மகாதேவஐயர் ஜெயராமசர்மா, B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) SLEAS

முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்              

 

(எமது வாழ்வில் கோவில் – பகுதி I)

(எமது வாழ்வில் கோவில் – பகுதி II)

(எமது வாழ்வில் கோவில் – பகுதி III)

 

எங்கும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான். அப்படியிருக்க கோவில்கள் எதற்கு? அங்கு விக்கிரகங்கள் எதற்கு ? என்று கேட்கின்ற நிலையினையும் பார்க்கின்றோம். பசுவின் உடலெங்கும் பால் செறிந்துள்ளது. இதனால்  பசுவின் கொம்பினையோ அல்லது வாலினையோ அல்லது செவியினையோ தொட்டால் பால் வந்துவிடுமா? இல்லவே இல்லை! அதன் மடியில் கைவைத்துக் கறந்தால் தான் தேவையான பாலைப் பெறமுடிகிறது. இது போலவே எங்கும் நிறைந்துள்ள இறைவனை கோவில் என்ற இடத்தில் வைத்துப் பார்க்கும் பொழுது அருள் கிடைக்கிறது. அமைதி கிடைக்கிறது. அனுக்கிரகம் கிடைக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. அநுபூதிமான்கள் கூறுகின்றனர். இதனால் தான் கோவில் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத தாக அமைந்துவிட்டது.

கோவிலை வழிபடாதவன் வாழ்வதற்கே தகுதியற்றவன் ஆகின்றான்.

இறைவன் உறைகின்ற இடம்தான் எமக்கு ஈடேற்றத்தைத் தரும். நமது முன்னோர் கூறியிருப்பதை மறந்துவிடக்கூடாது. இதனால் தான்

  ” தலையே நீவணங்கா

    கண்காள் காண்மின்களோ

    நெஞ்சேநீ நினையாய்

    கைகாள் கூப்பித்தொழும்

    வாயே வாழ்த்துகண்டாய் “

என்று திருவங்கமாலை வாயிலாக அப்பரடிகள் உடலின் பயனே இறைவனைத் தொழுதலே என்பதை அங்கம் அங்கமாகக் காட்டி அவற்றின் செயற்பாடுகளையும் எல்லோருக்கும் விளங்கும் வகையில்’ எடுத்துக் கூறியிருக்கிறார்.

இதனை வலியுறுத்தும் விதமாக வள்ளுவப் பெருந்தகை

” கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை ” என்றார். மணிவாசகப் பெருமானும்

” மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் ” என்று கூறுவதும்

நோக்கத் தக்கதே. இறைவன் புகழ்கேளாச் செவியும், இறைவன் திருக்கோலத்தைக் காணாத கண்ணும் இருந்தென்ன விட்டென்ன ?

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சமும் தந்த இறைவனை நாம் எப்படிப் போற்றுவது ? இதனால் தான் மணிவாசகர் ” ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி ” என்று மிகத் தெளிவாக இறைவனைப் பற்றி நமக்குக் காட்டுகின்றார். இவையாவுமே மனிதனும் அவன் வாழ்வும் இறைவன் உறையும் கோவிலுடன் இணைக்கப் படுவதைக் காணமுடிகிறதல்லவா? இந்த வகையிலும் வாழ்விலே கோவில் என்பது பிரிக்க முடியாது இருக்கின்றது என்பதும் புலனாகிற தல்லவா?

சமூக நோக்கில் பார்க்கின்ற பொழுது ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமமே ! இங்கு ஏழை என்பதோ, பணம்படைத்தவர் என்பதோ, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதோ முக்கியமல்ல. இறை அடியார்கள் என்பதுதான் முக்கியம் என்னும் கருத்து சமூகம் தழுவிய உயர்கருத்தாகும். இது வாழ்க்கையில் கோவிலை இணைப்பதற்குப் பெரிதும் முக்கியம் மிக்கதெனலாம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘ என்னும் உயரிய நோக்கைக் காட்டும் புனித இடம் கோவில்கள் என்பதும் முக்கியமாகும்.

பல பெரியவர்கள் கோவிலைவைத்தே சமயத்தை, மொழியை, பண் பாட்டை, கலாசாரத்தைப் பேணிக்காப்பதற்கு முயன்றிருக்கிறார்கள். பலரும் ஒன்றுகூடும் இடமாகக் கோவில்கள் அமைந்த காரணத்தால் கோவிலை மையமாக வைப்பதால் பல நன்மைகள் விளையும் என்று அவர்கள் கருதினார்கள். இந்த வகையில் நல்லைநகர் ஆறுமுநாவலர் அவர்களைக் குறிப்பிடலாம்.

