மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 12
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்
அவன் பேசி முடித்த போது அவன் உடல் மாறி வெளிச்சத்தால் நிரம்பியது. அவனுடைய குரல் வானிலிருந்து வருவதைப் போல் உரத்த சத்தத்தோடு கேட்டது.
“எல்லா மனிதர்களும் தங்கள் தேவைகளைத் தாங்கள் பூர்த்தி செய்து கொள்வதால் மட்டும் வாழ்வதில்லை, அன்பினால் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
“அந்தச் சிறுமிகளின் தாய்க்குத் தன் குழந்தைகளுக்கு எது தேவை என்பது தெரிவிக்கப் படவில்லை. அது போல் அந்தச் செல்வந்தனுக்கும் எது தேவை என்று அறிய முடியவில்லை. ஒருவருக்கும் மாலை வரும் போது தனக்கு அணியப் பூட்ஸ் அவசியமா அல்லது தன் சடலத்திற்குச் செருப்புகள் தேவையா என்று பகுத்தறிய வாய்ப்பு அருளப்படவில்லை”.
“நான் மனிதனாக இருந்த போது உயிரோடு இருந்ததின் காரணம் ஒரு வழிப்போக்கனும் அவன் மனைவியும் காட்டிய இரக்கத்தாலும் அன்பினாலுமேயன்றி என்னுடைய முயற்சியினால் அல்ல. அந்த அனாதைச் சிறுமிகள் இப்போது உயிரோடு இருப்பது அவர்களின் தாயின் வளர்ப்பல்ல. ஒரு அந்நியப் பெண்ணின் கருணையினாலும் அன்பினாலும் தான்.
எல்லா மனிதர்களும் வாழ்வதின் காரணம் மனிதனில் காணப்படும் அன்பினால்தான். ஒருவருடைய தனி முயற்சியால் அல்ல. இறைவன் மனிதர்களுக்கு எது தேவை என்று வெளிப்படுத்தவில்லை. மனிதர்கள் தனித்து வாழ்வதை அவர் விரும்பாமல் அன்பினால் ஒன்று சேர்ந்திருப்பதை விரும்புகிறார்.
அன்பாயிருப்பவனிடத்தில் இறைவன் குடியிருக்கிறார். ஏனெனில் தேவன் அன்பாக இருக்கிறார்”.
இவைகளைக் கூறி முடித்த பின் அவன் இறைவனைத் துதித்தான். அவனுடைய குரலால் அந்தக் குடிசை நடுங்கியது. கூரை திறந்து அக்னி ஜூவாலை வானை நோக்கி எழும்பியது. தேவ தூதனுக்குச் சிறகுகள் தோன்றி பரலோகம் சென்றான். சைமனும், மனைவியும் குழந்தைகளும் கீழ் விழுந்து அவனை வணங்கினர்.
சைமன் தன்னிலைக்கு வந்தபோது அந்தக் குடிசை எப்போதும் போலிருந்தது. அவனும் குடும்பத்தினரையும் தவிர்த்து வேறு ஒருவரும் அங்கு இல்லை.
முற்றும்