Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170915 - Dilogue with Arjuna-lr

    ”பச்சைப் பயலாக பார்த்தன் பயந்திட
    பச்சைப் புயல்மால் பாரதத்தின் -உச்ச
    குருஷேத் திரத்திடை ,கீதோ பதேசம்:
    பரிட்சித்தைக் காத்தோன் பணி’’….

    ”பள்ளிக்குச் செல்கின்ற பிள்ளைப் பிராயமா!
    துள்ளும் இளமையைத் தீண்டியவா! -கொள்ளியையும்
    ஆன்மா அசையாது காண்பதுபோல் காணும்காண்
    மேன்மேலும் மாற்றும்மெய் யை”….கிரேசி மோகன்….!

    Share
  • ஒரு ஊர்+ கொக்குகள்( Kokokan-Herons)= மறு பிறப்பு???

    சர்குணா பாக்கியராஜ்

    1_235

    “பெட்டுலு” (Petulu), என்னும் ஒரு சிறு கிராமம். இது பாலி( Bali) தீவிலுள்ள “உபுட்” (Ubud) என்ற நகரிலிருந்து, மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள சிறப்பான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணியளவில், சுமார் இருபதாயிரம் வெண் கொக்குகள் முக்கியமாக மாட்டுக் கொக்குகள் (Cattle Egrets) சின்னக் கொக்குகள் (Little Egrets Egrets), ஜாவன் குளக் கொக்குகள் (Javan pond herons)வந்து, கிராமத்திலுள்ள மரங்களில் அடைகின்றன.

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பாலிக்குச் சென்றிருந்த போது, ஒரு நண்பரின் மூலம் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, பறவைகளைக் காணச் சென்றோம். மாலை ஐந்து மணியளவில் பெட்டுலுவை நெருங்கிய போது, இள நீலமும், பொன்னிற மஞ்சளும் கலந்த அந்தி வானம், ஏதோ கோபம் கொண்டது போல், திடீரென சாம்பல் நிற மேகங்களால் மூடப்பட்டு, பன்னீர் தெளிப்பதைப் போல், சிறு, சிறு மழைத் துளிகளால் எங்களை வரவேற்றது.

    வண்டி ௐட்டி வந்தவர், “ மழை பலமாக வரப்போகிறது, ஆகவே ஊருக்குள் போக முடியாது, சாலைகளில் வெள்ளப் பெருக்கு வர வாய்ப்புள்ளது, ஊருக்கு வெளியே இருந்து பறவைகளைப் பார்க்கலாம்” என்று கூறி, ஊரைத் தொட்டுக் கொண்டிருந்த வயல் கரையோரம் வணடியை நிறுத்திவிட்டு, வயலின் மையத்திலிருந்த ஒரு சிறு தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்றார். சற்று நேரத்தில், நெடுந்தொலைவில், அடிவானத்திலிருந்து, வெள்ளைப் புள்ளிகளாக, “V’ வடிவில் சிறு, சிறு கூட்டமாகப் பறவைகள், ஊரை நோக்கி வந்து அடைய ஆரம்பித்தன. அவை பறந்து வரும் அழகைப் பார்த்த போது,

    “நெடு வேள் மார்பின் ஆரம் போல,
    செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
    பைங் காற் கொக்கினம்——–

    “நக்கீரர், (அகநானூறு: பாடல், 120: 1-3) என்ற சங்க காலப் பாடல் நினைவில் வந்தது.

    சிறு தூரலில் ஆரம்பித்த மழை, பெருந்துளிகளாக மாறின. கடைக்காரர் கொடுத்த சூடான தேநீரைப் பருகிக் கொண்டிருந்த போது, அவர்,

    “1965-ஆம் ஆண்டு வரையிலும், இந்தக் கிராமத்தில் கொக்குகளை (Kokocan) எவரும் கண்டதில்லை. இந்தப் பறவைகளின் வரவைக் குறித்து, எங்கள் கிராமத்தில் ஒரு சரித்திரமே அடங்கியுள்ளதென்று” உடைந்த ஆங்கிலத்தில், கீழ்க்கண்ட விவரங்களைக் கொடுத்தார்.

    “1965-ஆம் ஆண்டு, இந்தோனேசியா நாட்டில், ஜனாதிபதி சுகர்ணோவை எதிர்த்து நடந்த ராணுவ எழுச்சியின் பின், லட்சக்கணக்கான பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர்களும் (PKI), அவர்களை ஆதரிப்பர்வகள் என்று கருதப்பட்டவர்களும் கொல்லப்பட்டனர். பெட்டுலு கிராமத்திலும், ஊர் மக்களைக் கொண்டு தோண்டப்பட்ட குழிகளில், பெருந்திரளானவர்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டனர்.

    1965-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், கடைசி வாரத்தில், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கிராமத்திலுள்ள தீய சக்தியை அகற்ற விழா நடத்தினர், விழா முடிந்து ஒரே வாரத்தில், ஊருக்குள், கொக்குகள் தோன்றின. சில கிராம மக்கள், உணவுக்காகவும், வளர்ப்பதற்காகவும், இவைகளைப் பிடித்து வைத்திருந்தனர். ஆனால், பறவைகளைப் பிடித்து வைத்திருந்த கிராமத்தினர் பலர் பயங்கரமான ஆவிகளைக் கனவுகளில் கண்டு, பயந்து பறவைகளை விடுவித்து விட்டு கொக்குகளை வரவேற்க விழா நடத்தினர். அப்போது, பூசாரி மௌன நிலைவ்(trance) எய்தினார். அவர் விழித்த போது “கொலை செய்யப்பட்டு இறந்தவர்களுக்கு இறுதிக் கடன்கள் செய்யப்படவில்லை. ஆகவே, இவர்களின் ஆன்மாக்கள்தான், கொக்குகள் வடிவில் ஊரைக் காக்க வந்துள்ளன” என்று கூறினார். ஆகையால் கிராமத்தவர்கள் கொக்குகளை மதித்து வருடந்தோறும், கொக்குகளுக்காக விழா நடத்துகின்றனர். மேலும், இந்தப் பறவைகள் ஊருக்கு நன்மையும், செழிப்பும் கொண்டு வருகின்றன என்று நம்புகிறோம்”  என்று சொல்லி முடித்தார்.

    கடைக்காரர் கொடுத்த தகவலைக் கேட்டு ஆச்சரியத்தோடே பறவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, மழை வலுத்துப் பார்வையை மறைத்து விட்டதால், அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. சுமார் ஐநூறு அல்லது அறுநூறு பறவைகள்தான் பார்க்க முடிந்தது.

    விடுமுறை கழிந்து, கலிபோர்னியா வந்து சேர்ந்த போதும், கடைக்காரர் கொடுத்த தகவலை மறக்க முடியவில்லை.

    அவர் கொடுத்த செய்தியைப்பற்றி, ஆராய்ந்த போது, 1965ஆம் ஆண்டு, ராணுவத்தினர் நடத்திய எழுச்சியும், அதைத் தொடர்ந்து, பொதுவுடைமைக் கட்சியினரும், அவர்களை ஆதரித்தவர்களும் கொல்லப்பட்டனர் என்பது உண்மையான நிகழ்ச்சியென்றும், ஆனால், இந்தச் சம்பவம் இந்தோனேசியா வரலாற்றில் எழுதப்படவில்லையாதலால், எத்தனைப் பேர் கொல்லப்பட்டனர் என்ற உண்மை தெரிய வாய்ப்பில்லை என்பதும் தெரிய வந்தது. இப்போதைய இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடுடோவும் (Joke Widodo), மக்களும், இந்தக் கொடூரமான நிகழ்ச்சியின் விளைவை அறியப் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

    (Source: “The Indonesian Massacre: What Did the US Know? Margaret Scott)

    கொக்குகள், இன்றும், மாலைதோறும், பெட்டுலு கிராமத்தில் மரங்களில் வந்தடைந்து, உல்லாசப் பயணிகளையும், பறவை ஆர்வலர்களையும் மகிழ்விக்கின்றன. மறு பிறவி என்பது, ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கையாதலால், இந்த பெட்டுலு கொக்குகள், மறு பிறவிகளா? இல்லையா?, என்பதை வாசகர்களின் கருத்துக்கு விட்டு விடுகிறேன்.

    Share
  • “நீதி வெண்பாக்கள்”….”மனம் “….

    images (2)
    “மனமற்றுப் போனால்தான் மானுடா சாந்தி
    தினமுற்றுப் புள்ளிவை; தெய்வ -குணமுற்றால்
    வைக்கலாம் புள்ளியை , வாழ்வெதிர் பார்க்குமேல்
    பொய்க்கமா போட்டுப் பழக்கு”….!

    முணுமுணுப்பாய் முன்னால், தொணதொணப்பாய் பின்னால்,
    சினமெடுத்து சீறுவாய் சொன்னால் -அணுஅணுவாய்
    கொல்லாதெனைக் கொல்கின்ற பொல்லா மனமேநீ!,
    இல்லாத பேரிடம் செல்….கிரேசி மோகன்….!

    தானாய் நிகழ்வதை நானாய் நினைத்திட
    வீணாய்க் கழிந்திடும் வாழ்நாளே -பூணாய்
    எதையும் மனமே இதயக் கனியாய்
    கதையின் முடிவில் கசப்பு….கிரேசி மோகன்….!

