Blog

  • கவிஞர் விந்தனின் படைப்புலகம் – 3

    -முனைவர் நா.பிரபு

    வாழ்க்கை வரலாற்று நூல்கள்

    எழுத்தாளர் விந்தன் அவர்கள் திரையுலக மேதைகளான எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் எம்.ஆர். இராதா ஆகியோரின் கலைப்பயண வரலாறுகளை நூலாக்கியுள்ளார். பாகவதரின் மறைவுக்குப் பின்னர் அவரது வரலாறு குறித்த தேவையான தகவல்களின் அடிப்படையில் ‘எம்.கே.டி. பாகவதர் கதை’ என்னும் நூலும் எம்.ஆர்.இராதா வாழும்போதே அவரிடம் நிகழ்த்திய உரையாடலின் மூலமாக உருவாக்கிய ‘நடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்’ என்னும் நூலும் என இரண்டு நூல்களை வெவ்வேறு அடிப்படைகளில் உருவாக்கியுள்ளார்.

    பாகவதர் செவ்வியல் இசைப்பாடகராக, நாடக நடிகராக திரைப்படக் கலைஞராகப் புகழின் உச்சிக்குச் சென்றவர். இவர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்டது. இந்தச் சாதனை இதற்கு முன்பும் பின்பும் நடந்ததில்லை. நல்ல உடலழகும் குரல் வளமும் பெற்றிருந்ததன் காரணமாகத் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இவர் புகழ் பரவியிருந்தது. மலையாள மொழியிலும் இவர் குறித்த நூல்கள் வெளிவந்துள்ளன.

    எம்.ஆர்.இராதா அவர்கள் நாடகக் கலைஞராக அறிமுகமாகி திரைத்துறையில் கலகக்காரராக வலம் வந்தவர். திராவிட இயக்க உருவாக்கத்தின் கலைப்பின்னணியாகச் செயல்பட்டவர். எம்.ஆர். இராதாவின் வாழ்க்கையை அவரது சொந்தக் குரலிலேயே பதிவுசெய்துள்ளார். அவர் குறித்த அறிமுகமே இப்படித்தான் தொடங்குகின்றது.

    சக பத்திரிக்கையாளர் ஒருவர், “உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன்” என்கிறார் வினயத்துடன்.

    “என் மனைவியை எதுக்கு கூப்பிடறது? நான் மட்டும் பார்க்கத்தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லை!” என்று இராதா ‘பட்’டென்று பதிலளிக்கிறார்.

    சிறைச்சாலை அனுபவங்கள் என்று இவரது நூலுக்குத் தலைப்பினை வைத்துள்ளார் விந்தன் என்ற போதிலும் சிறைச்சாலைக்கு வெளியில் நிகழ்ந்த அவரது கலையுலக வாழ்க்கை குறித்தே இந்நூலில் மிகுதியும் உரையாடப்பட்டுள்ளது.

    இவ்விருவரது வாழ்முறையும் கலைப்பயணமும் வெவ்வேறு தன்மைகள் கொண்டவை. பாகவதர் தன்வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை ஆழமான இறை நம்பிக்கையுடன் வாழ்ந்தவர். நடிப்பிலுங்கூட அதற்கு எதிராகச் செயல்பட மறுத்தவர். அன்று திராவிடக்கட்சியின் வளர்ச்சியில் தீவிரமாக இயங்கிய அண்ணாதுரை இவருக்காக நாடகம் எழுதி நடிக்கக் கேட்டபொழுதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தவர். ஆனாலும் அனைத்து அரசியல் இயக்கத்தவர்களுடன் நட்புமுறையில் பழகியவர்.

    நாடக வரலாற்றையும் சினிமா வரலாற்றையும் மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை இவ்விரு நூல்களும் முன்வைக்கின்றன. தமிழ் நாடகத்தின் தந்தை என்று சங்கரதாஸ் சுவாமிகளையும், பம்பல் சம்பந்த முதலியாரையும் குறிப்பிடும் வழக்கம் நாடக வரலாறுகளில் தொடர்கிறது. அவர்களின் பங்களிப்பினை மறுக்க இயலாதென்றாலும், இத்தகைய வரலாற்று கட்டுமானங்கள் பிற கலைஞர்களை நிராகரிக்க அல்லது மறக்கச் செய்துவிடுகிறது. இதிலிருந்து கலைஞர்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. ஜகந்நாத அய்யரின் நாடகக் கம்பெனியில் இருந்த ராதாவின் அனுபவங்களைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கும் போது, சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி விந்தன் கேட்கிறார். அதற்கு,

    “சங்கரதாஸ் சுவாமிகள் வருவார்; இருப்பார். குடித்துவிட்டு ஆடினால் ‘இது நமக்குப் பிடிக்காது; நீ போய்விட்டு வா!’ என்று அய்யர் அவரை வெளியே அனுப்பிவிடுவார்.”

    “அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே?”

    அதை நான் ஒப்புக்கொள்ளமட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்குதடையில்லாமல் எழுதுவார்….. அதெல்லாம் சரி. ஆனா இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர நாடக உலகத்துக்கு ஒரு நாளும் தந்தையாயிருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர் ஜகந்நாதய்யராகத்தான் இருக்க முடியும். ஏன்னா இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர்களும் அவருடைய வழி வழியா வந்த கலைஞர்களே. இதை யாராலும் மறுக்க முடியாது” (நடிகவேள் எம்.ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், ப:22) என எம்.ஆர்.ராதா கூறியதாகப் பதிவுசெய்துள்ளார்.

    இதே போன்று பாகவதர் வரலாற்றில் கதை-வசனம் எழுதுவதில் சிறந்து விளங்கிய இளங்கோவன் குறித்து எழுதும்போது,

    “இவர் உண்மையிலேயே அந்தத் துறைக்கு வேண்டிய தகுதியும் திறமையும் உடையவர். அத்துடன் இப்போது யாரோ வசனத்தில் ‘புரட்சி’ செய்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்களே, அந்தப் புரட்சியைக் கண்ணகி படத்தின் மூலம் எப்போதோ மெளனமாகச் செய்துவிட்டு, இன்றும் அதை வெளியே சொல்லாமல் மெளனமாக இருந்துகொண்டிருப்பவர். (எம்.கே.டி. பாகவதர் கதை, ப. 178) எனவும் எழுதியுள்ளார். இவ்விரு ஆளுமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளது உள்ளபடியேயும், எவருக்கும் அஞ்சாமலும் விந்தன் அவர்கள் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    குட்டிக் கதைகள்

    ‘விந்தன் குட்டிக் கதைகள்’ என்னும் தொகுப்பில் விந்தன் எழுதிய குட்டிக் கதைகள், மகிழம்பூ ஆகிய இரு நூல்கள் ஒருசேரத் தொகுக்கப்பட்டுள்ளன.

    பிற உயிரினங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டக்கூடியது ஆறாம் அறிவான பகுத்தறிவு என்று சொல்கிறோம். ஆனால் அந்தப் பகுத்தறிவால்தான் மனித சமூகத்தில் தன் தேவையை மீறிய ஆசை, அதன் காரணமாகப் பிறரை ஏய்த்துப் பிழைத்தல், சமூக ஏற்றத் தாழ்வுகள் முதலானவை உருவாயின. எனவேதான் சிங்கத்துக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடலில் மனிதனின் ஆறாவது அறிவான பகுத்தறிவு மனிதனுக்கு வழங்கப்பட்ட சாபம் என்று கடவுளை விந்தன் கூற வைக்கிறார்.

    ‘ஆறாவது’ என்னும் கதையில் சிங்கத்துக்கும் கடவுளுக்கும் இடையிலான உரையாடல் பின்வருமாறு தொடர்கிறது.

    “எங்களுக்கில்லாத பகுத்தறிவை நீங்கள் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத்தான் அவன் ‘ஆறாவது அறிவு’ என்கிறான்!” என்றது சிங்கம்.

    “நாசமாய்ப் போச்சு; அவனுக்கு நான் கொடுத்த சாபமல்லவா அது?”

    “சாபமா!”

    “சந்தேகமென்ன? எதையும் அறிய முயல்வதும், அறிந்தாலும் அதை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் நான் அவனுக்குக் கொடுத்த சாபம்தான்” என்றார் கடவுள் (விந்தன், ப. 13)

    விந்தன் கூறுவது எவ்வளவு உண்மை. இனிப்பு சாப்பிடுவது தனக்குக் கேடு விளைவிக்கும் என்பது ஒரு சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும்; குடிப்பது உடல் நலத்திற்குக் கேடானது என்று குடிகாரர்களுக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அறிந்ததை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் பகுத்தறிவுடைய மனிதனுக்கு நடக்கின்றதே!

    மாடுகளைச் சந்தையில் பிறருக்கு விற்பதும், அவ்வாறு விற்கப்பட்ட மாடுகள் பழைய உரிமையாளரின் வீடு தேடி வருவதும் இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வுதான். பணத்திற்காகப் பாசத்தை மறக்கும் மனித இனத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்ட ‘மாடும் மனிதனும்’ என்னும் கதையின் மூலமாக விந்தன் இந்நிகழ்வைப் பயன்படுத்துகிறார்.

    ‘ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகத் தன்னை விற்றவனைத் தேடிக்கொண்டு வந்தது மாடு. வாங்கினவனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; “இனிமேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா, இனிமேல் இங்கு வருவாயா?” என்று அதை ‘வாங்கு வாங்கு’ என்று வாங்கிவிட்டான்.

    வீறிட்டலறிய மாட்டை நோக்கி அதனுடன் வசித்த ஆடு கேட்டது:

    “விற்றவன் உன்னை அன்றே மறந்துவிட்டது போல நீயும் அவனை மறந்துவிட்டிருந்தால் இந்தக் கதிக்கு ஆளாகி இருக்கமாட்டாயல்லவா?”

    கண்ணீரும் கம்பலையுமாக மாடு சொல்லிற்று:

    “அது எப்படி முடியும்? நான் மனிதனாகப் பிறக்காமல் மாடாக அல்லவா பிறந்துவிட்டேன்?”

    தன்னிடம் பாசமுடன் வளர்ந்த ஓர் உயிரை விட வெறும் காகிதமான பணம் மனிதனுக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் மாட்டுக்கு எத்தனை அடி வாங்கினாலும் தன்னை வளர்த்தவர் மீதான பாசமே பெரிதெனக் காட்டுகிறார்.

    இரவில் வீட்டுக்குக் கடைசியாக வந்த வீட்டுக்காரர் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்கிறார். இதைப் பார்த்த ஜன்னல் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறது. ஏன் என்று கதவு கேட்க, மனிதனைக் காற்றில் வாழவைத்ததற்காக. இல்லையென்றால் உன்னைச் சாத்திவிட்டுச் சென்றதுபோல் என்னையும் சாத்திவிட்டுச் சென்றிருப்பார் அல்லவா? என்று ஜன்னல் சொன்னது.

    இதைக் கேட்டதும் “அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்?” என்ற அலுப்பும் சலிப்புமாக ஆரம்பித்த கதவு, திடீரென்று தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “உன்னிடம் நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்றது ஜன்னலிடம்.

    “சொல்லு?” என்றது ஜன்னல்.

    “இப்போதெல்லாம் மனிதன் தன்னைப்போல் மனிதனை நம்புவதில்லை; என்னைப்போன்ற கதவைத் தான் நம்புகிறான்!” என்றது கதவு. இவ்வாறு மனிதச் சமூகம் தன் சக மனிதனை நம்பாமல் உயிரற்றப் பொருட்களான கதவு, ஜன்னல், பூட்டை நம்பும் நிலைக்கு வந்ததனை ‘கதவும் மனிதனும்’ என்னும் கதையில் விந்தன் ஏளனத்துடன் பதிவு செய்கிறார்.

    எளியவரிடம் மட்டுமே தம் வீரத்தைக் காட்டி, வலியவரிடம் வளைந்து குழையும் பெரும்பான்மையான மனிதர்களின் மனநிலையை விந்தன் அவர்கள் ‘வீரம்’ என்னும் கதையில் கட்டைவண்டி, மகிழ்வுந்து (கார்), ரயில் ஆகியவற்றைக் கொண்டு சித்தரிக்கிறார். மெதுவாக அசைந்து சென்றுகொண்டிருக்கிறது ஒரு மாட்டுவண்டி. அதன் பின்னால் வந்த மகிழ்வுந்து ஒன்று “ஏய், சனியனே! ஒதுங்கிப் போ! என்று மிரட்டி விரட்டிற்று.

    “மரியாதைக் குறைவாகப் பேசாதே! என்ன இருந்தாலும் உனக்கு நான் மூத்தவன் என்பதை மறந்து விடாதே!” என்றது மாட்டுவண்டி.

    “மூத்தவனாவது, கீத்தவனாவது! யாராயிருந்தாலும் என்னைக் கண்டதும் ஒதுங்கி வழி விட்டால்தான் ஆச்சு; இல்லாவிட்டால் அவர்களை நான் மோதி மிதித்து விடுவேனாக்கும்!” என்று கார் உறுமிற்று.

    “ஐயோ வேண்டாம் அப்பனே! இதோ நான் ஒதுங்கி விடுகிறேன்; நீ போ, கன ஜோராகப் போ!” என்று ஒதுங்கி வழி விட்டுவிட்டது மாட்டுவண்டி.

    அது சொன்னபடியே கன ஜோராகப் போன காரை “எங்கே, என்னை மோதி மிதித்து விடு பார்ப்போம்?” என்பதுபோல் ஒரு ரயில்வே கேட் தடுத்து நிறுத்தியது.

    வேறு வழியில்லாமல் நின்ற காரை நெருங்கி, “அந்த ரயில் மட்டும் உன்னைக் கண்டதும் ஏன் அப்பா ஒதுங்கி வழி விடவில்லை?” என்று மாட்டு வண்டி கேட்டது.

    கார் வாயைத் திறக்கவில்லை!’

    தமக்குக் கிடைக்கும் சில சலுகைகளுக்காக அடிமை வாழ்வில் சுகம் காண்பவர்களை எள்ளி நகையாடும் விதத்தில் ‘சுதந்திரம்’ என்னும் கதையை விந்தன் எழுதியுள்ளார். இக்கதையில் நாயொன்று கட்டப்பட்டிருக்கிறது. அதன் எதிரே கிளி ஒன்று கூண்டில் அடைபட்டிருக்கிறது. இரண்டுமே சுதந்திர வாழ்வை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. அப்பொழுது அவ்வழியாக வந்த குரங்கொன்று அவை இரண்டையும் விடுவிக்கின்றது. இரண்டுமே விடுதலை கிடைத்த மகிழ்ச்சியோடு வெளியேறுகின்றன.

    ‘சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தன்னால் விடுதலை செய்யப்பட்ட கிளியைச் சந்தித்த குரங்கு, “எப்படி இருக்கிறது, விடுதலை?” என்று கேட்டது.

    “ஆனந்தம், பரமானந்தம்!” என்றது கிளி, கன குஷியுடன்.

    ‘மகிழ்ச்சி!” என்ற குரங்கு அதனுடன் விடுதலை செய்யப்பட்ட நாயை நோக்கி, “எப்படி இருக்கிறது, சுதந்திரம்?” என்று கேட்டது.

    “சுத்த மோசம்! காலையில் பால், மத்தியானம் இறைச்சி, மாலையில் பிஸ்கெட், இரவு மறுபடியும் பால் – இதெல்லாம் இந்தச் சுதந்திர வாழ்வில் எங்கே கிடைக்கிறது? ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும் ஒரு கவளம் எச்சில் சோற்றுக்கு ஓராயிரம் நாய்களுடன் போட்டியல்லவா போட வேண்டியிருக்கிறது? என்றது நாய், வெறுப்புடன்.”

    அடிமை வாழ்வை நினைத்து ஏங்கும் நாயை நினைத்து “சுதந்திரத்தில் கூட எல்லோருக்கும் சுகம் கிட்டி விடாது போலும்?” என்று குரங்கு சொல்லிற்று என உலக நடப்பியலைப் பதிவு செய்கிறார்.

    நன்றி மறக்கும் தன்மைக்கு குளத்துப் பறவைகளைச் சான்றாகக் காட்டுவர். இதனை வேறொரு கோணத்தில் ‘ஆலமரம்’ என்னும் கதையில் விந்தன் பார்க்கிறார். ஆலமரம் துளிர்த்துப் பூத்துக் குலுங்கும் காலத்தில் பறவைகள் அங்கேயே தங்கி உண்டு மகிழ்ந்தன. மரம் வாடியதும் பறவைகள் இரை தேடி வேறிடத்துக்குப் பறந்தன. அப்போது அருகிலிருந்த அரசமரம் “என்ன நன்றி கெட்ட பறவைகள் அவைகள்! எல்லாம் இருக்கும் வரைதான் அவற்றின் உறவுபோலும்?” என்றது ஆலமரத்திடம். ஆலமரம் சிரித்துச் சொல்லிற்று: “உனக்கும் எனக்கும் உள்ள இடத்திலேயே உணவு கிடைப்பதுபோல் அவற்றுக்கும் கிடைத்தால், அவையும் நன்றியுள்ள ஜீவன்களாய்த்தான் இருக்கும்!”

    மனிதன் வாழும் சூழல், அவனது பொருளாதார நிலைமை, அவனுக்குக் கிடைக்கும் கல்வி போன்ற பல காரணங்கள் ஒரு மனிதனின் குணத்தை, நடத்தையை நிர்ணயிக்கிறது. மனித இனத்தில் சிலர் கொலைகாரர்களாய், போக்கிரிகளாய், விபசாரிகளாய் வாழ்வதற்கு அவர்களின் சூழலும் தேவையுமே காரணம். அவர்களின் பொருளாதாரத் தேவைகள் உயர் வகுப்பினர்போல் நிறைவடைந்தால் அவர்கள் இவ்வாறு இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை ‘ஆலமரம்’ என்னும் கதை உணர்த்துகிறது.

    ஒரு மனிதன் வாழ இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் தூக்கிட்டுக் கொள்கிறான். இதைப் பார்த்த பறவைக் குஞ்சு தனது தாயிடம், “அதெல்லாம் நமக்குக் கிடைக்கும்போது அவனுக்கு மட்டும் ஏன் அம்மா கிடைக்கவில்லை?”

    தாய்ப்பறவை சொல்லிற்று:

    “அவன் அடைந்த நாகரிகம் அப்படி! அவனும் நம்மைப் போல் இந்த உலகத்தில் எதற்கும் உரிமை கொண்டாடாமல் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கும் நமக்குக் கிடைப்பதுபோல் எல்லாம் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. அவன் எப்போது இது உன்னுடையது, அது என்னுடையது என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தானோ, அப்போதே அவனுக்கு இங்கே எதுவுமே உரிமையில்லாமல் போய்விட்டது!”.

    மனிதச் சமுதாயம் தனது புராதனப் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பை மறந்து ‘நாகரிகம்’ பெற்ற தனியுடைமைச் சமுதாயமாக மாறியதுதான் சமூகம் அனுபவிக்கும் பெரும்பாலான இன்னல்களுக்குக் காரணம் என்பதை ‘நாகரிகம்’ என்னும் இக்கதையில் விந்தன் உணர்த்துகிறார். தனக்கென்று ஒரு காணி நிலம் இருந்தால் கஞ்சிக்கு ஏன் அலையப் போகிறேன் என்று பலர் பெருமூச்சு விடுவதைப் பார்த்த மண் தன்னையொத்த இயற்கைப் பொருட்களான நெருப்பு, காற்று, நீர், வான் ஆகியவற்றை நோக்கி,

    “நீ எல்லோருக்கும் சொந்தமாயிருக்கிறாயே, நான் ஏன் சிலருக்கு மட்டும் சொந்தமாயிருக்கிறேன்?” என்று கேட்டது.

    அதற்குப் “போடி பைத்தியமே! உன்னிடம் இருக்கும் பொன்னை நீ ஏன் மனிதனுக்குக் காட்டினாய்? அதனால் தான் எங்களைப்போல் உன்னால் எல்லோருக்கும் சொந்தமாயிருக்க முடியவில்லை!” என்றது வானம்.

    இக்கதையின் மூலம் மனித சமூகம் பொருளாசையால், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் மனிதத்தன்மை இழந்து நிற்பதை விந்தன் உணர்த்துகிறார்.

    விந்தன் கடவுள் நம்பிக்கை கொண்டவரா? கடவுள் நம்பிக்கை அற்றவரா? என்பதை ‘விந்தன் குட்டிக்கதைகள்’ என்னும் நூலின் அடிப்படையில் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ‘தன்னம்பிக்கை’ என்னும் கதையில் நாட்டுப் பசுவொன்று குளத்தங்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த புலி நாக்கைச் சப்புக் கொட்டிற்று. இதைக் கண்ட பசு “ஏ! அறியாமை நிறைந்த புலியே! நீயும் நானும் ராம ராஜ்ஜியத்தில் எப்படி ஒற்றுமையாய் இருந்தோம் தெரியுமா?” என்று பல்வேறு சான்றுகள் மூலம் ஆராய்ச்சி பூர்வமாகப் வலியுறுத்திக் கூறியது. புலியோ அதன் கூற்றை எள்ளல் செய்து அதனைக் கொன்று தின்ன வருகிறது. இதனைக் கண்ட பசு, “அட ராமா, உன்னை நம்பிய எனக்கா இந்தக் கதி?” என்று புலம்பிற்று பசு.

    “உனக்கென்ன, தன்னை நம்பாத எவனுக்குமே இந்தக் கதைதான்! – நீ மட்டும் அவனை (ஆண்டவன்) நம்பாமல் உன்னையும் உன் கொம்புகளையும் நம்பியிருந்தால் இந்நேரம் என்னை விரட்டியிருக்கலாமே!” என்று அதன்மேல் பாய்ந்துவிட்டது புலி.

    இக்கதையின் அடிப்படையில் விந்தன் அவர்களைக் கடவுள் நம்பிக்கை அற்றவராக மதிப்பிடலாம். ஆனால் அவர் ‘புதிய புராணம்’ என்னும் கதையை நாராயணனுக்கும் நாரதருக்குமான உரையாடலாய் எழுதுகிறார். இக்கதையில் நாரதர் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காக நாராயணனிடம் செல்கிறார். நாரதர் ‘ஏழைகளுக்கு வீடு கட்டித் தருபவர்கள் பெயர் நிலைத்து நிற்குமா? அல்லது தங்களுக்கு கோவில் கட்டித் தருபவர்களின் பெயர் நிலைத்து நிற்குமா?’ என்று தன் சந்தேகத்தை நாராயணனிடம் முன்வைக்கிறார்.

    நாராயணன், ‘எவனொருவன் இயற்கையின் உபாதைகளுக்கு அடிக்கடி ஆளாகும் ஏழைகளின் குடிசைகளை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக ஏற்றமிகு மாளிகைகளைக் கட்டித் தருகிறானோ, அவன் பூதவுடலை நீத்ததும் என்னை வந்து அடைந்துவிடுகிறான். எல்லாம் வல்ல எனக்காகக் கோயில் கட்டுபவன் எனை வந்து ஒரு நாளும் அடைவதில்லை; என்னுள் ஐக்கியமாவதும் இல்லை. இதனால் ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களைச் சிரிக்க வைப்பவனின் பெயர் மண்ணுலகில் மறைகிறது; விண்ணுலகில் நிலைக்கிறது. எனக்குக் கோயில் கட்டித் தருபவனின் பெயரோ மண்ணுலகில் நிலைக்கிறது; விண்ணுலகில் மறைகிறது. – இதுதான் உண்மை என்றார் நாராயணன். இவ்வாறு இருவேறு தளங்களில் விந்தன் பயணித்திருப்பினும் பெரும்பான்மை அவர் மனிதத்தையே முன்னெடுத்துள்ளார்.

    சாதிய முரண்பாடு, வர்க்க முரண்பாடு குறித்துத் தெளிவான சிந்தனையைக் கொண்டிருக்கும் ஆண் மனதும் கூட ஒடுக்கப்பட்ட பாலினமான பெண்கள் குறித்துத் தன் நனவிலி மனத்தில் கேலியையும் கிண்டலையும் புதைத்து வைத்துள்ளது. ‘மாட்டுத் தொழுவம்’ என்னும் தன் சிறுகதையில் பெண்ணினம் இந்தச் சமூகத்தில் மாட்டைவிடக் கேவலமாக நடத்தப்படுவதனை நேர்த்தியாகப் பதிவு செய்தவர் விந்தன். அவரே கூட தனது குட்டிக் கதைகளில் பெண்களை ஏளனத்துக்கு உள்ளாக்குகிறார். ‘பெண்ணின் பெருமை’ என்னும் கதையில் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையைக் கண்டு பூரிக்கிறாள் எஜமானி. அதற்கு விந்தன் ‘அடடா! என்ன சந்தோசம், என்ன சந்தோசம்! தன் சொந்த புத்திக்கு வேலை கொடுக்காதவர் யாராயிருந்தாலும் இந்தப் பெண்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது!’ என்று கூறுகிறார். ‘கடமை’ என்னும் கதையில் பரிசு கொடுத்தால்தான் பெண்கள் புன்னகை பூப்பர் என்று எள்ளல் செய்கிறார். ‘முடியவில்லை’ என்னும் கதையில் குடும்பத் தலைவர் ஒருவர் பொங்கலையொட்டி பழைய சாமான்களை எல்லாம் அகற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது வந்த அவரது நண்பர், “வேலை முடிந்துவிட்டது போலிருக்கிறது; வேண்டாத சாமான்களையெல்லாம் எடுத்து வெளியே எறிந்து விட்டீர்கள் போலிருக்கிறது!” என்று கூறிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார்.

