணிவிட்டாய்
விரல் விட்டு எண்ண
ஆயிரம் காரணங்கள்
இருக்கலாம்
சொல்வதற்கு…
எனக்கும் உனக்கும்
என்ன உறவு
இது தானே உனது கேள்வி
உதட்டிலிருந்து
வந்த உறவல்ல இது
உள்ளத்தின் ஊற்றாய்
வந்த உறவு
உவமை வேண்டுமா
உரைக்கிறேன் கேள்
கண்கள் இரண்டாயினும்
காணுவதில்லை
ஒன்றை ஒன்று
ஆனால்
ஒன்றில் இடர் வர
கண்ணீர் சிந்தும்
மற்றொரு கண்
அதே உறவு தான்
-கோப்பெருந்தேவி. சு.,
முன்னுரை
’சொல்லுக்கு உறுதி அப்பர்’ என்பது முதுமொழி. அவர்தம் திருப்பதிகங்கள், அரியபொருளான சிவபெருமானை அறிவதற்குச் சிறந்த துணையாகின்றன. அத்திருப்பாடல்களில் அமைந்திலங்குகின்ற தொன்மக்கூறுகள், கதைப்போக்கிலான தத்துவ வலியுறுத்தலுக்கும், அருள்நெறி கூட்டலுக்கும், இலக்கிய இனிமைக்கும் வகைசெய்கின்றன. அவ்வகையில், அட்டவீரட்டனாகிய பெருமான், அந்தகனை அடர்த்தருளிய தொன்மக்கூறினை அப்பர்பெருமான், தமது பல திருப்பதிகங்களிலும் கையாண்டுள்ளார். அதன்வழியே, காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் நீங்கி, உயிர்கள் மேன்மையுற அவர் அருள்நெறி காட்டுகின்ற பாங்கினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.
திருமுறைகளில் தொன்மக்கூறுகள்
அரும்பொருளான இறைவனை, ஆருயிர்கள் உணர்ந்துய்ய, வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், சாத்திரம் என்பன கருவிகளாகின்றன. இவற்றுள், வேதங்களின் உட்பொருளாகிய பரத்துவத்தை, இறைவன், கல்லாலின் கீழிருந்து நால்வர்க்கு அருளிச்செய்தான். வேதங்களின் கிரியாநெறி விளக்கமாகிய ஆகமங்களின் பொருளை, பெருமான் அம்மைக்கு அருளிச்செய்தான். வேத, ஆகம நன்னெறிகளை மண்ணுலகில் நிலைநிறுத்தவேண்டி இறைவன், தானே மனித உருவேற்று வந்தான். அதை, இதிகாசங்கள் விளக்கியுரைக்கின்றன. வேத, ஆகம, இதிகாசங்களின் பரத்துவ நுண்பொருள் தத்துவங்களை எளிமைகொண்டதாக, மக்களிடையே வலியுறுத்துவதற்கு, கதைக்கூறாக அவற்றை அருளிச்செய்த அணுகுமுறையினைத் திருமுறை ஆசிரியர்களிடத்தில் காணலாம். அவ்வரிசையிலேயே, ஆதிபுராணனாகிய பெருமானைத் தொன்மங்களாகிய புராணக்கூறுகளால், அப்பர்பெருமான் போற்றிப்பரவியுள்ளார்.
ஆதிபுராணனின் அட்டவீரட்டம்
போற்றித்திருத்தாண்டகம் உள்ளிட்ட, பல திருத்தாண்டகத் திருப்பதிகங்களிலும், பல்வகைத் தொன்மக்கூறுகள் அப்பர்சுவாமிகளால் எடுத்தாளப்பட்டுள்ளன. அவ்வரிசையில், ‘பொருப்பள்ளி வரைவில்லா’ என்றமைந்த அடைவுத் திருத்தாண்டகத்தின் இரண்டாம் திருப்பாடல், சிவபிரான், பிரமனின் சிரம் கொய்தருளிய திருக்கண்டியூரையும், அந்தகாசுரனுக்கு மறக்கருணை அளித்தருளிய திருக்கோவலூரையும், முப்புரத்தையும் எரித்தருளிய திருவதிகையையும், தக்கனது வேள்வியினைத் தகர்த்தருளிய திருப்பறியலூரையும், சலந்தராசுரனின் ஆணவத்தை அடக்கியருளிய திருவிற்குடியையும், அத்தி உரித்து, அதுபோர்த்தருளிய திருவழுவூரையும், மன்மதனை நெற்றிக்கண்ணால் சுட்டருளிய திருக்குறுக்கையினையும், மார்க்கண்டேயர்க்காக, கூற்றுவனை அட்ட திருக்கடவூரையும் ஏற்றிப்போற்றுகிறது. அட்டவீரட்டத் திருவிளையாடல்கள், பிற திருத்தாண்டகப் பதிகங்களில் மிகுதியும் அமைந்துள்ளன.
அப்பர்பெருமான் திருஉள்ளம்
‘ஆமயந்தீர்த் தடியேனை’ எனத் தொடங்குகின்ற தனித்திருத்தாண்டகத்தில், அட்டவீரட்டத் திருவிளையாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இத்திருப்பதிகத்தின் இரண்டு இடங்களில், அந்தகனைக் குறிக்கின்ற தொன்மத்தை அப்பர்பெருமான் எடுத்தாண்டுள்ளார். அத்தொன்மப் பயன்பாட்டில், பெருமான், தனக்குத் தொண்டுநெறி அருளிய வரலாற்றை இயைத்துப் பாடியுள்ளார். ‘ஆமயம்’ என்பது, ‘நோய்’ என்று பொருள்படும். அப்பர்பெருமான், ‘ஆமயந்தீர்த்து அடியேனை ஆட்கொண்டான்’ எனத் தொடங்கி, சிவபெருமானைப் பாடியநிலையில், தான் சமணசமயத்தைச் சார்ந்திருந்த முந்தைய அறியாமையினை நினைந்தார் எனலாம். பெருமான், ‘தகுதிநோக்காமல், அடியார்களின் ஆணவமல அறியாமையினையும் பொறுத்தருளி, குற்றத்தையும் குணமாக ஏற்றருளிக் காக்கின்ற பெருங்கருணையை நீளநினைக்கின்றார். அவ்வாறே, தனக்கும் சூலைநோயினைத் தந்து ஆட்கொண்டதை உடன்நினைந்து உருகுகின்றார். பெருமானின் இத்தகைய எளிவந்த பெருங்கருணையை வலியுறுத்தவேண்டி, அட்டவீரட்டத் திருவிளையாடல்களால் ஆட்கொள்ளப்பட்டோரைக் குறித்த தொன்மங்கள் அனைத்தையும் இத்திருப்பதிகத்தில் எடுத்தாண்டுள்ளார். இத்தொன்மக் குறிப்புகள், கதைநிகழ்வுகள் என்னும் நிலையில் பல புராணங்களில் இடம்பெற்றிருப்பினும், உள்பொருளாக சித்தாந்தத் தத்துவங்களையும், வாழ்வியல்நெறிகளையும் வலியுறுத்துகின்ற வகையில் அப்பர்பெருமானால் சுட்டப்பெற்றுள்ளன.
அந்தகனைக் குறித்த தொன்மக்கூறு
ஒரு சமயம் உமையம்மை, சிவபெருமானின் கண்புதைத்த வேளையில், அவளை அறியாத அச்சம் ஏற்பட்டது. அச்சத்தால், அவள் உடலில் பூத்த வியர்வைப்பெருக்கு, பெருமானின் நெற்றிச் சூட்டினால், கரியநிறமுடையதாக, கண்பார்வையற்றதாக உருப்பெற்றது. அக்குழந்தை அசுரத்தன்மை கொண்டிருந்ததனால், இரண்யாட்சன் என்னும் அசுரனால் வளர்க்கப்பெற்றது. கண்ணொளி இல்லாமல் பிறந்த அக்குழந்தை, பின்னாளில் பிரமனிடம் பெற்ற வரத்தால், கண்பார்வையும், எவரையும் வெற்றிகொள்கின்ற வலிமையும் பெற்றது. அரியவலிமையும், பெரியவரமும் பெற்ற அந்தகன், ‘தான் இனியும் பெறத்தக்க பேறு எவையும் இல்லை’ என்ற தருக்கினால், ஆணவமலம், அவன் அறிவை மறைக்க, அறியாமை இருளில் ஆழ்ந்தான். ‘யான்’ ; ‘எனது’ என்னும் ஆணவப்பற்றுக்கு ஆட்பட்டான். பற்றற்றவனாகிய பெருமானைப் பணிய மறந்தான். அதனால், ஆருயிர்க்கு அன்புசெய்தலையும் மறந்தான். நெறியல்லாத வகையில், உயிர்களுக்குத் துன்பத்தையே செய்தான். பால்நினைந்தூட்டுகின்ற தாயினும் பரிகின்ற பெருமான், உயிர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தீர்க்க, சூலம் எடுத்தான்; சூலத்தால் அந்தகனைப் பழிகொண்டான். (சிங்காரவேலனார், அபிதான சிந்தாமணி, பக்கம்: 23).
அந்தகன் அருள்பெற்றுய்ந்த வரலாற்றை அப்பர் பெருமான்,
‘அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்’ (திருத்தாண்டகம்: 96:5) எனக் குறித்தருளியுள்ளார்.
அடியேனையும் ஆட்கொண்ட பெருமான்
‘எந்தவொரு இலக்கியப் படைப்பிலும், படைப்பாளனது சாயலையுடைய மாந்தன், படைப்பாளனையும் அறியாமல் நுழைந்துவிடுகிறான். படைப்பாளன், அக்கதைமாந்தனைப் பற்றிப் பேசுகின்ற இடங்களில், படைப்பாளனைக் குறித்த பதிவுகளும் இடம்பெற்றுவிடுகின்றன’. (படைப்பாக்க ஆளுமைகள்: பக்:11). பெருமான், ‘சூலத்தால், அந்தகனுக்கு மறக்கருணை தந்தான்’ என்று பாடிய அப்பர்பெருமான், அத்தொடரில், பெருமான், தன்னை ஆட்கொண்ட வரலாற்றையும் ஒருசேரச் சுட்டியுள்ளார்.
