ஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்பத்திகள்

எமது வாழ்வில் கோவில் – பகுதி II

மகாதேவஐயர் ஜெயராமசர்மா,

முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

(எமது வாழ்வில் கோவில் – பகுதி I)

கோவில்கள் சமூகத்தின் உயிர்நாடியாகும். கோவில்கள் ஆன்மீகத்தின் உறைவிடமாகும். அறமுரைக்கும் இடமாகாவும்,நீதிவழங்கும் இடமாகவும், சாந்தியினை சமாதானத்தினை வழங்கும் இடமாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வின் மையப் பொருளான ஆண்டவனையே காணும் இடமாகவும் விளங்குகின்றது என்பது முக்கியமாக  இருக்கிறதல்லவா?

மனம் நொந்தாலும் கோவிலுக்குப் போவோம். மனம் மகிழ்ந்தாலும் கோவிலுக்குப் போவோம்.  கோவிலுக்குப் போவதால் எங்கள் குணங்களே மாறுகின்றன அல்லவா?கோவிலைச் சாந்தி நிலையம் என்று கூறுவது பொருத்தமாக  இருப்பது போலத் தெரிகிறதல்லவா ?

சாந்தி தருவது கோவில்.சக்தி தருவது கோவில். ஏங்கிய பேர்களுக்கு என்றும் இன்பம் அளிப்பதும் கோவில். தூங்கிய மனத்தை நாளும் துடித்து எழச்செய்வதும் கோவில். சுந்தரமாய் இருப்பதும் கோவில். சுகத்தை அளிப்பதும் கோவில். வந்திடும் அடியார்களுக்கு மாற்றத்தைத் தருவதும் கோவில். நொந்துநிற்கும் உள்ளங்களை நொடியாமல் செய்வதும் கோவில். மந்திரமயமாய் இருந்து மருளினைப் போக்குவதும் கோவில்கள் அன்றோ !

கோரயுத்தங்கள் புரிந்து வெற்றிகளைக் குவித்த சோழமன்னர்கள் தான் வானளாவிய கோவில்களைக் கட்டினார்கள். சோழப் பேரரசு காலம் கோவில்களின் பொற்காலம் என்றும் எங்கள் சமயத்தின் உன்னத காலம் என்றும் சொல்லலாம். எத்தனையோ யுத்தங்கள் புரிந்து வெற்றிகளைக் குவித்தாலும் சோழர்காலம் இன்றளவும் போற்றப் படுவதற்குக் காரணம் கோவில்கள் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள். அந்தளவு சோழர்காலத்தில் கோவில்கள் சமூகத்தின் மையநாடியாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்க விசயமெனலாம். கோவில்கள் நீதிஸ்தலமாகவும்,  வங்கிகளாகவும்,இலக்கியங்களை அரங்கேற்றும் மன்றமாகவும், மொழிப்பற்றிய கருத்துக்களை அரங்கேற்றும் அவையாகவும், பலவித கலைகளை இணைக்கும் மத்தியாகவும் என அரச சபையினைவிட முக்கியத்துவம் மிக்கனவாகக் கோவில்களே விளங்கி இருந்தன என்பதை வரலாற்றால் அறிகின்றோம். சைவத்தின் கண்களாக விளங்குகின்ற திருமுறைகளே கோவிலில் இருந்துதான் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது.திருமுறைகள் கோவில் வழிபாட்டின் முக்கியத்துவத்தை மிகவும் சிறப்பாகச் செப்பி நிற்கின்றன,

கந்தபுராணம், பெரியபுராணம், யாவுமே கோவிலில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டன. சேக்கிழார் பெருமானின் பெரியபுராண அடியார்கள் வாழ்வே கோவிலினையே மையமாய்க் கொண்டிருந்தது என்பது மனக்கொள்ள தக்கதாகும்.

கோவில்களை அடிப்படையாகக் கொண்டே இசை, நடனம்,சித்திரம் சிற்பம், கட்டிடக்கலை யாவும் வளர்ச்சி அடைந்தன. சிற்பக்கலையின் பல்வேறுவித பரிணாமங்கள் கோவில் இல்லாவிட்டால் வந்திருக்குமா என்பது ஐயத்துக்கு உரியதே ! அதே போன்றதே கட்டிடக் கலையுமாகும். பல்வேறுவிதமான நுட்பங்கள் கொண்ட கட்டிடக் கலைகளின் இருப்பிடமாய் கோவில்கள் விளங்கி இருக்கின்றன.  இன்றளவும் இக்கலைகள் கோவில்களை அண்டியே வளர்கின்றன என்பதும் முக்கிய அம்சமெனலாம். சமயம் சார்ந்தவையாக  ஓவியம், சிற்பம் இருந்தாலும் கலைகள் என்னும் விதத்தில் என்றும் சிறப்பினையே தந்துகொண்டு இருக்கிறது என்பது உண்மையாகும்.