    “ஆமா; இன்னும் ஒரே ஒரு சாமான்தான் பாக்கியிருக்கிறது. அதை எடுத்து வெளியே எறிய என்னால் முடியவில்லை!” என்றார் கிரகஸ்தர்.

    “அது என்ன அப்படிப்பட்ட சாமான்?” என்று நண்பர் நெருங்கி ஆவலுடன் கேட்டார். “வேறு என்னவாயிருக்க முடியும்? என் மனைவிதான்!’ என்றார் கிரகஸ்தர் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே.

    அவ்வளவுதான்; “எங்கே அப்பளக் குழவி?” என்று உள்ளே யாரோ உறுமும் சத்தம் கேட்டது. வந்தவர் எழுந்து பிடித்தார் ஓட்டம்!’ இக்கதை விந்தனுடைய எழுத்துகளைப் போல் அல்லாமல் வெகுசனப் பத்திரிக்கைகளில் வரும் நகைச்சுவைத் துணுக்கைப் போல இருக்கிறது. வெகுசனப் பத்திரிகையின் தேவைக்கு இம்மாதிரியான தீனியை விந்தன் போன்றவர்களும் போடவேண்டிய சூழல் நெருக்கடி நிலவியது போலும்.

    இந்த உலகத்தில் தன்னால் முடியாத காரியம் என்று எதுவுமில்லை என்று கர்வம் கொண்டிருக்கிறான் ஒரு விஞ்ஞானி. ஒரு முதியவர் அவனிடம் ரோஜா மொட்டு ஒன்றைக் கொடுத்து மலரவைக்கச் சொல்கிறார். அவனும் அன்று முழுவதும் தன் ஆய்வுக் கூடத்தில் இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். மறுநாள் காலை இயற்கையாக செடியிலிருந்த ரோஜா மொட்டுக்கள் தானாக மலர்ந்து மணம் வீசின. மணம் வந்த திசையை நோக்கித் திரும்பிய விஞ்ஞானி “இத்தனை மொட்டுக்களையும் இவ்வளவு அழகாக இவற்றுக்கு அருகில்கூட வராமல் மலர வைத்தது யார்?” என்றான் வியப்புடன். முதியவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். இப்படித்தான் மனிதர்கள் அறிவியலில் வளர்கிறேன், நாகரிகம் அடைகிறேன் என்று இறுதியில் இயற்கைக்கும் தனக்குமான சங்கிலியை அறுத்துவிடுகின்றனர். நிலநடுக்கத்தையும், ஆழிப்பேரலையையும் நாயாலும் யானையாலும் உணர முடிகிறது; மனிதனால் முடியவில்லை. இயற்கைக்கும் செயற்கைக்குமான போட்டியில் எவ்வளவு முயன்றாலும் மனிதனால் இயற்கையை வெற்றிக் கொள்ள முடிவதில்லை என்பதை இக்கதையில் உணர்த்துகிறார்.

    விந்தன் எழுதிய ‘செந்தமிழ் நாட்டிலே’ என்னும் கதை வாழும்போது எழுத்தாளனைக் கண்டுகொள்ளாத சமூகம் அவன் இறந்த பின்பு அவனையும் அவன் எழுத்துகளையும் கொண்டாடுவது குறித்த எள்ளலே. வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் கொள்கைக்காகத் தனது எழுத்துப் பணியைக் கடும் வறுமையிலும் தொடர்கிறார் எழுத்தாளர் சதானந்தம். அவரின் எழுத்தைத் கொண்டாடவோ அவருக்கு உதவி செய்யவோ யாருமில்லை. அவர் சூரிய கிரகணத்தன்று கடலில் மூழ்கி இறந்துவிட்டார் என்று தெரிந்தும் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்; ரசிகர்கள் உதவித்தொகைத் திரட்டி அவரது குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கின்றனர். பத்திரிகையாளர்கள் அவரது சந்ததியார்களைப் பற்றி எழுதிப் பணம் சேர்க்கின்றனர். ஆனால் பிறரை இறந்த பிறகும் வாழவைக்கும் சதானந்தமோ இறக்கவில்லை; அவர் தமிழ் நாட்டில் பிழைக்க முடியாமல் வட நாட்டுக்குச் சென்று இந்தியில் நாவல் எழுதுகிறார்; அது மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வருகிறது. இவ்வாறு ஒரு எழுத்தாளரின் வாழ்வையும் வலிகளையும் எள்ளலுடன் தம் கதையில் பதிவு செய்தவர் விந்தன். அதேபோல் மற்றொரு கதையான ‘சமதர்மம்’ என்னும் கதையில், கடைத்தெருவைக் கூட்டம் வந்து மொய்க்கும் நேரம். தன் கடையிலிருந்த பழங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் கடைக்காரன்.

    புது மெருகு ஏற்றப்பட்ட ஆரஞ்சுப் பழம் ஆற்றாமையுடன் பொருமிற்று.

    “நம்மையெல்லாம் துடைத்து வைப்பதோடு சரி; அந்த ஆப்பிள் பழத்துக்கு மட்டும்…..”

    “என்னவாம்?” என்று இடைமறித்துக் கேட்டது திராட்சை.

    “வெள்ளைக்கலை உடுத்தி, வெள்ளைப் பணி பூண்டு, வெள்ளை அரியாசனத்தில் ஏற்றி……”

    ‘ஓ’ அதைச் சுற்றி வைத்திருக்கும் அந்த மெல்லிய வெள்ளைக் காகிதத்தைச் சொல்கிறாயா? ஆமாம்! ஆமாம்!, அதற்கு எப்போதுமே ஒரு தனி அலங்காரம்தான்! என்று அது சொன்னதைத் திராட்சை ஆமோதித்தது.

    “ஏன், இருக்கக் கூடாதா? அது உன்னைப்போல் கன்னங் கரேலென்றா இருக்கிறது? எப்போதுமே அது தன் அழகிலும் தனி, மதிப்பிலும் தனி! என்றது அன்னாசி. மாதுளை திரும்பி, “யாரது, பைன் ஆப்பிள் சாரா? யு ஆர் கரெக்ட்! முள்ளம்பன்றி போல் இருக்கும் உமக்குச் சாதாரண பன்றிபோல் இருக்கும் ஆப்பிள் தன் அழகிலும் தனியாய்த்தான் தெரியும்! மதிப்பிலும் தனியாய்த்தான் தெரியும்” என்றது எரிச்சலுடன்.

    அப்போது அழுகிப்போன ஆரஞ்சுப்பழம் ஒன்றோடு, கன்றிப்போன ஆப்பிள் பழம் ஒன்றையும் எடுத்துக் கடைக்காரன் குப்பைத் தொட்டியில் விட்டெறிய, “வாழ்க, சமதர்மம்!” என்றது வாழைப்பழம்.

    “ஸ்…. பேசாதே! மனிதர்களுக்குச் சமதர்மம் சுடுகாட்டில் கிட்டுவதுபோல், நமக்குக் குப்பைத் தொட்டியிலாவது கிட்டட்டும்!” என்று சொல்லி அதன் வாயை அடக்கிற்று திராட்சை” என்று இவ்வுலகின் சமதர்ம நிலையினை காட்டுகிறார்.

    ‘புகழரசி’ என்னும் குட்டிக் கதையிலும் எழுத்தாளரின் வாழ்வே மையம். காலதேவனுக்கும் புகழரசிக்கும் இடையிலான உரையாடலாக இக்கதையை விந்தன் அமைத்துள்ளார். இந்தத் தொகுப்பில் இருக்கக் கூடிய கதைகளிலே அதிகப் பக்கங்களைக் கொண்ட கதையும் இதுதான். எழுத்தாளர்கள் வாழும்போதே புகழ் அவர்களை ஏன் அடையவில்லை என்று காலதேவன் கேட்பதே இக்கதையின் மையம். இதற்குக் “கலைஞன் உயிரோடிருக்கும்போது அவனுடைய குற்றங்கள் பெரிதாகவும் கலைத்திறன் சிறிதாகவும் ஜனங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே, என்னுடைய அருள் ஒரு கலைஞனுக்கு அவனுடைய ஜீவிய காலத்தில் நியாயமாகக் கிடைத்தாலும், ஏதோ காரியார்த்தமாக நாலுபேர் சேர்ந்துகொண்டு அவனைத் தூக்கி விடுவதாக ஜனங்கள் புறம் பேசுகிறார்கள். அசூயையும் பொறாமையும் சேர்ந்து அவர்களுடைய உள்ளத்தை அவ்வாறு மாசுபடுத்தி விடுகின்றன!” என்று புகழரசி பதில் கூறுகிறாள். விந்தனின் இவ்விரண்டு கதைகளும் அவர் வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை போலவே உள்ளன; வாழும்போது பாட்டாளியாய் வாழ்ந்து பாட்டாளிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவுமே வாழ்ந்தவர்; அவர் இறந்தபிறகு தன் எழுத்துகளால் பிறரை வாழவைக்கிறார். 

    துணைநின்ற நூல்கள்

    • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
    • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
    • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
    • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
    • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
    • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
    • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
    • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
    • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

    இதழ்கள்

    • குங்குமம், மார்ச்-1994
    • தினமணி, வெள்ளிமணி,10.1987
    • மனிதன்,08.1954

    ***** 

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
    சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
    திருவண்ணாமலை 606603
    கைப்பேசி: 9786863839
    மின்னஞ்சல்: drnprabu@gmail.com

     

    Share
  • செங்கம்  வட்டார நடுகற்களில் பாணரசர்கள் – வரலாற்று நோக்கு

    -முனைவர். இரா. மூர்த்தி

    பண்டைய காலத்தில் வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட தமிழ் நிலப்பரப்பில் பாணர்கள் எனும் பிரிவினர் வாழ்ந்து வந்தனர். இடம்விட்டு இடம் நகர்ந்து தங்களது வாழ்வை அமைத்துக் கொண்டதால் இவர்களது வாழ்வு அலைகுடி வாழ்வாகக் கருதப்பட்டது என்று சங்கப்பாடல் வாயிலாக விளங்கிக் கொள்ள முடிகின்றது.

    இப்பாணர்களில் பலர் சிற்றசர்களையும், பேரரசர்களையும் வாழ்த்திப் பாடி, ஆடி மகிழ்வித்து தமக்குத் தேவையான பொன்னும் பொருளும் பெற்று வந்தனர். பாண்மகளிர்கள், விறலியர்கள் அரசர்கள் முன்னிலையில் பாடிக்கொண்டு ஆடவும் செய்துள்ளனர். அத்தகைய ஆடல்களைக் கண்டு அரசர்கள் நாணயங்கள், பொன்னலாகிய ஆபரணங்கள், உடைகள்,  நாடுகள், ஊர்கள், கள் (உணவு) ஆகியன வழங்கி சிறப்பித்து மகிழ்ந்ததோடு முறையாகச் சென்று வழியனுப்பவும் செய்துள்ளனர்.

    பாணர்களில் சிலர் அரசர்கள் மட்டுமின்றி நிலக்குடிகளிடம் சென்று பாடி, ஆடி மகிழ்ந்து தேவையான தானியங்களையும், உணவினையும் பெற்று வந்துள்ளனர். பாணர்களில் சிலர் திணைக்குடிகளிடம் சேர்ந்து மக்களோடு மக்களாக வீதிகளில், தனி வீதிகளில் வாழ்ந்து வந்துள்ளதை ஆற்றுப்படை வெளிக்காட்டுகிறது.

    இருப்பினும், பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களது ஆட்சிக் காலத்தில் பாணர்களில் ஒரு பிரிவினர் சிற்றரசராகவும், படைத்தளபதியாகவும், போர்வீரராகவும், அரசர்களுக்கு ஆலோசனைகள் கூறுபவராகவும் இருந்துள்ளனர். அவை குறித்துக் செங்கம் கல்வெட்டுக்கள் பதிவு செய்துள்ளன. மேற்கூறிய கருத்தாக்கத்தைக் கொண்டு சங்க இலக்கியங்கள் பதிவு செய்யும் பாணர்கள், பாண அரசர்களின் வாழ்வு, அவர்களது ஆட்சிப் பகுதியினைச் செங்கம் கல்வெட்டில் கூறும் பாணஅரசர்களின் வாழ்வு மற்றும் செங்கம் பகுதி களஆய்வு மூலம் கிடைத்த தரவுகள் வாயிலாகப் பாணர்களின் வாழ்வினை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் மையமாகும்

    பாணர்கள் – விளக்கம்

    பாணர்கள் என்போர் தமிழ்க் குடியின் தொல்குடியினராவர். இப்பாண் மரபினர் பல திறப்பட்ட இனமக்களின் கூட்டுக் கலைஞர்களாவர். அவர்களைப் “பாணர், பொருநர், கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர் எனச் சுட்டுகின்றனர். வீரயுகக் காலத்தில் முதன்மையான கலைஞர்களாகப் பாண்மரபினரே முன் வைக்கப்பட்டனர். இப்பாணர் என்ற சொல் புறநானூற்றில் மட்டும் இருபத்தாறு இடங்களில் வருகின்றது.”1 (க.காந்திதாசன்-சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல்.ப.15) என்கிறார். தொல்காப்பியத்தில், “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்”(தொல்.புறத்.36)” 2 என்றும்,

    “துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
    இந்நான் கல்லது குடியுமில்லை”
    3 (புறம்.335:7-8)

    என்று புறநானூற்றுப்பாடலும் புலப்படுத்துகின்றது. ஆற்றுப்படைகள் பாணர்களில் சிலரை,

    1. சீறியாழ்ப்பாணர் – சிறுபாணர்
    2. பேரியாழ்ப்பாணர் – பெரும்பாணர்
    3. மண்டையாழ்ப்பாணர் – மண்டைப்பாணர்
    4. இசைப்பாணர் – பனுவல்பாடுநர் என்று வகைப்பத்திக் கூறவும் செய்துள்ளன. 

    இலக்கியங்களில் பாணர்கள்

    சங்க காலத்தில் பாணர்கள் அரசியல் தூதுவர்களாகவும், அரசர்களுக்குள் போர் மூளாமல் போரினைத் தடுத்தும், துன்பம் நிகழாமல் காக்கவும் முயற்சி செய்துள்ளனர். அதே நேரத்தில் நாடாளும் மன்னர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்துள்ளனர். இதனை,

    “விழவு அயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
    எழாஅப் பாணன் நன்னாட் டும்பர்”
    4 (அகம்.113)

    என்ற அகநானூற்றுப் பாடல் கூறுகிறது. அப்பாணன் நாடு தமிழகத்திற்கு வடபுலம் சார்ந்திருந்தது என்பதை “வடாஅது பல்வேற் பாணன் நன்னாடு” 5 (அகம்.325) எனும் பாடல் வாயிலாக அறியமுடிகிறது. அந்நாடானது பாலியாற்றின் வடகரையில் இருந்ததென்றும், அங்கிருந்த பாண்மலை குறித்த செய்தி கல்வெட்டின் வழியாக அறிய முடிகிறது. அந்நாட்டினர் வாணர், வாணாதிராயர், வாணதரையர் என்று பெயர் சுட்டப்பெறுகின்றனர். இப்பெயர்களே பல்லவர்களுக்கு உட்பட்ட பல்லவர்களது ஆட்சி காலத்தில் வழங்கவும் படுகிறது.

    உரையூர் வெளியன் தித்தன் என்பான் நாட்டில் பாணன் ஒருவன் இருந்தான். கங்க நாட்டுக் கட்டி என்பான் அப்பாணனோடு மோதவந்து தித்தனும், பாணனும் கட்டிய பறையார்ப்பு, படையார்ப்பு இரண்டையும் கண்ட ‘கட்டி’ தோற்று ஓடிவிட்டான் இதனை,

    ‘வலிமிகு முன்பின் பாணனொடு மலிதார்த் தித்தன் ஆர்ப்பு” 6 (அகம்.226)

    “பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி
    எதிர் தலைக் கொண்ட ஆரியப் பொருநன்” 7 (அகம்.386) என்று குறிப்பிடுகின்றது அகநானூறு.

    ஆரிய நாட்டைச் சேர்ந்த பொருநன் ஒருவனும் குட்டை நாட்டைச் சேர்ந்த கணையன் ஒருவனும் ஒன்றுகூடி அப்பாணனோடு போருக்கு வந்து தோற்றுள்ளனர். இப்பாணர்கள் தம்முடைய திறனாலும் சிறப்பாலும் வேந்தர்களிடமிருந்து நாடுகளைப் பெற்றுள்ளனர். பாண்டிய நாட்டில் மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதனைப் பாணனுக்கு வழங்கியுள்ளனர். அந்நாட்டுத் தலைவன் வாணன் மதுரையைக் கைப்பற்றி அதனைப் பாணனுக்கு வழங்கியுள்ளான்.

    “பொன்னி வளநாடு பாணன் பெறப் புரிந்தான்
    பாணன் மதுரைப் பதியினை வைத்த பிரான்”
    8  (பெருங்.188-191)

    என்ற பாடல் வரி சுட்டுகிறது. அகநானூற்றில் சொல்லக்கூடிய பாணன் நன்னாடு, பாலியாறு, பாண்மலை கல்வெட்டில் செல்லக்கூடிய வாணவர், வாணாதிராயர், வாணதரையர், ஆரிய நாட்டுப் பொருநன், குட்டநாட்டுக் கணையன் பாண்டிய மன்னன் பொன்னி வளநாடு (சோழநாடு), பாணன் மதுரைப்பதி இவைகள் அனைத்தும் பாணர்களின் வாழ்வு வெளிப்பாட்டை, அரசாட்சியை, போர்த்திறத்தைச் காட்டுகிறது. இப்பெயர் சொல்லாட்சிகள் செங்கம் பகுதியில் கிடைக்கும் நடுகற்களிலும் கிடைக்கிறது. ஆக, பாணர்கள் சங்க காலத்தில் தமிழ்நிலம் முழுவதும் இருந்துள்ளது தெரிய வருகிறது.

    இதில் பல்லவர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குறுநில மன்னர்களாகவும் சோழர், பாண்டியர்களுக்கு மத்தியில் போர்வீரர்களாவும், படைத்தளபதியாகவும், பசுக்களைக் கவர்ந்து மீட்டுவரக்கூடியவர்களாகவும் இருந்துள்ளனர்.

    செங்கம் வடஆர்க்காடு, தருமபுரி – பெரும்பாணஅரசர்கள், போர்வீரர்கள்
    மதுரை, நெல்லை   – இசைப்பாணர்கள்
    தஞ்சை (சோழநாடு)   – குறுநில மன்னர்கள், படைத்தளபதியாக இருந்துள்ளனர்.

    கல்வெட்டுகளில் பாணரசர்

    வட ஆர்க்காடு மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட வீராணம் என்னும் ஊரில் ஆய்னாரப்பன் கோயில் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் நடுகல்லாக நடப்பட்டுள்ளது. இக்கல் கி.பி.9 – ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கம்பவர்மனின் 14-ஆம் ஆட்சி ஆண்டில் நடப்பட்டது. இங்குள்ள கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் ஏந்திய நிலையில் உருவத்தின் மேற்பகுதியிலும், வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இக்கல்லில் “பல்லவ மன்னன் கம்பவர்மனது பதினான்காவது ஆட்சி ஆண்டில், பாண அரசன் வயிரமேகன் வாண கோட்டியையும், இலாடைப்பாடியையும், மிலாட்டையும், சோழ நாட்டைச் சேர்ந்த காவிரியின் வடகரையிலுள்ள பகுதிகளையும் ஆள்கின்றபோது, வேணாடு முந்நூரையும், எயில்நாடு ஐந்நூரையும் ஆண்டு வந்த நந்திப் பெருமானார் மகன் அக்கழி மல்லன் என்பார் வெண்ணத்தையும், சாத்தனூரையும் ஆண்டு வந்தார். அச்சமயம், மங்கள நாட்டைச் சேர்ந்த மாதேவரின் படை சாத்தனூரைத் தாக்கியது. அப்போது வெண்ணத்தைச் சேர்ந்த மழநாடன் மொடப்பன் பின்பு சென்று போரிட்டு வேணாட்டெல்லையில் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.” 9(செ.நடு: ப.9)

    “சோழ மன்னன் முதலாம் பராந்தகனின் நான்காம் ஆட்சி ஆண்டில் பாண அரசர் வேட்டுவதிரையரின் ஆளும் மேற்கோவலூர் நாட்டைச் சேர்ந்த அளவில் பாடியில் வாழும் ஆந்தைப்பொன்னி என்பானுடன் போரிட்டு வீரமரணம் அடைந்துள்ளான்.”10 (செ.நடு.ப.8) இச்செய்தி செங்கம் வட்டத்திலுள்ள அய்த்தாம்பாளையம் எனும் ஊரில் நடுகல்லாக நடப்பட்டுள்ளது. இதன் பெயர் தற்போது வேடியப்பன் கோவிலாகும்.

    பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மனின் இராண்டாம் ஆட்சி ஆண்டில் பாண அரசரின் சேவகரும் மேல் கொன்றை நாட்டைச் சேர்ந்த மேல் வேளூரை ஆள்பவருமான பனையாமாரியார்”11 (செ.நடு.ப14) என்பார் ஆநிரைகளைக் கவர்ந்தபோது வீரமரணம் அடைந்துள்ளார். இங்கு ஆட்சி செய்த மன்னன் பாணர் ஆவர். அவர்களுடைய ஆட்சிப் பகுதி வேளூராக இருந்துள்ளது.

    பாணர்கள் ஆநிரைகளை மீட்டலுக்காக இறத்தல்

    செங்கம் வட்டம் சே.கூடலூர் ஏரிக்கரையிலுள்ள சுடுகாட்டின் அருகில் கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாணர்களின் நடுகல் நடப்பட்டுள்ளது. இதில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் முப்பத்தெட்டாவது ஆட்சி ஆண்டில் பாண அரசருடைய மருமக்களான கந்த விண்ணனார் கூடலில் ஆநிரை கவர்ந்தபோது பொன்னாரம்பணார் கொல்லச் சேவகன் காகண்டி அண்ணாவன் என்பவன் அவ்வாநிரைகளை மீட்டு வீரமரணம் அடைந்துள்ளான்.” 12 (செ.நடு.ப.12)

    பாண அரசர்கள்

    தருமபுரி பகுதியிலும் அதனை அடுத்த செங்கம் பகுதியிலும் கிடைக்கின்ற நடுகற்கள் கி.பி.6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.8-ஆம் நூற்றாண்டுவரை பாண அரசர்களைப்பற்றி பேசுகிறது. இப்பாண அரசர்கள் குறுநில மன்னர்களாக ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களது ஆட்சி மரபு பல்லவர்கள், கங்கர்கள் ஆளுகைக்கு உட்பட்டே நடந்துள்ளது தெரியவருகிறது.

    பல்லவர்கள் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு கி.பி.6-ஆம் நூற்றாண்டிலிருந்து சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளனர். ஆட்சிப் பரப்பு தொண்டை நாட்டுப் பகுதி மட்டுமின்றி தகடூர்ப் பகுதியிலும் பரவி இருந்தது. இவர்களுடைய கல்வெட்டுகள் ‘கோவிசையை’ என்று தொடங்குகின்றன.

    செங்கம் பகுதியில் கிடைத்த நடுகற்கள் பெரும்பாலனவற்றில் ‘கோவிசையை’ கொண்டே தொடங்குகின்றன. ஆதலால் பாணஅரசர்கள் பல்லவர்களுக்கு உட்பட்ட இடங்களிலே ஆட்சி செய்துள்ளனர்;. கங்கர்களது ஆட்சியும் தகடூர்ப் பகுதிகளுக்கு உட்பட்டே இருந்துள்ளன. இவர்களுடைய நடுகற்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். கங்க மன்னர்களின் கீழ் ஆட்சி செய்த ‘அரிமிறை மாவலி வாணராயர்’, ‘மாவலி வாணராயர்’ போன்ற பாண அரசர்களின் கல்வெட்டுகள் செங்கம் பகுதியில் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் போரில் மாண்ட வீரார்களின் நினைவாகவும், பசுக்களை மீட்டு அதன் நினைவாக இறந்த தன்மையையும் சுட்டிக் காட்டுகின்றன.

    செங்கம் பகுதியில் கிடைக்கும் இக்கல்வெட்டுகள் அனைத்தும் இன்று வெவ்வேறு பொதுப்பெயர்களைக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கல்வெட்டுகள் ஆற்றோரப் பகுதிகளிலும் சில கல்வெட்டுகள் சுடுகாட்டுப் பகுதிகளிலும் கிடைக்கின்றன. இதன் பெயர்கள் அனைத்தும் வழக்கில் மாற்றப்பட்டு பொதுப்பெயர்களாக வழங்கப்படுகின்றன.