    ஓடியாடி பாடுபட்டு ஊரை விலைபேசி,
    கோடிகோடி செல்வம் குவிந்தாலும் -மாடிலேறி(எருமை மாட்டிலேறி)
    கல்லறைக்குக் கூப்பிடும் காலன் மனம்மாறி,
    சில்லறைக்குச் செல்வானா சொல்….

    முல்லைக்குத் தேரை. மயிலுக்குப் போர்வையை,
    புல்லுக்கும்(வள்ளலார் போல்) வாடும் புனிதத்தை -உள்ளுக்குள்
    வாழும் கருணை வெளிப்பாடு என்றுந்தன்
    பாழும் மனதில் புகட்டு….

    கலப்பை முழுங்கி கஷாயம் குடிப்பாய்
    மலைத்தது போதும் மனமே! -நிலைப்பாய்
    எஜமான் வருகை எதிர்பார்த்(து) இருக்கும்
    நிஜமான ஊழியனாய் நில்….

    முந்தைப் பழவினைகள் முற்றும் ஒழிந்திடும்
    சிந்தை தெளிவுற்று சித்தமாகும் -கந்தர்
    அனுபூதி தன்னை அருணகிரி பேரால்
    மனமோதி வாழ்வோர்த மக்கு….

    நெஞ்சறையில் ஐம்புலன்கள் நானகந்தை மீட்டான்ம
    அஞ்சறைப் பெட்டியில் இட்டிடு -வெஞ்சிறையில்
    போட்டாலும் வைகுண்டம் போனாலும் புத்திக்கு
    மாட்டாது மாயா மனம்….

    எங்கிருந்தோ வந்தென்னை ஏக்கத்திற்க்(கு) உள்ளாக்கி
    அங்கிங் கெனாது அலைக்கழித்து -தொங்கிடும்
    மந்தியே, நெஞ்சே, மனமே உனக்கேன்
    புந்தியே இல்லாமல் போச்சு….
    பழைய குருடி புதிய கிழவி
    விழைய மறுத்திடும் வேசி -குழைய
    தினமும் கொடுப்பாள் திருட்டு சுகத்தை
    மனமென்ற அம்மட மாது….()….

    நீயாய் நினைப்பது ஞாபகத் தாலெழுந்த
    மாயா மனதின் மமகாரம் -தாயாய்
    தகப்பனாய், பிள்ளையாய் தன்னைத்தான் எண்ணல்
    மிகப்பெறும் சூழ்ச்சியா மே….

    மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
    கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்
    அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ
    நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 98

    உடைந்த உறவுகள் – அருங்காட்சியகம், சாக்ரெப், குரோய்ஷியா

    முனைவர் சுபாஷிணி

    காதல்.. காதல்.. காதல்..

    பழமையைப் போற்றுவதற்கும், மானுடவியல் ஆய்வுகளில் உதவுவதற்கும், தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் ஆக்கங்களைப் பட்டியலிடவும் மட்டும் தான் அருங்காட்சியகமா? மனித உறவுகளில் உள்ள சில கூறுகளைப் பதிவாக்கி வைக்கவும் அருங்காட்சியகங்கள் வேண்டாமா?

    as1

    வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பலர்.
    தற்செயலாகச் சந்திக்கும் அவர்களில் யாரோ ஒருவருடன் மனதில் திடீரென ஈர்ப்பு ஏற்பட்டு விடுவதை மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருமே உணர்ந்து அனுபவித்துக் கடந்து வருகிறோம். மனிதர்களின் வாழ்வில் நடக்கும் முக்கிய அம்சங்களான குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடும் நாம், நம் தனி மனித உணர்வுகளின் அதி உயர்வான காதல் உணர்வைப் போற்றி மதிக்காமல் போய்விடுகின்றோமே..

    சில வேளைகளில் காதல் தோல்வியைத் தற்கொலையால் பூசிப்பவர்களும் உண்டு. காதல் தோல்வியால் மதுபானம், போதைப்பொருள் என சில தீய பழக்கங்களுக்கு ஆளாகி, தன் நலனையே கெடுத்துக் கொள்பவர்களும் உண்டு. ஒரு சிலரோ, உடைந்து போன காதலுக்கு மரியாதையைச் செலுத்தி விட்டு புதிதாகத் தோன்றியிருக்கும் காதலை வளர்த்தெடுப்பதில் மூழ்கிவிடுபவர்களும் உண்டு. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் காதல் உணர்வுகள் எழுவது இயல்பு. காதல் வயப்பட்டோர் ஏதாவதொரு ஒரு காரணத்திற்காகத் தோல்வியைச் சந்தித்திருப்பதும் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்து புதிய காதலை ரசித்து வாழ்க்கையைத் தொடர்வதே வாழ்க்கைக்கான வெற்றி. ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த சோகம் மற்றொருவருக்குப் புதிய பாதையைக் காட்டலாமே, என்ற சிந்தனையுடன் உருவாக்கப்பட்டதுதான் குரோய்ஷியா நாட்டின் தலைநகரமான சாக்ரெப்பில் அமைந்திருக்கும் உடைந்த உறவுகள் அருங்காட்சியகம்.

    as2

    2006ஆம் ஆண்டு இத்தகைய ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் ஏற்படவே அரசு இந்த முயற்சியில் இறங்கியது. அதன் அடுத்த ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு படிப்படியாகப் பல ஆவணங்களும் காட்சிப் பொருட்களும் இங்கு இணைக்கப்பட்டன. இன்றளவும் இணைக்கப்படுகின்றன.

    அருங்காட்சியகங்கள் என்றால் பொதுவாக எதனை எதிர்பார்ப்போம்..? சிதிலமடைந்த சுவர்கள், சிற்பங்கள், கற்கள், எலும்புக் கூடுகள், சின்னங்கள், நாணயங்கள் … இப்படித்தானே..?

    இங்கே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் தனி நபர்கள் நன்கொடையாக இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கிய சுய அனுபவங்களின் சான்றுகள் தாம். இங்கு உலகம் முழுவதிலிருந்து இத்தகைய பொருட்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. அவற்றை முறையாகக் காட்சிப்படுத்தி குரோய்ஷிய மொழியிலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இங்கு வைத்திருக்கின்றார்கள்.

    இங்குள்ள ஒரு சில சொந்தக் கதை அனுபவங்கள் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

    நெதர்லாந்தில் வசிக்கும் பெண்மணி ஒருவர். அவரது ஒரு காலணியும் எதனால் இதனை நினைவுச் சின்னமாக அனுப்பினார் என்ற விளக்கமும் உள்ளது. அதில் அவர் சொல்கிறார்.

    “1959ஆம் ஆண்டு. எனக்கு 10 வயது. அவனுக்கு 11 வயது. நாங்கள் இருவரும் மிகுந்த காதலில் இருந்தோம். நாங்கள் இருவரும் வெளியே தனியாகச் சுற்றினோம் என்பதை என் தாயாருக்குச் சொன்ன போது என் காதில் பலமான அடி விழுந்தது. என்னை என் அத்தை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். எனக்கு 15 வயது. மீண்டும் அவனைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. சில மாதங்கள் எங்கள் உறவு இனிமையாகக் கழிந்தது. பின்னர் அவன் ஜெர்மனி சென்று விட்டான். ஆனால் கடிதத் தொடர்பில் இருந்தோம். வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டோம். ஆனால் எங்கள் தொடர்பு துண்டித்துப் போனது.1998ஆம் ஆண்டு. நான் தொழில் ரீதியாக ஒரு பணியில் இருந்தேன். அச்சமயம் ஒரு வாடிக்கையாளர் வந்து பேசிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில், அவர் அவன் தான் என அறிந்து கொண்டேன். அவனும் என்னை அடையாளம் கண்டு கொண்டான். தனக்கு முதல் திருமணம் வெற்றியாக அமையவில்லை என்றும் இரண்டாம் திருமணம் செய்திருப்பதாகவும் கூறினான். இனி இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது என நான் கூறினேன். அவன் என் நினைவாக நான் அணிந்திருந்த காலணியில் ஒன்றினைக் கேட்க அவனுக்குக் கொடுத்து விட்டேன். பின்னர் யோசித்தேன். அந்த நினைவுகள் மீண்டும் தேவையில்லை. எஞ்சிய இந்த ஒரு காலணியை அருங்காட்சியகத்திற்கு என் வாழ்க்கை நினைவாகக் கொடுக்கின்றேன்.”
    ..என அவரது காதல் தோல்வி கதை அமைகிறது.

    அடுத்த கதை. இதனையும் ஒரு பெண் பிரேசில் நாட்டிலிருந்து எழுதியிருக்கின்றார். கடிதத்தோடு காகிதத்தால் செய்யப்பட்ட திருமண அலங்கார வளையத்தை அனுப்பியுள்ளார்.