நாவலர் பெருமான் தனது சமயப் பிரசங்கங்களை நிகழ்த்துவதற்குக் கோவில்களையே தேர்ந்தெடுத்தார். நாவலர் பெருமானால் யாழ்ப்பாணத்தில் “கந்தபுராண கலாசாரம்” உருவாக்கப்பட்டது. கோவில்கள் தோறும் கந்தபுராணம்,பெரியபுராணம், திருவிளையாடற் புராணம்  எனப் புராணங்களை விளக்கிப் பல பேருரைகளை நாவலர் பெருமான் அவர்கள் நிகழ்த்தினார்கள். அத்துடன் சைவசமய உண்மைகளைத் தத்துவங்களை மக்களுக்கு ஏற்ற விதத்தில் எடுத்துச் சொன்னார்கள். சொன்னதோடு நில்லாமல் தாமும் அதன்படி வாழ்ந்தும் காட்டினார்கள். நாவலர் பெருமானின் பிரசங்கங்கள் கோவிலையும் வாழ்வினையும் இணைக்கும் வகையிலும், வாழ்வினைச் செம்மையாய் அதாவது சமயவழியில் வாழும் வகையிலும்  இட்டுச் சென்றது எனலாம்.

புராணப் பாடல்களை நாவலர் பெருமான் சொல்ல அதற்கு அவருடன் சேர்ந்த சைவ அறிஞர்கள் விளக்கம் சொல்ல அங்கே இலக்கியம் வளர்ந்தது. இலக்கியத்தின் சுவை உயர்ந்தது. தமிழ் மொழியின் பல உன்னதங்கள் அங்கே உதயமாகி வந்தன. இதனைக் கேட்பதற்கு அக்காலத்தில் மக்கள் பெருந்திரளாக வந்தார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. சமயம், மொழி, பண்பாடு, ஒழுக்கம், யாவும் வளர்வதற்கு இப்பிரசங்கங்கள் வழிவகுத்தன என்பதோடு,  இவற்றுக்கு ஏற்ற இடமாகக் கோவில்களே அமைந்தன என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும். புராணங்களுக்கு விளக்கம் சொல்வதை  ” பயன் சொல்லுதல் ” என்று அழைத்தார்கள். அதாவது நமக்கு வாழ்வில் எத்தகைய பயன்கள் வரும் , இப்புராணங்கள் எந்தளவு சமூகப் பயன் மிக்கன என்னும் கருத்துக்களும் இதில் அடங்கும் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

நாவலரின் பின்னர் ஈழத்து வரலாற்றில் கோவிலை மையப்படுத்தி புராணங்களை யாவரும் விரும்பும் வகையில் இன்னிசையுடன் பாடி அதற்கு ஏற்ற விளக்கங்களை ஆற்றியவர் மணிபாகவதர், மணிஐயா பின்னாளில் துறவுபூண்டு சுவாமிநாதத் தம்பிரான் என்னும் பெயர்களைக் கொண்ட பெருமகன் ஆவர். இவராலே உருவாக்கப்பட்டது தான்  நல்லூர் திருஞானசம்பந்த ஆதீனமாகும். இப்பெருமகன் தனது இசை தழுவிய கதாப் பிரசங்கங்களை நிகழ்த்தியது யாவுமே கோவில்களிலே என்பதும் குறிப்பிடப் படவேண்டிய விடயமேயாகும்.

இவரின் காலத்தவரான முருகன் அருள் பெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது கதாப்பிரசங்கங்களையும், அருள் உரைகளையும் ஆற்றுவதற்குத் தேர்ந்தெடுத்த இடமும் கோவில்களே என்பதும் நோக்கத் தக்கதே. வாரியார் சுவாமிகளின் பணிகள் அத்தனையும் கோவில்களை மையப்படுத்தியே அமைந்தன. அவர் செல்லும் இடமெல்லாம் கோவிலையும்  மக்கள் வாழ்வினையும் இணைத்தே தமது கருத்துக்களை விதைத்து நின்றார். இதனால் நமது வாழ்வில் கோவில்கள் எந்தளவுக்கு இன்றியமையாதன என்பதை பாமரரும் உணர்ந்து கொண்டார்கள். படித்தவர்களும் உணர்ந்து கொண்டார்கள்.  யாவருக்கும் ஏற்றபடி வாரியார் சுவாமிகளின் விளக்கங்கள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடப் படவேண்டிய ஒன்றாகும்.