    அப்பொதுப் பெயர்களே அவர்களின் தற்கால அடையாளம் ஆகும். அதில் வேடியப்பன், கரிவேடியப்பன், கரிய வேடியப்பன், வேடர், சிலைக்காரன், வீரக்காரன், முனியப்பன், ஐயனாரப்பன், ஐயனார், கிருணராயப்பன், மீனாரப்பன் என்றும், மொசவேடியப்பன், நொண்டி வேடியப்பன், ஓட்டைவேடியப்பன் எனச் சில பட்டப் பெயர்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன. சில பேர்கள் அவை காணப்படும் இடம் சார்ந்து “சாவுமேட்டு வேடியப்பன், நத்தமேட்டு வேடியப்பன், ஏரிக்கரை வேடியப்பன்” எனவும் குறிக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் இப்பெயர்கள் அனைத்தும் வீரன் என்பதுடன் தொடர்புடையவானகவே உள்ளன. இப்பெயர்கள் செங்கம் பகுதியில் வழங்கப்பட்டு வந்தாலும் இவை பாணர்களின் வாழ்வினையே அதிகம் வெளிக்காட்டுகின்றன.

    ஆனால் இன்று, சங்ககாலப் பாணர்கள் வடஇந்தியாவில் தொல்குடியினராக இருக்க கூடிய “கோண்டுப்” பழங்குடியினரின் மரபாக இருந்து வருகின்றனர். தமிழகத்தில் ‘சாதிப்பிள்ளைகள்’ அல்லது ‘குடிப்பிள்ளைகளாகத் தொடர்கின்றனர்.”13 என்று பக்தவத்சல பாரதி (பாணர்கள் இனவரைவியல், ப.1) கூறுகிறார்.

    அதே நேரத்தில் 1901ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அறிக்கையில் தமிழ்ப் பாணர்கள் “மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் தையல் தொழில் செய்து வருகின்றனர். திருநெல்வேலிப் பாணர்களை மேஸ்திரி என்றும், ஒரு சில பாணர்கள் தங்களைப் பாண்டிய வேளாளர் என்றும் கூறிக்கொள்கின்றனர்.  தூத்துக்குடி, பாளையங்கோட்டை, தென்காசி, செங்கோட்டை, நயினாகரம், கோவில்பாட்டி, நாகர்கோவில், கயத்தாறு, மதுரை, திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், குற்றாலம்,  ஸ்ரீவில்லிப்புத்தூர், புளியம்பட்டி போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களைப் பாணர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாணர் சமூகத்தினர் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு இலட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்களில் ஆண்கள் 60 சதவீதமும், பெண்கள் 40சதவீதமும் இருப்பதாகக் கணக்கெடுப்பு கூறுகிறது.

    முடிவுகள்

    பாணர்கள் என்ற பிரிவினர் சங்க காலம் முதல் இன்றுவரை அதே பெயரைத் தாங்கி நின்று கலைப்பிரிவிலிருந்து மாறி இன்றைய நிலையில் தையல் தொழில் செய்யும் மக்களாக வாழ்கின்றனர். இத்தகைய தொழில் மாற்றத்திற்கு வறுமை, போதிய வருமானம் இன்மையே காரணம் என்கின்றனர். பல்லவர், சோழர், கங்கர், பாண்டியர்கள் காலத்தில் போர்வீரர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், அரசர்களாகவும், ஆநிரைகளை மீட்கும் வீரர்களாகவும் இருந்த பாணர்கள் அவர்களது நினைவாக மாற்றுப் பெயருடன் சிறுதெய்வக் கடவுள்களாகச் செங்கம் பகுதியில் பல்வேறு பொது இடங்களில் வைத்து வழிபடப்படுகின்றனர். அதே நேரத்தில் சங்க இலக்கியங்கள் ஆற்றுப்படை நூல்கள் அனைத்திலும் இப்பாணர்கள் கலைஞர்களாக வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. ஆகவே பரந்து விரிந்த தமிழக நிலப்பரப்பில் பாணர்களின் வாழ்வானது வெவ்வேறு நிலையில் இருந்துள்ளதை இதன்வாயிலாக அறிய முடிகிறது. மேலும் இப்பாணர்களின் வாழ்வியலைத் தொல்லியல், கல்வெட்டுகள் வாயிலாக விரிவாக ஆராய முற்பட்டால் பாணர்கள் பூர்வீக வாரலாற்றினை வெளிக்கொணர முடியும்.

    துணைநூற்பட்டியல்

    1. க. காந்திதாசன் – சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல். ப.15, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, தரமணி, சென்னை.06
    2. தொல்காப்பியம், புறத்திணையியல், ப.36
    3. புறநானூறு – கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. பாடல்.335:7-8
    4. அகநானூறு – கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. பாடல்.113
    5. மேலது நூ. பாடல்.325
    6. மேலது நூ. பாடல்.226
    7. மேலது நூ.பாடல்.386
    8. பெருங்கதை.பக்.188-191
    9. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972. ப.9
    10. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972. ப.8
    11. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972. ப14
    12. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972.ப.12
    13. பக்தவத்சல பாரதி – பாணர் இனவரைவியல், ப.1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, சென்னை.-06

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
    கோயம்புத்தூர் – 641020.
    E-Mail: ramvini2009@gmail.com
    செல் , 9751104241

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 179-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கிறார் திருமதி சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    கடல்வாழ் உயிரினங்களில் ஓடுகளான இந்தச் சோழிகள், பழுப்பும் வெளுப்பும் கலந்த பளீர் வண்ணத்தில் மின்னி நம் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவருகின்றன. பகடை ஆடவும் சோதிடம் பகரவும் பயன்படும் இச்சோழிகளை நம் கவிஞர் பெருமக்கள் தம் கவிதைகளில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அறிந்துவருவோம்!

    *****

    ”அமரர்கள் அமுதம் எடுக்கையில் கிடைத்த ஆழியின் கொடையோ? பாரதப் போரில் பார்த்தசாரதி ஊதிய பாஞ்சசன்னியமோ? கடல்நங்கையின் காதல் மகவோ?” என்று வரிசையாய்க் கேள்விகளை அடுக்கி நம்மை இரசிக்க வைக்கிறார் திரு. ஏ.ஆர். முருகன் மயிலம்பாடி.

    ‌ஆழியின் கொடை!!   

    கவர்ச்சி இளமங்கை
    கழுத்தும்குமிண்வாயும்
    கழன்று கிடக்கிறதோ?
    அமுதம் எடுப்பதற்காய்
    ஆழ்கடல் கடைகையில்
    அமரர்கள் எடுத்துவோ?
    அரிசிக்குள் புதைத்தாலும்
    அலுங்காமல் மேல் வரும்
    அதிசய வலம்புரியோ?
    பாரதப்போரில் கண்ணன்
    பாங்குடன் ஊதிய
    பாஞ்சசன்னியமோ?
    கடல்நங்கை களிப்போடு
    கதிரவனைக் காதலித்து
    ஆழத்தில் ஈன்றெடுத்த
    ஆழியின்நன்கொடையோ?
    முற்றிய சிப்பிகளோ?
    மூத்த நண்டு ஓடுகளோ?
    மூச்சடக்கித்தேடினாலும்
    முத்து எதில்? யாரறிவார்?
    ஐந்தும் கிடப்பது போல்
    ஐம்புலன்கள் அடங்க
    ஐயமின்றி முக்தி வரும்!!!

    *****

    ”உப்பைத் தரும் கடலில் விளைந்த சோழிகளால் செப்பிடத்தகு பயனின்மையின் விளையாட்டுப் பொருளாய் மாறிப்போயின” என்று சோழிகளின் கதையைக் கவிதையாய் வடித்துள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

    விளையாடவே…

    சிப்பி யென்றால் முத்திருக்கும்,
    சீதரன் ஊதும் சங்கென்றால்
    எப்படி யாயினும் ஏற்றிடுவர்
    எல்லா வகையாம் பூசைக்கே,
    உப்பைத் தந்திடும் கடல்நீரும்,
    உதிரியாய்ச் சோழிகள் எங்களாலே
    செப்பிடத் தகுந்த பயனிலாததால்
    சேர்ப்பர் பலரும் விளையாடவே…!

    *****

    ”காலக் கணக்கைக் கண்டுணரவும், ஞால வாழ்க்கையின் புதிரறியவும் உபாயம் நல்கும் மாயக் கயிறாம்  சோழிகள் இவை” என வியக்கிறார் முனைவா் ம. இராமச்சந்திரன். 

    காலம்

    ஓடி ஓடி உட்கலந்த
    காலக்கணக்கை,
    கண்டுகொண்ட மகத்தான
    கண்டுபிடிப்பு,
    எண்கள் வாழ்க்கையின்
    புதிா்களைக் கட்டவிழ்க்கும்
    அற்புத மாயக்கயிறு இவை.

    *****

    ஆழி அளித்த சோழிகளைப் பல்வேறு கோணங்களில் நுணுக்கமாய் அணுகி, அரிய கவிதைகள் படைத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    உன் நினைவாய்…

    கடற்கரை மணற்பரப்பில்
    கையிரண்டைக் கோத்தபடி
    கதைபேசி நடக்கையிலே
    திடுக்கென்று உதறிவிட்டு
    ஓடிப்போய் ஒவ்வொன்றாய் – நீ
    குனிந்தெடுத்த சோழிகள் தாம்

    விடைபெற்றுப் போகையிலே
    எதன்பொருட்டோ என்கையில்
    வெடுக்கென்று திணித்துவிட்டு
    வேகமாய் நீ மறைந்தாய்!

    நீ நகர்ந்துப் போனபின்னும்
    உன் கரத்தைப் பிடித்தபடி
    நடப்பதுபோல் ஓர் உணர்வு
    ஐவிரலாய் அவை எனக்குள்…

    விரல்களை வருடிக்கொண்டே
    வீடுவந்து சேர்ந்தேன் நான்!
    முகம் கழுவி உடைமாற்றி
    உணவருந்திப் படுத்தபின்னே
    உறக்கம் துளிர்க்கும் நொடி
    சோழிகளை நினைத்திட்டேன்

    மேசைமீது வைத்திருந்த – உன்
    விரல் நிறத்துச் சோழிகளை
    கைப்பேசி ஒளிபாய்ச்சிக்
    கண்கொட்டப் பார்த்திருந்தேன்

    உயிரற்றக் கூடுகள் போல்
    உருவத்தில் தெரிந்தாலும்
    உயிர்ப்போடு உள்ளிருந்து
    உன் நினைவு நெளிகிறது!

    ஈரமாய் இருப்பதன்
    காரணம் உணர்ந்திட்டேன்
    உன் காதல் கடல் திரண்டு
    அதிலிருந்து வழிகிறது

    இன்னமும் உதிராமல்
    அதன்மீதிருக்கும் மணல் துகள்போல்
    உன் நினைவுகளில்
    ஒட்டிக்கொண்டிருக்கின்றன என் பொழுதுகள்!

    காதலியின் கைவிரல்களாய்ச் சாலம் காட்டும் சோழிகளை, அதிலிருந்து கடலாய்ப் பொங்கி வழியும் காதலை, சோழிமீதிருக்கும் மண்துகள்போல் காதலியவளின் நினைவுகளில் ஒட்டியிருக்கும் தன் வாழ்வின் பொழுதுகளை இக்கவிதையில் சொன்மாலையாக்கிக் காதல்மணம் பரவ விட்டிருக்கின்றார் திரு. புதுவைப் பிரபா; அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • The ravens caw -அண்டங்காக்கையின் கரைவு

    பவள சங்கரி

     

    கொரிய தமிழ் கலாச்சார உறவு!

     

    நம் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற கொரிய கவிஞர் கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச் சிறந்த கொரியக் கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர். வல்லமையாளரான [http://www.vallamai.com/?p=78004] அவர்தம் கவிதையும் என் மொழிபெயர்ப்பும்… [http://www.vallamai.com/?p=84392 – நூல் வெளியீட்டு விழா]

    The ravens caw

    In swooping, metallic cacophony
    the ravens caw.
    With primary colors
    flowers bloom on the thick branches.
    Yet they appear as countless
    hungry eyeballs.

    From the beginning,
    holding firm to the inevitable cycle of life,
    millions of souls shall come into being
    as already have been in the world.

    In my worldly forties
    I stepped on the land of karma.
    Only by stepping out of this parched land
    will I extinguish my burning sentiment of wrath.

     

    அண்டங்காக்கையின் கரைவு

     

    திடீர்த் தாக்குதலால் அண்டங்காக்கைகள்
    அசூயையான உலோகக் குரலில் கரைகின்றன.
    ஆரம்பக்கால வண்ணங்களுடன்
    அடர்ந்த கிளைகளில் அழகாக மலரும் மலர்கள்.
    இருப்பினும் அவை எண்ணற்ற
    பசித்த கருவிழிகளாகவே காட்சியளிக்கின்றன.

    ஆரம்பக் காலத்திலிருந்தே,
    வாழ்வின் தவிர்க்க இயலாத சுழற்சியிலும் உறுதியைக் கடைப்பிடிப்பது,
    ஏற்கனவே உலகில் இருந்து கொண்டிருப்பதைப்போன்று
    மில்லியன் கணக்கான ஆன்மாக்கள் வரக்கூடும்.

    என் உலகின் நாற்பது வயதில்
    கர்மாவின் களத்தில் நுழைந்தேன் நான்.
    இந்த வறண்ட நிலத்திலிருந்து வெளியேறுவதன் மூலமே
    கொழுந்து விட்டெரியும் என் கோபத்தை அணைப்பேனோ நான்.

     

    பி.கு. கவிஞர் முக்கியத்துவம் கொடுத்துக் குறிப்பிட்டுள்ள அண்டங்காக்கை எனும் பறவை நம் புராணக் காலந்தொட்டு இன்றுவரை மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகளைப் பரவவிடுவதாகவே உள்ளது. மனிதருக்குக் கோபம் என்ற குணம் எத்தகைய மோசமானது என்பதன் குறியீடாகவே இக்கவிதையைக் காண முடிகின்றது.

    காகங்கள், புத்திக் கூர்மையுடைய பறவைகள். தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. நாம் தெருவில் வீசியெறியும் மாமிசக் கழிவுகள், இறந்து போன உயிரினங்களை உட்கொண்டு நமது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதனாலேயே இவை இயற்கைத் துப்புரவாளர்களாகக் கருதப்படுகின்றன. நம் வாழ்வோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த ஒரு பறவையினம் இது. நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நமது நம்பிக்கை. “விருந்து வரக் கரைந்த காக்கை” எனும் குறுந்தொகைப் பாடலின் மூலம் இதை அறியலாம். இப்பாடலை இயற்றிவர், சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவர். காகத்தைப் பற்றிப் பாடியதாலேயே அவர் இப்பெயரைப் பெற்றார். இதுபோன்றே அண்டங்காக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவிஞர் வரைந்துள்ள கவியும் சுவை ஊட்டுகின்றது. அன்றாடம் காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கு உண்டு.

    புனைவுகள் மற்றும் இலக்கியங்களில் அண்டங்காக்கைக்கு பல குறிப்புகள் உள்ளன. இதன் கருப்பு நிறம், பற்கள், கரகரவெனும் குரல், உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, காகம் தொன்மங்கள் மற்றும் புனைவுகளின் படைப்பாளர்களுக்குத் தீய சக்தியின் குறியீடாகக் கருதப்பட்டு வருகிறது.

    அண்டங்காக்கை மரணம் மற்றும் இறப்புக்கு இடையே ஒரு இடைத்தரகராக இருந்தது என்று பிரெஞ்சு மனிதவியல் அறிஞர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் ஒரு கட்டமைப்புவாத கோட்பாட்டை முன்வைத்தார். காகம் இறந்தவர்களுடனும் இழந்த ஆத்மாக்களுடனும் தொடர்புடையதாக ஆனது என்று சுவீடன் நாட்டுப்புறத்திலும் நம்பப்படுகின்றது.

    இந்து மதத்தில் காக்கைகள் உருவில் மூதாதையர்கள் அமாவாசை, திதி சமயங்களில் அவர்களுக்காகப் படைக்கும் உணவு அல்லது தின்பண்டங்களை எடுக்க வருகின்றன என்ற நம்பிக்கை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. தென் கொரிய நாட்டிலும் மூதாதையர்களுக்கு படையல் இட்டு நீர் விளவி வழிபாடு செய்யும் வழமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    மிகுந்த சக்தி வாய்ந்த இந்து தெய்வமான சனி பகவானின் வாகனம் காகம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மாபெரும் கலைகள் என்ற பத்து தாந்தரீகக் கடவுள்களின் குழுவில் ஒன்றான தூமாவதி, இந்து தாய் தெய்வத்தின் அச்சமூட்டும் அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது. அவலட்சணமான விதவையாகச் சித்திரிக்கப்படும் இத்தெய்வம், பொதுவாகக் கல்லறைகள் நிறைந்த, பிணங்களைத் தகனம் செய்யும் பூமியில் காகத்தின் மீது சவாரி செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றது.

    Share
  • கருவறை

    Image result for clipart of toilets

    -முனைவர் கி. இராம்கணேஷ்

    கழிவறை சென்று திரும்பினேன்
    யாரோ கூப்பிடுவது போல் கேட்டது
    திரும்பிப்பார்த்தேன்
    கழிவறைக்குள் இருந்து ஒலி கேட்டது.
    யாரது? என்றேன்
    நான்தான் கழிவறை என்றது.
    உன்னிடம் எனக்குப் பேச நேரமில்லை
    சொல்லித் திரும்பினேன்…
    எனக்காக ஒருநிமிடம் என்றது
    சொல்லித் தொலை என்றேன்
    மகனே! என்றது
    அடச்சீ நான் உன் மகனா?
    சொல்ல வந்ததைச் சொல்…
    ஒருமுறையாவது என்னைப்பற்றிச் சிந்தித்தாயா?
    உன் கழிவுகளை உன்தாய் வயிற்றில் சுமந்தாள்
    அதுவும் பத்துமாதங்கள் மட்டுமே!
    நானோ ஒவ்வொரு நாளும் சுமக்கிறேன்
    நீங்கள் தூய்மையாக, நான் அழுக்காகிறேன்
    என்னைப் பார்த்தவர்கள்
    முகம் சுழிக்கிறார்கள்
    மூக்கைப் பொத்திக்கொண்டு ஓடுகிறார்கள்…
    துர்நாற்றம் என்னிடம் எப்படி வந்தது
    உங்களால் தானே!
    கருவைச் சுமந்த கருவறை போல்
    கழிவைச் சுமக்கும் கழிவறை நான் என்றது.
    பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை
    மகனே எனக் கழிப்பறை சொன்னது
    நியாயமாகவே பட்டது…

    Share
  • இந்த வார வல்லமையாளர் (280)

    இந்த வார வல்லமையாளராக கரிசல் மண்ணின் புதல்வர் கி. ராஜநாராயணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. அரிய படைப்புகளைப் படைத்து இளைய தலைமுறைக்கு வழிகாட்டியுள்ளார். தம் ஊர் இடைசெவல், அங்கே பிறந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமியுடன் சேர்ந்து திருநெல்வேலியில் ‘வட்டத்தொட்டி’யில் இணைந்து தம் கலைரசனைகளை வளர்த்துக் கொண்டவர். சங்கீதத்தை, நாதஸ்வரம் போன்ற கருவிகளை வாசிக்கும் இசைவாணரை வர்ணிப்பதில் கி.ரா. அவர்களுக்கு இணை அவரே தான். சிறுகதைகள் ஆகட்டும், கட்டுரைகள் ஆகட்டும், சுமார் 70 ஆண்டுகளாகத் தமிழில் எழுதிவருகிறார். இப்போது 96 வயது ஆகிறது. செப்டம்பர் 16, 1922-ல் பிறந்த கி.ரா. நூற்றாண்டுக்கு மேல் வாழ வாழ்த்துகிறோம்.

    வட்டார வழக்குகளில் தமிழ் இயல்பாக வாழ்கிறது, வளர்கிறது. அகராதிகளிலும், இலக்கியங்களிலும் ஏறாத தமிழ்நடைகள் இன்னும் பல உயிர்ப்போடு உள்ளன எனக் காட்டும் ’முன்னத்தி ஏர்’ அவர். கரிசல்காட்டு இலக்கியத் தந்தை. நல்ல கதைசொல்லி. வட்டார வழக்குச் சொல் அகராதிகளை எப்படி உருவாக்கவேண்டும், அதன் உழைப்பு என்ன என்றெல்லாம் காட்டியவர் கி. ராஜநாராயணன்.

     

    இந்த வாரம் புதுவையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், கி.ரா. தனது உரையை வாசகர்களுடனான உரையாடலாக உலகில் யுத்தம் இல்லையென்றால் எல்லா மக்களுக்கும் அரசே இலவசமாக உணவு ஊட்டலாம் என்றார்.

    “காலம் நகர்ந்துபோகுற இந்த வேகத்துல, கரிசல் பூமிக்குக் கதிமோட்சம் உண்டானு வருத்தமும் சந்தேகமும் இருக்குற உங்கள மாதிரியே எனக்கும் இருந்துருக்கு. ஆனா, கொடிய பஞ்சம் வருவதற்கான வாய்ப்பு கெடையாது.

    ஒரு காலகட்டத்துல நம்முடைய விவசாயிகளப் பாத்து அரசு, நீங்க விவசாயமே செய்ய வேண்டாம், உங்களுக்குச் சாப்பாடுதான வேணும், நாங்க ரேஷன் கடைல உங்களுக்கு வேண்டியதெல்லாம் கொடுக்குறோம்னு சொன்னுச்சு. ரேஷன் கடையில அரிசி கொடுக்குறது ஒரு அக்கறைதான். சாப்பாட்டுக்கான எல்லாத்தையுமே கொடுக்கலாம்.

    கேக்குறதுக்கு ஒரு மாதிரியா இருந்தாலும் அரசாங்கத்தால அது முடியும். அரசாங்கம் ராணுவத்துக்கு எவ்வளவு செலவு பண்ணுது? அது தேவையில்லையே? யுத்தம் செஞ்சா இவனுக்கும் நஷ்டம், அவனுக்கும் நஷ்டம். உலக மகா யுத்தங்கள் ரெண்டு நடந்துருக்கு. புராணங்கள்ல, இதிகாசங்கள்லேயும் நடந்துருக்கு. மகாபாரதத்துலயும் நடந்துருக்கு, ராமாயணத்துலயும் நடந்துருக்கு.

    யுத்தங்கள் சொல்கிற விஷயங்கள் என்ன? சாகுறதத் தவிர ஒண்ணுமே கெடையாதே. ஜனங்களுக்கு ஒண்ணு மாத்திரம் சொல்றேன். நல்லவங்களத் தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான்!” https://tamil.thehindu.com/opinion/columns/article24983670.ece

    கி.ரா. புத்தகங்கள்:
    https://www.youtube.com/watch?v=FMAt2ugz8iQ

    கி.ரா. -வின் சில எழுத்துகள்:

    https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/

    இனக்குழு அழகியலின் முன்னோடி: ஜெயமோகன்

    கி.ராஜநாராயணன் படைப்புகள்-ஜெயமோகன்

    https://tamil.thehindu.com/general/literature/article24960385.ece

    கி.ரா.- நம் காலத்தின் பெருமிதம் https://tamil.thehindu.com/general/literature/article24960385.ece

    வெடித்துக் கிடக்கும் பருத்திக் காடு https://tamil.thehindu.com/opinion/columns/article19689388.ece

    கரிசலின் உன்னதக் கதைசொல்லி கி.ரா.
    http://azhiyasudargal.blogspot.com/2011/02/blog-post_18.html
    https://www.thehindu.com/news/cities/puducherry/rural-dialects-folk-tales-helped-develop-tamil-literature/article19704363.ece

    தங்கர் பச்சான் – கி.ரா. உரையாடல்:
    https://www.youtube.com/watch?v=mp-6Iiu5cZI

    கி. ரா. உரை:
    https://www.youtube.com/watch?v=vUAfEiniUhk

    கழனியூரன் – நான் கண்ட கி.ரா.:
    https://www.youtube.com/watch?v=tflKjUo7cPM

    நாஞ்சில் நாடன்:
    https://www.youtube.com/watch?v=4EMkVUMjFeA

    பவா செல்லதுரை:
    https://www.youtube.com/watch?v=PDmR4Z2co0Q

    கி.ரா. படைப்புலகம் – எஸ் ராமகிருஷ்ணன்
    https://www.youtube.com/watch?v=O8bEt50uGl4

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி – 180

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெனிலா பாலாஜி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 35

    க.பாலசுப்பிரமணியன்

    வெற்றிகள் – ஒரு பார்வை 

    ஒரு வெளிநாட்டில் உடல் ஊனமுற்ற சிறுவர்களுக்கான ஒரு நூறு மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் மூன்று இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இதில் ஒருவர் இளம் வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தன் கால்களை சற்றே இழுத்து நடந்து கொண்டிருந்தார். மற்றொருவர் நடக்க முடியாத காரணத்தால் ஊன்றுகோல்களை துணையாக்கி நடந்துகொண்டிருந்தார். மூன்றாமவர் ஒரு சக்கர வண்டியில் அமர்ந்து போட்டியில் கலந்து கொண்டிருந்தார். போட்டி துவங்கியதும் எதிர்பார்த்தபடி முதல் நபர் தன்னுடைய கால்களை சற்றே வேகமாக இழுத்துக்கொண்டு முன்னே சென்று கொண்டிருநதார். அவர் முன்னே செல்லும் பாதையில் சற்றே திரும்பி மற்றவர்கள் எந்த வேகத்தில் வந்துகொண்டிருக்கின்றனர்  என்று பார்த்தார். அந்த நேரத்தில் சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தவரின் சக்கரம் சற்றே பாதை தவறி அருகில் இருந்த வேலியில் சிக்குண்டது. இதனால் அந்த வண்டி அருகே  மெதுவாகக்  கவிழ்ந்து கீழே விழ அந்த நபரும் கீழே விழுந்து விட்டார். உடனே முதலில் சென்று கொண்டிருந்த போட்டியாளர் இலக்கை நோக்கிச் செல்லாமல் திரும்பி அந்த வண்டியை சரியாக நிறுத்தி அந்த மூன்றாம் நபரை எழுப்பி அந்த வண்டியில் சரியாக அமர வைத்து அந்த வண்டியை லேசாக தள்ளிவிட்டார்.அவர் தள்ளிய வேகத்தில் அந்த வண்டி முன்னே சென்று  இலக்கைத் தாண்டியது.