சோழர்களைத் தொடர்ந்து பாண்டியர்கள், பல்லவர்கள் கோவில் கட்டுவதில் பெரிதும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் சோழர்காலம் என்பது எங்கள் சமயவரலாற்றிலும் கோவில்கள் வரலாற்றிலும் செல்வாக்கு நிறைந்த காலமாகவே விளங்கியது என்பது வரலாற்று உண்மையெனலாம்.

சோழர்காலம் மக்களுக்குக் கோவில்கள் எந்தளவுக்கு முக்கியம் வாய்ந்திருந்தது என்பதை வெளிப்படுத்தும் காலமாகவே இருந்தது எனலாம். கலை கலாசாரம் இவைகள் கோயில்களினூடாக  மக்களுக்கு சென்றடையும் என்னும் ஒரு நம்பிக்கை இக்காலத்தில் பிறந்தது என்றே கூறலாம். இதற்கு முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமானும் முக்கிய காரணமாக விளங்குகிறார் எனலாம். அரசர்களை நல்வழிப்படுத்தும் நல் அமைச்சராக சேக்கிழார் அமைந்தமையால் சோழமன்னர்களின் போர்முகம் மாறி அங்கு சமயமும் கோவில்களும் மனத்தில் அமர்ந்து கொண்டுவிட்டது. இதனால் ஆட்சியும் சிறந்தது. அரசர்களும் ஆண்டவன் பக்கம் சென்றார்கள். ஆண்டவனுக்கான கோவில்களும்  எழுச்சி பெற்றன. மன்னர்களின் மனம் கோவிலை நாடவே மக்களும் கோவிலைத் தஞ்சமடைந்தனர். இதனால் ஊர்கள் தோறும் கோவில்கள் எழுச்சி பெற்றன. மக்கள் வாழ்விலே கோவில்கள் தான் முக்கியம் என்னும் ஒரு கருதுகோள் ஊன்றிவிட்டதையே காண்கின்றோம்.

பெரியபுராணம் உருவானதால் கோவில்களின் முக்கியத்துவமும் அடியார்களின் பெருமையும் யாவருக்கும் தெரிய வந்தது. கோவிலில் செய்யும் தொண்டுகள் எம்மை உய்விக்கும் வல்லமை வாய்ந்தவை என்னும் கரு உருவாவதற்கும் பெரிய புராணம் வழிவகுத்தது எனலாம்.

ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமமே என்னும் அரிய தத்துவத்தை சமூகத்துக்கு உணர்த்தவும் பெரியபுராணம் வழிவகுத்தது எனலாம். அடியார்களின் வரலாற்றைப் படிக்கின்றவர்கள் நல்ல வழியினை நாடவும் கோவிலைத் தேடவும் கும்பிட்டு மனச்சாந்தி பெறவும் தொடங்கினர் எனலாம்.

“நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா – நித்தலும் எம்பிரானுடைய கோவில் புக்கு ” என்று அப்பர் சுவாமிகளின் அழைப்பினைப் பார்க்கும்பொழுது கோவிலின் இன்றியமையாமை புலப்படுகிறதல்லவா ? நிலைபெறவே யாவரும் விரும்புகின்றோம்.

அப்படி விரும்பும் எமக்கு அதற்கான உருவை, கருவை, நல்கும் இடம் கோவில்களே தான் என்பதுதான் அப்பரின் வாக்கின் அர்த்தமாய் அமைகிறது. கோவிலைப் பார்த்தவுடன் மனமதில் நல்ல மாற்றம் வந்து விடுகிறது. அந்தக் கோவிலுக்குள் சென்றுவிட்டால் உள்ளுக்குள் எம்மையறியாமலேயே ஒரு புத்துணர்வும் புகுந்து விடுகிறது. மனதிலுள்ள பாரங்கள் எல்லாம் குறைந்து விட்டது போன்ற ஒரு நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. இவையெல்லம் இந்த  “நிலைபெறுதலில்” அடங்கி இருக்கிறது என்பதை யாவரும் உணர வேண்டும்.

எதைத் தொடங்குவதாக இருந்தாலும் அதனைக் கோவிலில் வைத்தே தொடங்கும் நிலை உருவானது. திருமணமோ, ஏடு தொடங்கலோ, காது குத்தலோ, புதுத் தொழில் ஆரம்பித்தலோ, புதுமனைப் புகுவிழாவுக்கு உரிய பொருட்களை வைத்து எடுப்பதோ, பிரயாணங்கள் செல்லத் தொடங்கு முன்னர் சென்று வழிபடுதலோ என அனைத்தையுமே கோவில்களில் தான் தொடங்கும் வழக்கம் அன்று தொடங்கி இன்றுவரை நம்மிடம் ஊறிப்போய் இருக்கிறதல்லவா ? இவ்வாறு செய்கின்ற பொழுது இவற்றைப் படித்தவரும் செய்கின்றார். பாமரரும் செய்கின்றார். யாவருடைய மனத்திலும் கோவில் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. என்பதையே இது காட்டுகிறதல்லவா ?

(தொடரும்)

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க