சிவபெருமான், அறக்கருணை அல்லது மறக்கருணை என்ற இருவேறு நிலைகளில்நின்று உயிர்களுக்கு அருள்கின்றான். ‘வல்வினைகள் கொண்டிருந்த அந்தகனுக்குச் சிவபெருமான், மறக்கருணை தந்தருளினான். அதுபோன்றே தன்னை ஆட்கொள்ள வேண்டியும் சிவபெருமான், மறக்கருணயையே தந்தருளினான்’ என்று அப்பர்பெருமான் நினைந்தார் போலும். கூற்றுவனை ஒத்த சூலைநோயினைப் பெற்றுத் தாம் துன்புற நேர்ந்ததற்கும், ஆணவமலத்தால் தம்மிடம் விளங்கிய அறியாமையே காரணம் என்றும் அவர் உணர்ந்திருந்தார். அதனாலேயே, ஆணவத்தின் உருவாகி, அறநெறியில் பிழைத்த அந்தகனை எண்ணியஅளவில், அவனது அறியாமை போன்றே, தானும் பெருமானை மறந்து சமணத்தில் வாழ்ந்திருந்ததாகக் கழிவிரக்கம் கொண்டார்’ எனக் கருதத்தகும். அதனாலேயே, அந்தகனுக்கு மட்டுமல்லாமல், தனக்கும் அருள்செய்து காத்த பெருமானின் பெருங்கருணையை ஒருசேர நினைவுகூர்பவரானார். இதனை,
‘சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக் கொண்டாரே’ (திருத்தாண்டகம்: 96:7)
என்று குறித்தருளியுள்ளார். சிவபெருமான், அப்பருக்கு அருளிய தொண்டுநெறியே, அவர்தம் பிறவிப் பெருநோய்க்கு மருந்தானது. ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்னும் நோக்கில், பெருமானைப் பற்றி உய்கின்ற பெருநெறிக்கு வழிகாட்டவேண்டி, உயிர்களின் பேரறியாமையினைத் தனது அறியாமையாக ஏறிட்டுக்கொள்கின்றார். தன்னை, பார்வையற்ற குருடனாக, திருக்கோவலூர் திருப்பதிகத்துள் சுட்டியுள்ளார்.
‘கொத்தையேன்’ என்று குறித்துள்ளமை
பெருமான், அந்தகாசுரனுக்கு அருளிய திருத்தலமாக அறியப்படுவது, நடுநாட்டிலுள்ள திருக்கோவலூர் வீரட்டமாகும். இத்தலத்துக்குரிய திருப்பதிகங்கள் இரண்டு (2:100, 4: 69). அப்பர்பெருமான், இத்திருத்தலத்தைப் பாடத்தொடங்கிய நிலையில், அந்தகனின் நிலையினைப் போன்றே, அனைத்து உயிர்களும் அறியாமை கொண்டிருப்பதை எண்ணிக் கலங்கியுள்ளார். பெருவரத்தால், கண்ணொளி பெற்றநிலையிலும், அந்தகனுக்குக் கண்களின் பயனாகிய பெருமானின் திருக்காட்சி காணுதலில் அறிவு செல்லவில்லை. அதைப்போன்றே, இயல்பாகவே ஆணவமலத்தால் பிணிக்கப்பட்டுள்ள அனைத்து உயிர்களிடத்திலும், அறியாமை மட்டுமே மிகுந்திருக்கின்றது. ஆணவமலத்தின் இருள்வலிமை மெலிந்தால் மட்டுமே, உயிர்களால், இறைவனை உணர இயலும்; அதுகாறும், பெருமானை உணராத அறியாமைக்கு உயிர்கள் இரங்கி, அவனை அணுப்பொழுதும் பிரியாமல் பற்றி உய்கின்ற அருள்பேற்றுக்குத் தலைப்படும். அவ்வாறு, பெருமானைப் பற்றுகின்ற பெரும்பேறு வாய்க்கப்பெற்றாலும், ஆணவமல வாசனை, உயிர்களிடத்தில் மெலியாது. ஆணவமலத்தின் இவ்வலிமையினைச் சிவஞானபோதம், ‘நிகழ்செம்பினிற் களிம்பு’ எனக் குறிக்கிறது. துலக்கித் தூய்மையாக்கிய செம்புப் பாத்திரத்தில், ஓரிருநாளில் களிம்பு தோன்றுவதைப்போல, மலக்கட்டில் உழல்கின்ற உயிர்களிடத்தில், ஆணவமலம் மீண்டும் மீண்டும் பெருமுனைப்புடன் செயல்பட்டு, அவை பெருமானை மறந்து, காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்களுக்கும் ஆட்படுகின்ற கீழ்நிலைக்குத் தள்ளும். அக்கீழ்நிலையிலிருந்து விடுபட, உயிர்களின் ஊனக்கண் உதவாது. பெருமானின் திருவருளே கண்ணாக இருந்து அவனைக் காட்டியருளவேண்டும்’ என்கின்ற நல்லறிவு, உயிர்களுக்கு வாய்ப்பதில்லை.
அந்தகன், பிறப்பின்பொழுது கண்ணில்லாமல் இருந்து, அரனருளால் கண்பார்வை பெற்றவன். ஆயினும் அவன், தனது கண்ணின் மணியாக அரனாரே விளங்குவதை உணரவில்லை. ஆணவமலம், அவனது அறிவை மறைத்ததால், கண்களும் அவனுக்கு, அரனாரைக் காட்டி உதவவில்லை. மண்ணுலகில், பல்லுயிர்களும் இத்தகைய அறியாமையையே கொண்டுள்ளன. அப்பர்பெருமான், இதை நினைந்து இரங்குகின்றார். உயிர்களின் அறியாமையினை, தன்னுடைய அறியாமைக் குறையாக ஏறிட்டுக்கொள்கின்றார். அதன் வெளிப்பாடாக, தம்மைத் திருப்பதிகத்துள் இரண்டு இடங்களில், ’மெய்ப்பொருளை ஞானக்கண்ணால் உள்ளவாறு உணர்ந்தறிய இயலாத குருடன்’ என்பவராக, ‘கொத்தையேன்’ என்று குறித்துள்ளார் (திருமுறை:4-69-1,8). குழந்தையின் பிழையினைத் தனது பிழையாக ஏற்றுக்கொள்கின்ற அவர்தம் தாயுள்ளத்துடன், ‘உயிர்களின், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் நீங்க, அந்தகன் அருள்பெற்ற வரலாற்றின்வழியே அருள்நெறி காட்டுகின்றார். ‘முக்குற்ற நீக்கத்துக்கும் திருவருளே துணையாகும்’ என்பதைக் காஞ்சிப்புராணமும், அந்தகேச வதைப்படலத்தில் விரிவாக வலியுறுத்தியுள்ளது (தமிழ் இணைய கல்விக்கழகம், காஞ்சிப் புராணம், பக்கம் 401-409).
அந்தகன் போல அறிவழிந்தோர்
இப்புராண வரலாறு, அரனருளால், அளவில்லாத ஆற்றலைப்பெற்ற அந்தகன் அறநெறி தவறி, தனது ஆற்றலை மிகவும் வியந்து, ஆணவத்தால், விண்ணவரையும், மண்ணவரையும் வெகுண்டு அஞ்சச்செய்தான். அந்தகனுக்கு அஞ்சிய திருமால் முதலான வானவர்கள், பெண்ணுரு எய்தி, உமையம்மையிடம், சரண்புகுந்து, அவர்தம் சேடியர்களாக மறைந்து வாழ்ந்தனர். ஆனால், அந்தகனோ, வானவர்பால் இரக்கம் கொள்ளாமல், தன்பால் அச்சம்கொண்ட வானவரைச் சிறைப்படுத்த அறியாமையுடன் முனைத்தெழுந்தான். ஆணவம்கொண்டு படைநடத்திவந்த அந்தகனை எதிர்க்கவேண்டி, உமையம்மை வீரகன்னியர்களை எதிர்விடுத்தாள். வீரகன்னியர்களுக்கு அஞ்சிய அந்தகன், புறங்காட்டி ஓடிப் பிழைத்தான். அம்மையோ, பசுங்குழவிகளாகிய நமக்காக அப்பனிடமிருந்து என்றும் குறைவில்லாமல் திருவருளைப் பெற்றுத்தருபவள். அத்தகைய தாயுள்ளத்துடனேயே, ‘அந்தகனும் உயிர்கொண்டு வாழட்டும்’ என எண்ணி, அம்மை அவன் தோற்றோடி உயிர்ப் பிழைத்திருக்க அருளினாள். திருவருள் நிலையுடையவளாகிய அம்மையால் அறிவுறுத்தப்பெற்றும், அவனால் நன்மையை உணர இயலவில்லை. ஆணவமலம் மிகுந்த வலிமையுடன், அவனது அறிவை மறைத்தது. அதனால், தான் உய்கின்ற நல்லறிவை அவன் சிந்திக்கவில்லை. தோல்வியால் ஏற்பட்ட சோர்வு நீங்கி, அவன் ஆணவ எழுச்சியுடன் மீண்டும், வானவரை எதிர்க்கவந்தான். அந்நிலையில், அவனை அழித்தொழிக்கச் சிவபிரானார், வைரவத்தேவரை அனுப்பியருளினார்.
பெருமானின் அருளாணையின்வண்ணம் வந்தருளிய வைரவத்தேவரும், தமது கூரிய முத்தலைச் சூலத்தில் அவனைக் கோத்து, அல்லல்படுத்தி, மறக்கருணையால் அவன் மெய்யுணர்வைப் பெற்றுய்ய வகைசெய்தார். ‘மேலும் தன்னிடத்தில் மெய்யுணர்வை மிகுவித்து, வீடுபேற்றினைத் தந்தருள வேண்டும்’ என்று அவன், வைரவத்தேவரைப் பணிந்தான். அதற்கு, வைரவத்தேவரோ, ‘பெரும்பேறாகிய, வீடுபேற்றினைப் பெருமான் ஒருவனே தந்தருள வல்லவன்’ என்று உணர்த்தியருளினார். அந்நல்லுணர்வின் மேன்மையால், சிவபிரானை அவன் சரண்புகுந்தான். ‘ஊரே சிவலோகமாகவும், மக்கள் அனைவரும், சிவகணங்களாகவும், அங்குப் பிறத்தலே, வீடுபேற்றுக்கான வகை’ என்ற உயர்மேன்மைகள் உடையதாகிய, ‘காஞ்சி மாநகரை’ அடைந்துய்ய அருளினார். அந்தகனும், பலகாலம் அங்கிருந்து, பெருமானை இலிங்கத் திருமேனியாக வழிபட்டு, இறுதியில் அத்திருமேனியிலேயே கலந்துய்ந்தான்’ என்று காஞ்சிப்புராணம் விவரிக்கிறது. அந்தகன் திருவருள் பெற்றுய்ந்த அத்திருத்தலமானது, ‘அந்தகேசுரம்’ என்னும் திருப்பெயரால் இன்றும் விளங்குகிறது.