துர்க்கா துரந்தரியாக யாழ்மண்ணின் தவப்புதல்வியாக வந்தவர்தான் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். இவரின் ஆன்மீகக் கருத்துகள், வாழ்வியல் சிந்தனைகள் யாவும் அரங்கேறிய இடமாகக் கோவில்களே விளங்கின என்பதை யாவருமே அறிவர். தனது சமய சமூகத் தொண்டினை ஆற்றுவதற்கு தெல்லிப்பளையில் துர்க்கை அம்மன் கோவிலை ஆதாரமாக்கினார் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கோவிலை வாழ்வியலோடு இணைத்து நமது வாழ்வில் கோவில்கள் மிகவும் தேவையான ஒன்று என்பதை தனது பேச்சாலும், தனது மூச்சாலும்  இக்காலத்தவர்க்கு உணர்த்தியவரும், வாழ்ந்து காட்டியவரும் துர்க்கா துரந்தரி அவர்கள் என்பதை யாவருமே ஏற்றுக் கொள்வார்கள். அவரினால் கோவிலின் மகத்துவம் யாழ்மக்களின் மனத்தில் ஆழமாக வேரூன்றியது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கோவில்களில் உயர்ந்த கோபுரங்கள் அமைக்கப் படுகின்றன. ஓசையினை உண்டாக்கும் பெரிய மணிகள் வைக்கப்டுகின்றன. இவைகள் தேவைதானா என்று நினைக்கத் தோன்றும் ! இவற்றால் என்னதான் நன்மை வரக்கூடும் என்றும் மனம் வினாவிக்கொண்டேயும் இருக்கும் ! வீட்டிலிருந்து உயர்ந்த கோபுரங்களைப் பார்க்கும் பொழுதும், கோவிலின் பெரிய மணியின் ஒலியினைக் கேட்கும் பொழுதும் நமது மனதில் நல்ல சிந்தனை உதயமாவதற்கு வழி வகுக்கிறது எனலாம். கோபுரத்தைப் பார்க்கும் பொழுது கோவில்தான் மனத்தில் வருகிறது. கோவில் நினைப்பு வரும் பொழுது ஆண்டவன் பற்றி மனம் எண்ணுகிறது. இதே போன்றே கோவில் மணியின் ஓசை காதினூடாக மனத்தில் புகுந்து மனத்தில் நல்ல மாற்றங்கள் வர வழி வகுக்கிறது. இதனால் தான் அருகிலோ சற்று தூரத்திலோ கோவில்கள் இருப்பது யாவருக்கும் வாழ்க்கைக்குச் சிறந்தது என்று நம் முன்னோர்கள் எண்ணினார்கள். ஆகவேதான்   ” கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ” என்று உறுதியாக கூறிச் சென்றுள்ளார்கள்.

கோவிலை மையமாக வைத்துப் பலர் வாழ்கிறார்கள். ஓதுவார்கள், சிற்பக் கலைஞர்கள், கட்டிடக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், அலங்காரக் கலைஞர்கள், ஓவியக் கலைஞர்கள், பிரசங்கங்கக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள்,நாட்டியக் கலைஞர்கள், வேதம் ஓதும் வேதியர்கள், பூமாலை கட்டுபவர்கள்  இப்படிப் பலரும் கோவிலை நம்பியே வாழுகிறார்கள். கோவில் அவர்களின் வாழ்வில் மிகவும் இன்றியமையாததாகி இருக்கிறது. நாதஸ்வரம் என்னும் இசை இன்றளவும் உலகில் இருக்கிறது என்றால் அதற்கு கோவில்கள்தான் உறுதுணை என்பதை மறுக்க முடியாது. இவற்றை யெல்லாம் நோக்கும் பொழுது கலைகள் வளர்வதற்கும், இலக்கியங்கள் இருப்பதற்கும், புராணங்கள் பயன் கொடுப்பதற்கும், சமூக ஒழுக்கங்கள் வீழ்ந்துவிடாது இருப்பதற்கும், பக்தி மார்க்கம் பக்குவமாய் இருப்பதற்கும்,கலாசாரம், பண்பாடு தன்னிலையினை இழந்துவிடாது இருபதற்கும் கோவில்களே நிலைக்களனாக இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எனவே எமது வாழ்வில் கோவில் என்பது இரண்டறக் கலந்தே விட்டது என்றுதான் சொல்லுதல் வேண்டும்.

” மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் “

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.