    அந்தப் போட்டியில் பரிசு கொடுக்கும் நேரத்தில் மூன்றாவதாக வந்த முதல் போட்டியாளருக்குக் கிடைத்த வரவேற்பு  பிரமிக்கத் தக்கதாக இருந்தது. அவருடைய நறசெயல் அவருக்கு போட்டியில் இழப்பைத் தந்தாலும் அவருடைய  நற்பண்பு அவருக்குப் புகழையும் பெருமையையும் சேர்த்தது.

    போட்டிகள் வெறும் வெற்றியை நிர்ணப்பதற்காக மட்டும் அல்ல. கூடி ஒரு செயலில் பங்கேற்கும் பொழுது தொய்ந்து போன உள்ளங்களுக்கும் இடரில் தவறிவிட்ட நட்புக்கும் ஆற்றலில் பின்தங்கிய தோழமைக்கும் கைகொடுப்பதற்காக அரங்கேறும் ஒரு செயல். வெற்றிகள் ஒருவரின் பண்பை நிர்ணயிப்பதில்லை.

    வெற்றிகள் ஒரு திறனுக்கு மதிப்பீடு மட்டுமேயன்றி ஒருவரின் முழுத்தகுதிகளுக்குச் சான்றல்ல. வெற்றிகள் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில ஒரு செயலில் ஒருவரின் பங்கிற்குக் கிடைக்கும் ஒரு போற்றல். அதற்கு அப்பால் வெற்றிகள் ஒருவரின் வருங்காலத்தை நிர்ணயிப்பதில்லை. “வெற்றிகள் நம்மை ஊக்குவிக்கும் ஒரு மருந்து” என்பது உண்மைதான். அவை நம்மை மேலும் மேலும் சிறப்பாகச் செயலில் ஈடுபடுவதற்குத் துணை செய்யும் ஊக்கிதான்.

    அதில்   சந்தேகமில்லை. ஆனால் அவைகள் பல நேரங்களில் முடிவுகளாக அமைவதில்லை. அவைகள் முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகளாக மட்டும் அமைகின்றன. ஆகவே, வெற்றிகளை முடிவுகளாகக் கருதி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுதல் தவறு. ஆனால் பலருக்கு இது புரிவதில்லை. தங்கள் மிகச்சிறிய   வெற்றிகளைத் தங்கள் வலிமைக்கும் நற்பண்பிற்கும் வாழ்க்கை வளத்திற்கும் முன்னுதாரணமாகக் காட்டி முரசு கொட்டிக்கொண்டு அலைகின்றார்கள். தங்கள் சாதாரணமான வெற்றிகளிக் கூடி மிகப்பெரிய சாதனைகளாகக் காட்டி மற்றவர்களைக் கவரவும் மற்றவர்களை தங்கள் வசம் ஆட்கொள்ளவும்  செய்கின்றார்கள். இதற்கு காரணம் வெற்றியின் மகிழ்ச்சி ஒரு போதையாக மாறி இவர்களை அடிமை கொள்ளுகின்றது. வெற்றியின் போதை ஒரு மனிதனின் அழிவுக்கு அறிகுறி. வெற்றியின் போதை ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல். வெற்றியின் போதை ஒரு மனிதனை சமுதாயத்திலிருந்து பிரித்து தனிப்படுத்துகின்றது. வெற்றியின் போதையில் அடிமையாகாதவர்கள் விவேகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றார்கள்.

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. “Success is an event and a perception. Excellence is a journey; not a destination.“ வெற்றி என்பது ஒரு நிகழ்வு. அது ஒரு  பார்வை. சிறப்பு என்பது ஒரு பயணம்; அது இலக்கு அல்ல.”  இதை நாம் உணர வேண்டும். ஒரு வெற்றியை ஒரு நிகழ்வின் உரைகல்லில் மட்டும் உரசிப்பார்க்கவேண்டும். அதற்கு மேல் அதன் தாக்கங்களை எடுத்துச் சென்று நம் உள்ளத்தின் செயல்களின் உண்மைகளை மறைக்கவோ மூடவோ கூடாது. நாம் செய்யும் செயல்கள் மேலும் மேலும் சிறப்பிற்கு வழிவகுக்க வேண்டும். இந்தப்பயணத்தில் நமக்குப் பல புதிய உண்மைகள் வெளிப்படும். புதிய திறன்கள் சேரும். புதிய வெளிச்சங்கள் கிடைக்கும். புதிய பாதைகள் தென்படும். போட்டிகள் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை மதிப்பீடு செய்கின்றன.

    வெற்றிகளையும் தோல்விகளையும் நாம் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பலவித மனஅழுத்தங்களுக்கும் மனநோய்களுக்கும் இரையாகக்கூடும். அவைகள் நமக்குத் தாழ்வு மனப்பான்மையையோ அல்லது உண்மையை விலக்கிய அயல்நோக்குகளையோ ஏற்படுத்தக்கூடும்.

    வெற்றிகளையும்  தோல்விகளையும் மனதில் சுமப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் நிகழ்காலத்தை கடந்த காலத்திற்கு அடிமைப்படுத்தி நிகழ்கால சுகங்களை இழந்துவிடுகின்றனர்.. வெற்றிதோல்விகள் நம்மை ஒரு நிகழ்வின் பலன்களுக்கு அடிமைப்படுத்தி விடுகின்றன. இதனால் ஒரு செயலின் பொழுது நாம் நம்முடைய இலக்கின் வெற்றியில் மனத்தை ஈடுபடுத்தி செயலின் சுகத்தையும் திறனின் ஆழத்தையும் அனுபவிக்க மறந்து விடுகின்றனர். அல்லது மறுத்து விடுகின்றனர்.

    கண்ணன் கீதையில் அர்ச்சுனனுக்குச் சொல்கின்றான் “நன் கடமையில் ஈடுபடு. செயலின் பலன்களை என்னிடம் அர்பணித்துவிடு.”

    இதன் உட்கருத்தினை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  செயலில் நாம் முழு மனதுடன் ஈடுபட்டு அதில் நம்மை அர்பணித்துக்கொண்டு விட்டால் மகிழ்வும் மன நிறைவும் ஏற்படும்.

    அப்படி நாமும் வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
  • காதறுந்த ஜோசியம்

                                                                                  திவாகர்

    ’அறுபது வயது வந்தபின்னர்தாம் நாய் படாத பாடு படுவீர் அதுவரை உமது ராஜ்ஜியம்தான்’ என்று ஒரு உருப்படாத ஒரு காது பாதியாக அறுபட்ட ஜோசியன் ஒருவன் அவரது சின்ன வயதில் சொல்லிவிட்டு தன்னிடம் அடியும் வாங்கிக் கொண்டு ஓடியதை இப்போதெல்லாம் நினைத்துப் பார்த்து உருகி உருகிப் போனார் மாத்ருபூதம். இந்த இரண்டு வருடமாக தான் கஷ்டப்படுவது போல எந்த நாயும் கஷ்டப்படாதுதான்.. அவைகளுக்கு என்ன சுதந்திரமாக உலாவும் ஜீவன்கள். சௌகரியமாக வாழ்க்கைப் படவே பிறந்த ஜன்மங்கள். இருந்தாலும் அந்த ஜோதிடனுக்கு இந்த நாய்கள் மேல் என்ன வெறுப்போ.. நான் படும் வேதனையை நாய் மட்டுமே பட்டிருக்கும் என்பது போல அல்லவா சொன்னான்..

    ஆனாலும் அவன் சொன்னது உண்மைதானே.. தான் வேலை செய்து ரிடைர் ஆகும்வரை நம்மை யாராலும் அசைக்க முடிந்ததா.. ஆனால் இப்போது..

    ஆமாம். மாத்ருபூதம் தன் கடைசி மூன்று எழுத்துக்கு ஏதுவாக மற்றவர் கண்களுக்கு பூதமாகத்தான் காட்சி அளித்து வந்தார். பிறந்ததிலிருந்தே அழுது கத்தி புரண்டு தலையைத் தரையில் அடித்துக் கொண்டாவது எதையும் சாதித்துவிடுவான் இவன் என்று அவர் அம்மா தன்னைச் சிறு வயதில் புகழ்ந்தாளா இல்லை வயிற்றெரிச்சல் தாங்காமல் இகழ்ந்தாளா என்பதெல்லாம் அவர் அப்போது பெரிதாக நினைக்கவில்லைதான். பள்ளியிலும் கல்லூரியிலும் கூட பெரிதாக அப்படி ஒன்றும் சாதித்தவர் இல்லைதான். சதா கடிந்துகொண்டே இருக்கும் தன்னை அவர் நண்பர்கள்  இவரைச் சேர்த்துக் கொள்ளத் தயங்குவதைக் கூட அவர்கள் தன்னைக் கண்டு அச்சப்படுகிறார்கள் என்று பெருமையாக நினைத்துக் கொண்டு அந்த அச்சத்தை மேலும் வளர்த்து வந்தவர்தான்.

    ஆச்சரியம் என்னவென்றால் இவருக்கு  வாழ்க்கையில் இதுவரை அமைந்த அத்தனை பேரும் இவரைக் கண்டு அச்சப்படுகிறார்கள் என்றே நினைத்து மகிழ்ந்தவர்தாம். இந்தச் சமயத்தில்தான் அவருடைய ஜாதகத்தைப் பார்க்கவந்த அந்த காதறிந்த  ஜோதிடன் இவருக்குக் கல்யாணமும் வேலையும் அமோகமாக அமையும் என்றும் ஆனால் அறுபது வயது வந்தபின்னர் நாய் படாத பாடு படவேண்டி வரும் என்றும் அதற்குப் பரிகாரம் செய்தால் இவருக்கு நல்லது விளையும் என்றதோடு அந்தப் பரிகார விஷயம் தான் மட்டுமே அறியும் விஷயம் என்று பீற்றிக் கொண்டு சொன்னவனைத்தான் கோபத்தோடு கடிந்ததோடு மட்டுமல்லாமல் கையை வீசி ரெண்டு தட்டி விட்டு ஓடவைத்தவர்.

    கல்யாணி அந்த சங்கீத ராகத்துக்கு இணையாக இனிமையாக பேசக்கூடிய திறமை பெற்றவள். நல்ல பாடகி. பட்டி மன்ற பேச்சுகள் பல இடங்களில் கலந்து கொண்டு வாலி நல்லவனா இல்லை சுக்ரீவன் நல்லவனா என்று தலைப்புகளிலெல்லாம் இடத்துக்கேற்றவாறு மாறி மாறிப் பேசி இருவரையும் நல்லவராக்கிய கெட்டிக்காரி என்று பெயர் வாங்கியவள். அரசாங்கப் பள்ளியில் ஆசியையாக நல்ல உத்தியோகமும் பெற்றவள்தான்.  சக ஆசிரியைகளிடம் அவள் பேச்சுக்கு பெரிய மதிப்புண்டு. அப்படிப்பட்ட கெட்டிக்கார பேச்சுக்காரி ஸ்ரீமதி கல்யாணி மாத்ருபூதம் ஆனதும் அவரெதிரே மட்டும் ஊமையாக மாறிப் போனதுதான் மாத்ருபூதத்தின் ஜாதக விசேஷம்.

    கல்யாணம் ஆன முதல் நாளே மாத்ருபூதம் தன் சுய ரூபத்தை அவளிடம் காண்பித்தார். அவள் வேலைக்குச் செல்லக்கூடாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவள் தன்னிடம் எதிர்பேச்சு பேசக்கூடாது என்ற சத்தியத்தைக் கேட்டார். இவர் என்ன விளையாடுகிறாரோ என்று நினைத்தவள் வேண்டுமானால் எதிர்ப்பேச்செல்லாம் பேசாமல் இருக்க சத்தியம் செய்கிறேன் ஆனால் அரசாங்க வேலைக்குச் செல்லும் உரிமையைப் பறிக்கவேண்டாம் என்று கெஞ்சியதால் அவளிடம் பச்சதாபப்படுவது போல பட்டு அவளை மன்னித்துவிட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக பெரிய மனது பண்ணுவது போல சொன்னதும் இந்த கல்யாணி அசட்டுத் தனமாக எதிர்ப்பேச்சே பேசமாட்டேன் என்று சத்தியமும் செய்து கொடுத்துவிட்டாள்.  அந்த நிலையில் அவளுக்கு தன் அரசாங்க உத்தியோகமும் அதன் மூலம் தனக்குக் கிடைக்கும் பட்டி மன்ற அவகாசங்கள், பாட்டுக் கச்சேரிகளும் பறிபோகக் கூடாதே என்ற அச்சமும்தான் அப்படி செய்ய வைத்தது. அவ்வளவுதான் அடுத்த நாள் முதல் சதா பேசிக்கொண்டிருக்கும் கல்யாணி அவரைக் கண்டாலே பேச்சே வராதது போல நடந்து கொள்ள ஆரம்பித்தாள். இப்படிப்பட்ட அன்னியோன்யத் தம்பதிகள் இரண்டு பிள்ளைகளைக் கூடப் பெற்றுக் கொண்டது இன்னொரு ஆச்சரியம்தான்.

    கல்யாணிதான் வேறு வழியில்லாமல் இவருக்கு வாழ்நாள் முழுதும் வாழ்க்கைப் பட்டோமே என்ற வகையில் இப்படி நடந்துகொண்டாள் என்றால் இந்த ஆபீஸ் காரர்களுக்கு புத்தி எங்கே போயிற்று என்றே புரியவில்லை. அவர் ஆடும் ஆட்டத்துக்கு அவர் பாஸ் வளைந்துகொடுக்க அவர் கீழ் செய்யும் ஆட்களும் அப்படியே நடந்துகொள்ள மாத்ருபூத ராஜ்ஜியம் எந்தக் குறையுமில்லாமல் அலங்காரமாக அட்டகாசமாக அரங்கேறிக்கொண்டிருந்ததுதான். வீடு போனால் ஆபீஸ் இல்லையென்றால் மறுபடியும் வீடு.. யாரும் தொல்லை இல்லாமல் டி.வி. பார்ப்பது, நாவுக்குப் பிடிக்த பண்டங்களை நன்றாக சுவைத்துச் சாப்பிடுவது, அப்படி இப்படி வீட்டிலுள்ளோரை மிரட்டிக் கொண்டே இருப்பது, அவர்கள் பயத்தை ரசிப்பது, குறட்டை விட்டு தூங்குவது எப்போதாவது சினிமா டிராமா என்பது போல மிக ஜாலியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

    எங்கும் எல்லாமே இவர் இட்ட கட்டளைக்காகக் காத்திருப்பது போல நடந்தால் யாருக்குத்தான் அகங்காரம் வராது.. மாத்ருபூதத்துக்கு சற்று அதிகமாகவே வந்தது.. இதனால் கல்யாணிக்கும் பிள்ளைகளுக்கும் பல மனக் கஷ்டங்கள் வந்தாலும் வேறு வழியே இல்லாமல் பொறுத்துக் கொண்டனர். அட, அந்த அறுபது வயது நிறைவு முடிந்த அந்த நாளில் விழா எடுத்த நிலையில் கல்யாணியும் அழைக்கப்பட்டிருந்தாள். எத்தனை அட்டகாசமாக அரங்கேறியது அந்த விழா..

    மாத்ருபூதத்துக்கு அந்த நாள் பூதாகரமாக நினைவில் வந்து கொண்டே இருந்தது. அந்த நாள் தன் அலுவலக வாழ்க்கைக்கும் இல்லாமல் தன் அகங்காரத்துக்கும் சேர்த்தே கடைசி நாளாக அமைந்துவிட்டதுதான்.

    விழாவில் ஏதோ ஒரு பேச்சுக்காக கல்யாணியை ஒரு வார்த்தை பேசுமாறு கேட்டுக் கொண்டோரிடம் சிரித்துக் கொண்டே தன் கணவரைக் கை காட்டினாள். ‘ஆவர் ஒப்புக் கொண்டால் மட்டுமே தான் பேசுவதாக’ தைரியமாக அவரைக் காண்பித்து அனுமதி கேட்பது போல கேட்டாள். தலையில் அதுவரை சபையினரால் வைக்கப்பட்டிருந்த ஐஸானது இன்னமும் உருகாத நிலையில் தாராளமாகத் தலையை அசைத்து அவளிடம் நெருங்கி அவள் காதில் அனுமதி கொடுப்பதாக உளறியதும்தான் அவள் மேலும் மெதுவாகப் பேசினாள் அவரிடம்.

    ‘அது சரி, நான் சத்தியம் செய்திருக்கிறேனே நான் எதுவும் எதிர்வார்த்தைப் பேசறதில்லேன்னு.. பட்டிமன்ற பேச்சுக்காரி நான். கூட்டத்துல பேசறதுனா அப்படி இப்படின்னுதான் பேசிப்பழக்கம். உங்களை என்னையறியாம பேச்சோடு பேச்சா ஏதாச்சும் எதிர்வார்த்தைப் பேசிட்டா.. ஐயய்யோ நான் சத்தியத்தையெல்லாம் மீறமாட்டேன்?”

    ”ஐய்யய்ய.. அந்த சத்தியமெல்லாம் இப்போ ஒண்ணும் இல்லேம்மா.. நான் வாபஸ் வாங்கிட்டேன்னு நினைச்சுக்கோ..  நீ பாட்டுக்கு ரெண்டு மூணு வார்த்தை பேசு. என்னை ஒரு வார்த்தை சும்மா திட்டினாலும் சரி, பரவாயில்லே. இவங்க எல்லாம் ஜோக்கா நினைச்சு சிரிப்பாங்க பாரேன்..”

    மாத்ருபூதம் சாதாரணமாக சொல்லியிருக்கலாம்.. அல்லது பேசு என்று அனுமதி கொடுப்பது போல தலையசைத்திருக்கலாம்.. நீ திட்டினாலும் சரிதான் என்று நாவில் யாரோ புகுந்து சொல்வது போல சொல்லிவிட்டதுதான் அவருக்கு எதிரியாகப் போயிற்று.

    இத்தனைக்கும் இரண்டு வார்த்தைதான் பேசுவேன் என்று கூச்சமாகச் சொல்வது போல பாவனை செய்த அந்த பட்டிமன்ற பேச்சாளி முதல் இரண்டு வார்த்தைகளிலேயே சபை முழுவதையும் கல கலவென சிரிக்க வைத்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தித் தன் கட்டுக்குள் கொண்டு வந்தாள். மாத்ருபூதம் கூட வருந்திப்போனார்தான். இத்தனைநாள் இவள் பேச்சுக்களைக் கேட்காமல் போனோமே.. எத்தனை அற்புதமாகப் பேசுகிறாள் என்று ஆச்சரியம் கூட வந்தது அவருக்கு. இத்தனை பேசினாலும் தன்னைப் புகழ்கிறாள் இவள்.. ஒருவார்த்தை கூட திட்டாமல் பேசுகிறாள் என்பதிலும் அந்தக் கடினமனதுக்காரருக்குக் கண்ணில் கொஞ்சம் கண்ணீரும் வருவது போல கலங்கியதுதான். அரைமணி நேரம் கணவரைப் புகழ்ந்து தள்ளிய கல்யாணி தன் கணவருக்கு குழந்தை மனது என்றும் எப்போதும் அவருக்கு வாழ்க்கையின் கஷ்டம் தெரியாமல் வளர்த்து விட்டோம் என்றும் இனியும் அவர் கஷ்டத்தைக் காணவே கூடாது என்றும் மனமுருகி மாத்ருபூதத்தையும் உருக்கியவள் பேச்சு மயக்கத்திலிருந்த சபையைப் பார்த்து ஒரு கோரிக்கையை வைத்தாள்.

    ”தன் கணவருக்கு சொற்பக் கஷ்டம் வரக்கூட தன் மனம் சம்மதிக்கவில்லை என்றும், இனி என் கணவருக்கு வரும் நிதிகள் அனைத்தையும் தானே சரிபார்த்து சேவை செய்யப் போவதாகவும் அதற்குத் தன் கணவர் சம்மதத்துடன் அவர் வேலை செய்யும் இந்த நிறுவனமும் இன்று கொடுக்கும் தொகையுடன் இனி மாதா மாதம் அனுப்பும் பணத்தையும் தன் பேருக்கு அனுப்பி வைத்தால் தானே கணக்கு வழக்குப் பார்த்துக் கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் தன் கணவரைத் தன் கடைசி காலம் வரைக் காப்பாற்றும் பெரிய பொறுப்பைத் தான் ஏற்பதாகவும் கண் கலங்கச் சொன்னதை அந்தச் சபை ஆரவாரித்து ஏற்றுக் கொண்டது. மாத்ருபூதம் கண்கள் கலங்க எழுந்து நின்று கை தட்டித் தன் சம்மதத்தைத் தெரிவித்து ஒரு கடிதமும் கொடுக்க ஒப்புக் கொண்டார். உடனடியாக நிறுவனமும் அந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்வதாக ஒப்புக் கொண்டதோடு ஆதர்ச தம்பதியாக மாத்ருபூதம் தம்பதி விளங்குவதாகவும் கல்யாணியின் பதிபக்தி பார் போற்றவேண்டும் என்றும் அந்த அதிகாரிகள் போற்ற விழா இனிதே நிறைவேறியதுதான்.

    மாத்ருபூதம் நிஜமாகவே தான் அதிர்ஷ்டக்காரன் என்றுதான் நினைத்துக் கொண்டார். கல்யாணி சபைமுன்பாக இத்தனை பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லைதான் அவர். ஆஹா கல்யாணி, என் இன்ப ராகமே, என் இனிய தேவதையே.. என் வாழ்வில் ஒளிவீசும் மாணிக்கமே என்றெல்லாம் கூவ வேண்டும் போலத்தான் இருந்தது அப்போது.. அந்த இன்பக் கனவோடுதான் அன்றிரவெல்லாம் கல்யாணி கல்யாணி என்று உளறிக்கொண்டே தூங்கவும் செய்தார்தான்.

    அடுத்த நாளும் இனிமையாகவே கழிந்தது. நிறுவனம் சென்று கடிதமெல்லாம் எழுதிக் கொடுத்து கல்யாணியின் பேரில் வந்த செக்கையும் பெற்றுக்கொண்டு அப்படியே கல்யாணியிடம் கொடுத்தவர்தாம். கல்யாணியின் வாயில் வந்த அத்தனை புகழ் வார்த்தையையும் மறுமுறைக் காதாரக் கேட்டு மகிழ்ந்தார், ஆஹா.. வயது அறுபதானால் மனுஷனுக்கு இந்த ஓய்வு கொடுக்கவேண்டும் என முதல் முதல் சட்டம் போட்ட அந்த முகம் தெரியாத வெள்ளைக்காரனுக்கு முதல் வணக்கம். இனி என்ன.. ஜாலியோ ஜாலிதான்.. கால் மேல் கால் போட்டுக் கொண்டு இனி பர்மெனண்டாக ஏஸி ரூமில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டே அதாரிடி செய்ய வேண்டியதுதான்.. அப்படிச் செய்வதில் கூட கூடுதல் சுகம் இருக்கின்றதே. நினைத்தவுடனே தோன்றிய  அந்த மகிழ்ச்சி எனும் உணர்ச்சிக்கும் அதுவே கடைசி நாள் என்பதை அப்போது அவர் உணரவில்லைதான்..

    மறுநாள் அவரின் இனிய கல்யாணி காலையில் காபியைத் தராமல் கொஞ்சம் கடினமாக உலுக்கி எழுப்பினாள். கண்ணை விழித்துப் பார்த்தவரை அப்படியே உட்கார வைத்தாள். “ஏன்னங்க.. இன்னையிலேர்ந்து உங்களுக்குப் புது வாழ்வு.. நேத்து வரைக்கும் எப்படி இருந்தோம்னு இப்பவே மறந்துடுங்க.. உங்க உடல்நலன், மனநலன் இரண்டையும் பாத்துக்கறது என் பொறுப்புன்னு சபையிலே எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.. நான் என் கடமையைச் செய்யறேன்.. நீங்க எதுக்கும் கோபப்பட மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க..” என்றவள் அவர் முகத்தைப் பார்த்தாள். அவர் சந்தோஷமாகத் தலையை அசைத்து ;சேச்சே நான் எதுக்குக் கோபப்படப் போகிறேன்.. உன் மேலயா?.. சத்தியமா வரவே வராதுன்னா.. உன் இஷ்டம்’ முகத்தில் ஏகப்பட்ட அசடு வழியப் பார்த்தவரைப் பார்த்து முறுவலித்தாள்.