பிச்சை உகக்கின்ற திருவிளையாடல்:
மேற்கண்ட புராணவரலாற்றின் இடைப்பகுதி, பெருமான், தாருகாவனத்து முனிவர்களுக்கும், அவர்தம் மனைவிகளுக்கும் அருளவேண்டி, பிச்சை உகக்கின்ற பெருமானாகச் சென்றருளிய திருவிளையாடலையும் மிகவிரிவாகச் சுட்டியுள்ளது. அந்தகன், திருமால் முதலான வானவரை எதிர்க்கக் கயிலையை நோக்கி முதன்முறை வந்து தோற்றோடிய அளவில், அவனை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டிய சூழல் அமைந்தநிலையிலும், பெருமான் அவனைத் தனது வலிமையால் அந்நொடியிலேயே அழித்தொழிக்க எண்ணவில்லை. ‘தாம் வளர்த்த நச்சுமரத்தையும் வெட்டத் துணியாத சான்றோனாகிய பெருமான், கயிலையிலிருந்தும் தாருகாவனத்தை அடைந்ததாகப் புராணம் கூறுகிறது.
அந்தகன், ஆணவம் தந்த வெகுளியின் மயக்கில், வானவரைத் துன்புறுத்த நினைத்த அறியாமையினைக் கடிவதற்கும்கூட மேலும் சில காலம் பொறுக்கலாம்’ என்று பெருமான் நினைத்திருந்தான் போலும். அதனாலேயே, ஆணவத்தால் சினம்கொண்ட அவனை உடனே அடர்த்து அருள்செய்வதையும் விடுத்து, ‘தாருகாவனத்தில் புகுந்தான்’ எனலாம். பிறப்பால், அசுரத்தன்மை பெற்றிருந்தும், அறிவால் ஆணவம் மிக்கும் இருந்தவன் அந்தகன். அவனுக்கு அருளவேண்டிப் பெருமான், சற்றே காலம் தாழ்த்தினான். ஆனால், பெருமானை மறந்திருந்த, தாருகாவனத்து முனிவர்கள் மற்றும் அவர்தம் மனைவியரிடத்தில் ஆணவ அறியாமை மிக்கிருந்ததைக் கண்டு பொறுத்திருக்க மனமின்றி, உடனே அதனைக் களைந்தெறிந்து அவர்களை உய்விக்கத் தாருகாவனத்திற்குச் சென்றான். ‘வேதமும், வேள்வியும், அதன் பயனும்’ என அனைத்துமாகப் பெருமானே விளங்குகிறான்.
முனிவர்கள் ஆணவத்தால் இதை மறந்து, தமது முயற்சியால் மட்டுமே வேள்வியும், அவற்றுக்கான பயன்களும் சிறந்திருப்பதாக தருக்கினர்; மேலும், பெருமானை வணங்குதற்குரிய, வேள்வி முதலான நற்செயல்களுக்கு அரனருளே துணைசெய்கிறது’ என்பதையும் முனிவர்தம் மனைவியர்கள் மறந்திருந்தனர். ‘தமது கற்பாகிய மனவலிமையே, வேள்வி முதலான புண்ணியங்களுக்குக் காரணம்’ என்றும் ஆணவம் கொண்டிருந்தனர். இவ்வாறு, பெருமானையும், அவனது, திருவருளையும் மறந்து, அவர்கள் செய்த வேள்வி முதலான செயல்கள், பதிபுண்ணியங்களாகப் பெருகாமல், அவர்களிடத்தில், ஆணவஇருளை மேலும் வளர்க்கின்ற பாவச்செயல்களாகிய பசுபுண்ணியங்களாகவே அமையக்கண்டு, அதற்கு இரங்குபவன் பெருமான். பசுபுண்ணியங்கள், வினைப்பயனைத் தந்து, முனிவர்களுக்கும், அவர்தம் மனைவியர்க்கும், மேலும் பல பிறவிகளைத் தந்து, துன்புறச்செய்யும் என்பதை நினைந்தான். எனவே, முனிவர்தம் மனைவியர்கள், மெய்யுணர்வு பெறுகின்றவகையில், அவர்கள்தம் ஆணவத்தின் தன்முனைப்பைச் சிதைத்தருள்கின்றநோக்கில், பேரழகனாக, பிச்சை உகக்கின்ற திருக்கோலத்தில் வந்தருளினான். அங்கிருந்த பெண்களும், பெருமானின் பேரழகில் திளைத்தனர். தாம், பெண்கள் என்பதையும் மறந்தனர். காமமாகிய ஆணவச்சேட்டையில் ஆழ்ந்து, பெருமானை அடையத் துடித்தனர். தம்மை மறந்து, தம்நாமம் கெட்டு, பெருமானுக்கே பித்தியராக அறிவழிந்த அவர்களைப் பெருமான், கருணைநோக்கத்தால் காத்தருளி மெய்யுணர்வைத் தந்தருளினான்.
இதை அறிந்த முனிவர்கள், ஞானக்கண் கொண்டு பெருமானைப் பணிய முற்படவில்லை. ‘ஊனக்கண்கள், பதியை உணராது’ என்ற அறியாமைக்கு இலக்கணமாகி, பெருமானை எதிர்க்க, முயலகனையும், பாய்புலியையும், கொல்களிற்றையும், விடநாகத்தையும் வேள்வியிலிருந்து ஏவினர். வைதாரையும் வாழ்விப்பவனாகிய பெருமான், முயலகனைத் தன் திருவடிக்கீழ் இருத்தி அருளினான்; புலித்தோலும், நாகமும், யானையின் தோலும் திருமேனியில் விளங்கும்படிச் செய்தருளினான். பசுஞானம் தந்த அறியாமையால், தம்மை மறந்த முனிவர்களின் அறிவைப் பிணித்திருந்த ஆணவ மயக்கத்தையும், தனது ஞானநோக்கத்தால் பெருமான் விலக்கியருளினான். அதன் பின்பு, தாருகாவனத்து முனிவர்கள் தமது மனைவியருடன், காஞ்சி மாநகரத்தில் பிறந்து, இல்லறம் நடத்தி, இறுதியில் தம்மை வந்தடைந்துய்ய அருளினன்’ என்பது புராண வரலாறு.
வாழ்வியல் நெறி
இப்புராணத்தில், ஆணவமலப் பிணிப்பின் அறியாமையால் நெறியற்று, காம வலைப்பட்டவர்களாக, தாருகாவனத்து முனிவர்களின் மனைவியரைக் காண்கின்றோம். தனக்குக் கிடைத்த அரியபேற்றை மதியாமல், ஆணவத்தால் அறிவழிந்து, சினம் என்னும் குன்றேறிச் சிறப்பழிந்தவனாகவும், அறியாமை உடையவனாகவும் அந்தகனைக் காண்கின்றோம். அத்துடன்,
வேதங்கள் பல கற்றிருந்தும், ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்பதை மறந்து, புண்ணியங்களைச் செய்வதே பெரும்பேறு’ என்று கருதிய ஆணவமயக்கத்தின் அறியாமையுடையவர்களாக முனிவர்களைக் காண்கிறோம். ‘காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் நீங்கினால் மட்டுமே உயிர்கள் பிறவிப் பிணிநீங்கி உய்வடையும். இவ்வுண்மையை,
‘காமம், வெகுளி, மயக்கம் என்னும்மூன்றன் நாமம்கெடக் கெடு நோய்’ (திருக்குறள்: 360)
என வள்ளுவமும் வலியுறுத்துகின்றது. அவ்வகையில், ‘நெறியுடைய காமமும், சினத்தை நீக்கிய சிந்தையும், மெய்ப்பொருளைக் காண்கின்ற அறிவும், நம்மை மண்ணில் நல்லவண்ணம் வாழச்செய்து, வானுறையும் தெய்வப்பேற்றுக்கு வகைசெய்யும்’ என்பதே அந்தகனைக் குறிக்கின்ற தொன்மம் உணர்த்துகின்ற வாழ்வியல்நெறியாகும்.
முடிவுரை:
ஆணவமலத்தின் வலிமையால், உயிர்களிடத்தில், ‘காமம், வெகுளி, மயக்கம்’ என்னும் முக்குற்றங்களும் விளையும் என்பதை விளக்கவும், ‘சிவபிரானின் பெருங்கருணை, ஆணவத்தின் வலிமையை மெலியச்செய்து, ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்னும், உயர்ஞானத்தை விளங்கச்செய்யும்’ என்பதை வலியுறுத்தவும், அப்பர்பெருமான், அந்தகனின் வரலாறாகிய தொன்மத்தைத் தமது திருப்பதிகத்துள் எடுத்தாண்டு அருள்நெறி காட்டியுள்ளார்.
*****
ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:
*****
கட்டுரையாசிரியர்
ஆய்வாளர் – தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.
நெறியாளர்: முனைவர் இரா. மதன் குமார்.
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்களுடன் இவ்வாரம் என் மடல் மூலம் உங்களுடன் இணவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டு பிறந்து அவசரமாக மூன்றரை மாதங்கள் ஓடி முடிந்து விட்டன. காலச்சக்கரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது பருவகாலங்களை மாற்றி, மாற்றி சுழலும் இந்தப் பூமியின் வயதைச் சுழற்சியில் கூட்டிக்கொண்டே செல்கிறது. ஆழியினுள் விழுந்து மறையும் ஒரு சிறிய மழைத்துளிபோல் நாமும் இப்பூமியில் விழுந்து மறைகின்றோம் ஆனால் எம்மால் ஏற்படுத்தப்படும் காலடித்தடங்கள் தமக்குரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டுத்தான் செல்கின்றன.