    “நான் ஒரு எழுத்தாளர். நான் எனது பதிப்பக உரிமையாளரையே மணந்து கொண்டேன். திருமணத்திற்காக இந்த காகித அழகு வளையத்தை இருவருமே செய்தோம். இது முழுக்க முழுக்க காகிதத்தால் மட்டுமே ஆனது. நாங்கள் இருவரும் எழுத்துத் துறையில் இருப்பதால் அதனைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தோம். எங்கள் 5ஆம் ஆண்டு திருமண நாளின் போது அவன் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் ஆராய்ந்த போது அது ஊர்ஜிதமாகியது. அவனிடமிருந்து விலகி விட்டேன். அவன் நினைவுகளும் தேவையில்லை என்பதால் இந்தக் காகித அலங்கார வளையத்தை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்புகிறேன். ”
    .. இது அவரது கதை.

    இன்னொரு பெண்மணி.. குரோய்ஷியாவிலேயே இருப்பவர். அவரது திருமண ஆடையை இங்கு வழங்கியதோடு ஏன் என்ற காரணத்தை சில வரிகளில் கூறியிருக்கின்றார்.

    as3

    “நீண்ட சண்டைகள் எங்களுக்குள் ஏற்பட்டன. அவை தொடர்ந்தன. அவன் தன் பக்க நியாயத்தை மட்டுமே ஓயாது பேசிக் கொண்டிருந்தான். பேசுவதே அதிகம். தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அவன் வேலைக்கும் செல்லவில்லை. திருமணம் முதல் எல்லாமே எனது செலவிலேயே நடந்தது. அவனால் எனக்குக் கடன் தொல்லையும் ஏற்பட்டது. அவனது கடன்களை அடைத்தேன். அவனை வெளியே விரட்டினேன். அவன் நினைவுகளும் வேண்டாம். இந்தத் திருமண கவுனும் வேண்டாம். ”
    ..இது அவரது வாழ்க்கையில் காதல் ஏற்படுத்திய காயத்தின் சான்று.

    இங்குள்ள காதல் தோல்வி சான்றுகள் பெண்கள் அனுப்பியவே அதிகம். இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து ஆண் ஒருவர் அனுப்பிய காதல் தோல்விக்கான காரணத்தையும் சான்றையும் பார்ப்போமே.

    “நான் அவளை முதன் முதலில் டிசம்பர் மாதத்தில் சந்தித்தேன். ஆரம்பத்தில் நட்பாக மட்டுமே எங்கள் உறவு தொடர்ந்தது. ஏனெனில் நான் அப்போது ஒரு காதலிக்காக ஏங்கிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவளிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவள் ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்க வந்திருந்தாள். எங்கள் உறவு இனிதே தொடங்கியது. அவள் திரும்பிச் செல்ல வேண்டிய காலம் வந்தது. என்னையும் அழைத்தாள். நான் லண்டனிலிருந்து வரமுடியாது எனக் கூறிவிட்டேன். எங்கள் உறவு முறிந்தது. “

    ஏன் முறிந்தது? எதனால் லண்டனிலிருந்து வரமுடியாது என 10 காரணங்களைச் சொல்லி அவளை அனுப்பி வைத்திருக்கின்றார் இந்த ரோமியோ. அந்த 10 காரணங்கள் அடங்கிய பட்டியல் மனதை உறுத்தி வருத்தியிருக்கும் போல. அதனால் அதனை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டார்.

    இன்னொரு பெண்மணி.. தனது ஒரு வருடக் காதல் அனுபவம் .. பின் ஏற்பட்ட காதல் முறிவு ஆகியவற்றுக்கான காரணத்தை இப்படிக் கூறுகிறார்.

    as4

    “ஒரு முறை போதைப் பொருளுக்கு அடிமையானவன் மீண்டும் அதிலிருந்து தப்பவே முடியாது. போதைக்கு அடிமையானவன் வாழ் நாள் முழுதும் போதைப்பொருளுக்கு அடிமைதான். ஆனால் முதலில் என் நண்பர்கள் இதனைக்கூறியபோது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவன் வாழ்க்கையில் மறு வாய்ப்பு வழங்கப்படும் போது மாறிக் கொள்ள மாட்டானா? என் காதல் அவனை மாற்றும் என என் நண்பர்களிடம் வாதிட்டு அவனுடன் காதல் நட்பினைத் தொடங்கினேன். அவன் என்னை அதிகம் காதலித்தான். நானும் அவனை உயிருக்கு உயிராகக் காதலித்தேன். எனக்குச் சிரமம் ஏற்படும் போதெல்லாம் துணையாக இருந்தான். அதனால் என் நண்பர்களிடமிருந்தும் கூட விலகி விட்டேன். நாங்கள் இணைந்து வாழ்க்கையைத் தொடங்கினோம். வியாபாரத்தைத் தொடங்கினோம் . குடும்பம் அமைப்பது பற்றி அதிகமாகப் பேசினோம். ஒருநாள் திடீரென்று அவனிடம் மாறுதலைக் கண்டேன். எனக்குத் தெரியாமல் போதைப் பொருளை உட்கொள்வதை மீண்டும் தொடங்கியிருந்தான். சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. ஆறு மாதங்கள் போராடிப் பார்த்தேன். அவன் மாறவில்லை. நான் அவனிடமிருந்து பிரிந்து வந்து என் வாழ்க்கையைத் தொடர்கின்றேன். அவன் நினைவாகக் போதைப்பொருள் சோதனைக்கருவி ஒன்றினை சான்றாக அனுப்பி, இக்கடிதத்தையும் அனுப்பியிருக்கின்றார். “

    இப்படிப் பல பல கதைகள்.. நின்று வாசித்தால் பெருமூச்சு ஏற்படும். ஆனாலும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் பிறருக்கு புது வாழ்க்கையைத் தொடங்க ஒரு தூண்டுதலாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்துடன் இத்தகைய தகவல்களை அனுப்பியிருக்கும் நல்ல உள்ளங்களை வாழ்த்தத்தான் வேண்டும்.

    as5

    காதலில் தோல்வி ஏற்பட்டு மனம் வருந்திக் கொண்டிருப்பவர்கள் முதலில் அக்காதலை நினைவூட்டும் எல்லாப் பொருட்களையும் ஒதுக்கி விடுவதே நல்லது. பழைய நினைவுகள் நிகழ்கால வாழ்க்கையைப் பாதிக்க நாமே இடம் கொடுக்கக் கூடாது., ஆக, காதலில் தோல்வி அடைந்தோர் ஏதேனும் நினைவுப் பொருட்கள் வைத்திருந்தால் உங்கள் காதலை விவரித்து அப்பொருளையும் சேர்த்து இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விடலாம். இதன் முகவரி,

    Museum of Broken Relationships,
    Ćirilometodska ul. 2, 10000, Zagreb, Croatia

    வாழ்வதற்குத்தான் வாழ்க்கை. முதல் தோல்வி என்றும் தோல்வியல்ல. ஒருமுறை காதலில் தோல்வியடைந்தால் மனம் உடைந்து போக வேண்டாம் தோழர்களே. வாழ்க்கையில் நல்ல துணையைக் காதலித்துக் கைகோர்த்து நலமுடன் காதல் செய்து மகிழ்ந்து வாழ்வீர். முடிந்தால், சாக்ரெப் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அப்படியே ஒரு முறை இந்த அருங்காட்சியகத்திற்கும் சென்று இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுயவாழ்க்கை அனுபவக் காதல் தோல்விச் சான்றுகளையும் பார்த்துச் செல்லுங்கள்!

    Share
  • எமது வாழ்வில் கோவில் – பகுதி IV

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா, B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) SLEAS

    முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்              

     

    (எமது வாழ்வில் கோவில் – பகுதி I)

    (எமது வாழ்வில் கோவில் – பகுதி II)

    (எமது வாழ்வில் கோவில் – பகுதி III)

     

    எங்கும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான். அப்படியிருக்க கோவில்கள் எதற்கு? அங்கு விக்கிரகங்கள் எதற்கு ? என்று கேட்கின்ற நிலையினையும் பார்க்கின்றோம். பசுவின் உடலெங்கும் பால் செறிந்துள்ளது. இதனால்  பசுவின் கொம்பினையோ அல்லது வாலினையோ அல்லது செவியினையோ தொட்டால் பால் வந்துவிடுமா? இல்லவே இல்லை! அதன் மடியில் கைவைத்துக் கறந்தால் தான் தேவையான பாலைப் பெறமுடிகிறது. இது போலவே எங்கும் நிறைந்துள்ள இறைவனை கோவில் என்ற இடத்தில் வைத்துப் பார்க்கும் பொழுது அருள் கிடைக்கிறது. அமைதி கிடைக்கிறது. அனுக்கிரகம் கிடைக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. அநுபூதிமான்கள் கூறுகின்றனர். இதனால் தான் கோவில் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத தாக அமைந்துவிட்டது.

    கோவிலை வழிபடாதவன் வாழ்வதற்கே தகுதியற்றவன் ஆகின்றான்.

    இறைவன் உறைகின்ற இடம்தான் எமக்கு ஈடேற்றத்தைத் தரும். நமது முன்னோர் கூறியிருப்பதை மறந்துவிடக்கூடாது. இதனால் தான்

      ” தலையே நீவணங்கா

        கண்காள் காண்மின்களோ

        நெஞ்சேநீ நினையாய்

        கைகாள் கூப்பித்தொழும்

        வாயே வாழ்த்துகண்டாய் “

    என்று திருவங்கமாலை வாயிலாக அப்பரடிகள் உடலின் பயனே இறைவனைத் தொழுதலே என்பதை அங்கம் அங்கமாகக் காட்டி அவற்றின் செயற்பாடுகளையும் எல்லோருக்கும் விளங்கும் வகையில்’ எடுத்துக் கூறியிருக்கிறார்.

