இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 268 )

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் இவ்வாரம் என் மடல் மூலம் உங்களுடன் இணவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டு பிறந்து அவசரமாக மூன்றரை மாதங்கள் ஓடி முடிந்து விட்டன. காலச்சக்கரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது பருவகாலங்களை மாற்றி, மாற்றி சுழலும் இந்தப் பூமியின் வயதைச் சுழற்சியில் கூட்டிக்கொண்டே செல்கிறது. ஆழியினுள் விழுந்து மறையும் ஒரு சிறிய மழைத்துளிபோல் நாமும் இப்பூமியில் விழுந்து மறைகின்றோம் ஆனால் எம்மால் ஏற்படுத்தப்படும் காலடித்தடங்கள் தமக்குரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டுத்தான் செல்கின்றன.

இயற்கையின் முக்கியத்துவத்தை அறியாமல் இருக்கும் செல்வத்தையெல்லாம் செலவழித்து விட்டு ஓட்டாண்டியாவது போல இருக்கும் இயற்கைவளத்தைச் சுரண்டி அழித்து விட்டு எதிர்காலச் சந்ததியின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விட்டுத்தான் செல்கின்றோம். நாம் வாழும் காலம் மட்டும் எமக்குக் கிடைக்கும் வசதிகளை அனுபவிப்போம், அவ்வசதிகள் எத்தகைய அழிவுகளை இயற்கைக்கு ஏற்படுத்தினாலும் அது எங்களை நேரடியாகப் பாதிக்காதவரை கவலை கொள்ளத் தேவையில்லை எனும் வகையிலேயே எமது நடவடிக்கைகள் அமைகின்றன.ஆனால் இவற்றையெல்லாம் உணர்ந்து இதனால் ஏற்படும் அபாயங்களைப் பற்றி அறிவுறுத்திக் கொண்டிருப்போர் இல்லாமலில்லை. ஆனால் அவர்களின் குரல்கள் எத்தகைய வகையில் மக்களைச் சென்றடைக்கின்றன என்பது கேள்விக்குறியே!

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கை வசதியைப் பெருக்கிக் கொள்ள எண்ணுவது தவறாகாது. அத்தகைய ஓர் எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் வாழ்வில் போராடும் முனைப்பையே மனிதன் இழந்துவிடுவான். ஆனால் அவ்வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் இருக்கும் யதார்த்தச் சிக்கல்களை உணர்ந்து கொள்வதில்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. குழந்தை பிறந்தவுடன் ஓட முடியுமா? தவழ்ந்து, தத்தித் தத்தி நடந்து, நன்றாக நடைபயின்ற பின்னால் தானே ஓட முடிகிறது? அதேபோல நாம் ஆசைப்படுபவைகள் அனைத்தும் நாம் நினைத்த மாத்திரத்தில் எமக்குக் கிடைத்து விட வேண்டும் என்று எண்ணுவது மட்டும் எப்படிச் சரியாகும்? வாழ்வின் மகிழ்ச்சியின் அளவுகோலை நாம் தொலைத்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சர்வதேச அளவில் இயற்கைச் சீரழிவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தின் இலக்கைத் தவறவிட்டு விட்டார்களோ எனும் எண்ணம் ஏற்படுகிறது.

மேலைநாடுகள் எனக் கருதப்படும் நாடுகள் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் முன்னேற்றம் கண்டு அங்கு வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளின் தரத்தை உயர்த்தி வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதில் ஓரளவு வெற்றி கண்டு விட்டார்கள். ஆனால் இன்றைய உலகளாவிய ரீதியில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிற்கும் நாடுகளான சீனா, இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகளில் சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான முன்னேற்றத்தை அடைந்து விட்டார்களா? என்பது கேள்விக்குறியே.

இந்த நிலையில்தான் இன்று மேலைதேய நாடுகளின் அரசியல் போக்கில் ஒரு தீவிரவாதச் சுயநலப் போக்கிலான மாற்றம் தென்படுகிறது. இந்நாடுகளின் அரசுகள் தொடர்ந்து செய்த பல பொருளாதரக் கொள்கைத்தோல்விகளை வெளிநாட்டவரின் குடியேற்றம் எனும் காரணத்தைக் காட்டி நியாயப்படுத்த முயன்றதினால் இனத்துவேஷத்தை முன்னிலைப்படுத்தும் தீவிர வலதுசாரக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது என்று சொல்லலாம். இதற்கு இனத்துவேஷம் தான் ஒரு காரணம் என்று சொல்லிவிட முடியாது. வெளிநாட்டிலிருந்து இந்நாடுகளைத் தமது நிரந்தர வதிப்பிடங்களாக்கிக் கொண்டு வாழ்வோர்களின் வாழ்க்கைமுறைகள் மற்றும் தாம் வாழும் நாட்டின்மீது பற்றின்றி வாழ்வது போன்ற செயல்களும் இந்நாட்டு மக்களின் மனதில் வெறுப்புணர்ச்சி தோன்ற ஏதுவாகின்றது.

இந்நிலையில்தான் அமேரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடு தானும், தன் நாட்டு மக்களும் எனும் குறுகிய வட்டத்தினுள் தனது பார்வையைத் திருப்பிக் கொண்டதினால் இயற்கைச் சீரழிவின் தாக்கங்களையும், அது உலகளாவிய ரீதியில் எதிர்காலச் சந்ததிக்கு கொடுக்கப்போகும் தலையிடியையும் முற்றுமுழுதாக ஒதுக்கி வைக்கும் ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறது. இது ஓர் ஆரோக்கியமான உலகளாவிய பொதுநலத்தை முன்னேடுக்கும் பாதையில் நாடுகளை இட்டுச் செல்லாது. இதுவே இன்று சமுதாய நலம் விரும்பிகள் பலரின் மனத்திலும் தேங்கி நிற்கும் அச்சமாகும்.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்,
சக்தி சக்திதாசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.