இயற்கையின் முக்கியத்துவத்தை அறியாமல் இருக்கும் செல்வத்தையெல்லாம் செலவழித்து விட்டு ஓட்டாண்டியாவது போல இருக்கும் இயற்கைவளத்தைச் சுரண்டி அழித்து விட்டு எதிர்காலச் சந்ததியின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விட்டுத்தான் செல்கின்றோம். நாம் வாழும் காலம் மட்டும் எமக்குக் கிடைக்கும் வசதிகளை அனுபவிப்போம், அவ்வசதிகள் எத்தகைய அழிவுகளை இயற்கைக்கு ஏற்படுத்தினாலும் அது எங்களை நேரடியாகப் பாதிக்காதவரை கவலை கொள்ளத் தேவையில்லை எனும் வகையிலேயே எமது நடவடிக்கைகள் அமைகின்றன.ஆனால் இவற்றையெல்லாம் உணர்ந்து இதனால் ஏற்படும் அபாயங்களைப் பற்றி அறிவுறுத்திக் கொண்டிருப்போர் இல்லாமலில்லை. ஆனால் அவர்களின் குரல்கள் எத்தகைய வகையில் மக்களைச் சென்றடைக்கின்றன என்பது கேள்விக்குறியே!
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கை வசதியைப் பெருக்கிக் கொள்ள எண்ணுவது தவறாகாது. அத்தகைய ஓர் எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் வாழ்வில் போராடும் முனைப்பையே மனிதன் இழந்துவிடுவான். ஆனால் அவ்வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் இருக்கும் யதார்த்தச் சிக்கல்களை உணர்ந்து கொள்வதில்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. குழந்தை பிறந்தவுடன் ஓட முடியுமா? தவழ்ந்து, தத்தித் தத்தி நடந்து, நன்றாக நடைபயின்ற பின்னால் தானே ஓட முடிகிறது? அதேபோல நாம் ஆசைப்படுபவைகள் அனைத்தும் நாம் நினைத்த மாத்திரத்தில் எமக்குக் கிடைத்து விட வேண்டும் என்று எண்ணுவது மட்டும் எப்படிச் சரியாகும்? வாழ்வின் மகிழ்ச்சியின் அளவுகோலை நாம் தொலைத்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சர்வதேச அளவில் இயற்கைச் சீரழிவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தின் இலக்கைத் தவறவிட்டு விட்டார்களோ எனும் எண்ணம் ஏற்படுகிறது.
மேலைநாடுகள் எனக் கருதப்படும் நாடுகள் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் முன்னேற்றம் கண்டு அங்கு வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளின் தரத்தை உயர்த்தி வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதில் ஓரளவு வெற்றி கண்டு விட்டார்கள். ஆனால் இன்றைய உலகளாவிய ரீதியில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிற்கும் நாடுகளான சீனா, இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகளில் சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான முன்னேற்றத்தை அடைந்து விட்டார்களா? என்பது கேள்விக்குறியே.
இந்த நிலையில்தான் இன்று மேலைதேய நாடுகளின் அரசியல் போக்கில் ஒரு தீவிரவாதச் சுயநலப் போக்கிலான மாற்றம் தென்படுகிறது. இந்நாடுகளின் அரசுகள் தொடர்ந்து செய்த பல பொருளாதரக் கொள்கைத்தோல்விகளை வெளிநாட்டவரின் குடியேற்றம் எனும் காரணத்தைக் காட்டி நியாயப்படுத்த முயன்றதினால் இனத்துவேஷத்தை முன்னிலைப்படுத்தும் தீவிர வலதுசாரக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது என்று சொல்லலாம். இதற்கு இனத்துவேஷம் தான் ஒரு காரணம் என்று சொல்லிவிட முடியாது. வெளிநாட்டிலிருந்து இந்நாடுகளைத் தமது நிரந்தர வதிப்பிடங்களாக்கிக் கொண்டு வாழ்வோர்களின் வாழ்க்கைமுறைகள் மற்றும் தாம் வாழும் நாட்டின்மீது பற்றின்றி வாழ்வது போன்ற செயல்களும் இந்நாட்டு மக்களின் மனதில் வெறுப்புணர்ச்சி தோன்ற ஏதுவாகின்றது.
இந்நிலையில்தான் அமேரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடு தானும், தன் நாட்டு மக்களும் எனும் குறுகிய வட்டத்தினுள் தனது பார்வையைத் திருப்பிக் கொண்டதினால் இயற்கைச் சீரழிவின் தாக்கங்களையும், அது உலகளாவிய ரீதியில் எதிர்காலச் சந்ததிக்கு கொடுக்கப்போகும் தலையிடியையும் முற்றுமுழுதாக ஒதுக்கி வைக்கும் ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறது. இது ஓர் ஆரோக்கியமான உலகளாவிய பொதுநலத்தை முன்னேடுக்கும் பாதையில் நாடுகளை இட்டுச் செல்லாது. இதுவே இன்று சமுதாய நலம் விரும்பிகள் பலரின் மனத்திலும் தேங்கி நிற்கும் அச்சமாகும்.
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்,
சக்தி சக்திதாசன்
டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி
இணைப் பேராசிரியர் (ம) துறைத்தலைவர்(iஃஉ)
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை-625009
தமிழ்நாட்டின் பழம்பெருமையை பழந்தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளை, பழந்தமிழ் இலக்கியங்களோடு மட்டும் அல்லாமல் மூவேந்தர், குறுநிலமன்னர்கள் போன்ற இவர்தம் வரலாற்றுப் பதிவுகளில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது.
குறுநில மன்னர்களை உள்ளடக்கி முடியுடை மூவேந்தர்களாக சேரர், சோழர்,
பாண்டியர் என முடியாட்சியுடன் குடியாட்சி நிகழ்த்தியுள்ளனர். அவர்களுள் சோழர்களின் கலை, இலக்கியம், சமயம் ஆகியவற்றுக்கான பணிகள் தனித்துவம் பெறுவதாக விளங்குகின்றன.
முற்காலச் சோழர்களின் வரலாற்றை எழுதப்புகுந்த திரு. நீலகண்ட சாஸ்திரி,
திரு. கே.கே. பிள்ளை, டாக்டர். இராசமாணிக்கனார், திரு. வேங்கடசாமிநாட்டார்,
திரு. மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்கள் வெற்றி பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆவர். இவர்களையெடுத்து ரா. இராகவ ஐயங்கார், மு. இராகவ ஐயங்கார் போன்றவர்களும் அடங்குவர். (பழங்கால சோழர்களின் வரலாறு – அ. சவரிமுத்து – பக். 4)
சோழ மன்னர்கள் அவர்களின் பரம்பரை பற்றிய செய்திகள், சோழர்களின்
படைத்தளபதிகள், படைச்சிறப்புகள், ஆட்சிமுறைகள், பாசனக் கொள்கைகள், நாணயங்கள், பழங்கால நாட்டு மக்களின் சமுதாய பழக்க வழக்கங்கள், திருமண முறைகள் எனப் பல்வகைக் கூறுகளையும் மேற்குறித்தோரின் ஆய்வுகள் நமக்குப் பறைசாற்றி நிற்கின்றன.
சோழநாடு சோறுடைத்து என்ற சொலவடை நாம் அறிந்ததே. ஆனால் சோழநாடு எனும் பெயர் நபர்களை மையமிட்டதா? அன்றி நிலத்தை மையமிட்டதா? என்று கேள்வி எழுகின்றது. இதற்கு விடையாக நாம் சோழ நாட்டின் அமைப்பையும் தொன்மையையும் அறிய வேண்டும்.
“கடல் கிழக்குத் தெற்குக்கரை பொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்.”
என்று சோழ நாட்டு எல்லையைப் பழம்பாடல் ஒன்று பகர்ந்துள்ளது.
கிழக்கு – மேற்கில் 24 காத தூரம், வடக்குத் தெற்கில் 24 காத தூரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கடலில் கலக்கிடும் காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வடபெண்ணை, கிருட்டிணா ஆகிய ஆறுகளின் கழி முகப் பகுதியாக, வடிநிலமாக சோழநாடு அமைந்துள்ளது.
நீர் சுழல் நாடு நீர்சூழ்நாடு நீர்சோழநாடு சோழநாடு. இதையே ஆங்கிலத்தில் சோழ மண்டலக் கடற்கரை என்ற பொருளில் “ஊhழசய அயவெயட ளுநயளாழசந” என்று வழங்குகின்றனர்.
சோழநாடு என்பது சோழவளநாடு, தொண்டை நாடு என்று இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொரு நாடும் கூற்றங்களாக, சிறுநகரங்களாக, சிறுநாடுகளாக, மண்டலங்களாக வகுக்கப்பட்டன.
தலாமி என்ற யவண வரலாற்று ஆசிரியர், பிளினி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், கிரேக்கர் தம் பெரிப்ளுஸ் என்ற நூல் இவற்றின் வாயிலாக அறியலாகும் செய்திகள் சோழநாட்டின் பெருமையை நமக்குப் பறை சாற்றி நிற்கின்றன.
சோர்நாடு என்று இவர்தம் குறிப்பில் இடம்பெறுவது சோழநாடு என்பது வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு கிரேக்கத்தில் உள்ள காபேரிஸ் என்ற சொல்
காவிரியைக் குறிக்கும். அம்மொழியில் கடைசியில் ஸ்(5) உச்சரிக்கப்படுவதில்லையாம். அவ்வாறெனில் காபேரி என்பது நமது காவிரியைக்
குறித்து அதன் பட்டினமாம் காவேரிப் பூம்பட்டினத்தையே குறித்து நிற்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நவீன தேசப் படத்திற்கும் தாலமி வரைந்துள்ள தேசப்படத்திற்கும் வேறுபாடு உள்ளதாம். நவீன தேசப் படத்தில் அட்சரேகை நில நடுக்கோடு 0 (சுழியம் – பூஜ்ஜியம்) (பாகை – டிகிரி) என்பது சுமத்திர தீவின் நடுவில் செல்கிறது. ஆனால் தலாமி வரைந்த நிலப்படத்தில் இலங்கையின் நடுவில் நிலநடுக்கோடு செல்கிறது. இதனால் 60 பாகையைக் கூட்ட நவீன அட்சரேகை கிடைத்து விடுமாம்.