    இதனை வலியுறுத்தும் விதமாக வள்ளுவப் பெருந்தகை

    ” கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

    தாளை வணங்காத் தலை ” என்றார். மணிவாசகப் பெருமானும்

    ” மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் ” என்று கூறுவதும்

    நோக்கத் தக்கதே. இறைவன் புகழ்கேளாச் செவியும், இறைவன் திருக்கோலத்தைக் காணாத கண்ணும் இருந்தென்ன விட்டென்ன ?

    வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சமும் தந்த இறைவனை நாம் எப்படிப் போற்றுவது ? இதனால் தான் மணிவாசகர் ” ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி ” என்று மிகத் தெளிவாக இறைவனைப் பற்றி நமக்குக் காட்டுகின்றார். இவையாவுமே மனிதனும் அவன் வாழ்வும் இறைவன் உறையும் கோவிலுடன் இணைக்கப் படுவதைக் காணமுடிகிறதல்லவா? இந்த வகையிலும் வாழ்விலே கோவில் என்பது பிரிக்க முடியாது இருக்கின்றது என்பதும் புலனாகிற தல்லவா?

    சமூக நோக்கில் பார்க்கின்ற பொழுது ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமமே ! இங்கு ஏழை என்பதோ, பணம்படைத்தவர் என்பதோ, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதோ முக்கியமல்ல. இறை அடியார்கள் என்பதுதான் முக்கியம் என்னும் கருத்து சமூகம் தழுவிய உயர்கருத்தாகும். இது வாழ்க்கையில் கோவிலை இணைப்பதற்குப் பெரிதும் முக்கியம் மிக்கதெனலாம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘ என்னும் உயரிய நோக்கைக் காட்டும் புனித இடம் கோவில்கள் என்பதும் முக்கியமாகும்.

    பல பெரியவர்கள் கோவிலைவைத்தே சமயத்தை, மொழியை, பண் பாட்டை, கலாசாரத்தைப் பேணிக்காப்பதற்கு முயன்றிருக்கிறார்கள். பலரும் ஒன்றுகூடும் இடமாகக் கோவில்கள் அமைந்த காரணத்தால் கோவிலை மையமாக வைப்பதால் பல நன்மைகள் விளையும் என்று அவர்கள் கருதினார்கள். இந்த வகையில் நல்லைநகர் ஆறுமுநாவலர் அவர்களைக் குறிப்பிடலாம்.

    நாவலர் பெருமான் தனது சமயப் பிரசங்கங்களை நிகழ்த்துவதற்குக் கோவில்களையே தேர்ந்தெடுத்தார். நாவலர் பெருமானால் யாழ்ப்பாணத்தில் “கந்தபுராண கலாசாரம்” உருவாக்கப்பட்டது. கோவில்கள் தோறும் கந்தபுராணம்,பெரியபுராணம், திருவிளையாடற் புராணம்  எனப் புராணங்களை விளக்கிப் பல பேருரைகளை நாவலர் பெருமான் அவர்கள் நிகழ்த்தினார்கள். அத்துடன் சைவசமய உண்மைகளைத் தத்துவங்களை மக்களுக்கு ஏற்ற விதத்தில் எடுத்துச் சொன்னார்கள். சொன்னதோடு நில்லாமல் தாமும் அதன்படி வாழ்ந்தும் காட்டினார்கள். நாவலர் பெருமானின் பிரசங்கங்கள் கோவிலையும் வாழ்வினையும் இணைக்கும் வகையிலும், வாழ்வினைச் செம்மையாய் அதாவது சமயவழியில் வாழும் வகையிலும்  இட்டுச் சென்றது எனலாம்.

    புராணப் பாடல்களை நாவலர் பெருமான் சொல்ல அதற்கு அவருடன் சேர்ந்த சைவ அறிஞர்கள் விளக்கம் சொல்ல அங்கே இலக்கியம் வளர்ந்தது. இலக்கியத்தின் சுவை உயர்ந்தது. தமிழ் மொழியின் பல உன்னதங்கள் அங்கே உதயமாகி வந்தன. இதனைக் கேட்பதற்கு அக்காலத்தில் மக்கள் பெருந்திரளாக வந்தார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. சமயம், மொழி, பண்பாடு, ஒழுக்கம், யாவும் வளர்வதற்கு இப்பிரசங்கங்கள் வழிவகுத்தன என்பதோடு,  இவற்றுக்கு ஏற்ற இடமாகக் கோவில்களே அமைந்தன என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும். புராணங்களுக்கு விளக்கம் சொல்வதை  ” பயன் சொல்லுதல் ” என்று அழைத்தார்கள். அதாவது நமக்கு வாழ்வில் எத்தகைய பயன்கள் வரும் , இப்புராணங்கள் எந்தளவு சமூகப் பயன் மிக்கன என்னும் கருத்துக்களும் இதில் அடங்கும் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

    நாவலரின் பின்னர் ஈழத்து வரலாற்றில் கோவிலை மையப்படுத்தி புராணங்களை யாவரும் விரும்பும் வகையில் இன்னிசையுடன் பாடி அதற்கு ஏற்ற விளக்கங்களை ஆற்றியவர் மணிபாகவதர், மணிஐயா பின்னாளில் துறவுபூண்டு சுவாமிநாதத் தம்பிரான் என்னும் பெயர்களைக் கொண்ட பெருமகன் ஆவர். இவராலே உருவாக்கப்பட்டது தான்  நல்லூர் திருஞானசம்பந்த ஆதீனமாகும். இப்பெருமகன் தனது இசை தழுவிய கதாப் பிரசங்கங்களை நிகழ்த்தியது யாவுமே கோவில்களிலே என்பதும் குறிப்பிடப் படவேண்டிய விடயமேயாகும்.

    இவரின் காலத்தவரான முருகன் அருள் பெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது கதாப்பிரசங்கங்களையும், அருள் உரைகளையும் ஆற்றுவதற்குத் தேர்ந்தெடுத்த இடமும் கோவில்களே என்பதும் நோக்கத் தக்கதே. வாரியார் சுவாமிகளின் பணிகள் அத்தனையும் கோவில்களை மையப்படுத்தியே அமைந்தன. அவர் செல்லும் இடமெல்லாம் கோவிலையும்  மக்கள் வாழ்வினையும் இணைத்தே தமது கருத்துக்களை விதைத்து நின்றார். இதனால் நமது வாழ்வில் கோவில்கள் எந்தளவுக்கு இன்றியமையாதன என்பதை பாமரரும் உணர்ந்து கொண்டார்கள். படித்தவர்களும் உணர்ந்து கொண்டார்கள்.  யாவருக்கும் ஏற்றபடி வாரியார் சுவாமிகளின் விளக்கங்கள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடப் படவேண்டிய ஒன்றாகும்.

    துர்க்கா துரந்தரியாக யாழ்மண்ணின் தவப்புதல்வியாக வந்தவர்தான் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். இவரின் ஆன்மீகக் கருத்துகள், வாழ்வியல் சிந்தனைகள் யாவும் அரங்கேறிய இடமாகக் கோவில்களே விளங்கின என்பதை யாவருமே அறிவர். தனது சமய சமூகத் தொண்டினை ஆற்றுவதற்கு தெல்லிப்பளையில் துர்க்கை அம்மன் கோவிலை ஆதாரமாக்கினார் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கோவிலை வாழ்வியலோடு இணைத்து நமது வாழ்வில் கோவில்கள் மிகவும் தேவையான ஒன்று என்பதை தனது பேச்சாலும், தனது மூச்சாலும்  இக்காலத்தவர்க்கு உணர்த்தியவரும், வாழ்ந்து காட்டியவரும் துர்க்கா துரந்தரி அவர்கள் என்பதை யாவருமே ஏற்றுக் கொள்வார்கள். அவரினால் கோவிலின் மகத்துவம் யாழ்மக்களின் மனத்தில் ஆழமாக வேரூன்றியது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

    கோவில்களில் உயர்ந்த கோபுரங்கள் அமைக்கப் படுகின்றன. ஓசையினை உண்டாக்கும் பெரிய மணிகள் வைக்கப்டுகின்றன. இவைகள் தேவைதானா என்று நினைக்கத் தோன்றும் ! இவற்றால் என்னதான் நன்மை வரக்கூடும் என்றும் மனம் வினாவிக்கொண்டேயும் இருக்கும் ! வீட்டிலிருந்து உயர்ந்த கோபுரங்களைப் பார்க்கும் பொழுதும், கோவிலின் பெரிய மணியின் ஒலியினைக் கேட்கும் பொழுதும் நமது மனதில் நல்ல சிந்தனை உதயமாவதற்கு வழி வகுக்கிறது எனலாம். கோபுரத்தைப் பார்க்கும் பொழுது கோவில்தான் மனத்தில் வருகிறது. கோவில் நினைப்பு வரும் பொழுது ஆண்டவன் பற்றி மனம் எண்ணுகிறது. இதே போன்றே கோவில் மணியின் ஓசை காதினூடாக மனத்தில் புகுந்து மனத்தில் நல்ல மாற்றங்கள் வர வழி வகுக்கிறது. இதனால் தான் அருகிலோ சற்று தூரத்திலோ கோவில்கள் இருப்பது யாவருக்கும் வாழ்க்கைக்குச் சிறந்தது என்று நம் முன்னோர்கள் எண்ணினார்கள். ஆகவேதான்   ” கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ” என்று உறுதியாக கூறிச் சென்றுள்ளார்கள்.