    அந்த நாளில் ஆரம்பித்தது அவருக்கான சிரமதசை. ஏற்கனவே மாத்ருபூதத்துக்கு  சாதாரணமாக இருந்த ரத்த அழுத்தம், சுகர் போன்றவை பூதாகாரமாக ஆக்கப்பட்டு  அவருடைய சாப்பாட்டில் காண்பித்து நாக்கின் ருசியை ஒரேயடியாக அடக்கினாள் கல்யாணி. இதுவரை அவர் போய்க்கொண்டிருந்த காரின் ஓட்டுநர் நிறுத்தப்பட்டு அவரே அந்தப் பதவியையும் ஏற்கவேண்டும் என்று நயமாக வேண்டிக் கொண்டாள். வீட்டு வேலைக்காரி கூட ஒரு பொழுது வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டதோடு அவள் வேலையையும் அவருக்குப் பிரித்துக் கொடுத்தாள். அவர் உடல்நிலையைப் பாதுகாத்து வைப்பது தன் கடமை என்றும் குனிந்து குனிந்து ஒரு சில வேலைகள் செய்வதால் உடல்நலம் காக்கப்படும் என்றும் தினமும் அவரை உட்கார்த்தி வைத்து அரை மணி நேரம் லெக்சர் தரப்பட்டது. பேரம் பேசி வாங்குவது ஒரு கலை என்றும் வாழ்க்கை முடிவதற்குள் இந்த கலையை அவர் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தினம் காலையில் காய்கறி மார்க்கெட் செல்லும் வழக்கத்தையும் ஏற்படுத்தினாள். தான் இதுநாள் வரை பள்ளிக்கு பஸ்ஸில் சென்று வருவது அன்றோடு நிறுத்தப்பட்டதை ஒரு பெருமையாக அறிவித்தவள் அன்றுமுதல் தன்னைக் காரில் உட்கார்த்தி வைத்து அழைத்து வருவது இனி தன் கணவர் பொறுப்பாக ஏற்றுக் கொள்வதை தான் மகிழ்ச்சியோடு அங்கீகரிப்பதாக அவள் தலையை நிமிர்த்திக் கூறியது மாத்ருபூதத்தின் வயிற்றைக் கலக்கியது. வீட்டு வேலை போக இந்த பயம் தெளிந்த பிள்ளைகளும் போதாதற்கு மருமகப்  பெண்களும் கூடச் சேர்ந்து கொண்டு ஏகப்பட்ட சில்லறை வேலைகளைக் கொடுக்க அந்த வேலைகளை எப்படி இன்முகத்துடன் செய்யவேண்டும் என கல்யாணியே அறிவுரை கூறினாள். மதிய தூக்கம் சோம்பலைத் தரும் என்று சொல்லியதோடு அவர் ஈஸி சேரையும் குப்பையில் போட ஏற்பாடு செய்தாள். உட்கார்ந்து டி வி பார்க்கக் கூட நேரமில்லாமல் போவது கொஞ்சம் கொஞ்சமாக வலிக்கத் தொடங்கியது. சுவைக்காக அடக்கப்பட்ட நாக்கு போகப் போக எதிர்ப்பேச்சு பேசக்கூட இதமாகச் சொல்லிப் பதமாக அடக்கப்பட்டதாக உணர்ந்தார்.

    எத்தனைதான் கல்யாணத்தன்று அவள் கொடுத்த சத்தியம் வாபஸ் பெறப்பட்டாலும் அந்த சத்தியத்தை கல்யாணி இன்னமும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள்தான். எதையுமே மெல்லமாக அழுத்தமாகச் சொல்லியதோடு அதைச் செய்யத்தான் வேண்டுமென்று சொல்லாமல் சொல்லி கண்ணால் சைகை செய்வதை அடியோடு வெறுத்தார் மாத்ருபூதம்.. அத்துடன் வெளியே ஒய்யாரமாக காரில் இறங்கும்போது தெரிந்தவர் கண்ணில் பட்டால் அவரை விடாப்பிடியாக அழைத்து இவர்தான் என் கணவர் ஆனால் மற்றவரிடம் ரொம்பக் கூச்சப்பட்டு பேசுவார் என்றும் அசாதாரணமாகச் சொல்லி இவரையும் அங்கேயே ஊமையாக்கி தன்னையும் உயர்த்திக் கொள்ளும் கல்யாணியை அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பாட்டுக் கச்சேரிகளில் கல்யாணியின் இனிய கானத்தைக் கூட சரியாக இவரால் கேட்டு ரசிக்கமுடியவில்லை. பாட்டு முடியும்போது இவளுக்கு பாலோ அல்லது வென்னீரோ கொடுக்கவேண்டும்.. எந்தப் பாட்டின் முடிவில் சைகை செய்வாளோ என்றறியாமல் ஃப்ளாஸ்க்கோடு டென்ஷனோடு காத்திருக்கவேண்டும். தானாகப் போய் கொடுக்கவும் முடியாது. இப்படித்தான் ஒரு பாட்டுக்கச்சேரியின் மத்தியில் சற்று இடைவெளி கிடைக்க, ’ஐய்யோ பாவம்.. இத்தனை நேரமாய்ப் பாடுகிறாளே’ என இவரே மேடைக்குப் போய் பால் கொடுக்க அத்தனை பேர் மத்தியில் அதுவும் மைக்கில் கெட்டியாக ‘இப்படி மத்தியில் பால் சாப்பிட்டால் இவர்களெல்லாம் தப்பா எடுத்துப்பாங்க.. நான் கூப்பிடறேனே” என பவ்யமாக அவள் சொல்ல, அங்கே வந்திருந்த சபையோர் கேட்டு சிரிக்க இவருக்கு அவமானமாகப் போயிற்று. வேண்டாம் இனி அவளே கைநீட்டிக் கூப்பிடட்டும்.. இதே போல இன்னொருநாள் மாலைநேரத்தில் ஒரு பட்டிமன்ற பேச்சின் இடையில் தன்னை கைநீட்டிக் கூப்பிட்டு தண்ணீரை வாங்கிக் குடித்தவள். பத்தே நிமிட பேச்சு என்பதால் ஓடோடிப் போய்க் கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் உடல் கொஞ்சம் வேர்த்துக் கூட போயிற்றுதான்… கல்யாணியின் கணவனின் பொறுப்பான இந்த செயலை சபையிலேயே ஒவ்வொரு சமயம் இவளே பாராட்டி இவருக்கு கைதட்டல் வாங்கிக் கொடுத்தது கூட உண்டு. எதையும் வெளியே சொல்லாமல் உள்ளுக்குள்ளே அழுது வெளியே புன்னகை செய்யும் கலையை அன்றுமுதல் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

    அவள் பள்ளியில் கூட மாலை வேளைகளில் இவர் காத்திருக்கும் நேரத்தில் வேறு சில ஆசிரியைகள் இவரைக் கண்டு சிரித்து விட்டுப் போனாலும் இவருக்கு மட்டும் ஏனோ அந்தச் சிரிப்பு சற்று நக்கலாகவே பட்டது. இருந்தும் வேண்டுமென்றே நேரம் எடுத்துக் கொண்டு வந்த கல்யாணி, ’ஐயைய்யோ நான் உங்களை மறந்தே போய் அநாவசியமாக பிரின்ஸிகிட்டே பேசிக்கொண்டே நேரம் வேஸ்ட் பண்ணிவிட்டேன்.. ரொம்ப நேரம் காத்திருந்தீங்களோ’ என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வியும் கேட்டும் ஒரு சிரிப்பும் சிரித்துவிட்டு ஒய்யாரமாக பின்சீட்டில் ஏறி உள்ளே மகாராணி போல உட்கார்ந்து தன்னைப் போகச் சொல்லி சைகை காட்டுவது அவருக்கு உள்ளுக்குள் எரிய வைக்கும்தான். வீட்டுக்குப் போனால் மறுபடியும் வீட்டு வேலை.. நேற்று அந்த லேடிஸ் டெய்லர் சரியாக ரவிக்கை தைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அதைச் சரி செய்ய வேண்டி தன்னை அனுப்பினாலும் அனுப்புவாள். வேலைக்காரி வேறு இரண்டு நாட்கள் லீவு வேண்டுமென கேட்டபோது மூன்று நாள் வேண்டுமானால் எடுத்துக்கோ, என் கணவர் சமாளித்துக் கொள்வார் என்று பெருமையாகச் சொல்வது போல அனுப்பி வைத்தவள். அத்துடன் விட்டாலும் பரவாயில்லை.. இதையெல்லாம் செய்தால் தன் உடம்புக்கும் மனதுக்கும் நல்லது என்பதாக இவள் தினமும் ஒரு அரை மணி நேரமாவது கட்டாயப்படுத்திச் சொல்லும் உபன்யாசமும்.. தம்மால் ஒருவார்த்தை எதிர்த்துப் பேசாமல் இருக்கவைக்கும் அவள் சாமர்த்தியமும்.. சே.. என்ன லைஃப் இது.. ஜாலியாக வீடு, ஜாலியாக வேலை, டி.வி.. சுவையான சாப்பாடு, சுகமான தூக்கம் இவையெல்லாம் இனி எப்போது கிடைக்கும்?

    உண்மையாகப் பார்த்தால் அறுபதிலிருந்து ஓய்வு உடலுக்கும் மனதுக்கும் கட்டாயத் தேவை என்றுதானே எல்லா நிறுவனங்களும் வீட்டுக்கு அனுப்புகின்றன, ஆனால் காலையிலிருந்து இரவு வரை ஓய்வில்லாத இந்த அலைச்சல்.. இதற்கு விடுதலையே கிடையாதா?.. ஓடிவிடலாமா.. சேச்சே.. காசுக்கு எங்கே போவது.. எல்லாவற்றிற்கும் காரணமே இந்தக் காசு என்ற மாயாவிதான். நம்மிடம் மட்டும் இந்தக் காசு விளையாடிக் கொண்டிருந்தால் யாராவது ஒரு வார்த்தை பேசமுடியுமா..  நைச்சியமாகப் பேசி மாதாமாதம் வரும் பணத்திலிருந்து எல்லாவற்றையும் இவள் பேருக்கு மாற்றி விட்டாளே.. நிறுவனத்திடம் சொல்லி தன் பேருக்கு மாற்றிக் கேட்போமா.. முடியாது.. அவமானமாகப் போகும். அன்று சபையில் தன்னையும் சேர்த்து எல்லோரையும் கட்டிப்போட்டவள் பற்றி என்னவெனக் காரணம் சொல்வது.. அவர்களும் இதுதான் சாக்கு என்று பதவியில் இல்லாத தனக்கு ஒருமணிநேரம் நல்ல புத்தி சொல்கிறேன் பேர்வழி என நமக்கே சொல்லிக் காண்பிப்பார்கள். இந்தக் கல்யாணிதான் வெளிப்படையாக எனக்கு மாறாகப் பேசுவதும் செய்வதும் இல்லையே.. எல்லாமே என் நன்மைக்குதானே என்று சொல்லி மயக்கிவிடுவாளே..

    ஆஹா.. இப்போதுதான் புரிகிறது.. தான் மற்றவர்களை துன்புறுத்தி வேலை பெற்றோம், இவள் மயக்கிப்பேசியே தன்னைத் துன்புறுத்துகிறாள். அந்த காதறுந்தவன் ஏதோ பரிகாரம் செய்தால் நல்லது என்று சொன்னானே..  அப்போது அநாவசியமாக அவனையும் துன்புறுத்தி விட்டோம்.. பரிகாரம் செய்திருக்கவேண்டும்.. அவன் இப்போது எங்கே கிடைப்பான்..

    ஏன் சார்.. வலது காது பாதி அறுந்துருக்கும், கண் கொஞ்சம் குறுகலா இருக்கும். அடிக்கடி இமைகள் படபடவென துடித்துக் கொண்டே பேசுவார்.. குண்டு முகம்.. அப்பவே மீசை வெக்கலை.. நல்ல ஜோசியம் தெரிஞ்சவர்.. என்னா ஒரு அறுபத்தைஞ்சு வயசு இருக்கும்.. உங்களுக்கு அப்படி யாராவது தெரியுமா.. தெரிஞ்சா சொல்லுங்களேன்.. ஒரு பரிகாரம் பண்ணனும் சார்..

                                                                ==================

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் 126

    நிர்மலா ராகவன்

    வழிகாட்டல் நச்சரிப்பல்ல

    “முனைவர் பட்டப்படிப்பின் ஆராய்ச்சிக்கு உங்கள் கதைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். நீங்கள் வழிகாட்ட முடியுமா?” தொலைபேசியில் வந்த கேள்வி அந்த எழுத்தாளரைத் திகைக்க வைத்தது.

    முதுகலைவரை படித்தும் சுயகால்களில் நிற்கும் தைரியம் இல்லாது, தனக்கு வழிகாட்ட மற்றொருவரின் உதவியை எதிர்பார்ப்பவரை எண்ணிப் பரிதாபம்தான் மிகுந்தது. பதினைந்து வருடங்கள் கல்வி பயின்ற ஒருவரால் தனக்குள்ளும் திறமை இருக்கிறது என்பதை ஏன் உணர முடியவில்லை?

    தன்னால் செய்ய முடிந்த காரியத்திற்கும் பிறரை நாடுபவர் சிறு வயதில் பெற்றோரின் அன்புக்கோ அல்லது அதிகாரத்திற்கோ பணிந்துபோனவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்களுக்கும் இதில் பங்குண்டு.

    ஏழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய சுதந்தரத்தைக் கொடுக்க வேண்டும்.

    `இந்தக் காரியத்தை இப்படிச் செய்!’ என்று அதிகாரம் செய்தால், அவர்கள் பணியலாம். ஆனால் தன்னம்பிக்கையோ, மரியாதையோ எழாது. மாறாக, அன்புடன் வழிகாட்டியதை என்றும் மறக்கமாட்டார்கள்.

    உதாரணமாக, `நான் இப்படிச் செய்வேன். உனக்கு எப்படிச் சௌகரியமோ அப்படிச் செய்!’ என்று, முடிவை ஒரு சிறுவனிடமே விடுங்கள். சில முறை தவறுகள் நிகழக்கூடும். ஆனால், தன் ஆற்றலுக்குத் தக்கபடி உங்கள் முறையைப் பின்பற்றுவான்.

    அதிருப்தியே வழிகாட்டலை நாடுகிறது.

    `எனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா!’ என்ற பரிதவிப்பு தக்க வழிகாட்டலுக்கு முதல்படி. ஒரு குறிப்பிட்ட வழியில் செல்ல பொறுமை அவசியம். சிலவற்றைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கவேண்டும்.

    கதை

    முப்பது வயதிலேயே கணவரை இழந்தவள் தனம். அண்மையில் என்னிடம் தம் மகள்களைப்பற்றி முறையிட்டாள்: “எப்போ பார்த்தாலும் கணினி, இல்லை, கைத்தொலைபேசிதான், டீச்சர், “என்று ஆரம்பித்தாள். “எல்லா வீட்டு வேலையும் நான்தான் செய்யறேன். அதுங்க அறையைக்கூட ஒழுங்கா வெச்சுக்கறதில்லே!”

    படபடப்புடன் இதையே திரும்பத் திரும்பக் கூறினாள்.

    சற்று யோசித்துவிட்டு, “மரியாதை இல்லாம பேசறாங்களா?“ என்று விசாரித்தேன்.

    “சேச்சே!” என்ற மறுத்தாள். “ஆனா, அப்பா இல்லாத குழந்தைகளைச் சரியா வளர்க்கலேன்னு என்னைத்தானே சொல்வாங்க!” குரல் தழுதழுத்தது.

    தந்தை இல்லாத குடும்பங்களில் அனேக தாய்மார்களின் குமுறல் இது.

    குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் ஒன்றிச் செயல்படும்போது, குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஒருவர்க்கொருவர் பகிர்ந்துகொள்வார்கள். ஆறுதலாக இருக்கும். அப்படி ஒரு துணை இல்லாததால், சிறு பிரச்னைகூட யோசிக்க, யோசிக்க பூதாகாரமாகிவிடுகிறது சில அபலைப்பெண்களுக்கு.

    சியாமளா அவர்களுள் ஒருத்தி. “நான் தினமும் தூங்கப்போகுமுன் என் மகனைப்பார்த்துக் கத்துவேன்! அதனால் மாடியிலிருக்கும் வீடுதான் சௌகரியம்!” என்று என்னிடம் தெரிவித்தாள்.

    “சீச்சீ! பாவம்!” என்று அவளுடைய பதின்மூன்று வயது மகனுக்குப் பரிந்தேன்.

    ஆதரவாகப் பேச தந்தையுமில்லை, ஒரே துணையான தாயும் வசையையே தன் மொழியாகக் கொண்டதாலோ, என்னவோ, அவனுடைய மூளை வளர்ச்சி சற்று குன்றியிருந்தது.

    “எனக்கு மட்டும் வடிகால் வேண்டாமா?” என்றாள் சியாமளா, ஆத்திரம் குறையாது.

    அந்தச் சம்பவம் நினைவில் எழ, தனத்திடம், “எல்லாரிடமும் இப்படி உங்கள் குழந்தைகளைப்பற்றிப் புகார் செய்துகொண்டிருக்காதீர்கள்!” என்று கண்டித்தேன்.

    “இல்லே, ஒங்ககிட்ட மட்டும்தான் சொல்றேன். நீங்க ஒருத்தர் சொன்னாத்தான் கேக்கறாங்க!”

    `அம்மா எப்பவும் கத்தறாங்க!’ என்று மூத்த மகள் தன் குழப்பத்தை நம்பகமான சிலருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறாள்.

    பெண்களுக்குத் திருமணமானால் எவ்வளவோ பிரச்னைகள்! புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள்! அப்போது மனம் கலங்கும்போது, தாய்வீட்டில் கழித்த இனிமையான தருணங்கள்தாம் ஆறுதலளிக்கும். இந்த உலக நடப்பை எடுத்துச்சொன்னேன்.

    “நீங்க நச்சு நச்சுன்னு பிடுங்கினாலும், அவங்க மாறப்போறதில்லே. ஒங்களுக்குத்தான் B.P அதிகமாகும்”.

    தனத்தின் முகத்தில் சிறு சிரிப்பு. “அதேதான்!” என்றாள்.

    தற்காலத்தில் எல்லா இளவயதினரும் கணினித்துறையில் ஆர்வமும், திறமையும் கொண்டிருப்பதன் அவசியத்தை விளக்கிவிட்டு, “அவங்ககிட்ட பேசறேன்,” என்று சமாதானப்படுத்தினேன்.

    பெண்கள் இருவரும் பட்டதாரிகள். மிகவும் பொறுப்பானவர்கள். பிறருக்கு உதவ ஓடி வருவார்கள். குறைந்த காலத்திலேயே உத்தியோகத்திலும் நல்ல பெயர். மேலதிகாரிகளாகும் தன்மை படைத்தவர்கள். இளையவள் தன் வருமானத்தில் பெரும்பகுதியை தெருவில் போகும் நாய், பூனைகளின் வைத்தியச்செலவுக்குச் செலவிடுகிறாள்.

    அப்பெண்கள் தாமாகவே முனைந்து செய்யும் காரியங்களே அவர்களை ஒரு நாள் சிறந்த மனிதர்களாக காட்டும்.

    இதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை தனத்திற்கு. தன் வளர்ப்புமுறையில் யாராவது ஏதேனும் குற்றம் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற வேண்டாத கவலையில் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறாள்.

    அப்பெண்களைத் தனியாக அழைத்தேன். “ஒங்களைக் காப்பாத்த இத்தனை வருஷமா ஒங்கம்மாதான் சம்பாதிச்சாகணும். தனியாவே ஒங்களை வளர்த்திருக்காங்க. அது சுலபமில்லே. நீங்களும் கொஞ்சம் வீட்டு வேலையைப் பகிர்ந்துக்கணும். ஒங்க துணியை துணி துவைக்கும் இயந்திரத்தில் போடறதைக்கூட அம்மாதானா செய்யணும்?” என்று தாழ்ந்த குரலில் ஆங்கிலத்தில் கூறினேன். (அவர்களுக்குத் தமிழ் தெரியுமென்றாலும், ஆங்கிலத்தில் அவ்வளவு கடுமையாகக் கேட்காது).

    இரு பெண்களின் முகத்திலும் ஆழ்ந்த வருத்தம். இனி, தாயின் மனம் நோகாது, அவளுடைய எதிர்பார்ப்பு என்னவென்று புரிந்து நடப்பார்கள்.

    குழந்தைகளோ, இளைஞர்களோ, மரியாதையாகவும், உண்மையாகவும் நடந்துகொண்டார்களானால், அவர்கள் நல்வழியில்தான் செல்கிறார்கள் என்று நம்பலாம். அவர்களைப்பற்றிய கவலை அநாவசியம்.

    வழிகாட்டுவது என்றெண்ணி, ஓயாமல் நச்சரித்தால் ஒருவர் கூறுவதை மற்றவருக்கு அலட்சியம் செய்யத்தான் தோன்றும்.

    தொடருவோம்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 113.

    புனித அன்னை தேவாலய அருங்காட்சியகம், ஹாலே, ஜெர்மனி

    முனைவர். க.சுபாஷிணி

    கிருத்துவ சமயத்தில் உள்ள உட்பிரிவுகளில் மிக முக்கியமானது சீர்திருத்தக் கிருத்துவம். கி.பி.1706ம் ஆண்டு தமிழகத்தின் தரங்கம்பாடி எனும் கடற்கரையோர நகரத்திற்கு ஜெர்மனியிலிருந்து வந்திறங்கிய இரண்டு லூத்தரன் பாதிரிமார்களே தமிழகத்தில் இந்தச் சமய சித்தாந்தம் காலூன்ற அடிப்படையை வகுத்தவர்கள். அவ்விருவரும் பாதிரியார் பார்த்தலோமஸ் சீகன்பால்க் மற்றும் பாதிரியார் ப்ளெட்சோ ஆவர். தமிழகத்தின் தரங்கம்பாடியில் பள்ளிக்கூடம் அமைத்தது, அச்சுக்கூடத்தை அமைத்து தமிழ், போர்த்துகீசிய, ஆங்கில மொழி நூல்களை அச்சிட்டது எனத் தொண்டாற்றியது என்பதோடு இவர்களுக்குப் பின் ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த ஏனைய பாதிரிமார்கள் கடலூர், திருநெல்வேலி, மெட்ராஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தச் சீர்திருத்த கிருத்துவ சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதோடு சமூக கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் என்பது வரலாறு. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமைவது லூத்தரேனிய ப்ரோட்டஸ்டன் கிருத்துவம் அல்லது சீர்திருத்த கிருத்துவம் என அழைக்கப்படும் ஒரு மத அமைப்பாகும். இந்த மதத்தைத் தோற்றுவித்தவர் மார்ட்டின் லூதர் ஆவார்.


    மார்ட்டின் லூதர் (Martin Luther) ஜெர்மனியின் தென் கிழக்கு மாநிலமான சாக்சனி (Saxony) மாநிலத்தில் உள்ள ஐஸ்லேபன் (Eisleben) என்னும் சிற்றூரில் 1483ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். இவரது தந்தையார் கரி ஆலையில் பணிபுரிந்தவர். மார்ட்டின் லூதர் தன்னைப் போல் ஒரு தொழிலாளியாக இல்லாமல் கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் எனக் கனவு கண்டவர் இவர். தனது மகன் கல்வியில் தேர்ச்சி பெற்ற ஒரு வழக்கறிஞராகப் பணி புரிந்து வளமாக வாழ வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது . 1490ம் ஆண்டு மான்ஸ்ஃபெல்ட் (Mansfeld) நகரப் பள்ளியில் லத்தின் மொழியில் பாடங்கள் கற்று, பின்னர் 1497ல் மெக்டபர்க்கிலும் (Magdeburg) 1498ல் ஐசெனாஹ் (Eisenach) நகரிலும் உயர்கல்வியைத் தொடர்ந்தார் மார்ட்டின். 1501ம் ஆண்டு எர்ஃபூர்ட் பல்கலைக்கழகத்தில் (Erfurt University) இளங்கலை கல்வி கற்கப் பதிவு செய்துகொண்டார். 1502ம் ஆண்டில் அவருக்குக் கலைத்துறையில் இளங்கலை பட்டம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைக் கல்வியையும் முடித்து 1505ம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார் மார்ட்டின் லூதர். அதே ஆண்டு சட்டத்துறை மாணவராகவும் தன்னைப் பதிந்து கொண்டார் மார்ட்டின் லூதர். இந்தக் காலகட்டத்தில் அவரது வாழ்வில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அவருக்கு சமயத்துறையின் பால் தீவிரமான நாட்டத்தை வளர்த்தன. சமயத்துறையில் ஆர்வம் கொண்டு தன் கல்வியை ஒரு கத்தோலிக்க மடாலயத்தில் தொடர விரும்பினார்.

    ஜூலை மாதம் 1505ம் ஆண்டில் மார்ட்டின் லூதர்,செயிண்ட் ஆஸ்டின் (St.Austin) மடாலயத்தில் துறவியாக இணைந்தார். மிகுந்த கடமை உணர்ச்சியுடனும் கட்டுப்பாடுகளுடனும் கல்வி கற்று கத்தோலிக்க சமய குருவாக 1507ம் ஆண்டில் இவர் தேர்ச்சி பெற்றார்.