அதுமட்டுமா? அது போலவே 0 (சுழியம் – பூஜ்ஜியம்) நவீன தீர்க்கக் கோடு கிரீன் வீச் வழியே செல்கின்றது. ஆனால் தாலமி கணிப்பு 00 டிகிரி (பாகை) ஐஸ்லாந்தில் தொடங்கிற்று. ஐஸ்லாந்து கிரீன் வீச்சுக்கு மேற்கே 200 டிகிரி உள்ளது. 200 டிகிரியைக் கழித்தால் நவீன கிரீன்வீச் கிடைத்துவிடும்.
தாலமி 329.7-ல் இருப்பது பெரே (டீநசயந) இது திருச்சிக்கும் கரூருக்கும் செல்லும் பாதையில் “பாராய்” என்ற திருப்பராய்த்துறை என்னும் இடத்தைக் குறிக்கின்றது.
இது மேற்கே திருச்சியிலிருந்து 13கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பெரே என்ற இந்தப் பதிவு பேரூர் ஆகக் கூட இருக்கலாம்.
தென்னகரா என்ற சொல் தென்னரங்கரம் என்பதான ஸ்ரீரங்கத்தைக்
குறிக்கலாம் என்று தாலமி பற்றி எழுதிய வி.எஸ்.வி. இராகவன் அவர்கள் குறிப்பிடுகிறார். (பழங்கால சோழர் வரலாறு – பக். 16,22)
வடமொழியில் சோரன் என்ற சொல்லுக்குத் திருடன் அல்லது கள்ளன் என்பது பொருள். சோரன் என்பது உருமாறி சோழன் என்று ஆனதாக வரலாற்று ஆசிரியர் டி.ஆர். பந்தர்க்கர் கூறியுள்ளார். (டீhயனெயசமயச. னுச. யுnஉநைவெ ஐனெயை Pயபந-89). இது தவறான பொருளாகும். தமிழினத்தை இழித்துப் பேச நினைப் போரின் இழிந்த தன்மை. மேலும் வல்லின ற கரம்தான் ழ கரமாகத் திரியுமே ஒழிய, இடையின ர கரம் ழ கரமாகத் திரியாது. இது தமிழ்மொழியின் இயல்பினை அறியாதவரின் விழைவார்ந்த விருப்பமாகத் தோன்றுகிறது என்று “சேர சோழ பாண்டியர்” என்ற நூலில் மயிலை. சீனி வேங்கடசாமி கருத்துரைத்துள்ளார்.
சோழர்களைச் செம்பியன், சென்னி, வளவன், கிள்ளி எனத் தனித்தனியாக
அழைப்பினும் இவர்தம் ஒட்டுமொத்தப் பெயர் சோழரே. மன்னர்கள் மட்டும்
அல்லாது நிழக்கிழார்களும், அரையர்களும் சிற்றரசர்களாக இருந்தும் சங்க காலத்தில் ஆண்டு இருக்கிறார்கள்.
பழவேல் தரையன் பழுவேட்டரையன்.
முத்தரையன் முத்தரசன்.
சோணாட்டுப் பிடவூர்க் கிழான்.
சிறுகுடிக் கிழான்.
இருங்கோவேள்.
வல்லம் கிழான்.
மலையமான்.
கொல்லிமலை அரசன்.
ஆர்க்காடு சோழன்.
தொண்டைமான்.
ரேனாட்டுச் சோழன்
என்பவர்களே அவர்கள், இவர்களைத் தவிரவும் பட்டையதார்கள், நிலம்
உடையர்வர்கள், அம்பலக்காரர்கள், கிழார்கள், நாட்டார்கள், வேளாளர்கள், முத்தரையர்கள், காவுந்தர்கள், காவல்காரர் போன்றவர்களும் சோழப் பேரரசிற்குத் துணையாக நின்று ஆள்வதற்குத் துணை நின்றிருக்கிறார்கள். (பழங்காலச் சோழர் வரலாறு – பக். 32)
இவர்களிடம் அந்தப் பகுதி வளம்;, நீர்ப்பாசனம், வரிவசூல், தண்டம்,
வாணிகம், தொழில், வேளாண்மை, மேற்பார்வையிடுதல் போன்றவை ஒப்படைக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டது.
சோழவள நாட்டில் அகத்திய முனிவர் வருகைக்கு முன்னரே சோழர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். சோழ மன்னன் முசுகுந்தன் காலத்தில்தான் ஆரிய
பிராமணர் செல்வாக்கு ஏற்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஊர்தோறும்
பிராமணர் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. பிராமணர் குடியிருப்பு மையப்படுத்தப்பட்டது. சாதியமுறை குடியிருப்பு உருவானது என்பதும் அவர்தம் கணிப்பு. (பழங்காலச் சோழர்களின் வரலாறு – பக். 71).
தமிழ்நாட்டில் சாதிய முறைக்கு வித்திட்ட முசுகுந்தச் சோழனுக்குப் பின்னர்
காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் களப்பிரர், பல்லவர், பிற்காலச்
சோழர்கள் காலத்தில் மெல்ல மெல்ல உயர்ந்து தீண்டாமை உச்சத்துக்கு உயர்ந்தது. அதனால் சாதீயம் ஒழிக்கப் பெரியபுராணத்தைச் சேக்கிழார் எழுதி சாதீயத்தை ஒழிக்கப் பாடுபட்டார் என்பதும் தெளிவு.
இத்துணை சிறப்பு வாய்ந்த சோழப் பேரரசின் பெண்மை நிலைப்பாடு குறித்து
அறிய வேண்டியுள்ளது அவசியம் மட்டுமல்ல ஆர்வமும் கூட. ஏனென்றால் சோழர்காலத்தில் தான் கலைகளின் வளர்ச்சியும் போற்றுதலும் உச்சகட்டத்தில்
இருந்திருக்கிறது. குறிப்பாக கட்டடக்கலையும், கோயில் கலையும் மகுடம் கூட்டியது என்றே கூறமுடியும். அவ்வாறெனின் கலைகளுக்கும் பெண்களுக்கும் உள்ள சம்பந்தமும் பிரிக்க முடியாததே!
எனவே சோழர் காலப் பெண்மையை ஒட்டு மொத்தமாகக் கூறிவிட முடியுமா?
என்பது கேள்விக்குறியே. அரசமகளிர், சாமானியப் பெண்டிர், கலைகளோடு தொடர்புடையவர் என முப்பரிமாணங்களில் சோழர் காலப் பெண்களை நோக்குவதே! சாலப் பொருத்தம் என்று தோன்றுகிறது.
சோழ அரசன் என்றவுடன் ராஜராஜசோழன் அவன் குலப் பெண்டிர் என்றவுடன் அவன் தமக்கையார் குந்தவைநாச்சியாருந்தான் இக்காலத் தமிழ் மக்கள் மனதில்
முதற்கண் தோன்றும் உருவங்களாக உள்ளன. அதற்குக் காரணம்
தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த இராஜராஜசோழன் என்ற திரைப்படம். அப்படத்தில் வரும் காட்சி ஏடுதந்தானடித் தில்லையிலே… என்ற கணீர்க் குரலுடன்
தோன்றும் ராஜலெஷ்மியின் இராஜமாதா தோற்றம். ஆணையிடும் தோரணை, வழிநடத்தும் பாங்கு, பக்தித் திறம், இசைப் புலப்பாடு, அழகும் அறிவும் நிறைந்த இராஜகளை இத்தனையும் அச்சோழர் குலப் பெண்ணிடம் நிறைந்திருந்ததை நாம் கண்டு களித்தோம்.
மற்றொரு புனைகதை கல்கியின் “பொன்னியின் செல்வன்” தமிழ் மக்களை
எழுத்தாலும், வரலாற்றுச் செய்திகளாலும் இராஜதந்திரக் காட்சிகளாலும், விவரணைகளாலும் கட்டிப் போட்ட நாவல். அதில்வரும் பெரிய குந்தவை, சின்ன
குந்தவை, நந்தினி, பூங்குழலி எனும் இவர்கள் நம் மனதில் ஆழப்பதிந்த
கதாபாத்திரங்கள். அரசகுலப் பெண்டிரின் அத்தனை திறமைகளும் கொண்ட பெண்கள் இருவர். பழிவாங்கும் மனம் படைத்த பெண். அன்பு செலுத்துதற்கும் விட்டுக் கொடுத்தற்கும் முகாரி ராகம் பாடுவதற்கும் என சோக வடிவில் ஒரு
சாமானியப் பெண் என இவர்களைப் படைத்துக் காட்டியது அந்நாவல். கற்பனை மாந்தர்கள்தானே என்று கடந்து போக முடியாத கல்வெட்டுப் பாத்திரங்கள் அவை.
சங்க இலக்கியப் பக்கங்களைப் புரட்டினால் அரிதான ஒரு சம்பவத்தை உணர்த்தும் பாடல் ஒன்று புறநானூற்றிலே பதிவாகியுள்ளது. முட்டிக் கொண்டும்
முறைத்துக் கொண்டும் திகழ்கின்ற சேரசோழ பாண்டியராம் மூவேந்தர் ஒரு பெண்பாற் புலவரின் அறிவுரையை ஒருங்கே அமர்ந்து கட்டிக் கொண்டு கேட்டனர் என்பது அதிசயத்தக்கதுதானே! ஆம்! பாடாண் திணையில் அமைந்த வாழ்த்தியல் துறைப் பாடல்தான் அது.
சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு கூடியிருக்க அவரை ஒளவைப் பிராட்டி பாடிய பாடலும் அதுவே.
“நாகத்து அன்ன பாகுஆர் மண்டிலம் தமவே ஆயினும் தம்மொடு செல்லா@ வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து புhசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய நார் அரிதேறல் மாந்தி, மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்தவைகல்@ வாழச் செய்த நல்வினை அல்லது ஆழுங்காலைப் புணைபிறிது இல்லை@
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இதுவே@ வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கு மாமழை உறையினும்
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக நும் நாளே.”(புறம். பா. எண். 367).