    கோவிலை மையமாக வைத்துப் பலர் வாழ்கிறார்கள். ஓதுவார்கள், சிற்பக் கலைஞர்கள், கட்டிடக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், அலங்காரக் கலைஞர்கள், ஓவியக் கலைஞர்கள், பிரசங்கங்கக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள்,நாட்டியக் கலைஞர்கள், வேதம் ஓதும் வேதியர்கள், பூமாலை கட்டுபவர்கள்  இப்படிப் பலரும் கோவிலை நம்பியே வாழுகிறார்கள். கோவில் அவர்களின் வாழ்வில் மிகவும் இன்றியமையாததாகி இருக்கிறது. நாதஸ்வரம் என்னும் இசை இன்றளவும் உலகில் இருக்கிறது என்றால் அதற்கு கோவில்கள்தான் உறுதுணை என்பதை மறுக்க முடியாது. இவற்றை யெல்லாம் நோக்கும் பொழுது கலைகள் வளர்வதற்கும், இலக்கியங்கள் இருப்பதற்கும், புராணங்கள் பயன் கொடுப்பதற்கும், சமூக ஒழுக்கங்கள் வீழ்ந்துவிடாது இருப்பதற்கும், பக்தி மார்க்கம் பக்குவமாய் இருப்பதற்கும்,கலாசாரம், பண்பாடு தன்னிலையினை இழந்துவிடாது இருபதற்கும் கோவில்களே நிலைக்களனாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    எனவே எமது வாழ்வில் கோவில் என்பது இரண்டறக் கலந்தே விட்டது என்றுதான் சொல்லுதல் வேண்டும்.

    ” மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் “

    (முற்றும்)

    Share
  • ஆனந்தம் பெருகிடுமே !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    கல்லுக்குள் உறைந்திருக்கும்

    கலைநயத்தைப் பார்ப்பதற்கு

    மெல்லவே உளிசென்று

    வெட்டிவிடும் கல்லதனை

    வேண்டாத பகுதிகளை

    வெட்டியே எறிந்துவிடின்

    வெளிப்படும் பகுதிதான்

    வியப்பெமக்குத் தந்துவிடும் !

     

    வேதனையும் சோதனையும்

    தாங்குகின்ற  வேளையில்தான்

    மேலான தன்மையங்கே

    வெளிப்பட்டு வந்துநிற்கும்

    கல்பட்ட வேதனையால்

    கடவுளுரு காட்சிதரும்

    கால்மிதிக்கும் கல்லுக்கு

    வேதனைகள் புரியாது !

     

    மனமென்னும் கல்தன்னை

    மாற்றிவிட  வேண்டுமென்று

    தினமுமே பலவற்றை

    செய்கின்றோம் வாழ்வெல்லாம்

    ஆனாலும் அம்மனமோ

    ஆகாத வழிசென்று

    ஆணவத்தை அணைத்துவிட

    ஆர்வம்கொண்டே நிற்கிறது !

     

    ஆணவத்தை அணைத்துவிட்டால்

    அன்பங்கே அகன்றுவிடும்

    அறமொளிந்து மறமோங்கி

    ஆசையங்கே ஆர்ப்பரிக்கும்

    அன்புபாச நேசமெல்லாம்

    அனாதரவாய் ஆகிவிடும்

    ஆண்டவனின் நினைப்புமே

    அற்பமாய் ஆகிவிடும் !

     

    வேண்டாத அத்தனையும்

    வேராக ஊன்றிவிடின்

    வில்லங்கம் அத்தனையும்

    நல்லவற்றை அழித்துவிடும்

    வில்லங்கம் தனையகற்ற

    நல்லதொரு செயலாக

    வேண்டாத அத்தனையும்

    வெட்டிவிடல் முறையாகும் !

     

    வேண்டாத விஷயங்களை

    விரைவாக வெட்டிடுவோம்

    வேதனையும் சோதனையும்

    சாதனைக்கே வழிசமைக்கும்

    ஆதலால் அனைவருமே

    ஆண்டவனைக் காண்பதற்கு

    அகற்றிடுவோம் ஆணவத்தை

    ஆனந்தம் பெருகிடுமே !

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (248)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    நானிங்கு நலம், நீங்களனைவரும் நலமா ? எனும் கேள்வியுடன் எனது இவ்வார மடலுக்குள் என் எண்ணங்களைப் புதைக்கிறேன். தனிமனித வாழ்வாகட்டும், சமுதாயமாகட்டும், நாடாகட்டும் சரித்திரம் என்பது கடந்து போன காலங்களில் நடந்து போன உண்மை நிகழ்வுகளின் தொகுப்பேயாகும். அச்சரித்திர உண்மைகளுடன் நாம் ஒத்துப் போகிறோமோ இல்லையோ அவை உண்மைகள் எனும் நிலைப்பாட்டில் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் உலக மக்கள் இருக்கிறார்கள். சில இனிப்பவையாகவும், வேறு சில எமக்குக் கசப்பானவையாகவும் இருக்கலாம். அதற்காகக் கசப்பானவற்றைத் தள்ளி வைத்து விட்டுப் பெருமையானவைகளைப் பற்றிப் பேசிப் பேசி மார் தட்டிக் கொள்வது உண்மைக்குப் புறம்பானது.

    இந்த வகையிலே எனது இந்த 42 வருட இங்கிலாந்து அனுபவத்தில் இருந்து நான் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பலவற்றில் இச்சரித்திரம் பற்றியவை மிகவும் முக்கியமானவை. சரித்திர நிகழ்வுகள் அவை தமக்கு எவ்வளவு கசப்பூட்டுபவையாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் இங்கிலாந்து மக்களின் செயற்பாடுகள் எனது அறிவுக்கு தீனி போட்டிருக்கின்றன. நான் இப்போது ஓய்வூதியம் பெற்று வருடங்கள் மூன்றாகப் போகிறது. எனது மனைவி இன்னமும் தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். நாம் வாழும் சறே (Surrey) எனும் பகுதியில் அமைந்திருந்த அவளது கம்பெனி சுமார் எட்டு வருடங்களின் முன்னால் இங்கிலாந்தின் வடபகுதியான ரக்பி(Rugby) எனும் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது ஆபிஸின் பலரும் கட்டாய ஓய்வில் பணிநீக்கம் செய்யப்பட்ட போது எனது மனைவிக்கு முக்கியமான நிர்வாகப் பொறுப்பையளித்து அவ்வடபகுதி ஆபிஸைத் தளமாகக் கொண்டு இயங்குமாறு பணித்தார்கள். அதன் நிமித்தம் வாரத்தில் இருநாட்கள் எமது இல்லத்திலிருந்து சுமார் 120 மைல் தொலைவிலுள்ள அவளது ஆபிஸுக்குச் சென்று பணிபுரிவாள். அப்போது ஓரிரவு அருகேயிருக்கும் ஹோட்டலில் அவளது ஆபிஸ் அவளுக்குத் தங்குவதற்கு ஏற்பாடு செய்வார்கள்.

    சரி எதற்காகச் சக்தியின் இந்த முன்விளக்கம் என்று சிந்திக்கிறீர்களா? அவசரப்படாதீர்கள் விஷயத்துக்கு வருக்கிறேன்.

    sakthi1அப்படியாக என் மனைவி தன்னுடைய ஆபிஸுக்கு வரும் வேளைகளில் சிலசமயங்களில் அவளுடன் இணைந்து நானும் அங்கே செல்வதுண்டு. அப்படியான ஒரு பொழுதுதான் நேற்றைய பொழுது. காலையில் எமது இல்லத்திலிருந்து புறப்பட்டு இரண்டரை மணி நேரங்களின் பின்னால் மனைவியை ஆபிஸில் இறக்கி விட்டு ஓட்டலை வந்தடைந்தேன். பின்பு இரவு உணவு உண்பதற்காக இருவரும் அருகிருந்த “டன்சேர்ச்(Dunchurch)” எனும் சிறிய கிராமத்திலிருந்த உணவு விடுதிக்குச் சென்றோம். இந்தக் கிராமத்திற்கு முன்பும் சில தடவைகள் எனது மனைவியுடன் வந்திருக்கிறேன். மிகவும் அமைதியான ஓர் இடம். இக்கிராமம் மிகவும் சிறிய கிராமம்; இரண்டு மூன்று உணவகங்கள், ஒரு சிறிய வாசகசாலை, கிராமங்களுக்கேயுரிய தேவாலயமென ஓர் ஆங்கிலக் கிராமத்தை அடையாளைப் படுத்தும் அம்சங்கள் அமைந்திருந்தன. மையத்திலே அழகாக “விலேஜ் கிறீன் (Village Green)” அதாவது கிராமத்துப்பச்சை எனப்படும் அழகிய பச்சை புற்தரை அமைந்திருந்தது.