    அன்றைய கத்தோலிக்க தலைமைப்பீடத்தின் தலைவராக இருந்த போப் 10ம் லியோ அவர்கள் ரோம் நகரில் இருக்கும் செயிண்ட் பீட்டர் பாசிலிக்கா (St. Peter’s Basilica) தேவாலயத்தைக் கட்டும் பணிக்காக சில செயற்பாடுகளை முன்னெடுத்தார். இந்த நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்ட பாவமன்னிப்பு தொடர்பான நடவடிக்கைகள் மார்ட்டின் லூதருக்குப் பெருத்த கோபத்தை உருவாக்கியது. தனது சிந்தனைகளைக் கட்டளைகளாக எழுதினார். இந்த 95 கட்டளைகளைத் தான் இறையியல் பேராசிரியராகப் பணிபுரிந்த அதே விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தின் உள்ளே இருக்கும் தேவாலயத்தின் வாசல் கதவில் ஆணி அடித்து அதனைத் தொங்க வைத்தார். இந்த 95 கட்டளைகளாவன பாவமன்னிப்பு என்ற கொள்கையை ஊழல் நிறைந்த வகையில் சமய நிறுவனம் பயன்படுத்துவதைச் சாடும் வகையில் இருப்பதை எதிர்க்கும் வாசகங்களாகும். அக்கால அச்சுத்தொழில் வளர்ச்சியும் மார்ட்டின் லூதரின் எதிர்மறை கருத்துக்கான பிரச்சாரத்திற்குத் துணை கொடுக்கும் வகையில் அமையவே, இரண்டே வார இடைவெளியில் மார்ட்டின் நூதரின் இந்த 95 கட்டளைகள் அடங்கிய துண்டுப் பிரச்சாரங்கள் பரவலாக ஐரோப்பா முழுமையும் விநியோகப்படுத்தப்பட்டன.

    மக்கள் நம்பிக்கையுடன் வாசித்து இறைவனை உணரப் பயன்படுத்தும் நூல் மக்கள் பேசும் மொழியிலேயே இருக்க வேண்டும் என சிந்தித்ததோடு, லத்தீன் மொழி பைபிளின் புதிய ஏற்பாட்டை, ஜெர்மானிய மக்கள் பேசும் டோய்ச் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார் மார்ட்டின் லூதர். இதன் தொடர்ச்சியாகப் படிப்படியாக லூத்தரன் கொள்கைகள் இவரால் வளர்க்கப்பட்டன. பலர் இவரது சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இவரது பெயரில் உருவாகிக் கொண்டிருந்த லூத்தரேனிய திருச்சபையை பின்பற்றுவோராகினர். 1525ம் ஆண்டில் இவர் கத்தரினா ஃபோன் போரா (Katharina von Bora ) என்ற பெண்மணியை மணந்தார். கத்தரினா முன்னாள் கன்னிகாஸ்திரியாக இருந்து கத்தோலிக்க திருச்சபையிலிருந்து வெளிவந்து விட்டன்பெர்க் லூத்தரன் திருச்சபையில் இணைந்தவர். இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தனர்.

    மார்ட்டின் லூதர் 1533 முதல் தனது மறைவு வரை, அதாவது 1546 வரை, விட்டர்ன்பெர்க் பல்கலைக்கழகத்திலேயே இறையியல் துறை தலைமைப் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். 1546ம் ஆண்டு பெப்ரவரி 18ம் தேதி விட்டன்பெர்க் நகரிலிருந்து ஐஸ்லேபன் நகர் வந்திருந்தபோது அவர் காலமானார்.

    மார்ட்டின் லூதர் 1546ம் ஆண்டு ஐஸ்லேபன் நகரில் இறந்தபோது அவரது உடல் ஹாலே நகருக்குக் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தேவாலயத்தில் (market church) மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. புகைப்படக்கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் நினைவாக அவர்களது உருவங்களை ஓவியங்களாகத் தீட்டுவது ஒரு நடைமுறை. அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மெழுகு முகமூடி தயாரித்தல் என்பது மற்றுமொரு நடைமுறை. இது பண்டைய எகிப்தில் ஃபாரோக்காளுக்கு இறக்கும் போது அளிக்கப்படும் மரியாதையை ஒத்த ஒரு கலை என்றே கருத இடமுண்டு. ஏனெனில் பண்டைய எகிப்தில் இறந்த மாமன்னர்களுக்கு பிரமிட்களை எழுப்பி அங்கு பதப்படுத்தப்பட்ட (மம்மி) அவர்களது உடலை ஒரு மரத்தாலான அல்லது தங்கப் பேழைக்குள் வைத்து முகத்தில் தங்கத்தாலான முகமூடியை அணிவித்து அவர்களுக்கு மேலுலகத்தில் தேவைப்படும் எனக் கருதி விலையுயர்ந்த ஆபரணங்களையும் மற்ற பொருட்களையும் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது.

    இதுவும் கூட பழங்குடி மக்களின் பண்பாட்டு எச்சம் என்றே காணத்தோன்றுகிறது. முகமூடிகளணிந்து சடங்குகளில் பங்கெடுக்கும் கலையை இன்றும் கூட ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே நாம் காணலாம்.

    இத்தகைய முகமூடி அமைக்கும் ஒரு கலை ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது என்பதை கடந்த ஓரிரு நூற்றாண்டு வரை நாம் காணலாம். அந்த வகையில் மார்ட்டின் லூதருக்கு முகமூடி (Death Mask) அமைக்கப்பட்டது. மார்ட்டின் லூதரின் நண்பரும் அவருடைய முன்னாள் மாணவருமான, முதல் ப்ரோட்டஸ்டன் சமய போதகரும் மார்க்கெட் தேவாலயத்தின் குருவுமான ஜூஸ்டூஸ் யோனாஸ் மார்ட்டின் லூதர் காலமான போது அவருடன் இருந்தார். அவர் மறைந்த மறுநாள் அதாவது 19ம் தேதி காலையின் லூக்காஸ் ஃபூர்ட்டெனாகல் (Luckas Furtenagel) மரணப் படுக்கையில் இருந்த மார்ட்டின் லூதரின் உருவத்தை வரைந்தார். அவரே இந்த மெழுகினால் ஆன முகமூடியையும் செய்ய அமர்த்தப்பட்டார் எனக் கருதப்படுகிறது. அதற்குப் பின்னர் மார்ட்டின் லூதரின் சவப்பெட்டி மூடப்பட்டு அவரது பூத உடல் விட்டன்பெர்க் கொண்டு செல்லப்பட்டு அங்குப் புதைக்கப்பட்டது. இதனால் மார்ட்டின் லூதரின் இறுதி நிகழ்வு நடைபெற்ற சிறப்பினைப் பெறுகின்ற தேவாலயமாக இது கருதப்படுகின்றது.

    இந்தத் தேவாலயத்தில் மார்ட்டின் லூதர் 1545லும், இரு முறை 1546லும் வந்து பிரசங்கம் செய்தார். அவர் நின்று பிரசங்கம் செய்த பல்பிட் எனப்படும் பிரசங்க மேடை இதே அறையில் உள்ளது.

    இந்தத் தேவாலயம் 1529ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் 1554ம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றன என்றும் அறிகின்றோம். இக்கட்டிடத்தைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர் பிராண்டென்புர்க் மற்றும் மக்டெபுர்க் கத்தோலிக்க அமைப்பின் தலைவராக இருந்த கார்டினல் அல்ப்ரெட். இவருக்கும் மார்ட்டின் லூதருக்கும் சமய தத்துவ அடிப்படையில் இருந்த கடும் போட்டியின் இறுதியில் மார்ட்டின் லூதரின் கருத்துக்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பதோடு கார்டினல் அல்ப்ரெட் தமது பதவியைத் துறந்து மாநிலத்திலிருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் இம்மாநிலம் முழுமையாக லூதரேனிய ப்ரோட்டஸ்டன் மதத்தை ஏற்ற ஒரு மாநிலமாக படிப்படியாக மாற்றம் கண்டது.

    மார்ட்டின் லூதரின் வாழ்க்கையில் ஐஸ்லேபனும் விட்டன்பெர்க் நகரங்களும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனவோ அதே அளவிற்கு ஹாலே நகரமும் முக்கியத்துவம் வகிக்கின்றது. மார்ட்டின் லூதரை ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் கடந்தும் நாம் நேரில் காணும் அனுபவத்தை ஹாலே நகரிலுள்ள மார்க்கெட் தேவாலய அருங்காட்சியக அறை நமக்கு வழங்குகின்றது. ஒவ்வொரு நாளும் இந்தத் தேவாலயம் திறந்திருக்கின்றது. அருங்காட்சியகத்திற்குச் செல்ல சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்தத் தேவாலயத்தின் முகவரி Marktkirche Unser Lieben Frauen, An der Marienkirche 2, 06108 Halle (Saale) என்பதாகும். ஹாலே நகரின் புகழை மட்டுமல்ல, ஜெர்மனியின் புகழையும் உயர்த்தும் ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை!

    துணைநூல்கள் –
    http://www.bargaintraveleurope.com/17/Germany_Market_Church_Martin_Luther_Halle_Saale.html
    தேவாலயத்தில் உள்ள வருகையாளர் குறிப்புக்கள்

    Share
  • கவிஞர் விந்தனின் படைப்புலகம் – 2

    -முனைவர் நா.பிரபு

    சிறுகதைகள்

    தமிழ் அறிவுச் சமூக மரபில்  விந்தன் எழுதத் தொடங்கிய காலம், படித்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கே எழுத்தும் இதழ்களும் சொந்தம் என்று எண்ணிய சூழல் நிலவிய காலமாகும். அத்தகைய சூழலில் எழுதிய விந்தனின் சிறுகதைகளைப் பற்றி “ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு சாதியரைப் பற்றியே வந்துகொண்டிருந்தன. எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தபடியால் அந்தச் சாதியினரைப் பற்றியே கதைகள் எழுதப்பட்டன. அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ்நடை, பிராமணக் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது. பிராமண எழுத்தாளர் கஷ்டப்பட்டு வேறு சாதியினரைப் பற்றிக் கதை எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை, உடை, பாவனைகள் அவ்வளவு சரியாக இருப்பதில்லை. இந்தச் சமயத்தில் நவயுக புதுமலர்ச்சி எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ருஷ்யக் கதைகளையும் மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள். அந்தக் கதைகளைப் போல் இந்த நாட்டு ஏழை எளியவர்களையும் உழைப்பாளி மக்களையும் பற்றிய கதைகள் எழுதத் தொடங்கினார்கள். விந்தன், உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகளின் சுக துக்கங்களை இதயம் ஒன்றி அனுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர். அந்த உணர்ச்சிகளை இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் பலவற்றின் மூலம் அவர் திறம்பட எழுதியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணி தூக்கம் இல்லாமல் தவிக்க நேரும்” (முல்லைக் கொடியாள், முன்னுரை) என்று கல்கி அவர்கள் கூறுமளவிற்கு விந்தனின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தை உருக்குவன.

    மேலும், சமுதாய விரோதி என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள தேற்றுவார் யார்? என்னும் சிறுகதையைப்பற்றி கி.சந்திரசேகரன் அவர்கள் “முகத்தைச் சுளிக்காது எதிர் கொண்டழைக்கத் தகுந்தவைகளில் விந்தன் தரும் புத்தகம் சேர்க்கப்பட வேண்டியதே. ஆழ்ந்த மனச்சூழல்களில் நம்மைச் செருகும் தன்மை பெற்றவை. இங்குள்ள கதைகளில் சில ஒரு முறைக்கு இருமுறையாக அவற்றின் கருத்து நம்மை துழாவ வைப்பதற்குக் காரணம் அதுவே. அபிப்பிராயத்தின் தொனி விஷேசம் சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டுவிடுகிறது. சில வேளைகளில் உலுக்கியும் விடுகிறது. இதற்குச் சான்று தேற்றுவார் யார்? என்ற சிறுகதை” (சமுதாய விரோதி, முன்னுரை) எனக் கூறுகிறார்.

    ஏழையின் குற்றம் என்னும் கதையில் வரும் செட்டியார், தன் வேலைக்காரனான சின்னசாமிக்கு தரும் இன்னல்களை விந்தன் இவ்வாறு பதிவு செய்கின்றார். “வழக்கம்போல் அன்று இரவு பத்து மணிக்குப் பிறகு நான் போயிட்டு வரேனுங்க! என்றான் சின்னசாமி.

    ”என்னடா இவ்வளவு சீக்கிரம்! என்று கேட்டார் செட்டியார்.

    இனிமேதான் என் கூலியை எடுத்துக்கிட்டுப் போய் ஏதாச்சும் வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கணும். அவ வேற காத்துக்கிட்டுக் கிடப்பா. குழந்தைகள் வேற அழுதுக்கிட்டு இருக்கும்.

    அதற்கு நீ வேலை பார்க்கக் கூடாது. வீட்டிலேயே அடைந்து கிடக்கணும்.

    கோவிச்சுக்காதீங்க சாமி இன்னும் ஏதாச்சும் வேலையிருந்தா சொல்லுங்க செஞ்சிட்டு போறேன்.

    சரிதான் இந்த அரிசி மூட்டையை எடுத்துக்கிட்டுப்போய் நம் வீட்டுலே போட்டுவிட்டுப் போடா! என்று சொல்லி அன்றைய கூலி ஆறணாவை எடுத்து அவனிடம் கொடுத்தார் செட்டியார்.

    இப்படிக் கூலி கொடுக்கும்போதெல்லாம் செட்டியார் தினசரி தம் வீட்டு வேலை ஏதாவது ஒன்றைச் சின்னசாமிக்கு இடுவது வழக்கம். இந்த வேலைக்குக் கூலி கிடையாது. கூலி கொடுக்கும் வேலைக்கு இவையெல்லாம் கொசுறு வேலைகள்.

    சின்னசாமிக்குச் செட்டியார் இப்படி எத்தனையோ கொடுமைகளை கொடுத்தபோதிலும் அவன் அவர்முன் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசியதில்லை” எனக் காட்டுகிறார். இந்நூலுக்கு மு.வ. அவர்கள் “விந்தன் எய்யும் சொல்லம்புகள் குறி தவறாமல் பாய்கின்றன. சமூகத்தை அவர் சிற்சில இடங்களில்தான் நேராகத் தாக்குகிறார். பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை. இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக்காட்டி பேசாமல் கதை சொல்கிறார். அவர் படைக்கும் பாத்திரங்கள் பெரும்பாலும் அப்பாவிகளே. அவர்களுக்குச் சமூகத்தின்மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதேயில்லை. ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது; ஆத்திரம் பொங்குகிறது.

    விந்தன் நோக்கம் என்ன என்பதை அவருடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்திலிருந்தும் இலக்கிய நோக்கிலிருந்தும் நாம் கண்டுகொள்ள முடிகிறது. வாழ்வின் கசப்பான அனுபவங்களை முழுவதுமாகப் பெற்றவர் என்ற காரணத்தினால் அவர் வாழ்வு நோக்கு என்பது மிகத் தெளிவாக உருவாகியுள்ளது. அவர் சாதாரண மனிதனுக்காக இலக்கியம் படைக்கப் புகுந்தவர். அவர் அடிப்படையில் உலக இயக்கங்களை மிகப் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காணும் மனப்போக்கு அவரிடம் உள்ளது. உழைப்பவனுக்கும் வீணில் உண்டு களித்திருப்பவனுக்குமான போராட்ட உலகைக் காண்கிறார் விந்தன்” (ஒரே உரிமை, முன்னுரை) எனத் தம் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

    விந்தன் நடுத்தர வர்க்கத்தைப்பற்றியும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சீரழிவுகள், சிக்கல்கள் பற்றியும் விவரிக்கும் கதைகள் பல எழுதியுள்ளார். விந்தன் கதைகளைப் பற்றி கல்கி இதழின் முன்னாள் துணை ஆசிரியர் எஸ்.வேங்கட சுப்பிரமணியம் “விந்தன் கதைகள் மகாகவி தாகூர் கதைகள் மாதிரி இருக்கின்றன” (விந்தன், ப.43) எனக் கூறியுள்ளார். அத்தகைய நடுத்தர வர்க்கத்தைப் பற்றிய கதைகள் சில:

    “முதல்தேதி நடுத்தரவர்க்கத்தில் ஒரு நம்பிக்கையான சொல். ஒரு மாதம் முழுவதும் கடன் வாங்குபவன் கடன்காரனுக்குச் சொல்லும் ஒரே பதில் ‘முதல்தேதி தருகிறேன்’ என்பதுதான். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாக அமைவது முதல்தேதிதான்.

    பிரசவத்துக்கு வந்திருக்கும் தங்கையை ஊருக்கு அனுப்புவது முதல், பிள்ளைகள் கேட்கும் நாடகம், சினிமா முதற்கொண்டு அனைத்துக்கும் ஒரே பதில் முதல்தேதிதான்.

    சிக்கனமாக குடும்பம் நடத்த வேண்டும் என்பது மனைவியின் ஆசை.பார்க்கப்போனால் நம்மைக் காட்டிலும் வாழ்க்கையில் குறைந்த அளவு தேவையுடன் திருப்தியடைபவர்கள் வேறு யாருமே இருக்க மாட்டார்கள்.

    ஏன் இல்லை? எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முனியன், மூக்கன், தொப்பை, சப்பை என்று இல்லையா?

    அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? பிறர் வாழ்வதற்காக நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

    பிரெஞ்சு அறிஞன் ஒருவன் ஜனங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறான். மேல் வகுப்பு, கீழ் வகுப்பு, மத்திய வகுப்பு என்று அவன் பிரித்திருக்கிறான்.

    மேல் வகுப்பினர் சுதந்திரத்தை விலைக்கு வாங்குகிறார்கள். கீழ் வகுப்பினர் சுதந்திரத்தை விலைக்கு விற்கிறார்கள் என்று அவன் சொல்கிறான். இந்த இரு வகுப்பினர்களுக்கும் இடையில் இரண்டும் கெட்டானாக இருந்து கொண்டு அவதிப்படுபவர்கள்தான் நம்மைப் போன்றவர்கள். நம்முடைய சூழ்நிலை வேறு, அவர்களுடைய சூழ்நிலை வேறு. இவையனைத்தையும் கூட்டிக் குழப்பி ஒன்று சேர்க்க முயல்கிறார்கள் அரசியல்வாதிகள்” என்று தம் ஆழ்மனத்தின் எண்ணக் குமுறல்களை ‘முதல்தேதி’ என்னும் கதையின் வழி வெளிப்படுத்துகிறார்.

    மேலும் நடுத்தர வர்க்கத்தினர் முதல்தேதி ஒன்றை எதிர்பார்த்திருப்பினும் அத்தேதியில் அவர்களின் தேவைகள் நிறைவேறுகின்றதா என்பதையும் இவ்வாறு பதிவு செய்கிறார். “அவன் எதிர்பார்த்த முதல்தேதியும் வந்தது. வாங்கிய சம்பளத்தைக் கடன்காரர்களுக்குக் கொடுத்துவிட்டு மிச்சம் இருந்த ஒரு ரூபாயை முழுசாகக் கொடுத்தான் இந்த மாத குடும்ப செலவுக்கு என்று மனைவியிடம்.

    பின்னர் பிள்ளைகள் சர்க்கஸ், சாக்லெட், சைக்கிள் என்றார்கள். அனைவருக்கும் ஒரே பதில் முதல்தேதி, முதல்தேதி!

    இந்த முதல்தேதிக்கு முடிவே கிடையாதா? அவர்கள் வாழ்வு முடியும் வரையில் அதற்கு முடிவே கிடையாது” என்பதையும் பதிவு செய்துள்ளார். கீழ்த்தட்டு மக்களின் போராட்டங்களை அறிந்துள்ளமை போலவே நடுத்தரவர்கத்தினரின் வாழ்வியலையும் அறிந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் திறம்பட வலியுறுத்துகிறார் விந்தன்.

    இசுலாமிய சமூகத்தினரைப் பற்றி அன்பும் அதிகாரமும், தங்க வளையல் ஆகிய கதைகளின் வழி பேசுகிறார். சரித்திர, புராணக் கதை மாந்தர்களைப் பற்றி கதைகள் எழுதாத விந்தன் சமகால மக்களின் வாழ்வியலையே எழுதியவர். ஆயினும் கற்பனையில் எழுதிய இசுலாமிய அரசரின் கதைதான் ‘அன்பும் அதிகாரமும்’ என்னும் சிறுகதை. அக்கதையில் வரும் அரசன் அன்பை அதிகாரத்தால் அடைய நினைக்கின்றான். அன்பை விலை பேசுகிறான். அதனை விற்பதற்கும் வாங்குவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என அறிந்து ஆத்திரப்படுகிறான். அச்சமயத்தில் பாதுஷா முல்லாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசவைக் கூடுகிறது. அனைவரும் வருகின்றனர். அப்பொழுது ஒரு மான் குட்டியுடன் கவி இசா வருகின்றான்.

    அந்த மான் குட்டியின் மீது ஆசைப்படுகின்றாள் இராணி ஜிஜியா. தன் விருப்பத்தை அரசனிடம் சொல்ல, அரசன் இராணியின் விருப்பத்தை கவி இசாவிடம் தெரிவிக்கின்றான். இதனை விந்தன் இவ்வாறு பதிவு செய்கின்றார். “ராணி மான் குட்டியிடம் மனத்தைப் பறிகொடுத்தாள் சரி. மான் குட்டி ராணியிடம் மனத்தைப் பறி கொடுத்ததா? பின்னர், அன்புக்கும் அதிகாரத்துக்கும் விவாதம் நீடிக்கின்றது. கடைசியில் கவி சிறையிலும் மான் குட்டி அரசு உத்தியான வனத்திலும்.” எனக் காட்டியுள்ளார்.

    கவியைத் துறந்து உயிர் வாழ முடியாத மான் உணவை, உறக்கத்தை மறந்து ஒரு நாள் உயிரை விட்டது. அதை அறிந்த கவியும் தானும் பறந்து செல்வதாகக் கூறி பறந்து சென்றான். மான் இறந்து விட்டதை அறிந்த அரசன் அன்பின் மகிமையை வியந்து கவியிடம் மண்டியிட்டு மன்னிக்கும்படி வேண்டுகிறான். அல்லா உன்னை ஒரு நாளும் மன்னிக்கமாட்டார் என்கின்றான். மனம் நெகிழும்படியான இக்கதையை உணர்வுபூர்வமான உரையாடல்கள் மூலமும் இசுலாமிய சமுதாயத்தின் மொழியாலும் சிறப்பாகப் படைத்துள்ளார்.

    சிறுகதை, நாவல்களில் எள்ளல் தன்மையுடன் கருத்துக்களை கூறிச்செல்லும் விந்தன் முழுமையான நகைச்சுவைக் கதைகளையும் எழுதியுள்ளார். கவிதைத் துறையில் கவிதைகள் எழுதித் தம்மை கவிஞர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு மாறாக, தாகூர் மாதிரி தாடி வளர்த்துக் கொள்வது, குர்தா அணிவது, இப்படி உடையால் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட கவிஞர் ஒன்பாற்சுவையாரை எவரும் கவிஞர் என்று அழைக்கவில்லை. அதுவே அவருக்கு கெளரவக் குறைவாகப்பட்டது.

    ‘நமக்குத் தொழில் கவிதை’ என்று அவரே முழுநேரக் கவிஞராக ஆகிவிட்டார். ஆனால் காசுதான் அவரை நெருங்கவில்லை. கவிஞருக்கு கவிதை பிறந்ததோ இல்லையோ கவிதாதேவி என்னும் பெண் குழந்தை பிறந்தது. வாழ்க்கைக்குக் காசு வேண்டும் என்ற எண்ணத்தில் கவிஞர் ஒன்பாற்சுவையாரின் இல்லத்தரசி இன்பவல்லி அம்மையார் இட்லி, வடை கடைகளை நடத்தினார். இட்லி கிடைத்துச் சட்னி கிடைக்காததால் ஆத்திரத்தில் கவிஞர் பாடினார்.

    “வேதனை வேதனை வேதனை
    வேதனை போயின்
    சோதனை சோதனை சோதனை
    இட்லி இட்லி இட்லி
    இட்லிக்கு வேண்டும்
    சட்னி சட்னி சட்னி”

    அச்சமயத்தில் வீட்டு வாசலில் மகிழுந்து ஒன்று நின்றது. அதிலிருந்து இறங்கியவர் ஐந்நூறு ரூபாய்க்குக் காசோலை எழுதி கவிஞர் ஒன்பாற்சுவையாரிடம் கொடுத்துவிட்டு நாளை அலுவலகத்திற்கு வரும்படி சொல்லிவிட்டுச் சென்றார். அவ்வளவுதான் ஒன்பாற்சுவையார் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.

    மறுநாள் அவரின் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே உம்மைப் பாட்டு எழுத அழைக்கவில்லை. பின்னணி பாடத்தான் அழைத்தோம் என்று சொன்னதைக் கேட்டவுடன் மீண்டும் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.
    “இத்தனைக்கும் நான் அப்படியொன்றும் கேட்டுவிடவில்லை.
    ஆனப்பட்ட கம்பனே தன்னைத்தானே ‘கவிஞன்’ என்று அழைத்துக்கொள்ளாதபோது நீங்கள் ஏன் உங்களை நீங்களே ‘கவிஞன்’ என்று அழைத்துக் கொள்கிறீர்கள்? என்றுதான் கேட்டேன் அவ்வளவுதான். பாலர் பாடம் படித்திருக்கிறீரா? இல்லை, நீர் பாலர் பாடமாவது படித்திருக்கிறீரா, என்று அவர் என்மேல் பாய ஆரம்பித்துவிட்டார். அதில் என்ன தெரிய வேண்டும் உங்களுக்கு? தெரியாவிட்டால் கேளுங்கள் சொல்கிறேன் என்றேன். அடக்க ஒடுக்கமாக, “நன்று, நவிலும். ‘அ’ என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?

    ‘அணில் படம் போட்டிருக்கிறது’

    ‘அதற்குக் கீழே’

    ‘அணில் என்று எழுத்தில் போட்டிருக்கிறது’

    ‘நன்று ‘ஆ’ என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?’

    ‘ஆட்டின் படம் போட்டிருக்கிறது’

    ‘அதற்குக் கீழே?’

    ‘ஆடு என்று எழுத்தில் போட்டிருக்கிறது’

    ‘அணிலையும் ஆட்டையும் அறியாதார் அவனியில் உண்டோ?’

    ‘இல்லை’

    ‘அங்ஙனம் இருந்தும் சித்திர விளக்கத்தோடு அதற்குரிய எழுத்து விளக்கமும் சேர்ந்து நிற்பது எதற்கு?

    எடுத்துக்காட்டும் பொருள் பள்ளிச் சிறுவர்கள் கண்ணில் பதிவதோடு எழுத்திலும் பதியவேண்டும் என்பதற்காக இருக்கணும் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது”

    “அம் முறையைத்தான் யாமும் கையாண்டு வருகிறோம். எனவே பிறவிக் கவிஞரே என்று முகம்  மலர அகம் குளிர எம்மை விளிப்பாரைக் கண்டிலோம், கண்டிலோம்” இவ்வாறு நகைச்சுவை ததும்ப நயமுடன் எழுதியுள்ளார் விந்தன்.

    கவிதைகள்

    1956இல் விந்தன் ‘பசி கோவிந்தம்’ என்ற சிறுநூல் எழுதினார். அந்த நூலைப் பற்றி டாக்டர் ஆ.ரா. வெங்கடாசலபதி அவர்கள், புலவர் த.கோவேந்தன் எழுதிய புதுநாநூறு  என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னோட்டத்தில் குறிப்பிடுகிறார்.

    “இராஜாஜியின் பஜகோவிந்தத்தை நையாண்டி செய்து விந்தன் ‘பசி கோவிந்தம்’ எழுதினார். இராஜாஜி அரசியல் தலைவராகவும் இந்தியாவின் நடுவண் ஆளுநராகவும் இருந்ததால் அவருக்கு இலக்கிய பீடத்தில் இடம் கிடைத்துவிட்டது. அவருடைய பஜகோவிந்தத்தை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார்.  இயல்பாகவே விந்தன் ஒரு சிறுகதையோ நாவலையோ எழுதும்போதுகூட ஆசிரியர் கூற்றாகப் பகுதிக்கு ஒரு வரியேனும் எழுதி சமூக இழிவுகளையும் ஒழுக்கங்களையும் நையாண்டி செய்யாமல் விந்தனுக்கு கதையை நடத்திச் செல்லத் தெரியாது. அப்படி இருக்கையில் நையாண்டி செய்வதற்காகவே எழுதப்பட்ட ‘பகடி’ நூலில் கேட்க வேண்டுமா? தன்னுடைய நூலைப் புடைநூல் என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார் ‘புடை புடை’ என்று புடைத்து விடுகிறார் விந்தன்.”

    “வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் பெருங்கடல் வாலிபம்; பசிமிக்க பாரதத்தில் வறுமைமிக்கோர் அதைக் கடப்பது கடினம்; ஆயினும் வயலில் சிறு வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையில் சிலர் வாலிபக் கடலைத் தாண்டி விடுகின்றனர். அதற்கேற்ற வசதியும் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகிறது. சுவாதீனத்தால் சோம்பேறித்தனத்தையும் சுகானுபவத்தால் சொர்க்கலோக இச்சையையும் வளர்த்து வரும் அவர்களுடைய பரம்பரை சொத்துகளையும் பாராதீனப்படுத்து பசிக்குப் பலியாகும் கோடானுகோடி மக்களைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற நோக்கத்தால் எழுந்ததே இந்தப் பசிகோவிந்தம் பாட்டு!

    “பாரதம் வாழி பாரதம் வாழி
    பசிகோவிந்தம் பாட பசிதந்த
    பாரதம் வாழி!”

    ‘தினமணிக் கதிர்’ ஏட்டில் மகாபாரதக் கதையை ‘பாட்டினில் பாரதம்’ என்ற பெயரில் காவியமாக எழுதினார். அதைப் படித்த சிலர் காவியம் எழுதும் அளவுக்கு விந்தனுக்கு தமிழில் புலமை உள்ளதா என்று வினாயெழுப்பினர். ஆனால், புலவர் த. கோவேந்தன் போன்றவர்கள், உரைநடையை எளிமையாக எழுதியது போலவே காவியத்தையும் எளிமையாக இலக்கணம் பிறழாமல் எழுதுகிறார் என்று பாராட்டினர்.

    ‘கதிர்’ ஏட்டில் ‘பாட்டினில் பாரதம்’ தொடர் வந்து கொண்டிருந்தபோது ஆசிரியர் ஏ.என். சிவராமன் விந்தனைப் பார்க்கும்பொழுதெல்லாம் தொடரைப் பாராட்டுவதோடு “தொடர்ந்து எழுதுங்கள்!” என்று உற்சாகமூட்டி பாராட்டுவாராம். பலரின் பாராட்டுக்குரிய ‘பாட்டினில் பாரதம்’ இன்னும் நூலாக வரவில்லை.

    பெரியார் அறிவுச்சுவடி என்னும் நூலில் எழுதியுள்ள பகுத்தறிவைத் தூண்டும் கவிதைகள் அவரின் கவிதைத் திறனுக்குச் சான்றாகும்.

    “சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை
    தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே
    மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
    ராவண காவியம் ரசித்துப் படி
    மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை”
    “பீடை என்பது பிராமணியமே
    முக்தியால் வளர்வது மூடத்தனமே
    மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை” 

    கட்டுரைகள்

    1947இல் தொழிலாளர் பிரச்சனையை முன் வைத்து ‘வேலை நிறுத்தம் ஏன்?’ என்னும் சிறு நூலை ஒரே இரவில் எழுதி வெளியிட்டார். அந்த நூல் இன்னும் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு ஏற்றதாகவும் போராடுவதற்குத் தூண்டுதலாகவும் இருப்பதால் அந்நூலை ஆசிரியரின் அனுமதியின்றியே அச்சிட்டுத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள்.

    சென்னை மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றிய காலத்தில் சுதேசமித்திரன் ஏட்டில் ‘சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்’ என்கிற தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதினார். அச்சமயத்தில் விந்தன் சேரியில் வாழும் ஏழை எளியவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு பத்திரிகையில் எழுதினார். அதன் மூலமே சென்னையில் எத்தனை சேரிகள் உள்ளன என்பதனையும் அவர்களின் அவலநிலைமையும் அறிந்தார் விந்தன். (அந்தக் கட்டுரைகள் இன்னும் நூலாக வெளிவரவில்லை) விந்தன் அவ்வப்போது பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள், அவரின் நூலுக்கு எழுதிய முன்னுரைகள் அனைத்தையும் மு. பரமசிவம் அவர்கள் தொகுத்துத் தர “விந்தன் கட்டுரைகள்” என்ற தலைப்பில் 1998இல் கிறிஸ்துவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ளது.

    இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ள பத்தொன்பது கட்டுரைகள் பலதிறப்பட்டவை. பாரதி வாழ்ந்த பாண்டி, பாரதிதாசனின் குடும்ப விளக்கு, ஒப்பற்றகவி, கவிமணியும் காலனும், உலகத்துக்கு ஒருவர், புகையிலையும் புதுமைப்பித்தனும் ஆகிய கட்டுரைகள் இலக்கிய ஆளுமைகள் குறித்தவை.

    எனக்குப் பிடித்த புத்தகம் என்னும் கட்டுரை மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் குறித்த அறிமுகமாகும்.

    முடிவுரை, என்னுரை, வயிறும் வாழ்வும், வாழ்த்து, சுழலும் உலகிலே, சுயம்வரத்திற்கு முன்னால் கொஞ்சம் சுய விளம்பரம், முன்னுரை, சுடச்சுட குளு குளு ஆகியவை தன் நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளாகும். படித்தேன் – சொல்கிறேன் என்னும் கட்டுரை பிறரது நூலிற்கு வழங்கிய முன்னுரையாகும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கட்டுரையும் ‘இதோ! ஒரு சுயமரியாதைக்காரன்’ என்ற கட்டுரையும் சமூக விமர்சனங்களாக அமைந்தனவாகும்.

    பாரதி, பாரதிதாசன், கவிமணி, கல்கி, புதுமைப்பித்தன் ஆகிய ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும், பார்வையற்றவர், கால் இழந்தவர், கையிழந்தவர், கால்முடப்பட்டவர், ஒரு கை விளங்காதவர் என இவர்களை ஊதுபத்தி விற்பவராய், பத்திரிகை போடுபவராய், தோசைக்கடை வைத்திருப்பவராய், செருப்புத் தைப்பவராய் வாழ்க்கையுடன் போராடி, பிச்சையெடுக்காமல் தங்கள் சுயமரியாதையைக் காத்து கொள்பவர்களாய்த் திகழ்வோரை உணர்ச்சி பொங்கச் சித்தரித்துள்ளார். இத்தகையோரை அட்டைப் படத்திலும் வெளியிட்டுச் சமுதாயத்தின் மையத்திற்குக் கொணர்ந்து பெருமைப்படுத்தியுள்ளார்.

    [தொடரும்]

    *****

    துணைநின்ற நூல்கள்

    • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
    • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
    • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
    • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
    • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
    • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
    • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
    • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
    • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
    • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
    • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

    இதழ்கள்

    • குங்குமம், மார்ச்-1994
    • தினமணி, வெள்ளிமணி,10.1987
    • மனிதன்,08.1954

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
    சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
    திருவண்ணாமலை 606603
    கைப்பேசி: 9786863839
    மின்னஞ்சல்: drnprabu@gmail.com

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(226)

    செண்பக ஜெகதீசன்

     

    ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி       

    னன்றாகா தாகி விடும்.                                                

           -திருக்குறள் -128(அடக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    தீய சொல்லொன்று பிறர்க்குத்

    தீங்கிளைக்குமெனில்,

    அவனது

    நல்ல சொல் மற்றும்

    செயலால் வரும்

    நற்பயன்களும் தீதாகிவிடும்…!

     

    குறும்பாவில்…

     

    தீமைபயக்கும் சொல்லொன்றால்              

    தீயதாகிவிடும்,

    நற்செயலால் வரும் நற்பலன்களும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    சொல்லும் சொல்லில் ஒருசொல்லது

         சோதனை யாகத் தீச்சொல்லாய்ச்

    சொல்ல வியலா தீமைதந்தால்

         சொல்லும் உண்மை இதுதானே,

    நல்ல சொல்லுடன் செயலாலே

         நம்மைச் சேரும் நற்பலன்களும்

    எல்லை யில்லாத் தீயதாகி

         எல்லாம் ஒன்றாய்த் தீதாகுமே…!

     

    லிமரைக்கூ..

     

    சொல்லொன்று தீமைபயக்கும் போதே,     

    நல்லசொல் செயலால் வரும்                  

    நற்பயன்களும் ஆகும்பார் தீதே…!

     

    கிராமிய பாணியில்…

     

    வேணும் வேணும் வாழ்க்கயில

    நல்லதத் தருகிற நாவடக்கம்..

     

    சொல்லுற சொல்லுல

    ஒருசொல்லு

    கொடுஞ்சொல்லாகிக் கேடுதந்தா,

    நல்ல சொல்லு

    செயலால வரும் நல்லதுகூடக்

    கேடாகிப் போவுமே..

     

    அதால

    வேணும் வேணும் வாழ்க்கயில

    நல்லதத் தருகிற நாவடக்கம்…!

     

    செண்பக ஜெகதீசன்…

     

     

    Share
  • திருஞானசம்பந்தா் பாடல்களில் அடிமுடி தேடிய தொன்மம்

    -ர.சுரேஷ்

    தொன்மத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானதும் நெருக்கமானதும் ஆகும். தொன்மங்கள் மக்களின் வாய்மொழி மரபிலும் செவ்வியல் மரபிலும் தொடா்ந்து ஒரு கலாசார வடிவமாக இருந்து வருகிறது. இவை மட்டுமல்லாமல் சடங்கார்த்த நிலையில் குறியீட்டுத் தன்மையுடையதாகவும் சில தொன்மங்கள் இருந்து வருகின்றன. ஒரு சமூகத்தின் வரலாறும் அதன் பண்பாடும் ஒழுக்கவியல் சார்ந்த புனைவுகளும் இத்தொன்மங்களையே மூலகங்களாகக் கொண்டு செயல்படுகின்றன. மாந்தனின் சமூக அறிவு என்பது தொடக்கத்தில்; இத்தொன்மங்களைச் சார்ந்தாகவே இருந்துவந்துள்ளது. எனவே ஒரு சமூகத்தின் தொன்மங்களை முறைப்படுத்தி ஆய்வதன் மூலம் அச்சமூகத்தின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டு உருவாக்கங்கள் போன்றவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

    தொன்மங்களின் அர்த்தக்களம் மிக விரிந்ததாகும். எனவே தொன்மங்களைப் பல்வேறு அணுகுமுறைகளிலும் நோக்குவதற்குச் சாத்தியங்கள் உள்ளன. தொன்மங்களை மானுடவியல், வரலாற்றியல், மெய்யியல், சமூகவியல், நாட்டுப்புறவியல், உளவியல், குறியீட்டியல், அமைப்பியல் போன்ற பல்வேறு அணுகுமுறைகளிலும் பல அறிஞா்கள் ஆராய்ந்து விளக்கியுள்ளனா்.      சங்க இலக்கியத்தில் காதலையும், வீரத்தையும், விளக்குவதற்குத் தொன்மங்கள் பயன்பட்டன. அற இலக்கியக் காலகட்டங்களில் மக்களுக்கான வாழ்க்கைநெறிகளைப் போதிப்பதற்கும், பக்தி காலத்தில் அதே தொன்மங்கள் மத ஒழுங்கமைப்பின் அர்த்தத்தைத் தரக்கூடியதாகவும் படிநிலை மாற்றம் பெற்றுள்ளன. இங்கு திருஞானசம்பந்தர் பாடல்களில் வெளிப்படும் அடிமுடி தேடிய தொன்மம் குறித்து ஆராய்வோம்.

    திருஞானசம்பந்தா் பாடல்களில் ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாம் பாட்டில் பிரமனும், திருமாலும் சிவனின் அடிமுடியைத் தேடியும் காண முடியாமற் போனதாக வரும் புராணக் கதைகளைப் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த ஆ. வேலுப்பிள்ளை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

    “சிவன் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரிலும் உயா்ந்தவரென்பதை இங்கே சம்பந்தா் காட்டுகிறாரென்று கூறுபவார்கள், சம்பந்தா் அவ்வாறு கூற வேண்டிய அவசியம் யாது என்றால் விழிக்கிறார்கள். பிள்ளையார் இவ்வாறு கூற வேண்டிய காரணம் குப்தா் காலத்திலுருவாகிய பௌராணீக சமயத்தினர் கையிலமைந்திருக்கிறது. இந்திரன், வருணன், சூரியன் முதலிய வேதகாலத் தெய்வங்கள் இக்காலத்தில் தம் சிறப்பை இழக்க, அவற்றிற்குப் பதிலாக, மும்மூர்த்திகளாகக் கடவுளையமைத்து வழிபடும் முறை தோன்றியது. பௌராணிக மதத்தின்படி, பிரமன் படைத்தலையும், திருமால் காத்தலையும், சிவன் அழித்தலையும் செய்வார். ஆகவே இம்மூன்று தெய்வங்களையும் சமமாகக் கருதும் மனப்பான்மை அக்காலத்துப் பலரிடையே காணப்பட்டிருக்க வேண்டும். மேலும் பல்லவா் காலத்தில் வைணவ சமய எழுச்சியும் நிகழ்ந்தது. மக்கள் வைணவத்தை நாடாமற் செய்ய வைணவம் சைவமளவு உயா்ந்ததல்ல என்று காட்ட வேண்டிய அவசியம் சைவப் பெரியோர்களுக்கு இக்காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. மண்டகப்பட்டு என்னுமூரில், பல்லவ மன்னன் மகேந்திரவா்மன் அமைத்த முதல் குகைக் கோவிலில் மும்மூர்த்திகளுக்கும் சமதையான இடமளித்திருக்கிறான். இப்போக்கைத் தடுத்து நிறுத்திச் சைவத்திற்கு ஏற்றம் கொடுப்பதற்காகச் சம்பந்தர் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரையும் தாழ்த்திக் கூறுகிறார் என்று கூறுகிறார். மேற்கண்ட கூற்றினை நோக்கும்பொழுது மும்மூர்த்திகளிலும் சிவனை உயா்த்தி, பிரம்மனையும் திருமாலையும் தாழ்த்திக் கூறுவதற்காகவே இத்தொன்மத்தைத் திருஞானசம்பந்தர் தம் பதிகந்தோறும் இடம்பெறச் செய்திருக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறார்1

    திருஞானசம்பந்தா் பதிகத்தில் அதிகமாக இடம்பெறும் இத்தொன்மம் சிவபரம்பொருளை மும்மூர்த்திகளில் முதல்வராகக் காட்டுகிறது என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது எனினும் பிரம்மனையும் திருமாலையும் தாழ்த்தினார். என்கிற கருத்துக்கு மாறாக அவரின் பாடல்களில் பிரமனையும் சிவனையும் போற்றிப் புகழும் தன்மையிலும் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. பல பாடல்கள் சிவனே பிரம்மாவாகவும் திருமாலாகவும் இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

    “பதுமநன் மலரது மருவிய
    சிவனது சிவபுர நினைபவா் செழுநிலவினில் நிலைபெறுவரே
    ”2

    என்கிற பாடல் சிவன் தாமரை மலா்மேல் வீற்றிருப்பவன். அவனது சிவபுரத்தை நினைப்பவர் வளமையான இந்நிலவுலகில் நிலைபெற்று வாழ்வர் என்கிறது. மேலும் சிவபெருமான் பிரம்மாவாக நின்று இப்பபூவுலகைப் படைத்தான் என்ற கருத்தும் வெளிப்பட்டுள்ளது. பிரம்மனைத் திருஞானசம்பந்தா் வேதம் அங்கம் ஓதி, வேள்வி புரிந்த நிகழ்வுகளைப் பல பாடல்களில் பெருமைப்பட உரைக்கிறார். இதேபோலத் திருமாலையும் சிவபெருமான் படைத்ததாகவும் திருமால் சிவபெருமானின் இடப்பாகமாக உள்ளான் என்றும் திருமாலே சிவபெருமானின் தேவியாவான் என்றும் பல இடங்களில் கூறுகின்றார்.

    “அலைகடல் நடுவு அறிதுயில் அமர்அரி உருவு இயல் பரன் உறைபதி
    சிலைமலி  மதில் – சிவபுரம் நினைப்பவர் திருமகளோடு திகழ்வரே”3

    எனும் பாடல், பாற்கடல் மேல் பள்ளிகொள்ளும் திருமால் உருவின் இயல்போடு அரன் உரையும் பதி என்கிறது.

    “பை அருகே அழல் வாய ஐவாய்ப்பாம்பு அணையான் பணைத்தோள்
    மெய் அருகே உடையானை உள்கி, விண்டவா்ஏறுவா், மேல் உலகே”4

    எனும் பாடல் நச்சுப் பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நச்சுப் பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும் உமையம்மையையும் தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு (அரியா்த்தா், அரித்த நாரிசுவரா்) விளங்கும் இறைவன்மீது பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர் வீட்டுலகை அடைவா் என்கிறது. மேலும்,

    “மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதன்”5 என்கிறது.

    பிரம்ம வழிபாடு தனிச் சமயப் பிரிவாக எங்கும் இடம் பெறவில்லை. பிராமணா்கள் மட்டுமே பெரும்பாலும் வணங்கும் பிரம்மனைத் திருஞானசம்பந்தா் பல இடங்களில் நினைவு கூறுவதும், சிவபெருமானைப் பிரம்மனாகக் காண்பதும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. அதேபோல மேற்கண்ட பாடல் கருத்துக்கள் பிரம்மனையும், திருமாலையும் தாழ்த்துவதாக அமையவில்லை. ஏனெனில் பிரம்மனும், திருமாலுமாகவும் இருப்பவன் சிவபெருமானே என்பதால் அவா்களைத் தாழ்த்துவது சிவனையே தாழ்த்துவதாக அமையும்.

    எனவே பிரம்மனையும் திருமாலையும் சைவத்தின் பகுதிகளாக்கி, சமண-பௌத்த எதிர்ப்பில் ஓர் ஒற்றுமையைக், கூட்டணியை சைவ-வைணவக் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவே திருஞானசம்பந்தா் நினைத்திருக்கிறார் என்று கருத இடமுண்டு. எனவே இத்தொன்மக்கதையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேறொரு காரணமும் உண்டு என்று எண்ணத் தோன்றுகிறது.

    திருஞானசம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடல், திருமால் அயன் இருவரும் அடிமுடி காணமுடியாத நிலையை விளக்குவதுடன் மற்றொரு தகவலையும் தருகிறது. அது சிவன் எரி உருவினனாகத் தோற்றம் அளித்த நிகழ்ச்சியாகும். முதல் எட்டுப் பாடல்களில் சம்பந்தா், செஞ்சடை, பிறைநிலா, எருக்கு, கொன்றை அணிதல், சுடுகாட்டில் நடனம் ஆடுவது, நீலகண்டம், நெற்றிக்கண் முதலிய சிவத் தோற்றங்களையும் அதன் சிறப்புகளையும் விவரித்து, இறுதியாகப் பிரம்மனும் மாலும் அடிமுடி தேடிய தொன்மத்தில் அழல் உருவினன், எரி உருவினன், தழல் உருவினன் எனச் சிவனின் தோற்றத்தை அக்னியோடு தொடா்புபடுத்திக் காட்டுகிறார். எனவே திருஞானசம்பந்தா், அக்னியும் சிவனும் வேறல்ல, வேதியா்களால் வேள்வியில் வணங்கப்பெறும் அவனே இங்குக் கோயிலில் சிலை வடிவில் குடிகொண்டுள்ளான் என்ற கருத்தை முதன்மைப்படுத்துவதற்காகவே எரியுருவான சிவன் என்று 9-வது பாடல்கள் தோறும் வைத்துள்ளார் எனக் கருத முடிகிறது. எனவே திருஞானசம்பந்தா் தம் சிவன் சார்ந்த வைதீக மேலாண்மையை இத்தொன்மத்தின் வாயிலாக வெளிப்படுத்தித் திருமாலய பக்தா்களையும், பிரம்ம வழிபாட்டினரான சிவநெறிசாரா அந்தணா்களையும், மக்களையும் வைதீகச் சைவப் பேரடையாளத்திற்குள் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்பதையும் அதற்கு ஏற்ற தொன்மமாகத் திருமால் பிரமன் அடிமுடி தேடியும் காணவியலாத எரியுருவினன் என்ற தொன்மக் கதையைப் பதிகந்தோறும் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் அறியமுடிகிறது. இத்தொன்மத்தை மேலும் விளக்க இடமுண்டு.

    திருமால், பிரம்மன் இருவரும் யார் முதலில் சிவனைக் காண்பது என்பதில் நிலவும் முரண்பாடு தனித்த ஆய்வுக்குரியது.

    “அயனும் மாலும் பிணங்கியறிகின்றிலா்”6 எனும் பாடல் பிரமனும் திருமாலும் தமக்குள் முரண்பட்டதைத் தரிவிக்கிறது.

    திருமால் பன்றியாக அவதாரம் எடுத்துச் சிவனின் அடியைக் காண நிலம் நோக்கி செல்வதும், பிரம்மன் அன்னப்பறவையாகத் திருமுடிகளைக் காண மேல்நோக்கிப் பயணிப்பதும் ஆரியா் ஆரியரல்லாதார் சிந்தனையை ஆதாரமாகக் கொண்டவையாகும். ஆரியரது சமய மரபு வான்நோக்கிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்பதும் ஆரியரல்லாதார் வழிபாட்டு மரபு மண்நோக்கிய சிந்தனையில் முகிழ்த்தது என்பதும் சென்ற இயலில் விளக்கப்பட்டிருக்கிறது. பிரம்மன் மேல்நோக்கித் தேடுவது என்பது உபநிடதக் காலத்திய அதாவது வேத நெறிக் கிரியைகளிலிருந்து ஞானத்தை முதன்மைப்படுத்தத் துவங்கிய உரையாடல்கள் மேலெழுந்த காலகட்டத்தின் வெளிப்பாடாகும். உபநிடத கால ஞானமரபு வேதகிரியைகளை மறுத்து ஞானத்திற்கே முதன்மையளித்த ஒன்றாகும்.