“மூவேந்தர்களே! வேந்தராயினும் இறக்குங்கால் ஆட்சிபுரிந்த நாடு அவருடன்
செல்லாது. அவருடைய நாடு வழித்தோன்றல் கட்டு என்றாலும் சிலபோது
அதுவன்றி நோற்றார்க்கு உரிமை உடைத்தாக மாறிவிடும். இவ்வுலகத்தே வாழுங்காலம் நல் வினை புரிந்து வாழ வேண்டும். இறக்கும் போது ஒருவன் செய்த நல்வினையே துணையாவது அன்றிப் பிறிதில்லை என்பதை உணருங்கள்.” என்று
பெண்பாற் புலவர் ஒருவர் அறிவுரை கூறும் காட்சி பெண்மையின் திறத்தையும் உயர்நிலையையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இப்பாடற் சம்பவத்தினின்றும் மற்றொரு நுட்பத்தையும் காண முடிகிறது.
சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் காணப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என மூவரும் கூடிய கூட்டுறவு அவையில் மூவர்க்கும் பொதுவாகவே,
“ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறைப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து”
என்று ஒளவை அறிவுறுத்துகிறார். அவர் காலத்தில் பிராமணர்களுக்குத் தகுந்த
மதிப்பளிப்பது குறைந்திருக்க மீண்டும் அம்மதிப்பை ஒளவையார் பெற்றுத்
தருகிறார். அதன் பின்னரே இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி மீண்டும்
பிராமணர்களுக்கு மதிப்புத் தரத் தொடங்கினான் என்று வரலாற்று ஆசிரியர்கள்
விகசித்து எழுதியுள்ளனர். வாழ்வின் உண்மை உரைத்தலோடு மட்டும் நின்றுவிடாது. ஒரு இனப் போற்றுதலுக்கான பரிந்துரையையும் மன்னர்க்கு ஒரு
பெண் வழங்கியதையும், அதனைச் சோழமன்னன் ஏற்றதையும் காணும்போது, சோழர்கள் பெண்மையைப் போற்றி வந்துள்ளனர் என்றே தெளிய முடிகிறது.
தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தின் வழி நாம் அறிந்து கொண்ட சேரன் செங்குட்டுவன், இளங்கோ அடிகள் இவர்களின் தாய் நற்சோணை என்பவள் கி.பி. 105-135 வரை வாழ்ந்த சோழ மன்னன் மணக்கிள்ளி என்பவனின் மகளாவார். “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்ற உன்னத சிந்தனையை
உலகுக்கு தருதற்பொருட்டு கருவிலே உருவேற்றிய நற்சோணைக்கு நல்வணக்கங்கள் கூறுவோம்.
பாண்டிய நாட்டில் சைவந் தழைத்தற்குக் காரணமாக விளங்கிய மங்கையர்க்கரசியாரும் சோழர் குலப் பெண்ணே. பாண்டிய மன்னனை மணந்து சோழர் குலமகளாய் சைவந்தழைக்கத் தக்க துணையாய் நின்றவர். அதனால்
தானே பக்தி இலக்கியமாம் தேவாரமும் அவரைப் போற்றிப் பரவுகின்றது. மன்னனுக்காய் புறத்தும் மதத்திற்காக அகத்தும் வெளித்தெரியாது திருநீறுபூசிக் கொண்டு அத் திருநீற்றை மன்னணும், மன்னன் வழி மக்களும் ஏற்றுப் பகிரங்கமாய்
பறைசாற்றிய இராஜதந்திரி மிகுந்த மதியூகியாகவும் மங்கையர்க்கரசியார் திகழ்ந்தார் என்பது வியத்தற்குரியது.
“மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரிவளைக் கை மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவ…”
என்று சோழர்குலமகள் பாண்டியன் மாதேவி பரவும் பெருமையுடைவன் சிவன், ஆலவாய் அண்ணல் என்று இறையையே குறிப்பிடும் அளவிற்குப் பக்தியின் உன்னத இடத்தைச் சோழர்குலப் பெண்கள் பெற்றிருந்திருக்கிறார்கள் என்பது போற்றுதற்குரியது.
மூவேந்தருடன் தொடர்புடையதோடு மட்டுமல்லாமல் வரலாற்றில் பிறநாட்டுடன் அல்லது அண்டைநாட்டுப் பெண்களின் தொடர்புடனும் சோழதேசம் தனது ஆட்சி
எல்லையை மற்றும் கலாச்சார எல்லையினை விரிவுபடுத்தியிருந்ததையும் காணமுடிகிறது.
மணிமேகலை என்ற ஐம்பெருங் காப்பியத்தால் அறியப்படும் மன்னன் சோழன் நெடுமுடிக் கிள்ளி. பூம்புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன்
(கி.பி. 135-170) அவனுடைய மகன் உதயகுமாரன். இளவரசனான இவன் சிலப்பதிகார மாதவியின் மகள் மணிமேகலையை ஒருதலையாகக் காதலித்து வந்தான். பல நேரங்களில் பல வழிகளில் அவளை அடையமுயன்றான். அவனது தொல்லைக்குப் பயந்து மணிமேகலா தெய்வத்தை வேண்டுகிறாள் மணிமேகலை.
அத்தெய்வம் அவளை மணிபல்லவத்தீவிற்குத் தூக்கிச் செல்கிறது. அங்கே மணிமேகலைக்கு அமுத சுரபி கிடைக்கிறது. அதைக் கொண்டு காஞ்சியிலும், பூம்புகாரிலும் பட்டினி இருப்போரைக் கண்டு அவர்களுக்குப் பசிப்பிணி மருத்துவம் புரிகிறாள் மணிமேகலை. இங்கே காதலை மறுக்கும் உரிமையும், பொதுத்தொண்டு புரியும் மனத்தின்மையையும் பெண் பெற்றிருக்கிறாள் என்பதை அறிய முடிகிறது.
அதனோடு அமையாது, இளவரசன் கொல்லப் படுகிறான். தன் மகனின் மரணத்திற்குக் காரணம் மணிமேகலையே என்று தவறாக எண்ணிய அரசமாதேவி சீர்த்தி பல துன்பங்கள் தந்து மணிமேகலையைக் கொடுமைப்படுத்தி சிறையில் அடைக்கிறாள். ஈண்டு பழிவாங்கும் மனநிலையிலும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். அந்தச் சிறைக் கோட்டத்தையும் அறக்கோட்டமாக்கிப் பின் அரசமா தேவியைத் தவறுணர்ந்து திருந்துமாறு மணிமேகலையின் செயல்கள் அமைகின்றது.
“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு”
எனும் வள்ளுவனின் வாக்குக்கு வாழ்வியல் சான்றாகவும் மணிமேகலை விளங்கியிருக்கிறாள்.
இம்மணிமேகலையில் வரும் நெடுமுடிக்கிள்ளி மன்னன்தான்
“புன்னையங்கானல்” எனும் மணல்பகுதியில் இருக்கும்போது அங்கு வந்த அழகியை காந்தருவமணம் புரிகிறான். அந்தப்பெண் பீலிவளை. முகா ஈழநாகன் (கி.பி. 180 – கி.மு. 200) என்ற இலங்கை மன்னனின் மகள் அவள். அந்த ஈழநாட்டுப் பெண்ணுடனான தொடர்பு நாகர் எனும் வம்சத்தோடு கொண்ட கலப்பு பின்னர் இலங்கையிலும் தமிழக்க் கலாச்சாரப் பண்பாட்டுக் கலப்பு ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. (பழங்காலச் சோழர்களின் வரலாறு – அ. சவரிமுத்து – பக்.146)
அக்காலகட்டத்தில் அமைந்த மன்னர்களின் பெயர்கள் தமிழ் பெயர் பாதியாகவும் நாகா பெயர் பாதியாகவும் இருப்பதை அறிய முடிகிறது. சான்றாக சில இலங்கை மன்னர்களின் பெயரைக் காண்போம்.
முதலாம் கயவாகு, மகா ஈழநாகன், பட்டிகதீசன், கனித்த தீசன், குஞ்சநாகன், குகநாகன், ஸ்ரீநாகன், ஒகரிக நாகன், அபய நாகன் என அடுத்தடுத்து ஒன்றரை நூற்றாண்டுகள் இவர்கள் ஆட்டி புரிந்துள்ளார்கள்.
மகா வம்சத்தை ஈழத்தின் கதை என்ற எழுதிய கே.வி.எஸ். வாஸ் என்பவரே இதனை வலியுறுத்திக் கூறுகிறார். நாகன் என்ற பெயருடைய மன்னர்கள் தமிழ் இரத்தக் கலப்புடையவர்கள் என்று யூகிக்க இடமுண்டு. இவர்கள் புராதன நாகர்
வகுப்பைச் சார்ந்தவர்களுடன் ரத்த சம்பந்தம் உடையவர்கள் என்ற சிலர் கருதுகிறார்கள். இன்றுள்ளது போல் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வகுப்பு வேற்றுமையோ அல்லது பாஷை வேற்றுமையே அன்று இல்லாத படியால் கலப்பு மணம் நடப்பதும், ஒரே குடும்பத்தில் தமிழர் பெயருடையவர்களும் சிங்களப் பெயருடையவர்களும் இருப்பது சர்வ சாதாரணம். அனேக சிங்கள மன்னர்களின் பட்டத்து இராணிகள் தமிழ்ப் பெயர் கொண்டவர்களாகவும், தமிழ்ப் பெண்களாகவும், சுத்த சைவர்களாகவும் இருந்தனர். எனவே தான் பௌத்தத்தையும் சைவத்தையும் பேணி வளர்த்ததோடு ஒவ்வொரு பௌத்த விகாருக்கும் அருகில் ஒரு சிவன்கோயில்
கட்டுவது அன்றைய வழக்கமாக இருந்தது. இன்றைக்கும் கூட பாழடைந்து
கிடக்கும் தாது கோபுரங்களுக்கும் அருகில் சிவலிங்கம் தென்படுவதும்
இந்தப்புராதன சரித்திர உண்மையையே காட்டுகின்றன. (ஈழத்தின் கதை.