    இத்தகைய அழகிய, அமைதியான ஆங்கிலக் கிராமம் தன்னுள் ஒரு முக்கிய சரித்திர நிகழ்வின் அங்கமொன்றை உள்ளடக்கியுள்ளது என்று கேள்வியுற்றதும் நான் ஆச்சரியப்பட்டேன். அது என்ன என்கிறீர்களா?

    அது 1605ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை “கிங் ஜேம்ஸ்sakthi2 1” எனும் கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிவுற்ற “புரட்டஸ்டண்ட்( Protestant) “ மதத்தைச் சேர்ந்த அரசன் ஆண்டு கொண்டிருந்த காலம். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சில தீவிர கத்தோலிக்கர்கள் இந்த அரசனை வீழ்த்தி அடுத்த முடிசூட்டும் தகுதிக்கான “எலிஸபெத்” எனும் இளவரசியை இராணியாக்குவதற்கு முயற்சித்தார்கள். அதற்கான திட்டத்தில் அவர்கள் இங்கிலாந்தின் யோக் நகரைச் சேர்ந்த Guy Fawkes என்பவனைத் தேர்ந்தெடுத்தார்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவன் தனது தாய் மறுமணம் செய்து கொண்ட கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவனால் தீவிர கத்தோலிக்க மதப்பற்றுடையவனாக வளர்க்கப்பட்டான். தனது வாலிபப் பருவத்தில் ஐரோப்பா சென்று அங்கே ஸ்பானிய கத்தோலிக்க படையில் இணைந்து எண்பதாண்டு யுத்தம் எனும் பெரும் யுத்தத்தில் போரிட்டு விட்டுப் பின் இங்கிலாந்து திரும்பியிருந்தான்.

    அவர்களது திட்டத்தின்படி இங்கிலாந்து பாராளுமன்றத்தை வெடிமருந்துகளைக் கொண்டு தகர்ப்பதாகும். திட்டப்படி பாராளுமன்றத்துக்கு கீழுள்ள கட்டிடத்தில் வெடிமருந்துகளுடன் Guy Fawkes முதல் நாளே தங்கியிருப்பது என்றும் சரியான நேரத்தில் வெடிமருந்துகளைப் பற்ற வைத்து பாராளுமன்றத்தை தகர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. சரியான நேரத்தில் அவனது திட்டம் இங்கிலாந்து அரசுக்குத் தெரிந்து அவன் வெடிமருந்துகளுடன் கைதாக்கப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டான். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவனுக்குத் தூக்கு எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக அவன் மாடிக்கட்டத்திலிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டான். அதுவே இந்நாள்வரை இங்கிலாந்து முழுவதும் Guy Fawkes day நவம்பர் மாதம் 5ஆம் திகதியொட்டி வரும் சனிக்கிழமை ஒன்றில் வாணவேடிக்கைகள் நடத்திக் கொண்டாடப் படுகின்றது.

    சரி அதற்கும் இனி போன டன்சேர்ச் எனும் கிராமத்துக்கும் என்ன தொடர்பு ? கேள்வி எழுகிறது அல்லவா?

    இந்த டன்சேர்ச் கிராமத்தில் பல விடுதிகள் இருக்கின்றன. அந்நாளில் இங்கிலாந்தின் வடக்கிலிருந்து மற்றப் பகுதிகளுக்குத் தபால் கொண்டு செல்லும் குதிரை வண்டிகள், மக்கள் பிரயாணம் செய்யும் குதிரை வண்டிகள் அனைத்தும் இவ்விடுதிகளில் தங்கி ஓய்வெடுத்துப் பிரயாணம் செய்வது வழக்கமாம். இத்தகைய விடுதி ஒன்றிலேயே 1605ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி ௸ Guy Fawkes இன் முயற்சியின் வெற்றிச் செய்தியைக் கேட்பதற்காக அவனுடன் சேர்ந்த சதிக்கும்பல் தங்கிருந்தார்கள். அந்த விடுதி இன்றும் Guy Fawkes House என்று அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது அவனது முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இங்கிலாந்தின் சரித்திரமே மாற்றியமைக்கப்பட்டிருக்கும். இந்த விடுதியில் தங்கிய பல பிரபலங்களில் இங்கிலாந்தின் பழைய மகாராணி விக்டோரியாவும் அடங்குகிறார். இத்தகைய ஒரு சிறிய அழகிய கிராமம் தன்னுள் இத்தனை பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றின் ஓர் அம்சமாகத் திகழ்ந்த உண்மையைப் புதைத்து வைத்துள்ளது என்று எண்ணும்போது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

    அது சரி பயங்கரவாதிகள் எல்லோருக்கும் முன்னோடிகள் இவர்கள் தானோ ?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • எட்டு நாள் வாரத்தில்!

    மூலம்: பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++ 

    jaya

    கண்ணே ! எனக்குத் தேவை உன் காதல்!
    பெண்ணே ! உண்மை அது நீ அறிவாய்!
    கண்ணே ! உனக்கும் தேவை என் காதல்!
    எனக்கும் தேவை அது போல்;
    காதலிப்பாய்! கட்டிப் பிடிப்பாய்! கண்ணே!
    காதல் புரிவதைத் தவிர
    வேறில்லை உனக்கு வேலை,
    வாரத்தின் எட்டு நாட்களும்!  

    உன்னை நேசிப்பேன் ஒவ்வோர் நாளும்,
    என்றும் நீ என் மனதில் தான்!
    ஒன்று மட்டும் சொல்வேன்,
    என்றும் உன்னைத் தான் நேசிப்பேன்!
    நேசிப்பாய் என்னை!
    நெருங்கிப் பிடிப்பாய் என்னை!

    காதல் தவிரக் கண்ணே! வேறொன்றில்
    கவனம் எதற்கு
    எட்டு நாள் வாரத் துக்கு?
    வாரத்தின் எட்டு நாட்களும்
    நானுன்னைத் தான் நேசிப்பேன்!

    வாரத் துக்கு
    நாட்கள் எட்டும் போதவே போதா,
    எனது கவனம் முழுதும்
    உனக்குச் செலுத்த!

     

     

     

    Share
  • கலாநிதி க.கைலாசபதி – பகுதி-I

    “ஈழத்து இலக்கியப் பரப்பு”
    *********************************
    கலாநிதி க.கைலாசபதி – பகுதி-I 
    (ஏப்ரல் 5, 1933 – டிசம்பர் 6, 1982) 
    ***********************

    kailaspathy 1

    இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர் ஆவார்.

    இவர் மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தாய் தில்லைநாயகி நாகமுத்து.

    தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார்.

    பள்ளிப் படிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும்தொடர்ந்தார்.

    பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழும் மேலைத்தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957 இல் பெற்றார்.

    அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான
    க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம்,
    சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல்
    இவருக்குக் கிடைத்தது.

    பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற “லேக் ஹவுஸ்” பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார்.

    இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார்.

    இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.

    பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, “Tamil Heroic Poetry” என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார்.

    1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின்
    யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது.

    அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார்.

    ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.

    ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

    தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது.

    இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர்,
    அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

    இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

    இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது.

    இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது.

    1982ல், “ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்” என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும்.

    “அடியும் முடியும்”,
    “பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்”,
    “தமிழ் நாவல் இலக்கியம்”,
    “இலக்கியச் சிந்தனைகள்”
    என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.

    மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர்,
    49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார்.

    தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில்
    திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைத்தவர்.
    ஒப்பியல் நோக்கையும், சமூகவியல் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர்.

    “கலை கலைக்காக’ என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர்.

    இலக்கியத்துக்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர்.

    சமூகப் பொருளாதார ஏற்றதாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்.

    தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்று நெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர்.

    ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர்.

    இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கியவர்.

    யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர்.
    இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.
    இத்தனை பெருமைக்கும் உரியவர் “ஈழம் தந்த கொடை’ கலாநிதி க.கைலாசபதி.

    மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில்
    இளைய தம்பி கனகசபாபதி தில்லைநாயகி நாகமுத்து தம்பதிக்கு 1933-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்தார்.

    தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார்.

    தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்ததால், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு ராயல் கல்லூரியிலும் பயின்றார்.

    பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.

    பல்கலைக்கழகக் கல்வி முடிந்தபின், தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

    பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.

    பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார்.

    “தமிழில் வீரயுகப் பாடல்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து “கலாநிதி’ (முனைவர்) பட்டம் பெற்றார்.

    கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார்.

    சங்க இலக்கியத்தைக் கிரேக்க, ஐரிஷ் முதலிய இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார்.

    வீரயுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

    “தமிழில் வீரயுகப் பாடல்கள்’ என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது.

    கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறிமரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல், தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

    ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார்.

    இலங்கைப் பல்கலைக்கழகத்தில் யாழ்-வளாகத் தலைவராக இருந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மூன்று ஆண்டுகள் செயல்பட்டார்.

    அமெரிக்காவிலுள்ள “அயோவோ பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

    இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார்.

    அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் “புதியதைப் படைக்கும் எழுத்துகளுக்குரியர்’ என  இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.

    யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு,
    இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு,
    இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக்கழகம், இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு,
    இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு,
    ட்டியக் குழு முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.

    “இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது.

    இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

    அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்” என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.

    “கலை, இலக்கியம் முதலியற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    சமூகவியலை பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டும்.

    ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

    “உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்” என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.

    “உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன.

    இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன.

    ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை” என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    இவரது நூல்கள்
    *************************
    பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்,
    தமிழ் நாவல் இலக்கியம்,
    ஒப்பியல் இலக்கியம்,
    அடியும் முடியும்,
    இலக்கியமும் திறனாய்வும்,
    கவிதை நயம்,
    சமூகவியலும் இலக்கியமும்,
    நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,
    திறனாய்வுப் பிரச்சினைகள்,
    பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,
    இலக்கியச் சிந்தனைகள்,
    பாரதி ஆய்வுகள்,
    ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,
    இரு மகாகவிகள்,
    சர்வதேச அரசியல் நிகழ்வுகள்
    முதலிய நூல்களைத் திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.

    இலங்கையில் இருந்து வெளிவந்த,
    தொழிலாளி,
    தேசாபிமானி,
    செம்பதாகை,
    ரெட்பானர்
    முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில் கட்டுரைகள் வடித்துள்ளார்.

    பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் இளங்கதிர் இதழிலும், இலக்கிய இதழான மல்லிகையிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.

    தமிழ்நாட்டு இதழ்களான
    தாமரை,
    சாந்தி,
    சரஸ்வதி,
    செம்மலர்,
    தீக்கதிர்,
    ஜனசக்தி,
    ஆராய்ச்சி
    முதலியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

    இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான, தத்துவார்த்த நூல், கைலாசபதியின் “தமிழ்நாவல் இலக்கியம்’. தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகிறது.

    கல்வித்துறை நிபுணர், இதழாளர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர், விமர்சகர், பேச்சாளர் எனப் பன்முகத் தன்மையுடன் விளங்கினார் கைலாசபதி.

    முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி கைலாசபதி 49 வயதில் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

    தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழ நாட்டிலிருந்து
    எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

    தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு.

    தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலாநிதி கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றென்றும் விளங்குவார்!

    நன்றி:
    விக்கிபீடியா
    பி. தயாளன் – தினமணி

    ****************************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    09/09/2017

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ‘’என்ன தவம் செய்தனர் கோபியர் எங்கும் நிறை பரப்ரும்மம் மால் மேல் புகார் செய்ய’’….!

    170914- The Evidence- Gopikas report to Yashoda -Krishna Leela -lr
    170914- The Evidence- Gopikas report to Yashoda -Krishna Leela -lr

    ”கோபியர் கூடிவளைக் கையும் களவுமாய்,
    கோபியராய்(கோபமாக) கண்ணனைக் கொண்டுவந்து -பாபியிவர்!
    எங்காத்து வெண்ணையை ஏறித் திருடினார்:
    பொங்கோத(பாற்கடல்) மால்மேல் புகார்’’….கிரேசி மோகன்….!

    Share
  • தன்வந்திரி பீடத்தில் அஷ்டமி யாகம் நடைபெற்றது

    IMG_20170913_121538

    IMG_20170913_121401

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இன்று 13.09.2017 புதன் கிழமை தேய்பிறை அஷ்டமி யாகம் நடைபெற்றது. இந்த யாகம் வரவேண்டிய பணம் வரவும் தரவேண்டிய பணம் தரவும். நோயினால் உண்டான உபாதைகள் நீங்கி, வலியும், வேதனையும் பெருமளவு குறையவும் சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரவும். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரிக்கவும் அரசியலில் வெற்றிகள் உண்டாகவும், கடுமையான கர்மவினைகள் தீரவும் தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்கவும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் வழக்கு வியாஜ்ஜியங்களில்வெற்றி பெறவும்,வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படவும் வெளி நாட்டில் வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கவும், செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலவும் இன்றூ காலபைரவர் ஹோமம் , சொர்ண பைரவர் ஹோமம் மற்றும் ம்ருத்ஞ்ய ஹோமம் நடைபெற்றது. பைரவர்களுக்கும் மகிஷாசுரமர்த்தினிக்கும் மகா அபிஷேகம் நடைபெற்று.தொடர்ந்து செவ்வரளி பூக்களால் அர்ச்சனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170913 - Kaliamala - lr
    170913 – Kaliamala – lr

    “சோழியன் முன்னுச்சி சும்மாவே ஆடாது,
    காளியன் ஓங்காரக் குண்டலினி -வாழிய!
    கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட கண்ணனால்,
    மண்ணுண்ணி பாம்பாய் மலர்ந்து(காளியமாலா)”!….கிரேசி மோகன் ….!

    Share
  • மழைப் பயணி

    எம்.ரிஷான் ஷெரீப்

     

    ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிகளோடு

    மழை நனைத்த ஒற்றையடிப் பாதை

    ஈரமாகவே இருக்கிறது இன்னும்

     

    ஊதா நிறப் பூக்களைக் கொண்ட

    தெருவோர மரங்கள்

    கிளைகளிலிருந்து காற்று உதிர்க்கும் துளிகளினூடு

    நீரில் தலைகீழாக மிதக்கின்றன

     

    இருண்ட மேக இடைவெளிகளிலிருந்து வந்து

    தரையிலிறங்கியதும்

    சந்திக்க நேரும் மனிதர்களுக்கேற்ப

    மழையின் பெயர் மாறிவிடுகிறது

    ஆலங்கட்டி, தண்ணீர், ஈரம், சேறு, சகதியென

     

    மழைக்குப் பயந்தவர்கள்

    அடைத்து மூடிய ரயில் யன்னல் வழியே

    இறுதியாகக் காண நேர்ந்த

    பச்சை வயல்வெளியினூடு

    மழையில் சைக்கிள் மிதித்த பயணி

    இந் நேரம் தனது இலக்கை அடைந்திருக்கக் கூடும்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 26

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளத்தின் உள்ளே ஒளியாய்

    திருமூலர்-1-3

    உள்ளத்தில் ஒளியாய் அவன் உள்ளிருந்து நமக்கு வழிகாட்டும் போதும் நாம் ஏன் அவனை அறிந்துகொள்வதில்லை? அவன் காட்டும் பாதையில் ஏன் செல்வதில்லை? அதற்குக் காரணமே அவன் உள்ளிருந்தும் அவனை நாம் அறியாமல் வெளியே அவனைத் தேடும் மாயையால்தானே? அவனை உணர்வு பூர்வமாக, அனுபவ பூர்வமாக மட்டுமின்றி வேறெப்படி அறிந்து கொள்ளமுடியும்? இந்தக் கருத்தை விளக்கும் வண்ணம் திருவாசகத்தில் மாணிக்க வாசகர் கூறுகின்றார்:

    உண்டு ஒரு பொருள் என்று உணர்வார்க்கு எலாம்

    பெண்டிர் ஆண் அலி என்று அரி ஒண்கிலை

    தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்

    கண்டும் கண்டிலேன் என் கண் மாயமே.

    இந்தப் பாட்டில் மாணிக்க வாசகர் சூசகமாக “உணர்வார்க்கு’ என்று கூறி அனுபவ நிலையின் முக்கியத்துவத்தை எடுத்து உரைக்கின்றார்

    இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் காரைக்காலம்மையார் “காதலால்- காண்பார்க்குச் சோதியாய் சிந்தையுள் தோன்றுமே ” என்று அன்போடு அவனை அணுகவேண்டிய நிலையையும் சோதியாய் அவனைச் சிந்தையில் அனுபவிக்க வேண்டியதன் காரணத்தையும் நம்முன் வைக்கின்றார்.

    இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

    உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை

    உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை

    உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்

    உள்ளம் அவனை உருவறியாதே .

    ஆகவே அவனை அறிந்து கொள்ள, அவனை அணைத்துக்கொள்ள, அவனோடு நிரந்தரமான உறவு கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கும் நமக்கு திருமூலரிடமிருந்து பதில் கிடைக்கின்றது

    ஒளித்துவைத்  தேன்உள்ளூர உணர்ந்து ஈசனை

    வெளிப்பட்டு நின்று அருள் செய்திடு மீண்டே

    களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை

    வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சி யுமாமே

    அவனை உள்ளத்தால் உணர்ந்து அவனோடு அருள்சார்ந்த உறவை ஏற்படுத்தி அதை உறுதிசெய்துகொண்டால் அவன் நம் உள்ளத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டான்.

    உள்ளத்தின் உள்ளே அவனை நிறுத்தி அறிந்தோர்க்கு எப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கும்? இந்த அனுபவ  நிலையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கண்ட வரிகள்

    சிப்பியில் முத்தொளிகாண் சின்மயநோக் கில்லார்க்கு

    அப்பி லொளிபோ லமர்ந்த மெய்ப்பொருள்காண்

    என்னே அழகான விளக்கம் ! அவன் சிப்பிக்குள் அமர்ந்த முத்தாக உள்ளே நின்று ஒளி வீசுகின்றான்.