    பிரம்மன் என்பதிலிருந்தே பிரம்மம், பிரம்ம ஞானம் என்பது வைதீகர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. பிரமன் பிரம்மமாக, ஞானத்தின் குறியீடாக ஆக்கப்பட்டான். திருமால் பக்தியின் குறியீடு.  திருமால் பக்தி மார்க்கத்துடன் பெரிதும் தொடா்புடையவா் என்பதையும், பாகவத மதத்திலிருந்தே வட இந்திய பக்தி மார்க்கம் வளர்ந்து வந்தது என்பதையும் அறிஞா்கள் விளக்குவா். திருமாலின் திருவடி நோக்கிய பயணம் பக்திமார்க்கத்தின் பாற்பட்ட சரணாகதித் தத்துவத்தை வெளிப்படுத்துவதாகும். அதேபோல பிரம்மாவின் திருமுடி நோக்கிய பயணம் ஞான மார்க்கத்தின் பாற்றபட்ட அறிவுத்தேடலாகும். இத்தொன்மத்தின்வழி ஞானமார்க்கத்தின் வழியும், பக்திமார்க்கத்தின் வழியும் அறியவொண்ணாத இறைவன் வேதம் போற்றும் அக்கினியாக உள்ளான் எனச் சிவனை வேதாக்கினியாக திருஞானசம்பந்தா் முன்னிருத்தி, பழைய வேதக்கிரியைகளையே மீண்டும் வலியுறுத்துகிறார் என்பதை உட்பொருளாக உணா்த்த முயல்கிறார் எனக் கொள்ளவும் இடமிருக்கிறது. உ.வே.சா அவார்கள் தாம் எழுதிய ‘சைவ சமயமும் தமிழ் பாடையும்’ எனும் நூலில் “மறை நான்கின் சொரூபமே, பிரமவிட்ணுக்கள் அடிமுடி தேடியறியாத சிவசொரூபம்”7 என்று குறிப்பிட்டுள்ளது இங்கு எண்ணிப்பார்க்கத் தக்கது.

    அடிக்குறிப்புக்கள்:

    1. ஆ. வேலுப்பிள்ளை, தமிழர் சமய வரலாறு, பக். 71-72.
    2. சம்பந்தர், திருச்சிவபுரம், 21:1.
    3. மேலது., திருவிராகம், 21:2
    4. மேலது., கீழைத் திருக்காட்டுப்பள்ளி, 5:1
    5. மேலது., திருப்புரவம், 97:2.
    6. மேலது., திருஅன்பிலாந்துறை, 33:3.
    7. உ.வே.சா., சமயமும் தமிழ்ப் பாடையும், ப.52

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,
    கோயம்புத்தூர்.

    Share
  • பூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++++++++++

    பூமியைத் தாக்க வரும் முரண்கோளைத் திசை மாற்ற நாசாவின் புதிய திட்டங்கள்:

    2018 ஜூன் 20 ஆம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகைச் சேர்ந்த விஞ்ஞானப் பொறிநுணுக்கத் திட்ட அலுவலுகம், பூமியை நெருங்கும் அண்டக்கோள் தடுப்பு பற்றி புதிய ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  18 பக்கங்கள் உள்ள அந்த வெளியீட்டில் நாசா முன்னதாகச் செய்ய வேண்டிய தடுப்பு வினைகளையும், அவசர செயற்குழு அமைப்புகளையும் காண லாம்.  அவற்றைப் பொறுப்புடன் செய்து முடிக்க ஃபீமா ஆணையகத்துக்கு [(FEMA) Federal Emergency Agency] 10 ஆண்டுகள் ஆகும்.

    See the source image

    தாக்கவரும்  முரண்கோள் தகர்ப்புக்கு  நாசாவின் புதிய ஐந்து வகைத் திட்டங்கள்.

    1.  முதல் திட்டம் : துல்லிய முறையில், தொலை நோக்கி மூலம் கண்டு, முரண்கோள் போக்கு, தூரம், நெருக்கம் அறிவிப்பு.
    2.  பூமியில் முரண்கோள் எங்கே, எப்போது, எப்படித் தாக்கும்,  தீய விளைவுகள் ஆகியவற்றை முன்னறிவது.
    3.  தாக்கவரும் முரண்கோளைப் பின்பற்றி விண்கணையால் திசை மாற்றுவது அல்லது தகர்ப்பது.
    4. அண்டை  நாடுகளுக்கும்,  மக்களுக்கும் நாசா  தயாரிப்புத் திட்டங்களை விளக்கி ஐக்கிய நாட்டு ஒப்பந்தம் பெறுவது.
    5. அமெரிக்க அரசே ஃபிமா [FEMA (Federal Environmental Action] மூலம்  இந்த அசுர விளைவுகளைத் தடுக்கவோ, திசை மாற்றவோ தர்க்கவோ விபரத்தை அறிவிக்கும்.

    See the source image

    Rogue Asteroids are the Norm in our Solar System

    http://www.youtube.com/watch?v=Pu1t1Fevajk

    http://www.youtube.com/watch?v=A8VVAZ1JAzs

    http://www.space.com/21379-asteroid-1998-qe2-earth-fly-by-where-and-when-to-see-it-video.html

    -asteroid-1998-qe2-earth-fly-by-where-and-when-to-see-it-video.html

    21 ஆம் நூற்றாண்டில் ஒரு முரண்கோள் பூமியோடு மோதி அபாயம் விளைவிக்கும் எதிர்பார்ப்பு முந்தி நினைத்ததை விட 20% மிகையானது.  ஹெர்ச்செல் விண்ணோக்கி மூலம் நோக்கியதில் ஒரு விண்கல் [Space Rock :  Apophis 99942] சில வருடங்களில் பூமியை நெருங்கி விடும் என்று ஈசா கணிக்கிறது !

    ஐரோப்பிய விண்வெளித் துறையக விஞ்ஞானிகள்.

    See the source image

    See the source image

    Asteroids-1

    [பிப்ரவரி 15, 2013]

    http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded

    [Meteor Strike Injures 1200 People in Russia]

    “சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ ஒரு முரண்கோள் அல்லது வால்மீன் மோதும் அபாயம் நேர்ந்து, மனித நாகரீக வாழ்வுக் கலாச்சாரம் முரணாகி மனித இனம் அழியப் போகிறது.”

    கார்ல் சேகன்

    “என்றாவது ஒரு நாள் நிச்சயம் ஒரு முரண்கோள் வழி தவறி நமது பூமியைத் தாக்க வருகிறது என்று முன்னறிவிக்கப் படலாம் ! அப்போது நீங்கள் என்ன செய்வீர் ?  ஒன்று செய்ய முடியும். முரண்கோளின் சுற்றுப் பாதையை மாற்றி விடலாம். அதாவது அதன் பாதையை மாற்ற ஒரு விண்கப்பலை ஏவி, முரண் கோளில் வீழ்ந்து மோதச் செய்ய வேண்டும்.”

    ஆன்டி செங்  [Chief Scientist, John Hopkins’ Applied Physics Laboratory]  

    Asteroid close encounter

    இம்மாதிரிப் பூமி-முரண்கோள் நெருங்கிக் குறுக்கிடுவது இன்னும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் நிகழலாம்.  இந்தப் பூத முரண்கோள்  இரட்டை முரண்கோள் [Binary Asteroid] என்று குறிப்பிடப் படுகிறது.   [Asteroid 1998 QE2] எனப்படும் இந்த முரண்கோளை 2000 அடி அகலத் துணைக்கோள் ஒன்று சுற்றி வருகிறது.  இது ஓர் அபூர்வக் காட்சி !  650 அடி நீளத்துக்கு [200 மீடர்] மேற்பட்ட முரண்கோள்களில் 16% எண்ணிக்கை இரட்டை முரண்கோள் அல்லது மூன்று முரண்கோள் ஏற்பாடுகளாய் [Binary or Triple Systems] அமைந்துள்ளன.

    நாசா விண்வெளி விஞ்ஞானிகள்

    Fig 1F Asteroid Belt Between Mars & Jupiter

    சூரிய மண்டத்தில் சுற்றித் திரியும் மூர்க்க முரண்கோள்கள்

    நாசாவின் சமீபத்தைய கணக்குப்படி சுமார் 10,000 அண்டக் கற்கள் [Space Objects] புவி நெருங்கும் முரண் கோள்களாகக் கருதப்படுகின்றன. அவற்றில் சுமார் 1300 முரண்கோள்கள் பூமியைத் தாக்கும் அபாய எதிர்பார்ப்பு உடையவை என்று முத்திரை இடப்படுகின்றன. நாசா விஞ்ஞானிகள் கண்ணும் கருத்துமாய் அவற்றின் போக்கைக் குறித்துக் கொண்டுள்ளனர்.  அவற்றால் இப்போது எந்த அபாயமும் இல்லை என்று நாசா உறுதி அளிக்கிறது.  ஆனால் பூமிக்கு மேல் விழுந்து தாக்கப் போகும் ஒரு முரண்கோள் அபாய  எதிர்பார்ப்பு 1200 ஆண்டுகளில் ஒன்று என்று அறிவிக்கிறது !

    முன்பு மதிப்பீடு செய்தபடி, சராசரி விட்டம் 270 மீடர் [880 அடி] அளவீட்டில் 60 மீடர் [200 அடி] கூடக் குறைய இருப்பின், அதன் பயங்கரப் பளு வீழ்ச்சிப் பூமியில் 500 மெகா டன் குண்டு வெடிப்பை உண்டாக்கும்.

    சூரிய மண்டலக் கோள்கள் உண்டான ஆரம்பமான காலங்களில் பற்பல முரண்கோள்கள், வால்மீன்கள் பூமிக்கு அருகே நெருங்கித் தாக்கி ஏராளமான நீர் வெள்ளத்தைக் கொட்டின என்பதாக யூகிக்கப் படுகிறது.

    Fig 1A Comets

    சுற்றும் இரட்டை முரண்கோள் அமைப்பு [Binary System Asteroid] ஒன்று பூமியை நெருங்கிக் கடக்கிறது ! 

    2013 மே மாத 29 ஆம் தேதியன்று இரண்டு மைல் [300 கி.மீ.] நீட்சியுள்ள ஒரு முரண்கோள்  [Asteroid 1998 QE2] பூமிக்கு வெகு அருகில் 3.6 மில்லியன் மைல் [5.8 மில்லியன் கி.மீ.] தூரத்தில் கடந்து செல்கிறது.   அந்த எதிர்பாராத நெருக்க நகர்ச்சியால் பூமிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் உறுதி அளிக்கிறார்.   அதே சமயத்தில் அந்த முரண்கோளைச் சிறு துணைக்கோள்  ஒன்று சுற்றி வருகிறது !  இந்த இரட்டை முரண்கோள் அமைப்பானது, பூமியைக் கடப்பதை விஞ்ஞானிகள் முதன் முறைக் கண்கொள்ளாக் காட்சியாய் கண்டு வியப்புறுகிறார் !   பூமி-நிலவுக்குள்ள இடைவெளி போல் 15 மடங்கு தொலைவில் முரண்கோள் கடந்தது என்று அறியப் படுகிறது.  இந்த முரண்கோள் மனிதக் கண்களுக்குப் புலப்படாது.   ஆனால் ரேடார் தேடலில் காணமுடியும்.   காலிஃபோர்னியா, பியூட்டரிகோ ரேடார்கள் மூலம் வானியல் விஞ்ஞானிகள் இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.  இவ்வித விண்ணோக்குப் பயிற்சிகள் மூலம், விஞ்ஞானிகள் மற்ற முரண்கோள் நகர்ச்சிகளைப் பற்றிக் கற்றுக் கொள்ள முடிகிறது.

    Asteriods -1

    “2013 ஏப்ரல் மாதத்தில் வால்மீன் இஸான் [Comet ISON] , சூரியனை மிகவும் நெருங்கி வருவதால் முதன்முறையாக அதன் ஒளிவெள்ளம் பளிச்செனத் தெரிகிறது.  அத்துடன் ஆவியாகும் பனியுறைவுப் பகுதி [Volatile Frosting] இயக்கம் குன்றிய கீழடுக்கில் புலப்படுகிறது.  இப்போது வால்மீன் சூரியனை மிக்க நெருங்கி, அதன் நீர்வெள்ளம் உட்கருவிலிருந்து [Comet Nucleus] வெளியேறி, உட்பகுதியின் அந்தரங்கங்களைத் தெளிவாய்க் காட்டுகிறது.”

    காரன் மீச் [வானியல் ஆய்வுக்கூடம், ஹவாயி பல்கலைக் கழகம், ஹானலூலு]

    “வால்மீன்கள் தம் வடிவ அமைப்பிலே ஒரு சீரான கட்டுருவில் இருப்பதில்லை !   அதன் மேற் பகுதி கொந்தளித்து வெளியேறிப், புதிய உட்பகுதி தெரிய வழி வகுக்கிறது.  இந்த வான்மீனின் போக்கை நாங்கள் அடுத்த ஆண்டும் கூர்ந்து நோக்கி ஆய்ந்து வருவோம்.  குறிப்பாக வால்மீன் பரிதிக் கனல் நெருக்கச் சூழ்நிலையில் அகப்பட்டு, பிளவு பட்டுத் துண்டு துண்டாகி, அதன் உட்பனிப் பாறைத் தோற்றம் தென்பட்டால்,  அந்நிகழ்ச்சியை வரும் 2013 நவம்பர் மாதத்தில் நாங்கள் காண மிக்க ஆர்வமோடு இருக்கிறோம்.”

    ஜாக்லீன் கீன் [வானியல் ஆய்வுக்கூடம், ஹவாயி பல்கலைக் கழகம், ஹானலூலு]

    Fig 4 Asteroid Hitting the Earth

    சூரியனை  நோக்கி நேரே பாயும் தீவிர வால்மீன் ! 

    2013 மே மாதம் 31 இல் ஹவாயி விண்ணாய்வு நோக்கி “ஜெமினி” அடுத்தடுத்து வால்மீன் இஸானைப் [Comet C/2012 (ISON)] படமெடுத்து, அது பரிதியை நேராக மோதப் போவதாய்க் காட்டியுள்ளது.  இந்த அபூர்வ விண்வெளி வான வேடிக்கை விந்தைக் கண்காட்சி 2013 நவம்பர் அல்லது டிசம்பரில் நேரும் என்று ஜெமினி வானியல் விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்.   ஆனால் வால்மீனுக்குத் தகுதியான உட்பொருள் உள்ளதா என்பது தெரியாததால், வான வேடிக்கை நேராமலும் போய்விடலாம்.

    ஜெமினி விண்ணோக்கி கால அடிப்படையில் அடுத்தடுத்துக் கண்ட வால்மீன் நகர்ச்சியில் அது சூரியனுக்கு அப்பால் சுமார் 455-360 மில்லியன் மைல் [730-580 மில்லியன் கி.மீ] அல்லது [4.9 – 3.9 AU (Astronomical unit)] [1 AU= mean distance between Earth and Sun] தூரத்தில் எதிர்நோக்கி வருகிறது.  அது பூதக்கோள் வியாழனைச் சுற்றும் வால்மீனின் தூரத்துக்குள் வருகிறது.   அப்போது வால்மீனின் குப்பைப் பனிக்கோளத்தின் [Dirty Snowball] தூசிகள் ஏற்கனவே வெளியேறிப் போய்விட்டன என்று தெரிகிறது.  சூரியப் புயலும், கதிர்வீச்சு அழுத்தமும்  [Solar Wind & Radiation Pressure] நேர் எதிரே சுற்றிவரும் வால்மீனின் நீர் மய / அயனி நீண்ட வாலை உருவாக்குகின்றன.

    Spectacular Comet ISON

    வால்மீன் இஸான் 2012 ஆண்டில் ரஷ்யப் பொழுதுபோக்கு வானியலரால்  [Russian Amateur Astronomers] கண்டுபிடிக்கப் பட்டது.   ஓர்ட் முகில் அரங்கில் [Oort Cloud Region] உண்டாகும் வால்மீன் முதலில் சூரியனை நெருங்கிச் சுற்றிவரும் போது,  அதன் இயக்கம் உக்கிரமாய் இருந்தும், அண்டிக் கதிரடி பட்டதும் தூள் தூளாகி ஆவியாகி விடுகிறது !   வால்மீன் இஸானை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்டுள்ளது.  2004 இல் நாசா ஏவிய சுவிஃப்ட்டு துணைக்கோளின் புறவூதா நோக்குகள் [NASA’s Swift Satellite Ultraviolet Observations]  வால்மீன் இஸான், ஆண்டு ஆரம்பம் முதல்  விநாடிக்கு 850 டன் தூசியை வெளித்தள்ளுகிறது என்று கணித்துச் சொல்கின்றன.   அதிலிருந்து விஞ்ஞானிகள் வால்மீன் “கோமாவின் உட்கரு”  [Coma’ Nucleus] 3 முதல் 4 மைல்கள் [5-6 கி.மீ] இருக்கலாம் என்று ஊகிக்கிறார்.   அதாவது  இஸான் வால்மீனின் “கோமாத் தலை” சுமார் 3000 மைல் [5000 கி.மீ] இருக்க வேண்டும் என்று கணிக்கிறார்.    2013 நவம்பர் 28 தேதி  வால்மீன் இஸ்கான் 800,000 மைல் தூரத்தில் [1.3 மில்லியன் கி.மீ] பரிதிக் கனல் கொந்தளிப்பு மண்டலத்தைத் [Corona] தொடப் போகலாம்.   அதற்குச் சற்று முன் வால்மீன் பேரொளிச் சுடரோடு பட்டப் பகலில் சூரியனோடு தென்படுவதைக் கருமை நிறக் கண்ணாடி மூலம் பார்க்கலாம் !  அதற்குப் பிறகு வால்மீனுக்கு என்ன கதி நேரும் என்பது கண்ணுக்குப் புலப்படாது !

    Asteroid Impact -2

    முரண்கோள் மோதுதலைத் தடுக்க விண்வெளிக் கோல் உந்துக் கோள் நகர்ச்சி [Cosmic Billiards] முறைகள் பயன்பாடு :

    முரண்கோள் தாக்கலிலிருந்து பூமியைப் பாதுகாக்க ரஷ்ய வானிய வல்லுநர்கள் ஒரு புதிய முறையை அறிவித்துள்ளார்.   அம்முறை இதுதான்.  பூமிக்கு அருகில் சுற்றி வருகின்ற  முரண்கோள் நகர்ச்சியைக் கட்டுப்படுத்திப் பூமிக்கு அண்மையில் ஈர்த்துப் புவிச் சுற்றில் சுற்ற இழுத்துக் கொள்ள வேண்டும்.   பூமியைப் பயமுறுத்தும் முரண்கோள்களை ராக்கெட் மூலம் அப்பால் தள்ளப் புவிச் சுற்று முரண் கோளை ஏவு தளமாக வைத்துக் கொள்ளலாம்.  அல்லது  புவிச் சுற்று முரண் கோளைப் பயமுறுத்தும் முரண்கோளுக்கு நேராக நகர்த்தி, 50,000 – 100,000 மைல் செல்ல ஏவு கோளாக உந்து விசை அளிக்கலாம்.

    இம்மாதிரி விண்வெளிப் பில்லியர்டு விளையாட்டுகளை [Cosmic Billiard Games]  கணனி மாடல் மூலம் பயிற்சி செய்து இயலுமா அல்லது இயலாதா என்று பன்முறை ஆய்வு செய்ய வேண்டும்.  தற்போதுள்ள பொறி நுணுக்கத் திறமையில், மனிதரற்ற 2 டன் ராக்கெட் ஒன்றை, முரண்கோள் ஒன்றுக்கு அனுப்பி அங்கே இறக்கி விட முடியும்.    அத்தகைய ராக்கெட் ஒன்றை 1 பில்லியன் டாலர் செலவில் 10 அல்லது 12 ஆண்டுகளில் டிசைன் செய்து தயாரிக்க முடியும்.  பூமியை எப்போது முரண்கோள் தாக்கும் என்று முன்னுரைக்கவோ, எச்சரிக்கை செய்யவோ நீண்ட காலம்  கிடைப்ப தில்லை.   ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, போன்ற உலக நாடுகள் நாசா, ஈசா போன்ற விண்வெளி ஆய்வு நிறுவகங்கள் மூலமாய் பொறி நுணுக்கத் துறைமையை விருத்தி செய்து, முரண்கோள்களை அப்பால் தள்ள விண்வெளி விதிமுறைகளைக் கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

    Asteroid impact -3

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்பாறைகள், முரண் கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”

    டிமிட்ரி ரோகோஜின்  [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]

    “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”

    நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]

    Meteor Closeby travel

    ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது.  30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு.  வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT].   வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன.  50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார்.  விளைந்த சேதாரச் செலவு :  சுமார் 33 மில்லியன் டாலர்.  பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது. ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry]  கூறுகிறார்.

    Russian Meteor piece

    அதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது.  வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது.  அந்த ஒளிமயமான தோரணக் காட்சி பூமியின் ஈர்ப்பு விசையால் குவிந்து வளைந்து வந்தது.  இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது !  150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது !   இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது !

    Location of Impact

    விண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” என்று  ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி,  டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இந்தச் சிறப்பு அறிவிப்பு  மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார்.   மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.   இத்தகைய  மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Asteroid impact on Earth -1

    தற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள்  [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை.   அவை விண்வெளியிலிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்க  முடியா.   விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா !   விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும்.   மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள்  மேன்மைப் படுத்த வேண்டும்.

    Damage Potentialஇந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது.   வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும்.   அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும்.   அந்தத் துணைக் கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவு கணைகள் அனுப்ப வேண்டும்.   அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும்,  பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது.   விண்கல்லின் திசைமாற்ற ஏற்ற காலப் பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம்  பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.

    Meteor hits Russia

    Antarctica Meteorite

    ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி.  சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார்.  நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்ப தாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார்.  முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார்.  இதுவரை எதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.

    Asteroid Impact-1

    1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி  ஏற்பட்டுள்ளது.  அதற்குப் பிறகு 2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது.  “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.

    இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.

    ++++++++++++++++++++

    தகவல்:

    படங்கள் : நாசா, ஈசா, பல்வேறு விண்வெளி வலைப் பக்கங்கள்.

    1. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/9872020/Meteoroid-falling-over-Russia-caught-on-camera.html
    2. http://www.telegraph.co.uk/news/newsvideo/9872507/The-science-behind-Russian-meteor-strike.html
    3. http://www.telegraph.co.uk/science/space/9872991/Asteroid-passing-Earth-is-closest-ever-of-this-size.html
    4. http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded
    5. http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/10-ton-meteor-explodes-over-russia-injuring-hundreds-this-am.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29
    6. http://rt.com/news/meteorite-crash-urals-chelyabinsk-283/
    7.  http://rt.com/news/scientists-explain-chelyabinsk-bolide-337/
    8. http://en.wikipedia.org/wiki/Tunguska_event  [February 19, 2013]
    9. Russia Calls for United Meteor Defense [February 26, 2013
    10. Meteorite’s Powerful Blast Explosion Due to Space XCollisions [February 28, 2013]
    11. Antarctica Team Finds Largest Chondrite Meteorite in Past 25 Years [March 1, 2013
    12. http://www.nasa.gov/vision/universe/watchtheskies/swift_media.html[November 1, 2004]
    13. http://science.nasa.gov/science-news/science-at-nasa/2013/24apr_hubbleison/[April 24, 2013]
    14. http://en.wikipedia.org/wiki/Swift_Gamma-Ray_Burst_Mission  [May 17, 2013]
    15. http://earthsky.org/space/big-sun-diving-comet-ison-might-be-spectacular-in-2013 [April 24, 2013]
    16. Massive Asteroid with its Moon to Pass Earth today [May 29, 2013]
    17. http://en.wikipedia.org/wiki/C/2012_S1  [May 22, 2013]
    18. New Images of Comet ISON, Hurtling Toward the Sun  [May 31, 2013]
    19. Scientists Suggest Cosmic Billiards to Protect Earth from Asteroids’ Attacks [Moscow] [May 31, 2013]
    20. http://zeenews.india.com/news/space/new-images-show-comet-ison-speeding-towards-sun_852031.html [[May 31, 2013]
    21. http://www.smh.com.au/technology/sci-tech/rogue-asteroid-a-fifth-bigger-than-first-thought-20130110-2chj8.html [January 10, 2013]
    22. http://www.dailymotion.com/video/xru9ma_rogue-asteroid-1280x720hb_shortfilms
    23. http://science.time.com/2013/06/27/nasas-proposed-asteroid-capture-mission-animation/ [June 27, 2013]
    24. http://www.spacedaily.com/reports/Rogue_asteroid_a_fifth_bigger_than_thought_space_agency_999.html [January 9, 2013]
    25. https://www.space.com/40943-nasa-asteroid-defense-plan.html  [June 20, 2018]

      +++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (September 23, 2018) [R-1]

    https://jayabarathan.wordpress.com/

    Posted in அண்டவெளிப் பயணங்கள்

    Attachments area

    Preview YouTube video Let’s talk Astronomy”Rogue Asteroids”

    Preview YouTube video Meteorite crash in Russia: Video of meteor explosion that stirred panic in Urals region

    Share