திரு.கே.வி. வாஸ்-பக். 262-263).
இதைக் கொண்டு பார்க்கும்போது நெடுமுடிக்கிள்ளி மனைவி மகாராணி
தனது மகன் உதயகுமாரன் கொல்லப்பட்ட சோகத்தால் மணிமேகலையைச்
சிறையில் இட்டுக் கொடுமைப்படுத்தினாள். அதை ஒடுக்கப் பௌத்தர்கள்
(மணிமேகலை பௌத்தப் பெண் துறவி என்பதும் அவள் தாய் மாதவி தன் மகள் மணிமேகலையுடன் தன் கணவன் கோவலன் மரணத்திற்குப் பின் பௌத்தம் தழுவினாள் என்பதும் சிலப்பதிகாரத்தின் மூலம் பெறப்பட்ட செய்தியே) திட்டமிட்டு
மணிமேகலையைச் சிறையில் இருந்து மீட்டு பாய்மரக்கப்பலில் ஏற்றி இலங்கைத் தீவில் இறக்கி அவளைத் துணிவுடையவளாக மாற்றியுள்ளனர். பின் அவளுடன்
இணைந்து அனுராதபுரம் மாவலி கங்கைப் பகுதியில் கிடைக்கும் உணவுப் பொருள்களைப் பாய்மரக்கப்பலில் ஏற்றி சோழ நாட்டின் பஞ்சத்தைப் போக்கி சோழநாட்டு மக்களைத் தன் வசம் செய்து இருக்கிறார்கள்.
பின்னர் அதன் மூலம் சமணர்களும், பௌத்தர்களும் சோழநாட்டிலும் பாண்டிய நாட்டிலும் தொண்டைநாட்டிலும் மக்களைத் தன் வசப்படுத்தி உள்ளனர்.
இதற்குக் காஞ்சியை ஆண்ட இளங்கிள்ளி ஒத்துழைத்து இருக்கிறான். மணிமேகலையை காய சண்டிகைப் போன்று உருவாய்க் கொண்டு வந்துள்ளாள். இது கோச் செங்கண்ணானுடன் கணைக்கால் இரும்பொறை செய்த போருக்குப் பின் கிடைத்த பாடத்தைக் கொண்டு மணிமேகலை என்ற பெண் துறவி மூலம் களப்பிரர்
படையெடுப்புக்கு முன் தயாரிப்புச் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கு
நெடுங்கிள்ளி பகடைக் காயாகப் பயன்பட்டு இருக்கிறான் என்பது வரலாற்று ஆய்வாளர்களுடைய கருத்து. இச்சம்பவத்திற்குப் புராணங் கலந்த செயல்பாடுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அமுதசுரபி அள்ள அள்ளக் குறையாது. பசிப்பிணி பஞ்சத்தைப் போக்கும் ஆற்றல் உடையது என்றெல்லாம் பகுத்தறிவுக்குப் புறம்பான
விசயங்கள் கூறப்பட்டன. அவ்வாறெனில் அப்பிச்சைப் பாத்திரம் பின்னர் என்னவாயிற்று? யாரேனும் அழித்து விட்டனரா? இல்லையேல் தானே மறைந்து விட்டதா?
மணிமேகலா தெய்வம் சோழன் மகாராணி சீர்த்தியிடம் இருந்து காப்பாற்ற மணிமேகலையை வான மண்டல வழியாக மணிபல்லவத் தீவிற்குக் கொண்டு சென்றது. அங்கே புத்தப் பீடிகை வைக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்த பீடிகையில் புத்தர் பிரானை தினமும் வழிபட்டது. ஏழு நாட்கள் கடந்து அமுத சுரபியைத் தந்து மீண்டும் பூம்புகாருக்குக் கொண்டு வந்துவிட்டது. இவையெல்லாம் பகுத்தறிவுக்கு
ஒத்து வராத கருத்துகள். ஏனெனில் அக்காலத்தில் இலங்கைக்கு நீர்வழி மாத்திரமே செல்ல முடியும்.
இந்த நெடுமுடிக்கிள்ளி மன்னன் காலத்தில் மெல்ல மெல்லக் காவிரியின்
வெள்ளம் சரியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தப் படாமல் கவனிக்காது விடப்பட்டது. எனவே அந்தச் சூழலில் மழையுமின்றி போகப் பஞ்சம் வந்திருக்கிறது. இன்றும் உறையூரில் மணல் வாரி மழை ஒருகாலத்தில் பெய்ததாகச் செவிவழிச் செய்தி உலவுகின்றது.
ஆகவே, இயற்கைச் சூழலாலும் சோழ மன்னனின் கவனம் இன்மையாலும், பாலாறு போன்றவை மழையின்றி வரண்டு போனதாலும் பஞ்சம் நிலவி உள்ளது. அதைப் பௌத்தர்கள் மணிமேகலை வாயிலாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இச்சம்பவங்கள் எல்லாமே நெடுமுடிக்கிள்ளி காலத்தில் நடந்தவை. அதன் தொடக்கமாக பௌத்த மதப் பிரச்சாரத்தின் களமாக அமைந்தது மணிமேகலை காவியம் பௌத்த மதக் கோட்பாடுகளைப் புகுத்தி சீத்தலைச்சாத்தனார் அதனை அரங்கேற்றினார் என்பது வரலாற்றாசிரியர்களின் முடிவு. இவ்வாறாக இராஜாங்க மாற்றத்திற்கான காரியங்களிலும் பெண்கள் ஈடுபட்டிருந்தமை புலனாகிறது.
சோழர்களின் நகர அமைப்பும் மக்கள் குடியிருப்பும் பெண்களை மனதிற்கொண்டே அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கோ நகர் என்று சொல்லக் கூடிய உறையூர், பூம்புகார், கழுமலம், அழுந்தூர், நெய்தலங்கானம், கரூர், ஆவூர் இவைகள் எல்லாம் தலைநகரமாக ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்று இருந்தவை. அதிலும் குறிப்பாக உறையூர் பூம்புகார் பன்னெடுங்காலமாக இருந்தன. கோஇல் – அரசன் வாழும் இல்லம். நட்ட நடுவில் அரசன் வாழும் அரண்மனை ஆகும். அதை அடுத்து அந்தணர்கள் அறங்கூறும். அவையர், சான்றோர்கள், புலவர்களின் வீடுகள்
உள்ள தெருக்கள் சுற்றிலும் இருக்க, அதை அடுத்த சுவற்றில் வணிகர்கள்
வீடுகள் இருக்க அதற்கும் வெளிவட்டத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டன.
காரணம், நதிகள் கடற், அறங்கூற உள்வட்டம், உள்நாடு, வெளிநாடுகளில் வாணிகம் செய்ய வேண்டி வணிகர் செல்ல வேண்டி இருப்பதால் உள்வட்டத்தில் குடியிருப்பு வணிகர்களுக்கு அமைக்கப்பட்டது.
“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை”(தொல். அகம். 980)
என்பதால் உள்வட்டத்தில் பெண்கள் பாதுகாப்புக் கருதி அமைக்கப்பட்டது. வேளாண்மை செய்ய வயலுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் வேளாண் மக்கள் குடியிருப்புகள் சற்றே புறத்தே அமைக்கப்பட்டன.
வெளிச்சுற்றில் வினை ஏவலர் குடியிருப்பு அமைக்கப்பட்டது. அரண்மனைவேலை, வணிகவேலை, வேளாண் வேலை எல்லோருக்;கும் வினை
ஏவலர்ப் பணியாள் வேண்டியிருப்பதால் அவர்கள் வெளி வட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். இவைகள் வேலை வாய்ப்பைக் கருதியே தொல் தமிழ்நாட்டில் சோழர் நாட்டில் குடியிருப்புகள் சிந்து சமவெளி காலம் முதல் அமைக்கப்பட்டன. அந்தணர் என்போர் காமம், குடும்பவாழ்வு, செல்வம், புகழ் இவற்றை விரும்பாது ஒதுக்கித் துறவு பூண்டவர் ஆவர்.
அந்தணர் என்போர் அறவோர் அவரும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்… என்ற வரிகள் ஈண்டு சிந்திக்கத்தக்கது. பின்னர் அவரே துறவோர்கள் ஆயினர். இவர்கள் ஒதுக்கப்பட்டு பிராமணர்கள் அங்கே குடியமர்த்தப்பட்டனர். முதல்நிலைச் சாதிகள் உருவாகாத காலத்தில் தமிழகத்தின் நிலை குறிப்பாக சோழர்கால
ஊர்களின் நிலை இவ்வாறகத்தான் இருந்திருக்கவேண்டும். பிறகு வடஆரியர் நுழைவிற்குப் பின்னரே துறவோர், அந்தணர் ஆகியோர் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிராமணர் அந்த இடத்தில் வைக்கப்பட்டுச் சாதிப்பிரிவினையும் வர்ணாசிரம தர்மமும் ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என்பது வரலாற்றாய்வாளர்தம் முடிவாக அமைந்துள்ளது.
வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் என்ற நிலையில் பூம்புகாரிலிருந்து புறப்பட்ட வணிககுல அப்பாவிப் பெண்ணொருத்தி “தேரா மன்னா! என் கணவன்
கள்வன் அல்ல என வீரமங்கையாய் விசுவரூபம் எடுத்துப் பாண்டிய மன்னனின் சாம்ராஜ்யத்தையே போரின்றிச் சேதமின்றி சொற்போரால் தகர்த்த கண்ணகி கதை நாம் அறிந்ததே.”
கணவன் இழந்த செல்வம் அனைத்தையும் மீண்டும் பெற்று விடும்
அளவிற்குப் பெண்ணுக்கும் பொருளாதாரநிலை பெற்றோரால் ஏற்படுத்தித்தரப் பட்டிருக்கிறது என்பதை “சிலம்புள கொன்ம்” எனும் கண்ணகியின் ஒரு சொல்லால் இளங்கோவடிகள் நமக்கு உணர வைக்கிறார்.