    இந்த அழகான ஒளிப்பிழம்பையும் அதனால் உண்டான அனுபவத்தையும் எப்படிப்பட்ட வார்த்தைகளால் நம்மால் வர்ணிக்க முடியும்? ஒரு முறை ஒரு சீடன் இதே கேள்வியை கபீர்தாஸரிடம் கேட்டபொழுது அவர் அவனுக்கு சிறிதளவு இனிப்பைக் கொடுத்து “இது எவ்வாறு இருக்கிறது” என்று கேட்க “அது இனிப்பாக இருக்கிறது என்று சொல்ல “இனிப்பு என்றால் என்ன” என்ற் கேள்வி எழ. அதை அனுபவத்தால் தான் உணரமுடியும் தவிர அதை வார்த்தைகளால் சொல்லமுடியாது என்ற உண்மையை உணர்ந்தான். அதே போல்தான் இறைவனை உணர்வால் தான் அறிந்துகொள்ள முடியும் என்ற கருத்து மேலோங்கி நிற்கின்றது/.

    தொடருவோம்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 2

    -மேகலா இராமமூர்த்தி

    மானுட சமூகத்தையும் மாந்தக் கூட்டத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு வைத்திருப்பது முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்த் திகழும் காதல்!

    கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
    மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாகும் விந்தை நம் சிந்தை தொடுவது.

    இதோ…எடுத்ததை முடிக்கும் திறனும் உரனுங்கொண்ட கட்டழகுக் காளையொருவன், கானவேட்டையில் கலைமானொன்றைத் துரத்தி வரக் காண்கிறோம்.  அம்மானோ ஆண்தகைக்கு அகப்படாது நாலுகால் பாய்ச்சலில் சென்றுவிட, அதனைத் தேடிக்கொண்டு மலையருவிப் பக்கம் வந்தவன், வரும் வழியில் அழகிய தமிழ்மகளொருத்தி தன் தோழியோடு செயலை (அசோகு) மரத்தடியில் நின்றிருக்கக் கண்டான்; தான் கலைமானைத் துரத்திவந்த செயலை மறந்து, மரத்தடியில் நின்றிருந்த பெண்மானை இமையா நாட்டத்தொடு நோக்கினான். தனைநோக்கிய பெம்மானை அப்பெண்மானும் நோக்கினாள்.

    தன் வீரத்தையும் உரத்தையும் அப் பாவையின் பார்வை உருவிப்போனதை உணர்ந்தான் அந்தக் காளை. வேட்டத்தில் இப்போது அவனுக்கு நாட்டமில்லை. தன் கண்ணெதிரே தோன்றுவது அணங்கா? ஆய்மயிலா? எனச் சிந்திக்கத் தொடங்கினான். தன் ஐயத்தைப் போக்கிக்கொள்ள அருகே சென்று அப்பெண்களிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தான். அவர்களோ பெண்களுக்கே உரிய நாணையே பூணாகக் கொண்டவர்களாதலால், அந்நிய ஆடவனோடு உரையாடத் தயங்கித் தரைபார்த்து நின்றிருந்தனர். மிகுந்த ஏமாற்றத்தோடு தன்னூர் திரும்பினான் அவன்!

    வேட்டையாடச் சென்ற தலைவன் விலங்கு எதனையும் வீழ்த்திக் கொணராது வறிதே திரும்பியது கண்ட அவன் தோழன், “வேட்டைக்குச் சென்றாய்…வெறுங்கையோடு மீண்டுவருகின்றாயே! விலங்கு ஏதும் வசப்படவில்லையா?” என்று வினவினான்.

    ”விலங்கைத் தேடிச்சென்ற என்னை விலங்கிட்டுவிட்டாள் வஞ்சியொருத்தி. அதனால் கான்விலங்கை வேட்டையாட நான் மறந்தேன்” என்ற தலைவன் தொடர்ந்து,

    ”மலையிலிருந்து வீழும் தூவெள்ளருவி பாறை வெடிப்புகளில் ஒலிக்கும் பன்மலர்ச் சாரலிலுள்ள சிறுகுடிவாழ் குறவன் ஒருவனுடைய குறுமகளின் நீரையொத்த மென்சாயல், தீபோன்ற என் உரத்தையும் அவித்துவிட்டது நண்பா!” என்றான் ஏக்கத்தோடு.

    மால்வரை  இழிதருந்  தூவெள்  அருவி
    கல்முகைத் 
    ததும்பும்  பன்மலர்ச்  சாரல்
    சிறுகுடிக் 
    குறவன்  பெருந்தோட்  குறுமகள்
    நீரோ 
    ரன்ன  சாயல்
    தீயோ 
    ரன்னவென்  உரனவித்  தன்றே.  (குறுந்: 95 – கபிலர்)

    [ ”போர்க்களத்துக்கு வாராதவர்கூடப் பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சும் என் வலிமை, வனிதை ஒருத்தியின் ஒளிமிகு நுதலுக்குத் தோற்றுப்போனதே” என்று வள்ளுவர் படைத்த காதலனும் தன்னையே எள்ளி நகையாடுவதை இதனோடு நாம் பொருத்திக் காணலாம்.

    ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும்
    உட்குமென் பீடு.   (குறள்: 1088) ]

    தலைவனின் விசித்திர மொழிகளைக் கேட்ட தோழன்,

    நண்ப! ”வலியும் உரனும் மிக்க உன் பேராண்மை மெல்லிய பெண்ணொருத்தியிடம் தோற்றுப்போனது என்று நீ சொல்வதை என்னால் நம்பமுடியவில்லையே” என்று வியந்தான்.

    ”ஏன் நம்ப மறுக்கிறாய்? சிறிய வெள்ளிய பாம்புக்குட்டியொன்று வலிமிகு காட்டுயானையையே வருத்தும் இயல்புடையது என்று நீ அறியாயோ? அதுபோல், அழகிய வளையணிந்த அவ்விளைய மகளும் என்னை வருத்துகின்றாள்” என்றுகூறிப் பெருமூச்செறிந்தான்.

    சிறுவெள்  ளரவின்  அவ்வரிக்  குருளை
    கான 
    யானை  அணங்கி  யாஅங்கு
    இளையள் 
    முளைவாள்  எயிற்றள்
    வளையுடைக் 
    கையள்எம்  அணங்கி  யோளே. (குறுந்: 119 – சத்திநாத(க)னார்

    [பொதுவாக யானைக்கும் புலிக்குமிடையேயான பகையையும் போரையுமே இலக்கியங்கள் நமக்குப் பெரிதும் சுட்டியிருக்கின்றன.

    பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின் (குறள்: 599)
     என்று வள்ளுவமும் புலியைக்கண்டு அஞ்சும் யானையை நமக்கு அடையாளப்படுத்துகின்றது. ஆனால், புலியொத்த வலியற்ற ஒரு சிறு பாம்புக்குட்டிகூடக் காட்டுயானையை வருத்தும் எனும் புதிய செய்தியைச் சத்திநாதனாரின் குறுந்தொகைப் பாடல் நமக்கு அறியத்தருகின்றது.]

    தலைவனின் சொற்கேட்டுக் கடகடவென  நகைத்த தோழன்,

    ”பெருந்தோளுடைய அருமைத் தலைவ! காதலென்பது வருத்தமும் நோயும் அன்று!  பழங்கொல்லையில் தழைத்த முற்றாத இளம்புல்லைக் கடித்துண்ண முடியாத கிழட்டுப் பசு ஒன்று அதனைத் தன்  நாவால் தடவி இன்புறுவதுபோல், காமமும் அதனை நினைப்பதால் இன்பந்தரும் ஒரு மனநிலையேயன்றி வேறில்லை. விரும்பினோரை அது விடாது; வெறுத்தோரை அது தொடாது. ஆதலால் காமவுணர்வைக் கொன்றுவிடு; உன் ஆற்றலால் அதனை வென்றுவிடு!” என்று இடித்துரைத்தான்.

    காமம் காமம் என்ப காமம்
    அணங்கும்
    பிணியும் அன்றே நினைப்பின்
    முதைச்சுவற்
    கலித்த முற்றா இளம்புல்
    மூதா
    தைவந் தாங்கு
    விருந்தே
    காமம் பெருந்தோ ளோயே.  (குறுந்: 204 – மிளைப்பெருங்கந்தனார்)

    தோழனின் மொழிகள் தலைவனின் செவிகளுக்கு எட்டியாய்க் கசந்தன; தன் காதல் கைகூட அவன் ஏதேனும் யோசனை சொல்வான் என்று ஆவலோடு எதிர்பார்த்தவனுக்குக் காதலையே விட்டுவிடு என்று அவன் சொன்ன யோசனை எரிச்சலூட்டியது.

    இனி இவனிடம் இதுகுறித்துப் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த தலைவன், வேறு யாரை அணுகினால்  தன் காதல் வெல்ல வழிபிறக்கும் எனச் சிந்தித்த வேளையில்,  பளிச்சென்று அவன் மூளையில் மின்னல் ஒன்று வெட்டியது! யோசனை ஒன்று கிட்டியது!

    [தொடரும்]

     

     

    Share