மதுரையைத் தீக்கிரையாக்குகிறபோது கண்ணகியின் முன்னெச்சரிக்கை வார்த்தைகள் தீயார் மீது பற்ற வேண்டும் என்று கூறுவது சோழர்தம் வழக்கம் என்ற அறிய முடிகிறது. “பார்ப்போர், அறவோர், அந்தணர், பெண்கள், பசுக்கள்
இந்த ஐவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்பது எழுதாத சட்டமாக தமிழ்நாட்டு அரசர்களுள் ஓர் உடன்பாடு இருப்பதற்கும் சோழர்களே அடிப்படையாக
இருந்துள்ளனர். இந்நிலை சோழர்தம் பெண்களைப் பற்றிய கரிசனம் வெளிப்படுதற்கு அடித்தளமாக அமைகிறது.
வதுவைமணம் எனப்படும் அக்காலத் தமிழர்தம் திருமண முறையை அகநானூற்றுப் பாடல் ஒன்று பதிவு செய்திருக்கிறது. பண்பாட்டுச் சடங்கான
அந்நிகழ்வில் பெண்டிர்தம் நிலையினையும், அவர்தம் முக்கியத்துவத்தையும் வாழ்வியல் முறைகளையும் நல்லாவூர் கிழார் எனும் புலவர் நம் கண் முன்னே
படம்பிடித்துக் காட்டுகிறார். சங்ககாலத் திருமண முறையையே வலியுறுத்துக் காட்டுகிற நிகழ்வுகளை வரிசைப் படுத்துகிறார் சோழர் வரலாறு நூல் எழுதிய
டாக்டர். இராசமாணிக்கனார்.
எனப் பொதுவாகவே சாமானியரின் திருமண முறைகள் அமைந்திருக்கின்றன.
பின்னாளில் ஐயர் வந்து நடத்தும் திருமணத்தை அக்காலத்தில் பெண்களே நடத்தியிருக்கின்றனர்.
“உழுந்து தலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிறை கால் தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி, மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப்புகழ் நாள் தலை வந்தென உச்சிக்குடத்தர், புத்தகல் மண்டையர், பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர, புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, கற்பினின் வழாஅ, நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக! ஏன, நீரோடு சொரிந்த ஈர் இதழ் அலரி,
பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல்மணம் கழிந்த பின்றை,
கல்லென் கம்மையர், ஞெரே ரெனப் புகுதந்து,
“பேர் இற்கிழத்தி ஆக” எனத் தம்ர்தர, ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து, ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ, முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப அஞ்சினள் உயிர்த்த காலை “யாழ நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை” என இன்நகை இருக்கை பின், யான் வினைவயின் செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர, அகம் மலி உவகையள் ஆகி, முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சியோளே – மாவின் மடம் கொள் மதை இய நோக்கின்,
ஒடுங்கு ஈர் ஓதி மா அயோளே”.(நல்லாவூர்க் கிழார்-மருதம்-86 அகம்.)
இப்பாடல் பழந்தமிழ் மக்கள் நடத்திய திருமணம் குறித்து விளக்கம் தருவதாக அமைகின்றது. திங்கள் உரோகிணியோடு கூடிய நாள் திருமணத்திற்கு உரிய சிறந்த நாளாகக் கருதப்பட்டது. வீட்டிற்கு முன் வரிசையாக கால்களை நட்டுப் பந்தலிட்டனர். பந்தலின் கீழ்ப் புதுமணல் பரப்பினர். மனைவிளக்கு ஏற்றி
மாலைகளைத் தொங்க விட்டனர்@ உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த
குழைவாக வெந்த பொங்கலோடு பெருஞ்சோற்றுத் திரளை உண்பது இடைவிடாது நிகழ்ந்து கொண்டே இருந்தது.
முழுமையான செவ்விய பெண்கள் திருமணத்தைச் செய்து வைத்தனர். புதல்வனைப் பெற்றெடுத்த மங்கல மகளிர் நால்வர் கூடிக் கற்பினின்றும் வழாது வாழ்க என வாழ்த்தினர். நீரோடு நெல்லும் மலரும் கலந்து மணமகனின் கூந்தலில் தூவினர். இவ்வாறு வதுவையாகிய திருமணச் சடங்குகள் நிகழ்ந்தன.
பின்னர் உறவினர்கள் தலைமகனிடம் தலைவியைத் தந்து “பெருமனைக் கிழத்தி ஆகுக” என வாழ்த்திய செய்தியும் இப்பாடல் வழி அறியமுடிகிறது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருப்பது போல மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிய நிகழ்ச்சி இப்பாடலுள் இடம் பெறவில்லை. மங்கல நாண் அணிதல் எனும் தாலி கட்டிய குறிப்பும் இல்லை. இது பின்னாளில் புகார் நகரம் சோழநாட்டில் வந்து சேர்ந்த வழக்கமாக இருக்க வேண்டும். எனவே தான் மங்கல வாழ்த்துப்
பாடலில் தாலிகட்டி, மறை ஓதி அந்தணர் நடத்திய திருமணத்தை சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளனர்.
மற்றைய பெண்டிர் கூடி நின்று வாழ்த்த “பெருமகனைக் கிழத்தி ஆகுக” என்ற வரிகளால் சோழர்காலச் சாமானியப் பெண்கள் மனைக்கு விளக்கம் மடவார் என்பதற்கிணங்கவே வாழ்ந்திருந்தனர்.

நெஞ்சறையில் ஐம்புலன்கள் நானகந்தை மீட்டான்ம
அஞ்சறைப் பெட்டியில் இட்டிடு -வெஞ்சிறையில்
போட்டாலும் வைகுண்டம் போயும், மனதுக்கு
மாட்டாது மாரீஸ மான்’’….!
அடியேன் உவாச….!
——————————————–
மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்
அந்திம நாளேனும் அய்யகோ குந்திசேயே(குந்திமகன் -குந்திமவன்)
நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!
இந்த வார வல்லமையாளர்!
இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் சற்குணா பாக்கியராஜ் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மொழியியல் மற்றும் பறவைகள் ஆய்வில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவரது கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை வல்லமை வாசகர்களிடம் பெற்றுள்ளன.
இவரை வாழ்த்திய முனைவர் ராஜம் “இவருடைய கட்டுரைகளின் தனித்தன்மை என்னவென்றால் …
‘சங்கப்பாடல்களில் பறவைகள்’ என்று வெறும் விவரிப்புக் கட்டுரையாக (descriptive essay) எழுதாமல் … அந்தப் பாடல்களில் காணும் செய்திகளுக்கும் பறவையியலில் கூறப்படும் செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசி எழுதுவது.
இவருடைய கட்டுரைகளை ஊன்றிப்படித்தால் சங்கப்பாடல்களில் வலம்வரும் பறவைகளைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.” என குறிப்பிடுகிறார்
சங்க இலக்கியத்தில் சிட்டுக்குருவி பற்றி இவர் கூறும் கட்டுரை மிக சிறப்பானது
“————————————பாரி பறம்பின்
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலை படர்தந்தாங்கு” (ஒளவையார், அகநானூறு: 303: 10௧5)
இந்தப் பாடலில் ஒளவையார், “பாரியின் பறம்பு மலையிலிருந்து காலை நேரத்தில் குருவிக்கூட்டம் வரிசையாகப் பறந்து, மடிந்திருக்கும் பின்பகுதியை உடைய செந்நெல்லைக் கொண்டுவருவதற்காக இரைதேடி ஒன்று சேர்ந்து இங்கும் அங்குமாகச் சுற்றி, வருத்தம் கொள்ளும் மாலை நேரத்தில், திரும்பிவந்து படர்ந்து நிற்கின்றன” என்கிறார்.
மேற்கண்ட பாடலில் புலவர் பறவைகள் இரைதேடும் முறையை மட்டும் வர்ணித்துள்ளார். பறவைகளின் பெயர், தோற்றம், நிறம், அலகு, அல்லது கால்களைப் பற்றிய வர்ணனைகள் கொடுக்கவில்லை. ஆகவே படிப்பவர்களின் மனத்தில் இந்தக் குருவிகள் எதுவாக இருக்கலாமென்ற கேள்விகள் எழலாம்.
இந்தப் பாடலின் விளக்கவுரையில் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் (அகநானூறு: நித்திலக்கோவை, ப்,12) “குரீஇ இனம்- கிளிகளின் கூட்டம்” என்று குறித்துள்ளார். ஆனால், சங்க இலக்கியத்தை ஆராயும் போது புலவர்கள் கிளிகளைக் குரீஇக்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகக் காணப்படவில்லை.
திரு. பி. எல். சாமி, “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976, ப், 273) என்ற நூலில், “கிளியினத்தைப் பற்றித் தெளிவாகச் சங்க நூல்கள் கூறுவதால் குருவி என்பது கிளியன்று” என்றும், சங்க நூல்களில் வர்ணிக்கப் பட்டுள்ள தினை கவரும் குருவியும், நெல் கவரும் குருவியும் முனியாக் குருவிகளே” என்கிறார். மேலும் அகநானூறு, 303- ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ள நெல் கவரும் குருவிகளை, “The Spotted or the Black Headed Munia” (புள்ளி முனியா அல்லது கருப்புத் தலை முனியா) என்று கொள்ள வேண்டுமென்கிறார்.
சங்க இலக்கியத்தில் புலவர்கள் சிட்டுக் குருவியை “மனையுறை குரீஇ” (குறுந்தொகை: 46) “உள்இறைக் குரீஇ “(நற்றிணை:181) உள்ளூர்க் குரீஇ” (குறுந்தொகை: 85) என்றும், தூக்கணாங் குருவியை “முதுக்குறை குரீஇ” (நற்றிணை: 366), “தூங்கணம் குருவி” (குறுந்தொகை:374, புறம்:225), என்றும், “Alpine Swift” என்னும் குருவியைக் “குன்றத் திருத்த குரீஇ” ( புறம்: 19) என்றும் குருவிகளை வேறுபடுத்தி வர்ணித்துள்ளனர். வேறு குருவிகளைப் பற்றிய வர்ணனைகள் காணப்படவில்லை.” என்கிறார்
அறிவியலையும், இலக்கியத்தையும் ஒருங்கிணைத்து எழுதும் வல்லமையாளார் சற்குணா பாக்கியராஜ் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.இவரை விருதுக்கு பரிந்துரைத்த முனைவர் ராஜம் அவர்களுக்கு நம் நன்றிகள்
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )